உங்கள் பார்வைக்கு

20150727_124043

இந்தக் குவிகம் இதழ் உங்களுக்குத் தாமதமாகக் கிடைப்பதற்கு மன்னிக்கவும். வழக்கமாக 15 ந்தேதி வரும்  குவிகம் (பெரும் பத்திரிக்கைகள் சொல்வதைப் போல) சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாக வந்திருக்கிறது.

தேவையானால் சென்னை மழையைக் காரணம் காட்ட முடியும். 

குவிகம் இப்பொழுது முதல் அதற்கே உரிய அமைப்புடன் kuvikam.com இல் வெளிவந்திருப்பது  ஒரு பெருமை கலந்த செய்தி. இதனால் tumblr அமைப்பிற்குப் போகவேண்டிய அவசியம் இல்லை. மேலும் இது wordpress மூலம் வெளிவருவதால் இன்னும் அதிக சிறப்பம்சங்களுடன்  வரும் என்பது உறுதியாகிறது. 

உங்கள் நண்பர்கள் குவிகத்தில் எழுத விரும்பினால் ssrajan_bob@yahoo.com இல் தொடர்பு கொள்ளச் சொல்லவும். 

 

தலையங்கம் – சென்னையின் கண்ணீர்க் கதை

boat_2644023f

நவம்பர் 20.  டிசம்பர் 1 – இரு  தேதிகளையும்  தமிழகம் , குறிப்பாகச் சென்னை மறக்க முடியாது. சென்னைத் தாயின் இரு விழிகளிலிருந்தும்  கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய தினங்கள்!

மேகம் வெடித்தது  போல் – வானமே பொத்துக்கொண்டு விழுந்தது போல் பெய்த மழை மக்களை அரட்டிவிட்டது- பிரட்டிப் போட்டது – மழையும் வெள்ளமும் தான் சென்னையின் மிகப்பெரிய தாதா என்பதை இந்த மழை நிரூபித்து விட்டது. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்துத்  தர மக்களையும் உலுக்கி எடுத்துவிட்டது.

குளங்கள் வழிந்தன  – ஏரிகள் உடைந்தன – ஆறுகள் கரை புரண்டன – அணைகள் பொங்கின – தொடர் மழை – வீட்டுக்குள் சாக்கடையும் குடிநீரும் சேர்ந்து ஓடும் அவல  நிலை – சாலைகளில் ஆறுகள் – வீடுகளில் குளங்கள் – உடமைகள் எல்லாம் பாழ் – வாகனங்கள் நீரில் மூழ்கின – விலைமதிப்பில்லா உயிர்களும்   மடிந்தன. மீடியாக்களூம் பத்திரிகைகளும்  பேஸ்புக்குக்களும் வாட்ச் அப்புக்களும்  கோரக் காட்சிகளைப்  படம் பிடித்துப் போட்டு அந்த சூட்டில் குளிர் காயும்.

ஒரே  பாரட்டத்தக்க அம்சம் தனிமனிதர்களும், தொண்டு நிறுவனங்களும் ,மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வந்த பெருமை. அவரது கால்களில் நம் சிரம் பதியும்.

கட்சி  டிவிக்கள்    இதை சாக்காக வைத்துக் கொண்டு மற்றவர் மீது சேற்றை வாரி இ்றைக்கும்.   அரசாங்கமும் சட்டசபையில்   நட்சத்திர விடுதிகளில் மக்களின் புனர் வாழ்வைப் பற்றி விவாதிக்கும்.  நாமும் ‘லட்சுமி வந்தாச்சு’  மானாட மயிலாட என்று  சீரியலுக்குள் தலையை விட்டுக் கொண்டு விடுவோம்.

வெள்ளம்   கற்றுக்கொடுத்த  பாடத்தை மறக்கலாமா?

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா

 

சரித்திரம் பேசுகிறது (யாரோ)

  நதிகள் மனிதனது ஆதிsarith6க்கத்துக்கும் , வாழ்வின் மேம்பாட்டுக்கும் வித்தானவை.கால வெள்ளமும் நதி வெள்ளமும் பற்பல நாகரிகத்தை நகரங்களை விளைவித்து , பராமரித்து , அழித்து வந்துள்ளது.  சிந்து நதிக்கரையில் கி மு 3000க்கு முன் ஒரு மாபெரும் நாகரிகம் தழைத்து வந்திருக்கிறது. அவற்றுள்
முக்கியமான இரு நகரங்கள் மொகஞ்சாதரோ , ஹாரப்பா.

sarith 4

சென்ற நூற்றாண்டில் தான் இந்த இரு நகரங்களையும் அகழ்வாராய்ச்சியாளர்கள்  அகழ்ந்து எடுத்தார்கள். அதை ஆராய்ந்த சரித்திர ஆசிரியர் ஒருவர் இந்த நகரங்களின் மேன்மையையும் சிறப்பையும் கண்டு, இவை மிகப் பழைய கால நகரமாக இருக்க முடியாது , மிஞ்சிப் போனால் முன்னூறு ஆண்டுகளுக்கு முந்திய நகரங்களாகத் தான் இருக்க முடியும் என்று தவறாகக் கணித்தாராம். அவ்வளவு சீரும் சிறப்பையையும் கொண்ட நகர வாழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கும் என்று அவரால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.

sarith2

ஆனால் உண்மை  தெரியவந்ததும் , அனைவரும் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றனர். அப்படிப்பட்ட நேர்த்தியான திட்டமிட்ட நகரங்கள் இவை.  நேரான  அகலமான சாலைகள் அமைத்து பருத்த சுவர்கள் கொண்டு காக்கப்பட்ட நகரங்கள் – பலம் பொருந்திய சுட்ட செங்கல் வீடுகள் – மூன்று மாடிக் கட்டிடங்கள் –  கழிவு நீர் இணைப்புகளுடன் குளியலறை -கழிப்பறை அமைக்கப்பட்ட வீடுகள்.  பாசனத்திற்கென்று கால்வாய்கள் . கோதுமை பார்லி போன்ற  பயிர் வளர்த்தல், ஆடு மாடுகள்  வளர்த்தல் – இசைக்கருவிகள், பொம்மைகள், விளையாட்டுக் கருவிகள், பானைகள் அனைத்தும் உபயோகத்தில் இருந்தன. மக்கள் சுத்தம் காத்தனர்  என்பதற்கு உதாரணமாக சீப்பு , மருந்து எல்லாம் இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பல் வைத்தியர் இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் துளைக்கப்பட்ட பற்களுடன் கூடிய மனித எலும்புக் கூடுகள் கிடைத்திருக்கின்றன.

இந்த நகரங்களில் வசித்தவர்கள் வெளிநாட்டினருடன் வாணிகம் செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாக மெசபட்டோமியாவின் நகைகள், நாணயங்கள் இங்கே கிடைத்திருக்கின்றன. ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நகரங்களில் வசித்து வந்திருக்கவேண்டும் என்பதும் நிரூபணமாயிருக்கிறது.

sarith 5

இவை அனைத்தும் 5000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்தது என்றால் ஆச்சரியம்  இருக்காதா என்ன?

சிறப்பின் செழிப்பாக இருந்த இந்த நகரங்கள் கிமு 1500 -1700 இல் மறைந்து விட்டன என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்கின்றனர். என்ன ஆயிற்று இந்த நகரங்களுக்கு ? இயற்கையின் பேரழிவோ? பஞ்சம் தாக்கியதோ ? நில நடுக்கமோ? வெளிநாட்டுப் படையெடுப்போ? அல்லது காடுகளை அழித்து, நில வளத்தைக் குலைத்து சுற்றுப்புறச் சூழ்நிலை அழிக்கப்பட்டதால் நகரமே அழிந்து பட்டனவா?  தொடர் சங்கிலி போல் ஏன் இந்த நகரங்கள் நிலை பெற்று நிற்கவில்லை?  இதற்கான விடை கிடைக்கவில்லை.

ஒரு அழகான கனவைப் போல் சிந்து சமவெளி நாகரிகம் அப்படியே மறைந்து போயிற்று. உலகின் பழமையான நாகரிகம் தனது பெருமையைக் கோடிட்டுக் காட்டிவிட்டு அப்படியே காணாமற் போயிற்று.

இந்திய சரித்திரத்தின் முதல் ஏடு இது.

இனி அடுத்த ஏட்டைப் புரட்டுவோம்!! 

சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய ஒரு வீடியோ ஆவணத்தைப் பாருங்கள் !

 

குறும்படம் – தமிழ் இனி மெல்லச் சாகும்

தமிழ் இனி  மெல்லச் சாகும் என்ற தலைப்பில் எடுக்கப் பட்ட  குறும்படம். 

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் எப்படித்   தமிழை மறந்து வாழுகின்றனர் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. இது குறும்படம் மட்டும் அல்ல. பெரும் பாடம்.

இலக்கிய வாசல் – 9 வது நிகழ்வு

இது சங்கீத சீசன் .  மழை சங்கீதத்தைக் கொஞ்சம் கெடுத்துவிட்டாலும் , நிறைய பாடகர்கள் பாடமாட்டேன் என்று சொன்னாலும்,  மற்ற உயர் மட்டப் பாடகர்கள் பாடுவதற்குத் தயாராய் இருக்கின்றனர்.  பாடுபவர் பாடட்டும் ;  வேண்டாதவர் பாடாமலிருக்கட்டும்.

இலக்கியக் கூட்டங்கள் சாதாரணாமாகவே கொஞ்சம் பின்னிருக்கையில் உட்காரும் நேரம் இப்போது. ( காரணம் : டிசம்பர் சீசன்  ) குவிகம் இலக்கியவாசலின் அடுத்த நிகழ்வு வருகிற 19 ந்தேதி சasனிக்கிழமை திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற உள்ளது.

திரு அழகிய சிங்கர்  அவர்களின் புத்தகமான “நேர் பக்கம்”  அன்றைக்கு அறிமுகமாகிறது.

இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் அழகியசிங்கரின்  –  ஏன் தமிழகத்திpic11ல் அனைவருடைய மதிப்பிற்கும் போற்றுதல்களுக்கும் உரிய உயர்திரு அசோகமித்திரன்  அவர்கள்  நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்கிறார்.  புத்தகத்தைப் பற்றியும் மற்றும் இலக்கியங்கள் பற்றியும் பேசுவார். .

நிச்சயம் குவிகம் இலக்கிய வாசலுக்கு இது ஒரு பொன்னாள்.

மேலும் சில இலக்கிய விமர்சகர்கள்  அழகியசிங்கரின்  நூலை அறிமுகப்படுத்திப் பேசுவார்கள்.

வழக்கம்போல சிறுகதை மற்றும் கவிதை மணித்துளிகளும் உண்டு!

அனைவரும் வாருங்கள்  !!!

 

சில்லு – நாடக விமர்சனம்

image1

2065 இல் நடப்பதாக ஒரு கதையை  1965 பாணியில்  எடுத்தால் எப்படியிருக்கும் என்பதற்கு  சில்லு ஒரு நல்ல உதாரணம். 

இதன் கதையைப்  பார்ப்போம் : 

2065 இல் ஒரு தம்பதிகளுக்குக் குழந்தை பிறக்கிறது.  அந்த சமயத்தில் தான் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ‘சில்லு’ பொருத்தப்படும் என்கிற அரசாங்க அறிவிப்பு.  இது மக்களை  அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கான ஏற்பாடு. அந்தத் தம்பதியரின் ஆண் குழந்தையான சான்டா என்கிற சந்தானகிருஷ்ணனுக்கு தவறுதலாகப் பெண் குழந்தை என்று சில்லுவில் பதித்துவிட தொடர்கிறது நகைச்சுவையான சீரியஸ் விவாதம்.. சில்லு பதிப்பது மனிதருக்குச் செய்யும் துரோகம் என்று ஒரு குழு அதை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறது .

சான்டா காதலித்த பெண்ணுடன் திருமணம் செய்யும் போது  அவனது உடலில் பொருத்தப்பட்ட சில்லில் பக் இருப்பதினால் திருமண தேதியன்றே உயிர் இழப்பான் என்ற உண்மை தெரியவருகிறது. செய்தியைக் கேட்டுத் துடிதுடிக்கிறான் சான்டா !.

சான்டா பிறந்தது முதல் அவன் வளர்ந்து இளைஞனாகும் வரை அவனுடைய பெற்றோர்களை விட அதிக பாசத்துடன் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருப்பது அடிப்பொடி என்ற ,மனித  இயந்திரம்.   அடிப்பொடியின் மனத்தில் இருக்கும் பாசம் அனைவரையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இறுதிக் காட்சியில் தான் வளர்த்த ஒரு மனிதக் குழந்தைக்காக அடிப்பொடி செய்யும் தியாகம் மகத்தானது. மனிதரில் கூட யாரும் செய்ய முன்வராதது.

கடைசியில்  சான்டாவும் சில்லுக்கு  எதிரான போராட்டத்தில் இணைகிறான். 

கதையில் ஓட்டை என்று தனியாக இல்லை. கதையே ஓட்டை தான். மனித இயந்திரத்தைப் பெருமைப் படுத்துகிறார்கள். சில்லுவை எதிர்க்கிறார்கள். முரண்பாடு தூக்கலாக நிற்கிறது. 

சில்லு என்று ஒரு வார்த்தை இல்லையென்றால் ராஜா – ராணி உண்மையான சேவகன் கொடுங்கோலுக்கு எதிரான  போராட்டம் . என்று 40 களில் வந்த ராஜா ராணி – பட வரிசையில் சேர்ந்திருக்கும். 

இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம் முருகன் சார்! 

வாட்ஸ் அப் புரளி (எஸ் எஸ் )

images

நாகமணிக்கு வதந்திகளைப் பரப்புவது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி. ஸ்கூல் படிக்கும் போது ‘கணக்கு வாத்தியார் , பங்கஜத்தைக் கணக்குப் பண்ணுகிறார்’ என்று ராத்திரியில காம்பவுண்ட் சுவற்றில்  எழுதுவான். கொஞ்சம் நல்லா எழுத ஆரம்பித்த பின்,  நிறைய பேருக்கு ‘உண்மை விளம்பி’ என்ற பெயரில் எழுதுவான். இப்போ வாட்ஸ்  அப் வந்தபிறகு அவன் தினம் ஒரு வதந்தியாவது அனுப்புவது என்பதைத் தன் கொள்கையாகவே வைத்திருக்கிறான்.

  • ஒபாமா தீபாவளிக்காக அமெரிக்காவிற்கே விடுமுறை அளித்துவிட்டார்
  • மோடி ஐந்து வருஷத்தில உலகநாடுகள் அத்தனையும் பார்த்து உலக சாதனை பண்ணப்போவதாக சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறார்
  • எந்திரன்-2 இல் ஜாக்கி சான் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
  • சென்னைக்கு 249 சென்டிமீட்டர் மழை கிறிஸ்துமஸ்  அன்று  பெய்யும் என்று ஐ‌எம்‌எஃப் அறிக்கை விட்டிருக்கிறது 
  • நயாகரா படத்தைப் போட்டுவிட்டு செம்பரம்பாக்கம் வழிகிறது என்ற தலைப்பு

இதெல்லாம் அண்ணன் நாகமணியின் கைங்கரியமே ! இதுக்காக அவன்  ஓட்டலில் ரூம் போட்டும்  யோசிப்பது உண்டு !

அப்படிப்பட்ட  நாகமணிக்கு ஒரு வாட்ஸ் அப்  செய்தி வந்தது. அவனுடைய தந்தை சிகாமணியின்  படத்தைப் போட்டுவிட்டு ” மேற்கண்ட நபர் துரைசாமி சப்வேயில் வெள்ளத்தில் மாட்டி உயிரிழந்தார். அவரது உடல் ராயப்பேட்டை  ஆஸ்பத்திரிக்கு வந்துகொண்டிருக்கிறது.” என்று எழுதப்பட்17DURAISAMY SUBWAYடிருந்தது.  அப்போது தான் அவனும் அந்த சப்வே வழியாக வந்திருந்தான். அங்கே ஒரே அமளியாக இருந்தது. போலீஸ் எல்லாரையும் விரட்டிக் கொண்டிருந்தார்கள். இவனும் தண்ணீரில் இறங்கி என்னவென்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆட்டோவில்  வந்த நிறைய பேர் தண்ணீரில் அடித்துச் சென்றிருப்பதைப் பார்க்க முடிந்தது. அவர்களைக் காப்பாற்றக் கூட முயலாமல்  இவனும் மற்றவர்கள் போல போட்டோவும் வீடியோவும் எடுத்து விட்டு வந்தான். அவனுடைய வதந்தி மில்லுக்கு உபயோகமாயிருக்குமே என்று. 

maxresdefault (1)

 ஒரு வழியாக வெளியே வந்து அவன் வேலை செய்யும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தான். அப்போது தான் அந்த வாட்ஸ் அப் வந்தது.

  துடிதுடித்துப்  போய் ஆஸ்பத்திரி முழுதும் தன் அப்பாவைத் தேடினான்.  எல்லாரிடமும் விசாரித்தான். கடைசியில் மார்ச்சுவரியிலும்  தேடினான் . அந்த மாதிரி யாரும் வரவில்லை என்று உறுதி கூறினார்கள்.

அப்போது  “நாகமணி ” என்று குரல் கேட்டது. அவனது அம்மா தான்.  ” நாகமணி நீ நல்லா இருக்கியா? நானும் உங்கப்பாவும் வந்த ஷேர் ஆட்டோ துரைசாமி சப்வே கிட்டே வரும் போது  நீ அங்கே  சப்வேயில் மாட்டிக்கிட்டிருப்பதாக வாட்ஸ் அப் செய்தி வந்தது.  நானும் உங்க அப்பாவும்  இறங்கி உன்னை தேடிக்கிட்டிருந்தோம்.  ரெண்டு பேரும் தண்ணியில மாட்டிக்கிட்டோம். நான் மயங்கி விழுந்ததும் என்னை இங்கே கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க அவர் என்ன ஆனாரோ தெரியல. ” என்று கதறி  அழுதாள்.  

சற்று நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்தது. அதில் நாகமணியின் அப்பா சிகாமணி பத்திரமாக வந்தார் – அவர்  தன் மனைவியயும் மகனையும்  தேடி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு ஒன்றும் ஆயிருக்கவில்லை.  

சப்வேயில் போட்டோ எடுத்தவர்கள்  தன்னைப் பற்றியும், தன் தந்தையைப் பற்றியும்  வதந்தி பரப்பியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான்.

 இனி வதந்திகளைப் பரப்புவதில்லை என்று  நாகமணி உறுதி எடுத்துக் கொண்டான். 

 

வான் சிறப்பு (?) — சுந்தர்

pic10

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                குப்பையும் செத்தையும் நீக்காச் சென்னையில்

அப்பித் தீர்த்த மழை

ஏரியில் வீட்டைக் கட்டிய சென்னைக்கு

பேரிடர் தந்த மழை

பிளாஸ்டிக்  மயமான  சென்னைத் தெருக்களில்

எலாஸ்டிக் ஆன மழை

தாழ்வு இடங்களில் தங்கிடும்  மக்களின்

வாழ்வு பறித்த மழை

தூர்வாரா குட்டைகள்  உள்ள சென்னையில்

சேறு பரப்பிய மழை

சாக்கடை சரியாய் அமைக்காச்  சென்னையில்

சீக்காய் வந்த மழை.

போக்கிடம் இல்லா தண்ணீர்  சென்னையை

சாக்கடை ஆக்கிய மழை

வானம் பொடித்துக்  கொட்டி சென்னையின்

மானம் பறித்த மழை

பட்டாலும் புத்தியில்லா சென்னை மக்களை

முட்டா ளாக்கிய மழை

துருப்பிடித்த அரசு எந்திரங்கள்  எல்லாம்

கருவருக்கச் செய்த மழை

இலக்கிய வாசல் 8 ஆம் நிகழ்வு

குவிகம் இலக்கிய வாசலின் எட்டாம் நிகழ்வு நவம்பர்  21ந் தேதி  திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.

திருமதி ஸ்ரீஜா வெங்கடேசன் அவர்கள் தான் இயற்றிய பாண்டியpic7  காப்பியம் என்ற புத்தகத்தைப் பற்றியும், சரித்திர நவீனங்களைப் பற்றிப் பொதுவாகவும் பேசினார்.

விஜயலட்சுமி  அவர்கள் குவிகம் இலக்கியவாசலின் எட்டு மாத நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டினார்.

நிகழ்ச்சிக்கு முன் வழக்கம் போல ஒரு கவிதை  மற்றும் ஒரு கதை வாசிக்கப்பட்டன.

கதை : கீதா அவர்கள்

கவிதை : சாந்தி அவர்கள்

கிருபானந்தன் சரித்திர நவீனங்களில் இழையும் சரித்திரப் பின்னணியைப் பற்றியும் , மற்ற எழுத்தாளர்களிலிருந்து ஸ்ரீஜா அவர்கள் எவ்விதம் வேறுபட்டிருக்கிறார் என்பதையும் எடுத்துக் காட்டினார்.

இதன் ஒலி வடிவத்தை இலக்கியவாசல் பிளாக்கில் கேட்கலாம். 

http://ilakkiyavaasal.blogspot.in

https://youtu.be/utmKvkOmEBg

குறும்படம் – நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி என்ற நளன் அவர்களுடைய குறும்படம். சும்மா சொல்லக் கூடாது உங்கள் நெஞ்சில் அது ஒட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

படைப்பாளி – சா. கந்தசாமி (எஸ் கே என் )

download

மயிலாடுதுறையைச் சேர்ந்த, சென்னையில் வசிக்கும் இவரது முதல் நாவல் ‘சாயாவனம்‘. சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித இயல்புகள் இரண்டும் ஊடோடும் இந்த நாவல், நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாகத் தேசிய புத்தக அறக்கட்டளையால்  அறிவிக்கப்பட்டது.     

பாலிய நண்பர்களைத் தேடிச் சந்திக்கும் ஒருவரின் அனுபவங்களும், பழைய நினைவுகளும் கொண்ட மிகச் சிறந்த படைப்பான ‘தொலைந்து போனவர்கள்’ , தொலைக்காட்சியில் , மிகவும் பாராட்டப்பட்ட டெலி பிலிமாக வந்தது.

‘விசாரணைக் கமிஷன்’ நாவலுக்காக 1988 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். 

தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணிகளும், தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் பற்றிய இவரது ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ‘காவல் தெய்வங்கள்’ என்னும் ஆவணப்படமும்   குறிப்பிடத்தக்கன.

இவரது ‘பாண்டிச்சேரி’ என்னும் கதை இப்படிப் போகிறது

கப்பலில் வேலை செய்யும் மரைன் என்ஜினீயர் கோபால்,  வேறொரு  கம்பனிக்கு வேலைக்குச் சேரும்முன், ஒருமாத இடைவெளியில் சொந்த ஊர் பாண்டிச்சேரிக்குக் காலையில் வந்திருக்கிறான். நண்பbar-fight-14708149ர்களைப் பார்க்கச் சென்ற அவனுக்காக அவனது அண்ணன் சுந்தரமும் தங்கை சரஸ்வதியும் காத்திருக்கிறார்கள். வயதாகி முடியாமல் வீட்டோடு  இருக்கும்  தந்தை மகனைப் பார்த்ததில் கொஞ்சம் தெம்பாகத் தென்படுகிறார்.

சுந்தரத்தை விட இரண்டு வயது சிறியவனான கோபால், படிக்கும்போதே கெட்டிக்காரன் என்று பெயரெடுத்தவன். விளையாட்டிலும் அவன் முதல். கடைசி வருடம் படிக்கும்போது அம்மாவிற்குத் தொண்டையில் கேன்சர் முற்றி அடையார் கேன்சர் ஆஸ்பத்திரியில் சேர்த்தான் சுந்தரம். கோபாலால் நான்கு நாட்கள் கழித்துதான் வர முடிந்தது.  அவனது கையை அம்மா விடவே இல்லை.

அவனுக்கு அம்மா மீது பிரியமா? அம்மாவுக்குத்தான் அவன் மீது பிரியமா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா அவன் கையைப் பிடித்தபடியே கண்ணை மூடினாள்.          

நண்பர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்த கோபாலும் சுந்தரமும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்படுகிறார்கள்.

“சின்ன அண்ணே, உனக்காக நண்டு குழம்பு ஸ்பெஷலா வச்சியிருக்கேன்” என்றாள் சரஸ்வதி.

“நாங்க சாப்பாட்டுக்கு வந்துடுவோம்” சுந்தரம்.

“நீ இப்படித்தான் சொல்லுவ. ஆன வர மாட்ட”

“இன்னிக்குப் பாரு.. கண்டிப்பா வந்து நண்டு கறி சாப்பிடுவோம்”

“நாளைக்குப் போனா என்ன அண்ணே”

சுந்தரம் சரஸ்வதியின் கையைப் பிடித்துகொண்டு ” இதோ.. பாரு சரசு.. உங்க சின்ன அண்ணன் இன்னைக்குத்தான் ஊர்ல இருந்து வந்து இருக்கார். அதுக்காக ஒரு சின்ன பார்ட்டி..” என்றான்

“நீ பார்ட்டின்னு போனா ரெண்டு மணிக்குத்தான் வருவே” என்ற சரஸ்வதி, இவன் கையைப் பிடித்துக்கொண்டு, “சின்ன அண்ணே.. நீ சீக்கிரமா வந்துடனும்.. பத்து மணி ஆயிட்டா நான் படுத்துத் தூங்கிடுவேன். அப்பறம் கதவைத் திறக்க மாட்டேன்” என்றாள்.

“நாங்க ஒன்பது மணிக்கே வந்துடுவோம், சரசு” என்றான் சுந்தரம்.

“நீ ஒண்ணும் சொல்லாதே”

“சரசு, ஒன்பதரைக் கெல்லாம்நான் வந்து உன் பக்கத்துல நிக்கறேன்”

“இது போதும்” சரஸ்வதி ஒரு சிரிப்பு சிரித்தாள்.

 

தங்கை காத்துக்கொண்டிருப்பாள். சீக்கிரமாய் வந்து விடவேண்டும் என்ற   முடிவோடு புறப்படுகிறார்கள்.

பாண்டிச்சேரி பீச்சைப் பார்த்து இரண்டு வருஷம் ஆகிவிட்டது என்று முதலில் கடற்கரைக்கு அழைத்துப்போகிறான் கோபால். அவன் பாண்டிச்சேரி கடற்கரையைப் பற்றி அறுபது கவிதை எழுதி உள்ளதாகவும், பஸிஃபிக் சமுத்திரத்தில் கப்பல் போய்க்கொண்டிருக்கையில் மேல்தளத்தில் அமர்ந்து வெறி  பிடித்தது போல் எழுதியதாகவும் சரியாக வந்திருப்பதாகத் தோன்றுவதாகவும் சொல்கிறான்.

அண்ணனுக்குச் சந்தேகம், பிரெஞ்சிலா, தமிழிலா என்று. தமிழ் என்று அறிந்து “நிஜமாவா” என்று கேட்கிறான். ஹாலந்தில் ஒரு இலங்கைத் தமிழரிடம் காண்பித்த போது, புத்தகமாகப் போடலாம் என்றாராம். கானடாவில் ஒரு தமிழர், கவிதை என்பதே அறிவிற்கு எதிர் என்றாராம்.

சரசு காத்துக்கொண்டிருப்பாள் என்பதால் மீண்டும் சீக்கிரம் வீடு திரும்பும் தீர்மானத்தோடு தாய்லாந்து பார் செல்கிறார்கள். தென்னந்தோப்பில் கொரியன் புல் வளர்த்து, வண்ணக்குடைகள் கீழ் மேஜை நாற்காலிகளைப் போட்டு இருந்தார்கள்.     அரவிந்த், நாராயணன் ஆகியோர் இவர்களுக்காக அங்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள். கோபால் கவிதை எழுதுவது அரவிந்திற்கு ஆச்சரியம். பாண்டிச்சேரி மண்ணுக்கே கவிதை ராசி உண்டு. அரவிந்தர், பாரதி, பாரதிதாசன் என்று நிறையப்பேர் பாண்டிச்சேரியில் இருந்துதான் கவிதை எழுதியிருக்கிறார்கள் என்கிறான்.

விஸ்கி ஆர்டர் செய்யப்படுகிறது

கிளாஸ் கிளாஸாக விஸ்கி ஆரம்பித்தது. அப்புறம் சிக்கன், டபுள் ஆம்லெட்.. சிப்ஸ்…கோபால் மற்றவர்களைவிட வேகமாகத்தான் குடித்தான். ஆனால் குடிக்கக் குடிக்க அமைதியானான். மெதுவாக சுண்டுவிரலால் மேசையைத் தட்டி அடிக்கடி விசில் அடித்துக்கொண்டிருந்தான். சுந்தரம் மேசையத்தட்டிச் சப்தமாகப் பேச ஆரம்பித்துவிட்டான்.

சுந்தரம் கோபாலிடம் கவிதை புத்தகம் நான்தான் போடுவேன். என்ன செலவானாலும் பரவாயில்லை என்கிறான். அரவிந்த் அவன் கையைப்பிடித்து நாற்காலியில் உட்கார வைக்கிறான். அவன் கையைத் தட்டிவிட்டு “தம்பி, தமிழில் கவிதை எழுதியிருக்கு. அதைப் புத்தகமா போடப்போறேன்” என்கிறான்.

எட்டே முக்காலுக்கு, கோபால் மணியாகுது என்கிறான்.

“பார்க்கு வந்துட்டா நேரம், காலம் எல்லாம்  பார்க்கக் கூடாது” என்கிறான் நாராயணன்.

கோபால் பாத்ரூம் போக எழுகிறான். பாருக்கு வெளியே தென்னந்தோப்பில் அளவிற்கு மீறி குடித்த ஒருவன் கோபால் மீது விழ, இவன் அவனைத் தள்ள, “என்னடா என் தம்பியை அடிக்கிற” என்று சுந்தரம் அவனைக் காலால் உதைக்கிறான். அவன் பெரிதாகக் கத்தியபடி கீழே விழுகிறான்.

அவர்களில் ஒருவன் மேசை மீதிருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து மேடை மீது தட்டி உடைத்து முன்னே பாய்கிறான். அண்ணனைக் காப்பாற்ற குறுக்கில் பாயும் கோபாலின் அடி வயிற்றில் பாட்டில் குத்தி ரத்தம் பீறிட கீழே சாய்கிறான்.

ஒரு ஆள் பீர் பாட்டிலை தூக்கிக் கொண்டு இப்படியும் அப்படியும் பார்த்தான். பார்வை ட்யூப் லைட் மீது நிலை கொண்டது. பாட்டிலை தூக்கி அடித்தான். ட்யூப் லைட் உடைந்து சிதற எங்கும் இருள் பரவியது.

அவர்கள் இருளில் ஓடி மறைந்தார்கள்.

மணி ஒன்பது அடித்தது. சரஸ்வதி வாசல் பக்கம் வந்து சாலையைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.    

என்று கதை முடிகிறது.

எளிய அன்றாட  மனிதர்களும் இயல்பான நிகழ்வுகளும் கொண்ட இவரது கதைகள் சொல்லப்படும் விதத்தால் நம் மனதில் நீங்காத இடத்தைப் பெறுகின்றன.

இணையத்தில் கிடைக்கும் இவரது இரு கதைகள்

தக்கையின் மீது நான்கு கண்கள்        அவள்

 

குறும்படம் – ஜீரோ கிலோமீட்டர்

இந்தக் குறும்படம் தான் பின்னர் இன்று நேற்று நாளை என்று மாறு வடிவத்தில்  திரைப்படமாக வந்துள்ளது.

பார்த்து மகிழுங்கள்!!

நன்றி : இதை எடுத்து யு டியூபில் வெளியிட்ட அன்பருக்கு!

சித்தர் கருவூரார்

இராசராச சோழனின் குரு கருவூர்த் தேவர் ஆவார். இவருக்கு மரியாதை செய்யும் பொருட்டுத் தஞ்சை பெரிய கோயிலின் இராச கோபுரத்திற்கு நேர் பின்புறம் கருவூர்த்தேவருக்குச் சிறிய கோயிலை எழுப்பியுள்ளார் இராசராச சோழன்

karuvurar.

சோழ நாட்டின் கருவூரில் பிறந்த கருவூர்ச்சித்தர், துள்ளி விளையாடும் பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார். கருவூராரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு வாழ்ந்தார்கள்.

ஒரு சமயம் போகர் திருவாவடுதுறைக்கு வந்தார். அதையறிந்த கருவூரார் அவரைச் சென்று வணங்கி தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். போகர் உபதேசப்படி,கருவூரார் சித்துக்கள் புரியும் ஞானவானாக உயர்ந்தார்.

கருவூரார், சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார்.  கருவூரார் காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உருவாக்கி வைத்தார்.

சோழ மன்னன் இரணிய வர்மனுக்காகத் தில்லையில் நடராசப் பெருமானின் சிலையை வடித்தவர் இவரே என்று சொல்லப்படுகிறது. அத்துடன் கோவில் அமையவேண்டிய முறை, எந்தெந்த வடிவங்களை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டும்.  மூலவரை எப்படி பிரதிட்டை செய்து பூசை செய்ய வேண்டும் என்பதையும் கருவூரார் தெளிவித்தார்.

திருவிடை மருதூர் என்னும் தலத்தை அடைந்து இறைவனை நோக்கிக் குரல் கொடுத்த போது இறைவன் தலையைச் சிறிது சாய்த்து கருவூரார் குரலைக் கேட்டுப் பதில் கொடுத்தார். திருவிடை மருதூரில் இன்றும் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே இறைவன் திருவடிவம் காணப்படுகிறது.

தஞ்சையில் கோவில் கும்பாபிசேகம் தடைபட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறையில் இருந்த சிவலிங்கத்தை நோக்கிச் சென்றார். எளிதாக அட்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிட்டையும் கும்பாபிசேகமும் செய்து வைத்தார்.

தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்ற கருவூர் சித்தர், அபரங்சி என்ற தாசிக்கு  ஞான சாதனையில் அவளுக்கிருந்த ஆர்வத்தைப் பாராட்டி திருவரங்கனிடமிருந்தே ஒரு  நவரத்ன மாலையை வாங்கி அதை அவளிடம் தந்தார். மன்னனும் மற்றவரும் அவளை நிந்திக்க அரங்கனே வந்து அசரீரியாகச் சொன்னதாகவும் ஒரு கதை நிலவுகிறது.

முடிவில் “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூவியழைத்துக் கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவி இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார், இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார்.

 

கருவூரார் செய்த நூல்கள்:

கருவூரார் வாத காவியம் – 700
கருவூரார் வைத்தியம் – 500

கருவூரார் யோக ஞானம் – 500
கருவூரார் பலதிட்டு – 300
கருவூரார் குரு நரல் சூத்திரம் – 105
கருவூரார் பூரண ஞானம் – 100
கருவூரார் மெய் சுருக்கம் – 52
கருவூரார் சிவஞானபோதம் – 42
கருவூரார் கட்ப விதி – 39
கருவூரார் மூப்பு சூத்திரம் – 30
கருவூரார் அட்டமாசித்து (மாந்திரிகம்). – ஆகியவைகள் ஆகும்.

தியானச் செய்யுள்:

கருவூரில் அவதரித்த மஹாஸ்தபஸ்யே !
திருக்கலைத் தேரில் முடிதரித்த நவநிதியே !
வாரி வழங்கி அருள் கொடுத்தாய் !
மாறாத சித்துடையாய் !
கல் உள்ளளவும் மண் உள்ளளவும் – உன்
கருணைக் கரங்களே காப்பு !

T 20-20-20

pomo1

கிரிக்கெட்டில் 20-20 மிகவும் பிரபலமல்லவா?

அதைப்போல உங்கள் வாழ்க்கையில் தினமும் செய்ய வேண்டிய பெரிய பிராஜக்ட் அல்லது பொழுது போக்கு அம்சம் அல்லது படிப்பது , எழுதுவது இப்படி எதையாவது வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் செய்ய வேண்டி யிருந்தால் உபயோகப்படுத்துங்கள்  டெக்னிக் 20 – 20 -20 .

இதற்குப் பெயர் “போமோடோரோ டெக்னிக்” என்று பெயர் .

உதாரணமாக நீங்கள் ஒரு பெரிய நாவல் எழுத் திட்டமிட்டிருக்கிறீர்கள். தினமும் ஒரு மணி நேரம் எழுதுவது என்று தீர்மானித்திருக்கிறீர்கள். வீட்டில் உங்களுக்கு ஒரு மணிநேரம் யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

அது நிச்சயம் கிடைக்காது. உங்கள் மனைவியோ, குழந்தையோ  உங்களுக்கு அதைக்  கட்டாயம் தரப்போவதில்லை. நீங்களும் ஒரு மணி நேரம் வீட்டின் மற்ற வேலையிலிருந்து தப்பிக்கலாம் என்றால் அது நியாயமில்லை.

இதற்கு என்ன வழி?

உங்கள் தேவையை மூன்று  பாகங்களாகப்  பிரியுங்கள். ஒரு மணியை 20-20-20 நிமிடங்களாகப் பிரியுங்கள். உங்கள் இல்லத்தாரை காலையில்  20 நிமிடம் மதியம் 20 நிமிடம் இரவு 20 நிமிடம் உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் தானே என்று அவர்கள் உங்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். நீங்களும் அவர்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டி வரும். 

அப்பறம்  என்ன? 

நீங்கள்  மூன்று வேளை  சாப்பாடு சாப்பிடுவது போல 20 நிமிடம் மிகுந்த கவனத்துடன் உங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்யுங்கள்!

இதற்குப் “போமோடோரோ டெக்னிக்” என்று பெயர். போமோடோரோ என்பது சாதாரண அடுப்படியில் உபயோகப் படுத்தப்படும் அலாரம் மணி.

அதை இருபது நிமிடத்துக்கு அலாரம் அடிக்க வைத்துவிட்டு உங்கள் வேலையைத் தொடங்குங்கள்!

நீங்கள் சாதனையாளராகலாம்!