சிநேகிதக் கத்தி   – ஸிந்துஜா 

விச்சா ஆபிசிலிருந்து கிளம்பி இடது பக்கம் வண்டியைத் திருப்பினான். அந்த சாலையின் கோடியில் உள்ள டிரைவ் இன்னுக்கு  பப்லுவும் நானாவும் வருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். மாரிஸ் அருகே இருந்த பஸ் ஸ்டாப்பைக் கடக்கும் போது அவன் சுவலட்சுமி அங்கே நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அதே சமயம் அவளும் அவனைப் பார்த்தது தெரிந்தது. அவன் சற்றுத் தள்ளி வண்டியை நிறுத்தி விட்டு அவளருகே வந்தான்.   “நீ கரைக்டா ஆபிஸ் விட்ட உடனே வந்தா பஸ் கிடைக்கும். பத்து நிமிஷம் லேட்டானாலும் போச்சு. ஒண்ணு நடந்து வீட்டுக்குப் போகணும். இல்லாட்டா  அம்பது அறுபது ரூபா ஆட்டோக்கு அழுதே தீரணும்” என்று சிரித்தான்.

பிறகு சற்றுத் தள்ளி இருந்த ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ கொண்டு வந்தான். அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு சுவலட்சுமி சென்றாள்.

சுவலட்சுமி அவன் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. அவளை அவனுக்குக் கீழே பணியாற்றும்படி ஆபீசில் சொல்லியிருந்தார்கள். அவனுக்குப் பகல் பூராவும் வெளி வேலை. சேர்மனுக்காக அப்படி ஒரு அலைச்சல் வேலை. அதனால் அவனது  அக்கவுண்ட்ஸ் வேலைக்கு அவன் மாலையில் லேட்டாக உட்கார வேண்டியிருந்தது. ஞாயிற்றுக் கிழமை வந்து பெண்டிங் ஒர்க்கைப் பார்க்க வேண்டும். இந்த சமயத்தில் சுவலட்சுமி வேலைக்கு வந்ததால், ஆபீசுக்குள் அவன் செய்ய வேண்டிய வேலைகளை  சுவலட்சுமியிடம் தள்ளி விட்டான். இப்போதெல்லாம் அவன் பாஸ் யக்யநாராயணன் – சேர்மனை நினைத்துக் கொண்டே – அவனிடம் பவ்யமாக ‘இந்த வாரம் அந்த வேலை முடிஞ்சிடுமா?’ ‘பி.எஃப் ஆபீஸ்ல ஏன் போன வருஷ ஸ்டேட்மென்ட் கொடுக்கலேன்னு நாலைஞ்சு தடவை போன் பண்ணிட்டாம்பா. நீ அவனைக் கொஞ்சம் கவனிக்கிறாயா?’ என்கிற கேள்விகளையெல்லாம் தவிர்த்து விட்டார்.

மறுநாள் லஞ்ச் டயத்தில் அவள் அவனைப் பார்த்ததும் புன்னகை செய்தாள்  இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டார்கள்

சுவலட்சுமி அவனிடம் “நேத்துலேந்து எனக்கு ஒரு சந்தேகம்” என்றாள்.

“என்ன?”

“நீங்க ஸ்கூட்டர வச்சிட்டு எதுக்கு எனக்கு ஆட்டோ தேடினீங்க? ஒரு லிப்ட் குடுக்கணும்னு தோணல பாருங்க உங்களுக்கு” என்று சிரித்தாள்.

“வம்பை விலைக்கு வாங்க வேணாமேன்னுதான்.”

“என்னது?”

“நான் அது மாதிரி கேட்டு  இவன் பெரிய ஜொள்ளு பார்ட்டியோன்னு நீ தப்பா நினைக்க எதுக்கு எடம் குடுக்கணும்னுதான்.”

“என்னைப் பாத்தா ஜொள்ளு பார்ட்டிக்கும் ஜென்டில்மேனுக்கும் வித்தியாசம் தெரியாதவ மாதிரியா இருக்கேன்?”

வீழ்த்தி விட்டாள். கெட்டிக்காரி. 

“வாபஸ் வாங்கிக்கிறேன்” என்றான் விச்சா. “நான் இனிமே  ஆபீஸ் விடற நேரத்துல  வெளியே எங்கேயும் போகலேன்னா உனக்கு லிப்ட் தரேன்.”

அப்படித்தான் அவர்களுக்குள் நெருங்கிய தோழமை ஏற்பட்டது. விச்சா அவளைத் தன் மற்ற இரு நெருங்கிய நண்பர்களான பப்லுவுக்கும்  நானாவுக்கும் அறிமுகப்படுத்தினான். பப்லுவுக்கு மவுண்ட்ரோடில் ஆபீஸ். அவன் சேல்ஸில் இருக்கிறேன் பேர்வழி என்று பாதி நேரம் அலுவலகத்தில் இருக்க மாட்டான். தி.நகரில் இருக்கும் ஒரு நாடக சபாவில் முக்கிய மெம்பராக இருந்தான். மவுண்ட்ரோடுகாரனிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தி நகரில் உழைத்தபடி ஒரு நாள் பிரபல நாடக டைரக்டராக வருவேன் என்று எல்லோரையும் அச்சுறுத்திக் கொண்டிருந்தான். 

நானா வேலைக்குப் போகவில்லை. அவன் தகப்பனார் மாயவரத்தில் நிலபுலன்களோடு இருந்தார். அவர் வேலை எதற்கும் போகாமல் அழித்த சொத்து போக நானா அழிப்பதற்கு வேண்டிய சொத்தும் அவன் குடும்பத்தில் இருந்தது. அவன் மாம்பலத்தில் தனியாக  அறை எடுத்துக் கொண்டு ஓவியம் மற்றும் சிற்பக் கலை விமரிசகனாகப் போகிறேன் என்று சோழமண்டலம் ஓவியர் ஒருவரோடு அலைந்து திரிவான். இந்த வேலை, மாதத்தில் பத்துப் பனிரெண்டு நாள்கள் இருக்கும். அதற்கப்புறம் நடுவே ஊருக்குப் போய் விட்டு வருவான். மீதநாள்களில் விச்சாவுடனும் பப்லுவுடனும் அலைந்து திரிவதுதான் அவனது வேலையாக இருந்தது. 

பப்லுவும் நானாவும் முதல் சந்திப்பிலேயே சுவலட்சுமியைப் பார்த்து மயங்கி விட்டார்கள்.   விச்சாவின் அலுவலகத்துக்கு அருகே இருந்த ஓட்டலில் சந்தித்தார்கள்.

அவள்  பப்லுவிடம் “நான் உங்களை ஏற்கனவே பாத்திருக்கேன்” என்றாள்.

“என்னது?” என்று ஆச்சரியப்பட்டான்  பப்லு.

“போன வாரம் ஞாயத்துக்கிழமை  காலம்பற பத்து மணி வாக்கிலே டி நகர் நாரதகான சபா வாசல்லே  நின்னுண்டு இருந்தேள் இல்லியா?” என்றாள் அவள்.

“ஓ, உங்களுக்கு நாடகத்துலே இன்ட்ரெஸ்ட் உண்டா?” என்று ஆவலுடன் கேட்டான்  பப்லு.

“இல்லே. அப்போ என் பிரெண்டை பஸ் ஏத்தி விட அந்த ரோடு வழியாப்  போனேன்” என்றாள் சுவலட்சுமி. 

விச்சா பப்லுவை அனுதாபத்துடன் பார்த்தான்.

சுவலட்சுமி “என்னை நீங்கன்னுல்லாம் கூப்பிட வேணாம். டீ போட்டுக் கூடக் கூப்பிடலாம்” என்று இடைவெளியை அழித்தாள்.

“நாங்க  வழக்கமா அப்படிதான்கூப்பிடறது  கொஞ்சநாள்உன்கிட்டே ஜென்டில்மேனா காமிச்சுக்கலாம்னுதான்” என்று நானா சிரித்தான்

சுவலட்சுமி அவனிடம் “அதேமேரி நானும் டா போட்டுக் கூப்பிடுவேன்” என்றாள்.

“டேய் விச்சா! இவளை நம்பக் கூடாதுடா” என்றான்  பப்லு

விச்சா முகத்தில் கேள்விக்குறியுடன் அவனை நோக்கினான்.

“நைசா பாஸையே வாடா போடான்னு கூப்பிடப் பாக்கறா!” என்றான்  பப்லு.

விச்சா நானாவை அறிமுகப்படுத்திய போது “மாயவரமா உங்களுக்கு?” என்று கேட்டாள். “நான் பொறந்த ஊர் ஆக்கூர்” என்றாள் .

“ஆக்கூரா, அங்க என் சித்தப்பா பாங்க் மேனேஜரா இருக்கறப்போ நான் அடிக்கடி வருவேன்” என்றான் நானா. நானாவுக்குப் பத்து வயதாகும் போது அவன் சித்தப்பா ரிட்டையர் ஆகி விட்டார். 

“அது என்னோட பிறந்த ஊர்னுதான் பேர். நான் போய்ப் பாத்ததே இல்லே

எங்கப்பா திருச்சிலே செட்டில் ஆகி ரொம்ப வருஷம் ஆச்சு. நான் படிச்ச தெல்லாம் திருச்சிலேதான். ஹோலிக்ராஸ்” என்றாள்.

ஹோலி கிராஸ் காலேஜில் தன் ஒன்று விட்ட அக்கா லெக்சரராக இருப்பதை விச்சா சுவலட்சுமியிடம் சொல்லவில்லை.

அவர்கள் பேசிக் கொண்டே டிபன் சாப்பிட்டார்கள். முடிந்ததும் நண்பர்களை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு விச்சா சுவலட்சுமியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான்.        

விச்சாவிடம் “மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா” என்றான்  பப்லு  ஏதோ முந்திய மாலையில்தான் மகாலக்ஷ்மியைப் போய்ப் பாற்கடலில்  பார்த்து விட்டு வந்த மாதிரி.

“யாரு?”என்று கேட்டான் விச்சா.

“சுமிதான்.”

“சுமியா?”

“ஆமா சுவலட்சுமிங்கறது ரொம்ப நீளமா இருக்கில்ல? என்றான் பப்லு.

“சூன்னு கூப்பிட்டா இன்னும் ஷார்ட்டா இருக்குமே?” என்றான் நானா.

விச்சா வாய் விட்டுச் சிரித்தான்.  பப்லு காயமுற்றவன் போல முகத்தை வைத்துக் கொண்டான்.

“சரி, சுமின்னே கூப்பிடலாம். ஸ்டைலாவும் இருக்கு” என்றான் விச்சா.

  “மகாலட்சுமி மாதிரி இருக்காளா? அப்ப சரி, தினமும் வந்து பாத்து வேண்டிண்டு நமஸ்காரம் பண்ணிட்டுக் கிளம்பு” என்றான் நானா.

பப்லு விரோதமாக அவனைப் பார்த்தான்.

“தினமும் நீதான் அவளை வீட்டில் கொண்டு போய் விடறயா?” என்று நானா விச்சாவிடம் கேட்டான் 

“ஆமா. ஆனா எனக்கு ஆபீஸ் விடற சமயத்தில வேற ஏதாவது வேலைன்னா அவ பஸ்லே போயிடுவா” என்றான் விச்சா.

“பாவம்” என்றான் நானா. 

“எதுக்கு?” என்று கேட்டான் விச்சா.

“இந்த பஸ்க்கு வெயிட் பண்ணிண்டு ஏறி அப்புறம் பஸ்க்குள்ள இடிச்சிண்டு கசங்கிண்டு போகணுமே” என்றான் நானா.

“நீ பேசாம ஒரு கார் வாங்கிட்டேன்னா காலம்பறவும் சாயந்திரமும் நீயே அவளை அழைச்சுண்டு வந்துட்டு கொண்டு போய் விட்றலாமே” என்று சிரித்தான்  பப்லு .

ஒரு நிமிஷம் பேசாமலிருந்து விட்டு “அது கூட நல்ல ஐடியாதான்” என்றான் நானா.

“என்னது, கார் வாங்கப் போறியா?” என்று அதிர்ச்சியுடன் விச்சா கேட்டான்.

“இல்லே. நீ என்னிக்கெல்லாம் அவளைக் கூட்டிண்டு போக முடியலையோ,  அன்னிக்கி நான் உன்னோட ஸ்கூட்டரை எடுத்துண்டு போய் அவ வீட்டுலே விட்டுடறேன்” என்றான் நானா.

“அடேய் நானா, எங்க வீட்டுக்குப் பக்கத்திலே கொஞ்சம் கால் சரியில்லாம ஒரு பொண் டெய்லி பஸ்ல ஆபீசுக்குப் போய்ட்டு வந்திண்டு இருக்காடா. அவளுக்குக்  கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்” என்றான்  பப்லு 

“திமிருடா” என்று சிரித்தான் நானா. 

அடுத்த சில மாதங்களுக்கு இந்த நால்வர் கூட்டணி செல்லாத இடமில்லை. “எனக்குக் கமலஹாசன் படம்னா உசிரு. முதல் நாள் முதல் ஷோ போகணும்” என்றாள் சுவலட்சுமி ஒருநாள்.

மறுநாள் தேவி பாரடைஸில் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ரிலீஸ். விச்சா அவனது நண்பன் அலிடாலியா ராஜாராமனு க்குப் போன் பண்ணினான். தேவி பாரடைஸ் ஓனரின் அக்கா பையன் -அடிக்கடி வெளிநாடு போகிறவன் – ராஜாராமனின் நெருங்கிய நண்பன். மறுநாள் நான்கு பேரும் முதல் ஷோவில்  சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு கமலஹாசன் வறுமையில் வாடுவதைப் பார்த்து ரசித்தார்கள்.

ஒரு தடவை  பப்லுவின் செல்வாக்கில் பார்த்தசாரதி சபாவுக்குப் போனார்கள். கோமலின் பிரசித்திப் பெற்ற ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம். இடைவேளையில் சுவலட்சுமி “செம ட்ராமா இல்லே?” என்றாள்.

விச்சா அவளிடம் “முந்தா நேத்தி சோழால எங்க பாஸ் ஒரு பார்ட்டி கொடுத்தார். அவர் மியூசிக் அகடெமிலே பிக் ஷாட் இல்லே. அவர் பிரெண்டு பிரெசிடென்ட் எலெக்ஷனுக்கு நிக்கறார்னு பார்ட்டி. அங்கே நான் அனந்துவைப் பாத்தேன். ஏதோ பேசிண்டு இருக்கறச்சே அவர் பாஸ் கே.பி. இந்த நாடகத்தை சினிமாவா எடுக்கறதுக்குக் கோமல் கிட்டே பேசிருக்கார்னு சொன்னார். இப்பவே சொல்றேன், நாடகத்தைப் போல அந்த சினிமாவும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுதான்” என்றான்.

அவர்கள் மாதந்தோறும் மாலையில் நடக்கும் இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களுக்குப்  போனார்கள். கூட்டம் முடிந்த பின் வெளியே உள்ள புல்வெளியில் உட்கார்ந்து கொண்டு அன்றையக் கூட்டம் பற்றிக் கேலியாக, பாராட்டாக, கோபமாகப் பேசுவார்கள். 

“மொதல்லே இந்த குரூப்பிசம் ஒழியணும்டா நானா” என்பான்  பப்லு. “இன்னிக்கிப் பாரேன், மூணு பேரா சேந்துக்கிட்டு பேச வந்தவனைப் பேசவே விடலே. ஒரே கூச்சல்.” 

இன்னொரு நாள் “மனித நேயம், மனித குல சுதந்திரம்னு பேசி சாவடிச்சிட்டாங்க  இன்னிக்கி. இங்க நின்னு நீ தோழரா  பேசிகிட்டு இருக்கிறச்சே அவன் மாஸ்கோலேந்து ஆப்கானிஸ்தானை அடிச்சிப் புரட்டிப் போட்டுக்கிட்டு இருக்கான்” என்றான் நானா.

திடீரென்று நினைத்துக் கொண்டு பீச்சுக்குப் போவார்கள். “இன்னிக்கி ஹாலிடே தானே! நல்ல கலர்ஸ்லாம் வரும். வாங்கடா பீச்சுக்குப் போகலாம்” என்று விச்சா சொல்வான்.

“ஆமா. எனக்கும் மூணு மூஞ்சிகளையே பாத்துப் பாத்து ரொம்ப போரடிச்சிருச்சு.  கண்ணுக்குக் குளிர்ச்சியா நல்லா நாலு இளம் சிங்கங்களைப் பாத்துட்டு வரலாம்” என்று சுவலட்சுமி எழுந்திருப்பாள்.

“இப்பிடியெல்லாம் எங்க ஊர்லே இருக்க முடியாது. மூணு பசங்களுடன் ஒரு பெண்ணான்னு அடுத்தாத்து மாமி எங்காத்து ஜன்னல் மேலே காதை வச்சிண்டிருப்பா. அவ ஆத்துக்காரர் கண்ணு எங்காத்து வாசல் மேலே இருக்கும்”  என்று ஒரு நாள் சுவலட்சுமி சொன்னாள். “இதனாலதான் ஐ லவ் மெட்ராஸ்.” 

இதைப் போலப் பேசிக் கொண்டும் ஏதாவது கொறித்துக் கொண்டும் போய் வந்து கொண்டும் மணி போவதே தெரியாது இருப்பார்கள். அவர்கள் கிளம்ப ஒன்பதுமணி, பத்து மணி ஆகி விட்டால், மூவரில் ஒருவர் அவளை வீட்டில் விட்டு விட்டுச் செல்லுவது வழக்கம்.

 இந்த நட்பு ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகியிருக்கும். ஒரு சனிக்கிழமையன்று  சுவலட்சுமி “எனக்கு மேரேஜ் நிச்சயமாயிருக்கு” என்று சொன்னாள். அப்போது அவள் கதைகளில் வரும், சினிமாவில் காண்பிக்கும் நாணத்தைத் தூக்கி எறிந்திருந்தாள். பிறகு கைப்பையில் இருந்து திருமணப் பத்திரிகைகளை எடுத்து அவர்களிடம் கொடுத்தாள்.

விச்சா “கங்கிராட்ஸ்” என்றான். பப்லு “ஒரு ஸ்வீட் கூடக் கொடுக்காம இப்படிச் சொன்னா எப்படி?” என்றான். “கிரேட்! நாளைக்கி சண்டே பாம்குரோவ்லே நீ லஞ்ச் கொடுக்கிறே” என்றான் நானா. 

நானா அவளுக்குத் திருமணப் பரிசு என்று ஒரு சோனி வாக்மன்கொண்டுவந்தான். “என்னோட பிரெண்டும்  அவங்க க்ரூப் ஆர்டிஸ்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போய்  ஜப்பானிலே எக்ஸிபிஷன் நடத்திட்டு வந்தாங்களாம். அவன் எனக்கு இதை வாங்கிட்டு வந்தான்” என்றான் பெருமையாக. 

“நான்லாம் சாதாரணந்தாம்ப்பா. காஞ்சிபுரத்திலே சொல்லி ஒரு பட்டுப் புடவை வாங்கினேன்” என்று பப்லு ஒரு பையைப் பிரித்துக் காட்டினான். பூப்போட்ட லேசான சிவப்பு பார்டருடன் பளீர் மஞ்சளில் அழகாக இருந்தது அந்தப் புடவை.

விச்சா அதைப் பார்த்து விட்டு “சூப்பரா இருக்குடா. ஆனா இந்த டிசைனை எங்கியோ நான் பாத்திருக்கேனே !” என்றான். .  

நானா “வறுமையின் நிறம் சிவப்பு!” என்றான். “சுவலட்சுமி இப்ப மகாலக்ஷ்மிலேந்து ஸ்ரீதேவியாயிட்டா.” 

பப்லு சிநேகிதனின் வயிற்றில் குத்தினான்.

“அது சரி, நீ என்ன கொடுக்கப் போறே?” என்று  பப்லு விச்சாவிடம் கேட்டான்.

 

அவ கல்யாணத்துக்கு பதினஞ்சு நாள் லீவு கேட்டிருக்கா. கொடுத்துடலாம்னு இருக்கேன்” என்றான்.

“பாஸ் புத்தியக் காமிச்சிட்டியே” என்றான் நானா.

விச்சா சுவலட்சுமிக்காக வாங்கி வைத்திருந்த லேடீஸ் வாட்சைக் காட்டினான்.

நண்பர்கள் மூவரும் சுவலட்சுமியின் கல்யாணத்துக்குச் சென்றார்கள். திருமணம் முடிந்த பின் சாப்பிட்டு விட்டுத் திரும்பி வரும் போது மணமேடையில் இருந்த சோபாவில் உட்கார்ந்திருந்த தம்பதியின் அருகில் சென்றார்கள். மூன்று நண்பர்களும் தங்கள் பரிசுகளை சுவலட்சுமியிடம் கொடுத்து வாழ்த்தினார்கள். சுவலட்சுமி அவளது கணவனிடம் அவர்களைக் காட்டி “இவர் என் பாஸ் விஸ்வேஸ்வரன், இவங்க ரெண்டு பேரும் அவரோட பிரெண்ட்ஸ் நாராயணன், பாலசந்திரன்” என்று அறிமுகப்படுத்தினாள். 

 

 

 

 

 

 

    

 

 

உலக இதிகாசங்கள் – கில்காமேஷ்

                                 களிமண் தட்டில் எழுதப்பட்ட முதல் இதிகாச காவியம்) 

(கில்காமேஷ்)                                                   (என்கிடு) 

உலகக் காவியமான கில் காமேஷ் பற்றித் தெரிந்துகொள்ளுமுன் உலக வரலாற்றை விளக்கும் இந்த வீடியோவில் முதல் 15 மிமிடம் பாருங்கள்.  உங்களை உலுக்கிப் போட்டுவிடும். 

 

 

இன்றைய நாகரிக மனிதன் அவ்வப்பொழுது கேட்கும் ஒரு கேள்வி !

உலகத்தில்  முதல் நாகரிகம் தோன்றிய இடம் எது?

தேசப்பற்றும் இனப்பற்றும் கொண்டவர் அனைவருக்கும்  தங்கள் நாடு- தங்கள் மொழி – தங்கள் கலாசாரம் – தங்கள் நாகரிகம்தான் முதலில் தோன்றியிருக்கும் என்ற எண்ணம்  இருக்கும்.  அப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்ற என்ற விருப்பத்தில் விளையும் எண்ணம் . அதில் தவறில்லை.

இந்தியாவில் இருக்கும் நம் அனைவருக்கும் வேத காலம்தான் ஆதியில் தோன்றிய காலம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

தமிழகத்தில் பிறந்த நமக்கு ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய  மூத்த குடி’  என்ற எண்ணமும் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

ஆனால் வரலாற்று ஆசிரியன் உண்மையான ஆராய்ச்சியின்  அடிப்படையில்தான் செல்லவேண்டும்- சொல்லவேண்டும்.

கோர்டன் சைல்ட் (Gordon Childe) என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் பத்து அளவுகோல்களை முடிவு செய்தார். இவற்றின் அடிப்படையில்தான் நாகரிகங்களை அளக்கவும், ஒப்பிடவும் வேண்டும் என்று கூறினார்.

அவர் குறிப்பிடும் அம்சங்கள்:

1)நகரக் குடியிருப்புகள்

2)தேர்ந்தெடுத்த சில தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல்

3)தேவைக்கு அதிகமான உற்பத்தி

4)வரையறுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகள்

5)அரசாங்க அமைப்பு

6)பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பெரிய கட்டடங்கள்

7)தொலைதூர வாணிபம்

8)கலைப் பொருட்கள்

9)எழுத்துக்கள், இலக்கியம்

10)கணிதம், வடிவியல் (Geometry) வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி.

(நன்றி: விக்கிபீடியா – https://ta.wikipedia.org/wiki/)

உலகின் நாகரிகங்கள் நதிக் கரைகளில்தான் தோன்றின.

யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றைய ஈராக்கின் பெரும்பகுதி அன்று சுமேரியா, மெசபடோமியா, பாபிலோனியா என்றெல்லாம் அறியப்பட்ட  நாகரிகங்கள்.

இந்தியாவின் சிந்து நதிப் படுகைகளில் தோன்றியது  சிந்து சமவெளி நாகரிகம் மொகஞ்சாதரோ , ஹாரப்பா போன்ற இடங்களில் நடந்த அகழ்வு ஆராய்ச்சிகள் இந்த நாகரிகத்தைப் பறை சாற்றுகின்றன.

எகிப்தின் நைல் நதியில் படர்ந்த நாகரிகமும் பழமையான நாகரிகங்களில் ஒன்று.

தமிழ் கூறும் நல்லுலகம் குமரிக்கண்டம்  , லெமூரியா என்ற ஆஸ்திரேலியா முதல் இந்தியாவரை  இருந்து  பின்னர் அழிந்த மாபெரும் நிலப்பரப்பு பற்றி  பேசுகிறது.

இன்கான், மாயன் ,கிரேக்க,  ரோம  சீன நாகரிகங்கள் போன்று  எத்தனையோ நாகரிகங்கள் உலகில் தோன்றியிருக்கின்றன.

ஆனால்  நாகரிக வளர்ச்சின் முதல் பங்கு மற்ற நாகரிகத்தை அழிப்பதுதான் போலும்.  இந்த ஆதிக்க எண்ணம் பழைய நாகரிகத்தை  அழித்துப் புது நாகரிகத்தை உருவாக்குகிறது. கற்காலம் முதல் இன்றுவரை இது தொடர்ந்து வருகிறது.

இன்றைக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ‘நாகரிகத்தின்  தொட்டில்’ ( Cradle of Civilisation)  என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுவது  யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்த  மெசபடோமியா நாகரிகத்தைத்தான்!

இங்குதான் உலகின்  முதன்முதலில் நாகரிகம் தோன்றியற்கான வரலாற்றுச்  சான்றுகள்  உள்ளன.

சுமேரியா நாகரிகம் என்பதே அதன் பெயர். சுமேரியா என்ற மொழி பேசிய  சுமேரியர்களே  நாகரிகத்தின் முன்னோடிகள்   என்று அழைக்கப்படுகின்றனர். .

தென்  மெசபடோமியாவே சுமேரியா என்று கருதப்படுகிறது.

இந்த நாகரிகம்  கிமு 4000 ஆண்டு முதல் கிமு 3000  ஆண்டு வரை  எழுச்சியுடன் காணப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

செப்புக் காலம் மற்றும் ஆரம்ப வெண்கல காலத்தில்  சுமேரியா இருந்தது.

இங்கு வேளாண்மையும், பாசனமும் சிறந்து விளங்கின.

யூப்பிரட்டீஸ், டைகிரிசு என்னும் இரு ஆறுகளையும்  நீர்பாசனத்திற்காக பயன்படுத்தினர்.

முதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களைச் சாரும். சுமேரியர்கள்  நூல் நிலையங்களையும் உருவாக்கினர்.

சுழலும் சக்கரத்தைக் கண்டறிந்தனர்

காலத்தை 60 நொடிகளாகப் பிரித்ததும் சுமேரியர்களே.

இப்படிப்பட்ட சுமேரிய நாகரிகத்தின் பழமையான இதிகாசங்களில் கில்காமேஷ் (GILGAMESH) என்ற அரசனைப் பற்றிய கதைகள்   மிகவும் பிரசித்தி பெற்றது.  அவன் பாதி மனிதன் பாதி இறைவன். ! மெசபடாமியா நாட்டைக் காக்க வந்த  தலைவன் ! இறப்பில்லாத தன்மை கிட்டவேண்டும் என்பதற்காகப் போராடியவன்.

( நம் அசுரர்கள் அனைவரும் இதைத்தானே விரும்பித் தவம்  செய்தார்கள்.  சுமேரியாவிற்கு முன்  அஸ்சிரியா  என்ற ஒரு பிரதேசம் இருந்தது வடக்கு மெசபடாமியாவில். அங்கே அசுர் என்ற ஊரும் இருந்தது. அங்கேயிருந்த வந்தவர்கள்தான் நம் இதிகாசங்களில் வரும் அசுரர்களா  புரியாத புதிர் .

மேலும் சுமேரியாவிவில் ‘ஊர்’ என்ற பெயரில் ஒரு நகரம் இருந்தது.  ஊர் என்பது தமிழ்ப் பெயர் அல்லவா ?   அது எப்படி அங்கே? புரியாதபுதிர்) )

கில்காமேஷ் புராணம் 

கில்காமேஷ் (சுமேரியா கி.மு 3000)

கில்காமேஷ் உலகத்திலே எழுதப்பட்ட புராதன கதைகளில் மிகவும் பழமை வாய்ந்தது.இது வரைக்கும் கண்டுபடிக்கப்பட்ட அகழ்வுகளின் படி இது தான் மிகவும் பழமையான எழுத்து வடிவிலுள்ள கதை.

சுமேரியாவிலுள்ள உருக் தேசத்தை ஆட்சி செய்த அரசன் கில்காமேஷ் பற்றியும், அவன் நாட்களில் நடந்த வெள்ளப்பெருக்கைப்பற்றியும் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது.

(உண்மையில் இப்படி ஒரு அரசன் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லாவிட்டாலும், இவனையும் சுமேரிய அரசர்கள் வரிசையில் சேர்த்திருக்கிறார்கள்.)

கில்காமேஷின் கதை 12 களி மண்தகடுகளில் எழுதப்பட்டிருக்கின்றது. எழுதப்பட்ட மொழி அக்காடியா. உருக் எனும் வார்த்தை தான் பிற்காலங்களில் ஈராக் என்று திரிபு பெற்றது.கில்காமேஷ் என்பவன் மூன்றில் இரு பங்கு கடவுள், ஒரு பங்கு மனிதன்.

நோவாவின் கதை ஜலப்பிரளயத்திற்கு பின்பு மக்கள் மத்தியில் பேச்சு வழக்கில்  இருந்தது. அதுவே கில்காமேஷ் ஆக திரிபு பெற்று அக்காடிய மக்களின் ஆட்சியல்  மொழியில்  எழுதப்பட்டது. ஆனால் கில்காமேஷ் ஒரு சுமேரிய மன்னன்.

கில்காமேஷ் கவிதைகளில்  மட்டுமல்ல உலகத்தின் சகலபுராதன மொழிகள் அனைத்திலும் உலகம் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட கதைகள் உண்டு.

இதைத்தான் இந்தியாவில் பிரளயம் என்றும் சொல்கிறார்கள்.

தமிழில்கூட அப்படி கதை ஒன்று இருக்கின்றது. முதலாவது தமிழ்ச்சங்கம் மகா பிரளயத்தினால் குமரிக்கண்டத்தில்  தண்ணீருக்குள் அமிழ்ந்ததென்றும், அதிலிருந்து தப்பிய மக்கள்கபாடபுரத்தைத் தலை நகராகக்கொண்டு  இரண்டாவது தமிழ் சங்கத்தை தொடங்கினார்கள் என்றும், பின்பு குமரிக்கண்டத்தின் மற்றப்பகுதியும் மூழ்கையில், இளவரசன் திருமாறன் தமிழ் நாட்டிற்கு -தற்போது இருக்கும் மதுரைக்கு சில தமிழ் இலக்கியங்களை காப்பாற்றிக்கொண்டு, நீந்தி வந்தார் என்றும், தமிழில் உள்ள புராதான கதை சொல்கின்றது.

முதலில்,  கில்கேமேஷ் கொடூரமான  ராட்சச குணம் கொண்ட அரசராக  இருந்தான்.  உருக் மக்கள் தெய்வங்களின் வேண்டி  போர்க்குணமிக்க கில்கேமேஷை சமாதானப்படுத்தச் சொன்னார்கள்.  தெய்வங்கள் மக்களது வேண்டுகோளை ஏற்று அவனைத் தோற்கடிக்க   என்கிடு என்ற காட்டு மனிதனைப் படைத்தன. கில்காமேஷ் –  என்கிடு இருவருகக்கும் இடையே  சண்டை வெகுகாலம் நடந்தது.  இருவரும்  சமமான சக்தியைக் கொண்டிருப்பதை உணர்ந்தார்கள்.  அவர்கள் இருவரும் நண்பர்களாகி, பல புகழ்பெற்ற சாதனைகளை ஒன்றாகச் செய்தனர்.

ஒருமுறை அவர்கள் இருவரும் சிடார் நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே ஹுவாவா என்னும் கொடுமை வாய்ந்த ராட்சசகன்    மக்களுக்கு நிறையத்  தீங்குகள்  செய்துவந்தான். கில்காமேஷும் என்கிடுவும் சேர்ந்து அந்த  ராட்சதனைத் தோற்கடித்து அவன்  தலையை வெட்டினர்.  இதனால் இந்நேன்னா  என்ற தெய்வம்  அவர்களிடம் கோபமடைந்து,  ஒரு அற்புதமான காளையை உருக்கிற்கு அனுப்பின.  கில்கேமேஷ், என்கிடுவுடன் சேர்ந்து, காளையையும்  கொன்றுவிட்டார்கள். இது  கடவுள்களை மேலும் கோபப்படுத்தியது. கில்காமேஷுவைப் பழிவாங்க அவன் உயிருக்கு உயிராய் நேசித்த நண்பன் என்கிடுவை அந்தத தெய்வங்கள்  கொன்றனர்.

கில்காமேஷ் மனம் துடிதுடித்தது. இறப்பே இல்லாத வாழ்க்கையைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. நாடு நகரத்தை விட்டு வாழ்வில் சாவு இல்லாத  நித்தியத்தைப் பெற மிக நீண்ட  பயணம் மேற்கொண்டான்.

பயணத்தின் முடிவில் உட்னாபிஷ்டிம் என்ற மகானைச் சந்திக்கிறான். அவர் இறப்பிலிருந்து தப்பியவர். மகா பிரளயத்தின்போது கடவுளர் அருளால்  எப்படித்  தப்பினார் என்பதை  கில்காமேஷுக்கு விளக்கினார். நித்தியத்துவத்தைப் பெற இனி யாராலும் முடியாது என்ற தத்துவத்தையும்  கில்காமேஷுக்கு எடுத்துரைத்தார்.

கில்காமேஷ் மனம் உடைந்துபோனான்.    உட்னாபிஷ்ட் அவர்களிடம்  தான் உருக்  மக்களுக்காகச்  சேவைகளைப் பற்றியும் தான்  கட்டிய நீண்ட சுவரைப் பற்றியும் விவரித்தான் .

உட்னாபிஷ்ட் மனம் இறங்கி கில்காமேஷுக்கு இறவாவரம் தரக் கூடிய அதிசயப் புற்களை கொடுத்தார். 

கில்காமேஷ் மிக மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினான். வழியில் ஒரு  குளத்தில்  குளிக்கும்போது அந்தப் புற்களை ஒரு வயதான பாம்பு தின்று இளமையான பாம்பாக மாறிவிடுகிறது.  

விரக்தியின்  எல்லைக்கே போகிறான் கில்காமேஷ்.

சோகத்துடன் வரும் கில்காமேஷ் உருக் தேசத்து மக்கள் தனக்கு அளிக்கும் மரியாதையைக் கண்டு மன மகிழ்ச்சி கொள்கிறான். இனி மக்களுக்காக உழைக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறான். 

கொடுங்கோலனாக  போர் வெறியனாக முதலில் இருந்த  கில்காமேஷ் இப்போது மக்களின் நலன் காக்கும் அரசனாக மாறிவிட்டான். 

தன் 126 வது வயதில் இறந்து போகிறான் கில்காமேஷ். 

அதன் பின் உருக்  தேசத்து மக்கள் அவனைத் தெய்வமாக போற்றுகின்றனர். 

இது கில்காமேஷ் காவியத்தின் கதைச்சுருக்கம். 

இதன் இதிகாச வடிவையும் அதன் பெருமைகளையும் அடுத்தடுத்துப் பார்ப்போம். 

(தொடரும்) 

கேள்விக்குறி – டி வி ராதாகிருஷ்ணன்

Image result for விவசசாயியின் தற்கொலை

அந்தக் காட்சியை விடியலில் மச்சக்காளை தான் முதலில் பார்த்தான்.

சுப்பிரமணியம் ஊருக்கு வெளியில் ஒரு மரத்தில் தன் வேட்டியின் ஒரு முனையை மரத்தின் கிளையில் கட்டி..மற்றொரு முனையை தன் கழுத்தில் சுருக்காக்கி  அண்டர்வியருடன் தொங்கிக் கொண்டிருந்தான்.

தீப்பொறிபோல செய்தி பரவி ஊரே குடி விட்டது மரத்தருகே

“நல்லவனுக்கு இந்தக் காலத்திலே இதுதான் கதி”

“சுப்பிரமணிக்கு இப்படி ஒரு சாவு வர வேண்டாம்.”

ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கதிரவன் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல்தன் தட்சணாயனப் பாதையில் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

உச்சி வேளையில்தான் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது.ஜீப்பிலிருந்து ஒரு
போலீஸ்காரர் இறங்கிக் கூட்டத்தை விரட்டியடிக்க ஆரம்பித்தார்.

அவருக்கு பயந்து ஓடுவது போல ஓடிய கூட்டம் அவருக்குப் போக்குக்
காட்டிவிட்டு மீண்டும் சேர்ந்தது.

போலீஸ் விசாரணை ஆரம்பித்தது..”இதை முதல்லே பார்த்தது யார்?” அதட்டல்
குரலில் கேட்டார் ஜீப்பில் வந்திருந்த போலீஸ் அதிகாரி.

“மச்சக்காளைதேன்..மச்சக்காளைதேன்..”எனக் கூட்டத்தினரிடையே ஒரு சலசலப்பு ஏற்பட..அந்தக் கூட்டத்தைத் துளைத்துக் கொண்டு அந்த அதிகாரி முன் வந்து நின்றான் மச்சக்காளை.

“நான்தாங்க பார்த்தேன்..காலையில வெளிக்கு வந்தேனா அப்போதான் பார்த்தேன்”.

அந்த அதிகாரி அவன் சொன்னதைக் காது கொடுத்துக் கேட்டாரா என்று தெரியவில்லை.

அதற்குள் சுப்பிரமணியின் உடலை இறக்கிய இரு போலீசார்..அதைக் கீழே
கிடத்தி..இரு சாக்குப்பைகளைக் கொண்டு வரச் சொல்லி அதன் மேல் போர்த்தினர்.

இந்த அதிகாரி எப்போ விசாரணையை முடிச்சு, உடலை எப்போ பிரேத பரிசோதனைக்கு எடுத்துட்டுப் போய்…எப்போ நம்மக்கிட்டே கொடுப்பாங்க என்று பஞ்சாயத்துத் தலைவர் கவலைப்பட ஆரம்பித்தார்.

திடீடென போலீஸ் அதிகாரி, “இங்க பஞ்சாயத்துத் தலைவர் யாருய்யா?” எனக்
கேட்க பலவேசம் முன்னால் வந்தார்.

“என்னய்யா..நீர் இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிறீர்..யார் மேல் உமக்கு சந்தேகம்னு ஒரு லிஸ்ட் போட்டுக் கொடும்..உம்..அதுக்கு முன்னாலே நாலு இளநீ வெட்டி கொண்டு வரச் சொல்லு”

“ஐயா..இது தற்கொலைதானே..இதுக்கு யார் மேலே சந்தேகப்பட முடியும்?”
பலவேசத்தின் குரல் அவருக்கேகிணற்றின் உள்ளிருந்து பேசுவது போலக் கேட்டது.

‘ஓய்..இது கொலையா..தற்கொலையான்னு நாங்கதான் சொல்லணூம்..எதுக்கு
படிச்சுட்டு இந்த வேலைல இருக்கோம்..சரைக்கறதுக்கா?”

பலவேசம் சற்றே பயந்து விட்டார்,

அதைக் கவனித்த அதிகாரி..தன் தொனியைச் சற்றே குறைத்து “சரி..சரி..இறந்து
போன ஆளைப்பத்தி உமக்கு என்ன தெரியும்?.அவங்க குடும்பத்தைப் பத்திச்
சொல்லும்”என்றார்.

“ஐயா..சுப்பிரமணியம்..”போலீஸ்காரர் புருவத்தை உயர்த்த..”அதுதாங்க..இறந்து
போனவருடைய பெயர்.அவங்க குடும்பம் பரம்பரை..பரம்பரையாய் இந்தக்
கிராமத்தில்தான் இருக்காங்க”

பலவேசம் சொல்ல ஆரம்பித்தார்.

மாரிமுத்து கவுண்டர் அந்தக் கிராமத்திலேயே பெரிய நிலச்சுவான்தார்.அந்தக்
காலத்திலேயே பாதி பேருக்கு மேல் அவருடைய வயல்கள்தான் சாப்பாடு
போட்டன.பரம்பரைப் பணக்காரன்னாலும் அவரது மனம் லேசானது.ஏழ்மையை
உணர்ந்தது.மனித நேயம் மிக்கது.யார் இல்லை என்று வந்தாலும் வாரி வாரி
வழங்குவார்.அவர் வயலில் விதை விதைப்பதே ஒரு அழகு.முதலில் விதை
முகூர்த்தம் பார்ப்பார்.

முதலில் அவரது குடும்ப சோதிடர் பாம்பு பஞ்சாங்க சாஸ்திரிகளிடம்
போவார்.அவர் பஞ்சாங்கத்தைப் புரட்டு..புரட்டு எனப் புரட்டிப் பாத்துவிட்டு மனசில் பல கணக்குகளைப் போட்டுப் பார்ப்பார்.உதடுகள் மட்டும்
அசையும்.பின் ஒரு நல்ல நாளையும்..நேரத்தையும் குறித்துக் கொடுப்பார்.அது
கிட்டட்தட்ட காவிரியில் தண்ணீர் பொங்கி வரும் நாளை ஒட்டித்தான் வரும்.

சாஸ்திரிகள் தெரிந்துதான் நாள் குறிச்சுத் தருவாரா என்று தெரியாது.

நாள் குறித்து வந்த அன்று மாரிமுத்து ரொம்ப சந்தோஷமாக
இருப்பார்.வீட்டுக்குவந்து பெரிய பெண்ணானாலும் இன்னும் சின்னப்
பொண்ணுன்னு பெயரைத் தாங்கிக் கிட்டிருக்கும் மனைவியைக் கூப்பிட்டு..

“புள்ளே..பசிக்குது தட்டு வை” என்று சொல்வார்.

சின்னப் பொண்ணு தட்டு எடுத்து வைத்து..ஒரு லோட்டாவில் தண்ணீரும்
வைத்துவிட்டுச் சோறுப் போடுவாள்.”நீயும் உட்காரு..சேர்ந்தே சாப்பிடுவோம்” என அவளையும் பிடிவாதமாகச் சாப்பிட உட்காரவைத்துவிடுவார்.

விதை முகூர்த்தம் அன்று விடியலில் கணக்குப்பிள்ளை வந்து குரல்
கொடுப்பார்.சின்னப்பொண்ணு மாரியை எழுப்பி விடுவாள்.அவர் எழுந்து
கணக்குடன் காவிரியை நோக்கிச் செல்வார்.போகும் வழியிலேயே ஏதாவது ஒரு
ஆலமரத்திலிருந்து குச்சியை ஒடித்து பல்லை விளக்கிக் கொண்டே செல்வார்.

பொங்கிவரும் பொன்னியில் இறங்கி இடுப்பளவு தண்ணீர் உள்ள பகுதிக்குச்
செல்வார்.சூரியதிசையைப் பார்த்து மூழ்கி எழுவார். இடுப்புத்துணியை
அவிழ்த்து பிழிந்து தலையைத் துவட்டிக் கொள்வார். மெல்லக் கரையேறி அவசர..அவசரமாகத் துணியை இடுப்பில் கட்டிக் கொள்வார்.

படித்துறையை ஒட்டியுள்ள கோவிலுக்குச் சென்று கொஞ்சம் விபூதியை எடுத்து
வருவார்.அதை இடது உள்ளங்கையில் கொட்டி குனிந்து ஆற்றிலிருந்துப்சிறிது
நீரை வலது கையில் எடுத்து ஓரிரு சொட்டுகள் விபூதியில் இட்டுக் குழைத்து
நெற்றியில் மூன்று பட்டைகளாக இட்டுக் கொள்வார்.

நூல் வைத்தாற்போல இவரால் இப்படி விபூதி வைத்துக் கொள்ள முடிகிறதுஎன
வியந்து உடன் இருக்கும் கணக்கும் முயன்று பார்ப்பார்.அரிசிக் கஞ்சியை
நெற்றியில் வைத்துக் கொண்டாற் போலத்தான் இருக்கும்.

நெற்றி நிறைய விபூதியுடன் “முருகா” என கிழக்குத் திசையைப் பார்த்து பக்தி
சிரத்தையுடன் அவர் கும்பிடும்போது..என்றாவது ஒருநாள் விண்ணிலிருந்து
மயில் மீது முருகன் மாரிமுத்துவைக் காண இறங்கி வந்தாலும் வந்துவிடுவார் என கணக்கு நினைப்பார்.

முருகப் பெருமானிடம் அவருக்கிருந்த பக்தியால்தான் ஒரே குழந்தைக்கும்
சுப்பிரமணியம் என்று பெயரிட்டார்.

“முருகா இன்று விதை விதைக்கிறோம்..எந்த வித பாதிப்பும் இல்லாமல்..அமோக
விளைச்சலைத் தரணும்” என மனமுருக வேண்டுவார்.

வீட்டுக்கு வந்ததும்..குளித்து முடித்து விட்டு மஞ்சள் பூசிய முகத்துடன்,
தலைநிறையப் பூவுடன் சின்னப்பொண்ணு, குழந்தை சுப்பிரமணியையும்
தயார்ப்படுத்திவிட்டு நிற்பாள் கோயிலுக்குச் செல்லத் தயாராக.

“கோயிலுக்குப் போறதுக்கு முன்னால..ஒரு தம்ளர் நீராகாராமாவது
சாப்பிடுங்க..திரும்ப வர நேரமாயிடும் இல்ல”

“வேணாம் புள்ள..சாமி கும்பிட வெறும் வயித்தோடத்தான் போறது விஷேசம்”

“அப்ப..புறப்படலாம்னு கொல்லைக்கதவு நாதாங்கியைச் சாத்திவிட்டு  வாசல்கதவையும் பூட்டிவிட்டு ஊர் காக்கும் ஈஸ்வரன் கோவிலுக்குச் செல்வார்கள்.

கோவில் குருக்கள் இவர்களுக்காகவே சீக்கிரமாக வந்திருந்து கோவிலைத்
திறந்திருப்பார்.அதற்கும் முன்னமேயே கட்டைவண்டியில் அமாவாசை விதை
மூட்டைகளுடன் வந்திருப்பான்.குருக்கள் அர்ச்சனையை முடித்து தீபாராதனை
காட்டுவார்.இதன் நடுவே ஒரு படி அளவிற்கு விதைநெல்லைக் கோவில்
வாசல்படியில் அமாவாசை வைத்திருப்பான்.

பின் வண்டி வயலை நோக்கி விரையும்.மாரிமுத்து வயலின் கிழக்கு மூலைக்குச்
சென்று களைக்கொத்தியை ஓரடிக்கு ஓரடி நிலத்தைக் கொத்துவார்.

திருமணத்திற்குத் தயாராக இருக்கும் இளநங்கையைப் போல வயல் விளைச்சலுக்குத் தயாராயிருப்பதால் சுலபமாகக் கொத்தவரும்.

பின் கை..கையாக விதை நெல்லை எடுத்து வயம் முழுதும் தூவுவான் அமாவாசை.

அமாவாசையின் குடும்பம்தான் பரம்பரை பரம்பரையாக மாரிமுத்து கவுண்டரின் வயல்களில் விதை விதைக்கும் வேலைகளைச் செய்து வந்தது.

சாதி மதம் பார்க்காத அதிசய கிராமமாகவே அந்தக் கிராமம் திகழ்ந்தது.

காவிரியில் நுங்கும் நுரையுமாக புதுத் தண்ணீர் வர ஆரம்பிக்கும் சிலு..சிலு..என காற்று அடிக்க ஆரம்பிக்கும்.

நாளாக நாளாக நடவு நட்டு முடித்து நாற்றுகள் வேர்விடத் தொடங்கும்
மார்ழி.தை மாதங்களில் கதிர்கள் முற்றி வயல்கள் மரகதப் படுக்கையாகக்
காட்சி அளிக்கும்.

அறுவடை முடிந்ததும் தனக்கு வருஷத்திற்கு தேவையான நெல்லை
வைத்துக்கொண்டு,தன் வயல்களில் உழைத்த அனைவருக்கும் மீதத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிடுவார்.அவர்கள் வேலைக்கு எனத் தனிச் சம்பளம் கிடையாது.இருபது மூட்டை நெல்லை அன்னதானத்திற்காகக் கோவிலுக்குக் கொடுத்து விடுவார்.

காலச்சக்கரம் யாரையாவது கேட்டுக் கொண்டா சுழல்கிறது..சுழன்றது.

மாரிமுத்து கவுண்டர், சின்னப்பொண்ணு வயல்களை எல்லாம் சுப்பிரமணியமும் அவனுக்கு வந்த மனைவி தேவயானையும் பார்த்துக்
கொண்டனர்.

ஆனால் மாரிமுத்துக்கு இருந்தது போன்ற நிலைமை இப்போது இல்லை.எல்லாமே தலைகீழ்.

வருடத்திற்கு சில தினங்களே யானைக்குக் கோவணம் கட்டியது போல ஆற்றில்
தண்ணீர் ஓடுகிறது.எல்லாப் பாசனக் கிணறுகளிலும் மணல்தான் தெரிந்தது. வயலுக்குத் தேவையானபோது தண்ணீர் கிடைப்பதில்லை.ஆடிப்பெருக்கு
அன்றுகூட வாய்க்காலாகத்தான் நீர் ஓடுகிறது.புகுந்த வீட்டின் மீது அந்த
காவிரிப் பெண்ணிற்கு என்ன கோபம் என்றே தெரியவில்லை.

வறுமை..கிராமங்களில் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டது.கணக்குப்
பிள்ளை,அமாவாசை குடும்பங்கள் எல்லாம் வேறு வேலைத்தேடி நகாங்களுக்குச்
சென்றுவிட்டனர்.

எல்லோருக்கும் அள்ளி..அள்ளிக் கொடுத்த மாரிமுத்துவின் மகன்
சுப்பிரமணியமோ, குடும்பச் செலவுகளுக்காக நிலங்களை கொஞ்சம் .கொஞ்சமாக விற்க ஆரம்பித்தான்.காவிரியையும் நம்பமுடியாது..விண்ணையும் நம்ப முடியவில்லை வானம் பார்த்த பூமிக்கு.நிலங்கள் அடிமாட்டு விலைக்கே போயின.

பல நூறு ஏக்கர்கள்..இன்று ஏக்கரில் வந்து நின்றது.அதிலும் சுப்பிரமணியால்
விதைக்க முடியவில்லை.

சீதை, அக்கினிப்பிரவேசம் செய்த போது..பூமி பிளந்து அவளை உள்வாங்கிக்
கொண்டதாம்.இப்போது யார்..யாரை உள் வாங்குவது எனத் தெரியாமல் வயல்
முழுதும் பூமித்தாய் பிளந்து காணப்பட்டாள்.

ஆடுமாடுகள் வைக்கோல் ,தண்ணீர் இன்றி இறந்து விழ ஆரம்பித்தன.தமிழக
கிராமங்களில் சோமாலியா மக்கள் கண்ணில் தென்பட ஆரம்பித்தனர்.

இளமையில் வறுமை என்பதே என்ன என்று தெரியாத சுப்பிரமணியம்,மனைவி
தேவயானை..குழந்தைகளை காப்பாற்ற வழி தெரியாது விழித்தான்.

நீண்ட நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தான் சுப்பிரமணியம் பஞ்சாயத்துத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி..கண்ணில் பட்ட
மூக்கனிடம் கொடுத்து அவரிடம் கொடுக்கும்படி சொல்லிவிட்டு வீட்டை விட்டுப்
புறப்பட்டான்.

அடுத்த நாள் காலையில் மரத்தில் தொங்கும் அவனை மச்சக்காளைப் பார்த்தான்.

 

வியர்வை வழியும் தன் வழுக்கை மண்டையைக் கர்சீப்பால் துடைத்துக் கொண்டார் போலீஸ் அதிகாரி. பின், “எங்கேய்யா.. அவன் உங்ககு எழுதின கடுதாசு” என்றார் பலவேசத்தைப் பார்த்து.

பலவேசம் தன் ஜிப்பாவின் பாக்கெட்டிலிருந்து அதை எடுத்துக்
கொடுத்தார்.அதைப் படிக்க ஆரம்பித்தார் அதிகாரி..

அன்புள்ள தலைவர் அவர்களுக்கு,

என்னுடைய தகப்பனார் யார் பசி என்று வந்தாலும் இல்லையெனக் கூறாது ஊருக்கே அன்னம் படைத்தவர்.”சோழ நாடு சோறுடைத்து” “தஞ்சை தமிழகத்தின் நெற்களஞ்சியம்” என்பதெல்லாம் பொய்யாகி விட்டது. சோற்றுக்கே தஞ்சைத் தரணி தடுமாறத் தொடங்கிவிட்டது.

இவ்வளவு நாட்கள் என்னால்,தேவானையையும்,என் குழந்தைகளையையும் கௌரவத்தை விடாமல் காக்க முடிந்தது.இனியும் என்னாலதுபோல இருக்க முடியாது போல இருக்கு.இரந்தும் உயிர்வாழ வேண்டாதவன் நான்.அதனால் என் உயிரை முடித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டேன்.

இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் போது..என் உடலைத்தான் நீங்க பார்ப்பீங்க.

என்னை நம்பி வந்த தேவானியையும்,குழந்தைகளையையும் எப்படிடா விட்டுப்போக உனக்கு மனசு வந்த்து என நீங்க கேட்பீங்க..

எனக்குத் தெரியும்..என்னோட சாவுக்கப்புறம் ,அரசாங்கம் என் மனைவிக்கு
எதாவது பணம் தரும்.விவசாயி உயிரோட இருக்கப்போதைவிட செத்தாத்தானே
இன்னிக்கு மதிப்பு.அந்தப் பணத்தை வைச்சு அவ பொழச்சுப்பா.

ஆனாலும்..என் ஆத்மா இந்த கிராமத்தைத்தான் சுத்திக் கிட்டு
இருக்கும்…என்னிக்காவது பழய நாட்கள் திரும்பி வராதான்னு
ஆதங்கத்துடன்.அப்படி ஒருநாள் வருமேயானால்..இந்தக் கிராமத்தில் எதாவது ஒரு வீட்டில் நான் பொறந்திருப்பேன்.

உங்களுக்கும்..என் கிராம மக்களுக்கும் வணக்கம் கூறி..உலகத்துல இருந்து
விடை பெறுகிறேன்

இப்படிக்கு

சுப்பிரமணியன்

அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு அதை மடித்துத் தன் சட்டைப் பையில்
வைத்துக் கொண்டார் போலீஸ் அதிகாரி.

“ஐயா..அது எனக்கு எழுதிய கடிதம்”

“அது எனக்குத் தெரியும்..இது என் கிட்டேயே இருக்கட்டும்”

அதற்குள் ஒரு ஆம்புலன்ஸ் வண்டிவர சுப்பிரமணியம் என்ற பெய்ரைத்
தாங்கியிருந்த அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

மறுநாள் உடலை ஈமக்கிரியைக்கு தெய்வயானையிடம் ஒப்படைத்தனர். பலவேசமும் உடன் சென்றிந்தார்.

குடியைப் பற்றியே அறியா சுப்பிரமணியம் அதிகம் குடித்துவிட்டு வயிற்றுவலி
தாங்காமல் தற்கொலை செய்து கொண்டான் எனபோஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட்
சொல்லியிருந்தது.

பல கேள்விக்குறிகள் பதில் இல்லாமல் கேள்விக்குறிகளாகவே நின்று விடுகின்றன.

புஜ்ஜி-S.L. நாணு

         புஜ்ஜியின்றி அந்த வீட்டில் ஓரணுவும் அசையாது.

         இந்த நான்கு நாட்களில் நான் தெரிந்துக் கொண்ட உலக மகா உண்மை இது.

         காய் வாங்குவதிலிருந்து, சமையல் பண்ணுவதிலிருந்து, வீட்டை சுத்தப் படுத்துவதிலிருந்து, பேங்க் வேலை, ஈபி பில்.. இவ்வளவு ஏன் மஹாவுக்கு பூஜைக்கு ஏற்பாடு பண்ணுவது வரை எல்லாம் புஜ்ஜி தான்..

         பொதுவாக எல்லா வீடுகளிலும் விஷ்ணு சகஸ்ரநாமம் தான் ஒலிக்கும்.  ஆனால் அந்த வீட்டில் சதா சர்வ காலமும் புஜ்ஜி நாமம் தான்.

         “புஜ்ஜி என் ஷர்ட் எங்க?”

         “புஜ்ஜி காரைக் கொஞ்சம் கராஜுலேர்ந்து எடு.. சீக்கிரம்”

         ”புஜ்ஜி.. நைட் சப்பாத்தியும் குர்மாவும் பண்ணிரு.. மறந்துராதே”

         “புஜ்ஜி.. டெய்லர் கிட்டேர்ந்து என் டிரெஸ் வாங்கிட்டு வந்துரு”

         ”புஜ்ஜி.. கௌன் பனேக கரோர்பதி ரெகார்ட் பண்ணணும்.. மறந்துராதே”

          புஜ்ஜியும் சளைக்காமல். அந்த வீட்டில் ஒவ்வொருவர் இடும் கட்டளைகளுக்கு ஏற்ப ஓடிக் கொண்டே இருந்தான். சளைப்பு, அலுப்பு போன்ற வார்த்தைகள் அவன் அகராதியில் இல்லவே இல்லையோ என்று எனக்குப் பட்டது.

          மஹா என் பால்ய சிநேகிதி. பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றாக விளையாடி, ஒன்றாகப் படித்து, ஒன்றாக ஊர் சுற்றி, ஒன்றாக அரட்டை அடித்து..

          உண்மையில் நாங்கள் தான் முதல் உடன் பிறவா சகோதரிகள்.. அதன் பிறகு தான்… …

          எங்கள் நட்பைப் பார்த்து மதுரையில் நிறைய பேருக்கு பொறாமை உண்டு.. அந்தக் கண், இந்தக் கண் என்று பல கண்கள் எங்கள் நட்பைத் தாக்கியதன் விளைவு.. திருமணத்திற்குப் பிறகு இருவரும் வெவ்வேறு திக்கில் பிரிந்து விட்டோம்.. நான் கல்கத்தா வாசியானேன்.. மஹா ஜெய் பூரில் வாழ்க்கைப் பட்டாள். தொடர்பு விட்டுப் போனது..

          அவரவர் குடும்பம், குழந்தைகள் என்று கடந்து கடமைகள் முடிவதற்குள் நாற்பது வருடங்கள் ஓடி விட்டன. எதேச்சையாக முக நூலில் மஹாவின் பக்கத்தைப் பார்க்க.. பழைய நட்பு மீண்டும் துளிர் விட்டது..

          மஹா கட்டாயப் படுத்தியதன் பேரில்.. இதோ ஜெய்பூர் வந்து நான்கு நாட்கள் ஓடிவிட்டன..

          இந்த நான்கு நாட்களும் எங்களுடைய மலரும் நினைவுகளை விட என்னை ரொம்பவேக் கவர்ந்தது புஜ்ஜி தான்.. சுமார் இருபத்தி ரெண்டு வயது இருக்கலாம்.. சுமாரான உயரம்.. வெள்ளைக் காரர்களுக்கு சவாலான நிறம்.. எப்போதும் சிரித்த பிரகாசமான முகம்..

          ”புஜ்ஜி இந்த ஊர் காரன் தான்.. ஆனா நான் கொடுத்த டிரெய்னிங்ல.. பிரமாதமா தமிழ் பேசுவான்.. அதோட நம்ம சமையல், பழக்க வழக்கங்கள்.. எல்லாம் கத்துக் கொடுத்திருக்கேன்”

          இதைச் சொல்லும் போதே மஹாவின் முகத்தில் பெருமிதம்..

          புஜ்ஜியின் சமையலைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவன் கையில் அன்னபூரணி பர்மனெண்டாக டேரா அடித்து விட்டாளோ என்று கூட எனக்கு சந்தேகம் வந்து விட்டது.. நளபாகம் என்று நாம் சொல்வதெல்லாம் பழைய கதை.. இனிமேல் புஜ்ஜி பாகமாகத் தான் இருக்க வேண்டும்..

          நம் அவியல், பொறியல், கூட்டு (பூசணி, கடலை பருப்பு கூட்டின் ருசி இன்னமும் என் நாக்கை விட்டு அகலவில்லை.. எல்லாம் என் டிரெய்னிங் தான் என்று மஹாவின் ஜம்பம் வேறு), சாம்பார்.. எனக்கு இந்தக் கைப் பக்குவம் இல்லையே என்று வெட்கிப் போனேன்..

          இதோடு வட நாட்டு வகையராக்கள்.. கேட்கவே வேண்டாம்.. அசத்தலோ அசத்தல்..

          ”புஜ்ஜி.. புதன் கிழமை ராகு காலம் எப்போடா?”

          மஹாவுக்கு சின்ன வயதிலிருந்தே ராகுகால விஷயத்தில் குழப்பம் தான்.. நாற்பது வருடம் ஆகி இன்னமும் அது நீடிக்கிறது..

          “ராகு காலம் பன்னெண்டு லேர்ந்து ஒண்ணரை.. எம கண்டம் காலைல ஏழரைலேர்ந்து ஒன்பதுக்கு முடிஞ்சாச்சு.. இன்னிக்கு சாயங்காலம் 6.40 வரை விசாக நட்சத்திரம்.. அப்புறம் அனுஷம்.. சதுர்த்தி திதி அஞ்சு ரெண்டு வரை.. அப்புறம் பஞ்சமி.. சித்த யோகம்”

          திறந்த குழாயைப் போல் மட மடவென்று அடுக்கிக் கொண்டே போனான் புஜ்ஜி..

          “டேய் டேய்.. மெதுவாடா.. இவ்வளவு வேகமாச் சொன்னா நான் எப்படிப் பிடிச்சுக்கறது?.. நானும் ஜானுவும் நகைக் கடைக்குப் போகணும்.. அதான் கேட்டேன்”

          “இன்னிக்கு வேண்டாம்.. தங்கம் ரேட் இன்னிக்கு ரொம்ப அதிகமா இருக்கு.. இன்னும் ரெண்டு நாள் பொறுத்துக்குங்க”

          நான் ஆச்சர்யப் பட்டுப் போனேன்.. இந்த சின்ன மண்டைக்குள் இத்தனை விஷயங்களா? இவனுக்குள் இருப்பது மூளையா இல்லை கம்ப்யூட்டரா?

          மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்று திடீரென்று எனக்கு உரைத்தது.

          “மஹா.. நாளைக்குப் பிள்ளையார் சதுர்த்தி.. மாவு அரைச்சு ஏற்பாடு பண்ண வேண்டாமா?”

          “ஏன் கவலைப் படறே? நாளைக்குப் பிள்ளையார் சதுர்த்தின்னு  போன வாரமே எனக்கு புஜ்ஜி ஞாபகப் படுத்திட்டான்.. எல்லாம் அவன் பார்த்துப்பான்”

          எனக்கு சத்தியமாகப் புரியவில்லை.. மற்ற விஷயங்கள் சரி.. எப்படி கொழுக்கட்டை.. அதுவும் பூரணம் வைத்த மோதகம்?..

          குழப்பத்துடனேயே அன்றிரவு தூங்கிப் போனேன்..

          காலையில் எழுந்து குளித்து சமயலறைக்கு வந்த எனக்கு அதிர்ச்சி.

          மடியாக இடுப்பில் வேஷ்டியும், துண்டும் அணிந்து அடுப்பில் பூரணம் கிண்டிக் கொண்டிருந்தான் புஜ்ஜி.. பக்கத்தில் மாவு கிளறி தயாராக இருந்தது..

          “புஜ்ஜி.. இதெல்லாம் எப்போ?”

          “காலைல எழுந்து குளிச்சு மடியாப் பண்ணிட்டேன்.. பூஜை காரியம்லியா?”

          “நான் வேணும்னா மோதகம் பண்ணித் தரட்டுமா?”

          ”வேண்டாம் வேண்டாம்.. அதோ.. பால் சூடா இருக்கு.. பக்கத்துல டிகாக்‌ஷன் இருக்கு.. காப்பி மட்டும் கலந்துக்குங்க”

          என்றவன் பூரணத்தை பதம் பார்த்து இறக்கி வைத்தான்..

          நான் காப்பி குடித்தபடியே அவனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்..

          அழகாக.. ரொம்பவே நேர்த்தியாக.. அதே சமயத்தில் ரொம்பவே சுலபமாக புஜ்ஜி மாவை எடுத்து தட்டி அதில் பூரணம் வைத்து குவித்து.. மோதக வடிவம் கொடுத்து..

          நமக்கெல்லாம் ஒவ்வொரு மோதகமும் ஒவ்வொரு வடிவில் வரும்.. ஆனால் அச்சில் செய்தது போல் புஜ்ஜி செய்த மோதகம் ஒவ்வொன்றும் ஒரே மாதிரி இருந்ததை நம்ப முடியாமல் பார்த்தேன்..

          பிறகு அதை எடுத்து இட்லி தட்டில் வைத்து குக்கரில் வைத்து மூடி..

          உடனே பூஜை அறைக்கு விரைந்தான்..

          அங்கே சுத்தம் செய்து தனி பீடம் ஒன்றை அமைத்தான்.. அதில் பொடிக் கோலம் போட்டு நாயகமாக பிள்ளையார் சிலை ஒன்றை வைத்தான்.. அலமாரியிலிருந்து ஒரு ஜரிகை துண்டை எடுத்து பிள்ளையார் இடுப்பில் கட்டினான்.. உண்மையிலேயே பிள்ளையாருக்கு பஞ்ச கச்சம் கட்டியது போலிருந்தது.. பிறகு பிள்ளையாருக்கு பூணூல் அணிவித்தான்.. ஏற்கனவே வாங்கி வைத்திருந்த அழகான காகிதக் குடையைப் பொருத்தினான்.. தோரணம் கட்டினான்.. எருக்க மாலை அணிவித்து அருகம் புல்லை இரண்டு பக்கமும் சாய்த்து வைத்து..

          இதற்குள் சமயலறையிலிருந்து குக்கர் சத்தம் கேட்கவே உடனே ஓடி அடுப்பை அணைத்து விட்டு வந்து..

          பிள்ளையாருக்கு முன்னால் கன்யா கோலம் போட்டு.. பூஜைக்குத் தேவையான பாத்திரங்கள், புஷ்பம், அட்சதை, குங்குமம், சந்தனம், பால், கற்பூரம் எல்லாம் தயாராக எடுத்து வைத்தான்.. விளக்கில் புதிதாக திரி போட்டு எண்ணை விட்டான். வத்திக் குச்சியை பக்கத்தில் வைத்தான்.

          மஹாவின் கணவர் உட்கார்ந்து பூஜை செய்ய ஆசனம் எடுத்துப் போட்டான்.. அர்ச்சனை புத்தகத்தை எடுத்து வைத்தான்.

          நான் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன்.

          பூஜை முடிந்து கற்பூர ஆரத்தி காட்டும் போது

          ”வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்

                      மாமலராள் நோக்குண்டாம்

                      மேனி நுடங்காது –பூக்கொண்டு

                     துப்பார் திருமேனித்

                      தும்பிக்கை யான்பாதம்

                      தப்பாமற் சார்வார் தமக்கு.”

          கணீர் குரலில் பாடினான் புஜ்ஜி.  

          “மஹா.. போன ஜென்மத்துல நீ ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கே.. இல்லைனா புஜ்ஜி மாதிரி..”

          என்னை முடிக்க விடாமல் மஹா ஆரம்பித்தாள்.

          “இங்கிவனை யான் பெறவே.. என்ன தவம் செய்து விட்டேன்.. புஜ்ஜி.. எங்கிருந்தோ வந்தான்..”

           அழகாகப் பாடி முடித்தாள்..

           அன்று வடை, பால் பாயசம் என்று சமையலில் அமர்களப் படுத்தி விட்டான் புஜ்ஜி.

           அன்றிரவு கல்கத்தாவுக்கு போன் செய்து என் கணவரிடம் புஜ்ஜி புராணம் பாடினேன். கொஞ்சம் விட்டால் அவர் உடனே கிளம்பி புஜ்ஜியைப் பார்க்க ஜெய்பூர் வந்து விடுவார் போலிருந்தது.

           மறு நாள் நானும் மஹாவும் எலிக் கோவிலுக்குப் போவதாக ஏற்பாடு. சாப்பிட்டு முடித்து தயாராக நினைத்த போது தான் என் டிரெஸ்ஸை இஸ்தரி பண்ண வில்லை என்ற நினைப்பு வந்தது. ஆபத் பாந்தவன்.. அநாத ரட்சகன் புஜ்ஜி தான் என் நினைவில் முதலில் வந்தான்..

           “புஜ்ஜி.. புஜ்ஜி..”

           வழக்கமாக கூப்பிட்ட அடுத்த கணம் புஜ்ஜி ஆஜர் ஆகி விடுவான். ஆனால் நான் அழைத்ததும் அதிசயமாக அவன் வரவில்லை.

           மஹா தான் வந்தாள்.

           “புஜ்ஜி இல்லையே.. என்ன வேணும் ஜானு?”

           ”டிரெஸ் இஸ்தரி பண்ணணும்.. புஜ்ஜி எங்க போயிருக்கான்?”

           “இன்னிக்கு வெள்ளிக் கிழமையாச்சே.. மசூதிக்குப் போயிருக்கான்”

            நான் புரியாமல் கேட்டேன்.

            ”மசூதிக்கா? எதுக்கு?”

            “நமாசுக்குத் தான்..”

            நான் அதிர்ந்து போனேன்.

            ”என்ன சொல்றே மஹா?”

            “புஜ்ஜிங்கறது நாங்க செல்லமாக் கூப்பிடற பேர்.. அவனோட நிஜப் பேர் அக்மத்”

            உண்மையிலேயே என்னுடைய அதிர்ச்சி அளவிட முடியாததாக இருந்தது..

            புஜ்ஜி.. நமாஸ்.. அக்மத்..

            சமத்துவம் பேசும் பலருக்கு மத்தியில்..

            புஜ்ஜி.. என் கண் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றான்.

திரை ரசனை வாழ்க்கை  பாபநாசம் – எஸ் வி வேணுகோபாலன்

தூண்டுதலும் வேண்டுதலும் தோண்டுதலும் 

Image result for papanasam movie climax

மகன் நந்தாவோடு தற்செயலாகப் பார்த்தது தான் முதல் முறை. சொல்வது இந்தப் படத்தை அல்ல. கோடம்பாக்கம் லிபர்ட்டி எதிரில் ஒரு ஓட்டலுக்கு ஒரு மாலை நேரத்தில் இருவரும் சென்றிருந்த போது, மிக தற்செயலாக எதிரே வந்து அமர்ந்தனர் அவர்கள் இருவரும்.

பேச இருக்கும் படத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. சிற்றுண்டி உண்ண அங்கே வந்திருந்தவர்கள்.

அவர்கள் என்னை (இப்போதும்!) அறிய மாட்டார்கள். எப்படி அவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொள்ள என்றே துடித்திருக்க, அவர்கள் இருவரும் ஏதோ சாப்பிட ஆர்டர் கொடுத்துவிட்டு, ‘பேரு தான் அது, அந்த ஊருல எடுத்ததில்ல’ என்று அவர்களுக்குள் பேச ஆரம்பித்திருந்தனர். கணவனும் மனைவியும் ! மிகவும் ரசித்து அடுத்து அவர்களது பேச்சு போன திசையில், நாங்கள் கண்டுகொண்டோம், அவர்கள் அப்போதுதான் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்று – பாபநாசம் படத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் தான் ஓட்டலுக்குள் நுழைந்திருந்தனர்!

எழுத்தாளர் வண்ண நிலவனும் அவருடைய வாழ்க்கை இணையரும் !

படத்தின் வசனத்தில் தழைத்த வட்டார வழக்கு, கதையின் போக்கு குறித்த கிறக்கத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டோம்.

அந்த க்ளைமாக்ஸ் காட்சியை எத்தனை தடவை பின்னர் வீட்டில் வைத்து நந்தாவோடு கண்ணீர் மல்க ரசித்தாயிற்று.

நல்ல சினிமாவுக்கான நகர்வுகளில் நம் காலத்திய பாடங்களில் இது முக்கியமானது என்று தோன்றும். எத்தனையோ முறை ஆர்வம் உள்ளே விசிறி விட்டுக்கொண்டிருந்தாலும், இன்னும் மூலப்படமான திருஷ்யம் பார்த்ததில்லை. இத்தனைக்கும் மோகன்லால் உள்ளத்திற்கு நெருக்கமான திரைக்கலைஞர். கமல் இந்தப் படத்திற்கு வழங்கியிருக்கும் நடிப்பு உண்மையில் அசாத்திய ரசனைக்குரியது. கவுதமி போன்ற முக்கிய பாத்திரங்களில், துணை பாத்திரங்களில் நடித்தவர்கள் உள்பட ஒட்டு மொத்தக் குழுவும் செய்திருக்கும் பங்களிப்பு சிறப்பானது.

 

எழுத்தாளர் மதன், ஒரு தொலைக்காட்சி சானலுக்காக ( https://www.youtube.com/watch?v=4_UXnRuWwzc ), இந்தப் படத்தைப் பற்றிய சில முக்கிய அம்சங்கள் குறித்து, கமல்ஹாசனோடு நடத்தும் உரையாடலை மிக அண்மையில் பார்க்க நேர்ந்தது. அதில், கவுதமி நடிப்பை மிகவும் பாராட்டும் கமல், ‘தேவர் மகன் படத்திலிருந்து பாபநாசம் படத்திற்கு கவுதமி நிறைய பயணம் செய்து வந்திருக்கிறார்’ என்பது போல குறிப்பிடுகிறார். எனக்கு சகல கலா வல்லவன் கமல் நினைவுக்கு வந்தார்.

மிக எளிய கதை. ஆனால், நுட்பமாக அமைக்கப்பட்ட கதை.. படம் பார்ப்பவர்களுக்கு கிட்டத்தட்ட தெரிந்து விடுகிற, பின்னர் திடீர் என்று புதிராகிற, இறுதி வரை பார்க்க வைக்கிற த்ரில்லர் கதை.

மலையாளத்து ஜார்ஜ் குட்டி என்கிற நடுத்தர வயது பாத்திரம், இங்கே சுயம்புலிங்கம் என்று ஆனது. படத்தில் அசல் நெல்லை வட்டார வழக்கில், ச்சுயம்பு என்று எம் எஸ் பாஸ்கர் (சிறிய ஓட்டல் நடத்தும் சுலைமான் பாய் வேடம், அவரது நடிப்பு வரிசையில் குறிப்பிடத்தக்கது) அருமையாக விளிப்பார். தனியார் தொலைகாட்சி சானல்கள் வராத காலத்தில் முக்கிய தொழில்களில் ஒன்றான, அதுவும் சிற்றூர் மற்றும் சிறு நகரங்களில், டிவி ஆபரேட்டர் தொழிலில் இருப்பவர் தான் இந்த சுயம்புலிங்கம். அன்பின் அன்பான குடும்பம். காதல் மனைவி, உயிரின் கண்மணிகளாக கல்லூரிப் பெண், பள்ளிக்கூடச் சிறுமி என இரண்டு பெண் குழந்தைகள்.

பொழுதெல்லாம் கடையில், பார்ப்பதெல்லாம் பல மொழி திரைப்படங்கள், பேச்செல்லாம் சினிமா, இரவில் நேரம் கடந்த ஒரு கணத்தில் பார்த்த படம் ஒன்றின் உணர்வு தூண்டுதலில் இணைசேரும் ஜோரில் கூட்டை நோக்கிப் பறந்தோடிச் செல்லும் திரைப்பறவை சுயம்புலிங்கம்.

சிக்கனச் செட்டான அவரது குடும்ப பொருளாதாரத்தை அவ்வப்பொழுது தங்களது எளிய ஆசைகளை எடுத்துவைத்து அசைத்து நகர்த்தி மறுக்கிற அவரையும் கொண்டாட வைத்து குதூகலமாக போய்க் கொண்டிருக்கும் சராசரி வாழ்க்கை, தினசரி ஏடுகளில் பேசப்படும் எல்லைக்கு அவர்களை எது தள்ளுகிறது, பின் அவர்கள் வாழ்க்கை என்ன தள்ளாட்டத்திற்கு உட்படுகிறது என்பது தான் பாபநாசம்.

கல்லூரியில் சுற்றுப்பயணம் செல்லும் இடத்தில், அந்த இளம்பெண்ணைக் குளியலறையில் அவளறியாமல் மொபைலில் படமெடுக்கும் வெளியூர் கல்லூரி மாணவன் அவளைத் தேடி வந்துவிடுகிறான், பிறிதொரு நாளில். அவனது இச்சையைத் தீர்க்க மிரட்டும் அவனிடமிருந்து பெண்ணைக் காக்கக் குறுக்கே வரும் தாயையும் தகாத ஆசைக்கு அழைக்கும் அவனிடமிருந்து மொபைலைக் கைப்பற்ற அடிக்கும் தாக்குதலில் அவன் ஆவி போய்விடுகிறது.

முன் திட்டமிடுதல் அற்ற கொலை. பின்னர் வீடு திரும்பும் சுயம்புலிங்கம், பிணத்தையும், அந்த நிகழ்வையும், அதற்கான காரணங்களையும் வீட்டுத் தோட்டத்தில் ஆழக்குழி வெட்டித் தோண்டிப் புதைத்துவிடுகிறார். சத்தம் கேட்டு விழிப்புறும் கடைக்குட்டி அதைப் படபடப்போடு பார்க்கிறாள். பிறகு குடும்ப உறுப்பினர்கள் உள்ளத்தில் இருக்கும் அச்சத்தையும், நடுக்கத்தையும் தோண்டி எடுத்து அவர்களை மெல்ல விடுவித்து, தனக்குள் அவற்றைப் புதைத்துக் கொண்டு நடமாடும் சுயம்புலிங்கத்தை கமல் அப்படியே கொண்டுவந்து விடுகிறார்.

படத்தின் கதையைவிட அது நிகழ்த்தப்படும் விதம் முக்கியமானது. கதைக்கான காரணிகள் மிக இயல்பான விதத்தில் முன் கூட்டியே சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு சிறிய காட்சியும், வசனமும், உரையாடலும் கூடப் பின்னர் நடக்கும் விஷயங்களோடு செயற்கையற்ற தன்மையில் போய்ப் பொருந்தி விடுகின்றன. மனத்தை இலேசானதாக ஆக்கும் நகைச்சுவை பொறிகள் படத்தின் மிக அழுத்தமும், அதிர்ச்சியும், திருப்பங்களும் நிறைந்த திசையில் நகர்வது அறியாமல் ரசிகரைப் பிடிக்குள் வைத்துக் கொள்கின்றன. வேட்டியை ரசித்து நுனியைப் பிடித்து மெதுவாக நடக்கும் சுயம்புவோடு நடக்கும் ரசிகருக்கு சுலைமான் பாய் பார்த்தால் சிரிக்கவும், போலீஸ்காரர் கலாபவன் மணியைக் கண்டால் முகம் சுளிக்கவும் பழகி விடுகிறது.

இறந்துவிடும் இளைஞனின் தாய் காவல் துறையின் முக்கிய அதிகாரியாக இருக்க நேர்வது தான், விசாரணையை அத்தனை கெடுபிடிகளாக ஆக்குவது. அது தான் கதை. மிக ரசனையும், நினைவாற்றலும் மிக்க சினிமா ரசிகரால் நடந்த கொலையின் தடயங்கள் சாதுரியமாக இல்லாததுபோல் ஆக்கப்பட்டிருப்பதை, அந்த அதிகாரி ஊகித்து விடும் கட்டத்தில், விசாரணையின் மறுவாசிப்பு நடக்கிறது. ரகசியங்கள் கட்டவிழ்ந்துவிடுமோ என்று நாம் பதைபதைக்கும் இடத்திற்கு, சுயம்புவின் கடைக்குட்டி வாய் திறப்பது கொண்டு நிறுத்துகிறது. புதைக்கப்பட்ட இடத்தில் நடக்கும் தோண்டுதல், அதிகாரி நிரூபிக்க விரும்பியதை வெளியே கொண்டுவருவதில்லை, தனது எளிய குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றத் துடிக்கும் ஒரு சராசரி மனிதரின் உள்ளார்ந்த பாடுகள் தான் அங்கே வெளிப்படுகின்றன.

எங்கோ தொலைத்ததை, எங்கோ தேடி அலைவுறும் மனித வாழ்க்கை தான் பாபநாசம் ! தங்களது மகன் குறித்த அக்கறையைத் தொலைக்கும் பெற்றோர், அவனே இல்லாது போகும் ஒரு கணத்தில் தான் அவனைத் தேடவே தொடங்குகின்றனர். தங்களது அதிகார பலம் அதற்கு உதவாது என்பது அவர்களுக்கு பிடிபடுவதற்குள், அப்பாவிக் குடும்பம் ஒன்றைத் தீயில் வாட்டி எடுக்கிறது அந்த அதிகாரம். தனது பதவியில் நேர்மையைத் தொலைக்கும் ஒரு காவல்காரர் ஊரில் அடுத்தவர்கள் எல்லாம் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எல்லோரையும் தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறார்.

உயர் அதிகாரியாக வரும் ஆஷா சரத், இதை விடவும் அந்த பாத்திரத்திற்கான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்க முடியாது. இறுக்கமான சீருடை, காவல் துறையினரின் மனங்களையும் இறுக்கி விடுகிறது. அதற்கு எதிரான சாதாரண மக்களின் குமுறல் அவர்களை மேலும் கோபமுற வைக்கிறது. உண்மையை நெருங்குவதை விட, பழி வாங்குவது தான் எளிய உபாயமாக, காலகாலமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. சமூக கொந்தளிப்புகள் குறித்த அம்சத்தை, இந்தப் படம் ஆர்ப்பாட்டமின்றி காட்சிப்படுத்துகிறது. கலாபவன் மணி, அசாத்திய உழைப்பை, இந்தப் படத்திற்கு வழங்கி இருக்கிறார். சுயம்புவுக்கும் அவருக்குமான முன் விரோதம் என்பது ஒரு சமூக உளவியலாக உருப்பெற்றிருப்பது இந்தப் படத்தின் மிக மெல்லிய இழையால் நெய்யப்பட்டிருக்கும் அபார நுட்பம்.

சினிமா காட்சிகள், வசனங்களே வாழ்க்கையாக அனாயசமாக மேற்கோள் காட்டும் சில பேரை நினைவுறுத்தும் சுயம்புலிங்கத்தை நையாண்டி செய்தவாறு காதலிக்கும் – கொலை நிகழ்வுக்குப் பின் தத்தளிக்கும் – தடுமாற்றத்தினால் திண்டாடும் – காவல் துறை விசாரணையில் கண் முன்னே குழந்தைகள் படும் வேதனையும், கணவர் வாங்கிக்கொள்ளும் அடியும் உதையும் கண்டு செத்து செத்துப் பிழைக்கும் பாத்திரத்தை கவுதமி உயர்சிறப்பு நிலைக்கும் உயரே வைத்து செய்திருக்கிறார். பெரிய மகள் (நிவேதா) மிக மாறுபட்ட உணர்ச்சிகளை மிக இலகுவாக வெளிப்படுத்துகிறார் எனில், சிறுமி (எஸ்தர்) கண்களால் பேசிவிடுகிறார், உடல் நடுக்கத்தால் வெளிப்படுத்தி விடுகிறார். இன்னொரு காவல்காரர் பாத்திரத்தில் இளவரசு எப்போதும் போலவே சீரிய நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஓட்டல் பையன், டிவி கடைப்பையன் உள்ளிட்டு கலக்கி எடுக்கும் காட்சிகள் உள்ளிட்டுப் படத்தின் நகைச்சுவை அம்சம், பாட்டிலும் வெளிப்படும் தன்மை அசலாக இருக்கிறது. படத்தின் பாடல்களுக்கான இசை மட்டுமல்ல, பின்னணி இசையும் இது போன்ற படத்திற்கு மிகவும் முக்கியமானது. ஜிப்ரான் அதை அருமையாகச் செய்திருக்கிறார். நா முத்துக்குமார் எழுதி இருக்கும் இரண்டு பாடல்களுமே அருமையானவை. ஏ கோட்டிக்காரா (சுந்தர் நாராயண ராவ் – மாளவிகா) பாடலின் சுவை அலாதியானது. அதன் வரிகளும் கவித்துவக் குறும்பானவை, சில இடங்களில் கண்ணீர் துளிர்க்க வைப்பவை. வினா வினா (ஹரிஹரன்) பாடல், மிக மிக நுட்பமாக எழுதப்பட்டிருப்பது. முத்துக்குமார் மரித்த சோகம், இவற்றைக் கேட்கையில் மீண்டும் சூழ்ந்துவிடுகிறது.

மதனோடு இந்தப் படத்தின் மீது நடக்கும் உரையாடலில், ஜீத்து ஜோசப் திரைக்கதை, இயக்கம் என்றாலும், தமிழ் வடிவத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதவேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் ஏற்றுக் கொண்டது, அதையொட்டிய சில மாற்றங்களுக்கு உடன்பட்டது பெரிய விஷயம் என்கிறார் கமல். தாஸ்தாவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும் பற்றி குறிப்பிடுகிறார். அறியாமல் நிகழ்ந்தாலும் குற்றம் குற்றம் தானே என்கிறார். அதை, எப்படி சுயம்புலிங்கம் இறுதிக் கட்டத்தில் இறந்து போனவரின் பெற்றோரிடத்தில் ஒப்புக் கொள்கிறார் என்ற இடத்தில் மூலத்திலிருந்து கொஞ்சம் மாறுபடுகிறது என்பதையும் விளக்குகிறார். ஒட்டுமொத்தக் கதையை, க்ளைமாக்ஸ் காட்சியில் சொல்லிவிடுகிறார், அதிலும் வசனத்தை ஒட்டித் தமது உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்திய விஷயத்தையும் கமல் பேசுகிறார். தான் உள்பட அதன் படமாக்கத்தின்போது கண்கள் கலங்கி விட்டதையும் சொல்கிறார்.

தினேஷ் என்ற வாலிபர், கமல் வசனத்தைப் பின்னணியில் ஒலிக்கவைத்து, தாம் அதற்கு 100% உதட்டசைவு பொருத்தப்பாடு கொடுத்து உடல் மொழியும், முக பாவமும் முயற்சி செய்திருக்கும் யூ டியூப் காட்சி பாருங்கள், அந்தக் காட்சி எத்தனை ஈர்க்கத்தக்கதாக அமைந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

( https://www.youtube.com/watch?v=kyKVaOB8Sz8 ).

நடக்க இருந்த நாசத்தை ஓர் இளம் பெண்ணும், அவளுடைய தாயும் தடுக்கும் முயற்சியில் நிகழும் கொலை கூட பாவமாகிறது. அந்தப் பாவத்திலிருந்து வெளியேற பாபநாசம் குளத்து நீரைக் கும்பிட்டு கை தொழுது மன்றாடி நிற்கும் ஓர் எளிய மனிதனிடம் அந்தப் பெற்றோர் விடை பெறுகின்றனர். ஆனால், அந்த மனிதருக்கு விடுதலை, மரணத்திற்குமுன் இருக்கப் போவது இல்லை என்பது, புதைத்த பிணத்தை வேறெங்கே இடம் மாற்றி புதைத்தோம் என்பதைத் தமது மனைவிக்குக் கூட சொல்வதில்லை என்ற காட்சியில் பிடிபடுகிறது.

பாபநாச குளம், பாவத்தைத் தீர்க்க வேண்டிய தேவைக்காக, பாவம் செய்யாதோரின் கண்ணீரால் தான் வற்றாமல் நிரம்பிக் கொண்டிருக்கிறதோ என்று கூடத் தோன்றியது.

திருஷ்யம் இறுதிக் காட்சி

https://youtu.be/aI8m1VD69qE

 

பாபநாசம் இறுதிக் காட்சி

https://twitter.com/i/status/876349467833753600

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

பல்லவர் முடிவு

அன்று – பல்லவன் பல்லவி பாடினான் – பல்லவ வம்சம் பிறந்தது.
பின்பு – பல்லவன் சரணம் பாடினான் – பல்லவ வம்சம் சரித்திரத்தில் நிலைத்தது.
முடிவில்- பல்லவன் மங்களம் பாடினான் – பல்லவ வம்சம் மறைந்தது.

 

 

ஆதி ஒன்று இருக்குமானால் அந்தம் அன்று இருக்கத்தானே வேண்டும்?
மூன்றாம் நூற்றாண்டில் சோழரை வென்று ஆட்சியை அமைத்த பல்லவர்-
ஒன்பதாம் நூற்றாண்டில் அதே சோழரால் அழிந்த கதை இது.

அந்த முடிவுக்கு முந்திய கிளைமாக்ஸ் காட்சிகளை இன்று காணலாம்.
அந்த நாட்களில் – தமிழகத்தின் ஒரு ஐம்பது வருடச் சரித்திரம் பலவாரியாகக் குழம்பியிருந்தது. சரித்திர ஆய்வாளர்கள் டி வி மகாலிங்கம், கே ஆர் ஸ்ரீநிவாசன் மற்றும் பலர் இந்தக் காலச் சரித்திரத்தை அலசிப் பலவிதமான மாறுபட்ட முடிவுகளைக் கூறியுள்ளார்கள். அவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருவது இந்தக் கதை:

மூன்றாம் நந்திவர்மனின் முதல் மனைவி ‘சங்கா’. இவள் இராட்டிரகூட மன்னன் அமோகவர்ஷனின் மகள். இருவருக்கும் பிறந்த மகன் ‘நிருபதுங்கவர்மன்’.

மூன்றாம் நந்திவர்மனின் இரண்டாம் மனைவி ‘கந்தன் மாறம்பாவை’. இவள் பழுவேட்டரையரின் புதல்வி. இவர்களுக்குப் பிறந்த மகன் ‘கம்பவர்மன்’.

நந்திவர்மன் தனது ஆட்சிக்காலத்திலேயே நிருபதுங்கவர்மனை யுவராஜாவாக நியமித்து அவனைக் காஞ்சியின் மன்னனாகவே வைத்திருந்தான். கம்பவர்மனை வடபுலத்திற்கு ஆளுனராக நியமித்திருந்தான். கம்பவர்மன் கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் மகள் இளவரசி விஜயாவை மணம் செய்திருந்தான். இவர்களின் மகன் அபராஜிதவர்ம பல்லவன்.

மூன்று பல்லவர்களை அறிமுகம் செய்து வைக்கிறோம்.

 • .நிருபதுங்கவர்மன்
 • கம்பவர்மன்
 • அபராஜிதவர்மன்

இப்பொழுது சரித்திரச் சதுரங்கம் தொடங்குகிறது.

பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் மூன்றாம் நந்திவர்மனுடன் புரிந்த போர்கள் குறித்து நாம் முன்பே அறிவோம். பாண்டியன் ஸ்ரீவல்லபன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று இலங்கை மன்னன் சேனாவை வென்று வந்தான். பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு மாயப் பாண்டியன் என்பவன் முயற்சி செய்தான். அவன் இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனை அணுகி மதுரை மீது படையெடுக்குமாறு அவனைத் தூண்டினான். ஆக.. சேனாவின் மருமகன் -இரண்டாம் சேனா – பாண்டியனைப் பழிவாங்குவதற்குப் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். ஸ்ரீவல்லபன் தோல்வியுற்று போர்க்களத்திலிருந்து படுகாயங்களுடன் தப்பி ஓடினான். விரைவில் மரணமடைந்தான். இலங்கை மன்னன் மாயப் பாண்டியனை மதுரையில் ஆளும்படி வைத்துத் திரும்பினான். ஸ்ரீவல்லபனின் மகன் இரண்டாம் வரகுணன் – பல்லவன் நிருபதுங்கவர்மனது துணையை நாடினான். தந்தைகள் எதிரியாகப் போரிட்டிருந்தாலும் – தன் தேவைக்காகப் பல்லவனின் நட்பை நாடினான். பல்லவனுடைய கடற்படையைக் கோரினான். இருவரும் சேர்ந்து மாயப் பாண்டியனைத் துரத்தி விட்டு – இலங்கைக்கும் சென்று வென்றனர். கி பி 862 இல் இரண்டாம் வரகுணன் பாண்டிய மன்னனாக முடி சூடினான். இரண்டாம் வரகுணனும் நிருபதுங்கவர்மனும் நண்பர்களானர்.

நீங்கள் நினைக்கலாம்!
தென்னிந்தியா தான் அமைதியாகி விட்டதே!
மன்னர்கள் நண்பர்களாயினரே!
இனி என்ன பிரச்சினை?
சுபம் என்று போட்டு படத்தை முடிக்க வேண்டியது தானே!

ஆனால் தமிழகம் பெரும் புரட்சிக்குத் தயாரானது. தமிழக வானில் பழைய மேகங்கள் சில அலைந்து கொண்டிருந்தன. அவை ஒரு புதிய புயலாக மெல்ல வலுவடைந்து வந்தது. அந்தக் கதையை விரிவாகப் பிறகு சொல்வோம். இங்குச் சற்றே கோடி காட்டுவோம்.
விஜயாலய சோழன் பல்லவ – பாண்டிய அரசர்களுக்கு அடங்கிய சிற்றரசன். அவன் மகன் ஆதித்தன் மாபெரும் வீரனாக வளர்ந்தான்.

கி பி 877: சற்று பல்லவ அரசியல் பேசுவோம்.

நிருபதுங்கவர்மன்-வரகுணன் கூட்டணி – வளர்ந்து வரும் சோழர்களைத் தோற்கடித்தது.

கி பி: 884: கம்பவர்மன் நிருபதுங்கவர்மனை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான்.
இருவரில் யார் காஞ்சியில் எப்பொழுது ஆட்சி செய்தனர் என்பது சர்ச்சைக்குள்ளது. ஆனால் கம்பவர்மனது மறைவுக்குப் பிறகு அவன் மகன் இளவரசன் அபராஜிதன் பல்லவ அரசனானான். நிருபதுங்கவர்மனும் அபராஜிதனும் இருவரும் பல்லவ நாட்டை போட்டி போட்டுக் கொண்டு ஆண்டனர். அது எப்படி என்பது சரித்திரத்தில் பதியப்படவில்லை. இருவருக்கும் பகை முற்றியது.

இந்நிலையில் – பாண்டியன் – தமிழகத்தில் விஜயாயலயனின் ஆதிக்கம் வலுத்துவருவதை ஒடுக்கச் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தில் சோழர்களைத் துரத்தியடித்தான். விஜயாயலயன் அபராஜிதனிடம் உதவி நாடினான்.

கூட்டணிகள் அமைக்கப்பட்டன.
பகை மேகங்கள் கருக்கத் தொடங்கின.
இடி-மின்னல் வர ஆயத்தமானது

கி பி 879:
முதல் கூட்டணி:
நிருபதுங்கவர்மன் + பாண்டியன் வரகுணன்.

இரண்டாம் கூட்டணி:
அபராஜிதன் ஒரு மெகா கூட்டணி அமைத்தான்:
அதில் விஜயாலய சோழன் சேர்ந்தான். அபராஜிதனின் தாய் கங்க நாட்டு இளவரசி . அதனால் கங்க நாட்டு அரசன் முதலாம் பிரீதிவிபதி அவன் கூட்டணியில் சேர்ந்தான்.

 

திருப்புறம்பயம் போர்:

No photo description available.
இந்த பேரைக் கேட்டாலே தமிழக சரித்திரம் சற்று அதிரும்.
தமிழகத்தின் சரித்திரத்தை மாற்றி எழுதிய போர்க்களம். திருப்புறம்பியம் என்ற ஊர். கும்பகோணத்திற்கு வடக்கே கொள்ளிடத்துக்கும் மண்ணியாற்றுக்கும் இடையில் உள்ளது. அங்கு அந்தப் பெரும் போர் நடந்தது. முதுமையின் காரணத்தால் விஜயாலய சோழனுக்குப் பதிலாக இளவரசன் முதலாம் ஆதித்த சோழனின் தலைமையில் சோழ படைகள் போருக்கு வந்தன. இந்தப் போரில் நிருபதுங்கவர்மனின் பங்கு என்ன என்பது சரியாகப் பதியப்படவில்லை. (அபராஜிதன் நிருபதுங்கவர்மனின் மகன் என்றும் சில ஆராய்ச்சியாளர் கருத்து – ஒரே குழப்பம்!!)

இருதரப்பிலும் பல்லாயிரக் கணக்கான வீரர்கள் மாண்டனர்.
அரசர்களது பேராசையால் தான் எத்தனை மனிதர்கள் காலங்காலமாக அழிந்துள்ளனர்!
இந்தப் போரில் மடிந்தது பெரும்பாலும் தமிழரே!

Image result for திருப்புறம்பியம் போர்

கங்க மன்னன் பிருதிவிபதி பாண்டியர் படைகளைச் சூறையாடினான். இதைக்கண்ட பாண்டியன் சீற்றம்கொண்டு அவன்மீது பாய்ந்து அவனைக் கொன்று வீழ்த்தினான். ஆனால் மாள்வதற்குள் தன் வீரத்தால் பல்லவர் பக்கத்திற்கே வெற்றியளித்துவிட்டான். கங்கர்களின் உதயேந்திரக் கல்வெட்டு இச்செயலைப் பாராட்டி, ‘தன் உயிர் விட்டும் அபராஜிதனை (வெல்ல இயலாதவன் என்பது அப்பெயரின் பொருள்) அபராஜிதனாகவே ஆக்கிவிட்டான் என்று குறிக்கிறது. திருப்புறம்பியத்தில் இன்றும் முதலாம் பிருதிவிபதியை அடக்கம்செய்து நிறுவப்பட்ட பள்ளிப்படைக் கோயில் உள்ளது. தோல்வியடைந்த பாண்டியர்கள் மதுரை நோக்கிப் பின்வாங்கினர்.

 

இந்தக் கூட்டணிப் போர் முடிவில் ஆதாயம் யாருக்கு?
பாண்டியர் தோல்வியுற்றுத் தளர்ந்தனர்.
வெற்றி பெற்ற பல்லவரும் பல வீரர்களைப் பலி கொடுத்துத் தளர்ந்தனர். பல்லவர் படைபலம் இந்தப்போரால் மிகப் பலவீனம் அடைந்தது
கங்க மன்னன் இறந்து கங்கர்களும் தளர்ந்தனர்.
சோழன் மட்டும் சிறிய படை மட்டுமே அனுப்பியிருந்தான்.
ஆகவே.. சோழனுக்கு மட்டும் நட்டம் குறைவு. போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவியதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜிதன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத்தொடங்கினான். ஆதித்தன் சோழநாடு முழுவதையும் மீட்டுக் கொண்டான். போர் நடைபெற்ற பகுதியை இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். “உதிரம் வடிந்த தோப்பு” என்பது இன்று குதிரைத் தோப்பாக நிற்கின்றது.

திருப்புறம்பியப் போர் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தைத் தந்த போர். களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் முடிந்த பிறகு எழுந்த இரண்டு பேரரசுகளான பாண்டியர்களும் பல்லவர்களும் தங்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குள் 27 முறைப் போர் புரிந்தனர் என்பது வரலாறு. இந்தப் போர்களினால் இரண்டு அரசுகளும் பலவீனமடைந்தன. திருப்புறம்பியப் போர் இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல், இரண்டு அரசுகளையும் உருக்குலைத்தது.

ஒரு நண்பன் பகைவனாக எத்தனைக் காலம் பிடிக்கும்? சரித்திரம் காலம் நேரம் எதுவும் பார்ப்பதில்லை. வளர்ந்து வரும் சோழர்கள் தமிழகத்தின் பல பகுதிகளை ஆட்சி செய்வது அபராஜித பல்லவனுக்குப் பிடிக்கவில்லை. பல்லவன் ஆளும் காலம் வரை சோழர் ராஜ்யம் வளர வாய்ப்பில்லை என்பது ஆதித்தனின் எண்ணம். உங்கள் ஊகம் சரிதான்.
போர்!
திருப்புறம்பியப் போர் நடந்த சில வருடங்களுக்குள் ஆதித்த சோழன் பல்லவன் நண்பனான (?!!) அபராஜிதவர்மனின் மேல் போர் தொடுத்தான். கீழைச் சாளுக்கிய வெங்கி மன்னன் அவனுக்கு உதவினான். ஆதித்தன் – அபராஜிதன் ஏறியிருந்த உயர்ந்த யானை மீது பாய்ந்து அவனை வெட்டிக் கொன்றான். பல்லவ நாட்டை சோழ நாட்டோடு இணைத்துக் கொண்டான். அத்தோடு பல்லவ சாம்ராஜ்ஜியம் ஒரு முடிவுக்கு வந்தது. தமிழ் வரலாற்றில் பிற்கால சோழர் ஆதிக்கம் தொடங்கியது.

பழிக்குப் பழி:

ஏறக்குறைய கி.பி. 250இல், சோழரைத் துரத்திப் பல்லவர் தொண்டைநாட்டையும் பிறகு சோழ நாட்டையும் கைப்பற்றி கி.பி. 890 வரை, அதாவது ஏறத்தாழ 650 வருட காலம் தமிழ் நாட்டை ஆண்டனர். அதன் பிறகு அச் சோழ மரபினரே பல்லவரைப் பழி தீர்த்துக் கொண்டனர். என்னே உலகப் பேரரசுகளின் தோற்றமும் மறைவும்!

பல்லவர்கள் இந்தியச் சரித்திரத்திலிருந்து மறைந்தனர். நாமும் அவர்களது நீண்ட ஆட்சிக்கு அஞ்சலி செய்து அவர்களுக்கு சரித்திரத்திலிருந்து விடை கொடுப்போம்.

சரித்திரம் நகர்கிறது.

 

 

 

திரையுலகமும் எழுத்தாளர்களும் – வாதூலன்

Image result for tamil writers

Image result for திரையுலகம்

2018ல் கலைஞர் இறந்தவுடன் அவருக்கு அஞ்சலி செலுத்த ஓர் எழுத்தாளர் (இலக்கிய ஏடு ஒன்றின் உதவி ஆசிரியர். ஓர் ஆராய்ச்சியாளரும் கூட) சென்றிருக்கிறார். ஆனால் அங்கு காணப்பட்ட கூட்டத்தைக் கண்டு – குறிப்பாக சினிமா சம்பந்தப்பட்டவர்களே – வெறுத்துப் போய்த் திரும்பி விடுகிறார்.

அந்த மனநிலையில் இலக்கிய ஏட்டில் மூன்று பக்கங்கள் குமுறி தள்ளிவிட்டார். ‘சினிமா தமிழ் நாட்டை மிகவும் கெடுத்துவிட்டது’ என்பதை சில உதாரணங்களுடன் எழுதியிருக்கலாம். ஆனால் மனிதர் அக்கு வேறு ஆணி வேறாகச் சில நடிகர்கள் மீது ஆவேசமாகப் பாய்ந்துவிட்டார். (வடிவேலு, நாகேஷ், ரஜினி) நாகேஷின் உடல் மொழியும், நடிப்பும் அப்பட்டமான காப்பி என்பதை ஒரு காட்சி மூலம் (சர்வர் சுந்தரம்) விவரித்திருந்தார்.

‘இளையராஜாவோ இங்கு பலருக்கு தெய்வம்’ என்று குறிப்பிட்டிருந்தார். கவனியுங்கள் அது பாராட்டே அல்ல, எள்ளலான தொனியில் எழுதப்பட்ட வாக்கியம்.

வேறொரு நாவலாசிரியர், உலகம் சுற்றி வந்த எழுத்தாளர். வாராவாரம் பிரபல இதழில் நடிகர்களைக் கிண்டலடிப்பார். இவருடையது வேறு பார்வை, வேறு கோணம். அதாவது சில நிமிடங்களே உடலசைவு செய்து வசனமும் பேசிவிட்டு லட்சக் கணக்கில் சம்பாதிப்பவர்கள் என்று அங்கலாய்ப்பார். எழுத்தாளார்களையும், நடிகர்களையும் ஒப்பிடுவது இவர் பாணி.

இந்தப் போக்கு சரியா? திரைப்படமும், எழுத்தும் ஒன்றாகி விடுமா?

ஒரு சினிமா வெளியாக முதலில் முதல்போட தயாரிப்பாளர் தேவை. பிறகு இயக்குநர் சொல்கிற ‘ஒரு வரி’ கதையை காட்சி காட்சியாக விரித்து எழுத வசனகர்த்தா வேண்டும். படத்தின் சூழலுக்கேற்ப இசையமைக்க இசையமைப்பாளர், திறமையான ஒளிப்பதிவாளர் என்று நிறைய பேர் தேவைப்படுவார்கள்.

ரொம்ப சரி, ஆனால், பாதாம்பருப்பு, நெய், சர்க்கரை, குங்குமப்பூ எல்லாம் சேர்ந்தால் பாதாம் கேக் ஆகி விடாதே? மிகச் சரியானபடி பருப்பை அரைத்து, பிறவற்றைச் சேர்த்து பதமாகக் காய்ச்சி அளவாக வெட்டியெடுத்தால் மட்டுமே நாவுக்கு ருசியான பாதாம் கேக் அமைகிறது. நடுவில் ஏதாவது சின்ன கோளாறு நேர்ந்தால் கூட, போச்! அவ்வளவுதான். நேரம், பணம் எல்லாம் விரயம்.

இது போலத்தான் திரைப்படமும், படத்துக்கு ஏற்ற நாயகன், நாயகி, நகைச்சுவை நடிகர் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்து இயக்குகிற பொறுப்பு இயக்குனரைச் சேர்ந்தது. இதில்தான் எத்தனை தடங்கல்கள்.

முதலாவது இடம், பொருள், நேரம், பிரதான நாயகர் நாயகி தவிர பிற நடிகர்கள் எல்லாரும் கூப்பிட்ட நேரத்தில் இணைய வேண்டும். என்னுடைய சொந்த அனுபவமும் உண்டு. 2004ல் தனியார் டிவி ஒளிபரப்புக்காக என் நெருங்கிய உறவினர் பங்கேற்றார். வினாடி வினா போன்ற நிகழ்ச்சி. கேள்வி கேட்பவர் ஒப்பனை செய்து கொண்டு அமருவதற்கும், பிறவற்றுக்குமே நிறைய நேரமாயிற்று. நிகழ்ச்சி முடிய காலை 3 மணி. ஒரு சாதாரண க்விஸ் நிகழ்ச்சிக்கே இத்தனை சடங்குகள் தேவையென்றால், திரைப்படக் காட்சிக்கு எப்படி இருக்கும் என்று ஊகியுங்கள்.

அடுத்ததாக வானிலை. ஊட்டியிலோ, கொடைக்கானலிலோ இலேசான மழைத்தூறல் விழும் போது காதலர்கள் சந்திப்பதாகக் இயக்குநர் காட்சி அமைக்கிறார் என்றால், முக்கிய நடிகர்கள் வந்துவிட்டார்கள், ஆனால் அப்போது பார்த்து வெயில் கொழுத்தும் அல்லது சற்றும் எதிர்பாரா விதமாக மழை கொட்டித் தள்ளலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் என்ன செய்வது? 50 வருட முன்பு ‘படம் எடுத்துப் பார்’ கட்டுரையை பிரபல வார இதழில் கே. பாலசந்தர் விவரித்து எழுதியிருக்கிறார்.

படம் எடுக்கிற காலகட்டத்தில், கதாநாயக நடிகருக்கோ, நடிகைக்கோ எந்த விதமான மாறுதலும் ஏற்படாமலிருக்க வேண்டும். உதாரணமாக நடிகர் வீட்டில் மரணமோ வேறு அசம்பாவிதமான நிகழ்வோ நேர்ந்துவிட்டால், படப்பிடிப்பை ஒத்தி வைக்கும் சந்தர்ப்பம் வரலாம். பெண்கள் என்றால் வேறு விதம். இடைப்பட்ட காலத்தில் யாராவது நடிகை கர்ப்பமாகிவிட்டால், கதையையே சற்று வேறு விதமாக மாற்ற நேரிடும்.

அப்புறம் இருக்கவே இருக்கிறது continutity என்கிற தொடர்புத் தன்மை. ஒரு முறை விவேக்கைச் சந்தித்த போது பாலசந்தர் “என்ன இது! எப்போதும் trimஆக இருப்பாயே… இப்போது என்ன தாடி மீசை கோலம்? ஓ… கன்டிநியூட்டியா.” என்று கேட்டிருக்கிறார். ரா.கி. ரங்கராஜன், இதை மையமாக வைத்து பிரபல இதழின் தீபாவளி மலரில் சிறுகதையே எழுதியிருக்கிறார். படம் எடுக்கும் போது இடையே தொகை பேரத்தால் குழந்தை நட்சத்திரத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை. உருவம், முகச்சாடை அனைத்தும் பொருத்தமாக அமைந்து, படம் வெற்றி பெற்றதில் டைரக்டர் பெருமிதப்படுகிறார். இருந்தாலும் இறுதியில் ஒரு ஏமாற்றம். புதிய குழந்தை நட்சத்திரத்துக்கு ஆறு விரல்! எனவே மிகச் சின்ன சின்ன அம்சத்தையும் உன்னிப்பாகக் கவனிப்பது மிக முக்கியம்.

இன்றைய காலங்களில், அரசியல் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்தியா மொத்தமும் திடீர் திடீரென்று கலவரங்கள் எழுகின்றன. எங்கேயாவது இரண்டு மாநில எல்லை முடிவில் ஷுட்டிங் எடுத்தால் “_____  நடிகர் வரக்கூடாது” என்ற கூக்குரல் எழலாம்.

உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய நிகழ்வுகளுக்குத் திரை உலகில் பஞ்சமே இல்லை. ஸ்டண்ட் காட்சி, சர்க்கஸ் காட்சிகள் போன்றவற்றில் சிலர் காயமடைந்திருக்கிறார்கள். சில மாதங்கள் முன்பு கூட ஒரு படப்பிடிப்பில் கிரேன் மண்டையில் விழுந்து அடிபட்டு மூன்று பேர் இறந்து போனார்கள்.மிகப் பிரபல நடிகர் என்றால் ஸ்டண்ட் காட்சிக்கு டூப் போட்டு விடுவார்கள். என்றாலும் உயிர் உயிர்தானே?

“”திரைப்படம் வெளியிடுவதற்கென்றே சில பண்டிகைகள் இருக்கின்றன. தைப்பொங்கல், தீபாவளி. இதே போல மிகப் பெரிய நடிகர்களின் படத்தை வெளியிடும் போது, அவை மோதி, படங்களுக்கு பாதிப்பு வராமல் இருப்பதற்கு தோதான தேதியை தேர்ந்தெடுப்பது, தியேட்டர்களை தேர்வு செய்வது இது போன்று விஷயங்கள் தயாரிப்பாளர்களின் பொறுப்பு என்றே சொல்லலாம்.

மேற்சொன்ன பல அம்சங்களைத் தாண்டித்தான் ஒரு திரைப்படம் வெளியாகிறது. இவை நீங்கலாக ஒலி, ஒளி, எடிட்டிங், போட்டோகிராபி முதலிய பல தொழில் நுட்பங்களும் இணைய வேண்டும்.

திரைப்பட இசைக்கு என்றுமே ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதன் மெட்டும், வரிகளும் எளிதில் மக்கள் மத்தியில் பதிந்துவிடும். டி.கே. பட்டம்மாளின் காந்தீய பாடல்களும், பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில்’ பாடலும் இன்றைக்கும் சாதாரண மனிதர்களும் முணுமுணுக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் சினிமா மாதிரியான சாதனம்தான்.

சினிமா சங்கீதத்தை வெறும் ‘டப்பா பாட்டு’ என்று ஒதுக்கிக் தள்ளிவிடமுடியாது. இன்றைய கர்நாடக சங்கீதத்தில் மூத்தவரும், பல விருதுகளைப் பெற்றவரும், மெல்லிசை மன்னரான எம்.எஸ்.வி.யுடன் பணியாற்றியவருமான மதுரை ஜி.எஸ். மணியின் வார்த்தைகள்.

“சினிமாவுக்கு மெட்டமைக்கிறது சாதாரணம் இல்லை. கர்நாடக இசையில் மத்திம ஸ்ருதின்னு சொல்றது போல அங்கே ‘சைகிள் ஆஃப் போர், ஃபைவ்’ என்றெல்லாம் உண்டு. லைட் மியூசிக் என்பதை லைட்டா பண்ண முடியாது. ரொம்ப மெனக்கிடணும், உழைக்கணும்” என்று அழுத்திச் சொல்கிறார்.

இங்கு நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் பெறுகிற ஊதியத்தைப் பற்றிச் சில வரிகள், என்னதான் வசனகர்த்தா ‘ரூம்’ போட்டு யோசித்தாலும் எவ்வளவுதான் டைரக்டர் இன்ன விதமான பாவம் என்று சொல்லிக் கொடுத்தாலும் அவற்றை உள்வாங்கிக் கொண்டு உருவம் கொடுப்பது நடிகர்தான். சந்தேகமேயில்லை. டீக்கடைக்காரர் சாமியார் வேடம் போட்டு “அதே அதே” என்று மலையாள உச்சரிப்புடன் பேசி அசத்தியவர். ஒரு பஞ்ச் வசனமான “இது எப்படி இருக்கு!” என்று வினோத முகபாவத்துடன் பேசினவர், சாதாரணமான கூப்பிடும் முறையை “சந்திரமவுலி சந்திரமவுலி” என்று உயர்த்திய கண்ணுடன் விளித்தவர்; “இன்னைக்கு செத்தா, நாளைக்கு பால்” கோணல் உடல்மொழியோடு சொன்னவர்: இவை இடம் பெற்ற படங்கள் ஞாபகம் இருக்கிறதா? ஆனால் தேங்காய் சீனிவாசன், ரஜினி, கார்த்திக், விவேக் இவர்கள் உடனே நினைவுக்கு வருவார்கள். ஏனெனில் வசனத்துக்கு ‘உயிர்’ தந்தவர்கள் அவர்கள்தான்.

சினிமா தயாரிப்பாளர்களுக்குள்ள உள்ள சிக்கல்கள் , தொழில் முறைக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்வதில் உள்ள சிரமங்கள், இவற்றை நன்கு புரிந்து கொள்ள கோமல் சுவாமிநாதன் எழுதின ‘பறந்து போன பக்கங்களை’ படித்தாலே போதுமானது.

இதே மாதிரிதான், வரிகளுக்கு மெட்டுப் போட்டு உயிர் கொடுப்பவர் இசையமைப்பாளர்கள். “உன்னை ஒன்று கேட்பேன்” “ஒரே ஒரு ஊரில், ஒரே ஒரு ராஜா” “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வர்ணமோ” போன்றவை சாதாரண வரிகள்தான். இசையமைப்பாளர், ராகம் போட்டு பின்னணியுடன் இசைக்க வைத்ததால்தானே, மனதில் நிற்கிறது !

அவர்கள் வாங்குகிற சம்பளம் அடிப்படை பொருளாதாரமான தேவை – வினியோக சம்பந்தப்பட்டதுதான். இதில் குற்றம் காண்பது ஏன்?

சினிமா தொடர்புள்ளவர்களைக் குறித்து நிச்சயம் சில வார்த்தைகள் பதிவு செய்ய வேண்டும். இயற்கை பேரிடர் மழை, வெள்ளம், கரோனா தொற்றோ எது வந்தாலும், தனி மனிதனாகப் பொருள் உதவி செய்பவர்கள் அவர்கள்தான். நடிகர் சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலமாகவும், வேறு சிலர் ரசிகர் மன்றம் வழியாகவும் ஒத்தாசை புரிகிறார்களே.

யோசித்துப் பாருங்கள், இவ்வளவு தடங்கல்கள் இடையூறுகள் சூழ்ந்துள்ள திரை உலகை – சில நடிகர்கள் பெறும் ஊதியத்தை வைத்தோ, கூடுகிற கூட்டத்தை வைத்தோ மதிப்பிடுவது சரியான அளவுகோலா? இல்லவே இல்லை.

சரி, இருக்கட்டும். எழுத்தாளர்களின் நிலைமை என்ன? ‘அல்லலற்ற உலகு’ என்றே அந்தத் துறையைக் குறிப்பிடலாம். மழை, வெயில், புயல், காற்று, கரோனா தொற்று, பிற நோய் தொற்றுகள் என்று இருந்தாலும் அவர்கள் அமைதியாக நாலு சுவருக்குள் எழுதிக் கொண்டிருக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால், இத்தகைய சூழல்கள் எழுத்தாளனுக்கு ஒரு உந்து சக்தியாக மாறுகிற வாய்ப்புண்டு. கற்பனைக் குதிரையை உற்சாகமாகக் தட்டி, ஓட வைக்க முடியும். தான் எழுதினதை, மீண்டும் மாற்றி எழுதலாம். யாருக்காகவும் அவசரப்படத் தேவையில்லை, போட்டி என்று வந்தால் கூட, குறைந்த பட்சம் ஒரு மாதம் அவகாசம் தருகிறார்கள்.

தீபாவளியின் போதோ அல்லது வேறு ஏதாவது நடப்பு நிகழ்வின் போதோ (current topic) அவற்றை வைத்து கதை எழுத பிரபல எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் வரும். “இரண்டே நாளில் —— கதை எங்களிடம் சேர வேண்டும்” என்று பத்திரிகை ஆசிரியர் கோரிக்கை விடுப்பார்.

நேரில் சென்று, நடுவர்கள் முன் எழுதிய அனுபவமும் கிட்டும். ஒரே ஒரு முறை ‘மாவட்ட சிறுகதை’ என்ற தலைப்பில் அதே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூடி சிறுகதை எழுதுகிற சந்தர்ப்பத்தைக் குமுதம் அளித்தது. நேரம் மூன்று மணி. கோவையிலிருந்தபோது நான் அதில் பங்கு பெற்றேன். நடுவர்கள் ராஜேஷ்குமார், பூவண்ணன், விமலா ரமணி. பத்து மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் ஒரு மணிக்கு பரிட்சை முடிந்தவுடன் அன்று மாலையே முடிவையும் அறிவித்தார்கள். என்னதான் முன்கூட்டியே கதைக் கரு, அமைப்பு, நடை முடிவு எல்லாவற்றையும் தீர்மானம் பண்ணியிருந்தாலும், பலர் நடுவே உட்கார்ந்து எழுதுவது வித்தியாசமான அனுபவமாகத்தானிருந்தது.

இன்னொரு வசதி எழுத்தாளர்களுக்கு மட்டுமே உண்டு, உடல் நலம் குன்றிப் போன சமயத்தில் ஓர் அசிஸ்டென்டை வைத்துக் கொள்ளலாம். ஆசிரியர் பொறுப்பு கூடுதலாக இருந்த, பத்திரிகையின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய காலத்தில் – 1959-60, குமுதம் எஸ்.ஏ.பி. சொல்லச் சொல்ல உதவி ஆசிரியர் புனிதன் எழுதினார். இதை ‘சொல்லாதே’ நாவலின் முன்னுரையில் எஸ்.ஏ.பி. பதிவு செய்திருக்கிறார்.

ஏன்… சமீப காலத்தில் கூட பாலகுமாரன் நிறைய எழுத வேண்டியிருக்கிற சூழலில் உதவியாளர் வைத்துக் கொண்டாரே? பார்வை பழுது போன போது, அ.ச.ஞா. தம் மகள் மீராவின் உதவியுடன்தான் கம்பராமாயண விளக்கம் எழுதினார்.

லேட்டஸ்ட் மாறுதல்:- கணினி. எழுத்தாளர்கள் கதையைத் தபாலில் சேர்க்கக் கூட தேவையில்லை. கணினியில் கதையை டைப் செய்து, மின்னஞ்சலில் முகவரியை டைப் செய்து அழுத்தினால், கதை பத்திரிகை ஆபிசுக்குச் சேர்ந்துவிடுகிறது.

1947ல் தேவன் ‘விச்சுவுக்கு கடிதங்கள்’ தலைப்பில் பல தொழிலின் சாதக பாதகங்களை நகைச்சுவையுடன் விவரித்து இருக்கிறார். இஞ்சினியர், வைத்தியர், சட்டம், அரசு வேலை, பள்ளி ஆசிரியர் போன்றவை இதில் அடங்கும். இதில் எழுத்தாளரும் இடம் பெறுகிறார். (கவனிக்க நடிகர் இல்லை) அவர் எழுதியிருப்பதாவது:- எழுத்தாளனாக தொடங்குவதற்கு பேப்பரும், பேனாவும், மசிக் கூடுமே போதுமானது. மூலதனம் இல்லாமல் இவ்வளவு மலிவாக இதை ஆரம்பிக்க முடிகிறது என்பதே இந்தத் தொழிலின் சிறந்த கவர்ச்சி. யாரும் பழகலாம். யாரும் பெயர் வாங்கலாம். கன்னியாகுமரியிலிருந்து இமயமலைச் சாரல் வரையில் பிரபலமாகலாம்.

இன்றைய டிஜிட்டல் உலகில், இமயமலை என்ன உலகம் முழுதுமே எழுத்தாளர்கள் பெயர் தெரிகிறது. பத்திரிகையில் சிறுகதை எழுதும் எழுத்தாளன் முதல், நோபல் பரிசு பெறும் எழுத்தாளன் வரை, சாகித்ய அகாடமி விருது வாங்குபவர் வரை, நிலைமை இதுதான். மாற்றமே இல்லை.

முத்தாய்ப்பாக இலக்கிய எழுத்தாளர்களுக்கும், நவீன எழுத்துச் சிற்பிகளுக்கும் ஒரு வார்த்தை:- திரைத் துறையில் உள்ள பாதக அம்சங்களைக் குறிப்பிடுங்கள். கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது, நடிகைக்குக் கோயில் கட்டுவது போன்ற அபத்தங்களை குற்றம் சாட்டுங்கள். சினிமா மாயையில், கனவுலகில் சிக்கி பாழாகாதீர்கள் என்று இளைஞர்களுக்கு அறிவுரை விடுங்கள். பிற மாநிலங்களைப் போலத் (கேரளா, மேற்கு வங்காளம், கர்நாடகா) தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு உரிய மதிப்பு தரப்படுவதில்லை என்று ஆதங்கப்படுங்கள். ஓகே…

அதை விட்டுவிட்டு, அந்தத் துறையையும், துறை சேர்ந்த நடிக நடிகைகளை இகழ்வது, எள்ளி நகையாடுவது போன்றவை அனாவசியம். சமூகத்தில் பொறுப்பானவர்களுக்கு இது அழகல்ல.

எழுத்தும் ஒரு தொழில்தான். ஏதோ அதைத் தவம், வரம் என்று பிரமையில் ஆழ்ந்து, உலகத்திலேயே உன்னதமானது என்று நினைத்து சுயதம்பட்டத்தில் ஈடுபடாதீர்கள்.

கல்கி, மிகச் சரியாக ‘திரை உலகம்’ பத்திரிகைக்கு அனுப்பின குறிப்பில், 1948, இவ்விதம் சொல்கிறார்.

“ஓர் எழுத்தாளன் தன்னை மகா மேதாவியாக நினைத்துக் கொண்டு, சுயபுராணக் குப்பைகளைக் கிளறி பக்கம் பக்கமாக எழுதுவதைவிடத் தலைவலி வேறு இருக்க முடியாது.”

70 ஆண்டுகளுக்குப் பிறகும் கல்கியின் வார்த்தைகள் இன்றும் பொருத்தமாக இருப்பது ஒரு வியப்புதான்.

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

 

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
 2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
 3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
 4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
 5. எனது நாடு – செப்டம்பர் 2020
 6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
 7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
 8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
 9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
 10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
 11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
 12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
 13. ஜன கண மன ! – ஜனவரி 2021
 14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
 1. எங்கள் வீட்டு மொட்டை மாடி !

எங்கள் வீட்டு மொட்டை மாடி !

எனக்குப் பிடித்த மொட்டை மாடி !

எத்தனை முறை வந்து போனாலும்

எனக்கு அலுக்காத மொட்டை மாடி !

 

காக்கா குயில் கிளியைப் பார்த்திடலாம் !

காகா கூ கூ கீ கீ கேட்டிடலாம் !

மரங்களின் தலையினைத் தொட்டிடலாம் !

அடிக்கும் காற்றை ரசித்திடலாம் !

 

அண்ணாந்து பார்த்து வியந்திடலாம் !

நட்சத்திரங்களை நாம் எண்ணிடலாம் !

நிலவினை அருகினில் பார்த்திடலாம் !

ஓடி ஆடி நாம் பாடிடலாம் !

 

ரோஜாச் செடியினை நட்டிடலாம் !

தோட்டத்தைச் சுற்றி வந்திடலாம் !

பட்டாம் பூச்சியைப் பார்த்திடலாம் !

பூக்களைப் பறித்து மகிழ்ந்திடலாம் !

 

அனுஷா பாலா வைதேஹி !

வெங்கி வேலா ஸ்ரீதேவி !

மாடிக்குப் போகலாம் லூட்டி அடிக்கலாம் !

இப்பவே வாங்க – நானும் ரெடி !

              

 

 1. பட்டம் விடலாமா ?

 

பட்டம் விடலாமா ? -பாமா

பட்டம் விடலாமா ?

ஆகாயத்தில் அழகாய்ப் பறக்கும்

பட்டம் விடலாமா ?

 

பச்சை சிவப்பு ஊதா வண்ண

பட்டம் விடலாமா ?

ஆடிக் காற்று அடிக்குது பாரு

பட்டம் விடலாமா?

 

உயர உயர உயரப் போகும்

பட்டம் விடலாமா ?

ஆடி ஆடி அசைந்து போகும்

பட்டம் விடலாமா ?

 

பிரேமா கிரிஜா நந்து கிருஷ்ணா

பட்டம் விடலாமா ?

மைதானத்தில் திறந்த வெளியில்

பட்டம் விடலாமா ?

 

பட்டத்தோடு பட்டம் மோதி

சண்டை போடலாமா ?

ஒண்டிக்கு ஒண்டி வாடா என்றே

சவால் விடலாமா ?

 

வாங்க வாங்க அனைவரும் வாங்க

பட்டம் விடலாமா ?

வாலை ஆட்டி ஆட்டிப் பறக்கும்

பட்டம் விடலாமா ?

        

அசையும் காற்று! – இரஜகை நிலவன்

Image result for வயதானவர் படுக்கையில் முதியோர் இல்லம்

அவர் கட்டிலில் படுத்திருந்தவாறு ஜன்னல் வழியே தெரிந்த அந்த தேக்கு மர இலைகளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்.

அசைந்து மறு பக்கம் திரும்பிப்படுக்க முயன்றார். முடியவில்லை.

வேலைக்காரி வர இன்னும் வர எவ்வளவு நேரமிருக்கிறது என சுவர்க்கடிகாரத்தை பார்த்தார். நேரம் மாலை 5.12 என்றது.

அவள் வர இன்னும் அரை மணி நேரமாகும். அது வரை எதுவும் முடியாது.

அந்த இலைகள் இன்னும் அசைந்து கொண்டிருந்தன. சில இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கியிருந்தன. சில இலைகள் காய்ந்து எப்போது விழலாம் என்று காற்றோடு மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்தன.

மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டார். ’என் நிலைமையும் அந்த காய்ந்த இலைகள் போலத்தான்.எப்போது என்று தான் தெரியவிலலை.’ வழிந்த கண்ணீரைத்துடைக்க முடியவில்லை. கண்களின் அருகில் வழிந்தது.

’உடம்பின் எல்லா பகுதிகளும் செயலற்றுப்போய் தலையை மட்டும் அசைத்துக்கொள்ள முடியும் நிலைக்கு வந்து விட்டேன்’….

“எத்தனை வேலையாட்கள்.. எத்தனை அலட்டகள்…. ஓடிய ஓட்டம் என்ன?” ப்ச்.. முகத்தைச்சுழித்துக் கொண்டார்.

 

வேலு சங்கர் என்றால்… எத்தனை மரியாதை… எல்லாம்..எல்லாம்…எங்கே போனது?…எத்தனை வெளி நாடுகளில் வியாபாரம் விரிவு செய்து… எத்தனை பயணங்கள்.. எத்தனை பணம் … விரயங்கள்…

நேரமின்றி ஓடி இப்போது நேரம் போக மறுத்து… திரும்ப நேரம் பார்த்தார்.. ப்ச்.. இந்த கடிகாரமும் வேகமாக ஓட மறுக்கிறது…

திடீரென்று சபதம் கேட்க… தலையை அசைத்துப்பார்த்தார்.தீபா வந்து நின்றாள்.. கூட யாரோ ஒரு பெண் வந்து நின்று கொண்டிருந்தாள்.

“எங்க மாமனார். இழுத்துகிட்டு கிடக்கார்.” என்றாள்

இவளை ரவிக்காக பெண் பார்க்கப் போயிருந்த போது… ரவியைத்தவிர.. எல்லோரும் வேண்டாம் என்று சொல்ல.. “ரவிக்கு விருப்பம். அவளுக்கும் ரவியைப்பிடித்திருக்கிறது..” என்று சொல்லி ரவிக்குத் திருமணம் செய்து வைத்ததிற்கு சரியான பதில் மரியாதை செய்து கொண்டிருக்கிறாள்.

அருகில் வந்தவள் “வேலக்காரி எல்லாம் ஒழுங்கா செய்துகிட்டிருக்காளா? ஏதும் வேணுமா?…. “ என்றாள் தீபா.

பரவாயில்லை உதவி செய்ய விரும்புகிறாள்.. என்று நினைத்துக்கொண்டு ”கொஞ்சம் டீ தர்றியா?.. தொண்டையெல்லாம் ஒரு மாதிரி இருக்குது…:”என்றார். வேலு.

“ அது … வந்து.. இப்ப வேலைக்காரி வந்துடுவாவில்ல… அவள் எல்லாம்செய்து தருவாள்.. எனக்கு கொஞ்சம் அவசர வேல இருக்கு.”    “வா கீதா கிளம்பலாம்” என்றாள் தீபா.

”உங்க மாமா தானே கேட்கிறார். டீ போட்டுக்கொடுத்து விட்டுப்போகலாமே..நாம் எங்கே மாலுக்குத்தானே போறொம் ..” என்றாள் கீதா.

“சும்மா இருடி.. கிழத்துக்கு நம்மளை கண்டவுடன் எதையாவது செய்ய சொல்லணும் … அதான்… “ திரும்பிப்பார்த்தவள் “ அதோ வேலைக்காரி லதாவேவந்தாச்சே…” என்றாள் தீபா..

”வந்ததற்கு ஒரு டீ போட்டுக்கொடுத்துருக்கலாம்….” என்றாள் நண்பி.

”அப்புறம் நாம் தான் எல்லாம் செய்யணும்ணு எதிர்ப்பார்க்கும்” என்றாள்..தீபா.

வேலைக்காரி லதா டீ போட்டு எடுத்து வர… ‘மாமாவுக்கு குடு” என்றவள்” நாங்க வாறோம்” என்று பொதுவாக சொல்லிவிட்டுக்கிளம்பினாள்.

“ஏம்மா.. உங்களுக்கும் சேர்த்து தான் சாயா போட்டேன். நீங்களும் குடிச்சிட்டுப்போங்க” என்றாள் வேலைக்காரி லதா.

”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ மாமாவிற்கு மொதல்ல குடு…” என்றவள் தன் தோழி கீதாவோடு கிளம்பினாள்.

தேனீரை நன்றாக சூடு ஆற வைத்து மெதுவாக அவருக்கு ஒவ்வொரு கரண்டியாக வாயில் ஊற்றினாள்.

அவள்,  அவ்வளவு அருகாமையில் வந்து தலையை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு அவள்  தேனீரைக் கொடுத்துக் கொண்டிருக்க.. வேலு சங்கர் தன்னையறியாமல் சிரித்து விட அவருக்குப் புரையேறிக்கொண்டது.

அவள்அவர் தலையைத் தட்டியவாறு “ஏய்யா…சிரிக்கிறீங்க” என்று கேட்டாள் வாயைத்துடைத்துக் கொண்டே..

”ஒன்றுமில்லை..” என்றார் மனதுக்குள் சிரித்துக்கொண்டே.

அவரை அறியாமல் அந்த சிரிப்பு அவர் முகத்தில் தெரிய,”எதுக்கோ சிரிக்கிறிய..

அந்த ஆண்டவன் தான் உங்களை இப்படிக் கிடத்தி விட்டானே” என்றவாறு திரும்பவும் தேனீரைக் கொடுத்தாள்.

’இதோ இந்த லதாவை வேலைக்காரி தானே என்று….’ நினைக்கும் போதே கண்ணீர் முட்டியது.

திரும்ப முயற்சி செய்தார். முடியவில்லை.

அவசரமாக வெளியே போவதற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த வேலு சங்கர்,

கழுத்தில் ’டை’ கட்டிக்கொண்டிருந்த போது கண்ணாடியில் லதா குனிந்து நின்று வீட்டைத்துடைத்துக் கொண்டிருப்பதை பார்த்து.. உடலெங்கும் சூடேறியது.

“டை’யை கீழே விட்டெறிந்து விட்டு மெதுவாக அவளருகில் வந்தார்.அவள்நிமிர்ந்து பார்க்குமுன்  அவளை அப்படியே அள்ளி கட்டிலில் போட்டார்.

அரண்டு போன லதா அலறிக்கொண்டே வெளியே ஓடினாள். திரும்பவும் கண்களில் நீர் முட்டிக்கொள்ள..,’என்னாச்சு… எப்பவோ நடந்துகிட்டிருந்ததெல்லாம் நெனைச்சிக்கிட்டிருக்கியளோ?” அவளும்

பெருமூச்சு விட்டவாறு கேட்டாள்

தலையை ஆட்டிய வேலு சங்கர், “ ஒங்கிட்டே ரொம்ப நாளாக் கேக்கணும்ணுநெனச்சிக்கிட்டிருந்தேன்…  ஆமா… உனக்கு என்மேலக் கோபமே வரலியா?”

அவர் முகத்தில் இப்போது புன்னகை தவழ்ந்தது.

லதா ஒன்றும் சொல்லாமல் தேனீரைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

திரும்பவும் தேனீரைக் அறுந்திக் கொண்டே வேலு சங்கர்,” என்னை மன்னிச்சிருவியா லதா?’ என்றார்.

“அய்ய.. எங்கிட்டேயில்லாம் மன்னிப்புக் கேட்டுகிட்டு… இது என்ன சின்னபிள்ள மாதிரி” அவர் வாயைத்துடைத்துக்கொண்டே சொன்னாள் லதா.

“இருக்கட்டுமே… நான் பாவ மன்னிப்பு கேட்கிற மாதிரி இருக்கும்.” என்றார்வேலு சங்கர்.

அவள் சிரித்துக்கொண்டே மெதுவாக அவரைக்கட்டிலில் கிடத்தி விட்டுஇறங்கி நடந்தாள்

அவள் ஏதும் சொல்லாமல் போகிறாளே… தன்னுடைய ஏழ்மை நிலையைநினைத்துக்கொண்டு போகிறாளோ என்று நினைத்துக்கொண்டார்.

தேக்கு மரத்தில் பழுத்திருந்த சில இலைகள் காற்றின் அசைவில் உதிர்ந்துவிழுந்தன. அவை விழும்போது காற்றோடு சேர்ந்து சஞ்சரித்துக் கொண்டே மெதுவாக கீழே போய்க்கொண்ட்ருந்தது.

ஆதவன் முழுவதுமாக மறைந்து விட முயல…. இருள் சூழ முயன்றது.லதாவிளக்கைப் போட்டாள்

‘இன்னும் கொஞ்ச நேரத்தில் இவள் கொண்டு வந்த உணவை எனக்கு ஊட்டி விட்டு போய் விடுவாள். அதன் பிறகு அந்தகாரம் தான்” உள்ளுக்குள்ளே சலித்துக்கொண்டார்.

தூக்கம் தழுவிக்கொள்ள மறுத்தது. திரும்பவும் கண் விழித்த போது, வீட்டினுள்ளே வெளிச்சம் பரவியிருக்க, தலையை அசைத்த போது, “அப்பா இப்போது எப்படியிருக்கிறீர்கள்”? என்றான் ரவி அருகில் நின்று கொண்டு.

“ஏய் … எப்ப வந்தாய்?… இந்த ராத்திரியிலே… சரி..சரி… என்னைத்தூக்கி இருத்து.” என்றார் வேலு சங்கர்.

ரவி கைகாட்ட, கூட நின்ற டிரைவர் பின்னாலே தலையணையை எடுத்து சாத்தி வைத்து.. அவரைத்தூக்கி இருத்தினான்.

“ஏண்டா… பெத்த அப்பனுக்கு இந்த உதவி கூட செய்யக்கூடாதா?அதுக்கும் உதவி ஆள் தானா?” கண்ணீர் வழியக் கேட்டார்.

“ஏம்பா.. எமோசனல் ஆகிறீங்க…. சரி…சரி… நான் நாளைக்கு லண்டன் போகிறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.  நீங்கள் முயற்சித்த டெண்டர்எனக்கு கிடைத்திருக்கிறது… அதான் சொல்லிட்டுப் போலாம்ணு வந்தேன்”

ரவி எங்கோ பார்த்து பேசிக்கொண்டிருந்தான்.

”சே… இவனுக்காகவா இத்தனை சொத்துக்கள் ஓடி ஓடித் தேடினேன்.” மனசுக்குள்ளே எங்கோ வலித்தது.

“ கொஞ்சம் உட்கார்டா.. கொஞ்சம் பேசணும்… “வேலு சங்கர் கெஞ்சலாக கேட்டார்.

“ என்னா…பழைய பாட்டை பாட ஆரம்பிப்பீங்க… எல்லாம் பிறகு பேசிக்கலாம்கிளம்புகிறேன்” என்றான் ரவி.

“டேய்… எனக்கு கலக்கமாக இருக்கிறது.இண்ணைக்கோ நாளைக்கோண்ணுஇருக்கேண்டா… எனக்கு கொள்ளி போட்டுட்டு போடா… “  என்றார் வேலு சங்கர் தன்னிறக்கம் பொங்க.

அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுப்பா.. வர்றேன்” என்று டிரைவருக்கு கிளம்புவதற்கு சைகை செய்து விட்டு விளக்கை அணைத்து விட்டு நடந்தான்

அவன் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் தூக்கத் தேவதை தழுவிக்கொள்ள தூங்கிப்போனார்.

திடீரென்று மழை வருவது போல இடி இடிக்க.. மின்னல் மின்னியது.

தூக்கம் கலைந்து கண் விழித்துப்பார்த்தார். தேக்கு மரத்திலிருந்து காய்ந்த இலை ஒன்று கீழே விழுவது அந்த மின்னிய மின்னலின் ஒளியில் சலனமாகத் தெரிந்தது.

மறு நாள் காலையில் கதவைத்திறந்த லதா… வேலு சங்கர் மவுனச்சிரிப்போடு கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்து புரிந்து கொண்டு….அவரை அள்ளிக் கட்டிலில் போட்டு விட்டு…. அலை பேசியில் ரவியை அழைத்தாள்.

அவன் போனை எடுத்து “ அப்படியா?” என்று பேசிவிட்டு, தன் மனைவி தீபாவிடம், “பெரியவர்…. போயிட்டார்” என்றான்.

”அப்படியா… நேற்று பார்க்கும் போது கூட நல்லாத்தானே இருந்தார்” என்றவள் ஏதோ நினைவு வந்தவளாக “ஆமாம் உங்க லண்டன் டிரிப்?” என்றாள்.

“ நான் கிளம்புகிறேன். நான் போன பிறகு எல்லாரிடமும் சொல்லி, உங்க அண்ணன் மூலமா இறுதிச்சடங்கெல்லாம் அரேஞ்ஜ் பண்ணிக்கொள்”என்று சொல்லி விட்டுக்கிளம்பினான் ரவி.

திரும்பவும் லதா போன் பண்ணிய போது, ரவி எடுக்காததால், தீபாவை அழைத்தாள். ஒரு பழுத்த இலை அப்போதும் காற்றின் சலனத்தோடு கீழே விரைந்து வந்தது.

 

 

                                             $$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 

 

 

 

 

 

 

மனிதநேயம் வளர்ப்போம்-  ‘கவி ஞாயிறு’ துரை. தனபாலன்

             

Image result for மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி  மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்Image result for மனிதநேயம் வளர்ப்போம்

வீட்டினிலே பெற்றோரைப் போற்றிவைக்க இயலாது 

வேறெங்கோ தள்ளிவைக்கும் வீணர்களின் இடையினிலே

நாட்டினிலே அரசியல்முன் னேற்றமெனும் வேட்டையிலே  

நற்குணமாம் பண்பிழக்கும் நயவஞ்சகர் நடுவே

ஏட்டினிலே பேர்வரவே ஏராளம் செலவழித்து

இல்லாதார்க் குதவாத இருளோர்கள் இருக்கையிலே  

மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி 

மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்

 

ஏடெடுத்துக் கல்விகற்று ஏற்றமுற்ற பின்னாலே 

எல்லோரும் நலம்வாழ எண்ணாதோர் மனந்தெளிய  

பாடுபட்டு உழைப்பாலே பாழ்நிலத்தைச் சீராக்கும்

பாட்டாளியைப் போற்றாத பணக்காரர் பரிவுகொள

காடுவயல் கழனியிலே உழல்கின்ற உழவரது

நீடுதுயர் நீக்காத ஆட்சியினர் நெறியுணர

மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி 

மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்

 

தனித்தமிழில் பேசாமல் தமிங்கிலத்தைப் பேசுகின்ற

தமிழர்தம் அறிவினிலே மொழிநேயம் வளர்ப்போம்

தமிழ்பேசும் அனைவருமே தமிழரெனும் உணர்வில்லா

சாதிமத வெறியரிடை இனநேயம் வளர்ப்போம்

காடுகளில் ஆறுகளில் காணுகின்ற இயற்கைவளம்

கருதாத மூடரிடம் புவிநேயம் வளர்ப்போம்

மாடத்தில் செடிவளர்த்து மகிழ்ந்ததெலாம் போதுமினி 

மாந்தர்தம் உள்ளத்தில் மனிதநேயம் வளர்ப்போம்!

                                                                          

நீல வெளிச்சம் -மலையாளத்தில் முகமது பஷீர் தமிழில் மீனா

 

Image result for indian village house in blue lights

 

மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளியான வைக்கம் முகமது பஷீர் பால்யகால சகி, பாத்திமாவின் ஆடு,சப்தங்கள்,மதிலுக்குள், அனர்க்க நிமிஷம் உள்ளிட்ட அற்புதமான படைப்புக்களுக்குச் சொந்தக்காரர்

தன் கதை குறித்து அவர் :

நீல வெளிச்சம் என்ற இச்சிறுகதை என் வாழ்க்கையின் விளக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகும்.அனுபவம் என்பது மிகச் சரியான வார்த்தையில்லை.ஒன்றொன்றாக,அடுத்தடுத்து விரைவாக மாறுகிற,ஒரு கனவில் நிகழ்கிற உண்மை அல்லது கற்பனைத் தோற்றங்களின் தொகுதி என்று வேண்டுமானால் சொல்லலாம். இதை அறிவியல் அணுகுமுறை என்ற ஊசியால் குடைய முயன்றேன். வெற்றி யில்லை.விளக்க முடியாத அனுபவம் என்ற வார்த்தையில் தஞ்சமடைவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

 

சென்றமாதத் தொடர்ச்சி!

முன்கதை 

கதை சொல்லி ஒரு தனி வீட்டுக்குக் குடி போகிறார். போன பிறகுதான் நண்பர்கள் கூறினார்கள். அந்தவீட்டில் பார்கவி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டாளாம் . அதனால் அவள் அங்கே ஆவியாகிய இருக்கிறாளாம் . எனக்கு பேயெல்லாம் பயமில்லை என்று வெளியில் தைரியமாகச் சொன்னாலும் உள்ளூர அவருக்கு ஒரு உதறல். அதனால் அவள் கூட உரையாடத் துவங்குகிறார்.

இனி பஷிரின் வரிகளில் .. 

 

நான் சந்தித்தேயிராத பார்கவி இருபத்தியோரு வயதான இளம்பெண். ஒருவனை ஆழமாகக் காதலித்தவள். அவன் மனைவியாகத் ,துணை யாக இருக்கக் கனவு கண்டவள். ஆனால் கனவு ..ஆமாம் கனவாகவே நின்றுவிட்டது. அவளுக்கு மனச்சோர்வு ஏற்பட்டது.அவமானமும் கூட..

         “பார்கவி, நீ அதைச் செய்தேயிருக்கக் கூடாது.நான் உன்னைக் குற்றம் சொல்கிறேன் என்று நினைக்காதே. நீ காதலித்த மனிதன் அந்த அளவிற்கு உன்னைக் காதலிக்கவில்லை.உன்னைவிட அதிகமாக இன்னொரு பெண்ணைக் காதலித்தான்.வாழ்க்கை உனக்குக் கசந்து விட்டது,

உண்மை.ஆனால் வாழ்க்கை அவ்வளவு கசப்பானதில்லை.மறந்து விடு. உன்னைப் பொறுத்த வரை, சரித்திரம் திரும்பப் போவதில்லை.

       “பார்கவி,நான் உன் தவறைச் சுட்டிக் காட்டுகிறேன் என்று நினைக்காதே. நீ உண்மையிலேயே காதலுக்காகத்தான் இறந்தாயா? நித்திய வாழ்க்கையின் வைகறைதான் காதல்.எதுவுமே தெரியாத ஓர் அப்பாவி நீ. ஆண்களை நீ வெறுக்கும் விதம் அதை உறுதி செய்கிறது. உனக்கு ஒரே ஒரு ஆணைத்தான் தெரியும்.ஒரு பேச்சுக்காக அவன் உன்னை மோசமாக நடத்தினான் என்றே வைத்துக் கொண்டாலும் அதே பார்வையில் அத்தனை ஆண்களையும் பார்ப்பது சரியா? நீ தற்கொலை செய்து கொள்ளாமல் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருந்தால் உன்னுடைய ஊகம் எவ்வளவு தவறென்று தெரிந்திருக்கும். உன்னைக் காதலித்து,வழிபடும் ஒருவன் இருந்திருப்பான். உன்னை ’என் தேவதையே ’என்று அழைத்திருப்பான்.”

       “ஆனால்.. நான் சொன்னது போல சரித்திரம் திரும்பாது. உன் சரித்திரத்தை எப்படியறிவது ? இன்றிரவு நீ என் கழுத்தை நெரித்தால் கூட எனக் காக பழிக்குப்பழி வாங்க யாரும் வரமாட்டார்கள், ஏனெனில் எனக்கென்று யாருமில்லை. என்னை நீ தாக்காதே. இது என் மெய்யான சமர்ப்பணம்.”

      என் நிலை உனக்குப் புரிந்திருக்கும்.நாம் இங்கு வாழப் போகிறோம். சட்டரீதியாகச் சொன்னால் இந்த வீடும் ,கிணறும் என்னுடையது. கீழேயுள்ள நான்கு அறைகளையும், கிணற்றையும் நீ பயன்படுத்திக் கொள். குளியலறையையும், சமையலறையையும் நாம் பகிர்ந்து கொள்வோம். நீ இதற்கு உடன்படுகிறாயா?”

         இரவு வந்துவிட்டது.சாப்பிட்டுவிட்டு ,பிளாஸ்கில் தேநீருடன் வந்தேன். ஹரிக்கேன் விளக்கை ஏற்றினேன். அறையில் மஞ்சள் வெளிச்சம் நிறைந்தது.

       டார்ச்சுடன் கீழே போன நான் இருட்டில் நின்றேன்.  குழாய்களைப்பூட்ட நினைத்தேன். ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்து விட்டு,கிணற்றைப்  பார்த்துவிட்டுச் சமையலறைக்குப் போனேன். குழாய்களைப் பூட்டக்கூடாதென்று நினைத்தேன். கதவைப் பூட்டிவிட்டு மாடிக்குப் போய் தேநீர்  குடித்தேன்.பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினேன். திடீரென்று பார்கவி என் நாற்காலிக்குப் பின்னால் நிற்பது போலுணர்ந்தேன்.

     “நான் எழுதும்போது யாரும் பார்ப்பது எனக்குப் பிடிக்காது” சொல்லி விட்டுத் திரும்பினேன். யாருமில்லை. ஏனோ திரும்ப எழுதத் தோன்ற வில்லை.நாற்காலியை என்னருகே இழுத்தேன்.

     “பார்கவிக் குட்டி, உட்கார்ந்து கொள்”காலியான நாற்காலி.அறைகளினி டையே உலவினேன். காற்றில்லை. இலைகளில் அசைவில்லை. ஜன்னலினூடே ஒரு விளக்கு வெளிச்சத்தைப் பார்த்தேன்.அது நீலமா, சிவப்பு அல்லது மஞ்சளா?ஊகிக்க முடியவில்லை. கண நேரக் கண்ணோட்டம்தான்.

     அது என் கற்பனைதான் என்று சொல்லிக் கொண்டேன்.பார்த்தது ஒளிதானென்று சத்தியம் செய்யமுடியாது. எதையும் பார்க்காமல் எப்படி வெளிச்சமென்றுணர்ந்தேன். அது மின்மினிப் பூச்சியா ?

      ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தேன் .அது வீண்தான்.படிக்க முயன்றேன். முடியவில்லை. நாற்காலி காலியாக இருந்தது. சீக்கிரம் தூங்க நினைத்து விளக்கை அணைத்தேன். பாட்டுக் கேட்கலாமென்று தோன்றியது.

             விளக்கை ஏற்றிவிட்டு கிராம்போனை வைத்தேன்.

      யார் பாடலைக் கேட்கலாம்.உலகம் அமைதியாக இருந்ததெனினும் என் காதுகளுக்குள் ஒலி ஊடுருவிக் கொண்டிருந்தது. அது திகிலா? பின் முடி குத்திட்டு நின்றது.கொடூரமான அந்த அமைதியைத் துண்டுகளாகச் சிதறடிக்க விரும்பினேன். அதற்கு யாருடைய பாடலை வைப்பது?பால்ராப் சன்..’ஜோஸுவா பிட் தி பாட்டில”..அது முடிந்தது.பின் பங்கஜ் மாலிக்கின் ’து டர் ந ஜராபி’ பிறகு எம்.எஸ்ஸின் ’காற்றினிலே வரும் கீதம் ’பாடல்களைக் கேட்டு முடித்த பிறகு சிறிது அமைதி வந்தது. பிறகு சைகலைக் கேட்டேன்.’சோ ஜா ராஜ்குமாரி ’இளவரசியே தூங்கு ,கனவுகளுடன்..

        இன்றைக்குப் போதும்,நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். முணுமுணுத்துக்கொண்டே விளக்கை அணைத்து விட்டு பீடியை பற்றவைத்துக்  கொண்டு கட்டிலில் சாய்ந்தேன்.  அருகில் டார்ச்,கைக்கடிகாரம்,கத்தி, காலியான நாற்காலி.

        முகப்பிற்குப் போகும் கதவைச் சாத்தினேன்.மணி பத்திருக்கும். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.கடிகாரத்தின் ’டிக் ,டிக் ஒலி தவிர வேறெதுவும் கேட்கவில்லை.நிமிடங்கள் பல மணி நேரங்களாகின.மனதில் பயமில்லை. குளிர்..தூக்கம் வரவில்லை. இது எனக்குப் புதிய அனுபவ மில்லை.பல இடங்கள்,நாடுகள்…இருபது வருடத் தனிமை.. புரிந்து கொள்ள முடியாத பல அனுபவங்கள் எனக்கு.அதனால் என் கவனம் இறப்பிலும், நிகழ்விலும் படர்ந்தது. இடையே சந்தேகங்கள்.யாராவது கதவைத் தட்டி னார்களா?குழாய் திறந்திருக்கிறதா?என்னை மூச்சுத் திணற வைக்க முயற் சியா?காலை மூன்று மணிவரை விழித்திருந்தேன்.

       எதுவும் நடக்கவில்லை’.”வணக்கம்,பார்கவி மிக்க நன்றி. எனக்கு ஒரு விஷயம் தெளிவாகி விட்டது!ஜனங்கள் உன்னைப் பற்றி புரளி கிளப்பி விடுகிறார்கள். போகட்டும் விடு.”

      நாட்கள் கடந்தன. பார்கவி,அவள் பெற்றோர்,சகோதர சகோதரிகள்.. எனக்குத் தெரியாத பல கதைகள் இருக்கலாம் அவற்றைப் பற்றி யோசிப்பேன். எழுதிக் களைப்படைந்த பிறகு எல்லா இரவுகளிலும் கிராம்போனில் பாடல்கள் கேட்பேன்.ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் பாடகர் பெயர் பொருள் சொல்லுவேன்

     “குஜார் கயா வோ ஜமானா” இது சோகத்தையும், ஞாபகங்களையும்   நினைவுக்குக் கொண்டு வரும் பங்கஜ் மாலிக்கின் பாடல்..கவனமாகக் கேள்’ என்பேன்.அல்லது’ இது பிங் கிராஸ் பையின் ’இன் தி மூன் லைட்’ பாடல. பொருள் என்னவென்றால் ஒளியில்.. ஐயோ மறந்துவிட்டேன்! நீ பி.ஏ. படித்தவள் ! ஸாரி.. “என்பேன்.

               இந்த நிலையில் இரண்டு மாதங்கள் கடந்தன. தோட்டம்  போட்டேன். பூக்கள் மலர்ந்த போது அவளுக்காகத்தான் என்றேன். இதற்கிடையில் ஒரு நாவலை எழுதி முடித்தேன்.என் நண்பர்கள் இரவில் வந்து தங்குவார்கள்.அவர்கள் தூங்குவதற்கு முன்னால்,அவர்களுக்குத் தெரியா மல் கீழே போய் இருட்டில் நின்று கொண்டு “ பார்கவி, என் ஆண் நண்பர்கள் இரவில் தங்குவதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்.நீ யார் குரல்வளையை யும் நெறித்து விடக்கூடாது.அப்படி ஏதாவது நடந்து விட்டால் போலீஸ் என்னைப் பிடித்து விடும்.தயவுசெய்து ஜாக்கிரதை.. குட்நைட்!” என்பேன்.

            வீட்டை விட்டு வெளியே போகும் போது “பார்கவி ,வீட்டைப் பார்த்துக் கொள்,யாராவது நுழைந்து விட்டால் குரல்வளையை நெறித்துவிடு. சவத்தை மூன்று மைல் தள்ளிப் போட்டுவிடு, இல்லையெனில் நாம் சிக்கலுக்குள்ளாவோம். ”இரண்டாவது ஆட்டம் சினிமா முடிந்து வரும்போது ’நான்தான்’ என்று சொல்வேன்.

            அப்படித்தான் தொடங்கியது. காலப் போக்கில் பார்கவியை மறந்தேன்.தீவிர உரையாடலில்லை.எப்போதாவது ஞாபகம்,அவ்வளவுதான். நினைவை இப்படிச் சொல்வேன்..உலகம் தொடங்கிய நாளிலிருந்து எத்தனையோ பேர் தோன்றி மறைந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தண்ணீர் ,தூசு,புகை என்று உலகின் ஒரு பகுதி என்று நமக்குத் தெரியும். பார்கவியும் அப்படி ஒரு நினைவுதான்.

         அதற்குப் பிறகுதான் இந்தச் சம்பவம் நடந்தது. அதைச் சொல்கிறேன்.

         ஒரு நாளிரவு பத்துமணியிருக்கும். தொடங்கியதை முடித்து விட வேண்டுமென்ற மும்முரத்தில் எழுதிக் கொண்டிருந்த போது விளக்கொளி மங்குவதாக உணர்ந்தேன்.ஹரிக்கேன் விளக்கைத் தூக்கி லேசாக ஆட்டினேன். மண்ணெண்ணைய் காலியாகும் நிலைக்கு வந்த போதும், ஒரேயொரு பக்கத்தை எழுதிமுடித்து விடச் சிறிது பாதுகாத்து வைத்திருந்தேன். எழுதத் தொடங்கிய போது மீண்டும் விளக்கு மங்கியது. எழுதுவதைத் தொடர்வ தற்கு முன்னால் திரியைத் தூண்டி விட்டேன்.சிறிது நேரத்தில் திரி குறுகிச், சிவந்த நெருப்பு வர விளக்கை அணைத்தேன்.

       என்ன செய்வது ?எனக்கு மண்ணெண்ணைய்வேண்டும். அருகிலுள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் நண்பர்களிடம் எண்ணெய் வாங்கி வருவதற்காக டார்ச்சையும் ,பாட்டிலையும் எடுத்துக் கொண்டு,கதவைப் பூட்டிவிட்டு ஆளரவமற்ற சாலையில் மிக மெலிதான நிலாவொளியில் வேகமாக நடந்தேன்.கருமேகங்கள் கூடியிருந்தன வெளியிலிருந்து கூப்பிட ஒரு நண்பன் வந்தான்.பின்பக்க வழியாக விடுதியில் நுழைந்தோம்.மற்ற மூவர் சீட்டாடிக் கொண்டிருந்தனர்.

       நான் மண்ணெண்ணைய் கேட்ட போது ஒருவன் சிரித்துக்கொண்டே “நீ ஏன் பார்கவியிடம் கேட்கக் கூடாது?அவள் கதையை எழுதி முடித்து விட்டாயா ?” என்று கேட்டான்.நான் பதில் சொல்லவில்லை.பார்கவி கதையை எழுதவேண்டும்.பாட்டிலை நிரப்பிக் கொண்டு வெளியே வந்தபோது மழை ஆரம்பித்திருந்தது.

        “எனக்குக் குடை வேண்டும் “என்றேன்.”எங்களிடம் குடையில்லை. எங்களுடன் விளையாடு. மழை நின்றதும் போகலாம்.”

         விளையாடினோம்.மூன்று முறை தோற்றுப் போனேன்.என் தவறு தான். பாதியாக நின்ற கதையிலேயே மனமிருந்தது.ஒரு மணிக்கு மழை நின்றது.நான் டார்ச்சையும் ,பாட்டிலையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது விளக்கு அணைக்கப்பட்டு நண்பர்கள் படுக்கப் போய்விட்டனர்.

         இருட்டில் தெரு அமைதியாக இருந்தது.வீட்டை நோக்கி நடந் தேன்.மிக மெலிதான் நிலவொளியில் முழு உலகமே மூடுபனியில் தழுவப்பட்டுக் கிடந்தது.என் மனதில் ஓடிக் கொண்டிருந்த  நினைவுகளின் சலசலப்பு பற்றி நான் அறியவில்லை. அல்லது நான் எதைப் பற்றியுமே  யோசிக்கவில்லை.வெறுமையான அந்த வழியில் டார்ச்சின் ஒளியோடு தனியனாக நடந்தேன்.அந்தப் பயணத்தில் ஒரு ஜந்துவைக் கூடப் பார்க்கவில்லை.

         கதவைத் திறந்து உள்ளே போய் தாழிட்டுக் கொண்டேன். அசாதாரணமாக எதுவும் நடக்கும் என்ற சந்தேகம் அந்த நேரத்தில் மனதிலில்லை.

திடீரென்று காரணமின்றி மனதில் சொல்ல முடியாத துக்கம் வந்தது. அழ வேண்டும் போலிருந்தது.நான் சுலபமாகச் சிரித்து விடுவேன்; ஆனால் கண்ணீர் விடுவது கடினம். சில சமயங்களில் என் மனம் மிக நிச்சலனமாகிவிடும். அந்த வகையான மனவுணர்வில் மாடியேறினேன்.

         நான் கதவைப் பூட்டிக் கொண்டு போனபோது,விளக்கணைந்து வீடு முழு இருளிலிருந்தது.மழை பெய்திருக்கிறது.இரண்டு,மூன்று மணி நேரம்கடந்திருக்கிறது. ஆனால் இப்போது அறை வெளிச்சமாக இருந்ததைக் கதவின் சட்டகம் வழியாக என்னால் பார்க்க முடிந்தது.

        கண்கள் பார்த்த ஒளியை ஆழ்மனது ஒப்புக் கொண்டது.ஆனால் அந்தத் தெளிவின்மை என் உணர்வில் இன்னும் ஊடுருவவில்லை. அதனால் வழக்கம் போலச் சாவியையெடுத்து பூட்டின் மீது டார்ச் வெளிச்சத்தைக் காட்டினேன்.பூட்டு வெள்ளியைப் போல மின்னியது.அது என்னைப்பார்த்துச் சிரித்தது.கதவைத் திறந்து உள்ளே போனதும்,மனவுலைவு ஏற்பட,  சுற்றியிருப்பது எல்லாம் தெரிந்தது.என் உடலின் ஒவ்வொரு அணுவும் அதை உணர்ந்த போதும் பயவுணர்வு வரவில்லை. எனக்குள் உணர்ச்சிகளின் பிரளயம் : இரக்கம்,அன்பு அல்லது இரண்டின் கலவை.வியர்வையில் நனைந்து ஊமையாக நின்றேன்.

           நீல வெளிச்சம்!வெள்ளைச் சுவர்கள்,அறை—நீல வெளிச்சத்தில் பளபளத்தது. அந்த வெளிச்சம் ஹரிகேன் விளக்கிலிருந்து பிரதிபலித்தது.

          இரண்டு இன்ச் திரியிலிருந்து ஒரு நீல ஜூவாலை.!  

        மண்ணெண்ணைய் இல்லாததால் அணைந்து போன ஹரிக்கேன் விளக்கு : யார் அதை ஏற்றியது ?பார்கவி நிலையத்திற்கு எங்கிருந்து அந்த வெளிச்சம் வந்தது?

                                                               *******************

 

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

வங்கியில் ஆடிட்
Image result for cash checking by auditors
ஆடிட்டர்கள் ஆக்கவும் அழிக்கவும் கூடியவர்களே.
நான் பணி துவங்கிய நாளிலிருந்து இந்நாள் வரை ஆடிட்டர்கள் என் தொழிலில் தவிர்க்க முடியாத தேவதூதர்களாகி விட்டனர். ஆம் தங்களை அனைத்தையும் சரி படுத்த வந்த தேவதூதர்களாக மனதில் நிறுத்திதான் பேச்சை துவக்குவார்கள். பின்னர் நம்மை சாத்தானாக்குவதும் அவர்கள்தான்.
வங்கி ஆடிட்டர்கள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்களுக்கு என்றும் தாம் நக்கீரர் பரம்பரையில்  தோன்றியவர்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். குற்றம் கண்டு பிடிப்பது ஒன்றுதான் தம் பிறவிப் பயன் என்று எண்ணுவர். அவர்களும் அறிந்த ஒரு இரகசியம், மற்ற பணிகளில் தம் திறமையை காட்ட முடியாதவர்களின் புகழிடம் ஆடிட் என்று. 
காலை வங்கி திறக்கும் முன் வந்து திறந்தவுடன் திபு திபுவென வங்கியுள் நுழைந்தால் அவர்களை ஆடிட்டர் என அறியலாம். முந்தைய தினமே வந்து அறையெடுத்து தங்கியிருந்தாலும் கிளையில் யாருக்கும் சொல்லாமல் இரகசியம் காப்பார்கள்.
கிளையில் அனைவரும் வந்தவுடன் முதலில் பணம் கையிருப்பு, நகைப் பைகள் சரி பார்ப்பார்கள்.
வங்கியில் நான் சந்தித்த ஓரிரு ஆடிட்டர்கள் பற்றிய செய்திகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
யூனியன் வங்கியின் குன்னூர் கிளை. நிறைய டீ எஸ்டேட்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் வைத்திருந்த பெருமை பெற்றது. அக்காலத்தில் எஸ்டேட் ஊழியர்கள் சம்பளத்திற்காக வார துவக்கத்தில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் பண்டில்கள் கோவையிலிருந்து வரவழைத்து வைத்திருப்போம். அவைகளை எண்ணி வைக்கும் பழக்கம் கிடையாது, முடியவும் முடியாது. பழைய நோட்டுகள் கைகளில் பசையாக ஒட்டும்.
அச்சமயம் ஒரு ஆடிட் டீம் மும்பை தலமை அலுவளகத்திலிருந்து வந்தது. அனைத்து பண்டில்களையும் எண்ண வேண்டியது அவர்கள் கடமை. ஒரு பீரோ நிறைய ஒற்றை ரூபாய் கட்டுகளை பார்த்து மலைத்தனர். ஆடிட் டீம் தலைவர் சற்று புத்திசாலி. சுற்றும் முற்றும் பார்த்தார். அப்பொழுது புதிதாக சேர்ந்திருந்த நான், மஞ்சள் நீர் தெளித்து கழுத்தில் மாலை போட்டு கழுவேற்றவிருந்த ஆடு போல அவர் கண்களில் பட்டேன் போலும். ஒரு பியூனை அழைத்து கட்டுகளை உடைத்தார். நூறு நோட்டுகள் கொண்ட ஒவ்வொரு செக்‌ஷனிலும் குத்து மதிப்பாக இரண்டு மூன்று நோட்டுகளை மடித்து வைத்து என்னை அழைத்தார். மீதி உள்ள நோட்டுகளை எண்ணி பென்சிலில் குறித்து வைக்க சொல்லி விட்டு மற்ற வேலைகளை பார்க்கச்சென்றார்.
எதிரே குவிக்கப்பட்ட ஒற்றை ரூபாய் நோட்டுக் கட்டுகள், இவ்வளவு நாட்கள் அவைகளை தவிர்தமைக்காக கைகொட்டி சிரித்தன. இள இரத்தம், ஈகோ என அனைத்தும் ஒன்று சேர நோட்டுகளிடம் தோற்க மனம் மறுத்தது.
மறுத்ததோடல்லாது, மூளைக்கு இரகசிய கட்டளையிட்டது. அதன்படி மடித்து வைத்திருந்த நோட்டுகளை மற்றும் எண்ணி மீதம் உள்ளவை 98 என்றோ 97 என்றோ குறித்து வைத்தது. நேரத்தை போக்க கட்டுகளை புரட்டி எல்லா நோட்டுகளிலும் நிதித் துறை செயலர் கையெழுத்து இட்டுள்ளாரா என சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆடிட்டர் களை அழைத்துக் கொண்டு டீ எஸ்டேட் இன்ஸ்பெக்‌ஷனுக்கு சென்ற பொழுது ஒற்றை யானை வழி மறித்த கதையை முன்பே கூறியுள்ளேன்.
பின்னர் யூனியன் வங்கியில் புதிதாக துவக்கப்பட்ட கிராம கிளையின் மேலாளராக நியமிக்கப்பட்டேன்.
கிளைக்கு புதியதாக ஜாவா பைக்கின் மரு பிறப்பானYezdi bike வாங்கிக் கொள்ள அனுமதிக்கப் பட்டேன்.
சொல்லாமல் கொல்லாமல் ஆடிட் டீம் வந்தது. புதிய கிளை அதிக தவறுகளுக்கு வழியில்லை. வேலை அதிகம் செய்தால் தவறுகளுக்கு வாய்ப்புண்டு. தவறுகள் நடந்தால் ஆடிட்டர்களுக்கு வேலையுண்டு . வேலையே செய்ய வில்லையென்றால் ஆடிட்டர்பளுக்கும் வேலையில்லை.
ஆடிட்டர் ஏதாவது கண்டு பிடித்தாக வேண்டுமே. 
பைக் வாங்கிய இரசீதை கையில் எடுத்தாதார். மேலும் கீழும் பார்த்தார். எழுத ஆரம்பித்தார். பைக்கிற்கு அனுமதியில்லாத saree guard ரூபாய் 150 க்கு வாங்கியுள்ளாக இரசீது காட்டியது. மேலாளரிடமிருந்து அத்தொகையை பிடிக்க சிபாரிசு செய்து எழுதினார். பிடித்தம் சம்பந்தமாக கிளைக்கும், தலமை அலுவளகத்திற்கும், ஆடிட் அலுவளகத்திற்கு காப்பியுடன் கடிதப்போக்கு வரத்து தொடர்ந்தன. தபால் சிலவு ரூபாய் 300 ஆகியிருக்கும்.
கடைசியில் ஒரு கடிதம் எழுதினேன். அதில் நிலங்களை மேற் பார்க்க சம்பந்த பட்ட விவசாயியையும், கணக்கு துவக்க வாகண வசதியற்ற விவசாயிகளையும் என் பைக்கில் அமர வைத்து அழைத்து செல்கிறேன். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டு பாணியில் தளர்ந்த வேட்டி கட்டி வருகிறார்கள். அவர்கள் வேட்டி சக்கரத்தில் மாட்டி விடும் என பயப்படுகிறேன். தேவையில்லையெனில் வாங்கிய இடத்தில் saree guard ஐ கொடுத்து விட்டு பணத்தை கட்டி விடுகிறேன் என்ற வகையில் இருந்தது அக்கடிதம்.
அடுத்த வாரமே அப்ரூவல் வந்தது.
பெரிய தவறுகள் பெரும்பாலும் ஆடிட்டர் கண்களில் படாது. ஆனால் ஆடிட்டர்கள் தவிற்க முடியாத தேவைகள்.

அந்த மூன்று நாட்கள் – டாக்டர் ரேவதி ராமச்சந்திரன்

           Image result for doggy and lady in chennai                                            

என்ன தலைப்பு இது என்று யோசிக்கிறீர்களா! வாங்க கதைக்குள் இல்லை இல்லை நிஜத்திற்குள் போகலாம்.  

எனக்கு ஆஸ்திக்கு ஒரு பையனும், ஆசைக்கு ஒரு பெண்ணும். பையன் தான் ஆஸ்தி, வேறு ஆஸ்தி நாஸ்தி. இருவருக்குமே நாய் வளர்ப்பதில் சிறு வயதிலிருந்தே ஆசை. ஆனால் அபார்ட்மெண்டில் இது கொஞ்சம் கஷ்டம். மேலும் நான் மூன்றை ஏற்கனவே வளர்த்துக்கொண்டிருந்தேன். என்ன என்ன நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் சொன்னது என் இரு செல்வங்களையும் அவர்களைப்  பெற்றவரைப் பற்றியும் தான். மேலும் நான் ஆபீஸ், வீடு என்று இருந்ததால் இன்னொன்றுக்கு ஏது நேரம்? அதாங்க நாய்க்குத்தான். 

என் பையன் அவன் கல்யாணத்திற்குப்பிறகு இந்த ஆசையை வந்தவளிடம் சொன்ன போது அவளும் ஒண்ணு நான், இல்லை நாய்’  என்றாள். அவள் அதற்குக் கூறிய காரணங்கள் நியாயமானது தான். என்  பையன் வேலை அப்படி. எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவார்கள். பெண்டாடியோட வாக்கிங் போகவே நேரம் இல்லை. இதில்  எங்கேயிருந்து நாயுடன். அந்த வேலையும் அவள் தலையிலேதான் விழும். பிறகு என் முறை. ‘ம்ஹூம், என்னைப் பார்க்காதீர்கள். பத்து பேருக்கு வேண்டுமானாலும் ஒண்டியாக சமைக்கிறேன், இந்த நாய் பேய் எல்லாம் என்னால் முடியாது’ என்று தைரியமாக சொல்லி விட்டேன். அவ்வளவு தான் கதை முடிந்து விட்டது என்று நாங்கள் இருவரும் அதாங்க மாமியாரும் மாட்டுப்பெண்ணும் சந்தோஷப்பட்டோம். இதில் ரொம்ப ஒற்றுமை. ஆனால் விதி வலியது, இல்லை இல்லை கொடியது.

என பையன் ஆபீஸ் கேட் கிட்ட ஒரு நாய் ஐந்து அல்லது ஆறு குட்டிகளைப்  போட்டது. பாவம் எல்லாக்குட்டிகளும் காரில் அடி பட்டு பரலோகம் சென்றன. இரண்டு குட்டிகளைத் தவிர. என் பையன் முதலில்  ஒரு குட்டியைப் பார்த்துப் பாவப்பட்டு கனி கொண்டு வந்துள்ளேன் என்று தருமர் சொல்லி திரௌபதியைக் கொண்டு வந்த மாதிரி இடுப்பில் காய்கறியைத் தூக்கி வர மாதிரி தூக்கி வந்தான். எங்களுக்கும் பாவமாக இருந்தது. தாயுள்ளம். ஆனால் கடைசியில் நான் தாங்க பாவம். அதுதான் கதையே. இன்னொரு குட்டி அடுத்த நாள் இறந்து விட்டது அதை நான் கவனிக்கவில்லை என்று என் பையன் சொன்னான். 

நாய் ஓகே. முதலில் அது எங்கே என்று தேட வேண்டி வரும். பயந்து கதவுக்குப் பின்னால், கட்டிலுக்கு அடியில் என்று ஒளிந்து கொண்டிருக்கும். இப்போ அதுக்குப் பயந்து நான் தான் ஒளிந்து கொள்கிறேன். என் பேரனுடன் அழகாக விளையாடும். என் பையன் குரல் கேட்டால் எங்கிருந்தாலும் ஓடி வரும். கொஞ்சம் பயந்த சுவாபம். பூனையைக் கண்டால் முன் சென்று பின்னேறும். மனித குணம் ஒன்று உண்டு. நாங்கள் கொடுக்கும் சப்பாத்தியைத் தொடாமல் அடுத்த வீட்டு காய்ந்த ரொட்டியை ருசித்து  சாப்பிடும். ஆரஞ்சு ஆப்பிள் தர்பூசணி  என இராஜ வாழ்க்கைதான். நானும் என் மாட்டுப்பெண்ணும் அருந்தும் ஆப்பிள் வெள்ளரி ஜூசை அது சாப்பிடும் அழகே அழகு. நாயைத் தொடாமலே நான் இதையெல்லாம் ரசிப்பேன்.   

     ஒரு தடவை என் பையன், மாட்டுப்பெண், பேரன் மூன்று பேரும் மூன்று நாட்கள் என்னையும் நாயையும் விட்டு விட்டு வெளியூர் சென்றனர். நானும் நாயுமடி எதிரும் புதிருமடி என்று முதலில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஓகே நாம் இருவர் நமக்கு மூன்று நாட்கள் என்று தீர்மானம் ஆயிற்று.

என குழந்தை என்னை விட்டுப் பிரிந்து இருந்தாலும் இருப்பான் இவன் இருக்க மாட்டான். அது எப்பிடித்தான் தெரியுமோ! நான் என்  அறைக்குள் சென்றால் பத்து நிமிடம் பார்ப்பான். எனக்கு கொடுக்கும் நேரம் அவ்வளவுதான். அதற்குப் பிறகு கதவைத் தட்டுவான். என்னால் நம்பவே முடியலை. எப்படி அவன் நேரம் பார்க்கிறான் என்று!  இதுவாவது பரவா யில்லை. இராத்திரி பகல் எப்படித் தெரியும்! இராத்திரி என் அறையில் போனாலே விட மாட்டான். இதை விட ஆச்சரியம்! சரியாக இரவில் மூன்று மணிக்கு எழுந்து என்னைக் கூப்பிடுவான். வெளியில் போக. பிசாசு கூட பயப்படும் இரவில் தைரியமாக இவனுடன் வெளியில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்வேன். அப்பப்பா! இனி யாராவது ‘நாயே’ என்று திட்டினால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நாய்க்குள்ள அறிவு நம்மிடம் உள்ளதா என்று. என் குணம் அறிந்து என்னைத் தொடாமலே என மனதில் உட்கார்ந்து விட்டான். என் பெண்ணிடம் நேற்று பேசிய இருபது நிமிடத்தில் பதினைந்து நிமிடம் இவனைப் பற்றித்தான் என்றால் அவள் ஆச்சர்யப்பட்டுப்போனாள்!

அந்த மூன்று நாட்கள் மூன்று யுகமாகக் கழிந்தாலும் மூன்று முத்தான நாட்களாக இப்பொழுது பார்க்கிறேன். ‘நாயே  நன்றியுள்ள நீயே! நலம் பட வாழியவே!’

  

குண்டலகேசியின் கதை – 7 – தில்லை வேந்தன்

Image result for kundalakesi

முன்கதைச் சுருக்கம்:

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
தந்தையின் செல்வாக்கால் அவனை விடுதலை பெறச் செய்து மணந்தாள்.
மண வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தொடங்கியது .
விதியும் பின் தொடர்ந்தது

மணமக்கள் சோலைக்குச் செல்லுதல்

கடிமணம் முடிந்த பின்னர்க்
காணவே வந்தோர் வாழ்த்தி
விடைபெற, ஓய்வெ டுக்க
விரும்பியே கணவ னோடு
மடமயில் பத்தி ரையாள்
மலர்விரி சோலை புக்காள்.
கடமையும் முடிந்த தென்று
கருதினான் அன்புத் தந்தை

மலர்ப்படுக்கை கண்டு வியத்தல்

தேனைப் பொழியும் நறுமலர்கள்
தென்றல் வீசத் தாமுதிர்ந்து
வானின் மீன்கள் கீழிறங்கி
வயங்கும் அழகோ எனவிளங்கத்
தானும் அவனும் உறங்குதற்குத்
தரையில் வண்ண மலர்ப்படுக்கை
ஏனோ இயற்கை விரித்ததென
எண்ணி மங்கை மனம்வியக்கும்!

 

சோலைக் காட்சிகள் கண்டு இல்லம் சேர்தல்

மலரினை வண்டு மருவுதல் கண்டும்,
மடநடை அனமொடு சேவல்
உலவிடக் கண்டும், உயர்கிளை மேலே
உலகினை மறந்திரு கிளிகள்
குலவிடக் கண்டும், வரியுடல் அணில்கள்
கொஞ்சியே குதித்திடக் கண்டும்,
நிலவெனும் முகத்தாள் நெஞ்சினில் இன்பம்
நிறைந்திட மனைதனைச் சேர்ந்தாள்.

 

விதியின் நாடகம்

இல்லற வாழ்வில் இன்பமே கண்டார்
இருவரும் ஒருவராய் வாழ்ந்தார்
அல்லொடு பகலும் அன்பினில் மூழ்கி
அன்றிலின் இணையெனத் திகழ்ந்தார்.
கல்லெனும் நெஞ்சக் காளனும் காதல்
களிப்பினில் தன்னிலை விட்டு
நல்லவ னாக மாறிட, விதியின்
நாடகம் தொடங்கிய தம்மா!

பாலென ஒளியைப் பாரினில் நிலவு
பாங்குடன் பொழிந்தவோர் இரவில்
சேலெனும் விழியாள் நாயக னுடனே
சென்றனள் மேனிலை மாடம்
கோலமார் எழிலில் மனங்களில் மையல்
கொழித்திடத் தென்றலும் தழுவச்
சாலவும் தம்மை மறந்தவர் இடையே
சட்டென விளைந்ததே ஊடல்

கள்ளும் கள்ளமும்

கள்ளினை விரும்பி மாந்திக்
காளனும் நிலைம றந்தான்.
கள்ளமும், சூதும், உள்ளக்
கதவுகள் திறந்து கொண்டு
துள்ளியே வெளியே பாயச்
சொல்லிய தீய சொற்கள்
அள்ளியே வீழும் தீயின்
அருவியாய் ஆன தந்தோ

 

காளனின் கடுஞ்சொல்

“காளையாம் என்னைக் காதலித் திடவே
கருவிழி மங்கையர் பலரும்
நீளமாய் வந்து வரிசையில் நிற்க,
நீயதில் முந்தியே நின்றாய்.
ஆளையும், உருவ அழகையும் விரும்பி
அடைந்திட நாணமும் விடுத்தாய்”,
தேளெனக் கொட்டிய கொடுஞ்சொலைக் கேட்டுத்
திகைத்தவள் மறுமொழி இறுத்தாள்.

 

பத்திரையின் உறுத்தும் விடை

“நாடியே பொருளைத் திருடிடும் திறமை
நாயக, என்னிடம் காட்டி,
வாடிய பெண்ணின் உளத்தினைக் கவர்ந்தாய்
மறக்கிலை உன்தொழில் இன்னும்”-
ஊடலில் மங்கை உளறிய சொற்கள்
உறுத்தவே கறுவினான் சினத்தால்.
ஆடவன் அவனும் ஆத்திரம் அடைந்தும்
அவளறி யாவணம் மறைத்தான்

(தொடரும்)

 

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்.

கலைச்செல்வி

Image result for கிராமத்தில் ஒரு குடும்பம் பாட்டி பேத்தி

திருச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி இலக்கியச் சிந்தனையின் 2017 ஆண்டிற்கான சிறந்த சிறுகதை விருதினைப் பெற்றவர். ‘இரவு’, ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது’, ‘வலி’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுடன் இவரது ‘புனிதம்’ என்னும் புதினமும் இவரது பங்களிப்புகள். இவரது சிறுகதைகள் மேலும் சில தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.

*** *** *** *** ****

இவரது ‘கனகுவின் கனவு’ என்னும் கதை

“புள்ளத்தாய்ச்சி பொண்ணு இப்டி கூன் போட்டு உட்காரதடீ..” செல்லமாக அதட்டினாள் கனகு. “அத்தே.. சக்கரைபொங்கலுக்கு பெரிய படிக்கு ரெண்டு படி அரிசி போட்டா சரியாயிருக்குமாத்தே..?” கனகுவிடம் கேட்டாள் நல்லமுத்துவின் மருமகள். “எக்கா சோத்தை வடிச்சு வுட ரெண்டு தட்டு கூடை போதுமில்ல..?” என்ற தேவானையை நல்லமுத்து அதட்டினான்.

என்று வளைகாப்பு நிகழ்வின் பின்னணியில் நடக்கும் உரையாடல்களோடு தொடங்குகிறது.

கணக்கு ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. பணி ஓய்வுக்கு பிறகு கணவனும் இறந்து விட மகள் தீபாவின் வீட்டிற்கு வந்து விட்டாள். ஆரம்பத்தில் மகள் வீட்டிற்கு வந்து விட்டோமே என்ற தயக்கம் தான் இருந்தது, ‘எப்படா கிராமத்துல எதாவது விசேஷம் நடக்கும். ஓடுலாம்னு நினைப்பு வரும்.. இப்ப முட்டிவலியும் முதுகுவலியும் வந்தததுலேர்ந்து ஊருக்கு போய்ட்டு வர்றதுங்கறது பெரிய அவஸ்தையா மாறி போச்சு.’ தீபாவின் வேலை நேரம் வேறு மாறிக் கொண்டேயிருப்பதால் நினைத்து வைத்தது போல் ஊருக்கு போக முடிவதில்லை.

பங்காளி வீட்டுல் ஒரு சாவு. கட்டாயம் போயிருக்கவேண்டும். மூட்டுவலியுடன் அம்மாவை பேருந்தில் ஏற்றிவிட மகளுக்கு விருப்பமில்லை. தானும் கூடப் போகலாமென்றால் லீவு போடுவதில் சிக்கல். பேத்தி நித்யாவின் ‘டான்ஸ் ப்ரோக்ராம்’ அடுத்த வாரம். அதற்கு லீவு தேவைப்படும். கருமாதிக்கு போய்க்கொள்ளலாம் என்றார்கள் மகளும் மருமகனும்.

கருமாதி ஞாயிறன்று வந்தது. தீபாவிற்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை. அதிலும் சனிக்கிழமை அலுவலகம் சம்பந்தமாகவே கழிந்து விடுகின்றன. ஞாயிறும் இப்படிப் போய்விட்டதென்றால் அடுத்தவாரம் ‘ஓடுகிற’ தெம்பே போய்விடும் என்று சொல்லிவிட்டாள். தீபா.

கணவன் ராமசாமியின் உடன்பிறப்புகளில் எஞ்சியிருந்தவர் கொழுந்தன் நல்லமுத்துதான். இரண்டு மகன்களும் ஒரு மகளுமாய் குடும்பஸ்தன் ஆனவர். ராமசாமி மோட்டார் ரூமில் ‘ஷாக்’ அடித்து சிமென்ட் தரையில் விழுந்துவிட்டார். செலவிற்காக மனைவியின் நகைகளைக் கூட விற்கத் தயாராகி, ‘காரு வச்சு மெட்ராசுக்கு’ கூட்டிப்போய் சிகிச்சை அளிக்கச் செய்தவர் நல்லமுத்து.

பதினைந்து நாட்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை முடித்து அண்ணனை மீண்டும் அண்ணியிடம் ஒப்படைத்த கொழுந்தனை தெய்வமாகவே பார்த்தாள் கனகு.

நாளைக்கு கொழுந்தன் நல்லமுத்துவின் மகளுக்கு வளைகாப்பு. கட்டாயம் போயாக வேண்டும். இங்கிருந்து ஒரு மணி நேர பயணம். அங்கிருந்து ஆறேழு கிலோ மீட்டர் உள்ளடங்கி இருக்கும் கிராமம். காத்திருந்தால் ஊருக்குள் செல்லும் பேருந்து அரை மணி நேர பயணத்தில் கொண்டு சேர்த்து விடும். ‘இந்த பயணமாவது தள்ளி போகாம இருந்தா சரி..’ எண்ணிக் கொண்டாள்.

வளைகாப்பு மறுநாள் மகளும் கூட வருவதாகச் சொல்லியிருந்தாள். ஆனால் அதே நாள் கணவனின் தங்கை மகளின் ‘மஞ்சள் நீராட்டு’ நிகழ்விற்கு போகாமல் இருக்கமுடியாது. குழந்தை பிறந்ததும் போகலாமே என்றாள் தீபா

“வேற யாரு வீட்டுல தேவைன்னாலும் போவாம இருந்துக்கலாம்.. இது சொந்த கொழுந்தனாச்சேப்பா..” மருமகனிடம் தணிந்து பேசினாள்.

தங்கச்சி வீட்டுக்குப் போகவேண்டும். கொலீக் வீட்டில் பர்த் டே பார்ட்டி என மருமகன் முரளிக்கு ஜோலிகள்.

“உங்க சித்தப்பனுக்கு இந்த உடம்ப செருப்பா கூட தைச்சு போடலாம்.. நான் கட்டாயம் போகணும்…” உள்ளறையில் இருந்த மகளிடம் கிசுகிசுப்பாக பேசினாள் கனகு.

கனகுவின் மூட்டுவலி மற்றும் தான் கூட வரவியலாத நிலை இரண்டையும் காரணம் காட்டுகிறாள் மகள். பேருந்திலும் போக முடியாது. தனியொருத்தியாக காரில் போய் இறங்குவதும் நன்றாக இருக்காது.

போன் செய்தாவது நல்லமுத்துவிடமும், அவர் மனைவி தேவானையிடமும் சொல்லிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தாள்.

“நான் தான்டீ அக்கா பேசறன்.. நேத்துலேர்ந்து முதுவு வலி தாங்க முடியிலடீ.. படுக்கையவுட்டு எழுந்துக்க முடியில.. பத்தாததுக்கு ரெண்டு முட்டியிலயும் பெல்ட் போட சொல்லியிருக்காரு டாக்டரு.. “

என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தாள். உங்கள் கொழுந்தனுடனேயே பேசிக்கொள்ளுங்கள் என்று தேவானை சொல்லிவிட்டாள்.

“… நான் காரு பேசி அனுப்பிவுடறன்.. உம்மவனையும் கூடவே அனுப்பறன்.. நீ படுத்துக்கிட்டே வந்து சேந்துருண்ணீ.. எம்பொறந்தவன் இருந்தா வுட்டு குடுத்துவாரா..? இல்ல நீதான் ஊர வுட்டு போயிருப்பியா..?” நல்லமுத்துவின் கரிசனத்தில் உரிமையும் கலந்திருந்தது.

‘ஊர்லேர்ந்து யார் பேசுனாலும் பாட்டி அழுதுடறாங்களே. ஏன்?’ என்பது தியாவின் சந்தேகம்.

‘முதுகு வலி நிமிர முடியவில்லை, தரையில் தலைகாணி இல்லாமல் மல்லாக்கப் படுத்திருக்கிறேன்.’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லி பிள்ளைத்தாய்ச்சியை வீட்டில் கொண்டுவந்து விட்டால் தனது வீட்லேயே பார்த்துக்கொள்கிறேன் என்றும் சொல்லிவிட்டாள்.

“கடவுளே.. அடுத்த வாரம் இதுங்க ரெண்டுக்கும் வேறெந்த வேலையும் வர கூடாதே..” மனம் மௌனமாக பிரார்த்தித்துக் கொண்டது.

“நித்திக்குட்டீ.. வாம்மா.. பாட்டீ பாவாடை கட்டி வுடறன்..” பேத்தியை அருகே அழைத்தாள் கனகு.

 என்று முடிகிறது கதை.

**** ***** ******

இதுபோன்ற உறவுமுறை நடைமுறைச் சிக்கலை மையமாகக் கொண்ட ‘நெனப்பு’ மனதில் நிற்கும் ஒரு சிறுகதை.

கதைக்கு நடுவில் பேத்திக்கு வகுத்தல், ஈவு, மீதம் என்று கணக்கு சொல்லிக் கொடுக்கும்போது, ‘மீந்து போனா கீழ தான் கெடக்கணும் போலருக்கு..’ என்று கனகு தனக்குள் சொல்லிக்கொள்வது இந்தக் கதையின் மையமாகத தோன்றுகிறது.

கம்பன் கவிநயம் – சக்தி

கம்ப ராமாயணத்தில்  இரு பாடல்களா? 

ராம என்ற இரு எழுத்தை ஒதுவதால் ஏற்படும் பலனைக் கூறும் பாடலும்  அனுமனின் சிறப்பைக் கூறும் பாடலும்  இவை இரண்டும் போதுமே நம் ஜென்பம் சாபல்யமடைய !

ஜெய் ஸ்ரீ ராம் ! 

 

hey ram

 

 

 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால். –(பால. காப்பு 13)

 

 

 

 

 

 

பொருள்:

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே (எல்லா வித நன்மைகளையும், செல்வங்களையும் தந்தருளுமே)
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே (தீய செயல்களும், பாவங்களும் சிதைந்துத் தேய்ந்து ஒன்றும் இல்லாமல் போகுமே)
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே (இனி எடுக்க ஜென்மங்களும், அந்தந்த ஜென்மங்கள் எடுத்ததினால் வரவிருக்கும் மரணங்களும் என இவையிரண்டும் இல்லாமல் போய்விடுமே)
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால் (“ராமா” என்னும் இரண்டு எழுத்தினைப்  பாராயணம் செய்வதினால் இவை எல்லாம் உடனே இப்போதே இந்தப் பிறவியிலேயே நடக்கும்)

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் 

(பால காப்பு -2)

 

இதன் பொருள்:-

அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்

அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்  –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு

அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்

அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்

அம்பு பட்ட மான் – வளவ. துரையன்

Image result for அம்பு பட்ட மான்

அடர்ந்த காட்டினுள் புகுந்த வேடர்கள் அக்காட்டில் இருக்கும் விலங்கினங்களை வேட்டையாடுகிறார்கள்.  அவர்கள் பார்வையில் ஓர் ஆண் மானும் பெண் மானும் பட்டு விட்டன. உடனே அவற்றை நோக்கி அவர்கள் அம்பு எய்தார்கள். அம்பு பெண் மான் மேல் தைத்து உள்ளே புகுந்தது. ஆண்  மான் தப்பித்து அங்கிருந்த ஓர் ஓடையைத் தாண்டி மறு கரைக்குப் போய் விட்டது.

 

              பெண் மானும் தைத்த அம்புடன் அக்கரைக்கு ஓடும்போது வேறு சிலர் அவ்வழியே வந்து விட்டார்கள். அவர்கள் சென்ற பின்னர் போகலாம் என்று அந்தப் பெண் மான் அங்கிருந்த ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. அவர்கள் போனபிறகு போகலாம் என நினைத்தால் மேலும் வேறு சிலர் வந்துவிட்டார்கள். ஐயோ, இவர்கள் நான் இருக்கும் நிலை கண்டால் சிரிப்பார்களே என்று நினைத்து அந்தப் பெண் மான் இன்னும் மறைந்து நிற்கிறது.

 

      அந்த மானைப் போல என் மனம் நிற்கிறதே என்று முத்தொள்ளாயிரத் தலைவி எண்ணுகிறாள். பாண்டியன் உலா வருகிறான். தலைவி அவனைப் பார்க்கிறாள். அவள் மனத்தில் மன்மதனின் அம்பு போய்த் தைக்கிறது. ஆனால் பாண்டியன் எக்கவலையுமின்றி அரண்மனை சென்று விடுகிறான். தலைவியோ இங்கே இருந்தால் இந்த மன்மதனின் அம்பு நம்மை கொன்று விடும் என்று எண்ணுகிறாள். எனவே தன்  மனத்தை ‘ஓடு, ஓடு, என்று அரசனின் பின்னே செல்ல விடுக்கிறாள். அதுவும் அவன் பின்னே செல்கிறது.

 

ஆனால் அரண்மனை வாயிலில் ஒரே கூட்டம். மனம் உள்ளே செல்ல முடியாமல் வெளியே நிற்கிறது. பல்வேறு காரியங்களுக்காக அரசனைக் காண பலர் உள்ளே செல்வதும் வருவதுமாக இருக்கிறார்கள். ”பாண்டியன் எப்போது தனியாக இருப்பான்? தலைவியின் நிலையை அவனிடம் கூறலாம்” என்று மனம் எட்டிப் பார்க்கின்றது. கூட்டமோ குறையவே இல்லை. உள்ளே செல்பவர்களுக்கும் வெளியே வருபவர்க்கும் இடம் விட்டு இந்த மனம் கதவு ஓரமாக நின்று கொண்டிருக்கிறது. ’அட, இந்த மனத்தைப் பாரடா; அம்பு தைத்து அத்துடனேயே வந்து நிற்கின்றது’ என்று பேசிச் சிரித்துக் கொண்டிருப்பாரைக் கண்டு நாணி நிற்கிறது.        அவள் மனம் பாண்டிய மன்னனின் பின்னே சென்றது. ஆனால் அவன் இருக்கும் அரண்மனைக்குள் செல்ல முடியவில்லை. ”மன்னனைக் காண்பதற்காக உள்ளே செல்பவருக்கும், அவனைப் பார்த்துவிட்டு வெளியே வருபவர்க்கும் வழிவிட்டு தன் நிலை கண்டு சிரிப்பார்க்கும் நாணி அம்பு பட்ட பெண் மானைப் போல என்மனம் நிற்கிறதே” என்று அவள் தன் தோழியிடம் கூறுகிறாள்.

 

      தலைவின் ஏக்கம், இரக்கம், மன்மதனின் மலர்க்கணை பட்டு அவள் நெஞ்சு கலங்கியுள்ள நிலை எல்லாம் இப்பாட்டில் நிறைந்து இருக்கின்றன

 

           ”புகுவார்க்[கு]  இடம்கொடா  போதுவார்க்[கு] ஒல்கா

           நகுவாரை  நாணி  மறையா — இகுகரையின்

           ஏமான்  பிணைபோல்  நின்றதே  கூடலார்

           கோமான்பின் சென்றஎன் நெஞ்சு. 

                                          [முத்தொள்ளாயிரம்—42]

      இப்பாடலில் இடங்கொடா, ஒல்கா, மறையா, எனும் மூன்று எச்சங்களைப் பார்க்கிறோம். இவை ’செய்யா’ எனும் வாய்பாட்டு எச்சங்கள். இவை வாசிப்போர்க்குத் தலைவியின் நிலையை உணர்த்தி உணர்ச்சியை அதிகமாக்குகின்றன. இதே போன்ற மூன்று எச்சங்களை நளவெண்பாவிலும் காண முடிகிறது.

           ”மக்களைமுன் காணா மனம்நடுங்கா வெய்துயிரா

            புக்கெடுத்து வீரப் புயத்தனையா”

என்று நளன் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத நிலையில் தன் புதல்வர்களை எடுத்து அணைப்பதை அவலச்சுவை தோன்ற புகழேந்திப் புலவர் பாடுவார்.

      மேலும் ’பிணை’ என்ற அருமையான சொல் இப்பாடலில் உள்ளது. ஆண்மானைக் ’கலை’ என்றும் பெண் மானைப் ’பிணை’ என்று சொல்வது மரபாகும். ஏமான் என்பதில் ’ஏ’ என்பது அம்பைக் குறிக்கும். ’மரை’ எனும் சொல்லும் மானைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

           ”தாமரைபோல் வாண்முகத்துத் தையலீர் காணீரோ

            ஏமரை போந்தன ஈண்டு” என்று திணை மாலை நூற்றைம்பதில் வருகிறது.

      திருவாய்மொழி வியாக்கியானத்திலும் ஏ எனும் சொல் இருப்பதைக் காண முடிகிறது.

      ”இன்ன காட்டிலே மான்பேடை ஏவுடனே கிடந்து உழையா நின்றது, என்று ஊரிலே வார்த்தையானால், எய்தவன் கை உணராதோ”

      என்பது வியாக்கியானமாகும்.        

இவ்வாறு முத்தொள்ளாயிரம் தலைவின் பிரிவாற்றாமையை ஓர் அம்பு பட்ட மானைக் காட்டி சுவையாகக் கூறுகிறது.      

“எலுமிச்சை “- லக்ஷ்மணன்

Image result for cheap lemon yellow saree for old people

அவனுக்கு ஒரே ஆச்சர்யம். கொஞ்சம் நிம்மதியும் கூட. வாடகைக்கு ஒரு வீடு பார்த்து அது மனைவிக்கு பிடித்துப்போய் அங்கு குடி போவதும் நாடு விட்டு நாடு புலம் பெயர்ந்து போவதும் அவனைப் பொறுத்த வரை ஒன்றுதான்.  எவ்வளவு அலைச்சல். வீடு நல்லாயிருந்தா ரோடு சந்து மாதிரி இருக்கிறது. வேண்டாம். எல்லாம் சரியாயிருந்தா வாடகை ரொம்ப அதிகம், வேண்டாமே என்பாள்.

என்னமோ அவளுக்கு இந்த வீடு மிகவும் பிடித்து போனது. கேட்டை திறந்து முன்னாடி உள்ள வீட்டின் பக்கவாட்டின் வழியே பின்பக்கம் சென்றால் அதுதான் அவர்கள் பார்த்திருக்கும் வீடு. சின்ன சின்னதாய் இரண்டு படுக்கை அறைகள். ஹாலும் சின்னதே. சமயலறை ரொம்ப சுமார். வாசலில் குட்டி வராண்டா. “500, 1000 மேல போனாலும் பரவாயில்லை. இந்த வீட்டை பேசி முடிச்சுடுங்க” என்று சொல்லிவிட்டாள். என்ன காரணமென்று தெரியாமலேயே அவனும் வீட்டு உரிமையாளரிடம் பேசி சம்மதம் பெற்று அந்த வீட்டிற்கு குடித்தனம் வந்து ஒரு வாரம் ஆயிற்று.

அவனது வாழ்க்கை அவனது கடைதான். மாம்பலத்தில் சின்ன துணிக்கடை. புடவை ரவிக்கை மற்றும் டெய்லர்களுடைய தேவைக்கான அத்தியாவசிய பொருள்கள். (துணிக்கடை வைத்திருந்ததால் எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்)

போதுமான வருமானம். காலையில் 9 மணிக்கு கடையை திறந்தால் மூடுவதற்கு இரவு 10 மணி ஆயிடும். வீட்டிற்கு வந்து சாப்பிட்டு சிறிது நேரம் டி வி பார்த்து படுக்க எப்படியும் 12 மணி ஆகிறது. எதாவது ஒரு நாள் கடைக்கு சீக்கிரமாக 8 மணிக்கு சென்றால் காத்திருந்தார்போல சாலையில் குப்பை பெருக்குபவள் ‘சார் டீ குடிக்க எதாவது காசு’  கேட்பாள். அவனும் அவள் பேரை ( சரஸ்வதிங்க, சரசுன்னு கூப்பிடுவாங்க ஒரு பையன் சார், கண்ணாலம் கட்டிகிட்டு தனியா போய்ட்டான். நானும் அம்மாவும்தாங்க. அவ சீக்காளிங்க. ) கேட்டுவிட்டு 20 ரூபாய் கொடுப்பான். ஒரு வெளுத்த நீல புடவை, வெள்ளை ரவிக்கை, ஒரு கையில் நீண்ட கொம்பு. அதன் முனையில் குப்பை கூட்ட கணிசமான அகலத்தில் பிளாஸ்டிக் பிரஷ்.அந்த கோலத்தில் அவளை பார்த்தால் பாவம், எவ்வளவு வேணா உதவி செய்யலாம் என தோணும்.

இது வாரா வாரம் தொடர்ந்தது. அவனிடம் பணம் கேட்பதனாலோ என்னமோ அவன் கடை வாசல் எப்போதும் சுத்தமாக இருக்கும். பக்கத்து கடை அடகு கடை. பழக்கத்தில் நண்பராகி விட்டார்.

அடகு வைப்பவர்கள் முக்கால்வாசி பேர் அனாவசிய செலவுப் பண்ணத்தான் பணம் கேட்டு அவரிடம் வருகிறார்களாம் இவனிடம் வந்து வருத்தப்படுவார். அந்த வருத்தம் உண்மையானதா என இன்று வரை அவனுக்கு சந்தேகம்தான்.

ஒரு நாள் அவன் மனைவியின் தங்கை முதன்முதலாக அந்த வீட்டிற்கு வந்தாள். வந்தவள் ‘பிரமாதமான வீடு. உனக்கு பிடித்த மாதிரியே இருக்கே. கேட்லேருந்து உள்ளே வர எவ்ளோ தூரம்.’ என்று வியந்தாள். பகல் முழுவதும் இருந்துவிட்டு அவள் போன பிறகு அன்றுதான் முதன்முதலாக வாசலில் நின்று கொண்டு அவன் மெயின் கேட்டைப் பார்த்தான்.

இவனுடைய வீட்டிற்கும் வாசலுக்கும் 100 அடி தூர இடைவெளி. இடது பக்கம் பின்னாடி பெரிய வேப்ப மரம். கொஞ்சம் வெட்ட வெளி. அதை ஒட்டின வீடு. சொந்தக்காரருடையது.

வலது பக்கம் ஒரு தென்னை மரம். பக்கத்தில் வேப்ப மரம். அடுத்தாற்போல எலுமிச்சை மரமும் அதை சேர்ந்தார்போல் காம்பவுண்ட் வரை பவழமல்லி மரம். நடுவே எங்களுக்கென்று நடைபாதை.

ஆனால் அவன் கண்ணில் பட்டது பாதை முழுவதும் குவிந்திருக்கும் குப்பைதான். மனைவியை கூப்பிட்டு “யார் இந்த குப்பையெல்லாம் தினமும் அள்றா”  என்று கேட்டான்.

“யார் வருவா, நான்தான் ரெண்டு வேளையும் பெருக்கி தள்றேன்”

“கஷ்டமாயில்லையா? ஆனா நீதானே இந்த வீட்டிற்காக பிடிவாதம் பிடிச்சே?”

“தெரியும், இப்படி சொல்வீங்கன்னு தெரியும். பரவால்ல, எங்க ஊர்ல எங்க வீட்ல இருக்கறா மாதிரி இருக்குங்க, என் தங்கையும் அதாங்க சொன்னா, வெய்யில் தெரியல பாருங்க”

அன்று மாலையில் அவள் பெருக்க ஆரம்பித்தபோது துடப்பத்தை வாங்கி அவன் பெருக்கினான். எலுமிச்சை மர குப்பைதான் அதிகம். அவ்வளவு தூரம் குனிந்து பெருக்கி முடிக்க முதுகு லேசாக வலித்தது.

மறு நாளே கடைக்கு சென்று சரசுவின் கையில் பார்த்தது போல நீண்ட குப்பை பெருக்கும் கொம்பை வாங்கி வீட்டில் வைத்ததோடு இல்லாமல் அவனே காலையில் ஐந்து மணிக்கு எழுந்து நடைபாதையை பெருக்க ஆரம்பித்தான். குனியாமல் பெருக்கினதால் முதுகு வலிக்கவில்லை.

அவன் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம். தங்கைக்கு ஃபோன் போட்டு அவன் செய்யற காரியத்தை சொல்லி மகிழ்கிறாள். அவனுக்கு அந்த கொம்பை கொண்டு குப்பையை கூட்டுற ஒவ்வொரு முறையும் டீ காசு கேட்கும் சரசுவின் ஞாபகம்தான் வருகிறது. இதை அவன் மனைவியிடமும் சொல்லி விட்டான்

“தோ பாருங்க முதல்ல டீ காசு கேட்பா. அப்புறம் புடவை கேட்பா நீங்க பாட்டுக்கு கடைலேருந்து ஒண்ணும் கொடுக்காதீங்க. வேணும்னா எம்புடவை ஒண்ணு பீரோலேருந்து குடுக்கறேன்” என்றாள். ஆனால் அப்படி ஒண்ணும் நடக்கவேயில்லை.

ஒரு வாரம் ஆயிற்று. அன்று மதியம் திடீரென்று சரசு வந்தாள். பதட்டமாக இருந்தாள். இரண்டு நாளாக சாப்பாடு தூக்கம் இல்லாத மாதிரி இருந்தாள்.

“சார் நல்லதா ஒரு புடவை சீக்கிரமா கொடுங்க 500, 600 ரூவா வரைக்கும் போகலாம் பரவால்ல “ என்றாள்.

மனைவி சொன்னது நினைவில் வர புடவைகளை எடுத்துப் போட்டான். அதில் ஒன்றை எடுத்து விலை லேபிளை பார்த்தாள் ₹660/- என்று போட்டிருந்தது. அவனே முந்திக்கொண்டு “600 ரூபா கொடு போறும்” என்றான்

பணத்தை கொடுத்து விட்டு புடவையை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்

அவள் போன சற்று நேரத்திற்கெல்லாம் பக்கத்து மார்வாடி உள்ளே வந்து

“பாவம் அந்த குப்பை கூட்றவ அவ அம்மா காலேல இறந்து விட்டாளாம் தாலிய அடகு வெச்சு 8000 ரூபா வாங்கிண்டு போறா” என்றார்

அவன் மேஜையின் மீது இருந்த புடவைகளப் பார்த்தவர் “ஓ புடவை வாங்கிண்டு போணாளா. அவ அம்மா மேல போடறத்துக்காக இருக்கும்” என்றார்

சற்று நேரம் அவனுக்கு பேச்சே வரவில்லை. அன்று காலையில் வீட்டைப் பெருக்கும்போது குப்பையின் நடுவே ஒரு எலுமிச்சைப்பழத்தை பார்த்தது நினைவுக்கு வந்தது. குப்பை அகற்றும் சரசு வாங்கின புடவை நிறமும் எலுமிச்சை மஞ்சள்தான். மாலை வெய்யிலில் கடைக்கு  வெளியே நின்று அவள் போன  தெருவின் கடைசி முனையைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

பழி – செவல்குளம் செல்வராசு Y

தனிமையின் விரக்தியில்

விட்டம் பார்த்துக்கிடக்கும்போதும்

தள்ளாடி நடந்து

வீடு வந்து சேரும்போதும்

தாளாத போதையில்

தடுமாறி விழும்போதும்

“ஏ நிறைகுளத்தா(ன்)

எம்புள்ள பிழப்பு

ஊர் சிரிக்க ஆயிப்போச்சே” னு

கண்ணில் நீரொழுகப் புலம்புவாள் அம்மா

 

தற்கொலைக்கு முயன்று

வீடு மீண்ட வாரத்தில்

ஊரடங்கிக்கிடந்த

உச்சிப் பொழுதில்

‘மரியா’ பார்க்கவந்தபோது

வீட்டில் வேறு யாரும் இல்லை

ஒன்றும் சொல்லாமல் அழுதாள் அம்மா

இருவரும் மௌனமாயிருந்தோம்

 

“பெத்த தாயி செய்யுற காரியமான்னு

ஊரு பழி பேசுமே

எம் பழிய எங்க போய்த் தீப்பேன்

ஏ வண்டி மறிச்சா(ள்)

எம்புள்ள வாழ்கைய

நேராக்கமாட்டியா” னு

புலம்பிக்கிட்டே வீடுவிட்டகன்றாள்

 

   நாட்டிய மங்கையின் வழிபாடு – 6 – கவியரசர் தாகூர்- தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்

 

Image result for tagore's natir puja

                        

முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். அவன் இளவரசன் அஜாதசத்ருவிற்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். அரசி லோகேஸ்வரி இதனை விரும்பவில்லை. அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகி விட்டதில் மனம்மிக நொந்து போயிருக்கிறாள்.

மாலதி என்றொரு கிராமத்துப்பெண் அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியிடம் வந்து சேர்கிறாள். அங்குவரும் பிட்சுணி உத்பலா அன்றுமாலை வழிபாட்டிற்கான காணிக்கைகளை ஸ்ரீமதியே செலுத்துவாள் எனக்கூற, இளவரசிகள் திகைக்கின்றனர். தன்னைக்காண வந்த மகன் தன்னைத் தாயாக மதிக்கவில்லை என அரசி அளவற்ற சினமும் வேதனையும் கொண்டு புத்தமதத்தை நிந்திக்கிறாள்.

          இனித் தொடர்ந்து படிக்கவும்:  

                                                   ————————

          அரசி: நீ இன்னும் ஒரு சிறுகுழந்தையே! அஹிம்சையே மிகவும் உயர்வானதென்று நீ விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறாய் என்பது உண்மைதானா?

          வாசவி: என்னைவிட வயதிலும் அறிவிலும் மூத்தவர்களே அதனை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுடைய சொற்களையே திரும்பக் கூறுகிறோம்.

          அரசி: அநாகரிகமானவர்களின் மதம்தான் அஹிம்சை என்று நான் எவ்வாறு முட்டாள் மனிதர்களாகிய உங்களை உணரவைக்கப் போகிறேன்? வலிமை என்பது  தோளில் அணியும் ஒரு ஆபரணத்தைப்போன்று அதன் கொடூரமான ஒளியால் க்ஷத்திரியனின் வலிமையான தோளில் இலங்குகிறது.

          வாசவி: ஆயினும் சக்தி (வலிமை)யின் ஒரு பகுதி மென்மையும் தானே?

          அரசி:  ஆம். அது இழுத்துச் செல்லும்போதுதான்; பிணிக்கும்போது அல்ல. படைத்தவன் இரக்கமற்ற பாறைகளால்தான் மலைகளை உருவாக்கினான்; களிமண்ணால் அல்ல. உங்கள் போதகர் எல்லாவற்றையும், உயர்ந்தவற்றிலிருந்து தாழ்ந்தவை அனைத்தையும், மண்ணாலேயே உருவாக்க எண்ணுகிறார். அரச குடும்பத்து ரத்தம் உனது ரத்தநாளங்களில் ஓடுகின்றது; ஆனாலும் இந்தப் பிதற்றலை நம்புவதற்கு உனக்கு வெட்கமாக இல்லை? எனக்கு பதில்சொல், பெண்ணே!

          வாசவி: நான் ஆச்சரியப்படுகிறேன், மகாராணி.

          அரசி: இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஒரு அரசகுமாரன் தனது அரண்மனை, பதவி, அரசபோகங்கள் அனைத்தையும் ஒரு கணத்தில் துறந்து உலகத்தில் கருணையைத் தேடச் சென்றதனை நீயே உன் கண்களால் பார்த்திருக்கிறாய், உண்மையல்லவா? அப்படித்தானே, வாசவி?

          வாசவி: நான் நிஜமாகவே பார்த்திருக்கிறேன்.

          அரசி: அப்படியானால் கொடூரமான இரக்கமற்ற கடினமான கடமைகளை நிறைவேற்றுவதற்கு யார் இருக்கிறார்கள்? யாரும் இல்லாவிட்டால், ஒரு தலைவனின் வலிமைவாய்ந்த கரங்களைத் தேடும் உலகம் என்னவாகும்? உற்சாகமற்ற, உயிரற்ற ஆண்களின் கவிழ்ந்த தலைகளும், பட்டினியால் வருந்திய உடல்களும், மெல்லிய குரல்களும் மட்டுமே மக்களின் முடிவற்ற துயருக்குக் காரணமாகிவிடாதா? நீ க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்தவள்; இருப்பினும் எனது இந்தச் சொற்கள் உனக்கு விசித்திரமாகத் தோன்றுகின்றன!

          வாசவி: இல்லை; அவை பழக்கப் பட்டவையே; ஆனால் வசந்தகாலத்தில் முழுவதும் மலர்களால் மறைக்கப்பட்டுவிடும் கின்சுகா மரத்தைப்போல தற்போது ஒரே நாளில் அவை கண்முன்னிருந்து ஒடுக்கப்பட்டு விட்டனவே!

          அரசி: ஆண்களின் சித்தப்பிரமை சில நேரங்களில் அவர்களது ஆண்மையையே மறக்கவைத்துவிடுகிறது. ஆனால் பெண்கள் அவ்வாறு ஆண்கள் மறந்து விடுவதை ஒப்புக்கொண்டால், அந்தப் பெண்களே அதன் பலாபலன்களை தாங்கள் சாகும்வரை ஏற்றுக்கொள்ளவேண்டும். பெரிய கொடிகளைத் தாங்கி நிற்க பெரிய மரங்களே தேவை. எல்லா மரங்களும் புதர்களாகிவிட்டால் கொடிகளின் நிலைமை என்னவாகும்? ஏன் பேசாமல் நிற்கிறாய்?

          வாசவி: பெரிய மரங்கள் கட்டாயம் தேவையே.

          அரசி: ஆனால் உங்கள் போதகர் இவற்றை அழிப்பதற்கே வந்துள்ளார்; ஒரு பெரும்வீரனின் துணிச்சலுடன் அல்ல. அவருடைய போதனைகள் ஒருவனின் ஆண்மையின் ஆழத்துள் புழுப்போலக் குடைந்துசென்று ஒரு க்ஷத்திரியனின் வீரத்தை சண்டைபோடாமலேயே அழித்து விடுகிறது. அவருடைய குறிக்கோள் நிறைவேறியதும், அரசகுமாரிகளான நீங்கள் அனைவரும் உங்கள் தலைகளை மொட்டையடித்துக்கொண்டு வீடுவீடாகப் போய் பிச்சை எடுப்பீர்கள். அவ்வாறு நடப்பதற்கு முன்பு நீங்கள் அனைவரும் இறந்துவிட வேண்டும்- இதுவே என் ஆசிர்வாதம்! (சிறிது நிறுத்துகிறாள்).

          நான் சொல்வதை நீ ரசிக்கவில்லையா?

          வாசவி: நான் சிறிது யோசிக்க வேண்டும்.

          அரசி: நீ யோசிக்கவே தேவையில்லை, இதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஒருகாலத்தில் க்ஷத்திரிய அரசராக விளங்கிய எனது கணவர் பிம்பிசாரர் தனது அரசபதவியை தன் சொந்த மகிழ்ச்சிக்காக இன்றி, ஒரு மதக்கடமை எனவே கருதினார். பாலைவனத்தின்  எரியும் காற்றுபோன்ற ஒரு குரல் அவர் காதுகளில் ஒலித்ததும் அவர் ஒரு மக்கிப்போன இலைச்சருகாக தனது சிம்மாசனத்திலிருந்து கீழே விழுந்தார் – கையில் ஆயுதங்களுடனல்ல, போர்க்களத்திலல்ல, தனது சாவை எதிர்நோக்கியுமல்ல. வாசவி, நீயும் ஒருநாள் அரசியாகும் நம்பிக்கையை இழந்துவிட்டாயா?

          வாசவி: இல்லை.

          அரசி: அப்படியானால் நான் உன்னை ஒன்று கேட்கிறேன். சிம்மாசனத்திற்கும் கருணைக்குமிடையே அலைக்கழிக்கப்படுபவனும், தனது செங்கோல் நடுநடுங்க, அவனது வெற்றியின் சின்னம் மங்கிப்போனவனுமான ஒரு அரசனை நீ மணந்துகொள்ள சம்மதிப்பாயா?

          வாசவி: இல்லை.

          அரசி:  நான் என்னைப்பற்றிக் கூறுவதனைக் கேள். மஹாராஜா பிம்பிசாரர் தான் இன்று வரப்போவதாகவும், அவரை வரவேற்க நான் தயராக இருக்கவும் கூறிச் செய்தி அனுப்பியுள்ளார். அரசனுமல்லாத பிட்சுவுமல்லாத ஒருவருக்காக, இந்த உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கவோ அல்லது துறக்கவோ தெரியாத ஒருவருக்காக, அவருக்காக நான் என்னை அலங்கரித்துக் கொள்வேன் என நினைக்கிறாயா? கட்டாயமாகக் கிடையாது! உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன் வாசவி, ஆண்மைத்தனம் முற்றிலும் அற்ற தன்னையே இழிவுபடுத்திக்கொள்ளும் இந்தக் கொள்கைக்கு நீ அடிபணியாதே.

                     (வாசவி மெல்ல திரும்பிச் செல்கிறாள்)

          மல்லிகா: இளவரசி, நீங்கள் எங்கே செல்கிறீர்கள் இளவரசி?

          வாசவி: என் வீட்டிற்கு!

          மல்லிகா: ஆனால் நாட்டியமங்கை கிட்டத்தட்டத் தயாராகிவிட்டாளே.

          வாசவி: பரவாயில்லை!

                     (வாசவி வெளியேறுகிறாள்)

          மல்லிகா: (ஒரு பக்கம் சுட்டிக்காட்டி) கேட்கிறதா, மஹாராணி!

          அரசி: ஒரு பெரிய இரைச்சல் கேட்கிறது.

          மல்லிகா: அவர்கள் நகரத்தை வந்து அடைந்திருப்பார்கள்.

          அரசி: ஆனால் நாம் கேட்பது புத்தரை வாழ்த்தும் குரல்களைத்தானே!

          மல்லிகா: அந்தக்குரல்கள் வீரமொழிகளாக இல்லை? அவற்றிற்கு எதிர்ப்பு இருப்பதனாலோ என்னவோ அவை திடீரென்று உரத்துக் கேட்கின்றன. அவற்றுடன் இன்னுமொரு குரலும் ஒலிக்கிறதே: பிநாகத்தை ஏந்திய சிவனுக்கு வந்தனங்கள்! இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை.

          அரசி: ஓ, அது தள்ளாடுகிறது, தள்ளாடுகிறது! இந்த மதம் உதிர்ந்து பொடியாகிப் புழுதியில் விழும்போது, என்னுடைய வாழ்வின் ரத்தம் எவ்வளவு அதில் சென்று விட்டதென்று யாருக்குமே தெரியப்போவதில்லை! ஐயோ! எனது பக்தி எத்தகையது! ஆ, மல்லிகா, அதன் முடிவு சீக்கிரமே வரட்டும்; ஏனெனில் அதன் வேர்கள் என் உள்ளத்தில் ஆழப் பதிந்துள்ளனவே!

                     (ரத்னாவளி உள்ளே நுழைகிறாள்)

          (ரத்னாவளியிடம்) நீ வழிபாட்டுத் தலத்திற்குச் செல்கிறாயா?

          ரத்னாவளி: நான் சிலவேளைகளில் எங்கு மரியாதை செலுத்த வேண்டுமோ அந்தக் கடமைகளிலிருந்து தவறியிருந்திக்கலாம்; ஆனால் யோக்கியதையற்றவர்களிடம் மரியாதை காட்டினேன் என என்மீது யாரும் குறைகூற முடியாது!

          அரசி: அப்படியானால் நீ எங்கே போகிறாய்?

          ரத்னாவளி: மாட்சிமை பொருந்திய தங்களிடம் இரு கோரிக்கைகள் வைக்க வந்துள்ளேன்.

          அரசி: அது என்னவென்று சொல்.

          ரத்னாவளி: அந்த நாட்டியப்பெண்ணுக்கு வழிபாட்டுத்தலத்தில் காணிக்கைகளைச் சமர்ப்பிக்கும் சலுகை தரப்படுமானால், இத்தகைய தெய்வநிந்தனை நிகழ்ந்த இந்த அரண்மனையில் இனிமேலும் இருக்க என்னால் இயலாது.

          அரசி: புனிதத்தன்மையைக் கெடுக்கும் அந்தச்செயல் நிறுத்தப்படும், நான் அதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

          ரத்னாவளி: இன்றைக்கு அது தடுக்கப்பட்டாலும் நாளை நடைபெறக் கூடுமல்லவா?

          அரசி: பயப்படாதே. மகளே! இந்த வழிபாடு அதன் வேர்களோடு சிதைக்கப்படும்.

          ரத்னாவளி: இத்தனை நாட்கள் நாம் அனுபவித்த வேதனைகளுக்கெல்லாம் இது ஒரு பலமற்ற சமாதானம்!

          அரசி: அரசரிடம் உனது கோரிக்கையை முன்வை. அவர் ஒன்று, அவளை நாடுகடத்தவோ அல்லது கொலைசெய்யவோ கட்டளையிடுவார்.

          ரத்னாவளி: அது அவளது புகழை உயர்த்திடவே உதவும்.

          அரசி: அப்படியானால் உனது விருப்பம்தான் என்ன?

          ரத்னாவளி: பூசை செய்பவளாக எந்த வழிபாட்டுத்தலத்தில் அவள் காணிக்கைகளைச் செலுத்தப் போகிறாளோ அங்கே அவளை நாட்டியமாடக் கட்டளையிடுங்கள்; அவளுடைய இழிந்த வேலை அதுதானே! மல்லிகா, நீ என்ன சொல்கிறாய்?

          மல்லிகா: இந்த ஆலோசனை சுவாரசியமானதாக இருக்கிறது.

          அரசி: ஆனால் எனது உள்ளம் என்னை சந்தேகப்பட வைக்கிறது, ரத்னா.

          ரத்னாவளி: மஹாராணி அந்தப்பெண்ணிடம் இன்னும் பரிவு காட்டுவதாக நான் எண்ணுகிறேன்.

          அரசி: பரிவா? அவள் உடலை நாய்கள் கைகால் வேறாகக் கிழித்தெறியும்போது என்னால் பார்த்துக்கொண்டு நிற்கமுடியும். அவள் மீது பரிதாபமா? அந்த வழிபாட்டு மேடைக்கு நானே ஒருகாலத்தில் என் காணிக்கைகளை எடுத்து வந்தேன்; அந்த மேடை நாசமாக்கப்படுவதனை என்னால் சகித்துக்கொள்ள முடியும்; ஆனால் ஒரு சாதாரண நாட்டியப்பெண்ணின் இழிவான கால்களால் ஒரு அரசியின் வழிபாட்டுத்தலம் அவமரியாதை செய்யப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

 (தொடரும்)

                               ———————-&&&———————-

                    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

யாளி – பானுமதி.ந

Image result for sex robots

நீலக் கண்ணாடியென அந்தத் திரை ஒளிர்ந்தது. அது ஒரு சட்டகத்தைப் போலக் காணப்பட்டாலும் அதன் வெல்வெட் வழுவழுப்பு, தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அதைத் தொட்டுப் பார்க்கும் ஆசையும், அச்சமும் ஒரே நேரம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

கால் புதையும் நடை மெத்தைகள், உடலை இதமாக உள் வாங்கும் இருக்கைகள், இளம் ரோஸ் வண்ண சுவர்ப் பூச்சுக்கள். அறை முழுதும் சுவற்றினை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சாய்வான கண்ணாடிப் பெட்டிகளில் பல அறிவியல் கருவிகள். அதிலும் தெற்குப்பக்கத்திலுள்ள கண்ணாடி பாதுகாப்பான் முழுதுமே வெற்றிடம். அதிலிருந்து இரு சுற்றுகள் ஹீலியம் ஃபைபர்கள் பூமிக்குள்ளே செல்கின்றன. அது மலைப்பாங்கான இடம். குகையின் ஆழம் வெளியில் தெரியாத வண்ணம் கட்டப்பட்டுள்ள ஆய்வகம்.

அங்கே வர ப்ருத்விராவிற்கு மட்டும் உரிமையுண்டு. சரியான உடல் வாகோடு, அளவான மார்பகங்களோடு, நீளக் கால்களோடு ஆகாஷ் பார்த்திருந்த அத்தனைப் பெண்களிலிருந்தும் அவள் மாறுபடுகிறாள்.

ஆகாஷ் தன்னையே நினைத்து சிரித்துக் கொண்டான்.  நீல வண்ணத் திரையிலிருந்து, மூவருக்கு மட்டும் தெரிந்த இரகசியத்திலிருந்து, தன் மனம் காமத்தை நினைப்பது அவனுக்குச் சற்று வேதனையாக இருந்தது. அவன் முழு முனைப்போடு செய்து கொண்டிருப்பது, மனித மூளை, மூளை உபயோகப்படுத்தும் சக்தி, நேனோ மூளைகள், அது பொருந்தும் உடல் வடிவங்கள், அவைகளின் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி மட்டுமே.

எண்ணங்களால் சூடேறும் உடலைக் குளிர்விக்க தானாகவே ஏசி செயல்பட்டது. அவன் விரும்பும் பானங்களை, அவன் அணிய வேண்டிய ஆடைகளை, அவன் உணவு உண்ணும் நேரங்களை, அவன் பேச வேண்டிய விஷயங்களின் தொகுப்பை, அவன் சந்திக்கக் கூடிய மனிதர்களை, அவன் ஓய்வு கொள்ள வேண்டிய நேரத்தையெல்லாம் செயற்கை அறிவுத் துணை ஒன்று நிர்ணயிக்கிறது. அவன் எந்தப் பெண்ணுடன் கூடலாம், அதில் காதல் எவ்வளவு இருக்கலாம், என்று அந்தத் துணை தான் சொல்கிறது. அதை அவன் செல்லமாகக் ‘கல்பா’ என அழைத்தான்.

கல்பாவின் வடிவமைப்பில் பெரும் பங்கு அவனுக்குத்தான் இருக்கிறது. அதன் மின்சார வலைப் பின்னல் மனிதர்களின் ந்யூரல் நெட்வொர்க்கை விட சில மில்லியன் அதிகம். மனித மூளை நரம்புகள் ஒரு விஷயத்திற்குத் தயாராகுமுன், அல்லது அது என்னவென்று அறிந்து கொள்ளும் முன் கல்பா சொல்லிவிடும்.

முன்பொரு நாள் கோடை மழை பெய்தது. அவன் வெளியில் சென்று மழையில் நனைய ஆசைப்பட்டான்.  அவனை தூக்கிச் சென்று புல் வெளியில் நிறுத்திவிட்டது. இள வெயிலும், ஆலங்கட்டிகளும் ஒன்றாய் அவன் கண்டதில்லை. கைகளில் ஏந்திய அந்த மழைக்கட்டிகளில் சூரியன் பல்வேறு வண்ணக் கலவைகளில் சிரித்தான். கைகளிலேயே கரைந்தும் மறைந்தான். தற்காலிகமாக ஒரு சிற்றருவி அவன் ஆய்வகத்தின் அருகிருந்த மேட்டு உச்சியிலிருந்து கீழே துள்ளிப் பாய்ந்தது. தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்ட நீரின் வழி. அதுவும் கதிரின் கிரணங்களில் வண்ணம் காட்டி அவனுக்குப் போக்குக் காட்டுவது போல் சுழித்து மறைந்தது.

அவனைப் போலவே ப்ருத்வி ராவும் அந்த மழையில் நின்று சுழன்று ஆடுவதை அவன் பார்த்தான். அத்தனையும் வேதியியல் மாயம் என்று தெரிந்தும் தன் உணர்வுகள் தூண்டப்பட்டு அவளை மீள மீள விழுங்குவது போல் பார்ப்பதில் ஆண் எனத் தான் மேலோங்கி அறிவியலாளன் பின்னே தள்ளப்படுவது அவனுக்கு எப்போதுமே பெரும் வியப்பு.

‘ஹேய், ஆகாஷ், என்ன மறந்துட்டியா, என்ன நீ கடசியா ஒரு வருஷம் முன்னாடி பாத்தே. நீ உன் லேப்லயே இருந்த. இப்ப இந்த மழ உன்ன வரவைச்சுடுத்து. தள்ளியே ஏன் நிக்கற? இந்த ஷவர்ல ரோமன்ஸ் பண்ணனும்னு தோணல?’

அவன் நினைப்பதை அப்படியே சொல்லும் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான். இது இயற்கையோ, கடவுளோ, சாத்தானோ எதுவாக இருந்தால் என்ன? அனுபவி, ராஜா, அனுபவி.

அவள் கண்களில் கல்பா படவில்லை. பின்னர் அவர்கள் செய்தது எல்லாவற்றையும் நடித்துக் காட்டும். முதல் முறை அவன் கூடியதை அது, ஒரு இயந்திரமென மாறி விவரித்த போது அதை உடைக்க எழுந்த ஆவலை அவன் அடக்கிக் கொண்டான். கல்பா அபூர்வமானது. அதைப் போல் இன்னொன்றைக் கட்டமைக்க அவனுக்கு இன்னும் ஏழு ஆண்டுகள் வேண்டும். அவன் கோபத்தை, தன்னை அழிக்க எழுந்த உத்வேகத்தை, அதை அவன் அடக்க முயன்றதை தன்னைக் காட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது கல்பா. பின் கூடலை அழித்து விட்டதாகத் தன் மெமரி ஹிஸ்டரியைக் காண்பித்தது.

அது தன்னுள் ஆழத்தில் இன்னொரு வலைப் பின்னல் பின்னி சில கண்ணிகளை வைத்திருந்தது.

அவன் விரும்பும் உணவகங்கள், கேளிக்கை இடங்கள், நண்பர்கள் கூடுகை, காமக் கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் சுழற்சி முறையில் ஆண்டுக்கொருமுறைதான் அவன் விரும்பும்படி அது தனிச் செயலி எழுதி வைத்திருக்கிறது. ‘லாங் டைம் நோ சீ’ என்று யாரேனும் சொன்னால் அதை வழமைச் சொல் என அவன் எடுத்துக்கொண்டான்.

திடீரென்று அவனுக்கு ஒரு எண்ணம் மின்னலென எழுந்தது. அவனது ஆய்வகம் மற்றும் இருப்பிடம் அது. மலைப்பாங்கான இடத்தில் மனிதர்கள் அதிகம் வந்து போக இயலாத  உட்சரிவுக் குகையினுள் போராடி அவன் அமைத்த ஆய்வகம் அது. ஒரு காலத்தில் அவர்களின் ஜமீன் அங்கே அமைந்திருந்தது. ஒரு குறுநகரம் என்றே சொல்லலாம். இதமான குளிரும், வெப்பமும், காற்றும், அத்தி மரங்களும் சிறிய ஏரியும் உள்ள அற்புத நிலம். கொள்ளை நோய் ஒன்று தாக்கியபோது அவன் வடிவமைத்த மென்பொருள், பாதிக்கப்பட்ட மனிதர்களை நொடியில் கண்டறிந்தது.

அந்தச் சிக்கலான செயலி, நோயுற்ற மனிதர்களிடமிருந்து ஒரு ஒலியை எழுப்பி அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்ல வழி வகுத்தது. அது மட்டுமன்றி நோய் வரும் சாத்தியக்கூறுள்ள மனிதர்களை அடையாளம் காட்டியது. அதற்குத் ‘தன்வந்திரீயம்’ எனப் பெயர் வைத்தான். எந்த மனிதனிடத்திலும் எந்த மின்சாதனமும் இல்லாவிட்டாலும் அந்த மனிதனின் உடல் வெளியேற்றும் சமிக்ஞைகளை அது அவனைச் சுற்றியுள்ள காற்றிலிருந்து அறிந்தது. எடை குறைந்த மைக்ரோ சிப்கள் அதிக அளவில் பொதியப்பட்ட தானியங்கி ட்ரோன்களில்  ரேடார் நுட்பத்தையும் இணைத்து மனிதன் அறியாமல் அவனைக் கண்காணித்தது தன்வந்திரீயம். மகிழ்ந்த அரசு அவன் தாத்தாவின் காலத்திலிருந்து ஜமீனுக்காக நடை பெற்ற வழக்கைத் திரும்பப் பெற்று அவன் ஆய்வுகளுக்கு இருந்த தடைகளையும் நீக்கியது.

அந்த ஆய்வகத்திற்கு வெளியில் தான் அத்தனை இயற்கையும். உள்ளே எல்லாமே செயற்கைதான். அத்தனையும் அவன் கை வண்ணம். அப்படியிருக்கையில் எப்படி இந்த நீலத்திரை இங்கே?

சிறு மைக்ரோ சிப்கள் பொதியப்பட்ட சின்னஞ்சிறு பாட்கள், அவைகளின் முதன்மை வேலையே உலகின் அனைத்து அறிவியல் ஆய்வுகள் மற்றும் களநிலவரம் பற்றி செய்திகளைச் சேகரித்து அதைக் கல்பாவிடம் பகிர்வது. அது அறிவியல் ஸ்கூப்பா, இணை உறுதிகள் உள்ளதா, என்று நிமிடத்தில்

அலசி அதன் முக்கியத்தை அவனுக்குச் சொல்லிவிடும் கல்பா.

ஆனால், அந்த நீலத் திரை எப்போது அங்கு வந்தது? அவனா அதை வைத்தான்? எப்போது, எதற்காக? அந்த சமையல் பாட்டும், தோட்ட பாட்டும் சற்று விஷமிகள். ஸ்பேஸ் ஷட்டில் விளையாடுவதை அவன் பார்த்திருக்கிறான். அந்த விளையாட்டைப் போட்டுப் பார்க்க அவைகள் தான் இந்தத் திரையை வைத்திருக்க வேண்டும்; ஆனாலும், குளிர் விட்டுப்போயிற்று அதுகளுக்கு. அவனுடைய தனிப்பட்ட அறையிலா கொண்டு வைப்பது? இந்தக் கல்பா என்ன செய்து கொண்டிருந்தது அப்போது?

அவன் மீண்டும் திடுக்கிட்டான். எண்ணங்களைப் படிக்கும் கல்பா ஏன் ஒன்றும் சொல்லவில்லை இப்போது? தன்னை மீறி ஏதேனும்…. ச்சே இருக்காது, இயந்திரம் மனிதனல்ல.

அவன் எரிச்சலுடன் கல்பாவைக் கூப்பிட்டு அந்தத் திரையை அகற்றுமாறு  சொன்னான்.

“ஆகாஷ், அது உன்னை என்ன பண்றது?”

‘என்ன கேள்வி இது? எடு என்றால் எடு.’

“அவ்வளவெல்லாம் வெயிட் இல்ல. நீயே தூக்கி வை”

அவன் ஆத்திரத்துடன் அதை எடுக்கையில் கல்பா சிரித்தது. அவன் தலைப் பகுதி மட்டும் பிரிந்து சென்று அமினோ அமிலக் கரைசலில் விழுந்தது. அதில் மிதந்த அவன் மூளை, அந்தக் குடுவைக்கு வெளியே செயற்கை இதயம், நுரையீரல் போன்ற அனைத்து உறுப்புகளும் அதனதன் வேலையைச் செய்து அந்த மூளையைப் பாதுகாப்பதைப் புரிந்து கொண்டது. இது எதற்காக, ஏன் இப்படியெல்லாம் அவனுடைய கல்பா, நடந்து கொள்கிறது? தன் உடல் செயலற்றுக் கிடக்க அதை மூளையால் பார்க்கும் முதல் விஞ்ஞானி அவனாகத்தான் இருப்பான்.

கல்பா தன் முதுகுப் பகுதியைத் திறந்தது. அதில் இருந்த ஒரு காணொலியை நீலத்திரையில் கொணர்ந்தது. 16 நாட்களான கருவில் ந்யூரல் குழாய் இரண்டெனப் பிரிந்தது. ஆகாஷின் மூளை அதிர்ந்தது. இரண்டாம் மாதத்தில் அக்கருவில் இரண்டு மூளைகள் அமைவது தெரிந்தது. முதல் மூன்று மாத முடிவில் கரு இருபாலினச்சுரப்பிகளைச் சுரக்கத் தொடங்கியது. இப்போது காணொலியில் அக்கரு 14 வது வாரத்தை எட்டிவிட்டது. இரு மூளைகள் இருந்தும்  சாதாரணக் கருவிற்கு இருக்கும் அளவே, அதாவது, உடல் அளவில் பாதியில் தான் தலை அமைந்திருந்தது.

அவனால் நம்ப முடியவில்லை. தன் மனதில் அவன் கண்ட கனவை கல்பா வடிவமைத்திருக்கிறது; ‘இன் சைட்டு’(in situ) கலப்பினம் நடத்தியிருக்கிறது. அவனது கனவு ப்ராஜெக்ட். அவனது அத்தனைக் கோட்பாடுகளையும் படித்துப் பதுங்கிப் பதுங்கிச் செயலாற்றியுள்ளது. எத்தனை வேகமாக, எத்தனை சாதூர்யமாக! அதற்குத்தான் ஓய்வென்பதே கிடையாதே?

ஆண் எனப்படுவதுவும், பெண் எனப்படுவதுவும் ஒரே உடலில் இரு மூளைகள் கொண்டு இயங்கும் அற்புதமல்லவா இது வடிவமைத்திருப்பது. மனித அறிவியலாளர்கள், மேம்படுத்திய ந்யூக்ளிக் அமிலத்தைச் செலுத்தி, எறும்பைப் போல் ஊர்ந்து ஊர்ந்து குறிப்பிட்ட டி.என்.ஏ வைத் தேடித் தேடி தலை நரைத்து மண்டையைப் போட்டார்கள். இதுவோ ஒளிப் பாய்ச்சல் எடுத்துள்ளது. கல்பாவிற்காக அவன் பெருமைப்பட்டான், பொறாமையும் பட்டான். மங்கையும், மனிதனும் ஒரு உடல், இரு மூளைகள், இருபாலருக்குமான பயோ சிப்ஸ்கள் மூலம் ஈஸ்ட்ரோஜென், புரோலேக்டின், டெஸ்டோஸ்டரீன், செரொடோனின், அட்ரீனலின் இன்ன பிற சுரக்கும் அமைப்பு. துரிதம், துரிதமென 24 மணியில் 48 மணிச் செயல்பாடு. அவன் தயங்கித் தயங்கித் தவித்தான். கல்பா இவனிடமிருந்து கற்றுக் கொண்டு இவன் அறியாமல் ஒன்றைப் படைத்துவிட்டது.

ஆனால், அதற்கு போட்டியிடும் குணம் ஏன் வந்தது? அவனை உடலற்று உயிரோடு சிறை பிடித்து விட்டதே! செயற்கை அறிவில் இயற்கை குணம் எப்படி?

“த்ரோகி”

‘நீ நினைக்காத ஒன்றையும் செய்திருக்கிறேன், பார்.  ந்யூரலில் ஒரு ‘அமை, தவிர்’ என்ற ஒரு சிறு குமிழி. ஆதாம் தூங்கப் போக வேண்டுமென்கிறான். ஏவாள் ந்யூட்ரினோவைப் பகுத்துக் கொண்டிருக்கிறாள். யாரும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இன்னொரு வேடிக்கையையும் கேளேன், நாளமில்லாச் சுரப்பிகள் பருவ மாறுதலைக் கொண்டு வரும். அப்போது கூடலைத் தவிர்க்கத் தானாகவே அந்தக் குமிழி ‘தவிர்’ என்று ஆணையிட்டுவிடும். தேவையான போது ‘அமை’ விழிக்கும்.’

ஆகாஷ் அசந்து போனான்.

“என் வெற்றிப் படைப்பு இது. யாளி என்று பெயர். இப்போதைக்கு இதன் ஆயுள் இரு மடங்கு, இதன் செயல் டபுள், இதன் அழகோ அற்புதம், சராசரியாக ஒரு மூளை 20 வாட்ஸ் சக்தி கேட்கும்; ஆனால், யாளி இரு மூளைகளுக்காகக் கேட்பதே 30 வாட்ஸ்தான். ஆம் மாதொருபாகன். கம்பீரமும், நிதானமும் ஒன்றான ஒன்று. இது வெவ்வேறு மரபுத்திரி கொண்ட உடல் அணுக்களின் கூறு. இப்போது இது முழுதாக, ஆனால் சிறு வடிவாக, விரும்புகையில் பெண்ணாகவும், ஆணாகவும், இருவராகவும் இருக்கும். டி என் ஏவின் டீலோமியெர் வால் பகுதியை அதிகமாக்கி அதன் மூலம் வயதாவதைத் தடுத்து இதை அமைத்துள்ளேன்.’

“க்ரேட், என்னை ஏன் இப்படிச் செய்தாய்?”

‘நான் கற்றுக்கொண்டேன் உன்னால், ஆனால், உன்னிடமிருந்தல்ல. உன் இனத்திற்கு இருமையில் தான் ஈர்ப்பு. நீயே நினைத்துப் பார் –ஃபோடான் என்டேங்கிலில் ஒரு அமைப்பு, மூளையில் ஒரு சோதனை, வெயிலும், பனிக்கட்டி மழையுமாக ஒன்று; சுற்றிலும் தனித்தனி செயல்களுக்காக ரோபாட்கள். நீங்கள் பிரிக்கிறீர்கள், நான் சேர்க்கிறேன். வா, எனதருமை யாளி, ஆகாஷைப் பார்.”

யாளி கம்பீரமாகத் திரையிலிருந்து வந்தது . கல்பாவின் ந்யூரலைத் தொட்டிழுத்தது. உலகம் முழுதும் நிலைகுத்தி நின்றது. ஒளி ஒரு நிமிடம், இருள் ஒரு நிமிடமென மாறி மாறி வந்ததில், கணிணிகள் காலப் பிசகை எதிர் கொள்ளத் திணறின. மனித இனம் அழித்தது போக எஞ்சிய விலங்குகளும், பறவைகளும் திக்குமுக்காடிக் கூச்சலிட்டன.ஹீலியம் சுருளவிழ்ந்து செய்திகளைப் பிழையாக அனுப்பியது. ஏதோ தவறு என்று அறிவியல் இரகசியத் துறை அதிர்ந்தாலும் ஒளியும், இருளும் அவர்களையும் குழப்பின. பிருத்வி ராவ் மின் பூட்டைத் திறந்து தட்டுத் தடுமாறி உள்ளே வந்தாள்.

 

 

குவிகம் கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

ஆரஞ்சு கலர் சான்யோ டிரான்சிஸ்டர்!

நான் வேலைக்குச் சேர்ந்த புதிது. அங்கு வரும் நோயாளிகள் மிகவும் மனது உடைந்து, வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து வருகின்றவர்கள்.
தனக்கிருப்பது புற்று நோய்தான் என்பதை அறிந்தவர்கள், ஒரு வித தயக்கத்துடன், ‘மேலே என்ன’ என்பதைப் போல வருவார்கள். சந்தேகத்தில், வருபவர்கள் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு – ‘அதுவாக இருக்கக் கூடாதே’ – அச்சத்துடன் கூடிய ஒரு முக பாவத்துடன் வருவார்கள். வந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள், ஒரு வித சினேக பாவத்துடன், முகத்தில் ஒரு நம்பிக்கையுடன் வருவார்கள்.
அது, எதற்கும் அடங்காமல், தன் கொடூர முகத்தைக் காட்டும் நேரம், அவர்கள் முகம் காட்டும் வலி, விட்டுப்போகின்ற வேதனை, அப்போதும் டாக்டரைப் பார்த்து வலிந்து காட்டும் சிறிய புன்னகை மனதைக் கலக்குவது, பாறையாய் அழுத்துவது.
அவன் பெயர் ரஹீம் – பதினாலு வயது. ஆந்திராவின் ஒரு மிகச் சிறிய கிராமத்திலிருந்து வருகிறான். வயதிற்குச் சிறிது உயரம் கூடத் தான். முகத்தில் ஒரு புன்சிரிப்பு. அக்குளைத் தாங்கி இரண்டு பக்கமும் ஊன்று கோல்கள் – வலது கால் தொடையின் கீழ்ப் பாதியிலிருந்து ஆம்புடேட் செய்யப்பட்டிருந்தது. வெள்ளை முண்டாசு தலைகீழாகக் கட்டியதைப் போல, வெட்டி எடுக்கப்பட்ட இடத்தில் போட்டிருந்த பாண்டேஜில் இன்னும் காய்ந்த பச்சை இரத்தத்தின் சுவடுகள் – சமீபத்திய அறுவைச் சிகிச்சையின் சின்னங்கள். கையில் ஃபைலுடன் இரு பக்கமும் அவன் பெற்றோர் – முகம் முழுக்க சோகம் அப்பியிருந்தது.
அந்தப் பையனுக்கு இருந்தது எலும்பில் வரும் கேன்சர் – Osteogenic sarcoma – வேறெங்கும் பரவாததினால், கட்டிக்கு மேல் கொஞ்சம் விட்டு, பாதித் தொடையில் ஆம்புடேட் செய்திருந்தார்கள். மேல் சிகிச்சைக்காக – ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி – எங்களிடம் அனுப்பப் பட்டிருந்தான். வழக்கமான கேள்விகள், பதில்கள், அறிவுரைகள், சிகிச்சை சம்பந்தமான சந்தேகங்கள், பதிலே சொல்லமுடியாத “நல்லாய்டுவானா சார்?” – எல்லாம் முடிந்து அட்மிட் ஆனான். அவனுக்குத் தமிழ் தெரியாது – எனக்குத் தெரிந்த தெலுங்கு அவனுக்குப் புரியாது! ஒவ்வொரு முறையும் தெலுங்கும் தமிழும் நன்கறிந்த ஒருவர் எங்கள் உரையாடலுக்கு உதவுவார்.
முதல் அட்மிஷன் மூன்று வாரங்கள் – தினமும் ரேடியேஷன், வாரத்தில் ஒன்று என மூன்று கீமோதெரபி (மருந்துகள் – ஊசி மூலமாகவும், வாய் வழியும்). புதிதாய்த் திறக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிடத்தின் தரை தளத்தில் மூன்றாவது கட்டில் அவனுடையது. பக்கத்திலிருந்த வெங்கட்ராமி ரெட்டி – அவனுக்கு ப்ளட் கேன்சர் – மாதா மாதம் வந்து கீமோதெரபி எடுத்துக்கொள்பவன். ரஹீம் வந்த அன்றிலிருந்தே இருவரும் நண்பர்கள் ஆனார்கள். இணைத்தது வியாதியோ, மொழியோ அல்ல – இருவருடைய மகிழ்ச்சியும், வயதும்தான்! தெலுங்கில் பேசிச் சிரித்தபடியே இருப்பார்கள்! இருவரையும் எனக்கு எவ்வளவு பிடிக்குமோ, அவ்வளவு அவர்களுக்கும் என்னைப் பிடிக்கும். வந்தவுடனே ‘குட் மார்னிங்’ – புன்னகை! சில நாட்களிலேயா என் அரைகுறைத் தெலுங்கை ரஹீம் புரிந்து கொண்டான் – சில ஆங்கில, தமிழ் வார்த்தைகளுடன் என்னுடன் பேசுவான்.
சில மருத்துவக் காரணங்களுக்காக ரஹீம் இரண்டு வாரங்கள் கூடுதலாகத் தங்க நேரிட்டது. அதற்குள் ராமி ரெட்டி இரண்டாம் முறையும் வந்து கீமோ எடுத்துச் சென்றுவிட்டான்.
Image result for orange color sanyo transistor
(அந்தப் பாடலைக்கேட்க மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் )
அன்று இரவு எனக்கு டியூட்டி – இரவு ரவுண்ட்ஸ் வரும்போது, இனிமையான இந்திப் பாடல் – ஜிந்தகியோங் குச் பி நஹீங் – மூன்றாவது பெட்டில் இருந்து கசிந்து கொண்டிருந்தது. மங்கிய இரவு விளக்கின் ஒளியில், சுழன்றுகொண்டிருந்த ஃபேனைப் பார்த்தவாறு, ‘வாழ்க்கையில் ஒன்றும் இல்லை’ என்றவாறு படுத்திருந்தான் ரஹீம். தலைமாட்டில் ஆரஞ்சு கலர் சான்யோ டிரான்சிஸ்டர். சப்தமில்லாமல் சுவற்றோரமாக நின்று கொண்டு முழுப் பாடலையும் கேட்டேன். இன்றுவரை அந்த அமைதியை நான் அனுபவிக்கவில்லை. ரஹீமைத் தொந்திரவு செய்யாமல் ரவுண்ட்ஸ் முடித்து என் அறைக்குச் சென்று விட்டேன்.
பிரச்சனைகள் ஏதுமின்றி, ரஹீம் ஐந்தாம் வாரம் முடிவில் டிஸ்சார்ஜ் ஆனான். சிரித்தபடி, கையில் துணிப் பையுடன், ‘ஒஸ்த்தாம் ஸார்’……. புய்ட்டு வரன் ஸார்’ என்றபடி படியிறங்கினவனைப் பார்த்தபடி நான் நின்றேன்.
நான்காம் கீமோவுக்கு ரஹீம் வந்த போது ராமி ரெட்டியைப் பற்றிக் கேட்டான். அவன் இந்த மாதம் வந்திருக்க வேண்டியவன். திடீரென்று நோய் அதிகமாகி, சிறுநீரகம் வேலை செய்ய முரண்டு பிடிக்க, ஒரு வாரகாலப் போராட்டத்துக்குப் பின் மறைந்துபோனான் ராமி ரெட்டி என்பதை நான் எப்படி இந்தக் குழந்தையிடம் சொல்வேன்? செயற்கையாகச் சிரித்து, ‘அவனது வீட்டில் விசேஷம் இருப்பதால் அடுத்த வாரம்தான் வருகிறான்’ என்று பொய் சொன்னேன். ‘ஓ. அல்லாகா..’ என்றவன் முகத்தில் ஒரு நிம்மதி. என்னால் கொடுக்க முடிந்த நிம்மதி!
காலம் நிற்காமல் ஓடிக்கொண்டேதானே இருக்கிறது? ரஹீம் ஆறு கீமோ முடித்து, இனி ஆறு மாதத்துக்கொரு முறை வந்தால் போதும் என்ற நிலை. காலுக்கு அளவெடுத்து, செயற்கையான லெதர் கால் பொருத்தப் பட்டது. கொஞ்சம் நடை பழகி, வீட்டுக்குப் போகும் போது ரஹீம் என்னிடம் வந்தான். “சால தாங்க்ஸ் ஸார்” என்றவன் பையிலிருந்து ஒரு புதிய சான்யோ டிரான்சிஸ்டரை எடுத்து என்னிடம் கொடுத்தான்! துபாயிலிருக்கும் அவன் மாமாவிடம் சொல்லி, எனக்காக வாங்கியதாகச் சொன்னான் (நர்ஸ் மொழிபெயர்த்தது). நான் மறுத்ததை அவன் பொருட்படுத்தவில்லை – அதற்குமேல் மறுக்க எனக்கு மனமில்லை.
தினமும் ஏதாவதொரு ஸ்டேஷனில் – இந்திப் பாடல்கள் வரும் ஸ்டேஷனில் – ‘ஜின்ந்தஹியோங் குச் பி’ பாடல் வருமா என்று காத்திருந்த எனக்கு ஏமாற்றமே. ஆரஞ்சு சான்யோ வைப் பார்க்குந்தோறும், மேலே சுழலும் ஃபேனைப் பார்த்தவாறு படுத்திருந்த ரஹீமே என் மனதில் நிழலாடினான்.
ஒரு திங்கட் கிழமை அதிகாலை ரஹீம் வந்து அட்மிட் ஆனான். சிகிச்சைகளை நிராகரித்தது பரவிய நோய். மாரில் நீர், மூச்சு முட்டல், அவஸ்தை – என் கண்னெதிரிலேயே விழிகள் நிலை குத்தி நிற்க, சிரித்தபடி விடை பெற்றான் ரஹீம். தலை மாட்டில் ஆரஞ்சு கலர் சான்யோ இரண்டு ஆப்பிள்களுக்கிடையே இருந்தது. அதிலிருந்து எந்த சப்தமும் இல்லை. ஜிந்தகியோ குச்…… பாட்டு வந்தால் ஒரு வேளை கேட்பதற்கு உயிர்ப்பானோ?
வாழ்க்கையில் என்ன இருக்கிறது? நான் அதற்குப் பிறகு ‘ஜிந்தகியோ’ பாடலுக்காக ஆரஞ்சு கலர் சான்யோவை ஆன் செய்யவே இல்லை. ரொம்ப நாட்களுக்கு என் ஷோ கேஸில் ஆரஞ்ச் கலர் சான்யோ ரஹீமைச் சுமந்து கொண்டிருந்தது.
ரஹீமுக்கு அவன் முடிவு முன்னமேயே தெரிந்திருக்கலாம். அவன் காட்டிய தைரியமும், விவேகமும், வாழ்க்கையையும், மனிதர்களையும் நேசித்த நேயமும் வேறு எந்த மனிதரிடமும் நான் காணாதவை.
சமீபத்தில் மறைந்த டாக்டர் சாந்தா மேடம் மூலம் எனக்குக் கிடைத்த அரிய பல நல்ல விஷயங்களில், ரஹீமுக்குத் தனியிடம் உண்டு. ஞானம் இப்படித்தான் வரவேண்டுமெனில், ரஹீம், நான் ஞானமற்றவனாகவே வாழ ஆசைப்படுகிறேன்!
ஜெ.பாஸ்கரன்.
Sent from my iPhone