“தவிப்பு சேர்த்தது” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்


Create a flyer that stands out

 

ஒரு காலத்தில் எல்லாம் சுகமாகப் போய்க் கொண்டு இருந்தது! நடுத்தர சதீஷ் குடும்பத்தினர் சிரிப்பும், குதுகலமும் ததும்பி இருந்தார்கள். வீட்டில் பூஜை-ஸத்ஸங் நடத்தி, அன்னதானம் செய்வார்கள். தெருவில் எல்லோருடனும் பழகி, சௌக்கியம் விசாரிப்பார்கள். அது ஒரு கனாக்காலம் போல் தோன்றியது. இப்போது என்ன ஒரு மாறுதல்! எல்லோருக்கும் வருத்தம். வியப்பாக இருந்தது.

 

தனியார் நிறுவனத்தில் சதீஷிற்கு நல்ல உத்தியோகம். ஒரு வருடமாகத் திரும்பி வருவதற்கு ராத்திரி பத்து மணியாகிவிடும். அவ்வப்போது அலுவலகப் பார்ட்டியினாலும் இப்படி. வெளியூர் பயணங்கள், அங்கேயும் பார்ட்டிகளில் கலந்து கொண்டான்.

 

பார்ட்டிகளில் தடையின்றி மது இருக்கும். முன்பெல்லாம், சதீஷ் மது அருந்துவதில்லை. புது நண்பர்கள் கிடைத்தார்கள். மது அருந்துபவர்கள். “எங்களைப் பார், ஒன்றும் ஆகாது” எனச் சொல்லி மதுவைத் தந்தார்கள். “வேண்டாம், பழக்கம் இல்லை” என்று சொல்லத் துணிச்சல் அவனுக்கு இல்லை.

 

சதீஷ், மது அருந்த ஆரம்பித்ததை வீட்டினரிடமிருந்து மறைத்தான். மனம் உறுத்தியது. குற்ற உணர்வை சமாதானம் செய்யவே வீடு திரும்புகையில் ஏதாவது ஆடம்பரமாக வாங்கி வருவதை ஆரம்பித்தான்.

 

மனைவி ராதா, முனைவர் பட்டம் பெற்றவள். பாரபட்சம் பார்க்காமல் உதவுவாள். நன்றாகச் சமைப்பாள். அக்கம்பக்கத்தினருக்குத் தாராளமாகத் தருபவள். முதல் குழந்தை, சுதா ஐந்தாவதில், இளையவனான சுமன் இரண்டாவது வகுப்பில். படிப்பில் சுமார், கை வேலையிலும், விளையாட்டிலும் கெட்டி.

 

சுதா, சுமன் தெருவின் மற்ற பிள்ளைகளுடன் பள்ளிக்கூடம் போவார்கள். உயிர்த் தோழனான குமார் வாயிலிருந்து முதல் முதலில் அதைக் கேள்விப்பட்டார்கள். ஒரு நாள், குமார் அவர்களைப் பார்த்தவுடன் ஸ்கூல் பையைக் கீழே போட்டு விட்டு, பல்லைக் கடித்தபடி, “உங்க அப்பாவால, எங்க அம்மா….” கண்களில் கண்ணீர் முட்ட, மேற்கொண்டு சொல்ல முடியாமல் ஓடிப்போய் பையை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான்.

 

குழந்தைப் பருவம் தான். ஆனால் சுதா- சுமன் இருவருக்கும் குமார் எதைக் குறிப்பிடுகிறான் என்று யூகிக்க முடிந்தது. அவர்கள் அப்பா சதீஷ், குமாரின் அப்பாவுடன் பல நாட்கள் தள்ளாடியபடி திரும்பி வருவதைப் பார்த்திருந்தார்கள். குமார் அப்பாவிடமும் துர்நாற்ற  வாடை வரும். சுதா, சுமன் கண்ணீர் சுற்றென்றது. குமார் உயிர்த் தோழன் ஆச்சே!

 

ஆறு ஏழு மாதங்களாக வெள்ளி, சனிக்கிழமை, வேலையிலிருந்து வரும் போதே ஸதீஷ் தள்ளாடியபடி, அந்தத் துர்நாற்றத்துடன் வருவதுண்டு. மது அருந்துவதால் என ராதாவுக்குத் தெரியும். அச்சப் பட்டு கவலையில் நடுங்குவாள். இதைப் பார்த்து, சுதா சுமன் பயப்படுவார்கள். மறு நாள் இது எதுவுமே நடக்காதது போல் இருப்பான் சதீஷ்.

 

இதனாலேயே இப்போதெல்லாம் இவர்கள் வீட்டில் எட்டு மணிக்குப் பிறகு ஒரு நிசப்தம் நிலவியது. அருகில் வசிக்கும் யாரும் அங்கே போக அஞ்சுவார்கள். முன்பு இப்படி இல்லையே!

 

மாலை எட்டு மணிக்குள் சுதா, சுமன் அவசர அவசரமாகப் படித்துக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம். ஏன் இந்த அவசரம்? சதீஷ் வரவை வேதனையுடன் எதிர்பார்ப்பதினால்தான்!

 

அதற்கு ஏற்றாற்போல், காலைத் தேய்த்துக் கொண்டு, ஷர்ட் பட்டன் மேலும் கீழுமாகவும், வீதிக்கே கேட்கும் அளவிற்குப் பாடிக்கொண்டே வருவான் சதீஷ். அவனிடமிருந்து மது அருந்திய வாடை குடல் வரை போகும். பிள்ளைகளிடம் இனிப்பு கொடுத்து அசட்டுச் சிரிப்பு சிரிப்பான். வாடை சகிக்கவில்லை என்றாலும் சுதா, சுமன் பயத்துடன் வாங்கிக் கொள்வார்கள். மறுத்தால், திட்டி, உதைப்பான். இதுவரை திட்டாத, கை ஓங்காத சதீஷ், இப்போது இப்படி!

 

ராதா நிலைமையைச் சமாளிக்க சதீஷை சாப்பிட அழைப்பாள். சாப்பிட்டு விடுவான். மதுவின் அளவு அதிகரிக்க, முகத்தைச் சுளித்துக் கொண்டு, தட்டைத் தூக்கி எறிந்து விட்டு, வெளியே போய்விடுவான். இரவு ஒன்றரை மணிக்குத் திரும்பி வருவான். அவனுடைய கூச்சல் கத்தலால் தூக்கம் இல்லாமல் போகும். ராதா துக்கத்தில் விசும்புவாள்.

 

அடுத்த நாள் தலைவலியுடன் எழுந்திருப்பான். இரவில் செய்தது, சொன்னது எதுவும் ஞாபகம் இருக்காது. இது “ப்ளாக் அவ்ட்” (black out) என்பது, அது பிற்காலத்தில்தான் புரிய வந்தது. மிகவும் சங்கடப்பட்டாள் ராதா. . சதீஷின் சொற்கள், செயல்கள் மூவரின் நெஞ்சையும் வாட்டியது. அவன் இவ்வளவையும் செய்து விட்டு ஒன்றும் ஆகாதது போல் இருப்பதை ஏற்றுக் கொள்ள அவர்களுக்கு மிகக் கடினமாக இருந்தது.

 

சுதாவின் பள்ளித் தோழி கிரிஜா, தன் வீட்டுப் பக்கத்தில் உள்ள சர்ச்சிற்கு வியாழக்கிழமைகளில் பலபேர் வந்து போவதை ஆர்வத்துடன் கவனித்தாள். ஆண்கள்-பெண்கள் எனப் பிரிந்து சென்றதைப் பார்த்து கொஞ்சம் வியந்தாள். ஒவ்வொருமுறையும் அதே முகங்கள். ஒன்றாக வந்து, சென்றார்கள். இது என்னது எனத் தெரிந்து கொள்ள அந்த சர்ச் பாதிரியாரிடம் கேட்டாள். அவர்கள் ஒரு குழு அமைப்பு என்றும், ஒரு விஷயத்திற்காக வருவதாகச் சொல்லிச் சென்று விட்டார்.

 

கிரிஜா விடவில்லை. சுதாவை தன்னுடன் அழைத்துச் சென்று இருவரும் என்னவென்று எட்டிப் பார்த்தார்கள். அங்கு எழுதியுள்ளதை நகல் எடுத்து ராதாவிடம் காட்டினார்கள். மற்ற அம்மாக்கள் கோபித்துக் கொள்வார்கள், ராதா விளக்கம் அளிப்பாள் எனத் தெரிந்து அவளிடம் சீட்டைக் காட்டினார்கள்.

 

ராதா காகிதத்தைப் பார்த்ததும், அழ ஆரம்பித்தாள். குழந்தைகள் பயந்து போனார்கள். கிரிஜாவை அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, “தாங்க்ஸ்” என்றாள் ராதா. குழந்தைகள் இருவருக்கும் எதுவும் புரியவில்லை.

 

மறுநாளே ராதா பாதிரியாரைச் சந்தித்து அந்த காகிதத்தில் எழுதியிருந்த “alcoholics anonymous” (ஆல்க்ஹாலிக்ஸ் அனானிமஸ்) பற்றி விசாரித்தாள். அவர் விளக்கியதில் புரிந்தது. இது குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்தவர்களின் குழு அமைப்பு. திரும்ப மதுப் பழக்கத்திற்குப் போகாமல் தடுத்து தடுத்தி கொள்வதற்காகச் சந்திக்கிறார்கள் என்று அறிந்து கொண்டாள். யாருக்கும் குழுவிற்கு வருபவர்களைப் பற்றிய தகவல்கள் தரமாட்டார்கள் அதனால் தான் “அனானிமஸ்” என்றதைப் பாதிரியார் விளக்கினார.

 

இவர்களால் சதீஷிற்கு உதவ முடியுமா என்றதையும் அவர் தெளிவு செய்தார். ராதாவை அவர்களின் குழுவில் வந்து கலந்து கொள்ளப் பரிந்துரைத்தார்.

 

அவ்வாறே ராதா செய்தாள். குழுவில் வலுவான ஆதரவு கிடைத்தது. ராதா மனதில் புதுத் தெம்பு வந்தது. பிரேம் என்பவரும், அவரின் மனைவி ஊர்மிளாவும் அவளுக்கு ஊக்கம் கொடுத்து உதவ முன் வந்தார்கள். ராதா மேலும் அறிந்து கொண்டது, மது அருந்துபவரின் மனைவிகளுக்கும் “ஏல்-எனான்” (Al-Anon) குழந்தைகளுக்கும் “எல்-டீன்” (Al-Teen) என்ற குழுக்கள் உண்டு. 

 

பிரேமுடன் குழுவின் மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்து சதீஷை சந்திக்க வந்தார்கள். சதீஷ் அவர்களிடம் மிகக் கடுமையாகப் பேசி விரட்டி விட்டான். இவ்வாறு ஆகும் என்று அவர்கள் அறிந்ததே. ராதாவைச் சமாதானப் படுத்தி, எவ்வாறு இதைக் கையாள வேண்டும் என்று அவளுக்குப் புரிய வைத்தார்கள்.

 

மது அருந்துவது எப்போது உபாதை ஆகின்றது என்பதை விளக்கினார்கள். ராதா தெளிவாகப் புரிந்து கொண்டது: சமீபத்தில் சதீஷ் வேலையில் நண்பர்கள் தூண்டுதலினால், “வேண்டாம்” என்று சொல்லத் திறன் இல்லாததினால் குடிப்பது ஆரம்பித்தது. அவன் தனியாகவும் குடிப்பது மதுவிற்கு அடிமையாகி வருவதைக் காட்டுகிறது. குடிப்பது சரிதான் என்று சாதித்து, வேலை அழுத்தத்தினால் குடிப்பதாகத்  தர்க்கம் செய்வது (இதற்கு முன்னால் இல்லாத வேலைப் பளுவா?), அனாவசிய ஆடம்பரச் செலவுகள் எல்லாமே அறிகுறிகள். குறிப்பாக, குடிப்பதால் வீட்டில் என்ன தொல்லைகள் நேர்கின்றது என்றதை சதீஷ் புரிந்து கொள்ளாதது, இவையெல்லாம் சதீஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமை என்பதைக் காட்டுகிறது.  

 

பிரேம்-ஊர்மிளா பக்கத்திலிருந்ததாலோ, அவர்களும் சதீஷ்-ராதா வயது தான் என்பதாலோ, பல முறை சதீஷைச் சந்தித்துப் பேச ஆரம்பித்தார்கள். தற்செயலாக சதீஷ் குடிக்காமலிருந்த போதும் சில சந்திப்புகள் நேர்ந்தது. இதை உபயோகித்து, அவர்கள் தாங்களும் குடிபோதையில் எந்த அளவிற்குச் சரிந்து, பின்னர் சுதாரித்து, மதுப்பழக்கம் விட்ட பின் நிலை உயர்ந்ததைப் பற்றி பகிரங்கமாகப் பல உதாரணங்களுடன் பகிர்ந்தார்கள்.

 

பல முறை இவ்வாறு ஆனதும் சதீஷ் தன் இயலாமையைப் பற்றி கொஞ்சம் விளக்கம் அளிக்க ஆரம்பித்தான். பிரேம் இவை எப்படி மதுப்பழக்கத்துடன் இணைந்து இருக்கிறது என்றதை எடுத்துச் சொன்னான். பயன் இல்லை. சதீஷ் அன்று இரவும் குடித்தான்.

 

இது போல் நான்கு-ஐந்து முறை நடந்தது. இந்த நேரத்தில், ராதா சதீஷிடம் ஏன் அவனுடைய இந்த நிலை அவளுக்குச் சரிவரவில்லை என்றும், குழந்தைகள் தவிப்பையும் சொன்னாள். மாமனார்-மாமியார் தனக்கு ஆதரவாக இருப்பதை ராதா வலியுறுத்தினாள். குற்ற உணர்வைத் தருவதற்கு இல்லை, உதவுவதற்கு. பிரேம், ஊர்மிளா, மாமனார் தன்னுடன் முயற்சிகளை எடுக்கிறார்கள் என்றதையும் விவரித்தாள்.

 

சிகிச்சை பற்றிய தகவல்களை “ஆல்கஹால் அனானிமஸ்” தலைவர் விளக்கினார். இதையும் உணர்த்தினார், சதீஷ் தானாக உணர்ந்து, தனக்குச் சிகிச்சை தேவை என்று எண்ணினால்தான் சிகிச்சை வெற்றியாகும் என்று சொல்லி, முடிவை சதீஷ் கையில் விட்டார்கள்.

 

எல்லா மனநல சிகிச்சைகள் போல, குடிப்பழக்கத்திற்கும், “தயார் மனப்பான்மை”(preparedness) அவசியமானது. கூடவே நம்பிக்கையும் தேவை. மது அருந்துவதால் பல இன்னல்கள் ஏற்படுகின்றது என்று உணர்ந்து, குடிப்பதை விட்டு விடுவது அவசியம் என்று தீர்மானிக்க வேண்டும். குடும்பத்தினர் ஒத்துழைப்பும் தேவை என்றும் கூறினார்.

 

இந்த தருணத்தில் தான் சதீஷை, ஆல்கஹால் அனானிமஸ் தலைவர் எங்களது சிகிச்சை இடத்திற்கு அழைத்து வந்தார்.

 

சில வாரங்களுக்குப் பின் சுதா-சுமன் ராதாவை குமார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். குமார், அவன் அம்மா இருவரும் வருத்தப் பட்டார்கள். கோபமாகப் பேசி, வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதைக் கிரிஜா பார்த்து விட்டாள். தன் தோழி சுதா அழுவதைப் பார்த்து, மனதிற்குள் அவளுக்கு மேலும் உதவ வேண்டும் என்று முடிவு செய்தாள். ஆனால் என்ன செய்ய?

 

பத்து நாளைக்கு கிரிஜாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அன்று சர்ச்சில் அதே கூட்டம். கிரிஜா ஓடிப்போய் சுதாவை அழைத்தாள். இருவரும் குமார் வீட்டிற்கு சென்றார்கள். குமாரைச் சமாதானம் செய்து ராதாவிடம் பேச அழைத்து வந்தார்கள். கிரிஜா அந்த சர்ச் கூட்டத்தைப் பற்றி தான் ராதாவிடம் சொன்ன பின், அவர்கள் வீட்டில் பல மாற்றம் தெரிய ஆரம்பமானதை குமாரிடம் விவரித்தாள்.

 

ராதா மிகப் பாசத்துடன் குமாரிடம் பேசத் தொடங்கினாள். அவனுடைய அம்மா என்னமோ ஏதோ என்று நினைத்து ஓடி வந்தாள். அவர்களின் கோபம் தணிந்ததும், ராதா, தான் “ஆல்கஹால் அனானிமஸை” அணுகியதைப் பற்றி விளக்கினாள். தனக்கு எடுத்துச் சொன்னதை அவர்களிடம் சொன்னாள். குமார் அம்மா “அப்படியா” என்று விழித்தாள். ராதா அவளை ஆசுவாசப்படுத்தினாள். தானும் சதிஷும் அவர்கள் வீட்டிற்கு வந்து அவள் கணவரிடம் பேசுவதாகச் சொன்னாள். தன் பிரியச்சகீ கிரிஜாவைப் பெருமையுடன் சுதா நினைத்துக் கொண்டாள்!

குமார் அப்பாவிற்குப் பழக்கம் ஆரம்பித்து வைத்ததால், சதீஷையே அவரை சிகிச்சைக்குத் தயார்ப் படுத்தும் முயற்சி எடுக்க நானும் சொன்னேன். ராதாவை அவனுடைய மனைவியிடம் பேசித் தயார் செய்யப் பரிந்துரைத்தேன். செய்தார்கள்.

 

சதீஷ் தனக்குச் சிகிச்சை தேவை என்று தோன்ற வைத்ததே தன் குடும்பத்தினால் தான் என்றான். போதையில் வாங்கி வருவதை அவன் கூச்சல் போடாமல் இருக்க, எடுத்துக் கொள்வார்கள். மறு நாள் அவனிடமே கொடுத்து விடுவதுண்டு. சிகிச்சையின் போது தன் செயலின் பாதிப்புகளை, எந்த அளவிற்குக் காயப் படுத்தியது என்பதைப் புரிந்து கொண்டேன் எனப் பகிர்ந்தான்.

 

குமார் குடும்பம் தவிக்கும் தவிப்பைப் பார்த்தது சதீஷை தன் நடத்தையைப் பற்றி மேலும் சிந்திக்கச் செய்தது. குற்ற உணர்வை மறைக்க மது மீண்டும் அருந்துவது சுலபமாக நடக்காக் கூடும். இந்த அனுபவம் அதைத் தவிர்த்தது. 

 

சதீஷின் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்களும், மனதிடமும் வளர பயிற்சிகள் ஆரம்பித்தோம். ஏனென்றால், சதீஷிற்கு மதுப்பழக்கம் ஆனதே தன் உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாததால் தான். உயர்ந்த அதிகாரிகள் சொல்வதற்கு மறுக்கத் தைரியம் இல்லாததால் குடிக்கத் தொடங்கினான். மனதிடம் இல்லாததால் “இது தேவையா?” என்று ஆராயவில்லை. பழக்கத்தைப் பற்றியோ, அதன் விளைவுகளையோ எண்ணவில்லை. இவற்றைச் சரிசெய்யாவிட்டால் சிகிச்சைக்குப் பிறகு அதே வேலை, அதே கூட்டங்கள், திரும்ப மது அருந்தல் ஆரம்பமாக நேரிடும்.

 

பாரதியின் “மனதில் உறுதி வேண்டும்!” வளர, அதைச் சுற்றியுள்ள மற்ற திறன்கள் மேம்படவே, குமாரின் அப்பாவை சதீஷின் பொறுப்பாக ஒப்படைத்தேன். இதைச் செய்ததில், சதீஷிற்கு தன்நம்பிக்கை, மதுவிற்கு அடிமையை விடுவித்த  சந்தோஷம் ஏற்படும், மதுவைத் தொடாமல் இருக்க ஊக்குவிக்கும் என நம்பினேன். நம்பிக்கை வீண் போகவில்லை.  கால்பந்து விளையாடத் தொடங்கினார்கள்.

 

ராதாவின் பங்கு பெரிதளவில் உதவியது. முனைவர் என்பதால் பல தகவல்களைப் படிக்கத் தந்து, அதை மற்றவர்களுடன் பகிர்வதற்குக் குழுக்கள் அமைத்துச் செய்யச் சொன்னேன். அக்கம்பக்கத்திலும், சர்ச் சமூக கூடத்திலும் சுதா, சுமன் மற்றும் குமாரை வைத்து மதுப் பழக்கம், அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி ஸ்ட்ரீட் ப்ளே தயாரித்து அதைச் செய்தார்கள்.

 

இங்கு தான் பெரிய அளவில் வெற்றி என்றுகூடச் சொல்லலாம். நான்கு ஐந்து மாதத்திற்குப் பிறகு அக்கம்பக்கத்தில் உள்ள இரண்டு நபர்கள் சிகிச்சைக்கு தங்கள் மனைவிகளுடன் வந்தார்கள். சுதா, சுமன் தங்களது அனுபவங்களை வெளிப்படையாகப் பேசியதில், அவர்கள் வகுப்பில் உள்ள குழந்தைகள் தங்கள் வீட்டில் சொல்லி முயல, ராதாவின் மூலம் எங்களிடம் வந்தார்கள். அதுதான் இதில் முக்கியமான விஷயம், குடிக்கிறார்கள் என்று மூடி மறைத்தால் அது அதிகமாகும்.

 

அம்மா கை உணவு (24) –   சீடை, தட்டை, முறுக்கு – சதுர்புஜன்

Image result for சீடை, தட்டை, முறுக்கு

 

 

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

  1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
  2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
  3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
  4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
  5. ரசமாயம் – ஜூலை 2018
  6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
  7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
  8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
  9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
  10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018   
  11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
  12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
  13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
  14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
  15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
  16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019  
  17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
  18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
  19. வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
  20. சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
  21. அவியல் அகவல் நவம்பர் 2019
  22. சாம்பார் சக்தி டிசம்பர் 2019
  23. உப்புமா உண்மைகள் ஜனவரி 2020  

 

 சீடை, தட்டை, முறுக்கு !

 

குழந்தைகளே வாருங்கள் – நம்

சமையலறைக்கு வாருங்கள் !

அம்மாவை வந்து பாருங்கள் – அவள்

அன்பாய் செய்வதைப் பாருங்கள் !

 

சுற்றி சுற்றி நில்லுங்கள் – சற்றே

பொறுத்திருந்து பாருங்கள் !

சப்புக் கொட்டி சாப்பிடலாம் – சற்றே

காத்திருந்து பாருங்கள் !

 

அரிசி மாவை வைத்து – அம்மா

அதிசயம் செய்வாள் பாருங்கள் !

வித்தைகள் அவள் புரிவாள் – அவள்

விரலை மட்டும் பாருங்கள் !

 

சின்ன சின்ன உருண்டைகள் – அவள்

கைகளில் உருள்வதை பாருங்கள் !

சீடைகள் உருண்டோடுவதை – நன்றாய்

ரசித்து ரசித்தே பாருங்கள் !

 

எண்ணெய்ச் சட்டியை வைப்பாள் – அதில்

அழகாய்ப் போட்டு எடுப்பாள் !

சீடை முறுக்கு தட்டை – அவள்

சட்டுப் புட்டென்று செய்வாள் !

 

ஒரே மாவில் பணியாரம் _ எப்படி

விதம் விதமாய் வந்திருக்கு பாரு !

மனிதரெலாம் ஒன்றானாலும் – அவர்

குணத்தினால் வேறு வேறு !

 

கன்னம் வீங்கினாற்போல் – நீ

வாய்க்குள் அடைத்து ஓடு !

கடக்கு முடக்கு என்றே – கண்ணே

கடித்துக் கடித்து கொண்டாடு !

 

சீடை தட்டை முறுக்கு – நீ

வாயில் போட்டு நொறுக்கு !

தாடை அசையும் அசையும் – நீ

ரசித்து தாளம் போடு !

 

அம்மா இருக்கும் வரையில் – நமக்கு

அன்பு என்றும் உண்டு !

தமிழ் இருக்கும் வரையில் – தமிழர்

உணவு உண்டு ! உண்டு !

  

 

        

 

 

 

திரைக்கவிதை – ஜெயகாந்தனின் பாடல்

Sila Nerangalil Sila Manithargal - Must You Need to Watch and Study this creative Story!

படம்: சில நேரங்களில் சில மனிதர்கள் 

பாடல் : ஜெயகாந்தன் 

இசை : எம் எஸ் விஸ்வநாதன் 

பாடியவர் : எம் எஸ் விஸ்வநாதன் 

 

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ

வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ

கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதை காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

 

பாடலைக்  கேளுங்கள்  !

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

Image result for சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி

 

திரு சுந்தர ராமசாமி நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு முக்கியமான எழுத்தாளர். பல எழுத்தாளர்களுக்கும்   இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஒரு  ஆதாரமாய் விளங்கியவர். நாகர்கோவிலுக்கு வரும் எந்த எழுத்தாளரும் அவரைச் சந்தித்து அளவளாவாமல் திரும்ப மாட்டார்கள். புதுக்கவிதை வளர்ந்து ஓரளவு அங்கீகாரம்  பெற்றுவந்த காலகட்டத்தில் ‘பசவய்யா’ என்ற என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார். இவரது விமர்சனக் கட்டுரைகள், கொஞ்சம் காட்டமாக இருந்தாலும், குறிப்பிடத்தக்கவை.

 

இவருடைய ‘புளியமரத்தின் கதை’ நாவல் வரலாற்றின்  திருப்புமுனைகளில் ஒன்று  என்று சொல்லலாம்.  இவருடைய மற்றொரு நாவலான ‘ஜேஜே சில குறிப்புகள்’  பெரிய அளவில் பேசப்பட்ட மற்றும் விமர்சனத்திற்கு உள்ளான  ஒரு படைப்பு. அதற்கு அந்த நாவலின் வடிவம் தான் காரணம் என்று சொல்லலாம்.

 

இவரது எங்கள்  டீச்சர் என்னும் கதை

அந்தக் காலத்து மகாராஜாக்கள்தான் கல்வி தேவதையை எத்தனை பெரிய  மனசுடன் ஆராதனை செலுத்தியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்த பிரம்மாண்டமான கட்டடம் இங்கு எழும்பிவிடுமா?

என்று வியக்கும் வார்த்தைகளுடன் தொடங்குகிறது..

கதை எட்டாம் வகுப்பு மாணவன் பார்வையில் சொல்லப்படுகிறது. அந்தப் பள்ளியைப்போன்று வேறு பள்ளிகள், கல்லூரிகள் கூட இல்லையாம்.

ஒரே ஒரு ஆசிரியை மட்டும் (பத்மாவதி டீச்சர்)  இருக்கிறார். நாற்பது ஆசிரியர்களுக்கு மத்தியில் ஒரு பெண்துணையின்றி பணியாற்றுவது அவருக்கு நரக வேதனையாக இருந்ததாம். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வருகிறபோது முறையிடப் போவதாகவும் சொல்லிக்கொண்டிருகிறார். இந்தக் காரணத்தால்  பத்மாவதி டீச்சர் ராஜினாமா செய்து விடுவார் என்றுகூட பேசிக்கொண்டார்கள்

இந்த நிலையில்  ஒரு ஆசிரியை பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார்  என்று தெரியவருகிறது. அந்த டீச்சர் வந்து  சேரும் நாளும் வந்தது. புது டீச்சரை பார்க்கும் ஆவலுடன் மாணவர்கள் அசெம்ப்ளி ஹாலில் கூடிவிடுகிறார்கள் . பத்மாவதி டீச்சர் உடன்வரும்  எலிசபத் டீச்சர் ..  அந்தக் காட்சியை இப்படி  விவரிக்கிறார்.

பத்மாவதி டீச்சர் எதிர்சாரி ஏணிப்படி வழியாக, கால்களில் படி இடராது சாக்லேட் கலர் பட்டுச் சேலையை இடது கை விரலால் நாசூக்காகத் தூக்கிப் பிடித்தபடி இறங்கி, மிடுக்குடன் நடந்துவந்து எலிசபெத்தின் கைகளை அன்புடனும் முகத்தில் செட்டான சிரிப்புடனும்  பற்றி, ஒரு குழந்தையை அழைத்துச் செல்வதுபோல் வெயிட்டிங் ரூமுக்கு அழைத்துச் சென்றார். நிகழ்ந்தது இவ்வளவுதான். அந்த வேளையின் சாமர்த்தியம்தானோ என்னவோ! எல்லாம் கடவுளின் ஜோடனை போல் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துவிட்டது.

இரண்டு பேரில் ‘யார் அழகு’ என்று மாணவிகள் விவாதம் செய்து கொண்டார்கள். கண்கொள்ளாக் காட்சியாக   இரண்டு ஆசிரியைகளும் ஒன்றாக வரும்பொழுது இந்தக் கேள்வி எல்லோர்  மனத்திலும் தோன்றுவது இயற்கைதானே?

பள்ளியில் இருந்த மாணவர்களுக்கு அந்த இரு  டீச்சர்கள் மேலும் மிகுந்த மரியாதையுடனும், கூடவே ஒருவித பாசத்துடன் அவர்களை பார்க்கிறார்கள். அந்த இருவருக்கும்  இடையில் இருந்த நட்பும்  அன்னியோன்யமும் மாணவர்களுக்கு நெகிழ்ச்சியைத் தந்தது.

எங்கள் மனசும் எண்ணமும் அவர்களை சுற்றி படிய எங்கள் மேல் கொண்டிருந்த பாசமும் பாடம் கற்றுத் தருகையில் வெளிப்பட்ட அவர்கள் திறமையும் மட்டுமல்ல காரணங்கள்.  ஒவ்வொருக்கொருவர் கொண்டிருந்த  நேசமும் தோழமை உணர்ச்சியும் எங்கள் மனசை வெகுவாக கவர்ந்தன. அவர்கள் மனசுக்குள் அந்தரங்கம் எங்கள் இதயங்களில் எதிரொலித்தது

அந்த நட்பு ஸ்ருதி கலைந்தது போதாத காலம். பத்மாவதி டீச்சர் B  பிரிவு ஆசிரியை.  எப்போதுமே அந்தப் பிரிவு  மாணவர்கள்தான் படிப்பில் முதல் பல ராங்குகளைத் தட்டிச் செல்வார்கள். அதற்கு பத்மாவதி டீச்சரின் திறமைதான் காரணம்.

மண்டை  ஒட்டைக் கழற்றிப் பாடங்களை உள்ளே வைத்து மூடிவிடுவதில் அவர் காட்டும் திறமை அலாதியானது .  

அந்த டீச்சர் மனது வைத்தால் ஒரு பெருச்சாளிக்குக் கூட பிதாகரஸ் தியரத்தை கற்றுக் கொடுத்து விடுவார் என்று மாவட்ட கல்வி அதிகாரியே சொல்லுவாராம்.

இன்னொரு பிரிவின் ஆசிரியையாக எலிசபெத் டீச்சர் பொறுப்பேற்கிறார். அதில்தான் கதைசொல்லியும் படிக்கிறான்.

ஒரு காலாண்டு தேர்வில் பத்மாவதி டீச்சரின் மாணவர்கள் சிலர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க,  இந்த பிரிவு  மாணவர்கள் மிகக்குறைந்த மதிப்பெண்கள் பெற்றார்கள் பலர் ஒற்றை இலக்கம்தான்.  இந்த விஷயம் டீச்சரை மிகவும் பாதித்து விட்டது எப்படியாவது இந்த மாணவர்களை அடுத்த பிரிவு மாணவர்களுக்கு போட்டியாக நல்ல மதிப்பெண்கள் தர வைக்க முடிவு செய்கிறார்.

இதுவரை தனது பிரிவு மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லித் தரப்படவில்லை என்று புரிந்து கொண்டு,  போனது போகட்டும் ‘உங்கள் அத்தனை பேரையும் சிப்பாய் மாதிரி அணிவகுத்து போக வைக்க என்னால் முடியும்’  என்று ஒரு முடிவோடு  எலிசபெத் டீச்சர் பாடம் நடத்த ஆரம்பிக்கிறார்.

முந்தைய ஆண்டுகளில் அடிப்படைப் பாடங்கள் சரியாகச் சொல்லித்தரப்படவில்லை என்றும் புரிகிறது.எனவே, அடிப்படையிலிருந்து மாணவர்களைத் தயார் செய்கிறார்.   ஒவ்வொரு நாளும் வீட்டுப்பாடம். இடைவிடாது கடுமையாக உழைப்பு. குழந்தைகளும் மனதை கொடுத்து படிக்க ஆரம்பிகிறார்கள். இந்த வருஷம் ‘சீதாலட்சுமி நினைவுப் பரிசு’  நமக்குத்தான் என்றெல்லாம் சொல்லி ஊக்கப்படுத்தி வருகிறார். மாணவர்களுக்கு நம்பிக்கையே இல்லை எனினும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை ஏற்படத்தொடங்குகிறது. பேச்சுவாக்கில் இது சம்பந்தமாக இரண்டு பிரிவு மாணவர்களுக்கும் இடையில்  சில சமயம் வாய்ச்சண்டை கூட மூள்கிறது

எலிசபெத் டீச்சரின் தன்னம்பிக்கை வீண்போகவில்லை.  அரையாண்டுத் தேர்வில்   எலிசபெத் டீச்சர் பிரிவில் படிக்கும்  சரோஜினி நூற்றுக்கு நூறு வாங்கிவிட்டாள். அதேசமயம் பத்மாவதி டீச்சர் பிரிவில் படிக்கிற, எப்போதும் 100 மார்க் வாங்குகிற ராமன்,  அந்த முறை  நூறு மார்க்கை தவற விட்டுவிட்டான்.

‘பி’ பிரிவு மாணவர்களை ஜெயித்து விட்ட  சந்தோஷத்தில் மாணவர்கள் இதனைப் பெரும் வெற்றியாகக்  கொண்டாடுகிறார்கள். மீண்டும்  வாய்ச்சண்டை ஏற்படுகிறது. கைகலப்பு ஏற்படுவதற்கு முன்பாக மணி அடிக்கப்பட்டு விடுகிறது

தலைமை ஆசிரியர்  நேரில் வந்து விடைத்தாள்களை கொடுத்து டீச்சரை மாணவர்கள் முன்னால் பாராட்டியது இந்தப் பிரிவு மாணவர்கள் கொண்டாடும் விதமாக அமைந்துவிட்டது.  எலிசபெத் டீச்சருக்கும் மிகுந்த சந்தோஷம். ஒரு சாதனை புரிந்துவிட்ட மகிழ்ச்சி

அந்த மகிழ்ச்சியில் ஒரு களங்கம் ஏற்பட்டு விடுகிறது. கேள்வித்தாள் ‘செட்’ செய்த  எலிசபெத் டீச்சர் கேள்விகளை சரோஜினிக்கு  முன்னமேயே தெரிவித்து  விட்டதாக பத்மாவதி டீச்சர் சொன்னதாகத் தெரியவருகிறது.    சரோஜினி நூற்றுக்கு நூறு வாங்கியதற்கு காரணம்  அதுதானாம். எலிசபெத் டீச்சருக்கு மிகுந்த மனவருத்தம்.  ‘டீச்சரா அப்படிச் சொன்னார்’  என்று  மிகவும் மனம் வருந்துகிறார்

ஆண்டுத் தேர்வில் எப்படியும் தனது மாணவர்களை நல்ல மதிப்பெண்  எடுக்க வேண்டும்  என்கிற தீர்மானத்தோடு மீண்டும் விடாமுயற்சியோடு சொல்லித் தருகிறார் எலிசபெத் டீச்சர்.  பேப்பர் ‘செட்’ செய்யப்போவது வேறு பள்ளியின் ஆசிரியர் எனவே சென்றமுறை போல பழி வந்து விடாதல்லவா? முன்பு ஏற்பட்ட களங்கம் போய்விடும் அல்லவா?

ஆண்டுத் தேர்வில் முதல் மதிப்பெண் அதாவது நூற்றுக்கு நூறு பெற வைப்பது ஒரு சவாலாகவே மாறிவிடுகிறது ஆண்டு தேர்வுக்கான ‘சீதாலக்ஷ்மி’ பரிசு தனது பிரிவுக்கே கிடைக்க வேண்டும் என்று முழு மனதுடன் முயற்சி செய்கிறார்கள்

ஆனால் அது நிறைவேறவில்லை அதுகூட பொறுத்துக் கொள்ளலாம் எலிசபெத் டீச்சருக்கு அவப்பெயரும் வந்துவிட்டது

பரிட்சை எழுதும் பொழுது சரோஜினி ஒரு கணக்கில் சிறு தவறு ஒன்று செய்திருக்கிறாள்.   எலிசபெத் டீச்சர் “கடைசி கணக்கு வரை பார்த்தாயா.. என்ன அவசரம்?”  என்று  சரோஜினி கேட்டது ஒரு குற்றமாகப் பாவிக்கப்பட அவமானப்பட நேர்கிறது.

அதற்குப்பின் நான் அவரை சந்திக்கவில்லை வேலையை ராஜினாமா செய்துவிட்டு  கோட்டயத்திற்கு சென்றுவிட்டதாக பையன்கள் பேசிக்கொண்டார்கள்.

என்று கதை முடிகிறது.

ஒரு மாணவனின் எண்ண ஓட்டத்தில் கதை சொல்லப்பட்டு இருப்பதும், வர்ணனைகளும் மிகச் சிறப்பானவை. கதையை முழுவதும் படித்து அனுபவிப்பது நல்லது.

ஒரு போலீஸ்காரருக்கும்  அர்ச்சகருக்கும் இடையே நடக்கும் ‘பிரசாதம்’, துணிக்கடையில்  கண் தெரியாத உதவியாளரின் கதையான ‘விகாசம்’, ஏழ்மையில் வாடும் ஓவியரின் கதையான ‘சீதை மார்க் சீயக்காய்த்தூள். ….  என பல சிறுகதைகள் பரவலாகப் பேசப்படும் கதைகள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

தேச ஒற்றுமை – குறும்படம்

இன்றையக் காலக் கட்டத்தில் நம் தேசத்துக்குத் தேவையான அருமையான மருந்து தேச ஒற்றுமை.

அதை இந்தப்படம் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

 

எருமைக் காவல் தண்டனை – எஸ் எஸ்

 

image

“அடேய் சீவாச்சு! ” யாரோ கூப்பிட்டமாதிரி இருக்கே! ரொம்பத் தெளிவா தெரிஞ்ச குரல் மாதிரி இருக்கு. தொறந்த ஜன்னல்லே எட்டிப்பார்த்தா  வழக்கம் போல மாட்டுக் கொட்டகை தான் தெரியுது. அங்கேயும் ஆள் யாரையும் காணோம். ‘சரி! நம்ம மனச்சாட்சி தான் சத்தம்போட்டுக் கூப்பிட்டிருக்கும்’ னு நினைச்சுக்கிட்டு குப்புறப் படுத்து தூக்கம் பிடிக்க ஆரம்பிச்சேன்! மறுபடியும் “அடேய் சீவாச்சு! ” என்ற குரல் தெளிவாக மாட்டுக் கொட்டகையிலிருந்து வந்தது.

என் ரூமைத் தொட்டாப்போல மாட்டுக் கொட்டகை – அதில் ஒரு டஜன் எருமை மாடு. ரூரல் போஸ்டிங்கில குக்கிராமத்துக்கு வந்த எனக்கு இந்த மாட்டுக்கொட்டகை அட்டாச்சுடு வீடு தான் சவுகரியமான வீடு. முக்கியமா வீட்டுக்காரம்மா மூணு வேளைக்கும் சோறு வேற போடறாங்க! மாட்டுக் கொட்டகை தான் பெரிய மைனஸ் பாயிண்ட்! இந்தக் கிராமத்திலே இதைவிட நல்ல வீடு கிடைக்க சான்ஸே இல்லை. என் ரூம் மேட் சேது – அவன் போஸ்ட் ஆபீஸில் கிளார்க்கா இருக்கான். அவன் இதே வீட்டிலே நாலு வருஷமா இருக்கான். பெரிய மனசு பண்ணி என்னை ரூம் மேட்டாக சேர்த்துக்கிட்டான்.

ரெண்டு பெரும் பேச்சலர்ஸ். ராத்திரியெல்லாம் என்னென்னவோ பேசுவோம். அவனுக்கு ஜாதகத்தில சனி. இன்னும் ஏழரை வருஷம் கழிச்சுத்தான் அவன் மொறப் பொண்ணு கோமளாவைக் கட்டுவானாம். எனக்கு வாயில சனி. ‘என் கல்யாணத்துக்கு இப்போ என்னப்பா அவசரம் –  ரேவுக்குக் கல்யாணம் ஆனப்புறம் பாத்துக்கலாமே ’ ன்னு  ஒரு பந்தாவுக்குச் சொன்னதை அப்பா அம்மா சரியாப் பிடிச்சுக்கிட்டாங்க! அவளுக்கு இப்போ தான் பதினாறு வயசாகுது.அவளுக்குக் கல்யாணம் ஆகிறதுக்குள்ளே நான் ரிடையரே ஆயிடுவேன் போலயிருக்கு!   

இப்போ தான் நாங்க ரெண்டு பேரும் பக்கத்து ஊருக்குப் போய் ஒரு பலான படம் பாத்துட்டு ஒரு பிரண்ட் ரூமிலே கொஞ்சம் பீர் அடித்துவிட்டு வந்தோம். சேது குப்புறப் படுத்து பொணம் மாதிரி தூங்கிட்டான். எனக்குத் தான் தூக்கம் வரவேயில்லை. பார்த்த படத்தில வந்த ஹீரோவுக்கு பதிலா  நான் -ஹீரோயினோட குஜால் .. அந்த மூடிலிருந்தேன். காத்துக்காகத் திறந்து வைச்சிருந்த ஜன்னலாண்ட ஒரு அசிங்கமான கறுப்பு எருமை என்னையே முறைச்சுப் பார்த்துக்கிட்டிருந்தது. ‘சூ’ ன்னு விரட்டப் போனேன். அப்பத் தான் எனக்கு வாழ்க்கையிலே முதல் முறையாத் தூக்கி வாரிப்போட்டது. அந்த எருமை தன் வாயைத் திறந்து  “அடேய் சீவாச்சு! “ ன்னு கூப்பிட்டது.

(நான் ரீல் விடறேன்னு நீங்க நினைக்கலாம். இருந்தாலும் முனி – காஞ்சனா – பீட்ஃசா படம் பார்த்து ரசித்த நீங்கள்  இதை படத்தில சொன்னா ஒத்துக்கிவீங்க!  ஆனா நான் சொன்னா  மட்டும் ஏத்துக்க யோசிப்பீங்க இல்லையா? சத்தியமா சார்! நான் பாத்தது கேட்டது எதுவும் விஞ்ஞானத்துக்கு சம்பந்தம் இல்லாத விஷயம். ஆனா முழுக்க முழுக்க உண்மை.)

image

 

அப்புறம் அந்த எருமை கடகடவென்று பேச ஆரம்பித்தது. “அடேய் சீவாச்சு! நான் யாரு தெரியுதாடா?”

அந்தக் குரல் வைக்கோலைத்   தின்னுட்டு  ம்மேய்ய்ன்னு கத்துகிற  எருமைக் குரல்  மாதிரி இல்லை. கொஞ்சம் பழகின வயசான குரல் மாதிரி இருந்தது. பேசும் போது அந்த எருமையின் மூக்கு அசிங்கமா அசையறதைப் பாக்கறப்போ  கொஞ்சம் பயமா இருந்தது. இருந்தாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு ‘நீ.. நீங்க யாரு’ ன்னு கேட்டேன்.

பக பகவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டது அந்தக் கருப்பு எருமை. “என்னைத் தெரியலையாடா? நான் தாண்டா..–  உன் URS  தாத்தா! சாட்சாத் உடுமலைப் பேட்டை ராமசாமி சர்மா! . குரல் மாறிப் போச்சாடா?”

மறுபடியும் தூக்கிவாரிப் போட்டது. ஆனா அதுக்குள்ளே தூக்கி வாரிப் போடறது பழக்கமாப் போயிடுச்சு. பின்னே என்ன சார்! ஐந்து நிமிஷத்திலே பத்து தடவைத்  தூக்கி வாரிப் போட்டா என்ன பண்ணறது?

“அட அர்ஸ் தாத்தாவா?”

“ஆமாண்டா உங்க அப்பனோட அப்பன் தான்! இப்போவாவது புரிஞ்சுதா? சரியான ட்யூப் லைட்ரா நீ ! அது சரி ! நீ எப்படி இருக்கே? பாங்க் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டியா? உங்கப்பன் எப்படி இருக்கான்? உங்கம்மா – மாமனாரை  அடிச்சு விரட்டிய புண்ணியவதி எப்படி இருக்கா? ரேவுக்குட்டி எத்தனாங்கிளாஸ் படிக்கிறா?”

நிஜமாகவே என் தாத்தா தான். அஞ்சாறு வருஷம் முன்னாடி சைக்கிள்ளே பராக் பார்த்துக்கிட்டு போகும் போது ஒரு லாரி மேல மோதப் போயிட்டாரு. அவரைக்  காப்பாத்த லாரிக்காரன்  வண்டியை ஒடிச்சுப் பக்கத்தில  பள்ளத்துக்குத்  திருப்பினான்.  பள்ளத்தில இருந்த எருமைமாடு ஸ்தலத்திலே மரணம். லாரிக்காரன் தாத்தாவைக்  கன்னா பின்னான்னு திட்டினான். எருமைக்காரன் வேற தாத்தாகிட்டேர்ந்து பணத்தை வைன்னு கத்தினான். நான் தான் தாத்தாவைக்  காப்பாத்தி பணத்தைக் கொடுத்து வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போனேன்.

 image

ஆனால் அந்த எருமை ஆக்ஸிடெண்டுக்குப்  பிறகு தாத்தா சுத்தமா மாறிட்டார்.அதுக்கு முன்னாடி ‘ பாகீரதீ ! இதென்ன காப்பியா கழுநீரா’ ன்னு கத்தினார்னா  வீடே அதிரும். ‘பாருடா! உங்க தாத்தா கொடுமைப் படுத்தராறு’ ன்னு சொல்லி அம்மா தினமும் அழுவாள். ஆனால்   அந்த ஆக்ஸிடெண்டுக்குப்  பிறகு தாத்தா பெட்டிப் பாம்பாய் மாறிட்டார். அம்மா அதுதான் சாக்குன்னு கீரியாய் மாறிட்டா. அடிக்கடி செத்த எருமை ஞாபகம் தாத்தாவிற்கு வந்துடும். அவர் தூக்கம் வராம அவதிப் படுவார். அந்த எருமை செத்த திதி அன்னிக்கு தாத்தா ராத்திரியெல்லாம் ம்மேய்ய்ன்னு கத்திக்கிட்டே இருப்பார். கேட்க ரொம்பப் பாவமா இருக்கும். மாசா மாசம் அந்த திதி அன்னைக்கு அவரை ரூமிலே வைத்துப் பூட்டிவிடுவோம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அம்மா ஒரு நாளைக்கு நேராவே சொல்லிட்டா- ‘பகவதி கோவிலுக்கோ எரவாடிக்கோ  போயிங்கோ’ ன்னு. அடுத்த நாள் தாத்தா திடீர்ன்னு காணாமப் போயிட்டார். நாலு வருஷத்துக்கு அப்புறம் இங்கே இப்போ என்கூட எருமை மாடா பேசறார். நம்பவே முடியலை!

image

“என்னடா சீவாச்சு யோசிச்சுக்கிட்டிருக்கே?”

“நிஜமாவே நீங்க நீங்க தானா தாத்தா? எப்படி நீங்க இப்படி?”

“அதெல்லாம் பெரிய கதை. சொன்னா போரடிக்கும். சுருக்கமா சொல்றேன் கேட்டுக்கோ ! உங்க அம்மாகிட்டே கோவிச்சிக்கிட்டு  உடுமலைப் பேட்டையை விட்டுட்டு நேரே காசிக்குப் போனேன். அங்கே ஒரு பெரிய மகான் இருந்தார். அவர் கிட்டே அந்த எருமையைக் கொன்ன பாவத்தைப் போக்க என்ன வழின்னு கேட்டேன்! அல்பாயுசா செத்த அந்த எருமையின் பாக்கி நாலு வருஷம் சொச்சத்தையும் எருமையா இருந்து தீர்க்கணும். இல்லாட்டி   இந்த எருமைக் கத்தல்  ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு பரம்பரையா வரும்னு சொன்னார். நான் செஞ்ச பாவம் உங்களுக்குத் தொடரக் கூடாதேன்னு நானும் அந்த எருமைக் காவல் தண்டனைக்கு ஒத்துக்கிட்டேன். அந்த குருஜியும் என்னைக் கூடு விட்டுக் கூடு பாய வைச்சார். நான் டெல்லி எருமையாயிட்டேன்.”

“என்ன தாத்தா இது? பருப்புத் தேங்கா கூடு மாதிரி ஏதோ சொல்றீங்க? ராம நாராயண் படம் பார்க்கற  மாதிரி இருக்கு!”

“குறுக்கே பேசாதேடா ! நான் கூடு விட்டு கூடு பாஞ்சதும் குருஜி என் பாடியை வாரணாசியிலே ஒரு கோல்ட் ஸ்டோரேஜில வைச்சிருக்கார். மாசாமாசம் அந்த எருமை செத்த திதி அன்னிக்கு மட்டும் தான் எனக்கு கொஞ்சம் சுய நினைவு வரும். இன்னிக்கு அந்த நாள். இத்தனை நாள் நான் டெல்லியில இருந்தேன். போன மாசந்தான் தமிழ்நாடு எருமை வள போர்டு ஆயிரம் எருமைகளை டெல்லியிலிருந்து வாங்கியது. யார் கிட்டேயும் சொல்லாதே! அதிலேயும் பயங்கர ஊழல் இருக்கு! அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்.இந்த வீட்டுக் காரன் பேங்க் லோன் போட்டு என்னை வாங்கினான். இன்னைக்குக் காலையில ஜன்னலாண்ட உன் மூஞ்சியைப் பார்த்ததும் எனக்கு உன் ஞாபகம் வந்தது. இன்னிக்கு அந்த திதி.  சீவாச்சு! உன்னைப் பார்ப்பேன்னு நினைக்கவே இல்லேடா!”

“ஸாரி தாத்தா உங்களை நிக்க வைச்சே பேசிக்கிட்டிருக்கேன்! உள்ளே வாங்களேன்! உட்காருங்கோ!”

“எப்படிடா உள்ளே வர்றது? வந்தாலும் அந்த நொண்டி நாற்காலிலே எப்படிடா உட்கார்ரது? நீ பேசாம ஜன்னலாண்ட உக்காந்துக்கோ! எனக்கு நாலு காலும் வலிக்குது! நான் படுத்துகிட்டே பேசறேன்!”

“தாத்தா உங்களுக்கு இது கஷ்டமாயில்லையா?”

“ரொம்ப மோசம்டா இந்த மாட்டுக் கொட்டகை! கொசு நிறைய இருக்கு டெல்லி ரொம்ப சூப்பரா இருக்கும். அங்கே பிரைம் மினிஸ்டர் மாட்டுப் பண்ணையில் இருந்தேன். தவலை தவலையா கோதுமை தின்னுட்டு இங்கே மற்ற சொங்கி மாடுகளோடு போஸ்டர் தின்ன ரொம்ப வெக்கமாயிருக்குடா!”

“ஏன்  தாத்தா! பால் கறக்கறச்சே உங்களுக்கு வலிக்குமா?”

“டெல்லியில  ஒரு சிங் வந்து கறப்பான் பாரு வலியே தெரியாது. இங்கேயும் இருக்கானே ஒருத்தன்! இதமா  கறக்கத் தெரியலை! கொஞ்சம் வலிக்கறது.”

“என்ன தாத்தா எதுக்கெடுத்தாலும் டெல்லி டெல்லி! அந்த ஊர் ரொம்ப உசத்தியா போயிடுச்சோ?”

“ஆமாண்டா! டெல்லி டெல்லி தான்! காலங்காத்தாலே அந்த சிங் சத்தம் போட்டு எழுத்துக் கூட்டி டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பர் எல்லாம் படிப்பான். நியூஸ் எல்லாம் காதிலே விழும். ஊர் நல்லா இருந்தாலும் ஊழல் ஜாஸ்திடா! எனக்குப் போடற தவிடு புண்ணாக்கில கூட ஊழல் பண்ணினாங்கன்னு தெரிஞ்சப்பறம் பால் கொடுக்கிறதைக் கொஞ்சம் கொஞ்சமாக் கொறைச்சிட்டேன்! அப்பறம் மோடி ஜெயிச்ச அன்னிக்கு சொன்னா நம்ப மாட்டே! மூணு மணி நேரம் கன்டினுவசா பால் கொடுத்தேன். லிம்கா ரெக்கார்ட்ஸ்ல கூட என்ட்ரி ஆயிருக்கு!”

“தாத்தா நீங்க எப்போ காங்கிரஸ்லேர்ந்து பிஜேபிக்கு மாறினேள்?”    

“எல்லாம் நம்ம குருஜி யோசனை தான். அவர் ஆர் எஸ் எஸ் பக்தராம். அதனாலே தான் என்னை வாரணாசியிலிருந்து டெல்லிக்குப் போய் பிரதமர் மாட்டுப் பண்ணையில் இருக்க வைத்தார். நான் நிறைய சமாசாரம் ஒட்டுக்கேட்டு அவருக்கு சொல்வேன்! 2 ஜியிலிருந்து நிலக்கரி வரை எல்லா ஊழல் சமாச்சாரமும் எனக்குத் தெரியும். இப்பவும் குருஜி தான் எனக்கு டெல்லியிலிருந்து தமிழ்நாட்டுக்கு என்னை டிரான்ஸ்பர் செஞ்சிருக்கிறார். அது சரி! இன்னிக்கு என்ன தேதிடா?”

“நவம்பர் நாலு தாத்தா!”

 “என்னது நவம்பர் நாலா! சீவாச்சு! “ – தாத்தா அலறினார். படுத்துக் கொண்டிருந்தவர் நாலு கால்லே எழுந்து நின்றார்.

 ”என்ன ஆச்சு தாத்தா?“

 ”எனக்கு விடுதலைடா! விடுதலை! நாலு வருஷம் ஒன்பது மாசம் பதினாலு நாள் இன்னிக்கோட முடியுதுடா! என் எருமைக் காவல்  தண்டனை இன்னிக்கு ராத்திரி பன்னிரண்டோட முடியுதுடா! “ தாத்தா  ஆடிப் பாட ஆரம்பித்துவிட்டார்.

 ”விடுதலைன்னா எப்படி தாத்தா! எனக்கு ஒண்ணும் புரியலையே!“

 ”நேரமாச்சு சீவாச்சு! இன்னிக்கு ராத்திரி 12 மணிக்கு நான் செத்துப் போவேன்! அப்பறம்  காசிக்குப் போகணும்.“

“எப்படி?”

“செத்தப்பறம் காத்து மாதிரி தானேடா! கொஞ்சம் தம் பிடிச்சா காத்தாலே ஆறு மணிக்கெல்லாம் காசி போயிடலாம். புயல் வார்னிங் ஒண்ணும் இல்லியே? குருஜி நம்ம பாடியை கங்கைக் கரையில எடுத்து பத்திரமா வைச்சிருப்பார். நம்ம உடம்பு தானான்னு செக் பண்ணிட்டு உள்ளே புகுந்திட வேண்டியது தான். அப்பறம் என்ன? ஷேவ் பண்ணிட்டு கங்கா ஸ்நானம் பண்ணிட்டு ..ஐயையோ கடிகாரம் பன்னிரெண்டு அடிக்குதே!”

“அது அஞ்சு நிமிஷம் பாஸ்ட் தாத்தா! நீங்க சீக்கிரம் சொல்லுங்க!” 

 ”அப்பறம் என்னடா ! பழைய படி உன் தாத்தாவா வெளியே வந்து ஷேத்ராடானம் போயிட்டு டிசம்பர் 6 அன்னிக்கு அயோத்யா போயிட்டு டெல்லி வந்து முடிஞ்சா மோடியைப் பாத்துட்டு கரிப் ரத் டிரைனைப் புடிச்சு டிசம்பர் 10ந்தேதி சென்னைக்கு வருவேன். சரி. நீ ஜன்னலைச் சாத்திட்டுப் படுத்துக்கோ! நான் சாகறச்சே நீ பாக்கக் கூடாது. ஆசை தீர நாலு தடவை  கத்திடறேன்! ம்மேய்ய்! ம்மேய்ய்! ம்மேய்ய்! ம்மேய்ய்!“

டிசம்பர் 10தித் தேதி சென்னைக்குப் போய் சென்ட்ரலில் கரிப் ரத் டிரைனுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நான் கண்டது கனவாயிருக்குமோ என்ற டவுட் வேற!

டிரையினிலிருந்து  தாத்தா மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை.  அவர் கிட்டே போய் ‘தாத்தா!’ என்றேன்!

“அடேய்! சீவாச்சுவா? நீ எப்படிடா இங்கே வந்தே?”

“என்ன தாத்தா! நீங்க தானே போன வாரம் சொன்னீங்க!” 

“என்னடா உளர்ரே! நாலே  முக்கால் வருஷத்துக்கப்பறம் இப்போ தான் உன்னைப் பாக்கிறேன். டெல்லியில் ஒரு சர்தார்ஜியோட மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். உங்களையெல்லாம் பாக்கிற ஆசையில இப்ப தான் வர்றேன்! ஒண்ணு தெரியுமோ? இப்போல்லாம் நான் அந்த எருமை மாதிரி கத்துவது கிடையாது தெரியுமா? உங்கப்பன் எப்படிடா இருக்கான்? உங்கம்மா திருந்திட்டாளாடா? ரேவுக்குட்டி எத்தனாங் கிளாஸ் படிக்கிறா?”

இவர் நிச்சயமா என் தாத்தா தான். அப்படியானால் அவர்.. அது… நான் கண்டது கனவாய் தானிருக்கும். எருமைக் காவல் தண்டனையாவது வெங்காயமாவது! அப்படியானால் தாத்தா இன்னிக்கு கரிப் ரத்திலே வர்ற சேதி எனக்கு எப்படித்தெரியும்? ஏதோ இடிக்குதே!

“தாத்தா! வாங்க உடுமலைப்பேட்டை பஸ்ஸைப்    பிடிக்கலாம்! ” 

நடந்தோம்! 

குட்டீஸ் லூட்டீஸ்: தாக்கம்..! – சிவமால்

Image result for போதிதர்ம

‘பாவம்… சீனாவில் ஆயிரத்திற்கும் மேலே, ‘கொரானோ
வைரஸ், மர்மக் காச்சலாலே பாதிக்கப் பட்டு இறந்துட்டாங்-
களாம்.. நம்ம பிரதமர் மோடியும் இந்தியாவிலிருந்து என்ன
உதவி வேணும்னாலும் கேளுங்க.. செய்யறோம்னு சீன
அதிபர்கிட்டே சொல்லியிருக்காராம்..’ என்று, டி.வி., நியூஸ்
பார்த்துக் கொண்டிருந்த நான் மனைவியிடம் சொல்லிக்
கொண்டிருந்தேன். என் மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.

‘என்னப்பா.. ரொம்ப சிம்பிள்.. பல வருடங்களுக்கு முன்-
னே இது மாதிரி ஒரு விஷக் காச்சல் சீனாவில் வந்தபோது
நம்ம நடிகர் சூர்யா போய் நம் நாட்டு மூலிகை மருந்து
கொடுத்து அதை முழுவதும் குணப்படுத்திட்டாரே.. இப்ப
நம்ம பிரதமர் மோடி அவரை அனுப்பி இந்தக் காச்சலையும்
சரிப்படுத்தச் சொல்லலாமே…’ என்றாள்.

சட்டென்று ஒரு நிமிடம் நிதானித்து அவளைப் பார்த்தேன்.
‘ஏழாம் அறிவு’ என்ற திரைப் படத்திலே சூர்யா சீனாவிற்குப்
போய் இதுபோன்ற ஒரு மர்மக் காய்ச்சலைச் சரி பண்ணிய-
தாகக் காட்டியது நினைவிற்கு வந்தது.

நானும், என் மனையியும் புன்னகையோடு ஒருவரை ஒருவர்                                                                                                                                                                        பார்த்துக் கொண்டோம். இளம் உள்ளங்களில், திரைப்
படத் தாக்கத்தின் வீரியம் எங்களுக்குப் புரிந்தது.

Image result for traetment for coronos viras

 

 

இம்மாத உரை – அசோகமித்திரன் அவர்களின் பேச்சு

விருட்சம் 100 வது இதழ் வெளியீட்டு விழாவில் பேசிய பெருமதிப்பிற்குறிய அசோகமித்திரன் அவர்கள் உரையாற்றிய காணொளி  ! எப்போது கேட்டாலும் அப்படியே மனதைத் தொடும் வண்ணம் இருக்கும். மீண்டும் கேட்போமா?  

 

சிற்றிதழ்கள்

Image result for சிற்றிதழ்கள்

சிற்றிதழ்கள் பற்றி இப்படிச் சொன்னார்கள் :

சுந்தர  ராமசாமி .

சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.

புதுமைப்பித்தன்:

“நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் … சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு.”

க.நா.சு.:

‘ஒரு பத்திரிகை தொடர்ந்து இயங்கினால், அது சிறு பத்திரிகையே இல்லை.’

பொள்ளாச்சி நசன்:  (தமிழம் )

கருத்துச் செறிவிற்காகவும், தொடர்பிற்காகவும், ஒரு குழுவினரிடமோ, அல்லது மக்களிடமோ, வணிக நோக்கமற்று, ஒன்றிரண்டு இதழ்களே வந்தாலும், தரமான, உண்மையான – மொழி, இனம், நாடு தொடர்பான வரலாற்றுக் கருத்துகளையும், நடப்பியல் நிகழ்வுகளையும் – நுட்பமாகப் பதிவு செய்கிற அச்சு வடிவங்களையே சிற்றிதழ்கள் என்ற வகைக்குள் அடக்கலாம்

ஜெயமோகன் “

பூடக மொழியில் வெகுசில பிரதிகளே அச்சிட்டு நாலுபேர் கண்ணில் படாமலேயே வினியோகிக்கப்பட்டு வரும்  இதழ்கள்

சாதாரண’ மக்கள் அறியாமல், அறிந்தாலும் வாங்க முடியாமல், வாங்கினாலும் படிக்க முடியாமல் இவற்றை நடத்த ஆரம்பித்தார்கள்.

சாதாரண இதழ்களுக்கு நேர் மாறாக இவை இருக்கவேண்டுமென்பதே விதி.

படங்களுக்குப் பதில் முன்னட்டையிலேயே அச்செழுத்துக்கள் தொடங்குதல், இளம்பெண்களுக்குப் பதில் தாடை தொங்கும் தாத்தாக்களின் படங்களை அச்சிடுதல் போன்ற பல உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டன. பத்திகள் இல்லாமல் மொத்தமாக அச்சிடுதல், ஒருவரியே ஒரு பக்கம் வரை நீள விடுதல், ஒவ்வொரு சொல்லையும் வேறுபொருளில் பயன்படுத்துதல் ,  விசித்திரமான புதிய சொற்களை உருவாக்கி பயன்படுத்துதல், மிக நீளமான மேற்கோள்களைப் பயன்படுத்துதல், சிலசமயம் அம்மேற்கோளை பிறமொழிகளில் அமைத்தல் போன்றவற்றுடன் மிக அதிகமான விலையும் அமைத்துக்கொண்டு இவ்விதழ்கள் தங்களை பாதுகாத்துக் கொண்டன.

எதிரிச் சிற்றிதழ் இல்லாத சிற்றிதழ் சிற்றிதழே அல்ல

தகவல், பின்னணி, வரலாறு

♦ எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் வெளிவரத் தொடங்கியது.

♦ க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு.

♦ சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொடங்கினார் .

♦ ந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .

♦ எழுத்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது.

♦ க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.

 

பெயர்கள், பட்டியல் ( நன்றி பொள்ளாச்சி நசன் – தமிழம் )

பொள்ளாச்சி நசன் என்கிற நடேசன் அவர்களை எப்படிப்பாராட்டினாலும் தகும்.

அவரது தமிழ்ப்பணிகளுக்கு பணிவான வணக்கணக்கள் !

எண்ணற்ற  சிற்றிதழ்களின் மாதிரிகளையும் அலகிட்டு வைத்திருக்கிறார்.

கிழே  குறிப்பிட்ட சிற்றிதழ்களை சொடுக்கி அவற்றின் வடிவத்தைப் பார்க்கலாம்.

(http://www.thamizham.net/)

பழைய சிற்றிதழ்கள்


1903 [ விவேக பாநு ]
1905 [ விவேகசிந்தாமணி ]
1906 [ விவசாய தீபிகை ]
1910 [ ஜனாபிமானி ]
1912 [ தமிழ் ]
1915 [ விவேக போதினி ]
1915 [ சற்குரு ]
1916 [ ஆனந்த போதினி ]
1916 [ வேதாந்த தீபிகை ]
1917 [ கல்ப தரு ]

1918 [ பேராசிரியன் ]
1918 [ ஜனோபகாரி ]
1918 [ வைத்திய கலாநிதி ]
1921 [ செந்தமிழ் ]
1924 [ செந்தமிழ்ச் செல்வி ]
1925 [ ஆரோக்கிய தீபிகை ]
1930 [ ஸ்ரீ சுஜன ரஞ்சனி ]
1931 [ சுதந்திரச் சங்கு ]
1932 [ குலாலமித்திரன் ]
1932 [ கலைமகள் ]

1932 [ ஆனந்த போதினி ]
1932 [ சித்திரக்குள்ளன் – சிறுவர் இதழ் ]
1933 [ பிரமலைச் சீர்திருத்தன் ]
1933 [ ஆரம்ப ஆசிரியன் ]
1933 [ நவசக்தி ]
1933 [ தமிழரசு ]
1934 [ காந்தி ]
1934 [ மணிக்கொடி ]
1934 [ குமார விகடன் ]
1936 [ தமிழ் மணி ]

1937 [ பிரசண்ட விகடன் ]
1938 [ குடியரசு ]
1939 [ சூறாவளி ]
1941 [ ஆற்காடு தூதன் ]
1941 [ தமிழ் மருத்துவப் பொழில் ]
1944 [ நந்தவனம் ]
1944 [ கிராம ஊழியன் ]
1946 [ மங்கை ]
1946 [ பாப்பா – சிறுவர் இதழ் ]
1947 [ சக்தி ]

1947 [ சுதர்மம் ]
1947 [ கலை உலகம் ]
1947 [ வெண்ணிலா ]
1947 [ குமரி மலர் ]
1947 [ தமிழ் ஹரிஜன் ]
1947 [ தாய்நாடு ]
1948 [ டமாரம் – சிறுவர் இதழ் ]
1948 [ கலாமோகினி ]
1948 [ தேனீ ]
1948 [ திராவிட நாடு ]

1948 [ பாரிஜாதம் ]
1948 [ மன்றம் ]
1948 [ தமிழ்த் தென்றல் ]
1948 [ அருணோதயம் ]
1948 [ காதம்பரி ]
1948 [ அமுதசுரபி ]
1949 [ தமிழ்ப்படம் ]
1949 [ நாட்டியம் ]
1949 [ சந்திர ஒளி – சிறுவர் இதழ் ]
1949 [ பாலர் மலர் – சிறுவர் இதழ் ]

1949 [ தம்பீ – சிறுவர் இதழ் ]
1949 [ மான் – சிறுவர் இதழ் ]
1949 [ பாபுஜி – சிறுவர் இதழ் ]
1949 [ மானசீகம் ]
1949 [ முன்னணி ]
1950 [ திருப்புகழமிர்தம் ]
1950 [ குங்குமம் ]
1950 [ தமிழ் முரசு ]
1951 [ ஜிங்லி – சிறுவர் இதழ் ]
1951 [ விடிவெள்ளி ]

1952 [ பாபு – சிறுவர் இதழ் ]
1952 [ திருவள்ளுவர் ]
1952 [ கோமாளி – சிறுவர் இதழ் ]
1952 [ மிட்டாய் – சிறுவர் இதழ் ]
1952 [ சாக்லெட் – சிறுவர் இதழ் ]
1952 [ அமுது ]
1953 [ நாவரசு ]
1953 [ பாலர் கல்வி ]
1953 [ வெண்ணிலா ]
1954 [ திரட்டு ]

1954 [ அல்வா – சிறுவர் இதழ் ]
1954 [ மேழிச் செல்வம் ]
1955 [ சுதந்திரம் ]
1955 [ கலாவல்லி ]
1955 [ தமிழ் முழக்கம் ]
1955 [ தமிழன் குரல் ]
1955 [ விந்தியா ]
1956 [ தினத் தபால் ]
1956 [ சாட்டை]
1956 [ கரும்பு – சிறுவர் இதழ் ]

1956 [ சர்வோதயம் ]
1957 [ தென்றல் ]
1957 [ போர்வாள் ]
1957 [ தென்றல் ]
1958 [ கிராம ராஜ்யம் ]
1958 [ கண்ணன் – சிறுவர் இதழ் ]
1958 [ குயில் ]
1958 [ செந்தமிழ் ]
1959 [ மஞ்சரி ]
1959 [ அருள்மாரி ]

1960 [ வைத்திய சந்திரிகா ]
1960 [ டாக்கி ]
1960 [ தமிழணங்கு ]
1960 [ கண்ணன் – சிறுவர் இதழ் ]
1961 [ செந்தமிழ்ச் செல்வி ]
1961 [ குடும்பக் கலை ]
1961 [ எழுத்து ]
1962 [ சாரணர் ]
1962 [ அறப்போர் ]
1962 [ குமரகுருபரன் ]

1962 [ அமிர்தவசனி ]
1962 [ இயற்கை ]
1962 [ தமிழ்ப் பொழில் ]
1963 [ மதுர மித்திரன் ]
1964 [ குத்தூசி ]
1965 [ பரிதி ]
1965 [ பாரதி ]
1965 [ குத்தூசி ]
1965 [ நாடக முரசு ]
1966 [ கலைப்பொன்னி ]

1966 [ வான்மதி ]
1966 [ சுடர் ]
1966 [ முப்பால் ஒளி ]
1966 [ அகல் ]
1967 [ சிவகாசி முரசு ]
1967 [ ஆராய்ச்சி மணி – சிறுவர் இதழ் ]
1967 [ புதிய தலைமுறை ]
1967 [ பாரதிதாசன் குயில் ]
1967 [ அருள் ]
1967 [ கனிரசம் ]

1967 [ தமிழ்த்தேன் ]
1967 [ மேகலை ]
1967 [ முதல் சித்தன் ]
1968 [ நெப்போலியன் ]
1969 [ மாணாக்கன் ]
1969 [ அறிவு ]
1969 [ நடை ]
1969 [ பூச்செண்டு ]
1969 [ நந்தி ]
1970 [ முருகு ]

1970 [ செவ்வானம் ]
1970 [ பைரன் ]
1970 [ நாடகக்கலை ]
1970 [ எழிலோவியம் ]
1971 [ தமிழகம் ]
1971 [ கைகாட்டி ]
1971 [ பூஞ்சோலை ]
1971 [ மல்லி ]
1971 [ முதன்மொழி ]
1971 [ மலர் மணம் ]

1972 [ தமிழம் ]
1972 [ தியாக பூமி ]
1972 [ அஃக் ]
1972 [ வலம்புரி ]
1972 [ திருவிடம் ]
1972 [ மயில் ]
1972 [ மாலா ]
1972 [ நாரதர் ]
1973 [ ஏன் ]
1973 [ ஜயந்தி ]

1973 [ சிவாஜி ]
1973 [ மதமும் அரசியலும் ]
1973 [ வல்லமை ]
1973 [ விவேகசித்தன் ]
1973 [ வாசகன் ]
1973 [ முல்லைச்சரம் ]
1973 [ உதயம் ]
1974 [ முயல் ]
1975 [ தமிழோசை ]
1975 [ கசடதபற ]

1975 [ தமிழ் உறவு ]
1975 [ ஏடு (மும்பாய்) ]
1975 [ புதிய வானம் ]
1975 [ இளவேனில் ]
1975 [ தமிழ்க்குரல் ]
1975 [ உரிமை வேட்கை ]
1976 [ பாலம் ]
1976 [ நயனதாரா ]
1977 [ கஙய ]
1977 [ அஞ்சுகம் ]

1977 [ மர்மம் ]
1977 [ மேம்பாலம் ]
1978 [ ழ ]
1978 [ புத்தகவிமர்சனம்]
1978 [ அணில் மாமா – சிறுவர் இதழ் ]
1978 [ அறைகூவல் ]
1978 [ இளைஞர் முழக்கம் ]
1978 [ இசையருவி ]
1978 [ சுவடு ]
1978 [ மூலிகை மணி ]

1978 [ தர்சனம் ]
1978 [ மகாநதி ]
1979 [ குமரி ]
1979 [ பரிதி ]
1979 [ பிரபஞ்சம் ]
1979 [ சுதந்திரப் பறவைகள் ]
1979 [ சிகரம் ]
1979 [ இளங்கோ ]
1979 [ தண்டனை ]
1979 [இலக்கிய வெளி வட்டம் ]

1980 [ விழிப்பு ]
1980 [ 1/4 (கால்) ]
1980 [ தமிழியக்கம் ]
1980 [ ஸ்வரம் ]
1980 [ கோவை குயில் ]
1980 [ நிர்மாணம் ]
1980 [ இளம் விஞ்ஞானி ]
1980 [ இங்கும் அங்கும் ]
1980 [ உழைக்கும் வர்க்கம் ]
1981 [ படிமம் ]

1981 [ தமிழன் குரல் ]
1981 [ கருவேப்பிலை ]
1981 [ சுட்டி ]
1981 [ முனைவன் ]
1982 [ பார்வைகள் ]
1982 [ பாட்டாளி தோழன் ]
1982 [ இளைய கரங்கள் ]
1982 [ கவியுகம் ]
1982 [ கவிப்புனல் ]

1982 [ மாலை நினைவுகள் ]
1982 [ உதயக்கதிர் ]
1982 [ மயன் ]
1983 [ ஆக்கம் ]
1983 [ ப்ருந்தாவனம் ]
1983 [ சுகந்தம் ]
1983 [ அறிவுச் சுடர் ]
1983 [ நூதன விடியல் ]
1983 [ கலாச்சாரம் ]
1983 [ சத்யகங்கை ]

1983 [ மக்கள் பாதை மலர்கிறது ]
1983 [ வண்ணமயில் ]
1984 [ ராகம் ]
1984 [ தமிழின ஓசை ]
1984 [ குறிக்கோள் ]
1984 [ ஏணி ]
1984 [ தென்புலம் ]
1984 [ நம்நாடு ]
1984 [ உயிர் மெய் ]
1984 [ அன்னம் விடுதூது ]

1985 [ விடுதலைப் பறவை ]
1985 [ அறிவியக்கம் ]
1985 [ த்வனி ]
1985 [ திருநீலகண்டன் ]
1985 [ உயிர் ]
1985 [இயற்றமிழ் ]
1985 [ எழுச்சி ]
1985 [ உங்கள் நூலகம் ]
1985 [ சிந்தனை ]
1986 [ பூபாளம் ]

1986 [ மனசு ]
1986 [ தளம் ]
1986 [ தென்புலம் ]
1986 [ மாணவர் ஒற்றுமை ]
1986 [ மக்கள் குறளமுதம் ]
1986 [ ஞானரதம் ]
1986 [ லயம் ]
1986 [ யாத்ரா ]
1986 [ இன்று ]
1986 [இலட்சியப்பெண் ]

1986 [ஏழையின் குமுறல் ]
1986 [ உழவன் உரிமை ]
1986 [ உதயம் ]
1987 [ ஓடை ]
1987 [ திராவிட சமயம் ]
1987 [ தமிழ் நிலம் ]
1987 [ நாத்திகம் ]
1987 [ நாய்வால் ]
1987 [இசைத் தென்றல் ]
1987 [ஏர் உழவன் ]

1987 [ ஏப்ரல் ]
1987 [ உணர்வு ]
1988 [ அஸ்வமேதா ]
1988 [ ஆக்கம் ]
1989 [ திசை நான்கு ]
1989 [ முன்றில் ]
1990 [ தமிழன் ]
1990 [ இளைய அக்னி ]
1990 [ மெய்த்தமிழ் ]
1990 [ நிறப்பிரிகை ]

1992 [ ங் ]
1992 [ நீலக்குயில் ]
1993 [ தலைநகரில் தமிழர் ]
1993 [ எரிமலை ]
1994 [ அன்றில் ]
1995 [ எழுச்சி ]


தொடர்புக்கு : pollachinasan@gmail.com – 890 300 2071,

 

  • பாடலாசிரியர் யுகபாரதி ‘படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கினார்.
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் ஆரம்பம்.
  • பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டு வந்தார்  குட்டிரேவதி 
  1. கசடதபற
  2. கணையாழி
  3. மனிதன்
  4. சுபமங்களா
  5. சரஸ்வதி
  6. மணிக்கொடி
  7. சக்தி
  8. இலக்கியவட்டம்
  9. சூறாவளி
  10. சதங்கை
  11. வண்ணமயில்
  12. படிகள்
  13. வைகை
  14. பிரக்ஞை
  15. புதியதலைமுறை
  16. நிகழ்
  17. அ·
  18. ‘ழ’
  19. காலச்சுவடு
  20. தீராநதி
  21. உயிர்மை

முயற்சி.. — நித்யா சங்கர்

Image result for முயற்சி

டெலி·போன் சத்தம் போட்டு என்னைக் கூப்பிட்டது.

ரிஸீவரை காதுக்கு கொடுத்தவன் அதிர்ந்து நின்றேன்.

‘ஸார்.. உங்கள் மனைவிக்கு ஒரு சின்ன ஆக்ஸிடன்டாகி, அவளை எஸ்.பி. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம்..’
என்றது ஒரு குரல் மறுமுனையில்.

‘ஓ.. மை காட்… ‘ என்று, என்னுடன் பேசிக் கொண்டி-ருந்த என் நண்பன் ரகுவையும் இழுத்துக் கொண்டு, வீட்டைப்
பூட்டிக் கொண்டு காருக்கு ஓடினேன்.

‘என்னடா… என்ன ஆச்சு…? ஏன் இப்படி பதட்டப்படறே… ‘ என்று என்னுடன் நண்பன் ரகுவும் ஓடி வந்தான்.

‘டேய் மைதிலிக்கு ஏதோ ஆக்ஸிடென்டாம்.. ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருக்காங்களாம்… வா வா….’ என்று
கார் கதவைத் திறந்து டிரைவர் ஸீட்டில் உட்கார்ந்தேன். நண்பன் ரகுவும் ஏறிக் கொண்டான்.

‘கடவுளே… அவளைக் காப்பாற்று… இன்னும் ஐந்து நிமிஷத்துலே என்னை அங்கே கொண்டு சேர்த்திடு.. அவளுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது… முருகா.. முருகா…’ என்று கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

ஐந்து நிமிடங்கள் போயிருக்கும்.. கண்களைத் திறந்து பார்த்தவன் என் வீட்டிற்குப் பக்கத்திலேயே நான் இருப்-
பதைப் பார்த்தேன்.

‘சே.. முருகா.. உன்கிட்டே மனமுருகி வேண்டிக்கொண்டேனே இன்னும் ஐந்து நிமிஷத்தில் நான் ஆஸ்பத்திரியில் இருக்கணும்னு. இப்பவும் இங்கேயே இருக்கேனே.. இப்படி பண்ணிட்டியே…’ என்று அதட்டலாய்க் கேட்டேன் முருகனிடம், சிறிது கோபமும் கொப்பளிக்க…

காரில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் நண்பன்  ரகு மெதுவாகச் சிரித்தபடியே, ‘ டேய் உனக்கு ஒண்ணு
தெரியுமா… காரில் டிரைவர் ஸீட்டில் உட்கார்ந்து ஐந்து நிமிடத்தில் சேர்ந்துடணும் சேர்ந்துடணும்னு கடவுள்கிட்டே
வேண்டிக்கிட்டாப் போறாது… காரை ஸ்டார்ட் பண்ணி, ஆஸ்பத்திரியை நோக்கி ஓட்டணும்.. அப்பத்தான் நம்ம
இலக்கை அடைய முடியும். பக்தியுடன் நாம வேண்டிக்கிட்ட ப்ரார்த்தனையை கடவுள் நிறைவேற்றிக் கொடுக்க
நம்ம முயற்சியும் சிறிது வேணும். நீ காரை ஸ்டார்ட் செய்து கவனமா, நிதானமா ஓட்டும்போது வழியில் வாகன
நெரிசல்கள் ஒன்றும் இல்லாமல் கடவுள் கவனித்துக் கொள்ளலாம்.. அவ்வளவுதான்… நீ காரையே ஸ்டார்ட் செய்யாம
உட்கார்ந்திருந்து கடவுள் மேல் குற்றம் சொன்னா எப்படி..?’ என்றான்.

அசடு வழிய காரை ஸ்டார்ட் செய்தேன்.

 

சங்கக் கவிதை போட்டி – குமுதம்

1. கதைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் இருபத்தி ஐந்து   சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து ஒரு பாடலின்   செய்தியை மையக்

கருத்தாகக் கொண்டு சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளாக இருக்க வேண்டும். சங்கப்பாடல்களை http://www.konrai.org/kumudam  என்ற இணையதளத்தில்  அறிந்து கொள்ளலாம்.

2. சிறுகதையோடு அது எந்தச் சங்க இலக்கியப் பாடலை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டும். பாடலின் எண்ணைக் குறிப்பிடவும்.

3. சங்க இலக்கியப்பாடலின் விளக்கவுரையாக இருக்கக் கூடாது. புனையப்பட்ட சிறுகதையாக இருக்க வேண்டும்

4. ஒருவர் எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

5. கதைகளுடன்  ‘ கதைகள் எனது சொந்தக் கற்பனையில் உருவான புனைவுகளே.அவை தழுவலோ, மொழி பெயர்ப்போ பிறிதொன்றின் நகலோ அல்ல’ என்ற உறுதிமொழி இணைக்கப்பட வேண்டும். கதைகள் பிறரது எழுத்தை நகலெடுத்தோ, களவாடியோ, தழுவியோ எழுதப்பட்டிருந்தால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

6. கதைகள் யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும் . கதைகள் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல்  முகவரி kumudamkonrai@gmail.com

7. சிறுகதை ஆசிரியரின் பெயர், முகவரி ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். அயல் நாட்டிலிருந்து பங்கேற்போர் தங்கள் முகவரியை ஆங்கிலத்தில் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

8. பங்கேற்கும் படைப்பாளிகள் அவர்கள் அனுப்பும் படைப்பின் நகல் ஒன்றை தங்கள் வசம் வைத்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.

9. கதைகள் 1000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்

10. தேவை ஏற்படின் பிரசுரமாகும் கதைகளைத் திருத்தவோ, சுருக்கவோ குமுதம் ஆசிரியர் குழுவிற்கு உரிமை உண்டு

11. எல்லா விஷயங்களிலும் குமுதம் ஆசிரியரின் முடிவே இறுதியானது.

12. கதைகள் வந்து சேர வேண்டிய கடைசித்தேதி:  மார்ச் 31, 2020.

13. கதைகளைத் தபால் மூலமும் அனுப்பலாம். குமுதம்-கொன்றை, சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி, தபால் பெட்டி எண்  – 2592, சென்னை – 31  என்ற முகவரிக்கு அனுப்பலாம்.   இயன்ற வரை மின்னஞ்சலில் அனுப்பினால் உதவியாக இருக்கும்.

கவிதை உதாரணத்துக்கு ஒன்று : 

குறுந்தொகை 8, ஆலங்குடி வங்கனார்

 

கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்,
எம் இல் பெருமொழி கூறித், தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல, 5
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.

 

பாடல் பின்னணி:  தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத் தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது. 

 

பொருளுரை:  வயலில் உள்ள மரத்திலிருந்து விளைந்து விழும் இனிய பழத்தை  குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும் நாட்டவன், என்னுடைய வீட்டில் என்னைப் பெருமைப்படுத்தும் சொற்களைக் கூறுவான்.  ஆனால் தன்னுடைய வீட்டில், முன் நின்றார் தம் கையையும் காலையும் தூக்கத் தூக்க, தானும் கையையும் காலையும் தூக்குகின்ற, கண்ணாடியில் தோன்றுகின்ற நிழல் பாவையைப் போல், தன்னுடைய மனைவிக்கு, அவள் விரும்பியவற்றைச் செய்வான்.

 

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம் ஊரன் என்றது, தலைவியர்க்குரிய தலைவரைக் கிடைத்தபோது துய்ப்பது பரத்தையர் இயல்பென்று குறித்தாளாம். தம் இல் (3) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – தம் இல் என்பதில் ‘தம்’ சாரியை, உ. வே. சாமிநாதையர் உரை – தம்முடைய வீட்டில், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தம்முடைய வீட்டில்.  உள்ளுறை – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – கழனிக் கரையிலிருந்து தானே உதிர்ந்த பழத்தை வயலிடத்து வாளை கௌவினாற் போல இவ்வூரில் உள்ள எல்லா இன்பங்களையும் தாமே கிடைப்ப முயற்சியின்றி எய்துகின்றான் என்று உள்ளத்தான் உவமங் கொள்ளவைத்தவாறு காண்க.  கதூஉம் – இன்னிசை அளபெடை, மாஅத்து – அத்து சாரியை, தாய்க்கே – ஏகாரம் அசை நிலை.

 

சொற்பொருள்:  கழனி – வயல், மாஅத்து – மாமரத்தினது (அத்து சாரியை), விளைந்து உகு – பழுத்து விழும், தீம்பழம் – இனிய பழம், பழன – குளம், வாளை – வாளை மீன், கதூஉம் – கவ்வி உண்ணும், ஊரன் – ஊரைச் சார்ந்தவன், எம் இல் – என்னுடைய இல்லத்தில், பெருமொழி கூறி – பெரிய சொற்களைக் கூறி, தம் இல் – தன்னுடைய இல்லத்தில், கையும் காலும் தூக்கத் தூக்கும் – பிறர் தூங்கும்பொழுது தானும் கையையும் காலையும்  தூக்கும், ஆடிப் பாவை போல – கண்ணாடியில் தோன்றுகின்ற நிழல் உருவத்தைப் போல, கண்ணாடியில் தோன்றுகின்ற பொம்மையைப்போல், மேவன செய்யும் – விரும்புவதைச் செய்வான், தன் புதல்வன் தாய்க்கு – தன்னுடைய மனைவிக்கு

குவிகம் பொக்கிஷம் – சொர்க்கத்துக்கு ஏழு படிகள் -எஸ். கே. ஆச்சார்யா

ஒரியாக்கதை ( சிறந்த 13 இந்தியக் கதைகள்)  மொழிபெயர்ப்பு : வல்லிக்கண்ணன் 

 

Image result for an indian getting trained to on a rocket mission

ஒரு நாள் நான் செய்திப்பத்திரிகையை புரட்டிய போது, பின்வரும் வார்த்தைகள் என்னை கவர்ந்தன.

“ஹலோ, இளைஞர்களே! நீங்கள் விண்வெளி வீரர்கள் ஆக ஆசைப்படுகிறீர்களா?”

நான் உணர்ச்சியோடு துள்ளிக் குதிப்பதற்கு இருந்தேன்; என் கண்கள் அச்சு எழுத்துக்களில் தயங்கின. உண்மையில் அது ஒரு விளம்பரம் தான்!

நான் தொடர்ந்து படித்தேன்:

“ஸாமந்தா சந்திரசேகர் விண்வெளி ஆய்வு நிலையம், பம்பாய்-1, விண்வெளி வீரர்களை நாடுகிறது! விண்வெளிப்பயணிகள் ஆக விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்….

“ஸாமந்தா சந்திரசேகர்? இந்தியாவின் பெரிய வானசாஸ்திரி! ஒரு மூங்கில் குழாயின் துணையோடு வானமண்டலத்தை ஆராய்ந்து, நவீன விஞ்ஞானி மிகச் சக்தி வாய்ந்த துாரதரிசினி மூலம் காண்பது போல், நட்சத்திரங்கள் பற்றிய அனைத்தையும் சரியாக முன்கூட்டியே சொன்ன விஞ்ஞானி அல்லவா அவர்?”

நான் பலமாகத் தலையை ஆட்டினேன். பேனாவும் தாளும் தேடினேன்.

அன்று காலையில், கல்லூரி வளாகத்தில் நின்ற ஒரு பெரிய மாமரத்தில் அறையப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள், பம்பாய் விலாச மெழுதிய ஒரு கடிதத்தை நான் போட்டேன்.

அச்சமயம் நான் ஒரு கல்லூரி மாணவன். அதைவிட முக்கியம், வட்டார பறக்கும் சங்கத்தில் நான் ஒரு உறுப்பினன், சிறு விமானத்தை ஒட்டுவதற்கான லைசென்ஸ் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. பழக்கமான நீலவானம் இப்போதெல்லாம் என்னை வசீகரிக்கவில்லை. விண் வெளியில் பறக்க நான் ஆசைப்பட்டேன். ஆனால், அந்தோ, விமானம் ஒரு ராக்கெட் இல்லையே. பூமியின் வானமண்டலத்தைக் கடந்து, விண் வெளி என அழைக்கப்படும் இனம்புரியா இருட்டினுள் புகுவதற்கு ஒருவனுக்கு ராக்கெட் தேவை.

நான் ராக்கெட்டுகள் பற்றிக் கனவு கண்ட சமயத்தில் தான் என் பார்வையில் பத்திரிகை விளம்பரம் பட்டது.

எனக்கு அழைப்பு வந்ததும் நான் பம்பாய் போனேன்.

அவ்வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் வரிசையை கண்டதும் என் உற்சாகம் குன்றியது. நாட்டின் நாலு மூலைகளிலிருந்தும் அவர்கள் வந்திருந்தனர். நான் அவர்களுடன் கைகுலுக்கியபோது என் உள்ளம் படுத்துவிட்டது. அவர்கள் அனைவரும் சரியான ராட்சதர்களாகத் தோன்றினார்கள்-உடலைப் பேணியவர்கள், மல்யுத்த வீரர்கள், பளு தூக்கும் பயில்வான்கள்! ஒப்பு நோக்கினால் நான் சரியான நோஞ்சான்.

ராட்சதர்கள் என் கையைக் குலுக்கி, என்னை மேலும் கீழும் பார்த்து, கேலியாகச் சிரித்தார்கள். நான் நெட்டையன் இல்லை, எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் வெறுப்பு என்னை நெஞ்சு நிமிர வைத்தது.

எனது தகுதிகளை நான் என் மனசில் கணக்கிட்டேன். நான் நல்ல விளையாட்டு வீரன். ஆண்டு தோறும் கல்லூரியில் நான் பரிசுகள் பெற்றிருந்தேன். ஆனால், அது பொருத்தமில்லாத விஷயமாகலாம். நான் வேறொரு தகுதியும் பெற்றிருந்தேன். பல வருடங்களுக்கு முன் ஒரு ஆசிரியரிடம் நான் பிராணாயாமம் மற்றும் ஆசனங்களில் கடுமையான பயிற்சி பெற்றிருந்தேன். மூச்சுவிடுவதையும் உட்காருவதையும் கட்டுப்படுத்தும் இப்பயிற்சிகள் பண்டைய ரிஷிகளிடமிருந்து வந்தவை. இந்தப் பயிற்சி எனக்கு நம்பிக்கை தந்தது. ராட்சதர்களோ, ராட்சதர்கள் இல்லையோ அவர்களிடையே என்னால் தாக்குப் பிடிக்க முடியும்.

டாங்! எங்கோ மணி அடித்தது. டாக்டர் போல் உடை தரித்த ஒருவர் திடீரென வந்தார். எங்களை சோதனைப் பிராணிகளைப் போல் ஒரு ஆய்வுக் கூடத்தினுள் இட்டுச் சென்றார்.

கையை நீட்டி, அவர் சொன்னார்: “இந்த பெட்டிகளைப் பாருங்கள்” – சொர்க்கத்துக்கு இட்டுச் செல்லும் ஏழு படிகள். இவற்றில் நீங்கள் ஏறமுடிந்தால், நீங்கள் சொர்க்கத்தின் கதவை, ஏன் அதற்கு அப்பாலும் கூட, தட்ட இயலும். ஆரம்பப்பயிற்சியில் வெற்றி பெறும் நபர் விண்வெளியில் பறப்பதற்குத் தேர்வு செய்யப்படுவார். இப்போ பாருங்கள்.”

டாக்டரின் செயல் விளக்கத்தைப் பின்பற்றுவதற்கு முன்னரே, நான் இனம்புரியாப் பகுதிக்குள் தள்ளப்பட்டேன்.

ஒரு கதவு அடைபட்டது. சட்டென்று ஒரு சிவப்பு விளக்கு அணைக்கப்பட்டது. நான் விழுவதை உணர்ந்தேன். ஒரு பூதத்தின் வயிற்றுக்குள் நேராக விழுந்தேன்! எங்கும் கும்மிருட்டு ஆழ்ந்த மெளனம்! என் முதுகந்தண்டில் ஒரு நடுக்கம் கண்டது. பூதத்தின் திடீர்த் தொடுதல் என்னை அச்சுறுத்தியது. நான் கிட்டத்தட்ட மயங்கிவிட்டேன். ஆனால் எனக்கு சிறு பிராயக் கதை ஒன்று நினைவு வந்தது. இருட்டினுள் நோக்கியபடி எனக்கு நானே முணுமுணுத்தேன், “நினைவு கொள்! நீ தான் துருவன், புராதன இந்தியாவின் குழந்தை ரிஷி”.

இதன் பின் சற்றே தெம்படைந்தவனாய் சுற்றிலும் தடவினேன். ஒரு நாற்காலியை உணர்ந்தேன். அதில் அமர்ந்தேன். என் மூச்சைக் கட்டுப்படுத்தி, தியானம் பண்ணலானேன். என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது. பெட்டியில் நிறையக் கம்பிகள் தொங்கின. வெளியே நின்று கவனிக்கும் டாக்டருக்கு அவை என் இயக்கங்களைக் காட்டிக் கொடுக்கும் என நான் அறிவேன். உளவு அறியும் எலெக்ட்ரானிக் கம்பிகள், நான் ஒரு கோழை-விண்வெளி என அழைக்கப்படும் மர்ம இருட்பகுதியின் கருமையையும் மெளனத்தையும் கண்டு நான் அஞ்சு கிறேன் என்று புலப்படுத்துவதை நான் விரும்பவில்லை. இல்லை. நீ துருவன் மட்டுமில்லை. விண்வெளியாளன் ஆவதற்கான முதல் சோதனையில் முனைந்துள்ள நவமனிதனும் ஆவாய்!” என்று எனக்குள் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டேன்.

முடிவற்ற நீண்ட இரவில் நான் இரண்டு முறை தான் என் ஆசனத்தை விட்டு நகர்ந்தேன். ஒருமுறை நான் பசியை உணர்ந்தபோது பெட்டியில் பார்த்தேன். பால் என்ற சீட்டு ஒட்டிய ஒரு புட்டியை கண்டேன். பிரெய்ல் எழுத்துக்களைப் படிக்கும் ஒரு குருடன் போல, நான் படித்த எழுத்துக்களின் செய்தியைத் தெளிவாக அறிந்தேன். எனக்காக உணவு இருந்தது. நான் பாலைக் குடித்தேன்.

இரண்டாம் முறை சிறுநீர் கழிக்க எழுந்தேன். அதற்காக இருந்த ஒரு சட்டியைக் கண்டேன்.

பூதப்பெட்டி எப்போது திறந்தது, டாக்டர் எப்ப வந்தார் என்பது சரியாக எனக்குத் தெரியாது. வெளிப்புற வெளிச்சமும் ஒசைகளும் திடீரென நான் மீண்டும் தரை மீது இருப்பதை உணர்த்தின. நான் ஆனந்தத்தால் கூவினேன். நான் நிச்சயமாக பூமிக்கு அப்பால் ஆயிரம் வருடங்கள் இருந்திருக்கிறேன்!”

ஆனால் டாக்டர் அழுத்தமாய்ச் சொன்னார்: “நாற்பத்தெட்டு மணி நேரம் தான் இருந்தாலும், நல்ல ஆரம்பம்.”

மறுமுறை, டாக்டர் என்னை பூதத்திடம் தள்ளியது மட்டுமின்றி என்னோடு சாத்தானையும் சேர்த்தார். 2-ம் நம்பர் பெட்டியில் சாத்தான் நீண்ட கையுடன் இருந்தான். டாக்டர் அதில் என்னைக் கட்டினார். பிசாசின் சக்கரத்தில் படுக்கை போல் அமைந்த சட்டத்தில் நான் விழுந்தேன். சக்கரம், மூச்சுமுட்டும் வேகத்தில், வட்டமிட்டுச் சுழன்றது. ஒருவனை இடுப்பில் நீண்ட கயிற்றை கட்டி அவன் கெஞ்சி அழுகிற வரை, ஆகாயத்தில் சுழற்றுவது போல் அது இருந்தது!

எனினும், சாத்தான் அப்படி என்னைச் சுற்றுவதற்கு முன், டாக்டர் எனக்கு ஒரு யுக்தி கூறினார்.

அவர் சொன்னார்: “பார், இதோ ஒரு ஸ்விச் அதை அமுக்கினால், தானாக விளக்கு அணைந்து மறுபடியும் எரியும். சாத்தான் கையில் பத்திரமாக இருப்பதை நீ உணரும் வரை, சுழற்சியைத் தாங்க முடிந்த வரை, ஸ்விச்சை அமுக்கிக் கொண்டே இரு நீ அதிக வேகத்தை, அதிக வேடிக்கையை விரும்புகிறாய் என்று அது எங்களுக்கு அறிவிக்கும். விளக்கு அணையாவிட்டால் நீ தோற்றுவிட்டாய் என அறிவோம். அவ்வளவுதான்!”

டாக்டரின் வார்த்தை ஒடுங்கியது. எங்கோ ஒரு மிஷின் இரைந்தது. திடீரென ஏதோ ஒன்று என் இதயம் நோக்கித் தாவுவதை உணர்ந்தேன். அது சாத்தானாகவே தான் இருக்கும் அடுத்து, என் நெஞ்சு இறுக்கப் படுவதை உணர்ந்தேன். ரத்தம் என் தலைக்குப் பாய்ந்தது. ரத்தம் உருகிய ஈயம் போல்-கனமாய், சூடாய்-மாறிவிட்டதாகத் தோன்றியது! பிறகு, நிஜமாகவே ஒரு யானை என் மார்பு மேல் உட்கார்ந்திருப்பதாக எண்ணினேன்.

மிக வதைக்கிற வேதனையையும் சித்திரவதையையும் நான் தாங்கிக் கொண்டேன். ஆனாலும் என் கையிலிருந்த ஸ்விச்சை அழுத்தியவாறு இருந்தேன். காலம், இடம் பற்றிய பிரக்ஞையே எனக்கு இல்லை.

முடிவாக, சாத்தானின் சக்கரம் நின்றது. டாக்டர் எட்டிப் பார்த்தார்.

“ஹலோ, இன்னும் நீ இருக்கிறாயா?” என்று அவர் கேட்டார்.

“மணிக்கு எழுபதாயிரம் மைல் வேகத்தில் நீ போனாய்…. நேர் கோட்டிலே தான்!” என்றும் சொன்னார்.

டாக்டர் என்னை அடுத்த கட்டத்துக்கு-மூன்றாவது பெட்டிக்குஇட்டுச் சென்ற போது, நான் எனக்கு பிராணாயாமம் கற்பித்த என் குருவை எண்ணினேன்.

Image result for an indian getting trained to on a rocket mission

அந்தப் பெட்டிக்கு அரக்கு வீடு எனப்பெயர். அப்பெயரைக் கேட்டு நான் திடுக்கிட்டேன். அங்கே எனக்கு என்ன நேரும் என நான் அறிவேன். புராணக் கதையில், பஞ்ச பாண்டவர்களை ஒருசமயம் அவர்களின் எதிரிகளான கெளரவர்கள் அரக்கு மாளிகையில் வைத்து, அதைத் தீ யிட்டுக் கொளுத்தினார்கள். என்னை டாக்டர் பெட்டிக்குள் தள்ளி, கதவை அடைத்ததும், எனக்கும் அதேபோன்ற விதி காத்திருப்பதாகக் கருதினேன்.

என் பயம் சரிதான் எனத் தெரிந்தது. பெட்டி வரவரச் சூடேறியது. ஆனால் நான் அமைதியாக இருக்க வேண்டும்-பரபரப்புக் கூடாது!

உஷ்ண அலைகள் கடுமையாக என் முகத்தைத் தாக்கின. வேர்வை என் உடலில் பெருக்கெடுத்தது. நான் மழையில் நனைந்தது போலானேன். நான் கூடியவரை அமைதியாக இருந்தேன். நான் ஒரு விண்வெளியாளன்: என் விண்வெளிக்கப்பல் நெடுந்துாரம் பறந்து விட்டுத் திரும்புகிறது என்று கற்பனை செய்தேன். பூமியின் வாயு மண்டலத்தில் அது மிண்டும் பிரவேசிக்கிறது; அதன் முகம் காற்றை இடித்து உரசுகிறது. அந்த உராய் வின் வேகத்தில் அதில் தீப்பிடித்துள்ளது. திடீரென தீ நாக்குகள் என் முகத்தில் படிவதை உணர்ந்தேன்!

இறுதியாக டாக்டரின் குரல் கேட்டது:

“108 உஷ்ணம் தான் அதிகம் இல்லை! அடுத்த சோதனைக்குத் தயாராகு!”

நாத கிரகம்-ஒலி வீடு-என்ற அடுத்த பெட்டிக்குள் அவர் என்னைத் தள்ளினார்.

அப்படிப்பட்ட வெறித்தன ஒலிகளை-கூச்சல்கள், விம்மல்கள், படார் ஒசைகளை-ஒரே சமயத்தில் அதுவரை நான் கேட்டதேயில்லை ஆயிரம் ரயில் என்ஜின்கள் வேகமாக ஒடுவது போல், அவற்றின் விசில்கள் நீண்டு கத்துவது போல்-ஒசையிட்டன. பிசாசுகளின் சங்கீதம்!

அன்பான டாக்டர் என்னை உள்ளே விடும் முன் என் காதுகளில் அடைப்புகள் செருகினார். ஆனாலும் கூட, ஒசைகள் இரக்கமின்றி என்னைத் தாக்கின. நான் நடுங்கினேன். என் தலைமயிர், எலெக்ட்ரிக் ஹீட்டரின் கம்பிகள் போல், மிகச் சூடேறுவதை உணர்ந்தேன். ஒசையின் அளவு அதிகரித்தவாறு இருந்தது. உந்து களத்திலிருந்து மேலே அனுப் பப்பட்ட ஒரு ராக்கெட்டில் நான் இருப்பதாக நினைத்தேன்.

டாக்டர் என் பெட்டியில் புகுந்ததை நான் பார்க்கவில்லை. “அடுத்த கட்டத்துக்கு நீ தயாரா?” என்று அவர் கேட்டார்.

சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdfநான் மெதுவாய் எழுந்தேன் தீ நடுவே தியானம் பண்ணும் ஒரு ரிஷி மாதிரி நான் என் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

எனது அடுத்த இரு சோதனைகள், மேலும் விசித்திரமான இரண்டு பெட்டிகளில் நிகழ்ந்தன. ஐந்தாவது பெட்டியை நடனப் பெட்டி என டாக்டர் கூறினார். அதனுள் நுழைந்ததுமே, நான் கீழே தள்ளுண்டேன். நான் சரியாக எழுந்து நிற்பதற்கு முன் மறுபடியும் தள்ளப்பட்டேன். பிறகு பெட்டி சுற்றிச் சுழலத் தொடங்கியது; அவ்வப்போது கரணம் அடித்தது! பெட்டி நடனமிடுகையில், என் உடலும் அதனோடு நாட்டியம் ஆடியது. இறுதியில், அது நின்றது. இருப்பினும், நான் என் கால்களைப் பலமாக ஊன்றி நின்றேன். என் தலை சுற்றவில்லை. நான் தெளிந்த மதியுடனேயே இருந்தேன். எப்பவும் ஒரு விண்வெளியாளன் போல் நான் தலை நிமிர்த்தே இருக்கவேண்டும் இல்லையெனில், நான் ஒரு விண்வெளிக் கப்பலை ஒட்டிச் செல்கையில், திசைத்தடுமாற்றம் ஏற்பட்டால், அந்தக் கப்பலை நான் தவறான பாதையில் திருப்பி விடக்கூடும்.

அடுத்த பெட்டி இன்னும் விசித்திரமானது. அதில் நுழைந்ததும், அது என் உடல் கனம் முழுவதையும் உறிஞ்சிவிட்டது. அதனால் தான் அதை கனமின்மைப் பெட்டி என டாக்டர் குறிப்பிட்டார்!

அது மிக விந்தையான அனுபவம். ஒரு கணம் சென்றதும், எனக்கு சீக்கு ஏற்படும் உணர்வு. எனினும், விண்வெளிக்கப்பலில் இருந்ததாக நான் கற்பனை செய்தேன். விண்வெளியில், மனிதன் எடையில்லா ஒரு உலகில் வாழ வேண்டும். அங்கே, அவன் உடல் கனம் இல்லாது இருக்கும்!

பெட்டி திறந்தது. நான் பிராணாயாம நிலையில் இருந்ததை டாக்டர் கண்டார்.

கடைசிப் பெட்டி, சொர்க்கத்துக்கு ஏழாவது படி, மட்டுமே எஞ்சி யிருந்தது. மிகக் கடினமானது. ஆனால், உண்மையிலேயே விண் வெளியில் இருப்பது போன்றது.

டாக்டர் என்னை விண்வெளி உடையும் முகமூடியும் அணியச் செய்தார். நான் விசித்திரமாக, விண்வெளியாளர் படங்களில் காட்சி அளிப்பது போல், தோன்றியிருக்க வேண்டும்.

டாக்டர் என்னை பிராணவாயுக் கூடாரத்தில் இட்டு, “ஆழ்ந்து சுவாசி. உனக்கு பிராணவாயு நிறைய தேவைப்படும்!” என்றார்.

பிறகு, ஒரு பையை என் முதுகின் மேல் போட்டார். சில குழாய் களையும் திருகாணிகளையும் நோண்டினார். இப்ப உள்ளே போ. காற்றில்லா விண்வெளியில் நீ எவ்வளவு உயரம் போகமுடியும் என்று பார்ப்போம்!” என்றார்.

அந்தப் பயங்கரப் பெட்டியுள் நான் போனேன். அங்கே நான் சுவாசிக்க துளிப் பிராணவாயுகூடக் கிடையாது என நான் அறிவேன்.

மறுகணம், இரைச்சல் கேட்டது. ஒரு குழாய் என் பெட்டியிலிருந்த காற்றை மெதுமெதுவாய் உறிஞ்சி எடுத்தது. என் விண்வெளி உடை உப்பத் தொடங்கியது. எனக்கு மூச்சு முட்டியது. உண்மையில், உப்பிய விண்வெளி உடை என் உடம்பைப் பாதுகாத்தது!

இந்நேரத்தில், நான் என் முகமூடி வழியே இரண்டு விஷயங்களைக் கவனித்தேன். கடியாரம் போன்ற ஒரு தகடை நான் பார்த்தேன். அதில் ஒரு முள் சில எண்களைச் சுட்டியது. நான் கவனிக்கையில் அந்த முள் நகர்ந்தது-ஏதோ பத்தாயிரத்திலிருந்து இருபது ஆயிரத்துக்கு திடீரென்று அது முப்பதுக்குத் தாவியது, மேலும் உயர்ந்தது. 

அந்த முள் மணி காட்டவில்லை; உயரத்தைக் காட்டியது.

பிறகு என் கண்கள், முகமூடிக்குப் பின்னிருந்து, என் இருக்கையின் அருகே இருந்த ஒரு விந்தைப் பொருளைக் கண்டன. அது நீர் நிறைந்த ஒரு தம்ளர் போல் அபாயம் இல்லாது தோன்றியது. கடியாரமுள் வட்டத்தில் மெதுவாக மேலே நகர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று, எனக்கு வியப்பு எழ, தம்ளரிலிருந்த தண்ணிர் கொதிக்கத் தொடங்கியது. பின் அது ஆவியாக மாறி, நீராவிப் படலமாகியது.

நான் கடியாரத்தைக் கவனித்தேன். முள் அறுபது ஆயிரத்தைக் கடந்து செல்ல இருந்தது.

நான் நிஜமாக கடல் மட்டத்துக்கு மேல் அறுபது ஆயிரம் அடி உயரத்தில் இருந்தேனா?

ஆனால் என் பெட்டி தரைக்கு மேலே ஒரு அடி உயரத்தில் கூட இல்லை. அது காற்றை உறிஞ்சிய குழாயின் வேலை தான். இத்தனை நேரமும் அது என் காதுக்குள் இரைந்து கொண்டேயிருந்தது. என்னைச் சுற்றியிருந்த சூன்யத்தின் அளவை எனது விண்வெளி உடை காட்டியது. அவ் வெறுமை நிலையில் நீர் ஆவியாக மாறியதில் வியப்பில்லை. வாயு அரிதாகிவிட்ட அச்சூழ்நிலையில் நீர் தனது திரவத்தன்மையைக் கொண்டிருக்க இயலாது தான்.

முள் எழுபத்தைந்துக்கு நகர்ந்தது. அதாவது நான் கடல்மட்டத்துக்கு மேலே எழுபத்தையாயிரம் அடி உயரத்தில் இருந்ததாக அர்த்தம் அந்த நினைப்பே என் தலையைச் சுழலவைத்தது.

திடீரென எனக்கு ஒரு குறும்பான எண்ணம் எழுந்தது. கொஞ்சம் வேடிக்கை பண்ண நினைத்தேன். என் வலது கையின் உறையை கழற்றினேன். ஆனால் நடந்ததைக் கண்டு நான் நடுங்கிப் போனேன்.

என் கை ஒரு பூசனிக்காய் பருமன் வீங்கிவிட்டது தம்ளரில் இருந்த தண்ணிர் போல், எனது ரத்தம் சருமத்தை வெடித்துக் கொண்டு வெளிப் பட்டு ஆவியாக மாற முயன்றதாகத் தோன்றியது!

நடந்ததை டாக்டர் பார்த்திருக்க வேண்டும். ஒரு இரைச்சலோடு காற்று என் பெட்டிக்குள் புகுந்தது. காற்றை உறிஞ்சும் குழாய் மெளனமாயிற்று. என் விண்வெளி உடை தளர்ந்தது. எனது கை தன் இயல்புக்கு மாறியது. அது காப்பாற்றப்பட்டது. என் உயிரும் காப்பாற்றப்பட்டது.

நான் இறுதியாக விடுதலை பெற்றதும் டாக்டர் எனக்கு சரியான டோஸ் கொடுத்தார். அவரது திட்டுதலை நான் சந்தோஷமாக ஏற்றேன் பிறகு கேட்டேன்: “விண்வெளி உடை இல்லாமலே விண்ணகம் சென்ற ஒரு இந்தியனை உங்களுக்குத் தெரியுமா?”

டாக்டர் என்னைப் பார்த்து விழித்தார். “யுதிஷ்டிரன்! பாண்டவரில் மூத்தவர்!” என்று கூறி நான் பெருமையோடு என் நெஞ்சை நிமிர்த்தினேன். இதைக் கேட்டதும் டாக்டரின் கண்கள் ஒளிபெற்றன. என்னை நோக்கி அன்பாகக் கண்சிமிட்டி அவர் சொன்னார்: “நல்லது ரொம்ப நல்லது, பையா! நீ தேர்வு செய்யப்பட்டிருக்கிறாய்-யுதிஷ்டிரன் போல் நீயும் சோதனைகளில் வெற்றி கண்டாய்”.

நூறு விண்ண்ப்பதார்களில் மூன்று பேர் மட்டுமே தேர்வு செய்யப் பட்டனர். அவர்களில் ராட்சதர் எவரும் இலர்.

“ராட்சதர்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன்.

“எங்களுக்கு ராட்சதர்கள் தேவையில்லை!” என்று வெடித்தார் டாக்டர். “உன்னைப் போன்ற சாதாரண இளைஞர்களையே நாங்கள் தேடுகிறோம்.”

ஆம், நான் ஒரு சாதாரண மனிதன், மிகச் சாமான்யன், ஆனால், நான் திரும்பி, அனைத்தையும் என் குருவிடம் கூறிய போது, அவர் புன்னகைத்தார். சொன்னார். இது ஒன்றும் புதிதல்ல, என் சிறுவனே! உன் உடலை, உள்ளத்தை, ஆத்மாவை நன்றாக அறிந்துகொள். உலகம் சாமான்யர்களிடம் அலுப்புக் கொண்டிருக்கிறது. மேலும் மேலும் அதிமனிதர்கள் தாம் அதற்குத் தேவை.”

உறங்குவது உண்மையா…! –கோவை சங்கர்

Image result for ஆயர்பாடி மாளிகையில்

உறங்குவது உண்மையா இலைநடிப்பா
சொல்லிவிடு எனக்கே பெருமாளே..!

மதிகெட்டு நெறிகெட்டு வாழ்கின்ற மாந்தரைக் கண்ட
வெட்கத்தின் விளைவா விரக்தியின் பலனா..?

மக்களே உங்கள் பகுத்தறிவு எங்கே
மாக்களாய் இருக்கின்றீர் தரணியில் இங்கே
ஒருமித்து மகிழ்ச்சியாய் வாழ்வதை விட்டுவிட்டு
சண்டையில் வாழ்கின்றீர் அல்லல் பட்டுப்பட்டு!

ஜாதிச்சண்டை மதச்சண்டை
இனச்சண்டை பணச்சண்டை
பிள்ளைச்சண்டை பாகச்சண்டை
எல்லைச்சண்டை ஈகோச்சண்டை
இதுக்குச்சண்டை அதுக்குச்சண்டை
சண்டையோசண்டை சண்டையோசண்டை!

அகமெனும் பேயை அகற்றிவிடு கண்ணா
துராசைத் தீயினை பொசுக்கிவிடு கிருஷ்ணா
அன்பெனும் அமுதத்தை ஊட்டிவிடு மன்னா
அமைதியின் உயர்வையே காட்டிவிடு கண்ணா..!

                           ——————————–

 

 

காதலர்தின சிறப்புக் கவிதை – செவல்குளம் செல்வராசு

Image result for அழகி சிற்பி

அங்கு ஏதோ ஒரு

அரசனின் புகழை நிலைநாட்ட

அரண்மனை கட்டும் பணி

நடக்கிறது போலும்

எங்கு நோக்கினும்

வடித்து முடிக்கப்பட்ட அழகிய சிற்பங்களும்

சிற்பிகள் செதுக்கிக் கொண்டிருக்கும்

அரைகுறை சிற்பங்களும்

இன்னும் செதுக்கத் துவங்காத

சிலைகளுக்கான பெரிய பாறைகளும்

எண்ண முடியாத அளவில்

எத்தனையோ யானைகளும்

கட்டுமானப் பணியிலிருக்கும்

கணகற்ற அடிமைகளும்

மேற்பார்வையில் இருக்கும்

அரசாங்க மந்திரிகளும்

 

இன்னும் நினைவிலில்லாத

எத்தனையோ காட்சிகள்

சற்று தொலைவில்

இயற்கையும் பிரமிக்கும் அழகில்

பேரழகி சிலை ஒன்று

என்ன இது…? !!

துண்டிக்கப்பட்ட கை கட்டை விரல் ஒன்றும்

சற்று நேரத்திற்கு முன்னால் சிந்தி

இன்னும் உறையாத குருதியும் மண்ணில்

எந்த சிற்பியுடையதென்று தெரியவில்லை

இன்னும் சற்று தொலைவில்

உதிர்ந்த சில முடிகளும்

உடைந்த சிலவளையல் துண்டுகளும்

அறுந்து சிதறிய சில

பாசி மணிகளும் பரவிக்கிடந்தன

அடையாளம் கண்டுவிட்டேன்

நிச்சயமாய் இது உன்னுடையது தான்

மனம் வெடித்து உயிர் பதைத்து

ஓடுகிறேன்ஓடுகிறேன்

நண்பன் உதைத்து

உறக்கம் கெடுத்து விட்டான்

கனவும் கலைந்து விட்டது

காணாமல் போகும் காயங்கள்! – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

மருமகளே …!
மாமியார் பேய் என்கிறாய்
மாமனார் நாய் என்கிறாய்
நாத்தனார் நரி என்கிறாய்
தன் பிறந்த வீடே
தாஜ்மஹால் என்கிறாய் !

கப்பல்போல்
கார் இருந்தாலும்
ஏ. சி இல்லையென
ஏசி விடுகிறாய் !

தன் மகன்
தஞ்சாவூர் பொம்மைபோல்
தலையாட்டினாலும்
அம்மா பிள்ளையென
சும்மா சும்மா சொல்கிறாய் !

மாமியார் கண்ணீரெல்லாம்
நீலிக் கண்ணீர்
மகனை கண்ணீரால்
இழுப்பது என்கிறாய் !

உன் சுடுசொற்கள்
என் உள்ளத்தை
கனல்போல் சுட்டு
காயப்படுத்தினாலும்…

‘பாட்டீ’ என
பேரக்குழந்தை குரல்
பாசமுடன் ஒலித்து
பூங்கரங்களால் – என்
கழுத்தைக் கட்டும்போது

உன் சுடுசொற்கள்
என் மனக்காயமெல்லாம்
காணாமல் போய்விடுகிறது!

 

கொரானா வைரஸ் – உலக சுகாதார மையும்

கொரோனோ வைரஸால் உருவாகியுள்ள நோய்க்கு ‘கோவிட்-19’ என பெயர் அறிவிப்பு

இந்த ஆட்கொல்லி வைரஸ் எப்படிப் பரவுகிறது,  அதிலிருந்து எப்படிக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது. தெரிந்து கொள்வோம். 

 

 

 

 

இப்படி ஒரு வைரஸ் அந்த வூஹானில் நகரில் வருவதாகக் கற்பனை செய்து எழுதியிருக்கிறார் ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவர் டீன் கூனட்ஸ்.  புத்தகத்தின் பெயர் இருட்டின் கண்கள் ( The eyes of darkness)  

 நாவலில் வூஹானில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ ஆய்வகம், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த புதிய வைரஸ் தயாரிப்பு ஒன்றில் ஈடுபடுவதாகவும், இறுதியாக கொடூர வைரஸ் ஒன்று உருவாக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாவலில் இந்த வைரஸுக்கு இடப்பட்ட பெயர் வூஹான் – 400 என்பதாகும்.

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

சாளுக்கிய விக்ரமாதித்யன்  

Image result for சாளுக்கியர்

Image result for சாளுக்கியர்

ஹர்ஷன், புலிகேசி, நரசிம்மன், கூன் பாண்டியன் என்று சமகாலத்தில் வாழ்ந்த சரித்திர நாயகர்களைப் பற்றி விலாவாரியாக எழுதினோம். அவர்கள் காலத்திற்குப் பின் என்ன ஆயிருக்கும்? வேறென்ன? பழி! பழிக்குப் பழி!! ரத்தம்! ரத்தத்திற்கு ரத்தம்!!
மகேந்திரன் தோற்றதற்கு நரசிம்மன் வாதாபியை அழித்துப் பழி தீர்த்தான். அதற்குப் பழி தீர்க்க இன்னொருவன் வருவான். இது காலம் காலமாக வருவது தானே!

பொதுவாக நாம் ஒரு ஹீரோவை தேர்ந்தெடுத்து அது பற்றிக் கதை புனைவோம். இம்முறை ஹீரோ என்று யாரும் இல்லாத சப்ஜெக்ட்! ஹீரோ யார் என்பது வாசகர் கண்ணோட்டதில் தான் இருக்கிறது!

புலிகேசியின் மறைவுக்குப் பிறகு பாதாமியில் (வாதாபி)  பெருங்குழப்பம் ஏற்பட்டது. புயலுக்குப் பின் அமைதி என்பார்கள். ஆனால் பாதாமியில் பல்லவப் புயல் ஓய்ந்திருந்தாலும் – உள்நாட்டுப் புயல் சுழல் காற்றாக வீசியது. புலிகேசி ஏற்படுத்தியிருந்த ஆளுநர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தார்கள். புலிகேசியின் மகன்கள் நால்வர் : சந்திராதித்யன், ஆதித்யவர்மன், விக்ரமாதித்யன், ஜெயசிம்மவர்மன். புலிகேசியின் முதல் இரு மகன்களும் அத்தகைய ஆளுநர்களாக இருந்தவர்கள் – தங்கள் சுதந்திரத்தை அறிவித்தனர்.

 

முதல் பலி! சந்திராதித்யன் திடீரென்று இறந்தான். எப்படி என்ற கேள்விக்கு சரித்திரத்தில் பதில் இல்லை. பல அரசியல் மரணங்கள் மர்மமானாவையே! இதுவும் அதில் ஒன்று. ஆதித்யவர்மன் – விக்ரமாதித்யன் இருவரும் தங்களில் யார் மன்னனாவது என்று திட்டம் தீட்டினர். விக்ரமாதித்யன் தனது தாய் வழிப் பாட்டனரான கங்க மன்னன் துர்வினிதன் உதவியை நாடினான். படை திரட்டினான். அவனது தம்பி ஜெயசிம்மவர்மன் அவனுக்குத் துணையாக இருந்தான். ஆதித்யவர்மன் – நரசிம்மபல்லவன் உதவியை நாடினான். ஆம்! தந்தையின் மரணத்திற்குக் காரணமாயிருந்த அதே பல்லவன் உதவி! ஆட்சி மோகம் – எதையும் செய்யத் தூண்டும் போலும்! நரசிம்மவர்மனும் ஆதித்யவர்மனுக்கு ஆதரவாக ஒரு பல்லவப் படைப்  பிரிவு ஒன்றை அனுப்பி வைத்தான். உள்நாட்டுப்போர் கடுமையாக இருந்தது. விக்ரமாதித்யன்-துர்விநீதன் அணி ஆதித்யவர்மன்-பல்லவர் படையைத் தோற்கடித்தனர். ஆதித்யவர்மன் கொல்லப்பட்டான். பல்லவர் படையின் பெரும்பகுதி காஞ்சிக்கு திரும்பியது. பாட்டனார் துர்விநீதன் – இன்றைய அரசியல்வாதி போல – நரசிம்மன் படைகள் பாதாமியை விட்டு சென்றதை ‘நரசிம்மனைத் தான் தோற்கடித்த வெற்றியாக’ கொண்டாடி பட்டயம் அறிவித்தான். அடுத்து, விக்ரமாதித்யன் அருகிருந்த மற்ற ஆளுநர்கள் அனைவரையும் வென்றான்.

 

விக்ரமாதித்யனது குறிக்கோள்கள் : முதலில் நரசிம்ம பல்லவனது படைகளை பாதாமியிலிருந்து முற்றிலும் துரத்தவேண்டும். புலிகேசியின் ராஜ்யத்தை ஒன்று சேர்க்கவேண்டும். அப்புறம் தந்தையின் தோல்விக்குப் பழி வாங்கவேண்டும்! பாதாமியில் – கொரில்லா போர்முறையால் – மிஞ்சியிருந்த பல்லவப் படைகளுக்கு மெல்ல மெல்ல அழிவை ஏற்படுத்தினான். அமெரிக்காவின் வியட்நாம் போல பல்லவனுக்கு பாதாமி ஆயிற்று. நரசிம்மன் வீரனானாலும் விவேகமானவன். புலிகேசியை வென்று பழி தீர்த்தபின் பாதாமியில் தன் படைகள் இருக்கத் தேவையில்லை என்று உணர்ந்தான். பதின்மூன்று வருடம் கழித்து – பல்லவ படைகளை திரும்ப அழைத்துக் கொண்டான்.

 

பாதாமியில் விக்ரமாதித்யன் – முதலில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டான்.. புலிகேசி மறைந்து ஐந்து வருடம் சென்றது. வடக்கிலிருந்து – கன்னோசியிலிருந்து செய்தி வந்தது. ஹர்ஷன் காலமானான். அந்த  ராஜ்யம் – ராஜ்யச் சண்டையால் சிதறிப்போனது. மேலும் ஏழு வருடம் கழிந்தது! கி பி 654 ல் – விக்ரமாதித்யன் சுற்றியிருந்த பகையனைத்தையும் ஒடுக்கினான். மகாராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்டான். துணையிருந்த தம்பி ஜெயசிம்மவர்மனுக்கு விக்ரமாதித்யன் ‘லதா’ என்ற ராஜ்யத்தின் (இன்றைய தெற்கு குஜராத்) ஆளுனராக்கினான். ஆண்டுகள் மெல்ல உருண்டோடியது. விக்ரமாதித்யன் படை பெருக்கினான். விக்ரமாதித்யன் – ‘கூட்டணி ஒன்றே பலம்’ என்று உணர்ந்திருந்தான்.

காலம் கனியக் காத்திருந்தான்.

 

பல்லவ ராஜ்யத்துக்கு பொதுவாகவே ஒரு பிரச்சினை! வடமேற்கு திசையில் கங்க நாடு, மற்றும் சாளுக்கிய நாடு. தெற்கே பாண்டிய, சோழ நாடுகள். இடையே பாக்குவெட்டி போல பல்லவ நாடு மாட்டிக்கொண்டது. சுற்றி பகை இருந்தால்- எந்த நாடு தான் அமைதியாக இருக்கும்? தெற்கே… மதுரையில் பாண்டியன் நெடுமாறன். தன் சகோதரி பல்லவ ராணியானதால் கொஞ்சம் நாள் அடக்கி வாசித்தான். ஆயினும் தனக்கும் பல்லவனுக்கும் உள்ள இடைவெளி அதிகமானது என்று உணர்ந்தான். நரசிம்மனது பலம் பாண்டிய நாட்டுக்கு பலவீனம் என்று நினைத்தான்.

 

ஒரு ஃபிளாஷ்பேக்:

நரசிம்ம பல்லவன் – பாண்டியர்களிடமிருந்து காஞ்சியைப் பாதுகாக்கும் பொறுப்பை மானவர்மனிடம் விட்டுப் புறப்பட்ட கதை படித்தோமே! பிறகு – காஞ்சிக்கருகில் மணிமங்கலம் மற்றும் பல போர்களில் நரசிம்ம பல்லவனிடம் தோற்ற புலிகேசி பின் வாங்கத் துவங்கியதையும் பார்த்தோம். அன்று தளபதி பரஞ்சோதி நரசிம்ம பல்லவனிடம் கூறினான்:

“அரசே! நமது படை மிகவும் பலம் பொருந்தி உள்ளது. இம்முறை நான் தலைமையேற்று சென்று வாதாபியை அழித்து புலிகேசியையும் அழித்து வருகிறேன். பாண்டிய நாட்டிலிருந்து வரும் தகவல்கள் சற்று கவலை அளிப்பதாக உள்ளது. நாம் வாதாபி செல்லும் போது பாண்டியன் மாறவர்மன் காஞ்சி மீது படையெடுக்க வரக்கூடும் என்று நமது ஒற்றர்கள் கூறுகின்றனர். சங்கரமங்கை நமக்கும் பாண்டிய நாட்டுக்கும் எல்லையில் உள்ளது. அங்கு இருக்கும் நமது எல்லைப்படை சிறியது. அங்கு பாண்டியன் படையெடுத்தால் தாங்கள் காஞ்சியிலிருந்து படை நடத்த வேண்டும்”- என்றான். பரஞ்சோதி சொன்னபடியே நடந்தது. பாண்டியன் சங்கரமங்கையில் பல்லவ எல்லைப்படையுடன் போரிட்டு வெற்றிபெற்றான். நரசிம்மன் படையுடன் சென்று பாண்டியனைத் துரத்தி வெற்றிபெற்றான். மாறவர்மனும் தன் படையைப் பெருக்கி காலம் கனியக் காத்திருந்தான்.

ஃபிளாஷ்பேக் முடிந்தது!!

 

வருடம் 668: சரித்திரத்தின் ஒரு முக்கிய வருடம். நரசிம்ம பல்லவன் அரியணை ஏறி முப்பத்தெட்டு வருட ஆட்சி ஆனது. நரசிம்மவர்ம பல்லவன் காலமானான். காஞ்சி சோகத்தில் ஆழ்ந்தது. குறிப்பாக யுவராஜன் இரண்டாம் மகேந்திரன் பெரும் துக்கத்துடனும் கவலையுடனும் இருந்தான். நரசிம்ம பல்லவரின் பெரும் ராஜ்யத்தைக் கட்டிக்காப்பது என்பது பெரும் பொறுப்பாயிற்றே. அன்று அவனுக்கு வயது நாற்பதைக் கடந்திருந்தது. அவனது மகன் பரமேஸ்வரனுக்கு இருபது வயது.

 

இரண்டாம் மகேந்திரன் பதவிக்கு வந்ததை விக்ரமாதித்யன் கவனித்தான். மாறவர்மனும் கவனித்தான். முதலாம் மகேந்திரன் காலத்திலிருந்து, நரசிம்மன் காலம் வரை – பல்லவர்கள் தங்கள் எதிரிகளை காஞ்சிக்கு அருகில் வரவிட்டு- பிறகு அவர்களுடன் யுத்தம் செய்தனர். இரண்டாம் மகேந்திரன் அரசனானதும் கங்கநாட்டுக்குப் படையுடன் சென்றான். கங்க மற்றும் விக்கிரமாதித்யன் படையுடன் நடந்த சண்டையில் இரண்டாம் மகேந்திரன் படைகள் தோல்வியுற்றுக் காஞ்சி திரும்பியது. இரண்டாம் மகேந்திரனும் காயமுற்றுத் திரும்பினான். போர்க்காயங்கள் மகேந்திரனை பாதித்தது. இரண்டு வருடங்களே ஆட்சி செய்த  நிலையில் இரண்டாம் மகேந்திரன் காஞ்சியில் மாண்டான்.

 

இளவரசன் பரமேஸ்வரவர்மன் பல்லவ நாட்டுக்கு அரசனானான். பாட்டனார்  நரசிம்மவர்ம பல்லவரின் யுத்தங்களில் பங்கு கொண்டிருந்த பரமேஸ்வரன் சுற்றி நின்ற பகையை அறிந்திருந்தான். விக்ரமாதித்யனுக்கும், நெடுமாறனுக்கும் சமீபத்தில் ஏற்பட்ட நட்பு பற்றியும் அறிந்திருந்தான். ஏன் தனது முன்னோர்கள் எதிரியை காஞ்சி அருகில் வரவிட்டு – பிறகு சண்டையிட்டனர் என்றும் அறிந்திருந்தான். தனது தந்தை கங்க நாட்டுக்கு படையெடுத்து தோற்றதும் அவன் மனதில் இருந்தது. விக்ரமாதித்யன் – ‘காலம் வந்தது’ என்று கருதி படைகளை ‘காலன்’ போல் காஞ்சி நோக்கி நடத்தினான். பரமேஸ்வரன் படைகள் காஞ்சிக்கருகில் தாக்கின. போரில் வெற்றி-தோல்வி எப்படி வருகிறது என்பது ஒரு மிஸ்டரி. காஞ்சிக்கோட்டை மிக வலுவான கோட்டை. அதை முற்றுகையிட்டு வெல்வதென்பது இயலாததாக இருந்தது. பரமேஸ்வரன் காஞ்சிக்கோட்டைக்குள் பின் வாங்கினான். விக்ரமாதித்யன் – தன் தந்தை போல தெற்கு நோக்கி சென்று காவேரிக்கரையில் உறையூரில் தங்கினான். பாண்டியன் மாறவர்மன் மதுரையிலிருந்து உறையூர் வந்திருந்தான். இருவரும் சந்தித்து நட்புப் பாராட்டினர். எதிர்காலக் கூட்டணி பற்றியும் – பொது எதிரியான பல்லவனை வெல்வதற்காக திட்டம் போட்டனர்.

 

பரமேஸ்வரன் அரசியலை ஆராய்ந்து பார்த்தான்: ‘விக்ரமாதித்யன் உறையூரில் இருக்கிறான். விக்ரமாதித்யன், பாண்டியன், கங்க மன்னன் மூவரும் சேர்ந்தால் அது மாபெரும் கூட்டணி. அதை முளையிலேயே கிள்ள வேண்டும்’. இந்த எண்ணங்களுடன் – காஞ்சியிலிருந்து வெளி வந்து – கங்க நாட்டின் மன்னன் பூவிக்ரமனை பெரும்படை கொண்டு தாக்கினான். பரமேஸ்வரனின் கழுத்தணியில் ‘உக்ரோதயா’ என்ற பெரிய மாணிக்க கல் பதிக்கப்பட்டு போர்க்களத்தை சிவப்பாக்கியது. போரில் வெற்றி-தோல்வி எப்படி வருகிறது என்பது ஒரு மிஸ்டரி. கங்க மன்னன் பூவிக்ரமன் – பரமேஸ்வரன் நேரடி யுத்தம். பரமேஸ்வரனது கழுத்தணி எதிரியிடம் சிக்கியது. (வாசகர்களே! இந்த உக்ரோதயத்திற்கு ஒரு சரித்திரம் உண்டு. இனி வரும் ‘சரித்திரம் பேசுகிறது’ – இதழில் அது பற்றி கூறப்படும்)!

 

பரமேஸ்வரன் பின் வாங்கினான். ஆயினும் தோல்விகளால் துவளவில்லை. ஒரு படையை பாதாமி நோக்கி அனுப்பினான். விக்ரமாதித்யன் உறையூரில் இன்பச்செலவில் இருந்தான். பரமேஸ்வரனது கங்க நாட்டுப் படையெடுப்பு தோல்வியடைந்த சேதி கேட்டு பாண்டியனுடன் விருந்து உண்டு மகிழ்ந்த நேரத்தில் – பரமேஸ்வரன் படை பாதாமியை நோக்கிச் செல்லும் சேதி வந்தது. விருந்து பாதியிலே முடிந்தது. விக்ரமாதித்யன் தனது மகன் வினயாதித்யா, பேரன் விஜயாதித்யா இருவர் தலைமையில் பெரும்படையை உறையூரிலிருந்து – பாதாமி செல்லப் பணித்தான். தானும் விரைவில் தொடர்ந்தான்.

 

பரமேஸ்வரன் தனது படைகளுடன் வெகு விரைவாக உறையூர் பாதையில் பயணித்தான். சாளுக்கியப்படைகள் – பரமேஸ்வரன் உறையூர் வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. உறையூரிலிருந்து 2 கல் அருகில் பெருவாளநல்லூர் என்ற இடத்தில் யுத்தம் நடந்தது. போரில் வெற்றி-தோல்வி எப்படி வருகிறது என்பது ஒரு மிஸ்டரி. இம்முறை பல்லவப்படை பெரும் வெற்றி பெற்றது. பரமேஸ்வரன் – பல செல்வங்களை அவர்களிடமிருந்து கைப்பற்றினான். சாளுக்கியப் படைகள் பாதாமிக்குப் பின் வாங்கியது.

 

சில வருடங்களுக்கு அமைதி நிலவியது.. ஒரு மாறுதலுக்காக சாளுக்கிய, பல்லவ, பாண்டிய அரசுகள் தங்கள் நாட்டை ஆட்சி செய்வதில் கவனத்தைச் செலுத்தினர். ஆனால் நீறு பூத்த நெருப்புப்போல யுத்தங்கள் அடுத்த தலைமுறையில் தொடரும். ஆவலுடன் காத்திருக்கும் வாசக நண்பர்களே.. விரைவில் சந்திப்போம்.

  

 

 

 

   

யவனிகா – குவிகம் இணைந்து வழங்கும் ‘அரங்கம்’

 

யவனிகா – குவிகம் இணைந்து வழங்கும் அரங்கம் என்ற புதியநிகழ்வு ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிறு அன்று மாலை குவிகம் இல்லத்தில் நடைபெற உள்ளது.

இதன் துவக்க விழா பிப்ரவரி 16 மாலை நடைபெற்றது. 

முதத்தமிழில் நாடகத்திதிற்கு குவிகம்  செய்யும்  சிறு பங்களிப்பு !

 யவனிகா  பாஸ்கர், இந்த அரங்கம் என்ற நிகழ்வு எவ்வாறு நடக்கப்போகின்றது என்று விளக்கினார். 

 எஸ் ராமகிருஷ்ணன்  எழுதி  பாஸ்கர்  இயக்கி  லயோலா கல்லூரி விஸ்காம் மாணவர்களால்  நடிக்கப்பட்ட”உற்று நோக்கு”  என்ற நாடகத்தின் காணொளி திரையிடப்பட்டது. 

அதைத் தொடர்ந்து அந்த நாடகத்தைப் பற்றிய விவாதமும் அளவலாவல்  பாணியில் சிறப்பாக நடைபெற்றது.  

அதன் காணொளி  இதோ !

 

 

 

 

 

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் (CAA)

 

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. 

அதைப் பற்றிய  விளக்கத்தை மத்திய அரசு கேள்வி பதில் வடிவில்  வெளியிட்டுள்ளது.

தெரிந்து  கொள்வோம் 

CAA,NRC,CAB,CAB_protest,CAA_protest,Government,Central_Government,Q&A,குடியுரிமை_சட்டம்,மத்தியஅரசு,விளக்கம்

* குடியுரிமை திருத்த சட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறதா?

இல்லை. CAA என்ற குடியுரிமை திருத்த சட்டம் வேறு. NRC என்ற தேசிய குடிமக்கள் பதிவேடு வேறு. குடியுரிமை திருத்த சட்டம் என்பது பார்லிமென்ட் ஒப்புதல் அளித்த பின், இப்போது அமலுக்கு வந்துள்ளது. ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கான விதிகள், நடைமுறைகள் இன்னும் முடிவாகவில்லை.

* அப்படி என்றால் அசாமில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரித்தது எப்படி?

அசாமில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டு மக்களை கண்டுபிடித்து திருப்பி அனுப்ப அந்த மாநிலத்தில் போராட்டம் நடந்தது. அப்போது இருந்த அரசு அதை ஏற்றுக் கொண்டது. அதன்படி 1985ல் அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை செயல்படுத்த உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி அந்த மாநிலத்தில் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி நடந்தது.

* குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இந்திய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதா?

இல்லவே இல்லை. குடியுரிமை திருத்த சட்டம் பற்றியும், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றியும் எந்த மதத்தை சேர்ந்த இந்திய குடிமக்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

* குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப் போகிறார்களாமே?

இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு எந்த மதத்தையும் குறி வைக்காது. பல நாடுகளில் இருப்பதை போல இது இந்த நாட்டு குடிமக்களின் பெயர், விவரங்கள் இடம் பெறக்கூடிய ஒரு பதிவேடு. அவ்வளவுதான்.

* தேசிய குடிமக்கள் பதிவேடு தயாராகும்போது, மத அடிப்படையில் யாராவது விலக்கி வைக்கப்படுவார்களா?

இல்லை. அந்த பதிவேடு மதத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படாது. பதிவேடு அமலுக்கு வரும்போது, அது மதம் தொடர்புடையதாகவோ, மதத்தின் அடிப்படையிலோ நிச்சயம் இருக்காது. ஆகவே, மத அடிப்படையில் எந்த நபரும் குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட மாட்டார்.

* பதிவேடு தயாரிக்கும்போது, நாங்கள் இந்தியன் என்பதற்கான ஆதாரங்களை காட்டும்படி கேட்பீர்களா?

ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணியை தொடங்க எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. அறிவிப்பு வெளியிட்டு பணி தொடங்கினாலும், ஒவ்வொருவரும் தான் இந்தியன் என்பதை நிரூபிக்க ஆதாரங்களை காட்டுமாறு கேட்கப்போவது இல்லை. ஒவ்வொரு குடிமகனின் பெயரையும் பதிவு செய்யும் ஒரு சாதாரண நடைமுறைதான் தேசிய குடிமக்கள் பதிவேடு. வாக்காளர் அடையாள அட்டை வாங்கவும் ஆதார் கார்டு வாங்கவும் பொதுமக்கள் எவ்வாறு தம்மிடம் உள்ள ஆவணங்களை காட்டுகிறார்களோ அதே போல இதற்கும் காட்டினால் போதும்.

* ஒருவர் இந்திய குடிமகன் என்பது எப்படி முடிவு செய்யப்படுகிறது? அதை முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறதா?

2009ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை விதிகளின் அடிப்படையில் ஒருவரின் குடியுரிமை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதிகள் இந்திய குடியுரிமை சட்டம் 1955 ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அந்த விதிகள் என்ன என்பதை ஆன்லைனில் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு நபரும் இந்திய குடிமகன் ஆவதற்கு ஐந்து வழிகள் இருக்கின்றன.

1. பிறப்பால் வருவது(-Citizenship by Birth). இந்தியாவில் பிறந்தால் இந்திய குடிமகன்தான். வேறு எந்த ஆதாரமும் தேவை இல்லை.
2. மரபு வழி குடியுரிமை (Citizenship by descent). பெற்றோர் இந்தியர்களாக இருந்தால் குழந்தை இந்திய குடிமகன் ஆகலாம்.
3. பெயரை பதிவு செய்வதன் மூலம்(Citizenship by registration).
4. Citizenship by naturalization
5. Citizenship by incorporation
இதில் 3, 4, 5 ஆவது வழிகள் குறித்த விளக்கத்தை இந்திய அரசின் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

* நான் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க என் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் போன்ற விவரங்களை அளித்தாக வேண்டுமா?

வேண்டியது இல்லை. நீங்கள் பிறந்த தேதி, மாதம், ஆண்டு, இடம் ஆகிய விவரங்களை அளித்தால் போதும். உங்களது பிறப்பு குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால் உங்கள் பெற்றோரின் பிறப்பு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யலாம். எந்த ஆவணங்கள் ஏற்புடையது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் பாலிசி, பிறப்பு சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (TC), நிலப் பத்திரம், வீட்டு பத்திரம் போன்ற ஆவணங்களை காட்டியும் குடியுரிமையை நிரூபிக்க முடியும். இந்த பட்டியலில் இன்னும் சில ஆவணங்களை சேர்ப்பது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது. ஆவணம் இல்லை என்பதால் எந்த இந்தியரும் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் அரசின் நோக்கம்.

* தேசிய குடிமக்கள் பதிவேடுக்காக, 1971க்கு முன்பிருந்த எனது மூதாதையர் குறித்த ஆதாரங்களை கட்டாயம் அளிக்க வேண்டுமா?

நிச்சயமாக இல்லை. 1971க்கு முந்தைய மூதாதையர் விவரங்கள் என்பது, அசாமுக்கு மட்டும்தான் பொருந்தும். அது அசாம் உடன்படிக்கை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கேட்கப்பட்டது. நாட்டின் இதர பகுதிகளில் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி அசாமிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். 2003ம் ஆண்டு விதிகள் அடிப்படையில் பதிவேடு தயார் செய்யப்படும்.

* ஒருவர்தான் இந்தியன் என்பதை எளிதில் நிரூபிக்கலாம் என சொல்கிறீர்கள். ஆனால் அசாமில் 19 லட்சம் பேர் இந்த பதிவேடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்களே?

அசாமில் ஊடுருவல் பிரச்னை நீண்டகாலமாக இருக்கிறது. அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று அசாமில் மக்கள் இயக்கம் நடந்தது. ஊடுருவியவர்கள் யார் என்பதை கண்டறிய 1985 ல் அப்போதைய பிரதமர் ராஜிவ், அசாம் மக்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அப்போது 1971 மார்ச் 25 என்பதை ‘கட் ஆப்’ தேதியாக வைத்துக் கொள்ளலாம் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆகவே, மற்ற மாநிலங்களில் பதிவேடு தயாரிக்கும்போது அந்த தேதியை பயன்படுத்தப்போவது இல்லை.

* பதிவேடு தயாரிப்பு பணி நடக்கும்போது, இல்லாத பழைய ஆவணங்களை கொண்டு வரச்சொல்லி கட்டாயப் படுத்துவார்களா?

மாட்டார்கள். பிறப்பு சான்றிதழ் போன்ற சாதாரண ஆவணங்களைதான் கேட்பார்கள். யாருக்கும் எந்த பிரச்னையும் வராத அளவுக்கு அரசின் விதிமுறைகள் இருக்கும். மக்களை துன்புறுத்த வேண்டும்; பிரச்னைக்கு உட்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல.

* ஒருவர் படிக்காதவராக அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவராக இருந்தால் அவரது கதி என்ன?

அப்படி இருந்தால் ‘இதோ இவரை வேண்டுமானால் கேளுங்கள்’ என்று சாட்சியாக ஒரு நபரை அவர் அழைத்து வரலாம். அக்கம் பக்கத்தில் வசித்தவர்களிடம் விசாரித்தும் விவரம் பதிவு செய்யலாம். நடுநிலையான நடைமுறைகள் பின்பற்றப்படும். யாருக்கும் தேவையற்ற பிரச்னை வராது.

* வீடே இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பரம ஏழைகள், படிக்காதவர்கள் அதிகம். அவர்கள் தன் அடையாளத்தை உறுதி செய்ய எந்த ஆதாரங்களும் இருக்காது. அவர்களால் என்ன செய்ய முடியும்?

கேள்வியே தவறு. எந்த ஒரு அடையாளமும் இல்லாமலா ஓட்டு போடுகிறார்கள்? ஆதாரமே காட்டாமலா ரேஷன் கார்டு பெறுகிறார்கள்? அரசு நலத் திட்டங்கள் மூலம் பலன் பெறுவதற்கும் ஆவணங்களை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏதாவது ஒன்றை காட்ட முடியும்.

* திருநங்கைகள், நாத்திகர்கள், ஆதிவாசிகள், தலித்கள், நிலமில்லாத ஏழைகள் ஆகியோர் குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்பட மாட்டார்களாமே?

அப்பட்டமான பொய். அவர்களில் யாருக்குமே பாதிப்பில்லை.

நன்றி : தினமலர்

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

ராமன் எத்தனை ராமனடி !

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராமன் எத்தனை ராமனடி!

பாரதத் திருநாட்டின் கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீக பலம், இறையாண்மை இவை இங்கு வாழும் மக்களுக்குப் பெருமை சேர்ப்பவை. நமது புராண, இதிகாசங்கள், வேதங்கள் உலகிற்கே வழிகாட்டக் கூடியவை! இதனைப் போற்றும் வகையில், சென்னையில் இரண்டு நாள் ஶ்ரீராமர் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

தேஜஸ் பவுண்டேஷனும் பி.எஸ்.கல்விக் குழுமமும் இணைந்து, “இந்திய இலக்கியங்களில் ஶ்ரீ ராமர்” என்ற தலைப்பில், இரண்டு நாட்களுக்கு தேசீயக் கருத்தரங்கினை நிகழ்த்தினார்கள் – பி எஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில், இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கப் பட்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்று! நாளைய எழுச்சிமிகு, ஆன்மீக பாரதத்திற்கு இவர்களே ஆணிவேர்கள் – அவர்களின் பங்களிப்பு அதனை உறுதி செய்தது. மிகச் சிறப்பாக நடைபெற்ற அமர்வு அது!

முதல் அமர்வில் ராமகாவியமும்,திருக்குறளும் (புலவர் ராமசாமி), ராமகாவியமும் திருவாய்மொழியும் (நாவலர் நாராயணன்), ராமகாவியமும் ரமண காவியமும் (ஶ்ரீராம்) என்ற தலைப்புகளில் அறிஞர் பெருமக்களின் உரைகள் சிறப்பு!. கருத்தரங்கின் ‘தோரண வாயில்’ இலக்கிய மலர்மாலைகளால் அலங்கரிக்கப் பட்டது – அரங்கம் முழுதும் தமிழின் வாசம் ராமகாவியத்தின் சிறப்பால் நிறைத்தது!

மாலையில் டாக்டர் கணேஷ் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் – பக்தி இசை. இராம பக்திப் பாடல்கள், அரங்கத்தைக் கட்டிப் போட்டன.

தொடர்ந்தது, முறையான தொடக்கவிழா – வீரமணி ராஜுவின் இறை வணக்கம், விழா மலர் வெளியீடு, வாழ்த்துரையைத் தொடர்ந்து, மூவர் ராமாயணம் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு – பி என் பரசுராமன் வால்மீகி ராமாயணம் பற்றியும் (இயல்பான நகைச்சுவை கலந்த பேச்சுடன் கொஞ்சம் வால்மீகியைப் பற்றியும் பேசினார்!),இசைக்கவி ரமணன் கம்பராமாயணம் பற்றியும் (அருமையான குரலில் இரண்டு பாடல்கள் மற்றும் கம்பனின் தமிழில் நட்பு, வீரம் என மேற்கோள்களுடன் பேசினார்!), முனைவர் வ வே சுப்பிரமணியன் துளசி ராமாயணம் பற்றியும் (பாமரர்களுக்கான ராமாயணம், மொகலாயர்கள் காலத்தில் இந்து மதத்தை மீட்டெடுத்த ராமாயணம், வால்மீகி, கம்பனில் இல்லாத அல்லது மாறுதலான பகுதிகளைச் சுட்டி அருமையானதொரு உரை!) சொற்பொழிவாற்றினர். செவிக்கினிமையாக அமைந்திருந்தது முதல் நாள் நிகழ்வுகள்!

இரண்டாம் நாள், காலை பத்து மணிக்குக் கவியரங்கம் – ‘அறமே அவன் உரு’ என்ற தலைப்பில் கவிஞர் விவேக் பாரதி (சொல்லறச் செல்வன்), கவிஞர் சிவநிறைச் செல்வி (இல்லற ஏந்தல்), கவிஞர் விஜயகிருஷ்ணன் (வில்லற வேந்தன்), கவிஞர் அ.க.ராஜாராமன் (நல்லற நாயகன்) ஆகியோரின் சிறப்புக் கவிதைகள் வாசிக்கப்பட்டன! ஶ்ரீ ஶ்ரீ பிரம்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார்கள்.

அதே நேரத்தி, மற்றுமொருஅமர்வில் “இராமாயணத்தில் முனிவர்கள்” என்ற தலைப்பில் வசிஷ்டர் (திருமதி காந்தலெஷ்மி சந்திரமெளலி), பரத்வாஜர் (புதுவை திரு வயி நாராயணசாமி), விஸ்வாமித்திரர் (புலவர் திருமதி விஜயலஷ்மி), அகஸ்தியர் (திருமதி ரமா சுப்பிரமணியன்) போன்ற முனிவர்களின் பங்களிப்பு, ராமாயணத்தில் எப்படி பார்க்கப்படுகிறது என்று பேசப்பட்டது !

அடுத்து வந்த ‘இளையோர் அரங்கம்’ இந்தக் கருத்தரங்கத்தின் முத்தாய்ப்பான அமர்வாக இருந்தது. வழக்கறிஞர் சுமதியின் தலைமையில், “பன்முகப் பார்வையில் ஶ்ரீராமர்” என்ற தலைப்பில் இளைஞர்களின் பேச்சு! யோகேஷ்குமார், கைகேயியின் பார்வையையும், இலக்கியா குகனின் பார்வையையும், அனுக்கிரஹா ஆதிபகவன் அனுமன் பார்வையையும், திருமாறன் வாலியின் பார்வையையும், பத்மா மோகன் விபீஷணனின் பார்வையையும், கோ சரவணன் இராவணன் பார்வையையும் படம் பிடித்தாற்போலப் பேசினர். பேச்சில் தெளிவும், பார்வையில் நேர்மையும், ஆராய்வதில் புத்தி கூர்மையும் பளிச்சிட்டன! வாழ்த்துகள் !

நிறைவு விழாவில், நீதியரசர் திரு ஜி ஆர் சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றினார். ஶ்ரீராமர் பாதம் மற்றும் ராமர் ஜாதகம் வெளியிட்டுப் பேசியவர் திரு எஸ் கோபாலகிருஷ்ணன். தாமல் திரு இராமகிருஷ்ணன், திருமதி பெருந்தேவி, இலக்கிய வீதி திரு. இனியவன், திரு பழ பழனியப்பன் ஆகியோருக்கு தேஜஸ் விருது வழங்கி கெளரவிக்கப் பட்டது.

நிறைவாக உ.வே.வில்லூர் நடாதூர் வி எஸ் ஶ்ரீ கருணாகரச்சார் ஸ்வாமிகள் “ஶ்ரீராமர் பட்டபிஷேகம்” உபந்யாசம் நடைபெற்றது. இருநூற்றுக்கும் அதிகமான இராமாயணங்கள், உலகின் பல பகுதிகளில் அவர்கள் கலாச்சாரத்திற்கேற்றமாறுதல்களுடன் வழங்கி வருகின்றன என்றார் – கம்பர், அருணாசல்க் கவி, வால்மீகி, துளசி என பலரின் ராமாயணங்களிலிருந்து ஶ்ரீராமர் பட்டாபிஷேகம் பற்றிய ஸ்லோகங்கள், பாடல்களை மிக அழகாகச் சொன்னார்.

மாநாட்டுத் தீர்மானங்கள் – 1) 2021 பிப்ரவரி, “தமிழ்த் தாத்தாவும் இலக்கியங்களும்” மாநாடு நடத்தப் படும். மாநாட்டில் சந்திரமோகன் எழுத்து இயக்கத்தில், உ.வே.சா. பற்றிய மேடை நாடகம் நடைபெறும்.

2) “சங்கல்பம்” என்னும் ஆய்விதழ் ஒன்றைக்கொண்டு வருவது.

3) மகாகவி பாரதியின் நினைவைப் போற்றும் வண்ணம் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்துவது.

முதல்நாள், “இலங்கையில் இராமாயணத் தேடல்கள்” புத்தகம் (Dr.ஷ்யாமா சுவாமிநாதன் எழுதிய ஆன்மீகப் பயணக் கட்டுரை நூல்) வெளியிடப்பட்டது. இலங்கையில் நடந்தேறிய ராமாயணத்தின் காட்சிகளை இன்றும் மனிதர்கள் கண்டு அறிந்து கொள்ளக் கூடிய உண்மைச் சுவடுகள் என ஐம்பத்தியொரு இடங்கள் இலங்கையில் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றைப் பற்றிய செய்திகளையும், இந்த இடங்களுக்குச் சென்று வந்த அனுபவங்களையும் சுவையுடன் எழுதியுள்ளார் டாக்டர் ஷ்யாமா. வாசிக்க வேண்டிய நூல்! (செங்கைப் பதிப்பகம், ஆலப்பாக்கம், வல்லம் PO,

செங்கல்பட்டு – 603 003).

மாநாட்டின் முடிவில், நல்லதொரு ஆன்மீக, தமிழிலக்கிய, இந்திய கலாச்சார அனுபவத்தை சுவாசித்த திருப்தி இருந்தது என்றால் மிகையில்லை!