தலையங்கம் – கலைஞர்

Image may contain: one or more people

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழக அரசியல் வானில் மறக்கமுடியாத நட்சத்திரத் தலைவர்கள் ராஜாஜி, காமராஜ், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா.

இவர்களைப்போல மக்கள் மனதில் இடம் பிடித்த தலைவர்கள் இனி தோன்றுவார்களா என்பது  ஒரு முக்கியமான  கேள்விக்குறி !

அவர்களில், இந்த மாதம் 7ஆம்  தேதி நம்மை விட்டு மறைந்து சென்ற  கலைஞர் மிகவும் வித்தியாசமானவர்.

சாமான்யர்

நாத்திகர்

தமிழ் வித்தகர் 

கவிஞர்

கலைஞர்

கதாசிரியர்

ராஜதந்திரி 

இவர் அரசை இந்திராகாந்தி அரசு பதவி நீக்கம் செய்தது.

அதே இந்திராகாந்தி துணைகொண்டு எம் ஜி ஆர் அரசை இவர் பதவி நீக்கம் செய்தார்.

எம் ஜி ராமச்சந்திரனால் 13 வருடம் வனவாசம் சென்றார்.

எம் ஜி ஆர்   மறைவுக்குப் பிறகுதான் இவரால் கோட்டையைப் பிடிக்க முடிந்தது.

நாட்டு மக்களை  உடன் பிறப்பாகக் கருதினார் – நாட்டுக்குத் தலைவரானார்

தன் மக்களுக்கே  நாடு என்று கருதினார் – பாசத்தந்தையானார்

தன் துணையின்றி காங்கிரஸ் இந்தியாவை ஆளமுடியாது என்ற நிலைக்கு தி மு காவைக் கொண்டுவந்தார்

அந்த எதேச்சாதிகாரத்தில் பல ஊழல்கள்  பிறக்க வழி வந்தன.

ஆனாலும் இவரை ஊழல் வழக்கில் கைது செய்யமுடியவில்லை

மாறாக இவர் ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறை செல்லவைத்தார்

இவருக்குத் தோல்வியும்  வெற்றியும்  மாறிமாறி வந்தன .

ஆனாலும் தோல்வியில் துவளாதவர்.

எழுதிக்கொண்டே போகலாம் கலைஞரின் நெஞ்சின் நீதியை!

முடிந்தது ஒரு சகாப்தம்.

 

சரித்திரம் படைத்த கலைஞரின்  இறுதி ஊர்வலக்காட்சியின் காணொளி இங்கே   ! ( நன்றி : நியூஸ் கிளிட்ஸ் )

 

கலைஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது படித்த கவிதை இரங்கற்பா மிகவும் பிரபலமானது. அதையும் எம் ஜி ஆர் அவர்கள் இறந்தபோது அவர் பேசிய பேச்சும் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

 

 

 

 

 

உன்னால் சாவு வாழ்கிறது! -வைதீஸ்வரன்

 

DYING SWAN

 

Image result for dying swan ballet stills

1962 என்று நினைக்கிறேன்ரஷ்யாவின் புகழ் பெற்ற Bolshoi Ballet நடனக் குழு இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சிகளை அளித்ததுஅந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிரசித்தி பெற்ற அமர காவியம் என்று இன்றும் சொல்லப்படும் நிகழ்ச்சி DYING SWAN என்கிற நாட்டிய நாடகம்.

நீண்ட கால்களும் மிக நளினமான உடல்வாகும் கொண்ட பெண்கள் அன்னப் பறவைகள்போல் உடலை அலங்கரித்துக்கொண்டு மேடையில் ஒரு கவிதையையே நிகழ்த்திக் காட்டுவார்கள்அந்த நாடக நீரோட்டத்தின் மையப் பொருளாக இரண்டு அன்னங்களின் காதல் சரித்திரம் மிக நேர்த்தியாக நெகிழ்ச்சியுடன் நடனங்களில் பிரத்யட்சமாகும்.

காதலினால் இரு உயிர்களுக்கிடையே தோன்றும் நேசம்ஏக்கம் பரிவு ஊடல் பிரிவை நினைந்த சோகம் மரணம்மரணமும் வெல்ல முடியாத அந்த உயிர்களின் பிணைப்பு இப்படி எல்லாவித உணர்வுகளையும் பிரதிபலித்து அருமையான சங்கீதப் பின்னணியில் நிகழும் இந்த நாட்டிய நாடகம் பார்ப்பவரின் நெஞ்சத்தை மௌனமான துக்கத்தில் ஆழ்த்தும்.

இந்த நாட்டிய காவியத்தைப் பார்த்தபின்பு இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லைஅப்போது எனக்குள் எழுந்த சில கவிதை வரிகள் இப்போது மீண்டும் கிடைத்ததுஇப்போது அது உங்களுக்காக… ……அன்புடன்…..

An afterthought of DYING SWAN

——————————————–

மூப்பின் முடிவே!

பிறப்பை நோக்கி

விரையும் பெருந்துடிப்பே!

அரச கம்பீரத்துடன்

சாவைத் தழுவிக் கொள்ளும்

வாழ்வின் உன்னதமே!

மௌனத்தில் துயில் கொள்ளும்

உயிரின் பேரிசையே!

அன்னமெனும் வெண்மைக்குள்

விம்முகின்ற ஆனந்தப் பூங்காற்றே!!

………………………

உன்னால் சாவு வாழ்கிறது!

Image result for dying swan ballet stills

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

குமார குப்தன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

காளிதாசன் மறைந்துவிட்டான்.

இரண்டாம் சந்திரகுப்தனும் மறைந்துவிட்டான்.

ஒவ்வொரு மன்னன் மறைந்தபோதும்…

அடுத்த மன்னனுக்கான அடிதடி என்பது – எழுதாத உலக நீதி ஆகிவிட்டது.

 

இதில் பொற்காலத்தைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள்!

வென்றவர்கள் சரித்திரத்தில் பொன்னாகப் பதிந்தனர்…

தோற்றவர்கள் காலச்சக்கரத்தில் காணாமல் போயினர்…

யார் எப்படி வென்றார்கள் என்பதுபற்றி எப்போழுதுமே சரித்திரம் பல கதைகளைக் கூறுகிறது.

யார் வென்றாலும் அதில் நாம் சுவையான கதையை மட்டும் எடுத்து அசைபோடுவோம்!

சரி… நம் கதைக்குப் போவோம்..

 

கி பி 415:

நாற்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்  இரண்டாம் சந்திரகுப்தன்.

மூத்த மகன் கோவிந்த குப்தன்!

பட்டத்து இளவரசன்!

மகாராணி துருவா தேவியின் மகன் அடுத்தவன் – குமார குப்தன்!

மன்னனுக்கு ‘கார்த்திகேயன்’ (நமது முருகப்பெருமான்) மீது அளவுகடந்த பக்தி.

அதனால் துருவாதேவியின்  மகனுக்கு குமார குப்தன் என்று பெயரிட்டிருந்தான்.

சந்திரகுப்தனின் ஆட்சியில் கோவிந்த குப்தன், குமார குப்தன் இருவரும் பல போர் முனைகளில் வெற்றி சூடிக் கொடுத்தனர்.

 

சந்திரகுப்தனின் பொன்னான ஆட்சி அன்று ஒரு நாளில் முடிந்தது.

வழக்கம்போல நாடெங்கிலும் சோக வெள்ளம்..

எதிரி மன்னர்கள் ‘அடுத்து என்ன நடக்கும்’ என்று ஆவலுடன் காத்திருந்தனர்…

ஜகஜ்ஜோதியாக ஜொலிக்கும் உஜ்ஜயினி நகரம் – அன்று பொலிவிழந்து கிடந்தது.

மகாராணிகள் தங்கள் தங்கள் மகனுக்கு மன்னனாக என்ன வாய்ப்பு என்று ஆலோசித்திருந்தனர்.

அதை விட  தங்கள் மகனுக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்தினர்.

ஏனென்றால்..

இளவரசர்களுக்கு…கிடைத்தால் அரியணை! கிடைக்காவிட்டால் கல்லறை!

பொதுவாக… மூத்தவனுக்கு வாய்ப்பு அதிகம்.

கோவிந்தன் மன்னனானான்!

நாட்கள் சில கடந்தது..

சரித்திரத்தில் ஒரு இடம் பிடிக்குமுன் கோவிந்த குப்தன் கல்லறையில் இடம் பிடித்தான்.

ஏன்.. எப்படி என்ற கேள்விகளுக்கு சரித்திரம் பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறது..

நமக்கு எதற்கு வம்பு…சரித்திரம் அடுத்து என்ன சொல்கிறது என்று மட்டும் பார்ப்போம்..

 

துருவா தேவியின் மகன்… குமார குப்தன்… மன்னனானான்.

 

 

 

 

 

 

 

“குமாரகுப்தன் வெள்ளி நாணயம்”

 

விரைவில் குமார குப்தனுக்கு ஒரு மகன் பிறந்தான்.

குமார குப்தன் – கந்த பிரானின் பக்தன்- தன் மகனுக்கு ஸ்கந்தன் என்று பெயரிட்டான்.

 

30 வருடங்கள் நகர்ந்தது…

இளவரசன் ஸ்கந்த குப்தன் – மாவீரனாக வளர்ந்திருந்தான்.

 

போரில்லா வாழ்க்கை – காரணமாக மக்கள் பெருமூச்சுவிட்டுத் தங்கள் வாழ்வை மேம்படுத்திய காலம்..

அமைதியான நதியிலே ஓடம்- என்பதுபோல் அரசாங்கம் நடந்து வந்தது.

ஓடம்.. அளவிலாத வெள்ளம் வந்தால் ஆடும்.

அது போல் நர்மதைக்கரையில் மால்வா நாட்டில் ஒரு புரட்சி வெடித்தது.

மேற்கில் ஊழிக்காற்றுபோல் ஹூணரென்ற புயல் தாக்கத் துவங்கியது.

குப்தப்பேரரசின் பெரும்படை மேற்கைப் பாதுகாக்க அனுப்பப்பட்டது.

போர் மேகங்கள் குப்த நாட்டில் வானத்தை ஆக்கிரமித்தது..

குமார குப்தன் – வயோதிக குப்தன் ஆயிருந்தான்..

ஆனால் அவனுக்கு இருந்த ஒரு பெரும் பலம் … ஸ்கந்த குப்தன்

“ஸ்கந்தா! எதிரிகள் நாற்திசையிலும் சூழ்ந்திருக்கின்றனர்” குமாரகுப்தன் குரலில் வருத்தத்தை விட ஆதங்கம் மேலோங்கியிருந்தது.

“சரித்திரம்..குப்தரது தங்க காலத்தைத் தொலைத்தவன் நான் என்றா என்னைப் பற்றிச் சொல்லும்?”

 

ஸ்கந்த குப்தன்: “தந்தையே!  எந்த ராஜ்யமும் அழியாமல் வாழ்ந்ததில்லை.. ராம ராஜ்யமும் ஒரு நாள் முடிந்தது.. மௌரியர்களும் அழிந்து போயினர்.  அது போல் குப்தர்களும் ஒரு நாள் காணாமல் போவர்…”

குமார குப்தன்: “….”

ஸ்கந்த குப்தன்: “இதனால் என்னை  பயந்தவன் என்றோ .. கோழை என்றோ எடை போடவேண்டாம். சுற்றி வரும் பகை போகப் போர் புரிவேன். உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன்”

குமார குப்தன் : “….”

இப்பொழுது ஸ்கந்த குப்தன் கூறிய வார்த்தைகள் சரித்திரமாகியது..

ஸ்கந்த குப்தன்: “இன்னும் இரண்டு வருடங்களில் பகையனைத்தையும் தொலைத்து விடுவேன்..பிறகு, ஒரு மந்திரித்த ராஜ குதிரையை நாடு முழுதும் வெற்றிகரமாக உலவவிட்டு…அதை பலிசெய்து …நீங்கள்  அஸ்வமேத யாகம் செய்வீர்கள். இப்படிதான்  உங்கள் பெயர் சரித்திரத்தில் இடம்பெறும். அத்துடன் நமது குல தெய்வம் கார்த்திகேயன் உருவத்துடன் தங்க நாணயம் வெளியிடுவீர்கள். அத்துடன் மகேந்திராதித்யா என்ற பட்டப் பெயருடன் விளங்குவீர்கள். உங்கள் காலத்தில் அகில உலகும் புகழும்படி ஒரு பெரிய பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும். அது நாளந்தா பல்கலைக்கழகம் என்று பேர்பெற்று விளங்கும்.  மேலும் சுத்தமான தேனிரும்பினால் செய்யப்பட்ட பெரும் தூண் ஒன்று எழுப்பப்படும் . காலத்தில் அழியாத அந்தத் தூணில் உங்கள் வீரதீரங்கள் பறைசாற்றப்படும்…இவை அனைத்தும் நடைபெறாமல் என் உயிர் போகாது.”

 (பின்னாளில்…

  • குத்புதீன் ஐபக் என்ற சுல்தான் அந்த பெரும் தூணைச்சுற்றி மசூதி எழுப்பினான்.
  • நாளந்தா பல்கலைக்கழகம், ஆப்கானிஸ்தானிலிருந்து வட இந்தியாவின்மீது படையெடுத்து வந்த பக்தியார் கில்ஜி என்ற ஆப்கானிய படைத் தளபதியால் சூறையாடாப்பட்டு, முற்றிலும் தீக்கிரையானது.

 

குமாரகுப்தனது  கண் கலங்கியது – உள்ளம் நெகிழ்ந்தது..

‘மகன் என்றால் இவனன்றோ மகன்- இதைவிட எனக்கு வேறு பாக்கியம் என்ன இருக்கிறது’!

மகனை ஆரத் தழுவிக்கொண்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

(நாளந்தா பல்கலைக்கழகம்)

   

  

 

 

 

 

 

 

 

 

 

 

நர்மதா பள்ளத்தாக்கு…

ரம்யமான மாலை நேரம்.

குப்த ராஜ்யத்தின் விளிம்பில் இருந்த நாடு.

நாடு என்பதைவிட காடு அது என்றுதான் சொல்லவேண்டும்.

நர்மதா கரையோரக் காடுகளில் வாசித்த காட்டு வாசிகளின் தலைவன் பெயர்:

புஷ்யமித்ரன்.

முகத்தில்.. சந்தன வீரப்பன் போல புதர் மீசை..

கண்களில் .. அனல் பறக்கும் கொடிய பார்வை..  

நெஞ்சில்.. குப்தப் பேரரசையே விழுங்க ஆசைக் கனல்..

அவன்..

குப்த தானியக் கிடங்குகளை சூறையாட்டம் ஆடுவான் ..

குப்த ராணுவக் கிடங்குகளை  அவர்கள் அறியாத இரவு நேரம் வேட்டையாடி ஆயுதங்களைக் கைப்பற்றுவான்..

குப்தர்களின் கருவூலங்களைத் தாக்கித் தங்க நாணயங்களை அபகரித்துக் கொள்வான்.

பணமும், பலமும் சேர்ந்ததால்… அனைவரும் அவனைக்கண்டு நடுங்கினர்..

 

அருகில் இருந்த நாடு ‘வகடக ராஜ்ஜியம்’ .

அங்கு குமாரகுப்தனின் சகோதரி பிரபாவதி குப்தா மகாராணி. அவளும் அரசாண்டு காலமானாள். அவளது மூத்த மகன் திவாகரசேனா – அரியணை ஏறுமுன் அகால மரணமடைந்தான். அடுத்த மகன்கள் தாமோதரசேனா- மற்றும் பிரவாரசேனா இருவரும் கூட்டு அரசராயினர்.

அவர்களுக்கு குமார குப்தன் சொந்த மாமன்தான்… ஆனாலும் வகடக அரசர்களுக்கு மண்ணாசை விடவில்லை..

புஷ்யமித்திரனை வைத்துக் குப்த ராஜ்யத்தைக் களவாடத் திட்டமிட்டனர்.

 

காலம் எப்படி யாரைக் கொல்லும் என்பதை யாரோ அறிவர்!

இரு வகடக மன்னர்களும் ஒரு விபத்தில் காலமாயினர்.

இளவரசன் ஒருவன் மன்னனானான்.

மாதம் ஒன்று தாண்டவில்லை..

அவனும் பூமியைத்தாண்டி காலன் கோட்டை சென்றான்!

இப்பொழுது அவனுடைய மகன்..

புத்தம்புதிய இளவரசன் தேவசேனா..

அவனுக்கோ வயது  8.

மந்திரி ஹஸ்திபோஜன் அரசாங்கத்தைக் கவனித்துக்கொண்டான்.

அவன் நர்மதா நதிக்கரையில் மால்வா நாட்டில் புஷ்யமித்திரனைச் சந்தித்தான்.

கூட்டணி அமைந்தது…

கொள்ளை … கொள்ளை… கொள்ளை..

அது குப்தராஜ்யத்தைக் கரையான் அரிப்பதுபோல் அரிக்கத் தொடங்கியது.

குப்த கருவூலம் மெல்லக் கரையத் தொடங்கியது.

 

ஒரு நாள் இரவு:

அமாவாசை நாள்.

காரிருளைக் கிழித்து நட்சத்திரங்கள் மினுமினுத்தது.

புஷ்யமித்திரன் காட்டு மாளிகையில் பெரும் யோசனையில் இருந்தான்.

‘அடுத்த குப்த ராஜ்யத்தின் சூறையாடல் எங்கு’ என்பதுபற்றி.

அதே நேரம்.. காட்டின் விளிம்பில் சிறு கூடாரம்.

அதில்..மண் தரையில் ஒருவன் பாய் விரித்துப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான்.

நடு இரவுதாண்டி இரண்டு சாமம் கடந்தது.

உறங்கிக் கொண்டிருந்தவன் கண் விழித்தான்.

கூடாரத்தை விட்டு வெளியே வந்து- தீப்பந்தத்தை லேசாக ஆட்டினான்.

காட்டிலிருந்து அருவிபோல படைவீரர்கள் திரண்டனர்.

காட்டு மாளிகையைச் சுற்றி வளைத்தனர்.

சிறிது நேரத்தில் காட்டு மாளிகை தீப்பிடித்து எரிந்தது..

புஷ்யமித்திரன் உறக்கத்தைவிட்டு வாளை எடுத்தான்.

அவனது வீரர்களும் திரண்டனர்.

அந்த இரவில்- தீப்பற்றி எரிந்த மாளிகையின் வெளிச்சத்தில் போர் நடந்தது.

புஷ்யமித்திரன் காயப்பட்டான்..  பிடிபட்டான்..

“ஸ்கந்த குப்தா! நீயா” –என்று புஷ்யமித்திரன் வியப்புடன் கூவினான்.

அஞ்சாநெஞ்சன் என்று அறியப்பட்ட புஷ்யமித்திரன் முகம் அன்று அச்சத்தைக் காட்டியது…

காயம்பட்ட புஷ்யமித்திரன் கீழே விழுந்து கிடந்தான்.

ஸ்கந்த குப்தனின் கால் புஷ்யமித்திரன் மீது பதிந்தது…

ஸ்கந்த குப்தன்: “புஷ்யமித்திரா! சரித்திரத்தில் உனது ஆட்டம்  இன்றுடன் முடிந்தது.. இனி குப்த நாட்டுக்கு உன்னால் ஒரு தொல்லையும் இல்லை. கல்லறை செல்லும்வரை உனக்கு இனி சிறைதான். மேலும் உன்னுடன் கூட்டு சேர்ந்த வகடக மன்னன்  இனி என் வாளுக்கு இரையாவான். வகடக ராஜ்ஜியம் இத்துடன் முடிந்தது”!

 

ஸ்கந்தன் உஜ்ஜயினி சென்று தந்தையிடம் விபரம் அனைத்தையும் கூறினான்.

“தந்தையே! ஒரு பிரச்சினை தீர்ந்தது.. இனி காந்தாரம் சென்று ஹூணரது படையெடுப்பை முறியடிப்பேன்”

 

சொன்னதைச் செய்தான்!

தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினான்.

ஒரு மகன் உறுதியுடன் தந்தைக்கு உதவி செய்தால்… எந்த தந்தை தான் வெற்றியாளராக மாட்டார்?

மன்னன் மனம் அமைதியடைந்தது…

“இனி நான் நிம்மதியாக உயிர் விடுவேன்” – என்றான் குமார குப்தன்.

இருப்பினும்..

ஹூணர்களைத் தோற்கடிக்க ஸ்கந்தன் படையெடுப்புகள் குப்தரது கஜானாவை காலி செய்தது- அவனது நினைவுக்கு வந்தது..

‘இனி குப்தரின் எதிர்காலம் என்னவாகுமோ?’

இறக்குமுன் – குமார குப்தனுக்கு – ஸ்கந்த குப்தன் அன்றொரு நாள் கூறிய வார்த்தை நினைவுக்கு வந்தது:

“ராம ராஜ்யமும் ஒரு நாள் முடிந்தது”

‘குப்த நாட்டின் முடிவும் அதுபோல முடியும்’ என்ற எண்ணம் அவன் மனதில் உதித்தது.

அந்த நினைவுடன்… அவன் உயிரும் பிரிந்தது!

 

அடுத்து வரும் கதைகள் என்னவாயிருக்கும்?

விரைவில்…

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

Image result for suryadev sleeping and visvakarma looking on

விஷ்வகர்மாவின் ஆணைப்படி  சூரியதேவனுக்கும் ஸந்த்யாவிற்கும் தனித்தனியாக சாந்துக்குளியல் ஏற்பாடு செய்யப்பட்டது.

நான்கு சேவகர்கள் சாந்து மண்டபத்தில் சூரியதேவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

சூரியதேவன் வந்த பறக்கும் கூண்டு அந்த மண்டபத்திற்கு வந்ததும் அந்த நால்வரும்  சூரியதேவன்  கூண்டிலிருந்து  வெளியே வருவதற்கு வசதியாகக்  கதவைத் திறந்து அவரை வரவேற்று சாந்து மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Related image

அவர்களின் தலைவன் சூரியதேவரை வணங்கி ,

” சூரிய தேவரே!  இந்த சாந்துக் குளியலின் மகத்துவத்தைப்பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும்படி விஷ்வகர்மா அவர்கள் எங்களுக்கு  ஆணையிட்டிருக்கிறார்கள்.

பொதுவாக காந்தச் சிகித்சை நடைபெற்றபிறகு உடல் முழுவதும் பற்றி எரிவதுபோன்ற உணர்ச்சி ஏற்படும்.  அது சந்திர காந்தக் கல்லின் மூலம் உடலை சாணை பிடிப்பதால்  ஏற்படும் வெளி பாதிப்பு.  அப்படிச் செய்வதன் மூலம் தங்கள் உடலின் வெப்பத்தைக் குறைக்க முடிந்ததது. அதே சமயம் உடலுக்குள் ஓடும் நரம்புகள் அனைத்தும் முடுக்கி விடப்படும். இது சிகித்சையின் எதிர்மறை  விளைவு.  இந்த இரண்டு விளைவுகளையும் சமன் செய்யவேண்டியது மிக மிக முக்கியம். அதற்கு உங்கள் ஒத்துழைப்புத்  தேவை ” என்று பவ்யமாகக் கூறினான்.

சூரியதேவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். காந்த சிகித்சையோ அதன் வீரியத்தைக் குறைக்கும்  மாற்று சிகித்சையான சாந்துக் குளியலோ எதுவும் தன்னைப் பெரிதும் பாதிக்காது என்று அவனுக்குத் தெரியும். ஸந்த்யாவின் மீது அவனுக்கு ஏற்பட்ட காதல் அவன் இதயத்தை முழுதும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் அவனுக்குச் சந்தேகமின்றிப் புரிந்திருந்தது. அதனால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை பரபரவென்று பற்றி எரிவதுபோன்ற உணர்வு இருக்கிறது என்பதை உணர்ந்தான். அதுமட்டுமல்லாமல்   அவன் நாடி நரம்புகளும் தூண்டப்பட்டு  அவை ஸந்த்யாவின் தேகத் தேடலையே எதிர்நோக்கி இருக்கின்றன என்பது அவனுக்குத் தெள்ளெனத்  தெரிந்திருந்தது.

காலையில் அவன் உதிக்கும்பொழுது பூலோகத்தில் ஆயிரமாயிரம் தாமரை மலர்கள் மலர்வதைப் பார்த்துப் பரவசமடைந்திருக்கிறான். ஆனால் அவன் ஸந்த்யாவின் தேகத்தைத் தொட்டுத் தழுவும்போது அவள் வெள்ளை உடலில் குபீர் குபீர் என்று ரத்தம் பாய்வதால் ஏற்படும்   சிவப்புக் குமிழிகள், நரம்புகள் புடைப்பதால் ஏற்படும் பச்சை ஆறுகள் , பொன்னிற மயிர்க்கால்கள் சிலிர்ப்பதால்  தோன்றும் பொன் மழை   எல்லாவற்றிற்கும் மேலாக அமிர்தத்தைக் கடைந்து வைத்த அவள் இதழும் நெஞ்சகமும் இடையும் அவனுக்கு அளித்த பரவசத்திற்கு எதுவும் ஈடாகாது என்பதை நன்கு உணர்ந்துகொண்டான்.  அவளின்றித் தான் இயங்க  முடியாது என்று அவன் நன்கு உணர்ந்ததன் காரணமாகவே இந்த சந்திர காந்தச் சிகித்சைக்கு ஒப்புக்கொண்டான்.

இந்த் சாந்துக் குளியல் அவன் காதல் வேகத்தையும் குறைத்துவிடுமோ என்றும் பயந்தான்.

இருப்பினும் விஷ்வகர்மாவின் சேவகர்கள் கேட்டுக்கொண்டபடி அந்த அறையிலிருந்த தங்கப் படுக்கையில் தன் ஆடைகளைக் களைந்து படுத்தான்.  அவன் தலைக்கு மேலே ஒரு  பொன்னாலான பாத்திரம் கட்டப்பட்டிருந்தது. அதிலிருந்து பால் போன்ற ஒரு திரவத்தை  மெல்லிய நூலிழைபோல அவன் நெற்றியில்  வழிய வைத்தார்கள். அது ஏற்படுத்திய சுகானுபாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்போதே இலேசாக சூடு செய்த எண்ணையை  எடுத்துக்கொண்டு இருவர் சூரியதேவனின் கழுத்திலிந்து கால்வரை மெதுவாகவும் சற்று அழுத்தமாகவும் தொடர்ந்து தடவினார்கள். அவர்களின் கரங்களில் இருந்த மாயமோ நளினமோ வேகமோ  ஏதோ ஒன்று அல்லது எல்லாமும் அவனை ஒரு மயக்க நிலைக்கு ஆளாக்கியது.

சூரியதேவன் கண்களை மூடிக்கொண்டான். புறக் கண்கள்  மூடியதும் அகக் கண்கள் திறந்தன. ஸந்த்யாவே அவனுக்கு இரு புறமும் நின்று அவனுக்கு அந்த வாச எண்ணையைத் தடவுவதுபோன்ற மயக்க நிலை உண்டாயிற்று.

அதன் பின்னர் ஒரு பசுமையான சாந்தை அவன் உடல்  முழுவதும் பூசினர். அதன் குளிர்ச்சி தன் வெப்பத்தை முழுதும் அழித்து நிலவைப் போல குளிர வைத்துவிடுமோ என்றும் பயந்தான்.

அவன் தலையில்  வழிந்து கொண்டிருந்த பால் போன்ற திரவம் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. அவன் தலையில் பொதிந்திருக்கும் நரம்பு மண்டலம் அனைத்தையும் அமைதிப்படுத்தியது.

அப்போது விஷ்வகர்மா  அறைக்குள் நுழைந்தது மயக்கத்திலிருந்த சூரியதேவனுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. விஷ்வகர்மாவைக் கண்டதும் சாந்தைப் பூசி முடித்த சேவகர்கள் அனைவரும் அவர் கண் ஜாடைக்கு இணங்கி அறையைவிட்டு வெளியேறினர்.

விஷ்வகர்மா தன் கையிலிருந்த வசியக் கோலால் சூரியதேவனின்  உடலைத்  தொட்டும் தொடாமலும்  மெல்லத் தடவினார்.  கொஞ்சம் கொஞ்சமாக சூரியதேவன் தன் வசியத்திற்கு வருவதை உணர்ந்த அவரது கண்களில்  மகிழ்ச்சி கரைபுரண்டது. அதில் கோடானுகோடி ஆசை தெளித்தது.

மெதுவாக சூரியதேவனின் மூடிய கண்களைப் பார்த்து ” சூரியதேவரே!” என்று அமைதியான குரலில் மூன்று முறை அழைத்தார்.

“சொல்லுங்கள்; நான் என்ன செய்யவேண்டும்?”  –   அவன்  குரல் ஈனசுரமாக ஒலித்தது.

“மகாபிரும்மருத்ரன்.. மகாபிரும்மருத்ரன்.. மகாபிரும்மருத்ரன்..”  என்று விஷ்வகர்மாவின் வாய் முணுமுணுத்தது.

அதே சமயம் ஸந்த்யாவின் தாய் விஷ்வகர்மாவின் ஆணைக்கு  இணங்கி ஸந்த்யாவின் வாயில் மருந்தினை ஊற்றுவதற்காக வலம்புரிச் சங்கை அவள் வாயருகே கொண்டுசென்றாள்.  பாவம் அந்தத் தாய்க்குத் தெரியாது. அந்த மருந்து தன் மகள்  வயிற்றில் அப்போதுதான் துளிர்விட்ட மூன்று கருக்களையும் கலைக்கும்  மருந்து என்று.

எது எப்போது எப்படி நடக்கும் என்று ஊகிக்க முடியாத அந்த  வேளையில் ராகு காலம் உதித்தது.

 

(தொடரும்)

 

இரண்டாம் பகுதி

Image result for all hindu gods in one frame

 

தேவ ரகசியம் மனிதர்களுக்குப் போய்விடுமோ என்ற  பயத்தை எமன் விதைத்திருந்தது அனைவர் மனதிலும் பதிந்திருந்தது.  ஆரக்கிள் என்பது  குறி சொல்லும் தேவதை என்றும், அது பின்னால் நடக்கப்போவதை முன்னாடியே தெரிவிக்கும் என்ற கதையை  தத்தாம்ஸானந்தா ஆரக்கிள் என்றால் என்ன என்பதை விளக்கவே கூறினார்.  ஆனால் அது தேவர்களுக்குத் தகவல் பாதுகாப்பைப்பற்றி இப்படி ஒரு பயத்தை  ஏற்படுத்தும் என்று  தத்தாம்ஸானந்தா முதலில் உணரவில்லை.

பாதுகாப்புப்பற்றிய  விவரத்தை ஏற்கனவே தெரிவித்து அனைவரது ஒப்புதலையும் பெற்ற  தத்தாம்ஸானந்தா ‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்  ஆண்டி ‘ என்பதுபோல ஆரக்கிள் கதையை சொல்லப்போக, அவர்களுக்கு மீண்டும் தகவல் பாதுகாப்பு பயம் வந்துவிட்டதே  என்று கவலைப்பட்டார்.  பாதுகாப்புப்பற்றிய  பயத்தைப் போக்காதவரையில், தனக்கு  அங்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தார் தத்தாம்ஸானந்தா.

குறி சொல்லும் அந்த ஆரக்கிளுக்கும் இப்போது இருக்கும் ஆரக்கிள் தகவல் மையத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்கினார்.

இன்னும் பல கடினமான ஜார்கனை எல்லாம் போட்டு தகவல் பாதுகாப்பு என்றால் என்ன என்பதைப்பற்றி எடுத்துக் கூறினார். ‘ஏண்டா  கேட்டோம் என்று முருகனுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைத்துத் தேவர்களுக்கும் தோன்றியது.  பரமசிவன் தத்தாம்ஸானந்தாவைப் பேசாமல் இருக்க பேசாமல் அவரை நெற்றிக்கண்ணால்  எரித்து விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தார். அவர் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பார்வதி மெதுவாக அவர் காதருகில் ‘ ஆ ஊன்னா நெற்றிகண்ணைத் திறக்காதீங்கோ’ என்று எச்சரித்தாள். விநாயகருக்கோ முருகன் மேல் கோபம். கேள்வியைக் கேட்டது மட்டுமில்லாமல்  ரெண்டு கண்ணை மட்டும் திறந்துகொண்டு பாக்கி பத்துக் கண்ணையும் மூடிக்கிட்டு தூங்குகிறானே என்று. எமனும் சித்திரகுப்தனும் நெளிய ஆரம்பித்தார்கள். சரஸ்வதியும்  லக்ஷ்மியும் தாங்கள் பூலோகம் சென்றபோது பார்த்த  சரஸ்வதி சபதம் சினிமாவைப்பற்றி  மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள்.  பரந்தாமனுக்குக் கவலையே கிடையாது. அந்த இடத்தையே பாற்கடலாகப் பாவித்துப் பள்ளி கொண்டுவிட்டார்.

 

ஒரு வழியாக தத்தாம்ஸானந்தா  தனது கதா காலட்சேபத்தை முடிக்கும்போது , தகவல் பாதுகாப்பு என்பது உங்கள் அனைவரது கைகளில் தான் இருக்கிறது என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.  எல்லோரும் திடுக்கிட்டு முழித்தார்கள்.

 

ஆம். நீங்கள்தான் இந்த தகவல் மையத்திற்கு அதிபதி. யார் யாருக்கு , எந்த அளவுக்குத் தகவல் தெரியலாம் என்பதை நீங்கள் முடிவு செய்துவிட்டால் அதன்படி ஆரக்கிளில் டேட்டாபேஸ் பாதுகாப்பு வளையங்களை அமைத்துவிடலாம். உதாரணமாக  பிறப்பு ரகசியத்திற்குப் பொறுப்பாளராக பிரும்மா இருக்கலாம். அதைப்போல இறப்பு ரகசியத்துக்குக் கண்காணிப்பாளராக சிவபெருமான் இருக்கலாம். எமனுக்கு அன்றைய பொழுதில் யார் மடிவார்கள் என்ற தகவல் மட்டும் கிடைத்தால் போதுமானது.  இறப்பவர்களின் பாவ புண்ணியத் தகவல் மட்டும் சித்திரகுப்தனுக்குப் போதும்.  எல்லாத் தகவல்களும் மேகத்தில் இருக்கும் ஆரக்கிள் டேட்டாபேஸில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.  சித்திரகுப்தன் தகவல்களைப் பார்த்துவிட்டுத் தன்னுடைய சிபாரிசுகளைக்  குறிப்பிட்டால்  போதும்.  எமபுரிப்பட்டணம் சென்று ஒவ்வொருவருக்கும் சித்திரகுப்தன் பாவ புண்ணியக் கணக்கைப் படித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.  இதனால் ரிடன்டன்சி  என்று சொல்லப்படும் ஒரே வேலை திரும்பத் திரும்பச் செய்வது ஒழியும். மேலும் பாவ புண்ணியங்கள் அது நடக்கும்போதே டேட்டாபேசில் ஏறிவிடும்.  ஆனால் எது பாவம் எது புண்ணியம் என்பதை நீங்கள் முதலிலேயே முடிவு செய்யவேண்டும்.

இரண்டாவது கட்டமாக சித்திரகுப்தன், எமன்  இருவர்  தலையீடும் இல்லாமல் நேரடியாகவே ஒரு  மனிதன் தான் செய்யும் காரியங்களுக்கு ஏற்ப சொர்க்கமோ அல்லது நரகமோ நேரடியாகப் போய்விடுவான்.  எமனும் சித்திரகுப்தனும் இந்தத்  திட்டத்தால்  தங்கள் வேலை பறிபோய் விடுமே என்று  நெளிந்தனர்.  அதை உணர்ந்த  தத்தாம்ஸானந்தா, இந்தத்  திட்டத்தினால் எமன் சித்ரகுப்தன் இருவருக்கும் பளு குறைவதனால் அவர்கள் சொர்க்கம் நரகம் இரண்டையும்  சிறப்பான முறையில் நிர்வகிப்பதுடன் அவற்றை மேம்படுத்தவும் முடியும் என்றும் அதற்குத் தனியாக புது பிராஜக்ட் அமைக்க வேறு டீம் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.

பூலோகத்தில் எல்லாவற்றையும் இணையதளம் மூலமாகச் செய்யும்போது மேலோகம் என்று சொல்லப்படும் இந்த உலகில் இன்னும் பழைய முறையில் வேலைகளைச் செய்து வந்தால் அது சரியாகாது  என்று வாதத்துடன் தன் நீண்ட உரையை முடித்தார் தத்தாம்ஸானந்தா.

திட்டக்குழு அங்கத்தினர்கள் அனைவரும் அதை ஒப்புக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்துகொண்டு திட்டத்திற்குக்  கொள்கை அளவு ஒப்புதல் அளித்தனர்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை – பிராஜக்ட் ரிபோர்ட் தயார் செய்து அங்கத்தினர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவதாகவும் தத்தாம்ஸானந்தா கூறினார்.  பிராஜக்ட் ரிபோர்ட் தயார் செய்யத் தனக்கு உதவியாக வியாசரையும் பிள்ளையாரையும் அனுப்பும்படி ஒரு கோரிக்கையையும் முன்  வைத்தார்.

Related image

அதுவரை ஏனோதானோவென்று இருந்த பிள்ளையார் திடுக்கிட்டார். ஏற்கனவே மகாபாரதம் எழுதப் போய் தனது ஒரு கொம்பு உடைந்து போய் வீரபாகு, முருகன் இவர்கள் தன்னை ஒற்றைக் கொம்பன் என்று கேலி செய்வது பொறுக்கமுடியாமல் இருந்தார். இப்போது இன்னொரு கொம்பும் ஓடிந்தால் இவர்கள் என்னவெல்லாம்  சொல்வார்கள் என்று தயங்கி நின்றார்.  முருகன் தனக்கு இந்த வேலை வந்துவிட்டால் பேசாமல் கோபித்துக்கொண்டு மலைக்குப் போய்விடலாமோ என்று நினைத்தார். ‘இந்த முறை பழனி வேண்டாம். ஊட்டி  கொடைக்கானல் போவது என்றும் யோசிக்க ஆரம்பித்தார்.

Related image

கிளையண்டின் மனோபாவத்தை நன்கு அறிந்த  தத்தாம்ஸானந்தா பிள்ளையாரிடம் ஒரு லேப்டாப்பையும் மவுசையும்  கொடுத்தார்.

 

“நீங்கள் உங்கள்  கொம்பை  முறித்து  எழுதவேண்டிய  அவசியமே  இல்லை.  உங்களுக்கு மவுஸ் ஏற்கனவே நன்கு பழக்கம். கொஞ்சம் டிரெய்னிங்  கொடுத்தால் வியாசர்  சொல்லச் சொல்ல நீங்கள் எழுதிக்கொண்டே வரலாம்” என்றார். அதுமட்டுமல்ல இந்த ‘எமபுரிப்பட்டணம் பிராஜக்ட்’ அங்கத்தினர் அனைவருக்கும் ஒரு ஆப்பிள் 10 போனும் தரப்படும். நீங்கள் பிராஜக்ட் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள உபயோகமாயிருக்கும்.  அத்துடன் பூலோகத்தில் மிகவும் பரவலாக இருக்கும் ஒரு பயன்பாட்டையும் தருகிறோம்.” என்றார்   தத்தாம்ஸானந்தா.

 

”  மிஸ்டர் தத்தாம்ஸானந்தா ! அது  மட்டும் வேண்டவே வேண்டாம் ”  என்று அலறினார்  திரிலோக  சஞ்சாரி   நாரதர் !

கதை சொல்லல் – கதை கேட்டல் – கதை வாசிப்பு –

 

Image result for கதை படித்தல்

 

 

“கதை சொல்லும் கலை”   ( இதை கிளிக் செய்தால் அந்தப் புத்தகத்தை இணையதளத்தில் படிக்கலாம்)    என்ற புத்தகத்தை  முருகபூபதி அவர்கள் எழுதி பாரதி புத்தகாலயம் மூலம் வெளியிட்டிருக்கிறார்.

அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் .  அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான கருத்துக்கள் நம் பார்வைக்கு:

கதைசொல்லல், கதை வாசிப்பு இரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. தமிழகத்தில் மேடைப்பேச்சு கேட்க வரும் கூட்டம் ஏன் வாசிப்புக்கு இல்லை, மேடைப்பேச்சாளர்கள் அளவுக்கு வருமானமும் புகழும் ஏன் எழுத்தாளர்களுக்கு இல்லை, ஏன் எழுத்தாளர்களை மேடைப் பேச்சாளர்களாக ஆக்க இடைவிடாது முயல்கிறார்கள் என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டால் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளமுடியும். ஏறத்தாழ அனைவருமே குழந்தைப் பருவத்தில் பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள். கோயில்களிலும் கூத்தரங்குகளிலும் கதைகளைக் கண்டு, கேட்டு ரசித்தவர்கள். அவர்களிலிருந்து ஏன் வாசகர்கள் மிகமிகக் குறைவாக உருவாகி வருகிறார்கள்?

கதை கேட்பதென்பது ஒரு செவியனுபவம். கதை வாசிப்பது விழியனுபவம், மொழியனுபவம். இரண்டும் முற்றிலும் வேறு. மாறுபட்ட மூளைத் திறன்களால் எய்தப்படுபவை. மாறுபட்ட பயிற்சிகளைக் கோருபவை. கதை வாசிப்பு என்பது குழந்தைக்கு வாசிப்பை நேரடியாக அறிமுகம் செய்வது. நாம் வாசித்துக் காட்டி மிக மெல்லக் குழந்தையை வாசிப்புக்கு இட்டுச் செல்வது. கதை சொல்வது கேள்வியாளனாகவே குழந்தையை வடிவமைப்பது.

கதை வாசிப்பு, கதை சொல்லல் இரண்டுமே ஆரம்ப. கட்டத்தில் கதை என்ற வடிவை, கதையை கற்பனையில் விரித்தெடுக்கும் அனுபவத்தை குழந்தைக்கு அறிமுகம் செய்வதற்கு அவசியமானவை. ஆனால் எப்போது குழந்தை கதைச் சுவையை அறிந்துவிட்டதோ அதன்பின் அதை வாசிப்பை நோக்கிக் கொண்டுசெல்லவேண்டும். அதுவே அமர்ந்து அந்தரங்கமாக வாசிக்கப் பயிற்சி அளிக்கவேண்டும். அக்குழந்தையே வாசகனாக ஆகும். கதைமட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் குழந்தை வாசிப்பில் சுவையிலாது போகக்கூடும்

ஏனென்றால் கதை சொல்லும்போது நம் உணர்வுகளையும் நாமே அளிக்கிறோம். அது ஒரு நிகழ்த்துக் கலையென்று ஆகிவிடுகிறது. கதை வாசிப்பின்போது அது உணர்வற்ற மொழிவெளிப்பாடாக மட்டுமே உள்ளது. அதை உணர்வாகவும் காட்சியாகவும் மாற்றிக்கொள்ளும் பொறுப்பு குழந்தைக்கு வருகிறது. கதை சொல்லும்போது ஓர் உரையாடல் நிகழ்கிறது. குழந்தையின் ஆர்வத்திற்கேற்ப கதை வளர்கிறது. அது நிகழ்த்துக் கலையின் இயல்பு. கதை வாசிப்பில் அம்சம் இல்லை. அது புத்தகம்போலவே முடிந்துவிட்ட வடிவம். வாசகனுக்கேற்ப அது மாறாது. அதை வாசகன்தான் மீட்டி வளர்த்துக் கொள்ளவேண்டும்.

ஆகவே ஆரம்ப நிலையில் கதை சொல்லல், பின்னர் கதை வாசிப்பு, அதன்பின் நேரடி வாசிப்பு என்பதே குழந்தையை வாசிப்புக்குப் பயிற்றுவிக்கும் வழியாக இருக்கமுடியும்.

Related image

 

 

 

என்ன அழகான கருத்தோவியம் ! நம் குழந்தைகளுக்கு  முதலில் கதை சொல்லப் பின்னர் அவர்களையே வாசிக்கத் தூண்டுவோம்.

இதுதான் இலக்கிய வளர்ச்சிக்கு நாம் அனைவரும் செய்யவேண்டிய  பணி !

செய்வோம் !

 

 

அம்புப்படுக்கை விமர்சனம் – சரஸ்வதி காயத்ரி

 

Image result for அம்புப்படுக்கை

இந்த ஆண்டிற்கான(2018) யுவ புரஸ்கார் விருதுபெற்றுள்ள  Suneel Krishnan அம்புப்படுக்கையை வாசித்து முடித்தேன்.

(வெளியீடு:
யாவரும் பதிப்பகம்)

” அம்புப்படுக்கை” என்றவுடன் தன்னிச்சையாக பீஷ்மர் நினைவுக்கு வருகிறார்.
சுனில் கிருஷ்ணன் முன்னுரையில்…

// பீஷ்மர் காலத்தின் முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும்போதுமெனக் கதறி அரற்றவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராகப் பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச் செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றை தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப்போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி தனது கேள்விகளுக்கு விடைதேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது, இக்கதை மாந்தர்களைப்போல.//

இத்தொகுப்பில் பத்து கதைகள்.
அதில் முதல் கதை ” வாசுதேவன்” இக்கதையை படித்த அன்று என்னால் தூங்க முடியவில்லை. பிழைப்பது அரிது என நூறு சதவீதம் தெரிந்தபிறகும் ஏதோவொரு நம்பிக்கையில் எந்த உணர்வுமற்றப் படுத்திருக்கும் உயிர்.

சற்றே கை/ கால் விரல்களை அசைத்தால்கூட ஒரு நம்பிக்கை( துளி) துளிர் விடுவதை விரைவில் குணமாகிவிடுவான்/ வாள் என பெரு நம்பிக்கையாக மாற்றிக்கொள்ளும் அந்நபர் சார்ந்த மனிதர்களை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன். அதனாலே எனக்கு அந்தக் கதையப் படித்த அன்று வேறு கதைகளைப் படிக்க முடியவில்லை.
// எஞ்சியிருப்பவர்களின் ஆற்றலையும், நம்பிக்கையையும் ,செல்வத்தையும் உறிஞ்சுவதைத் தவிர
என்ன பயனுள்ளது இந்த உயிருக்கு? உண்மையில் என் உயிருக்கு என்ன பயன்? அல்லது பிறக்கும்,மரிக்கும் எந்த உயிருக்கும் தான் என்ன பயன் இருந்திட முடியும் விளங்கவில்லை.//
தானும், நண்பனுமாகப் படுக்கையில் கிடக்கும் ” வாசுதேவனுக்கு” ஆயுர்வேத சிகிச்சை செய்யப்போகும் ஒருவனின் அனுபவம்.
இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதையென்று சொல்வேன் .

* ” பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்”

தன் பேத்தியின் அழுகுரல் கேட்டவுடன் பதறி எழுந்து வருகிற லெட்சுமண செட்டியார், மருமகள் வேலைக்குப் போவதால் அக்குழந்தையை முழுநேரமும் பார்த்துக் கொள்கிறவர்.
தன் பேத்திக்காக, நாக்குக்கோ மனசுக்கோ வாகாக இருக்கிறதென்பதற்காக // பொன்னழகைப் பார்ப்பதற்கும் //என்கிற ஆயர்பாடி மாளிகையில் எனத்தொடங்கும் பாடலை
பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் எனப்பாடுகிற தாத்தா!

தான் இரண்டு நாள் ஊரிலில்லாதபொழுதில் பேத்தியைத் தூங்க வைக்க செல்பேசியில் spbகுரலில் அதே பாடலை கேட்டுப் பழகி தான் வந்தபிறகும் அதையே பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டாளோ என நினைத்துக் கலங்கிப்போகிற அந்தப்பெரியவரின் உணர்வுகள் ..அருமை.

ஒருநாள் அக்குழந்தை எதற்கும் சமாதானமாகாமல்
அவர் , பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் ” எனப்பாடினவுடன் தாத்தாவைப் பார்த்துச் சிரிப்பதாகக் கதையை முடித்திருப்பது அழகோவியம்.

மூன்றாவதாக ” பேசும் பூனை”
செல்போன் ஒவ்வொருவரின் அத்யந்தமாகிவிட்டதைச் சொல்கிறது.
அப்படி ஆனதின் பின்விளைவுகளில் ஒன்றுதான் அந்தரங்கம் என்பதேதுமில்லாமல் அத்தனையும் கடைவிரிக்கப்படுவது. கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை விலகிப்போக வைத்து செல்போனின் செயலிகள் ஒரு மனுஷியை ஆட்கொள்வதை விவரிக்கிறது.

அடுத்ததாக ” குருதிச்சோறு”
அக்கதையில் விவரிக்கப்படுகிற ஸ்ரீ அன்ன சௌரக்ஷாம்பிகைபற்றிய கதை சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

எளிய மனுஷியான ” பாலாயி” தனக்குக் கிடைத்ததைப் பஞ்சத்தில் வாடுகிற, தன்னைத் தேடிவந்து கேட்கிற அத்தனைபேருக்கும் கொடுத்தருளுவதில் அன்னபூரணியாக இருக்கிறாள்.

கூண்டு, திமிங்கலம் ,ஆரோகணம் இந்த கதைகளை நான் மீண்டும் படிக்கவேண்டும்.
புனைவுகதைகளைப் புரிந்து ,ஆழ்ந்து படிப்பதற்குப் பழக்கம் வேண்டுமென நினைக்கிறேன்.

போலவே, 2016 கதை :
வின்ஸ்டன் ஸ்மித் & நரோபா இருவருக்குமிடையேயான உரையாடல் இடம்பெறுகிறது
இக்கதையைப் படித்து விமர்சிக்கவும், எனக்கு வெகுகாலமாகுமெனத் தோன்றுகிறது.

எல்லாக்கதைகளிலும் மரணம் அல்லது மரணத்தின் சாயை ஓரிழையாக வந்துகொண்டே இருக்கிறது. அதுபோலவே சர்ப்பமும், சாமியாடியும்.  நாகர்கோயில், கன்யாக்குமரிக்காரர்கள் எழுதும் கதைகளில் உலவிடும் யட்சி இவர் கதைகளிலும் இருப்பதுபோல எனக்குள் ஒரு பிரமை.
தொகுப்பப் படித்து முடித்ததும்.

இளம் தலைமுறை எழுத்தாளர்களில் பல நூறு கதைகளை எழுதிப் பழக்கப்பட்டதுபோன்ற சரளமான நடையும், மொழியும் வாய்க்கப்பெற்ற டாக்டர். சுனில் கிருஷ்ணனுக்கு (ஆயுர் வேத மருத்துவர்) என் வாழ்த்துக்கள்.

பொன்னியின் செல்வன் – பாம்பே கண்ணன்

நண்பர் பாம்பே கண்ணன், ஏற்கனவே கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் கதையை ஒலிப்புத்தகமாகக் கொண்டுவந்து மாபெரும் வெற்றி அடைந்தவர்.

பொன்னியின் செல்வனை எப்படியாவது திரைவடிவில் பார்க்க ஒரு  டெலி பிலிம் எடுக்கவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு – தவம்.

எம் ஜி ஆர் கமலஹாசன் மணிரத்னம் இவர்களெல்லாம் முயற்சித்து முடியாமல் கைவிட்ட காவியம் இது.

பாம்பே கண்ணனும் அவரது நண்பர் வெங்கடராமனும் தங்கள் தரப்பில் ஐம்பது லட்சம் போட்டு மேற்கொண்டு ஐம்பது லட்சத்தை வாசகர்களிடமிருந்து ‘மக்கள் நிதி ‘ ( CROWD FUNDING) மூலமாகத் திரட்ட எண்ணியுள்ளனர்.

 

அதற்கான பணியைத் துவங்கிவிட்டனர்.

விஷ்பெர்ரி என்ற பம்பாய் நிறுவனம் இவர்களுக்காக  மக்களிடமிருந்து நிதி திரட்டித்தர சம்மதித்து அதற்கான பணிகளைத் துவங்கிவிட்டது.

இதுவரை கிட்டத்தட்ட 3 லட்சம் வந்துள்ளன. இன்னும் 43 நாட்களில் எதிர்பார்த்த 50 லட்சம் வரவேண்டும்.

பொன்னியின் செல்வனை திரைவடிவில் பார்க்க நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்.

குவிகம் தன் பங்கிற்கு 10000 ரூபாய் கொடுத்து இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வாழ்த்தியுள்ளது.

குவிகம் ஆசிரியரும் நண்பர்கள் உறவினர்கள் மூலமாக நிதி திரட்டவும் முடிவு செய்திருக்கிறார்.

குவிகம் வாசகர்களை  பொன்னியின் செல்வன் ரசிகர்களிடம் இந்தச் செய்தியைச் சேர்ப்பித்து அவர்களை ஒரு  கணிசமான தொகையை விஷ்பெர்ரி மூலம் கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அதற்கான லிங்க் கீழே:

 

https://www.wishberry.

 

/campaign/ponniyin-selvan/#/campaign-new

 

பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு இந்தத் திட்டத்திற்கு உதவுங்கள் : அதற்கான வீடியோ இங்கே!

ஐநூறு  ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் வரை நீங்கள் தரலாம்!.

 

வாருங்கள் புதிய சகாப்தம் படைப்போம்!

 

சைனீஸ்தியா – மாறுணர்வு

Related imageImage result for synaesthesia

அது என்ன மாறுணர்வு?

சத்தத்தை நாக்கால் ருசிப்பது – வண்ணங்களைக் காதால் கேட்பது போன்ற மாறுபட்ட உணர்வு.

குழந்தை பிறந்ததும் அதன் மூளை எல்லா உணர்வுகளையும் ஒரே மாதிரிதான் உணர்ந்துகொள்ள முடியுமாம்.

நாளடைவில் கண்கள்  பார்க்கவும், காதுகள் கேட்கவும் , நாக்கு  ருசியையும், மூக்கு  வாசனையையும் பிரித்து உணரும் சக்தி மூளைக்கு எட்டுமாம்.

வயதான பிறகும் சிலருக்கு சத்தத்தின் மூலம் வண்ணங்களை உணரும் நிலை தோன்றினால் அதுதான் சைனீஸ்தியா *** என்று சொல்லப்படும் மாறுணர்வு. 

 

குறும்படத்தைப் பாருங்கள்

 

*** https://www.independent.co.uk/news/long_reads/synaesthesia-sound-taste-health-science-brain-a7996766.html

 

 

 

 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து

Related image

Related image

 

ஒருவர் மனதை ஒருவர் அறிய

உதவும் சேவை இது – வாழ்வை

இணைக்கும் பாலம் இது !

 

ஏதோ தத்திக்கொத்தி நானும் வேலை செய்ய ஆரம்பித்தேன். வானத்தை வில்லாக வளைக்கிற வேலையென்று இல்லாவிட்டாலும்  நான் பதிவு செய்யும் விஷயங்கள்போலப் பல வேறு கிளைகள் பதிவு செய்தவை  நிறுவனத்திற்கு சில முடிவுகள் எடுக்க ஆதாரங்களாக இருக்குமாம்.  ஒரு சில சமயங்களில் சில விளக்கங்களும் கேட்கப்படும்.

பதிவுகள் ஓரிரு வார்த்தைகளாக இருந்தால் ஏதோ சமாளித்து எழுதிவிடுவேன். மூன்றாவது வார்த்தை என்றாலே ஒரு நேர்கோட்டில் வராமல் கோணல் மாணலாக வந்து தொலையும். நேராக எழுத மிகுந்த முயற்சி  செய்வேன். ஓரளவிற்கு வெற்றிதான்

நான் குடியிருந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு சிறுமி திண்ணையில் உட்கார்ந்துதான்  வீட்டுப்பாடம் எழுதுவாள். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு  ஏதோ சந்தேகம் கேட்டாள். நான்  சொன்ன பதில் அவளுக்கு உபயோகமாக இருந்ததா என்று தெரியாது. ஆனால், எனக்கு ஒரு  புதிய ஐடியா கிடைத்தது. அவள் எழுதும்போது எழுதவேண்டிய கோட்டிற்கு சற்று மேலே ஒரு ஒரு-அடி ஸ்கேலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு எழுதுவதைக்  கவனித்தேன். எழுத்துகள் அந்த ஸ்கேலை முட்டுமாறு எழுதினால் எழுத்துக்கள் ஒரே அளவில் இருக்க, கீழே உள்ள கோட்டின் உதவியால் நேராக இருக்க, வார்த்தைகள் வரிசையாக ஒழுங்காகத் தோற்றமளித்தன.  பிறகென்ன! மறுநாள் முதல் எனக்கு ஸ்கேல்தான் உபகரணம். கூட வேலை செய்யும் நண்பர் ஒருவர் என்னை ஸ்கேலாயுதம் என்றுகூட கேலி செய்வார்.

போஸ்ட் ஆபீஸ் நான் குடியிருந்த தெருவில்தான் இருந்தது. நான் அலுவலகம் போகும் நேரமும், தபால்காரர் தபால்களோடு வெளியே வரும் நேரமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அவருக்காக நான் சிறிது நேரம் காத்திருப்பது வழக்கம்.  ஏதோ ஒரு படத்தில் ஜெய்சங்கர்போல ‘ஒருவர் மனதை ஒருவர் அறிய .. ’ என்று பாடிக்கொண்டு வரமாட்டார்.  அவர் அந்தத் தெருவிலேயே  ஒரு வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்து தெரு வாரியாகத் தபால்களைப் பிரிப்பார். கடிதம் எதிர்பார்க்கும் சிலர் அங்கு வந்து நின்றுவிடுவார்கள். அந்த சமயம் அவர் கோபிகா ஸ்திரீகள் சூழ்ந்த கண்ணன்போல எனக்குக் காட்சி தருவார்.

முதலில் அலுவலகத் தபால் என எனக்குக் கொடுத்துவிடுவார். யாரவது “எனக்கு தபால் உண்டா?” என்று கேட்டால் தேடி எடுத்துக் கொடுத்துவிடுவார்.  இல்லையென்றால், “இப்பத்தான் எழுதிக்கிட்டு இருக்காங்க போலிருக்கு.” என்பார். திங்கள் கிழமைகளில்  பஸ்ஸை விட்டிறங்கித் தபால் ஆபீஸ்  வழியாக வந்து கடிதங்களை வாங்கிக்கொண்டு அலுவலகம் வருவேன்.

நம்மில் பலருக்குக் காலையில் நியூஸ் பேப்பர வந்தால்தான் பொழுதே விடியும். என்றேனும் தினசரி இல்லை என்றால் என்னவோ போல்தான் இருக்கும். அதுபோல, தபால் வரவில்லை என்றால் அலுவலக மேலதிகாரி சேஷையனுக்கு ஒரு வேலையும் ஓடாது.  என்றாவது எங்கள் அலுவலக வேலை நாளாகவும் தபால் அலுவலக விடுமுறையாகவும் இருந்தால், அரை மணிக்கு ஒருமுறை “இன்னிக்குத் தபால் கிடையாதில்ல?”  என்று சொல்லிக்கொண்டு இருப்பார்,

ஒரு திங்கட்கிழமை ஊரிலிருந்து நேரடியாக ஆபீஸ் வந்துசேர்ந்தேன். பஸ் பிரேக் டவுன் காரணமாகச் சற்று தாமதம் ஆகிவிட்டது. அந்த பஸ்சிலேயே என்னுடன் மற்றொரு ஊழியரும் வந்தார்..  இருவரும் லேட்.  நேராக அலுவலகம் போய்விட்டோம். தபால்காரரும் ஊரெல்லாம் சுற்றித் தபால் கொடுத்துவிட்டு நேரம் கழித்தே எங்கள் அலுவலகம் இருக்கும் பகுதிக்கு வந்தார். அதற்குள்ளாக சேஷய்யன்  சார்  ‘இன்னும் வரலியா?’, ‘இன்னும் வரலியா?’ என்று பலமுறை கேட்டுவிட்டார். அப்படி ஒன்றும் மிக முக்கியமான தபால் வந்து உலகம் மாறிவிடப் போவதில்லை என்றாலும் அப்படி ஒரு ஆரவாரம்.

தபால்காரரும் வந்தார். கடிதங்களை என்னிடம் கொடுக்க, நான் சேஷய்யன் சாரிடம் கொடுத்தேன். 

பத்து நிமிடம் கழித்து என்னைக் கூப்பிட்டார் சேஷய்யன்.  நான் உள்ளே போனேன்.

“உங்களுக்கு வேண்டியவங்க யாராவது மெட்ராஸில் இருக்காங்களா?” என்று கேட்டார்.

“என் அண்ணன் இருக்கிறான்” என்றேன்

“நீங்கள் மெட்ராஸில் ஒரு வாரம் தங்கவேண்டும். அவரோட தங்கிக்கொள்ளலாம் இல்லியா?” என்று கேட்டார்.  ஒன்றும் புரியவில்லை.

ஒரு கடிதத்தை  என்னிடம் காட்டினார்.  அப்போது மெட்ராஸ் சென்னை ஆகவில்லை. சென்னை மாநிலம்தான் தமிழ்நாடு ஆகியிருந்தது. சென்னையில் இருந்த எங்கள் பயிற்சி மையத்தில் என்னை ஐந்து நாள் பயிற்சிக்கு வரச்சொல்லி இருந்தார்கள். புதியதாக வேலைக்குச் சேரும் ஒவ்வொருவருக்கும் இந்தப் பயிற்சி உண்டாம்.  இது தமிழ்நாட்டுக்கான மையம் என்பதால் மொழி ஒரு தடையாக இருக்காது என்று தோன்றியது.

சென்னை செல்ல 20 நாட்கள் இருந்தன. முதலில் சென்னை போய்வர இரயிலில் முன்பதிவு செய்யவேண்டும் என்றார்கள். வரும் தகவலை அண்ணனுக்குத் தெரிவித்துத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துகொள் என்று மற்ற ஊழியர்கள் அறிவுறுத்தினார்கள்.

தாமதம் செய்யாமல் அன்றே ஏற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். முதலில் கடிதம்.  உண்மையைச் சொல்லப்போனால் இதற்கு முன் கடிதம் எழுதியது ஒரே ஒருமுறை. பள்ளியில் படிக்கும்போது (எட்டாம் வகுப்போ அல்லது ஏழாம் வகுப்போ) தான். உள்ளூரில் நடக்கும் திருவிழாவிற்கு நண்பன் ஒருவனை அழைப்பதாக வகுப்பில் உள்ள எல்லோரும் எழுத வைக்கப்பட்ட பாடத் திட்ட கடிதம்.  தபாலாபீஸ் காணாத கடிதம்.

எல்லோரும்  ‘நண்பனுக்கு’ , ‘வாசுவிற்கு’, ‘அன்புள்ள  ராமுவிற்கு‘ என்று தொடங்கியிருந்தார்கள். ஒரு மாணவன்  மட்டும் ‘அன்பு நண்ப’ என்று தொடங்கியதிற்கு ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார். அந்த மாணவன் யாரென்று தெரிவிக்கவில்லை. அது நான்தான். விஷயம் என்னவென்றால்,  எனக்கு  ‘அன்பு நண்பன் கண்ணனுக்கு’ என்றுதான் தொடங்க  எண்ணம். கவனக் குறைவால் பாதியிலே நிறுத்திவிட்டு அடுத்த வரிக்குப் போயிருக்கிறேன்.

அந்தக் கடிதத்தில் என்ன குற்றம் குறையிருந்தாலும் பெரிய பிரச்சினை இல்லை.  மதிப்பெண் சற்று குறையும்.  இப்போது நமக்கு வேண்டும் என்கிற தகவல் கிடைக்கவேண்டும் என்றால் நம் கடிதம் தெளிவாக இருக்க வேண்டும் அல்லவா?

போகட்டும்…  இப்போது பிரச்சினைகள்  இரண்டு.

  1. ஆபரேஷன் முன்பதிவு:- நான் மாவட்டத் தலைநகர் புகைவண்டி நிலையம் போகவேண்டும். படிவத்தைச்  சரியாகப் பூர்த்தி செய்து டிக்கட் வாங்கிக்கொள்ள வேண்டும்.  தேதியும் வண்டியும் குழப்பமின்றித் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். நல்ல வேளையாக சென்னைக்குத் தினம் மாலையில் ஒரு வண்டிதான்.
  2. ஆபரேஷன் தபால்:- அண்ணனுக்குத் தகவல் தெரியவேண்டும். அவன் முகவரி தெரியாது. வீட்டிற்குக் கடிதம் எழுதி , நான் வரும் விவரம் அண்ணனுக்குத் தெரிவித்து, எப்படி அவனை சந்திப்பது, தங்குவதற்கு என்ன ஏற்பாடு என்று கேட்டுவைத்துக் கொள்ள வேண்டும். நான் வாரமுடிவில் வீட்டுக்குப் போகும்போது விலாசமும் மற்ற விவரங்களும் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் .. ஆபரேஷன் தபால் முடிக்கலாம். தபால் அலுவலகம் சென்று விட்டேன். அஞ்சலட்டையை விட உள்நாட்டுக் கடிதம் என்னும் ‘Inland Letter’ எழுதிவிடலாம் என்று முடிவெடுத்தேன். ஊரில் எங்கள் அடுத்த வீட்டு மாமா எப்போதும் அஞ்சலட்டை தான் எழுதுவாராம். ஒரு அஞ்சலட்டைக்கு மேல் விஷயம் இருந்தால் இரண்டு அஞ்சலட்டை எழுதுவாரேதவிர   உள்நாட்டுக் கடிதம் உபயோகிக்க மாட்டார். காரணம் மிக எளிது. அஞ்சலட்டை அப்போது 15 காசு. உள்நாட்டுக் கடிதம் 50 காசு. மூன்று அஞ்சலட்டை எழுதினாலும் 5 காசு மிச்சம்.

அவருக்கு இன்னொரு வித்தியாசமான குணாதிசயமும் உண்டு. மற்றவர்களுக்கு வரும் கடிதங்களைப் படிக்கக்கூடாது என்ற கோட்பாடு எல்லாம் அவருக்குக் கிடையாது. எங்களுக்கு வருகின்ற தபால் அவருக்கு முன்னால் கிடைத்துவிட்டால், “என்ன … உங்கள் சித்தப்பாவுக்கு பேரன் பிறந்திருக்கிறானாமே?” என்று கேட்டுக்கொண்டே கடிதத்தைக் கொடுப்பார். ஒன்றுவிட்ட அத்தை எப்போது கடிதம் எழுதினாலும், அவர் குடும்பத்தில் யாருக்கு என்ன உபாதை இருந்தது, எப்போது சரியாயிற்று என்று கட்டாயம் எழுதுவார். அதில் ஒன்றைப் பாராட்டவேண்டும், சென்ற கடிதத்தில் எங்கே முடித்தோம் என்று நினைவில் கொண்டு காலக்கிரமத்தை சரியாகத் தொடர்வார். அடுத்த வீட்டுக்காரர் கையில் அது போன்ற கடிதங்கள் அவ்வப்பொழுது மாட்டும்.  “அத்தையிடமிருந்து  வர கார்டுக்குக் கூட டெம்பரேச்சர் இருக்கும்” என்பார் அந்த மாமா.

நான் அஞ்சலட்டைதான் எழுதும்படியாக ஆயிற்று. உள்நாட்டுக் கடிதம் இருப்பு இல்லையாம். அஞ்சலட்டையும் “ரிப்ளை கார்டு” தான் இருந்தது. வசதிதானே.  அப்பாவோ அம்மாவோ பதிலெழுதக் கார்டு கவர் வாங்கப் போகவேண்டாமே!  இல்லையே…, அண்ணனுக்கு எழுத தபாலாபீஸ் போய் வாங்கத்தானே வேண்டும்.

ரிப்ளை கார்ட் உபயோகித்துப் பார்ப்போமே என்று தோன்றியது. ஒரு அட்டையில் எனது விலாசமும் மற்றொரு அட்டையில் அப்பாவில் விலாசம் எழுதினேன். கவனமாக அப்பாவின் விலாசம் எழுதிய அட்டையில் விவரம் எழுதி ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துவிட்டு பெட்டியில் போட்டுவிட்டேன்.   வெற்றி….

ஆபரேஷன் முன்பதிவு:- நான் இரயிலில் பயணம் செய்தே , ஏன் பயணம் செய்ததே, மிகக் குறைவு. அதுவும் எப்போதும் பொது பயணிகள் பெட்டிதான், முன்பதிவு என்று ஒன்று உண்டு என்பதே வெகு நாட்கள் கழித்துத்தான் தெரியும்.  இரயிலில் ஏறுவதும் இறங்குவதும் எப்போதுமே ஒரு சர்க்கஸ்தான்.

இப்போது உள்ளதுபோல இணையம் கிடையாது. ஏன்..  பதிவுகள் கூட கணினிமூலம் கிடையது. முன்பதிவிற்கு மாவட்டத்  தலைநகர் போகவேண்டும். அங்குதான் முன்பதிவு வசதி இருந்தது.. முன்பதிவு இயங்கும் நேரத்தில் அங்கே இருக்கவேண்டும் என்றால் , எங்கள் அலுவலகம் முடியும் முன்பே பஸ் பிடித்தால்தான் நடக்கும். சேஷய்யன் சார்  பெருந்தன்மையோடு அனுமதி அளித்தார். இரண்டு பேனாக்கள் (சரியாக எழுதுகிறதா என்று பரிசீலித்து விட்டு) எடுத்துக்கொண்டேன். விண்ணப்பத்தில்  எழுதவேண்டியவற்றை ஒரு தாளில் குறித்துக்கொண்டேன்.  (அதுவும் இரண்டு பிரதிகள். ஒன்று சட்டைப் பையில் ஒன்று கைப் பையில்.)

இரயில் நிலையத்தில் விண்ணப்பப் படிவம் எடுத்துக்கொண்டேன்.  மூன்று படிவங்கள் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டது என்பது உட்கார்ந்து எழுத ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது  ஒருபடிவத்தை நிரப்பினேன். ஒரே அடித்தல் திருத்தல். கைவசம் படிவங்கள் இருந்ததால்  நிதானமாக அடுத்த படிவத்தை நிரப்பினேன் 

மூன்றாவது படிவத்தில் திரும்பிவரும் பயணம் பற்றிய விவரங்களை எழுதும்போதுதான் – “ரிடர்ன் ஜர்னி’ என்னும் பகுதியை கவனித்தேன். மீண்டும் ஒரு படிவம் எடுத்துக்கொண்டு நிதானமாக நிரப்பி முடித்தபோதுதான் ஒரு ஞானோதயம்.. சரியாக எழுதியிருந்த இரண்டாம் படிவத்திலே காரியத்தை முடித்திருக்கலாம் என்று. (தாய் பூனைக்கும், குட்டி பூனைக்கும் சுவற்றில்  இரண்டு ஓட்டைகள் போட்ட விஞ்ஞானியும் நானும் ஒன்றுதானே?)

அங்கிருந்த அந்த உதவியாளர் பூதாகாரமான ஒரு பேரேட்டை எடுத்தார். அதன் பக்கங்களைப் புரட்டும்போது அவை எளிதில் கிழியக்கூடிய மெல்லிய தாள்கள் என்பதை கவனித்தேன். நல்லவேளை! சில கூட்டுறவு அலுவலக பதிவேடுகள்போல கார்பன் வைப்பது – கிழிப்பது என்றெல்லாம் இல்லை.  ஒரு இடைஞ்சலும் இல்லாது டிக்கட்டுகள் கிடைத்தன. சரியாகவும் இருந்தன. மாபெரும் வெற்றி.

மறுநாள் மதியம் நான் போட்டிருந்த ரிப்ளை கார்ட்  எனக்கே திரும்பி வந்துவிட்டது . எந்த அட்டையில் எந்த முகவரி  எழுதவேண்டும் என்று அதிலேயே அச்சடித்திருந்தார்கள். நான் மாற்றி எழுதி உள்ளேன். பாதி வழியிலேயே  இரண்டு அட்டையும் இணைபிரியாமல் என்னிடமே திரும்ப வந்துவிட்டது. முதல் வெற்றி .. படு தோல்வியாக மாறிவிட்டது.

மறுநாள் விடுப்பெடுத்துக்கொண்டு நேரடியாக ஊருக்குச் சென்று அண்ணனுக்குக் கடிதம் எழுதி  ஒருவாறாக வேலை முடிந்தது. அந்த ரிடர்ன் கார்டும்,  ரிடர்ன்  ஜர்னியும் மறக்க முடியாத விஷயங்கள்.

இனி என்ன … மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்தான் ….

                                    

  ராணி   பாட்டி – பொன் குலேந்திரன்

Image result for 95 வயது கிழவி

  

 

அரியாலை (Ariyalaiயாழ்ப்பாணத்தில் இருந்து A9 கண்டி வீதியில் ஏறத்தாழ கிமீ தூரத்திலுள்ள இடமாகும். இப்பகுதியில் முன்னொருகாலத்தில் மரஅரிவு ஆலைகள் பல காணப்பட்டதினாலேயே. இப்பகுதி அரியாலை என்றழைக்கப்பட்டது. இப்பகுதி கல்வி மற்றும் சமூக வளர்ச்சிகளில் மிகவும் முன்னேறியுள்ளது.  யாழ்ப்பாணக் குடாக்கடலை நோக்கித் தவழ்ந்து செல்லும் கடலேரியும் அமைந்திருக்க, மேலும் தென் திசையில் பாண்டியன் தாழ்வு – கொழும்புத்துறையைச் சென்றடையும் வீதியும், மேற்கே கச்சேரி – நல்லூர் வீதியும், வடக்கே செம்மணி- வீதியையும் எல்லைகளாகக்கொண்டு அழகு மிளிரக் காட்சி தரும் கிராமம் ஒன்றினைக் காணலாம்

 

அந்தக் கிராமத்தில் பிரபல்யமான வேளாளர் குடியைச்  சேர்ந்த செல்வராணி பாட்டிக்கு  வயது தொன்னுற்று ஒன்பது  என்று  சொன்னால் ஒருவரும் நம்பப் போவதில்லை. இன்னும் அவளுக்கு ஒரு பல்லும் விழவில்லை. அவள்  பல் தேய்க்கப் பாவிப்பது வெப்பம் தடி அல்லது  ஆலம் விழுது.  அவள் இருந்த  பூர்வீக வீட்டில் இருந்து இருநூறு யார் தூரத்தில்  கடலேரிக்  கரைக்கு அருகே ஒரு பெரிய ஆலமரம். அம் மரத்துக்குக்  குறைந்தது நூறு வயதுக்குமேல்  இருக்கும். ராணி பாட்டி   அந்தத் தள்ளாத வயதில் அவ்வளவு தூரம்  நடந்து சென்று ஆலமரத்தில் உள்ள விழுதப்  பிடுங்கப் பல் தேய்த்து , குளத்தில் குளித்து வருவது அவள் செய்யும் செயல்களில் ஓன்று. ராணி நீச்சல் தெரிந்தவள்.   

அவள்  வாழும்  மூன்று  அறைகள் உள்ள வீடு  அவளின் தந்தை சங்கரலிங்கம் அவளுக்குக் கொடுத்த சீதனம வீடு . செல்வராணியின் புருஷன் ராஜலிங்கம்,  தெனியாயாவில் உள்ள  ஒரு தேயிலைத்  தோட்டத்தில் சகல வசதிகளோடு   பெரிய துரையாக  வேலை  செய்தார் . அமைதியானவர். கால் பந்தாட்ட வீரர் கூட.  அவர் படித்தது பிரபலமான  சுண்டுக்குளியில் உள்ள  பரியோவான் கல்லூரியில்..  . 

 

செல்வராணி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் படித்து. பத்தாம் வகுப்புப் பரீட்சையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, ஆங்கில இலக்கியம்  ஆகிய   பாடங்களில்  ஏ(A) க்கள் பெற்று, மேலும் படிப்பைத்  தொடராது பதினறு வயதானபோதே    தூரத்து உறவினரான  ராஜலிங்கத்தைத் திருமணம் செய்தவர். சாதிப் பிரச்சனை அவர்களின் திருமணத்தில் இருக்கவில்லை, காரணம் ராஜலிங்கம் சங்கரலிங்கத்துக்கு தூரத்துச் சொந்தம்.   

 

திருமணமாகிப்  பதினைந்து வருடங்களுக்குள் அவள் மூன்று மகன்களையும் இரு மகள்களையும்  ராஜாவுக்குப் பெற்றுக் கொடுத்தாள் . அவர்களை வளர்த்துப் படிப்பித்து நல்ல இடத்தில திருமணம்  செய்துகொடுத்த பெருமை  செல்வராணிக்குச்  சேரும். படிக்கும்போதே தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டினாள்.

 

அரியாலை கிராமத்தில் பல பெண்களுக்குப் பிள்ளைப்பேறு பார்த்த மருத்துவிச்சி ராணி பாட்டியை தெரியாதவர்  அவ்வூரில் இல்லை. ராணி கைராசிக்காரி.  அவள் கை பட பிள்ளை பிறந்தால் ஒரு பிரச்சனையும் தாயுக்கு இருக்காது. அதோடு போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவளத் துணையும் ( Counselling) செய்தாள். போர் காரணமாக  கனடாவுக்குப் புலம் பெயர்ந்தும் அவளின் சேவை தொடர்ந்தது.   

 

தன் ஊரில் ஒரு காலத்தில் செய்த சேவைக்கு அவள் பணம்  வாங்கியதில்லை . அப்படி இருந்தும் பிரசவம் பார்த்த குடும்பம் அவளின் மருத்துவிச்சிக் கூலியையும் ஒரு சேலையும் கொடுக்கத் தவறுவதில்லை  . அவள் நச்சுக் கொடி அறுத்த குழந்தையின் காது குத்து விழாவுக்கு அவளை அழைக்கவும்  தவறமாட்டார்கள்.

 

செல்வராணி கால் சுளுக்கு பார்ப்பதிலும் கெட்டிக்காரி.  அவள்  காலால் பிறந்ததால்   அவள் சுளுக்குப் பார்த்தால் மூன்று நாட்களில் சுளுக்குப் போய்விடும் என்பது ஊர் மச்கள நம்பிக்கை.

 

தெய்வ நம்பிக்கையும், ஆவி நம்பிக்கையும் வேரூன்றியுள்ள நாட்டுப்புறச் சமூகத்தில் நம்பிக்கை மந்திர மருத்துவமும் தொடர்ந்து இருந்து வருகின்றன. அதனால்   சில சமயம் ராணி பாட்டி  பார்வையும் பார்த்து மந்திரித்துத் தலையில் திருநீறு போட்டால் தேகத்தில் இருக்கும் நோய் ஓடி ஒளிந்துவிடும். அவளுக்குள்  ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது ஊர் பேச்சு.

 

இரு காதுகளிலும் பிரகாசமாக மின்னும் பெரிய தோடுகள்.   மூக்கில் ஒரு மூக்குத்தி. சுருக்கு விழாத தோல் . முகத்தில் ஒரு புன்சிரிப்பு. இதுதான் செல்வராணிப் பாட்டியின் தோற்றம் .

 

ராணி பாட்டியின்  பேரன் ரமணன் ஒரு டாக்டர்.  மரபணுப் பொறியியல் துறையில் மரபணுவால் தோன்றும் நீரிழிவு, நீரக வியாதி, புற்று நோய், இருதய நோய் போன்றவற்றின் அடிப்படைக்  காரணத்தைக்  காண சில வைத்தியர்களோடு ஆராய்ச்சி செய்துவந்தான். தன் பாட்டியும்,  அவளின் மூதாதையரான  கொப்பாட்டன், பாட்டன், தந்தை  நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள், வியாதிகள் இல்லாது வாழ்ந்தவர்கள்  என்பது அவனுக்குத் தெரியும். ஒரு நாள் தன்  பாட்டியோடு அவன் உரையாடும்போது,

” பாட்டி உங்கள் மூதாதையர்  நீண்ட காலம் வாழ்ந்து மரணித்தவர்கள்.  அவர்கள் இந்துக்களானபடியால் அரியாலையில்  உள்ள செம்மணிச்  சுடலையில்  தகனம் செய்ததாகப் பாட்டா சொல்லி அறிந்தேன். அது உண்மையா?” 

 

” உண்மைதான்  ரமணா.  நான் படித்த  கல்லூரியில் படித்த 19 வயது கிருஷாந்தி என்ற மாணவியை 1996 இல் கூட்டாக இராணுவத்தினர் கற்பழித்து அந்த  செம்மணிச் சுடலையில், அவளையும், அவளின் தாய், தம்பி,  இன்னுமொரு உறவினரையும்   கொலைகாரர்கள் புதைத்த சம்பவம்  எனக்கு இன்றும் என் நினைவில் இருக்கிறது. அந்த மாணவியின் தாயை எனக்குத் தெரியும். கற்பழித்துக் கொலை செய்த ஆறு பேருக்கு 1998 ல் மூன்று நீதிபதிகள் மரணதண்டனை  விதித்தார்கள்.  19 வருடங்களுக்கு மேலாகியும் அவர்கள் இன்னும் உயிரோடு ஜெயிலில்  இருக்கிறார்கள். காரணம், அவர்கள் இராணுவத்தினர்  என்பதால் .

 

இதுதான் தர்மம் இல்லாத சுயநலம் கலந்த அரசியல். அது சரி  பாட்டி! இந்த வயதிலும்  பாடி, நீங்கள் மக்களுக்கு சேவைகள் செய்து வருகிறீர்கள். உங்கள் மரணத்துக்குப் பின் தொடர்ந்து மக்களின் நீண்ட வாழ்வுக்குச் சேவை செய்யலாம் அல்லவா?”

 

“ நீர் சொல்வது எனக்கு புரியவிலை ராசா, சொஞ்சம் விளங்கத்தான் சொல்லுமேன்” ராணி பாட்டி பேரனுக்கு சொன்னாள்.

“ பாட்டி  உங்கள் மூதாதையர் உங்களைப்போல் நீண்ட ஆயுள் உள்ளவர்களாக  வாழ்ந்தார்கள் . இது என் கருத்துப்படி நீண்ட வியாதி இல்லாத வாழ்வு  மரபணுவோடு தொடர்புள்ளது. இதுபற்றிய ஆராய்ச்சியில் மூன்று வைத்தியர்கள் சேர்ந்து  ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் மரணத்தின் பின்  உங்கள் உடலை மரபணு  பொறியியல் மருத்துவ   ஆராய்ச்சிக்குப்  பயன்படுத்தத் தானம் செய்வதைப்பற்றி நீங்கள் ஏன் இன்னும்  சிந்திக்கவில்லை?” 

 

“நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி  நீ  சொல்லியிருகிறாய் ரமணா. என் உடல் எரிந்து ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாது சாம்பலாகுமுன் மருத்துவ ஆராய்சிக்குப் பயன்படுத்தி  வருங்காலத்தில் மானிடர்களுக்கு  நீண்ட ஆயுளைக் கொடுக்க உதவட்டும் . இதைப்பற்றி நான் விரைவில் முடிவெடுக்கிறேன்” என்றாள்  டாக்டர் ரமணனின் ராணி பாட்டி. 

****   

ஏப்ரல் மாதத்தில் அவளின்  நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட 5 பிள்ளைகள்,   10 பெரப்பிள்ளைகள், 4 பூட்டப் பிள்ளைகள்.   2 கொப்பாட்டப்  பிள்ளைகள்,   இனத்தவர்கள், ஊர் சனங்கள்,  ஆக மொத்தம் 51 பேர் கொண்டாட ஆயித்தங்கள் செய்தார்கள். அவள் பிறந்தது முதலாம் உலக யுத்தம்  முடிவுபெற்ற  1918 ஆம் ஆண்டு.

ராணி பாட்டிஊரில் பல பெண்களுக்கு மருத்துவிச்சி வேலைசெய்து குழந்தையின்  தொப்புள் கொடி அறுத்த பலர் இப்போ வைத்தியர்கள், பொறியிலாளர்கள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் . ஆசிரியர்கள்  வணிகர்களாக  இருக்குறார்கள். பிரசவம்  பார்த்து ஆண் பெண் குழந்தைகளைத் தாயின் வயற்றில் இருந்து சிசேரியன் ஒப்பரேசன் இல்லாமல்  உலகுக்கு கொண்டு வந்தவள்  ராணி பாட்டி

 

****

அனறு 2018 ஏப்ரல்  14 ஆம் திகதி  நூறாவது பிறந்த தின விழா  கொண்டாட்டம். அவள் பிறந்தது தமிழ் புத்தாண்டு  தினத்தில்.  அவள் வீட்டில் ஒரே கூட்டம். கணவனை மூன்று வருடங்களுக்கு முன்பே அவள் இழந்தும், அவள் விதவை கோலத்தில் சமூகத்தில் தோன்ற அவள் விரும்பவில்லை.முற்போக்கு கொள்கைகள் உள்ளவள் . வெள்ளை சேலை அணியவில்லை. நெற்றியில் உள்ள குங்குமத்தை நீக்கவில்லை. பார்த்தவர்கள் அவளை விதவை  என்று சொல்லமாட்டார்கள் .

அன்று ஜூலை மாதம் வழமை போல் புனர் வாழ்வு என்ற தலைப்பில்  சிறு கதை ஒன்றை   எழுதி வைத்துவிட்டு இரவு தூங்கப்   போனவள், காலையில் கண் விழிக்கவில்லை.  நித்திரையில் அவள் விரும்பியதுபோல் அவளின் உயிர்  பிரிந்தது. ராணி பாட்டியின் கட்டிலுக்கு அருகில் உள்ள மேசையில் ஒரு கடித உறை இருந்தது . அதை மூத்த மகன் எடுத்துப் பிரித்தபோது  அதற்குள் ஒரு கடிதம் இருந்தது.

அக்கடிதம்  ராணி பாட்டி தன் முத்து முத்தான எழுத்தில்  எழுதிய ஒரு பக்கக்  கடிதம். மகன் அதை எல்லோருக்கும் வாசித்துக் காட்டினான்.

 ” இந்தக்  கடிதம் நானாகவே தீர்மானித்தபின் எழுதிய கடிதம்.  நான் என் மரணத்தின் பின் என் உடலை மரபணு பொறியியல் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்த தானம் செய்துவிட்டேன். இதற்கான சட்ட ஒழுங்குகளை ஏற்கனவே  என் பேரன் டாக்டர் ரமணன் செய்துவிட்டான். நான் தேவையான பத்திரங்களில் கையெழுத்து வைத்துவிட்டேன். டாக்டர் ரமணனும் அவனின் மனைவியும்  அதற்கு சாட்சிகளாக  கையெழுத்து  ஏற்கனவே போட்டு  விட்டார்கள் . என் கணவர் இருந்திருந்தால்  அவரும்  சாட்சியாகக் கையெழுத்து போட்டிருப்பார் . அவர் மரணிக்க முன் அவரோடு பேசி அவரின் சம்மதத்தையும் பெற்றுவிட்டேன்.

இனி நீங்கள் என் மரண வீட்டுக்கு  ஆடம்பரமாக விலை உயர்ந்த சந்தனப் பெட்டி எடுத்து.  அதில் என் உடலை மலர் வளையங்கள் ஓடு பார்வைக்கு வைத்து, வீண்  செலவு செய்யவேண்டாம். அந்தப் பணத்தை நான் உளவளத்துணை செய்த, போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் வாழும் நிலயத்துக்குக் கொடுங்கள்.  வேண்டுமென்றால்  உங்கள் விருப்பப்படி  எனக்கு நினிவாஞ்சலி வைப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.

இப்படிக்கு

செல்வராணி  ராஜலிங்கம்

ராணி பவனம்

சுண்டுக்குளி வீதி, அரியாலை –

யாழ்ப்பாணம்.

 

அம்மா கை உணவு (6) -ஜி.பி. சதுர்புஜன்

 

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ எண்ணியுள்ளேன்.

 

  1. கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  2. இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  3. தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  4. அடைந்திடு சீசேம் ஜூன் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
  5. ரசமாயம் ஜூலை மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 

  1. போளி புராணம் !

Image result for போளி

போளி நல்ல போளி – இதோ

பாத்திரமே காலி !

நெய் தடவித் தின்றால்

நிறுத்த முடியா போளி !

 

பார்த்தால் ரொம்ப சாது – வெறும்

சப்பாத்தி போல் இருக்கும் !

வெல்லம் தேங்காய் போட்டால் – அதை

வெளுத்துக் கட்டத் தோன்றும் !

 

மேற்கு மாம்பலம் வந்தால்

நினைவில் நிற்கும் போளி !

சும்மா வாயை மென்றாலும் – சுவை

நாவில் நிற்கும் போளி !

 

நேரம் காலம் இல்லை – இரண்டு

போளி உள்ளே தள்ள !

தின்னத் தின்னத் தோன்றும்

திகட்டாதிந்த போளி !

 

மென்மையான மனிதர்

மெலிதாய் போளி தின்பர் !

வயது கூடி விட்டால் – அவர்

மென்று மென்று தின்பர் !

 

வெங்கட்ரமணா போளி – அது

தலையணை போல் இருக்கும் !

தேங்காய்ப் பூரணம் அதிலே – சற்று

தாராளமாய் இருக்கும் !

 

நாள் கிழமை வேண்டாம் – நான்

எந்நேரமும் தின்பேன் !

இரண்டு போளி தின்றால் – அவை

இன்னும் இரண்டு கேட்கும் !

 

பருப்பு மற்றும் தேங்காய் என

வகை வகையாய்ப் போளி !

கார மூடில் இருந்தால் – அதற்கு

காரா போளி உண்டு !

 

மேலும் எழுத மாட்டேன் – எனக்கு

உடனே வேண்டும் போளி !

நாக்கில் ஊறும் நீரை – உடன்

தணிக்க வேண்டும் போளி !

 

போளி நல்ல போளி – இதோ

பாத்திரமே காலி !

நெய் தடவித் தின்றால்

நிறுத்த முடியா போளி !

 

 

@@@@@@@@@@@@@@

 

 

 

 “திறன்கள் குறைந்தால், இப்படியா?” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்

Related image

நானும் என் தோழியும் எப்பொழுதும்போல எங்கள் மையத்திற்குச் சீக்கிரமாகவே வந்துவிட்டோம்.  நுழைந்ததுமே, வரவேற்பாளர், “நான் வருவதற்கு முன்னாலேயே இவர் வந்து விட்டதாக ஸெக்யூரிட்டி ஆபீஸர் சொன்னார்.” அமைதியற்ற நிலையில் இருப்பவரைக் கைகாட்டி, “மேடம், அப்போதிலிருந்து இப்படியே” என்றார்.

எங்கள் மையம், போதைப் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கென மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்டது. எங்கள் வழக்கப்படி நாங்கள்- ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர், முதலில் வருபவர்களிடம் உரையாடி, அவர்களின் நிலவரத்தைக் கண்டறிவோம். அவரை அழைத்துச் சென்றேன். க்ளையன்ட் தங்களின் அந்தரங்கங்களைப் பகிர்வதால் எங்களுக்கென்று தனி அறை இருந்தது.

அவர் கலக்கம் நிறைந்த முகத்துடன், தோளில் தொங்கிய பையை அருவருப்பாகப் பிடித்தவாறு, நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்தார். பையில் சாராய பாட்டில் இருப்பது தெரிந்தது.

நான் வாயைத் திறக்கும் முன்பே அவர் (நிர்மல்) ஆரம்பித்தார். எங்களுடைய மையத்தைப்பற்றி நன்றாகத் தெரியும் என்றார். கடந்த இரண்டு வாரமாக தனக்கு ஒரு அறியாத பயம், வேதன,  தாடி, கசங்கிய உடை.  பலர் “டிப்ரஷன்” என்றார்களாம்.  தான் ஆசிரியர் என்றும், வகுப்பு மாணவர் ஒருவரைப்பற்றிய கவலை இருந்துகொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார்.  தன் செயலற்ற நிலையைத் தாளாததால் பள்ளியிலிருந்து விடுப்பில் இருப்பதாகச் சொன்னார். மதுப் பழக்கம் என்றும் இருந்ததில்லை என்றாலும், யாரோ சொல்ல, நேற்று இரவு ஒரு மது பாட்டிலை வாங்கி விட்டார். மது அருந்தி விடுவோமோ என்று அஞ்சி, வாங்கிய பயத்தில், தூங்காமல், காலை விடிந்ததும் எங்களிடம் வந்துவிட்டார். மது அருந்தவில்லை.

நிர்மலின் வகுப்பு மாணவன் நந்தா.  நன்றாகப் படித்து, வீட்டிற்குத் தேவையானதைச் செய்து, மற்றவருக்கும் உதவுவதைப் பார்த்து, அவன் மீது கர்வப்படுவார். அவன் அம்மாவின் திடீர் மரணத்திற்குப்பிறகு சிரித்த முகம் வாடி, மதிப்பெண் சரிய, அவனைப் பார்த்தாலே மிகவும் வருத்தப்பட்டார். அவனிடம் பேசத் தயங்கினார். நிர்மலுக்கு அவன் மெதுவாகக் கரைவதுபோல் தோன்றியது. சமாதானம் சொல்ல முயன்றார், ஆனால் ஒவ்வொரு முறையும் பேச்சு சிக்கித் தடுமாறினார்.

அவன் படிப்பு சரிவதைத் தடுக்க முடியாததைத் தன்னுடைய இயலாமையே என்றே முடிவு செய்தார்.  ஆசிரியத் தோழர்கள், “பாவம் தான். சின்ன வயசு. போகப்போகச் சரியாகி விடும்” என்றது நிர்மலைத் தேற்றவில்லை. தன் சார்பில் எதுவும் செய்ய முடியவில்லை என்று  எண்ணியதால் மனம் பாரமாக ஆவதை உணர்ந்தார். உள்ளுக்குள் பதறினார்.

யாரோ, “கொஞ்சம் குடி” என்றதும் பயந்து போனார். குடிக்க அவருடைய கோட்பாடு விடவில்லை. நேற்று மாலை நந்தாவைக் கடைவீதியில் பார்த்தார்.  இந்த இளம் வயதில் இத்தனை சுமையா என்று மனதை மிகவும் வருடியது. அந்த நிலையை சமாளிக்கத் தெரியாததால், போய் மது பாட்டிலை வாங்கினார். தன் கோட்பாட்டுக்கு எதிர்ப்பு என்றே ஒரு துளியும் அருந்தவில்லை. அதற்குப் பதிலாக வெகு காலையிலேயே எங்கள் மையத்திற்கு வந்துவிட்டார்.

அவர் இருபத்தி ஆறு வயது இளைஞன். ஆசிரிய முதுகலைப் பட்டம் பெற்று வேலையில் சேர்ந்தார்.  அவர் அப்பா, பண்ணையார். அவரும் அம்மாவும் நிர்மல் டாக்டராக அல்ல ஆசிரியராக வேண்டும் என்று விரும்பினார்கள்.  நிர்மலின் தமிழ் வாத்தியாரான குமரன் சார் தன்னை மிகவும் கவர்ந்ததால், தானும் ஆசிரியர் ஆக வேண்டும் என்றும், அவரைப்போல் மாணவர்களிடம் பாசமாக, நேசமாகப் பாடம் கற்பிக்க வேண்டும் என விரும்பினார்.  கடந்த ஒரு வருடமாக இங்கு நகரத்தில் வீடு எடுத்துக்கொண்டு தனியாக வசித்துவந்தார்.

மாலை நேரங்களில், தோட்ட வேலை, சமையல், துணிகளைத் துவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வதில் பொழுதுபோனது. வகுப்புகளை அருமையாக எடுக்கவேண்டும் என்பதே அவர் குறிக்கோளாக இருந்தது. மாணவர்களைத் தன் பிள்ளைகளைப்போல் எண்ணி, நலனை விசாரித்து, உதவியதும் உண்டு.

சுறுசுறுப்பாக இருந்த நிர்மலின் தினம், தண்டால் தூக்குவது, ஐந்து கிலோமீட்டர் ஓடுவது எல்லாம் நின்றது.  செடிகளுக்குத் தண்ணீர் விடாமல் வாடிப்போனது.  நந்தாவின் வாடிய முகம் வாட்டியது. பாடம் கற்றுத்தர கஷ்டப் பட்டார். ஸ்கூல் செல்லவில்லை.

அம்மா-அப்பாவுக்குத் தகவல் சொல்லவில்லை. நிர்மல் உடும்புப்பிடியாக பிடித்திருந்தது, மனதைத் தளர விடக்கூடாது, உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என்று. அதனாலேயும் மது அருந்தவில்லை. தன் கிராமத்தில் குடியை எதிர்த்து விழிப்புணர்வு பிரசாரம் செய்திருக்கிறார்.  “எல்லாம் தெரிந்தும் ஏன் இப்படி இருக்கிறேன்?” என்றார்.

மருத்துவ முறையில் இது மன அழுத்தத்திற்குள் வராது. அவருடைய அனுதாபத்தினால் நேர்ந்தது.  இரக்கம் காட்டுவது மிகச் சிறந்த குணம். ஆனால் நிர்மல் இரக்கத்தில்,  “நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று எண்ணிக்கொண்டு தன்னைத்தானே வருத்திக்கொண்டதால் இந்த நிலை நேர்ந்தது. அவர் இதுவரை கடைப்பிடித்த ஓடுவது – உடற்பயிற்சி – தோட்டவேலை மன அழுத்தம் வராத கவசமாக இருந்தன. எங்கள் மொழியில் இதை, “பாதுகாப்புக் காரணி” (protective factor) என்போம்.  இவை தானாக இயங்கும் ‘வரும் முன் காப்பு’.  நிறுத்தியதும் கவசம் நீங்க ஆரம்பித்தது.

மருத்துவரீதியாகப் பார்த்தாலும், டக்கென்று அதுவரை செய்துகொண்டிருந்ததை நிறுத்தியதும், அதிலிருந்து சுரப்பித்த ரசாயனங்கள் குறைந்து, மனதைத் தளர வைத்ததால் சஞ்சலங்கள் உண்டாயிற்று.

நிர்மலும் ஒப்புக்கொண்டார், இப்போது நேர்ந்த சூழ்நிலைகளை பெரிய சவாலாக நினைத்துவிட்டதாக.  இதுவரையில், தன் அம்மா-அப்பா-அண்ணன் நிழலில் இருந்துவிட்டதாலும், பண்ணையின் இளைய மகன் என்பதாலும், அவனுடைய எல்லாப் பிரச்சனையையும் அவர்களே தீர்த்து வைத்தார்கள். வேறு யாரும் எந்தப் பிரச்சனையையும் நிர்மலிடம் கொண்டுவந்ததும் இல்லை. எல்லோரும் அறிந்தது, யாராவது வேதனையில் இருந்தால் நிர்மலுக்கு தாங்கக்கூடிய மனதே இல்லை என்று. இளகிய மனம் உடையவராகத் தன்னை வர்ணித்தார்.

இப்படி அன்பு செலுத்துவதை, அவர் அம்மா எப்பொழுதும், “நிர்மல், உனக்கு என்ன பரந்த குணம், தயாளு மனசு” என்பாள். யார் உதவி கேட்டாலும் செய்யும் கை உடையவர்.

பிறர் வேதனையைத் தாளமுடியாதது நிர்மலின் சமூக-உணர்வுத்-திறன் (Social-Emotional Skills) மிகப் பலவீனமாக இருந்ததின் அறிகுறி. சோகம், வேதனை  உணர்வுகளை மன அழுத்தம் என்று குறிப்பிடுவதனால் குழப்பங்கள் எழுகின்றன. சர்வசாதாரணமாக  “எனக்கு ஒரே டிப்ரஷன்” என்று குறிப்பதும், “அப்படி என்றால் டிப்ரஷன்” என்ற லேபில்லை மற்றவருக்கு அணிவிப்பதாலும் நிகழ்கிறது.

நிர்மலின் நிலையைச் சுதாரிக்க முதல் முதலில் அவருடைய வாழ்க்கைக்கும் அர்த்தம் உள்ளது என்பதைப்பற்றி உரையாடினோம். அவரின் நெடுநாள் கனவான ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம். அவர் குடியிருப்பில் ‘இரவுப் பள்ளி’. வசதி இல்லாதவர்களுக்குப் பாடம் தெளிவு செய்வது என்று இரண்டு மாணவர்களுடன் ஆரம்பித்தார்.

இத்துடன், ஓடுவது-உடற்பயிற்சி-தோட்ட வேலை அமைப்புகளை மீண்டும் தொடங்கப் பரிந்துரைத்தேன். இவற்றைச் செய்யும்போது, நாம் சுவாசிப்பதில் வித்தியாசம் உண்டு. அதிக அளவில் ஆக்ஸிஜன் உள்ளே சென்று கார்பன் டைஆக்ஸைட் வெளியே வர, உடல்-மனம் நலம் கூடும்.

செய்கையில், சுற்றி இருக்கும் பறவைகள், பட்டாம்பூச்சி, மலர்கள், வானத்தின் கோலங்கள், மற்றவரின் முக பாவம், எல்லாவற்றையும் கவனிக்கப் பரிந்துரைத்தேன். இதில் நம் கவனம் தன்னை, தன் நிலையைவிட்டு இயற்கை மீது உலாவ, மனத்திற்கு அமைதி கிடைக்கும். நிர்மல் செய்து, உணர்ந்தார்.  தினம், விடாமல் செய்ததால் வித்தியாசத்தை உணர (பார்க்க) முடிந்தது.  அதுவே பழக்கமாகி, நாளடைவில் நிர்மலின் உடல்-மன நலனை மேம்படுத்தியது.

அடுத்ததாக, நந்தாவிற்கு எப்படி உதவுவது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். பலவற்றைப் பட்டியல் இட்டோம், ஆனால் எதுவும் பிடிபடவில்லை. நிர்மலை நந்தாவை கூர்ந்து கவனிக்கச் சொன்னேன். இது, அவருடைய இரக்க சுபாவத்தை,  ‘ஐயோ பாவம்’ என்ற பலவீனமாக இல்லாமல், நிலைமையைப் புரிந்துகொள்ளும் பலமாக மாற்றும் கருவியானது.  இரண்டே வாரத்தில், பரவசத்துடன் நேரம் குறித்து, வந்து பார்த்தார்.

நிர்மல்-நந்தாவை ஒரு பிராணி இணைத்தது. கிராமத்தில் வளர்ந்ததால், நிர்மலுக்கு ஆடு, மாடு, நாய், எல்லாம் பழக்கம். ஜீவராசிகளுக்கு உயிர் உள்ளதால் பெயரிட்டுக் கூப்பிடுவது நிர்மலின் வீட்டு வழக்கம்.

இவர்கள் பள்ளிக்கூடத்தின் அருகில் ஒரு தெரு நாய்க் குட்டி இருந்தது.  ‘சொரி நாய்’ என்று அழைத்து, கல்லால் அடித்ததால் பலத்த காயம் பட்டிருந்தது. நந்தா கண்கள் கலங்கி இதை நிர்மலிடம் கூறினான்.  நிர்மலுக்கு என்ன செய்வதென்று தெரிந்தாலும் சமூக-உணர்வுத்-திறன் குறைபாட்டால் வெலவெலத்து, என்னிடம் கேட்க வந்துவிட்டார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல், நிர்மலுக்கு நந்தாவுக்காக ஏதோ செய்யவேண்டும் என்பதற்கு இது அமைந்தது. முதல் கட்டமாக இருவரும் நாய்க்குட்டிக்கு  ‘விசித்திரன்’ என்று பெயர் சூட்டினார்கள். ஆகாரங்கள் கொடுத்து, விசித்திரனுடன் பேசுவது, பந்து போட்டு விளையாடுவது,  இவர்களின் உறவை வலுவாக்கியது. பாதுகாப்பாகக் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச்சென்று கவனித்துக் கொண்டார்கள்.

நந்தா விசித்திரனுக்குத் தன் பாடங்களை ஒப்பிப்பது, மண்ணில் கணக்கு போட்டுக் காண்பிப்பது, எனப் பல செய்துவந்தான். விசித்திரன் உற்சாகத்துடன் கேட்டுக்கொள்வது வாடிக்கை ஆனது. நந்தா படிப்பு சுதாரித்தது.

நிர்மலுக்கு நந்தாவின் சிரிப்பைப் பார்த்து, படிப்பு நன்றாவதைக் கவனிக்க, மனம் நிறைந்தது என்றார்.  மனக்கிலேசங்கள் இருப்பவருக்குப் பிரத்தியேக முறையில் ஜீவராசிகள், செல்லப் பிராணிகளைப் பராமரிப்பது ஒரு சிகிச்சை முறையே.  தற்செயலாக நிகழ்ந்து இருவரின் நலனையும், உறவையும் மேம்படுத்தியது!

நிர்மலும் தன் உடமைகளைப் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார். செடிகள் உயிர் பிழைத்தன. இதை வைத்தே எங்களுடைய பல  கௌன்ஸலிங் செஷனில் நிர்மலின் பாசத்தைப் பகிர்ந்துகொள்ள வழிகளைப்பற்றி உரையாடினோம்.

நந்தாவிற்கும், மற்ற மாணவர்களுக்கும் சமூக-உணர்வுத்-திறன் பயிற்சி அளிப்பது என்று ஆரம்பித்தோம்.  திறன்கள் ஒவ்வொன்றையும் நிர்மல் புரிந்து, செயல்படுத்தும் விதங்களை ஆராய, அவரின் திறன்களும் மேம்பட்டது.

நிர்மல் பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகளிடம் பேசி, ஆசிரியருக்கும், மற்றவருக்கும் இந்தப் பயிற்சிசெய்யப் பரிந்துரைத்தார். அவர்கள் ஆமோதிக்க ஆலோசகராகச் செய்ய ஆரம்பித்தேன்.

நிர்மலுக்கும் புரிந்தது, மற்றவர்களுக்கு ஃபீல் பண்ணுவது இரக்கமாக இருந்தால், ‘ஐயோ பாவம்’ என்று இருந்துவிடுவது Sympathy. Sympathyயில் நம் உணர்வை வெளிப்படுத்துவோம்.  Empathyயில் நாம்  மற்றவரின் நிலையை உள்வாங்கிப் புரிந்துகொண்டு, அவர்களுக்காக அவர்களுடன் செயல்படுவோம். “எம்பதீ” என்பதில் மற்றவர்கள் உணருவதை அவர்கள் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதால் நன்றாகப் புரியும். அவர்களுக்குத் தெளிவுபடுத்தி, அரவணைத்து, அடுத்த கட்டத்திற்கு அவர்களுடன் செல்வோம்.

சமூக-உணர்வுத்-திறன் இணைந்ததால் நிர்மல் பல மாற்றங்களைக் கவனித்தார். குமார் சார் போலவே தானும் செய்துவருகிறோம் என உணர, உற்சாகம் மேலோங்கியது!

தன் பள்ளி மாணவர்களை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நிர்மல் தன் ஊருக்கு அழைத்துச் செல்வதாகத் திட்டமிட்டார். பண்ணையார் இயற்கை விவசாயத்தைப்பற்றி விளக்கினார். ஒரு சிறிய இடத்தில் பள்ளி மாணவர்களை மரம் நடச்சொல்லி, அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை அவர்களிடம் விட்டுவிட்டார். ஒவ்வொன்றுக்கும் பெயரிட்டு, தங்கள் சொத்துபோல் பார்த்துக்கொள்ள வலியுறுத்தினார்.

அவர்கள் வரும் வழியில் வசதி இல்லாத அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கிராமத்தைக் கவனித்தார்கள். ஊருக்குப் போகும்பொழுதெல்லாம் இந்த ஊரில் பாடம் தெளிவுபடுத்துவது, பாடத்திற்குப் பொருட்கள் செய்வதில் உதவுவது எனப் பலவற்றைச் செய்து வந்தார்கள். தோழமையுடன் பல நலன்கள் கூடியது.

சிலவற்றை நாம் சொல்ல, செய்ய, அதிலிருந்து, பல உதயமாவது தான் அழகே!  நிர்மல், வாழ்வில் பலவற்றைச் செய்யத்தொடங்கினார். மனம் ஃப்ரீயாக இருந்தது. இவருக்கு நேர்ந்தது மன அழுத்தமோ மனச்சோர்வோ இல்லை. திறன்கள் மேம்பட, தெளிவடைய, சந்தேகமும் சலனங்களும் போயே போய்விட்டன.

 

திரைக்கவிதை – கண்ணதாசன் – முள்ளும் மலரும்

Image result for முள்ளும் மலரும் செந்தாழம்பூவில்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சில உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே  வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

 

உயிர்மெய் !- தில்லைவேந்தன்

 

Image result for உயிர்மெய்

அன்னத்தை, அணிமயிலை, அழகு மானை,
அன்றலர்ந்த புதுமலரில் ததும்பும் தேனை,
கன்னத்தில்  பொன்னிறத்தைக் கூட்டு வாளை,
கார்முகிலைக் கூந்தலென  மாட்டு வாளை
மின்னைத்தன் புன்சிரிப்பாய்க் காட்டு வாளை,
மீனைத்தன் விழியசைப்பில் ஓட்டு வாளை,
என்னைத்தன் உளச்சிறையில் பூட்டு வாளை
இன்றமிழ்ச்சொல் ஓவியமாய்த் தீட்டு வேனே !

பாதிநிலா படுத்திருக்கும் இடமோ நெற்றி
பாயுகணை புருவவில் விடுமோ சுற்றி.
வீதியுலா வருகின்ற அம்மன் தேரோ
விண்மகளோ அமரர்பதி இவளின் ஊரோ
மீதியின்றி, மிச்சமின்றி அழகைப் பேர்த்தாள்
வேறெவர்க்கும்  தாராமல்  தன்னுள் சேர்த்தாள்.
நாதியின்றித் தவிக்கின்ற என்றன் நெஞ்சம்
நாளெல்லாம் இரவெல்லாம் அவளைக் கெஞ்சும்

உயிரெழுத்து  மெய்யெழுத்தை அணைந்த  பின்னர்
உயிர்மெய்யாய் ஆவதைப்போல் இணைவோம் நாமும்.
இயற்சீரின் ஈரசையாய்  இணங்கி  நிற்போம்
இன்பமெனும்  இசைத்தமிழின் பாடல்  கற்போம்.
குயிலெடுத்துக் கூவுகின்ற  குறிஞ்சிப் பண்ணே
கொஞ்சுமொழி கிளிபோல  பேசும் பெண்ணே
வெயிலென்றும் ,மழையென்றும் காலம் ஓடும்
விருப்பென்றும் குறையாமல்  நாளும் கூடும் !

Related image

மழை இரவு ! – பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

Related image

 

மழையே மழையே

மகிழ்ந்து மகிழ்ந்து

குழந்தைபோல் விளையாட

விண்ணுக்கும் மண்ணுக்கும்

ஏணி அமைக்க வா !

 

மழையே மழையே

பகலவன் சூடு தணிய

விண்ணில் விளையாடும்

கருமேகமே மழைத்துளிகளை

மண்ணுக்கு மலர்போல்

இரவில் அள்ளி வீசு !

 

மழையே அந்தி மழையே

விண்ணில் சிந்து பாடி

மண்ணில் நொந்த உயிர்கள்

மகிழ்ந்து வாழ – நீ

மண்ணில் வந்து விளையாடு !

 

மழையே இரவு மழையே

மண்ணில் நீ வீழ்ந்தால்

மரம் செடிகொடிகள்

மகிழ்ந்து தலையாட்டும்

விண்ணில் தோன்றும்

முழுநிலவு மறைந்து

நின்று குடை பிடிக்கும் !

 

இரவில்

பெய்யும் மழைத்துளிகள்

ஏழையின் குடிசையில்

தலையாட்டும் மண்பானையில்

இனிய ஜலதரங்கம்

விடிய விடிய இசைக்கும் !

 

 

 

தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் பற்றிய ஆவணப்படம்

VB0003018.jpg

 

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் நாடக வரலாற்றின் புத்துயிராக விளங்கியவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவர் தலைசிறந்த நடிகராகவும், இயக்குநராகவும், ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ்த் தெருக்கூத்துகளைப் புதுப்பித்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றி அரங்கேற்றினார். 1918இல் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா எனச் சிறுவர்கள் அடங்கிய நாடகக் குழுவைத் தொடங்கினார். சங்கரதாஸ் சுவாமிகள் தாம் வாழ்ந்த காலத்தில் மற்ற நாடக ஆசிரியர்களைக் காட்டிலும் மிகுதியாகத் திருக்குறட்பாக்களைத் தம் நாடகங்களுள் புகுத்தினார். நாடகங்களை முறையாக ஒழுங்குபடுத்தி மேடையேற்றியது இவருடைய சிறப்பாகும். வள்ளி திருமணம், பவளக் கொடி, சத்தியவான் சாவித்திரி, நல்லதங்காள் நாடகம், அபிமன்யு சுந்தரி போன்ற இவரது நாடகங்கள் இன்றும் தமிழகத்தில் ஏதாவது ஓர் இடத்தில் நடந்து கொண்டுதான் உள்ளன.

சங்கரதாசர் சுமார் 40 நாடகங்களை எழுதினார். அவற்றுள் தற்பொழுது 18 நாடகங்களின் பனுவல்களே கிடைத்திருக்கின்றன.

01. அபிமன்யு சுந்தரி 

02. அரிச்சந்திரா

03 அல்லி அர்ஜூனா

04.  இரணியன்

05 இலங்கா தகனம்

06 கர்வி பார்ஸ்

07 குலேபகாவலி

08 கோவலன் சரித்திரம் 

09 சதி அனுசுயா

10 சதிசுலோசனா

11 சத்தியவான் சாவித்திரி

12 சாரங்கதரன்

13 சிறுத்தொண்டர்

14 சீமந்தனி

15 சுலோசனா சதி

16 ஞான சௌந்தரி சரித்திரம்

17 நல்ல தங்காள்

18 பவளக்கொடி

19 பாதுகாபட்டாபிசேகம்

20 பார்வதி கல்யாணம்

21 பிரகலாதன்

22 பிரபுலிங்கலீலை

23 மணிமேகலை

24 மிருச்சகடி

25 ரோமியோவும் ஜூலியத்தும்

26 வள்ளித் திருமணம்

27 வீரஅபிமன்யு

28 லவகுசா

29 லலிதாங்கி

இந்நாடகங்களில் வெண்பா, கலித்துறை, விருத்தம், சந்தம், சிந்து, வண்ணம், ஓரடி, கும்மி, கலிவெண்பா, தாழிசை, கீர்த்தனை ஆகியன உள்ளிட்ட பலவகைப்பாடல்களும் சிறுபகுதி உரையாடல்களும் நிறைந்தவையாக இருக்கின்றன.

இந்நாடகங்களை, புராண நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், சமய நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், கற்பனை நாடகங்கள் என வகைப்படுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.

1921 ஆம் ஆண்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சங்கரதாசருக்கு வலதுகையும் இடதுகாலும் முடங்கிவிட்டன. வாய்திறந்து பேச இயலாது போய்விட்டது.  இந்நிலையிலேயே 1922 நவம்பர் 13 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு புதுச்சேரியில் மரணமடைந்தார்.

சங்கரதாசு சுவாமிகள் இலங்கைக்குச் சென்றிருந்தபொழுது, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் அவரது முத்தமிழ்ப் புலமையை ஆராய அங்குள்ள புலவர்களால் வினாக்கள் தொடுக்கப்பட்டன. அவற்றிற்கு சங்கரதாசர் வழங்கிய விடைகளைப் போற்றிய அச்சங்கத்தினர் அவருக்கு வலம்புரிச் சங்கு ஒன்றைப் பரிசளித்தனர்.[17]

சங்கரதாசர் நூற்றாண்டு நிறைவையொட்டி, 1967ஆம் ஆண்டில் சென்னையில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு மலர் ஒன்றை வெளியிட்டும் 1968 ஆம் ஆண்டில் மதுரை தமுக்கம் திடலின் வாயிலில் அவருக்குச் சிலை எழுப்பியும் அவருக்கு தி. க. சண்முகம் சிறப்புச் சேர்த்தார். 

மதுரை தமுக்கம் திடலில் உள்ள நாடக அரங்கிற்கு தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. மதுரை ஒப்பனைக்காரத் தெருவில் இயங்கிவரும் நாடகக் கலைஞர்கள் சங்கத்திற்கும் சங்கரதாசரின் பெயர் இடப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைக்கு தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைத் துறை எனப் பெயரிடப்பட்டு உள்ளது.

சங்கரதாசர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய நாடகப் பனுவல்களைத் திரட்டி அச்சேற்றும் முயற்சிகள் நடைபெற்றன. அவ்வகையில் அபிமன்யு சுந்தரி, சுலோசனா சதி ஆகிய இரு நாடகப் பனுவல்களும் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் ஆதரவோடு 1959 இல் வெளிவந்தன.

தி. க. சண்முகத்தின் தனிமுயற்சியால் சீமந்தனி, பக்த பிரகலாதா, அபிமன்யுசுந்தரி, பவளக்கொடி, சுலோசனாசதி, சதி அனுசூயா, கோவலன் ஆகிய நாடகப்பனுவல்கள் சங்கரதாஸ் சுவாமிகள் இன்கவித் திரட்டு என்னும் பெயரில் நூல்வடிவம் பெற்றன.

2009 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வீ. அரசு தற்பொழுது கிடைக்கக்கூடிய 18 பனுவல்களையும் தொகுத்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு – பதினெட்டுப் பனுவல்கள் என்ற பெயரில் புதுச்சேரியைச் சார்ந்த வல்லினம் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

இவைதவிர, சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் களஞ்சியம் என்னும் நூலை சென்னை காவ்யா வெளியீடு வெளியிட்டு இருக்கிறது.

 

அது ஒரு கனாக்காலம் – அன்புடன் ஆர்க்கே..

Image may contain: 2 people, people smiling

டாக்டர் ஜெ பாஸ்கர் அவர்களின் ” அது ஒரு  கனாக் காலம் ” என்ற புத்தகம்  ஜூலை 30 ஆம் தேதி சவேரா ஹோட்டலில் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.  திருப்பூர் கிருஷ்ணன், ஜெ பாலகிருஷ்ணன், கிரிஜா ராகவன், அழகியசிங்கர் , ரவி தமிழ்வாணன், லோகேந்திரலிங்கம் போன்ற பிரமுகர்கள் கலந்துகொண்டு நூலையும் ஆசிரியரையும்பற்றி பாராட்டுரை நிகழ்த்தினர்.

 

Image may contain: 3 people, including Chandramouli Azhagiyasingar, people smiling, people standing

 

சிறுகதை, குறுநாவல், தொடர்கதை, நாவல், கவிதை என ஒரு மொழிக்கு அணி சேர்க்கும் பல வடிவங்கள் காலப்போக்கில் இலக்கிய அந்தஸ்து

எனும் மேடையேறுகின்றன. சுயசரிதம் என்பது கிட்டத்தட்ட கட்டுரை வகை சார்ந்து சுவராஸ்யங்கள், போராட்டங்கள்,வெற்றிதோல்விகள் விவாதித்து அதை எழுதுபவரின் சாதனைப்புகழ் உள்ளடக்கியே பிரபலத்துவம் அடைகின்றன.

தன்வாழ்வில் தன் சிறுவயதில் சந்தித்த நிகழ்வுகள், ஊர் வாசத்தின் மண்வாசனை, வளர வளர வாழ்க்கை தன் இடநகர்த்துதலில் உருவாக்கித்தரும் இட, மனித,குண, சூழல் மாற்றங்கள் தனக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களை நினைவணைகளில் தேக்கிவைத்து அதை வாசக/ரசிக வயல் நீர்ப்பாசன வசதிகளுக்காக மதகு மதகுகளாய் திறந்துவிட்டு நமக்குள்ளும் அந்த நினைவலைகளை அதே பசுமைப்பொசிவு மாறாமல் அனுபவக் கட்டுரைகளாக கடத்தும் எழுத்தாளுமை கொண்ட படைப்புகள் மிகச்சிலவே..!

இந்த இரண்டாவது வகை எழுத்துக்களில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் சம்பவங்களையும் மனிதர்களையும் முன்னிறுத்தி தன்னை ஒரு பார்வையாளனாக மட்டுமே பாவித்து அதன் போக்கிலேயே பயணித்து முடிவில் ஒரு அனுபவ சிலாகிப்பை முத்தாய்ப்பாக்கி அதை சுவாரஸ்யமாகவும் “அட எனக்கும் இப்படி நடந்திருக்கே”என அங்கங்கே காணும் வாழ்க்கைப்பொதுநிலை சம்பவங்களில் நம்மையும் ஐக்கியப்படுத்தி உணரவைப்பதை எழுத்து மூலம் பிரதிபலிக்கச்செய்வதும் கொஞ்சம் அரியவகை எழுத்துநிலை எனலாம்.

அந்தவகையில்தான் வருகிறது அது ஒரு கனாக்காலம். டாக்டர் ஜெ..பாஸ்கரனின் வாழ்நிலைசார் அனுபவங்களின் சாரம் ததும்பும் கட்டுரைத்தொகுப்பு.

அப்பாவின் டைப்ரைட்டர், தேடல்,வரிசையில் ஹாட்ரிக் அடித்து மணிமேகலை பிரசுரம் வெளியீடு செய்கிற மூன்றாவது நூல் இது.

அரஸின் காரிகேச்சரில் ஆசிரியர் புன்முறுவலாக நம்மை நூலுக்குள் வாசிப்பு அனுபவத்திற்கு வரவேற்கிறார்.

பேராசிரியர் வ.வே.சு அவர்களின் அணிந்துரை ஒரு அனுபவ தரிசனத்தை அடர்த்தியான சாராம்சத்துடன் ஆத்மார்த்தமாக சொல்கிறது..கூடவே கட்டுரை அனைத்தையும் வாசிக்கவைத்து மறுபடி ஒரு முறை அணிந்துரை வாசிக்கவைத்து வியக்கவைக்கிறது. பேராசிரியரின் ஞான தீட்சண்யம் அணிந்துரையின் நூல் அலசலில் தெளிவாவது தனியான ஒரு சிலாகிப்பு அனுபவமும்கூட..!

திருமதி கிரிஜா ராகவன் லேடீஸ் ஸ்பெஷலில் வெளியிட்ட கட்டுரைத்தொகுப்புகளின் புத்தக வடிவத்திற்கு அணிந்துரை அளித்திருக்கிறார். நறுவிசான எழுத்துக்களால் ஆசிரியரை வாழ்த்தி இருப்பதும் சில கட்டுரைகளை முன்னிறுத்தி பாராட்டியிருப்பதிலும் இருவருடைய தனித்தன்மையும் சிறப்பும் மிளிர்வது நூலின் தரத்திற்கு உரம்.

அப்பாவின் ஐயப்பசாமி பக்தி தரிசனத்தின் துவக்கத்தில் துவங்குகிறது நூல். படித்தபள்ளி, கும்பிட்ட கோயில்பற்றிய குறிப்பு அடுத்துவர..
மூன்றாவதாய் பொங்கலோ பொங்கல் நூலின் மிக முக்கிய பதிவு. பொங்கல் பண்டிகையின் எல்லா எல்லைகளையும் முழுவீச்சில் சுவாரஸ்யமாய் விவரிக்கின்ற பதிவு. அன்றும் இன்றும் எனப் பார்க்கப்படுகிற analysis பார்வை ஆசிரியரின் எழுத்து வன்மைக்குச் சான்று..! டூரிங் டாக்கீஸ் நினைவுகளும் சைக்கிள் காலம் பதிவும் என்னை பின்னோக்கி பயணிக்க வைத்த அனுபவச்சுவைச்சிதர்..(எங்க ஊர் ஜெய்லானி டாக்கீஸ் அச்சு அசல் அப்படியேதான்..!)

பிறந்த சிதம்பரம், இருக்கிற மெட்ராஸ்பற்றி சொல்லிவிட்டு, பிடித்த நடிகைகள் குறித்து தாவியது மாறுதல் ட்ராக் டிரண்ட்..!

வீடு, பள்ளி, தெரு, ஊர், கனவுக்கன்னிகள் (நடிகைகள்தான் ஸ்வாமி..!) பிறகு பஜ்ஜி மகாத்மியம் என ருசித்த உணவுவகையையும் விட்டு வைக்கவில்லை டாக்டர் பாஸ்கரனின் எழுத்து வல்லமை..! வாழைப்பூ வடை,  அடை ஆராய்ச்சியும் என்போல் சாப்பாட்டு ராமன்களின் சிறு பசிக்கும்
பெருந்தீனி தரும் சுவையான எழுத்துரகம்..!

தனக்கே உரிய வித்யாச பார்வை பாணியில் லண்டன் படிப்பு காலத்தையும் துபாய் பயணவாசத்தையும் பார்த்துப் பார்த்தப் பதிவு செய்திருக்கிறார்..

கிராமம் வளர்த்த சிறார்பருவ விளையாட்டின் பிரதான அங்கமான பம்பரத்தின் நினைவுகளையும் சுண்டிவிட்டிருக்கிறார் சுவாரஸ்யம் குறையாமல்..!

முப்பத்திரண்டு கட்டுரைகள்..தான் கடந்து வந்த பாதை மற்றும் வாழ்க்கையைப்பற்றி முன்பு சொன்னதுபோல தன்னை முன்னிறுத்தாமல் சூழலை, மனிதர்களை கலப்பு ஏதும் செய்யாமல் ஆனால் கலகலப்பாய் உணரவைக்கும் பதிவுகள்.

பெரும்பாலான கட்டுரைகள் லேடீஸ் ஸ்பெஷலில் இதே தலைப்பில் தொடராக வெளிவந்து வாசக வரவேற்பை பெருமளவில் ஈர்த்திருப்பது பின்னூட்ட வாசகர்கள் கடிதங்களில் நிதர்சனமாகத் தெரிகிறது..!

எழுத்து தவம்.. எழுதுகோல் தெய்வம். என்று முழு அர்ப்பணிப்புடன் எழுத்துலகில் வெற்றிகரமாய் இயங்குபவர்கள் இவரைப்போன்ற வெகு சிலரே என்பது முழுமைத்தன்மை உள்ளடக்கிய இவரெழுத்தில் இந்த நூலில் பரவலாக உணரமுடிகிறது..!

அணிந்துரையில் முனைவர் வ வே சு அவர்கள் குறிப்பிட்டதுபோல அரசியல், வாதப் பிரதிவாதங்கள், சர்ச்சைகள், கட்சி சார்புகள் இல்லாத இம்மாதிரியான படைப்புகளுக்கான ரசிகர் மன்றங்கள் “பாலைவன” வாழ் பனிக்கரடிபோல குறைவானதே.. ஆனாலும் எல்லோருமே மறுப்பேதும் சொல்லிவிடமுடியாத படைப்புகளை சார்பு நிலை தாண்டி வாசக சுவாரஸ்ய அனுபவத்துள் திளைக்க வைக்கிற தேவன், சுஜாதா , ஜ.ரா.சு போன்ற படைப்பாளிகளின் வரிசையை நோக்கி வலதுகாலை எடுத்து வைத்திருக்கிறார் எனும் வ.வே.சு ஸாரின் பார்வை துல்லிய கணிப்பே..!

தொகுப்பில் உள்ள கட்டுரை மொத்தத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விடாமல் ஒரு கட்டுரையை படித்து ரசித்து நம் நினைவலைகளுடன் அதை தொடர்புபடுத்தி அசைபோட்டு ருசித்து பிறகு அடுத்த கட்டுரைக்கு கண்களை மனதை தாவவிடுவது உத்தமம். (விதி விலக்கு லண்டன் நினைவுகள்,கல்யாணமாம் கல்யாணம்.)

அது ஒரு கனாக்காலம்–ஐம்பதுகளைத் தாண்டிய வாசிப்பாளர்களுக்கு தாம் கடந்து வந்த பாதையின் நினைவுப் பெருமூச்சுவிட வைக்கும் கனாக்காலம்..!

ஐம்பதுகளுக்குள்ளிருக்கும் தலைமுறைக்கோ இதுவே “இப்படி எல்லாம் கூட இருந்ததா, நடந்ததா?” என வியப்பாய் விழி விரியவைக்கும்
கற்பனை உலக (பாவம்.. அவர்கள் என்னத்தைக்கண்டார்கள்!?)
கடந்தகால/எதிர்பார்ப்பு கால– “கனாக் காலம்..!”

+7

கதைப் பொக்கிஷம்

இந்த சுதந்திர தின இதழிலிருந்து குவிகத்தில் “கதைப் பொக்கிஷம் “

என்ற தலைப்பில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்ச் சிறுகதைகளைத்

தரப்போகிறோம் !

தமிழ் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய கதைகள் இவை.

ஏற்கனவே படித்திருந்தால் மீண்டும் படித்து மகிழுங்கள் !

(கதாசிரியர்களும் காப்புரிமை கொண்டவர்களும்  இந்த முயற்சிக்கு

ஆதரவளித்து அனுமதி வழங்க வேண்டுகிறோம்) .

இம்மாத பொக்கிஷம்

 

 

புலிக்கலைஞன்-அசோகமித்திரன்

 

பகல் ஒரு மணியிலிருந்து இரண்டுவரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரைவரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ஆரம்பிக்கும் நேரமும் பதினொன்றாக இருந்திருக்கிறது. பதினொரு மணி காரியாலயத்திற்கு வீட்டில் பத்தரை பத்தே முக்காலுக்குச் சாப்பிட உட்கார்ந்து காரியாலயத்திற்குப் பதினொன்றரைக்கு வந்து சேர்ந்து, உடனே ஒரு மணிக்கு டிபன் சாப்பிடப் போவது அசாத்தியமாக இருந்திருக்கிறது. அதனால்தான் காண்டீனில் எப்போதும் இரண்டு மணிக்குத்தான் நிஜமான கூட்டம் இருக்கும். இப்போது காலை பதினொரு மணி என்பதைப் பத்தரையாக்கி, அதையும் ஒரு மாதமாகப் பத்து என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். டிபனுக்காகப் பிற்பகல் ஒன்றிலிருந்து இரண்டு வரை. மாலை ஐந்து மணிக்கும் முடியும் காரியாலயம், இப்போது ஆறு மணி வரை நீட்டி வைக்கப்பட்டுவிட்டது.

வேலை எப்போதும் நடந்த வேலைதான். ஃபாக்டரி பிரிவு என்றிருந்த தச்சுவேலை செய்பவர்கள், எலக்ட்ரிகல் பிரிவைச் சேர்ந்தவர்கள், லாட்டரிக்காரர்கள் இவர்களுக்கு என்றுமே எட்டு மணி நேர வேலை. அதே போலக் கணக்குப் பிரிவு. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட். இவர்களுக்கு எங்கே வேலை நடந்தாலும் நடக்காது போனாலும் வருடமெல்லாம் கணக்கு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அப்புறம் டெலிபோன் ஆபரேட்டர் டெலிபோனுக்கு இடைவெளி, விடுமுறை என்றிருந்ததே கிடையாது. ஆதலால் இந்தப் பிரிவுகளில் அடங்காதவர்களுக்குத்தான் அவ்வப்போது காரியாலய நேரத்திலேயே ஓய்வு கிடைக்கும். நாட்கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில்.

எனக்குத் தெரிந்து ஒருமுறை எங்கள் ஸ்டுடியோ ஒன்றரை வருடம் திரைப்படமே எடுக்காமல் இருந்திருக்கிறது. ஒன்றரை வருடம் வேலையொன்றும் செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு, காரியாலய நேரத்தில் மேஜை மீது காலைத்தூக்கிப் போட்டுக்கொண்டு தூங்கி, தலைமயிரை நரைக்க வைத்து, அடிவயிற்றில் ஊளைச்சதை சேர்த்து, டயாபடிஸ் நோய்க்கு இடம் கொடுத்து, சிந்தனைக்கு இலக்கு இல்லாத காரணத்தால் விழிகளுக்கு அலைபாயக் கற்றுக்கொடுத்து, பேச்சில் நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம். ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நிஜமாகவே வேலை வந்தபோது நிர்ப்பந்த ஓய்வு ஒரு முடிவுக்கு வந்ததில் உற்சாகக் கிளர்ச்சி கொள்ளலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சி கொண்டு, அதே நேரத்தில் வேலை செய்யும் பழக்கம் அறுபட்டுப் போனதால் தடுமாறலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சியையும் தடுமாற்றத்தையும் இன்று, நாளை என்று நாங்கள் எதிர்பார்த்திருந்த நாளில்தான் அவன் ஒரு பிற்பகல், நாங்கள் டிபன் முடித்து வெற்றிலை புகையிலை போட்டுச் சுவைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்து சேர்ந்தான்.

”என்னப்பா வேணும்?” என்று சர்மா கேட்டார். சர்மா ஒரு காலத்தில் டிரெளசர் அணிந்தவராகவேதான் காணப்படுவார். போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். நாடகம், கதைகள் எழுதி பிரசுரம் செய்து பெயர் வாங்கி, எங்கள் ஸ்டுடியோவின் கதை இலாகாவில் ஒரு புள்ளியாகிவிட்டிருந்தார். தங்கமான பழைய நாட்களில் எங்கள் முதலாளியைத் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பிலியனில் ஏற்றிக் கொண்டு வெளிப்புறக் காட்சிகள் எடுக்கக்கூடிய இடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்போது வேஷ்டி அணிந்து, புகையிலை போடுவதில் மிகவும் பழக்கப்பட்டுவிட்டார்.  அவர் எழுந்து நின்றால் கழுத்துக்குக் கீழ் இருதோள்பட்டையும் சச்சதுரமாக இறங்குவதுதான் அவர் ஒரு காலத்தில் தேகப்பயிற்சி அமைத்துக் கொடுத்த உடற்பாங்கு கொண்டவர் என்பதைக் காண்பித்தது.

சிறு அறை. சிறிதும் பெரிதுமாகப் பழங்காலத்து மேஜைகள் மூன்று. பெரிய மேஜை பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த சர்மாதான் அந்த அறைக்குச் சபாநாயகரெனக் கொள்ளவேண்டும். நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைத் தவிர இன்னும் ஒன்று அதிகப்படியாக இருந்தது. எங்களுடையது எல்லாமே வெவ்வேறு விதமான பழங்கால நாற்காலிகள். அதிகப்படியான நாற்காலியில் ஒரு கால் குட்டை. யார் வந்து அதில் உட்கார்ந்தாலும் ஒருபுறம் சாய்ந்து, அதில் உட்கார்ந்தவரை ஒரு கணம் வயிற்றைக் கலக்கச் செய்யும். வந்தவன் அந்த நாற்காலியின் முதுகுப் புறத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான்.

”என்னப்பா வேணும்?” என்று சர்மா கேட்டார்.

”சனிக்கிழமை வீட்டுக்கு வந்தேனுங்க” என்று அவன் சொன்னான்.

”சனிக்கிழமை நான் ஊரிலேயே இல்லையே?” என்று சர்மா சொன்னார்.

”காலையிலே வந்தேனுங்க. நீங்க கூட ஒரு குடையை ரிப்பேர் பண்ணிட்டிருந்தீங்க”

”ஓ, நீயா? வேலாயுதமில்லை?”

”இல்லீங்க, காதர் டகர் பாயிட் காதர்”

”நீ வந்திருந்தயா?”

ஆமாங்க, வெள்ளை சொன்னான். ஐயாவை வீட்டிலே போய்ப்பாருன்னு”

”யாரு வெள்ளை?”

”வெள்ளைங்க. ஏஜண்ட் வெள்ளை.”

இப்போ சர்மாவுக்கு விளங்குவது போலிருந்தது. வெள்ளை என்பவன்தான் எங்கள் ஸ்டுடியோவில் பெரிய கூட்டங்களைப் படம் எடுக்க வேண்டியிருந்தால் நூற்றுக் கணக்கில் ஆண்களையும், பெண்களையும் சேர்த்துக் கொண்டு வருபவன். கூட்டமாக இருப்பதைத் தவிர அவர்களிடமிருந்து நடிப்பு ஒன்றும் தேவைப்படாது. நபருக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் என்று கணக்கு, வெள்ளை ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு விடுவான்.

”இப்போ ஒண்ணும் கிரவுட் சீன் எடுக்கலையேப்பா?” என்று சர்மா சொன்னார்.

”தெரியுங்க. உங்களைப் பாத்தா ஏதாவது ரோல் தருவீங்கன்னு அவரு சொன்னாரு.”

”யாரு சொன்னாரு”

”அதாங்க, வெள்ளை சாரு”

சர்மா எங்களைப் பார்த்தார். நாங்கள் இருவரும் அந்த ஆளைப் பார்த்தோம். குள்ளமாகத்தான் இருந்தான். ஒரு காலத்தில் கட்டுமஸ்தான உடம்பு இருந்திருக்கவேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூங்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம்பற்றி படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள்.

”நான் வெள்ளைகிட்டே சொல்லியனுப்பறேன்” என்று சர்மா சொன்னார். நாங்கள் சாய்ந்துகொண்டோம். பேட்டி முடிந்துவிட்டது.

அவன் ”சரிங்க” என்றான். பிறகு குரல் சன்னமடைந்து, ”உடனே ஏதாவது பார்த்துக் கொடுத்தீங்கன்னா கூடத் தேவலாம் சார்” என்றான்.

”ஷூட்டிங் ஒண்ணும் இன்னும் ஆரம்பிக்கலையேப்பா, கிரவுட் சீனெல்லாம் கடைசியிலேதான் எடுப்பாங்க”

”அதுக்கில்லீங்க. ஏதாவது ரோல் தாங்க”.

”உனக்கு என்ன ரோல்பா தர முடியும்? அதோ காஸ்டிங் அசிஸ்டெண்ட் இருக்காரு. அவர்கிட்டே எல்லா விவரமும் தந்துட்டுப்போ.

நான்தான் காஸ்டிங் அசிஸ்டெண்ட். வந்தவன் மாதிரி ஆயிரக்கணக்கான நபர்களின் பெயர், வயது, உயரம், முகவரி எல்லாம் குறித்து வைத்திருந்தேன். அந்தக் குறிப்புகளிலிருந்து தேவைப்படும்போது நான்கு பேருக்குக் கடிதம் போட்டால் மூன்று கடிதங்கள் திரும்பி வந்துவிடும், விலாசதாரர் வீடு மாறிப் போய்விட்டார் என்று. அப்புறம் எல்லாம் வெள்ளைதான்.

ஆனால் அவன் என் பக்கம் திரும்பவில்லை.  இந்த மூவரில் சர்மாதான் மிக முக்கியமானவர் என்று அவன் தீர்மானமாக இருந்தான்.

”நீங்க பாத்துச் சொன்னாதாங்க ஏதாவது நடக்கும்” என்றான்.

”உனக்கு நீஞ்சத் தெரியுமா?” என்று சர்மா கேட்டார்.

”நீச்சலா?” என்று அந்த ஆள் திரும்பக் கேட்டான். பிறகு, ”கொஞ்சம் கொஞ்சம் தெரியுங்க” என்றான்.

”கொஞ்சமெல்லாம் தெரிஞ்சாப் போறாது. ஒரு ஆளு மேலேந்து ஆத்துலே பாய்ஞ்சு நீஞ்சிப் போறமாதிரி ஒரு சீன் எடுக்க வேண்டியிருக்கும். அதுக்கு நீ போறாது.”

”எனக்கு டகர் பாயிட் வரும்க. என் பேரே டகர் பாயிட் காதர்தானுங்க.”

”அதென்ன டகர் பாட்?”

”டகர் பாயிட்டுங்க. டகர். டகர் இல்லே?”

இப்போது எல்லாரும் கவனமாக இருந்தோம். ஒருவருக்கும் புரியவில்லை.

அவன் சொன்னான். ”புலிங்க, புலி, புலி பாயிட்”

”ஓ, டைகர் ஃபைட்டா, டைகர் ஃபைட், நீ புலியோட சண்டை போடுவியா?”

”இல்லீங்க. புலி வேஷம் போடுவேங்க. அதைத்தான் டகர் பாயிட்னுவாங்க இல்லீங்களா?”

”புலி வேஷக்காரனா நீ?  புலி வேஷமெல்லாம் சினிமாவுக்கு எதுக்கப்பா? புலி வேஷமா? சரி, சரி. வெள்ளை வரட்டும். ஏதாவது சான்ஸ் இருந்தா கட்டாயம் சொல்லி அனுப்பறேன்.

”நான் ரொம்ப நல்லா டகர் பயிட் பண்ணுவேங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்”

”நிஜப்புலிக்கு நிஜப்புலியே கொண்டு வந்துவிடலாமே?”

”இல்லீங்க, நான் செய்யறது அசல் புலி மாதிரியே இருக்கும். இப்ப பார்க்கிறீங்களா?”

”ஆஹாம், வேண்டாம்பா, வேண்டாம்பா,”

”சும்மா பாருங்க சார். ஐயாவெல்லாம் எங்கே புலியாட்டம் பார்த்திருப்பாங்க.”

”ஏன், ஒவ்வொரு மொகரத்துக்கோ ரம்ஜானுக்கோ தெருவில் புலி வேஷம் நிறையப் போகிறதே?”

”நம்பளது வேற மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்.”

அவன் எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். அதை அவன் ஒரு நொடியில் தன் தலையில் அணிந்து கொண்டு முகவாய்க்கட்டை அருகே அந்தப் புலித் தலை முகமூடியை இழுத்துவிட்டுக் கொண்டான். அவன் சொந்தக் கண்களோடு ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை ஒரு விநாடி அங்குமிங்கும் பார்த்துக்கொண்டான்.

”பேஷ்” என்று சர்மா சொன்னார். நாங்கள் அவனையே பார்த்தவண்ணம் இருந்தோம்.

அவன் கைகளை ஒரு முறை உடம்பைத் தளர்த்திக் கொண்டான். அப்படியே குனிந்து நான்கு கால்களாக நின்று முகத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

”பேஷ்” என்று சர்மா மீண்டும் சொன்னார்.

அவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக் கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாகப் புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது.

அவன் மீண்டும் ஒரு முறை புலியாகக் கர்ஜித்துத் தன் பின்பக்கத்தை மட்டும் ஆட்டினான். அப்படியே நான்கு கால்களில் அறையில் காலியாயிருந்த நாற்காலி மீது பாய்ந்து ஒடுங்கினான். நாற்காலி தடதடவென்று ஆடியது. நான் ”ஐயோ” என்றேன்.

அவன் நான்கு கால் பாய்ச்சலில் என் மேஜை மீது தாவினான். கண் இமைக்கும் நேரத்தில் சர்மா மேஜை மீதும் பாய்ந்தான். சர்மா மேஜை மீதும் தாறுமாறாகப் பல காகிதங்கள், புத்தகங்கள், வெற்றிலைப் பொட்டலம் முதலியன சிதறி இருந்தன. ஒன்றின் மீது கூட அவன் கால்கள் படவில்லை. அவன் சர்மா மேஜை மீது பதுங்கி சர்மாவைப் பார்த்து மீண்டுமொரு முறை குலை நடுங்க வைக்கும் முறையில் கர்ஜித்தான். அங்கிருந்து அப்படியே உயர மேலே பாய்ந்தான். நாங்கள் எல்லோரும், ”ஓ” என்று கத்திவிட்டோம்.

அது பழங்காலத்துக் கட்டிடம், சுவரில் நெடுக சுமார் பத்தடி உயரத்தில் இரண்டங்குலத்திற்கு விளிம்பு மாதிரி இருந்தது. ஒரு பக்கச் சுவரில் அந்த விளிம்புக்குச் சிறிது உயரத்தில் ஒரு ஒற்றைக் கம்பி போட்ட ஜன்னல் வெண்டிலேட்டராக இருந்தது. அதில் ஏகமாகப் புழுதி, அழுக்கு ஒட்டடை படிந்து இருந்தது.

அவன் நான்கு கால்களையும் வைத்து ஆளுயரத்திற்கும் மேல் எகிறி எங்கள் தலைக்கு மேல் அந்த ஈரங்குலச் சுவர் விளிம்பில் ஒரு கணம் தன்னைப் பொருத்திக் கொண்டான். பிறகு கைகளால் வெண்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக் கொண்டு மீண்டும் புலிபோலக் கர்ஜித்தான்.

”பத்திரம்பா, பத்திரம்பா” என்று சர்மா கத்தினார். அந்த உயரத்தில் அவன் முகத்துக்கு நேரே கூரை மின்சார விசிறி பிசாசாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அவனுக்கும் அந்த விசிறிப் பட்டைகளுக்கும் நடுவே சில அங்குலங்கள் கூட இருக்காது.

அவன் அவ்வளவு உயரத்திலிருந்து அப்படியே நாற்காலி மீது தாவினான். அப்படியே எம்பித் தரையில் குதித்தான்.

நாங்கள் திகிலடங்காத அதிர்ச்சியில் இருந்தோம். சிறுத்தை முகத்திலிருந்த அவன் கண்கள் புலிக்கண்களாக மின்னின. இன்னொரு முறை சிறுத்தை பயங்கரமாக வாயைப் பிளந்து கர்ஜித்தது. அடுத்த கணம் அவன் உடல் தளர்ந்து தொங்கியது. அவன் எழுந்து நின்றுகொண்டான்.

சர்மாவால் கூட பேஷ் என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றிவிட்டான்.

நாங்கள் எல்லோரும் பேச முடியாமல் இருந்தோம். அவன்தான் முதலில் பழைய மனிதனானான்.

”நான் கட்டாயம் ஏதாவது பார்க்கறேம்பா” என்று சர்மா சொன்னார். அவர் குரல் மிகவும் மாறியிருந்தது. அவன் கையைக் குவித்துக் கும்பிட்டான்.

”நீ எங்கேயிருக்கே?” என்று சர்மா கேட்டார். அவன் மீர்சாகிப்பேட்டை என்று சொல்லி, ஒரு எண், சந்தின் பெயர் சொன்னான். நான் குறித்துக் கொண்டேன். அவன் தயங்கி, ”ஆனா, எவ்வளவு நாள் அங்கே இருப்பேன்னு தெரியாதுங்க” என்றான்.

”ஏன்?” என்று சர்மா கேட்டார்.

”இல்லீங்க….. என்று ஆரம்பித்தவன் சடாலென்று சர்மா காலில் விழுந்தான்.

”எழுந்திருப்பா எழுந்திருப்பா காதர்” என்று சர்மா பதறினார். நாங்கள் எழுந்து நின்றிருந்தோம். அவனும் எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டான். ”நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க என்றான். அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்.

”நான் சம்பாரிச்சு எவ்வளவோ மாசமாகுதுங்க. அதுதான் என்ன பண்ணும்? நாலு குழந்தைங்க. எல்லாம் சின்னச் சின்னது. அவன் இப்போது அழுது கொண்டிருந்தான்.

சர்மாவுக்கு ஏதோ தோன்றி, ”நீ இன்னிக்குச் சாப்பிட்டாயா?” என்று கேட்டார்.

அவன் ”இல்லீங்க” என்றான். அவன் அன்றில்லை. எவ்வளவோ நாட்களாகச் சாப்பிடவில்லை என்பது கூடக் கேட்கத் தேவையற்றதாயிருந்தது.

சர்மா அவர் ஜேபியில கையை விட்டார். நாங்களும் உடனே எங்கள் பைகளில் துளாவினோம். சில்லறை எல்லாம் சேர்ந்து இரண்டு ரூபாயிருக்கும். சர்மா, ”இந்தா இதைக் கொண்டுபோய் முதல்லே காண்டீனுக்குப் போய் நன்னாச் சாப்பிடு” என்றார்.

அவன் ”வேண்டாங்க” என்றான்.

”என்ன வேண்டாம்? போய்ச் சாப்பிடுப்பா முதல்லே” என்று சர்மா சொன்னார்.

”ஏதாவது ரோல் வாங்கித் தாங்க ஐயா” என்று அழுதுகொண்டே அவன் சொன்னான்.

சர்மாவுக்கு அவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்லை. ”கொடுத்த பணத்தை நீ எப்படீய்யா வாங்கிக்க மாட்டேன்னு சொல்லுவே? பணத்தை மறுத்தா உனக்குப் பணம் எங்கேய்யா வரும்? ஒரு சல்லீன்னாலும் லஷ்மீய்யா, உனக்கு எங்கேய்யா லஷ்மீ வருவா? போ, வாங்கிக் கொண்டு முதல்லே சாப்பிடு” என்று கத்தினார்.

அவன் அழுகை ஓய்ந்து பணத்தை வாங்கிக் கொண்டான். சர்மா இதமாகச் சொன்னார்.”ரோல்லெல்லாம் என் கையிலே இல்லேப்பா. உனக்கு முடிஞ்சது நான் செய்யறேன். போ, முதல்லே வயத்துக்கு ஏதாவது போடு,” பிறகு என்னைப் பார்த்து ”கொஞ்சம் இவனைக் காண்டீனுக்கு அழைச்சுண்டு போய் சாப்பிட வை” என்றார். நான் உடனே எழுந்தேன்.

அவன் ”வேண்டாங்க, நான் போய்ச் சாப்பிடறேங்க. நான் போய்ச் சாப்பிடறேங்க” என்றான். பிறகு மீண்டும் எங்களுக்குக் கும்பிடு போட்டுவிட்டு வெளியே போனான்.

நாங்கள் சிறிது நேரம் பேசாமல் இருந்தோம். சர்மா அவரையறியாமல் சிறிது உரக்கப் பேசிக் கொண்டார்.

”இவனுக்கு என்ன பண்ணறது? இங்கே இப்போ எடுக்கறது ராஜா ராணிக் கதைன்னா?”

ஆனால் இவர் வெறுமனே இருந்துவிடவில்லை. இரு வாரங்கள் கழித்து மீண்டும் கதை இலாகா கூடியபோது கதாநாயகன் புலி வேஷமணிந்து எதிரிக் கோட்டைக்குள் நுழைவதாகப் படமெடுக்கலாம் என்று சம்மதம் பெற்றுவிட்டார். புலியாட்டமாகக் காண்பிக்கும்போது கதாநாயகனுக்குப் பதில் காதர் ”டூப்” செய்யலாம். அவனுக்கு ஒரு நூறு ரூபாயாவது வாங்கித் தரலாம்.

நான் காதருக்குக் கடிதம் போட்டேன். நான்கு நாட்களில் வழக்கம் போல அக்கடிதம் திரும்பி வந்தது. விலாசதாரர் இல்லையென்று.

சர்மா வெள்ளையை அழைத்துக் கொண்டு காதரைத் தேடினார். நாங்களும் எங்கெங்கோ விசாரித்துத் தேடினோம். கதாநாயகன் எதிரிக்கோட்டைக்குள் நுழையும் காட்சி எடுக்கப்படவேண்டிய நாள் நெருங்கிக் கொண்டே வந்தது. காதர் கிடைக்கவில்லை.

அவன் கிடைத்திருந்தாலும் அதிகம் பயன் இருந்திருக்காது. அந்த ஒரு மாதத்திற்குள் வெளியான ஒரு படத்தில் கிராமிய சங்கீதத்துடன் அந்தக் கதாநாயகன் காவடி எடுப்பதாக காட்சி வந்திருந்தது. அந்தப் படம் தமிழ்நாடெல்லாம் தாங்க முடியாத கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது.

நாங்கள் எடுக்கும் படத்தில் கதாநாயகன் கரகம் எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

 

இலக்கிய நிகழ்வு – கிருபாநந்தன்

 கோடேஸ்வரம்மா

 

ஆகஸ்ட் மாதம் முதல் பதினைந்து  தினங்களுக்குள் நான்கு வித்தியாசமான கூட்டங்களில் பங்குபெற நேர்ந்தது. அதில் ஒன்று மட்டும் வெளியூர். மற்ற மூன்றும் நமது குவிகம் இல்லத்தில்.

முதலில் வெளியூர்

ஐந்தாம் தேதி ஞாயிறன்று  நூறாவது பிறந்தநாள் நிகழ்வு. நூறாண்டு காணும் அந்த அம்மையார் கேக் வெட்டி, ஒரு சில உறவினரும்  ஏராளமான  நண்பர்களும் கொண்ட சுமார் 600 பேர் கொண்ட கூட்டத்தில் பதினைந்து நிமிடம் உரை ஒன்றும் நிகழ்த்தினார். அவர்தான் கொண்டபள்ளி கோடேஸ்வரம்மா என்னும்  மனோதிடத்தின் மொத்த உருவம்.  எல்லோராலாம் “அம்மம்மா” என்று பாசத்துடனும் , மரியாதையுடனும் அழைக்கப்படுபவர்.

சிறு வயதில் பள்ளிப் பருவத்திலேயே  தேசபக்திக்  கருத்துக்களில் ஆர்வம்கொண்டு விடுதலை இயக்கத்தில் ஒரு சிறு பங்கு ஆற்றியவர்.  கொண்டபள்ளி சீதாராமையா என்னும் பொதுவுடமைவாதியை மணம் புரிந்து அந்த இயக்கத்தின் பணிகளில் கணவருடன் சரிக்குச் சமமாக நின்று போராடுகிறார். கட்சி தடை செய்யப்பட்டதும்  தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொள்ளுகிறார்.

கணவர் திடீரென்று இவரை விட்டு விலக, இவர் எதற்கும் அஞ்சாமல் கல்வி கற்று, ஹாஸ்டல் வார்டன் ஆகப் பணிபுரிந்து கம்யூனிச இயக்கங்களிலும் பணியாற்றுகிறார்.

வாழ்க்கையில் எப்போதும் புயல் வீசிய வண்ணம் இருந்தும் தளராது ஈடு கொடுக்கிறார். மகன் என்கவுண்டரில் மரணம் அடைகிறான். மருத்துவராக  சேவை செய்து வந்த மகள் தனது கணவனின் இறப்பைத் தாங்காமல் தற்கொலை  செய்துகொள்கிறாள். எல்லாத் துயர்களையும் சந்தித்து கணவன் இறந்த பிறகும் தனது பேத்திகளுடன் வாழ்ந்துவரும் இந்தப் பெண்மணியின் ‘நிர்ஜன வாரதி’  என்ற பெயர்கொண்ட சுயவரலாறு பல பாடங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கும்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த விழாவிற்கு  பல இயக்கத்தினர், இலக்கியவாதிகள், பெண்கள் நலச் சங்க முக்கியஸ்தர்கள், அம்மம்மாவின் மனோதிடத்தின் விசிறிகள் என இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்தனர். அந்த சுய வரலாற்று நூலினை தமிழாக்கம் (ஆளற்றபாலம், காலச்சுவடு) செய்தவர் என்ற முறையில் அந்த பிறந்தநாள் விழாவில் திருமதி கௌரி கிருபானந்தன் (எனது துணைவியார்) கலந்து கொள்ள, .அவருக்குத் துணையாக நானும் கலந்து கொண்டதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.

 

 

 

இல்லத்தில் அளவளாவல்

குவிகம் இல்லத்தின் வாரந்திரக் கூட்டம் இம்மாதம் 12 ஆம் தேதி MBOOKs என்ற அமைப்பின் நிறுவனர்  திரு மாதவன் அவர்களுடன் ஒரு அளவளாவல் என அமைந்தது. பேசப்பட்ட கருத்துக்களின் சுருக்கம்.:

கலையும்  தொழில் நுட்பமும் இணைந்து செயல்பட்டால், இரண்டுமே சிறக்கும் என்பது பொது நம்பிககை. திரு மாதவன் முயற்சியில் சிறுகதைகளுக்கான ஒரு செயலி நடைமுறைக்கு  வருகிறது.

எழுதுபவர்கள் ஏராளம். படிக்க விரும்புவர்களும் மிக அதிகம். இப்போதுள்ள வார, மாத  பத்திரிகைகள் தேவைக்கு மிகக் குறைவான பகுதியையே பார்த்துக்கொள்கிறது. .  கணிசமான  எண்ணிகையில் இணைய இதழ்களும், விரல் விட்டு எண்ணக்கூடிய  வலைத் தளங்களும் இருந்தாலும் தேவையின் ஒரு சிறு பகுதியே பூர்த்தியாகிறது.   வழங்கலையும் தேவையையும் இணைக்கும் சந்தையாக செயலிகள் இயங்கலாமே? ஓரிரு செயலிகள் இருந்தாலும் இன்னுமொரு செயலிக்கு இடம் கட்டாயம் இருக்கிறது.

திரு மாதவன் அவார்களின் mbooks செயலி தமிழ் சிறுகதைகளுக்கான முதல்  சந்தா செலுத்தவேண்டிய  செயலி. (வருடத்திற்கு ரூ. 499) அதில் ஒரு பகுதியை எழுத்தாளார்கள் நிதி என ஒதுக்கிவைத்து படிக்கப்படும் பக்கங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு எழுத்தாளருக்கும் சன்மானம் வழக்கப்படும். இது வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும்.

இந்த நவீன முயற்சிக்கு குவிகம் சார்பில் தேவைப்பட்ட ஒத்துழைப்பை நல்க சித்தமாயிருக்கிறோம்.