மாங்காட்டுப் பாடல்!

மாங்காடு காமக்ஷி அம்மனை வேண்டிக் கொண்டு ஆறு முறை ஆறு வாரங்களில் குறிப்பிட்ட தினத்தில் சென்று வணங்கி வந்து ஏழாவது வாரம் காய்ச்சின பாலை பக்தர்களுக்கு கொடுத்து வேண்டுதலை முடித்தால் நினைத்த காரியம் கண்டிப்பாக நடக்கும்.! 

முதல் வாரம்

image

கருணைஎன்ற கண்கொண்டு   பார்க்கின்ற          தாயே!

காமாட்சி       பேர்கொண்ட    மாங்காட்டுத்         தாயே!

கிள்ளைமொழி பேசிஎன்னை    கொள்ளைகொண்ட   தாயே!

கீர்த்திபுகழ்      ஞானம்எல்லாம் அள்ளித்தந்த         தாயே!

குடம்நிறைந்த   நீர்போல        ததும்பாத            தாயே!

கூரைவரை     உயர்ந்துநின்று ஒளிர்கின்ற          தாயே!

கெண்டைவிழி கொண்டுஎம்மை ஆண்டுவரும்        தாயே!

கேழ்வரகு      கூழ்போல      அரைத்துவிட்ட       தாயே!

கைகூப்பி       வந்தோரை     கைவிடாத           தாயே!

கொட்டும்மழை போலவந்து     குளிரவைத்த         தாயே!

கோலமயில்    வேலவனை    கொஞ்சுகின்ற        தாயே!

கெளரிஉமை    பேர்கொண்டு   ஆதரிக்கும்           தாயே!

க்ருபைவேண்டும் எந்நாளும்     காத்திடுவாய்         நீயே

அடுத்த வார பாடல்கள் அடுத்த மாத இதழில்களில்!

குவிகம் !

ஜனவரி 2014 

பூ : ஒன்று ———————- இதழ் : இரண்டு 

image

இது இரண்டாம் இதழ்!

இதில் உங்களுக்குப் பிடித்த கவிதைகள், தொடர் கதைகள், நகைச்சுவை துணுக்குகள், கதைகள், கட்டுரைகள் உள்ளன.

புத்தாண்டில் நிறைய சாதிக்க வேண்டும்!

நிறையப் படிப்போம்!!

படிக்கும் பழக்கம் குறைந்து போவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்!

சென்னையில் புத்தகக் கண் காட்சி வருகிறது! புத்தகங்களை  வாங்கி வீட்டு  அலமாரியில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பதை விட அவற்றை படிக்க வேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொண்டு வாங்குங்கள்!

மார்கழி மாதம் சங்கீத மாதம். சபாக்கள் எல்லாவற்றிலும் சங்கீத மழை பொழிந்து வருகிறது! நாமும் அதில் நனைந்து திளைத்து வருகிறோம்!

பொங்கல் வேறு வருகிறது! தமிழ் நாட்டின் தலை சிறந்த பண்டிகை! போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், கனுப் பொங்கல், உழவர் திருநாள். என்று பலவாறு கொண்டாடப்படும் பொங்கல் வாரம்! புது திரைப் படங்கள்! ஆட்டம் – பாட்டம் – கொண்டாட்டம் !

தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள்! பட்டி மன்றங்கள்! நடிகர் நடிகை பேட்டிகள்! பார்க்க முடியாத அளவுக்கு சினிமா! சினிமா!!

விஜய் டி‌வியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் கிளைமாக்ஸ்க்கு வந்து கொண்டிருக்கிறது!

ஜனவரியில் இந்தியக் குடியரசு நாள் வருகிறது! ஒழுங்கான குடிமகனாக நாம் நாட்டுக்கு என்ன செய்யப் போகிறோம்?

சிந்திப்போம் ! செயலாற்றுவோம்!!

=======================================================

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191   
email : ssrajan_bob@yahoo.com

========================================================

ஜில்லா – பட விமரிசனம்

image

மோகன்லால்- விஜய்  பாசமுள்ள அப்பா -மகனாக முதற்பாதியில்,  அப்பறம் திருடன்- போலீஸாக இன் டர்வெலுக்கு அப்பறம் – முடிவில் மிகவும் கெட்டவர்களை வதைத்து கொஞ்சம் கெட்டவர்களைத் திருத்தி – அப்பாடா படம் ஒருவழியாக முடிகிறது!

விஜய் பாடுகிறார் காமெடி செய்கிறார் பஞ்ச் பேசுகிறார் காஜல் மற்றும் குத்துப் பாட்டு மச்சிகளுடன் டான்ஸ் பண்ணுகிறார்!   ரசிகர்  மன்றத்துக்கு செம தீனி!.

மோகன்லாலை சும்மா விஜய்யோடு தோளை இடித்து பாடுவதற்கும் சரமாரியாக பஞ்ச் டயலாக் பேசுவதற்கும் மட்டும் உபயோகப்  படுத்தியிருக்கிறார்கள்.

கதை மதுரையில் நடக்கிறதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் மதுரையின் மணத்தைக் காணோமே! 

காஜல் அகர்வால் சரியான காக்கிச் சப்பை ! நடிக்க ஸ்கோப்பே இல்லை. அவரும் விஜய்யும் ஒருவரை ஒருவர் பின்னால் பிடித்துக் கொள்வதில் காமெடியும் இல்லை -ரொமான்ஸும் இல்லை!

வில்லனின்  பிளாஷ்பேக்,  கதைக்கு சிறிய டுவிஸ்ட்! ஆனால் ‘தம்’ இல்லை!

முதல் பாதியில் காக்கிச்  சட்டையை கிழிக்கும் காமெடியில் விஜய் -சூரி கூட்டணி தூள் கிளப்புகிறது! காக்கிக் சட்டையை காமெடி பீஸாக்கி கிழிப்பது கொஞ்சம் டூ மச்   தான்! 

டான்ஸ் போது ‘அட ஜீவா’ என்று பார்க்கும் போதே காணாமற் போகிறார்! 

மியூசிக் டி.இமான் ! பட்டையைக் கிளப்புகிறார்!

படம் மிகவும் நீளம்னு ‘எப்போ மாமா ட்ரீட்?’ பாட்டைத் தூக்கிட்டாங்களாமே? 

லாஜிக் – விமரிசனம் இவையெல்லாம் கவலைப் படாமல் படம் எடுங்கள் என்று விஜய் டைரக்டர் ஆர்.டி.நேசனிடம் சொன்னாராம்! அவரும் சின்ஸியராக கில்லி, போக்கிரி, துப்பாக்கி, திருப்பாச்சி,தமிழன் எல்லாவற்றையும் கலந்து காக்டைலாக கொடுத்திருக்கிறார்! கிக் தான் வரவே இல்லை!

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு! ஆனால் சூப்பர் என்றோ குட் என்றோ சொல்லமுடியவில்லை!

பொங்கலோ பெண்கள்

 

பொங்கலோ பெண்கள்
பெண்களோ பொங்கல்

அரிசி பருப்பு இரண்டும் சேர்ந்தால் பொங்கல்!
வெல்லம் சேர்த்தால் அது சக்கரைப் பொங்கல் !
உப்பு சேர்த்தால் அது வெண்  பொங்கல்!

இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தால் பெண்கள்!
தியாகம் சேர்த்தால் அது தாய்!
தாபம் சேர்த்தால் அது தாரம் !

பொங்கலுக்குத் தேவை முந்திரி ஏலக்காய் நெய்
பெண்களுக்குத் தேவை நகை அலங்காரம் பொய் !

சூடான போது பொங்கி வழிந்திடும் பால் பொங்கல்!
சூடான போது பொங்கி வழிந்திடும் காதல் பெண்கள்!

அடுப்பில் கிளறிட  இளகிடும் பொங்கல்!
இடுப்பில் கிளறிட இளகிடும் பெண்கள்!

                           

சுவைக்க மணக்கும் இனிப்புப் பொங்கல்!
சுவைக்க மணக்கும் இனிப்புப் பெண்கள்!

பொங்கல் சமைத்தால் அள்ளித் தின்னும்  ஆடவர் !
பெண்கள் சமைந்தால் அள்ளிக் கொள்ளும் ஆடவர்!

கருப்பு மிளகுப் பொங்கலில் காரம் அதிகம்!
கற்பு மிகுந்த பெண்களில் பெருமை அதிகம்!

மஞ்சள் கொத்தை  கட்டிக் கொள்ளும் பொங்கல்!
மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும் பெண்கள்!

பொங்கலுக்குத் துணை ஆலையின் செங்கரும்பு!
பெண்களுக்குத் துணை காளையின் கரமிரும்பு!

கரம் பட்டதும் தன்னையே தந்திடும் பொங்கல்!
கரம் பட்டதும் தன்னையே தந்திடும் பெண்கள்!

பசித்தவன் இதழ்களில் சேர்ந்திடும் பொங்கல்!
மணந்தவன் இதழ்களில் சேர்ந்திடும் பெண்கள்!

தப்பான கைபட்டால் கெட்டுவிடும் பொங்கல்!
தப்பான கைபட்டால் கெட்டுவிடும் பெண்கள் !

தின்னத் தின்ன திகட்டாதது பொங்கல்!
அள்ள அள்ள திகட்டாதது பெண்கள்!

திருவிழா முடிந்ததும் வருவது மாட்டுப் பொங்கல்!
மணவிழா முடிந்ததும் வருவது மாட்டுப் பெண்கள்!

அடங்காத காளையை அடக்கும் மாட்டுப் பொங்கல்!
அடங்காத காளையை அடக்கும் மாட்டுப் பெண்கள்!

ஆதவனுக்கு உணவைப் படைத்திடும் கனுப் பொங்கல்!
காதலனுக்கு தன்னையே படைத்திடும் காதல் பெண்கள்!

சுற்றம் பார்த்து உறவை நாடும் காணும்  பொங்கல்!
சுற்றிப் பார்த்து உறவை நாடும்  நாணும் பெண்கள்!

தங்கத் தமிழ் நாட்டில் பொங்கலுக்குத் தனிச் சிறப்பு!
தங்கத் தமிழ் நாட்டில் பெண்களுக்குத் தனிச் சிறப்பு!

பொங்கலோ பெண்கள்!
பெண்களோ பொங்கல்!

 

 

 

 

 

முதல் பரிசு பெற்ற கவிதை!

ஆனந்த் பிளாட்ஸ் புத்தாண்டு 2014  சிறுவர்களுக்கான தமிழ்க்

 கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை

                                       ( ராகுல் .எஸ்  D1/18)

                                              imageimage

 

அறமும் பொருளும், , நலனும் அருளும் 

நாளும் பொழுதும், வளர்ந்து பொங்கிய

ஓங்கிய நிலையில், தேங்கிய புகழில்

வாழ்வின் பொருளை வையகம் அறிந்திட

தோன்றிய பாரதம் ஊன்றிய பேதத்தால்

புகுந்திட்ட  மொகலாயர் இருநூறு ஆண்டுகள்

சீர்களை சிதைத்து , வன்மத்தை பெருக்கிட

விட்டதை அழிக்க வெள்ளையர் நுழைந்திட

மீண்டும் இருநூறு ஆண்டுகள் அடிமை சேற்றில்

அனைத்தையும் இழந்து ஆதரவு இன்றி

தன்மானம் இழந்து சேவகம் புரிந்து

கைகட்டி வாய்மூடி கண்மூடி பின் சென்று

செக்கை இழுத்தும் கல்லை உடைத்தும்

பிராணிகள் தோல் முடி கைகளால் பிய்த்தும்

தூக்குக்  கயிற்றில் தொங்கிய வீரர்கள்

குண்டடிபட்ட உயர்குல விளக்குகளும்

சவமாய் விழுந்த கணக்கை எல்லாம்

ஆய்ந்து அறிய     ஆயுளும் இல்லாது 

சிந்திய ரத்தமும் தாக்கிய துயரமும் 

முடிந்தது ஒருநாள் என்று களிக்கவும் 

இன்று அயலார் விதைத்த விதைகள் எல்லாம் 

களையாய் முளைத்து தொடரும் அபாயம் 

விலகும் நாள் தான் வருமோ இனியும்?

பண்டைய பாரதம் மலருமோ இனியும்? 

ப்ரே பண்ணுவோம் ( விஜயலக்ஷ்மி)

“ப்ரே பண்ணுவோம் ”  பாட்டுக்கு  இப்படியும்  அழகாக லிரிக்ஸ் எழுதலாம்!

image

ஏம்ப்பா!  நம்ம நாடு ரொம்ப  கெட்டுப் போச்சுன்னு நொந்து நூடுல்ஸ் ஆகாம நாட்டுக்காக  ஒரு நிமிஷம் ப்ரே  பண்ணுங்க ! நம்ம நாட்டு மக்களுக்காக ப்ரே பண்ணுங்க ! ஏன்  நம்ம பக்கத்து நாட்டு மக்களுக்கெல்லாம்  சேர்த்தே   ப்ரே  பண்ணுங்கப்பா ! ப்ரே பண்ணுங்க!
 
உன் பஞ்சம் தீர – லஞ்சம் ஒழிய – வஞ்சம் மாற –நெஞ்சம் உருகி பாரத மாதாவே உனக்காகத்தான்
நீ நலம் பெற– வளம் பெற –புகழ் பெற –தினமும் உனக்காகத்தான் ப்ரே  பண்ணுவோம்!
தாய்  மண்ணே நீ நல்லரசு வல்லரசாக உனக்காகத்தான்  தினமும் ப்ரே பண்ணுவோம்! பாரத மாதா!
 
 
நாட்டில் லஞ்சமும் ஊழலும் ஒழிய வேண்டி
வெட்டுகுத்து கொலை கொள்ளை அழிய வேண்டி 
ஜாதிமத பேதவெறி தொலைய வேண்டி
நீதிநெறி நியாயம் நேர்மை நிலைக்கத்தான் ப்ரே பண்ணுவோம்
நீ நல்லரசாக, நாங்க ப்ரே பண்ணுவோம்
நீ வல்லரசாக  நல்லா  ப்ரே பண்ணுவோம்
 
போதை குடியை மக்கள் மறந்திட நாங்க ப்ரே பண்ணுவோம்
அரசே முன் வந்து டாஸ்மாக்கை மூடிட நாங்க  ப்ரே பண்ணுவோம்
நாட்டில்  ரௌடி , வன்முறை எல்லாம் அழிந்து போகும் நாளுக்காக ப்ரே பண்ணுவோம்!
அரசு பதவி பண மோகம் இன்றி கடமையை  தினம் செய்யும் ஆளுக்காக ப்ரே பண்ணுவோம்!
நீ நல்லரசாக, நாங்க ப்ரே பண்ணுவோம்
நீ வல்லரசாக  நல்லா  ப்ரே பண்ணுவோம்
 
நியாயமான தேர்தல் நாட்டில் நடந்திட நேர்ந்து ப்ரே பண்ணுவோம்
நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வந்திட சேர்ந்து ப்ரே பண்ணுவோம்
உண்மையாக உழைக்கும்  மக்கள் வாழ்வில் முன்னேற ப்ரே பண்ணுவோம்
உழைப்பு இல்லா இலவசங்கள்  வாங்க மறுக்கும் மக்கள் பெருக ப்ரே பண்ணுவோம்
இந்தியா வல்லரசாக நாங்க ப்ரே பண்ணுவோம்
எல்லா சாமியும் நல்லா  ப்ரே பண்ணுவோம்
 
தரமான கல்வி முறை வந்திட வேண்டி
பாரதப் பண்பாடு   காத்திட வேண்டி 
மாதரின் இழிவு நிலை மாறிட வேண்டி
அன்பான, பண்பான சமுதாயம் உருவாக ப்ரே பண்ணுவோம்.
இந்தியா நல்லரசாக நாங்க ப்ரே பண்ணுவோம்
பாரதம் வல்லரசாக நல்லா ப்ரே பண்ணுவோம்
எல்லா சாமிக்கும் நல்லா  ப்ரே பண்ணுவோம்
வாங்க எல்லோருமாக  நல்லா ப்ரே பண்ணுவோம்!