
இந்த மகளிர் தின நன்னாளிலே இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக விளங்கும் அரசி திரௌபதியைப் பற்றி நான் உணர்ந்து கொண்டவற்றை இங்கே பகிர விரும்புகிறேன்!
நம் இந்திய தேசத்தின் கலாச்சாரத்தை நம் மக்களின் பண்பை ஆன்மீகப் பெருமைகளை இராமாயணம் மற்றும் மகாபாரதம் என்ற இரு மாபெரும் இதிகாசங்களின் மூலம் நாம் அறியலாம்! இரண்டு காவியங்களிலும் மனிதம் உள்ளது! இறைமையும் உள்ளது! இரண்டுமே இறைவனிடம் நாம் சரணடைய வேண்டும் என்ற சரணாகதி தத்துவத்தை நமக்கு போதிக்கிறது.
பாரதத்தின் நிலங்களினூடாக, இனக்குழுக்களின் கதைகளினூடாக, தேசங்களின் வரலாறுகளினூடாக நுணுக்கமான சித்தரிப்புகள் வழியாக விரிந்து செல்கிறது மகாபாரதம் என்னும் இதிகாசம்! தகவல்களையும் உணர்ச்சி மோதல்களையும் சுவைபடக் கூறி நம்மை எழுச்சியூட்டுகிறது. இந்திய வரலாற்றைப் பற்றியோ தத்துவத்தைப் பற்றியோ மானுட உணர்ச்சிகளையோ மகாபாரதத்திற்கு வெளியே தேட வேண்டிய அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து!
என்னைக் கவர்ந்த கதாபாத்திரமாக மகாபாரதத்தின் கதாநாயகி, பாஞ்சால நாட்டின் இளவரசியும் அஸ்தினாபுரத்து மகாராணியுமான திரௌபதியே ஆவாள்.
திரௌபதி!
எந்த யுகத்திலோ அவள் பிறந்திருந்தாலும், அன்றிலிருந்து இன்று வரை அவள் ஒட்டு மொத்த இந்தியப் பெண்களின் பிரதிநிதியாகவே என் கண்களுக்குத் தெரிகிறாள்! ஆமாம்! இந்தியப் பெண்களுக்கு குழந்தைப் பருவம் மறுக்கப் படுகிறது! கன்னிப் பருவம் மறுக்கப்படுகிறது! கல்வி மறுக்கப்படுகிறது! சிலருக்கு கலவியும் மறுக்கப்படுகிறது! பலருக்கு அது திணிக்கவும் படுகிறது! அவர்களுடைய விருப்பங்கள் மட்டுமல்ல மறுப்புகளும் வெறுப்புகளும் கூட மறுக்கப்படுகிறது! அவர்களுக்குத்தான் எத்தனை சோகம், எத்தனை கண்ணீர், எத்தனை இடர்பாடுகள், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு மனநிறைவையே காணாத பெண்கள் தன்னைச் சுற்றி இருப்போருக்காகவே வாழ்கிறார்கள்!
திரௌபதி! பாஞ்சால நாட்டின் மன்னன் துருபதனின் மகளானதால் திரௌபதி என்று பெயர் பெறுகிறாள். பாஞ்சால நாட்டின் இளவரசியானதால் பாஞ்சாலி என்று அழைக்கப்படுகிறாள். உண்மையில் இவளுடைய இயற்பெயர், கிருஷ்ணை!
கிருஷ்ணை என்றால் கறுப்பு என்று பொருள்படும்! பொருளுக்கேற்றவாறு அவளும் கறுப்புதான்! பொன்னிறத்தவள் என்றும் பொருள் கூறுவர்! ஆனால் பேரழகி! அவளுடைய நீண்ட கருங்கூந்தல் கார்மேகத்துக்கு ஒப்பாகும்! பிறை போன்ற நெற்றியும் மீன் போன்ற கண்களும், கோவைப் பழம் போன்ற சிவந்த அதரங்களும் சங்கு கழுத்தும், மூங்கில் போன்ற தோள்களும், பொய்யோ என்று சொல்லும்படியான அழகான இடையும் என்று வர்ணித்துக்கொண்டே போகலாம்! அவளுடைய எந்த அம்சத்திலும் ஒரு குறை கூட காணமுடியாதபடிக்கு அத்தனை அழகானவள் அவள்! அவள் மேலிருந்து எப்போதும் சுகந்த நறுமணம் வீசிக் கொண்டேயிருக்கும்.
அவள் துருபதனின் மகளாகப் பிறந்தவள்! ஆனால் துருபதனுக்கும் அவன் மனைவிக்கும் ஏற்பட்ட காதலால் பிறந்தவள் அல்ல! துருபதன் தன் பழிவாங்கும் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு கருவியாக, யாக அக்கினியிலிருந்து அவளை தோன்றச் செய்தான்!
எல்லாரும், “ஆசைக்கு ஒரு பெண் குழந்தை! ஆஸ்த்திக்கு ஒரு ஆண் குழந்தை!” என்று குழந்தை பெற்றுக் கொள்வார்கள்! ஆனால் மன்னன் துருபதன், தன்னை வஞ்சித்த துரோணரை அழிப்பதற்கென்றே கற்றறிந்த அந்தணர்களை வைத்து அக்கினி வளர்த்து அதிலிருந்து, துரோணரை வதைக்க ஒரு மகனையும், துரோணரிடமிருந்து அவருடைய பிரதான சிஷ்யனான அர்ஜுனனை மணந்து, அவரிடமிருந்து அவனைப் பிரிக்கவென்ற நோக்குடன் ஒரு மகளையும் தோற்றுவித்தான். (ஆனால், முதலில் துருபதனே துரோணரை வஞ்சித்து அவமானப்படுத்தினான்! அதற்குப் பாடம் புகட்டவே துரேணர் தன் மாணவர்களான பாண்டவர்களின் உதவியுடன் துருபதனை சிறைபிடித்தார் என்பதை ஏனோ மறந்தே போனான்!) அப்படிப் பிறந்த மகன், திருஷ்டத்யும்னன்! மகள், திரௌபதி!
திரௌபதியின் பிறப்பை வில்லிப்புத்தூரார் இப்படி எழுதுகிறார்.
பின்னுங் கடவுள் உபயாசன் பெருந் தீப்புறத்துச் சுருவையினால்
மன்னுங் கடல் ஆரமுதென்ன வழங்கு சுருதி அவி நலத்தான்
மின்னுங் கொடியு நிகர் மருங்குல் வேய்த்தோண் முல்லை வெண் முறுவல்
பொன்னும் பிறந்தாள் கோகனகப் பூமீதெழுந்த பொன் போல்வாள்.
பொருள்:
அதன்பின்பும் (திருஷ்டத்யும்னன் தோன்றிய பின்) தெய்வத்
தன்மையை உடைய உபயாசன் என்னும் அம்முனிவன் பெரிய யாக அக்கினியிலே, சுருவை என்னும் ஓமத்துடுப்புக் கருவியைக்
கொண்டு பெருமை பொருந்திய பாற்கடலில் தோன்றிய அருமையான அமிருதம் போல ஆகுதி செய்த மிக இனிய தேவர் உணவாகிய வேத முறைமை தவறாத அவிர்ப்பாகத்தினது நற்பயனால் மின்னலையும் பூங்கொடியையும் போன்ற இடையையும் மூங்கில் போன்ற தோள்களையும் முல்லையரும்பு போன்ற வெண்மையான பற்களையுமுடைய பொன் போல் அருமையான அழகிய ஓர் பெண்ணும் செந்தாமரை மலரினின்று மேலெழுந்த திருமகளை ஒப்பவளாய் தோன்றினாள்.
கோகம் – சக்கரவாகப்பறவைகள்! செல்வத்துக்குரிய
தலைவியாதலாலும், பொன்னிறமுடைமையாலும்,பெறுதற்கருமையாலும், பொன் என்று திருமகளுக்கு ஒரு பெயர்! திரௌபதி மகாலக்ஷ்மியின் அம்சம் என்கிறார் வில்லிப்புத்தூரார்.
துருபதன் அவளை என்ன சொல்லி படைக்கிறான்? இந்த உலகின் அவமானங்கள் அனைத்தையும் அவள் அடைய வேண்டும்! அப்படி அடைந்தாலும் அத்தனை அவமானங்களையும் அவள் வென்று வர வேண்டும் என்று வேண்டியே அவளை தோற்றுவிக்கிறான்!
நெருப்பின் மகளாகப் பிறந்த துருபதனின் மகள் கன்னிகையாகவேதான் இந்த மண்ணுலகிற்கு வருகிறாள். தீயிலிருந்தே பிறந்தாலும், மனித உருவமெடுத்தாலும் அவளுக்கு மனிதர்களின் தீய குணங்கள் இல்லை! அது என்னவென்றும் அவளுக்குத் தெரியாது!
அதனாலேயே அவள் நிறைய சங்கடங்களுக்கு ஆளாகிறாள்!
நமக்கெல்லாம் மகாபாரதத்தில் பகடையை உருட்டி சூழ்ச்சி செய்தவன் சகுனி என்று நன்றாகத் தெரியும்!
ஆனால் கண்ணுக்குத் தெரியாத பகடையை உருட்டி ஆளாளுக்கு சூழ்ச்சி செய்து தங்களுடைய ஆசைகளை தீர்த்துக் கொண்டனர் என்று தெரியுமா? இவர்களின் சூழ்ச்சிக்கெல்லாம் பலிகடாவானவள்தான் இந்த அபாக்கியவதி பாஞ்சாலி என்று தெரியுமா?
ஆமாம்! ஏனெனில் அவளுக்கு தீயைத் தெரியுமே தவிர, ஆசை, கோபம், வெறுப்பு, பழி, பாவம், வஞ்சகம், சூழ்ச்சி போன்ற தீய எண்ணங்களைத் தெரியாது! அவள் தீயிலிருந்து பிறந்ததால் புனிதமானவள்! அன்பு, பாசம், நேசம், சகிப்புத்தன்மை, மன்னிக்கும் குணம், வீரம் போன்ற புனிதமான பண்புகளையுடையவள்! அதனால்தான் பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள்! ஆனாலும் தன் நற்பண்புகளை அவள் ஒருபோதும் கைவிட்டதில்லை!
துருபதன், துரோணரை பழி வாங்க பகடையை உருட்டி திரௌபதியை தோற்றுவிக்கிறான்!
குந்தி தன் மகன்கள் அரசாள வேண்டும்! அதற்காக அவர்கள் ஒற்றுமையாக இருத்தல் அவசியம் என்று பகடையை உருட்டி திரௌபதியை ஐவரின் மனைவியாக்கினாள்!
பீஷ்மர் தன் பிரம்மச்சரிய விரதம் பாழாகக் கூடாதென்றும், அஸ்தினாபுரத்தை காப்பேன் என்ற தன் சபதம் நிறைவேறவும் பகடையை உருட்டி துரியோதனன் செய்யும் தீய செயல்களை கண்டிக்காமல் விடுகிறார்! விளைவு? துரியோதனனின் மனதில் கொழுந்துவிட்டெறியும் பகையினால் தன் தம்பிகளின் மனைவியையே மானபங்கப்படுத்தத் துணிகிறான்!
திருதிராஷ்ட்டிரன் தன் மகனுக்கு அரசாட்சி வர வேண்டும் என்று பகடையை உருட்டி சகுனியையும் துரியோதனனையும் கண்டிக்காமல் விடுகிறான்! விளைவு! சூதாட்டத்துக்கு யுதிஷ்ட்டிரனை அழைத்து அனைத்தையும் அவனை இழக்க வைத்து திரௌபதியை களங்கப்படுத்தத் திட்டமிடுகிறான் துரியோதனன்!
இப்படி ஆளாளாளுக்கு பகடை உருட்டுவதால் அந்த பகடைகளுக்கு பலியானவள் திரௌபதி! ஆனாலும் அவள் எதையும் தாங்கும் இதயத்தோடு வாழ்கிறாள்!
அக்கினியிலிருந்து கன்னிகையாக பிறந்ததால் அவளுக்கு குழந்தைப் பருவம் கிடையாது! அதனாலேயே தாயன்பு, தந்தையன்பு கிடையாது! சகோதரனுடன் தோன்றினாலும் சகோதர பாசம் கிடையாது! அவள் சகித்துக் கொள்கிறாள்!
அர்ஜுனனின் மனைவியாக ஆவாய்! என்று சொல்லியே அவளை வளர்க்கிறான் துருபதன். ஆனால் சுயம்வரம் என்ற ஒரு நாடகத்தை நடத்துகிறான்! அங்கும் அவளுடைய விருப்பம் கேட்கப்படவில்லை! அர்ஜுனன் சுயம்வரத்தில் திரௌபதியை வென்றாலும் குந்தியின் வார்த்தைப் பிழையால் பாண்டவர் ஐவருக்கும் மனைவியாகிறாள்! அவள் வேறு வழியின்றி இந்த நிலையை ஏற்கிறாள்!
அரசியாக இருந்தாலும் அரச வாழ்வு மறுக்கப்படுகிறது! ஆனால் வனவாசத்தையும் அவள் சலனமின்றியே ஏற்கிறாள்!
ஐவரின் மனைவியாக இருந்தாலும் அவளுக்கு காதல் மறுக்கப் படுகிறது! தன் ஐந்து கணவர்களின் மூலம் ஐந்து குழந்தைகளுக்குத் தாயாக ஆனாலும் அவளுக்கு பிள்ளைக் கனியமுதும் மறுக்கப்படுகிறது! அவள் மனவருத்தப்பட்டாலும் ஜீரணித்துக் கொள்கிறாள்!
ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தருமம்! ஒருவனுக்கு மேற்பட்ட ஆடவனுடன் ஒரு பெண் உறவு கொண்டால் அவள் பதிவிரதை கிடையாது என்கிறது தர்மசாஸ்த்திரம்! அப்படியிருக்கையில் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்றால் அவளுக்கு எத்தனை அவச்சொல் வந்திருக்கும்?! அத்தனையையும் தாங்குகிறாள்.
ஆனால் வியாச முனிவர் அவள் ஐவருக்கு மனைவியானாலும் அவள் தினம் தினம் காலையில் எழுந்ததும் தன் கன்னித் தன்மையைப் பெறுவாள் என்று வரமளிக்கிறார்! அதனால் அவள் நித்யகன்னியாவாள்!
இந்திய மரபில், பஞ்ச கன்னிகைகளாகச் சொல்லப்படும் அகல்யா, திரௌபதி, தாரா, குந்தி, மண்டோதரி ஆகியோரின் பெயரைக் காலை வேளையில் நினைவு கூர்வதே பாவங்களை அழிக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.
‘அகல்யா, திரௌபதி, தாரா, குந்தி, மண்டோதரி ததா பஞ்சகன்யா: ஸ்மரனோ நித்ய மகாபாதக நாசனம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
மேற் சொன்ன ஐந்து பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொண்டிருந்தவர்கள்.
அகலிகை – கெளதம முனிவரின் மனைவி. இவள் அழகில் ஆசை கொண்ட இந்திரன் முனிவர் வேடத்தில் வந்து இவளிடம் கூடினான்.
தாரா – வாலியின் மனைவி. இராமனால் வாலி கொல்லப்பட்ட பின்பு சுக்ரீவன் மனைவியாகிறாள். (வால்மீகி இராமயாணப் படி)
குந்தி – பாண்டுவின் மனைவி. துர்வாச முனிவர் வழங்கிய வரத்தால், சூரிய பகவான் மூலம் கர்ணனையும், தர்மதேவன் மூலம் யுதிர்ஷ்டனையும், இந்திரன் மூலம் அர்ச்சுனனையும், வாயு பகவான் மூலம் பீமனையும் பெற்றாள்.
மண்டோதரி – இராவணன் இறப்பிற்குப் பிறகு விபீஷணனுக்கு மனைவியானாள். (வால்மீகி இராமயாணப் படி)
சீதையின் பரிசுத்தத்தை பரிசோதிக்க அவளை அக்னிப்ரவேசம் செய்யச் சொல்லி ராமன் கட்டளையிடுகிறான். சீதையும் அவன் கட்டளைக்கு அடிபணிந்து அக்னிப்ரவேசம் செய்து தன்னை நிரூபிக்கிறாள்!
அப்படியென்றால், திரௌபதி புனித அக்கினியிலிருந்தே தோன்றியவளாயிற்றே! அவள் எவ்வளவு புனிதமானவளாக இருக்க வேண்டும்? ஆனாலும் அவள் வேசியென்று கர்ணனாலும் கௌரவர்களாலும் இகழப்படுகிறாள்!
அவள் குருவம்சத்தின் குலவது! (குலத்தின் மருமகள்!) (இந்திய தேசத்தில் மருமகள்களுக்கு என்றைக்கு மதிப்பளித்தார்கள்?)
மாபெரும் குருவம்சத்தின் தர்ம தாதாவான பிதாமகர் பீஷ்மர், குலகுரு கிருபாச்சாரியார், குரு வம்ச இளவரசர்களின் குருவாக விளங்கும் துரோணாச்சாரியார், தரும நெறி பிறழாத அமைச்சராக விதுரன், மாமன்னன் திருதிராஷ்ட்டிரன், மற்றும் பெரியோர்கள் பொதுமக்கள் என பலர் கூடியிருந்த கௌரவர் சபையில், பராக்ரமாசாலிகளான அவளுடைய ஐந்து கணவர்கள் முன்னிலையில் அவள் வேசியென்று கௌரவர்களால் இகழப்படுகிறாள்! அவமானப்படுத்தப்படுகிறாள்! அவளுடைய ஆடை பறிக்கப்படுகிறது! அவளுடைய ஐந்து கணவன்மார்கள் உட்பட அத்தனை பேரும் அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தார்களே ஒழிய ஒருவரும் இந்த குற்றச் செயலை எதிர்த்து போராடவில்லை! அவ்வளவு ஏன்? அதை எதிர்த்து ஒரு குரல் கூட கொடுக்கவில்லை என்பது எத்தனை அவமானமான செயல்?
திரௌபதியை இப்படி கூறுகிறார் மகாகவி பாரதி!
பாவியர் சபைதனிலே, – புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் தவப்பயனை
ஆவியில் இனியவளை, – உயிர்த்து
அணிசுமந் துலவிடு செய்யமுதை,
ஓவிய நிகர்த்தவளை – அருள்
ஒளியினைக் கற்பனைக்கு உயிரதனைத்
தேவியை, நிலத்திருவை, – எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத்தை
படிமிசை யிசையுற வே – நடை
பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்
கடிகமழ் மின்னுருவை – ஒரு
கமனியக் கனவினைக் காதலினை
வடிவுறு பேரழகை, – இன்ப
வளத்தினைச் சூதினிற் பணையமென்றே
கொடியவ ரவைக்களத்தில் – அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்.
எத்தனையோ நலன்கள் அவளுக்கு மறுக்கப்பட்டாலும் அவளுக்கு ஒன்றே ஒன்று பரிபூரணமாகக் கிடைத்தது! அது பரம்பொருளான வாசுதேவ கிருஷ்ணனின் புனிதமான நட்பு!
உடுக்கை யிழந்தவன் கைபோ லாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு!
என்ற வள்ளுவனின் வாக்கிற் கிணங்க, ஒவ்வொரு முறை அவளுக்கு இடுக்கண் ஏற்படும் போதெல்லாம் அந்தப் பரம்பொருளே வந்து அவளுடைய துயரைத் துடைக்கிறார்!
இங்கே கௌரவர் சபையிலும் அவளுடைய மானத்தைக் காக்க ஒருவரும் குரல் கொடுக்காத நிலையில் அந்த பரம்பொருளையே அவள் சரணடைகிறாள்! தன் கைகளிரண்டையும் தலைக்கு மேலே தூக்கி கரம் கூப்பி நின்று இனி நீயே கதி என்று கண்மூடி அவனையே நினைக்க, அவளுடைய மானம் காக்க இறைவன் அவளுடைய ஆடையை நீட்டித்துக் கொண்டே போகிறான்! துச்சாதனன் திரௌபதியின் ஒற்றை ஆடையை இழுக்க இழுக்க அது முடிவுறாமல் நீண்டு கொண்டே போகிறது! கடைசியில் அவன்தான் சோர்ந்து போகிறான்!
இது ஒன்றே போதாதா, அவள் பத்தினிதான் என்பதற்கு?
ஆனால் இன்றைய இந்தியப் பெண்களின் நிலை இன்னுமும் மோசம்தான்! இன்றைய பெண்களின் பெண்மைக்கு பிதாமகர்களாலும் (சொந்த அப்பா, சித்தப்பா, மாமா, தாத்தா போன்ற சொந்தங்கள்), குலகுருவாலும் (போலிச் சாமியார்கள்), ஆசான்களாலும் (கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்), இன்னும் எத்தனை எத்தனையோ பேர்களாலுமே ஆபத்து வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை!
எல்லா கொடுமைகளையும் தாங்கிக் கொண்ட அவளால் தன் பெண்மைக்கு கௌரவர்களால் ஏற்பட்ட அவமானத்தை பொறுத்துப் போக முடியவில்லை! அவள் அதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதவில்லை! ஒட்டுமொத்த பெண்சமுதாயத்துக்கு ஏற்பட்ட அவமானமாவே கருதுகிறாள்! அதனாலேயே கௌரவர்களை தண்டிக்க நினைக்கிறாள்! குருக்ஷேத்திர யுத்தம் தொடங்கக் காரணமாகவும் ஆகிறாள்.
யுத்தத்தில் தன் ஐந்து கணவர்கள் தவிர தன்னைப் பெற்ற தகப்பன் முதல் தான் பெற்ற பிள்ளைகள் வரை அத்தனை பேரையும் பறி கொடுக்கிறாள்!
கௌரவர்களை அழிக்க நினைத்தாலும் அவர்களின் மரணத்தின் போதும் அவள் மனம் வெதும்பி அழவே செய்கிறாள்! (என்னே அவள் தூய உள்ளம்!)
எத்தனையோ துன்பங்களைத் தாங்கிய பின்னும் யுத்தகளத்தில் வீரமாகக் கொல்லாமல், தூங்கும் போது பாசறைக்குள் வஞ்சகமாக வந்து கோழை போல தன் மக்களைக் கொன்ற துரோணரின் மகன் அஸ்வத்தாமனை, துரோணரின் மனைவியான குருபத்தினி தன்னைப் போல புத்திர சோகத்தால் வேதனைப் படக் கூடாதென்ற ஒரே காரணத்தால், மன்னிக்கிறாள் திரௌபதி! அவளுடைய தாயன்பும் குரு பத்தினியின் மேல் அவள் கொண்ட இரக்கமும் போற்றுதற்குரியதன்றோ!
யுத்தமெல்லாம் முடிந்து அஸ்தினாபுரத்து அரியணை ஏறிய பின்னரும் அவளுக்கு மன அமைதி கிட்டவில்லை! காரணம்! ஆரம்பத்தில் பரிவு காட்டிய கணவர்களில் பீமனைத் தவிர மற்ற நால்வரும் இப்போது வெறுப்பையே அவளிடம் காட்டினார்கள்! இளக்காரம் காட்டினார்கள்! (கொடுமையன்றோ!)
கடைசியாக மரண யாத்திரை செல்லும் போதும் அவளுடைய விருப்பம் கேட்கப் படவில்லை! அவள் உயிர் வாழ ஆசைப்படவில்லைதான்! ஆனால் தன் மரண யாத்திரையை அவள் தன் கணவர்களுடன் செல்லப் பிரியப்படவில்லை! ஆனால் அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை! அவர்களுடன் நடந்தாள்.
இமய மலை நோக்கி அவர்கள் ஒருவர்பின் ஒருவராக செல்ல, அவர்கள் பின்னே ஒரு நாயும் நடந்து சென்றது!
முதலில் நகுலனும் பின்னர் சகாதேவனும் விழுந்து இறக்கிறார்கள்! யுதிஷ்டிரனின் உத்தரவுப்படி யாரும் திரும்பிப் பார்க்கவில்லை!
திரௌபதியும் துவண்டு விழுகிறாள்! யுதிஷ்ட்டிரன் அவளைத் திரும்பிப் பார்க்கக் கூடாதென்று பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் உத்தரவிடுகிறான்! காரணம்? அவளுக்கு பாண்டவர்களில் அர்ஜுனனிடம் மட்டும் அதிக அன்பும் காதலும் இருந்ததாம்? (எப்படி இருக்கிறது இவன் காரணம்? அர்ஜுனன்தான் உன் கணவன் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவளை அழைத்து வந்து ஐவருக்கும் மனைவியாக்கின குந்தியைத்தானே தர்மவானான அவன் கோபப்பட வேண்டும்! அது சரி! இந்திய ஆண்கள் என்றைக்கு தங்கள் தாய் செய்யும் தப்பை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு மனைவிகளை குற்றம் சொல்ல காரணம் ஏதாவது வேண்டுமா என்ன?)
ஆனால் துவண்டு விழுந்த திரௌபதியை தன் மடிதாங்கிக் கொள்கிறான் பீமன்! ஆமாம்! அவன் ஒருவன்தான் அவளுக்காக கடைசி வரை பாடுபட்டிருக்கிறான்! பீமன் ஒருவனே அவளுடைய மகிழ்ச்சிக்கு வித்திடுகிறான். கீசகன், ஜராசந்தன் போன்ற கொடியவர்களினால் அவள் துன்புறும் போதெல்லாம் அவர்களை அழித்து அவளுக்கு மன அமைதியை தருகிறான்! துரியோதனன் முதல் அவனுடைய இளவல்கள் அத்தனை பேரையும் கொன்றவன் பீமன் ஒருவனே! அதுவும் திரௌபதியின் மன அமைதிக்காவே இதனைச் செய்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது!
பாஞ்சாலி சபதத்தில் அவளை துச்சாதனன் துகிலுரிந்தபின் அவள் கதறியழும்போது வரும் பீமனின் வசனம் என்னை மிகவும் கவர்ந்த பகுதி. தருமனைச் சாடும் அக்கோபத்தில் வெளிப்படுவது பீமன் திரௌபதி மீது கொண்டிருக்கும் ஆழமான காதல் தான். கோப வரிகளைப் படித்துவிட்டு நாம் நிச்சயமாக நெகிழ்ந்துதான் போகிறோம்! கடைசி வரை பீமன் திரௌபதியின் மேல் தான் வைத்த காதலை குறைத்துக் கொள்ளவே இல்லை!
ஆமாம்! இறுதி யாத்திரையின் போது திரௌபதி கீழே விழும் போது கூட, அவள் அடிபடாமல் பத்திரமாக(!) கீழே படுக்க வைத்துவிட்டு தன் அண்ணனின் உத்தரவின் பேரில் அவனைத் தொடருகிறான்! (வேறு வழி?)
கீழே விழுந்த திரௌபதி கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விடுகிறாள்! அப்போது அவளுடைய நெஞ்சம் துக்கம் தாளாமல் வெடிக்கிறது! அதிலிருந்து குருதி பெருகுகிறது! அந்தக் குருதியைக் கொண்டு அவள் தன் உற்ற நண்பனான வாசுதேவ கிருஷ்ணனுக்கு அந்த பனி மலையின் பாறையின் மேல் ஒரு கடிதம் எழுதுகிறாள்! “ஹே! கிருஷ்ணா! பாரதப் பெண்ணான நான், பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகிவிட்டேன்! இனி எந்தப் பெண்ணும் என் போன்ற கொடுமையை அனுபவிக்கக் கூடாதென்று உன்னை வேண்டிக் கொள்கிறேன்!” என்று எழுதிவிட்டு அவள் உயிர் துறக்கிறாள்.
தீயில் பிறந்தவள், பனியில் உயிரை விடுகிறாள்! அவள் பிறந்தபோது எப்படி கண்மூடி கரம் குவித்தபடி பிறந்தாளோ அதே போல மல்லாக்கப் படுத்த நிலையில் கைகளிரண்டையும் தலைக்கு மேல் தூக்கி கரங்கள் கூப்பி கண்கள் மூடி அந்தப் பரம் பொருளான வாசுதேவ கிருஷ்ணனை நினைத்தபடியே உயிரை விடுகிறாள்! (என்னே ஒரு தெய்வீகம்!)
வாசுதேவ கிருஷ்ணா! நீ இன்னும் அந்தக் கடிதத்தை படிக்கவில்லையா? பாரதத்தில் மட்டுமல்ல! பாரெங்கிலும் பெண்களுக்கு, பாலியல் ரீதியாக மட்டுமல்ல பல்வேறு வகையிலும் இழைக்கப்படும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல! இங்கே திரௌபதிகளின் அழுகுரல் ஓயாமல் கேட்டுக் கொண்டேயிருக்கிறதே! உன் செவிகளில் அந்த அவலக் குரல்கள் விழவில்லையா?
சீக்கிரமாக அந்தக் கடிதத்தைப் படித்து அழுது கொண்டிருக்கும் திரௌபதிகளுக்கு பாதுகாப்பை வழங்கு கிருஷ்ணா!
திரௌபதி பட்ட கஷ்டங்களும், சந்தித்த அவமானங்களும் கொஞ்சமா என்ன? ஆனாலும் அவள் தனக்காக வேண்டாமல் நம் பெண்ணினத்துக்காக தன் வேண்டுதலை வைத்திருக்கிறாள்! எப்பேற்பட்ட தியாக சிந்தனை! இந்த உலகம் உள்ள வரை திரௌபதியின் தியாகங்கள் பேசப்படும்!
மனிதனென்பவன் தெய்வமாகலாம்! என்றார் கண்ணதாசன்!
அதை நம் தமிழர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்! அதனால்தான் திரௌபதியின் தியாகங்களை உணர்ந்தமையால் அவளை கடவுளாக வணங்கியும் அம்மனாக பூஜித்தும் இன்று வரை தமிழர்கள் வணங்கி வருகிறார்கள்!
என்றென்றும் அந்த பத்தினி தெய்வம் திரௌபதியம்மன் நம்மை காப்பாளாக!