அட்டைப்படம் சொல்லும் க(வி)தை – ஸ்ரீராம்

“குவிகத்து மலர் முகத்தில், இதழோடு இதழ் சேர்த்து,
                       குவிந்து மதுவில் மயங்கும் – மகரந்தக் காதல் சிட்டு”


பகுத்து அறிதல் என்ற ஒன்றை அறியா பருவம் அது. நண்பர்களுடன் இளமையில் சுதந்திரமாய் கழித்த நாட்கள் பல.

பள்ளியில் தெச்சி பூச்செடிகள் பூத்துக் குலுங்கிக் கிடக்கும்.

அப்பூக்களைக் கொத்தாக எடுத்து, அடிப்பாகத்திலிருந்த தேனை உறிஞ்சிக் குடிப்பது என்பது ஒரு சுகானுபவம்.

பூஜைக்கு சமர்ப்பித்த  தெச்சிப் பூக்கள் மறு நாளில் “நிர்மால்யம்” எனப்படும்.

அந்த நிர்மால்ய பூக்களை அம்மா பத்திரப்படுத்தி, காயவைத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து, காய்ச்சி, ஆறவைத்து, பாட்டிலில் நிரப்பி வைப்பார்.

தினமும் காலையில் குளிப்பதற்கு முன் அந்த எண்ணெயை சிறிது தேய்த்து ஊறிய பிறகு குளிக்க, தோல் பளபளக்கும்! 

வீட்டுத் தோட்டத்து தெச்சி பூக்களை -ஆர்வமாய்- Loten’s Sunbird என்ற தேன்சிட்டுகள் நாடி வரும்.

கொக்கி போன்ற அலகு கொண்டு அது தேனைப்பருகும்.

அந்த அழகு இறைவனின் எண்ணற்ற லீலைகளில் ஒன்று.

மலரின் இதழோடு தன் அலகிதழ் வைத்து அந்தப் பறவை தேனை உண்ணும் போது அது செடிகளின் மகரந்த சேர்க்கைக்கு பங்களிப்பது என்பது ஒரு போனஸ்.

நான் ரசித்ததை நீங்களும் ரசிக்கலாமே!

அதுதான் இந்த இதழின் அட்டைப்படம் !


புகைப்படமும் கருத்தும்  ஸ்ரீராம் –

இயற்கையைப் புகைப்படங்களால் ஓவியமாகத் தீட்டும் கலைஞர்.

புகைப்பட விபரக்குறிப்பு: (Nikon Z7; ISO: 1000;  1/1000 second; f/6.3)

 

யாதெனின்..யாதெனின்” -டி வி ராதாகிருஷ்ணன்

பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஜக்கி ஷர்மாவின் இறுதி ஊர்வலப் புகைப்படங்கள்– News18 Tamil

என் மேசைக்கு வந்த கட்டுரையில் இருந்த பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்த
போது..இன்டெர்காம் ஒலித்தது.

‘கொஞ்சம் உள்ளே வா..’ என்றார் ஆசிரியர்.

நான் அவர் அறைக்குச் செல்லுமுன் என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு..

நான்..கிருஷ்ணன்..ஜர்னலிசம் படித்துக் கொண்டிருந்த போதே ..அந்த
வாரப்பத்திரிகையின் மாணவ பத்திரிகையாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன்.பின்
படிப்பை முடித்ததும்..உதவி ஆசிரியர் வேலையும்..அங்கேயே கிடைத்தது..

ஆசிரியர் அறையை அடைந்ததும்..கதவை லேசாக தட்டினேன்..

‘வா..கிருஷ்ணா..’ என்றார் ஆசிரியர். சென்றேன்..

‘உட்கார்..’என்றவர் .அன்றைய தினசரி ஒன்றை எடுத்துப் போட்டு..அவர்
கோடிட்டு இருந்த செய்தியைச் சுட்டிக்காட்டி ..’படித்தாயா?’ என்றார்.

ஏற்கனவே படித்த செய்தி..இருந்தாலும்..அவர் சொன்னார் என்பதற்காக மீண்டும்
படித்தேன்..

தமிழக வீரர் மரணம்

என்ற கொட்டை எழுத்துக்களில் போட்டு..பின்..

தனசேகர் என்னும் ராணுவ வீரர் ஒருவர்..பாகிஸ்தானுடன்..திடீரென எல்லையில்
ஏற்பட்ட போரில்..தன் தீரத்தைக் காட்டி..அவர்களை புறமுதுகிட்டு ஓட
வைத்ததாகவும்..அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ..சிலரை சுட்டு
வீழ்த்தியதாகவும்..பின் பாகிஸ்தானின் எதிர் குண்டு வீச்சில்
இறந்ததாகவும்…குறிப்பிட்டிருந்தது.

மேலும்..அவ்வீரன்..தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூங்குளம் கிராமத்தைச்
சேர்ந்தவன் என்றும்..அங்கு அவரது தந்தை இருப்பதாகவும்
குறிப்பிட்டிருந்தது.

‘கிருஷ்ணா..உடனே..புறப்படு..அவர் உடல் அடக்கத்தில்
கலந்துக்கொள்..முடிந்தால்..அவர் தந்தையிடம் ஒரு பேட்டி எடு’ என்றார்
ஆசிரியர்.

என் சக ஃபோட்டோகிராபர் மணியனுடன் இரவே கிளம்பினேன்.
*** *** *** ****

பூங்குளம்..

பிரதான சாலையில்..பஸ்ஸிலிருந்து இறங்கினோம்.உள்ளே ஒரு கிலோமீட்டர்
நடக்க வேண்டும் என்றார்கள்.பாதையின் இரு பக்கங்களிலும் வாழைத்
தோப்பு.கிழக்கே பார்த்த சிவன் கோவில் ஒன்று.சற்று
வடக்குப் புறம் திரும்பியது சந்து..மொத்தம் ஊரே 100 வீடுகள் தான்
இருக்கும்.அதற்கு அப்பால்..வயல்வெளிகள்…பச்சை ஆடை அணிந்த பருவம் வந்த
கன்னிப் பெண்கள் கூட்டம் போல் ..அவர்கள் கலகல சிரிப்புப் போல காற்றில்
சலசல என சப்தத்துடன் ஆடி மகிழ்ந்தன..அறுவடைக்குத் தயாராய் இருந்த
நெல்மணிகள்.எவ்வளவு பேரின் பசியைத் தீர்க்கும் பாக்கியம் பெற்றவை அவை?

கிராமத்தின் அழகில் மனம் பறிகொடுத்தபடியே..அங்கு கில்லி விளையாடும்
சிறுவர்களை பார்த்தோம்.தமிழக
ஆட்டங்களான..பம்பரம்,கோலி,கிளித்தட்டு,கில்லி..ஆகியவை இறந்துவிட்ட
பெருநகரங்களையும் மனம் ஒரு நிமிடம் நினைத்தது. …

ஒரு சிறுவனைக் கூப்பிட்டு..’தம்பி..பட்டாளத்துக்கு
போனாரே..தனசேகர்..அவர் வீடு எது?’ என்றேன்.

பையன்…ஊர் எல்லையில் இருந்த ஒரு பனை ஓலை வேய்ந்த குடிசையை…கை காட்டினான்.

அங்கு சென்றவன்..’ஐயா..ஐயா..’ எனக் குரல் கொடுக்க…

வயதான ஒருவர்..நரைத்த தாடி,மீசையுடன்..வெளியே வந்து..தன் இரு
கைகளையும்..கண்களுக்கு மேல்..மறைத்து..’யாரு’ என்றார்.

‘ஐயா..நாங்க..மதராஸ்ல இருந்து வரோம்..உங்க பையன்..நாட்டுக்கு,குறிப்பா
தமிழ்நாட்டுக்கு..அதுவும்..இந்த கிராமத்திற்கு பெருமையைச்
சேர்த்துட்டார்.அவரது சேவையை நாங்க பாராட்டுறோம்..அவரோட உடல் நாளைக்கு
வரப்போறதா..கேள்விப்பட்டோம்..அதுக்கு மரியாதை செலுத்த
வந்திருக்கோம்.உங்க மகன் பற்றி..நீங்க எதாவது சொல்ல விரும்பினா
சொல்லுங்க..எங்க பத்திரிகைல அதைச் போடறோம்’ என்றேன்.

‘என்னத்த சொல்றது..தம்பி..’ என்றபடியே ஆரம்பித்தார் அவர்.

‘நாங்க தலித்துங்க..தம்பி..தீண்டத்தகாதவங்க..இந்த பையன் தனசேகரை பெத்துப் போட்டுட்டு..என் சம்சாரம் போய் சேர்ந்துட்டா..அப்பறம்..வேற கல்யாணம் கட்டிக்காம..என் பையனை நானே வளத்தேன்.நாம தான் படிக்கலை..நம்ம பையனாவது படிக்கட்டும்னு..நாயா உழைச்சேன்.தம்பி..அவன் படிக்கறப்ப..வாத்தி..இந்த கிளாஸ்ல தாழ்ந்த சாதி யார்னு கேப்பாராம்.கூனிக் குறுகி இவன் எழுந்து நிப்பானாம்.இவன் சாதி என்னென்னு தெரிஞ்சதும்..இவன் ஃபிரண்ட்ஸ்கூட இவன் கூட பேசறதில்லையாம்.

ஒரு நா..இவன் எம்.சி.ஆரோட..ஒரு தாய் மக்கள் நாமென்போம் ங்கற பாட்டை
பாடிட்டு வரப்பு மேல வந்தான்.அப்ப..எதுர வந்த பஞ்சாயத்து தலைவர்..உசந்த
சாதி..ஆளு..அவருக்கு வழிவிட வரப்புல ஓரமா ஒதுங்கினான் இவன்.உடனே அவர்
இவன் கன்னத்தில பளார் ன்னு அறைவிட்டு..ஏண்டா..கீழ் சாதி நாயே..நான்
வர்றேன் இல்ல..நீ வயல்ல இறங்கி வழி விடறதை விட்டுட்டு..வரப்புலேயே
ஒதுங்கி நிக்கறாயா..நான் உன்னை இடிச்சுக்கிட்டுப் போகணுமா?ன்னாராம்.
ஏன்..தம்பி..இவரு பளார்னு அறைஞ்சாரே..அப்பமட்டும் அவர் கை எங்க மேல
படலியா?

அவன் அப்படியே..பல அவமானத்தை தாங்கிகிட்டு வளந்தான்.எங்க ஊரு
டீக்கடையிலே..இன்னி வரை இரட்டை டம்ளர் தான்.அப்போ..தலைவரை சேர்ந்தவங்க எல்லாம்..அதை எதிர்த்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தாங்க.

அவங்களுக்கு..பந்தல் போட்டு கொடுத்துட்டு..என்னோட மவனும்..அவங்களோட
ஓரமா..உட்காந்து..உண்ணாவிரதம் இருந்தான்.

சாயரட்சை..உண்ணாவிரதம் முடிஞ்சதும்..அந்த கட்சித் தலைவரு வந்து பழ சூசு
குடுத்து..விரதத்தை முடிச்சுவைச்சார்.கடைசியா மிச்சமிருந்த சூசை இவன்
சாப்பிட்டிருக்கான்.அப்போ முதுகுல பலமா ஒரு உத விழுந்ததாம்.’ ஏண்டா
……பயலே..உனக்கும் சூசு கேக்குதான்னு தலைவர் உதச்சாரு.

அன்னி ராப்பூரா இவன் தூங்கல..அழுதுகிட்டே இருந்தான்.காலைல
ஆளைக்காணும்.எங்கெங்கோ தேடினேன். ஊர் எல்லைல இருக்கற குளத்துல போய் பார்த்தேன்…முதக்கறானான்னு..ம்…காணும்..எங்க போனான்னு
தெரியல..தவிச்சுப்போயிட்டேன் தம்பி.

கொஞ்ச நா கழிஞ்சு..ஒரு கடுதாசு வந்தது..அதுல..தான் பட்டாளத்துல
சேர்ந்துட்டதாயும்..கவலைப்படாதேன்னும் எழுதியிருந்தான்.

அவன் சாகல..எங்கனாச்சும் நல்லா இருந்தா சரின்னு வுட்டுட்டேன்.மனசை
தேத்திக்கிட்டேன்.’

இந்த இடத்தில்..அடக்க முடியாது அழ ஆரம்பித்தார் பெரியவர்..அவரை தேற்ற எண்ணி…

‘என்ன ஜனங்க இவங்க..நாயைக்கூட தொட்டு..கொஞ்சி விளையாடறவங்க.. மனுஷனைத் தொடக்கூடாதாம்’ என்றேன்..

அதற்கு..அவர்..’அந்த நாயைக்கூட நல்ல உயர்ந்தசாதி நாயா பார்த்துத்தானே
தம்பி வாங்கறாங்க’ என்றார்.

அப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க..என்றார் உடன் இருந்த புகைப்படக்காரர்.

‘அப்பறம் என்ன தம்பி..ராணுவ ஆபீசில இருந்து..நேத்து ஒரு தந்தி
வந்துது..அதுல..நம்ம நாட்டு எல்லைல..பாகிஸ்தானோடு நடந்த போர்ல..இவன்
அவக சில பேரை கொன்னானாம்.இவனையும் கொன்னுட்டாங்களாம். அப்படின்னு சேதி இருந்தது.

தம்பி மனசுல..துக்கம் தாங்கல..ஆனாலும்..என் பையன் நாட்டுக்காக
செத்திருக்கான்னு ஒரு சந்தோசம்..

சேதி கேட்டு..எந்த தலைவர்..சூசு சாப்புடும்போது உதச்சாரோ..அவரே..காலைல
வந்து..அந்த மாவீரனை புள்ளையா பெத்தயேன்னு பாராட்டி..சால்வை
போத்தினார்.ஃபோட்டோ கூட என்னோட எடுத்துக்கிட்டார்.எம் பையன்
செத்து..அவனுக்கும்…எனக்கும்..என் சாதி மக்களுக்கும் பெருமை வாங்கி
தந்துட்டான்.எனக்கு அது போதும் தம்பி’

அதற்குள்..வெளியே..கூச்சல் கேட்க..மூவரும் வெளியே வந்தோம்..

ஒரு ஆம்புலன்ஸ்..ராணுவ ஜீப் பின் தொடர வந்தது..தவிர..உடன் கட்சித்
தலைவர் காரும்..வேறு சில கார்களும் வந்தன.

குடிசைமுன் நின்ற ஆம்புலன்ஸிலிருந்து..தனசேகர் உடலை ராணுவ வீரர்கள்
இறக்கினர்..அவனது உடைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டன.

பின் ஒவ்வொரு..தலைவராக வந்து மாலை.மலர் வளையம் என மரியாதை செலுத்தினர்.

அன்றிரவு முழுதும் ஊரே உறங்கவில்லை.

அடுத்த நாள் உடல் தகனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.தலைவர் உட்பட
அனைத்து தர மக்களும்..தனசேகரின் கால்களைத் தொட்டு வணங்கினர்.

குண்டுகள் வெடித்து..மரியாதை செய்யப்பட..உடல் தகனம்
செய்யப்பட்டது..தலைவர்..சந்தனக்கட்டைகளை எடுத்து..சிதையில் இட்டார்.

அந்த நேரம் வரை அழாத பெரியவர்..திடீரென..குலுங்க..குலுங்க..’டேய்..நீ
சாதிச்சுட்டேடா..சாதிச்சுட்டே..’ என அழ ஆரம்பித்தார்.

இப்போது எனக்கு ஒன்று புரியவில்லை…

உடலில் உயிர் இருக்கும் போது மதிக்காதவர்கள்..உயிர் பிரிந்ததும்…….ஏன்?

ஆமாம்..இவர்கள் உயர்ந்த ஜாதி,கீழ் ஜாதின்னு எதை வைச்சு சொல்றாங்க…

உயிரைவைத்தா..உடலை வைத்தா..புகழை வைத்தா..பணத்தை வைத்தா?

நாங்கள் கிளம்பினோம்..

அதற்கு முன்..ஃபோடோகிராபரிடம்..’மணி..அந்தப் பெரியவர்  அழும் போது தலைவர் கட்டிக்கொண்டு ஃபோட்டோ எடுக்கச் சோன்னாரே..அதை சரியா எடுத்தியா…அடுத்த வாரம் நம்ம ஆசிரியர் அதைத்தான் அட்டைப்படமா போடுவார்’ என்றேன்..மன இறுக்கத்துடன்

 

ட்விஸ்ட் —– நித்யா சங்கர்

Court Scene GIF | Gfycat

 

அந்தக் கோர்ட்டே ஸ்தம்பித்து போயிருந்தது.

என்ன சொல்கிறார் பிராஸிக்யூட்டர் பரந்தாமன்.? ஒரு அணுகுண்டையல்லவா தூக்கிப் போட்டு விட்டார்?

அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நீதிபதி முகத்தில் ஈயாடவில்லை. டி·பன்ஸ் அட்டர்னி ராமன் முகத்திலே ஒரு குழப்பம். குற்றவாளிக் கூண்டிலே
நிறுத்தப்பட்டிருந்த பாபு, ராமு, சோமு அயர்ந்து போய் முகத்திலே கலவரம் சூழ நின்றிருந்தார்கள். கோர்ட் ஹாலில் நிரம்பி வழிந்திருந்த பார்வையாளர்கள் முகத்திலே குழப்பத்துடன் ‘என்ன நடக்கப் போகிறதோ’ என்ற ஆர்வ ரேகைகள்.
ஒரு பயங்கரமான நிசப்தம் கோர்ட் ஹாலில். அந்த குண்டைத் தூக்கிப் போட்ட பரந்தாமன் எல்லோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் கடையிதழில் வழியும் ஒரு புன்னகையோடு.

அமைதியாக சீராக ஓடும் நீரோடை போல் போய்க் கொண்டிருந்த அந்த வழக்கிலே ஒரு எதிர்பாராத ‘ட்விஸ்ட்.’

ஆறு மாதங்கள் முன்பு நாட்டையே உலுக்கிய பாலியல் பலாத்கார வழக்குதான் நடந்து கொண்டிருந்தது. அந்த ஊரின் பெரிய தனவந்தரும், நல்ல அரசியல் செல்வாக்குமுடைய தணிகாசலத்தின் மகன் பாபு, தனது நண்பர்கள் ராமு, சோமுவுடன் சேர்ந்து அவர்களது கெஸ்ட் ஹவுஸில் ஒரு பதினைந்து வயதுப் பெண்ணை, அவள் கதறக் கதற பலாத்காரம் செய்து, கொன்று விட்டார்கள்’ என்பதுதான் வழக்கு.

அவர்கள் மூவரும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப் பட்டிருந்தனர். அந்த வழக்கு ஏறக்குறைய ஒரு முடிவை நெருங்கியிருந்தது. அந்த சமயத்தில்தான் பரந்தாமன் ஒரு அணுகுண்டைத் தூக்கி போட்டார்.

‘ரிப்போர்டர் மோகனை எனது அடுத்த சாட்சியாக அழைக்க விரும்புகிறேன்’ என்றார்.

தன்னைச் சுதாரித்துக் கொண்டு, ஒரு சிறிய நக்கல் சிரிப்போடு மெதுவாக எழுந்த ராமன், ‘யுவர் ஆனர்…மிஸ்டர் பரந்தாமனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, ப்ராஸிக்யூஷன் தரப்புப்படி அந்தக் கோர சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாக கருதப்படும் ரிப்போர்டர் மோகன், அந்த சம்பவம் நடந்த அன்று இரவு சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி பின் இறந்து விட்டார் என்று ஹாஸ்பிடல் ரிகார்ட்ஸ¤ம், போலீஸ் ரிகார்ட்ஸ¤ம் கூறுகின்றன. அப்படி இறந்து விட்ட மோகனை ப்ராஸிக்யூடர் சாட்சியாகக் கூப்பிடப் போகிறாரா என்ன? இது கோர்ட்டின் டைமை வீணடிக்கும் வேலை.. அவர் என்ன இதிகாசத்தில் கூறப்படும் சாவித்திரி மாதிரி எமனிடம் மன்றாடி அவரை மீட்டு வந்திருக்கிறாரோ..? அல்லது ஏதாவது ஜால வித்தை காட்டப்போகிறாரோ?’ என்று நிறுத்தினார்.

பார்வையாளர்கள் சிரிப்பலை நிற்க சில நிமிடங்களாயின.

‘அதை நீங்கள் சிறிது நேரத்தில் பார்க்கத்தானே போகறீர்கள்’ என்றார் பரந்தாமன்.

‘அப்படியே வந்தாலும், கூண்டில் நிற்கும் என் கட்சிகரர்களை அடையாளம் காட்ட முடியாது. ஏனென்றால் சம்பவம் நடந்த அன்று அவர்கள் ஊரிலேயே இல்லையே..
அவர்கள் திருச்சியில் ஏ.பி.ஸி. லாட்ஜில் இருநூற்று பத்தாம் ரூமில் நாள் முழுதும் இருந்ததற்கு அந்த லாட்ஜ் ரிஸப்ஷன் ஸ்டாப் ஜேம்ஸ் சாட்சி கூறி இருக்கிறார். அதனால் இது கோர்ட்டின் நேரத்தை வீணடிக்கும் முயற்சி. இதை ஒத்துக் கொள்ளக் கூடாது..’ என்றார்.

‘மிஸ்டர் ராமன், ப்ராஸிக்யூஷனுக்கு ஆகட்டும், டி·பன்ஸ¤க்கு ஆகட்டும், நீதிபதி தீர்ப்பு எழுதும் வரை டைம் இருக்கு. எப்பொழுது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

யுவர் ஆனர்..அந்த மறைந்த ஆத்மாவுக்கு ஐ வான்ட் டு கெட் ஜஸ்டிஸ்.. இது நாடே எதிர்பார்த்து உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் வழக்கு. அதனாலே ப்ராஸிக்யூஷனுக்கு ஆகட்டும், டி·பன்ஸ¤க்கு ஆகட்டும் அவர்கள் பக்கத்து சாட்-
சிகளை தீர விசாரிக்கவும், அவர்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லவும் அனுமதிக்க வேண்டும்’

‘பெர்மிஷன் க்ரான்டட்..’

‘யுவர் ஆனர்.. ரிப்போர்ட்டர் மோகனை அழைப்பதற்கு முன், நேற்று சாட்சியம் அளித்த ஏ.பி.ஸி. லாட்ஜ் ரிஸப்ஷன் ஸ்டா·ப் ஜேம்ஸை அழைக்க நினைக்கிறேன். அவரை மேலும் சில கேள்விகள் கேட்க வேண்டும்..’ என்றார் பரந்தாமன்.

‘டாமிட்.. மை காட்.. திஸ் ஈஸ் டூ மச்.. அப்ஜக்ஷன் யுவர் ஆனர்.. ஜேம்ஸை நேற்றே விசாரித்தாகி விட்டது. ப்ராஸிக்யூட்டரும் நன்றாக விசாரித்து விட்டார்.. அவரை
எகெய்ன் விசாரிக்க அழைப்பது வேஸ்ட் ஆ·ப் டைம்..ஒத்துக் கொள்ளக் கூடாது’ என்றார் ராமன் தன் இருக்கையிலிருந்து எழுந்து.

‘மிஸ்டர் ராமன்.. மேலோட்டமாகப் பார்க்கும்போது சில உண்மைகள் புலப்படுவதில்லை.. நன்றாக உற்றுக் கவனிக்கும்போது, யோசிக்கும்போதுதான் புலப்படுது.’

‘மிஸ்டர் பரந்தாமன்.. அப்படி என்ன உங்களுக்குப் புலப்பட்டு விட்டது..?’

‘சிறிது பொறுமையாக இருங்கள்.. நீங்கள் கொண்டு வந்த சாட்சியான ஜேம்ஸே சொல்வார்..’

ஒரு கணம் யோசித்து விட்டு ‘அப்ஜக்ஷன் ஓவர்ரூல்டு’ என்றார் நீதிபதி.

ஜேம்ஸ் சாட்சிக் கூண்டில் வந்து நின்றார்.

எக்ஸிபிட்டாகக் கொடுக்கப்பட்டிருந்த ஏ.பி.ஸி லாட்ஜின் விருந்தினர் வருகைப் பதிவேட்டின் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தபடி அவரை நெருங்கி வந்தார் பரந்தாமன்.

மிஸ்டர் ஜேம்ஸ், இந்தப் பதிவேட்டின் எல்லாப் பக்கங்களிலும், முதல் வரியும், கடைசி வரியும் சிவப்பு வண்ணத்தில் இருக்கிறது. மற்ற வரிகளெல்லாம் நீல வண்ணத்தில் இருக்கின்றன இல்லையா..?’

‘ஆமாம்..’

‘ப்ராஸிக்யூட்டர் சாட்சிக்கு நிறங்களைப் பற்றி வகுப்பு எடுக்கிறார் போலிருக்கு’ என்றார் ராமன் நக்கலாக.

கோர்ட்டில் சிரிப்பலை பரவியது.

‘ஆர்டர்… ஆர்டர்..’ என்றார் நீதிபதி.

‘இந்தப் பக்கங்களில் சிவப்பு கோடுகளான முதல் கோடையும், கடைசி கோடையும் விட்டு விட்டு நீலக் கோடுகளில் தான் நீங்கள் விருந்தினர் வருகையைப் பதிவு செய்திருக்கிறீர்கள் இல்லையா.. அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா..’

‘அது எங்கள் லாட்ஜில் பழக்கத்தில் வந்தது. தனிப்பட்ட காரணம் ஒன்றும் இல்லை..’

‘ஓகே.. விருந்தினர் வர வர ஒவ்வோரு லைனாக எழுதிக் கொண்டே வருவீர்கள் அல்லவா…? அதாவது ஒரு விருந்தினர் காலை ஆறு மணிக்கு வந்திருந்தால் முதல்
லைனிலும், இரண்டாமவர் ஆறு முப்பதுக்கு வந்தால் இரண்டாவது லைனிலும் என்று எழுதிக் கொண்டே வருவீர்கள் அல்லவா…?’

‘ஆமாம்..’

‘ குட்கோயிங்.. யுவர் ஆனர்.. இதை நோட் செய்து கொள்ளுங்கள்’ என்று நீதிபதியை நோக்கிக் கூறிவிட்டு, சாட்சியிடம் திரும்பி, ‘இந்தப் பதிவேட்டை எழுதுவதற்கு ஒரே
பேனாவை யூஸ் பண்ணுவீங்களா.. அல்லது வேறவேற பேனாவை யூஸ் பண்ணுவீங்களா..’

‘ரிஸப்ஷன் டெஸ்கில் ஒரு பேனா ஸ்டான்ட் இருக்கு. அதில் ஒரு பேனா. பால் பாய்ன்ட் பேனா- வைக்கத்தான் ப்ரொவிஷன் இருக்கு. அதிலிருந்து பேனாவை எடுத்து எழுதி விட்டு அந்த ஸ்டான்டிலேயே வைத்து விடுவோம்’

‘எக்ஸலன்ட்..இப்பொழுது சம்பவம் நடந்த மார்ச் ஆறாம் தேதி குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் மூவரும் உங்கள் லாட்ஜுக்கு எத்தனை மணிக்கு வந்தார்கள்..? எந்த ரூமில் தங்கினார்கள்..?எத்தனை மணிக்கு ரூமைக் காலி செய்தார்கள்’

‘அவர்கள் மார்ச் ஆறாம் தேதி பகல் பதினொன்று மணிக்கு வந்து லாட்ஜில் ரூம் எடுத்தார்கள். அடுத்த நாள் அதாவது, ஏழாம் தேதி பகல் இரண்டு மணிக்கு காலி செய்தார்கள். அவர்கள் தங்கியிருந்த அறை எண் இருநூற்று பத்து

 ‘அவர்கள் வந்த டீடேய்ல்ஸ் எந்தப் பக்கத்தில் பதிவாகி இருக்கு..’

‘இதோ நாப்பத்தஞ்சாம் பக்கத்தில் பதிவாகியிருக்கு..’ என்று அந்தப் பக்கத்தை எடுத்துக் காட்டினார் ஜேம்ஸ்.

‘குட்.. அன்றைய என்ட்ரீஸ் நாப்பத்தஞ்சாம் பக்கத்தில் முதல் லைனில் ஆரம்பித்திருக்கிறது.. முதல் கஸ்டமர் காலைஆறு மணிக்கு வந்திருக்கார்.. பின் ஆறு பதினைந்து, ஆறு முப்பது, ஏழு, ஏழு பதினஞ்சு, ஏழு முப்பது என அடுத்தடுத்த
லைன்களில் பதிவாகி இருக்கிறது. குற்றவாளிகள் என்ட்ரிக்கு முன் லைனில் கஸ்டமர் வருகை பிற்பகல் மூன்று மணி என்று பதிவாகி இருக்கு. தொடர்ச்சியாக அடுத்த பக்கத்தில் முதல் என்ட்ரி மூன்று முப்பது என்று இருக்கு. இது எப்படி
நடந்தது மிஸ்டர் ஜேம்ஸ்…?’

‘அது வந்து… அது வந்து…”

‘ஓகே.. அது போகட்டும்.. ஒரு பக்கத்திலேயும் சிவப்பு கோட்டில் எழுதாதவர் இந்தப் பக்கத்தில் மட்டும் ஏன் சிவப்பு லைனில் எழுதி இருக்கீங்க..?

‘அது வந்து… அது வந்து.. எப்படி நடந்தது என்றே தெரியவில்லை..’

‘ஓகே.. அதுவும் போகட்டும்… இன்னொன்று பார்த்தீர்களா.. அந்தப் பக்கத்தில் எல்லா என்ட்ரீஸ¤ம் நீல நிற பால் பாய்ன்ட் பென்லே எழுதியிருக்கீங்க.. இந்த ஒரு என்ட்ரி மட்டும் எப்படி கறுப்பு மை பேனாவால் எழுதப்பட்டிருக்கு?’

‘என்ன ஸார்.. அதில் மை தீர்ந்திருக்கும்..வேறே பேனாவால் எழுதியிருப்பேன்..’ என்று மெதுவாக நகைத்தார் ஜேம்ஸ் பார்வையாளர்களைப் பார்த்துக் கொண்டே. பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய தான் சமயோஜிதமாக இந்தக் கேள்விக்கு பதில் சொல்லி விட்டோமே என்ற ஒரு திருப்தி இருந்தது அவர் முகத்தில்.

‘ஓ.. ஐ ஸீ.. ஆனா மிஸ்டர் ஜேம்ஸ்.. நீங்க அடுத்த பக்கத்தைப் பார்த்தீங்கன்னா அந்த நீல மையே கன்டின்யூ ஆகியிருக்கு..’

பக்கங்களைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த பரந்தாமன், ‘இன்னொன்று கவனிச்சீங்களா.. எழுபதாம் பக்கத்திலிருந்து கறுப்பு மை பேனாவை யூஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கீங்க.. அதாவது மார்ச் இருபதாம் தேதியிலிருந்து.. அதே பேனாதான் நாப்பத்தஞ்சாம் பக்கம் குற்றம் சாட்டப்பட்ட இந்த மூவர் வந்த என்ட்ரியையும் பதிவு பண்ண உபயோகப்படுத்தபட்டிருக்கு.. ப்ளீஸ் நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்..

மிஸ்டர் ஜேம்ஸ் உங்கள் லாட்ஜில் மார்ச் ஒன்றாம் தேதி ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பாக பேப்பரில் வந்ததே.. ஞாபகம் இருக்கா,,?’ என்றார் பரந்தாமன் திடீரென்று..’

‘யுவர் ஆனர்.. அந்தக் கேஸிற்கும் இந்தக் கேஸ¤க்கும் என்ன சம்பந்தம்.? அப்ஜக்ஷன் யுவர் ஆனர்.’ என்றார் ராமன்

‘யுவர் ஆனர் இன்னும் சிறிது நேரத்தில் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியும்..’

‘அப்ஜக்ஷன் ஓவர் ரூல்டு..’

‘ஆமாம்.. அதை எப்படி மறக்க முடியும்..?’

‘தாங்க் யூ… அந்த தற்கொலை எந்த ரூமில் நடந்தது  என்று சொல்ல முடியுமா..?’

‘முடியும்.. இருநூற்று பத்தாம் அறையில்..’

‘அந்தச் சம்பவம் நடந்த அந்த ரூமை போலீஸ் மார்ச் ஒன்றாம் தேதி முதல், டீடேய்ல்ட் இன்வெஸ்டிகேஷனுக்காக பூட்டி ஸீல் வெச்சிருந்தாங்க இல்லையா… இன்வெஸ்டிகேஷன் முடிந்து என்னைக்கு அதை உங்கள் பொஸஷனுக்கு திருப்பிக் கொடுத்தாங்க..?’

‘மார்ச் இருபத்தஞ்சாம் தேதி…’

‘அப்போ மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து மார்ச் இருபத்தஞ்சாம் தேதி வரை அந்த ரூம் போலீஸ் கஸ்டடியில் இருந்தது. அப்படியிருக்க நீங்க எப்படி மார்ச் ஆறாம் தேதி அந்த ரூமை இந்த குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அலாட் பண்ணினீங்க…?’

‘அது வந்து.. அது வந்து…”

‘மிஸ்டர் ஜேம்ஸ்.. நீங்க சத்தியப் ப்ரமாணம் எடுத்துட்டு சாட்சிக் கூண்டிலே நின்னுட்டிருக்கீங்க.. நீங்கள் பொய் சொன்னாலோ, சாட்சியம் முன்னுக்குப் பின் முரணாகச் சொன்னாலோ என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா..?’

‘யுவர் ஆனர்.. யுவர் ஆனர்.. பரந்தாமன் என் சாட்சியை மிரட்டி அவருக்கு தேவையான ஸ்டேட்மென்டை வாங்கப் பார்க்கிறார்’ என்றார் ராமன் பரிதாபமாக.

இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்காத பார்வையாளர்கள் ஆர்வமொடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீதிபதியும் ஆர்வத்தின் உச்சத்திற்குப் போய், ‘ அப்ஜக்ஷன் ஓவர்ரூல்டு..மிஸ்டர் ஜேம்ஸ் பதில் சொல்லுங்கள்’ என்றார்.

‘மிஸ்டர் ஜேம்ஸ்.. உங்க நிலைமை எனக்குப் புரியுது… இட் ஈஸ் நாட் டூ லேட்.. உண்மையை இந்தக் கோர்ட்டுக்குச் சொல்லிட்டீங்கன்னா நீங்க எந்தத் தொந்தரவும் இல்லாம தப்பிக்கலாம்..’ என்றார் பரந்தாமன்.

‘ ஸார் என்னை மன்னிச்சிடுங்க.. ஏப்ரல் முதல் வாரத்துலே தணிகாசலம் ஸாரும், அவர் லாயரும் வந்து இந்த மாதிரி செய்யச் சொன்னாங்க.. வேறு ஒரு ரூமும் அந்த தேதியில் காலி இல்லாமல் இருந்ததனால் இந்த ரூமை அலாட் செய்ததாஎழுதச் சொன்னாங்க.. நான் அந்த ரூமை அலாட் செய்ய முடியாது என்று எவ்வளவோ சொன்னேன்.. ‘ஆனால் அதை யாரும் பார்க்கப் போறதில்லெ.. என்ன ஆனாலும் நாங்க உங்களுக்குப் பாதகம் வராம பார்த்துக்கறோம்னு சொன்னாங்க.. பெரியவங்க.. இந்த சமுதாயத்திலே நல்ல அந்தஸ்து உள்ளவங்க.. அவங்க சொல்லும்போது என்ன செய்வது.. நானும் ஒத்துக்கிட்டேன்..’ என்றார் பாதி அழுகையோடு.

‘அப்போ இந்தக் குற்றம் சுமத்தப்பட்டவங்க மார்ச் ஆறாம் தேதி உங்கள் லாட்ஜில் தங்கவில்லை அல்லவா..?

‘ஆமாம்..’ என்றார் ஜேம்ஸ் ஈனக்குரலில் பயத்தோடு. ‘தட்ஸ் ஆல்..’ யுவர் விட்னெஸ்’ என்று ராமன் பக்கம் திரும்பி கை காட்டினார் பரந்தாமன்.

”நோ க்வெஸ்ச்சன்ஸ்..’ என்றார் ராமன் பரிதாபமாக. அவர் முகம் இறுகிப் போயிருந்தது.

‘யுவர் ஆனர்.. அடுத்ததாக நிருபர் மோகனை விசாரிக்க  விரும்புகிறேன்’

‘மோகன்.. மோகன்.. மோகன்’ என்று டவாலி கத்த,அந்த கோர்ட்டே ஆவலால் உறைந்து போயிருந்தது.

(மீதி அடுத்த இதழில் )

 

 

 

 

ஏடாகூடக் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு

Types of kisses and what they mean : உங்க துணையோட உடம்புல நீங்க எந்தெந்த இடத்துல குடுக்குற முத்தத்துக்கு என்னென்ன அர்த்தம் தெரியுமா? - Tamil BoldSky

வெற்றிலைச் சிவப்பை

பார்க்கச் சொல்லி

வேலாய்க் கூரிய நாக்கை

வெளி நீட்டிக் காட்டுகிறான்

சிலிர்க்கிறது உள்ளுக்குள்

 

அவசர அவசரமாய்

உடை திருத்தி

வெளிவருகையில்

திடுக்கிடச் செய்தது

பயந்து ஓடிய

திருட்டுப் பூனை  

 

எக்கணத்திலும்

வாசல் நுழையக்கூடும்

விளையாடப் போன சின்னவன்

பாதி உரித்த பழங்களை

மூடிக்கூட வைக்கவிடாமல்

என்ன அவசரம் இந்த மனுசனுக்கு

 

சுரோனிதக் கனவுகளில்

பிசுபிசுக்கத் துவங்குகையில்

நாசியேறித் தொல்லை செய்கிறது

நன்கு பழகிய

முதுகுவலித் தைலத்தின் நெடி

 

மனப் பிறழ்விலிருந்து

மீள முயல்கிறேன்

மனம் பிறழ்வையே விரும்புகிறது

மதுரக் கோப்பைக்குள்விரும்பி விழுந்த

சிற்றெரும்பாய் நானும்

மலகோப்பைக்குள்

தவறி விழுந்த

பல்லியாய் அவளும்

உலக இதிகாசங்கள்(3) கில்காமேஷ் – எஸ் எஸ்

கில்காமேஷின் காவியம் இது வரைக்கும் கண்டுபடிக்கப்பட்ட அகழ்வுகளின் படி இது தான் மிகவும் பழமையான எழுத்து வடிவிலுள்ள கதை அல்லது இலக்கியம் என்பதாகப் பல வரலாற்றுக் குறிப்புகள் பதிவாகி வருகின்றன.

சுமேரியாவிலுள்ள “உருக்” தேசத்தை ஆட்சி செய்த அரசன் கில்காமேஷ் பற்றியும், அவன் வாழ்ந்த நாட்களில் நடந்த வெள்ளப்பெருக்கைப்பற்றியும் பேசுகிற அந்நவீனம் உண்மையில் இப்படி ஒரு அரசன் இருந்ததற்கான எந்த ஆதாரங்களையும் தரவில்லை. ஆனாலும் மிகப்பெரிய புகழ் பூத்த சுமேரிய அரசர்கள் வரிசையில் கில்காமேஷ்ஷையும் சேர்த்திருக்கிறார்கள்.

கில்காமேஷின் கதை 12 களி மண்தகடுகளில் எழுதப்பட்டிருந்தது.  . இன்றைய ஈராக் நாட்டோடு சிரியா, துருக்கி, இரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை இணைத்த நிலப்பரப்பே மெசபடோமியா. கிரேக்க மொழியில் மெசபடோமியா என்றால் இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள இடம் என்று பொருள். அந்த இரு நதிகள், யூப்ரட்டீஸ் மற்றும் டைக்ரிஸ். உலகத்தில் எல்லா நாகரிகங்களும் தோன்றுவதும் வளர்வதும் நதிக்கரைகளில் தான். இந்த வகையில் மொசப்படோமியாவின் “உருக்” கை ஆண்ட மன்னர்களுள் முக்கியமானவர் கில்காமேஷ் (Gilgamesh) .

கில்காமேஷின் கதையைச் சுருக்கமாகச்  சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

அதன் இலக்கிய நயத்துடன்  கூடிய முழுக்கதையைச்  சற்று விரிவாகப் பார்ப்போம்.

 

கில்காமேஷ் தான் உலகின் முதல் சூப்பர் ஹீரோ!

அவனது தாய் தேவ உலகில் அறிவின் தெய்வம்!  அழகும்  ஆற்றலும் நிறைந்த பேரரசி. அவனது தந்தையோ  சுமேரியாவின்  உருக்  என்ற  நாட்டின் பேரரசன். அதனால் அவன் மனித இனமும்  தேவ இனமும் கலந்து அமைந்தவன். மூன்றில் இரண்டு பங்கு தேவன். ஒரு பங்குதான் மனிதன்.

( கிட்டத்தட்ட நம் பீஷ்மர் போல – அவர் சந்துனு மகாராஜாவிற்கும் கங்கைக்கும் பிறந்தவரல்லவா? அதுபோலத்தான் கில்காமேஷும்!)

தேவர்கள் அவனுக்கு ஒரு லட்சிய உடலைக் கொடுத்தார்கள். சூரிய தேவன் அபாரமான அழகைக் கொடுத்தான். புயல் தேவன் அவனுக்கு யாருக்குமில்லாத தைரியத்தைக்  கொடுத்தான். அவன் பலம் பயங்கரமாக இருந்தது. காட்டுக் காளை  போல அவன் பலம் அனைவருக்கும் பயத்தை உண்டு பண்ணியது.

கில்காமேஷ் உலகெங்கும் சுற்றி வந்தான். அவனை எதிர்க்கும் துணிவு எந்த நாட்டு மன்னனுக்கும் இல்லை.  உருக் தேசத்து மன்னனாக உருவெடுத்ததும் தன் நாட்டை  உலகிலேயே மிகச் சிறந்த நகரமாக மாற்றினான். நகரைச் சுற்றி அதிசயம் என்று போற்றக்கூடிய  நீண்ட மதில் சுவர்களை அமைத்தான்.     அனு, இஷ்டார், இயன்னா  போன்ற தேவதைகளுக்கு  மாபெரும் கோவில்களைக் கட்டினான்.

அவனது போர்க்குணம் அவனை  மாபெரும் போர் வெறியனாக மாற்றியது.  நாட்டில் உள்ள  அத்தனை இளைஞர்களையும் தன் படையில் சேரவேண்டும் என்று கட்டாயப் படுத்தினான்.  குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை.

அதைவிடக் கொடுமை என்னவென்றால் நாட்டில் உள்ள அத்தனைப் பெண்களும் தனக்கே சொந்தம் என்று இருந்தான்.  கன்னிப் பெண்கள் தங்கள் கன்னிமைகளை அவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். திருமணமான பெண்களையும் அவன் விட்டுவிடவில்லை. அவனைத் தட்டிக் கேட்க யாருமில்லை!  எதிர்த்துப் போரிட யாருக்கும் துணிச்சல்  இல்லை . அந்த  ஆணவத்தால் எதையும் தன்னிச்சையாகச் செய்யும் அகங்காரம் பிடித்த அரக்கனாக இருந்தான் கில்காமேஷ்.

மக்கள் அவனைக் கண்டு பயந்தனர். அனைவரும் ஒன்று கூடி அரு என்ற தேவதையிடம் தங்கள் மன்னன் செய்யும் கொடுமைகளைத் தெரிவித்து தங்களுக்கு விடிவுகாலம் விரைவில் பிறக்க அருளுமாறு வேண்டிக்கொண்டனர். அரு என்ற அந்தத்  தேவதை மற்றத்  தேவதைகளையும் அழைத்துக் கொண்டு,   சிருஷ்டி தேவதையான அருரு என்பவரிடம் கில்காமேஷின்  கொடுமைகளைத் தெரிவித்தனர்.

தான் சிருஷ்டித்த ஒருவன் இவ்வளவு கொடுங்கோலனாக  இருக்கின்றானே என்று  யோசித்தாள் அருரு. மற்ற தேவதைகளே இதற்கு வழியையும் கூறின. 

” நீ தானே இவனை இவ்வளவு பலசாலியாக சிருஷ்டித்தாய் ! அவனுக்கு ஈடாக இணையாக இன்னொரு பலசாலியை உற்பத்தி  செய்து தா!  அவன் உள்ளமும் இவன் உள்ளத்தைப் போலக் கொந்தளிப்பாக இருக்கவேண்டும். அவர்கள் இருவரும் போரிடட்டும் . அவர்கள் போர் உருக் நகரைக் காப்பாற்றுவதாக இருக்கட்டும்”  என்று வேண்டினார்கள். 

தேவி அருரு தான் கற்பனையில் ஒரு உருவத்தைச் சிருஷ்டி செய்தாள். வானத்து வெளிச்சத்தைக் கொண்டு அந்த உருவத்தைச் செய்தாள். தண்ணீரில் தன் கை விரல்களை நனைத்து களிமண்ணை உருட்டிக் காட்டில் போட்டாள். 

என்கிடு என்ற மாபெரும் மனிதன் உருவானான். அவன் உடல் கரடு முரடானது. யுத்த தேவதைகளின் குணங்கள் அவனிடம் குடிபுகுந்தன.   பெண்கள் கூந்தலைப் போல அவன் தலைமுடி காற்றில் பறந்தது. ஆடு மாடுகளின் தேவதை போல அவன் உடலில் ரோமங்கள் படர்ந்திருந்தன. மொத்தத்தில் அவன் மிகப் பலம் வாய்ந்த காட்டு விலங்காய்த் திகழ்ந்தான்.   

எங்கிடு மான்களுடன் சேர்ந்து புல்லைத் தின்றான். காடு மிருகங்களுடன் ரகசியமாக இரவில் நீர் அருந்தப் போனான். மிருகங்களை வேட்டையாடும் மனிதர்களுக்கு அவன் சிம்ம சொப்பனமாக இருந்தான். அவனைப் பார்த்த வேட்டைக்காரர்கள் அவன் பலத்தைக் கண்டு பயந்து ஓடினர். அவர்களால் மிருகங்களை வேட்டையாட முடிவதில்லை. காட்டு மிருகங்கள் அனைத்தும் எங்கிடு சொற்படி கேட்டு நடந்தன. 

வேட்டைக்காரர்கள் தங்கள்  தந்தையிடம்  எங்கிடுவின் வீரதீர பராக்கிரமங்களைப் பற்றிக் கூறினர். அவனை வெல்ல என்ன வழி என்றும் வினவினர்.அந்தப் பெரியவர், வேட்டைக்காரர்களை உருக் தேசத்து அரசன் கில்காமேஷிடம்  முறையிடும்படிக் கூறினார். மிருகங்களுடன் மிருகமாக  இருக்கும் எங்கிடுவை மனிதனாக மாற்ற ஒரு வழியையும் கூறினார்.

அதாவது கில்காமேஷின் ஊரிலிருந்து அவன் அனுமதியுடன் ஓர் அழகிய பெண்மணியை   அழைத்து வந்து அவள்   அழகுக்கு எங்கிடுவை அடிமையாக்கும்படி கூறினார்.  அது அவனை மனிதனாக்கிவிடும் என்றும் மிருகங்கள் அதன்பின் அவனைத் தங்கள் கூட்டத்திலிருந்து விலக்கிவிடும் என்றும் கூறினார்.  ( நம் ரிஷயசிருங்கர் கதை போல் இல்லை? ) 

வேட்டைக்காரர்களில்  ஒருவன்  கில்காமேஷிடம் சென்று எங்கிடுவின் மிருக பலத்தைப் பற்றிக் கூறி தன் தந்தை கூறியபடி ஓர் அழகியை அனுப்பும்படி வேண்டினான். 

கில்காமேஷ் அவன் வேண்டியபடி ஆலயத்திலிருந்த அழகு மங்கை ஒருத்தியை அவனுடன் அனுப்பினான். எங்கிடு வருவதற்காக அந்த அழகி காட்டில் காத்திருந்தாள்.

(தொடரும்) 

 

 

 

நன்றி: கில்காமேஷ் – உலகத்தின் ஆதி காவியம்  தமிழில் : க நா சு சந்தியா பதிப்பகம்

மகளிர் தினக் கவிதை! – சுரேஜமீ

சர்வதேச மகளிர் தினம் இன்றுஊனிலே வைத்து நம்மின்
உயிரினை வளர்த்த தாயும்
ஏனைய உறவு்க் கெல்லாம்
மேலையாம் மனைவி, தோழி
கூடவே பிறந்த தங்கை
கொஞ்சியே வளர்த்த அக்கா
தேடியே வந்த டைந்த
தெய்வ மகள்கள் என்றே

மண்ணிலே பெண்மை இல்லா
மாண்புகள் ஏதும் உண்டோ?
நுண்ணிய கிருமி நம்மை
நொந்திடச் செய்த போதும்
மண்ணிலே நம்மைக் காத்த
மருத்துவர் செவிலி யர்கள்
கண்ணிலே கண்ட தெய்வம்
காலமும் போற்று வோமே!

பெண்களைக் கொடுமை செய்யும்
பேய்களை அழிப்போம் இன்றே
பெண்களைக் கேலி செய்யும்
புல்லரை ஒழிப்போம் நின்றே
பெண்களை வணிக நோக்காய்
பின்னிடும் மடமை போக்கி
பெண்களைக் காத்து நிற்போம்
பெருமையாம் ஆண்மை அஃதே!

மானுடம் தழைக்க நன்று
மாதவம் நிலைக்க என்றும்
நானிலம் ஓங்க வென்று
நலமெலாம் பெருக நின்று
வானவர் போற்ற நீண்டு
வையமும் வாழ்த்த என்றும்
தானிகர் அற்ற மாதர்
சக்தியை வணங்கு வோமே!

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
  3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
  4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
  5. எனது நாடு – செப்டம்பர் 2020
  6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
  7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
  8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
  9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
  10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
  11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
  12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
  13. ஜன கண மன ! – ஜனவரி 2021
  14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
  15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
  16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021

           

 

    1. சாமி என்னை காப்பாத்து !
இதன் வீடியோ காண  கீழே கொடுக்கப்பட்ட லிங்கை சொடுக்கவும் !

சாமி என்னை காப்பாத்து !

சமத்தாய் இருக்கேன் – வழி காட்டு !

கோவில் வந்து கும்பிடறேன் !

குளித்துப் பூஜைகள் செய்திடறேன் !

 

நல்லதே நானும் எண்ணுகிறேன் !

நல்ல வார்த்தையே சொல்லுகிறேன் !

நல்ல காரியங்கள் செய்திடறேன் !

நல்ல பெயர் நானும் எடுத்திடுவேன் !

 

இயற்கை என்பதும் நீதானே !

எல்லா உயிர்களும் நீதானே !

அல்லா இயேசு எல்லா பேரும்

இறைவன் உந்தன் பெயர்தானே !

 

உயிர்களில் நானும் ஒருவன்தான் !

உன்னைப் போற்றியே வாழுகிறேன் !

என்னைக் காக்கும் ஏதோ சக்தி –

அந்த சக்தியும் நீதானே !

 

இறைவா, உன்னை வேண்டுகிறேன் ! என்

திறமைகள் பளிச்சிட வேண்டுகிறேன் !

உன்னை நானும் துணை கொண்டேன் !

வெற்றி நடை நான் போட்டிடுவேன் !

 

  1. கடற்கரை போகலாம் !

 

அப்பா, கடற்கரை போகலாம் வா !

கடலை ரசிக்க போகலாம் வா !

அலை அலையாக வந்திடுமே !

ஆனந்தம் எனக்கு தந்திடுமே !

 

பொங்கும் கடலை பார்க்கணுமே !

கால்களை நனைத்து ஆடணுமே !

கைகளை நீரில் அளையணுமே !

கை கோர்த்து நாம் விளயாடணுமே !

 

பெருசு பெருசாய் அலை வருமே !

பேரிரைச்சலுடன் அது வந்திடுமே !

பக்கத்தில் வந்தால் பயமுறுத்தும் !

எதிர்த்து நின்றால் ஓடிவிடும் !

 

கொஞ்சம் கொஞ்சமாய் கரை இருந்து –

உள்ளே உள்ளே போகணுமே !

கையைப் பிடித்து நான் நிற்பேன் !

அலையுடன் சண்டை போட்டிடுவேன் !

 

சுண்டல் முறுக்கு வாங்கித் தா !

பஜ்ஜியும் சூடா இருக்கப்பா !

பலூனை சுடலாம் குறி பார்த்து !

குதிரை சவாரியும் செய்திடலாம் !

 

நீயும் நானும் தம்பியுமே –

மணலில் கோபுரம் கட்டிடலாம் !

சோழி கிளிஞ்சல் பொறுக்கிடலாம் !

பந்தும் போட்டு ஆடிடலாம் !

 

அப்பா, கடற்கரை போகலாம் வா !

கடலை ரசிக்கப் போகலாம் வா !

அலை அலையாக வந்திடுமே !

ஆனந்தம் எனக்கு தந்திடுமே ! 

 

               **************************************************

 

 

 

 

 

 

 

 

            

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குண்டலகேசியின்  கதை-8 – தில்லை வேந்தன்

குண்டலகேசி கதை | Gundalakesi story - YouTube                            

முன்கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கையில், ஒருநாள் ஊடலின் போது அவனைத் ‘திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான்…..

 

கவிக் கூற்று

நெருப்புத் துளியோர் காடெரிக்கும்;
நெஞ்சின் சினமோ வீடெரிக்கும்;
விருப்பை வெறுப்பாய் மாற்றுபவை
வீண்சொல் மற்றும் இன்னாச்சொல்.
வரப்பு வேண்டும் வயலுக்கு,
வரம்பு வேண்டும் வார்த்தைக்கு.
திருப்பு முனையாய் ஓருசொல்லே
திகழும் உலக வாழ்க்கைக்கு.

 

சினம் கொண்ட காளன் அமைதி காத்தல்

அடிப்பட்ட வேங்கையென ஆனான் காளன்,
ஆனாலும் பூனையைப்போல் அமைதி காத்தான்.
வெடிப்பட்ட நிலம்ஊரை விழுங்கும் அன்றோ?
வெறுப்புற்ற மலைப்பாம்பின் பசியும் நன்றோ?
கடிப்பதற்கு மிகத்துடிக்கும் கருநா கத்தைக்
கையினிலே எடுத்தேந்திக் கொஞ்ச லாமோ?
படிப்பதனால் பத்திரைக்குப் பயனென்? வாழ்வின்
பான்மையினை அறியாளாய் இருந்தாள் அந்தோ!

நீறு பூத்த நெருப்பானான்
நெஞ்சம் முழுதும் வெறுப்பானான்
சீறும் அரவாய்ப் பழிதீர்த்துத்
தீமை புரியக் காத்திருந்தான்
தேறும் அறநூல் ஓராதான்
சிறுமை நெறியும் மாறாதான்
கூறும் இனிய மொழிநம்பிக்
கோதை நல்லாள் வாழ்ந்திருந்தாள்.

 

காளனின் வஞ்சகப் பேச்சு

உன்மனம் மகிழ வேண்டும்
உன்முகம் மலர வேண்டும்
நன்முறை நமது வாழ்வு
நடந்திட வேண்டும் என்று,
வன்முறை விரும்பும் காளன்
வஞ்சக வாயி னாலே
இன்மொழி பலவும் பேச
ஏந்திழை நம்பி விட்டாள்

 

ஆங்கோர் உயர்ந்த நெடுவரைமேல்
அருளைப் பொழியும் குலதெய்வம்
பாங்காய்க் கோயில் கொண்டுளதால்
படையல் இட்டுப் பணிந்திடவே
ஓங்கும் அன்பு மீதூற
உவந்து நாமும் செல்வோமே
தீங்கு நம்மை அணுகாமல்
தெய்வம் காக்கும் எந்நாளும்!

( நெடுவரை — பெரிய மலை)

விடுத லையும் உற்றேனே
விரும்பும் உன்னைப் பெற்றேனே
கெடுதல் யாவும் அற்றேனே
கிடைத்தற் கரிய நற்றேனே!
நெடுநல் வாழ்வு மற்றிங்கு
நிலைக்கச் செய்த தெய்வத்தை,
வடுநல் விழியாள் உன்னுடனே
வணங்கச் செல்லல் முறையன்றோ?

( வடுநல் விழி — மாவடு போன்ற கண்,)

பொன்னுடனே மணியாவும் பதித்துச் செய்த
பொலிநகைகள் அனைத்தையும்நீ அணிந்து கொண்டு
மின்னொன்று பெண்ணென்று வடிவம் பூண்டு
விண்ணிறங்கி மண்மிசைதான் வந்த தென்று
முன்நின்று பிறர்வியக்க வருவாய், அங்கு
மூவுலகும் அறியாத ‘முத்தி’ கிட்டும்!
கன்னெஞ்சன் வஞ்சத்தைக் காணாப் பேதை
களிப்புடனே உடன்செல்ல ஒருப்பட் டாளே!

(தொடரும்)

                                                     

நாட்டிய மங்கையின் வழிபாடு-7 – மூலம் கவியரசர் தாகூர் – தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்

                            நாட்டிய மங்கையின் வழிபாடு-7

                     வங்கமொழிக்கதையும் அதன் ஆங்கில மூலமும்: கவியரசர் தாகூர்;

                               தமிழ் மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

 

          முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். அவன் இளவரசன் அஜாதசத்ருவிற்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். அரசி லோகேஸ்வரி இதனை விரும்பவில்லை. அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகி விட்டதில் மனம் நொந்து போயிருக்கிறாள்.

          அரசி பல காரணங்களால் அளவற்ற சினமும் வேதனையும் கொண்டு புத்தமதத்தை நிந்திக்கிறாள். நாட்டியமங்கையான ஸ்ரீமதியை வழிபாட்டு மேடையில் காணிக்கை செலுத்தக் கூறியுள்ளனர். இளவரசிகளுக்கும் அரசிக்கும் அதில் விருப்பமில்லை; அதனை எவ்வாறு தடை செய்யலாம், ஸ்ரீமதியைத் தண்டிக்கலாம் எனக் கலந்தாலோசிக்கின்றனர்.

          இனித் தொடர்ந்து படிக்கவும்:  

         

          ரத்னாவளி: தாங்கள் முன்னேற்பாடாகச் சிந்திக்கிறீர்கள் என நான் கூறுவதற்காக என்னை மன்னியுங்கள்; ஆனால் இந்தத் துயரமான எண்ணங்கள் இந்த வழிபாட்டுத்தலத்தைப் புனருத்தாரணம் செய்யத் தங்களைத் தூண்டும் அஸ்திவாரமாக இருக்குமே!

          அரசி: எனது அச்சமும் அதுவே.

          ரத்னாவளி: ஒருகாலத்தில் நாம் போற்றிய இந்தப் பொய்ம்மையான மதத்தை நமது சிந்தையிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் அழிக்க முடியாது. அதனை அவமானப்படுத்துவதன் மூலமே அதன் பொய்மையையும் அழிக்க இயலும்.

          அரசி: மல்லிகா, கேள்! தோட்டத்தின் வடக்குப்பகுதியிலிருந்து வரும் கூச்சல்கள் உனக்குக் கேட்கிறதா?வழிபாட்டு மேடை உடைகிறது, உடைகிறது!

                     வணக்கங்கள்……..

          இல்லையில்லை, அது சுக்குநூறாக உடையட்டும்!

          ரத்னாவளி: வாருங்கள் மகாராணி, நாம் என்ன நடக்கிறதென்று போய்ப்பார்ப்போம்.

          அரசி: ஆம், நாம் அங்கிருக்க வேண்டும், ஆனால் இப்போதல்ல!

          ரத்னாவளி வெளியே செல்கிறாள்.

          அரசி: ஆ! மல்லிகா! எனது பழைய தொடர்புகளைத் துண்டிக்கும் இந்த நிலை மிகுந்த வலியினைத் தருவதாகும்.

          மல்லிகா: உண்மைதான்! உங்கள் கண்கள் கண்ணீரால் நிறைந்துள்ளனவே!

          அரசி: அவர்களுடைய கூப்பாட்டைக் கேள்: கொடூரமான காளிக்கு வெற்றி உண்டாகட்டும்! என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

          மல்லிகா: மகாராணி, புத்தரின் மதம் வெளியேற்றப்படுமானால், அது திரும்பவும் வரும். மற்றொரு மதம் அதன் இடத்தைப் பிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அமைதி இருக்காது. தேவதத்தரிடமிருந்து ஒரு புதிய மதக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால்தான் தாங்கள் ஆறுதல் அடைவீர்கள்.

          அரசி: உன் வாயினின்றும் அத்தகைய சொற்கள் வரவேண்டாம். தேவதத்தன், அந்த அற்பமான நரகத்துப் பாம்பு? நான் அந்த அஹிம்சையின் வசியத்தில் இருக்கும்போது கூட, எனது சினம் அவனைக் குத்திக்கிழித்து எரிப்பதற்கு முயலவில்லையா? இன்று நீங்கள் என் இதய சிம்மாசனத்தில், எனது சுடர்விடும் கருணை நிறைந்த பெரும் தலைவருக்காக நான் கொடுத்திருந்த இடத்தில் அவனை இருத்துவேன் என நினைக்கிறீர்களா? (மண்டியிடுகிறாள்) என்னை மன்னியுங்கள் தலைவா, மன்னியுங்கள். (எழுந்திருக்கிறாள்). பயப்படாதே, மல்லிகா. என்னுள்ளிருக்கும் பக்தை என் மனதிலேயே குடிகொண்டிருக்கட்டும். வெளியேயுள்ள பிரதேசத்தில் இந்த இரக்கமற்ற அரசி ஆளுகிறாள்- அவளை வெல்ல முடியாது. நான் இப்போது எனது அறையின் தனிமைக்குத் திரும்புகிறேன். எனது வழிபாட்டை ஒரு காலத்தில் எடுத்துச்சென்ற பாத்திரம் இறுதியாக இந்த புழுதிப்புயலில் சிக்கி அழியும்போது என்னைத் திரும்பக் கூப்பிடுங்கள்.

                                         (அனைவரும் செல்கின்றனர்)

          ஸ்ரீமதி சில அரண்மனைப் பெண்களுடன் காணிக்கைப் பொருட்களையும் தீபங்கள், தூபங்கள், பழங்கள், மலர்கள் இவற்றை ஏந்தி வருகிறாள்; அவர்கள் அனைத்தையும் வழிபாட்டுத் தோட்டத்து வாயிலில் புத்தமதச் சடங்குகளின் முறையில் மந்திரங்களாலும், சங்கு ஊதியும் புனிதப்படுத்துகின்றனர். அந்த சம்பிரதாயங்கள் நிறைவுற்றதும், ஸ்ரீமதி பேசுகிறாள்.

          ஸ்ரீமதி: நாம் இப்போது வழிபாட்டு மேடையை நோக்கிச் செல்வோம்.

          மாலதி: ஆனால், சகோதரி, பார், அந்த வழி ஒரு வேலியினால் அடைக்கப்பட்டுள்ளது.

          ஸ்ரீமதி: நாம் அந்த வேலியைத் தாண்ட முடியும்; வா என்னுடன்.

          நந்தா: இதன் பொருள் நமது பாதை அரசரால் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதா?

          ஸ்ரீமதி: ஆனால் நமக்கு நமது தலைவரின் ஆணைகள் உள்ளன.

          நந்தா: உற்றுக்கேள்! அந்த கோரமான குழப்பத்தை! அது ஒரு கலகமாக இருக்குமோ?

                                                                        பெண் காவலர்கள் நுழைகின்றனர்.

          முதல் காவலாளி: திரும்பிச் செல்லுங்கள்!

          ஸ்ரீமதி: ஆனால் நாங்கள் எங்கள் கடவுளை வழிபடச் செல்லுகின்றோம்.

          முதல் காவலாளி: உங்களது பூஜை தடைசெய்யப்பட்டுள்ளது.         

          ஸ்ரீமதி: எங்கள் கடவுளுடைய பிறந்தநாளை நாங்கள் கொண்டாடுகிறோம்.

          முதல் காவலாளி: உங்களது பூஜை தடைசெய்யப்பட்டுள்ளது.

          ஸ்ரீமதி: இது சாத்தியமா?

          முதல் காவலாளி: உங்களது பூஜை தடைசெய்யப்பட்டுள்ளது. நான் அறிந்தது இது ஒன்றே!

                     அவர்கள் கையிலுள்ள காணிக்கைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

          ஸ்ரீமதி: எதனால் எனக்கு இந்தத் துன்பம் வந்து சேர்ந்தது? நான் செய்த தவறு எதற்காகாகவேனும் இது தண்டனையா?

                     (அவள் முழங்காலிட்டு வேண்டுகிறாள்)

                     தங்கள் கால்களில் நான் தலைவணங்குகிறேன் புத்தபிரானே;

                     புனிதமாய தாங்களே எங்கள் அத்துமீறலை மன்னிப்பீராக!

          முதல் காவலாளி: போதும் உன்னுடைய வேண்டுதல்கள்!

          ஸ்ரீமதி: நுழையுமிடத்திலேயே நிறுத்தப்பட்டு விட்டோம். ஐயோ, நாம் நுழையக்கூடத் தகுதியற்றவர்களா?

          மாலதி: எதற்காக அழுகிறாய், சகோதரி? உண்மையான வழிபாட்டுக்குச் சடங்குகள் தேவையில்லை. அந்தக் கடவுளும் நமது இதயங்களில் தானே பிறந்து உறைந்திருக்கிறார்?

          ஸ்ரீமதி: உண்மைதான், குழந்தாய். அவருடைய பிறப்பில் நாமும் திரும்பப் பிறந்துள்ளோம். நமது பிறந்ததினத்தையே நாம் இன்று கொண்டாடுகிறோம்.

          நந்தா: ஆனால் இன்றைக்கென்று கெடுதி வலிமை பெறுவது ஏன் ஸ்ரீமதி?

          ஸ்ரீமதி: ஏனெனில் இன்றைக்கு எல்லாக் கெடுதியும் நன்மையாக மாறும்; சிதறுண்டவை எல்லாம் இணையும்; விழுந்ததெல்லாம் திரும்ப எழும்.

          அஜிதா: ஆ! ஸ்ரீமதி, இன்றைய பிறந்தநாள் வழிபாட்டை உன்னிடம் கொடுத்தது ஒரு தவறென்று நான் நிச்சயமாக எண்ணுகிறேன். அதனால்தான் அது இப்படி மிகவும் கேவலமாக ஆகிவிட்டது. நாம் இதனைப் பற்றி முன்னமே சிந்தித்திருக்க வேண்டும்.

          ஸ்ரீமதி: எனக்குப் பயமில்லை. கோவிலின் கதவுகள் வழிபடுபவர்களுக்காக ஒரேயடியாகத் திறந்துவிடாது. தாள் திறப்பதற்கு நேரமாகும். இருப்பினும் எனது கடவுள் என்னை அழைத்துள்ளார் என்பதனை நான் சந்தேகிக்கவேயில்லை. எல்லாத்தடைகளும் விலகி வழிவிடும் – அதுவும் இன்றைய தினமே.

          பத்ரா: அரசரே ஏற்பாடு செய்துள்ள இந்தத் தடைகளை உன்னால் விலக்க முடியுமா?

          ஸ்ரீமதி: அரசனின் செங்கோல் வழிபாட்டுத்தலத்தை அடைய இயலாது.

          ரத்னாவளி: நான் அனைத்தையும் கேட்டேன் – ஒரு வார்த்தைகூட விடாமல். அரசனின் ஆணையை எதிர்க்க உனக்கு தைரியம் உண்டா?

          ஸ்ரீமதி: வழிபாட்டுக்கெதிரான அரச ஆணை இருக்கவியலாது.

          ரத்னாவளி: உண்மை! அப்படியானால் நீ உனது வழிபாட்டைத் தொடர்வாயாக – அதன் பலன்கள் எனது கண்களுக்கு விருந்தாகும்.

          ஸ்ரீமதி:  எவர் அனைவரின் உள்ளங்களையும் அறிந்தவரோ அவரே சாட்சியுமாவார். நமக்குள் எதுவும் இல்லாமலிருக்கும் அனைவரிடமிருந்தும் அவர் பின்வாங்கி நிற்கிறார்; ஏனெனில் அது திரையாக இருந்துவிடுமோ என்பதனால்.

                                         (அவள் இசைக்கிறாள்)

                     எனது சொல்லிலும் எண்ணத்திலும்

                     எப்போதும் எங்கும்

                     ததாகதரை நான் வழிபடுகிறேன்.

                     படுக்கையிலும் உறக்கத்திலும்

                     நிற்கும்போதும், நடக்கும்போதும்,

                     ததாகதரை நான் வழிபடுகிறேன்.

          ரத்னாவளி: உனது கர்வம் நசுக்கப்படும் தினம் வந்துவிட்டது.

          ஸ்ரீமதி: ஒரு ரேகைகூட விடாமல் அது நசுக்கப் படட்டும்.

          ரத்னாவளி: இப்போது எனது முறை, எனது வேலையைச்செய்ய நான் தயாராக வேண்டும்.

                                                                        (ரத்னாவளி வெளியே செல்கிறாள்)

          பத்ரா: எனக்கு இது பிடிக்கவில்லை. புத்திசாலியான வாசவி இதனை ஊகித்தாள்; முதலிலேயே அவள் ஓடிவிட்டாள்.

          அஜிதா: எனக்கு பயமாக இருக்கிறது.

                               (பிட்சுணி உத்பலா நுழைகிறாள்)

          நந்தா: வணக்கத்துக்குரிய பெண்மணியே, எங்கே செல்கிறீர்கள்?

          உத்பலா: இந்த நகரின்மீது ஒரு சாபம் ஏற்பட்டுள்ளது. மதம் தாக்கப்படுகிறது; பிட்சுக்கள் பயப்படுகின்றனர். பாதுகாப்பிற்கான பாடங்களை நான் தெருக்களில் சென்று ஓதப்போகிறேன்.

          ஸ்ரீமதி: என்னை உங்களுடன் அழைத்துச் செல்வீர்களா, தாயே?

          உத்பலா: என்னால் எவ்வாறு முடியும், ஸ்ரீமதி? வழிபாட்டை நடத்துவதற்கான ஆணை உனக்குப் பிறப்பிக்கப் பட்டுள்ளதே!

          ஸ்ரீமதி: வழிபாடு இனியும் நடத்தப்பட வேண்டுமா?

          உத்பலா: அது நிறைவேறும் வரையிலும் ஆணை அமலில் இருக்கும்.

          மாலதி: ஆனால் அரசர் அதனைத் தடைசெய்கிறார், தாயே!

          உத்பலா: பயப்பட வேண்டாம்! காத்திருங்கள். தடையுத்தரவே உங்களுக்கு வழியையும் காட்டும்.

                                                              (உத்பலா செல்கிறார்)

                                                                                            (தொடரும்)

                              

நடுப்பக்கம் -தேர்தல் களம் – சந்திரமோகன்

தேர்தல் களம்

முதல் தேர்தல் நடந்தது எப்படி? | Dinamalar Tamil News

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஆம் 1962 ம் ஆண்டு . நான் படித்த கிராம பஞ்சாயத்து நடு நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பறையில் ஒரு சில மாணவர்களைத் தவிர மற்றவரைக் காண வில்லை. ஐந்தாம் வகுப்பிலும் அப்படியே. இரண்டு வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர், இரண்டு வகுப்பிலும் சேர்த்து 25 மாணவர்களுக்கு மேல் இருக்காது. என்னையும் சேர்த்து இரண்டு – மூன்று மாணவர்கள் மட்டுமே அமர்ந்து இருந்தோம்.

K Kamaraj 116th birth anniv: Rare pics of 'Kingmaker' | Deccan Herald

கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்… – Netrigun

என்னவாயிற்று ?. ஒலி பெருக்கியில் பலத்த சத்தத்துடன் ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். வண்டி மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. வண்டியின் பின்னால் ஓ என்ற இரைச்சலுடன் மாணவர் கூட்டம் ஓடுகிறது. கிராமத்திற்கு ஒலி பெருக்கி வருவதே திருவிழா காலத்திலும் தேர்தல் காலத்திலும்தான். கடையில் அமர்ந்திருந்தவர்களும், சற்று தள்ளி நின்று கொண்டிருந்தவர்களும் வண்டியின் அருகில் வந்து செவி கொடுக்கிறார்கள்.

நீங்கள் நினைப்பது சரியே. அது தேர்தல் திருவிழா காலம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை கூட தேர்தல் ஒரு திருவிழாவாகத்தான் நடந்து முடியும்,

திரு. சேஷன் கொண்டுவந்த தேர்தல் விதி முறைகளும் நடை முறைகளும் அன்றில்லை. எனக்கு நினைவு தெரிந்து பெப்ரவரி மாதம்,1962 ல் நடந்தது மூன்றாவது பொதுத்தேர்தலாகும்.

தமிழகத்தைப் பொருத்தவரை பிளவு படாத காங்கிரஸ் காமராசர் தலைமையில் ஆளும் கட்சியாகவும் வளர்ந்து வந்த தி. மு. க சற்று வீரியம் குறைந்த ஆனால் பிரதான எதிர்க் கட்சியாக அண்ணாதுரை தலைமையிலும் மோதிக் கொண்டன. முதல் பொதுத் தேர்தலில் 62 இடங்களைப் பெற்று எதிர்க் கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்து மெலிந்து இரண்டாவது பொதுத்தேர்தலில் 4 இடங்களையும் மூன்றாவது பொதுத்தேர்தலில் தி.மு.க வுடன் கூட்டணி அமைத்து தட்டுத் தடுமாறி இரண்டு இடங்களில் வெற்றி வாகை சூடியது. இன்றும் நிலைமை மாற வில்லை. ஆனால் கொள்கைப் பிடிப்பிற்காக எதையும் இழக்கத் துணியும் கம்யூனிஸ்டுகள் இன்றும் உள்ளனர்.

தேர்தலைச் சந்திக்கும் முன் அன்றைய தேர்தல் களத்தைப் பார்ப்போம்

இன்று போல் அல்லாது ஊரில் சுவர் கண்ட இடங்களில் எல்லாம் காங்கிரஸின் காளை மாட்டுச் சின்னமும் தி.மு.க வின் உதய சூரியன் சின்னமும் வேட்பாளரின் பெயருடன் எழுதப் பட்டிருக்கும். மீதமுள்ள இடத்தில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருக்கும். இளைஞர்களும், நடுத்தர வயதினரும் தேர்தலைப் பற்றிப் பேசி தம் பொது அறிவை ஆங்காங்கே காட்டிக் கொண்டிருப்பார்கள்.

காலை வரும் தினத் தந்தி ஒன்றுதான் தேர்தல் குறித்த நாட்டு நடப்பை எங்கள் கிராமத்திற்குக் கொண்டு வரும். காலையில் டீ கடையில் அமர்ந்து ஒருவர் உரத்த குரலில் பேப்பரைப் படிக்கச் சுற்றி நான்கு பேராவது கேட்டுக் கொண்டிருப்பார்கள். பின்னர் செய்தி குறித்து விவாதம் நடக்கும். மின்சாரம் இல்லாததால் காலையும், மாலையும் 15 நிமிடங்கள் ஒலி பரப்பாகும் தமிழ் செய்தி அறிக்கை கேட்கும் கொடுப்பினை கிராமத்தினர்க்கு கிடையாது.

குடும்பத் தலைவன் எந்த கட்சியோ, வீட்டில் மனைவி மக்கள் அனைவரும் அக்கட்சியே மாற்றுக் கருத்து இருக்காது.

அன்றும் சாதிப் பற்று அதிகம். வேட்பாளர்களே கவுண்டர், நாயக்கர், ரெட்டியார், முதலியார் என்ற இணை பெயர்களுடன்தான் அதிகம் காணப்படுவர்.
இளைஞர்கள் கொடி பிடித்து சைக்கிளிலும் , நடந்தும் நாள் முழுதும் ஓட்டு கேட்பர்.
ஒருகட்சி ஒரு தெருவில் ஓட்டு கேட்டால் மற்ற கட்சி வேறு ஒரு தெருவில் . இடையே சந்தித்தால் வெறுப்பு தெரியாது. நட்பும் மாமன், மச்சான் உறவும்தான் தெரியும்.
வீதியெங்கும் வைக்கோல் பிரி தோரணங்கள் ஊடே கட்சிக் கொடியுடன் களை   கட்டும். தேர்தலுக்கு முதல்நாள் இளைஞர்கள் உறங்காது அடுத்த நாளுக்கான திட்டம் தீட்டுவர்.

வாகனம் வைத்து வாக்காளர்களை அழைத்து வந்து ஓட்டுச் சாவடி உள் விடுவது குற்றமில்லை. வரும் வழியிலேயே ஊர் பெரியவர் தான் சார்ந்த கட்சிக்கு ஒட்டு போட வெற்றிலையில் சத்தியம் வாங்கி இருப்பார். ஓட்டு மாறி விழாது.

காங்கிரஸ் வேட்பாளர் பெரும்பாலும் ஏரியாவில் பெரிய பெரிய மனிதராக இருப்பார். சில இடங்களில் இறங்கி வந்து ஒட்டு கேட்பதே அவருக்குக் கௌரவ குறைச்சலாக இருக்கும். 

ஓட்டு கேட்கும் பொழுது காலில் விழும் பழக்கம் வந்தது தி.மு.க வினரால்.

காங்கிரஸ் காரர்கள் பெரும் பாலும் சற்று வயதானவர்களாய் , முழங்கை வரை வரும் கதர் சட்டையணிந்து , டிரவுசர் தெரியுமளவிற்கு மெலிதான நான்கு முழ கதர் வேஷ்டியுடன் வலம் வருவர்.

பென்சிலால் கோடிலுக்கப் பட்ட மீசை வெள்ளை கைத்தறி சட்டை வாயல் வேஷ்டி என்றால் அது பெரும்பாலும் தி.மு.க வினர். காங்கிரஸின் பெரிய மனிதர்கள் அதட்டி, உருட்டி, ஓட்டு சேகரிப்பார்கள். அதற்கு எதிர்க் குரல் கொடுத்து ஓட்டு கேட்பார்கள் தி.மு.க வை சேர்ந்த இளவட்டங்கள்.  தேர்தல் தினத்திற்குப் பின்னர் ஒரு பெரிய திருவிழா நடந்து முடிந்த களை ஊரில் தெரியும். ஓட்டு எண்ணுதலும் தேர்தல் முடிவு தெரிந்து கொள்ளுதலும் ஒரு குட்டி திருவிழா.

எண்ணிக்கையின் முன்னேற்றத்தை டவுனிலிருந்நு வரும் பஸ் பயணிகள் கண், காது மூக்கு வைத்துச் சொல்லிச் செல்வார்கள். சரியான முடிவைத் தெரிந்து கொள்ள அடுத்த நாளைய தினசரிக்குக் காத்திருக்க வேண்டும். பின் நாட்களில் வானொலி இரவு முழுதும் தேர்தல் அறிக்கை கூற ஆரம்பித்து. கூடவே கொசுறாக இடையே திரை இசை. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கேட்கும் திரைப்படப் பாடல் இரவு முழுதும் கேட்பதே தனி சுகம். சில முடிவுகள் தெரிந்து கொள்ள இரண்டு நாட்களுக்கு மேலும் ஆகும்.

நாம் தொலைத்த சுகங்களில் அன்றைய தேர்தலும் ஒன்று.

அடுத்த மாதம் கூட தேர்தலாமே? தேதி என்றைக்கு  எனப் பார்க்க வேண்டும். இன்று வரை வேட்பாளர் யார் என தெரியாது. சுவர் சித்திரங்களோ, சுவரொட்டிகளோ கண்களில் பட வில்லை,  பொதுக்கூட்டம் எங்கும் இல்லை. ஒலி பெருக்கியின் சத்தம் காதில் விழ வில்லை. ஓட்டுப் போட அரை மணி நேரம் செலவழிக்க வேண்டும். எண்ண ஆரம்பித்தால் அரை மணி நேரத்தில் யார் முதல்வர் எனத் தெரிந்து விடும்.

உப்புச் சப்பில்லாத தேர்தல்.

 

கம்பன் கவி நயம் – நடராசன்

அட ராமா! | Shanmus blog

அந்தி மயங்கும் அரையிருட்டு வேளை. ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில், யாரோ அணிந்து கழற்றிப் போட்ட மாலை ஒன்று கிடக்கிறது. அந்த வழியே சென்ற ஒருவன் அதைப் பாம்பு என்று நினைத்து அஞ்சி ஓடுகிறான்.  இங்கு மாலை பாம்பாகிறது.

ஆனால் சிவன் கழுத்தில் பாம்பு மாலையாகிறது.

தெருவில் சென்றவனுக்கு மாலையும் பாம்பு– சிவனுக்குப் பாம்பும் மாலை.

பார்வையும், பக்குவமும் நல்லது, கெட்டதை முடிவு செய்கின்றன.

கம்பனின் காவியத்தில் ஓர் உணர்ச்சிகரமான இடம் . தசரதனிடம் இருவரங்கள் பெற்ற கைகேயி இராமனிடம் செய்தி சொல்லும் காட்சி.

பரதன் நாடாள வேண்டும், இராமன் கானகம் செல்ல வேண்டும். — இதைக் கைகேயி விளக்கிக் கூற இராமனும் ஏற்றுக் கொள்கிறான்.

கம்பனின் கவிநயம் இந்த இடத்தில்  இரு பாடல்களில் வெளிப்படுகிறது.

இராமன் போக வேண்டிய காடு எப்படிப்பட்டது?

கைகேயின்  பார்வையில் அது புழுதி பறக்கும் வெப்பமான காடு.

அதனால்தான்,  ‘பூழி வெங்கானம் ஏகி’ என்று சொல்கிறாள்.

அடித்து விட்டுத் தடவிக் கொடுப்பதைப் போலக் காடு வெம்மையுடையதாக இருந்தாலும், அங்குப் போவதால் நீ பல புண்ணியத் துறைகளில் நீராடும் வாய்ப்பும் உள்ளது என்று கூறுகிறாள். கூற நினைத்தவற்றை எல்லாம் கூறி விட்டு,

 ‘என்று இயம்பினன் அரசன்’ என்றும் நழுவுகிறாள்.

இராமனுக்கோ அது மின்னல் ஒளி மிளிரும் அழகான காடு. அதனால் அவன்’ மின்னொளிர் கானம்’ என்று மிடுக்கோடு சொல்கிறான்.

ஒரே காடு, காண்பவரின் மன நிலைகளின் மாறுபட்டால் புழுதி பறக்கும் வெம்மையான காடாகவும், மின்னல் ஒளிர்கின்ற விரும்பத் தக்கக் காடாகவும் ஆகும்  அற்புதத்தை இரண்டு பாடல்களில்  கம்பன் காட்டும் பாங்கு எண்ணி இன்புறத் தக்கதாகும்.

இனிப் பாடல்களைச் சற்றுப் பார்ப்போமா?

கைகேயி கூற்று

 

ஆழி சூழ் உலகம் எல்லாம்  பரதனே ஆள, நீ போய்த்

தாழ் இருஞ் சடைகள் தாங்கி,   தாங்க அருந் தவம் மேற்கொண்டு,

பூழி வெங் கானம் நண்ணி,  புண்ணியத் துறைகள் ஆடி,

ஏழ்-இரண்டு ஆண்டின் வா” என்று,    இயம்பினன் அரசன்’ என்றாள்

 

( கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் பரதன் ஆளவும் , நீ தொங்குகின்ற சடையுடன் தவத்தை மேற்கொண்டு புழுதி நிறைந்த வெப்பமான காட்டுக்குச் சென்று புண்ணிய நீர்நிலைகளில் நீராடிப் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்த் திரும்பி வர வேண்டும்  என்று அரசன் சொன்னான்)

இராமன் மறுமொழி

 

மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்

பின்னவன் பெற்ற செல்வம்  அடியனேன் பெற்றது அன்றோ?

என் இனி உறுதி அப்பால்?   இப்பணி தலைமேற் கொண்டேன்;

மின்னொளிர் கானம் இன்றே  போகின்றேன்; விடையும் கொண்டேன்.’

 

( அரசனின் கட்டளையாக இல்லாவிட்டாலும் உங்களது கட்டளையை நான் மறுப்பேனோ?என் தம்பி பரதனுக்குக் கிடைத்த  பேறு எனக்குக் கிடைத்ததே ஆகும் அன்றோ? இக்கட்டளையைத் தலைமேல்  ஏற்று மின்னொளி வீசும் காட்டிற்கு இப்பொழுதே போகின்றேன். உங்களிடம் விடையும் பெற்று கொண்டேன்)

 

 

 

வீடு -S L நாணு

Villa The Blue House ECR, Chennai, India - Booking.com

அந்த வீட்டு காம்பௌண்ட் சுவரை ஒட்டி தனது பி.எம்.டபிள்யுவை நிறுத்தினான் சுதாகர். எஞ்சினுக்கு ஓய்வு கொடுத்து காரை விட்டு இறங்கியவன் கதவை மூடி ரிமோட்டைத் தட்ட பிப் பீப் ஒலி எழுப்பி செண்ட்ரலைஸ்ட் லாக் தான் உயிர் பெற்றதை அறிவித்தது.

சுதாகர்..

வயது முப்பத்தைந்து. நல்ல உயரம். விளம்பர க்ரீம் பூசாமலே நல்ல நிறம். தூக்கி வாரப் பட்ட ஐ.எஸ்.ஐ முடி. பட்டையான மீசை. கழுத்தில் கொஞ்சம் கனமான செயின். வெளிர் நீல டீ-ஷர்ட். உசத்தி ரக ஜீன்ஸ்.. விரல்களில் ஏதேதோ கற்கள் டாலடிக்கும் மூன்று நான்கு மோதிரங்கள். விரல்கள் பிடித்திருக்கும் ஐ-போன்.. குறைந்தது பத்தாயிரமாவது விலை சொல்லும் கருப்பு கலர் பள பள ஷூ..

சுதாகருக்கு கிரானைட் பிஸ்னஸ்.. அதுவும் அதில் கொடி கட்டிப் பறப்பவன். சமீபத்தில் கூட வெளி நாட்டு காண்ட்ராக்ட் ஒன்றில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எக்கச்சக்க லாபம். நுங்கம்பாக்கத்தில் காதர் நவாஸ் கான் சாலையில் பெரிய பங்களா இருந்தாலும் ஈ.ஸி.ஆரில் கடலுக்கு அருகில் ஒரு பங்களா வாங்க வேண்டும் என்று அவன் மனதில் வெகு நாள் ஆசை. மனதில் புதைந்து கிடந்த ஆசையை தூசு தட்டி நேற்று நண்பன் ரவியிடம் எதேச்சையாகச் சொன்னான்.

“உடனே வாங்கறயா சொல்லு.. புரோக்கர் கிடையாது.. பார்ட்டி கூட நேரிடையான டீலிங்.. ஈ.ஸி.ஆர்ல புளூ பீச் ரோட்டுல கடைசி பங்களா.. மொத்தம் மூணு கிரௌண்ட்.. ஒரு கிரௌண்ட்ல பெரிய பங்களா.. சுத்தி தென்னை, வாழைன்னு நிறைய மரங்கள்.. முன்னால பெரிய தோட்டம்.. பாரின் பார்ட்டி.. உடனே டிஸ்போஸ் பண்ணணும்னு பார்க்கறாங்க.. பேரம் பேசலாம்”

ரவி சொன்னதுமே சுதாகர் குஷியாகி விட்டான்.

“நாளைக்கே போகலாம்”

“நாளைக்கு என்னால முடியாது.. பிஸ்னஸ் விஷயமா மும்பை போறேன்.. வர ஒரு வாரம் ஆகும்.. ஒண்ணு பண்ணேன்.. டீடெய்ல்ஸ் தரேன்.. போன் பண்ணிட்டு நீ போய்ப் பாரேன்..”

மறுநாள் ரவி கொடுத்த நம்பருக்குப் பல முறை போன் செய்தான் சுதாகர். நம்பர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதையே தொடர்ந்து அறிவித்தது..

எதற்கும் நேரில் சென்று பார்த்து விடுவோம் என்று கிளம்பி வந்து விட்டான்.

காரை நிறுத்தி விட்டு பங்களாவுக்கு எதிர் பக்கம் போய் நின்று பார்த்தான் சுதாகர்.

பெரிய காம்பௌண்ட் சுவர்.. மத்தியில் கருப்பு கலர் கேட்.. அதன் பின்னணியில் பங்களாவின் மேல் முகப்பு தெரிந்தது.. என்னமோ தெரியவில்லை.. அதைப் பார்த்தவுடன் சுதாகருக்கு மனதில் ஒரு பரவசம்.. இது தான் நம் இடம் என்ற எண்ணம்..

மெதுவாக நடந்து கேட்டை அடைந்தான். செக்யூரிட்டிக்கான இருக்கை காலியாக இருந்தது. சுற்று முற்றும் பார்த்தான்.. யாரும் கண்ணில் படவில்லை.. பூட்டியிருக்கிறதா என்று அறிய கேட்டில் கை வைத்துத் தள்ளினான்.. கேட் திறந்துக் கொண்டது.. உள்ளே எட்டிப் பார்த்தான்.. அழகான தோட்டம் தெரிந்தது.. ஆனால் மனித நடமாட்டம் இல்லை.. திடீரென்று ஞாபகம் வந்தவனாக பின் வாங்கி கேட்டை மறுபடியும் பார்த்தான்.. நல்ல வேளையாக நாய்கள் ஜாக்ருதை போர்ட் இருக்கவில்லை..

ஒரு முடிவுக்கு வந்தவனாக உள்ளே நுழைந்து பங்களா வாசலை நோக்கி நடந்தான். உண்மையிலேயே அந்த இடத்தில் அவனுக்கு ஒரு பாஸிடிவ் வைப் கிடைத்தது.. மஞ்சள், சிவப்பு, ஊதா என்று வித விதமான நிறங்களில் மலர்கள் அவன் மனதில் சந்தோஷத்தைக் கிளப்பின.

பங்களாவின் கதவு மிகுந்த வேலைப் பாட்டுடன் செதுக்கப் பட்டிருந்தது.. அந்த கலை நுணுக்கங்களை ஆராயவே பல மணிநேரம் பிடிக்கும் போல் அவனுக்குப் பட்டது.

மெதுவாக காலிங் பெல்லைத் தட்டினான்.. இரண்டாவது முறையும்..

கதவு திறந்தது.

எழுபது எழுபத்தைந்து வயதில் ஒருவர் நின்றிருந்தார். தலையில் தர்மத்திற்கு ஒன்றிரண்டு ரோமங்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. துப்பறியும் சாம்புவை நினைவுப் படுத்தும் விளாம்பழ மண்டை.. நீண்ட மூக்கு.. அதில்  வழிந்துக் கொண்டிருந்த அரை கண்ணாடி. சிவப்பு நிற டீ-ஷர்ட்.. அதில் Do not Disturb என்ற வாசகம்.. கறுப்பு நிற ஷார்ட்ஸ்.. காலில் மிருதுவான ஹவாய் செறுப்பு..  

சுதாகரைப் பார்த்து லேசான சிரிப்பு.

“யெஸ்..?”

என்று வயதுக்கு சம்பந்தமில்லாத கணீர் குரலில் கேட்க..

“ஐ ஆம் சுதாகர்.. இந்த பிராபர்ட்டி விலைக்கு..”

“ஓ.. வாங்க வாங்க..”

சுதாகரை உள்ளே அழைத்துப் போனார்.

உள்ளே நுழைந்த சுதாகர் பிரமித்துப் போனான்.. அவ்வளவு நேத்தியாக அலங்கரைக்கப் பட்ட ஹால்.. சுவரில் அங்கங்கே தொங்கிக் கொண்டிருந்த விலை உயர்ந்த ஓவியங்கள்.. ஒவ்வொரு மூலைகளையும் அலங்கரிக்கும் கலைப் பொருட்கள்.. மேலிருந்து தொங்கும் கலைநயமான சாண்ட்லியர்.. அந்தக் காலத்து ராஜ சிம்ஹாசனம் போன்ற சோபாக்கள்.. கால் பதிக்கவே கூச வைக்கும் கம்பளங்கள்..

அவன் பிரமித்து நிற்பதைப் பார்த்த பெரியவர்..

”உங்க பேர் என்ன சொன்னீங்க?”

“வந்து.. சுதாகர்.. கிரானைட் பிஸ்னஸ்”

“ஓ.. வெரி குட்.. நான் விஸ்வநாதன்.. விச்சு.. ஐ ஆம் என் ஆர்க்கிடெக்ட்”

சுதாகர் அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

“அப்ப இந்த வீடு..”

“ஒவ்வொரு இஞ்சும் நான் பிளான் பண்ணிக் கட்டினது.. வாங்க வீட்டைப் பார்க்கலாம்”

விஸ்வநாதன் முன்னால் நடக்க சுதாகர் அவரைத் தொடர்ந்தான்..

”இந்த ஹாலை கவனிச்சீங்களா? வழக்கம் போல நீளமா இருக்காது.. கொஞ்சம் வளைஞ்ச மாதிரி இருக்கும்.. ஜிக் ஜாக்கா.. நான் பாரீஸ் போயிருந்த போது ஒரு வீட்டுக்கு இன்வைட் பண்ணியிருந்தாங்க.. அந்த வீட்டு ஹால் இப்படித் தான் இருந்தது.. ஏன்னு கேட்டேன்.. இந்த ஷேப்புல ஹால் இருந்தா காத்தோட்டம் சுகமா இருக்கும்னு சொன்னாங்க.. நிஜமாவே அங்க சுகமான காத்தோட்டம் அனுபவிச்சேன்.. அதே மாதிரி இங்கயும் கட்டினேன்.. இந்த சம்மர்ல கூட ஏ.ஸி போடாமலே கூலா இருக்கும்..”

அவர் சொன்னது உண்மை தான்.. வெளியில் இருந்த வெக்கைக்கு உள்ளே அந்தச் சுவடே தெரியவில்லை.

“இங்க வாங்க”

விஸ்வநாதன் சமையலறைக்கு அழைத்துச் சென்றார்..

வெளியே விம்மி உருத்தாமல் சுவருக்குள் அடங்கிய ஷெல்புகள்.. உயர் தர கிடானைட் பதித்த மேடைகள்.. அதில் பதிந்திருக்கும் கேஸ் அடுப்புகள்..

ஒவ்வொன்றாக அவன் வியந்துக் கொண்டிருக்கும் போதே விஸ்வநாதன் தொடர்ந்தார்.

“ஒரு விஷயம் கவனிச்சீங்களா.. இந்த கிட்சன்ல சிம்னியும் கிடையாது.. எக்ஸ்ஹாஸ்ட்டும் கிடையாது.. ஆனா நீங்க காரமா என்ன குக் பண்ணினாலும் கமராது.. கடுகு தாளிச்சாக் கூட கமராது.. ஏன் தெரியுமா? அதோ பாருங்க ஜன்னல் பக்கத்துல.. அந்த ஸ்பெஷல் வெண்டிலேஷன் தான் காரணம்.. நான் இடாலி போயிருந்த போது அங்க ஒரு இடத்துல பார்த்தேன்.. உடனே அதைப் பத்தி விசாரிச்சு வாங்கி வந்துட்டேன்.. இந்த பங்களாவுல நான் யோசிச்சு.. அனுபவிச்சு எவ்வளவோ பண்ணியிருக்கேன்.. ஆனா என் சம்சாரத்துக்கு இந்த வெண்டிலேஷன் தான் ரொம்பப் பிடிக்கும்.. ஏன்னா.. கிட்சன் அவங்க சாம்ராஜ்யமாச்சே”

விஸ்வநாதன் அந்த பங்களாவின் மாடி, கீழ் என்று திருத்தலப் பெருமையைச் சொல்லி முடிப்பதற்குள் இரண்டு மணி நேரம் ஓடி விட்டது.. உண்மையிலேயே சுதாகருக்கு அந்த இடம் ரொம்பவே பிடித்து விட்டது.. அதுவும் விஸ்வநாதன் சொன்ன ஒவ்வொரு வர்ணனையையும் கேட்டவுடன் இந்த இடத்தை விடவேக் கூடாது என்று முடிவு செய்து விட்டான்..

இருவரும் ஹாலில் உட்கார்ந்தார்கள்..

“என்ன.. வீடு பிடிச்சுதா?”

தயக்கத்துடன் கேட்டார் விஸ்வநாதன்.

“பிடிச்சுதாவா? சார்.. இது போல ஒரு வீடு கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கணும்”

சுதாகரின் குரலில் சந்தோஷம் தளும்பி வழிந்தது.

“வீட்டுல கன்சல்ட் பண்ண வேண்டாமா?”

மேலும் தயக்கத்துடன் கேட்டார் விஸ்வநாதன்.

“வேண்டாம் சார்.. என் டேஸ்டும் என் வைப்போட டேஸ்டும் ஒண்ணு தான்.. எனக்குப் பிடிச்சா அவளுக்கும் நிச்சயம் பிடிக்கும்”

சுதாகர் சொன்னதைக் கேட்டு விஸ்வநாதனின் முகம் சற்று வாடியது.

“அப்படியா.. அப்பச் சரி.. உண்மையைச் சொல்லட்டுமா? எனக்கு இந்த வீட்டை விக்க மனசே இல்லை.. நான் பார்த்துப் பார்த்துக் கட்டின வீடு.. ஆனா என்ன.. யாருக்காக இந்த வீட்டைக் கட்டினேனோ.. அதான் என் பொண்டாட்டி.. அவளே போயிட்டா.. ஒரே பொண்ணு.. அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டா.. இப்ப இங்க வந்திருக்கா.. இங்க நான் தனியா இருக்கக் கூடாதாம்.. இனிமே இவ்வளவு பெரிய பிராபர்ட்டியை ஆளில்லாம மேனேஜ் பண்ண முடியாதாம்.. அதான் இதை வித்திட்டு அவ கூட வரணம்னு கட்டாயப் படுத்தறா.. எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.. கேட்கலை.. விக்கறதுல முடிவா இருக்கா.. சரி உன் இஷ்டப் படி பண்ணுன்னு சொல்லிட்டேன்.. ஆனா இன்னமும் மனசு கேட்க மாட்டேங்கறது..”

விஸ்வநாதன் சொல்லச் சொல்ல என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான் சுதாகர்.

“ஸாரி.. ஏதேதோ சொல்லி உங்க மனசைக் கஷ்டப் படுத்திட்டேன் போலருக்கு.. எனக்கு ஒரு பிராமிஸ் மட்டும் பண்ணுவீங்களா?”

கெஞ்சாத குறையாகக் கேட்ட விஸ்வநாதனை என்ன என்பது போல் பார்த்தான் சுதாகர்.

“இந்த வீட்டை நீங்க வாங்கற பட்சத்துல.. கடைசி வரை இந்த வீட்டோட வடிவத்தை மாத்தக் கூடாது.. ரிப்பேர் பண்ணுங்க.. மராமத்து பண்ணுங்க.. ஆனா ஸ்ட்ரக்சரை மாத்தக் கூடாது.. ஏன் தெரியுமா.. இது போல ஸ்ட்ரக்சர்.. இந்தியாவுல வேற எங்கயும் கிடையாது.. இது.. என் மூளை.. என் உசிர்.. ப்ளீஸ்”

விஸ்வநாதன் சொல்லச் சொல்ல சுதாகருக்கு அவர் மனதில் இருந்த வலி புரிந்தது.. இவருக்கு இந்த வீட்டை விற்க விருப்பமில்லை.. ஆனால் தான் வாங்காமல் போனால் இன்னும் வேறு யாரிடமாவது இந்த இடம் கைமாறத் தான் போகிறது.. இவரின் மகள் பிடிவாதமாக இருப்பதாக இவரே சொன்னாரே.. சற்றே யோசித்து திவாகர் ஒரு முடிவுக்கு வந்தான்..

“சார்.. உங்க வலி எனக்குப் புரியறது.. எனக்கு இந்த வீடு  ரொம்பப் பிடிச்சுப் போச்சு.. ஒண்ணு மட்டும் நிச்சயமாச் சொல்றேன்.. நான் வாங்கறதுன்னா கடைசி வரை கண்டிப்பா இந்த வீட்டை சேதப் படுத்த மாட்டேன்.. பிராமிஸ்”

சுதாகர் இதைச் சொன்னவுடன் விஸ்வநாதன் முகத்தில் கொஞ்சம் நிம்மதி தெரிந்தது.

“ரொம்ப தேங்ஸ்.. இது போதும்.. இப்ப எனக்கு இந்த வீட்டை விக்கறதுல எந்தப் பிரச்சனையும் இல்லை”

“அது சரி சார்.. எவ்வளவு கோட் பண்ணறீங்க?”

விஸ்வநாதன் உடனே தலை அசைத்தார்.

“அதெல்லாம் என் பொண்ணு தான் முடிவு  பண்ணணும்.. எனக்கு பணத்தும் பேர்ல இருந்த ஆசையெல்லாம் போயாச்சு.. அவ இப்ப இல்லை.. வெளில போயிருக்கா.. நீங்க நாளைக்கு இதே டயத்துக்கு வாங்க.. நான் சொல்லி வெக்கறேன்.. நீங்க அவ கிட்டயே மத்த விஷயங்களெல்லாம் பேசிக்குங்க”

அங்கிருந்து திரும்பிய சுதாகருக்கு தன் மனைவியிடம் அந்த வீட்டைப் பற்றிச் சொல்லிச் சொல்லி மாளவில்லை.. விஸ்வநாதன் அவனிடம் விவரித்த ஒவ்வொரு விவரத்தையும் சொன்னான்.. அப்படி ஒரு வீடு அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றான்.. விலை மட்டும் தன் பட்ஜெட்டுக்குள் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்..

மறுநாள் விஸ்வநாதன் வீட்டு கேட்டுக்கு முன்னால் காரை நிறுத்தினான்.  நேற்று காணாமல் போயிருந்த செக்யூரிட்டி அவசரமாக வந்தான்..

“வீடு பத்திப் பேச வந்திருக்கேன்”

சுதாகர் சொன்னவுடன் அவன் அவசரமாக தன் மேஜைக்குச் சென்று இண்டர்காமில் யாரிடமோ பேசினான். பிறகு மறுபடியும் அவசரமாக வந்து கேட்டைத் திறந்து சுதாகரை உள்ளே போகச் சொல்லி வழி காட்டினான்.

பங்களாவுக்கு முன்னால் இருந்த இடத்தில் காரை நிறுத்தினான் சுதாகர். அங்கே ஏற்கனவே ஒரு எஸ்.யு.வி. நின்றுக் கொண்டிருந்தது..

காரை விட்டு இறங்கியவன் ஒரு முறை அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து அந்த இயற்கை ரசத்தை அனுபவித்தான்.

பிறகு மெதுவாகச் சென்று காலிங் பெல்லைத் தட்டினான்..

சற்றைக்கெல்லாம் கதவு திறக்க..

முப்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் நின்றிருந்தாள். விஸ்வநாதனின் அதே துப்பறியும் சாம்பு சாயல்.. நிச்சயம் அவர் மகளாகத் தான் இருக்க வேண்டும்..

”ஐ ஆம் சுதாகர்.. இந்த பிராப்பர்ட்டி விஷயமாப் பேச..”

சுதாகர் சொல்லி முடிப்பதற்குள் “யெஸ்.. வாங்க” என்று உள்ளே அழைத்துப் போனாள்.

“ஐ ஆம்.. நந்தினி.. வாங்க.. வீட்டை பார்க்கலாம்.. இந்த ஹாலை கவனிச்சீங்களா? வழக்கம் போல..”

நந்தினி ஆரம்பித்தவுடன் சுதாகர் குறுக்கிட்டான்..

“நான் ஏற்கனவே வீட்டைப் பார்த்திட்டேன்.. இந்த வீட்டோட ஒவ்வொரு அம்சமும் எனக்குத் தெரியும்.. இந்த ஹாலோட ஜிக் ஜாக் ஷேப் உட்பட..”

நந்தினி ஆச்சர்யத்தோடு அவனைப் பார்த்தாள்..

“ஏற்கனவே பார்த்திட்டீங்களா? எப்ப?”

“நேத்து.. இங்க வந்திருந்தேன்.. நீங்க இருக்கலை.. உங்கப்பா மிஸ்டர் விஸ்வநாதன் தான் எனக்கு வீட்டைச் சுத்திக் காட்டினார்..”

இதைச் சொன்ன சுதாகரை நம்ப முடியாமல் பார்த்தாள் நந்தினி..

“எங்கப்பாவா?”

“ஆமா.. அவர் தான் இந்த வீட்டைப் பத்தின எல்லா விவரமும் சொன்னார்.. இந்த வீட்டை வாங்கினா கடைசி வரை இதை சேதப் படுத்த மாட்டேன்னு அவருக்கு பிராமிஸ் பண்ணியிருக்கேன்”

நந்தினி அவனை தீர்கமாகப் பார்த்தாள்

”மிஸ்டர் சுதாகர்.. எங்கப்பா இறந்து இருபது நாளாச்சு”

 

அகக் கண் –  ‘கவி ஞாயிறு’ துரை.தனபாலன்

Nilamathy: அகக்கண்

முகத்திருக்கும் இருவிழிகள் உலகம் அறியும்

மோதுகின்ற வேல்விழிகள் இளமை அறியும்!

நகத்திருக்கும் நுண்கண்கள் மாவலி அறியும்

நாலுபேரின் கொள்ளிக்கண் தாயுளம் அறியும்!

நுதலிருக்கும் நெற்றிக்கண் மதனுரு அறியும்

நுட்பமான ஊற்றுக்கண் மண்ணே அறியும்!

புதலிருக்கும் புலியின்கண் மானே அறியும்

புவிமாந்தர் அகக்கண்ணை ஆரே அறிவார்?

 

உள்ளத்து உணர்வுகளை உலகில் பலரின் 

ஒளியுண்ட இருகண்கள் உரத்துப் பேசும்!

உள்ளத்தின் ஆழத்தில் உறைந்தே உள்ள 

உணர்வுகளை அகக்கண்ணோ ஒளித்தே வைக்கும்!

புறக்கண்கள் புன்சிரிப்புச் சிரிக்கும் பலரின்  

புகைகின்ற அகக்கண்கள் சினந்தே நோக்கும்!

பிறர்துயரைக் காணுகையில் வருந்தும் பலரின் 

பின்புலத்து அகக்கண்கள் பெரிதாய்ச் சிரிக்கும்!

 

அகந்தெளிந்த சான்றோர்க்கு அகத்தின் கண்ணில் 

அறிவொளியும் அன்பொளியும் கலந்தே வீசும்!

அகத்திலவர் கண்போல ஒருகுரல் வாசம்

ஆண்டவனின் குரலாயது அறமே பேசும்!

முகத்தினிலே  உணர்வுகளை மறைப்போர் தம்மை

மூத்தோர்தம் அகக்கண்ணால் அறிந்தே கொள்வார்!  

தகைமையொடு அவருக்கும் நன்றே செய்வார்

தம்அன்பின் திறத்தாலே அவரை வெல்வார்!

 

இருவேறு நிலைதம்மை எண்ணிப் பார்ப்பீர்

எந்தநிலை நல்லநிலை என்றே அறிவீர்!

புறக்கண்ணும் அகக்கண்ணும் ஒன்றாய் நோக்க

புவிவாழ்வில் அமைதியெனும் பூக்கள் மலரும்!

ஒருநிலையில் உள்ளத்துள் உணர்வுகள் ஒன்ற

உள்ளுறையும் அகக்கண்ணில் ஒளிச்சுடர் தோன்றும்!

அறநெறிக்குறள் அகிலத்தை உய்த்தல் போல 

அகக்கண்ணின் ஒளியாலும் உலகே உய்யும்!

                                                                   

பிட்சாவின் எட்டு பாகங்கள் – ரேவதி ராமச்சந்கிரன்

Best Homemade Pizza - How to Make Homemade Pizza

‘அம்மோவ் துணி போடும்மா, பாத்திரம் எல்லாம் கழுவிட்டேன்’ அஞ்சலையின் குரல் அமுதமாகக் காதில் பாய்ந்தது. கோரனாக் கால லாக் டவுனுக்குப் பிறகு அஞ்சலை இப்போதுதான் வேலைக்கு வர அரம்பித்துள்ளாள். நம்பிக்கையான, உண்மையான வேலையாள் கிடைப்பது பூர்வ ஜன்ம புண்யம். அந்தப் புண்யம் சாவித்திரிக்கு அஞ்சலை ரூபத்தில் கிடைத்துள்ளது.

வேலை எல்லாம் முடித்தப்பிறகு மெதுவாக ‘அம்மோவ், இரண்டு நாள் லீவு குடும்மா, பெண்ணையும், பேத்தியையும் பார்த்து ரொம்ப நாள் ஆகிறதம்மா. இந்த கணேச சதுர்த்தி ஒட்டி ஒரு எட்டு போய்ட்டு வந்துடரேன்மா’ என்றாள். இதைக் கேட்ட சாவித்திரி பேப்பரைத் தலைகீழாக புரட்டிக்கொண்டிருந்த கணவர் சுந்தரத்திடம் ‘நாளை இரண்டு நாட்கள் துணி அதிகம் போடாதீர்கள். அஞ்சலை லீவு கேட்கிறாள்’ என்று தொடர்ந்து மெதுவாக ‘அவள் பெண்ணையும் பேத்தியையும் பார்த்து வரணும் என்கிறாள். ஒரு ஐநூறு ரூபாய் தரட்டுமா’ என்று சுந்தரத்தின் முகத்தையேப்  பார்த்து நின்றாள். சாவித்திரிக்கு இரக்க குணம் கொஞ்சம் ஜாஸ்திதான்.

உடனே சுந்தரம் ‘சரி துணி அதிகம் போடவில்லை. ஆனால் இப்ப தீபாவளி வருகிறதே, அப்ப போனஸ் கொடுத்தா பத்தாதா, இப்ப வேற தரணுமா’ என்று கணக்குப் பேசினான். சாவித்திரியும் விடாமல் ‘பாவம் அவள், “இந்தக் கோரனாக் காலத்தில் அவளது வருமானம் மிகவும் குறைந்து விட்டது, ரொம்பவும் வறுமையில் இருக்கிறாள், விலைவாசியும் ஏறிப் போயுள்ளன, அவள் தன் பெண்ணையும், பேத்தியையும் பார்க்கப் போகிறாள், இந்தப் பண்டிகையை கொண்டாட வேண்டாமா, நாம் பணம் கொடுத்தால் அவளுக்கும் சந்தோஷமாக இருக்கும்” என்று ஒரு குட்டி லெக்சர் அடித்தாள்.

‘ஏன் இப்படி மண்டூகமாக இருக்கிறாய்’ என்று கடிந்து கொண்டான் சுந்தரம். அப்படியும் அவள் மெதுவாக ‘கவலைப்படாதீர்கள், இன்று பிட்சா ஆர்டர் செய்வதாக உள்ளோம், அந்த எட்டு பாகமுள்ள பழைய பிரட்டை வாங்குவதை நிறுத்திவிடலாம். ஏன் அனாவசிய செலவு?  அதற்காகும் ஐநூறு ரூபாயை இவளுக்குத் தரலாம்’ என்று நீதி வழங்கினாள். கோவத்தில் பற்களை கடித்தவாறே “ஒ, நல்லது, எங்களிடமிருந்து  பிட்சாவைப் பிடுங்கி அந்தப் பணத்தை அவளுக்குத் தரப் போகிறயாக்கும் நல்ல நியாயம்’ என்ற சுந்தரம் விடுவிடுவென்று சட்டையை மாட்டி கோவத்துடன் வெளியில் சென்று விட்டான்.

மூன்று நாட்கள் கழித்து வேலைக்கு வந்த அஞ்சலை தூசி தட்டி வீடு பெருக்கித் துடைப்பதில் மும்முரமாக இருந்தாள். ’லீவு எப்படி இருந்தது’ என்று அவளை மெதுவே வினவினான் சுந்தரம். கண்களில் சிறிது எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளிகளுடன் ‘ரொம்ப நன்றாக இருந்தது ஐயா. அம்மா ஐநூறு ரூபாய் கொடுத்தார்கள்’ என்று நன்றியுடன் கூறினாள்.’ நீ போய் பெண்ணோடும் பேத்தியோடும் ஜாலியாக இருந்தாயோ’ என்று சுந்தரம் சிறிது நக்கலோடு கேட்டான். ‘ஆமாம் சாரே, ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இரண்டு நாளில் ஐநூறு ரூபாயும் காலி’ என்று குதூகலத்துடன் கூறி அந்த நினைவில் கண்கள் சிறிது சொறிகினாள்.. ‘நிஜமாகவா! அப்படி என்னதான் செய்தாய் சொல் பார்க்கலாம்’ என்று அலட்சியமாகக் கேட்டான் சுந்தரம்.

யார் இப்படிக் கேட்பார்கள் என்று காத்திருந்த மாதிரி துடைப்பத்தைக் கீழே போட்டு விட்டு, தரையில் குந்தி உட்கார்ந்து, மலர்ந்த முகத்துடன், கைகளை விரித்து, விரல்களால் எண்ணிக் கொண்டே ‘60 ரூபாய் பஸ்சுக்கு, 25 பெண்ணுக்கு வளையல், 50 ரூபாய்க்கு பலகாரம், 50 ரூபாயில் அவள் வீட்டுக்காரருக்கு ஒரு நல்ல பெல்ட், 150 பேத்திக்கு புதுத் துணி, 40 ரூபாய் அவளுக்கு ஒரு தலையாட்டி பொம்மை, கோயில் உண்டியலில் 50 ரூபாய், மீதம் இருந்த 75 ரூபாயை பெண்ணிடம் கொடுத்து பேத்திக்கு நோட்புக், பென்சில் வாங்கச் சொல்லியுள்ளேன்’ என்று பூரா 500 ரூபாய்க்கும் பட்ஜெட் போட்டாள். இதைச் சொல்லிவிட்டு புடவைத் தலைப்பை உதறி விட்டுக் கொண்டே எழுந்து பாக்கி வேலைகளைத் தொடர்ந்தாள். ஆ, 500 ரூபாய்க்குள் இத்தனையா என்று சுந்தரம் ஆச்சரியத்துடன் யோசிக்க ஆரம்பித்தான்.

அப்போது அவன் கண் முன்னே பிட்சாவின் எட்டு தூண்டுகளும் தோன்றி ஒவ்வொன்றும் அவனது மனசாட்சியை சுத்தியல் போல அடித்தன. ஒரு பிட்சாவுடைய விலையையும் அஞ்சலை தன் மகளைப் பார்க்கப் போகும்போது செய்த செலவையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினான். முதல் துண்டு பஸ்சுக்கு, இரண்டாவது பெண்ணின் வளையலுக்கு, மூன்றாவது பலகாரத்துக்கு, நான்காவது மாப்பிள்ளையின் பெல்ட்டுக்கு, ஐந்தாவது பேத்தியின் துணிக்கு, ஆறாவது துண்டு அவளுக்கு பொம்மை, ஏழாவது கோயிலுக்கு, எட்டாவது நோட்புக், பென்சிலுக்கு. அடடா எப்படி இப்படி நினைக்கத் தோன்றியது!

திடீரென்று டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் ‘பிட்சா வட்டமாக இருக்கும், எட்டு கோண பெட்டியில் வரும், ஆனால் எடுத்தால் முக்கோணமாக இருக்கும் எப்படி!’ என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இப்போது சுந்தரத்துக்கு ‘இத்தனை நாள் நாம் ஒரே கோணத்தில்தானே பிட்சாவைப் பார்த்தோம். ஆனால் இப்போது அஞ்சலை பிட்சாவைத்  தலைகீழாகப் புரட்டி அதன் இன்னொரு பக்கத்தையும் காட்டி விட்டாளே’ என்று எண்ணத் தோன்றியது. எட்டு பாகமுடைய பிட்சா சுந்தரத்திற்கு வாழ்க்கையின் உண்மை அர்த்தத்தைப் புரிய வைத்தது

 “வாழ்க்கைக்காக பணத்தை செலவழிப்பதா அல்லது செலவழிப்பதற்காக வாழ்க்கையா!’

படிக்காத அஞ்சலை படித்த சுந்தரத்திற்கு வாழ்க்கைத் தத்துவத்தை எளிய முறையில் உணர்த்தி விட்டாள்!   

 

பெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம் – தமிழில் – இரா மீனா

Indian Women Authors Lalithambika Antharjanam Chaturang Anniversary issue | प्रतिकारदेवतेचं अवतरण घडवणारी कथा | Loksatta

மூலம்       : லலிதாம்பிகா அந்தர்ஜனம் [1909—1989 ]

ஆங்கிலம்    : ஜே. தேவிகா

தமிழில்      : தி. இரா. மீனா

 

நவீன  மலையாள இலக்கியத்தின் முதல் பெண் எழுத்தாளர் என்று அடை

யாளப்படுத்தப்படும் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் படைப்புக்கள் சமூக

சீர்திருத்தப் பார்வை கொண்டவை. ’அக்னிசாட்சி ’நாவலுக்காக சாகித்ய

அகாதெமி விருது பெற்றவர்.

 

எழுத்தாளர்,அரசியல் செயல்பாட்டாளர் போன்ற புறவய பொதுப் பணிக

ளைச் செய்ய பெண்கள் போராட வேண்டியிருந்ததான நிலையை ஆழமான

விமர்சனமாக கதை முன்வைக்கிறது.   


பெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம்

valuable readers |இந்தக் கடிதம் ஒவ்வொரு தினமணி வாசகருக்கும் தாங்களே எழுதியதான உணர்வைத் தரலாம்...- Dinamani

என் அன்பிற்குரிய தங்கையே,

நீண்ட நாட்களாகவே உனக்குக் கடிதம் எழுத வேண்டுமென்று நினைத்துக்

கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்லப் போனால்,உன் முதல் கதை பிரசுரமான போதே நான் உனக்கு எழுதத் தயாராகி விட்டேன்.

ஆனால்,அது உனது முதல் கதை,பெண் எழுத்தாளர் பெயரில் ஒரு கவிதை

அல்லது ஒரு கதை பிரசுரமானால் அதற்கான பாராட்டு வெள்ளம்தொடரும்  அது உன்னை போதைக்குள்ளாக்கியிருக்கும் போது—அது மாதிரியான தருணத்தில் ,என்னுடைய பணிவான குறிப்பை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா?அதனால் நான் காத்திருக்க முடிவு செய்தேன். புகழென்னும் கவசம் உன்னை விட்டு விலகும் காலம் உனக்கும் வரும்; குற்றம் சொல்கிற கூர்மையான முட்களாக விமர்சனங்களை நீ எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீ தொடர்ந்து எழுத விரும்பினால். . . உன் உணர்வுகள்,எண்ணங்கள்,இலக்கியம் பற்றிய அபிப்பிராயங்கள்  ஆகியவற்றை தொடர்ந்து வெளிப்படுத்தினால், அப்படி ஒரு நேரம் விரைவில் வரும். உன் மனம் முட்களால் கிழிபடும். உன் தைரியம் சறுக்கி விழும். உன் வாழ்க்கை. . . அதை விட்டுவிடலாம் என்ற வெறுப்பு நிலைக்குக் கூட நீ வரலாம். . . உன் திறமையும்,கற்பனையும் இவை எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளுமானால்  நீ தொடர்ந்து எழுதலாம். இன்று, புகழுக்காக எழுதும் நீ, பின்னாளில்,எழுத்தின் மேலான விருப்பத்தில் எழுதலாம். அதற்குப் பிறகு,நீ புகழைத் தூக்கி எறிவாய். உன் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் உண்மை இலக்கியம் ,புகழ், பிரசுரிக்கும் ஆசை ஆகியவை பற்றிக் கவலைப்படாது். . .

இந்தக் கடிதம் அந்த நேரத்தில்  நீ படிப்பதற்காகத்தான்.

புகழில் விருப்பம் குறைந்த ஒரு நேரத்தில்,இந்தக் கடிதத்தை எழுதியவரின் பெயரைக் கூட தெரிந்து கொள்ள வேண்டுமென்ற வேகம் உனக்கு இருக்காது.  நான், முகம் தெரியாத பெண் சிநேகிதி—-சிறிது இலக்கியஆளுமையும், தன்னளவிலான பெருமையும் கொண்டவள் என்ற அளவில் தெரிந்தால்போதும். ஒரு காலத்தில் எனக்குள்ளும் நம்பிக்கைகளிருந்தன. நிறைய எழுத வேண்டும்,என் பெயர் பெரிய அச்சிலும், என் புகைப்படம் செய்தித்தாள்களிலும் வரவேண்டுமென்று கனவு கண்டேன். என்னைப் பார்ப்பதில் எனக்கு அப்படி ஓர் ஆனந்தம்—அவைதான் என் நம்பிக்கைகளும்,ஆசைகளும்.  

ஆனால் அதற்கு ஒரு பெரிய தடையிருந்தது. என் பெற்றோர் மிகவும் பழமைவாதிகள். தன் மகள் ஓர் எழுத்தாளராக அல்லது ஒரு நடிகையாக வரலாமென்ற சிந்தனை சிறிதுமில்லை. பாட்டி–கொள்ளுப் பாட்டி –அவளுடையபாட்டிக்குப் பாட்டி என்று தன் மகளுக்கு ஒரு மிகப் பழைய பெயரை வைத்தனர். நிச்சயமாக,புதுமை ,இனிமை என்று எந்தப் பரவசமுமின்றி, கொஞ்சம்கூச்சம் தருவதாக என் பெயர் இருந்தது! என்தோற்றம், வீட்டில் இருக்கும்சிறிய கண்ணாடியில் கூட நீண்ட நேரம் பார்க்க முடியாதது. ஆனாலும்நான் எழுதவேண்டுமென்று விரும்பினேன். . . புகழ் பெற. . . என் புகைப்படத்தை அச்சில் பார்க்க . . .

என்ன வகையான நோய் இது. கற்பனை செய்து பார். வசதியான வீட்டு எஜமானியாக இருப்பவள், இந்த இலக்கிய மூட்டைப் பூச்சியை சாவதானமாக உட்கார்ந்து ரசிப்பது பொருத்தமாக இருக்கும். பொதுவாக இது நகர்ப்புறத் தொற்றுநோய் ;பெரும்பாலும் கிராமப் பகுதிகள் இதிலிருந்து விலக்கப்பட்டவை. அங்குள்ள ஒளியும்,காற்றும் அதைக் கடத்திவிடும். ஆனால்,மஞ்சள் காமாலையைப் போல, ஒருவன் இலக்கிய மூட்டைப்பூச்சியைப் பிடித்து விட்டால் பார்ப்பதெல்லாம் ஒரே நிறத்தில்தான் தெரியும். கேட்பதெல்லாம் அதே தொனியாகத்தான் இருக்கும். . .  இலக்கியம். . இலக்கியம். . .

இந்தத் தீரா நோய்க்கு ஒரே ஒரு தீர்வுதானுண்டு. மனதில் தோன்றும் எல்லாவற்றையும் தாளில் எழுதி வைத்துவிடவேண்டும். நாம்–பெண்கள்–மருத்துவ விளம்பரதாரர்கள் ரகசியம் என்று நினைக்கிற நோய்களையும் கூடப்பொதுவில் அறிவிக்க விரும்புவோம். ஆனால் நம்மில் மிகச் சிலருக்கு மட்டுமே நம்மைப் பிடித்திருக்கிற இலக்கியப் பூச்சியை தைரியமாக வெளிப்படையாக அறிவிக்க முடியும்.

சகோதரியே!நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான எண்ணங்களோடு உழன்று கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தலைவி நான். சமையலறையில் மட்டும் கணக்கற்ற வேலைகள். எனினும்,இந்த நாட்களில் சொல்வது போல,’துடிக்கும் வல்லமையான ஒரு படைப்பாக்கப் புரட்சி’ எல்லா நேரங்களிலும்,என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் நான் அரிசியைக் கழுவும் போதும், பொரியலைக் கிளறும்போதும், தொட்டிலை ஆட்டும்போதும் அதே எண்ணம்தான்

நான் எழுத,எழுத விரும்புகிறேன். நான் எழுத வேண்டும்! அதனால் ,சமையலறை அலமாரியில்,உப்பு, மஞ்சள்,மிளகாய்க்கும் இடையே ஒரு சிறியதாளும், பென்சிலும் இடம் கண்டுபிடித்திருக்கின்றன.

நான் எழுதிய முதல் கவிதை. . நீ அதைப் படிக்க விரும்புகிறாயா?உனக்குக் கவிதை பிடிக்குமா என்றெனக்குத் தெரியவில்லை. கவிதையில் ஒருவரின்உணர்வுகளும்,எண்ணங்களும் வெளிப்படுவது அவசியமற்றது என்று சிலர் இன்று சொல்கின்றனர். அது மொழியை அடிமைப்படுத்தி விடுகிறது. இது விதிகளை உருவாக்கி படைப்புச் சுதந்திரத்தில் தடைகளை ஏற்படுத்துவதற் காகத்தான்.  முதலாளி வர்க்கத்தின் அதிகாரம். அவர்கள் சொல்வது சரியாகஇருக்கலாம். ஆனால் என் மனதிற்குள் முதலில் வருவது ஒரு கவிதைதான்.  நான் உன்னைச் சோர்வாக்க விரும்பவில்லை. என் கவிதை இதோ!

       “புதிய வாழ்க்கையைப் பெற விரும்புபவன்,முதலில் சாவின்

       கதவைத் தட்டவேண்டும். வலியிலிருந்துதான் வசந்தம் மலர்கிறது.

       இது தாய் பாடும் பாட்டு. ஆனால்,என் கற்பனைக் குழந்தையே !

       என் கருப்பையில் நீ எடையிடப்படவில்லை. நீ நகர்ந்த போதும்,

       அசைந்த போதும்,வளர்ந்த போதும், விருத்தியானபோதும் 

       மகிழ்ச்சியைத் தவிர எனக்கு வேறெதுவுமில்லை,நிறைவான மகிழ்ச்சி.  

       நீ பிறந்த தருணத்தின் பரவசத்திற்கு இணை ஏதுமில்லை. ”

இதுபோன்ற எண்ணங்கள், நான் எழுதினேன். அடுத்து என்ன?இதைச் செய் தித்தாளுக்கு அனுப்புமளவிற்கு எனக்குத் தைரியமில்லை.  காதல், மற்றும் புரட்சிக்கான காலகட்டம் அது. அவற்றைத் தவிர வேறெதைப் படிப்பார்கள்? இந்தச் சிறியதாள் அஞ்சறைப் பெட்டியில் சில காலமிருந்தது. அதற்குப்பிறகு காபி போட எரிக்கும் நெருப்பானது அல்லது பல்பொடி பொட்டலம் போட உதவியதென்று நினைக்கிறேன்.

இந்த ஏமாற்றம் என் ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி விடவில்லை.  அதே சமயத்தில் பக்கத்து வீட்டில் ஏதோ நடந்தது. ஓர் இளைஞன்,இளம் பெண்ணைக் காதலிக்க வழக்கம்போல வீட்டில் எதிர்ப்புகள். சில நாட்கள் அழுதும் அரற்றியும்,கழித்து விட்டு ஓடிப்போனார்கள். அல்லது தற்கொலை செய்து கொண்டார்கள்.  வழக்கமாகக் கதைகள் இப்படித்தான் இல்லையா ?ஆனால் இது வித்தியாசமானது. ஓர் இளைஞன், இளம் பெண்ணைக் காதலித்தான்.   ஆனால் அவள் காதலிக்கவில்லை. வழக்கம்போலக் குடும்பம் வற்புறுத்த, வழக்கமற்று அவள் எதிர்த்தாள். . பிறகு சம்மதித்து. .  கடைசியில். . கடைசியில் . . கோபப்படாதீர்கள். . திருமணத்தன்று அவள் குழந்தை பெற்றாள்.

என்ன வினோதமான கதை! நான் எழுதினேன் உண்மையைச் சொல்ல  வேண்டுமெனில் என்னைப் பற்றி எனக்குப் பெருமையாக இருந்தது. அந்தஇளம்பெண்ணுக்கு முன்னாள் காதலனைத் தந்தேன். கதையின் உச்சமென்பது அவனுடைய துரோகத்தில்தானிருக்கிறது.

உலகத்திலேயே காதலும்,திருமணமும்தான் முக்கியமான நிகழ்வுகளா?—என்று நீ கேட்கலாம். இந்தப் பெரிய உலகில் ,பெரிய உலகில் நோய்,சாவு, தேவை ,செல்வம், அடிமை,முதலாளி என்று பல— இந்த அற்ப விஷயங்கள் எழுதப்பட வேண்டியவையா? நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். . இளைஞர் உலகம் தனக்கு நெருக்கமானதை மட்டுமே கவனிக்கிறது.  .

தன்னைக் கவரும் விஷயங்களை மட்டுமே பார்க்கிறது;பேசுகிறது. அது  அற்பமாகத் தெரியலாம். ஆனால் அதை பின்னாளில்தான் உணர்கிறோம்.என் பள்ளித் தோழி—ஜானகி அம்மா என்று வைத்துக் கொள்வோம்—என்னை அடிக்கடி வீட்டில் வந்து பார்ப்பார்கள். அப்போது நான் காபி கொடு்ப்பது வழக்கம். என் கவிதைகளை விட, நான் கொடுத்த காப்பியும்,நொறுக்கு தீனி யும்தான் அவர்களிடமிருந்து எனக்கு நற்சான்றிதழைத் பெற்றுத் தந்தன. என்  கவிதைகளைக்  கேட்பதற்காக அந்தச் செலவுகள்.

ஒரு நாள் பொறுக்க முடியாமல் கேட்டு விட்டேன். ”ஜானம்மே! ஆழமான எல்லா ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு பெண் இன்னொருபெண்ணை நம்பக் கூடாதென்று சொல்வது தவறா?”

ஜானகியம்மா என்னை அர்த்தத்தோடு பார்த்தார்,”உனக்கு அது பற்றி சந்தேகமா? நிச்சயமாக ,அது தவறுதான்.  ஒரு பெண் வேறு யாரை நம்ப முடியும்? ”

’அப்படியானால் ஒரு ரகசியம் சொல்கிறேன். அதை யாரிடமும் சொல்லமாட்டேன் என்று சபரிமலை கடவுள் மேல் அல்லது கொடுங்காளூர் பகவதி மேல் சத்தியம் செய்ய வேண்டும். ”

“சபரிமலைகடவுள், கொடுங்காளூரம்மன் மேல சத்தியம் நான் யாரிடமும். . ”ஜானகியம்மா மிக ஆர்வமாக இருந்தார். ”

 

(மீதி அடுத்த இதழில் )

சிறைப் படுத்திய நூல்கண்டுகள்- திருமதி. ச.பானுமதி

Image result for பூச்சி கொசு அழகான படங்கள்

 

சின்னஞ் சிறு சிறகுகளுடன்

சிறு தீக்குச்சி அளவேயான

கரப்பான் பூச்சி ஒன்று ஊர்ந்தது ..

என் வீட்டின் சமையலறை சன்னலில்.

ஐந்தரை அடி உயரத்தில் நான்..

அலறி அடித்து ஓடினேன் வெளியே!

 

காற்றில் பறக்கும் தூசி போல,

ஒரே ஒரு கொசு  வட்டமிட்டுப் பறந்தது

தூங்க விடாமல் படுத்தியது…

ஒரு மணி நேரப் போராட்டத்தில்

வென்றது தூசிக்கொசு…

தோற்றது மாமனிதத் தூக்கம்!

 

கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்

தண்ணீருடனும், காற்றுடனும்

எனக்கே தெரியாமல்,  என்..

எண்சாண் உடம்பினுள்…!

வீரியமாய் அவைகள், நானோ

பலவீனமாய்…தும்மிக் கொண்டும்

இருமிக் கொண்டும் …

 

இத்தனை இருந்தும்..

இன்னும் பேசுகிறோம் ..

அஃறிணை நீ என்றும்… உயர்திணை நானென்றும் …

சின்ன நூல் கண்டா, சிறைப் பிடித்தது நம்மை என்றும் ….!

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

பல்லவப்பாண்டியர்

Let's Go To Pandyas Last Temple Near Virudhunagar - Tamil Nativeplanet

இது என்னடா இது – கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல?
பல்லவப்பாண்டியர்?

பல்லவர் கதை சொல்லும்போது நாம் பாண்டியர்களைப் பற்றி சிறிது மட்டும் சொன்னோம். பல பாண்டியர்களைப் பற்றி சுருக்கமாகக் கூடச் சொல்லவில்லை. அந்தக் குறை எதற்கு? மேலும், சரித்திரப்பாடத்தில் ‘பல்லவர் ஆட்சிக்காலத்தில் ஆட்சி செய்த பாண்டியர்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக” என்று கேள்வி வந்தால் நீங்கள் ‘ஞே’ என்று முழிக்கலாகுமா?. உங்களுக்காகவே அந்த பல்லவப்பாண்டியர் பற்றி இந்த இதழில் சுருக்கமாகச் சொல்வோம்.
இவர்களை இடைக்காலப் பாண்டியர் என்றும் சொல்லலாம்.

  • கடுங்கோன் கி.பி. 575-600
  • அவனி சூளாமணி கி.பி. 600-625
  • செழியன் சேந்தன் கி.பி. 625-640
  • அரிகேசரி கி.பி. 640-670
  • ரணதீரன் கி.பி. 670-710
  • பராங்குசன் கி.பி. 710-765
  • பராந்தகன் கி.பி. 765-790
  • இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
  • வரகுணன் கி.பி. 792-835
  • சீவல்லபன் கி.பி. 835-862
  • வரகுண வர்மன் கி.பி. 862-880
  • பராந்தகப் பாண்டியன்கி.பி. 880-900

பாண்டிய நாட்டின் சிற்றரசனாகப் பதவியேற்ற பாண்டிய மன்னன் கடுங்கோன் களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்தான். கி.பி. 575 ஆம் ஆண்டில் மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான். சற்றேறக்குறைய 400 ஆண்டுகளாய் தமிழகத்தை ஆண்டுவந்த களப்பிரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடுங்கோன் ஆட்சி கி.பி 600 வரை நீடித்ததது.

பாண்டிய மன்னன் கடுங்கோனுக்குப் பிறகு அவரது மகன் மாறவர்மன் அவனி சூளாமணி பாண்டிய நாட்டின் மன்னனானான். அவன் கி.பி. 600ம் ஆண்டு முதல் கி.பி.625ம் ஆண்டு வரையில் ஆட்சி செய்தான். இவன் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் வட பகுதியில் சிம்ம விஷ்ணு பல்லவ நாட்டை ஆட்சி புரிந்தான். பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவிற்கும் பாண்டிய மன்னன் மாறவர்மன் அவனி சூளாமணிக்கும் போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லவ மன்னர் சிம்ம விஷ்ணு வெற்றி பெற்றான்.

பாண்டிய மன்னனான செழியன் சேந்தன் கி.பி. 625ம் ஆண்டு முதல் கி.பி. 640ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆண்டான். இவன் மாறவர்மன் அவனி சூளாமணியின் மகன். சடையவர்மன் (ஜடாவர்மன்) என்ற சிறப்பு பட்டத்தைப் பெற்றிருந்தான். இந்த படத்தைப் பெற்ற முதல் பாண்டிய மன்னன் இவன். சடையன் என்பது சிவபெருமானின் மற்றொரு பெயராகும். சேர மன்னனைப் போரில் வென்றதால் வானவன் என்ற பட்டப்பெயரும் இவன் பெற்றான். இவன் பெயரால் அமையப்பெற்ற ஊர் – இன்றைய நாளில் விளங்கும் ‘சேந்தமங்கலம்’ நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இவன் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வந்த சீனநாட்டுப் பயணி யுவான் சுவாங் பாண்டிய நாட்டிற்குச் சென்றிருந்தார். ‘பாண்டிய மன்னன் செழியன் சேந்தன் இறந்து விட்டான். அதனால் பாண்டி நாடு பஞ்சத்தால் வாடுகிறது’ என்று தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அரிகேசரி பராங்குசன் தன் தந்தை செழியன் சேந்தனுக்குப் பின் பாண்டிய மன்னனானான். அரிகேசரி கி.பி. 640ம் ஆண்டு முதல் 670ம் ஆண்டு வரையில் பாண்டிய நாட்டை ஆண்டான். அரிகேசரிக்கு திருவிளையாடல் புராணத்தில் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன் என்ற பெயர்கள் உண்டு. இந்த கூன் பாண்டியனைப் பற்றி முன்பே நாம் விலாவாரியாக எழுதியிருக்கிறோம். ஆதலால் மறுபடியும் எழுதினால் நீங்கள் கடுங்கோபம் கொள்வீர்கள் என்று அறிவதனால் – அடுத்த பாண்டியனுக்குப் போவோம்.

அரிகேசரியின் மகன் கோச்சடையான் ரணதீரன். கோச்சடையான் என்றவுடன் ‘தலைவா’ என்று யாரும் எம்பிக் குதிக்கவேண்டாம்! இவன் தான் ஒரிஜினல் கோச்சடையான்! ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். ரணதீரன் – சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் ஆகிய மன்னர்களைப் போரில் வென்றான். ரணதீரன் பெற்ற (சரி.. வைத்துக்கொண்ட) பட்டங்கள்: கோச்சடையான், செங்கோல் தென்னன், வானவன், செம்பியன், மதுரகருநாடகன், கொங்கர் கோமான், மன்னர் மன்னன் என்று பல.

பராங்குசன் கோச்சடையான் ரணதீரனின் மகன். இவன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். இவன் தனது பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான். மேலும் முதலாம் இராசசிம்மன், தேர்மாறன், மாறவர்மன் எனவும் அழைக்கப்பட்டான். பராங்குசன் ஆட்சிக்காலத்தில் பல்லவ நாட்டை இரண்டாம் நந்திவர்மன் ஆண்டுவந்தான். பாண்டிய நாட்டின் வட எல்லையில் நடைபெற்ற போரில் பாண்டிய மன்னன் பராங்குசன் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனைத் தோற்கடித்தான். நென்மேலி, மண்ணை ஆகிய இடங்களில் நடை பெற்ற போரில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் பாண்டிய மன்னன் பராங்குசனைத் தோற்கடித்தான் என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார். பாண்டிய மன்னன் பராங்குசன் கங்க நாட்டின் மன்னனான சிறீபுருசனை போரில் வென்று அவன் மகள் பூதசுந்தரியை மணந்தான். பாண்டியன் பராங்குசன் வடக்கில் உள்ள மாளவ நாட்டை போரில் வென்றான். வெற்றியின் பரிசாக மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான். (மன்னர்கள் சண்டைக்குச் செல்வது இதற்குத்தானோ? – சரி நமக்கு எதற்கு வம்பு!)

பாண்டிய மன்னன் பராங்குசன் மற்றும் கங்க அரசன் மகள் பூதசுந்தரி ஆகிய இருவருக்கும் பிறந்தவன் பராந்தகன்.
(இதைப் பாருங்கள்.. பராந்தகன் – பராங்குசன் இருவரும் வேறு வேறு. அவர்கள் மாறி மாறி வருவார்கள். இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்!) பராந்தகன் கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். மன்னன் பராந்தகன் நெடுஞ்சடையன் மற்றும் சடையவர்மன் என்ற பட்டப்பெயர் பெற்றவன். கி.பி. 767 ஆம் ஆண்டு காவிரிக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்ணாகடத்தில். பாண்டியன் பராந்தகன் பல்லவ நந்திவர்மனைத் தோற்கடித்தான். பராந்தகனின் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டில் பெரியாழ்வார் வாழ்ந்தார். பெரியாழ்வாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான் மன்னன் பராந்தகன். ஆண்டாள் திருப்பாவை காலம் இதுவாகவே இருக்கக் கூடும்.

பாண்டிய மன்னன் பராந்தகனின் மகன் இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790ம் ஆண்டு முதல் 792ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன் ஆட்சியில் போர் எதுவும் நிகழவில்லை. போர் செய்யவில்லையென்றால் அந்த மன்னனைப் பற்றி நமக்குப் பேச்சு என்ன வேண்டிக்கிடக்கு?

இரண்டாம் இராசசிம்மனைத் தொடர்ந்து அவன் மகன் வரகுணன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். பாண்டிய மன்னன் முதலாம் வரகுணன் கி.பி. 792ம் ஆண்டு முதல் கி.பி. 835ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். மாறன் சடையன் மற்றும் சடையவர்மன் என்ற பட்டப்பெயர்களாலும் இவன் அழைக்கப்பட்டான். சோழ நாடு தவிரத் தொண்டை நாட்டு மன்னன் தந்திவர்மனுடன் போர் செய்து வென்று தொண்டை நாட்டையும் பாண்டிய நாட்டின் அதிகாரத்தின் கீழ் வரகுணபாண்டியன் கொண்டுவந்தான்.

வரகுணபாண்டியனுக்குப் பிறகு அவன் மகன் சீவல்லபன் பாண்டிய நாட்டின் மன்னனாகப் பதவியேற்றான். சீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். சீவல்லபன் பல்லவ, மற்றும் சிங்கள நாடுகளுடன் போர்புரிந்து வெற்றி/தோல்வி அடைந்தது அனைத்தையும் முன்பு விரிவாகக் கூறியிருப்பதால் இப்பொழுது அடக்கி வாசித்து அடுத்த பாண்டியனைப் பார்க்கப் போவோம்.

பாண்டிய மன்னன் சீவல்லபனின் முதல் மகனான வரகுண வர்மன் கி. பி. 862ம் ஆண்டு முதல் கி.பி.880ம் வரை ஆண்டான். வரகுண வர்மன் பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனுடன் உறவு வைத்துக் கொண்டு இருந்தான். வரலாற்று சிறப்புமிக்க திருப்புறம்பியப் போரில் பாண்டிய மன்னன் வரகுணவர்மன் மற்றும் நிருபதுங்கவர்மன் படைகள் பெரும் தோல்வித் தழுவின. இந்தப்போரில் அபாராஜித பல்லவனும் ஆதித்த சோழனும் வென்றனர். இதைத்தான் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமே!

பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் திருப்புறம்பியம் போரில் ஆதித்த சோழனிடம் தோற்றதைத் தொடர்ந்து பாண்டிய நாட்டில் தொடர்ந்து உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்படலாயின. இதைத் தொடர்ந்து கி.பி. 880ம் ஆண்டு பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் ஆட்சியை அவன் தம்பி பராந்தகப் பாண்டியன் கைப்பற்றிக் கொண்டான். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்ற காலம் போய் ‘தம்பி உடையான் தம்பிக்கு அஞ்சுவான்‘ – என்றாயிற்று. இரண்டாம் வரகுண பாண்டியன் துறவறம் பூண்டான். பராந்தகப் பாண்டியன் சேர மன்னனின் மகள் வானவன் மாதேவியை மணந்து கொண்டான். திருநெல்வேலி மாவட்டத்தில் சேரமாதேவி என்ற நகர் இவள் பேரில் அமைக்கப்பட்டது.

மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் – பாண்டிய மன்னன் பராந்தக பாண்டியனுக்கும் சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன். கி.பி. 900ம் ஆண்டு பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான்.

களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் முடிந்த பிறகு எழுந்த இரண்டு பேரரசுகளான பாண்டியர்களும் பல்லவர்களும் தங்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குள் 27 முறைப் போர் புரிந்தனர் என்பது வரலாறு மற்றும் சோழர்கள் ஆதிக்கம் செய்யும் காலம் வந்தது. ஒரு உறையில் பல கத்திகள் இருப்பது சாத்தியமில்லையல்லவா! சோழரின் சூரியன் பாண்டிய நிலவை அமாவாசையாக்கியது! (சோழர்கள் சூரிய குலம் – பாண்டியர்கள் சந்திர குலம் – என்பதை என்னமாக எழுதி விட்டோம்!)

பின்னொரு காலம் பாண்டிய நிலவு முழு நிலவாகும்.
அது வரை சோழரின் காட்டில் மழை!
தமிழகத்தின் ஒரு பொற்காலம் வருகிறது.. பராக்!.
அதைக் காண்போம் விரைவில்

                                                                    (மூன்றாவது பாகம் முற்றும்) 

அடுத்து வருவது பிற்காலச் சோழர்களின் வீர வரலாறு 

Iyyanar wolverine information } அய்யனார் வால்வரின் தகவல் களஞ்சியம் : அருள்மொழிவர்மன் என்னும் இராஜராஜசோழனின் சோழபுராணம்

மணி வயிறு வாய்த்தவனே!- என் பானுமதி

அறிவியல் கதை 

Secrets of the Y Chromosome - The New York Times

தென்னம் பாளை வெடித்துப் பூப்பூத்து நிறைந்திருந்தது சில நாட்களுக்கு முன். குறும்பைகள் மஞ்சளில் மினுக்கின. மற்றொன்றில் மட்டைகள் அதன் குலைகளின் பாது காப்பிற்கென கவிழ்ந்து நின்றன. ஒரு மரத்தில் குலைகள் பருக்கத் தொடங்கிவிட்டன. கரம்பன் வந்து பறித்துப் போடுவான் அப்போதெல்லாம். கரு மேனி பளபளவென்றிருக்கும். வேட்டியை வரிந்து கட்டி இடையில் ஒரு துண்டு அதை இறுக்கி இருக்கும். இருபது வயதிலேயே வெற்றிலை மெல்லும் பழக்கம் அவனுக்கு. அதனால் சிவந்த உதடுகள், அவன் சிரிக்கும் போது தெரியும் கறை படிந்த பல் வரிசை, கண்களில் கொப்பளிக்கும் குறும்பு. மரத்திலிருத்து எதை இறக்குவது, எதை விட்டு வைப்பது என்பதெல்லாம் ஒரு பார்வையிலேயே அவனுக்குத் தெரிந்து விடும்.

“அம்மாட்டேந்து கொழந்தயைப் பிரிக்கற, பாவமில்லையா?” என்பாள் வசந்தா வேண்டுமென்றே.

அவன் சிரிப்பான். ‘நா பறிக்காங்காட்டியும் அவ விட்டுடுவா, நெலத் தாயீ ஏந்திக்கிடுவா.’

“அது பேசித்துன்னா, தாயும், கொழந்தையும் பதற்றது உனக்குக் கேக்கும்.”

‘அம்மணி, கொல தள்ளிச்சா விடுதல; பின்னாப்ல தள்ளோணுமில்ல; நாம ஆண்டோனுக்கு படக்கிறோம், ஆத்தாளுக்கும் படக்கிறோம், எப்ப செதர் விடுவாங்கன்னு தும்பிக்க நீட்டிக்கிட்டு தொந்தி சாமி வேற காக்கறாரு. அத்தயெல்லாம் விடுங்க, கரம்பனுக்கு வவுறு இருக்கில்ல, அம்மணி.’

“அது சரி, அம்மாட்டேந்து சிசு பிரியணும்தான். ஆனா, கண்ணெதர்க்க பாத்துண்டே இருக்கோமில்ல; தென்ன என்ன பண்ணும், பாவம்.” என்பாள் வசந்தாவின் அம்மா கிண்டலாக இவர்கள் பேச்சில் கலந்து கொண்டு.

‘சிரிப்பாணியா வருதுங்கோ, அம்மணி. மூளயில பத்திக்கிட அது மனுசப் பயலா? புல்லு, பூண்டு கணக்கில்ல.’

வசந்தா அதை நினத்துக் கொண்டு இப்போது வாய்விட்டு சிரித்தாள். அவளுக்கு சிறு வயதில் நல்ல பொழுது போக்கே கரம்பனின் வருகைதான். அவன் வாயைக் கிண்டுவதில் அவனது அறிவும், அறியாமையும் வெளிப்படும் விசித்திரம்.

இன்று அவள் நகரின் தலை சிறந்த மருத்துவர் மற்றும் ஆராய்சியாளர். நாளை ஐந்து சிசேரியன்கள் இருக்கின்றன; அதிலும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடம். மிகக் குட்டை அவள்,  முதல் பிள்ளைப் பெற்றுப் பதினோரு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தாயாகி இருக்கிறாள். உடல் எடையும் 43 கிலோதான். அவளுக்கு வலியை வரவழைத்துப் பிள்ளைப் பெறச் செய்வது நல்லது. அவள் சிசேரியனைத் தாங்க மாட்டாள் எனத் தோன்றினாலும், அவள் நிர்வாகம் அதை ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

அவளது ஆய்விற்குக் கணிசமான பங்கு அவள் செய்யும் சிசேரியனிலிருந்து வருகிறது. அதற்காக அவள் சிசுவைப் பிரிக்கத்தான் வேண்டும்-அதுவும் இலாபகரமான முறையில். அவள் கரம்பனைப் போல்தான்-பக்குவத்திற்குக் காத்திருந்துதான் எதையும் செய்வாள்.

அந்தப் பெண்ணின் பெயர் கௌமாரி; அதிகம் புழக்கத்தில் இல்லாத அந்தப் பெயர் அவளை நினைவில் நிறுத்தியது. சூசன் கவலையுடன் அவளைத் தியேட்டருக்குக் கொண்டு வந்தாள்-எப்போதும், எதிலும் நிதானம் இழக்காத சூசன்; வசந்தாவிற்கு ஏனோ முதுகில் சிலீரிட்டது. சிசு வயிற்றில் சலனத்தை நிறுத்தி விட்டது; அந்தப் பெண்ணின் முகமும் சிலையானதைப் போல் ஒரு தோற்றம்; அனைத்து மானிட்டர்களும் மரணம், மரணமென்று மௌனமாகக் கூவின.

அவள் கணவன் மிக அமைதியாக இந்தச் செய்தியை எதிர் கொண்டான். ‘அனாடமி பாடப் பிரிவிற்கோ, ஆய்விற்கோ அவளை, அந்த ஆண்மகவை எடுத்துக் கொள்ளலாமென எழுதிக் கொடுத்தான். அவளது முகத்தை ஒரு முறை வருடினான். போய்விட்டான். எத்தனை துரிதத்தில் இரு இறப்புகளும் ஒரு துறப்பும்.

கௌமாரியின் உடலின் பல பாகங்கள் படமெடுக்கப்பட்டன. பல கோணங்கள், முழு உடலாக, உள் உறுப்புகளாக, மொத்தமாகத், தனித்தனியாக ஆறுமுகப் பரிமாணங்களில் நிமிடத்திற்குள் அவள் ஒரு பாடத்திட்டமாகி விட்டாள். இனி கணினி அவளை அனாடமிக் அல்காரிதம்படி வடிவமைக்கும்-அவள் கண்கள் அதில் செயற்கையாகப் பார்க்கும், காதுகளில் ஒலி பயணிப்பதை, நாசி விரிவடைவதை, நா ஊறுவதை, முலைகள் விறைப்பதை, உந்திச் சுழியை, பெண் உறுப்பை, எல்லாவற்றையும் லைவ் ரிலே எனக் காட்டும்; தோலை உரித்து எலும்பை, நரம்புப் பின்னலை, சதையை, நுரையீரலை, நெஞ்சுக்கூட்டை, விலா அமைப்பை, கல்லீரலை, மண்ணீரலை, சிறுநீரகங்களை, மலக்குடலை, தண்டு வடத்தை…அது எதையும் விடப்போவதில்லை. கம்ப்யூடர் சிமுலேஷனில் செயற்கை உறுப்புகளைப் பார்த்துப் படித்தவர்கள்தான் இப்போதெல்லாம்; ஆனால், நிஜ மனித உடலை இப்படிப் பார்ப்பது  மருத்துவப் படிப்பில் அரிதாகிவிட்டது.

கௌமாரியின் மூளையில் சில ஆய்வுகள் செய்வதற்காக அது தனியே புரதக் கரைசலில் வைக்கப்பட்டது. அளவில் சிறிய மூளை;ஆனால், அது எத்தனை எண்ணங்களைக் கொண்டிருந்ததோ?

‘ஆ, இதென்ன வசந்தா?’ என்று கிட்டத்தட்ட அலறினாள் மேகா.

Newly-Discovered Brain Cell | Institute for creation research, Human brain, Nerve cellவசந்தாவின் புருவங்கள் வளைந்து கேள்வி கேட்டன. ‘இதைப் பார், இதெப்படி இங்கே?’ இன்னமும் நடுக்கமும், ஆச்சர்யமும், கிறீச்சிடலுமாக அவள் குரல் ஒலித்தது. அந்த மூளையில் ‘வொய்’ குரோமசோம் இருந்தது.

இருவரும் பரபரப்பானார்கள். உடனடியாகக் கௌமாரியின் கேஸ் ஹிஸ்டரியைத் திரையில் படித்தார்கள். அவளுக்கு முதலில் பெண் பிறந்திருக்கிறாள்; பதினோரு வருடங்களுக்குப் பிறகு இப்போது ஆண்; அதுவும் இறந்துபோனக் குழந்தை; இவள் மூளையில் ஆணின் ‘வொய்’ எப்படி, எங்கிருந்து வந்திருக்கும், எப்படி இன்னமும் மூளையில் இருக்கிறது என எதுவும் புரியவில்லை.

இதை எப்படிப் பிரிப்பது, இதை எங்கே பாதுகாப்பது, இது சொல்லும் செய்திதானென்ன?

“பிரிக்கலாம் அந்த நிருவுருவை; ‘க்ளோனிங்’கில் அதைச் செய்கிறார்கள்; நம் ‘ஜெனொம் லைப்ரரி’யில் ‘க்ரோம் ஜம்பிங்’ செய்ய முடியும். ஆனால், இதை இரகசியமாகச் செய்ய வேண்டும்; மேலும், இப்போது திரவத்தாலும், மூளையின் சூடு இயல்பாக இருப்பதாலும் அதி உற்சாகமாக அந்தக் க்ரோம் இருக்கிறது.”

‘ஏன் இரகசியமாக?’

“வா, பின்னால்” என்ற வசந்தா அதி வேகமாக அந்த மூளைக்குடுவையை எடுத்துக் கொண்டு முழுதும் குளிரூட்டப்பட்ட நீண்ட வராந்தாவில் நடந்தாள். முக்கிய மருத்துவ மனை முடிந்து அதன் பின்னர் நீள் செவ்வகத்தில் சிறு தோட்டமிருந்தது.அதன் குறுக்கு நடைபாதையில் சென்ற அவள் வெற்று மனையை அடைந்தாள். அதையும் தாண்டிய பிறகு முழுதும் பெரும் மரங்களுள்ளே பொதிந்திருந்த ஒரு வளாகம் கண்களில் பட்டது. மூன்று வருடங்களாக வேலையில் இருக்கும் தனக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரியவில்லை என வியந்தாள் மேகா.

தானியங்கிக் கதவு வசந்தாவை படம் பிடித்து அவளை மட்டும் உள்ளே அனுமதித்தது; கதவின் மறுபுறம்  வசந்தா ஏதோ குமிழைத் திருக மேகா உள்ளே இழுக்கப்பட்டாள். தெர்மல் சூட்டை அவர்களுக்கு உடனே  ரோபோக்கள் அணிவித்தனர். ‘ரிவர்ஸ் ஜெனெடிக்ஸ்’ என்ற ஒரு பிரிவு மிகப் பெரிதாகத் தெரிந்தது. முழுதும் தானியங்கியான அதில் மானிடர்கள் முன் ரோபோக்கள் அமர்ந்து       நிருவுருக்களை அமைத்துக் கொண்டிருந்தன-அதாவது அவைகள் ஒருவித கோர்க்கும் செயல்பாடுகளைச் செய்து காட்டிக் கொண்டிருந்தன. மேகா புரிந்து கொண்டாள்- அவை மிக மிகச் சிறுத் துண்டுகளாக க்ரோமின் ஒரு நுனியைப் பகுத்துப் பிரித்தன. அவை இணைய வேண்டிய பகுதிகளை மற்றொரு திரை சோதித்து க்ளோன் குழுக்களை அமைத்துக் கொண்டிருந்தது. பல அவற்றில் ‘ஏற்கப்படவில்லை’ என்று மறு சுற்றுக்குச் சென்றன. இதை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த மேகா, வசந்தா அங்கே இல்லாததை அப்போது தான் உணர்ந்தாள். பயத்துடன் தயங்கியவாறு அவள் ‘ரிவர்ஸ் ஜெனெடிக்ஸ்’சிலிருந்து வெளியே வந்தாள்.

‘க்ரோம் ஜம்பிங், க்ரோம் வாக்கிங், ஹைபிரடைசெஷன்’ என்று லேசர் ஒளி சுட்டிய பகுதியில் வசந்தாவின் தெர்மல் உடை தெரிந்ததும் அவளுக்கு உயிர் வந்தது போல இருந்தது. வசந்தா அந்த மூளையிலிருந்து ‘வொய்’ க்ரோமைப் பிரித்துக் கொண்டிருந்தாள். நுண்நோக்கியுடன் இணைந்த வலை அமைப்பிலான கூரற்றக் கத்திக் கரண்டி அந்தக் க்ரோமை பிடிக்க முயன்று கொண்டிருந்தது. ஐந்தாம் முறை அது மாட்டிக்கொண்டது. வசந்தாவின் முகத்தில் அந்த முகமூடியையும் தாண்டி ஒரு புன்னகைக் கீற்று வந்து போனது மேகாவிற்குத் தெரிந்தது.

நஞ்சுக் கொடி போன்ற ஒரு வடிவமைப்பை அங்கிருந்து வசந்தா எடுத்தாள்; மேகா அதன் உயிர்ப்புச் சக்தியைச் சரி பார்க்க, அதனுள் ‘வொய்’ க்ரோமை வைத்தாள் வசந்தா.

‘வெல் டன், டாக்டர்ஸ்’ என்ற குரல் அவர்களை அதிரச் செய்தது. மேகா நம்பாமல் அந்த நஞ்சுக்கொடியை பார்த்தாள், அதுவா பேசியது என்று. மேற்கூரையிலிருந்து தன் ஆய்வக நோக்கி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் எம் கே எஸ் லேசர் பாதையில் இறங்கி வந்தார். பச்சை நிறக் கண்களுடன், இள நீல நிறத்தில் ஒரு தவளை அவர் கைகளிலிருந்து தொங்கும் ஆய்வகப் பையில் இருப்பது தெரிந்தது.

அவரைப் பார்த்ததும்தான் வசந்தாவிற்குத் தெம்பே வந்தது. அவர் அருகே வந்து வசந்தாவின் முதுகில் தட்டிப் பாராட்டினார். ‘வா, வேகமா’ என்றவர் மிக மிகக் குளிரூட்டப்பட்ட அறைக்குள் சென்றார்.

மெலிதான மஞ்சள் வெளிச்சம் பரவியிருந்த அறை அது. எங்கும் ஃப்ரீஸர் இயந்திரங்கள் காணப்பட்டன. வைரக் கத்திகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதத் தோல்கள், உறையவைக்கப்பட்ட ப்ளாஸ்மாக்கள்,  முழுதும் வளராமல் ஆனால் துடித்துக் கொண்டிருந்த இதயங்கள், க்ரையோஜெனிக் முறையில் நைட்ரஜன் திரவத்தில் நீந்தும் உயிரிகள்.

அவர் அந்தத் தவளையை மெதுவே விடுவித்து அங்கிருந்த மேஜையில் கிடத்தினார். ‘இவள் கர்ப்பத்துள் மனித க்ரோம்கள் 22 ஜோடி செலுத்தப்பட்டுள்ளன. அத்தனையும் செயற்கையாக ‘ஜம்பிங்’ மற்றும் ‘வாக்கிங்’கில் வடிவமைகப்பட்டவை. மிகத் தூய்மையானவை- ஐ மீன், மரபணு குறைபாடில்லாதவை. அடுத்து என்னிடம் இரண்டு ‘எக்ஸ்’ க்ரோம்கள் தானிருந்தன. இப்போது உன் ‘வொய்’ கிடைத்திருக்கிறது. ஒரு செயற்கை ‘எக்ஸ்’, ஒரு மனித ‘வொய்’; வாட் அ வொன்டர்! இவள் கர்ப்பப் பை, குழாய்கள் எல்லாம் மனித இனத்தைப் போன்றவை. மிகச் சுலபமாக இந்தக் கருவை இவள், என் நீலி வளர்த்துத் தருவாள். ஆ! எ ஹிஸ்டரி மேட் டு டே.’

‘எக்ஸ்’ மற்றும் ‘வொய்’ செலுத்த அந்தக் கத்திகளை அவர் திறமையாகக் கையாண்டார். பச்சைக் கண்ணழகி சுமக்கும் முதல் இயற்கை-செயற்கை  மனித உயிர். நினைத்தாலே புல்லரித்தது.

‘பிறப்பு எப்போது நடை பெறும்?’ என்றாள் மேகா. ‘செல் ம்யூடேஷன் ஆரம்பிக்கும் நிலையில் இவளது கர்ப்பம் சோஃபிக்கு மாற்றப்படும்; அதிலிருந்து ஆறே மாதங்கள். வேக வளர்ச்சிக்கான அனைத்தும் சோஃபியிடம் உட்செலுத்தப்பட்டுள்ளது.’ என்றார் அவர்.

‘அதுவரை..’ என்றாள் மேகா; ‘இரகசியம், பரம இரகசியம்’ என்று சிரித்தார் அவர்.

“டாக்டர், இறந்த பெண்ணின் மூளையில் அந்த ‘வொய்’ க்ரோம் எப்படி?” என்றாள் வசந்தா.

‘மனிதக் கரு இருக்கே, பாலூட்டிகளில் மிகவும் பிடிவாதமுள்ளது அது. ஆக்ரமிக்கும் நஞ்சுக் கொடி, அதன் தனிப்பட்ட சிக்கல்கள், கருவறையின்  சுவற்றில் ஆழமாக ஒட்டிக்கொண்டு மேலும் மேலும் எனக் கேட்கும் அதன் தன்மை, அதிலும் இந்த ‘வொய்’ க்ரோம் இருக்கே, அது அம்மாவின் இரத்தத்தில் கலப்பதுடன் நிற்பதில்லை, மூளையில், மண்ணீரலில், நுரையீரலில் 100% வரை பார்க்கலாம்-அதவது ஆண்மகனைப் பெறும் அம்மாக்களின் மூளைகளில்; உள் உறுப்புக்களில், குடலில் 95%, இதயத்தில் 29% எனவும் பார்க்கலாம்; உங்களுக்கு ஒரு வினோதம் சொல்லவா? 94 வயதான  ஒரு அம்மா விபத்தில் இறந்தார்; அவரது பிரேதப் பரிசோதனையில் அவரது மூளையில் இந்த ‘வொய்’ உட்கார்ந்திருந்தது; அவரும் ஆண் குழந்தையைப் பெற்றிருந்தார். ஏன் இப்படி நடக்கிறதென்று மிகச் சரியாகச் சொல்வதற்கில்லை. ஆனால், கருப்பையின் உள்ளே புதைந்திருக்கும் கரு, தன் நலத்திற்காக, அது அன்னையைச் சார்ந்தது என்பதால், அம்மாவின் உடலை தனக்கெனக் கடத்துகிறது எனச் சொல்லலாம்.”

‘அப்போ, எக்ஸ்..?’

எம் கே எஸ் சிரித்தார்- ‘என்னை வம்பில் மாட்டுகிறாய்; இது வரை ‘வொய்’ தான் காணப்பட்டிருக்கிறது. எக்ஸ் இருக்கும், தன்னை அவ்வளவாகக் காட்டாமல் இருக்கும்.’

“கரம்பன் அன்று எவ்வளவு இயல்பாகச் சொன்னான்- ‘மூளைல பத்திக்கிட’ அர்த்தம் தெரிந்து சொன்னானா இல்லை கேள்வி ஞானமா?” திகைத்தாள் வசந்தா. அம்மா ஏன் சரத்தை அதிகம் வெளிப்படையாக நேசித்தாள் என மேகா யோசிக்கத் தொடங்கினாள். தவளையில் ‘வொய்’ செயலைத் தொடங்கியிருந்தது.

 

ம வே சிவகுமாரின் பாப்கார்ன் கனவுகள் – அழகியசிங்கர்

    எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர்    ம.வே.சிவகுமாரின் நினைவு நாள் 10 ஜனவரி 

 சில வருடங்களுக்கு முன் அவருடைய பாப்கார்ன் கனவுகள் என்ற நாவலைப் புத்தகக் காட்சியில்  விற்பதற்குப் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் உயர் அதிகாரியாக இருந்த கணேசன் விற்பனைக்குக் கொடுத்தார்.

          விற்க முடியாமல் அவருடைய நாவலின் எல்லாப் பிரதிகளையும் பரண் மேல் போட்டிருந்தார். நான் சில பிரதிகளை விற்றுக் கொடுத்தேன்.  அந்தச் சந்தர்ப்பத்தில் ம.வே.சிவகுமாரைச் சந்தித்தேன். இந்த நாவல் 1995ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்துள்ளது.  அப்போது இந்த நாவலைப் படிக்கவில்லை.

          இந்த நாவல் அவருடைய சுய சரிதம் போல் எழுதப்பட்டாலும் முழுக்க முழுக்க அவர் சுயசரிதமில்லை. இந்த நாவலின் கதாநாயகனான லக்ஷ்மி நாராயணனுக்கும் ம. வே. சிவகுமாருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.  அதேபோல் வேற்றுமைகளும் உண்டு. 

          கல்கி பத்திரிகையில் தொடராக வெளிவந்துள்ள நாவல் இது. ம. வே. சிவகுமாரின்  கனவைப் பிரதிபலிக்கிற நாவலாக இது எழுதப்பட்டிருக்கிறது. 

          ஒரு வங்கியில் பணிபுரியும் சாதாரண ஊழியர் லக்ஷ்மி நாராயணன் என்ற ஊழியர்.  அவர் விஜயலக்ஷ்மி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.  ஆனால் அவருடைய ஆசை சினிமாவில் நடிக்க வேண்டும்.  அது சாத்தியமா என்பதை இந்த நாவல் அலசுகிறது.

          லக்ஷ்மி நாராயணன் எப்படிப்பட்டவன் என்பதை இந்த நாவல் ஆரம்பத்திலேயே அலசி விடுகிறது.

          எடுத்த உடன் லக்ஷ்மி நாராயணனுக்கு  நடக்கும் திருமணத்திலிருந்து ஆரம்பமாகிறது கதை.  அதை விவரிப்பதன் மூலம் கதாசிரியர் எந்த அளவிற்குத் திறமையானவர் என்பதை நிரூபிக்கிறார்.

          …..வெல்வெட்டு வேலைப்பாடுகளுடைய பேண்டு வாத்தியம்.  வேட்டியும், அங்கவஸ்திரமும் அணிந்து காதில் நாதஸ்வரம் வாங்கி மெல்லத் தொடர்கிற பெரியவர்கள் பழைய ஹெரால்டு காரில் பலகையடித்து நடமாடும் இன்னிசைக் குழு. நகர்கிற ட்யூப்லைட் வெளிச்சத்தில் நடமாடுகிற இளைஞர்கள். சூழ்நிலையின் மகிழ்ச்சி கருதி உடன் ஆட இறங்கிவிட்ட யுவதிகள்….

          இப்படி மாப்பிள்ளை அழைப்பு வைபவத்தை வர்ணிக்கிறது கதை.  ஆரம்பத்திலேயே லக்ஷ்மி நாராயணன் ஒரு மாதிரி.  தன் திருமணம் நடைபெறும்போதே அவன் நண்பர்களுடன் நைட் ஷோ சினிமா காட்சிக்குச் சென்று விடுகிறான்.

          அந்த அளவிற்கு சினிமா பார்க்கும் வெறி அவனுக்கு.  வங்கியில் சாதாரண காஷியராகப் பணிபுரிகிறான்.  விடாமல் சிகரெட் பிடிக்கிற பழக்கம் அவனுக்கு இருக்கிறது.  இரண்டு இச்சைகளிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.  ஒன்று சினிமா. இன்னொன்று சிகரெட்.

          இதெல்லாம் தெரிந்துகொண்டு விஜயலக்ஷ்மி அவனைத் திருமணம் செய்துகொள்கிறாள்.  அவளுடைய அப்பாவிற்கு வங்கியில்  அதிகாரியாகும் தேர்வு எழுதி அவன் அதிகாரி ஆகிவிட வேண்டுமென்ற கனவு.

          ஆனால் அவன் வங்கியில் பணிபுரிந்தாலும் ஒரு சினிமா நடிகனாக வேண்டுமென்று கனவு.   சினிமா பற்றி வருகிற எல்லாப் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வாங்கி தனியாக ஒரு அலமாரியில் பூட்டிப் பத்திரப்படுத்தி வைக்கிறான் வீட்டில்.  அதை யாரையும் திறக்க விடுவதில்லை.

          அதேபோல் வங்கியில் யூனியனில் முக்கியமான நபராக இருக்கிறான்.  அவன் வங்கிக்குப் போவதே ஒரே கூத்தாக இருக்கும். ரகளையாக இருக்கும்.  அவன் கனவு சினிமாவில் நடிப்பது.  பொழுது போக்காக வருவதுபோல்தான் வங்கிக்கு வருகிறான்.  

          அவன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வரும்போதே தாமதமாகத்தான் வருவான்.  அவனுடைய மேலதிகாரி கேட்டால் ஏடாகூடமாகப் பதில் அளிப்பான்.

          அவன் கனவு நடிகர் சிவாஜி கணேசன்.  அவர் முன்னால் அவனுக்கு நடிப்பதற்கு ஒருவாய்ப்பு கிடைக்கிறது.  கல்கத்தாவில் நடைபெறப் போகிற நாடகத்திற்கு அவன் தன்னை நடிகனாகத் தயார்  செய்து கொள்ள விரும்புகிறேன்.  நடிகனாகத் தேர்ந்தெடுப்பதற்கு நடிகர் சிவாஜி கணேசன் முன்னால் நடிக்க வேண்டும்.

          சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி வசனத்தைப் பேசி அசத்துகிறான்.  இதற்காக வீட்டில் ஒத்திகைப் பார்த்திருந்தான்.  சிவாஜி அவனைப் பார்த்து, ‘நல்லாத்தான் இருந்தது.  ஆனா மிமிக்ரி வேற, நடிப்பு வேற தெரிஞ்சுதா” என்கிறார்.

          லக்ஷ்மி நாராயணன் 13வது பேராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறான்.   சிவாஜிகணேசன் அந்த இடத்தை விட்டுப் போவதற்கு முன், அவனைக் கூப்பிட்டு  ‘ஒழுங்கா இருக்கணும், தெரிஞ்சுதா” என்கிறார்.

          ஒரு சிறந்த நாடக நடிகர் என்ற பட்டத்தைக் கல்கத்தாவில் நடந்த நாடகத்தில் நிரூபித்து விடுகிறான்.  ஆனால் அவன் மாமனார் அதை விரும்பவில்லை.  அவன் ஒரு வங்கியில் ஒரு அதிகாரியாக மாற வேண்டுமென்று விரும்புகிறார்.  ஆனால் அவன் மனைவியோ அவன் விருப்பப்படி இருப்பதை ஏற்றுக்கொள்கிறாள்.  அவளுக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

          சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்யும்போதுதான் பெரிய சறுக்கலாகச் சறுக்கி வீழ்கிறான். அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு இந்த இடத்தில் ஒரு சினிமா கம்பெனியின் ஷøட்டிங் கலந்து கொள்கிறான்.  டைரக்டர் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.  

          அவனுக்கு ஒரு துண்டு ரோல் கொடுக்கப்படுகிறது.  லக்ஷ்மி நாராயணனுக்கு வெறுப்பாகி விடுகிறது.  அவன் டைரக்டரைப் பார்த்துச் சொல்கிறான். 

          பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட் பேரைச்சொல்லி நான் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தேன் சார்.  இந்த வேஷத்துல நான் நடிச்சா அது எனக்கும் பெருமையில்லை.   அவங்களுக்கும் பெருமையில்லை என்று சொல்லவிட்டுப் போய் விடுகிறான்.

          அவன் கனவு கலைந்து விடுகிறது.  சினிமாவில் நடிக்கும் ஆசை போய் விடுகிறது. இன்னொரு சினிமா கம்பெனியிலும் அவனை நடிக்கக் கூப்பிட்டு ஏமாற்றப் படுகிறான்.  

          அவனுக்கு ஆசையே போய்விடுகிறது.  ஒரு முறை அவன் அலுவலகத்தின் எதிரில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது.  அவன் அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் பரபரப்பாக இருக்கிறார்கள்.  அவன் அதைப் பார்க்க வேண்டுமென்ற எந்த ஆர்வமும் இல்லாமலிருக்கிறான். 

          திரைத்துளிர் என்ற வார இதழ் மூலம் வாசகர்கள் சார்பாகத் திரு. கமல்ஹாசன் அவர்களுடன் ஒருநாள் சந்திக்கும்படி ஏற்பாடு செய்கிறார்கள். அவன் மனம் சந்தோஷமடைகிறது.  கமல்ஹாசன் நடிக்கும் அவுட்டோர் படப்பிடிப்பில் அவன் கலந்து கொள்கிறான் வாசகனாக. அந்தப் படத்தில் சிவாஜியும் நடிக்கிறார்.  சிவாஜிக்கு மகனாக கமல்ஹாசன் நடிக்கிறார். 

          லக்ஷ்மி நாராயணனைப் பார்த்து சிவாஜி கூப்பிடுகிறார்.  நாம் இதுக்கு முன்னாடி பார்த்திருக்கிறோமே என்கிறார்.  பதிலுக்கு லக்ஷ்மிநாராயணனுக்கு வாயில் வார்த்தைகளே வரவில்லை. இந்த இடத்தில் லக்ஷ்மிநாராயணன் நினைத்துக் கொள்கிறான்.  இத்தனை நாள் கஷ்டபட்டதற்கு இன்றைக்கு ஒரு நாள் பெரும் திறமைகள் நடுவே நிற்க வைத்திருக்கிறாய்.  வாழ்க்கையில் நினைக்காததையெல்லாம் குலுக்கலில் தந்திருக்கிறாய். நினைத்து வருந்திக் கேட்டதை என்றேனும் தராமலா போய்விடுவாய்? என்று நினைத்துக் கொள்கிறான் லக்ஷ்மிநராயணன். 

          அவன் அதிகாரியாகும் தேர்வு எழுதுகிறான்.  மும்பைக்கு மாற்றலாகிப் போகிறான்.  மாமனார் விருப்பத்தை நிறைவேற்றி விடுகிறான். இந்த நாவல்  பல இடங்களில் ஹாஸ்ய உணர்வு வெளிப்படும்படி எழுதப்பட்டிருக்கிறது. ம. வே. சிவகுமாரின் நடை சிறப்பாக உள்ளது.  இந்த நாவலை இன்று படிக்கும்போதும் விறுவிறுப்புக்குக் குறைவில்லை

காற்று வெளியிடை…..இரஜகை நிலவன்

Bengaluru: KIA gate for hand baggage passengers

சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தான்.

’சத்தம் போட்டுக்கூப்பிடலாமா?’ என்று நினைத்தேன். அநாகரீகமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டு பின்னால்

நின்றவரிடம் “ ஒரு நிமிடம். என் நண்பரை பார்த்து விட்டு வருகிறேன்” என்றுசொல்லி விட்டு முன்னால் வந்து “ என்ன சாகுல்

எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

சாகுலும் என்னை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில்

ஏற்பட்ட ஆச்சரிய குறியே எனக்கு காட்டித்தந்தது. “ என்ன பவுல்

எப்படி இருக்கீங்க?” என்ன இந்தப்பக்கம்?” என்றார்.

“சாகுல் நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள்?”

அவர் கையைப்பிடித்துக் குலுக்கியவாறு புன்னகைத்தேன்.

“அது தானே பார்த்தேன். உங்கள் சிரிப்பே தனி தானே. அதைக்

காணவில்லை என்று நினைக்கு முன்னே சிரித்து விட்டீர்கள்..”

அவனும் சிரித்துக்கொண்டே சொன்னான்.

 ” கண்டிப்பாக சினிமாவில் ஜெயிக்காமல் ஊருக்கு போக மாட்டேன் என்றீர்கள். இப்போது திரும்ப அபுதாபி பயணமா?”

கொஞ்சம் கேலி கலந்தே கேட்டேன்.

என் கேலியை உணர்ந்த சாகுல்,” பவுல். நான் சொன்னதற்கு

என்றுமே பின் வாங்கியதில்லை. எனக்கு ஒரு நண்பர் கொஞ்சம்

பணம் தர வேண்டியதிருக்கிறது, அதற்காகத் தான் இந்த பயணம்.

மற்றபடி, நான் எடுத்த முடிவில் என்றுமே பின் வாங்கவில்லை.

ஆறு மாதமிருக்குமில்லையா?. இங்கே அபுதாயில் இவ்வளவு நல்ல வேலையை விட்டு விட்டு திரை இசைப்பாடல் எழுத ..எடுத்த முயற்சி எல்லாம்… நன்றாகத்தான் … போய்க்கொண்டிருக்கிறது.. நாம்விமானத்தில் சந்திக்கலாமா?” என்று சொல்லி விட்டு முன்னே வரிசையில் சென்றான்.

எனக்கு அவன் சொன்னத் தொனியில் உள்ள நம்பிக்கை எவ்வளவு

அழுத்தமாக இருந்தது என்று ஆச்சரியமாக இருந்தது.

எவ்வளவு பேசியிருப்போம்… இன்னும் சினிமா பாடலாசிரியராகப்

போகிறேன் என்கிறானே… தலையைச் சிலிர்த்துக் கொண்டே வரிசையில் நகர்ந்தேன்.

என்னுடைய பாஸ்போர்ட், விசா எமிகிரேசன் எல்லாம் முடித்து விட்டு லாஞ்சுக்குள்ளே வந்த போது “வாங்க பவுல் சார்” என்று வரவேற்றான்.

‘சாகுல் கண்டிப்பாக நம்மை பார்க்க விரும்பாமல் ஓடியிருப்பான்’

என்று தான் எண்ணியிருந்தேன். அவன் என்னை எதிர்கொண்டு அழைத்து காபி கடைக்குள் (கப்புசின் காபி க்ஷாப்) கூட்டிப் போய்

அமர்த்தி, “ பவுல் உங்களுக்கு விருப்பமான காபி” என்று வாங்கி என் முன் வைத்து விட்டு அவனும் பருக ஆரம்பித்தான்

’சாகுல் பேசட்டும் ’ என்று அமைதியாக அவன் முகம் பார்த்துக்

கொண்டே காபியை இரசித்தேன்.

“ என்ன அமைதியாகிட்டீங்க?” என்றான் சாகுல்

“சொல்லுங்கள் சாகுல். எந்த அளவிற்கு வந்திருக்கீங்க? நீங்கள் விரும்பினால் இன்னும் நம்ம கம்பெனியிலே உங்களுக்காக கேட்டுப்பார்க்கிறேன்”

“ நாலு ஆல்பம் போட்டாச்சு.. கையிலே இருந்த பணம் காலியானாலும் என் வீட்டுக்காரி எனக்கு முழு உதவியாக இருக்காங்க…”

”ம்..ம்… அப்புறம்?”

”ஒரு படத்திலே ஒரு பாட்டு எழுதி  இசையமைச்சாச்சு… இனி சினிமாவிலே எப்படி வருதுண்ணு எதிர் பார்த்துகிட்டே இருக்கேன். அடுத்தாலே ஒரு சினிமாவிலே வாய்ப்பு தர்றதா சொல்லியிருக்காங்க..”

“ எனக்கேன்னவோ சாகுல்…” என்று நான் சொல்லி முடிப்பதற்குள்

“கவலையே படாதீங்க… பவுல்  அடுத்த முறை நாம் சந்திக்கும் போது கண்டிப்பாக… நீங்க எதிபார்க்கின்ற வெற்றிபெற்ற ’வசந்தசாகுலா’ தான் பார்ப்பீங்க!  வேணும்ணா பாருங்க..அடுத்த முறை துபாய்த் தமிழ்த்தேர் நிகழ்விற்கு கூட என்னை முக்கிய விருந்தினர்களில் ஒருத்தரா அழைக்கத்தான் போறீங்க…” என் தோளில் தட்டிச் சொன்னான்

விமானத்திற்கான அழைப்பு அறிவிக்கப் பட.. அவனுடைய அசாதரரண நம்பிக்கையைக் கண்டு, அசந்து போய், “வாழ்த்துக்கள்”

என்று அவனைக் கட்டிப்பிடித்து வாழ்த்துச்சொல்லி விட்டு பையை

எடுத்துக் கொண்டு விமானத்தை நோக்கி கிளம்பினேன்.

’அவனுடைய அசாதாரண நம்பிக்கை எப்படியிருக்கிறது’ என்று

எனக்கே இன்னும் விரிந்த வியப்புடன் கூடிய ஆச்சரியமாக இருந்தது.

                                        

திரை ரசனை வாழ்க்கை 5 – எஸ் வி வேணுகோபாலன் 

                                                              பேராண்மை 
RIP Director S. P. Jananathan | Iyargai | Peranmai | Labam | #RIPJANANATHAN - YouTube
                   அசாத்திய வாசிப்பு அனுபவத்தின் திரைமொழி 

நல்ல கதை அல்லது கட்டுரை வாசித்தால், எப்படியாவது எழுதியவர் மின்னஞ்சல் முகவரி அல்லது அலைபேசி எண் தேடிப்பெற்று எண்ணங்களை அவர்களுக்கு உடனடி தெரிவிப்பது உண்டு, அது வழக்கமானது.

திரைப்படங்களில் ஆழ்ந்து ரசித்துப் பார்த்துவிட்டு, இயக்குநருக்கு உடனே கருத்தைத் தெரிவிக்கத் துடிப்பு இருந்தபோதும், அழைத்துப் பேசவோ, பிரதிபலிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவோ அத்தனை வாய்ப்பு கிடைத்தது இல்லை. மிகச் சில இயக்குநர்களிடம் பேசியது உண்டு. அந்த வரிசையில் 45 நிமிடங்களுக்குமேல் உரையாடலும், கருத்து பரிமாற்றமும் சாத்தியமான தருணம் மறக்க முடியாதது,  அறிமுகம் அற்ற ஓர் எளிய ரசிகரின் குரலை எத்தனை மதித்துக் கேட்டுக் கொண்டிருந்த காதுகளும் உள்ளமும் அவருடையவை! 

எஸ் பி ஜனநாதன் அவர்கள் அண்மையில் மறைந்தது பேரிழப்பு, இனி எப்போது எப்படி அவரோடு பேச…

பேராண்மை திரைப்படம் பார்த்துவிட்டு வந்தது உண்மையில் உள்ளக் கிளர்ச்சியை வழங்கி இருந்தது. 

தத்துவ தரிசனங்கள், மிக அதிகம் எம் ஜி ராமச்சந்திரன் படங்களில் பார்த்திருக்கிறோம். அதற்கேற்ற திரைப்பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அள்ளியள்ளிக் கொடுத்தது அவரது படத்திற்கு அதிகம். ‘வறுமை நிலைக்கு பயந்து விடாதே, திறமை இருக்கு மறந்து விடாதே, திருடாதே’  என்ற பல்லவியை சிந்தித்தால் மட்டுமே பல நூறு திறப்புகள் கிடைக்கும். அதிகம் திரையில் பார்த்தறியாத வித்தியாசமான கதைக்களத்தில் நுட்பமான தத்துவப் பார்வையைத் துணிந்து முன்வைத்த முக்கியமான படங்கள் வரிசையில் என்றென்றும் பேசப்படும் ஒன்றாக அமைந்தது பேராண்மை. 

பரீஸ் வஸீலியெவ் அவர்களது அற்புதமான ‘அதிகாலையின் அமைதியில்’ நாவல், எண்பதுகளின் புதிய வாசிப்பு அனுபவத்தில் அசர வைத்த படைப்பு. கமாண்டர் வஸ்கோவ், இராணுவ விதிமுறைகளை இலக்கண சுத்தமாகக் கடைப்பிடிக்கத் துடிக்கும் ஒரு முரட்டு செயல்வீரர். அவரது உள்ளத்தில் தாய்நாடு காத்தல் எனும் இலட்சியத்தைக் காட்டிலும் முன்னுரிமை வேறு எதற்கும் கிடையாது. தாறுமாறான குடிப்பழக்கம், ஒழுங்கீனம் கொண்ட ஆட்களையே தொடர்ந்து அனுப்பும் மேலதிகாரிகளிடம் வெறுத்துப் போய் அவன் எழுப்பும் புகார்களின் எரிச்சலில், அவன் உறக்கத்தைக் கெடுக்கும்படியான ‘நல்லெண்ணத்தோடு’ வித்தியாசமான குடும்பப்பின்னணி, வாழ்க்கை போக்கு உள்ள பெண்கள் சிலரை உள்ளடக்கிய படையை வழி நடத்துமாறு பணிக்கப்படுகிறான் வஸ்கோவ். 

அசாத்திய குறும்பும், வம்பும், ஏளனமும், கேலி கிண்டலுமாக அவனை அலைக்கழித்துப் பின்னிப் பின்னி எடுக்கின்றனர் அந்த இளம் பெண்கள். ஆனால், அவனோ எல்லாவற்றையும் எச்சிலோடு சேர்த்து விழுங்கித் தனது இராணுவ சீருடைக்கு அர்ப்பணிக்கப்பட்டவனாக அவர்களைத் தலைமை தாங்கி முன்னே நடந்து கொண்டே இருக்கிறான். காலம் தான் எத்தனை முற்றிலும் வேறான அனுபவங்களை சுமந்து கொண்டு அவனுக்கு இரண்டடி முன்னே நடந்து போய்க்கொண்டிருக்கிறது என்று விரியும் அபாரமான கதையில், தாய் நாட்டுக்கு எதிரான அராஜக அயல்நாட்டு ஆட்கள் சிலரை அந்தக் காட்டில் அந்தப் பெண்களில் ஒருத்தி அடையாளம் கண்டு விழிப்புற வைப்பதும், அவளது அனுமானத்திற்கு அதிகமான மடங்கு ஆட்கள் ஆயுத பலத்தோடு பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அறியக் கிடைப்பதும், துணிவுமிக்க அந்தப் பெண்களின் அளப்பரிய தியாகத்தில், அவர்களை அந்த உறுதிமிக்க கமாண்டர் முறியடிப்பதும், அதனிடையே அந்தப் பெண்களை ஒவ்வொருவராக பலிகொடுக்க நேரும் துயரத்தில் அவன் இதயம் வெடிக்கத் தன்னையும் அவர்களையும் வேறொரு தரிசனத்தில் கண்டெடுப்பதும் அசாத்திய வாசிப்பு அனுபவமாகும். உண்மைக்கு நெருக்கமான போர்க்களக் கதைகளை வாசிப்பது கல்லையும் நெகிழ்விப்பது.

ஜனநாதன், இப்பேற்பட்ட கதையை எப்படி தமிழ் ரசிகர்களுக்கான திரைக்கதையாக உருவாக்கிப் படமாகப் படைத்தார் என்பது எப்போது சிந்தித்தாலும் மலைப்புற வைப்பது. ஜெயம் ரவிக்கு அப்படியான படத்தின் நாயகனாக நடிக்கக் கிடைத்தது அவருக்கும் அரிய அனுபவமாகவே இருந்திருக்க வேண்டும். மாடு ஒன்று கன்றுபோடும் காட்சியில் மிகவும் தன்னியல்பாக நடித்திருப்பார் அவர். படத்தின் இறுதிக் காட்சிகளில் சாகசத் துடிப்பும் வெளிப்படுத்தி இருப்பார். பேராண்மை படத்தில் முக்கியமான பாத்திரங்களில் தோன்றிய பொன்வண்ணன், வடிவேலு, ஊர்வசி, அந்தக் கல்லூரிப் பெண்களாக வந்தவர்கள் உள்ளிட்டு திரைக்கலைஞர்கள் யாராக இருப்பினும்,வாழ்நாள் பெருமைக்குரிய பங்களிப்பாகவே அவர்களுக்கு அமைந்திருக்கும்.

துள்ளலும் எள்ளலும் ஆட்டமும் பாட்டமும் நிறைந்த இளமைப்பருவத்தில் என் எஸ் சி பயிற்சியின் பகுதியாக அந்த மலைப்புறப் பகுதிக்கு வரும் பெண்களில் மிகுந்த குறும்புக்குரிய சிலரும், அப்பாவிப் பெண் ஒருத்தியும் தனித்து நிற்கின்றனர். பயிற்சி கொடுக்கும் இளம் அதிகாரியைத் தங்களது சீண்டலில் சிக்கவைத்து, எல்லா விளைவுகளுக்கும் அவனையே பொறுப்பாக்கி அவமானத்திற்குரிய இடத்தில் நிற்க வைக்கும் அளவுக்கு முன்னேறும் அவர்களது விளையாட்டில், அவனோ அவர்களை வழிப்படுத்தும் நோக்கில் முக்கியமான பயிற்சி என அவர்களை மட்டுமே தேர்வு செய்து தனியே அழைத்துச் செல்லும் இடத்தில் கதையின் சுவாரசியம் தொடங்குகிறது.

அதன் நீட்சியில் அதிர்ச்சியாக விரியும் அனுபவங்களில், தேசத்தை சீர்குலைக்கும் நோக்கில் வெளிநாட்டு சதியின் மூலம் அந்த மலைக்காட்டுப் பகுதியின் இதயப்பகுதியில் ஊடுருவி இருக்கும் சிலரை இந்தப் பெண்களில் ஒருத்தி பார்த்துவிடுகிறாள். அந்த அதிகாலையின் அமைதி அப்படித்தான் குலையத் தொடங்குகிறது. அதற்குப்பின் அந்தப் பெண்கள், படிப்படியாகத் தங்களது சீண்டல்களை நழுவவிட்டுப் படிப்படியாக போராளிகளாக உயர்வதும், அவர்களில் இருவரை அயலநாட்டுக் கொடியவர்களுக்கு எதிரான போரில் இழக்க நேரும் துயரமும், அனுபவங்களற்ற ஒரு குறும்படையை வைத்துக் கொண்டு பெரும்பயிற்சியோடு வந்திறங்கி இறங்கியிருக்கும் அந்நிய வெறிக்கூட்டத்தை நாயகன் அழித்தொழிப்பதும் தான் திரைக்கதை.

ஆனால், இந்த நிகழ்வுகளை அப்படியே அவனுக்கு எதிராக சித்தரித்து, அவனை வில்லனாக நிறுத்த முனையும் பேராசையும், ஊழலும் மிகுந்த வனத்துறை உயர் அதிகாரி ஒருவரது அராஜக செயல்பாடும், நாயகனின் இலட்சிய தீரத்தில் விளைந்த தேச பக்த வெற்றியைத் தனதாக அவன் கூச்சமின்றி சுவீகரித்துக் கொண்டு நிற்க முனையும் கள்ளத்தனமும் பட்டவர்த்தனமாக சித்தரித்த இடத்தில் ஏராளமான நடப்புக்கால செய்திகளைச் சொல்லிவிட்டிருந்தார் ஜனநாதன். 

ஒரு பாவமும் அறியாத மலைவாசிகளின் நேர்மையும், தன்னலமற்ற சீரான வாழ்க்கையும், துணிவுமிக்க எதிர்வினைகளும் இயற்கை வளங்களைத் திருட்டுத் தனமாகச் சுரண்டி விற்கத் துடிக்கும் அதிகார வர்க்கத்தால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை தமிழகத்தில் வாச்சாத்தி நிகழ்வு உள்ளிட்டு அறிந்திருக்கிறோம். தங்களுக்கு காட்டு பிராணிகளைப் பிடித்து அடித்துக் கொடுக்கத் தவறும் மலைக்குறவர் ஒருவர் மீது அபாண்டமாக பழி சுமத்தி நீதி மன்றத்தில் நிறுத்த, அந்த எளிய மனிதர் முன்வைக்கும் வாதங்களை ஆயிஷா இரா நடராசன் தமது சிறுகதை ஒன்றில் கண்ணில் நீர் வர சித்தரித்திருப்பார். 

பேராண்மை படத்தில், கற்பழிப்பு என்ற விஷயமே எங்கள் மலைச்சாதி மக்கள் அறியமாட்டார்கள் என்று கதறுவார் வடிவேலு. தன்னை மோசமாக சித்தரித்த மேலதிகாரியைப் பழிவாங்கும் நோக்கம் கூட இராது, தனது கடமையில் வழக்கம்போல் நாயகன் இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் தான் கதை நிறைவு பெறுகிறது. ஆனால், அவன் இதயக் குமுறலும், பறிகொடுத்த தோழியரின் கண்ணீர் நினைவுகளோடு சொந்தவூர் நோக்கிய பயணத்தில் அங்கிருந்து புறப்படும் கல்லூரிப் பெண்கள் குழுவும், பொறுப்பாசிரியரும் தங்களது பெருந்துயரத்தை வெளிப்படுத்தும் முகங்களோடு ரசிகர்களுக்கு உறக்கமற்ற அடுத்த சில இரவுகளைப்  பரிசாக அளித்தே விடை பெறுவார்கள். 

‘ழேனியா, மன்னித்து விடு என் கண்ணே, உன்னை மிக மோசமாகத் தான் புதைக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க, கமாண்டர் வஸ்கோவ், கையில் கிடைத்த மரக்குச்சிகளைக் கொண்டு மண்ணைக் கீறி அந்த வீர மங்கைக்கு இறுதி மரியாதையை செலுத்திவிட்டுக் கண்ணிமைக்கும் நேரமும் சோர்வுறவோ, கண்ணயரவோ வாய்ப்பின்றி எதிரிகளை முறியடிக்க விரையும் இடம், அதிகாலையின் அமைதியில் நாவலில் மறக்க முடியாத பக்கங்களில் ஒன்று. கதையின் இறுதிப் பக்கங்களில், ஒருவன் விடாமல் எதிரிகள் எல்லோரையும் அழித்து முடித்த கணத்தில், தங்களது செம்படை தான் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று காதுகளில் கேட்டு மூளைக்கு உறுதிப்படுத்தவும் தான் தன்னை மயக்கமுற்று வீழ அவன் அனுமதித்தான் என்று முடியும் வாக்கியம் இதயத்தை ஏதோ செய்துவிடும் ஆற்றல் கொண்டது. பேராண்மை படத்தின் நாயகன், தன்னை சிக்கவைக்கும் மேலதிகாரியிடமிருந்து விடுபட்டு சதிகாரர்களை அழித்தபின்தான் தன்னையே ஒப்புக்கொடுக்கவும் தயாராகும் இடம் இதயத்தை அரற்ற வைப்பது.

அதிகாலையின் அமைதி நாவலில் மனத்தை வருடும் மெல்லிய காதல் ஒன்று பரவுவதும், ஜனநாதன் சித்தரிப்பில் பேராண்மையில் பொலிவுற அமைந்திருக்கும். நகைச்சுவை காட்சிகளில் கூட மூல நாவலின் பிடிமானங்களை சிறப்பாகக் கொண்டுவந்திருப்பார் இயக்குநர். 

படத்தின் உயிர் நாடி, கல்லூரிப் பெண்களாக வருவோரின் பேசத்துடிக்கும் கண்களும், நாயகன் அவர்களோடு பேசும் பொதுவுடைமை அரசியலும். மிக சிக்கலான பொருளாதார கோட்பாடுகளை, உழைப்பின் மதிப்பை, உபரி மதிப்பை  மர நாற்காலி, சாக் பீஸ் வைத்து விளக்கும் வசனங்களும் என்று குறிப்பிட முடியும். ஆயுதங்கள் இல்லாது கூட ஓரு புரட்சி சாத்தியமாகலாம், ஆனால், புத்தகங்கள் இல்லாமல் அல்ல என்று சொல்லப்படுவதுண்டு. மலைப்புறமக்களின் எளிய குடியிருப்புகளில் வன்முறை ரெய்டு நடத்தும் அதிகார வர்க்கத்திற்கு, இளம் தலைமுறையினர் வைத்திருக்கும் புத்தகங்களே வெடி குண்டுகளாகக் கண்ணுக்குப் புலப்படுவது படத்தின் முக்கிய காட்சிப்படுத்தலில் ஒன்று. 

10 Years of Peranmai: 20 facts you probably didn't know about Jayam Ravi's  landmark action-drama- Cinema express

பழைய காலத்து சிமெண்ட் காரை பூசிய தரையில் கோரைப் பாய் மீது மீளா உறக்கத்தில் கிடத்தப்பட்டிருந்த ஜனநாதன் உடலும், அவரது உழைப்பை அலங்கரித்துக் கொண்டிருந்த ஓர் எளிய பூமாலையும் வாட்ஸ் அப் பகிர்வில் காணக் கிடைத்தது மதிப்பு மிக்க வணக்கத்தைக் கோருகின்றது.

பரீஸ் வஸீலியெவ் அவர்களது நாவலை வாசித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் எடுத்து வாசித்தே தீர வேண்டும் என்று அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கும். கார்ல் மார்க்ஸ் நினைவு தினமான மார்ச் 14 அன்று ஒரு தற்செயல் ஒற்றுமையில் நம்மைப் பிரிந்து விட்ட ஜனநாதன் அவர்களது அர்ப்பணிப்பு மிக்க திரைக்கலை இலட்சிய வேட்கையின் நினைவில் பெருகும் கண்ணீரைத் தவிர்த்து அந்த வாசிப்பு நிகழ சாத்தியம் இல்லை.

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

பிரபல எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு சாகித்ய அகாதமி பரிசு 2020 ஆண்டுக்காக வழக்கங்கப்பட்டுள்ளது. 

அவரது செல்லாதபணம் என்ற நூலுக்கான  விருது இது !

இதற்கு முன்பாக இமையம் இந்திய அரசு வழங்கிய இளநிலை ஆய்வு நல்கை, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, ஆனந்த விகடன் விருது, பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது உள்ளிட்ட கௌரவங்களைப் பெற்றிருக்கிறார்.

2016 குவிகம் இதழில் இமையம் அவர்கள் 2000 க்குப் பிறகு வந்த நூல்களில் சிறந்தவை என்று பட்டியலிட்டதைக் குறிப்பிட்டிருந்தோம்.

இமையம் அவர்களுக்குக் கிடைத்த இந்த விருதுக்கு குவிகம்  மிகவும் பெருமைப்படுகிறது. 

அவரின் சிறப்புக்களை ‘இன்னும் சில படைப்பாளிகள் ‘ என்ற பக்கத்தில் எஸ் கே என் விளக்கிக் கூறுகிறார்.  

ImageImage

 

 

இமையம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர். இயற்பெயர் அண்ணாமலை. முதல் புதினமான ‘கோவேறு கழுதைகள்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாகி உள்ளது. சுந்தர ராமசாமி “தமிழ் எழுத்துலகில் கடந்த நூறு ஆண்டுகால வளர்ச்சியில், இந்த நாவலுக்கு இணையானது வேறொன்றும் இல்லை” என்று புகழ்ந்து கூறியுள்ளார். இவரது ‘எங் கதெ’ மிகவும் கவனத்தை ஈர்த்த மற்றொரு புதினம்.

ஆறு நாவல்களும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் தமிழிலக்கியத்திற்கு இதுவரை இவரது பங்களிப்பு.

இந்த மாதப்படைப்பாளிகளில் இமையம் அவர்களின் கதையினைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும்போது கிடைத்த செய்தி

எழுத்தாளர் இமையத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது அறிவிப்பு: ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது

** ** ** ** ** ** **

நறுமணம் என்கிற சிறுகதை

கைக்கடிகாரத்தைப் பார்த்தான் கதிரேசன். மணி ஐந்து. பத்து இருபதடி தூரத்தில் முக்கோணத் தாங்கியில் பொருத்தப்பட்ட தியோடலைட்டின் வழியே விருத்தாசலத்தைச் சுற்றிச் செல்லும் புறவழிச் சாலை போடுவதற்கான வரைபடத்தையும், அதற்கான நிலத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தனைப் பார்த்தான்.

புறவழிச்சாலை அமைக்கக் கையகப்படுத்தவேண்டிய தேவையான நிலத்தை அடையாளம் கண்டு குறிக்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆனந்தனும் அவனது உதவியாளன் கதிரேசனும்.

நேரமாகிவிட்டதால் வேலையை மறுநாள் தொடரலாமே என்கிற எண்ணம் கதிரேசனுக்கு. அதைப பலமுறை வாய்விட்டும் சொல்கிறான். ஆனந்தனோ இன்னும் சற்று நேரம் வேலை செய்யும் எண்ணத்துடன் சில கட்டளைகளை இடுகிறான். இன்னும் சில புள்ளிகளை அடையாளம் இட வைக்கிறான்.

நடக்கும் வேலையை இப்படி விவரிக்கிறார்

காலையிலிருந்து ஒவ்வொரு இடமாக அடையாளமிடுவது, கம்பி ஊசி, வெள்ளை மாவுப் பைகளைத் தூக்கிக்கொண்டு நெல் வயல், கரும்பு வயல், முந்திரிக்காடு, முள்காடு என்று நடப்பது, கடுமையான வெயில் என்று எல்லாம் சேர்ந்து அவனைக் களைப்படையச் செய்திருந்தன. ஆனந்தனுக்கு எந்த இடத்தில் அடையாளமிட வேண்டும் என்று சொல்வது மட்டும்தான் வேலை. அதுவும் தியோடலைட்டைப் பார்த்து. கதிரேசனுக்கு ஆனந்தன் சொல்கிற இடத்தில் கம்பி ஊசி ஊன்றி அடையாளமிடுவதோடு அதற்கு நேர் எதிர்ப் புறத்திலும் சரியான அளவில், சரியான இடத்தில் ஊசியை ஊன்றி அடையாளமிட வேண்டும். அது முன்பு அடையாளமிட்ட இடத்துக்கும், புதிதாக அடையாளமிடுகிற இடத்துக்கும் நேராக இருக்க வேண்டும். அது கல்லாக இருந்தாலும், முள்ளாக, சேறு, சகதி, உளையாக இருந்தாலும் அடையாளமிட்டுத்தான் தீரவேண்டும். வடக்கிலும் தெற்கிலுமாக இரண்டு அடையாளங்களுக்கிடையே உள்ள தூரத்தை அவ்வப்போது டேப்பால் அளந்து பார்க்க வேண்டும். அளவு பொருந்தி வரவில்லையென்றால் அடையாளத்தை மாற்ற வேண்டும்.

அப்படிக் குறியிடவேண்டிய ஓரிடம் ஒரு சாமி கோயிலாக இருக்கிறது. ‘சாமிக் குத்தம்’ வந்துவிடும் எனச் சொல்கிறான் கதிரேசன்.

“அதெல்லாம் பாத்தா நம்ப நாட்டுல ஒரு அடி ரோடுகூடப் போட முடியாது. பொக்லைன் வந்தா எல்லாத்தயும் ஒரு நிமிஷத்தில கிளியர் பண்ணிடும். பொக்லைனை சாமிக் குத்தம் ஒண்ணும் செய்யாது. அந்தப் பெரிய ஆலமர வேர்ல பாயிண்ட் பண்ணு. அதுக்கு எதிர் சைடுலயும் மார்க் பண்ணு.” கட்டளையாக வெளிப்பட்டது ஆனந்தனுடைய குரல்.

இன்னும் சில இடங்களைத தேர்ந்தெடுத்து அடையாளம் இட்டபிறகு “பேக் அப்.” என்று ஆனந்தன் சொல்கிறான். கிளம்புகிறார்கள். கொண்டுவந்த தண்ணீர், ‘கூல்ட்ரிங்’ தீர்ந்துபோயிருக்கிறது. அந்த ஆளில்லாக் காட்டில் ஒரு கூரைவீடு கண்ணில்படுகிறது

மக்கிப்போன சிறிய கூரை வீடு. வாசல் தெற்குப் பக்கம் பார்த்து இருந்தது, வீட்டு வாசலிலிருந்து பத்தடி தள்ளி ஒரு கிழவரும், கிழவியும் எதிரெதிராக உட்கார்ந்துகொண்டு புளிச்சக்கீரையை உருவிக்கொண்டிருந்தனர். இரண்டு பேருக்கிடையில் முறம் இருந்தது. கிழவிக்குப் பக்கத்தில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அடுப்பிலிருந்து ஏழெட்டு அடி தூரத்தில் இரண்டு மாடுகள் கட்டப்பட்டிருந்தன. மாடுகள் கட்டப்பட்ட இடத்திலிருந்து மேற்கில் பத்தடி தூரத்தில் ஆறு ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. கிழவியைச் சுற்றி ஒரு கோழியும் ஏழெட்டுக் குஞ்சுகளும் சுற்றிச்சுற்றி மேய்ந்து கொண்டிருந்தன.

‘வியாதி வந்துடும்’ என்கிற கதிரேசனின் எச்சரிக்கையையும் மீறி, தண்ணீர் வாங்கிக் குடிக்கிறான் ஆனந்தன். “என்ன, இங்க சமையல் பண்றீங்க?” என்று கேட்கிறான்

“அடுப்பு எரிஞ்சா சோறு எங்கனாலும் வேவும்.” (-இது கிழவர்.) “கல்யாணத்துக்கா ஆக்குறன்? ஒரு சோறு. ஒரு குழம்பு. அதுவும் ஒரு நாளக்கி ஒருவாட்டி. அத இங்க வச்சே பொங்கிடுவன்.” (இது கிழவி)

மழை வந்தால், இடையில், மழை விடும் சமயத்தில், சோறாக்கிக் கொள்வார்களாம். நகை, பணம் என்றெல்லாம் இல்லாததால் திருடர் பயமும் கிடையாதாம். இரண்டு மகள்கள் மூன்று மகன்கள் இருந்தும் பத்து வருடமாக இங்கேதான் வாசமாம்.

எங்களுக்காக நீங்க சண்டப் பண்ணிக்க வேணாம். காட்டுல இருக்கிற மோட்டாரு கொட்டாயிக்கிட்ட இருக்கிற களத்தில் தங்கிக்கிறம்னு நாங்களே ஒதுங்கி வந்துட்டம்.”

காட்டில் வசிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை (“காட்டுல இருக்கிறது கஷ்டமில்ல. ஊருல இருக்கிறதுதான் கஷ்டம். பாம்பு பல்லியவிட துஷ்ட மிருகம் மனுசங்கதான்.”)

ரேஷனில் கொடுக்கும் அரிசி, காட்டில் விளையும் கீரை இவைதான் உணவு. மேல் செலவிற்காக மகன்கள் பணம் கொடுப்பார்களா?

 “தருவாங்க. போட்டிபோட்டுக்கிட்டு. கூலி ஆளுவுளக் கொண்டாந்து வுட்டுட்டு வேல வாங்குன்னு சொல்லிட்டுப் போவாங்க. முந்திரிக் கொட்டப் பொறுக்கிவையின்னு சொல்லுவாங்க. காட்டுல ஆடு மாடு நுழயாம பாத்துக்கச் சொல்லுவாங்க. கரண்ட் உள்ள நேரத்துக்கு மோட்டாரு போடும்பாங்க. இப்பிடி நூறு வேல தருவாங்க. அது போதாதா?” கிழவர் வாய்விட்டுச் சிரித்தார்.

“அவனவன் சோத்த அவனவன்தான் சம்பாரிக்கணும். அவனவன் வவுறு அவனவன்கிட்டதான இருக்கு?”

அங்கே இருக்கிற மாடுகள் பெரிய மகனுடையது. இரண்டாவது மகன் தன பங்கிற்கு ஆடுகளை கொடுவந்து விட்டிருக்கிறான்.

“ஒங்களோட இன்னொரு மவன் கொண்டாந்து கோழிய வுட்டுட்டாரா?” சிரித்துக்கொண்டே ஆனந்தன் கேட்டான்.

மூன்றாவது மகன், (அரசாங்கப் பணியில் இருப்பவன்- மனைவியும் அப்படியே) தன் பங்கு நிலம் வீடுகளை விற்றுவிட்டு சென்னையோடு போயிவிட்டான்.

‘எதயும் விக்காத, நாங்க உசுரோட இருக்க மட்டும் ஒன்னோட பாகத்தப் பாத்துக்கிறம். நம்ப காட்டுக்குள்ளாரப் பிறத்தியாளக் கொண்டாந்து வுடாத’ன்னு இந்தக் கிழவரு எம்மானோ சொல்லிப்பாத்தாரு. கால்ல வியிந்துகூடக் கேட்டாரு. அவன் நாங்க சொன்ன எதயும் கேக்கல.

தினம் ஒரு ஆளாவது, கார்- மோட்டர்பைக் பஞ்சர் என்று வண்டியை நிறுத்துவார்கள். அந்த வழியாகப் பள்ளிக்குப் போகும் சிறுவர்கள் தண்ணீர் கேட்க வருவார்கள்.

 “அதுக்குன்னே குடம் வச்சியிருக்கன். ந்தா அங்க இருக்குதில்ல?” கிழவர் கை காட்டிய இடத்தைப் பார்த்தான். வாசலை ஒட்டி ஒரு செப்புக் குடம் இருந்தது. அதற்குப் பக்கத்தில் சில்வர் சொம்பு ஒன்றும் இருந்தது.

அந்த வயதான தம்பதியர் தனியாக இல்லையாம்.

 “அங்க வெள்ளக் குதிரமேல கள்ளவீரன் சாமி குந்தியிருக்கான் பாரு.”

ஆனந்தன் எழுந்து நின்று கிழக்கில் பார்த்தான். ரோட்டிலிருந்து கிழக்கில் ஒரு பர்லாங் தொலைவில் ஏழெட்டு மரங்களுக்கிடையே சிமெண்டால் செய்யப்பட்ட குதிரை மட்டும்தான் மங்கலாகத் தெரிந்தது. சாமி சிலை இருப்பது தெரியவில்லை .

கிழவரோ அந்த ‘கள்ள வீர’னின் பிரதாபங்கள், வீர பராக்கிரமங்கள், அவனது இருபத்தியொரு சேனாதிபதிகள் என்று உற்சாகமாகச் சொல்கிறார். கிழவருடைய உற்சாகமான பேச்சைக் கேட்ட ஆனந்தன், எழுந்து நின்று கோவில் இருக்கிற இடத்தையும் கிழவருடைய வீட்டையும் பார்த்தான். நேராக இருந்தது. முன்பு அடையாளமிட்ட இடங்களையும் பார்க்கிறான். கடைசியாக அடையாளமிட்ட இடத்தில் கதிரேசனை நிற்கச் சொல்கிறான்.

கிழக்கில் கள்ளவீரன் சாமி கோவில் பக்கம் பார்த்தான். பிறகு கிழவர், கிழவி உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தான். நாளைக்குக் காலையில் வந்ததும் அடையாளமிட வேண்டிய இடம் கிழவருடைய வீடு. பேண்ட் பாக்கெட்டில் இருந்த வரைபடத்தை எடுத்துப் பார்த்தான். பிறகு அணைக்கப்பட்டிருந்த அடுப்பைப் பார்த்தான். சோற்றுக் குண்டான், கீரைச் சட்டி, ஆடு, மாடு, கோழி, பள்ளிக் குழந்தைகள், வழிபோக்கிகளுக்காகத் தண்ணீர் வைத்திருந்த செப்புக் குடம் என்று ஒவ்வொன்றாகப் பார்த்தான். எல்லாம் இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள்வரைதான் இருக்கும். பிறகு பொக்லைன் வந்து எல்லாவற்றையும் சமமாக்கும். கருங்கல் ஜல்லி கொட்டப்படும், தார் ஊற்றப்பட்டுச் சாலையாகும். இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் ஹாரன் அடித்தபடி எந்தத் தடையும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஆனந்தனும் கதிரேசனும் போகவேண்டிய கார் வந்துவிடுகிறது. ஏறிக்கொள்கிறார்கள். கிழவர் கேட்ட ‘ரோடு எந்தப் பக்கமா வருது?’ என்கிற கேள்வி ஆனந்தன் காதில் விழவில்லை .

“இந்தக் கூர ஊட்டுல நெருப்ப வச்சிடாதிங்க. நாங்க போறதுக்குச் சுடு காட்டத் தவிர வேற எடமில்ல.” கிழவர் சொன்னது காரில் ஏறிவிட்ட ஆனந்தனுடைய காதில் விழவில்லை. சைலோ கார் விருத்தாசலத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது. காரிலிருந்தபடியே திரும்பிப் பார்த்தான். கிழவியும், கிழவரும், வீடும் தூசு மாதிரி காணாமல் போயிருந்தனர்.

என்று கதை முடிகிறது.

—-  ———— ——————- —————-

அதிகம் பேசப்பட்ட சிறுகதைகளில் ஒன்று நறுமணம். கதையின் பெயர் நடுவே இப்படி வருகிறது

திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி ஆனந்தன் கேட்டான் “இந்த ஊரு பேரு என்ன?”

 “நறுமணம்.”

“நல்லா இருக்கு. அந்த நகர், இந்த நகர்னு இல்லாம.”

யதார்த்தமான வர்ணனைகள், விவரங்கள், உரையாடல்கள் ‘பை-பாஸ்’ பயணிகளுக்கு செய்யும் சௌகரியங்கள் எளிய மக்களின் கஷ்டங்கள் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் வினோதம். சிரமங்கள் புரிந்தும், எதையும் தடுக்கவியலாத நிலைமை ….. இவையெல்லாம் படிப்பவர்களின் மனதில் சில அடையாளங்களை விட்டுத்தான் செல்கிறது

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

நன்றியறிதல்!
‘நன்றி மறப்பது நன்றன்று’ என்றே நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஒருவர் செய்த உதவியை மறக்காமல் இருப்பதே நன்றியறிதல். நன்றியறிதலின் சிறப்பு குறித்தே திருவள்ளுவரும், ‘செய்ந்நன்றி அறிதல்’ என்னும் அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களைச் சொல்கிறார். நன்றியறிதல் என்பது வாழ்வின் மிக முக்கியமான அறங்களுள் ஒன்று என்றால் அது சற்றும் மிகையல்ல.
‘நன்றி’ – “ஒருவர் செய்த நன்மைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வு; விசுவாசம்; (gratitude). இந்த மரியாதை உணர்வையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்துவதற்கான சொல் – ‘நன்றி’ என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. ஒருவர் செய்த உதவியை முன்னிட்டு, அவரிடம் கொள்ளும் கடமை உணர்வு, ‘நன்றிக் கடன்’!
நம் பெற்றோரிடம் தொடங்குகிறது நம் நன்றிக்கடன். நம்மை வளர்த்து, ஆளாக்கி ஒரு நல்ல நிலையிலே வைத்திருக்கும் பெற்றோருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன், அவர்கள் வயோதிகத்தில் நாம் அவர்களை அன்புடன் அரவணைத்துக் காப்பது! அறிவுக்கண்ணைத் திறந்த ‘குரு’ விற்கு செய்யும் நன்றிக் கடன், அவர் காட்டிய நல்வழிப்பாதையில் ஒழுக்கத்துடன் நடந்து, அறம் காப்பது! வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், நமக்கு உதவி, அன்புடன் கைதூக்கி விட்டவர்களை மறக்காமல், நம்மால் ஆன ‘நன்றி கடனை’ செய்வது மிகவும் உயர்வானது.
செய்ந்நன்றியறிதல் நம் சங்க இலக்கியங்களிலும் பேசப்படுகிறது. ஆலத்தூர் கிழார் என்னும் புலவர், கிள்ளிவளவனைப் புகழ்ந்து பாடும் பாடலில் இப்பண்பு சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
“ஆன்முலைஅறுத்த அறனிலோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும்
பார்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளவே
நிலம்புடை பெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
அறம்பா டிற்றே ஆயிழை கணவ!”. (புறம் 34).
(செய்தி – செய்த நன்றி)
பசுவின் பால்தரும் மடியை அறுத்த அறனில்லாதவர்க்கும், மகளிரின் கருவைச் சிதைத்தவர்க்கும், பார்ப்பாரிடம் தவறிழைத்த கொடுமையோர்க்கும், தீமைகளை உண்டாக்கியவர்கள் அத்தீமைகளில் இருந்து தப்பிப் பிழைக்க வழிகள் உண்டு. ஆனால், உலகமே தலைகீழாக மாறினாலும், செய்ந்நன்றி மறந்தவர்களுக்கு, அதிலிருந்து தப்பிப் பிழைக்க வழியில்லை என்று அறநூல்கள் வலியுறுத்தியுள்ளன – என்பது இப்பாடலின் பொருள்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”. (குறள் எண் 110)
என்று அறம் பாடும் திருக்குறள் இச்செய்தியையே வலியுறுத்துகிறது!
கர்ணனிடம், கண்ணன் சொல்கின்றான்: “கர்ணா! நீ குந்தியின் மைந்தன். ஆதித்த பகவானால் உதித்தவன். ஆதலால் பாண்டவர்கள் உன் சகோதரர்கள். அவர்களுடன் வந்து சேர்ந்துவிடு. மூத்தவனான உன்னை அவர்களும் வணங்கி ஏற்றுக் கொள்ள, இந்த அகிலத்தையே ஒரு குடைக்கீழ் நீ ஆளலாம். துரியோதனன் மூடன். தீயவருடன் சேர்ந்திருப்பது பிழை. தூயவர்களுடன் சென்று சேர்ந்து விடு”
‘ஆரென் றறியத் தகாதஎனை
அரசு மாக்கி முடிசூட்டிச்
சீருந் திறமும் தனதுபெருந்
திருவும் எனக்கே தெரிந்தளித்தான்
பாரின் றறிய நூற்றுவர்க்கும்
பழிதீர் வென்றிப் பாண்டவர்க்கும்
போரென் றறிந்தும் செய்ந்நன்றி
போற்றா தவரில் போவேனோ’
ஊர் பெயர் தெரியா என்னை, அரசனாக்கி, அண்ணா என்றழைத்து சீரும், சிறப்பும் தந்தான் துரியோதனன். அந்த செய்ந்நன்றியை ஒருபோதும் நான் மறவேன் – என்று கூறி கர்ணன் மறுக்கிறான்.
தன்னை ஈன்ற அன்னை குந்திதேவிதான் என்பதை அறிகிறான் – இழிகுலத்தில் பிறந்தவன் என்று செல்லுமிடமெல்லாம் அவமானம் – தன் வீர பராக்கிரமங்களை அங்கீகரிக்காத அரசவைகள் – ஆச்சாரியர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு – குந்தியின் மகனென்றால் கர்ணனுக்குக் கிடைக்கும் மரியாதை, அவனது வீரத்திற்கான பெருமை, பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்கிற பெரிய இடம்! எவ்வளவு பெருமை!!
பெட்டியில் வந்த பட்டுப் புடவையைப் போர்த்தியவுடன், கண்ணீர் துளிர்க்க, கொங்கையில் பால் சுரக்க, பாசத்தில் மடியில் கிடத்திய மகன் கர்ணனிடம் கேட்கிறாள் குந்திதேவி! “மகனே! நீ சிறிதும் தயங்காமல் பாண்டவர்களுடன் சேர்ந்து விடு”!
“அம்மா, நீங்கள் பழிக்கு அஞ்சி என்னை நதியினிலே விட்டீர்கள். துரியோதனன் என்னை அன்புடன் ஆதரித்து, நாட்டினையும் தந்தான் – எல்லோருக்கும் பொல்லாதவன், எனக்கு நல்லவன். சொக்கட்டான் ஆடும்போது, அவன் மனைவியின் ஆடையை இழுத்து ஆட்டத்தைத் தொடரச் சொன்னபோது, அவளது மேகலாபரணம் அறுந்து சிந்தியது.
அங்கு வந்த துரியோதனன், என் தலையை சீவியிருக்கவேண்டும் – அவன் என்ன செய்தான் தெரியுமா அம்மா? ‘பானுமதி, நீ அண்ணாவுடன் ஆடு. இந்த முத்துக்களை நான் எடுக்கவோ, கோக்கவோ?’ என்றான். அவனை எப்படி என்னால் விட்டு வரமுடியும்? செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, அவனுடன் போர்க்களம் சென்று அவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். அதுவே என் புகழும், கருமமும், தருமமும் ஆகும்” என்கிறான் கர்ணன்.
அதற்கும் ஒரு படி மேலே செல்கிறான் கர்ணன். அன்னையால் கைவிடப்பட்ட, பரிதாபத்திற்குரிய பாத்திரம் கர்ணன். ஆனாலும், ஈன்ற அன்னைக்குச் செய்ய வேண்டிய செய்ந்நன்றிக் கடனையும் அவன் மறக்கவில்லை. கண்ணன் தந்திரமாகக் கேட்கச் சொல்லும் இரண்டு வரங்களை குந்தி கேட்க, “அம்மா, உனக்கு நான் எதுவும் செய்யவில்லை. வறியவர்க்கு வாரி வழங்கினேன். நீ கேட்கும் வரங்களை தர மறுப்பேனா?” என்று தன் உயிருக்கே ஆபத்தான அந்த வரங்களை அளிக்கிறான்!
அதற்கு அவன் அன்னையிடம் கேட்கும் வரம், எந்தக் கல்மனதையும் கரைய வைக்கும் வரம். “போரில் நான் மாண்டால், உன் கண்ணீர் என் மீது சிந்த அழுவாயா? அன்றாவது நான் குந்தியின் மைந்தன் என்று உலகம் அறியட்டும். என் பிறப்பு, குலம் மீதான களங்கம் மறையட்டும்”
செய்ந்நன்றிக் கடன் தீர்ப்பதில் கர்ணனுக்கிணை கர்ணன் மட்டுமே.
“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு” (குறள் 107).
(நம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழ் பிறவிகளிலும் மறவாது நினைந்து போற்றுவர் பெரியோர்).
செய்ந்நன்றியறிதலின் பெருமையை அறிவோம் – நன்றியறிதலை ஒரு விரதமாகக் கொள்வோம்!!
ஆதாரம்: சங்க இலக்கியம் – நெடுநல்வாடை (கங்கை புத்தக நிலையம்), மகாபாரதம் – தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், திருக்குறள் பி.எஸ். ஆச்சார்யா (நர்மதா பதிப்பகம்).