அறிவிப்பு: இலக்கியசிந்தனை 562 + குவிகம் இலக்கிய வாசல் 22

இலக்கிய சிந்தனையின் 562 வது நிகழ்வாக ஸ்ரீமந் நாராயணீயாம்ருதம் நூலின் ஆசிரியரும்    குவிகம்  மின்னிதழின் ஆசிரியருமான சுந்தரராஜன் ” நாராயணீயம்” என்ற தலைப்பில் வருகிற ஜனவரி 28ந்தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் பேசுகிறார்.

image

இடம்: ஸ்ரீனிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் தெரு , ஆழ்வார்பேட்டை  , சென்னை 18

அதே நாள்  அதே இடத்தில் குவிகம் இலக்கியவாசலின் நிகழ்வாக ,   லா சா ராவின் மாபெரும் படைப்பான “அபிதா ” நாவலைப்பற்றிய கருத்தரங்கும் மாலை 7.30 மணி அளவில் நடைபெறும்.

அனைவரும் வருக.

நியாயமா குருஜி..! –நித்யா சங்கர்

Image result for guru and shishya drawing


‘இது நியாயமா குருஜி.? இந்த உலகத்துலே மனிதர்கள் படும்
துன்பங்கள்… அப்பப்பா.. சில பேர் அநியாயத்துக்கு நல்லவர்களாய்
இருக்காங்க.. பலபேர் மனசெல்லாம் நஞ்சு…’ என்று புலம்பியபடியே ஆசிரமத்துக்குள் நுழைந்தான் சீடன் பலராமன்.

கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்திருந்த குருஜி
ஆத்மானந்தா மெதுவாகக் கண்களைத் திறந்து சீடனைப்
பார்த்தார். அவர் இதழ்க் கடையில் ஒரு சின்ன புன்னகை.

“என்ன பலராமா! ரொம்பக்  கோபமா இருக்கே போலிருக்கு.
ஆன்மீகத்தைத் தேடிப் போகிறவர்களுக்குக் கோபம் கூடாது.
என்ன அநியாயம் நடந்து விட்டது சொல்.’

” பின் என்ன குருஜி. இந்த மனிதர்களைப் படைப்பவன்
கடவுள். ஆடுபவனும், ஆட்டுவிப்பவனும் அவனே…அப்படி
இருக்க எல்லா மனிதர்களையும், அவர்கள் எண்ணங்களையும்
செயல்களையும் நல்லவையாய்ப் படைத்து விட்டால் மனிதர்கள்
இவ்வளவு துன்பப்பட வேண்டுமா..? இங்கே பாருங்க..
மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டு அல்லல்
படுவதை… எல்லாம் வல்ல கடவுள் இதைத் தடுத்து நிறுத்தலாமல்லவா..?”

ஒரு நிமிடம் அவனையே உற்றுப் பார்த்து விட்டு, மெதுவாகச் சிரித்தார் குருஜி.

“என்ன செய்யறது பலராமா ! நம் முன்னோர்கள் கடவுளிடம்
மன்றாடிக் கேட்டு வாங்கிவந்த வரம் இது… ஏன் சாபம் என்று
கூடச் சொல்லலாம்..”

“என்ன ஸ்வாமி இது…? புதுக் கதையா இருக்கு…”

“ஆமாம்… உனக்கு புதுக் கதைதான்… ஆனால் ரொம்ப
பழசு… உட்கார் சொல்கிறேன்.” என்று சொல்ல ஆரம்பித்தார்.
“படைக்கும் கடவுளான பிரம்மன் நிறைய மனிதர்களைப்
படைத்து புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பூமிக்கு அனுப்பி
வைத்தார். அப்பழுக்கில்லா மனிதர்கள் அவர்கள். அன்பையே
ஆதாரமாகக் கொண்ட தங்கமான மனிதர்கள்.

காலம் கடந்தோடியது. திடீரென்று பிரம்மனின் மாளிகை
முன்பு ஒரே கூச்சல்.

‘ஏன். என்ன கூச்சல் அங்கே..?’ என்றார் பிரம்மன்
பணியாட்களை நோக்கி.

“பிரபோ. பூமியிலிருந்து ஒரு மனிதர் கூட்டம் உங்களைப்
பார்க்க வந்திருக்கிறார்கள்”. என்றான் ஒரு பணியாள்.

“சரி. வரச் சொல்” என்று உத்தரவிட்டார் பிரம்மன்.

அடுத்த இரண்டாவது நிமிடம் ஆண்களும், பெண்களுமாய்
ஒரு கூட்டம் அங்கே ஆஜரானது.

“பிரபோ… நீங்கள்தான் ஏதாவது வழி சொல்ல வேண்டும்.
அங்கே பூமியில் எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவர்களாய்
இருக்கிறார்கள். அன்பு, நட்பு, இதுதான் வேதமாக இருக்கிறது.
மனிதர்களிடையே ஒரு ஊடல், சண்டை, கோபம், பொறாமை
எல்லாம் இருக்க வேண்டாமா..? வாழ்க்கையே சப்பென்று
இருக்கிறது. ஒரு மன நிறைவே இல்லை.. வாழ்க்கையென்றால்
ஒரு சிறு ‘த்ரில்’ இருக்க வேண்டாமா…? அது டோடலி
ஆப்ஸென்ட்… ஏதாவது பண்ணுங்கள் ப்ரபோ..”

ஒரு நிமிடம் யோசித்தார் பிரம்மன்.. “ததாஸ்து!  நீங்க
நினைத்தபடியே நடக்கும்… சென்று வாருங்கள்” என்றார்.

மனிதர் கூட்டம் பூமிக்குத் திரும்பியது.

‘ஆசை’ என்ற வைரஸை மனிதன் மனதில் செலுத்தி
படைப்புத் தொழிலைத்   தொடர்ந்தார் பிரமன். அந்த வைரஸ்
மனிதர்கள் மனங்களில் வேலை செய்ய ஆரம்பித்தது.
பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை அவர்கள்
மனதிலே எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. கோபம்,
பொறாமை  தங்களை வியாபிக்க ஆரம்பிக்க, மனிதர்கள்
நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. ‘ஆசை’ என்ற
வைரஸால் மிகவும் குறைவாகப் பாதிக்கப்பட்டவர்கள்
மிக நல்ல மனிதர்களாய் இருந்தார்கள். அதிகமாகத்
தாக்கப்பட்டவர்கள் – ராட்சச குணம் கொண்டவர்களாய்
மற்றவர்களுக்குக்   கெடுதல் நினைக்க ஆரம்பித்தார்கள்.
மிதமாகத் தாக்கப்பட்டவர்கள் இந்த இரு துருவங்களுக்கும்
மத்தியில் இருந்தார்கள். ராட்சஸக் குணம் கொண்டவர்களின்  அட்டகாசம் தாங்க முடியாமல் மனிதர் கூட்டம்  மீண்டும் பிரம்மனை புகல் தேடி ஓடியது.

“இப்போ என்னப்பா பிரச்னை?” என்றார் பிரம்மன்
ஒன்றுமே தெரியாதவர் போல்.

“பிரபோ. தாங்க முடியவில்லை!  எங்கே பார்த்தாலும்
சண்டை.. சச்சரவு.. அந்த ராட்சதக் கூட்டத்திலிருந்து
எங்களைக் காப்பாற்றுங்கள்.. பூமியில் பிறந்தவர்களுக்கு
இறப்பு என்பதே இல்லாமல் இருக்கிறது. ராட்சஸ குணம்
கொண்டவர்கள் அதிகமாக வளர்ந்து கொண்டே போகிறார்கள். எங்களுக்கு ஒரு நிமிடம் கூட நிம்மதியே இல்லை.. ஏதாவது வழி சொல்லுங்கள்…” என்றனர் கோரஸாக.

பிரம்மன் புன்முறுவலோடு, “வரம் கொடுத்ததை இனி
மாற்ற முடியாது. ஒன்று செய்யலாம். இப்போது காக்கும்
கடவுள் திருமாலவனும், அழிக்கும்/தண்டிக்கும் கடவுள்
மகாதேவனும் வேலையொன்றும் இல்லாமல் சும்மாத்தான்
இருக்கிறார்கள். நீங்கள் தினமும், முக்கியமாகத்   துன்பம்
வரும்போது மாலவனையும், பரமசிவனையும் நினைத்து
ஆராதித்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பக்தியின்
ஆழத்தையும், வேண்டுதலையும் பொறுத்து இடர்களை
எதிர்கொள்ள அவர்கள் சக்தியைக் கொடுப்பார்கள். கர்ம
வினைக்கு ஏற்ப கெட்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்படுவர்.
கர்ம வினையின் அளவைப் பொறுத்து சிலர் இந்த ஜன்மத்-
திலேயே தண்டிக்கப்படுவர். சிலரது கர்மவினையும்,
தண்டனையும் அடுத்த ஜன்மத்துலேயும் தொடரும். இரவும்
பகலும் போல் பிறப்பும், இறப்பும் இனி பூமியில் இருக்கும்.
எல்லாம் நல்லபடியே நடக்கும். சென்று வாருங்கள்..”
என்றார்.

கதையைக் கூறி முடித்த குருஜி, ‘என்ன பலராமா…
இப்பொழுது புரிந்ததா.?’ என்றார்.

“புரிந்தது குருஜி… ஆனா. ஆடுபவனும், ஆட்டுவிப்பவனும், எண்ணங்களையும், செயல்களையும், நினைவிப்பவனும், செய்விப்பவனும் அந்த ஆண்டவனாய் இருக்கும் பொழுது அவர் மனிதர்கள் மேல் சிறிது கரிசனம் காட்டலாம் இல்லையா..?”

“இல்லை பலராமா! அந்த சக்தி முழுவதும் இப்போது
கடவுளிடம் இல்லை. அவரவர் கர்ம வினையிலேயும்
இருக்கிறது. அதில் கடவுள் பங்கு ரொம்ப கம்மி. தன்னை
மனமுருகி, ஒரு மனதோடு வேண்டிக் கொள்வோர்க்கு,
அந்த கர்ம வினையின் தாக்கத்தின் உக்கிரத்தை சிறிது
குறைக்க முடியும்.. அவ்வளவுதான்.. அப்படி மக்களின்
துன்பத்தை சிறிதளவாவது குறைக்கவும், அவர்கள் அறிந்தோ
அறியாமலோ மீண்டும் பாவங்கள் செய்யாமல் தடுப்பதற்கும்தான்,                                    நம்மைப் போன்றவர்கள் சொற்பொழிவாலும், ஆன்மீக
டிரெய்னிங் கொடுத்தும் நம்மாலான முயற்சிகள் செய்து
கொண்டிருக்கிறோம். நம்ம துன்பங்களுக்கெல்லாம் அடிப்படைக்                                   காரணம் ‘ஆசை’ என்ற அந்த வைரஸ்தான். அதைத்
தூக்கி எறியுங்கள் என்று போதித்து வருகிறோம். மனிதர்கள்
மனப்பாங்கு மாற மாற ராட்சஸ குணம் கொண்ட மனிதர்கள்
அரிதாகி விடுவார்கள். நாட்டிலும் அமைதி நிலவும்” என்று
முடித்தார் குருஜி.

பலராமனுக்கு குருஜியின் எக்ஸ்ப்ளநேஷனை
முழுவதுமாக ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. ஆனால்
அது சரியல்ல என்று ஒதுக்கவும் முடியவில்லை.

யோசனையோடு அமர்ந்திருந்தான்.

————————————-

 

 

பைரவா டிரைலர்

Image result for bairava

சுடச் சுட விமரிசனம் ( கிருஷ்ணன் )

விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம் !

 தூத்துக்குடி கல்லூரி ஒன்றில் நடக்கும் தில்லுமுல்லுகளை ஹீரோ விஜய் எப்படி  வெளிக் கொண்டுவந்து ஹீரோயின் கீர்த்தி சுரேஷைக் கை பிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை 

விஜய்க்கு புது ‘விக்’ !!

பரதன் இயக்கம் சீராக இருக்கிறது. 

விஜய் ரசிகர்கள் எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கட்டும். மத்தவங்க ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே அப்பீட் ஆகலாம் !

பைரவா படமே   இணைய தளத்தில் வந்துவிட்டது என்ற செய்திகளையெல்லாம் விட்டுவிட்டு அதன் டிரைலரை மட்டும் இங்கே பார்ப்போம்.

மணி மகுடம் – ஜெய் சீதாராமன்

அத்தியாயம் 07                                                                            நடுநிசிக் கூட்டம்.

வந்தியத்தேவனும் கந்தமாறனும், சகாதேவன் கொண்டுவந்திருந்த பழங்களை அவசரமாகச் சாப்பிட்டு, தேனைப்பருகிப்  பின் தேங்காய்பாலை   அருந்தினார்கள், கடைசியில் தண்ணீர் குடித்துப் பசியைத் தீர்த்துக் கொண்டார்கள். சகாதேவன் குதிரைகளைக் கொண்டுவந்து மாளிகையின் பின்பகுதியில் கட்டினான். பிறகு சுரங்கப்பாதையில் போவதற்கு ஆயத்தம் செய்துவிட்டு வந்தான். தயாராக இருந்த இருவரையும் சகாதேவன் சுரங்கத்திற்கு அழைத்துச் சென்றான்.

நீண்ட தாழ்வாரம் வழியாக எல்லோரும் அரசரின் பெரிய படுக்கை அறைக்குள் சென்றார்கள். படுக்கை தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அடியில் சதுரமான நுழைவாயில் தெரிந்தது. அதில் கீழே செல்ல படிக்கட்டுகள் தென்பட்டன. அதை மூடி மறைத்திருந்த பலகை சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரு தீப்பந்தமும் ஒரு தூக்குக் குடுக்கையில் எண்ணையும் தயார் செய்யப்பட்டிருந்தது.

சகாதேவன் தீப்பந்தத்தில் எண்ணைவிட்டுப் பற்றவைத்தான். ஒரு கையில் பந்தத்தையும் மற்றொரு கையில் குடுக்கையையும் எடுத்துக்கொண்டான். தீப்பந்தத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு “என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்று கூறிக்கொண்டே நுழைவாயிலில் புகுந்து படிகளில் இறங்கினான். இருவரும் பின்சென்றனர். படிகள்,  முடிவில் நன்கு கட்டப்பட்டிருந்த ஒரு நீண்ட தாழ்வாரத்தில் கொண்டுசேர்த்தன. அதில் சிறிது நேரம் வளைந்து நடந்தபின் எதிரில் ஒரு சுவர் காணப்பட்டது. அதில் மற்றுமொரு வாயில்.. மீண்டும் படிக்கட்டுகள். இச்சமயம் மேல் நோக்கிச் சென்றன. மேல் சுவற்றில் மறுபடியும் ஒரு நுழைவாயில். அதை மூடியிருந்த ஒரு பலகை. அதோடு பாதை முடிவடைந்தது.

சகாதேவன் கடைசிப் படியில் உட்கார்ந்துகொண்டு கந்தமாறனைப் பார்த்தான். கந்தமாறன் படியில் ஏறி மேலிருந்த பலகையை த் தள்ளி வைத்தான். அதன் வழியாக மேலே புகுந்தான். வந்தியத்தேவனும் பின்னர் சகாதேவனும் தொடர்ந்தார்கள். அங்கு ஓர் சிறிய மரச் சக்கரம் சுவற்றில் இருந்தது. கந்தமாறன் அதை வலக்கைப் புறமாகச் சுழற்றினான். சுவற்றில் ஒரு வழி உண்டாயிற்று. கந்தமாறனும், வந்தியத்தேவனும் அதன் வழியாக வெளியேறினார்கள்.

கந்தமாறன் “சகாதேவா, நீ போய் குதிரைகளைக் கவனித்துவிட்டு இங்கே வந்து எங்களுக்காகக் காத்திரு. நான் மூன்று முறை உன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதும் நுழைவாயிலைத் திற. இப்போது இதை மூடிவிட்டு நீ போகலாம்” என்று கூறினான்.

சகாதேவன் அவ்வாறே செய்தான்.

நுழைவாயில் மூடியது!

பௌர்ணமிச் சந்திரன் பிரகாரங்களையும் விமானங்களையும் ஜோதி மயமாக்கிக் கொண்டிருந்தது. வந்தியத்தேவன் சுற்றுமுற்றும் பார்த்தான். சுரங்கம், கோவில் பிரகாரத்திலிருந்து உள்ளே செல்லும் படிக்கட்டுகளின் வட பகுதியில் சேர்ந்திருந்ததை அறிந்தான். கந்தமாறன் வந்தியத்தேவனை த்  தென்பகுதிக்கு அழைத்துச்சென்று அங்குள்ள சூரிய பகவான் எழுந்தருளியிருக்கும் சிறு பகுதியைக் காட்டி “சமணர் குகையிலிருந்து தொடங்கி இணைத்திருக்கும் பெரிய சுரங்கம் வழியாக வரும் பாதை இங்குதான் முடிவடைகிறது. இதன் வழியாகத்தான் சதிகாரர்கள் வந்து போவார்கள்” என்று கூறி வந்தியத்தேவனை கோவில் உள் சந்நிதி மண்டபத்திற்கு அழைத்துச் சென்றான்.

அங்கு ஒரு பெரிய பிள்ளையார் எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிரஹம் இருந்தது. கந்தமாறன் அதைச் சுட்டிக்காட்டி “நாம் இருவரும் அந்த சிவகுமாரனின் உருவத்திற்குப் பின்தான் ஒளிந்து கொள்ளப்போகிறோம். இந்த இடத்திலிருந்து நடப்பவை எல்லாம் பார்க்கலாம், கேட்கலாம். இந்த பெரிய மண்டபத்தை விட்டால் இதைவிடக்   கூட்டம் நடத்த வேறு நல்ல இடம் இந்தக் கோவிலில் கிடையாது, அவர்கள் இங்கு வருவதற்கு இன்னும் ஒரு நாழிகை இருக்கிறது. வா” என்று வந்தியத்தேவனை அழைத்தான்.

இருவரும் பிள்ளையார் சிலையின் பின் பகுதிக்குச் சென்று நன்றாக மறைந்து உட்கார்ந்துகொண்டார்கள்.

நிகழும் காலம், சில சமயம் வேகமாக போவது போன்றும், வேறு சமயம் மெதுவாக செல்வது போலவும் தோன்றுவது இயல்பு. இப்போது மனம் அவர்களது காலத்தை ஆமைபோல் மெதுவாக நகர்த்திக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்துவந்த வந்தியத்தேவன் கந்தமாறனைப் பார்த்து “அவர்கள் எதிர்பார்த்தபடி வருவார்களா? அல்லது நாம் இங்கு காத்திருப்பது வீண்தானா? நேரம் செல்வதைப் பார்த்தால் அவர்களுடைய நோக்கத்தை மாற்றிக் கொண்டுவிட்டார்களோ என்று தோன்றுகிறது” என்றான்.

அதற்கு கந்தமாறன் “பொறுமை” என்றான். எதற்கும் முடிவு என்று ஒன்று உண்டல்லவா! அது வருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன! இன்னும் சற்று நேரம் பொறு நண்பா! என்று வந்தியத்தேவனை சமாதனப்படுத்தினான். நண்பர்கள் இருவரும் காத்திருந்தனர்.

ஒரு நாழிகை நேரம் மெதுவாகக் கடந்தது..

நடுநிசி வந்தது. வந்தியத்தேவன் உதட்டில் கையை வைத்து ‘உஷ்..’ என்றான்.பிரகாரத்திலிருந்து ஆட்கள் வரும் சத்தம் கேட்டது. முதலில் கைகளில் தீப்பந்தங்களோடு இருவர் வந்தனர். சன்னதி மண்டபத்தில், நடுவே சில கற்கள் போட்டு அதில் சொருகிப்  பின் உட்கார்ந்தனர். வெளிச்சம் விநாயகர் பக்கம் சிறிதும் போகவில்லை. அங்கே காரிருள் நிறைந்திருந்தது.

கந்தமாறனும்  வந்தியத்தேவனும்  மூச்சை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர். வந்தியத்தேவன் மெல்ல அவ்விருவர் முகத்தை நோக்கினான். ‘ஆகா!இவர்கள் ரவிதாசனும், சோமன்சாம்பவானும் அல்லவா? ஆதித்த கரிகாலனைக் கண்காணித்து வரும்போது நமக்கு மிகவும் தொல்லை கொடுத்தவர்கள். மேலும் யார் யார் வருகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்று பொறுமையுடனிருந்தான்.

அடுத்து ஐவர் வந்தனர். ‘இந்த ஐவரையுமே நாம் இதற்குமுன் பார்த்ததில்லையே!’ என்று வந்தியத்தேவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, வந்தவர்கள் அமர்ந்து, மற்றவர் வருகைக்குக்   காத்திருப்பதாக அவனுக்குத் தெரிந்தது.

அடுத்து இருவர் வருகை தந்தனர்.

ஒருவன் நமக்கு ஏற்கெனவே பரிச்சயம் உள்ள பழைய மதுராந்தகன் – தற்போதைய அமரபுஜங்கநெடுஞ்செழியப் பாண்டியன்- அடுத்த பாண்டிய வம்ச வாரிசு – மன்மதனை ஒத்த அந்த முகம் இப்போது மெருகு பெற்று வீரக்களையுடன் சர்வ லட்சணங்களுடன் கூடிய வீர அரசகுல திலகத்தின் முகமாகத் திகழ்கிறது!

ஆகா! அடுத்து வருவது ஒரு பெண்மணி! நந்தினி! அவளுடைய தோற்றத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் காண்கிறதே. ஆம். அவளுக்கே உரித்தான ஆண்டாள் கொண்டை இப்போது அவள் தலைமுடியை அலங்கரிக்கவில்லை. முடியை வாரி எடுத்துப் பின்னால் சொருகியிருந்தாள். அதனால் அவளுடைய வசீகரம் முன்னைவிட பலமடங்கு கவர்ச்சியாய் இருக்கிறது!’ இதைப் பற்றியெல்லாம் வந்தியத்தேவனின் வெளி மனது எண்ணிக் கொண்டிருந்தது.

ஆனால் உள் மனதில் நந்தினியின் மேல் ஏற்கெனவே அவனுக்கிருந்த கோபம் அனலாக மாறி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து எல்லையில்லா நிலையை அடைந்தது. ‘இந்த அரக்கியினால்தானே நாம் கரிகாலனைக் கொன்றதற்கான பெரிய பழியைச் சுமக்க நேர்ந்தது!  அந்தப் பழியை என் மேல் சுமத்த சூழ்நிலையை உருவாக்கியவளும் அவளே!  நந்தினி நேரில் வந்து கரிகாலன் மரண ரகசியத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தும்வரை நம் பெயரில் உள்ள இழுக்கு என்றும் தீராது’ என்று எண்ணிய வந்தியத்தேவனின் கைகள் துடிதுடித்தன. இவர்கள் எல்லோரையும் வெட்டித் தீர்த்துவிட்டு நந்தினியைக் கைது செய்து கொண்டு செல்லலாமா என்று ஒரு கணம் நினைத்தான்.’

‘உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.அவ்வாறு செய்தால் இங்கு நாம் வந்திருக்கும் காரியம் தடைபடலாம். ஒருவேளை அது முற்றுப் பெறாமலே போகலாம்! ஆகையால் இப்போது பொறுமையைக் கடைப் பிடித்தாக வேண்டும். அவளின்பால் தனக்கிருக்கும் சொந்தப் பகையைப் பின்னால் தீர்த்துக் கொள்ளலாம்’ என்றெல்லாம் வந்தியத்தேவனின் எண்ண அலைகள் ஓடின.

அருகிலிருந்த நண்பன் கூட்டத்தில் ஒரு கண்ணும், வந்தியத்தேவன் மீது ஒரு கண்ணுமாக இருந்தான். வந்தியத்தேவனின் முகமாற்றத்தைக் கண்ட அவன், நண்பனின் கையை சிறிது அழுத்திப் பிடித்து பொறுமையைக் காக்க அறிவுறுத்தினான் சைகையில் மௌனமாக..

பேச்சும், கசமுச சத்தங்களும் ஒரே சமயத்தில் கேட்க ஆரம்பித்தன. வந்தவர்கள் வட்டமாக அமர்ந்தனர். முதலில் ரவிதாசன் எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி உரக்கச் சொல்லிவிட்டு, நந்தினியைப் பார்த்து,

“மகாராணி, உங்கள் உத்தரவிற்குப் பணிந்து நாமெல்லோரும் இங்கு கூடியுள்ளோம். எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா?” என்றான்.

“முதன் மந்திரி ரவிதாசரே! கருத்திருமன் அவர்கள் இலங்கையிலிருந்து கொண்டு வந்த செய்தியை நம்மிடம் தெரிவிக்க அவரே இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் இன்னும் வரவில்லையே? அவர் இல்லாமல் எப்படி இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்க இயலும்? அவருக்காக நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. வேறு யாராவது வரவேண்டியிருக்கிறதா?” என்றாள் நந்தினி.

மறுபடியும் கூட்டத்தில் ஒரு கலகலப்பு, கசமுச சத்தம்!

ரவிதாசன் “மகாராணி, இடும்பன்காரி இன்னும் வரவில்லை. சுரங்க வாயிலை பாதுகாக்க அவனை அனுப்பியிருந்தோம். அங்கு அவனைக் காணவில்லை! அவனைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். ஏதாவது சொந்தக் காரியத்திற்காகச் சென்றிருக்கலாம். அவன் இங்கு வராத காரணத்தை அவனே உங்களிடம் சொல்லுவான்” என்றான்.

அவனின் இந்த பதிலால் சமாதானமடைந்த நந்தினி அமைதி காத்தாள்.

அவளைத் தொடர்ந்து சிறிது நேரம் அனைவரும் அமைதி காத்தனர். பிறகு கசமுச சத்தம். காலம் சென்று கொண்டிருந்தது. எல்லோரும் கருத்திருமனின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

திடீரென்று ஒரு பரபரப்பு!

பிரகாரத்திலிருந்து யாரோ நடந்துவரும் காலோசை!

சில நொடிகளில் அவர்களுக்கு முன் கருத்திருமன் காட்சி அளித்து அவர்கள் ஐயத்தைப் போக்கினான்.

நந்தினியையும் அமர புஜங்கனையும் முதலிலும் பின் அனைவரையும் வணங்கிய பிறகு அமர்ந்தான்.

இந்தக் காட்சிகளையெல்லாம் நண்பர்களிருவரும் கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தனர்.

நொடிக்கு நொடி நண்பர்களின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

இதற்கிடையில் அமர புஜங்கனின் குரல் அந்த நிசப்தத்தை முழுவதும் கலைத்தது.

“என்ன கருத்திருமா..ஏன் இவ்வளவு தாமதம்? உனக்காக நாங்கள் வெகுநேரம் காத்துக்கொண்டிருக்கிறோம், தெரியுமா?” என்றான்.

“அரசே!என்னை மன்னித்தருள்க. வழக்கமாக நம் ஆட்களோடு கூடிப்பேசும் மஹாதானபுரத்தில், நான் இலங்கையிலிருந்து கொண்டு வந்திருக்கும் விவரத்தை நாமெல்லோரும் விவாதித்து முடிவெடுக்க நாளும் இடமும் தேர்ந்தெடுத்து உங்களுக்கு முதலில் செய்தி அனுப்பினேன். அடுத்த நாள் நம் ஆட்களுக்கு என்னென்ன வேலை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது எங்கள் நடவடிக்கைகளைச் சோழ ஒற்றன் யாரோ மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது. குதிரையில் தப்பி ஓடிய அவனை விரட்டிச் சென்றோம். கடைசியாகக்   குடந்தைக்குச் செல்லும் சாலையில் அவனை வழிமறித்துப் பிடித்தோம். அவனைக் கொல்லுவதற்கு முயன்ற நம் குலசேகரனை திடீரென்று எங்கிருந்தோ வந்து குதித்த வந்தியத்தேவன் வேலை எறிந்து வீழ்த்தினான். எங்களை வந்தியத்தேவன் அடையாளம் கண்டுகொள்ளும் முன் கத்தியை ஒற்றன் நெஞ்சினில் பாய்ச்சிப் பறந்து வந்துவிட்டோம். குலசேகரன் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை. ஒருசமயம் அவன் உயிரோடு இருந்திருந்தால் நம் வழக்கப்படி உயிரை மாய்த்துக் கொண்டிருப்பான். என் கத்தி ஒற்றனின் உயிரைப் பருகியிருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அவனிடமிருந்து வந்தியத்தேவனுக்கு எந்த விவரமும் தெரிந்திருக்காது. இந்த எதிர்பாராத சம்பவங்களினால் சோழ வீரர்கள் வழிமுழுவதும் வருவோர் போவோர்களையெல்லாம் சோதனைக்கு ஆளாக்கித்  தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த எதிர்பாராத பாதிப்பினால் ஒளிந்து, திரிந்து, பதுங்கி வர என் பயணம் தடைப்பட்டது. ஆகையினால்தான் இந்தத் தாமதம்” என்று கருத்திருமன் தனது தாமதத்திற்கான நெடிய விளக்கத்தைக் கூறி முடித்தான்.

இதைக் கேட்ட எல்லோரும் திகைப்படைந்தனர்.

நந்தினி பதட்டத்துடன் “நாம் முடிவு செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் வந்தியத்தேவன் எங்கிருந்தோ முளைத்து வந்து தொல்லை கொடுப்பது வழக்கம் ஆகிவிட்டது. நாம் இதுவரை தீர்மானித்த எந்தக் காரியமும், வந்தியத்தேவனை சமாளிப்பதிலேயே பாதி நேரம் செலவிடப்பட்டிருக்கிறது. நாம் இப்போது பேசப் போவதோ நமது புராதானமான பாண்டிய வம்சாவழிப் பொக்கிஷங்களான மணிமகுடம், தேவேந்திரனே நமக்கு அளித்ததாகக்   கூறப்படும் இரத்தின ஹாரம் பற்றிய விஷயத்தைப் பற்றியதாகும். நாம் எடுக்கப்போகும் முடிவோ கருத்திருமன் நமக்கு சொல்லப்போகும் விவரத்தைப் பொறுத்திருக்கிறது. இந்த ரகசியம் வந்தியத்தேவனுக்கோ அல்லது சோழ எதிரிகளுக்கோ தெரிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது நமது தலையான பொறுப்பு. இதில் தோல்விக்கு இடமே இல்லை! கோவிலுக்குள் வரும் சுரங்கத் துவாரத்தை, இந்தக் கூட்டம் நடக்கும் வரையில், யாரையாவது கண்காணிக்க ஏற்பாடு செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், அப்படித்தானே ரவிதாசரே” என்று கூறி ரவிதாசனை நோக்கினாள்.

“உங்கள் கூற்று முற்றிலும் உண்மை. அதற்கான தற்காப்பு நடவடிக்கையை ஏற்கெனவே எடுத்துள்ளேன், மகாராணி. பிறைமுடி அங்கு அமர்த்தப்பட்டுள்ளான்” என்று தான் செய்திருந்த ஏற்பாட்டை விளக்கினான் ரவிதாசன்.

“நல்லது ரவிதாசரே.இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் கவனமாக எல்லா காரியங்களியும் செயலாற்ற வேண்டும். இலங்கையிலிருந்து கொண்டு வந்த விவரத்தை உடன் கூறுங்கள்” என்று நந்தினி,  கருத்திருமனைப் பார்த்தாள்.

வந்தியத்தேவனும், கந்தமாறனும்  காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்கத் தொடங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து கருத்திருமன் பேசத் தொடங்கினான்.

“உங்கள் கட்டளைப்படி நான் ஈழத்திற்குச் சென்றிருந்தபோது மகிந்தனைக் காண எவ்வளவோ முயன்றேன். சோழப் படையெடுப்பு காரணங்களினால் அது சாத்தியமாகவில்லை. கடைசியாக மகிந்தனிடமிருந்து ஓலை மூலம் செய்தி கிடைத்தது. மிகவும் வருத்தத்துடனும் அதற்காக மன்னிப்பையும் கோரியிருந்தார். இந்தப் போரினால் அவருக்கு ஏதேனும் பேரழிவு நேர்ந்தால், நமது பொக்கிஷங்கள் பற்றிய ரகசியம் ஒருவருக்கும் தெரியாமலேயே போக வாய்ப்பு இருப்பதாலும், நமக்கு இதனால் கடுகளவும் பாதிப்பு வராமல் இருக்கவும், இதை ரோஹண மலைக் குகையிலிருக்கும் அவர்கள் பொக்கிஷங்களிலிருந்து பிரித்து யாராலும் கண்டுபிடிக்க முடியாத வேறு இடத்திற்கு மாற்றி இருப்பதாகவும், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பற்றிய விவரங்களை சித்திரங்கள், சிற்பங்கள் மூலமாக ரகசிய இடங்களில் விளக்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.”

“மறைத்திருக்கும் இடம் பாதுகாப்பான இடமா?எளிதில் அதை நெருங்க முடியுமா?” என்று அமரபுஜங்கன் வினவினான்.

“பொக்கிஷம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம்.. ..” என்று இடத்தின் பெயரைச் சொல்லும் போது அவர்களுக்கு மட்டும் கேட்கும்படியாக மிகவும் ரகசியமான குரலில் கூறி, “மிகவும் பாதுகாப்பான இடம்” என்று கூறி முடித்தான்.

வந்தியத்தேவனும் கந்தமாரனும் காதுகளை நன்றாக எவ்வளவோ தீட்டிவிட்டுக் கொண்டும் கருத்திருமன் மிகவும் மெல்லியதாகச் சொன்ன இடத்தின் பெயர் கடுகளவும் கேட்கவில்லை. ‘மிகவும் பாதுகாப்பான இடம்’ என்று கடைசியில் சொன்ன வார்த்தைகள் மட்டுமே கேட்டன.

“சித்திரங்கள் வரைந்திருக்கும் இடங்கள் பற்றி ஏதோ கூறினாயே.அதன் விபரம் என்ன?” நிந்தினி வினவினாள்.

கருத்திருமன் மேலும் கூறினான்:

“பொக்கிஷங்களைப் பற்றிய விவரங்களைக் கொண்ட சித்திரங்களும் சிற்பங்களும் வெவ்வேறு இடங்களில் இருக்கின்றன..முதல் இடம், அநுராதபுரத்திற்கு தென்மேற்கு திசையில் ஒரு காத தொலைவில் இருக்கிறது. அங்கு காட்டுமரங்கள் அடர்ந்த இருட்டான இடத்தில் ஒரு பிரும்மாண்டமான கோவிலின் மேல் ஒரு உயர்ந்த புத்த ஸ்தூபி இருக்கிறது. அதன் கீழே கோவிலுக்குள் செல்ல ஒரு கதவு இருக்கிறது. அந்த இடத்தை தினமும் சுத்தம் செய்து பாதுகாத்துவரும் புத்த பிட்சுக்கள் காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் திறந்து வைத்திருப்பார்கள். கோவிலின் உள்ளே ஸ்தூபியின் சுவர்களில் புத்தரைப் பற்றிய வர்ணக் கற்களால் ஒட்டப்பட்ட சித்திரங்கள் அவர் வாழ்க்கை வரலாற்றைப்பற்றித்   தெரிவிக்கின்றன. அதில் சில சித்திரங்களை மகிந்தன் சேர்த்திருக்கிறார். அதில் பொக்கிஷத்தை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பற்றிய முதல் பகுதி விளக்கப்பட்டுள்ளது.”

“இரண்டாம் இடத்தைப் பற்றிய குறிப்பு பொதிந்த புதிர் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.அந்தப் புதிர் சொன்ன விஷயத்தை அறிந்து, இரண்டாம் இடத்திற்குச் சென்று, மூன்றாம் இடத்தைப் பற்றிய விவரத்தை அறிந்து கடைசியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் சென்று, அதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டேன்.”

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. அந்த அமைதியை நந்தினியே களைத்து “மேலே தொடருங்கள்” என்றாள்.

“அந்த இடம்!அப்பப்பா! ஒருவேளை எதிரிகள், புதிர்களைப் பற்றி அறிந்து, அவைகள் சொன்ன விவரங்களைக் கண்டுபிடித்து, பொக்கிஷங்கள் இருக்குமிடம் அடைந்தார்களானால் அங்கு அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கும்! அந்த இடம் அப்படிப்பட்டது! எளிதில் அப்புறப்படுத்த இயலாத இடம்! அவ்வளவு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் என்றென்றும் மகிந்தனுக்குக் கடமைப்பட்டுள்ளோம்” என்று குரலிலே வியப்பைக் காட்டி முடித்தான் கருத்திருமன்.

மீண்டும் சிறிது நேரம் அமைதி நிலவியது. பின் நந்தினி அனல் பறக்கச் சொன்னாள். “நல்லது கருத்திருமா. மகிந்தன் நல்ல ஏற்பாட்டைத்தான் செய்திருக்கிறார். ஆனால் வந்தியத்தேவன்மேல் எனக்கு இப்போது சந்தேகம் அதிகரிக்கிறது. உன்னால் குத்தப்பட்ட சோழ ஒற்றன் இறந்தவனாகவே இருக்கட்டும்! குலசேகரன் இறப்பதற்கு முன், வந்தியத்தேவன் அவனைச் சித்திரவதைக்கு உட்படுத்தி ஏதாவது அறிந்திருக்கலாம் அல்லவா? இடும்பன்காரி மறைந்த காரணம் அதனால் இருக்குமா? ஒருவேளை வந்தியத்தேவன் அவனைக் கொன்றிருப்பானோ? இப்போது என் சந்தேகம் வலுக்கிறது. அவன் மறைந்த காரணத்தை நாம் உடனே அறிய வேண்டும்! ரவிதாசரே! நீங்களும் கருத்திருமனும் இன்னும் வேண்டிய மற்றவர்களையும் ஈழத்திற்குக் கூட்டிச்சென்று பொக்கிஷங்களை உடனே இங்கே எடுத்து வந்துவிடுங்கள். அதை மறைத்து வைக்கக் கொல்லிமலையே உகந்த இடம்! நாளையே கிளம்புங்கள். வந்தியத்தேவனோ அல்லது வேறு யாராவதோ தொல்லை கொடுத்தார்களானால் அவர்களைக் கண்டம் துண்டமாக வெட்டி நாய்களுக்குப் போடுங்கள். நமது கூட்டாளிகளான கடல் கொள்ளைக்காரர்களின் உதவி நமக்கு இப்போது தேவை. அவர்களின் ஆட்கள் இப்போது சோழ நாட்டில் தஞ்சை, மாமல்லபுரம், காவிரிப்பூம்பட்டிணம் மற்றும் இலங்கை மாதோட்டத்திலும் நமக்காக வேவு பார்த்துக் கொண்டு மக்களோடு மக்களாய் இணைந்திருக்கிறார்கள். அந்த இடங்களுக்கு உடன் செய்தி அனுப்பி அவர்களுடைய மரக்கலங்களை ‘தயார்’ நிலையில் வைத்திருக்கச் சொல்லுங்கள். ரவிதாசரும் கருத்திருமனும் மாதோட்டத்து கொள்ளைக்காரர்களின் மரக்கலத்துடன் தயாராக இருக்கட்டும். ரவிதாசரே! அவர்களது துணையையும், நம் வீரர்களின் துணையையும் கொண்டு எப்படியாவது இடும்பன்காரியைப்பற்றி விவரமறிந்து, பின் பொக்கிஷங்களை உடனடியாக இங்கு கொண்டு வந்து சேர்ப்பது உங்கள் பொறுப்பு. உங்கள் பதிலுக்காகக்  காத்திருக்கிறேன்.”

“மகாராணி, இவ்வளவு பெரிய காரியத்தைச் சாதித்து வெற்றிகரமாய் முடிக்க, எங்களைத்  தயார் செய்துகொள்ள ஒரே ஒரு நாள் தேவைப்படுகிறது. நானும் கருத்திருமனும் நாளை மறுநாள் மாதோட்டத்திற்குக் கிளம்புகிறோம். மற்ற இடங்களுக்குச் செய்தி அனுப்பும் பொறுப்பை சோமன்சாம்பவானிடம் ஒப்புவிக்கிறேன்” என்று கூறினான் ரவிதாசன்.

மீண்டும் கூட்டத்திலுள்ளவர்களை ஒரு முறை பார்த்த நந்தினி “நல்லது ரவிதாசரே. அப்படியே செய்யுங்கள். மேலும் வேறு யாருக்கேனும் ஏதாவது சந்தேகங்கள், கேட்க வேண்டியவைகள் எவையேனும் இருக்கின்றனவா?” என்று கேட்டாள்.

எல்லோரும் மௌனம் சாதித்தார்கள்.

அமைதியே பதிலாக வந்ததாதல் அவர்களைப் பார்த்து நந்தினி, “கூட்டம் இத்துடன் கலையட்டும். வெற்றி நமக்கு நிச்சயம்! நம் எல்லோரையும் நாம் வணங்கும் கொல்லிப் பாவை காப்பாற்றுவாள்!” என்று கூறினாள்.

எல்லோரும் தீப்பந்தங்களை கையிலேந்தி மண்டபத்திலிருந்து வெளிவந்து சூரிய பகவான் பகுதிக்கு விரைந்து சென்றார்கள். மண்டபத்தில் காரிருள் சூழ்ந்தது. வந்தியதேவனும் கந்தமாறனும் வினாயகர் பின்னாலிருந்து வெளிவந்து சோம்பல் முறித்து சுதாரித்துக் கொண்டனர்.

மண்டபத்தின் சுவர்களில் அங்கும் இங்குமாக சில சிறிய துவாரங்கள் காற்று வருவதற்காக அமைக்கப்பட்டிருப்பதைக் கந்தமாறன் ஏற்கனவே அறிந்திருந்தான். இருட்டில் தடவிப்பார்த்து ஒரு துவாரத்தைக் கண்டு பிடித்தான். அதில் கண்ணை வைத்து வெளியில் என்ன நடக்கிறது என்று பார்த்தான்.

சூரிய பகவான் இருக்கும் பகுதி நன்கு தெரிந்தது.

கையில் தீப்பந்தத்துடன் ஒருவன் அருகில் நின்று கொண்டிருந்தான். வந்தவர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று மறைந்து கொண்டிருந்தனர். கடைசியில் நின்று கொண்டிருந்தவனும் உள்ளே சென்று மாயமானான். பிறகு அங்கு அமைதி நிலவியது. நிலாவின் வெளிச்சம் மட்டும் அங்கு பரவியிருந்தது.

அதனைக் கண்ட கந்தமாறன் நிமிர்ந்து வந்தியத்தேவனிடம் “எல்லோரும் சென்றுவிட்டார்கள்” என்றான்.

‘பொக்கிஷம் மறைந்திருக்கும் இடம், கருத்திருமன் கிசுகிசுத்ததால் தெரியாமல் போய்விட்டதே’ என்று வந்தியத்தேவனின் உள்ளத்தில் கவலை மண்டியது.  அதனை கந்தமாறனிடமும் வெளிப்படுத்தினான்.

பிறகு கந்தமாறனைத் தட்டிக் கொடுத்து “எனினும் கவலை இல்லை. அநுராதபுரத்துச் சித்திரங்கள் அதைத் தெரியப்படுத்தும் என்று கேட்டோமல்லவா. அது போதும். நீ இல்லாமல் இவ்வளவு பெரிய ரகசியத்தை என்னால் தெரிந்துகொள்ள இயன்றிருக்காது. இதற்காக நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்? ரவிதாசன் தெய்வாதீனமாக எனக்கென்று ஒரு நாள் அவகாசத்தை ஏற்படுத்தியிருக்கிறான் போலும்! இந்த பொன்னான சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி, அவர்களை முந்தி, அப்பொருட்களைக் கண்டுபிடித்து சோழ நாட்டிடம் ஒப்படைக்க உறுதி கொண்டுள்ளேன். அதை செயலாக்க உன் ஒத்துழைப்புடன் இப்போதே கிளம்புகிறேன்!” என்று கூறினான்.

அதற்குக் கந்தமாறன் “நாம் இப்போது கிளம்பினால் சதிகாரர்கள் கண்டுவிடக் கூடும். நாளை   காலையிலிருந்து குதிரைகளிலும், கழுதைகளிலும், வண்டிகளிலும் கோவிலுக்கு இன்று வந்திருந்தோர்  கூட்டம் திரும்பி போய்வந்த வண்ணம் இருக்கும். காலையில் நாம் அவர்களுடன் மறைந்துவிடலாம்” என்று கூறினான்.

இருவரும் சுரங்க வாயிலின் பகுதிக்குச் சென்றார்கள். கந்தமாரன் “சகாதேவா!” என்று மூன்று முறை கூவினான். சுரங்க வழி திறந்தது. இருவரும் உள்ளே சென்றதும் வாயில் மூடியது!.

&&&

ரவிதாசன் முதலியோர் சுரங்க வாயிலைவிட்டு வெளிவந்ததும் எல்லோரும் பிரிந்து அவரவர் வழி சென்றனர். ரவிதாசனும்சோமன்சாம்பவானும் மட்டும் தீப்பந்த வெளிச்சத்தில் குகைக்குள் சென்று தரையை ஆராய்ந்தார்கள். சரகுகளைத் தள்ளி நோக்கினார்கள். காய்ந்த இரத்தம் அங்குமிங்குமாகத் தென்பட்டது. அவர்கள் முகங்கள் சுருங்கின.

ரவிதாசன் “இடும்பன்காரி கொல்லப்பட்டது உண்மைபோல் தோன்றுகிறது. நாளைக்கு நாம் பகலில் வந்து மறுபடி ஆராய்வோம். இதனால் நம் காரியத்திற்குத் தடை இல்லை. நம்மைத்தவிர வேறு எவரும் சுரங்க வாயினில் உள்ளே வந்திருக்க முடியாது. நமது ரகசியத்தைத் தெரிந்து கொண்டிருக்கவும் முடியாது. ஏனெனில் நமது வீரன் பிறைமுடி, கோவிலினுள் சூரிய பகவான் நுழை வாயிலை, நம் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது கண்காணித்துக் கொண்டிருந்தான். ஆகையால் அதைப் பற்றிப்பிரச்சினை இல்லை” என்று கூறினான்.

அடுத்த நாள் இருவரும் குகைக்கு வந்து சுற்றுப்புறத்தை ஆராய்ந்தபோது இடும்பன்காரியின் சடலம் கிடைத்தது. சிறிது நேரம் அதிர்ச்சியால்  தாக்குண்டு, தாடைகளில் கைகளை வைத்து உடலின் அருகில் அமர்ந்திருந்தார்கள்.

முதலில் ரவிதாசனே அதிர்ச்சியிலிருந்து மீண்டான்.

“சோமா, நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று நான் நினைக்கவில்லை. வா! முதலில் இவனை நல்லடக்கம் பண்ணுவோம்” என்றான்.

இருவரும் சேர்ந்து மெதுவாகக் குழி தோண்டி இடும்பன்காரியைப்   புதைத்தார்கள். அவனுடைய ஆத்மா சாந்தி அடைய சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

துக்கம் தொண்டையை அடைக்க, வந்தியத்தேவன்மேல் தீராத கோபம் எழுந்தது ரவிதாசனுக்கு.

“அப்படியா, சமாசாரம்!வந்தியத்தேவா, உனக்கு முடிவு கட்டுகிறேன். நான்தான் உனக்கு எமன். உன் மேல் பாசக் கயிற்றை வீச நாளை அல்ல, இன்றே, இப்போதே கிளம்புகிறேன்” என்று ரவிதாசன் மீசையை முறுக்கினான். பிறகு ‘சோமா, இன்னும் பலரை நம்முடன் சேர்த்துக்கொள்ளுவது இப்போது அவசியம். மற்றோருக்கு செய்தி சொல்லும் பொறுப்பை நாமே இவர்களுடன் ஏற்கலாம்’ என்று பற்களை நர நரவென்று கடித்தவண்ணம் சோமன்சாம்பவானுடன் கிளம்பினான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எமபுரிப்பட்டணம் (எஸ் எஸ் )

  எமபுரிப்பட்டணம் (தொடர் கதை)

Related image

விஷ்ணுபுரி – சிவபுரி – பிரும்மபுரி  போல  சாவுத் தேவன் எமனின்  தனி உலகம்  எமபுரி .

அதன் தலைநகர்  எமபுரிப்பட்டணம் .

இறந்தபின் மனிதன் இங்குதான் செல்கிறான். இங்கு வந்தபிறகு அவன் அவள் அது என்று எதுவும் கிடையாது. ஆத்மாதான்.  ஆத்மாவின் தலைஎழுத்தும் உடல் எழுத்தும் படிக்கப்படுகின்றன. ஆத்மா  பூமியில் செய்த நல்லது கெட்டது இரண்டையும் ஆராய்ந்து அவற்றிற்கேற்ப நீதி வழங்கப்படுகிறது. அதன்படி ஆத்மா  சொர்க்கபுரிக்குச் செல்லலாம். அல்லது நரகபுரிக்குச் செல்லப் பணிக்கப்படலாம். சொர்க்கபுரி – நரகபுரிக்கும் இரண்டுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத வேலி உண்டு. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் ஆத்மாக்கள் சென்று வருவதுண்டு.

எமன் தான் இரண்டுபுரிக்கும் தலைவன் – சர்வாதிகாரி. அவனுக்கு உதவிபுரிய ஒரு பெரும் படையே உண்டு. அவனுக்கு என்று நிறைய சட்ட திட்டங்கள் உண்டு. ஆனால் அவன் அழிக்கும் கடவுளான சிவன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படமாட்டான்.

மார்க்கண்டேயனை உதைத்தவன் இவன். சாவித்திரிக்கு வாக்குக் கொடுத்து சத்தியவானைப் பிழைக்க வைத்தவனும் இவன். நசிகேதனுக்கு வேண்டும் வரம் கொடுத்தவனும் இவன்.  ஆனால் அதெல்லாம் பழங்கதை. எருமை மாட்டு வாகனம் , பாசக்கயிறு, சித்திரகுப்தன், கிங்கரர் போன்றவையும் பழங்கதைதான்.

இன்றைய  விஞ்ஞான உலகத்தில்  எமன்  எப்படித்  தன் வேலையைச் செய்கிறான் ?

பூலோகத்திலிருந்து அவனிடம் வரும் அரசியல்வாதிகள், இலக்கிய கர்த்தாக்கள்,திரைப்பட நாயகர்கள் , மேதைகள், அழகிகள், மன்னர்கள், சாமானியர்கள் எல்லாரும் எமபுரிப்பட்டணத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறப்போவது இந்தத்  தொடர் கதை.

ஒன்றே ஒன்று மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும் உண்மையில் அவை அப்படி இருக்கவும் கூடும் .   உண்மையில் எப்படி  இருக்கிறது என்பதற்கு யாரிடமும்  ஆதாரம் கிடையாது.  இது இப்படி இல்லை என்று ஆதாரம் காட்டினால் அது ஏற்றுக் கொள்ளப்படும் .

இன்னொரு முக்கியமான சமாசாரம்.  இது கொஞ்சம் வித்தியாசமாக எழுதவேண்டும் என்பதற்காக எழுதப்படுகிறது. இது யாருடைய மனத்தையாவது புண்படுத்தினால் கோடிட்டுக் காட்டுங்கள். அப்பொழுதே இந்தத் தொடர் நிறுத்தப்படும். அதற்கான முன்கூட்டிய மன்னிப்பை இப்போதே வேண்டிக்கொள்கிறேன்! 

எமபுரிப்பட்டணம் –  ஒரு பயங்கரமான தொடர் !  மனபீதி கொள்ளுபவர்கள், பிஞ்சு மனம் படைத்தவர்கள் கொஞ்சம் மனதைக் கல்லாக்கிக் கொண்டு  படிக்கவும்.

அதற்காக மிகவும் பயப்படத் தேவையில்லை. ஜாலியான பகுதிகளும் கிளுகிளுப்பான பகுதிகளும் அவ்வப்போது   வரலாம்.

 

Image result for yamadharmarajRelated image

 

சொர்க்கபுரியில் கிடைக்கும் அமுதத்தை விட நரகத்தில் கிடைக்கும் மதுவின் சுவைக்காக அங்கு செல்லும் ஆத்மாக்களைக் கண்டு நீங்கள் சிரிக்கலாம்.

நரகபுரியிலிருந்து தப்பிவந்து சொர்க்கத்தில் மறைந்துகொள்ளும் சிலரின் கதை உங்களுக்குக்  கிலியை வரவழைக்கலாம்.

எமபுரியில் நடக்கும் இலக்கியக்கூட்டங்களைப் பற்றிப் படிக்கும் போது உங்கள் இலக்கிய ரசனை தூண்டப்படலாம்.

உங்கள் அபிமான நடிகர்களை-  குறிப்பாக நடிகைகளை மீண்டும் சந்திக்கும் போது உங்களுக்குக் குஷியாகவும் இருக்கலாம்.

அரசியல்வாதிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாகவும்  இருக்கலாம்.

அங்கும் வகுப்பு வாதம்,  மற்றும் வகுப்புக் கலவரமும் நடைபெறும்போது பூமியே மேல் என்று தோணலாம்.

ஒரு புதிய உலகத்துக்குப் புதிய பரிமாணத்தில் நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள்! அதற்காக உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் ! எதற்கும் வீட்டிலே சொல்லிவிட்டு  வந்து விடுங்கள்!

இந்த முன்னுரையோடு    எமபுரிப்பட்டணம்  கதைக்குச் செல்ல அடுத்த மாதம் வரை பொறுத்திருங்கள்!

(திகில் ஆரம்பமாகிறது)

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

சுங்கர்கள்

Related image

அசோகர் மறைந்து 50 வருடங்கள் உருண்டோடியன !
சில பல மௌரிய மன்னர்கள்…வந்தனர்…சென்றனர். நாட்டின் எல்லை குறுகிக் கொண்டே போனது..புத்த மதம் மட்டும் செழிப்பாக இருந்தது.

இந்திய மக்கள் பொதுவாக – எல்லா மதங்களையும் – சமமாகவே பாவிப்பர். மதங்களை வைத்து அரசியல் செய்வது என்பது….
அரசியல் வாதிகளுக்கு …இன்று மட்டும் அல்ல…தொன்று தொட்டு வந்த ஒன்று.

வீரமும் அறிவும் பொதுவாக ஒரு மன்னனை அவனது எதிரிகளிடமிருந்து காக்கும். அது குறைந்த மன்னர்கள் கதி, அதோ கதி தான்.
மௌரிய மன்னன் ‘பிருகத்ரதன்’ பாவம்!
நாட்டைச் சுற்றி எதிரி நாட்டரசர்கள் – எப்படியாவது மௌரிய ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது மற்றுமல்லாது மௌரிய அரசைக் கொள்ளையிடலாம் என்று துடித்தனர்.

உஜ்ஜயினியில் புஷ்யமித்ர சுங்கன் என்ற பிராமணன் – மௌரிய ராணுவத்தில் சேர்ந்து படைத்தளபதி ஆக இருந்தான். அவனது குடும்பத்தினர் பலர் மௌரிய அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்தனர். புஷ்யமித்ரன் வீரத்தில் சிறந்து விளங்கினான். வீரம் அவனை உஜ்ஜயினிக்கு ஆளுனராக்கியது.

ஒரு கதை விரிகிறது.

வருடம் கி மு 185:
இடம்: பாடலிபுத்திரம்

உஜ்ஜயினியிலிருந்து பயணப்பட்டு வந்த களைப்புத்  தீரும் முன் புஷ்யமித்திரன் அரசனின் அரண்மனை சென்று அடைந்தான். மன்னரின் வாயிற்காவலன் புஷ்யமித்திரனை வணங்கி,

“தளபதியாரே வருக” என்று வரவேற்றான்.
“அரசரை அவசரமாகச் சந்திக்க வேண்டும்”

பிருகத்ரதன் அந்தப்புரத்தில் இன்பத்தில் மிதந்து கொண்டு இருந்தான்.
வேண்டா வெறுப்பாக வரவேற்பறைக்கு வந்து தளபதியை சந்தித்தான்.

பிருகத்ரதன்: “தளபதி! என்னய்யா இது? இப்படி நேரங் கெட்ட நேரத்தில் நீர் இங்கு வந்து..என்னய்யா ஆயிற்று?”

புஷ்யமித்திரன்: “அரசே! ஆமாம். நேரம் கெட்டுத் தான் போயிருக்கிறது!”

பிருகத்ரதன்: “?????”

புஷ்யமித்திரன்: “விதர்ப நாடு மௌரிய நாட்டை விட்டு விலகித்  தனி அரசாகி விட்டது.”

பிருகத்ரதன் : “அட அப்படியா? சரி போகட்டும். ஒழிஞ்சது சனியன் … விடு விடு… ”

‘சே! என்ன இப்படியும் ஒரு வீரமற்ற மன்னனா’ -புஷ்யமித்திரன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.

புஷ்யமித்திரன்: “மேலும் வடமேற்குப் பகுதியிலிருந்து ‘பாக்டிரியன் கிரேக்கர்’ (Bactrian greeks) என்னும் யவனர்கள் கங்கை ஆற்றைக் கடந்து  படையெடுத்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அயோத்தியின் வீதிகளில் யவனர் நடமாட்டம் தென்படுகிறதாம்’

பிருகத்ரதன் : “மறுபடியும் சண்டையா? என்ன கொடுமை இது சுங்கா? யாரையாவது அனுப்பி, யாருக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுத்து முடித்து விடவேண்டியது தானே”

‘இப்படி ஒரு அரசனைப் பெற்ற மௌரிய ஆட்சி நீடிக்கப்போவதில்லை’ – இந்த எண்ணம் புஷ்யமித்திரன் மனதில் திடமானது.

புஷ்யமித்திரன் : “நம் படையில் போர் வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து   விட்டது. நாட்டில் கள்ளப் பணம் மலிந்திருக்கிறது. கஜானாவில் இருக்கும் பாதிப் பணம் கள்ளப்பணம்”

கள்ளப்பணப் பிரச்சினை இன்று நேற்றல்ல அன்றிலிருந்தே இருந்திருக்கிறது!

“மறுபடியும் பிரச்சினையா? புத்த பிக்ஷுக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டுமே” – என்று மெல்லக் கூறி பிருகத்ரதன் கவலைப் பட்டான்.

புஷ்யமித்திரன் மனம் கொதித்துவிட்டது.

‘போர் வீரர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை.. புத்த பிக்ஷுக்களுக்குக்  கொடுக்க வேண்டுமாம். ஒரு நாள் ஹிந்து ராஜ்ஜியம் ஏற்பட்டு  இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்’ – என்று எண்ணமிட்டான்.

புஷ்யமித்திரன்: “மகாராஜா சந்திரகுப்தர் நந்தனை வென்று முடி சூடிய நாள் நாளை. அன்று மௌரிய ராணுவத்திற்கு மரியாதை அளிக்கவேண்டும். நீங்கள் அணிவகுப்பைப் பார்வையிட வேண்டும்”

பிருகத்ரதன்: “சே! இந்த படைகளை முற்றும் கலைத்து விட்டு ..” என்று சொல்லத் தொடங்கியவன் புஷ்யமித்திரன் முகத்தில் பொங்கிய கோபத்தைப் பார்த்து பேசுவதைப் பாதியில் நிறுத்தினான்.

பிறகு: “சரி வருகிறேன்” என்று ஒப்புக்கொண்டான்.

மறு நாள் காலை.

சூரிய உதயம் அன்று வழக்கத்திற்கு அதிகமாகவே சிவந்து வான வீதியில் இரத்தத்தை அள்ளித் தெளித்திருந்தது. அது ரம்யத்தைவிட பயங்கரத்தையே காட்டியது. அசோகர் காலத்தில் உலகத்தின் தலை நகர் போல் திகழ்ந்த பாடலிபுத்திரம் அன்று சற்றுப் பொலிவு இழந்து காணப்பட்டது. ஊதல் காற்று சற்று வலுவடைந்திருந்தது.

அரண்மனைக்கு வெளியே மாபெரும் மைதானத்தில்…
மௌரியப் படைகள் யானை – குதிரை மற்றும் காலாட்படையினர் அழகாக அணிவகுத்து இருந்தனர்.

அசோகரின் படைகளோடு  ஒப்பிட்டால் அது கால்வாசிகூட இருக்காது.
இருந்தாலும் அன்றைய  இந்தியாவின் மிகச் சிறந்த ராணுவம் அது தான்.

புஷ்யமித்திரன் அரசன் பிருகத்ரதனுக்கு தானைத் தலைவர்களை அறிமுகம் செய்து வைத்தான்.

“அரசரே.. ராணுவத்திற்கு ஊக்கமளித்து நீங்கள் பேச வேண்டும்.”

பிருகத்ரதன் வேண்டா வெறுப்பாகப் பேசினான்:

“அசோக சக்கரவர்த்தியின் தர்மம் மற்றும் அமைதி நமது ஆட்சியில் தொடரும். நாட்டின் சில பகுதிகள் நம்மை விட்டுப் பிரிவதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. அது குறித்து நாம் வருத்தப்படப் போவதில்லை. அமைதியே நமது குறிக்கோள். ராணுவத்தில் படை க் குறைப்பு செய்யப்படும். புத்தம் தர்மம் கச்சாமி ”

படை வீரர்கள் அனைவரும் விக்கித்து நின்றனர். புஷ்யமித்திரனின் கோபம் தலைக்கு மேல் ஏறியது. ‘இப்படி ஒரு அரசன் இனி வாழ்வது என்பது ஏன்?”

Image result for pushyamitra shunga

கண்ணிமைப்பதற்குள் உடைவாளை உருவி பிருகத்ரதனின் வயிற்றில் பாய்ச்சினான்.

அது அவன் வயிற்றைத் துளைத்து மறுபுறம் வெளி வந்தது.

பிருகத்ரதன் ரத்த வெள்ளத்தில்… விழுந்தான்… இறந்தான்.

படைகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சரித்திரம் ஒரு கணம் நின்று போனது.

ஒரு மன்னர்  அல்லது முதல்வர் இறந்த பின் அவருக்கு அடுத்த நிலையிலிருக்கும்  தலைவன் மக்களிடம் என்ன சொல்கிறானோ அது சரித்திரத்தில் அவனது நிலையை நிறுத்தும்.

பின்னாளில் – ஜூலியஸ் சீசர் மரணத்திற்குப் பின் தலைவர்கள் உரையாற்றியது ரோமாபுரியின் சரித்திரத்தையே புரட்டிப் போட்டது.

அது போல் புஷ்யமித்திரனின் சரித்திரத் தருணம் இது.
வாளை உயர்த்தினான்.

“படைத்தலைவர்களே! திறமையற்ற- நாட்டைக் காக்கும் திராணியற்ற – ஒரு கோழையின் வாழ்வு இன்றுடன் முடிந்தது. இதை நாம் கொண்டாட வேண்டும். நமது நாட்டிற்கு வீரம் நிறைந்த அரசன்தான் வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சியை நான் உங்களுக்குத் தர உள்ளேன். இன்று முதல் நானே உங்கள் அரசன் “.  என்று பிரகடனம் செய்தான்.

pushyamitra_sunga_king_of_sunga_dynasty_1

படைத் தளபதிகளும் வீரர்களும் ‘மகாராஜா சுங்கன் வாழ்க’ என்று வாழ்த்திக் கூவினர்.

சந்திரகுப்தன் தோற்றுவித்த ‘மௌரியப் பேரரசு’ சரித்திரத்தில் அந்தக்கணத்தில் முடிந்தது.
முடிவில் ஒரு விடியல்.
அம்மாவிற்குப் பிறகு சின்னம்மா என்று சொல்வர்.
அது போல் மௌரியப் பேரரசுக்குப் பிறகு சுங்க ஆட்சி துவங்கியது.
இந்தக் கதை முடிந்தது.

பிறகு நடந்ததைப் பார்ப்போம்:

புஷ்யமித்திரன் அரியணையைக் கைப்பற்றினான்.
முதலில் சட்ட ஒழுங்கு நிலைமையைச் சரி செய்தான்.
புராணங்களில் அஸ்வமேத யாகம் செய்தவர்கள் பலர் உண்டு.
ஆனால் சரித்திரத்தில் அஸ்வமேத யாகம் செய்த முதல் மன்னன் புஷ்யமித்திரன்.

புத்த மத மடங்களுக்கும் பிக்ஷுக்களுக்கும் கொடுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் பண உதவிகள் நிறுத்தப்பட்டன.
இதனால் கோபப்பட்ட புத்த எழுத்தாளர்கள் புஷ்யமித்திரனைப்பற்றி இவ்வாறு எழுதினர்:

“புஷ்யமித்திரன் தக்ஷஷீலாவில் புத்த மடங்களை அழித்தான்.
சாஞ்சி ஸ்தூபியை அழித்தான். (அது பின்னொரு காலத்தில் மீண்டும்
கட்டப்பட்டது) கெளசாம்பியில் புத்த மடங்கள் அழிக்கப்பட்டது.
பாடலிபுத்திரத்திற்கு அருகே அசோகர் கட்டிய குக்கூதரமா என்ற புத்த மடத்தை புஷ்யமித்திரன் அழிக்க முயன்ற போது தெய்வ சக்திகள் அதை அழிக்க விடாது தடுத்துக்  காத்தது.”

ஆனால் மற்றும் சில சரித்திர ஆய்வாளர்கள் – புத்த எழுத்தாளர்கள் கூறியது சரி அல்ல என்றும் புத்தர்களின்  அரசியல் ஈடுபாடு ஒன்றையே புஷ்யமித்திரன் எதிர்த்தான் என்றும் புத்த மதத்திற்கு எந்த இடையூறும் அளிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

புஷ்யமித்திரன் சொன்னதைச் செய்தான்!

தன் மகன் அக்னிமித்திரனைப்  படையுடன் அனுப்பி – பிரிந்து சென்ற விதர்ப நாட்டை வென்றான். இந்த வெற்றியைப்  பின்னாளில் வந்த மகாகவி காளிதாசன் ‘மாளவிகா அக்னிமித்ரம்‘ என்ற புகழ் மிக்க சரித்திர நாடகமாக எழுதினான்.

கிரேக்க யவனர்களுடன் போர் தொடுத்து அவர்களை வென்றான்.

36 வருடங்கள் ஆட்சி செய்து புஷ்யமித்திரன் காலமானான்.
அவனுக்குப் பிறகு அவன் மகன்  அக்னிமித்திரன் அரசனானான்.
அவனுக்குப் பின் ஆண்டவர்கள் :வாசுமித்திரன், பிரஹசஸ்பதி மித்திரா, தேவபுத்தி.

தேவபுத்தியின் மந்திரி வாசுதேவன் தேவபுத்தியைக்  கொன்று தானே மன்னனானான்.

‘சரித்திரம் செய்ததை மீண்டும் செய்யும்’ என்று சொல்வார்கள்.

எப்படி அரசனைக் கொன்று சுங்கர்கள் அரசாட்சியைக் கைப்பற்றினரோ, அதே போல் அவர்கள் வம்சமும்  சரித்திரத்திலிருந்து மறைந்தது.

கன்வா (kanva) ஆட்சி துவங்கியது.

சரித்திரத்தின் ஏடுகள் தொடர்ந்து வேறு என்ன கதைகள் சொல்லப்போகின்றன ?

சற்று ஓய்வெடுத்து விட்டுப் பிறகு பார்ப்போம்!

(சரித்திரம் பேசும்)

தமிழ்த் திரைபடங்கள் 2016 ஓர் அலசல்

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட படங்கள் வந்தும் சொல்லிக் கொள்ளும்படி 25 படங்கள் தான் தேறுகின்றன.

Image result for தமிழ் சினிமா 2016

ரஜினியின் “கபாலி “,  விஜய்யின்  ” தெறி ” , சிவகார்த்திகேயனின் ” ரெமோ” மூன்றும்  கலக்கல் வெற்றி.

பிச்சைக்காரன், இறுதிச்சுற்று , இருமுகன், தர்மதுரை, ரஜினி முருகன், சென்னை 28, தேவி, 24, நல்ல வெற்றி.

Image result for தமிழ் சினிமா 2016

விசாரணை ஆஸ்காருக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

மற்ற சுமார் வெற்றிப்  படங்கள் :

தில்லுக்கு துட்டு, தோழா, அரண்மனை -2 , சேதுபதி, ஆண்டவன் கட்டளை, இது நம்ம ஆளு, மருது, மிருதன், அப்பா, காதலும் கடந்து போகும் , அச்சம் என்பது மடமையடா, இறைவி, குற்றமே தண்டனை, ஜோக்கர்,  மாவீரன் கிட்டு

குவிகத்தின் கணிப்பில் பார்த்திருக்க வேண்டிய படங்கள் :

கபாலி, ரெமோ, பிச்சைக்காரன், இறுதிச்சுற்று, சென்னை 28, விசாரணை, ஜோக்கர், தோழா, தர்மதுரை

மற்றவற்றை  ஃப்ரியா விட்டு விடலாம்.

மருதுப்பட்டியிலே என்னலே நடந்தது? (எஸ் எஸ் )

மருதுப்பட்டியிலே என்னலே நடந்தது ?


கிழக்கே கடல் – மண்ணு, உப்பளம், மீனு, கட்டுமரம், போட், வலி, சர்ச், பெருமாகோயில் – இவைதான் மருதுப்பட்டி. கிழக்குச் சீமையிலே இருக்கிற நூத்துக் கணக்கான கிராமத்தில மருதுப்பட்டியும் ஒண்ணு. ஆனால் ‘ஹிண்டு’வின் முதல் பக்கத்திலும், சன்  தலைப்புச் செய்திகளிலும், சட்டசபையில் ஸ்டாலினின்  பேச்சிலும், வைகோவின் போராட்டத்திலும் முதல்  அமைச்சரின் மறுப்பிலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்  மோதலிலும் மருதுப்பட்டி அடிபட்டது என்றால், அப்படி என்னலே நடந்தது மருதுப்பட்டியிலே?

சுப்பையா பிள்ளை, கூத்தியா ரோஸி வீட்டில டேரா போட்டிருக்கார். இருக்கிறது டவுனில் – இருந்தாலும் சொந்த ஊருக்கு மாசம் ஒருதரம் கட்டாயம் வந்திடுவார். ரெண்டு நாள் தங்குவார்.ரெண்டு நாள் என்ன? ரெண்டு ராத்திரி, ஒரு பகல். பகல்ல வியாபாரம், கொடுக்கல்,வாங்கல், நீளம், நீச்சு, மீனு, உப்பு – வலை, மோட்டார்போட் என்ற பல வியாபாரம். அது கள்ளக் கடத்தல், பிஸ்கட் என்றும் போவதுண்டு.
இந்தத் தடவை ராத்திரி வராம விடியற்காத்தால வந்தார். வந்ததும் படுத்துத் தூங்கிட்டார். பத்துமணி சுமாருக்கு எந்திரிச்சு காபி குடிச்சுட்டு, “ ரோஸி! உடம்பெல்லாம் ஒரே சூடா இருக்கு! எண்ணை தேச்சுக் குளிக்கணும்!” என்றார். ரோஸியும் எண்ணையெடுத்து, மொளகாய் போட்டுக் காய்ச்சி, ஆறவைச்சு எடுத்துட்டு வந்தா. பெரிய துண்டைக் கட்டிக்கிட்டு அவரும் ஸ்டூல்ல உட்காந்ததும், ரோஸி அவருக்கு எண்ணை தேச்சுவிட ஆரம்பித்தாள். குத்தாலத்தில மஸாஜ் பண்றமாதிரி இருக்கும் ரோஸியின் கைவண்ணம். உடம்பின் ஒவ்வொரு நரம்பிலும் அவள் எண்ணை தேய்க்கும்போது அலுப்பெல்லாம் அப்படியே பறந்து போவதுபோல இருந்தது சுப்பையா பிள்ளைக்கு.

அந்த சமயத்தில்தான் ராபர்ட் அங்கு வந்தான். “ ஐயா! குளிக்கப் போறாகல்லே!”

“ இரு ரோஸி! நான்தான் வரச்சொன்னேன்.”

ராபர்ட் அவரது வலது கை, அடியாள் எல்லாம். மருதுப்பட்டி விவகாரம் எல்லாத்தையும் அவன்தான் அவருக்குப் பதிலா கவனிச்சுக்குவான். தான் வராதபோது ரோஸியையும் அவன் கவனிச்சுக்கிறானோன்னு அவருக்கு சந்தேகம் வரும். ஆனா அதை அவர் பெரிசு பண்றதில்லே.

“ என்னலே ராபட்டு! எல்லாம் முடிஞ்சுதா?”

“ ஐயா! நீங்க சொன்னது எனக்கே சரியாப் புரியலை. இருந்தாலும் மக்கள்கிட்ட சொல்லிப் பாத்தேன். எவனும் ஒத்துக்க மாட்டேங்கிறான்.”

“ எலே ராபட்டு! இதுவரைக்கும் நாம கடல்லதான் மீன் பிடிச்சோம். இப்ப அதை வயல்ல பிடிக்கப்போறோம். ‘அக்வா கல்சர்’னு பேரு. அரசாங்கம் நம்ம ஊர் முழுசையும் எறால் வயலா மாத்தப்போகுது. அம்பது கோடி ரூபாய் செலவுல, கட்டுமானம் காண்ட்ராக்ட்  எல்லாம் நமக்குத்தான். இப்ப நம்ம வலையனுக வெயில்ல, மழையில, புயல்ல கடல்ல போய்க் கஷ்டப்படத் தேவையில்லேடா! நிம்மதியா வயல்ல வேலை பாக்கலாம். கைமேல் காசு!”

“ வயல்ல மீனு பிடிக்கப் போறீகளா?” ரோஸி அவருக்கு முழங்காலுக்கு மேலே எண்ணை தேய்த்துக்கொண்டே கேட்டாள். ரோஸிக்கும், சுப்பையா பிள்ளைக்கும் வெக்கமே கிடையாது. ராபட்டுதான் கொஞ்சம் நெளிஞ்சான்.

Image result for aqua culture field and workers

“ ரோஸி! ‘எறால் வயல் திட்டம்’ எப்படி தெரியுமா? ஊரு முழுசும் வயலைப் பாத்தி பாத்தியா வெட்டிக் கடல்லேந்து தண்ணி கொண்டுவந்து மீனை வளர்த்தி – சாதாரண கெண்டை – கெளுத்தி இல்லே. எறால் – செம்மீனு வாங்கி – முட்டை போடவெச்சுப் பெரிசாக்கி – இரை போட்டு வளர்த்து – அப்படியே ஐஸ் பொட்டியிலே வைத்து ஃபாரினுக்கு அனுப்பப் போறாங்க! என்னா துட்டு தெரியுமா? இதை அரசாங்கமே செய்யப் போறதினாலே நமக்கு காண்ட்ராக்டு கிடைக்கும். பைசா செலவில்லாம செம லாபம். மருதுப்பட்டி முழுக்க எறால் வயல்.”

“ அதுலதானுங்க பிரச்சனை வருது!”

“ என்னலே?”

“ ஆமாய்யா! உங்க திட்டப்படி கிராமம் முழுசும் எறால் வயலா மாறணும் அதுக்குக் கடலோரம் இருக்கிற குப்பம் முழுசும் வேணும். அதில இருநூறு, முன்னூறு குடிசைங்க இருக்கு – வலையங்க இருக்காங்க – சர்ச் இருக்குது. யாரும் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க! தகராறு பண்றானுக!

“எந்த நாய்ப் பயடா தகராறு பண்றவன்? பரம்பரை பரம்பரையா மீனு பிடிச்சு இந்தப் பசங்க என்னத்தைக் கண்டானுக? அதே குடிசை. சாராயம் குடிக்கக்கூடக் காசில்லை. எலே ராபட்டு! என்ன பண்ணுவியோ, எப்படிப் பண்ணுவியோ தெரியாது. இன்னும் ரெண்டு நாளில அந்தக் குடிசையெல்லாம் காலி பண்ண வைக்கணும்.”

“ அவ்வளவு சுளுவு இல்லீங்க! குடிசைங்களுக்கு நடுவே நம்மூர் சர்ச் இருக்குது. ஃபாதர் அருமைநாயகமும் இந்த எறால் வயல் திட்டம் ஊரையே கெடுத்திடும்னு சொல்றாரு!”

“எலே ராபட்டு! சாமியாருக்கு என்னடா தெரியும்? ஊருக்கு நல்லது செய்ய நாம வந்திருக்கோம். இந்த வலையனுகளைப்பத்தி நமக்கு நல்லாவே தெரியும். அத்தனை பசங்களும் நம்ம கட்சிக்கு எதிரா போன எலெக்ஷனிலே ஓட்டுப் போட்டவனுக!அதனால் உலகன், சிவக் கொழுந்தைக் கூட்டிக்க! காரியத்தைச் சரியா முடிச்சுடு.”

“ சரிய்யா! இருந்தாலும்…”

“ என்னலே ராபட்டு! இழுக்கறே?”

“ சர்ச்சை மட்டும் விட்டுடலாமா?”

“ எலே ராபட்டு!  சர்ச்சுன்னதும் பாசம் பொங்குதோ? நமக்கெல்லாம் எதுக்குடா சாமி பூதமெல்லாம்?.  சரி! சரி! நீயே கேட்டுப்புட்டே! சர்ச்சை விட்டுடு! நான் நாளை காலையில ஊருக்குப் போயிட்டு அடுத்த நாள் டெல்லிக்குப் போறேன். திரும்பிவர ஒரு வாரமாகும். அதுக்குள்ளே காரியத்தைக் கச்சிதமா முடிச்சிடணும்.”

“ சரிய்யா!” என்று சந்தோஷமாப் போனான் ராபட்டு.

“ பலான ஆளு நீங்க! கொஞ்சம் முன்னாடிதான் உலகன், சிவக்கொழுந்துகிட்டக் குடிசைங்க எல்லாம் அப்படியே இருக்கட்டும். சர்ச் எடம் மட்டும்தான் நமக்கு வேணும்னு சொன்னீக! ”

நெஞ்சில் எண்ணை தேய்த்துக்கொண்டே ரோஸி பிள்ளையிடம் கேட்டாள்.

“ களுதே! அதுதாண்டி ராஜதந்திரம்!”- அவளுக்கு வலிக்கும் அளவுக்குப் பின்னாடி ஒரு அடி கொடுத்தார்.

“ சரி வாங்க! “ என்று அவரைக் கிணத்தடிக்கு அழைச்சுக்கிட்டுப்போய் ஸ்டூலில் உக்காரவெச்சு விளாவி வைச்சிருந்த வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி அவரைக் குளுப்பாட்ட,  பிள்ளை குளியலை அனுபவிக்க ஆரம்பிச்சார்.

பிறகு அவசர அவசரமாக ஜீப்பை எடுத்துக்கொண்டு கிளம்பினார். “ ரோஸி! பக்கத்து ஊரில் ராமலிங்கத் தேவரைப் பாத்துட்டு சாயங்காலம் வந்திடறேன். அங்கே ஒரு ஏக்கர் பூமி விலைக்கு வருதாம். உம் பேரில் வாங்கிடறேன்னு” சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
ராத்திரி வர பதினொரு மணி ஆயிடுச்சு பிள்ளைக்கு. கொஞ்சம் தள்ளாடித்தான் வந்தார். “ தேவர் வீட்டிலேயே சாப்பிட்டுட்டேன் ரோஸி. உம் பேரில் ஒரு ஏக்கரா வாங்கிட்டேன்.”

“ எனக்குத் தெரியும் எப்படியும் வாங்கிடுவீகன்னு” என்று சொல்லி கிளாஸை அவரிடம் நீட்டினாள் ரோஸி.

“ ஆகா! நம்ம சரக்குன்னா நம்ம சரக்குதான்! இதுதான் சுகம்” னு கிளாசைக் காலி செய்து ரோஸியை இழுத்தார்.

அப்போதுதான் புயல் வெடித்தது. தெருவெல்லாம் ‘ஐயோ!ஐயோ!’ என்ற கத்தல். கதவைத் திறந்து பார்த்தால் கடலோரக் குப்பம் எரிந்துகொண்டிருந்தது. திமுதிமுவென்று கூட்டம். பெண்கள், குழந்தைகள் எல்லாம் நசுங்கி மிதிபடும் அவலம்.

திடுதிடுவென்று மூன்றுபேர் ரோஸி வீட்டுக்கு ஓடிவரும் சத்தம் கேட்டது. பிள்ளை ஆடிப்போய் விட்டார். பார்த்தால் உலகன், ராபட்டு, சிவக்கொழுந்து!

“ என்னலே! நான் ஊருக்குப் போனப்புறம்தான் இதெல்லாம் ஆரம்பிக்கணும்னு கிளியரா சொன்னேனில்ல!”

“ ஐயா! சத்தியமா சொல்றோம்! இது நாங்க செஞ்ச வேலை இல்ல. எங்களுக்குத் தெரியாதா?   நீங்க மெட்ராஸ் போனப்புறம் ஆரம்பிக்கணும்னு இருந்தோம். இது ஏதோ ஆக்சிடண்டுன்னு நினைக்கிறோம்.”

“ எலே! எவண்டா இதை நம்புவான்?”

“ ஐயா! அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப வலையனுக எல்லாம் இது உங்க வேலைன்னு ஆத்திரமா இருக்கானுக! எங்களைத் தொரத்திக்கிட்டு வருவானுக! வாங்க! நாம ஊரைவிட்டு ஜீப்பில போயிடலாம்.! நிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு ஆபத்து!”
சுப்பையா பிள்ளை அவசர அவசரமாக ஜீப்பை ஸ்டார்ட் செய்தார். “ ரோஸி, உலகா, சிவா, ராபட்டு ஏறிக்கங்க! சீக்கிரம்..ம்..”
வலையர்கள் கையில் தடி, கம்பு, கட்டைகளோடு வருவது இருட்டிலும் தெரிந்தது. பிள்ளையின் துரதிர்ஷ்டம். ஸ்டார்ட் ஆன ஜீப் மக்கர் செய்து நின்றுவிட்டது.

“ எலே இறங்கித் தள்ளுங்கடா! பிள்ளை அலறினார். நாலு பேரும் இறங்கி, ஜீப்பைத் தள்ள ஆரம்பிப்பதற்குள் வலையர்கள் கூட்டம் அவர்கள் நால்வரையும் பிடித்துக்கொண்டது. ஜீப்பின் கண்ணாடியைக் கட்டையால் அடிக்க வந்தான் ஒருத்தன். ‘சட்’டென்று ஜீப் ‘ஸ்டார்ட்’ ஆக அவன் எகிறி விழுந்தான். பிள்ளை ஜீப்பை வேகமாக ஒட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

“ பிடிடா! அவனைக் கொல்லுங்கடா! என்று கத்திக்கொண்டே ஜீப் பின்னால் ஓடினர் சிலர். “ அவனோட ஆளுங்கடா! இவனுகதான் நம்ம தலையில் நெருப்பு வைச்சது! கையில் என்னென்ன ஆயுதம் இருந்ததோ அவற்றால் அந்த மூவரையும் தாக்கினார்கள்.

“ அவனோட கூத்தியாடா! வெட்றா அவளை!”என்று ஒருத்தன் கத்த, இன்னொருத்தன் அதை செயலாற்ற ரோஸி ரெண்டு துண்டாகக் கிடந்தாள். அவள்பேரில் வாங்கிய பத்திரம் கையில் பத்திரமா இருக்க, அந்தக் கைமட்டும் நிலத்தில் தனியாகக் கிடந்தது.
ரோஸியின் வீடும் கொளுத்தப்பட்டது.

Image result for burnt church in india“ நம்ம சர்ச்சை இடிச்சுட்டானுகடா! வாங்க நாம கோயிலைக் கொளுத்துவோம்! பழிக்குப் பழி!” கத்திக்கொண்டே பெருமாள் கோயிலுக்குக் கும்பல் ஓடியது. பூட்டியிருந்த கதவை உடைத்தார்கள்.
அதற்குள் பிள்ளை மூலம் தகவல் அறிந்த போலீஸ் டவுனிலிருந்து பறந்து வந்தது. தடியடி – துப்பாக்கிச் சூடு – அதில் 44 மீனவர்கள் இறந்தனர்.
அடிதடியிலிருந்து தப்பித்த ராபர்ட் தன் கண் முன்னாலேயே தனக்கு ஞானஸ்நானம் கொடுத்த சர்ச் இடிபட்டுக் கிடப்பதைக்கண்டு அவன் வருத்தப்படும் நேரத்தில், போலீசாரின் துப்பாக்கிக் குண்டு அவன் நெற்றியைப் பதம் பார்த்தது.

ரேடியோ நியூஸ், டி.வி., சட்டசபை, நாடாளுமன்றம் எல்லாவற்றிலும் மருதுப்பட்டியின் பெயர் அடிபட்டது. இறந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா ஒரு லட்சம்  என்று அறிவிக்கப்பட்டது. ஹைகோர்ட் ஜட்ஜ் தலைமையில் நீதி விசாரணை செய்ய உத்தரவு பிறந்தது.
அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின்படி அரசுத் துறையில் ‘அக்வா கல்சர்’ தேவையில்லை என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘மருதுப்பட்டி எறால் வயல் திட்டம்’ மூடப்பட்டது. தேவையானால் தனியார் துறை நடத்தலாம். அதற்கான  வசதி செய்து தரப்படும் என்று அரசின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இவ்வளவு தகராறு உள்ள இடத்தில் எதற்கு ‘அக்வா கல்சர்’ என்று எல்லோரும் ஒதுங்கிக் கொண்டனர்.

நீதி விசாரணை முடிவு, வழக்கம்போல ஒரு வருஷம் கழித்து வந்தது. அதன் தீர்ப்பு என்ன என்பதே யாருக்கும் புரியாமல் இருந்தது.
நடுவில் சுப்பையா பிள்ளை எப்படியோ மந்திரி ஆகிவிட்டார். அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் மனிதருக்குச் சேர்ந்தே வரும் போலிருக்கு. மந்திரி பதவி ஏற்று மூன்றாவது மாதத்தில் ‘எய்ட்ஸ்’ வந்து செத்துப்போனார். எய்ட்ஸால் இறந்த முதல் – மந்திரி அவர். ரோஸி கொடுத்த பரிசு அது.

கிழக்கே கடல் – மண்ணு – உப்பளம் – மீனு – கட்டுமரம் – வலை – புது சர்ச் – குடிசை – இடிபட்ட பெருமாள் கோயில் – இதுதான் இன்னிக்கு மருதுப்பட்டி!

நாவலோ நாவல் !

அந்தக் காலத்தில் நாவலோ நாவல் என்று கூறினால் ‘நான் விவாதத்திற்குத் தயார்,  என்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க யார் உள்ளார்’ என்று அறை கூவுவதற்குச் சமம்.

இன்றைக்கு  நாவல் என்ற ஆங்கிலச்  சொல் சரளமாக அனைவராலும் தமிழ்ச் சொல்லைப்போல் சொல்லப்படுகிறது. சரித்திர நாவல், துப்பறியும் நாவல், சமூக நாவல்  என்று தமிழறிஞர்களாலும் சொல்லப்படுகிறது. அதற்குச் சமமான புதினம் என்று இருந்தாலும் நாவல் என்ற சொல்லைச் சொல்லுவதில்தான் நமக்கு மகிழ்ச்சி.

தமிழில் சில ஆண்டுகள் வரை சிலரால் மட்டுமே நாவல் எழுத முடியும் என்றிருந்த நிலமை மாறி யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று வந்திருப்பது  தமிழ் எழுத்துலகுக்கு நல்ல காலம் என்று தான் சொல்லவேண்டும்.

Image result for எழுதும் கலை ஜெயமோகன்

நாவலை எப்படி எழுதுவது, எப்படியெல்லாம் எழுதக்கூடாது என்றெல்லாம் ஜெயமோகன் அவர்கள் தமது “எழுதும் கலை” என்ற புத்தகத்தில் வெகு அழகாகச் சொல்லுகிறார். நாவல் என்பது ‘ தொகுத்துக் காட்டி ஒட்டு மொத்தப் பார்வையை அளித்தல் ‘ என்று பொருள் விளக்கம் கொடுக்கிறார்.

இது தான் நாவலின் வடிவம் என்று சொல்லும்போதே அவ்வடிவத்தை உடைத்தபடி அடுத்த நாவல் வந்துவிடுகிறது என்று சொல்லுகிறார்.

Image result for புதினம்

அதற்கு அவர் கூறிய உதாரணங்களை மட்டும் இப்போது பார்ப்போம். மற்றவற்றைப் பின்னால் பார்ப்போம் .

 

வாழ்க்கை வரலாற்று வடிவம்    – பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை

கடித வடிவ நாவல் – கோகிலாம்பாள் கடிதங்கள் – மறைமலை அடிகள்

மனைவி கணவனிடம் கதையளக்கும் நாவல் – தலையணை மந்திரோபதேசம் – பண்டித நடேச சாஸ்திரி

டைரிக்குறிப்புகள் – நவீனன் டைரி – நகுலன்

பலவகைக்  குறிப்புகள் – ஜேஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

கேள்விபதில் வடிவம்  – வாக்கு மூலம் – நகுலன்

ஒரு மனிதனின் மொத்த வாழ்வைக் கூறுதல் – பொய்த்தேவு – க நா சுப்பிரமணியம்

ஒரே ஒரு நாளைப்பற்றிக் கூறும் நாவல்  – ஒரு நாள் –  க நா சுப்பிரமணியம்

ஒரு மனிதனின் நனவோடையாக  நீளும் நாவல் – அபிதா – லா ச ராமாமிர்தம்

யதார்த்தவாத நாவல் –  அன்னை – கார்க்கி

கதைபின்னல்  நாவல் – மோகமுள் -தி ஜானகிராமன்

நேர்ப்பேச்சு  வடிவம் – கோபால கிராமம் – கி ராஜநாராயணன்

உருவக நாவல் –   தண்ணீர் – அசோகமித்திரன்

புயலும் கடந்து போகும் – டி ஜகநாதன்

ஆனந்த் குடியிருப்புப் புத்தாண்டுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற  கவிதை!

புயலே .. அற்பப் பயலே ..
உனக்கென்ன போதை தலைக்கேறியதோ ..
அதனால் பாதை தான் மாறியதோ ..
நீ மரங்களைச் சாய்த்தாய் .. மனங்களை அல்ல..
நீ கம்பங்களைச்சாய்த்தாய் .. மன உறுதியை அல்ல ..

ஒரு வகையில் உனக்கு நன்றி .. ஆம் ..
ஒரு வகையில் உனக்கு நன்றி ..
நான்கு சுவருக்குள் ஒளிந்தவர்க்கு .. வானைக் காட்டினாய்..
நான் எனது என்று வாழ்ந்தவர்க்கு .. சமத்துவம் காட்டினாய் ..

சுனாமியைக் கடந்தவர்கள் நாங்கள் ..
சுனாமியின் பினாமியே .. உன்னையா கடக்க முடியாது?

நீ.. எம்மைப் புரட்டிப் போட்டாலும் சரி ..
இல்லை எம்மை மிரட்டிப் பார்த்தாலும் சரி ..
அந்த.. ‘நாடா’வானாலும் சரி …
வந்த .. ‘வார்தா’ வானாலும் சரி…

மனிதன் உள்ளவரை .. அவனுள் ..
மனிதம் உள்ளவரை ..
எந்தப் புயலும் கடந்து போகும் ..
இந்தப் புவியும் எழுந்து ஓடும்..
மீண்டும்… மீண்டும் ..

மனதைத் தொடும் கதை (நன்றி : வாட்ஸ் அப்)

கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தின் மொழிபெயர்ப்பு

Image result for sketches of artist maniam selvan old lady

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டுக் காகிதம் எழுதித் தொங்க விடப்பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய்ப்  படித்தேன்.
அதில் ” என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்குக் கண் பார்வை அவ்வளவு சரியில்லை” என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.

எனக்கும் பொழுது போகவில்லை. அந்தக் குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். “இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்தக் கண் தெரியாத அம்மா இருக்கு”

அங்கே ஓர் சிறிய கீத்துக்கொட்டகை. ஒரு நாள் மழைக்குக்கூடத் தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடிச் சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர்  வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது  என்று சொல்லி குடுத்துட்டுப்போறாங்க.. அந்தக் கடிதம் நான் எழுதவில்லை.எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லிக் கொடுத்துத் திரும்பினேன்.  தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தை  மறக்காமல் கிழித்துப் போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.

என் மனதில் விதவிதமான எண்ணங்கள். யார் அந்தக் கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடிதத்தைக்  கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறிக் கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படிச் செய்யவில்லை.  யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்குக் கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லிக் கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கு ஆயிரம் வழி.

மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். ” அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து  50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?

மனித நேயம் சாகவில்லை.

இலக்கிய சிந்தனை 561+ குவிகம் இலக்கியவாசல் 21

 

டிசம்பர் 17 . ஒரு முக்கியமான நன்னாள்.

நாற்பது வருடங்களுக்கு மேலாக இலக்கியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இலக்கிய சிந்தனையின் நிறுவனாரான பெருமதிப்புற்குரிய லக்ஷ்மணன் ஐயா அவர்களின் கட்டளைப்படி இலக்கிய சிந்தனை நிகழ்வும் குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வும் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே நிகழ்வாக நடைபெற்றன .

இனியும்  இப்படியே தொடர்ந்து நடக்கட்டும் என்ற அவரது ஆணையை ஏற்றுக்கொண்டு செயல்படத் துவங்கியுள்ளோம்!

அதன்படி, குவிகம் இலக்கிய வாசலின் டிசம்பர்  2016  நிகழ்வு இலக்கிய சிந்தனையின் 561 வது மாதாந்திரக் கூட்டத்துடன் ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் 17-12-2016 அன்று நிகழ்வுற்றது.

இலக்கியசிந்தனையின் சார்பில் திரு லக்ஷ்மணனின்  உரையுடன் தொடங்கி திரு தேவக்கோட்டை வ. மூர்த்தி அவர்கள்  “உயிர்த்தேனும் மரப்பசுவும்” என்ற தலைப்பில் தி ஜ வின்     இரு நாவல்களைப் பற்றி பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார். அதன் காணொலித் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.        ( நன்றி: விஜயன்)

தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் டிசம்பர்  2016 நிகழ்வாக இலக்கிய வாசல் சுந்தரராஜனின் அறிமுக உரையைத் தொடர்ந்து “நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்”  என்னும் தலைப்பில் கவிஞரும், ஓவியரும், விமர்சகரும் ஆன திரு இந்திரன் தனது சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதன் நேரடித் தொகுப்பு இதோ !

ஒரே நிகழ்வில் இரு மனம்கவர் உரைகளுடன் கூடிய நிகழ்ச்சி    கிருபாநந்தனின் நன்றியுரையுடன்  நிறைவுற்றது.

பொங்கட்டும் பொங்கல் —- — கோவை சங்கர்

img_8094 img_8093
பூமியெலாம் பொன்விளைய
ஆசிகூறும் பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கட்டும் பொங்கல்

வீடுவாழ நாடுவாழ
சுற்றத்தார் சுகித்துவாழ
மகிழ்ச்சிவெள்ளம் பொங்கிடவே
பொங்கட்டும் பொங்கல்!

 

நிஜ மாயை

நிஜ மாயை – ( Augmented Reality) –

(குவிகத்தில நாம வைச்ச பேர் தான் !)

Screenshot of Alibaba video on the Buy+ virtual shopping experienceScreenshot of Alibaba video on the Buy+ virtual shopping experience

(Image copyright ALIBABA) 

சீனாவில் பிரபலமான அலிபாபா நிறுவனம் ஒரு   மாயக் கண்ணாடியைக் கொண்டு வந்திருக்கிறது. இதைப்  போட்டுக்கொண்டு பார்த்தால் மால்களில் – கடையில் இருக்கும் பொருட்கள் அப்படியே தத்ரூபமாக நம்  கண்களில் தெரியும் – விலை மற்றும் அவற்றின் குறிப்புகள் உட்பட.

அப்படியே உங்கள் கண்ணை அசைத்து எது வேண்டுமோ அதை ஆர்டர் செய்யலாம்.

இந்த மாயக் கண்ணாடியை விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒரு அட்டையை உங்கள் கைபேசியில் இணைத்துக் கொண்டால் அதன்  மூலம் பொருட்களைக்  கடையிலிருந்து நேரடியாக வாங்கலாம்.

நம்ம ப்ளிப்  கார்ட், அமேசான் போன்றவைகளை  இது ஓரம் கட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போகிமேன் விளையாட்டும் இந்த நிஜமாயையை  வைத்து உருவாக்கப்பட்டதுதான்.

சபாஷ் சரியான போட்டி !

ஐயப்பன் திருப்புகழ் – சு.ரவி

Image result for ayyappan and murugan
இரவுபகல் பகலிரவு
ஐயப்பன் திருப்புகழ்
தனனதன  தனனதன தனதான  தானதன
தனனதன  தனனதன தனதான  தானதன
தனனதன  தனனதன தனதான  தானதன.            தனதான
  இரவுபகல்  பகலிரவு எனமாறி மாறிஇரு
பொழுதுசுழ லமிழுவதை உணராது போகநிலை
புலனவிழ உடலமிக வயதாகி ரோகமுற             உழல்வேனை
  இருளனைய மறலியென துயிர்சோர மேவுகையில்
அபயமென மரணபய மணுகாம லேநினது
சரணமலர் நிழலருள புலிவாஹ னாவருகை        தரவேணும்!
  அரவு,மதி, பெருகுநதி முடிசூடி ஆடுமிறை
அமுதநதி அனையஎழில் உருவான மோஹினியை
அணையசுரர் உளமகிழ அவதார மானதிரு         மணிமார்பா!
 அரசரொடு பொருதவர்தம் குலகால னாகி,அரி
சிலைவளைய கருவமழி படவாடி நாணிவரு
பரசுமுனி அருளும்வளர் மலையாள தேசமதில்    உறைவோனே!
விரதநெறி பரவியிரு வினைதீர நாடியுனை
அணுகுமுன தடியவரின் இடர்தீர மாமலையில்
கருணைபொழி முகிலெனநி லாவுமழ கா,இளைய      சிவபாலா!
 விழியசைவில் நில(வு)இரவி புவிகோள்கள் மீன்களிவை
உலவிவர, ஒளியுமிழ, விதிவேத மாக, மலர்
நறையவிழ, நதிபெருக, நவகோடி நாதமெழ         அருள்வோனே!
அரசு,மரு தகில்,கதலி  கமுகால் பலாவளர
அரவமொடு புலிகரடி மதயானை தாமுலவும்
அடவிபடர் பெருவழியின் நுழைவாயி லானதலம்;    ஜதிகூறும்
 அதிருமிடி எனமுழவின் ஒலிசேர, வாவரடி
தொழுதடியர் நடனமுடன் வரவேகி ராதனென
எழில்மலியு மினியபுரி எருமேலி மேவிவளர்         பெருமாளே!

 

சிற்றிதழ்கள் உலகம்

உலக அளவிலான சிற்றிதழ்கள், கட்டுரைகள், ஆய்வுகள், பதிவதற்கான தளம் – ” சிற்றிதழ்கள் உலகம்” என்ற மின்னிதழ்.

கிருஷ்.ராமதாஸ் அவர்களின் முயற்சியால் இந்தப் பொங்கல் சமயத்தில் வெளிவந்திருக்கிறது! 

சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ், துபாய் அருகில் உள்ள அல் அய்ன் நகரில் தஞ்சை திரு.வரதராசன் அவர்களால்  13.01.2017 அன்று வெளியிடப்பட்டது . முதல் பிரதியை  திரு.கருணாகரன் அவர்கள் பெற்றுக்கொள்ள  நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Image may contain: 10 people, text

சென்னை புத்தகக்  கண்காட்சியிலும் இது வெளியிடப்பட்டது.

Image may contain: 5 people, people standing

வாழ்க! வளர்க! இவர்தம் தொண்டு !!

ராவேசு கவிதைகள்

ஆதவன் துயில் கொண்டான்

Image result for sun set

இனிய மாலையில் ஆதவன்
தன் கிரணங்களை மறைத்து
துயில் கொண்டான்
காரிருள் சூழ்ந்தது கண்டாய்
காலை விடியும் வரை
அவன்வரவை கண்மூடி
காத்திருப்போம்
கலங்காதிரு மனமே.

படும்துளி எழில்தரும்
மலர்தனில் தேன்வரும்
வண்டினம் அலைமோதும்
கதிரவன் கீழ்வானில்
காலை விழித்தெழும் .

உதித்தனன் கதிரவன்
செம்பிழம்பாய் கொதித்தனன்
தகித்தனன் வையம்காக்க
முரசுகொட்டி தட்டி எழுப்பினன்
தன்பணி செவ்வனே செய்தனன்
பூஉலகு விழித்தது கண்டு மகிழ்ந்தனன்
தன்பணி தொடர்ந்தனன்
காலை கதிரவன் நமக்கு மேலே
ஆம் நமக்கு மேலேதான்

 

ஏமாற்றம் தரும் வேளை

Image result for disappointment

ஏமாற்றம் தரும் வேளை
அன்பும் போலி
வாழ்வும் போலி
நினைவும் போலி
புன்னகையும் போலி
அதனால்
நியாயம் எங்கே
நேர்மை எங்கே
நிஜங்கள் எங்கே
வலை வீசி தேடினும்
புலப்படாது இங்கே .

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2017

ஜனவரி 6 முதல் 19 வரை சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு எதிரில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் பபாசி வழங்கும் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது.  நிறைய மக்கள் நிறைய புத்தகங்கள்   வாங்குகிறார்கள்.

இது கண்காட்சி அல்ல, கண் கொள்ளாக் காட்சி !

இந்தக் கண் கொள்ளாக் காட்சியைப்  பற்றி விவரமாக அடுத்த மாதம் பார்க்கலாம் !

இப்போதைக்குச்  சில புகைப்படங்களை மட்டும் பார்ப்போம்.

No automatic alt text available.

Image may contain: car, sky and outdoor

தமிழ் விதி – இலக்கணம்

Image result for tamil language history and culture

தமிழில் அனைவருக்கும் தகராறு  க் , ச் ,  ட் , த், ப்  போன்ற மெய் எழுத்துக்களை இரு வார்த்தைகளுக்கு நடுவே எப்பொழுது சேர்க்க  வேண்டும் , எப்போது  சேர்க்கக் கூடாது என்பது தான்.

( தகராறுக்கு  முதலில் எந்த ‘ர’ போடவேண்டும் என்று கேட்டதற்கு தகராறு எப்பவும் சிறியதா  ஆரம்பிச்சு  பிறகுதான் பெரியதா முடியும். அதனால்  முதலில் சின்ன ‘ர’ போடுங்க , அப்பறம் பெரிய ‘ற ‘ போடுங்க! என்றாராம்)

Image result for tamil language history in tamil

இந்த வல்லின மெய்யெழுத்துக்களைச்   சேர்ப்பதை  வல்லினம் மிகும் இடங்கள் என்றும், சேர்க்கக் கூடாத இடங்களை  வல்லினம் மிகா இடங்கள் என்றும் சொல்லுகிறோம்.

சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காமல்,  சேர்க்கக் கூடாத இடத்தில் சேர்த்தால் அர்த்தமே மாறுபடுவதுடன் ஓசை நயமும் கெட்டுவிடும்.

ஆகவே, வல்லினம் மிகும் இடங்களையும் மிகா இடங்களையும் தெளிவாக அறிதல் வேண்டும்.

கீழே கண்ட விதிகளையும் உதாரணங்களையும் படித்தால் இந்தத் தகராறு நமக்கு வராது.

வல்லினம் மிகும் இடங்கள்

1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளை அடுத்தும், எ என்னும் வினாவை அடுத்தும் வரும் வல்லினங்களாகிய க், ச், த், ப் மிகும்.

அ + பையன் = அப்பையன்
இ + செடி = இச்செடி
எ + பணி = எப்பணி

2. அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி,எப்படி என்னும் சுட்டு வினாச் சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.

அந்த + கோவில் = அந்தக்கோவில்
அங்கு + சென்றான் = அங்குச்சென்றான்
எங்கு + போனான் = எங்குப்போனான்

3. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

நூலை + படி = நூலைப்படி
பாலை + குடி = பாலைக்குடி

4. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்

அவனுக்கு + கொடுத்தான் = அவனுக்குக்கொடுத்தான்
பணிக்கு + சென்றான் = பணிக்குச்சென்றான்
இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.
தண்ணீர் + குடம் = தண்ணீர்க்குடம்
மரம் + பெட்டி = மரப்பெட்டி
பூட்டு + சாவி = பூட்டுச்சாவி
விழி + புனல் = விழிப்புனல்.

6. பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

பச்சை + பட்டு = பச்சைப்பட்டு
பச்சை + கிளி = பச்சைக்கிளி

7. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ.

8. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.

மலர் + கண் = மலர்க்கண்
தாமரை + கை = தாமரைக்கை.

9. ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும்.

தீ + சுடர் = தீச்சுடர்
பூ + கூடை = பூக்கூடை.

10. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

அழியா + புகழ் = அழியாப்புகழ்
ஓடா + குதிரை = ஓடாக்குதிரை.

11. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.

பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
எட்டு + தொகை = எட்டுத்தொகை.

12. ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.

ஆடு + பட்டி = ஆட்டுப்பட்டி
நாடு + பற்று = நாட்டுப்பற்று.

13. முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்

பொது + தேர்வு = பொதுத்தேர்வு
திரு + குறள் = திருக்குறள்.

14. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்

சால + பேசினான் = சாலப்பேசினான்
தவ + சிறிது = தவச்சிறிது.

15. ஆய், என, இனி, ஆக முதலிய இடைச்சொற்களின் பின் வல்லினம் மிகும்

என + கூறினான் = எனக்கூறினான்
இனி + காண்போம் = இனிக்காண்போம்.

வல்லினம் மிகா இடங்கள்.

1. அது, இது, அவை, எவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும், எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

அது + பறந்தது = அது பறந்தது.
அவை + பறந்தன = அவை பறந்தன.
எது + தங்கம் = எது தங்கம்
எவை + சென்றன = எவை சென்றன.

2. ஆ, ஏ, ஓ என்னும் வினா எழுத்துக்களின் பின் வல்லினம் மிகாது
அவனா + சென்றான் = அவனா சென்றான்
அவனோ + பேசினான் = அவனோ பேசினான்
அவனே + சிரித்தான் = அவனே சிரித்தான்.

3. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது,

மலர் + பூத்தது = மலர் பூத்தது
வண்டு + பறந்தது = வண்டு பறந்தது.

4. அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

அத்தனை + படங்கள் = அத்தனை படங்கள்
இத்தனை + பறவைகள் = இத்தனை பறவைகள்.
எத்தனை + காக்கைகள் = எத்தனை காக்கைகள்.

5. வினைத்தொகையில். வல்லினம் மிகாது.

ஊறு + காய் = ஊறுகாய்
சூடு + சோறு = சுடுசோறு.

6. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.

கபிலபரணர்
இரவுபகல்.

7. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.

தமிழ் + கற்றார் = தமிழ் கற்றார்
கடல் + கடந்தார் = கடல் கடந்தார்.

8. மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் வல்லினம் மிகாது.

பூவொடு + சேர்ந்த = பூவொடுசேர்ந்த
கபிலரோடு + பரணர் = கபிலரோடுபரணர்.

9. எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

ஒன்று + கொடு = ஒன்றுகொடு
இரண்டு + பேர் = இரண்டுபேர்.

10. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது.

வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
வாழிய + பல்லாண்டு = வாழிய பல்லாண்டு.

11. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.

சல + சல = சலசல
பாம்பு + பாம்பு = பாம்புபாம்பு.

12. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.

கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
சிறிய + பெண் = சிறிய பெண்.

தமிழ் கண்ட இலக்கண விதிகளைக் கொண்டு சந்திப் பிழைகளை நாவி மென்பொருள் திருத்துகிறது.

விதிகள் மிகுமா? உதாரணம்
நிலை மொழியின் ஈற்றில் உயிரும் வரும் மொழியில் கசதப வந்தால் ஆம்  வினாத்தாள்
ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும். ஆம் பூப் பறித்தான், கைக் குழந்தை
அகர, இகர ஈற்று வினையெச்சம் முன் ஆம் வரச் சொன்னான், ஓடிப் போனான்
நிலைமொழியில் உயர்திணை இல்லை திரு கண்ணன், சிவ பெருமான்
இருபெயரொட்டுப் பண்புத் தொகை ஆம் தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம், முருகக்கடவுள்
பண்புத் தொகை ஆம் வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்
வினைத் தொகை இல்லை காய்கதிர்,பழமுதிர்சோலை
உம்மைத் தொகை இல்லை கபில பரணர்
உவமைத் தொகை ஆம் முத்துப்பல், கமலச் செங்கண்
உவமை விரி இல்லை முத்து போன்ற பல்,முத்தைப் போன்ற பல்
உருபும், பயனும் உடன் தொக்க தொகை ஆம் தமிழ்ப் பேச்சு
ஊர்ப் பெயர்களின் அடுத்து ஆம் திருவாரூர்த் தமிழ்ச்சங்கம்
எழுவாய் தொடர் இல்லை சாத்தன் வந்தான்
அடுக்குத் தொடர் இல்லை பாம்பு பாம்பு
விளித் தொடர் இல்லை சாத்தவா
தொரிநிலை வினைமுற்றுத் தொடர் இல்லை வந்தான் சாத்தன்
குறிப்பு வினைமுற்றுத்தொடர் இல்லை பொன்னனிவன்
பெயரெச்சம் இல்லை வந்த பையன், பறந்த புறா
எதிர்மறைப் பெயரெச்சத்தில் இல்லை வாடாத பூ, ஓடாத குதிரை
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆம் அறியாப் பிள்ளை, தீராத் துன்பம், ஓடாக் குதிரை, பாடாத் தேனீ
நெடிற்றொடர்,ஆய்தத்தொடர்,உயிர்த்தொடர்,இடை/மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சம் இல்லை வந்து போனான்
வன்றொடர்க் குற்றியலுகர வினையெச்சம் ஆம் போட்டுக் கொடுத்தார்
இடைச்சொற்றொடர் இல்லை மற்றொன்று
உரிச்சொற்றொடர் இல்லை நனிபேதை
இரட்டைக் கிளவி இல்லை தடதட
எட்டாம் வேற்றுமை இல்லை தலைவா கொடும், நாடே தாழாதே
ஏழாம் வேற்றுமை விரி இல்லை தரையில் படுத்தான்
ஏழாம் வேற்றுமைத் தொகை இல்லை தரை படுத்தான்
7 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் நீர்ப்பாம்பு
ஆறாம் வேற்றுமை விரி இல்லை கண்ணனது கை
ஆறாம் வேற்றுமைத் தொகை ஆம் புலமைச் சிறப்பு, கிளிக்கூண்டு,வாழைத்தண்டு,தேர்ச்சக்கரம்,காளி கோயில்
6 உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஐந்தாம் வேற்றுமை விரி இல்லை மதுரையின் வடக்கே
ஐந்தாம் வேற்றுமைத் தொகை இல்லை தமிழ் பேசு, ஊர் நீங்கினான்
5 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் வாய்ப்பாட்டு, கனிச்சாறு
நான்காம் வேற்றுமை விரியின் பின் ஆம் கடைக்குப் போனான்,தந்தைக்குக் கடமை
நான்காம் வேற்றுமைத் தொகை ஆம் வேலிக் கம்பி,பொன்னி கணவன்
4 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் குழந்தைப் பால், கூலிப்படை, தக்கோர் சால்பு
மூன்றாம் வேற்றுமை விரியின் பின் இல்லை தந்தையோடு சென்றான்
மூன்றாம் வேற்றுமைத் தொகை இல்லை கை தட்டினான்
3 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் வெள்ளித் தட்டு
இரண்டாம் வேற்றுமை விரியின் பின் ஆம் பூனையைப் பார்த்தான்
இரண்டாம் வேற்றுமைத் தொகை இல்லை நீர் குடித்தான்
2 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் நீர்க்குடம்
முதலாம் வேற்றுமை என்னும் எழுவாய் வேற்றுமை இல்லை கூனி கொடுத்தாள், வள்ளி சென்றாள், தாய் காப்பாற்றுவாள்
வன்தொடர்க் குற்றுகரம் ஆம் ட்டு,ற்று…
திரு, நடு, முழு, பொது ஆம் திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி
நிலை மொழியில் மகரம் கெட்டால் ஆம் இணையத் தமிழ், அந்நியச் செலாவணி, படத் தொகுப்பு.

ஆதாரம்:
தொல்காப்பிய/நன்னூல் இலக்கண விதிகள்
கவிக்கோ.ஞானச்செல்வன் அவர்களின் பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! என்ற தொகுப்பு
தமிழ் இணைய பல்கலைக் கழக இலக்கணப் பாடங்கள்

http://tech.neechalkaran.com/p/tamil-grammar.html

http://dev.neechalkaran.com/p/naavi.html#.V0Hi15H5ihd

தலையங்கம்

 

Image result for அம்மா சின்னம்மா

தமிழகத்தில் அம்மா போய் சின்னம்மா வந்தாகிவிட்டது.

முகமாற்றம் மட்டுமல்ல !

அ தி மு க வின் தலைமைப் பதவி சின்னம்மாவிற்குத் தங்கத் தாம்பாளத்தில் தந்தாகிவிட்டது.

ஓ பன்னீர்செல்வத்தை எப்போது எப்படி போகச் சொல்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிச்சன் கேபினெட்டை மக்கள் கேபினெட்டாக மாற்ற நினைக்கிறார்கள்.

பின்னணி பாடியவர்  திரைக்கு முன்னால்  வர விரும்புவது புரிகிறது.

அது வரும்வரைக்கும் தமிழகத்தின் சாதாரணக் குடிமகனுக்கு இது ஏட்டுச்  சுரைக்காய்தான்,  அகடமிக் இன்டிரஸ்ட் தான்.

எப்போது சின்னம்மா அரசுக் கட்டிலில் அமர்கிறார்களோ அப்போதிலிருந்து அவரது  ஒவ்வொரு நடவடிக்கையும் தராசுத் தட்டில் வைக்கப்படும்.

அவரது நேற்றைய மற்றும் இன்றைய செயல்பாடுகளை முழுச் சுதந்திரத்தோடு விமரிசிப்பது மட்டுமல்லாமல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமரிசிக்க நேரக்கூடும்.

எதிர்க்கட்சிகளும் வரிந்து கொண்டு களத்தில் இறங்கும்.

தமிழகத்தில் அப்போது உண்மையான ஜல்லிக்கட்டு நடைபெறும்.

அப்போது சொல்லுவோமா ‘பலே  வெள்ளையம்மா !’

1எடிட்