பொள்ளாச்சி விவகாரம்

பொள்ளாச்சி …

Image may contain: 1 person

மதிப்பிற்குரிய நண்பர் கவிஞர் ரவி சுப்பிரமணியன்  எழுதிய பாடல் வரிகளைவிட  உக்கிரமாக வேறு யாரும்   இந்த அவலத்தை வார்த்தையில் வடித்துவிட முடியாது. 

துன்பத்தில் துவண்டிருக்கும் இளம் பெண்களுக்குத் தந்தையாய் தாயாய் அபயக்கரம் நீட்டுகிறார்.

காளியின் படத்தைப் பதிவு செய்துவிட்டு – பாரதியின்  காளிக் கூத்துக்  கவிதையைப் பாடிவிட்டுத் தன் அறச் சீற்றத்தை  மனவலியுடன் தருகிறார். 

இதற்கு என்னுடைய  ஒரே பதில் – ஒரே வார்த்தை …

“நெஞ்சு பொறுக்குதில்லையே” 

 

 

வெடிபடும் அண்டத்து
இடிபல தாளம் போட- வெறும்
வெளியில் இரத்தக் 
களியொடு பூதம் பாடப் – பாட்டின்
அடிபடுபொருள் உன் 
அடிபடும் ஒலியில் கூடக் – களித்து
ஆடுங் காளீ ! 
சாமுண் டீ! கங்காளீ!
அன்னை ! அன்னை ! 
ஆடும் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

சக்தி பேய்தான் 
தலையொடு தலைகள் முட்டிச் – சட்டச்
சடசட சட்டென்று 
உடைபடு தாளம் கொட்டி – அங்கே
எத்திக்கினிலும் 
நின்விழிஅனல் போய் ஒட்டித் – தானே
எரியும் கோலம்
கண்டே சாகும் காலம்,
அன்னை ! அன்னை ! 
ஆடும் கூத்தை
நாடச்செய்தாய் என்னை.

– பாரதியார்.

————————-

தத் தரிகட தத் தரிகட தத்தோம்
——————————————
வெறிதிமிர்த்த வேட்கையின் முன்
நிராதரவாய் ஒலமிடுகிறது
அபயம் வேண்டும் குரல்
பயத்தில் அதிர்ந்து

கோரப்பற்களின் மினுக்கத்தில் 
சிதறுண்ட நம்பிக்கை
பம்மிப் பம்மிப் பதறுகிறது

சிறகசைக்கும் வேளையில்
முள் வலையில் சிக்கி முனகும்
உன் மீச்சிறு செருமல்
நெஞ்சை அறுக்கிறது

அணில்கள் தாவும் மர நிழலில்
பறவைகளின் கீதங்கள் கேட்டபடி
காற்று உதிர்க்கும் பூக்கள் சிதற
தலை உணர்த்திப் பாடிக்கிடக்கவேண்டிய வயதில்
என்ன நேர்ந்தது மகளே உனக்கு

பளுவேறி உறக்கம் சிதைக்கும்
இவ்வலிக்கு என் செய்வேன்

உன் தவறேதும் இல்லை
உடல் நடுங்கி மனம் குன்றி 
சஞ்சலம் கொள்ளாதே
தூய மெல்லுடல் உனது

மறுபடி ஏன் உமிழ்ந்த சளியையே 
பார்த்துக்கொண்டிருக்கிறாய்

தரை கிடக்கும் மீனின் கண்களென
அனாந்திரத்தில் வெறிக்காதே
வீறிடும் நினைவறு
துர்பொழுதின் கனங்களை உதறு

ரெளத்திரக் காளியாகு 
சூலத்தால் குடல் கிழித்து வதம் செய்
தத் தரிகட தத் தரிகட தத்தோம்
தத் தரிகட தத் தரிகட தத்தோம்

கொந்தளிப்பை திருகி எறி 
பற்றி எரியட்டும் அந்த நாசகாரன்கள்
அனுகூல நாய்கள் அலறி ஓடட்டும்
தத் தரிகட தத் தரிகட தத்தோம்
தத் தரிகட தத் தரிகட தத்தோம்

போதும் வா 
சமனம் கொள்

இந்தா 
இந்த ஆறுதலைப் போர்த்திக்கொள்

சல்லிசல்லியான மனம் தேற
உன் கைகளைப் பற்றிக்கொள்கிறேன்

வெளியேறும் கதவின் வழி
இதோ தெரிகிறது பார்

மூர்க்க வக்கிரன்களின் காமத்தால் 
மிகு வெக்கையான
இவ்விடத்தைக் கடந்துவிடலாம்

நதியின் குளிர்மையுடன்
கதிரொளி மினுங்கும்
அழகியதொரு நிலம் அங்கே
உனக்கென செழித்துகிடக்கிறது வா.

( திரு ரவி சுப்பிரமணியன்  துடிதுடித்து முகநூலில் எழுதிய கவிதை  )

நாடாளுமன்றத் தேர்தல் 2019

 

Image result for election 2019

தமிழகச் செய்தி :

தேர்தல் நாள் : ஏப்ரல் 18 

அதிமுக கூட்டணி  போட்டியிடும் தொகுதிகளின்  பட்டியல் வெளியாகி உள்ளது.

அதிமுக-20 ;

தென்சென்னை,  காஞ்சீபுரம் (தனி),  திருவண்ணாமலை (தனி),  சேலம், நாமக்கல்,  ஈரோடு, திருப்பூர்,  நீலகிரி (தனி),  பொள்ளாச்சி,  கிருஷ்ணகிரி,  திண்டுக்கல், கரூர்,  பெரம்பலூர், சிதம்பரம் (தனி), நாகப்பட்டினம் (தனி),  மயிலாடுதுறை, மதுரை,  தேனி,  திருவள்ளூர்(தனி),  திருநெல்வேலி,

பாமக-7  ;

மத்திய சென்னை,  ஸ்ரீபெரும்புதூர்,  அரக்கோணம், தர்மபுரி,  ஆரணி,  விழுப்புரம் (தனி), கடலூர்.

பாஜக-5 ;

கோயம்புத்தூர்,  சிவகங்கை,  ராமநாதபுரம்,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி,

தேமுதிக-4  ;

வடசென்னை,  கள்ளக்குறிச்சி,  திருச்சி, விருதுநகர்.

என்.ஆர்.காங்கிரஸ் -1;

புதுச்சேரி.

த.மா.கா -1

தஞ்சாவூர்

புதிய தமிழகம் -1 ,

தென்காசி,

புதிய நீதிக்கட்சி -1 :

வேலூர்

தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின்  பட்டியல் வெளியாகி உள்ளது.
திமுக (20) :
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி, பொள்ளாச்சி, சேலம், அரக்கோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நீலகிரி, வேலூர், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை.
காங்கிரஸ் (10) :
தமிழகத்தில் திருவள்ளூர்(தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர்,
கன்னியாகுமரி, புதுச்சேரி 
விடுதலை சிறுத்தைகள் கட்சி(2) :
விழுப்புரம்,  சிதம்பரம்
இந்திய ஜனநாயக கட்சி (1): 
பெரம்பலூர் ,
மதிமுக (1)  ;
ஈரோடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி (2) ;
மதுரை , கோவை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2)  ;
நாகை , திருப்பூர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1)  ;
ராமநாதபுரம்
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (1);
 நாமக்கல்
மக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. 
இது தவிர தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபைகளில் 18 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்று எதிக்கட்சிகள் உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளன. 

 “எப்படிப் புரியவைக்க?” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Related image

திவாகர் தயக்கத்துடன் என்னை அணுகினான். இந்த 24 வயதுடையவன், வசதியான குடும்பத்தைச் சார்ந்தவன். ஏன் இப்போது என்னை அணுகினான் என்ற கேள்வி எழுந்தது. எதற்காக ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரைத் தேடி வரவேண்டும்?

திவாகர் கல்லூரியிலிருந்து கேம்பஸ் தேர்வு வழியாக வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அவனுடன் ஐந்துபேர் தேர்வானவர்கள். நல்ல இடம், அதிக சம்பளம். திவாகர் அப்படியே பூரித்துப்போனான்.

அவன் பெற்றோர் இருவரிடமும் ஏற்பட்ட சில மாற்றங்களினால் வேலையில் சேர்ந்த முதல் வாரத்திலேயே இந்த மகிழ்ச்சி கரைந்துபோக ஆரம்பித்தது. அவனுடன் வித்தியாசமாகப் பேசுவது, ஏதேதோ கேள்விகள், அவர்களின் மனப்பாங்கு ஏனோ மாறியுள்ளது எனத் தோன்றியது. இருவருமே தான் கிளம்பும் நேரத்தையும், திரும்பி வரும் நேரத்தையும் மிகக் கூர்மையாகக் கவனிப்பதை உணர்ந்தான். வேலையினால் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால், அம்மா அழுதுகொண்டு, அப்பா குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு, தம்பி சிடுசிடுவென்று இருப்பதைக் கவனித்தான். இதுவரைக்கும் இப்படி ஒரு பொழுதும் இருந்ததில்லை.

அம்மாவைச் சமாதானப் படுத்தவோ, நம்ப வைக்கவோ முடியவில்லை. பக்கத்து வீட்டுப் பெண் ஏதோ கேட்டதற்குப் பதில் சொன்னதை அம்மா பார்த்தாள். வீட்டிற்கு வந்ததும் மிகவும் திட்டினாள் என்றான். இதுவும் முதல் தடவையே. இன்னொரு நாள் கோவிலில் தெரியாத பெண்ணிற்குப் பைக்குள் பிரசாதம் போட உதவியதைப் பார்த்த அம்மா அங்கேயே சத்தம் போட்டாள். வெட்கமானது. இந்த இரு சம்பவங்களுக்குப் பின்பு, கைப்பேசியில் யார் அழைத்தாலோ, குறுஞ்செய்தி அனுப்பினாலோ யார், என்ன என அம்மா கேட்டுக்கொண்டே இருப்பாளாம். எவ்வளவு சொன்னாலும் அவளுக்குச் சந்தேகங்கள் இருந்துகொண்டே இருந்தது.

நாளாகநாளாகத் தன்னால் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலவில்லை என எண்ணியதில் சலிப்புத் தட்டியது. அதுவரையில் வராத கோபம் வந்தது. கோபத்தில் சுருக் எனப் பேசினான். சந்தேகங்கள் அவன் குழப்பத்தை அதிகமாக்கியது. ஒரு அமைதியற்ற நிலை உணர ஆரம்பித்தான். இப்படித் தான் இருப்பதை வெறுத்தான். அப்பாவிடம் பேசுவது அர்த்தமற்றது என நினைத்து அவரை அணுகவேயில்லை.

ஒன்று மட்டும் எனக்கு மிகத் தெளிவாக, வெளிப்படையாகத் தெரிந்தது- மேற்சொன்ன ஒவ்வொன்றும் மன அழுத்தம் கொடுக்க, வேலையில் முழு கவனத்தைச் செலுத்தமுடியவில்லை. வேலையை நேரத்திற்கு முடித்துத் தராததை அவனுடைய மேல் அதிகாரிகள் ரசிக்கவில்லை.

அதிகாரிகள் அவனை எச்சரிக்கை செய்தார்கள். திவாகரின் ட்ரைனிங் ப்ரோபேசன் காலத்தில் இப்படி நேர்வது நல்லது அல்ல. அபாயகட்டம். திவாகர், வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ எனக் கவலைப்பட்டான். வேலையிலிருந்து போகச் சொன்னால்? தலைகுனிவு. இந்தத் தருணத்தில்தான் திவாகர் ஒரு மனநல ஆலோசகரைப் பார்க்க முடிவெடுத்தான்.

திவாகரின் கல்லூரியில், பல ஆளுமை நிபுணர்களை அழைத்து, அவர்களின் தொழில், அந்தத் துறையில் நடத்தும் சாதனைகளைப்பற்றி மாணவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளச் செய்திருந்தார்கள். அப்படி ஒரு மனநல ஆலோசகர் பகிர்ந்ததும், மாணவர்கள் மனதில்பதிந்தது – நம்  உள்ளிலோ, அல்ல வெளியிலோ,  தாளமுடியாத அனுபவிப்பு / சூழ்நிலைகளினால் (திவாகரின் இப்போதைய குடும்பச் சூழல்போன்று) ஸ்தம்பித்து விட்டால், தெளிவு பெற மனநல நிபுணர்களின் உதவி நாடுவது நல்லது, அவமானம் அல்ல, பெரும்பாலும் இதற்கு மருந்துகள் தேவையில்லை என்பதையும் புரிந்துகொண்டார்கள்.

மனநல ஆலோசகரை நாடுவதால் மனத்திடத்தை வளர்த்துக் கொள்ளமுடியும் என்பதற்குச் சான்றாக, சில வகுப்புத் தோழர்களும், நெருங்கிய நண்பர்களும் இருந்தார்கள். இவர்கள் அப்படி நாடி, தம் பிரச்சினைகளுக்குத் தெளிவுபெற்றார்கள். பல நன்மை தரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நண்பர்கள் திவாகரை மனநல ஆலோசகரை ஆலோசிக்கப் பரிந்துரைத்தார்கள்.

என்னை அணுக அச்சம் இருந்தது. திவாகரின் படிப்பு முழுவதும் ஆண்கள் படிக்கும் இடமாகவே இருந்தது. கூடப் பிறந்தவரும் தம்பி. உள்மனத்தின் ஊக்கத்தில் வந்தான்.

ஆமாம், எது திவாகரின் மனதைத் துளைத்தது? பிரதானமாக நின்றதோ, அம்மாவுடன் அவன் உறவு ஊசலாடுகிறதோ என்ற அச்சம்தான். அம்மா, திவாகர் செய்யும் ஒவ்வொன்றையும் விசாரிப்பது, கேள்வி கேட்பது, அவனை சதா சஞ்சலத்தில் வைத்தது. அம்மாவின் இந்த திடீர் மாற்றத்தினால் தன் இதயம் படபடப்பதாக உணர்ந்தான். சந்தேகம் சூழ்ந்துகொண்டதில் தவறுகள் அதிகரித்தது. கூட வேலை செய்வோரும், டீம் ஹெட்டும் பொறுமை இழந்தார்கள். இவை முதல் மாதத்திலேயே!

நான் திவாகர் கூறுவதை எதிர்க்காமல், குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டதால், தன்னை ஏற்றுக்கொண்டதாக அவனுக்குத் தோன்றியது. தன் சூழல் நேர்ந்ததற்கான காரணிகளை, தன்னைப்பற்றிய அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டான். இங்கு பகிரும் ஒவ்வொன்றும் வம்பு-தும்பு அல்ல, அவசியம் என்பது தெளிவானது. சொல்வதைக் கோர்த்து அதிலிருந்து பல விஷயங்களுக்கு அர்த்தம் விளங்க அவற்றை உபயோகித்தேன் என அறிந்தான்.

அவன் உள் மனதை உறுத்தியது, “நான் நல்ல மகனாக இல்லையோ?” என்பது..

இதை நாங்கள் ஆராய்ந்தது திவாகருக்குத் தன் அம்மாவின் பதட்டத்தின் காரணியைப் புரிந்துகொள்ள வாய்ப்பானது. அவன் அம்மா அவன் புது சூழலில் இருப்பதைப் பார்த்து “நான் அவனுக்கு வழி காட்டாவிட்டால், என் குழந்தை எப்படிச் சமாளிப்பான்?” என்று எண்ணி அவனுடைய ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து ஆராய்ந்தாள். கேள்விகள் கேட்டாள். அம்மா, ‘தன் குழந்தை’ எந்தவிதமான தொல்லைகளும் இல்லாமல் இருக்கப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தால் இப்படி இயங்கினாள்.

இதனால் திவாகரின் அம்மாவுடன் நான் ஸெஷன் ஆரம்பித்தேன். அவளிடம் திவாகரைப்பற்றிக் கேட்க, அம்மா அளித்த பதில், “என் பிள்ளை நல்லவன். இந்த உலகை அறியமாட்டான். அதுவும் பெண்கள் வஞ்சகம், தந்திரமானவர்கள் என்பது அவனுக்குத் தெரியாது. கேள்விகள் கேட்டால், யோசிப்பான். அதான் கேட்டேன்”. அவன் அம்மாவை அவளுடைய சித்தி வளர்த்தாள். அந்த சித்தி தன் வாழ்க்கையில் வெவ்வேறு பெண்மணிகளினால் ஏமாற்றம் அடைந்திருந்தார். சித்தி, அம்மாவிடம்., “பெண்ணை மட்டும் நம்பாதே” என்று அடிக்கடி சொல்லுவாள். அது சரியா? இப்படி எண்ணுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்காமல், ஆராயாமல் சித்தி சொன்னதை அவன் அம்மா அப்படியே ஏற்றுக்கொண்டாள். தான் பெண்ணாக இருந்தும் இப்படி ஒரு எண்ணம்! அதிலிருந்து அவர்களின் அபிப்பிராயம் இப்படி மாறியது.

அம்மாவுடன் இதைப்பற்றிப் பல வாரங்கள் உரையாடவேண்டியதாயிற்று. அம்மா, தான் நினைப்பதையும், அந்த சித்தி பகிர்ந்ததையும், இதனால் தனக்குத் தோன்றும் எண்ணங்களையும் ஒரு தாளில் எழுதி விட்டு, மறு பக்கத்தில் இதற்கான தன் கடந்தகால வாழ்கையில் கண்ட ஆதாரங்களையும், இப்பொழுது தினசரி வாழ்வில் காணும் ஆதாரங்களையும் குறித்து எழுத வேண்டும். பல வாரங்கள் தேடியும் அப்படி ஆதாரம் எதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை.

செய்யச் செய்யப் புரிந்து ஏற்றுக்கொண்டார் – ஒன்று நடந்துவிட்டால் மற்ற நேரங்களிலும் அச்சு அடிப்பதுபோல் அப்படியே நடக்கும் என்பதில்லை. அதே மாதிரி, ஒருமுறை ஒருவர் ஒன்று செய்தால் அடுத்த முறையும் அப்படியே செய்வார் என்பது இல்லை. எல்லோரும் இப்படி என்று நினைத்தால், தவறானது. 

அம்மாவிற்குத் தெளிவானது. ஒருவரின் அனுபவத்தில் சூழலின் தாக்கம் உள்ளடங்கும். அதனால்தான் ஒன்றை வைத்து எல்லாவற்றையும் அப்படியேதான் எனச் சொல்லமுடியாது என்பதை ஆதாரபூர்வமாகப் பார்த்தாள். நாளடைவில், அவர்களையும், மற்றவர்களையும் இது பாதிக்கிறது எனப் புரியவர, அடுத்த ஸெஷன்களில் இந்த மனப்பான்மையால் அவர் கண்ணை மூடிக்கொண்டு இருந்ததையும், அதன் பாதிப்புகளையும் ஆராய்ந்தோம்.

திவாகரின் அம்மா தன் சிந்தனைகளைச் சுதாரித்துவர, அப்பாவை ஸெஷனுக்குள் சேர்த்துக்கொள்ள நேரம் வந்தது. அவருடைய அச்சங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். அவரின் மிகப் பெரிய அச்சம்: திவாகருக்கு அதிக அனுபவம் இல்லை, வெளி உலகம் தெரியாதவன். இதன் விளைவாக, எந்தப் பெண்ணாவது அவனிடம் பரிவுடன் பேசிப் பழகினால் அவளிடம் மனதைப் பறிகொடுத்து விடுவானோ என்று. திவாகரின் படிப்பு முழுவதும் ஆண்கள் படிக்கும் இடமாகவே இருந்ததாலும் அவருக்கு இந்த அச்சம். அவனைக் கடுமையாகத் திட்டி, கேள்வி கேட்டு மடக்கினால் அதைச் சந்திக்க திவாகருக்குதத் தைரியம் வளரும் என முடிவு எடுத்திருந்ததால்தான் அவனிடம் கடுமையாகப் பழகுவதாகச் சொன்னார்.

எங்கள் உரையாடல்கள் வளர, அவருக்குப் புரியஆரம்பித்தது, திவாகரின் யோசிக்கும், முடிவு எடுக்கும் திறன்தான் தனக்குக் கேள்விக்குறியாக இருந்தது என்று. இதை அறியாமல், வேறு எதற்கோ அவனைக் கோபித்துக்கொண்டோம் என உணர்ந்தார்.

மேலும் தெளிவு பெறுவதற்கு ஆலோசித்தோம். அப்பாவை நிஜ வாழ்க்கையில் தனக்கு நடந்தவற்றை எடுத்து திவாகருடன் பேசப் பரிந்துரைத்தேன். அவைகளைப்பற்றி அவன் தன் அபிப்ராயங்களைப் பகிர்ந்துகொள்ள, அவன் நிலை, சிந்தனை ஆற்றல், மனப்பான்மை, அவருக்குத் தெரியவரும். அவனுக்கும் அப்பாவிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.

இதையே திவாகரைச் சற்று வேறுவிதமாகச் செய்யவைத்தேன். கலந்துரையாடலில் எழும் சிந்தனைகள், ஒரு தலைப்பட்ட கருத்துகள், ஓரவஞ்சனை, மனச்சாய்வு, என்பதை எல்லாம்பற்றி எழுதியபிறகு, அதன் பக்கத்தில் அதற்கு எதிர்வாதமும், அவன் அப்பாவின் கண்ணோட்டத்திலிருந்து தோன்றுவதையும் எழுதி வரச்சொன்னேன். இதைச் செய்ய, அவன் சிந்தனைத் திறன் நன்றானது. பிரச்சினைகளை மிகச் சுலபமாகச் சந்திக்க ஆரம்பித்தான். அப்பா-பிள்ளை பந்தம் இணைப்பு அதிகரித்தது. இதை “மேஜிக்” என்றே சொன்னார்கள்.

அப்பாவை திவாகருடன் தினம் ஒருமணி நேரம் கழிக்கச்சொன்னேன். அவருக்கு திவாகருடன் விளையாட்டுப் போட்டிகள் பார்ப்பது பிடிக்கும். முன்பு செய்ததுதான். அதையே இப்பொழுதும் துவங்கினார்கள். இருவரின் நெருக்கத்திலும், புரிதலிலும் பல திருப்பங்கள் வந்தன. இவர்களின் இணைப்பு கூடுவது பளிச்சென்று தெரிந்தது! பார்க்க மனதுக்கு இதமாக இருந்தது.

திவாகர், அவன் அம்மா, அப்பா, மூவரும் தங்களின் அனுபவங்களை மற்றவர்களின் சூழலிலிருந்து பார்க்க, மேலும் தெளிவு பெற்றார்கள். மூவரும் கடந்த மாதத்தில்  வெளிப்படுத்தியது அவரவர் பயத்திலிருந்து என்பது  அவர்களுக்குப் புரிந்தது. இதில் பரிதாபம் என்னவென்றால் அவர்கள் பாசமான குடும்பத்தினர். ஏனோ இந்தமுறை தங்களுக்குள் நிலவி வரும் அச்சத்தை நேரடியாகப் பகிர்ந்துகொள்ளவில்லை.

என்னுடன் பகிர்வதை முழுமையாக ஏற்றதினால், தன் உள்ளுணர்வைப் பகிரங்கமாகப் பகிர்ந்தார்கள். என்மேல் அவர்கள்  வைத்துள்ள நம்பிக்கையுடன், நானும் அவர்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கை கை கொடுத்தது. இதனால்தான் அவர்கள் சந்தித்த பல இடையூறுகளைச் சரிசெய்ய முடிந்தது.

அடுத்த கட்டமாக மூவரையும் ஒன்றாகப் பார்த்த ஸெஷன்கள். தங்கள் உணர்வு, விருப்பம், வேறுபாடுகளை, மற்றவருடன் பகிர்ந்துகொள்ளும் விதங்களைச் சரிசெய்யும் சந்தர்ப்பமானது. வேறுபாடுகள் நிலவியபோதெல்லாம் சரிசெய்யப் பல வழிகளை ஆராய்ந்தோம். பிரச்சினை ஒன்றுக்குப்  பதில்கள் பல்வேறு, அவற்றைத் தேட வழிகள் பல உண்டு என்ற புரிதல் வந்தது.

இப்போதெல்லாம் திவாகர் தன் வேலை, அதன் சலிப்பு, சிரிப்பு, சிறப்பைத் தானாக வீட்டில் பகிர்ந்தான். அப்பா இரு விஷயத்தை மிகவும் பாராட்டினார்:  இதையெல்லாம் திவாகர் பகிர்ந்துகொள்ளும்போது, தன் நிறுவனத்தை இழிவுபடுத்திப் பேசாததையும், நிறுவனத்தின் இரகசியம் பாதுகாத்த விதத்தையும். அம்மா, முழுமையாக ஏற்றக் கொண்டாள் – எந்தவித அச்சமோ, பயமோ இல்லாமல் தன் மகனோடு எல்லா வயது பெண்களும் சகஜமாகப் பழகிவருவதை. தன் ஆண்பிள்ளையை நம்பினாள். மிகவும் பெருமைப்பட்டாள்.

 

HOLIDAY – தாகூரின் சிறுகதை தமிழ்க் குறும்படமாக ..

ரவீந்திரநாத் தாகூரின் கதையை அதன் மெருகு குறையாமல் படமாக்கியுள்ளார்கள் !

ஒரு லட்சம் பார்வையாளர்கள்!

நாளைய இயக்குனர் போட்டியில் பரிசு !

சிறப்பான ஒளிப்பதிவு!

அருமையான நடிப்பு!

பார்க்கத் தவறாதீர்கள் !

 

 

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

 

 

சூரிய தேவனுக்கோ, விஷ்வகர்மா தன்னை மயக்கத்தில் ஆழ்த்தித் தம்மை ஒன்றும் செய்யஇயலாதவனாக மாற்றிவிட்டாரே என்ற கோபாக்னி அவன் கண்களில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஸந்த்யாவின் மீது தான் கொண்டிருந்த அளப்பரிய காதல் தன்னை விஷ்வகர்மாவின்  கைப்பாவையாக மாற்றிவிட்டதே என்ற ஆத்ம நிக்ரகம் அவனை வாட்டிஎடுத்தது.

அந்தக் கோபத்தில்தான் அருணனிடம் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று கடுமையான உத்தரவைப் பிறப்பித்துவிட்டுத் தன் கோபத்தை எரித்துக்கொள்ளும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். 

 சுற்றிலும் நெருப்புக்  கோளங்கள், எரிவாயுக்கள் கொதிக்கும் கொப்பறையிலிருந்து குமிழி குமிழிகளாக வந்துகொண்டிருந்தன.   நெருப்பு ஆறு சுற்றிலும் ஓடிக்கொண்டிருந்தது.  நடுவே ‘ஓம்’ வடிவில் அமைந்த மாபெரும்  ஹோம குண்டம். அதிலிருந்தும் வருகின்ற தழல்கள் தாமரை வடிவில் எரிந்து கொண்டிருந்தன. அதன் நடுவே கைலாய பர்வதத்திலிருந்து  கொண்டுவந்த கல் இருக்கை . அந்த  சிம்மாசனத்தில் எரியும் நெருப்புக்களின் மத்தியில் அமர்ந்து அழிக்கும் கடவுளான பரமசிவனை தியானித்துக்கொண்டே தன் மனதில் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் கோபத்தை ஹோம நெருப்பில் விழச்செய்து தன்னைச் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தான் சூரியதேவன்.  கிட்டத்தட்ட அது முடிவடையும்  சமயத்தில்தான் அதைத் தடை செய்யும் விதத்தில் கதவு தட்டப்பட்டது.

எந்தக் கோபத்தை எரிப்பதற்காக  அவன் அங்கே கடும்  முயற்சி எடுத்துக்கொண்டிருந்தானோ அது பாதியில் தடைபெறும்படி கதவைத் தட்டியதால் அவன்  கோபாவேசம் மீண்டும் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தோன்றின. 

கதவைத் திறந்தால் அங்கே ஸந்த்யா நின்றுகொண்டிருந்தாள். 

எவளுக்காகத் தன் ஆற்றலையே காந்தச் சிகித்சையின் மூலம் குறைத்துக்கொள்ளத் தயாராய் இருந்தானோ  அதே ஸந்த்யா எப்பொழுதும்போல் அவனை மயக்கும் விதத்தில் நின்றுகொண்டிருந்தாள். 

 பனிமழையில் குளிர் நிலவென இருக்கும் தடாகத்தில் பொன்மலர்போலக் குளித்துக்கொண்டிருந்த  அவளைக் கண்ட பிறகுதானே அவன் மனதில் புதுவித ஆசை என்னும் அக்னி உதித்தது. நெருப்பையே எரிக்கும் புதுவித காம அக்னி அல்லவா அது? குளிர்த்தீ !

அவளுடன் அவன் கூடியிருந்தபோது அவன் அதுவரைத் தீண்டிராத  புதுவித சுகத்தை அனுபவித்தான். அதற்காக  அவன் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யத் தயாராயிருந்தான். அதைச் சாதகமாய்ப்  பயன்படுத்திக்கொண்ட விஷ்வகர்மாவின் வலையில் தான் விழுந்ததுபற்றி  எண்ணும்போது அவனுக்குத் தன்மேலேயே ஆத்திரம் பிறந்தது.  காந்தச் சிகித்சை சாந்துக்குளியல் என்று  தன்னை அவர் சிக்கவைத்ததை  நினைக்கும்போது அவன் கோபம் வீசிவிட்ட நெருப்புபோல்  வளர்ந்துகொண்டேயிருந்தது.  

ஆனால் ஸந்த்யாவின்  அழகு உருவத்தைக் கண்டதும் அவனுடைய கோபாக்னி குறைவதை உணர்ந்தான். ‘இவள் என் அருகே இருந்துவிட்டால் எனக்கு நெருப்பாற்றில்  கோபத்தை  எரிக்க வேண்டிய அவசியமே இல்லை ‘ என்பதை உணரத்தொடங்கினான்.   அவளைப் பிரிந்ததுதான் தன்னிலை தடுமாறச் செய்தது என்பதை உணர்ந்துகொண்டான். அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. 

அதனைக் கண்ட அருணன் ‘இனி பயமில்லை’ என்று உணர்ந்துகொண்டு சூரியதேவனை வணங்கிவிட்டு ரதத்தை எடுத்துக்கொண்டு சென்றான். 

ஸந்த்யா தன் வலது காலை எடுத்துவைத்து  சூரியதேவனின்  அரண்மனைக்குள் சென்றாள். 

அவள் காலடி பட்டதும்  அந்த அறையில் இருந்த வெப்பச் சலனங்கள் எல்லாம் மறந்து குளிர்த் தென்றல் உலாவத் தொடங்கியது.  

ஆனால் ஸந்த்யாவின் முகத்தைப்பார்த்த சூரியதேவன் திடுக்கிட்டான். அவள் முகத்தில் ஏன் இந்த கோபாக்னி? குளிர் முகத்தில் எப்படி வந்தது இந்த அக்னிச் சீற்றம்? 

” என்ன தைரியம் உங்களுக்கு? சூரியதேவன் அக்னியின் சாட்சிதானே? அந்த அக்னி சாட்சியாக நாம் புரிந்த காந்தர்வ மணத்தில் ஜனித்த குழந்தைகளை  அழிக்க ஆணையிட்ட நீங்கள் ஒரு நல்ல தந்தையா?” 

ஸந்த்யாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்  சூரியதேவனை அப்படியே நிலைகுலையச் செய்தன. 

(தொடரும்) 

 

இரண்டாம் பகுதி

 

Image result for solomon pappiah raja bharathibaskar and liyoni

 

“எனதருமை எமபுரிப்பட்டணவாசிகளே!” என்று  அவருக்கே உரிய கணீர் குரலில்  ஆரம்பித்தார் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து அமர்க்களமாகப் பேசிவந்த சாலமன் பாப்பையா அவர்கள். 

மதுரைக்காரரின் குரலில் அந்த ஊருக்கே உரிய நக்கலும்  நையாண்டியும் சேர்ந்து கொட்டும். தமிழ் அறிஞர், இலக்கிய விரிவுரையாளர், கலைமாமணி  என்று பட்டங்கள் பல இருந்தாலும் பட்டிமன்ற நடுவர் என்பதுதான் அவருக்கே உரித்தான பெயர்.

இனிய தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக்கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் .

உதாரணமாக அவருடைய  சமீபத்திய பொங்கல் விழா சிறப்பு பட்டிமன்றத்தைப்   பார்த்த பின்னர்தான் அவரையும்  அவரது குழுவையும் எமபுரிப்பட்டணத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று எமனும் சித்திரகுப்தனும் பெரிதும் விரும்பினார்கள்.

சாலமன் பாப்பையா அவர்களிடம் இதுபற்றி சித்திரகுப்தன் பேசியபோது அவரும் அவருக்கே உரிய பாணியில்,                               ” அழச்சுக்கிட்டுப்போய் மறுபடியும் இங்கனே இட்டுகிட்டு வருவீகளா? இல்லே அங்கனேயே பிடிச்சு வைச்சிறுவீகளா? ” என்று கேட்டார்.  ராஜாவும் ” ஐயா கேட்டது ரொம்ப சரியான கேள்விங்க! எதுக்கும் நீங்க கொடுக்கப்போகிற செக்கை எங்க புள்ளைங்க பேரிலேயே கொடுத்திடுங்க, பின்னாடி எந்தப் பிரச்சினையும் இருக்கப்பிடாது பாருங்க” என்றார்.

திண்டுக்கல் லியோனியும் , ” எங்களுக்கு எந்த தண்டனை  காத்துக்கிட்டிருக்கு? அந்தகூபமா?  கும்பிபாகமா ? ” என்று கேட்க ” பட்டிமன்றம் அமைத்து ஐயா தீர்ப்புப்படி தேர்ந்தெடுத்துக்கலாம்” என்று பாரதி பாஸ்கர்கூற அப்போதே விவாதமேடை களைகட்டிவிட்டது. 

முதலில் அந்தப் பொங்கல் விழாப் பட்டிமன்றத்தைப் பாருங்கள். அதன் பின்  விவாதமேடையில் அவர்கள் பேசியதைக் கேட்போம். .

 

 

(தொடரும்) 

 

 

திரைக்கவிதை – பாரதி பாடல் – பாரதி படம் -இளையராஜா இசை

பாரதியின் வரிகள் சிறந்த வரிகள் என்று சொல்லவேண்டியதேயில்லை !
இளையராஜாவின் இசையில் அந்த வரிகள் நம்மை ஒரு மயக்க உலகிற்கே எடுத்துச்செல்கிறது.
பாரதியின் பாடல் வரிகளுடன் பாடலைக் கேளுங்கள்!

Image result for நிற்பதுவே, நடப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் 
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?