படம்பார்த்து கவிதை எழுதச் சொல்வார் பலர்!
கவிதையைப் படித்துவிட்டு அதற்குப் படம் பிடிக்கச் சொன்னோம் !
அதன் விளைவு இந்த அட்டைப்படம் !!
வலை போட்டு படம் பிடித்தவர் “ஸீன்ஸ்”
கவிதை தந்தவர் “தீபா மகேஷ்”
கோடைக் காலத்தின் ஒரு வரப் பிரசாதம், புத்துணர்ச்சி தரும் , தெளிந்த நீரோடை போன்ற அதிகாலைகளும், மயக்கும் செவ்வண்ண அந்தி மாலைகளும். இவ்விரண்டும் தமக்குள் யார் சிறந்தவர் என்று போட்டி போட்டால் எப்படி இருக்கும் என்ற ஒரு சின்ன கற்பனையே இந்த கவிதை.
ஊடல்
அதிகாலை வானம் அழகென்றாய் நீ
இல்லை அந்தி வானம் தான் என்றேன் நான்
இப்படியாக தொடங்கியது நம்
அன்றைய பொழுது
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழும்
அழகு அது என்றாய் நீ
நாணத்தால் முகம் சிவந்து ஒளிரும்
பெண்ணை விடவா என்றேன்
கதிரவன் உதித்தெழும் போது – அதன்
அழகை கண்டதுண்டா என்றாய்
முழுநிலவின் அழகை விட
மேலானது இல்லை என்றேன்
காலை வானத்தில் மேகம் இடும்
கோலங்கள் நளினம் என்றாய் – அவை
கண் சிமிட்டும் நட்சத்திரங்களை
வரவேற்கும் ஏற்பாடென்றேன்
இவ்வாறாக தொடர்ந்தது நம் ஊடல்
இறுதியில்
அதிகாலை நீயென்றும்
அந்தி வானம் நானென்றும்
முடிவானது ..
ஹம்பாபா என்ற அந்த எதிரியைக் கொல்வதுதான் தன் வாழ்வின் லட்சியம் என்று சொல்லி வீர வசனம் பேசி துணிச்சலுடன் வந்த மாவீரன் கில் காமேஷ் அதற்கான முதல் தாக்குதலைத் தொடங்கியவுடனே மயங்கி விழுந்ததைக் கண்ட எங்கிடு கவலையில் ஆழ்ந்தான்.
ஆனால் அது மயக்கம் அல்ல, அவனது தாயில் மடியில் முகம் புதைத்துக் கொண்டு கனவு காணும் நிலை என்பதை உணர்ந்துகொண்டான். மெதுவாக அவனை அசைத்து ‘உன் தாய் பெருமை கொள்ளும் நேரம் வந்துவிட்டது! எழுந்து வா நண்பா” என்று கூறினான். அதைக்கேட்ட கில் காமேஷ் ஆயிரம் யானைகளின் பலம் பெற்றவனைப்போல் எழுந்து போருக்குத் தயாரானான்.
என் தாய் நிம்சீன் மீது ஆணை ! என் தந்தை லுகல் பண்டாவின் மீது ஆணை ! என் எதிரி மனிதனோ தேவனோ யாராயிருந்தாலும் சரி , அவனை வெற்றி கொள்ளாமல் ஊருக் நகருக்குத் திரும்பமாட்டேன் ” என்று மீண்டும் ஆணையிட்டுக் கூறினான்.
அப்போது செடார் காட்டின் அதிபதி மிகக் கொடிய அரக்கன் ஹம்பாபா அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து மிகப் பயங்கரமாக நின்றான்.
அப்போது கில் காமேஷ் எங்கிடுவிடம் உற்சாகம் பொங்கக் கூறினான்.
“வா! எங்கிடு! நாம் தாக்குதலைத் தொடங்குவோம்! அவனுக்கு ஏழு மாய உருவங்கள் உள்ளன என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் ஒன்றைத்தான் இப்போது காண்கிறோம். அவன் அவனுடைய பலமான காட்டுக்குள் ஓடிவிட்டால் அவனை வெல்லுவது என்பது மிகக் கடினம்” என்று கூறி முன்னேறினான்.
“என் சூரியக் கடவுளே ! காமாஷ்! எனக்குச் சக்தி கொடு! என்னைக் காப்பது உன் கடமை” என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு ‘ஹோ ‘ என்று பலமாகக் கத்திக்கொண்டு கில் காமேஷ் பாய்ந்தான்.
சூரியக் கடவுளும் அவன் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து கில் காமேஷுக்குத் துணையாக இருக்க பெருங்காற்றுகளை ஏவி விட்டான். வட காற்று, சுழற்காற்று , பனிக்காற்று, சூறாவளி, தீக் காற்று எல்லாம் இறக்கை முளைத்த பாம்புகள் போல கில் காமேஷுக்குத் துணையாக வந்தன.
தன்னுடைய கட்டளையின் கீழ் இருந்த அந்த பயங்கர காற்று ஆயுதங்களை ஹம்பாபா மீது கில்காமேஷ் ஏவி விட்டான்.
தீ போல பிரளயம் போல மின்னல் போல அந்தக் காற்றுப் பாம்புகள் ஹம் பாபா மீது ஒருங்கே பாய்ந்தன. அவன் கண்களை அந்தக் காற்று குருடாக்கின . அவன் கால்களை முன்னே பின்னே நகர விடாமல் கட்டிப் போட்டன.
“ஹம்பாபா! கொடிய அரக்கனே! உன் கொடூரத்திற்கு இன்று முடிவு வந்துவிட்டது! மனிதனான நான் அதைச் செய்யப்போகிறேன்! ” என்று சொல்லி அவனுடைய பலமான – உயிருக்கும் உயிரான செடார் மரங்களில் ஒன்றை வெட்டி வீழ்த்தினான் கில் காமேஷ்!
காற்றுக்களால் கட்டிப்போடப்பட்ட ஹம்பாபா மிகவும் கோபாவேசத்துடன் “இந்த மானிடர் இருவரும் என் அருகில் வரட்டும். அவர்கள் இருவரையும் ஒரே நொடியில் அழித்து விடுகிறேன்” என்று காத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் கில் காமேஷும் எங்கிடுவும் அவன் அருகில் செல்லாமல் அவனுடைய உயிர் நாடியான செடார் மரங்களை வெட்டுவதிலேயே குறியாய் இருந்தார்கள். ஏழு மரங்களை வெட்டினார்கள். ஒவ்வொரு மரம் வெட்டப்படும் போதும் ஹம் பாபா சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தான். அவர்கள் மீது பாய்ந்து அழிக்கப் பிரயாசைப்பட்டான். நகர முடியாத அவன், தன் கண்களால் தீயை எழுப்பி அவர்கள் இருவர் மீதும் ஏவி விட்டான்.
கில் காமேஷும் எங்கிடுவும் லாவகமாக அவன் அனுப்பிய தீ அம்புகளிலிருந்து தப்பினார்கள். அந்தத் தீ அணையும் போது அவன் அருகில் நெருங்கினார்கள். அசைய முடியாத ஹம்பாபா அவர்களை அருகில் பார்த்ததும் ஆவேசத்துடன் தன் தொடையைத் தட்டினான். இடி மின்னல் போல அது ஒலித்தது.
அதற்குப் பின் தொடர்ந்தது இரு மனித வீரர்களில் மாபெரும் தாக்குதல்.
கில் காமேஷ் மற்றும் எங்கிடு தங்களிடமிருந்த அத்தனை ஆயுதங்களையும் ஹம் பாபா மீது பிரயோகித்தார்கள். அவன் உடம்பின் ஒவ்வொரு அணுவும் வேதனையில் துடித்தது . வனத்தின் அதிபதி என்ற திமிரில் தான் செய்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு செய்ய இந்த இரு வீரர்கள் வந்துவிட்டாகள் என்பதைப் புரிந்து கொண்டான். தன்னுடைய இறுதிக் காலம் வந்துவிட்டதோ என்று கவலைப்பட்டான். அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. முகம் வெளுத்தது. அவன் கில்காமேஷைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.
“ஓ கில்காமேஷ்! நீ மிகவும் பலசாலி என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் மலையின் வனத்தின் அதிபதி! காட்டைக் காக்கக் கடவுள் படைத்த மாபெரும் மலை நான்! மலைக்குப் பிறந்தவன்! என் தாய் மலைதான்! ஆனால் தாய் அன்பைப் புரிந்துகொள்ளாத பாவி நான்! வேதனைகளை மற்றவர்களுக்கே எப்போதும் கொடுத்தவன் நான்! இன்றுதான் அதன் கொடுமையை உணர்கிறேன். என்னை விட்டுவிடு! சுதந்திரமாகப் போகவிடு! நான் உன் அடிமையாகிவிடுகிறேன். இந்த வனத்தில் உள்ள அத்தனை மரங்களையும் உனக்கே தருகிறேன். நல்ல செடார் மரங்களை வெட்டி உனக்கு நானே அரண்மனை கட்டித்தருக்கிறேன். என்னை இந்தக் காற்று வலைகளிலிருந்து விடுவித்துவிடு!! என்னை என் தாயுடன் இருக்க விடு! அவளுடைய மடியில் முகம் புதைத்து இருக்கவே விரும்புகிறேன்! இனி எந்த மனிதருக்கும் தீமை செய்யமாட்டேன் ” என்று கண்களில் நீர் வரக் கூறினான்.
தாய் அன்பு என்ற ஹம்பாபாவின் வார்த்தையைக் கேட்டதும் கில்காமேஷின் மனம் இளகியது. சிறைப்பட்ட அவனை விடுவிப்பதே நியாயம் என்று அவனுக்குத் தோன்றியது.
காடு மாலை வனம் என்றே இருந்த எங்கிடுவிற்கு ஹம்பாபாவின் குணம் நன்றாகவே தெரியும். அதனால் அவன் கில்காமேஷிடம் , “நண்பா! செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாதவன் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் வீழ்ந்து விடுவான் என்பதை உணர்ந்து கொள்! சிறைப்பட்ட பறவையையும் பிடிபட்ட கைதியையும் விடுவிப்பது வேடனுக்கும் வீரனுக்கும் அழகல்ல! நாம் இப்போது ஹம்பாபாவின் வனத்துக்குள் வந்திருக்கிறோம். அவன் அழியாவிட்டால் நம்மால் நம் ஊருக்குத் திரும்பச் செல்ல இயலாது. வனத்தின் தன்மை அப்படி! இவனை நீ முடித்தாக வேண்டும்! அதுதான் உன் தாயின் கட்டளை! ” என்று கூறினான்.
அதைக்கேட்ட ஹம்பாபா, ” அடேய் ! எங்கிடு! நீ அடிமை! உனக்குப் பேச உரிமையில்லை! அதுமட்டுமல்லாமல் உனக்கு கில்காமேஷ் மீது பொறாமை! அதனால் அவன் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்கிறாய்!” என்று ஆத்திரத்தோடு கூறினான்.
கில்காமேஷ் மனமும் தடுமாறியது. சிறைப்பட்ட ஒருவனைக் கொள்வதில் என்ன வீரம் இருக்கிறது. அது புகழுக்கு இழுக்கல்லவா ? என்று எண்ணினான்.
அவன் எண்ண அலையை நன்கு புரிந்துகொண்ட எங்கிடு ,” நண்பா! ஹம்பாபாவின் கதை முடிந்துவிட்டது. அவன் உன் கையால் அழியப் படவேண்டியவன். அவனை விடுவித்தல் என்பது தற்கொலைக்குச் சமம். புகழையும் பெருமையையும் எப்போது வேண்டுமானாலும் பெறலாம். ஆனால் உயிர் போனால் போனதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக இவனை வதம் செய்வது உனது கடமை ! நீ செய்த சத்தியம்! எந்த யோசனையும் செய்யாமல் அவனை முடித்துவிடு” என்று ஆணித்தரமாகக் கூறினான்.
கில் காமேஷ் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
தான் செய்ய வேண்டியதை முடிவு செய்து கொண்டான்.
ஹம் பாபாவுக்கு விடுதலை அளிக்கத் தீர்மானித்தான்!
காற்றுத் தளையிலிருந்தா? இல்லை ஒரேடியாக உலகத்திலிருந்தா?
தன் வாளையும் கோடாலியையும் இரு கரங்களில் எடுத்துக் கொண்டு ஹம் பாபா அருகே நெருங்கினான்.
(தொடரும்)
பராந்தகன்
முதலில் வாசகர்களுக்கு ஒரு இலக்கணக் கேள்வி.
‘பராந்தகன்’ என்பதின் பொருள் என்ன?.
‘அயலாரை முடித்தவன்’ (பர -அந்தகன்) என்று பொருள்.
இனி யாரேனும் ‘மதுராந்தகன்’ என்றால் என்ன என்று கேட்டால் – நீங்கள் ‘ஞே’ என்று விழிக்க வேண்டாம். ‘மதுரையை முடித்தவன்’ – என்பது தான் பொருள் என்று ‘டாண் டாண்’ என்று சொல்லிப் பெருமையடித்துக் கொள்ளலாம்!
இந்தப் பதவுரை – பொழிப்புரை சமாச்சாரம் எல்லாம் நமக்கு எதற்கு? கதைக்குச்செல்வோம்.
கி பி 907: தொண்டைமானுர்.
இன்றைய ஆந்திராவிலிருக்கும் காளஹஸ்தி. சோழமன்னன் ஆதித்தன், தன் மகன் பராந்தகனிடம் : “சோழர்களின் எதிர்காலம் உன் கையில்” – என்று கூறி விட்டு இறந்தான். அதற்குச் சில வருடம் முன்பே ஆதித்தன், பராந்தகனுக்கு யுவராஜா பட்டாபிஷேகம் செய்திருந்தான். பராந்தகனின் இயற்பெயர் ‘வீர நாராயணன்’. யுவராஜாவாகும் சமயத்தில் அவன் பராந்தகனானான்!
ஆதித்தன் இறந்த செய்தி காட்டுத்தீபோலத் தென்னிந்தியா முழுவதும் பரவியது. பொதுவாகவே ஒரு சக்தி வாய்ந்த மன்னன் இறந்தால் – சுற்றியிருக்கும் மன்னர்களுக்குக் குளிர்விட்டுப் போய் எல்லைப்புறப்பகுதிகளை ஆக்கிரமிக்க முற்படுவர். உள்நாட்டில் கலகம் விளைவித்து அந்த அரசைக் குலைக்க முற்படுவர். வரப்போகும் அரசனுடைய பலத்தைப் பரீட்சித்துப் பார்ப்பர். இம்முறை அப்படிப் பெரிதாக நடக்காததற்குக் காரணம் – அந்த அண்டை நாட்டு மன்னர்களெல்லாம் போரில் பெரிதாகத் தோற்று, நஷ்டப்பட்டு, வெந்து நொந்திருந்திருந்தார்கள்.
பராந்தகன், நாட்டு நிலைமையை நன்கு உன்னிப்பாகக் கவனித்துப் படித்தான். தந்தையார் விரிவு படுத்திய அரசை மேலும் விரிவுபடுத்துமுன் – முதலில் இருப்பதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் – என்று நினைத்தான். முதலில் தஞ்சாவூர் சென்று சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொள்ளவேண்டும். தான் யுவராஜா ஆக இருந்த போதிலும் – அரசனாகத் தடை ஒன்றுமிருக்கக்கூடாதல்லவா!
ஆதித்தன், இராட்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணனின் மகளை (இளங்கோ பிச்சி) மணந்து அவளை பட்டத்தரசியாக்கியது நீங்கள் அறிந்ததே. மகாராணி இளங்கோ பிச்சியின் மகன் இளவரசன் கன்னரதேவன். அவன் பராந்தகனை விட வயதில் இளையவன். ‘ஒரு வேளை, அவன் சோழ மன்னனாக வர முயற்சி செய்வானோ?’ – என்று பராந்தகன் மனதில் ஒரு எண்ணம் மின்னல் போலத் தோன்றியது.
பராந்தகன் தஞ்சாவூர் சென்றவுடன் முதல் வேலையாகப் பெரியன்னை இளங்கோ பிச்சியை அரண்மனையில் சந்தித்தான். ஆதித்தன் மரணத்தை நினைத்து இருவரும் கண்ணீர் பெருக்கி அழுதனர். பராந்தகன் – மகாராணியிடம் – ஆட்சிப் பொறுப்பைப் பற்றி எப்படிப் பேசுவது என்று சற்றேத் தயங்கினான். அதற்கு முன்பே மகாராணி பேசினாள்:
“நாராயணா! நீ உடனடியாக சோழ நாட்டு மன்னனாக முடி சூட்டிக்கொள்ள வேண்டும். உன் தந்தையின் உழைப்பு வீண் போகலாகாது. உன்னைத்தான் அவர் நம்பியிருந்தார்”. இதைக்கேட்டு பராந்தகனின் கண்கள் பனித்தன.
“தாயே! உங்கள் ஆசிகளும் தந்தையின் அருளும் இருக்கும் போது நமக்கு என்ன குறை” – என்றான்.
பட்டாபிஷேகம் அடுத்த வாரம் நடந்தது. இளங்கோ பிச்சியின் தகப்பனார் – இராட்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், பட்டாபிஷேகச் செய்தி கேட்டுப் பொங்கினான். ‘என் மகள் – மூத்த சோழ ராணி – பட்டத்து ராணி -இளங்கோ பிச்சியின் மகன் கன்னரதேவன் தானே சோழ நாட்டுக்கு அரசனாக வேண்டும். இது என்ன சதி!’. என்று பொருமினான். ஆனால் – காலம் கனியப் பொறுத்தான்.
பராந்தகன் அரியணை ஏறினான். ‘பரகேசரி’ என்ற பட்டம் கொண்டான். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடத்தில் படையைப் பலப்படுத்தினான். அண்டை ராஜ்யங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்தான். பாண்டிய நாடு தோல்வியினால் சிதறிப் போயிருந்தது. பாண்டியன் இராஜசிம்மன் கடந்த பலப்போர்களில் ஏற்பட்ட தோல்விகளால் துவண்டிருந்தான். மேலும் உள்ளூரில் கிளர்ச்சி செய்த சிற்றரசர்களை அடக்குவதிலும் அவனது நேரமும், பொருளும் செலவாயிற்று. பராந்தகனுக்கும் இராஜசிம்மனுக்கும் பலப்போர்கள் நடந்தது. அவற்றிலெல்லாம் வெற்றிபெற்ற பராந்தகன் இராஜசிம்மனை மதுரையிலிருந்து துரத்தி ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி’ என்ற பட்டப்பெயரைக் கொண்டான். ஆயினும் பாண்டிய நாட்டை முழுமையாகத் தன்னாட்சிக்குக் கொண்டு வரப் பல ஆண்டுகள் நீடித்தது. இந்தக்கதைகளை விவரமாகச் சொல்லும் முன்னர் – அதாவது முதல் பாண்டியப்போர் முடியும் சமயம் .. இன்னொரு சம்பவம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
கி பி 909: சோழ உளவாளிகள் இராட்டிரகூடத்திலிருந்து போர்ச்செய்திகள் கொண்டு வந்தனர். இளவரசன் கன்னரதேவன் பராந்தகனிடம் சென்றான்: “அண்ணா! என் பாட்டனார் கிருஷ்ணன் தவறு செய்கிறார். நமது தந்தை தங்களை அரசாளத் தேர்ந்தெடுத்து யுவராஜாவாக்கினார். அவர் வாக்கு தான் நமக்கு என்றும் வேதம். தாங்களும் மகாராஜாவாக்கிச் சிறப்பாக ஆட்சி செய்கிறீர்கள். என் பாட்டனின் இந்தத் தாக்குதலை நாம் முறியடிக்க வேண்டும். நமது படையின் ஓரங்கமாக நானும் வருகிறேன்” – என்றான். தாய் இளங்கோ பிச்சி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். கன்னரதேவனை நோக்கி : “மகனே! என் வயிறு இன்று தான் குளிர்ந்தது. உன் தகப்பனின் ஆணைப்படி நடப்பது தான் நீ அவருக்குச் செய்யும் அஞ்சலி. சென்று வா. வென்று வா!” என்று வழியனுப்பி வைத்தாள்.
பராந்தகன் அதற்கு ஒப்பவில்லை.
“கன்னரதேவா! உன்னை முன்னிருத்தி இராட்டிரக்கூடர்களை சந்திப்பதில் என் மனம் ஏற்கவில்லை. உனக்கு ஆபத்து நேரிடலாம்.” – என்றான்.
இதற்குள் ஒரு சம்பவம் நடந்தது. இராட்டிரக்கூட அதிரடிப்படை ஒன்று மாறுவேடத்தில் தஞ்சாவூரிலிருந்து கன்னரதேவனை கடத்திக்கொண்டு இராட்டிரகூடத்துக்குக் கொண்டு சென்றது. இரண்டாம் கிருஷ்ணன் கன்னரதேவனை சோழ நாட்டு அரசனாக்க – போருக்குப் புறப்பட்டு வந்தான். தன் அதிகாரத்திலிருந்த வாணர் படைகளையும் சேர்த்துக்கொண்டிருந்தான். வடமேற்குத் திசையிலிருந்து சோழ நாட்டைத் தாக்கினான். பராந்தகன் கங்க நாட்டு மன்னன் இரண்டாம் பிரதிவீபதி உதவி பெற்றான். திருவல்லம் என்னுமிடத்தில் போர் மூண்டது. போரில் இரண்டாம் கிருஷ்ணனும் அவன் உதவியாளரும் படுதோல்வியடைந்தனர்.
பராந்தகனின் அரியணை மீண்டும் உறுதியானது. நாற்பத்தெட்டு வருடம் அரசாண்டு – போர்க்களத்திலேயே வாழ்ந்து, இரத்தக்காற்றை சுவாசித்த மன்னனின் அந்தப்புரம் காலியாக இருக்கும் என்று நினைத்தால் – நீங்கள் ஏமாந்தே போவீர்கள்.
அந்தப்புரம் படு பிஸி. அந்த அந்தப்புர அந்தரங்கள் இதோ:
பராந்தகன் ஏறத்தாழப் பன்னிரு மனைவியரைப் பெற்றிருந்தான். அவர்களில் கோக்கிழான் அடிகள், சேர அரசன் மகள் முதலியோர் ஆவர்.
பிள்ளைகள் : (1) இராசாதித்தன் (2) கண்டராதித்தன் (3) அரிகுல கேசரி (4) உத்தமசீலன் (5) அரிஞ்சயன். வீரமாதேவி, அநுபமா என்பவர் பெண்மக்கள். வீரமாதேவி கோவிந்த வல்லவரையன் என்னும் சிற்றரசனை மணந்திருந்தாள்; அனுபமா கொடும்பாளுர் முத்தரையனை மணந்திருந்தாள். இராசாதித்தன் தாய் கோக்கிழான் அடிகள்; அரிஞ்சயன் தாய் சேரன் மகளாவாள், அரிகுலகேசரி என்னும் இளவரசன் கொடும்பாளுர் அரசன் மகளான பூதி ஆதிக்க பிடாரி என்பவளை மணந்திருந்தான். இத்தகைய கொடுக்கல்-வாங்கல்களால் சேர அரசனும் முத்தரையரும் பராந்தகனுக்கு உறுதுணைவராக இருந்தனர். இவருடன் கங்க அரசனான இரண்டாம் பிருதிவீபதி உற்ற நண்பனாக இருந்தான். கூட்டணி வலுவாக இருந்தது.
பராந்தகன் ஆட்சியில் நடந்தது – இன்னும் நிறையக் கதைக்க வேண்டியிருக்கிறது.
பாண்டியர் கதை பாக்கி உள்ளது.
ஈழம் தமிழத்தில் போர்க்கொடி கட்டியது.
இராட்டிரகூடர் கதையும் நம்மை உறங்கவிடாது.
அக்கதைகள் விரைவில்.
முன்கதைச்சுருக்கம்:
புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனதுஅரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். அவன் இளவரசன் அஜாதசத்ருவிற்கு கேட்டுக்கொண்டபடி அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். பல காரணங்களால் அரசி லோகேஸ்வரிக்கு புத்தமதத்தில் நம்பிக்கை தளருகின்றது; அதனைப் பலவாறு நிந்திக்கிறாள்.
நகரில் புத்தருக்கெதிராகக் கலகம் மூள்கிறது. வழிபாட்டுமேடை உடைத்தெறியப் படுகிறது. பிட்சுணி உத்பலா கொலை செய்யப்படுகிறாள். அரசன் பிம்பிசாரனையும் படுகொலை செய்ததாகப் பேசிக் கொள்கிறர்கள். புத்தரின் எதிரியான தேவதத்தன் அரசன் அஜாதசத்ருவைத் தன்வயப்படுத்த முயல்கிறான். அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியை புத்தரின் வழிபாட்டு மேடையில் நடனமாடச் செய்து புத்தமதத்தை அவமதிக்க இளவரசிகள் முனைகின்றனர். நகரெங்கும் கலவரம் தலைவிரித்தாடுகின்றது.
இனித் தொடர்ந்து படிக்கவும்:
————————————
வாசவி: ஐயோ! எத்தகைய கொடுமையான துயரம் இது!
ரத்னாவளி: மகராணி லோகேஸ்வரிக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டு விட்டதா எனத் தெரியவில்லையே.
மல்லிகா: யாருக்கு தைரியம் வரும்? அச்செய்தியைக் கொண்டு செல்பவரை அவள் கொலை செய்யும்படி ஆணையிடுவாளல்லவா?
வாசவி: எத்தகையதொரு அரக்கத்தனமான கொடுமை! இது அரண்மனை முழுமையையுமே பாதிக்கும். தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயலின் பலனை அனுபவிப்பதிலிருந்து யாராலும் தப்பவே முடியாது.
ரத்னாவளி: திரும்பவும் வாசவி, நீ அந்த நாட்டியப்பெண்ணின் சிஷ்யை என்பதனைக் காட்டிவிட்டாயே! மனிதர்கள் மிகுந்த பீதியில் இருக்கும்போதுதான் இத்தகைய பொய்மையைத் தர்மம் எனக்கூறிக்கொண்டு எங்காவது அடைக்கலமடைய முயற்சிப்பார்கள்.
வாசவி: இல்லவே இல்லை! எனக்கு எதைக் கண்டும் பயமில்லை. ஆனால் நான் இப்போது ஓடிச்சென்று பத்ராவிற்கு இச்செய்தியைக் கூற வேண்டும்.
ரத்னாவளி: நீ இங்கிருந்து ஓடிப்போவதற்கான ஒரு சாக்காக இதைக் கூறுகிறாய்! நீ உண்மையிலேயே மிகவும் பீதியடைந்திருக்கிறாய்! எனக்கு இத்தகைய கோழைத்தனத்தைக் கண்டு அவமானமாக இருக்கிறது – அருவருப்பானவற்றுடன் நமக்கேற்பட்ட தொடர்பினால்தான் இது நிகழ்ந்துள்ளது.
வாசவி: நீ என்னைப் பற்றி அநியாயமாகப் பேசுகிறாய். எனக்கொன்றும் பயமில்லை.
ரத்னாவளி: அப்படியானால் அதை நிரூபிக்க, எங்களுடன் வந்து அசோக மரத்தடியில் நிகழப்போகும் நடனத்தைப் பார்ப்பாயா?
வாசவி: கட்டாயம் வருவேன். என்னைக் கட்டாயப்படுத்துவதாக ஒன்றும் நீ எண்ணிக்கொள்ள வேண்டாம்.
ரத்னாவளி: மல்லிகா, எங்களை இனிமேலும் தாமதிக்க வைக்காதே. ஸ்ரீமதி நடனத்திற்குத் தயாராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவளை உடனே கூப்பிடு. எல்லா இளவரசிகளும் இல்லாவிட்டால் என்ன? எல்லா வேலைக் காரிகளையும் அழை; இல்லையென்றால், இந்தக் களியாட்டத்தின் உற்சாகம் குறைந்துவிடும்.
வாசவி: இதோ! அவள் வந்துவிட்டாள்! பார், கனவில் நடப்பவள் போல வருவதைப்பார்- மதியத்தின் பளபளக்கும் கானல்நீர்போல, ஒரு நிலையற்ற காட்சியாக, தன் இருப்பையே அறியாதவளாக…..
ஸ்ரீமதி மெல்ல நடந்தபடி பாடிக்கொண்டே வருகிறாள்
ஓ தெய்வீக வாழ்வே!
ஓ உயர்வான சாவே!
நான் உன்னில் அடைக்கலம் புகுகிறேன்
உனது தீயில் நான் என் இருண்ட விளக்கை ஏற்றுவேன்!
உனது புகழ் எனது புருவங்கள்மீது பதிக்கப்பட்டு
எனது அவலங்கள் நிரந்தரமாக நீக்கப்படட்டும்.
ரத்னாவளி: பெண்ணே! இந்த வழியில் வா! அவள் நான் கூறுவதைக் கேட்கவில்லை போலிருக்கிறதே! இந்த வழியில் வா!
ஸ்ரீமதி தொடர்கிறாள்:
ஸ்ரீமதி: தங்களது பாதங்கள் தாம் அனைத்தையும் மாற்றும் நெருப்பு அவை எனது மாசினை மாற்றிப் பொன்னாக்கும். என்னிடம் உள்ள கெடுதல்கள் எல்லாம் நெருப்பாக எரியட்டும், தவறுகளின் முகத்திரைகள் கிழித்தெறியப் படட்டும்.
ரத்னாவளி: சிலை போல நிற்கிறாயே, வாசவி. என்னுடன் வா.
வாசவி: ஊஹும், நான் வர மாட்டேன்.
ரத்னாவளி: என்ன? இந்த வார்த்தைகள் ஏன் இப்போது?
வாசவி: நான் உன்னிடம் உண்மையைக் கூறுகிறேன் – என்னால் வர முடியாது.
ரத்னாவளி: நீ பயப்படுகிறாயா?
வாசவி: ஆமாம்.
ரத்னாவளி: இப்படி பயப்படுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லை?
வாசவி: துளிக்கூட இல்லை. ஸ்ரீமதி, மன்னிப்பைக் கோரும் அந்த வாசகங்களை தயவுசெய்து பாடு!
ஸ்ரீமதி: எனது நெற்றியால் அவருடைய பாதங்களின் புழுதியைத் தொடுகிறேன் (வணங்குகிறேன்)
அவை புத்தரின் பாதங்கள், தூய்மையானவை; பாவங்களற்றவை;
அவர் எனது தவற்றினை மன்னிப்பாராக!
வாசவி: அவர் எனது தவற்றினை மன்னிப்பாராக!
அவர் எனது தவற்றினை மன்னிப்பாராக!
(அவர்கள் செல்கிறார்கள்)
******
அங்கம்- 4
காட்சி: அரண்மனைத்தோட்டத்தில் உள்ள அசோக மரத்தடியில் இருக்கும் உடைக்கப்பட்ட வழிபாட்டு மேடை.
ரத்னாவளி சில அரச தாதியருடனும் அரண்மனைக் காவலாளிகளுடனும் நுழைகிறாள்.
முதல் தாதி: இளவரசி, எங்கள் கடமைகள் அரண்மனையில் எங்களுக்காகக் காத்திருக்கின்றன. எங்களுக்கு விடைகொடுங்கள்.
ரத்னாவளி: இன்னும் சிறிதுநேரம் பொறுங்கள். மகாராணி லோகேஸ்வரி இங்குவர விருப்பம் தெரிவித்துள்ளார்; அவள் வரும்வரை நடனம் தொடங்க முடியாது.
2ம் தாதி: உங்கள் கட்டளைப்படி வந்துள்ளோம்; ஆனால் எங்கள் உள்ளங்கள் இந்தப் புனிதத் தன்மையைக் கெடுக்கும் செயலைக்கண்டு வருந்துகின்றன.
3ம் தாதி: இதே இடத்தில் நாங்கள் எங்களது வழிபாட்டை எங்கள் கடவுளுக்கு (முன்பொரு காலத்தில்) சமர்ப்பித்துள்ளோம். இப்போது தெய்வநிந்தனையான இந்த நடனத்தைக் காண வேண்டுமா? இத்தகையதொரு பாவத்தை எவ்வாறு போக்கிக்கொள்வது?
4ம் தாதி: இத்தகைய வெறுக்கத் தக்கதொரு செயல் இங்கு நிகழ இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. இல்லை; எங்களால் இங்கிருக்க முடியாது.
ரத்னாவளி: ஓ! பாவிகளே! தனது ஆட்சி உள்ள இடங்களிலெல்லாம் புத்தரை வழிபடுவதனை அரசர் தடுத்துள்ளார் என நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா?
4ம் தாதி: நாங்கள் கட்டாயம் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும்: நாங்கள் வழிபாட்டை நிறுத்தி விட்டோம்; ஆனால் எங்கள் கடவுளை ஒருபோதும் அவமதிக்க மாட்டோம்!
முதல் தாதி: மேலும் அரண்மனை நாட்டியப் பெண்ணின் நடனம் இளவரசிகளுக்காக மட்டுமேயானது. எங்களுக்கானதல்ல.
(மற்ற தாதிகளை நோக்கிக் கூறுகிறாள்) நாம் நமது பணிகளைச் செய்யச் செல்லலாம்.
ரத்னாவளி: (ஒரு காவலாளியைப் பார்த்து) அவர்களைத் தடுத்து நிறுத்து.
(இன்னொரு காவலாளியிடம்) போய் அந்த நாட்டியப்பெண்ணை அழைத்து வா.
முதல் தாதி: இளவரசி, அந்தப் பாவம் அவளைச் சேராது; அது உனக்கானதே!
ரத்னாவளி: புது வழியிலான உங்கள் மதம் கண்டுபிடித்திருக்கும் இந்தப் பாவங்களைப்பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?
2ம் தாதி: மனிதர்கள் உயர்வாகப் போற்றும் அன்பை அவமதிப்பது ஒரு குற்றமாகக் கருதப்படுவது உண்டல்லவா?
(தொடரும்)
குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
ஆகாய விமானம்
அதோ பார் அங்கே பறக்குது பார் !
தூரத்தில் சிறிதாய் தெரியுது பார் !
அழகாய் வானில் பறக்குது பார் !
ஆகாய விமானம் பறக்குது பார் !
மேகத்தினூடே நுழையுது பார் !
மினுக் மினுக்கென்று எரியுது பார் !
மனிதன் படைத்த அதிசயம் பார் !
விஞ்ஞானத்தின் விந்தை பார் !
பலமுறை பலபேர் பலதேசம் –
முயற்சிகள் செய்ததன் முடிவைப் பார் !
ரைட் சகோதரர் உழைப்பின் மூலம்
மனித குலத்திற்கே பலனைப் பார் !
றெக்கை கட்டி வானில் பறக்கும்
ராட்சத பறவை பார் பார் பார் !
எவ்வளவு உயரம் பறந்தாலும்
விழாமல் இருக்கும் வித்தை பார் !
நானும் ஒரு நாள் பறந்து போவேன் –
விமானத்தில் அமர்ந்து – நீயும் பார் !
உலகத்தின் மேலே உயரப் பறப்பேன் –
கீழே குனிந்து பார்ப்பேன் பார் !
விர்ரென்று பறக்கும் விமானம் ஏறி
உலகத்து நாடுகள் போவேன் பார் !
சர்ரென்று போவேன் சுற்றியே வருவேன் –
நிச்சயம் நிச்சயம் நிச்சயம் பார் !
எங்கள் வீட்டுத் தென்னை மரம் !
எங்கள் வீட்டு தென்னை மரத்தில்
எண்பது காய் தொங்குது !
அண்ணாந்து பார்க்கிறேன் – அதன்
அழகைப் பார்த்து மயங்கறேன் !
உயரமாக இருக்குது – காய்
உச்சாணியிலே இருக்குது !
ஏணி வெச்சு ஏறிக்கூட
எட்டிப் பறிக்க முடியலை !
மரமேறும் அண்ணா வந்து
பறிச்சுப் பறிச்சுப் போடுறார் !
ஒண்ணொன்னா கீழே வந்து
தொப் தொப்புன்னு விழுகுது !
என் வீட்டை நினைத்தாலே
நினைவில் வரும் தென்னையே !
தாத்தா பாட்டி போல் எனக்கு
தென்னை மரமும் சொந்தமே !
மொட்டை மாடி வந்து கூட
எட்டிப் பிடிக்க முடியலை !
என்னை விட எத்தனையோ
உயரமாகத் தெரியுது !
தாத்தா வெச்ச தென்னை மரம் – அது
தலையை தலையை ஆட்டுது !
அப்பா வெச்ச தென்னை மரம்
பக்கத்திலே நிற்குது !
நானும் ஒரு மரம் வளர்ப்பேன் – அது
தென்னையாக இருக்குமே !
தலைமுறை தலைமுறையா – அதில்
காய்கள் காய்த்து தொங்குமே !
வாடின பூ, ஏனோ தானோ என்று வாரிய தலை, முகத்தில் சிறிது அளவும் சந்தோஷம் தென்படவில்லை. விரிந்த பெரிய கண்களில் முழுவதும் சோகம். முகமே வாடி இருந்தது. தன்னை இழுத்துக் கொண்டு வருவது போல வந்தாள் ப்ருத்வி, வயது பதினெட்டு.
அவளை அழைத்து வந்த காவல்துறை அதிகாரி, என் முன் அமர்ந்தார். ப்ருத்விக்கு சமிக்ஞை செய்தபின் அவளும் பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அதிகாரி உடனே சுருக்கமாக விவரித்தார். அவள் வீட்டிற்கு சில காகிதங்களைத் தரச் சென்றிருந்த போது, இவள் அவரை அணுகி, மனநல ஆலோசகரைப் பற்றிக் கேட்க, அவர் எங்களைப் பற்றி விவரித்தார். கையோடு அழைத்து வந்ததாகக் கூறினார். எங்களது நிறுவனம் காவல்துறையில் இருந்ததால் நாங்கள் செய்வது, எங்கள் அணுகுமுறையைப் பற்றி இங்கு எல்லோருக்கும் நல்ல பரிச்சயம். அதனால் அழைத்து வந்தார். காவல்துறையின் உதவி, ஒத்துழைப்பு எங்களுக்கு என்றும் பெரிய தெம்பு.
அந்த காகிதங்கள் பற்றியும் ஒரு வரியில் விளக்கினார். ப்ருத்வியின் ஒன்பது வயது தம்பி, மிலிந்த் தற்கொலை செய்து கொண்டான் என்று. அவர் சொல்லும் போது, ப்ருத்வியிடம் பல மாற்றங்களைப் பார்த்தேன். அதிகாரியும் பார்த்து, “ஆமாம் மிகக் கஷ்டமான சூழ்நிலை. மனசைத் தளர விடாதே. நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்” என்றார். அவர் சொல்வதை ஆமோதித்து, தானாக உதவி கேட்டு, வந்ததே அவளுடைய தைரியத்தைக் காட்டுகிறது என்றேன். அவர் தலையை ஆட்டிக் கொண்டு விடைபெற்றுச் சென்றார்.
ப்ருத்விக்கு ஆசுவாசப்படுத்த எங்களின் குடும்ப மனநல சிக்கல்களைக் கையாளும் NGO பற்றி எடுத்துச் சொன்னேன், பல தகவல்களை அளித்தேன். அவளுடைய நிலை மிகவும் தர்மசங்கடமானதுதான் என்று ஆமோதித்தேன். மறு கணம் அவளும் பகிர ஆரம்பித்தாள்.
தம்பி மிலிந்த் அவளுக்கு உயிர். அம்மா வேலைக்குப் போவதால், தம்பியைச் சிறுவயதிலிருந்தே அதிக பட்சம் அவளே பார்த்துக் கொள்ளும் படி நேர்ந்தது.
அம்மா ஒரு ஜிம் நடத்தி வந்தாள். அதனால் வெகு காலையில் கிளம்பி மதியம் உணவு நேரம் வீட்டிற்கு வருவாள். மாலை ஐந்து மணிக்குக் கிளம்பி விடுவாள். சிறுவயதிலிருந்தே ப்ருத்வி வீட்டைப் பார்த்துக் கொண்டாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு தம்பியைப் பார்த்துக் கொள்வதும் சேர்ந்தது. அக்கறையாகப் பார்த்துக் கொள்வதால் எப்போதும் எந்த கேள்வியும் எழவில்லை. அப்பா வேலையிலிருந்து வந்தபின் அவருக்கு டீ போட்டு, டிஃபன் தருவதும் ப்ருத்வியே.
அவள் படிப்பில் கெட்டிக்காரி. மிலிந்த்திற்கு பாடத்தை கற்றுத் தருவது, வீட்டுப் பாடத்தில் உதவுவது என அவனுடைய முழு பொறுப்பை ஏற்றுச் செய்தாள். அம்மாவைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று முயலுவோம் என்றதாலும்.
இந்த விளக்கங்களைப் பகிர, பலமுறை ப்ருத்வி சொன்னது, அக்கா-தம்பி அவ்வளவு பாசமாக இருப்பதைப் பற்றி. இருவரும் அன்றாட பள்ளியில் நடந்ததைப் பகிர, ஒருவருக்கு ஒருவர் சமாதானம் செய்து கொள்வார்கள். அம்மா திரும்பி வர இரவு ஒன்பது மணி ஆகிவிடும். சோர்ந்து வருவதால், எதையும் சொல்ல மனம் வராது. அப்பா எட்டு மணிக்கு வந்தாலும் ஏனோ பகிர மனம் வந்ததில்லை.
தன் பொறுப்பில் இருப்பதால் அவன் நன்றாக வரவேண்டும் என்பதால் சலுகை கலந்த கண்டிப்பைக் கடைப்பிடித்ததாகக் கூறினாள். உதாரணத்திற்கு, மிலிந்த் விளையாடப் போகும் முன் எப்பொழுது திரும்பி வர வேண்டும் என்ற நேரத்தைச் சொல்லி விடுவாளாம். அதை கடைப்பிடிப்பது அவனுடைய பொறுப்பு என அவனுக்குச் சொல்லி விடுவாள். தனக்குப் பொறுப்பு கொடுத்ததால் அதைப் பரிபூரணமாக மிலிந்தும் செய்வானாம். நேரத்திற்கு வந்து பெருமையாகச் சொல்லிக் காண்பிப்பானாம். அதனால் தான் ப்ருத்வி எதையாவது தடை செய்தால், அதைப் பற்றி விளக்கம் தந்து புரிய வைப்பாள். ஏற்றுக் கொள்வானாம். இதனால் இருவருக்கும் சண்டை வராமல் பார்த்துக் கொண்டாள்.
இதுவெல்லாம் அம்மாவோடு ஷாப்பிங் போகும்போது தலைகீழாக மாறும். மிலிந்த் எதைக் கேட்டாலும் அம்மா வாங்கித் தந்து விடுவார்கள். கேட்பது ஏற்கனவே அவனிடம் இருக்கிறது என ப்ருத்வி எடுத்துச் சொன்னால், அம்மா-அப்பா அவளை முறைத்து “எங்களுக்குத் தெரியும். பெரிய மனுஷி போல பேசாதே. குழந்தைக்கு வாங்கறோம். பேசாம இரு” என்பார்கள். மிலிந்த் புன்னகை பூத்து அவளை கேலி செய்வான்.
அம்மா இதற்குத் தந்த விளக்கம்: தான் வீட்டில் இருப்பது இல்லை. மிலிந்த் ஏங்கிப் போகாமல் இருக்க இப்படி வாங்கித் தருவதாக. அதனால் தான் ப்ருத்வி தோசை சுட்டு தந்தாலும், அம்மா வந்தபின் பீட்சா கேட்பான். அவன் எந்த பீட்சா கேட்கிறானோ அம்மா வாங்கித் தருவாள், அவனுக்கு மட்டுமே.
ப்ருத்வி கணிப்பில், சலுகைகள் மெல்ல அதிகரித்தன. அத்துடன் மிலிந்த் இவள் பேச்சைக் கேட்க மறுத்து வந்தான். பாசத்தினால் அவளும் தாஜா செய்ய ஆரம்பித்தாள். மிலிந்த் மசிய மாட்டான். அம்மாவிடம் ஓடிடுவான்.
மிலிந்த் கேட்பதை, வாங்கித் தரவில்லை என்றால் திரும்பத் திரும்பக் கேட்பான், அப்படியும் வாங்கித் தரவில்லை என்றால் அழுகை ஆரம்பமாகும். அதன் பிறகு, ஒரு மூலையில் நின்று கொண்டு, அவளையே உற்றுப் பார்ப்பான். சில நிமிடங்களில் மனம் இறங்கி செய்திடுவாள். உடனே அவள் கழுத்தைக் கட்டி “செல்ல அம்மா” என்றதும் இருவரும் கொஞ்சுவார்கள். அம்மா “இதுக்கேன் உன்னை இப்படி தவிக்க வைக்க வேண்டும்” என்பாளாம்.
அதனால் தான் மிலிந்திற்கு ஐந்து ஆறு வயதிலிருந்து ப்ருத்வி செய்வதில் உடன்பாடு இல்லாதபோது அம்மாவிடம் ஓடுவான். முறையிடுவான். அவள் எல்லா ரூல்ஸ் மீறிச் செய்ய விடுவாள். ப்ருத்வியை கேலி செய்து மிலிந்த் ஓடுவான்.
நாளடைவில் மிலிந்த் கேட்டதை அம்மா வேண்டாம் எனச் சொன்னபோது அம்மாவைப் பயமுறுத்த, அம்மா முந்தானையைக் கழுத்தில் அழுத்திக் கட்டி, தரும்வரை செய்வான். சில நிமிடங்களில் அவன் கேட்பது கிடைக்கும்.
இவை நடக்கையில் இதைப் பார்த்திருக்கும் ப்ருத்வி மனதளவில் வருத்தப் படுவாள். யாரிடமும் கூறியதில்லை.
ஒரு ஆறு மாதத்திற்கு முன்னால் திடீரென மிலிந்த் தான் ஆசைப்பட்ட கைப்பந்து வேண்டும் எனக் கேட்டான். அம்மா அப்பாக்குள் அன்று வாக்கு வாதம். அது முடிந்தும் மிலிந்த் தனக்கு அந்த கைப்பந்து வேண்டும் என்றான். அப்புறம் என்றார்கள். அந்த பதிலை நிராகரித்து, மிலிந்த் திரும்பவும் கேட்டான். அப்புறம் என்றார்கள். “இரு என்ன செய்கிறேன்” என உள்ளே போய் தாளித்துக் கொண்டான். அரைமணி கழிந்தும் அவன் வெளியே வரவில்லை, ப்ருத்வி எழுந்தாள், பெற்றோர் இருவருமே அவளைக் கண்டித்து “நீ தர செல்லத்தில் கெடுகிறான், உட்கார்” என்றார்கள். ஒரு மணி நேரம் போயிருக்கும். அவன் நண்பர்கள் விளையாட அழைக்க, அம்மா அழைத்தாள்.
பதில் இல்லை. போய் பார்த்தாள். மூடியிருந்த கதவைத் திறக்கப் பார்த்தாள். முடியவில்லை. எல்லோரும் ஒருவிதமான மனநிலையில் திறக்க முயன்றார்கள். இவர்கள் அலறும் சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டினர் வந்து உதவ முயன்றார். எதுவும் பலனில்லை. யாரோ காவல்துறையை அழைத்தார்கள். அதற்குள் கதவு திறந்தது.
உள்ளே, மிலிந்த் நாற்காலியில் உட்கார்ந்து அம்மா புடவையைக் கழுத்தில் சுற்றி இருந்தான். பதட்டத்துடன் ஓடி வந்தார்கள் அவன் “வாங்கித் தரியா” என்றவனுக்கு “எதைக் கேட்டாலும் தரேன்” பதில் அளித்தாள் அம்மா, அப்பாவும் ஒப்புக்கொண்டார். வந்த காவல்துறை அதிகாரி எச்சரிக்கை செய்து சென்றார்.
இது நடந்த இரண்டாவது மாதம் இதே மாதிரி நடந்தது. மிலிந்த் கேட்க-ப்ருத்வி இல்லை என்றாள்-அம்மா அப்பாவைக் கேட்டான்- மறுத்தார்கள்-உள்ளே போய் விட்டான். போன முறை போல ஒரு மணி தாமதித்துச் சென்றார்கள். இந்த முறை முடிச்சு அழுத்தமாக இருந்ததில், உயிர் பிரிந்திருந்தது. மிலிந்த் பயமுறுத்தச் செய்தானே தவிர, தன் உயிர் போகும் என நினைக்கவில்லை போல் இருந்தது. காவல்துறையினர் வந்து பார்த்து, தகவல்களைக் கேட்டு. செய்ய வேண்டியதைச் செய்தனர்.
ப்ருத்வியால் இதைத் தொடர்ந்து பேச முடியவில்லை. அணை வெடித்தது போல் கண்ணீர் ஓடியது.
சமாதானம் ஆன பின் மறுபடியும் வரும் நேரம் குறித்துக் கொண்டு சென்றாள்.
மறுபடி ப்ருத்வி வந்தாள்.
பெற்றோர் இருவரும் மனம் உடைந்து இருப்பதைப் பார்க்கவே முடியவில்லை என்று ஆரம்பித்தாள். தன்னால் சமாதானம் செய்ய முடியவில்லை, என்ற குற்ற உணர்ச்சி உறுத்துவதாகப் பகிர்ந்தாள்.
ப்ருத்வி எல்லோரையும் காக்கும் பொறுப்பைத் தன்னை அறியாமல் ஏற்றுக்கொள்ள அவளுக்கு இவ்வாறு தோன்றியது. இவளுக்கே சமாதானம் செய்ய வேண்டிய நிலையிலிருந்தாள். ஆனால்….
மிலிந்த் மரணத்தைத் தான் தடுத்து நிறுத்திருக்கலாம் எனத் திரும்பத் திரும்பச் சொன்னாள். ஒரு வேளை இத்தனை கண்டிப்பாக இல்லாமல் இருந்திருந்தால்? மனக் குமுறலைப் பகிர விட்டேன்.
பல கேள்விகள் எழுந்தன. ப்ருத்வி தேடல், இவ்வாறு போய்க் கொண்டு இருக்கையில் நடுவில் ஓரிரு கேள்விகள் கேட்டேன். பதில் தர தன் தேடலின் பதில் கிடைக்க ஒரு கடுகு அளவு சமாதானம் ஆக ஆரம்பித்தது.
மிக நிதானமாக தன் மேல் பழி சுமத்திக் கொள்வதின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாள். தனக்குச் சாட்டையடி விழுவதால் அந்த உணர்வு மேல் ஓங்க, இழந்த உறவைப் பற்றிய உணர்வைக் கையாளும் முயற்சி என்றதை அறிந்தாள்.
பல ஆண்டுகளாக ப்ருத்வி மிலிந்தைப் பார்த்துக் கொண்டாள். அவன், தன் பொறுப்பு என்பதாலும் வலி. பாசம் ததும்பும் ப்ருத்விக்கு தனது இழைப்பை எப்படிக் கையாளுவது எனத் தெரியவில்லை.
இதைப் பற்றி உரையாடும் போது அவளுக்கும் பெற்றோருக்கும் சுமுகமான உறவு இல்லை என வெளிவந்தது. அவர்கள் “மகன்” இழைப்பைப் பலரிடம் சொல்லி வருத்தப் பட்டார்கள். இவளை “பாரம்” எனச் சொன்னதால் ப்ருத்வி அழுதால், “எங்களுக்கு கொள்ளி வைப்பவன் போயிட்டான். நீ பாரம். உயிரோடு இருக்க” என்பார்களாம்.
இந்த முறை அவளுடைய தோழி வந்தாள்.
ப்ருத்வி ஏதோ எதிரும் புதிருமாகச் செய்வதைப் பற்றி விளவினாள். கவலைப் பட்டாள்.
இதுவரை ப்ருத்வி சரியான பாதையில் போய்க் கொண்டு இருந்தவள். திடீரென இழப்பு. பெற்றோரின் நிராகரிப்பு. ஏக்கத்தின் நிழல் அவளைக் கவ்வியது. அதனால் எதிர்மறையாகச் செய்தாள். அந்த நடத்தையின் மேல் கவனம் போகும். அதனால் தன்மேல் கவனம் எழும். நெகடிவ் அடேன்ஷன்.
தோழி, ப்ருத்வி செய்வதைக் கவனித்து உஷார் ஆனதை வர்ணித்தாள். இதிலிருந்து மீண்டு ப்ருத்வி மறுபடியும் தன்னைப் பாசத்துடன் பார்த்துக் கொள்ளப் பல உரையாடல் போனது.
ப்ருத்வி பார்க்க ஆரம்பித்தாள். தன் செயலுக்கும் மிலிந்த் அடம்பிடிக்கும் விதத்திலும் பல ஒற்றுமை இருப்பதைக் கண்டறிந்தாள். அவன் செய்ததை நினைவூட்ட இவள் செய்வதை ஒப்பிட்டுப் பார்க்கையில் இருவிதத்தில் பயன்பட்டன. ஒன்று, மிலிந்த் நினைவலைகள் ஓட அவனை, அவர்கள் இருவரும் கூடச் செய்த பலவற்றை வர்ணித்தாள். நீர் மல்கும் கண்களில். இன்னொன்று, இந்த பகிர்தலில், தான் இப்போது செய்வது பற்றித் தெளிவு பெற ஆரம்பமானது. அது, தன் வழி இது அல்ல எனத் தெளிவானது.
வாழ்க்கையில் வெறிச்சோடி இருப்பதாக உணர்வதைப் பற்றிப் பேசினாள். வீட்டில் பெற்றோரின் ஆதரவு இன்னும் தடுமாறியது. இங்கு வந்து என்னைச் சந்திக்க மறுத்து விட்டார்கள். ப்ருத்வியினுள் பாசம் இன்னும் ததும்பியது. இதைப் பிரயோகித்து, பூ அலங்காரம் செய்வதென்று முடிவெடுத்தோம்.
இதற்கு, அவர்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள ஒரு பூவேலை செய்யும் இடத்தில் தினந்தோறும் இரண்டு மணி நேரம் பணி செய்வது என முடிவானது. பல விதமாகச் செய்தாள். செய்ய ஆரம்பித்ததில் அவர்கள் விற்பனை பல மடங்கு வளர்ந்தது.
இதில், அத்தனை மனத்திருப்தி வரவில்லை என்றாள் ப்ருத்வி. அலங்காரம் எனும் வியாபாரம் என்ற எண்ணமோ? பாசத்தைச் செலவு செய்ய வேறு வழி தேடினாள். அங்குள்ள ஒருவர் நாய்களைப் பார்த்துக் கொள்பவள். அதாவது ஊருக்குப் போவோர்களின் வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால். அவர்களைக் கவனிப்பது. சரியாகப் பார்த்துக் கொள்ள, நான்கு ஐந்து நாய்கள் மட்டுமே வைப்பாள். பலமுறை எங்களிடம் வரும் க்ளையன்டஸை நாங்கள் அங்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
ப்ருத்வி பாசம் உள்ளவள். இந்த தருணத்தில் அவளிடம் எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் பாசம் காட்ட நாய்கள் தான் சரி என்று தோன்றியது. அந்தப் பணியில் ஈடுபடலாம் என்று அவளிடம் பரிந்துரைத்தேன். முதலில் செல்லப் பிராணிகளைப் பற்றி பயம் என்றாள். பாசத்திற்கு முன் பயம் எம் மாத்திரம்? சென்றாள், தயக்கம் பயம் எல்லாம் ஆரம்பத்தில். நாள் ஆக ஆகச் செல்ல பிராணிகள் பலன் அடைந்ததோடு ப்ருத்வியிடம் வந்த மாற்றங்கள் பல.
இவளிடம் கண்ட மாற்றமே அவளுடைய அப்பாவை வந்து என்னைப் பார்க்க வைத்தது. இரண்டு மாதமாக அவர்கள் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டார் எனத் தெரிய வந்தது. தனக்கு வேலையில் நாட்டம் இல்லை என்று ஆரம்பித்தார்…
தாரே ஜமீன் பர் (2007)
காற்றும் வெளிச்சமும் தேவை வகுப்பறைக்குள்
எஸ் வி வேணுகோபாலன்
அந்த ஏக்கம் ததும்பும் கண்கள், பொலிவைத் தொலைத்த முகம், இழிவுகளை சகித்துக் கொண்டு நகரும் உடல் மொழி….இர்ஷான் அவஸ்தி என்ற அந்தச் சிறுவன் கதாபாத்திரம் அத்தனை எளிதில் மறக்காது. தாரே ஜமீன் பர், முற்றிலும் வித்தியாசமான திரைப்பார்வை அனுபவம்.
குழந்தைகளை இந்த உலகில் மிக அதிகம் வாட்டி எடுக்கும் அவஸ்தை, பெற்றோரால் தரம் தாழ்ந்து பார்க்கப்படுவது. ஒப்பீடு என்ற ஒரு விஷயம் நியாயமாகப் புரிந்து கொள்ளும் முயற்சிகளை மாசு படுத்திவிடுகிறது.
இர்ஷான் அவஸ்தி, பள்ளியில் ஒரு போதும் உருப்படியான மதிப்பெண்கள் பெற முடிவதில்லை. அவனுக்கு எதுவும் மண்டையில் ஏறாது, புரியாது என்று அடித்துச் சொல்லி விடுகின்றனர் பள்ளியில். தந்தை நந்திகிஷோர் அவஸ்திக்கு அவனைப் பார்த்தாலே இருப்பு கொள்வதில்லை. சோம்பேறி. திமிர். வேண்டுமென்றே படிப்பதில்லை என்று பொருள் செய்து கொண்டு வெறுக்கிறார். ஏனெனில், முதல் மகன் வகுப்பில் சூட்டிகையாக இருக்கிறான். தாயோ செய்வதறியாது பரிதவிப்பில் துடிக்கிறாள்.
குடும்பத்தோடு இருந்தும் தனிமைப்பட்டுக் கிடப்பவனை, தங்கி இருந்து படிக்கும் போர்டிங் பள்ளிக்கூடம் ஒன்றில் கொண்டு விட்டுவிடுவது என்ற முடிவை எடுக்கிறார் தந்தை. ஓர் இரவு முழுவதும் அடித்துத் துவைப்பதை விடவும் அதிக வன்முறை இத்தகைய முடிவுகள். அந்தப் பள்ளியும் இன்னொரு பள்ளிக்கூடம் தான். நகல் எடுக்கப்பட்ட வேறு ஆசிரியர்கள். பிரதி எடுக்கப்பட்ட அதே அணுகுமுறைகள்.
பின்னர் நடப்பது என்ன என்பது உலகளாவிய தன்மையில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், சமூகத்திற்குமான பாடமாக அமையும் வண்ணம் எடுக்கப்பட்ட சிறப்பான திரைப்படம் இது.
மாயாஜாலங்கள் செய்யும் கோமாளி போல் திரைக்கதையில் ஓர் ஆசிரியர் நுழைவதும், அவர் புதிய கோணத்தில் இர்ஷான் அவஸ்தி குறித்த தேடலில் அவனைக் கண்டடைவதும், அவனுக்கான படைப்புலகில் அவனுக்குரிய அங்கீகாரத்தைப் பொதுவெளியில் உறுதிப்படுத்துவதும் ஒரு பரவசமிக்க முறையில் நிறைவேறுகிறது.
ஓரிரவில் நிகழ்வதில்லை இத்தனையும். நொறுக்கப்பட்ட உளவியலை நம்பிக்கையோடு மீண்டும் ஒரு மறுகட்டுமானம் செய்வதும், வறண்டு போன உதடுகளில் புன்னகையைத் துளிர்க்க வைப்பதும் அத்தனை எளிதில் சாத்தியமாவதில்லை.
இர்ஷான் அவஸ்தி பாட வேளைகளில் வேறெங்கோ கவனத்தில் இருக்கிறான், கேள்விக்குத் தப்பும் தவறுமாகப் பதில் சொல்கிறான், சக மாணவர்கள் கேலிக்கு ஆளாகிறான் என்று காட்சிப் படுத்தவில்லை படம். தொடர்பு படுத்திக் கொள்வதன் பிரச்சனை இரண்டு பக்கங்களிலும் இருக்கிறது என்பதை அசாத்திய பார்வையில் பிடிபட வைக்கிறார் திரைக்கதை ஆசிரியர் அமோல் குப்தே.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார் வள்ளுவர். எண்களும் எழுத்துகளும் இர்ஷான் அவஸ்தியின் மனக்கண்ணில் என்னென்ன உருமாற்றம் அடைகின்றன, எங்கெல்லாம் பறக்கின்றன, விடைகள் சொல்லவேண்டிய நிர்ப்பந்தமான கட்டத்தில் அவன் எங்கே அலைவுறுகிறான் என்பதை நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறது படம்.
வண்ணங்களின் மீதான அவன் காதல், ஐஸ் குச்சியின் மீது ஊற்றப்படும் பல வண்ணச் சாறுகளோடு சேர்ந்து உருகும் உற்சாகம் உள்ளிட்டு, அவனளவில் இன்பமான சொந்த உலகத்தில் அவன் சுவாரசியமாக உலவ முடிகிறது. மற்றவர்கள் எதிர்பார்க்கும் இன்னோர் உலகத்தின் திறப்புக்கான கடவுச் சொல் அவனுக்குப் பிடிபடுவதில்லை. அவனாகச் சில கலைவடிவங்கள் உருவாக்கும் முனைப்பில் இருப்பதும் முக்கியமானது.
வெளியூர் சென்று திரும்பும் தந்தை தங்களுக்கு என்ன தின்பண்டங்கள் வாங்கிவைத்திருக்கிறார் என்ற ஆர்வத் துள்ளலில் அவரை அணுகிக் கேட்கும்போது, நாளேடு வாசிக்கும் முன்னுரிமையில் அவர் அவனது அன்பை அலட்சியப்படுத்தும் காட்சி நிறைய பேசுகிறது.
‘மெதுவாகக் கற்றல்’ எனும் டிஸ்லெக்சியா பிரச்சனையால் பீடிக்கப்பட்டிருக்கிறான் இர்ஷான். ஒரு கொள்கலன் தனது அளவுக்கு அதிகமான நீரை வழியச்செய்துவிடுவது போல் நழுவிப்போகும் செய்திகளும், விஷயங்களும், பாடங்களும் வைத்து அவனை மதிப்பீடு செய்யும் கல்வியுலகில், அவனது தேடல் உலகில் நிறைந்து ததும்பும் விஷயங்களை நோக்கி கவனத்தைத் திருப்புகிறார் சிறப்பு ஆசிரியர்.
அவர் மெனக்கெட்டு அவனைப் பற்றி மேல்விவரங்கள் அறிந்து கொள்ளும் ஆவலில் அவனது வீட்டை வந்தடையும்போதும் நந்திகிஷோர் அவஸ்தி மகனைக் குறித்த கேள்விகளுக்கு எரிச்சலோடு தான் பதிலுரைக்கிறார். ஆசிரியர் விடாப்பிடியாக, இர்ஷான் புழங்கும் இல்லத்தின் பகுதியில் ஊடுருவும் கண்களோடு அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்கும் ஓர் அபார விஷயம், அவனுக்குள்ள ஓவியத்திறன் குறித்ததாகும். ஆனாலும், பெற்றோருக்கு அவன் எதிர்காலம் பற்றிய கவலைகள் விடைபெறுவதில்லை.
அந்த ஏழு நிமிட உரையாடல் காட்சியில், பின்னணியில் இசை வைக்கவில்லை என்கிறது படத்தைப் பற்றிய ஒரு குறிப்பு. இர்ஷான் அவஸ்தியின் உளவியல் துடிப்புகளுக்கு ஏற்ப படத்தின் இசைக்கோவை, பின்னணி இசை அசாத்திய பங்களிப்பு செய்திருக்கிறது.
டிஸ்லெக்சியா என்பது ஒரு நோயல்ல, அறிவாற்றல் குறைவு என்று பொருள் அல்ல. எழுத்துகள், சொற்கள் வாசிப்பு மற்றும் தொடர்புபடுத்திக் கொள்ளுதலில் ஓர் அசாதாரண தன்மை. இடமிருந்து எழுத்துகள் வாசிப்பது சாதாரண தன்மை, வலமிருந்து இடம் நோக்கி எதிர்த்திசையில் எழுத்துகளை வாசிப்பது டிஸ்லெக்சியா தன்மையின் வெளிப்பாடுகளில் ஒன்று.
இந்தத் தன்மை இருந்த சில மனிதர்கள் உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக, சமூகத்தில் சாதனை படைத்தவர்களாக இருந்ததை, இருப்பதை இர்ஷான் அவஸ்தி வகுப்பறையில் சிறப்பு ஆசிரியர் விளக்குகிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதல் அபிஷேக் பச்சன் வரை எடுத்துக்காட்டுகள் முன்வைக்கிறார். அவர் உரையாடலை அவஸ்தியோடு தனியாகத் தொடங்காமல் அவனைச் சுற்றியுள்ள சக மாணவர்களோடு, ஏன், ஆசிரியர்களோடும் நடத்துவது தான் திரைக்கதையின் மற்றுமொரு சிறப்பம்சம். இர்ஷான் விஷயத்தின் சிறப்புத் தனி கவனம் செலுத்த சிறப்பு ஆசிரியருக்கு அனுமதி வழங்கும் பள்ளியின் முதல்வர் கல்வி அமைப்பின் முக்கிய புள்ளியில் இருப்பவரது பொறுப்புணர்வு குறித்த செயல் விளக்கமாகவும் மாறுகிறார்.
உடல் ஊனமுற்ற ஒரு மாணவன் தான், இர்ஷானுக்கு நெருக்கமாக இருப்பவன். சிறப்பு ஆசிரியர் அந்த நட்பின் அஸ்திவாரத்தில் இர்ஷான் அவஸ்தியை நெருங்குவது கொஞ்சம் எளிதாகிறது. இதுவும் முக்கியமான உளவியல் நுட்பம்.
ஆண்டு இறுதியில் போர்டிங் பள்ளிக்கூடத்தில் ஒரு மிகப்பெரிய ஓவியப்போட்டி நடக்கிறது. இது திரைக்கதையின் அடுத்த அபார அம்சம். குறிப்பிட்ட பாட திட்டம், கால வரையறை கெடுபிடிகளுக்குள் இர்ஷான் போன்ற மாணவர் நீந்திக் கரை சேர முடியாத இடத்திலிருந்து, பள்ளிச்சூழல் இர்ஷான் தேர்ச்சி பெற்றிருக்கும் அம்சத்தில் தேர்வு போல அல்ல பங்கேற்பின் இன்பத் திருவிழா போல நகர்கிறது. அதில் போட்டியாளர்கள் கிடையாது. பங்கேற்பாளர்கள் தான். மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும்!
ஓவியம் வரைய இயலாது திண்டாடும் ஆசிரியர்கள் தங்கள் அபத்த வரைதலை மாணவர்கள் வேடிக்கை பார்ப்பதில் எரிச்சல் அடைவதில்லை. அதைக் கொண்டாடி மகிழவும் செய்கிறார்கள். அந்தப் போட்டி நடைபெறும் இடமே அற்புதமான ஒரு சூழலாக அமைந்திருக்கும்.
இரண்டு பேர் மட்டும் இதில் தனித்துவமான வேள்வியில் இறங்கி இருக்கின்றனர் தீவிரமாக, ஒருவர் சிறப்பு ஆசிரியர். மற்றவர் மாணவர் இர்ஷான் அவஸ்தி. ஆஹா…ஆஹா….அதன் உச்சம் அவர்கள் வரைந்து முடிக்குமிடம். கண்ணீர் பெருக வைக்கும் காட்சிகள்.
படத்தின் வண்ணக்கலவை போலவே முக்கிய கவனம் பெறும் இசைக்கலவை, க்ளைமாக்ஸ் காட்சியின் மகத்தான பாத்திரம் வகிக்கிறது. ரசிகர்களின் திரைப்பார்வை அனுபவத்தை உன்னத தளத்திற்கு எடுத்துச் செல்வதில் இசையின் பங்களிப்பு அபாரம்.
தன்னையே வரைந்திருக்கிறார் தனது ஆசிரியர் என்று அந்தச் சிறுவன் கரைந்துபோய்ப் பார்க்கும் இடத்தில் தர்ஷீல், அமீர் கான் இருவரது முக பாவங்களும், உடல் மொழியும் அபாரமாக இருக்கும். நிறைவுக் காட்சியில், ஊருக்குத் திரும்ப காரை நோக்கி நடக்கையில், திரும்பிப் பார்த்து ஆசிரியரை நோக்கி ஓடோடிப் போய்த் தழுவிக் கொள்ளும் காட்சி யாரையும் உருக்கிவிடும்.
ஓவியங்களில் முதலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்று அந்த ஆண்டு பள்ளியின் சிறப்பு மலரின் அட்டைப்படத்தை அலங்கரிக்கும் என்பது ஏற்கெனவே செய்யப்பட்ட அறிவிப்பு. இப்போதோ இரண்டு ஓவியங்கள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு, அதில் நடுவர் பட்ட பாடு என்ன என்பதைப் பள்ளி முதல்வர் அத்தனை புதிரோடும், உள்ளக் கிளர்ச்சியோடும் ரசமாகப் பேசும் காட்சி முக்கியமானது.
படத்தின் நிறைவுக் காட்சி இன்னும் கவித்துவமானது. இர்ஷான் பெற்றோர், அண்ணன் மூவரும் பள்ளிக்குள் நுழைவதும், ஒவ்வோர் ஆசிரியரும் இர்ஷான் பற்றி அவர்கள் வாழ்க்கையில் முதன்முறை பாராட்டு மழை பொழிவதை இதயம் குளிரக் கேட்டு நகர்ந்து கடைசியில் முதல்வரை சந்திக்கையில் சிறப்பு மலரின் அட்டைப்படத்தில் இருப்பது இர்ஷான் ஓவியம்.
சிறப்பு ஆசிரியராக அசத்தல் நடிப்பை வழங்கி இருக்கும் அமீர்கான், படத்தின் இணை இயக்குனரும் கூட. தர்ஷீல் சஃபாரி எனும் சிறுவன் இர்ஷான் அவஸ்தியாகவே உருப்பெற்றிருந்தார். பெற்றோராக வருவோர், அண்ணன், ஆசிரியர்களாக இடம் பெற்றோர், சக மாணவர்கள் என எல்லோரும் இயல்பான நடிப்பை வழங்கி இருப்பது படத்தின் பெருஞ்சிறப்பு.
கதைக்கருவிற்கான இசை, இர்ஷானது வெவ்வேறு உளவியல் போக்குகளைத் தக்கவாறு வெளிப்படுத்தும் இசை, ஓவியப் போட்டியினூடே அந்த இடத்தை நீராட்டும் இசை, இசைக்கருவிகளின் பொழிவில் ஆசி மழையாகப் பொழியும் இசை என உணர்வுகளோடு பேசும் கூட்டிசை இந்தப்படத்தின் முக்கியமான அம்சம். ஷங்கர் மகாதேவன், இஷான் நூரானி, லோய் மூவரும் சேர்ந்து பின்னணி இசையமைத்தது ஒரு சிறப்பு. ஷங்கருக்கு பின்னணி பாடகருக்கான தேசிய விருது பெற்றுத் தந்த படம், வேறு பல அம்சங்களுக்காகவும் தேசிய விருதும், ஃபிலிம் ஃபேர் விருதுகளும் பெற்றது வியப்பில்லை.
பெற்றோர் பலரைக் கண்ணீர் சிந்த வைத்த படம், சமூகத்தின் அணுகுமுறையை ஓரளவுக்கேனும் அசைத்திருக்கும் என்று சொல்லலாம். பல நகரங்களில் சிறப்பு வகுப்புகள், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சிகள், வெவ்வேறு கற்றல் திறனுள்ள மாணவர்களை நோக்கிய மேம்பட்ட அணுகுமுறைக்கான பட்டறைகள் உருவானது குறிப்பிட வேண்டிய தாக்கம்.
மரமேறும் போட்டி வைத்தால் ஒரு மீன் அதில் தோற்றுப் போகும் என்றார் ஐன்ஸ்டீன். எனக்குத் தெரிந்ததை எழுதுவதற்குப் போனால், எனக்கு தேர்வு வைத்தவர்களோ எனக்கு என்ன தெரியாது என்பதைக் கண்டுபிடிப்பதில் குறியாயிருந்தனர் என்று தேர்வுகள் பற்றிய கட்டுரையில் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டிருந்ததை, கல்லூரிப் பாடத்தில் வாசித்த நினைவு.
தினங்களைக் கொண்டாடுவதை விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறோம் என்று கவிஞர் அப்துல் ரகுமான் கேள்விக் கவிதை தொடுத்திருந்தார். தாரே ஜமீன் பர் (தரை மீது நட்சத்திரங்கள்) வீடு, பள்ளி, பொதுவெளியில் குழந்தைகள் குறித்த அணுகுமுறை, கல்வி பற்றிய பார்வை போன்ற பொதுவான அம்சங்கள் மீதும் வெளிச்சத்தைப் பரவ விட்ட அருமையான திரைப்படம்.
முன் கதைச் சுருக்கம்
பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.
ஒருநாள் ஊடலின் போது. அவனைத் ,’திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப் பழிவாங்க நினைத்தான்.
அங்கொரு மலை உச்சியில் குலதெய்வக் கோயில் இருப்பதாகக் கூறி அவளை அழைத்துச் செல்கிறான்……
கோயிலில் படையல் இடுதல்
அருள்மணம் கமழும் கோயில்,
அறநெறி நுழையும் வாயில்,
பொருள்வழிச் செல்வோர், உண்மைப்
பொருளினை விழையும் ஓரில்,
இருள்மனம் வழியைக் காண,
எல்லொளி ஞானம் சேரில்.
இருவரும் வணங்கிப் பின்னர்
இட்டனர் படையல் நேரில்.
(எல் – சூரியன்)
( சேரில் — சேர் இல் )
கவிக் கூற்று
கற்புநெறி பிறழாத குடிப்பி றந்த
காரிகையாள், காமத்தின் கவர்ச்சி யாலே
இற்பிறந்த பெருமையெலாம் விட்டுத் தாழ்ந்தாள்
இழிபிறவி ஒருகள்வன் வலையில் வீழ்ந்தாள்
கற்பிளவை ஒத்தசினக் காளன், நம்பும்
காதலியைப் பழிதீர்க்க எண்ணம் கொண்டான்.
நெற்பயிரின் சிறப்பதனை, மேயும் மேதி,
நினைத்திடுமோ,வருந்திடுமோ, நெஞ்சம் கொஞ்சம்
( மேதி — எருமை)
மலையுச்சியில், துன்பத்தைப் போக்கும் அழகைக் கண்டு மகிழலாம் என்று வஞ்சகமாகக் காளன் அழைத்தல்
மலையிடையினில் பிறந்திடுமொரு மணியெனமிகை அழகே,
அலையிடையினில் விளைந்தெழுகுளிர் அமுதெனவொளிர் நிலவே,
தொலைமுகடதில் சிலநொடிகளில் துயரறுமெழில் உளதே,
கலகலவென உளமகிழ்வுறக் கடிவிரைவினில் வருவாய்!
கலைமகளென நிலமிசையுனைக் கவிமொழிந்திடும் கனியே,
சிலையுருவெனத் திருமகளெனத் திகழ்வுறுமலர்த் திரளே,
தொலைமுகடதில் சிலநொடிகளில் துயரறுமெழில் உளதே,
கலகலவென உளமகிழ்வுறக் கடிவிரைவினில் வருவாய்!
கொலைபுரிபவன் மணம்புரிந்தவென் கொழுமலரிளங் கொடியே,
விலையளித்திடும் விதியழைத்திடும் விடுதலையினைப் பெறவே,
தொலைமுகடதில் சிலநொடிகளில் துயரறுமெழில் உளதே,
கலகலவென உளமகிழ்வுறக் கடிவிரைவினில் வருவாய்!
(தொலைமுகடு — தொலைவில் தெரியும் மலையுச்சி)
தோன்றிய தீய நிமித்தங்களைப் புறக்கணித்துப் பத்திரை செல்லுதல்
இடப்புற மரத்தில் ஆந்தை
எழப்பிய அலறல் கேட்டாள்
மடக்கொடி ஆடை முள்ளில்
மாட்டியே கிழியக் கண்டாள்
நடக்கையில் காட்டுப் பூனை
நடுவிலே போகக் கூந்தல்
தொடுத்தபூ தலையில் வாடத்
தளர்வுறு மனத்தாள் சென்றாள்
இடவல மாக மானும்
ஏகிடக் கண்ட யிர்த்தாள்
துடிவலக் கண்ணும் தீமை
சொல்வதை அறிந்தாள்.ஆங்கோர்
நெடுமரக் கிளைமு றிந்து
நீள்தரை வீழ அஞ்சி
நடுங்கியே துயரம் ஒன்று
நண்ணிடும் என்று ணர்ந்தாள்
(அயிர்த்தாள் – ஐயுற்றாள்)
ஓவியப் பூவின் உள்ளே
உறைந்திடும் தேனும் உண்டோ?
பாவியின் உடல்வ னப்பில்
பண்புதான் சிறப்ப துண்டோ?
சாவினைத் தருவ தற்குச்
சற்றுமே தயக்கம் இல்லான்
வாவென அழைக்க மங்கை
வல்விதி வழியில் சென்றாள்
(தொடரும்)
செம்மண் பூமி
மதிய நேரச் சூரியனின் உக்கிரத்தில் இன்னமும் கருங்கல்
தளங்கள் தகித்துக் கொண்டிருந்தன.சுற்றுலா வந்திருந்த குழு தம் காலணிகளை மிக அவசரமாக உதறியெறிந்து விட்டு பெரிய கதவிற்கு அப்பாலான தங்குமிடம் நோக்கி ஓடியது.
தன் காலணிகளைக் கழற்ற அவன் அதிக நேரம் எடுத்துக் கொண்டான். அதனால்,மறையும் வசந்த காலத்தின் பசுமையில், ஒற்றையாய் நின்ற மலர் போல மதிய சூரிய ஒளியில் அவள் காத்திருந்தாள். தன் வெற்றுப் பாதங்களுக்குள் கருங்கல் தளங்களின் சூடு ஊடுருவதை உணர்ந்து, நின்றிருந்தாள். குளுமையாக இருந்த தன் வெற்று பாதங்களை அந்தக் கொதிக்கும் கருங்கல் தளத்தின் ஓரம் முதலில் தொட்டபோது ஒருவித சிலிர்ப்பை அவளால் உணர முடிந்தது.அந்தச் சிலிர்ப்பே தாங்க முடியாத வலியைத் தர தன்னை அமைதியாக கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள். தனக்குள்ளாகவே மெதுவாகப் பேசிக் கொள்ளும் தன்னுடைய புதிய திறமையை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டாள். பஞ்சாக்னி தவம் செய்தவள் பார்வதி தேவி. மதிய சூரியன் கக்குகிற தகிப்பை ஒரு பதிவிரதை, கற்பான பெண் பொறுத்துக் கொள்ள மாட்டாளா?
ஒருவழியாகத் தன் காலணிகளைக் கழற்றிவிட்டு, முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டு வேகமாக அவளை நோக்கி வந்தான்.ஆனால் அவள் முன்னே போகவில்லை.
“வா,வா, பாதங்கள் எரிகின்றன.” தம் குழுவிலிருந்து தனியாகி விடக்கூடாது என்பதற்காக அவன் வேகமாகக் கோயிலுக்குள் நடந்தான்,அவள் இன்னமும் பின் தங்கி இருந்தாள்.வழிகாட்டியின் எதிரொலிக்கும் குரலை அவளால் கேட்க முடிந்தது.அவர் தோற்றத்திற்குப் பொருத்தமான ஒரு குரல்.
“தொலைவில் ,அந்த மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் தேவி தியானத்தில் அமர்ந்திருந்தாள். இங்கு, சுசீந்திரத்தில் இருந்து கடவுள் தேவியைப் பார்த்துப் பரவசமடைந்தார்.”
அவருடைய நெற்றியிலிருந்த சந்தனம் வியர்வையில் முழுமையாக அழிந்திருந்தது. கருங்கல் தளத்தில் ஓர் அரக்கனின் சிலையாகத் தூங்கிக் கொண்டிருந்த அவன் இப்போது உயிரோடு எழுந்து வந்து சுற்றுலாப் பயணிகளோடு சேர்ந்து கொண்டதாக அவள் கற்பனை செய்து கொண்டாள்.அவனுடைய கண்களின் சிவப்பு நரம்புகள் தெளிவாகத் தெரிய, பார்வை ஒவ்வொரு முகத்திலும் தாவ, நன்றாக தான் மனனம் செய்த வாக்கியங்களை வாய் ஒப்பித்தது.
அவள் பின்தங்கிய போது துணைவன் அவளைக் குழுவோடு சேர்ந்து கொள்ள வற்புறுத்தினான். பெரிய பலகையில் இருந்த எண்களைப் படித்து விட்டு குழந்தைக்குச் சொல்வது போல அவளுக்காக அதைத் திருப்பிச் சொன்னான்.
“கன்னிப் பெண்ணான தேவி திருமணம் செய்து கொண்டால் தன் தெய்வீக சக்தியை இழந்து விடுவாள் என்று கடவுளர்கள் நினைத்தனர். அந்தத் திருமணத்தை தடுத்து விடவேண்டுமென முடிவு செய்தனர்.”
வெற்றுக் கருங்கல் மாதிரியான வழிகாட்டியின் உடல் வியர்வையில் மினுமினுத்தது. குழந்தைப் பருவத்தில் தனது வீட்டுக்குப் பேயோட்ட வந்த மந்திரவாதியின் ஞாபகம் அவளுக்கு வந்தது.
எப்படி அவள் எதிர்வினையாற்றுகிறாள் என்பதைத் தன் கனமான கண்ணாடியினூடே அவன் கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த அவள், பலகையிலுள்ள பெயர்களை அடையாளம் காண முயல்வது போல நடித்துக் கொண்டிருந்தாள்.
“திருமண நிகழ்வுகள் விடியற்காலையில் நல்ல நேரத்தில் எப்படி நடைபெற வேண்டும் என்பது பற்றி முடிவு செய்தனர். அந்தக் கணம்தான் மிக நல்ல நேரம் என்பதில் பண்டிதர்கள் கவனமாக இருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில், மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தை அடைய மாப்பிள்ளை சிவன் புறப்பட்டார். அவர் வரும் வழியில் தேவேந்திரன் ஒரு சேவல் வடிவத்தில் வந்து நின்று கூவ ,மங்கலமான நேரம் முடிந்து விட்டதாக நினைத்து சிவன் ஏமாற்றத்தோடு திரும்பிப் போய்விட்டார்.”
“பிறகு தேவிக்கு என்ன ஆனது?”
அனைவரும் திரும்பி அவளைப் பார்த்தனர். தான்தான் அந்தக் கேள்வியைக் கேட்டோமா? அவள் ஆச்சர்யப்பட்டாள்.
“இங்கே பார்; இதைப் பார்.”
அவன் எப்போதெல்லாம் பொறுமையற்றுப் பேசுகிறானோ அப்போது அவன் உதட்டில் உமிழ்நீர் கொப்பளிக்கும்.
“பிறகு தேவிக்கு என்ன ஆனது?”
வழிகாட்டியின் சிவப்பு நரம்பு கண்கள் எல்லாரையும் பார்த்து விட்டு அவள் மேல் நிலைத்தன. ரத்தச் சிவப்புக் கண்கள் சிரித்தன.
“தேவி தன் கழுத்திலிருந்த கல்யாண மாலையை பிய்த்து துண்டுகளாக்கி எறிந்தாள்.பந்தலைச் சாய்த்து கீழே தள்ளினாள். திருமணத்திற்காகச் சமைக்கப்பட்ட விருந்துச் சாப்பாடு அவற்றில் கலந்து மூழ்கி மண்ணின் நிறத்தை மாற்றிவிட்டது. அப்போதிலிருந்து கன்னியாகுமரியின் மண் செந்நிறமாகி விட்டது.
“வா ,வா இங்கே.”
கையிலுள்ள கேமராவை திறந்து கொண்டு அவளைத் திரும்பவும் கூப்பிட்டான்.அவனுடைய பருத்த முகத்தில் வெளிப்பட்ட அசட்டுச் சிரிப்பு ரகசியமான ஓரிடத்திற்கு அவளை அழைப்பது போலிருந்தது.
“ இந்தப் பின்னணியில் நாம் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் வா. மிக நன்றாக இருக்கும்.அங்கே, அங்கேயே நில். லேசாக இடதுபுறம் நகரவேண்டும்.சரியாக இருக்கிறதா என்று நான் பார்க்கிறேன்.”
கூட்டம் நடன அரங்கத்திற்குள் போனது.வீட்டிலுள்ள அழகான பெண்கள் தாம் விரும்பும் ஒரு நிகழ்ச்சியை யார் கண்ணிலும் படாமல் பார்க்கிற வகையில் ஜன்னல்களின் அமைக்கப்பட்டிருப்பதை வழிகாட்டி பெரிய குரலில் விளக்கிக் கொண்டிருந்தார்.
“ஒரு முறை சிரி, தயவுசெய்து சிரி.”
சுற்றுலாப் பயணிகளின் தலைகளை மீறித் தெரிந்த சிவந்த கண்களை உடைய அரக்கனை அச்சத்தோடும், அதிசயமாகவும் பார்த்தாள்.
“ரெடி. ஒரு முறை. தயவுசெய்து சிரி.”
கேமராவின் க்ளிக் சப்தம் கேட்டு அவள் திரும்பினாள்.
அந்தப் பருத்த உதடுகள் நடுங்குவதையும், உதட்டோரத்தில் உமிழ்நீர் கொப்பளிப்பதையும் பார்த்தாள்.தன் கோபத்தை அடக்கிக் கொள்ளும் முயற்சியின் போது அவன் எப்போதும் இப்படித்தான் இருப்பான்.
அவள் அடக்கமுடியாமல் சிரித்தாள்.
“நீ அப்போது சிரிக்கவில்லை.எப்போதும் தவறான சந்தர்ப்பத்தில்தான் சிரிப்பாய்.”
அவள் நகர்ந்தாள். வாயில் கருங்கல் பந்தோடிருந்த கல் யானையோடு தானாகப் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். திரும்பவும் அவள் அடக்க முடியாமல் சிரித்தாள்.
பயணிகள் கூடினர்.சிலர் வழிகாட்டிக்குப் பணம் கொடுத்தனர்.
அவள் எதுவும் சொல்வதற்கு முன்பே “ இதற்காகப் பணம்! இந்த விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான்” என்றான்.
பஸ்சில் ஏறி வேகமாக ஓர் இருக்கையைப் பிடித்தான்.வேர்வையில் ஊறிக் கொண்டிருக்கும் அந்த பிரவுன் சட்டையின் மீது பட்டு விடாமல் காலியான இருக்கையின் பாதிப் பகுதியில் மிக கவனமாக உட்கார்ந்தாள்.
பஸ் நிரம்பியது.அவர்களுடைய முன்னாள் வழிகாட்டி ஏறிக் கொண்டு விசிலை ஊதினான்.இரும்புக் கம்பியைப் கெட்டியாக பிடித்தபடி அவர்களின் முன்னால் நின்றான்.அவளுடைய துணைவன் அவளைச் சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவன் போல “நீ நீக்ரோவைப் பற்றி கேள்வி மட்டுமே பட்டிருக்கிறாய்.இப்போது நீ ஒருவனைப் பார்க்கலாம்.”என்றான்.
ரத்தச் சிவப்பு நரம்பு படர்ந்திருந்த கண்களை அவளால் பார்க்க முடியவில்லை.அவன் தூரத்தில் எதையோ வெறித்துக் கொண்டிருந்தான்.
அவர்களின் முன்னாலிருந்த ஓர் இளைஞன் வாசித்துக் கொண்டிருந்த மவுத் ஆர்கனின் ஒலிக்கேற்றபடி அவள் கால்கள் தாளமிடுவதை அவள் துணைவன் கவனித்துக் கொண்டிருந்தான்.
கடலின் ஆரவாரம் ஓரளவு குறைந்த பிறகு “சோர்வாக இருக்கிறயா?” என்று கேட்டான்.
அவள் தலையாட்டினாள். ஆம் அல்லது இல்லை என்பதாக அதன் அர்த்தமிருக்கலாம்.
“எனக்கு எப்போதும் கடல் மிகவும் பிடிக்கும். விடுமுறையில் உன் அண்ணனுடன் நான் முதன்முதலில் உங்கள் வீட்டுக்கு வந்தபோது நாம் கடற்கரைக்குப் போயிருந்தோம்.உனக்கு ஞாபகமிருக்கிறதா?”
அவள் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
“உனக்கு எதுவும் ஞாபகமிருக்காது.நான் உன்னை முதன்முதலில் பார்த்தது கூட.”
அவள் புன்னகைக்க முயற்சித்தாள்.
“நாம் எல்லோரும் ஒன்றாகப் போனோம்.அப்போது நீ குழந்தையாக இருந்தாய். உனக்கு ஞாபகமிருக்காது.”
தொலைவில் கடந்து கொண்டிருந்த பனை மரங்களின் இலைகளைப் பார்த்தபடி மௌனமாக இருந்தாள்.
“நீ தரையில் புரளுமளவுக்கான பெரிய வெள்ளை நிற ஸ்கர்ட்டும், பச்சை நிற மேல்சட்டையும் அணிந்திருந்தாய். அது உனக்கு ஞாபகமிருக்காது. உன் அக்கா புடவை அணிந்திருந்ததும் உனக்கு ஞாபகமிருக்காது.”
எனக்கு ஞாபகமிருக்கிறது. அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு நீ அலைகளில் நடந்தாய். புகைப்படம் எடுத்துக் கொண்டாய். அவள் தலைமேல் தெறித்த அலைகளின் தண்ணீர்த் துளிகளைத் துடைத்தாய்.
“நீ கடலுக்குள் வரவேயில்லை.உனக்கு பயம்.”
நான் தென்னையின் நிழலில் உட்கார்ந்திருந்தேன்.
“ஸ்ரீராமன் ஒரு திருடன்” என விரல்களால் மண்ணின் மீது எழுதினேன்.அதைத் திரும்பத் திரும்ப எழுதினேன்.ஒரு பெரிய அலை வந்து அதை அழித்து, உங்கள் எல்லோரையும் விழுங்கி விடுமென நினைத்தேன்.
எந்த அலையும் வந்து அழிக்கவில்லை, நான் எழுதியது தங்கிவிட்டது.
தொலைவிலிருந்த கடலைப் பார்த்த அவன்“ஓ! எவ்வளவு அழகு!” என்றான்.
“யார்?என் அக்காவா?”
“என்ன— இல்லை,கடல்.”
சூரியாஸ்தமனம் பார்க்க சிறுசிறு குழுக்களாக வந்து, இங்குமங்கும் நின்றிருந்தவர்கள் அவர்களைக் கடந்து திரும்பிச் சென்றனர். அவர்கள் ஹோட்டலை அடைந்த போது அவனுக்கு மூச்சு வாங்கியது.
பெட்டிகளைத் தூக்க வந்த பையனிடம் அவன் சொன்ன விவரங்களில் அவள் கவனம் காட்டவில்லை. ஜன்னல் திரைச்சீலைகள் காற்றில் படபடத்து ஒதுங்க ,அவள் கடலைப் பார்த்தாள்.செம்பூமி.
“உன் அக்காவைப் பற்றிய தேவையற்ற கருத்துக்கள்..”அவர்கள் தனியாக இருந்தபோது அவன் கேட்டான்.
“நான் எதுவும் சொல்லவில்லை.’
“நீ எதுவும் சொல்ல மாட்டாய்.அதுதான் எனக்குப் பிரச்னை.”
அவன் முகம் ரத்தச் சிவப்பானது.வியர்வை வழிந்தது. அவள் பெட்டியைத் திறந்து மருந்து பாட்டிலை எடுத்தாள். மனதை அமைதிப்படுத்தும் இரண்டு மாத்திரைகளை நடுங்கும் அவன் கையில் கொடுத்தாள்.அவன் அதை விழுங்கி விட்டுச் சிறிது தண்ணீர் குடித்தான்.மூச்சுச் திணறல், அவன் படுத்துக் கொண்டான்.
புடவையை மாற்றிக் கொண்டு ,முகத்தில் பவுடர் போட்ட போது அவனுடைய களைத்த விழிகள் தன்னைக் கேள்வி கேட்பதை உணர்ந்தாள்.
“நான் சிறிது நடந்துவிட்டு வருகிறேன்.”
“ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.நான் சிறிது உலாவிவிட்டு வருகிறேன்” கதவருகே போய் நின்று கொண்டு திரும்பிப் பார்க்காமல் திரும்பவும் சொன்னாள்.
கடற்கரையை ஒட்டிய பாதையில் போடப்பட்டிருந்த பெஞ்சில் வழிகாட்டி தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். எதிரில் இன்னொரு பாதையிருந்த போதிலும் அவள் பெஞ்சை ஒட்டிய பாதையில் போனாள்.
நீக்ரோ திடீரென ஓர் அரக்கனைப் போல எழுந்தான், தலை வானத்தைத் தொடுவதாக இருந்தது. தன் கைகளைக் கூப்பி “நமஸ்காரம்’ என்றான்.
மிக ஏற்றமான குரல்; நாட்டுச் சரக்கின் வாசம்; சிவப்பு ஜூவாலையாகக் கண்கள்.அவனைச் சிறிதும் பொருட்படுத்தாமல், தன்னால் இயன்றவரை கவனமற்றவள் போல தலையை நிமிர்த்தி நடந்தாள்.
எதிரே மணல் மேடுகள் இருந்த பாதையின் முனையில் உட்கார்ந்தாள்.மேலே வானத்தில் செங்கீற்றுகள். கடற்கரையில் யாருமேயில்லை. எப்போதோ அங்கு போடப்பட்ட அந்தப் பந்தலைப் பற்றிக் கனவு கண்டாள்.
அலங்கரிக்கப்பட்டிருந்தவைகள் கிழிக்கப்பட்டு, நொறுக்கப்பட்ட நகைகள் தூக்கி எறியப்பட்டு, விருந்துணவு காலால் உதைத்துத் தள்ளப்பட்டு, தன்னைச் சுற்றி பூமியில் சிதறிக் கிடந்ததைப் பார்த்தாள்.
திரும்பிப் பார்க்க அவள் பயப்பட்டாள். ஹோட்டல் அறையில் தன் அறையின் ஜன்னலில் விளக்கு வெளிச்சம் இருக்கிறதா என்று அவள் அறிய வேண்டும். சிமிண்ட் பெஞ்சில் தியானத்தில் இருந்த அந்த குடி போதை அரக்கன் எழுந்து விட்டானா என்பது கூடப் பெரிதில்லை.
காலில் நற நறவென மண் மிதியுண்டது.அரக்கன் அருகே வர பீடி மூன்றாவது கண்ணாக ஒளிர்ந்தது. காலியான கடற்கரை அவன் காலடியில் நடுங்கியது.
அவனுக்குப் பின்னால் ,ஹோட்டல் அறையின் விளக்கு பிரகாசமாய்த் தெரிந்தது.அவள் தன் முழங்கைகளை செம்மண்ணிற்குள் அழுத்திக் கொண்டு தன் முகத்தை வானத்தை நோக்கி உயர்த்தினாள்.கனமான பாதங்களின் ஒலி அருகே அருகே வருவதை உன்னிப்பாகக் கவனித்தாள்.தன் சக்தி முழுவதையும் இழந்தவள் போல, கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தாள்,
————————————
நன்றி : : KUTTIEDATHI AND OTHER STORIES, ORIENT BLACK SWAN PVT LTD
மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளில்
ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதை,நாவல்,பயண்
இலக்கியம்,இலக்கியத் திறனாய்வு,குழந்தை இலக்கியம்
உள்ளிட்ட பல துறைகளில் பங்களிப்புச் செய்தவர்.திரைப்படத்
துறையிலும் சாதனை நிகழ்த்தியவர்.
மஞ்சு,காலம்,ரண்டாம் மொழம் ஆகியவை சிறந்த நாவல் வரிசையிலும்,
வானப்பிரஸ்தம்,ஓளவும் தீர்வும், பந்தனம்,குட்டியேடத்தி உள்ளிட்டவை
சிறுகதை வரிசையிலும் சிறப்பானவையாக மதிப்பிடப்படுகின்றன.
வயலார்,வள்ளத்தோள்,எழுத்தச்சன் விருதுகள்,மற்றும் சாகித்ய அகாதெமி,
ஞானபீடம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.
——————————–
இன்று வாசித்த புத்தகம் சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் என்ற புத்தகம். இந்த நாவல் பல சம்பவங்களின் கோர்வை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
இந்தச் சம்பவங்கள் வரம்பு மீறியவை. ஆனால் இந்த நாவலைப் படிப்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது. இந்த நாவலில் வருகிற கதாநாயகன் பெயர் என்ன என்று தெரியவில்லை. அவர் தானே முன்வந்து சொல்வதுதான் இந்த நாவல். நாவல் முழுவதும் ஒருவர் பேசுவதுபோல் ஆரம்பிக்கிறது. இந்த நாவலில் கதா மாந்தர்கள் தப்பாக நடக்கிறார்கள். அடிக்கடி குடிக்கிறார்கள். பெண்களுடன் தகாத உறவு வைத்துக்கொள்கிறார்கள். கதையில் ஒரு ஒழுங்கு என்று எதிர்பார்ப்போம். அந்த ஒழுங்கை இந்த நாவல் கட்டுடைக்கிறது.
சந்திரன் என்ற நண்பனுடன் ஏற்பட்ட நட்பைச் சுற்றி இந்த நாவல் வட்டமிடுகிறது.
சுந்தர் அண்ணா என்பவர், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத இந்த நாவலின் கதாநாயகனைப் பார்த்து, ஒரு மோசமான கண்டம் ஒன்று இப்போது உன் அமைப்பு படி உருவாகி இருக்கிறது. அந்தக் கண்டத்தைத் தாண்டி விட்டால் அதற்கடுத்து சக்ரவர்த்திக்கு நிகரானவனாக மாறிப் போவாய்ý என்கிறார்.
“என்னுடைய எண்ணங்கள்தான் என்னை வழி நடத்துகின்றன. என்னுடைய செயல்கள்தான் எல்லாவற்றுக்கும் காரணம்,” என்கிறான் கதைசொல்லி.
சந்திரன் காதலிதான் மாதங்கி. அவளைப் பற்றி ஒரு இடத்தில் கதைசொல்லி இப்படிக் கூறுகிறான். மாதங்கிதான் என் சிநேகிதி, அம்மா எல்லாம் என்று. கல்லூரி காலத்திலிருந்து கதைசொல்லியின் உணவு உடை சமாச்சாரங்கள் எல்லாம் மாதங்கி கவனித்துக் கொண்டிருக்கிறாள். சந்திரன்தான் அதை மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறான்.
இந்த நாவல் கல்லூரியில் படிப்பதில் சுழன்று வருகிறது. இளங்கலை படிப்போடு கதைசொல்லி தன் படிப்பை முடித்து விடுகிறான். மாதங்கி, சந்திரன் எல்லாம் முதுகலை படிப்பிற்குத் தயாராகிறார்கள். இவர்களுடைய இன்னொரு கல்லூரி நண்பர்கள்தான் கதைசொல்லியின் நண்பர்களாக மாறுகிறார்கள்.
இங்கே திவ்யா என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார் கதா ஆசிரியர். சந்திரனுடன் படித்த தோழிதான் திவ்யா. திவ்யாவிற்கும் கதைசொல்லிக்குமான உறவு ஒரு சாதாரண புள்ளியிலிருந்து ஆரம்பமாகிறது.
ஒரு ரெஸ்ட் ரூமில் திவ்யாவுடன் கதைசொல்லிக்கு இப்படி ஒரு அறிமுகம் நடக்கிறது. ‘இயல்பாக நெருங்கி வந்து என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். கை ஜோதிடம் பார்ப்பதுபோல என் உள்ளங்கைகளை அவளது விரல்களால் வருடிவிட்டாள். அவள் நெருங்கி வந்து என்னை மார்போடு ஒட்டி அணைத்து, என் உதட்டருகே அவளது உதடுகளைக் கொண்டுவந்து முத்தமிட்டுக் கொள்ளலாமா? என்றாள். நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தபோது அவள் என் உதடுகளைக் கவ்வினாள். நான் அவளது உடலெங்கும் என்னுடைய கைகளைக் கௌரவமாக நகர்த்தினேன்.’
சந்திரனும் கதைசொல்லியும் அடிக்கடி பேசிக்கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் ஒரு நிழல் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. திவ்யாவுடன் கதைசொல்லி பழகுவது சந்திரனுக்குத் தெரியாது, அதை அவன் விரும்ப மாட்டான் என்பதால்.
“உன் மாய உலகம் ஒருநாள் உன்னை அடித்து வெளியே துரத்தும்,” என்கிறான் சந்திரன் ஒருநாள். அவனுடைய வீட்டில் பணம் இருந்தாலும் விடாப்பிடியாக அதை உதறிவிட்டு வாழ்கிறவன்.
கதைசொல்லி கோபத்துடன், “உன்னுடைய வாழ்க்கை உனக்கு இப்படிச் சிந்திக்கச் சொல்லித் தந்திருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் உன்னுடைய நியாய தர்மங்களுக்கு வேலையே இல்லை,” என்கிறான் கதைசொல்லி.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சந்திரனும் கதைசொல்லியும் சந்தித்துக் கொள்வதைத் தவிர்க்கிறார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் சந்திரன் தவிர்த்துவிட்டான்.
கதைசொல்லியின் வறுமையைப் பற்றி இந்த நாவலில் பல இடங்களில் வெளிப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு குறிப்பு வருகிறது. படிக்கும்போது ரசிக்கும்படி இருக்கிறது.
‘கல்லூரியில் என்னை சந்திரன் முதன்முறையாகப் பார்த்தபோது என்னிடம் இரண்டு சட்டைகள், ஒரு பேண்ட் மட்டுமே இருந்தன. துவைத்து மாறி மாறிப் போட்டுக்கொள்வேன். என்னுடைய வகுப்பிலிருந்த பெண்பிள்ளைகள் கூட இதுபற்றி பலமுறை என்னிடம் விசாரித்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் காந்தியைப் பற்றிச் சொல்லித் தப்பித்துக் கொள்வேன். காந்தி எளிமையாக இருக்கச் சொன்னது மனதளவில் என்னைக் கவர்ந்துவிட்டது என்றும் அதனால்தான் விடாப்பிடியாக இந்தப் பழக்கத்தை நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்,’ என்று எல்லோரிடமும் தன் ஏழ்மையை மறைக்கச் சொல்லிக்கொண்டிருப்பான் கதைசொல்லி.
திவ்யா கதைசொல்லியைவிட இரண்டு வயது மூத்தவள். திருமணம் ஆனவள். கதைசொல்லியுடன் அவள் நெருங்கிப் பழகும்போது நல்ல மூடில் இருந்தால், சிலசமயம் மச்சான் என்பாள், சிலசமயம் பேபி என்பாள்.
இந் நாவலில் ஒவ்வொரு அத்தியாத்திலும் ஒவ்வொரு கதை வருகிறது. கதைசொல்லியைத் தெடார்புப்படுத்திதான். 12வது அத்தியாயத்தில் பாண்டியை அறிமுகப்படுத்துகிறார். இது தொடர்பாக எதாவது கதை இருக்கும். ரசித்துப் படிக்க முடியும்.
பதிமூன்றாவது அத்தியாயத்தில் பரசுராமன் என்கிற பிஆர்ரை அறிமுகப்படுத்துகிறார். அவருடன் ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தைக் கதைசொல்லி விவரிக்கிறார். அதேபோல் விக்னேஷ் என்ற சினிமா நடிகனைப் பற்றி தகவல்களைக் கொடுக்கிறார். சந்திரனின் தாய் மாமாவைப் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். தாய் மாமன் சந்திரனை விடக் கதைசொல்லியுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.
இந்த நாவலில் அங்கங்கே பல நிஜமாக நடந்த சம்பவங்களைப் புனைவாக மாற்றி எழுதியிருக்கிறார். ஆந்திராவில் ஒரு அரசியல் தலைவரின் ஹெலிகாப்டர் மரணம், ஒரு நடிகையைக் குளிக்கும்போது நிர்வாணமாகப் படம் எடுத்ததைப் பற்றி, போலி சித்த மருத்துவர்களைப் பற்றியும் வருகிறது. அதிகார மட்டத்திலிருக்கும் விஸ்வநாதனை யாரோ கொலை செய்து தஞ்சாவூரில் உள்ள கால்வாயொன்றில் போட்டுவிட்டார்கள். அவர் அதிகார மட்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர். அடவடியான காரியங்களுக்கு அந்தக பகுதியில் அறியப்பட்டவர். இந்தக் கொலைக்கான துப்பும் கிடைத்து விடுகிறது. இது ஒரு அத்தியாயம் முழுக்க வருகிறது.
ரோலக்ஸ் வாட்ச்சைப் பற்றிக் குறிப்புகள் 27வது அத்தியாயத்தில் வருகிறது. ரோலக்ஸ் வாட்ச் மாத்திரம் டுப்ளிக்கேட் கிடைக்காது. அதற்குக் காரணம் தொழில் சாம்ராஜ்யத்தில் உள்ள ஒரு தொழில் தர்மம்.
இந்த வாட்ச்சை விற்று வருகிற இலாபத்தில் தான தரும காரியங்கள் பலவற்றைச் செய்து வருகிறது இந்த நிறுவனம்.
மேரியட்டில் அறையெடுத்து திவ்யாவை வரச் சொல்லி அழைக்கிறான் கதைசொல்லி. அங்கே அவர்கள் இருவரின் லீலைகள் தொடர்கின்றன. நாம பிரிஞ்சுரலாமா? என்று கேட்கிறான் கதைசொல்லி. அவளும் சரி என்கிறாள். எப்படி இந்த உறவு தற்செயலாக ஆரம்பித்ததோ அதேபோல் பிரிவும் ஏற்பட்டுள்ளது என்று முடிகிறது கதை.
சந்திரனுக்கு பெல்ஸி பால்ஸி நோய். ஒவ்வொரு வருடமும் ஐம்பதாயிரம் அமெரிக்கர்களுக்கு இந்த நோய் வருமாம். முகத்தில் ஒரு பக்கம் மட்டும் இழுத்துக்கொண்டு விடுமாம். இதற்கு எந்த மருந்தும் கிடையாதாம். தானாகவே சரியாகப் போக வேண்டும். முகத்தில் பயிற்சிகள் செய்து வரவேண்டும். கதைசொல்லி உருகுகிறான். தனக்கு வரக்கூடாதா? ஏன் சந்திரனுக்கு வந்தது என்று. திவ்யாவுடன் ஏற்பட்ட உறவு துண்டித்துப்போனது பற்றி சந்திரனிடம் சொல்லவேண்டும். சுந்தர் அண்ணாவைப் பார்த்து தற்செயலானவன் என்று சொல்ல வேண்டுமென்று நினைக்கிறான் கதைசொல்லி.
156 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் ஆரம்பித்திலிருந்து முடியும் வரை கீழே வைக்க முடியவில்லை. விறுவிறுவென்று போகிறது. இன்னும் இவருடைய மற்ற நாவல்களையும் படிக்க வேண்டும்.
மலைசூழ்ந்த சிற்றூரின் பாதை ஒன்றில்
மழைக்கால மாலையிலே மெல்லென நடந்தேன்!
குளிர்காற்றுச் சில்லென்றுத் தழுவிச் செல்ல
கொடிகளிலே கொத்துமலர்க் கூட்டம் ஆட
வளமான நெல்வயலில் அலவன் ஓட
வாழைமரத் தோப்பினிலே இலைகள் அசைய
தொலைதூரத் தென்னையெலாம் தலையை ஆட்டும்
தூக்கணாங் குருவிகளோ தூளியில் ஆடும்!
துளிர்க்கின்ற ஆலிலைகள் பசுமை மின்னும்
தூரகன்ற மரக்கிளையில் விழுதுகள் பின்னும்!
ஒளிர்கின்ற மின்னலினை இடியும் தொடரும்
உருக்கொண்டு கருக்கொண்ட மேகம் படரும்!
துளித்துளியாய் மழைத்துளிகள் தூறல் போடும்
தூறல்மழை காற்றினிலே சாரல் ஆகும்!
விழுகின்ற துளிகளினால் மண்ணுடல் சிலிர்க்கும்
எழுகின்ற மண்வாசம் என்னுடல் சிலிர்க்கும்!
நெடுநெடுவென வந்தமழை நொடியில் முடியும்
நீர்மேகம் கலைந்ததுமே நிலவும் தோன்றும்!
தொடுவானில் காட்சியெலாம் துடியாய் மாறும்
தூக்கத்தில் கனவோயென மயக்கம் சேரும்!
படகெனவே முகிலிடையே பிறைமதி செல்லும்
பால்நிலவு ஒளியினிலே பலகதை சொல்லும்!
இடமுண்டோ எமக்குமென ஏங்கித் தயங்கும்
ஏழைகளாய் விண்மீன்கள் எட்டிப் பார்க்கும்!
கருமேக ஆடையிலே முகத்தை மூடி
காதலியின் விளையாட்டை நிலவும் ஆடும்!
இருவிழியைக் காந்தமென ஈர்க்கும் நிலவின்
எழிலினிலே நிலைமறந்து என்மனம் கூடும்!
கார்கால மழையும்ஓர் அழகின் வடிவம்
கண்கவரும் விண்மதியும் அழகின் உருவம்!
தேர்ந்திடுக ஒன்றையெனில் உடனே சொல்வேன்
தேடிவரும் மழைக்கால நிலவே அழகு!
நடுப்பக்கம் மோகன் இப்போது காணொளியில் கலக்குகிறார். அதுவும் குழந்தைகளுக்கென்று அருமையான தேவாரத் திருவாசகக் கதைகளை எளிமையாக சொல்லும் இவரது பாணி மிகவும் சிறப்பாக இருக்கிறது.
இன்னொரு தென்கச்சி உதயமாகிறார்!
கேட்டு மகிழுங்கள்!
குழந்தைகளைக் கேட்கச் சொல்லுங்கள்!
வெறிச்சோடிக் கிடக்கிறது
வெள்ளைச்சாமித் தாத்தா வீட்டுத் திண்ணை
இன்று பெளர்ணமி வெளிச்சம்
இருந்த போதும் வெறிச்சோடிக் கிடக்கிறது
எங்கே போனார்கள் எங்கள் சிறுவர்கள்
எங்கள் ஆரம்பப் பள்ளி நாட்களில்
நான்கடி அகலமும் ஏழடி நீளமுமான
அந்தத் திண்ணைதான்
எங்களின் ராசாங்க மேடை
திண்ணையின் கிழக்கு ஓரத்தில்
தலைவைத்துத் தூங்குவதற்காக
அமைக்கப்பட்டிருந்த திண்டுதான்
ராசாவுக்கான அரியணை
எங்கள் ராசா ராணி விளையாட்டில்
எப்போதும் வாத்தியார் மகன்தான் ராசா
கிழியாத சட்டை போட்டவன்தானே ராசாவாகலாம்.
அவனின் ஆணைகளின் படி
ராணி மட்டும் அடிக்கடி
மாற்றப்படுவார்கள்
ஒருநாள் ராசா தேவகியை
ராணியாகக் கட்டளையிட்டான்
எங்கள் தெருவின் தேவதைகளில்
ராணியாக நடிக்க மறுத்த
முதல் தேவதை அவள்தான்
அன்று தேவகியும் நானும்
புன்னகை பரிமாறிக்கொண்டதில்
பொறாமை கொண்ட ராசா
எங்களுக்கு விதித்த தண்டனை
இருவரும் விளையாட்டில் இருந்து
அன்று நீக்கப்பட்டோம்
அந்தப் பெளர்ணமி நாளில்தான்
அவள் எனக்கு முதன்முதலாய்
நிலவை ரசிக்கக் கற்றுக்கொடுத்தாள்
விளையாட்டு கலைந்து அனைவரும்
வீட்டிற்குச் சென்ற பிறகு
ராணியாக அரியணை ஏறினாள்
அவளருகே ராசாவாக நான்
இன்றும் பௌர்ணமிகள்
அவளையே நினைவுபடுத்துகின்றன
சில நாட்கள் முன்பு முகநூலில் பிரபல பாடகர் எம்.டி. ராமநாதனின் நினைவஞ்சலிக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. தலைப்பு இசையில் ஒரு கற்பு நிலை. எந்தச் சூழலிலும் தாம் கொண்டுள்ள பாணியைக் கைவிடமாட்டார் என்கிற அர்த்தத்தில் ஆனந்தி (கல்கியின் மகள்) எழுதியிருக்கிறார். ராமநாதனுடைய சவுக்கு கால பாணி (அதாவது கீழ் ஸ்தாயில் பாடுவது) வெகு பிரசித்தம்.
விஷயத்துக்கு வருகிறேன், ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் “”நான் பிற பாடகர்களின் கச்சேரிகளுக்குச் செல்வதில்லை, ஏனென்றால், மோசமாக பாடுவதைக் கேட்டால் “இதற்காகவா வந்தோம்’ என்ற நினைப்பு ஏற்படும். நன்றாகப் பாடுகிற வித்வானின் கச்சேரியைக் கேட்டால் “நம்மால் இதுபோல் பாட முடியாதே’ என்ற ஏக்கம் தோன்றும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதில் சரியா? தவறா? என்று தெரியாது. ஆனால் ஒரு பிரபல விமர்சகரிடம் கேட்டுப் பார்த்தேன், “”சக பாடகர்களின் கச்சேரிக்கு வருகிற வித்வான்கள் கம்மி, ஏனென்றால் அவர்களுக்கும் வேற வேலை இருக்கிறதே” என்றார்.
என் உறவினர் ஒருவரிடம் கேட்டபோது, “”அதுபோல் ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. சுதா ரகுநாதனின் கச்சேரிக்கு வந்த பாடகிகளைப் பார்த்திருக்கிறேன். ஏன், சஞ்சய் கச்சேரிக்கு அபிஷேக் ரகுராம் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.
அபிஷேக் ரகுராம் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர். தன்னுடைய பாடுந்தரத்தை மேம்படுத்துவதற்காக, பல கச்சேரிகளுக்குப் போகலாம். ஆனால் சஞ்சயின் சமகாலத்தவர் விஜய் சிவா, அவர் ஒரு முறை சஞ்சயின் கச்சேரியை பின் வரிசையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்ததைக் கவனித்தேன்.
ஆக பிற பாடகர்களின் கச்சேரிகளை மதிப்பவர்கள் இருக்கத் தானிருக்கிறார்கள். சரி எழுத்திலகில் எப்படி? எழுத்தாளர்கள் மற்றவர்கள் படைப்புகளைப் படிக்கிறார்களா? இரண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களைக் கவனிக்கலாம்.
ஒருவர் ஜெயகாந்தன். “”தான் எழுத வந்த காலத்தில் தமிழில் படிப்பதற்கு எதுவுமே இல்லை!” என்று பத்திரிகை பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் “”ஆனாலும் தமிழில் படிப்பதற்கு கதைகள் வேண்டுமல்லவா? அதனால்தான் நான் எழுதத் துவங்கினேன்!” என்று அசாத்தியத் துணிச்சலுடன் தெரிவித்தார்.
உண்மை, ஜெகா.வின் ஆரம்ப காலச் சிறுகதைகள் ஒரு புதிய பாதையைத் திறந்து வைத்ததென்றால், நவீனங்கள் முற்றிலும் வித்தியாசமானவை.
ஜெ.கா.வுக்கு மாறுபட்டவர் அசோகமித்திரன். தான் எளிமையான நடையில் எழுதத் தூண்டுகோலாக இருந்தவர்களாக, இரண்டு பேரை குறிப்பிட்டுள்ளார். ஒருவர் உ.வே.சா. (என் சரித்திரம்) மற்றவர் கல்கி (தியாக பூமி). அவர்களுடைய நடையின் எளிமை என்னை மிகவும் கவர்ந்தன. அதுமட்டுமின்றி பல்வேறு எழுத்தாளர்களைப் படித்துச் சிறு குறிப்பு எழுதியிருக்கிறார் (நடைவெளிப் பயணம்). இப்போதைய பிரபலங்களான ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோரின் படைப்புகளை வாசித்துப் பாராட்டியிருக்கிறார்.
நெல்லை மாவட்ட எழுத்தாளர்கள் பலருமே நிறைய படிப்பவர்கள். “எல்லோருக்கும் அன்புடன்’ என்ற கடிதத் தொகுப்பை (வண்ணதாசன்) படிக்க நேர்ந்தது, பல சமகால எழுத்தாளர்களை, மனமுவந்து பாராட்டியிருக்கிறார். இதே போலத்தான் வண்ணநிலவனும்.
நாஞ்சில் நாடனும் இவர்கள் போலத்தான். ஆனாலும் இவருக்கு அனுபவம் கூட, பணி நிமித்தமாக மும்பையில் தங்கியிருக்கிறார். பல்வேறு மாறுபட்ட மனிதர்களிடம் பழகியதால், புதுமையான பகைப் புலனில் நாவல் எழுதியுள்ளார். ஆனால் இங்கு சொல்ல வந்த விஷயம் வேறு:- “”எல்லோரா, அஜந்தா மற்றும் மகராஷ்டிராவின் உள்பகுதிகளைப் பார்த்திருக்கிறேன். சாண்டில்யனை பொதுவாக விரசமான விறுவிறுப்பாக எழுதுகிறார் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அவருடைய நாவல் ஒன்றை (யவன ராணி) படித்ததும், அவருடைய ஆராய்ச்சியின் தீவிரம் தெரிந்தது.”
வலியுறுத்தப்பட வேண்டிய அம்சம் என்னவெனில், விருது வாங்கின நா.ரா. பத்திரிகை எழுத்தாளரான சாண்டில்யனை படித்திருக்கிறார்.
ஆக, பிற எழுத்துக்களைப் படிப்பதால் ரசித்து மகிழ்வதால் ஒரு படைப்பாளியின் நடை மாறிவிடாது என்பதே. இலக்கியத்துக்கு பொருந்துவது, இசைக்கும் பொருந்தும்தானே?
நாஞ்சில் நாடன் போல வேறொரு எழுத்தாளர் சிறிலங்காவைச் சார்ந்த அ. முத்துலிங்கம், அற்புதமான எழுத்தாளர், கட்டுரையாகட்டும், கதையாகட்டும் மேம்போக்காக எழுதினதே இல்லை. தம் நூலின் முன்னுரையில் பாலகுமாரன், சுஜாதா போன்றோரைக் குறிப்பிட்டிருக்கிறார். கல்கியின் “பொன்னியின் செல்வன்’ முத்துலிங்கத்தை ஈர்த்த நவீனம். (தம் கதைகளில் பல உபமான – உபமேயங்களில், கல்கியின் பாத்திரங்களை மேற்கோளிட்டிருக்கிறார்.
இந்த இடத்தில் நவீன விருட்சம் என்ற காலாண்டு இலக்கிய இதழை விடாப்பிடியாகக் கொண்டு வரும் அழகிய சிங்கரைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லத்தான் வேண்டும். நல்ல படிப்பாளி, பலருடைய கதைகளையும், நவீனங்களையும் (அயல் நாட்டு இலக்கியம் உள்பட) படித்து அவ்வப்போது, தமது ஏட்டில் எழுதி வருகிறார். தாம் வாங்கிப் படித்த நூல்களுக்காக தனி இடமே ஒதுக்கியிருக்கிறார் என்று அறிந்தேன். (புரவலர்கள் இல்லாது போனாலும், நல்ல வித்வான்களை ஊக்குவிக்கும் சபா காரியதரிசிதான் ஞாபகம் வந்தது!)
எழுத்தாளர், பத்திரிகையாளர், ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் என்று பல முகங்களைக் கொண்ட மாலன் நிறைய படித்தவர். மணிக்கொடி எழுத்தாளர்களிலிருந்து கலாப்ரியா வரை — ஏன் பிரபல இதழ்களில் வரும் கதைகள் உட்பட — பல்வேறு படைப்புகளைப் படித்து ரசித்தவர். கொஞ்ச மாதம் முன்பு கூட சாலமான் பாப்பையாவின் “புறநானுறு – புதுப்பார்வை’ (தலைப்பில் தவறு இருக்கலாம்) பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதனால் அவர் எழுத்துநடை பாதிப்பு அடைந்ததா? நிச்சயமாக இல்லை, சற்றே ஜானகிராமனின் சாயல் நடையில் அங்கங்கே தட்டுப்படும் – அவ்வளவே.
எஸ்.ஏ.பி.யின் வாசிப்புலகம் மிக விரிவானது. மணிக்கொடி எழுத்தாளர்களில் தொடங்கி – கல்கி, தேவன், எஸ்.வி.வி. போன்றோரில் நின்று, பின்னர் நீல. பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன் என்று பலருடைய எழுத்துக்களை வாசித்திருக்கிறார். அரசு பதிலில் அவர் குறிப்பிடாத எழுத்தாளர்கள் கம்மி. கணையாழியில் ஜெயந்தனின் நாடகங்களை படித்துத் தம் பத்திரிகையில் சிறப்பிதழில் பிரசுரித்தார். கௌரிஷங்கரின் சிறுகதைத் தொகுப்பு பற்றி (ஆயிரம் யானைகள்) அரசு பதிலில் இரண்டு வரி குறிப்பிட்டுள்ளார். கல்லூரி நாளிலிருந்து இலக்கியத்தைப் படித்து ரசிக்கும் தன்மை அவர் ரத்தத்தில் ஊறியிருக்கிறது.
எஸ்.ஏ.பி. போல இசையுலகில் டாக்டர் எஸ். ராமநாதனைக் குறிப்பிட்டாக வேண்டும். சங்கீத கலாநிதி பட்டம் பெற்றவர். “”மியூசிக் அகாடமியில் முன் வரிசையில் அமர்ந்து கச்சேரிகளை ரசிப்பார். பாடகர்களை உற்சாகப்படுத்தவும் செய்வார்” என்று பல கலைஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில ஆண்டுகள் முன் சங்கீத கலாநிதி விருது பெற்ற சௌம்யா இவரது முதன்மை சீடர்.
தம்மிடம் உள்ள ஞானத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த இவர், தன்னுடைய 71 வயதில் காலமானார். எழுத்தாளரும், வீணை வித்வானுமான கீதா பென்னட் ராமநாதனின் பெண். (பென்னட்டிடம் மேற்கத்திய இசையைக்கூட பயின்றிருக்கிறார்.)
தற்போது எழுதி வருகிற எழுத்தாளர்கள் நிறையவே படிக்கிறார்கள். மனம் திறந்து முகநூலில் பாராட்டுகிறார்கள். ஜெ. பாஸ்கரன், சிந்துஜா, உஷா தீபன் என்று பட்டியல் நீளும்.
கடைசியாக, மனத்திலுள்ள ஒரு குறையை கொட்டித் தீர்க்க வேண்டும் போலத் தோன்றுகிறது. கலை உலகில் போட்டியும், பொறாமையும் சகஜம்தான் என்றாலும் அதையும் மீறி பழைய இசைக் கலைஞர்கள் நினைவு தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அவ்வளவாகக் கேள்விப்பட்டே இராத மணக்கால் ரங்கராஜனைப் பற்றின (100வது ஆண்டு அஞ்சலி) கட்டுரை பிரபல இதழில் வெளியாகியது. ஓர் ஆவணப் படம்கூட இவரைப் பற்றி எடுத்திருப்பதாக ஞாபகம்.
ஆனால், பத்திரிகை உலகம்? இலக்கிய வட்டம்? பிரபலமான பத்திரிகைகளில் எழுதிப் புகழ் பெற்றிருந்தால் – அவரை ஒதுக்கியே விடுகிறார்கள். ஓர் உதாரணம்: லக்ஷ்மி, பிரபலமான எழுத்தாளர். சாகித்ய அகாடமி பரிசும் பெற்றவர். ஒரு பிரபல வார ஏட்டுக்கு அவராலேயே தொடர்கதைகளுக்கு அந்தஸ்து கிடைத்தது. “கலப்பு மணம்’ தீய செயல்களில் ஈடுபட்ட கணவனை ஒரு உத்வேகத்தில் கொலை புரிவது, இளையாளாக வாழ்க்கைப்பட்டவளின் மனச் சபலங்கள் – போன்றவற்றை 1950களிலேயே எழுதியிருக்கிறார். ஆனால் (அவருடைய நூற்றாண்டில் (2020) குறிப்பிட்ட பத்திரிகைகூட கண்டு கொள்ளவேயில்லை! ஒரு வரிகூட லக்ஷ்மியை பற்றி வரவில்லை!
இனிவரும் காலங்களிலாவது இலக்கிய உலகில் இந்த ஓரம் சார்ந்த மனப்பான்மை மாறும் என்று நம்புவோமாக.
மல்லிகா வேகமாக எழுந்து மணி பார்த்தாள். ஆறு அடித்து ஐந்து நிமிடங்கள் ஆகி விட்டது. ஐயோ, சீக்கிரம் போகாவிட்டால், அந்த கழனி அதிகாரி கிட்ட வசவு வாங்கணுமே என்று வேக வேகமாக புடவையை சரி செய்து கொண்டு தலை முடியை அள்ளி கொண்டையாகப் போட்டுக் கொண்டாள். அவள் கணவன் சண்முகம் குடித்து விட்டு வந்து குப்புறப் படுத்திருந்தான். வெறுப்பும், சலிப்புமாக வந்தது மல்லிகாவிற்கு.
“மணி, எழுந்திருடா” என்று மகனை எழுப்பினாள். “ என்னம்மா, இவ்வளவு சீக்கிரம், எங்க கிளம்பிட்ட ? ‘ என்றான்.
“ஆமாண்டா, கழனி ஐயா வேல்சாமி கூப்பிட்டுருக்காரு. இன்னிக்கு முழுசும் வேல இருக்காம், அதான் கிளம்பிட்டேன். சட்டியில பழைய சோறு இருக்கு, சாப்பிட்டு ஸ்கூல் கிளம்பு, நான் வாரேன் என்று சொல்லி விட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் வேக வேகமாக நடையைப் போட்டாள்.
அங்கு கழனியில் எல்லோரும் மும்முரமாக வேலை செய்யத் துவங்கிவிட்டனர். அவளும், “ஐயா, நான் மல்லிகா வந்திருக்கேன்” என்று சொல்லி வேல்சாமி முன் போய் நின்றாள்.
“சரி, சரி, வேகமா வேலையப் பாரு போ” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். மல்லிகாவும் தன் தோழி செல்வியைத் தேடினாள். அவளும் மல்லிகாவைப் பார்த்து, “வா மல்லிகா, நான்தான் ஐயா கிட்ட சொல்லி உன்ன கூப்பிடச் சொன்னேன். சீக்கிரம் களையெடுக்க ஆரம்பி, மதியத்துக்கு மேல மத்த வேலைய பாக்கலாம் “ என்றாள். இருவரும் பேசிக் கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தனர். செல்வி தான் கொண்டு வந்த கஞ்சியை மல்லிகாவிற்குக் கொடுத்தாள். அதைக் குடித்தவுடன்தான் மல்லிகாவிற்கு தெம்பே வந்தது.
பிறகு இருவரும் ஒரு மணி வரைக்கும் வேலை செய்து விட்டு , பின் தாங்கள் கொண்டு வந்திருந்த பழைய சோற்றை சாப்பிட்டு விட்டு வேலையைத் தொடர்ந்தனர். மல்லிகாதான் ஆரம்பித்தாள் : “என்ன செல்வி பண்ணறது, தினம் குடித்துவிட்டு வந்து விழுந்து கிடக்கு சண்முகம் . ஒரு பைசா வீட்டுக்குக் கொடுக்கறதில்ல, மணிப்பய வேறு பள்ளிக்கூடத்துக்கு போகுதே தவிர ஒழுங்கா படிக்க மாட்டேங்குது. அங்கு சோறு போடறாங்க , அதுக்காக அவன் ஒழுங்கா போறான். போகட்டும், அதுக்காவது ஒரு வேளை சோறு ஒழுங்கா கிடைக்குதேன்னு நானும் சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்”. என்று செல்வியிடம் புலம்பித் தீர்த்தாள்.
“விடு மல்லிகா, இந்த வேல்சாமி ஐயா மிகவும் நல்ல மாதிரி. வாரத்தில ஒரு அஞ்சு நாள் நாம நல்லா வேல செஞ்சோம்னா, நல்லா காசு தரேன்னு சொல்லியிருக்காரு. நீ கவலைப்படாதே. சுடு சோறே ஆக்கி சாப்பிடலாம், பேசாம வேலையப் பாரு” என்றாள் செல்வி.
மாலை மணி ஐந்தரை. இருவரும் வேலைய முடித்து விட்டு ஐயாவின் முன் போய் நின்றார்கள்.
அவரும் கழனியை நன்றாகப் பார்த்து விட்டு, “ம்…. நல்லாத்தான் செஞ்சு இருக்கீங்க… களையை எல்லாம் பிடுங்கி பாத்தி கட்டி, வரப்பு பக்கம் சுத்தம் பண்ணி , நல்ல வேலை திருத்தமா இருக்கு” என்று சொல்லி ஆளுக்கு ஒரு நூறு ரூபாயை கொடுத்தார்.
“ ஐயா, ஒரு இருபது ரூபா சேர்த்து கொடுங்க ஐயா, வீட்டில ஒரு சாமான் கூட இல்ல” என்றாள் மல்லிகா.
“சரி… சரி… இந்தா பிடி” என்று ஒரு இருபது ரூபாய்த் தாளை இருவருக்கும் கொடுத்தார்.
இருவரும் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பினர்.
மணி ஆறு இருக்கும். போகும் வழியில் மக்கள் கூட்டம். எல்லோரும் மைதானத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தனர்.
“எல்லோரும் எங்கே போறீங்க ?” என்று கேட்டாள் மல்லிகா.
“ அதுவா…. நம்ம ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருக்கிறாராம். அவர் ரொம்ப நல்லா பேசுவாராம். அதான் எல்லோரும் போறாங்க” என்று சொல்லிக் கொண்டே சென்றாள் ஒரு வயதான பெண்மணி.
மல்லிகாவுக்கும், செல்விக்கும் ஆசை வந்தது. நாமும் தான் போய்ப் பார்ப்போமே என்று இருவரும் வேகமாக மைதானத்தை நோக்கி நடை போட்டனர்.
ஒல்லியாக, உயரமாக, சிவப்பாக, நீண்ட தாடியுடன், நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி பூசிக் கொண்டு, வெள்ளை வெளேரென்று அங்கியும், மேல் துண்டும் அணிந்து கொண்டு மிகவும் களையாக இருந்தார் அந்த சாமியார். அவரைப் பார்த்தாலே, கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் அளவிற்கு அவர் முகத்தில் பொலிவு.
அவர் பேசிக் கொண்டே போனார். “ ஒரு மனிதனுக்கு அன்பும், அமைதியும், இன்பமும் எதில் கிடைக்கிறது ? அவனுடைய செயல்களினால்தான். அவன் மனம் பண்பாட்டால், நல்ல செயல்களை அவனால் செய்ய முடியும். உதாரணத்திற்கு, ஒரு கல் வழியில் கிடக்கும் போது, எல்லோரும் அதை அலட்சியப்படுத்துவார்கள். அதில் இடறினால், கல் குத்திவிட்டது என்று சொல்லி அதை அப்புறப்படுத்துவார்கள். அதே கல் சிற்பியின் கை வண்ணத்தில் ஒரு தெய்வச் சிலையாக மாறும் போது, அதை கோவிலில் வைத்து பூஜிப்பார்கள். நம் மனமும் அத்தகையதுதான். நம் மனதில் நல்ல சிந்தனைகளை வளர்த்தால், நாம் நல்லதே செய்ய ஆரம்பிப்போம். என் தகப்பனார் அடிக்கடி சொல்வார்,: படிப்பில் உனக்கு மேலிருப்பவனைப் பார், அவனைப் போல் படிக்க வேண்டும் என்று ஆசைப்படு. பணத்தில், உனக்கு கீழ் இருப்பவனைப் பார். நாம் நன்றாக இருக்கிறோம், இவர்களைப் போல் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும்.”
“ அதையேதான் நான் இப்போது உங்களுக்கு கூறுகிறேன். பிறருக்கு உதவி செய்தால், அதில் கிடைக்கும் இன்பம், நிம்மதி….. அதை அனுபவித்தால்தான் தெரியும்”. என்று மேலும் மேலும் ஏதோ சொல்லிக் கொண்டே இருந்தார் அந்த சாமியார்.
எல்லோரும் அமைதியாக அவர் சொல்வதையே கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது மல்லிகாவிற்கு. அவளுக்கும் ஏதோ கொஞ்சம் புரிந்தாற்போல இருந்தது. என்றுமில்லாமல் அவள் மனதில் ஒரு அமைதி நிலவியது. செல்வியிடம் விடை பெற்றுக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வழக்கம் போல் அவள் வீட்டுத் தெருக்கோடியில் அந்த காலில்லாத பிச்சைக்காரர் படுத்துக் கொண்டிருந்தார். கொஞ்சமும் தாமதிக்காமல், அவர் அருகில் சென்று ஐயா கொடுத்த அந்த எக்ஸ்ட்ரா இருபது ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தாள் மல்லிகா.
அவர் இவளை ஆச்சர்யமாகப் பார்த்து, “ நீ நல்லா இருக்கனும்மா..”.. என்று வாழ்த்தி வாங்கிக் கொண்டார்.
மல்லிகா வீட்டை நெருங்கும்போது அவள் நடையில், ஒரு கம்பீரம், நம்பிக்கை தெளிவாய்த் தெரிந்தது.
வண்ணத்தில் தானே இருக்கும், பலவித
வண்ணங்கள் கண்ணைக் கவரும்
விதமாக வளைய வரும் தினமும்
அட
நான் இன்று பார்த்தது
நிறமற்ற வண்ணத்துப் பூச்சி
கருப்பு வெளுப்பில் எப்படி ?
தெரியாமல் துணுக்குற்றேன்
சில மணிநேர சிந்தனைக்கு பின்னே
கருப்பும் வெளுப்பும்
இரு வண்ணம்தானே
மனது சமரசமானது
கவிச்சக்ரவர்த்தியிடம் இல்லாத உவமைகளா? அவன் எண்ணிய உவமைகளும், அதற்கேற்ற சொற்களும் அவனையே நாடி வரும். இதைக் கம்பன் காதையைப் புரட்டுவோருக்கு நிதர்சனம். இந்தவித ஒப்பற்ற நிலையில் இக்கவிஞனின் சொற்சக்தியிருக்க, அவனும் ஓரு பரவச நிலை எய்தியதால், உவமைகளை எல்லாம் மீறிய, உவமைகளால் உணர்த்த இயலாத வேறு ஏதோ ஒன்று அவனுக்கும் தேவைப் பட்டு விடுகிறது.
பாடல் இதோ:
வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியன் மறைய,
பொய்யோ எனும் இடையாளொடும்
இளையானொடும் போனான் –
மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்
அழியா அழகு உடையான்
முதல் நான்கு வரிகளில் மூவராகிய ராமர், சீதை மற்றும் இலக்குவனும் சென்று கொண்டிருப்பதைக் கூறுகிறான் கவி.
அடுத்து இராமனை வர்ணிக்க முற்படும் கம்பன், கரிய மையையே ஒரு புறம் உவமையாக எண்ணுகிறான். அல்லவே. இது பிசின் போல ஒட்டும் தன்மை பெற்றதன்றோ. கரிய நிற உவமை சரிதான். ஆனால் ராமன் அதையும் மீறிய ஒன்றாக அல்லவா திகழ்கிறான். இல்லை மேதகு மரகதமா? இதுவும் அல்லவே! ஏனெனில் இது கல்லாய் இறுகிப் போயிருக்கும் தன்மையுடையதல்லாவா! ராமன் இளகிய கருணையின் வடிவாயிற்றே. மடங்கி மடங்கி திரும்பத் திரும்ப சதா எழுந்து கொண்டிருக்கும் அலையைப் போன்றவனா? இந்த ஒப்பீடும் கம்பனின் உள்மனதிற்கு ஒரு நிறைவைத் தருவதாக இல்லை போலும். அடுத்து மழை முகில். இது சரியாக இருப்பினும் கம்பனுக்குத் திருப்தியளிக்கவில்லை. கிட்டத்தட்ட “சீத்தலை சாத்தனாரின்” நிலைதான்!
இவ்வளவு பெரிய, அரிதினும் அரிதான காப்பியத்தையே படைத்த கம்பனுக்கே இந்த நிலை! ஆம் “உவமையற்ற” நிலை! இறுதியில் அவனது இயலாமையை, ஆற்றாமையை கம்பன் கீழுள்ள இருவரிகளில் நம்முன் வைக்கிறான்:
“ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்
அழியா அழகு உடையான்”
கம்பன் இவ்வாறே இந்தப் பாடலை நிறைவு செய்ய வேண்டியதாய் போகிறது. வேறு வழியில்லையோ? இதில் மற்றொன்று– வழக்கமாகத் தேர்ந்த செவ்விலக்கியங்களில், “ஐயோ” என்று பொதுவாக நாம் அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் சொல் தவிர்க்கப்படுவது இயல்பு. பண்டுதொட்டு “இன்று” வரை அதுவே அனுசரிக்கப்பட்டு வரும் முறையும் கூட. ஆனால் கவிச்சக்ரவர்த்தியோ ராமனின் வடிவை, அழியா அழகுடையவனை வர்ணிக்க தன்னிடம் வார்த்தைகளே இல்லாத பட்சத்தில், “ஐயோ” இப்படியாகி விட்டதே! யான் சொல்வன்மை அற்றவனாகி விட்டேனே எனும்படி, பாடி முடிக்கிறான் இப்பாடலை.
அடுத்த நாம் எடுத்துக் கொள்வது இரண்டு பாடல்களை:
அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள்:
அழுதாள்; தொழுதாள்; அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள்;
கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;
துடித்தாள் மின்போல்; உயிர் கரப்பச்
சோர்ந்தாள்; சுழன்றாள்; துள்ளினாள்;
குடித்தாள் துயரை, உயிரோடும்
குழைத்தாள்; உழைத்தாள், — குயில் அன்னாள்.
விழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும்
வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;
எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை
நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;
“கொழுந்தா” என்றாள்; “அயோத்தியர்தம்
கோவே” என்றாள்; “எவ் வுலகும்
தொழும் தாள் அரசேயோ!” என்றாள்;
சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்.
என்ன இது! மூச்சு விடாமல் நம்மைப் படிக்கச் சொல்கிறது! அது தான் கம்பனின் மகிமை! எங்கோ படித்த வண்ணதாசனின் வரிகள் “அடிச்சா வெயில் இல்லைன்னா மழை” என்பது தான் சட்டென்று நினைவிற்கு வந்தது.
முன் சொன்ன உதாரணத்தில் கம்பன் சொற்களுக்காக ஏங்கித் தவித்த காட்சி. ஆனால் இங்கு வந்திருக்கும் இரண்டு பாடல்களிலோ, சரஸ்வதி அவர் நாவில் அமர்ந்திருந்து, அதனை இயக்கியதைப் போன்ற உணர்வை நம்முள் ஏற்படச் செய்கிறது!
முதல் பாடலில் அதாவது “அடித்தாள் முலைமேல்……” என்பதில் சில இடங்களில் சந்தேகம் வரலாம். “அடித்தாள் முலைமேல்” எனுங்கால் மார்பில் அடித்துக் கொண்டாள் என்று அர்த்தம் செய்து கொள்ளலாம். “வயிறு அலைத்தாள்” இதுவும் வயிற்றில் அடித்துக் கொண்டாள் என்று பொருள் கொள்க. “அனல் வீழ்ந்த….” — நெருப்பில் வீழ்ந்த கொடி ஒன்றைப் போல் சுருண்டாள். “உயிர் கரப்பச் சோர்ந்தாள்” என்றால் மின்வெட்டுப்போல ஒரு நிமிடம் வந்த உயிர் மறுபடி எங்கோ போய் ஒளிந்து கொண்ட நிலமை உடையதைப் போல் சோர்ந்தாள். (கரப்ப- ஒளிந்து கொள்ள). அதற்கடுத்து வரும் சொற்களைப் பற்றிய விவரணை ஏதும் தேவை இருக்காது.
பிரம்மாத்திரத்தின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மயக்கமான நிலையில் இருக்கும் இராமன் இலக்குவன் ஆகிய இருவருமே, மாண்டே விட்டார்களென்ற ஒரு புனைவை சீதைக்கு உண்டாக்குகிறான் இராவணன். சீதையும் அதை மெய்யென நம்பியவளாய்த் துன்புற்று ஏங்குகிறாள். அவளது இந்நிலையை, அவளுள்ளும், (ஏன் நம்முள்ளும்!) எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைத் தனியாக சொற்களின் மூலம் “சொல்லிச் செல்லும்” ஆற்றல் மட்டுமேயன்றி, ஒன்றுக்கொன்று தொடர்புடைய இயைபான சொற்களையும், ஒரு சொல்மாலை போல நமக்களிப்பதிலும் வல்லவனே கம்பன், என்பதை நிரூபிப்பதே இப்பாடலின் வல்லமை.
ஏற்ற இரக்கங்களோடு தக்க இடைவெளிகளுடன் இப்பாடலை உரக்கப் படிக்கக் கேட்டால் (யார் படிப்பது – சிவாஜி கணேசனைத் தவிர யாருமே இல்லையோ?) அந்த “வாசகத்துக்கு” உருகியதைப் போல் இங்கேயும் உருகிவிடக்கூடும்.
இப்பாடலின் பாடுபொருள் சோகம். இதனையும் எவ்வாறு அதன் உச்சகட்டத்துக்கு இட்டுச் சென்றிருக்கிறார் கம்பன். கம்பனின் இந்த வார்த்தைகளில் சலிப்பிருக்கிறது, கசப்பிருக்கிறது, கையறு நிலை தென்படுகிறது, துயர நினைவுகள் நிரம்பி வழிகின்றன, துக்கம் கரை புரண்டு வெளிப்படுகிறது, நினைந்து நினைந்து நையக்கூடிய நிலையில் சீதை (கம்பன்)
பேரிழவு (என்று சீதை கருதியது) ஒன்று நேர்ந்திருக்கிறது. இவ்வேளையில் மனம் எப்படி இருக்கும். அறிவுதான் செயலாற்றுமா? ஐம்பொறியும், ஐம்புலனும் முடங்கிப் போய் இருக்காதா? இது தன் வாழ்வில் ஒரு கொடிய தருணமல்லவா? அண்ணலும் நோக்கினான் அதே நோக்கிலல்லவா அவளும் பார்த்தது. இத்தகைய உற்ற துணை இல்லை என்றாகிவிட்டது, என்ற இராவணனின் கூற்றை நம்பிய சீதையின் அளவற்ற சோகத்தை, மொழியின், சொற்களின் பரந்த கடலெனக் கொள்ளக்கூடிய ஒன்றில் பயணித்து, அதில் இருக்கும் வரம்பு நிலையை எட்டி, நமக்கு அருட்கொடையை கொடுத்திருக்கிறான் கம்பன். சோக கீதம் தான்! ஆனால் எத்தகைய சோக கீதம் இது!
நன்றி: முனைவர் சுசீலா
சென்னைக்கு அருகில் பனையூரில் ஒரு சிறிய இட்லி கடையில் மக்கள் வந்த வண்ணமாக இருந்தனர். முனுசாமியும், குப்பமாளும் கஸ்டமர்களுக்குச் சுடச் சுட மெத்தென்ற இட்லியை காரசாரமான தேங்காய் சட்னி, மணமணக்கும் வெங்காய சாம்பாருடன் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
டீயும் பன்னும் சாப்பிட வந்தவர்கள் கூட ஆவி பறக்கும் இட்லியைப் பார்த்து மனசு மாறி இட்லியை ருசிக்க ஆரம்பித்தனர். அதோடு ஸ்ட்ராங் காப்பியும், ஏலக்காய் டீயும் அவர்களை ஸ்வர்க்கத்திற்கே அழைத்துச் சென்றன.
சுடச் சுட இட்லியுடன் அன்றைய செய்தித்தாள், முனுசாமி குப்பமாள் சொல்லும் விவரங்கள் இது போதாதா காலை மலர! அதோடு அவர்கள் உபசரிக்கும் பாங்கே தனி அழகு.
‘வாப்பா சந்துரு, நேற்று தலைவலி என்று சொன்னாயே, இப்ப எப்படி இருக்கு. சுடச் சுட இட்லியும், சூடான சுக்குக் காபியும் குடி. வயிறு ரொம்பினால் எல்லாம் சரியாகப் போகும். ஜப்பானில் இந்த சுக்குக் காப்பி மிகவும் பிரசித்தம்’ என்று அம்மாவைப் போல வயிற்றைக் கவனிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
எல்லோரையும் உறவுகளாகச் சொல்லி அவர்கள் வயறும் மனமும் குளிர வைப்பதில் அவர்களுக்கு ஈடு இல்லை. கல்யாணமாகாத கல்யாணராமனுக்கு அந்தக் கடைதான் சோறு போடும் சொர்க்கம். காலை ஆபீசுக்கு போவதற்கு முன் ஏழிலிருந்து எட்டு மணி வரை அங்கேதான் வாசம். டிஃபன், நியூஸ் பேப்பர், அவர்களுடன் உரையாடல் எல்லாம் முடித்து பின் அவசரமாக ரூமிற்கு வருவான். அதனால் அங்கு வந்து போகும் எல்லோரும் அவனுக்குப் பரிச்சயம்.
எப்போதும் வரும் ஒரு பத்து வயது பையன் அன்றும் கையில் தூக்கு வாளியுடன் அந்தக் கடைக்குத் தயங்கித் தயங்கி வந்து ‘அண்ணா, அம்மா பத்து இட்லி வாங்கி வரச் சொன்னாங்க, காசு நாளைக்குத் தருவாங்களாம்’ என்றான்.
முனுசாமி உடனே ‘தம்பி, ஏற்கனவே கணக்கில் நிறைய பாக்கி இருக்கு. அம்மாகிட்டே சொல்லு. சரி சரி இப்போ வாங்கிட்டுப் போ. தூக்கு வாளியைத் தா, சாம்பார் ஊத்தித் தரேன். பத்திரமாக எடுத்துச் செல்’ என்று சின்னப் பையனிடம் எப்படி பேச வேண்டுமோ அப்படி இதமாகச் சொல்லி இட்லி பார்சலையும், சாம்பார் நிறைந்த தூக்கு வாளியையும் அவனிடம் தந்தார்.
அவனும் ‘சரி அம்மாகிட்ட சொல்றேன். போய்ட்டு வரேன் அண்ணே’ என்றபடி இன்று நிரம்பப் போகும் வயிறையும், இட்லியைப் பார்த்தவுடன் மலரப் போகும் தன் சின்னத் தங்கையின் சந்தோஷத்தையும் அசைப் போட்டுக்கொண்டே வாளியை ஆட்டிக்கொண்டே உற்சாக நடை போட்டான்.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கல்யாணராமன் அந்தக் கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவதால் உரிமையுடன் ‘நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் கொடுக்கிறீங்க?’ என்று கேட்டான்
அதற்கு முனுசாமி சொன்ன பதில் அவனுக்கு வாழ்க்கைத் தத்துவத்தையே சொல்லித் தந்தது அடேங்கப்பா இதில் இவ்வளவு சூழ்ச்சமமா!
அவர் சொன்னார் ‘அட சாப்பாடுதானே சார். நான் முதல் போட்டுதான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரலை. அதெல்லாம் குடுத்துடுவாங்க. என்ன கொஞ்சம் லேட் ஆகும். எல்லோருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது? குழந்தை பசியால் கேட்டிருக்கும். அதான் அந்தப் பையனை அனுப்பி இருக்காங்க. நான் கொடுத்து அனுப்புவேன் அப்படிங்கற அவங்க நம்பிக்கையை நான் பொய்யாக்க விரும்பலை.
நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு வந்துடும். ஆனா இப்போதைக்கு அந்தக் குடும்பம் சாப்பிடுதுல அதான் முக்கியம். நான் உணவு தரவில்லை என்றால் அந்தப் பையன் தன் தாய்க்காக திருடப் போகும் அல்லது அந்தத் தாய் தன் குழந்தையின் பசிக்காக தவறான பாதைக்குச் செல்வாள். ஆனால் நான் நஷ்டப்பட்டாலும் என்னால் சமூகத்தில் நடக்க இருந்த இந்த இரண்டு தவறுகளைத் தடுக்க முடிந்திருக்கிறது.
மேலும் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. கும்பகோணத்தில் என்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. புட்டு விற்கும் பாட்டியிடம் இதேப் போல கடன் சொல்லி அவ்வப்போது என பசியை ஆற்றிக் கொள்வேன்.
அப்போது அந்தப் பாட்டியிடம் ‘ஏன் பாட்டி நான் கடனைத் திருப்பித் தராமல் ஓடி விட்டால் என்ன செய்வாய்’ என்று கேட்டேன்.
அதற்கு அந்தப் பாட்டியும் ‘அட போப்பா, நீ பணம் தந்தால் அது எனக்கு இலாபக் கணக்கு. பணம் தராமல் ஓடிப் போய் விட்டால் அது என் புண்யக் கணக்கில் வரவு வைக்கப் படும்’ என்றாள்.
ஆம் இது ஒரு செயின். அவள் செய்ததை இப்போது நான் செய்கிறேன். இதை அறுந்து விடாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.”
வாழ்வது ஒரு முறை.
வாழ்த்தட்டும் தலைமுறை.
செய்த தர்மம் தலை காக்கும்.
கைகளில் முகம் புதைத்து டைனிங் டேபிளில் கவிழ்ந்திருந்தவனை செல் போன் சிணுங்கிக் கலைத்தது. அசுவாரஸ்யமாக செல்லை எடுத்துப் பார்த்தவன் வந்த காலை நிராகரித்தான்..
அவன்.. விக்னேஷ்.. வயது இருபத்தாறு.. ஜெயம் ரவி தோற்றம்.. ப்ரீ-லான்ஸ் எழுத்தாளன்.. பல ஆங்கிலப் பத்திரிகைகளில் அவன் எழுத்து பிரசித்தம்.. தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு.. முக்கியமான விஷயம்.. பிராமாதமான குக்..
சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்தக் காலத்துக் கடிகாரத்திலிருந்து பட்சி நான்கு முறை உள்ளே வெளியே செய்து கூவியது..
விக்னேஷ் அறையை எட்டிப் பார்த்தான்..
உள்ளே ஆத்மா என்ற ஆத்மநாதன்.. விக்னேஷின் அப்பா.. கட்டிலில் கால் மேல் கால் போட்டபடி அட்டகாசமாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.
விக்னேஷ் மெதுவாக எழுந்து அவரருகில் சென்றான்..
”ஆத்மா..”
அப்பாவை அவன் அப்படித் தான் அழைப்பான்..
“ஆத்மா.. எழுந்திருங்கோ”
ஆத்மா கண் திறக்காமல் எதையோ அனுபவிப்பது போல் முக மலர்ச்சியுடன் தலையாட்டினார்..
“ஆத்மா..”
என்று அவரைத் தட்டி எழுப்பினான் விக்னேஷ்.
பட்டென்று கண் விழித்த ஆத்மா ”என்ன?” என்பது போல் அவனை முறைத்தார்..
“நேரமாறது.. எழுந்திருங்கோ”
ஆத்மா முறைப்பு குறையாமல் சீறினார்.
“அறிவு இருக்கா.. மதுரை மணி ஐயர் தாயே யசோதா பாடிண்டிருந்தார்.. அனாவசியமா எழுப்பி என் கனவுல ஓடிண்டிருந்த அருமையான கச்சேரியை பாதில கெடுத்திட்டியே..”
இதைக் கேட்டு விக்னேஷ் லேசாகச் சிரித்தான். இது வழக்கமாக நடப்பது தான்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவு..
”சீக்கிரம் பல் தேச்சிட்டு வாங்கோ.. காப்பி சாப்பிடலாம்”
ஆத்மா பல் விளக்குவதற்குள் விக்னேஷ் ஸ்ட்ராங் காப்பியுடன் வந்தான். ஒரு வாய் உறிஞ்சிய ஆத்மாவின் முகத்தில் சந்தோஷம்..
“சும்மாச் சொல்லக் கூடாது.. உங்கம்மாவோட கை மணம் உங்கிட்ட அப்படியே இருக்கு”
“இதை இதோட லட்சத்து இருபது தடவை சொல்லியாச்சு”
“உண்மையை எத்தனை தடவை வேணும்னாலும் சொல்லலாம்டா.. ஆமா இன்னிக்கு என்ன பிரேக் பாஸ்ட் பண்ணப் போறே?”
”உங்களுக்குப் பிடிச்ச பொங்கல் பண்ணலாம்னு இருக்கேன்”
“கூட வெங்காய கொத்சு பண்ணிரு”
“இன்னிக்கு வெள்ளிக் கிழமை.. வெங்காயம் கூடாதுன்னு நீங்க தானே சொல்வேள்?”
“ஓ.. இன்னிக்கு வெள்ளிக் கிழமையா? அஞ்சு நாள் ஓடிப் போச்சா? சரி.. வெங்காயம் வேண்டாம்.. சாம்பாரும் சட்னியும் பண்ணிரு”
”சரிப்பா”
விக்னேஷ் உடனே வேலையில் இறங்கினான்.
டைனிங் டேபிளில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஆத்மா திடீரென்று ஞாபகம் வந்தவராக..
“விக்னேஷ்.. கொஞ்சம் ஆனந்தம் முதியோர் இல்லம் வரை போயிட்டு வரணும்”
மிக்ஸியில் சட்னிக்கு அரைத்துக் கொண்டிருந்த விக்னேஷ் புரியாமல் திரும்பி அப்பாவைப் பார்த்தான்.
“எதுக்குப்பா?”
“உள்ள நிறைய வேஷ்டி, ஜிப்பாலாம் எடுத்து வெச்சிருக்கேன்.. நான் அதிகமாப் போட்டுக்காம எல்லாம் புதுசா அப்படியே இருக்கு.. நான் எங்க அதெல்லாம் போட்டுக்கப் போறேன்? அதான்.. அதையெல்லாம் அங்க.. ஆனந்தத்துல இருக்கிறவா கிட்டக் கொடுத்தா.. சந்தோஷமாப் போட்டுப்பா”
“இப்ப என்னப்பா அதுக்கு அவசரம்?”
“இல்லைடா.. ஏதோ தோணித்து.. சொன்னேன்.. நல்ல விஷயம் தானே..”
விக்னேஷ் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவனுக்குத் தெரியும்.. அப்பா ஒன்று நினைத்தால் அதை முடிக்காமல் விட மாட்டார்.
மதியமே ஆனந்தம் முதியோர் இல்லம் போய் துணிமணிகளைக் கொடுத்து விட்டு வரும் வரை விக்னேஷை அவர் விடவில்லை என்பது தான் உண்மை..
அன்று ஆத்மா மும்முறமாக ஏதோ படித்துக் கொண்டிருந்தார்.. விக்னேஷ் அவரருகில் அமர்ந்து..
“என்னப்பா படிக்கறேள்?”
“சுஜாதாவோட வாரம் ஒரு பாசுரம்.. பாசுரங்களுக்கு.. இதை விட எளிமையா நச்சுன்னு யாராலயும் விளக்கம் சொல்ல முடியாதுடா..”
என்று தொடர்ந்து அதில் லயித்தார்..
”கேளேன் பூதத்தாழ்வார் என்ன சொல்றார் தெரியுமா?
அன்பே தகளியா.. ஆர்வமே நெய்யாக..
இன்புருகு சிந்தை இடுதிரியா.. நன் புகழ்சேர்
ஞானச் சுடர் விளக்கேற்றினேன்.. நாரணற்கு..
ஞானத் தமிழ் புரிந்த நான்..”
படித்து முடித்து சில விநாடிகள் கண்களை மூடிக் கொண்டார்.. பிறகு அவரே தொடர்ந்தார்..
“என்ன ஒரு பக்தி பார்த்தியா? அன்பை அகல் விளக்காக்கிட்டார்.. ஆர்வத்தை அதுல நெய்யா விட்டுட்டார்.. சிந்தனையை திரியாக்கிப் பத்த வெச்சுட்டார்.. அதுல கிடைக்கிற பகவத் தரிசனம்.. ஞானம்.. விஷுவலைஸ் பண்ணிப் பாரு.. நினைச்சாலே புல்லறிக்கறது..”
மறுபடியும் கண்களை மூடிக் கொண்டு அனுபவிப்பு..
“இந்தப் புஸ்தகத்தை.. ஒரேயடியாப் படிக்கக் கூடாது.. திகட்டிடும்.. அப்பப்ப எடுத்துப் படிக்கணும்.. அப்பத்தான்.. உள்வாங்கி ரசிக்க முடியும்.. அனுபவிக்க முடியும்.. சுஜாதா.. சுஜாதா தான்..
அப்பாவின் அனுபவிப்பில் விக்னேஷும் கரைந்து போனான்.
மறுநாள் ஆத்மவும் விக்னேஷும் பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருக்க..
“என்னடா காத்தே இல்லை” என்று ஆத்மா சலித்துக் கொண்டார்.
”வெதர் அப்படி இருக்குப்பா”
சமாதானம் சொன்னான் விக்னேஷ்.
“ஹும்.. ரெண்டு மாசம் முன்னால ஊட்டி போகலாம்னு நீ சொன்னே.. அப்ப இருந்த மூடுல வேண்டாம்னு சொல்லிட்டேன்..”
ஆத்மாவின் குரலில் ஏக்கம் தெரிந்தது.
“இப்பக் கூடச் சொல்லுங்கோப்பா.. உடனே ஏற்பாடு பண்ணறேன்..”
“வேண்டாம்.. இப்ப வேண்டாம்”
“ஏம்பா?”
“என்னமோத் தோணலை.. இப்ப இங்கயே இருக்கணும் போலருக்கு.. சரியா?”
“சரிப்பா”
கைகளில் முகம் புதைத்து டைனிங் டேபிளில் கவிழ்ந்திருந்த விக்னேஷை செல் போன் சிணுங்கிக் கலைத்தது. எடுத்துப் பார்த்து..
“ஹலோ”
“விக்னேஷா.. இன்னும் கிளம்பலையா? அவாள்ளாம் காத்திண்டிருப்பாடா..”
விக்னேஷின் பெரியப்பா..
“கிளம்பறேன் பெரியப்பா.. அப்பா கூடப் பேசிண்டிருந்தேன்..”
மறுமுனையில் சிறிது மௌனம். பிறகு பெருமூச்சு விட்டு..
“புரியறதுடா.. பேசிக்கோ.. அப்பா கூட நன்னாப் பேசிக்கோ.. இன்னும் கொஞ்ச நேரம் தான்..”
விக்னேஷ் மௌனமாக இருந்தான்..
“உங்கப்பாவோட ஸ்தூல சரீரம் மறைஞ்சாலும்.. இந்த பத்து நாளும் அவன் ஆத்மா அங்கயே தான் சுத்திண்டிருந்தது.. உன் பாசத்துக்குக் கட்டுப் பட்டு உங்கூடவே தான் இருந்திருக்கு.. இன்னிக்கு பத்தாம் நாள்.. அந்தப் பாசத்துலேர்ந்து விடுபட்டு.. அடுத்த கட்டம்.. கடவுளை நோக்கி.. ஞானத்தை நோக்கிப் பயணத்தை ஆரம்பிச்சுரும்.. அப்புறம் உங்கப்பாவை நீ ஒரு ஞான ரூபியாத் தான் பார்க்கணும்.. இதை நான் சொல்லலைடா.. புராணம் சொல்றது..”
”… …”
“விக்னேஷா.. உனக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் எனக்குத் தெரியும்டா.. ஆனா என்ன பண்ண? காலத்தை நம்மால ஜெயிக்க முடியாதே.. மனசைத் தேத்திக்கோ.. சீக்கிரம் கிளம்பி வா..”
செல்லை வைத்த விக்னேஷ் அறையை எட்டிப் பார்த்தான்..
உள்ளே கட்டில் காலியாக இருந்தது..
அவனையுமறியாமல் கைகளில் முகம் புதைத்துத் தேம்பித் தேம்பி அழுதான்.
காலை நடைப்பயிற்சியின் போது கைப்பேசி அதிர்ந்தது. பார்த்தேன் ; சந்திரன் என்ற பெயர் சிமிட்டியது. நடக்கும்போது முகக்கவசத்தோடு பேசமுடியாது. ஐந்தாவது சுற்று முடிந்து சற்று காலாறும்போது உட்கார்ந்து பேசலாமே என்று தொடர்பைத் துண்டித்தேன் .சிந்தனை துண்டிக்கப்படவில்லை. ‘ சந்திரன் எதுக்காக இந்நேரம் பேசுகிறான்’ எதுவும் புதுகுண்டு போடப் போகிறானோ… சேச்சே இப்பவெல்லாம் அவன் அப்படி ஆளில்லை என்றாலும் அவனை நினைக்கையில் அந்த நிகழ்வை மறக்க முடியவில்லை..
எனக்குப் பின்னால் நடந்துவரும் மனைவி “கால் வலிக்குதுங்க கொஞ்சநேரம் உட்கார்ந்துட்டு வர்றேன் “ என்கவும் இருவரும் கொஞ்சநேரம் காலாறலாம் என்று வேப்பமரத்தின் கீழே கல்பெஞ்சில் உட்கார்ந்தோம் .கைப்பேசியை இயக்கினேன் . “ அது யாருங்க ; ரொம்பநேரம் செல் அடிச்சிகிட்டே இருந்தது. “
“சந்திரன்னு என்கூட ஆறாவதிலிருந்து படிச்சவன் ; எதுக்கு கூப்பிட்டானு இனிதான் கேட்கணும் “
“ஐம்பது வருச பழக்கமா இருக்கிறவரு நம்வீட்டு விசேஷங்கள் எதுக்கும் வந்தமாதிரி ஞாபகம் இல்லையே.; அப்படியாப்பட்டவரு கிட்ட என்ன அவ்வளவு சிநேகம் ? “
“அவன் மறக்கமுடியாத ஆளு அவனைப்பத்திச் சொல்றேன் கேளு. “
காலை இறைவணக்கம் முடிந்து வகுப்புக்குள் போகையில் சந்திரன் என்னருகில் வந்து ,” டேய் பக்கத்தில் வா. ஒரு சுவீட்நியுஸ் . யார்கிட்டயும் சொல்லிறாதே. . நம்ம பிரம்படி கந்தசாமி இனிமே வரமாட்டார். அவுரு திருச்சியில் பஸ்ஸில் இறங்குறப்ப கீழே விழுந்து செத்துட்டாராம். பிரம்பால நம்மளை அடிச்ச அவரது சோத்தாங்கை பஸ்சக்கரத்தில சிக்கி நைஞ்சு போச்சாம். இன்னிக்கி பேப்பர்ல போட்டிருக்குடா. அவருடம்பை திருச்சி பெரியாஸ்பத்திரியில் வச்சுருக்காங்கலாம். அதான் இன்னைக்கு அவர் பிரேயருக்கு வரலை பாத்தியா “
“ டேய், சும்மா டூப்பு விடாதடா . அப்படின்னா பிரேயரில சொல்லி மௌனமா ரெண்டு நிமிசம் நிற்கவச்சு , இன்னைக்கு லீவு விட்டுருப்பாங்கள்ள….”
“டேய், இது நேத்து சாயந்திரம் திருச்சியில நடந்ததுன்னு பேப்பரில் வந்திருக்குடா. ப்ராமிசாடா . நான் காலையில கன்னித்தீவு பார்க்கும்போது படிச்சேன்டா. அவருபேரு கந்தசாமின்னு போட்டுருந்ததுடா.. நான் சொல்றது பொய்யின்னா .. இன்னைக்கு பிரம்பு பிரேயருக்கு வந்திருக்கணுமில்ல…? அவுங்க வீட்டில இருந்து லேட்டாகூட எச்செம்முக்கு சொல்லலாமில்ல. எப்படியும் இன்னைக்கு தெரியாட்டி திங்கக்கிழமையாவது தெரிஞ்சுரும் பாரு. . அன்னைக்கு நமக்கு லீவுதான் ;ஜாலிதான்’ இனி பிரம்படி நமக்கு இல்லை..” என்று குதித்தபடி தேவதாஸ் சொன்னதை பார்த்து மற்ற பசங்கல்லாம் என்னான்னு கேட்க; ரகசியம்டா யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு என்கிட்டே சொன்னதையே அவர்களிடமும் சொன்னான். கீழே சிந்துன மண்ணெண்ணெய் மாதிரி இந்த ரகசியம் வகுப்பு முழுவதும் பரவியிருச்சு .
கந்தசாமி வாத்தியார் எங்க கிளாஸ் டீச்சர். எங்களுக்கு கணக்கு, சயின்ஸ் ,இங்கிலிஸ் எடுப்பாரு.அவரு சொன்னமாதிரி வீட்டுப்பாடம் எழுதிட்டு வரலைன்னாவோ , படிக்கலைன்னாவோ , கையை நீட்டச் சொல்லுவார். சோத்தாங்கையை விறைப்பா நீட்டணும் ; பிரம்பால் அடிக்கும் போது , உள்ளங்கை விரல்களைச் சுருக்குனாவோ, மடிச்சாவோ பிரம்படி உள்ளங்கையிலும் விழும் ; புறங்கையிலும் விழும்; விரல்மணிக்கட்டில் விழும் அடி சாக்கடிச்சு கரண்டு பாய்ந்தது மாதிரி உடம்பெல்லாம் பதறி நடுக்கும் .அடிக்கப் போறாருன்னு நீட்டின கையை உள்பக்கமாக இழுத்துகிட்டா அடி தொடையிலிருந்து முழங்கால் முட்டிவரை நெருப்பால் சிகப்புக்கோடு போட்டதுபோல் பதிந்து எரியும்.
சோத்தாங்கைக்குப் பதிலா பீச்சாங்கையை நீட்டினால் இந்தக் கையிலா சாப்பிடுவே என்று சொல்லி ரெண்டுகையிலும் பிரம்பு தீப்பற்றும். இப்படிக் கொடுமைக்கார வாத்தியார் செத்தாருன்னா சந்தோசம்ன்னு வகுப்பில ஒவ்வொரு மனசும் நினைச்சது.!
அன்னைக்கு கந்தசாமிசார் வகுப்புகளில் வெறுவேறு வாத்தியாருக வந்து கதைகளைச் சொல்லிட்டுப் போனாக. எந்த வாத்தியாரும் கந்தசாமி சார் பற்றி ஏதும் சொல்லவுமில்லை. எங்களுக்கு ஆர்வமிருந்தாலும் அவரைப் பற்றி கேட்க பயமாக இருந்தது. அவரு வரலைங்கிறது ஜாலியா இருந்தது. நம்மளா கேட்டு ஏன் வம்புல மாட்டிக்கணும் என்று எல்லாரும் ஒரே நினைப்பா இருந்தாக ; எல்லார் மனசுக்குள்ளும் வெளியே சொல்லமுடியாத பரவசம் !.அன்னைக்கு வகுப்பு ஒவ்வொன்னும் றெக்கை முளைச்சுப் பறந்தது.
வீட்டுப்பாடம் இல்லாத சனி , ஞாயிறு கொண்டாட்டமா பறந்தது திங்கள்கிழமை பள்ளிக்குள் நுழையும்போது பள்ளி தகவல் பலகையில் திருக்குறள் தவிர்த்து வேறு எந்தத் தகவலும் இல்லை. அன்று வானம் தூறிக்கொண்டே இருந்ததால் மைதானத்தில் யாரும் விளையாடவில்லை. பிரேயரும் இல்லை. எங்களுக்கு சந்திரன் மீது சந்தேகம் வரவே அவனைக் கேட்டோம்…
நீங்க நம்பமாட்டீகன்னு தெரியும் ; நான் அந்த செய்திவந்த பேப்பரைக் கிழிச்சுக் கொண்டாந்திருக்கேன் என்று காண்பித்தான்’ அதில்- ‘ கந்தசாமி என்பவர் திருச்சி பஸ்நிலையத்தில் கரூர் பஸ்சிலிருந்து இறங்கும்போது கால் தவறி விழுந்தார்; பின்சக்கரம் ஏறியதில் வலதுகை நெஞ்சு எல்லாம் நைந்து போனது. சம்பவ இடத்திலே இறந்த அவரது உடலை திருச்சி பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.’ இதைப் வாசித்ததும் பலருக்கு சந்தோசமாகவும், சிலருக்கு அழுகை வருவது போலவும் இருந்தது.
மணி அடித்ததும் எல்லாரது மனசும் திக் திக்குன்னு துடிப்பது போல் இருந்தது. அடுத்த நிமிசத்தில் கந்தசாமி சார் வகுப்புக்குள் நுழைந்தார். எல்லோரும் வணக்கம் சார் சொல்லாமல் எழுந்து மௌனமாக நின்றார்கள் .
“ என்னாங்கடா எதையோ கண்டு பயந்தமாதிரி நிற்கிறீங்க , என்ன விஷயம் “ கந்தசாமி கேட்டார்; எல்லாரும் மூச்சை அடக்கி நின்றனர். சந்திரன் கண்களைப் பொத்தி குமுறி அழுதான் . ” ஏன் அவன் அழுகிறான் “ எல்லார் முகத்தையும் ஊடுருவிப் பார்த்தார். யாரும் பதில் சொல்லவில்லை.
“ சந்திரா இங்க வாடா. ஏன் அழுகிறே. என்ன நடந்தது ? தப்பு ஏதும் பண்ணினியா?. இங்கே வா. சும்மா சொல்லு ; நான்அடிக்கல. “
அவன் “ சார் , என்னை மன்னிச்சுருங்க சார்; இனிமே அப்படி சொல்லமாட்டேன் சார்; என்னை அடிக்காதீங்க சார் “ பெருங்குரலெடுத்து அழுதபடியே வந்தான்.
அவரருகில் நெருங்குகையில் முகத்தை மூடிய கைகளை எடுத்து வயிற்றைக் குன்னி கவட்டுக்குள் கைகளை வைத்துக் கொண்டு நெளிந்தான் . அவனது செய்கை பிற மாணவர்களுக்கு சிரிப்பை மூட்டினாலும் யாரும் சிரிக்கல ; உதட்டை இறுக்கி மூச்சுவிடாமல் இருந்தனர்.
கந்தசாமி; “ டேய் மானிட்டர், இவனை ஒன்னுக்கு இருக்கவிட்டு கூட்டிட்டு வா“ ராஜமாணிக்கமும், சந்திரனும் வெளியே போனார்கள்.
“ என்னடா நடந்தது. யாராவது சொல்லுங்க. “
எல்லாரும் மௌனம் காத்தார்கள். அந்தக் கூட்டுமௌன அழுத்தம் தாளாமல் அவர் வகுப்புவாசலில் நின்று கவனித்தார்; வேப்பமரத்தில் ஒரு காக்கை பச்சோந்தியை விரட்டியது; அது இலைகளுக்குள் சென்று பச்சை நிறத்தில் மாறிக்கொண்டது. காகம் பச்சோந்தியைக் கண்டுபிடிக்க முடியாமல் பறந்தது .குருவிகளும், கிளிகளும், அணில்களும் ஏதேதோ பேசியதை முகம் விரிய நோக்கினார்.. மாணவர்கள் தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர். வெளியே போனவர்கள் வந்ததும் கந்தசாமி சேரில் அமர்ந்தார்.
“ இங்க வாடா. எனக்கு எல்லாம் தெரியும். நீ என்ன செய்தேன்னு ஒளிக்காமச் சொல்லு. “
“ சார் என்னை மன்னிச்சிருங்க சார்.அடிக்காதீங்க சார்; இந்த பேப்பர்ல இருக்கிறதைப் பார்த்து நீங்க செத்துப் போயிட்டீங்கன்னு சொல்லிட்டேன் சார் “ என்றபடி அந்தத் துண்டுத்தாளைத் தந்தான். அந்தத்தாளில் கந்தசாமிக்கு முன் ’ பிரம்படி’என்றும்,வலதுகை நைந்தது என்பதற்கு முன் ‘பிரம்பால் அடிச்ச ‘ என்றும் பேனாவில் சந்திரன் எழுதியிருந்தான் .
அவர் அந்தத்தாளை இருமுறை வாசித்தார்.அவனை ஊடுருவினார். அவன் உடல் நடுங்கித் தேம்பினான்.அவரது முகம் சிவந்து பின் வெளிறியது.
“ அந்தப் பிரம்பை எடுத்து வாடா “
அவன் தயங்கித் தயங்கிப் போய் மூலையில் சாத்தியிருந்த பிரம்பை எடுத்து கை நடுங்கத் தந்தான்.
அவர் எழுந்து நின்று ; “பக்கத்தில் வாடா “ அவன் தயங்கினான். அவர் நகர்ந்து அவனை அணைத்து இருகைகளால் அந்த பிரம்பை ஒடித்து எறிந்தார் .
“ டேய், நீ சந்திரன் இல்ல. சாமிநாதன்டா . அந்த கந்தசாமி செத்துட்டாண்டா.! இது வேற கந்தசாமி; இனி யாரையும் அடிக்கமாட்டேன் “ என்று சன்னதம் வந்தவர் போல் பேசினார். ஐந்து நிமிடம் வகுப்பு உறைந்திருந்தது.
“ இனி யாரையும் அடிக்கமாட்டேன் ; எழுதலை , படிக்கலைன்னா பத்து தடவை , முப்பது தடவைன்னு இம்போசிசன்தான். அதுக்கும் ஒழுங்குக்கு வராதவனுக அம்மா அப்பாவை அழைச்சிட்டு வந்து எட்மாஸ்ட்டரைப் பார்க்கணும். அதுக்கும் ஒழுங்குக்கு வராதவனுக்கு டிசியை கிழிச்சுக் குடுத்து வெளியே அனுப்பீருவோம். அப்புறம் , இந்த ஜென்மத்தில பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்க முடியாது. டேய் ஒழுங்கா படிக்கப் பாருங்க. நான் இனி யாரையும் அடிக்க மாட்டேன். சரி, சயின்ஸ்புத்தகத்தை எடுங்க. இன்னிக்கு ‘ உயிர்களின் தோற்றமும் வளர்ச்சியும் ’ பார்ப்போம் “
அனல்காற்றும் , தென்றலும் மாறி மாறி அடித்ததில் உளைந்த மரங்கள் போல் இருந்த மாணவர்கள் புத்தகத்தை எடுக்கும் சத்தம் சருகுகள் உதிர்ந்தபின் ஏற்படும் தளிர்ப்பின் சிலிர்ப்பு போல் கேட்டது.
அன்னைக்கிருந்து கந்தசாமி சார் யாரையும் அடிப்பதில்லை, பார்வையாலே மிரட்டுவார். இம்போசிசன் குடுப்பார். அவரது அணுகுமுறையில் எல்லா பசங்களும் ஒழுங்குக்கு வந்தாங்க ; .ஒருத்தர்கூட பெயிலாவதில்லை.! கந்தசாமி சார் உதவித் தலைமையாசிரியர் என்கிறதால எங்க ‘ஆறு-எ வகுப்பு’ நடைமுறை ஸ்கூல் முழுக்க நடைமுறைக்கு வந்தது. பசுபதீஸ்வரா முனிசிபல் ஸ்கூல் குப்பைதொட்டி ஸ்கூல்ன்னது மாறி திருச்சி மாவட்டதில பெஸ்ட் ஸ்கூலுன்னு பேரு வாங்க ஆரம்பிச்சது. “
**************
“ நல்ல பிரண்டுதான் போங்க ! .சரி , ஐம்பது வருசமா உங்களோடு சினேகமா இருக்காருன்னா… அவுரும் உங்களை மாதிரி ஊருக்கு மணக்குமாம் தாழம்பூங்கிற ரகம் தான் போல.! “
“ இரு. அவன் எதுக்கு கூப்பிட்டானு கேட்போம் . ஹலோ , சந்திரா என்னப்பா காலங்காத்தாலே கூப்பிட்டீயே . என்ன விவரம் “
எதிர்முனையில் தழு தழுத்த குரலில் “ டேய், நம்ம கந்தசாமிசார் கொரோனாவில இறந்துட்டாரு; .தாங்க முடியலைடா. அருமையான மனுசருடா . எங்க க்ளினிக்கிலதான் வச்சு ராஜவைத்தியம் பார்த்தோம் ;காப்பாத்த முடியலடா எண்பத்தாறு வயசாச்சு ;ட்ரீட்மென்ட்க்கு அவரு உடம்பு ஒத்துழைக்கலைடா நான் என்ன செய்வேன் “
நானும் விசும்பினேன் ; .மனைவி ஆறுதலாகத் தோளைத் தொட்டார்.
கதவு திறந்திருந்தாலும்
பறக்க மறந்தது
பழகிப் போய்விட்டது.
கம்பிகளைக் கடித்துக் கடித்து
அலகெல்லாம் வலிக்கிறது.
ஒரு நெல்லுக்காகக்
கழுத்து நோக
முப்பது சீட்டுகளைக்
கலைக்க வேண்டிஉள்ளது.
வெளியில் தெரியும்
வானமெல்லாம்
விரிந்து கிடக்கும்
கானல்நீர்தான்.
காலை முதல்
யாருமே வராததால்
முழங்கால்களுக்கிடையில்
முகம் புதைத்திருக்கும்
இவனும் பாவம்தான்.
எதிர்மரக்கிளையில்
இருக்கின்ற இணையே!
இன்றும் உன்னைக்
கனவில்தான்
கலக்கவேண்டும் போலிருக்கிறது.