கண்ணனைக் காண வாருங்கள்
நம்முடைய பாரத தேசத்தில் எத்தனை எத்தனையோ திருத்தலங்கள், திருவிழாக்கள். நாம் திருவிழாக்களையும் இறையோடு இணைத்து அதன் மூலம், கலை, மொழி, பண்பாடு ஆகியவற்றைப் பேணி வருகிறோம்.அவ்வகையில் திரு ஆடல் நாட்களையும், திரு அவதார நாட்களையும் கொண்டாடி நம் மரபைக் காத்து வருகிறோம்.
பூலோக வைகுந்தம் எனப்படும் ஸ்ரீரங்கத்திலே பள்ளி கொண்டுள்ள பெருமாள் அறிதுயில் அல்லவா கொண்டுள்ளான்? “தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவழ வாயும்” அவை தாமரைக் கண்கள் மட்டுமல்ல, தூய அரைக் கண்களும் ஆகும்.அவனுக்குப் பிறப்பு,இறப்பு என எதுவும் கிடையாது. தூய உணர்வாகிய பிரும்மம் அவன்.ஆனால்,ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர அவன் அவதரிக்கிறான்.நல்லவர்களைக் காக்கவும், அல்லாதவரை அழிக்கவும் அவன் ஆவணி ரோகிணி அஷ்டமி நன்னாளில் பிறக்கிறான்.அவன் மாயன், வட மதுரை மைந்தன், யமுனைத் துறைவன்,ஓங்கி உலகளந்தவன்,போர்க்களத்தில் பார்த்தனை முன்னிட்டுக் கொண்டு மானுடர்க்கென கீதை சொன்னவன்.அவன் இராஜ கோபாலனாக இருக்கலாம்,கீதாச்சார்யனாக இருக்கலாம், அனைத்தையும் விட அவன் காலினில் சதங்கை கொஞ்ச கை வளை குலுங்க முத்து மாலைகள் அசைய வருகின்ற திருக்கோலம் தான் நமக்கு மிக உவப்பாக இருக்கிறது. சின்னஞ்சிறு பிள்ளை, தோழரோடு வெண்ணை திருடிய கள்வன்,மாடு கன்று மேய்க்கும் ஆயன்,கோபிகைகளோடு ஆடியவன், இராதையின் வண்ணப் புதுச் சேலை தனில் புழுதி வாரிச் சொரிந்து வருத்திக்குலைப்பவன்,அவனை,அந்த தெய்வஅழகை ஒவ்வொரு அங்கமாக அனுபவிப்போம் வாருங்கள்.
திருமுடி
அவன் கேசம் கரு வண்டினை நிகர்த்திருக்கிறது;அன்னை யசோதா அதைக் கொண்டையாக்கி முடிச்சிட்டு, பூக்களாலும், முத்துச் சரத்தாலும் அலங்கரித்து,மயில் பீலியை சொருகியிருக்கிறாள்; அவன் தவழ்ந்தும், அசைந்தும் வரும் அழகைப் பார்த்துப் பார்த்து உள்ளம் பூரிப்பவள், உலகோருக்கு நிழல் தரும் மரம் என அவனை நினைக்கிறாள்
“கரு வண்டு நிறத்த கேசம் கொண்டையிட்டு மலர் சூடி
அரு முத்துச் சரம் சுற்றி மயில் பீலி இடை செருகி
வரும் அசைவில் அசையா மாந்தர் உள்ளம் உண்டோ?
தரு நிழலைத் தள்ளிப் போவோரும் உளரோ?”
நெற்றி
கீற்று மதியைப் போல் அவன் நெற்றி இருக்கிறது;அதில் சண்பகப்பூவின் மணம் எழுகிறது.கேசவன் என்னும் பெயருக்கேற்ப அவன் முடியின் கற்றைகள் ஒரு சிறந்த மகுடமென நெற்றியில் இலங்குகிறது.அவன்தான் மந்தார மலையைக் கொண்டு கடலைக் கடைந்து அமுதம் அளித்தவன்.அவனது உற்ற தோழனான பார்த்தனின் வில்லைப் போல் இவனது புருவங்கள் அழகுற அமைந்திருக்கின்றன.
“சந்திரக் கீற்றென்னும் செண்பக நெற்றியிலே
இந்திர மகுடமென்ன சுருள் கற்றை விளையாட
தந்திரம் மிகுந்த பார்த்தன் வில் போல் புருவம் மின்ன
மந்தார மலையை மத்தாக்கியவன் போற்றி!”
கண்
அவன் தாமரைக் கண்ணன்;கண்களும் மலர்ந்து சிரிக்கும் அழகன்.அடியாரை, கடைக்கண் பார்வையினாலே காத்தருள்பவன்.அன்புப் பார்வையினால் கோபியரை காதல் வசப்படச் செய்தவன்.
“கண் என்ன கமலம் தானோ?கடைக்கண் பார்வை தேனோ?
என்னென்ன மாயம் செய்தாய் கண்ணினால் கண்ணா நீதான்
அன்னமனைய இராதை ஆய்க்குலத்தோன் தோகை
பின்னே வரும்படி பார்த்தாய் காதல் பார்வை!”
நாசி
அவனது திரு நாசிகள் எள்ளுப்பூவைப் போல் அமைந்திருக்கின்றன.அவை அடியாரின் கஷ்டங்களை நுகர்வினாலேயே உணர்ந்து அவற்றை நீக்குகின்றன.அதே நாசிதான் நண்பர்களோடு வெண்ணைத் தாழிகளைத் தேடிச் சென்று, சிறு கைகளால் துளாவி, பங்கிட்டு உண்பதற்கும்,’நான் திருடவேயில்லையே’ என்று கள்ளம் சொல்வதற்கும் உறுதுணை!
“எள்ளுப் பூ நாசியால் எங்களைக் காத்தருள்வாய்!
பிள்ளைப் பருவத்திலே கள்ள வெண்ணை தேடி வந்து
சொல் ஒழுகும் தோழர் கூட்டத்தோடே பகிர்ந்து
இல்லை எனப் பொல்லா நாடகம் ஆடியவன்!”
காது
அவன் காதுகளில் தங்கக் குண்டலங்கள் அசைந்தாடுகின்றன;அவை முதுவீரர் பீஷ்மர் சொன்ன ஆயிர நாமங்களைச் செவிமடுத்து அசைகின்றன.அவை ‘சகஸ்ர நாமங்களை’ மட்டும் கேட்கவில்லை. தன் அருமைத் தங்கை சுபத்திரையின் மேல் காதல் கொண்ட அர்ச்சுனனின் ஆசையையும் கேட்டு நிறைவேற்றுகின்றன.
“மகர குண்டலங்கள் அசைந்தாட அந்த
அமர பீஷ்மன் சொல்ல ஆயிரனாமம் கேட்டாய்
பகரும் சொல் கேட்டுசுபத்திரை மேல் அன்பு கொண்டு
உருகி ஓடி வந்த அர்ஜுனனை வாழ வைத்தாய்!”
உதடு
அழகிய ரோஜா மொட்டுக்களைப் போல் அவன் உதடுகள் மென்மையாக இருக்கின்றன.ஆனாலும்,கம்சன் அனுப்பிய பூதகி என்ற அரக்கியின் முலை வழியே அவள் உயிரையும் உறிஞ்சுகின்றன.அவள் கொடு உயிர்,அவளே கொடுத்த உயிர்.கண்ணனின் உதடுகள் தீமைகளை உறிஞ்சி நம்மை நல்வழிப் படுத்தும் ஆற்றலைக் காட்டுகின்றன.
“ரோஜா மொக்கெனும் உதடுகள் விரித்து கம்ச
இராஜா அனுப்பிய அரக்கி முலை பற்றி
தாஜா செய்து அவள் கொடு உயிர் குடித்த சிம்ம
இராஜா என் கண்ணே என் தீமைபோக்காயோ?”
வாய்
கற்பூரம் நாறும் கமலப்பூ! தித்தித்திருக்கும் திருப்பவளச் செவ்வாய்! யசோதைக்கு தன் வாய்க்குள் பிரபஞ்சத்தைக் காட்டியவன் அவன்.அவன் குழலிசையில் நம் புலன்கள் அடங்கி முத்தி நிலை வாய்க்கும்.மண்ணாசையால் அனைத்தையும் இழந்த கௌரவர்களை குருக்ஷேத்ரத்தில் வெற்றி கொள்ள பார்த்தசாரதியாக நின்று கீதை சொன்ன திருவாயன் அல்லவா?
“மண்ணுன்ட வாயில் மா உலகம் காட்டிடுவாய்
பண்பொழியும் குழலில் புலப்பசுக்கள் மேய்த்திடுவாய்
மண்ணாசை மிகக் கொண்ட கெளரவரை வெற்றி கொள்ள
கண்ணாகிக் காத்து நின்று குருவாகி கீதை சொன்னாய்!”
கழுத்து
மரா மரத்தின் கீழிருந்து ‘மரா,மரா என்று சொன்ன வான்மீகி முனிவர் படைத்த இராமாயணம்,அதன் அறச் சிந்தனைகளுக்காகவே போற்றப்படுகிறது;அதிலும் இராமனை விட அவன் பெயருக்கு சிறப்பு அதிகம் என்பது பல நூல்களில் சொல்லப்படுகிறது; கண்ணனை உயிர் உருகப் பாடிய மீரா, ’ராம’ நாமத்தையே தாரக மந்திரமாகக் கொண்டாள்.இராணாவின் அரசால் அவளது பக்தியை உணரமுடியவில்லை;அவளை சிறையில் அடைத்து விஷம் கொடுக்கிறார்கள்;அதை அவள் ’கிரிதரனு’க்குப் படைத்துப் பின்னர் அருந்துகிறாள்.அது நீலக் கோடாக கண்ணனின் கழுத்தில் இடம்பெயர்கிறது;மீரா விடுதலை செய்யப்படுகிறாள்
“மரா மரா என வான்மீகி சொன்ன நாமம்!
மீரா எனும் குயிலின் ஆத்ம கீதம்! அவள்
தரத்தினை அறியாதோர் கொடுத்தது கொடிய விஷம் கிரி
தரா எனவே உன் கண்டத்திலே அமிர்த மயம்!”
தோள்
பரம் பொருளே பாலனாக வந்திருக்கிறது என்பதை இந்திரன் மறக்கிறான்; கோவர்த்தன மலைக்கு கண்ணனின் விருப்பத்திற்கேற்ப ஆயர்கள் பூசை செய்வது தேவேந்திரனின் சினத்தை அதிகரிக்கிறது.மழை, மின்னல், இடி என்ற தன் படைக்கலங்களுடன் இந்திரன் விடாமல் போர் செய்ய, ஆயர்பாடியையும், உயிர்க்குலங்களையும் காக்கும் பொருட்டு கண்ணன் தன் இடது கை சுண்டு விரலால் மலையைத் தூக்கித்,தன் தோள் வலிமையால் இந்திரனை வெல்கிறான்.
“வானவர் உலகு நீக்கி வள்ளல் நீ வந்திட்டாய்
தானவர் தன்னிலையை முற்றுமே மறந்திட்டார்
ஆணவம் மிகக் கொண்டு வெள்ள மழை பொழிந்திட்டார்
பேணும் செம்மை பூண்டு கோவர்த்தனம் தூக்கி நின்றாய்!”
கை
அபயம் தரும் கரங்கள்,வரம் தரும் கரங்கள், பெண்ணின் மானத்தைக் காத்த கரங்கள்,அந்தக் கரங்களுக்கு ஈடு சொல்ல முடியுமோ,அதை வாழி என்று வாழ்த்துவதைத் தவிர!
“செந்தழல் பிறந்த தேவியின் கருங்குழல் பற்றிப் பாவி
வன்கழல் பொய் வீரர் சபையினில் ஏற்ற ஆவி
எரி தழல் வீழ் புழு போல் துடித்துன் நாமம் கூவி
செறி கழல் நினைந்தாளின் மானக் காத்த கரம் வாழி!”
மார்பு
திருப் பாற்கடலில் பள்ளி கொண்டவன். அவனது திரு மார்பில் உறைபவள் திருமகள்.திருமகள் உடனிருக்க நமக்கு குறையொன்றுமில்லை.கருவிலே திரு உடையவராவோம், நம் இருவினைகளைப் போக்கி அடைக்கலம் தரும் கண்ணனின் திருமார்பை எண்ணுவோம்.
“திருவினைத் தாங்கி நிற்கும் செந்திரு மாலா!
ஒரு மணி வயிற்றில் பிறந்து மறுவீடு வளர்ந்த பாலா!
உறும் வினை போக்கி உய்ய வழி காட்டு கோபாலா!
கரு நிறத்திடைச்சியர் கொண்டாடும் நந்த லாலா!
வயிறு
கண்ணன் உலகைப் படைத்தவன், காப்பவன், நல் வழியில் நம்மைச் செலுத்துபவன்;முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் அவன் தான் ஆதாரம்;பிரும்மனைப் படைத்து, அவன் மூலம் உலகைத் தோற்றுவித்து, உணவும், உயிர்களும் படைத்து,அறிவும், மொழியும் படைத்து, அனைவரையும் காப்பவன், எளியவனுக்கும் எளியவனாக இருக்கிறான்.புன்னை மர நிழலில் இளைப்பாறும் இடையனாகக் காட்சி தருகிறான்.
“முன்னை உலகாக்கி உயிர் வாழ உணவாக்கி
எண்கள் எழுத்தாக்கி பிரமனின் கருத்தாங்கி
அன்னை என ஆனாய்!ஆருயிர் தந்தை ஆனாய்!
புன்னை மர நிழலில் எமையாளும் எளியனானாய்!”
இடை
அன்னை அவனுக்குப் பீதாம்பரம் எனும் பட்டாடையை அணிவித்து பார்த்துப் பார்த்து மகிழ்கிறாள்;அவனோ தன்னை இராஜ குமாரன் எனவே நினைக்கவில்லை.வள்ளல் பெரும்பசுக்களை மேய்ப்பவனாகவே தன்னை வெளிப்படுத்தி கொள்கிறான்.
“மஞ்சள் பட்டுடுத்தி யசோதை பார்த்திருக்க
வள்ளல் பசுக்களை கானகம் ஓட்டிச் சென்று
திங்கள் குளிர் முதுகால் மெய்யினைத் தடவித்தடவி
எங்கும் பெருகச் செய்தாய் பாலெனும் அமிர்த பானம்.”
தொடை
யானையைப் போன்ற நடையை அனைத்துப் புலவர்களும் போற்றிப் பாடுகின்றனர். அது கம்பீரமும், அழகும் இயைந்த நடை.யானையின் நடையையும், தேரின் அசைவையும் பார்க்காத கண்கள் இல்லை.கண்ணனின் சங்க நாதம் கூட பிளிறும் இசை கொண்டிலங்கும்.கருணை மிக்கவன்,தீயாரைச் செறுத்தல் வேண்டி சினம் கொண்டு சீறி அருளுகிறான்.
“களிறு போல் நடைஉடையாய்!பிளிறும் வெண்சங்கிசையாய்!
ஒளிரும் செஞ்ஞாயிறென சினம் தெளித்து வீறு கொள்வாய்!
மிளிரும் மண்டபத்தில் இரண்யனைத் தொடையில் வைத்து
பலரும் புகழ் பாட நரசிங்கனாய் கிழித்தெறிந்தாய்!”
மூட்டு
முனிவன் சொல்ல இறைவன் எழுதியது பாரதம்; மனிதன் சொல்ல இறைவன் எழுதியது திருவாசகம். மனிதன் சொல்ல இறைவன் ஆமோதித்தது நாராயணீயம்.ஒவ்வொரு செய்யுளையும் செவிமடுத்து ஒப்புக்கொண்ட குருவாயூரப்பன் நம் சின்னக் கண்ணன் அல்லவா?
“வாத நோய்க்கு மாமருந்தே என உன்
பாதமிரண்டும் பற்றி நாராயண பட்டதிரி
ஓத உலகிற்கு வழங்கிய நாராயணீயம்
காதல் மிகக் கொண்டு நீ கொண்டாடும் நல் காப்பியம்!
கால்
மடு கலங்க, அதில் பாய்ந்து,காளிங்கனின் நீள்முடி ஐய்ந்திலும் நின்று நடம் செய்த தூயவன்;பாண்டவருக்காக தூதனாக நடந்தவன்;அன்பினால், பழத்தை எறிந்து விட்டு அதன் தோலை உண்ணக் கொடுத்த விதுரனின் விருந்துக்காக அவன் இல்லம் சென்றவன்.வாமனனாய் உலகை அளந்தவன்.பூதேவியின் மிகு பாரத்தைக் குறைக்க பாரதப் போரைப் பின்னின்று செய்தவன்.
“காளிங்கனை அடக்கிக் களி நடம் புரிந்த கண்ணா!
ஆலிங்கனம் செய்து விதுரன் விருந்து ஏற்றாய்!
ஆழி கலிங்கம் அணிந்த தேவி வேண்ட
ஊழி முதல்வனாய் மிகு பாரம் தீர்த்து வைத்தாய்!”
பாதம்
சரணாகதி என்பது நம் தர்மத்தில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. அது நம்மை அடக்கத்தில் ஆட்படுத்துகிறது.அவன் சரணங்களைப் பற்றினால் வீடு பேறு நிச்சயம் என்பது நமது தத்துவம்.இறைவனின் பாதங்கள் கல்லைப் பெண்ணாக்கும்;ஆண்டாளைப் போல் நாமும் அந்தப் பாதங்களைச் சரணடைவோம்.
“கல்லைப் பெண்ணாக்கும் கழலினைப் போற்றுவோம்!
முல்லை நிலத்தில் பாதம் பதித்தாய் போற்றி!
எல்லையில்லா வனப்புடை எந்தாய் அணைக்கும் பாதம்!
சொல்லை மாலையாக்கி அளித்த கோதைக்கு வேதம்!”
‘பொலிக சிறந்து பொலிக, இந்தப் பூதலம் தன்னில் அறம் வளர்க.மலிக கயமை அரக்கர்.மானுடம் சிறக்க கண்ணன் பிறந்தான்.