குவிகம் 50

இந்த இதழ் குவிகத்தின் 50 வது இதழ் !

image

நவம்பர்  2013 இல்  துவங்கி  இன்றுவரை குவிகம்  தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ( டிசம்பர் 2013 தவிர).

கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கார்ட்டூன், தொடர்கள் என்று பல பகுதிகள் மூலம் இலக்கியம், அரசியல், திரைப்படம், தொலைக்காட்சி,  படங்கள், விஞ்ஞானம் போன்ற பல துறைகள் சார்ந்த தகவல்களை உங்களுக்கு அளித்து வருகிறோம்.

இந்த மின்னிதழை உங்களுக்குச் சேர்ப்பிப்பதில் எனக்கு உதவிய என் துணைவி விஜயலக்ஷ்மி, என் மகன் அர்ஜூன், என் மகள் அனுராதா, இணையாசிரியர் கிருபாநந்தன் ஆகியோருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

‘குவிகம் எத்தனைபேரைச் சென்றடைகிறது? எத்தனைபேர் படிக்கிறார்கள்?’ என்பதுபோன்ற கேள்விகள் அடிக்கடி எழுகின்றன.

‘குவிகம்’ என்ற பெயருக்கு விளக்கம் கேட்டு  இன்னும் பலர் பல இடங்களில் கேள்விகள் எழுப்பியவண்ணமே இருக்கின்றனர்.

‘குமுதம், விகடன், கல்கி, குங்குமம் ‘ என்ற பிரபலப் பத்திரிகைப் பெயர்களின் சுருக்கமா? ‘ என்று வினவுபவர்கள் அதிகம்.

ஆனால் ‘குவிகம் ‘ என்ற பெயர் இப்போது சென்னையில் இலக்கிய வட்டங்களில் சற்று நன்கு அறிமுகமான பெயர் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதற்கு இணையாசிரியர் கிருபாநந்தன் அவர்களின் பங்கு மகத்தானது. 

அவருடன்  இணைந்து  ” குவிகம்   இலக்கிய வாசல் ” என்ற அமைப்பைத் தொடங்கி கடந்த 33 மாதங்களாக இலக்கியக் கூட்டங்கள் நடத்திவருகிறோம். அதன் மூலம் பல இலக்கிய மேதைகளை நம் அரங்கத்தில் சந்தித்து அவர்கள் கருத்துக்களைக் கேட்கமுடிந்தது. குறைவாக இருந்தாலும், நிறைவான வாசகர்களின் கலந்துரையாடல்கள்,   கதை சொல்லல் , கவிதை படித்தல்,  எங்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

குவிகத்தின் அடுத்த வளர்ச்சியாக, குவிகம் பதிப்பகம் என்ற ஒன்றைத் துவக்கி இதுவரை 8 புத்தகங்கள்  வெளியிட்டிருக்கிறோம். அவற்றுள் குவிகம் இதழில் வெளிவந்த தொடர்கள் இரண்டு புத்தகமாக வந்துள்ளன. ( சில படைப்பாளிகள், சரித்திரம் பேசுகிறது). குவிகத்தில் வந்த ‘மணிமகுடம்’ தொடர் நாவல் விருட்சம்  வெளியீடாக  வந்து அனைவர் பாராட்டையும் பெற்றுள்ளது. விரைவில்  குவிகத்தில் வந்த ‘ஷாலு மை வைஃப்’ தொடரும் புத்தக வடிவில் வரப்போகிறது.  

மேலும், குவிகம் BookXchange  என்ற ஒரு திட்டத்தையும் இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் துவக்கியுள்ளோம். அதன்படி, படித்த புத்தகங்களைக் கொடுத்துவிட்டு அங்கிருக்கும் புத்தகங்களில் பிடித்ததை எடுத்துச் செல்லலாம். இதை  இனிவரும் இலக்கியக் கூட்டங்களில் தொடர்ந்து செய்யவும் உத்தேசம்.

அடுத்தபடியாக, “குவிகம் இலக்கிய அன்பர்கள்” என்று ஒரு அமைப்பை ஏற்படுத்த உள்ளோம் .  அதில்  Rs 50  கொடுத்து அங்கத்தினர்கள் ஆகலாம். 200-300 அங்கத்தினர்களைச் சேர்த்து அவர்கள் விரும்பும் வகையில் இலக்கியப் பரிமாற்றம் செய்யலாம் என்பது எங்கள் திட்டம். 

அடுத்த இதழிலிருந்து குவிகத்தில் மாபெரும் மாற்றங்களைச்  செய்ய எண்ணியுள்ளோம்.

என்னென்ன என்று கேட்பது கேட்கிறது. 

கைவிரல்களைக் கட்டிக்கொண்டு காத்திருங்கள். 

உங்கள் எதிர்பார்ப்புகளையும் எழுதுங்கள்.

எல்லாவற்றையும் சேர்த்துப் புதிய குவிகம் படைப்போம் ! 

 

தலையங்கம்

Related imageRelated image

சிலப்பதிகாரம்  ஏன் எழுதினேன் என்று இளங்கோ அடிகளே  கூறும் மூன்று காரணங்கள் உண்டு. 

             அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
             ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
             உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

இதில் ஊழ்வினையைப்பற்றியும், பத்தினியைப்பற்றியும் இங்கு நாம் பேசப்போவதில்லை. 

ஆனால் அரசியலில் தவறு செய்பவர்களுக்குத் தரும தேவதையே வந்து தண்டிக்கும் என்ற வாதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். 

இது இன்றைக்குச் சரியா? 

2ஜி‌ வழக்கில் அனைவருக்கும் விடுதலை என்றதும் எழுகின்ற கேள்விதான் இது !

ஆர் கே நகரில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டார் என்றதும் எழுகின்ற கேள்விதான் இது !

“முருகா உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலை!  சுப்பிரமணிய சாமியா வந்து கேசைப் போட்டே !  குமாரசாமியா வந்து கேசே இல்லை என்றாயே” என்பவர்கள் கேட்கும் கேள்வி இது !

தலைமை நீதிபதியே சரியில்லை என்று மற்ற நீதிபதிகள் வெளிப்படையாகப்  பேசும்போது மக்கள் மனதில் தோன்றும் கேள்வி  இது !

 “நீதி வழங்கினால் மட்டும் போதாது; நீதி வழங்கியதைப் போலத் தோன்றவும்  வேண்டும்” என்று சொல்கிறவர்கள் கேட்கும் கேள்வி இது! 

‘ஊழல் இந்திய மக்களின் மத்தியில் புரையோடிக்கிடக்கும் புற்று நோய். அதற்கு மருந்தே கிடையாது’ என்று வெளிநாட்டவர் கூறுவதைக் கேட்டு வேதனைப்படுபவர் கேட்கும் கேள்வி இது !

குறித்துக் கொள்ளுங்கள்! 

ஊழல்  செய்தவன் கண்டிப்பாகத் தண்டனை அடைவான் என்ற  எண்ணம் என்றைக்குத் தோன்றுகிறதோ அன்றுதான் நம் நாடு உலக அளவில் மாபெரும்   வல்லரசாக மாறும் !

இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது நம்நாடு வல்லரசாக மாறும்.

அந்த நம்பிக்கை இருக்கிறது. 

 

ஞாநி அவர்களுக்கு அஞ்சலி

பிரபல எழுத்தாளரும் பரிக்க்ஷா நாடகக் குழுவின்  அமைப்பாளரும் அரசியல் விமர்சக வித்தகருமான நண்பர் ஞாநி (15.01.2018) காலை நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.

அவர் பிரிவால் வாடும் அனைத்து நல்  உள்ளங்களுக்கும்  குவிகத்தின் மரியாதை கலந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

குவிகத்திற்காக “நாடகங்கள் – நேற்று இன்று நாளை ” என்ற தலைப்பில் 19 மார்ச் 2016இல் சிறப்புரை ஆற்றினார்.

ஞாநி என்றும் ஞாநி சங்கர் (1954 – 2018) என்றும் அறியப்படுபவர் தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர்.

இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்; இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன்.

சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தினார். பரீக்‌ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தினார்.  இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு எளிய மக்கள் கட்சியின் (AAP)  சார்பாக  ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில்போட்டியிட்டார். பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகினார்.

அவரது படைப்புகள்:

கட்டுரைகள் தொகுப்பு 

பழைய பேப்பர்                                                                                                            மறுபடியும்
கண்டதைச் சொல்லுகிறேன்
கேள்விகள்
மனிதன் பதில்கள்
நெருப்பு மலர்கள்
பேய் அரசு செய்தால்
அயோக்யர்களும்முட்டாள்களும்
கேள்விக் குறியாகும் அரசியல்
அறிந்தும் அறியாமலும்
ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்)
என் வாழ்க்கை என் கையில் (இணையாசிரியர்: மா)

நாடகங்கள்

பலூன்
வட்டம்
எண் மகன்
விசாரணை
சண்டைக்காரிகள்

புதினங்கள்

தவிப்பு

திரைக்கதை

அய்யா(பெரியார் வாழ்க்கை)

குறும்படங்கள்

அய்யா
ஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?

(நன்றி: விக்கிபீடியா )

 

முன்னேறு – மதிப்புரை (சுந்தரராஜன் )

உலக ஆன்மீகத்தில்,  “அம்மா” என்று அனைவராலும் போற்றப்படும் மதியொளி சரஸ்வதி அம்மா அவர்களின் “முன்னேறு” என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.

அந்தப் புத்தகத்தின் முகப்பும் மதிப்புரையும் உங்கள் பார்வைக்கு:

 

 

 

 

 

 

 

 

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,  ‘நான் யுத்தம் புரியமாட்டேன்’ என்று குருஷேத்திரப் போர்முனையில் தேரில் சாய்ந்துவிட்ட அர்ஜுனனுக்குக்  கூறிய அறிவுரைகளின் தொகுப்புதான் பகவத்கீதை என்பது அனைவருக்கும் தெரியும். அதைச் சுருக்கமாக ஒரே ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் “முன்னேறு” என்ற சொல்லைத்தவிர வேறு வார்த்தையில் சொல்லமுடியாது.

அப்படிப்பட்ட கீதையின் சாரத்தைத் தலைப்பாக்கிக்கொண்டு கீதையைப்போலப் பதினெட்டு அத்தியாயங்களில் நாம் வாழ்வில் செல்லுவதற்கான பாதையைச் சுட்டிக்காட்டி அதில் “முன்னேறு” என்று நம் கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறார் நமது மதிப்பிற்குரிய மதியொளி அம்மா அவர்கள்.

கவலையை ஒழி, புலன்களை அடக்கு, மனதையும் அடக்கு, ஆசையை விடு, ஞானத்தைத் தேடு, சந்தேகத்தைத் துற, பக்தியில் திளை, தர்மத்தைக் கடைப்பிடி, கர்மத்தைச் செய், பலனை மற, சர்வம்  கிருஷ்ணார்ப்பணம் – இவையே கீதை காட்டிய தத்துவக் கோட்பாடுகள்.

அம்மா அவர்களும் கிருஷ்ணனைப்போல, அன்பு, கருணை, ஈகை, பாசம், இன்பம், உண்மை, ஆனந்தம், அக்கறை, வரம், விவேகம், காலம், முக்தி போன்ற அறிவதற்கு அரிதான தத்துவங்களைத் தன் சொல்லாட்சியால் எளிமைப்படுத்தி நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் வடிவில் வடிவமைத்துக்கொடுத்திருக்கிறார்.

இதை ‘அன்னையின் அமுது’ என்றும் ‘அன்பின் ஆசி’ என்றும் சொல்லலாம்.

இந்த “முன்னேறு” என்ற நூல்  ஒரு புதுமையான முறையில் அமைந்திருக்கிறது. உரைநடையும் கவித்துவமும் கலந்த இனிமையான நடை, இந்த நூல் முழுவதும் அழகாகப் படர்ந்துள்ளது. கவிதை என்றால் மரபுக் கவிதையும் புதுக் கவிதையும் சேர்ந்த புதிய பாணி. பல இடங்களில் சொற்கள்  ஹைக்கூ வடிவில் பரிணமிக்கின்றன. கதையுடன் கட்டுரையும் கலந்த சர்க்கரைப் பொங்கல் இது. எளிமையான சொற்கள் மூலம் கருத்துள்ள கதைகளைக் கவிதை விதைகளுடன் சேர்த்து, படிப்பவர்  மனதில் விதைக்கும் புதிய நடை அம்மா அவர்களின் உரைநடை.

இந்தப் புத்தகத்தின் மூலம் நம் மனதில் எழும் பலவித சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.  நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு இந்த நூல் விடைகளைத் தந்திருக்கிறது என்றால் அது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை. அவற்றுள் சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.

அவற்றிற்கான விடைகளைப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

 1. முன்னேற்றத்தின் மூச்சு என்பது என்ன?
 2. ஊத்துக்காடு வேங்கடசுப்பிரமணிய பாகவதர் பாடும்போது ஏன் தன் மடியில் தாளம் போடுவதில்லை?
 3. பகவான் என்ற சொல்லின் பதம் என்ன?
 4. கலக்கம் எப்போது ஓடிப்போகும்?
 5. முதுமையின் சோர்வை விலக்குவது எப்படி?
 6. இறைவன் எப்படி விளங்குகிறான்?
 7. உண்மையை உபாசித்த சந்திரசேனன், கெளதமரிஷி மனம் உருகும்படி என்ன கூறினான்?
 8. காலம் என்ன செய்யும்?
 9. மகிழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவது எது?
 10. தில்லை நடராசப் பெருமான் ஏன் ஆடுவதை ஒருகணம் மறந்தார்?
 11. அன்னை எப்போது வரமாகி வருவாள்?
 12. தர்மதத்தர் என்னும் அந்தணர் எப்படித் தசரதன் ஆனார்?
 13. சுதீட்சனரின் சாபம் எப்படி ராமருக்குப் பாலம் கட்ட உதவியது?
 14. அம்புப் படுக்கையிலிருந்து பீஷ்மர் தர்மோபதேசம் செய்யும்போது திரௌபதி ஏன் சிரித்தாள்?
 15. புத்தர் தன் மகன் ராகுலுக்குக் கூறிய அறிவுரை என்ன?

இப்படிப் பல வினாடி வினாவிற்கான விடைகள் கொண்ட அற்புதப் புத்தகம் இது.

மொத்தத்தில், பகவத்கீதையின் சாரத்தைப் பிழிந்து, வடித்து, இளஞ்சூட்டில் இறக்கி, பொடித்து, குவித்துக் கொடுத்த ஆயுர்வேத கேப்ஸ்யூல்தான் அம்மா அவர்கள் நமக்கு அளித்த “முன்னேறு” என்ற நூல்.

மன அமைதிக்கும், ஊக்கத்திற்கும் இதைவிடச் சிறந்த மருந்து வேறொன்றும் இல்லை.

 

கவிதை செய்வோம் – தில்லைவேந்தன்

Related image

வார்த்தையால் வாழ்வ ளக்கும்
வடிவமே கவிதை  ஆகும்
நேர்த்தியாய்ச் சொல்லி ருக்கும்
நிரல்படக் கருத்தி ருக்கும்
ஈர்த்திடும் எழிலி ருக்கும்
இன்சுவை விரவி நிற்கும்
கோத்தவோர் மொழியின் மாலை
குளிர்தமிழ் இன்பச் சோலை.

வெடுக்கெனக் கற்ப னையாம்
விரிந்திடும் தூண்டில் வீசி
உடுக்களை, நிலவை , மேலே
உலவிடும் கதிரைப் பற்றி
அடுக்கியே  கவிதை செய்வோம்.
அந்தமில் வான்சு ருட்டிப்
படுக்கநல் பாயாய் மாற்றிப்
பைந்தமிழ்ப் பனுவல் செய்வோம்

பழங்கதை  படித்துச்   சொல்வோம்
பழமையில் பெருமை  கொள்வோம்
வழங்கிடும் புதுமை  மற்றும்
வயங்கிடும் கலைகள் கற்று
முழங்கிடும் தமிழில் நூல்கள்
முனைப்புடன்    வடித்துச்  செய்வோம்
ஒழுங்குடன் மரபைப் பேணி
உயர்ந்தநல் கவியும் செய்வோம்

சரித்திரம் பேசுகிறது! (18) –யாரோ

காளிதாசன்

காலச்சக்கரம் சுழலும்போது அதுவே இடையிடையே பிரமிப்பில் ஆழ்கிறது.

அதற்குக் காரணம் மனித இனத்தையே மாற்றும் அதிசய மனிதர்களின் அவதரிப்பு!

இலக்கியத் துறையில் மாபெரும் சரித்திரப் புருஷர்கள் ஒரு சில காலங்களில் வாழ்ந்து உலகுக்கு மகிழ்வூட்டி மறைகின்றனர்.

அது அந்தக் காலம் செய்த பேறு என்றே சொல்லவேண்டும்.

ஒரே ஒரு வால்மீகி.

ஒரே ஒரு வியாசர்.

ஒரே ஒரு கம்பன்.

ஒரே ஒரு வள்ளுவன்.

ஒரே ஒரு ஷேக்ஸ்பியர்.

ஒரே ஒரு தாகூர்.

இப்படி நாம் சொல்லிக்கொண்டு வரும்போது ..

ஒரு இலக்கிய சூரியன் சரித்திரத்தின் தொடுவானத்தில் உதித்துப் பிரகாசித்தான்.

ஒரே ஒரு காளிதாசன்!

குப்தர்கள் பொற்காலம் இந்த சூரியனால் ஒளிவீசியது!

ருத்ரதாமன் சம்ஸ்கிருத மொழியில் இலக்கியம் படைத்த காலத்திலிருந்து பல சம்ஸ்கிருத பண்டிதர்கள் – மேலும் கவிஞர்கள் நாடகங்களையும் கவிகளையும் படைக்கத் துவங்கினர். குப்த ராஜ்யத்தில் வீடுகள்தோறும்  ‘இலக்கிய மன்றங்கள்’ இருந்தது. சமஸ்கிருதம் வளர்ச்சியடைந்தது. காளிதாசன் தன் கவிதைகளால் பொற்காவியங்கள் படைத்தான். சாகுந்தலம்,  விக்ரமோர்வசியம், மாலவிகாக்னிமித்ரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம் முதலிய நூல்களை அந்த மகாகவி எழுதினான்.

பின்னாளில் சர். வில்லியம் ஜோன்ஸ் காளிதாசனுடைய சாகுந்தலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபின் அகில உலகும் காளிதாசன் புலமையை அறிந்தது.

இனி கதைக்குப் போகலாம்.

ஒரு காட்சி விரிகிறது. இன்றைய காஷ்மீர் – அந்நாளில். இமயமலை அடிவாரத்தில் ஆடியோடித் திரிந்த சிறுவன் ஒருவன். இயற்கையின் எழில் அவனைக் கவர்ந்தது. உயர்ந்த மலைத்தொடர்கள் அவன் மனதில் நிரந்தரமாகப் பதிந்தது.வெள்ளி உருகி ஓடுவதுபோல் பனிமலைகளிலிருந்து ஓடைகள் சூரிய வெளிச்சத்தில் மின்னியது. ஓடக்கரையில்  வளர்ந்திருந்தது  குங்குமப்பூச்செடிகள். ஓங்கி உயர்ந்திருந்தது தேவதாரு மரங்கள். மலையின் நடுவில் சிறு ஏரிகள். அவன் மனதில் இத்தனையும் இன்பத்துடன் உறைந்தது.

ஆயினும் புத்திசாலித்தனம் என்பது அவனிடம் மருந்துக்கும் இல்லை. ஆட்டுமந்தை ஒன்றை அவன் நடத்திவந்தான்.  அவனது பெற்றோர்கள்:  இந்த ஊரில் இருந்து கொண்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்தால் உருப்பட்டாற்போலத்தான்! தெற்கே மகதம்  – மாளவம் சென்று வேலைசெய்து பிழைக்க வழியைப்பார்!

சிறுவன் புறப்பட்டான். பாடலிபுத்திரம் சென்றான். காட்சிகள் பல கண்டான். கலிங்கம் சுற்றினான். ஆந்திராவில் அலைந்து திரிந்தான். பின்னர் மெல்ல உஜ்ஜயினி வந்தடைந்தான். நகரத்தின் பொன்னொத்த புதுப்பொலிவும் – வந்தாரை  வாழவைக்கும்       எண்ணப்பாடும் – அவனை வரவேற்றது. மரவெட்டியாக வேலை பார்த்தான். சிறுவன் இளைஞனான்.

அருகிலிருந்த மகிஷபுரி என்ற சிற்றரசரனின் மகள் – இளவரசி வித்யோத்மா. அழகி. பலவும் கற்று பெரும்பாண்டித்யம் கொண்ட அறிவாளி. எதுவுமே – அதிகம் இருந்தால் கர்வம் பெருகுவது இயற்கைதானே! அமைச்சர்களையும் – பண்டிதர்கள் அனைவரையும் தனது அறிவாற்றலால் – அலட்சியம் செய்து அவமரியாதை செய்தாள்.  ‘தன்னை அறிவால் வெல்லும் இளைஞனையே திருமணம் செய்வேன்’ என்றும் சூளுரைத்தாள்.  அமைச்சர்கள் – அகம்பாவம் பிடித்த இந்த இளவரசிக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கவேண்டும் என்று நினைத்தனர். இவளுக்கு ஒரு முட்டாளைக் கட்டிவைப்போம் – என்று வெஞ்சினம் கொண்டனர்.

ஒரு மரத்தில் அந்த இளைஞன்  ஒரு கிளையில் அமர்ந்துகொண்டு தான் அமர்ந்த கிளையையே வெட்டும் காட்சியைக் கண்டனர்.

வெட்டி முறிந்த உடன் இளைஞன் கீழே விழுந்த அவலமும் கண்டனர்.

‘இவன் சரியான முட்டாள்! இவனையே இளவரசிக்கு மணமுடித்து அவளது கொட்டத்தையும் அடக்க வேண்டும்’ – என்று எண்ணினர்.

அவனிடம் சென்று : நீ சாப்பிட்டாயா?

அவன்: ரொம்பப் பசிக்குது

அமைச்சன்: எங்களுடன் அரண்மனைக்கு வா! விருந்து கிடைக்கும். ஆனால் நீ வாயைத் திறந்து பேசக்கூடாது.

அவன்:சரி

அமைச்சன் சிற்றரசனிடம் சென்று : அரசே!  நாங்கள் இன்று இந்த அறிவாளி இளைஞனைக் காணும் பாக்கியம் பெற்றோம். இவனே உங்கள் மகளை அறிவால் வெற்றிகொண்டு மணமுடிக்க வந்தவன். ஆனால் இவன் இந்த வருடம் முழுவதும் மௌன விரதம் கொண்டுள்ளான்.

நமது முட்டாள் இளைஞன் இளவரசியிருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

இளவரசி தன் வலக்கரத்தின் ஒரு விரலைக் காட்டினாள். அவன் அதை  ‘இவள் எனது ஒரு கண்ணை குத்துவேன் என்கிறாள்’ என்று எண்ணி , ‘இவளது இரண்டு கண்களையும் குத்துவேன்’ என்பதுபோல் தன் இரு விரல்களைக் காட்டினான்!

இளவரசி தன் ஐந்து விரல்களை விரித்து தனது உள்ளங்கையைக் காட்டினாள். அவன்  ‘இவள் என்னை அறைவதற்குக் கையைக் காட்டுகிறாள்’ என்று எண்ணி  ‘இவளை குத்துவேன்’ என்பதுபோல் தனது விரல்களைக் குவித்து முஷ்டிக்கரத்தைக் காண்பித்தான்.

அருகிலிருந்த அமைச்சர்கள் இளைஞனை வெகுவாக சிலாகித்து : இளவரசி! என்ன அறிஞர் இவர்!

நீங்கள் ஒரு விரலைக் காட்டி, ‘கடவுள் ஒருவர்’ என்றீர். இவர் இரு விரல் காட்டி .. ‘கடவுள் பாதி!  மனிதன் பாதி! இரண்டும் சேர்ந்த கலவை நாம்’ – என்று காட்டுகிறார். மேலும் ஐந்து விரல்களைக் காட்டி, ‘ஐந்து உணர்வுகள்’ என்றீர்.  இவர் அவற்றைக் குவித்து ‘ஐந்து உணர்வுகள் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதில் சிறப்பு’ என்று கூறுகிறார். இளவரசி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு நமது முட்டாள் மௌனியைத் திருமணம் செய்துகொண்டாள்.

கௌண்டமணி தனது சகோதரிக்குப் பெயிண்ட் அடித்து செந்திலுக்குக் கல்யாணம் செய்த சினிமாக் கதைதான்  நமக்கு  நினைவில் வருகிறது!

இளவரசி – கணவன் முட்டாள் என்பதை உணர்ந்து – திட்டித் – துரத்திவிட்டாள். அமைச்சர்களும் அவனைத் துரத்திவிட்டனர். அவர்கள் லட்சியம் நிறைவேறிவிட்டது. அழுத இளைஞன் காளி கோவில் சென்று கதறி அழுது முறையிட்டான்: ‘தாயே! எனக்கு அறிவு தரமாட்டாயா?’

அழுது அழுது ஓய்ந்த பின் : ‘தாயே காளி மாதா! எனக்கு நீ அறிவு தரவில்லை என்றால் எனது நாவு இருந்து பலன் என்ன! அதை உனக்குக் காணிக்கையாக்குகிறேன்!’  

குறுவாளெடுத்து நாக்கை அறுத்துக்கொள்ள முயன்றான். காளி அங்கு தோன்றி அருளையும் அறிவையும் தந்தாள்.அன்று காளிதாசன் பிறந்தான்! சம்ஸ்கிருத மொழி, காளிதாசன் நாவிலிருந்து வெளிவந்ததால் அலங்காரம் பெற்றது!

காளிதாசன் விக்கிரமாதித்தனின் அரசசபையிலுள்ள நவீன ரத்தினங்களில் ஒருவர். விக்ரமாதித்தர் அரசவையில்  காளிதாசனைத்தவிர  தண்டி, பவ பூபதி போன்ற புலவர்களும் இருந்தனர். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை!  ஒருசமயம் இந்த மூவருக்குள் யாருடைய கவித்துவம்  உயர்ந்தது என்ற சர்ச்சை எழுந்தது. தெய்வ சந்நிதியில் காளியிடமே தீர்ப்புக் கேட்பது என்று முடிவானது. மூவரும் காளி கோயிலில் வந்து பாடல்கள் பாடினர். தண்டியின் கவிதை ரசனை அதிகமென்றும், பவபூபதியின் பாடல்கள் அறிவுப்பூர்வமானவை என்றும் அசரிரீ ஒலித்தது.

காளிதாசரைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை! காளிதாசருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டுவிட்டது. “அப்படியானால் என் திறமை என்னடி?” என்று ஒருமையில் காளியைத் திட்டிவிட்டார். காளி முடிப்பதற்குள் அவர் அவசரப்பட்டுவிட்டார்.

 “மகனே! காளிதாசா! என்னடா அவசரம் உனக்கு?! நான் மற்றவர்களின் பாண்டித்யம்பற்றியே மெச்சினேன்! உன்னைப்பற்றிச் சொல்வதற்குள் அப்படி என்ன அவசரம்? ‘த்வமேவாஹம் த்வமேவாஹம் த்வமேவாஹம் ந ஸம்சய’ என்று உன்னைப்பற்றிச் சொல்வதற்குள் என்னைத் திட்டிவிட்டாயே” என்றதும் காளிதாசர் அழுதுவிட்டார்.

அந்த ஸ்லோகத்தின் பொருள்  ‘நீதானே நான்! நீதானே நான்! நீதானே நான்’. அதாவது காளிதாசனும் காளியும் ஒன்று. நீயும் நானும் ஒன்றானபிறகு உனக்கு மிஞ்சிய புலவனேது? என்றாள் காளி.

மகாகவி காளிதாசன் ருது சம்ஹாரம், குமார சம்பவம், மேக சந்தேசம், ரகுவம்சம் ஆகிய நான்கு காவியங்களையும் விக்கிரமோர்வசியம், மாளவிகாக்கினிமித்ரம், சாகுந்தலம் ஆகிய நாடகங்களையும் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் அழகிய மொழி நடையில் நமது சாதாரண அறிவால் நினைத்துப் பார்க்கவே முடியாத உயரிய கற்பனை வளத்தில் படைத்துள்ளார்.

(சகுந்தலை)

சிலர் பிறக்கும்போதே புகழுடன் தோன்றுவர். சிலரது  வாழ்வில் திடீரென்று இறையருள் கிட்டும். இறையருள், யாருக்கு எப்பொழுது கிடைக்கும் என்பது இவ்வுலக நியமங்களின் மாபெரும் புதிர். அதிலும் வெகு சிலருக்குத்தான் இறைவனே நண்பனாகக் கிடைக்கும் பாக்கியம் கிடைக்கும். காளிதாசன் அப்பேர்ப்பட்ட வரம் பெற்றவன்! அது உலகுக்கே ஒரு வரம்!

சரித்திரம் இனிமை கண்டது – புதுமை பெற்றது – பெருமை கொண்டது!

வேறு என்ன கதைகள் சரித்திரம் சொல்லப் போகிறது! பொறுத்திருந்து பார்ப்போம்.