எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

Related image

விஷ்வகர்மா இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.

தன் ஒரே மகள் –  பிரியமகள் தன்னைத் துறந்துவிட்டுச் சென்றுவிடுவாள் என்பதை அவரால்  எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.

மகாருத்ரபிரும்மன் அவரது கனவின் உச்சம்.  அப்படிப்பட்ட சக்தியைக் கொண்டுவர ஸந்த்யா – சூரியன் சேர்க்கையால் தான் முடியும் என்ற நம்பிக்கை அவருக்குத் திடமாக இருந்தது.  அவர் எண்ணப்படியே அவர்கள் இருவருக்கும் இடையே காதல் முளைத்தது.  திருமண நிச்சயமும் செய்ய அவர் விழைந்தார். காதல் மெல்லக் கனிந்திருந்தால் பொறுமை இருந்திருக்கும். தன் திட்டப்படி ஆரவாரமாக மும்மூர்த்திகளின் ஆசியோடு அவர்கள் வாழ்வைத் தொடங்கியிருந்தால்  எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

ஆனால்  இடையில் புகுந்த ராகு காரியத்தையே கெடுத்துவிட்டான். அவனின் பார்வை காதலுக்குப் பதிலாகக் காமத்தைத் தூண்டிவிட்டது. உள்ளங்கள் இணைவதைவிட உடல்கள் இணைவதே தங்கள் வாழ்வின் நோக்கம் என்று அவர்களைத் திசை திருப்பிவிட்டது.

தன் மனைவி ராகுவைக் கொல்ல முயற்சிக்க, அதன்பின் அவன் நாக கன்னியர் துணையுடன் தன்னை மிரட்ட முயற்சிக்க,  அவனும் தன்  சதுரங்கத்தின் ஒரு காயே என்பதை அவனுக்குப் புரியும்வண்ணம் உணர்த்த   இத்தனை சிக்கல்களுக்குத்  தாம் ஆளாகிவிட்டோமே என்று விஷ்வகர்மா வருந்தினார்.  ஆனால் அதற்கு முன்னரே  ஸந்த்யா  சூரியனைச் சென்று அடைந்துவிட்டாள் என்ற எண்ணம் அவருக்கு வேம்பாகக் கசந்தது.  ஸந்த்யாவைத் தடுத்து நிறுத்த முடியாமலும் ராகு செய்துவிட்டான். இனி  என்ன செய்வது? ‘சூரியதேவனுடன் சமாதானமாகப் போவதுதான் இப்போதைக்குச் சிறந்த வழி’  என்று  உணர்ந்த விஷ்வகர்மா மனைவியையும் அழைத்துக்கொண்டு சூரியபுரிக்குப்  புறப்பட்டார். தன் வாக்குச் சாதுர்யத்தால் சூரியனையும் தாய்ப்பாசம் என்ற கருவியால் ஸந்த்யாவையும் கட்டிப்போட்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன் சென்றார்.  எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும் அவரது மனதின் அடித்தளத்தில் விஷயம் தன் கையைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தின் த்வனி அவருக்கே கேட்கத்தொடங்கியது.

காதலும் காந்தமும் ஒன்று. இரு துருவங்கள் ஒன்றை ஒன்று ஆகர்ஷிப்பது இயற்கை. பெற்றோர்கள் அந்தக் காந்தப் பிரதேசத்தின் குறுக்கே வந்தால் அந்தக் காந்தங்கள் அவர்களைத் தள்ளிவிட்டு  ஒட்டிக்கொள்ளவே விரும்பும். இது இயற்கையின் சக்தி..  இரு காந்தங்களையும் தோல் பாவைபோல் கட்டுக்குள் வைத்து மின்னல் சக்தியைப் பெற விழையும் விஞ்ஞானியென இருந்த விஷ்வகர்மா இப்போது தந்தையின் நிலைக்குத் தன்னை மாற்றிக்கொண்டு சூரியதேவனின் அரண்மனையை மனைவியுடன்  அடைந்தார்.

கதவைத் தட்டப்போன விஷ்வகர்மாவின் கரம் அப்படியே நின்றது . சாரதி அருணன்  அவர் கரத்தைப்பற்றிக்கொண்டு நின்றான்.  “மன்னிக்கவேண்டும், யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது  என்பது எனக்கு இட்ட கட்டளை ”  என்று பவ்யமாகத்தான் கூறினான் அருணன். . 

” நான் யார் என்பது உனக்குத் தெரியவில்லையா? ” விஷ்வகர்மாவில் குரலில் அதிகாரம் தெரிந்தது. 

” தாங்கள் விஷ்வகர்மா! இவர் தங்கள் துணைவி ! எங்கள் தலைவி ஸந்த்யாதேவியின் பெற்றோர்கள்!” 

” தெரிந்துமா தடுக்கிறாய்?” 

” தெரிந்ததால்தான் தடுக்கிறேன். இன்று மட்டுமல்ல நீங்கள் இருவரும் என்றைக்குமே இந்த எல்லைக்குள் வர இயலாது” 

” என்னைத் தடுத்து நிறுத்தும் சக்தி உலகத்தில் எதுவும் இல்லை என்பது உனக்குத் தெரியாதது உன் தூரதிர்ஷ்டம்!”

” மும்மூர்த்திகளுக்குக் கூடவா இந்த  சக்தி இல்லை? “

விஷ்வகர்மா திடுக்கிட்டார். 

” மும்மூர்த்திகளா? அவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” 

” அவர்கள்தான் சூரியதேவர்-ஸந்த்யா திருமணத்தை உள்ளே நடத்தி வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ” 

விஷ்வகர்மா மட்டுமல்ல . அவரது துணைவியும் துடித்துவிட்டாள். 

” பெண்ணைப்  பெற்ற நாங்கள் தாரை வார்த்துக்கொடுத்து கன்னிகாதானம் செய்யாமல்  அவளுக்கு எப்படித் திருமணம் நடக்கக்கூடும்?” 

 ” எப்போது நீங்கள் மகாருத்ரபிரும்மனுக்காக அடாத செயல் செய்யத் துணிந்தீர்களோ அப்போதே நீங்கள் அந்தத் தகுதியை இழந்துவிட்டீர்கள்!” 

விஷ்வகர்மாவிற்கு உடல் தளர்ந்தது. வாழ்வில் முதல் முறையாகத் தோல்வியின் பிடியில் சிக்கிவிட்டோம் என்பதை  உணர்ந்தார். 

” நான் பெற்ற மகள் ஸந்த்யா ! நான் கண்டிப்பாக அவள் திருமணத்திற்குப் போகவேண்டும்! கதவைத் திறவுங்கள் ! ” என்று கண்ணீருக்கிடையே கதறியது பெற்ற மனம். 

” மன்னிக்க வேண்டும் தாயே! இதோ அவர்களே கதவைத் திறந்துகொண்டு வருகிறார்கள்! தாங்களும் இவர்களைப்போலப் புதுமணத் தம்பதியர்களுக்கு மலர் தூவி ஆசிகள் வழங்கலாம் , இங்கிருந்துகொண்டே” என்று அருணன் அவர்கள் இருவர் கரங்களிலும் மலர்களையும் அட்சதையையும் வழங்கிவிட்டு விரைவாக வெளியேசென்றான். 

சுற்றிப்பார்த்தால்  கோடானுகோடி வானவர்களும் கந்தர்வர்களும் ரிஷிகளும் மலர்களைக் கைகளில் ஏந்திக்கொண்டு  அங்கே நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எப்போது வந்தார்கள் என்று விஷ்வகர்மா எண்ணிக்கொண்டிருக்கும்போது வாயில் கதவு திறந்தது.  

Related image

மும்மூர்த்திகளுடன் முப்பெரும் தேவியரும் வந்தனர். அவர்கள் நடுவே சூரியதேவனும் ஸந்த்யாவும் மணக்கோலத்தில் வெட்கப் புன்முறுவலோடு வந்தனர். 

அருணன் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய ரதத்தை அவர்கள் முன் நிறுத்தினான். சூரியதேவனும் ஸந்த்யாவும் மும்மூர்த்திகள் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு அவர்கள் உத்தரவுப்படி ரதத்தில் ஏறினார்கள்.! காத்துக்கொண்டிருந்த கோடானுகோடி பேரும் புஷ்பமாரி பொழிந்து ஆசிகளை வழங்கினர். ரதம் விஷ்வகர்மா, அவர் துணைவி இருக்கும் இடத்தை அடைந்தது. மலர் தூவி ஆசி  வழங்கவேண்டும் என்ற உணர்வு தோன்றாமல் இருவரும் திக்பிரமையில் நின்றுகொண்டிருந்தனர். 

ஸந்த்யா சூரியதேவனின் விழிகள் விஷ்வகர்மா தேவி விழிகளுடன் கலந்தன . எந்தவித சலனமுமின்றி ஸந்த்யாவும் சூரியனும் ரதத்தை மேலே செல்லக் கரமசைக்க அருணன் விண்வெளியில் ரதத்தைச் செலுத்தினான். சிறு புள்ளிபோல ரதம் விண்வெளியில் சென்றுமறைந்தது. மும்மூர்த்திகளும் தேவியரும் மற்ற வானவர்களும் வந்ததுபோலவே சுவடு எதுவும் இல்லாமல் மறைந்து போயினர். 

விஷ்வகர்மாவும் அவரது துணைவியும் மட்டும் கையில் மலர்களுடன், கண்ணில் நீருடன் நின்றுகொண்டிருந்தனர். 

(தொடரும்) 

 

இரண்டாம் பகுதி

 

Image result for சாலமன் பாப்பையா

சாலமன் பாப்பையா தொடர்ந்தார்:

நமது விவாத மேடைக்கு மும்மூர்த்திகளும் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் விவாதிக்கப்போகும் ஒவ்வொரு துறைக்கும் இவர்கள்தான் தலைவர்கள்! இவர்களை வைத்துக்கொண்டு பேச்சாளர்கள் தங்கள் கருத்துக்களைப் பேசிவிட்டுப் போய்விடலாம். அவர்களுக்குப் பிரச்சினை ஒன்றும் அதிகமாக இருக்காது என்று நம்பலாம். குறைந்தபட்சம் இந்த மேடையில் அவர்களுக்கு எதுவும் நடக்காது என்று நான் உத்தரவாதம் தரலாம். ஆனால் தீர்ப்பு சொல்லப்போகும் ‘என் கதி என்ன கதி’ என்று எனக்குப் புரியவில்லை. ‘ நமக்கெல்லாம் பயம்  கொஞ்சம்கூட  கிடையாதப்பா’ என்று வழக்கம்போல சவுடால் பண்ணலாம்.   சொல்லப்போனா  என் நிலைமை ரொம்பவும் தரும சங்கடமாத்தான்  இருக்கு.

Image result for சிவாஜி எம் ஜி ஆர் ஜெமினி

ரொம்ப வருஷம் முன்னாடி இதேமாதிரி தமிழ்த் திரைப்படங்களில் சிறந்து விளங்குவது “சண்டையா? சோகமா? காதலா? ” என்று விவாதம் பண்ணவந்தோம். மதுரையில ஒரு காலேஜிலதான் அந்தக் கூட்டம் நடந்துது.  இவிக  மூணுபேரும்  அப்ப வரலை. இவிகண்ணு நான் சொல்றது சாமிங்களை  இல்ல. எங்க ஆசாமிங்களைத்தான் சொன்னேன்.  அன்னிக்குன்னு பாத்து எம் ஜி ஆர், சிவாஜி,  ஜெமினி மூணுபேரும் கூட்டத்துக்கு வந்துட்டாங்க ! மக்கள் வெள்ளம் வந்திடக்கூடாதுன்னு வாசக் கதவை சாத்திட்டோம். ஆனா இந்தப் பெருந்தலைகளை வச்சுக்கிட்டு எப்படிடா தீர்ப்பு சொல்லப்போறேன்னு எனக்கு ஒரு நடுக்கம் வந்திடிச்சு.  எல்லாருக்கும் நல்லாத் தெரியும் எம் ஜி‌ ஆர்  சண்டையில நாடோடி மன்னன். சிவாஜியோ சோகத்தில  ஒரு பாசமலர்  அண்ணன் ,  ஜெமினியோ எப்போதும் காதல் மன்னன். எங்களுக்குள்ளே சண்டையை மூட்டிவிட்டு   அவிக மூணு பேரும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க ! பேச வந்தவுங்க தங்க கட்சியைப்பத்தி மட்டும் பேசிப்புட்டு மத்தக்கட்சி மோசம்னு பேசாம போயிட்டாங்க.  

நான் சோகத்தில நெளிஞ்சிக்கிட்டிருந்தேன். இங்கே இருக்கிற அத்தனை தெய்வங்ககிட்டே எல்லாம் வேண்டிக்கிட்டேன். அப்போ அங்கே ஒரு அதிசயம் நடந்தது. அதனால நான் தப்பிச்கிட்டேன். அது என்னங்கிறத இந்தக் கூட்டத்தில தீர்ப்பு சொன்னபெறகு  சொல்றேன். 

இன்னிக்கு நாம விவாதிக்கப்போற தலைப்பு மிகவும் வித்தியாசமானது மட்டுமல்ல  ஆபத்தானதும் கூட.  என்ன ஆபத்துன்னு நீங்க கேட்கலாம்.  ஆக்கல், காத்தல் அழித்தல் மூன்றுமே ஓன்றோடொன்று தொடர்பு கொண்டது. நம்ம வீட்டுக்காரம்மா   சோத்தை ஆக்குறாங்களா?  ஆக்கிக்கிட்டேயிருந்தா என்னாகும்.?  அது கெட்டுப்போகாம சாப்பிட சரியா பாதுகாக்கணும். அப்படியேயிருந்தா எப்படி? நம்ம பசிதீர சாப்பிட்டு அதை அழிக்கணுமில்ல. இதில எது உசத்தி எது மட்டம்னு சொல்லமுடியும்?  என் கஷ்டம் இப்போ உங்களுக்குப் புரியுதுண்ணு நினைக்கிறேன். ஒண்ணுகிடக்க ஒண்ணு சொன்னோம்னா சோறே ஆக்கமாட்டா ! இல்லாட்டி கெட்டுப்போன சோறு தட்டில விழும். இல்லே சோத்தை ஆக்கி அப்படியே குப்பைத்தொட்டியில கொட்டிடுவா!  இதுதான் இதுல இருக்கிற ஆபத்து. 

எங்களுக்கு ஆபத்து வர்ரப்போ சாமிங்க உங்களைக் கூப்பிவோம். இப்போ சாமிங்க உங்களால எங்களுக்கு ஆபத்து வந்தா  நாங்க எந்த சாமிக்கிட்டே வேண்டிக்கிறது? 

விசு  ஒரு படத்தில சொல்வாரே

” பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார ஆஸ்பித்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார டாக்டருக்கே பைத்தியம் பிடிச்சுதுனா அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார டாக்டர் எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார டாக்டர்கிட்ட போய் தன் பைத்தியத்துக்கு வைத்தியம்    பார்த்துக்குவார்? ”

அந்த மாதிரி நிலமை எங்களுக்கு!

சொல்ல வேண்டியதைச் சொல்லிப்புட்டேன். காப்பாத்தவேண்டியது உங்க கடமை. 

அதைக்கேட்ட மூம்மூர்த்திகளும் எழுந்து மேடையில் இருப்பவர்களையும் கேட்கவந்தவர்களையும் ‘யாமிருக்க பயமேன்?’ என்ற பாணியில் அபயக்கரம் காட்டித் திரும்பும்போது மக்கள் கூட்டத்தில் தங்கள் தேவிமார்களும் நாரதரும் எமியும் வந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனார்கள். நமக்கு அபயக்கரம் கொடுக்க யார் இருக்கிறார்கள் என்ற தேடல் அவர்கள் கண்களில்  தோன்றிமறைந்தது. 

சாலமன் பாப்பையா தைரியம் அடைந்து ” வாங்க பாரதி பாஸ்கர் அம்மா ! சோறு ஆக்கிறதுதான் முக்கியமானது – அதாவது  மூன்று தொழில்களில ஆக்கல்தான்  சிறந்ததுன்னு பேசத் தைரியமா வாங்க !” என்று அழைத்தார். 

(தொடரும்) 

 

திரைக்கவிதை – மருதகாசி – உத்தமபுத்திரன்

பாடல் : மருதகாசி 

படம் : உத்தமபுத்திரன் 

இசை: ஜி. ராமாநாதன் 

பாடியவர்கள்: T M  சௌந்தரராஜன் & P சுசீலா 

 

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே

வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே
அல்லி விழி தாவக் கண்டேன் என் மேலே

வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் ப்ரேமையினாலே

மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே

(முல்லை)

விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே

சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே

(முல்லை)

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

திருஞானசம்பந்தர்

Image result for திருஞானசம்பந்தர்

 

திருநாவுக்கரசரைத் தொடர்ந்து யாரைப்பற்றிச் சரித்திரம் பேசப்போகிறது  என்று பல ரசிகர்கள் மண்டையைப்போட்டு உடைத்துக்கொள்கிறார்களாம்!

அட … இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?

ஒரு குழந்தைக்குக்கூடத் தெரியுமே!

வேறு யார்?

நமது திருஞானசம்பந்தர்தான்.

தென்னிந்திய சரித்திரத்தில் ஒரு சமய மாற்றம் அமைய இந்த இருவருமே முக்கிய காரணமாயினர்.

திருநாவுக்கரசர் பல்லவ மன்னனை சமணத்திலிருந்து சைவத்துக்கு மாற்றினார்..

திருஞானசம்பந்தர் செய்தது என்ன?

மேலே படியுங்கள்..

 

சிவபாதவிருதயர் – பகவதியார் என்ற தம்பதிகள் ‘சீர்காழி’யில் வாழ்ந்துவந்தனர்.

அவர்களுக்கு அந்த ‘தெய்வமகன்’ பிறந்தான்.

மூன்று வயதாகியது.

பொற்றாமரைக்குளத்தில் குளித்திட எண்ணி மகனைக் கரையில் உட்கார வைத்துவிட்டு நீரில் மூழ்கினார்.

குழந்தை தந்தையைக் காணாமல் திரும்பிக் கோவில் கோபுரத்தைப் பார்த்து ‘அம்மா.. அப்பா..’ –என்று அழுதது.

 

உலகில் பிறக்கும் சிலருக்குத்தான் தெய்வ அம்சங்கள் அமையும். அதுவும் காலம் அமையும்போதுதான்.

எத்தனையோ யானைகள் முதலை வாய்ப்பட்டாலும் – கஜேந்திரன் என்ற யானைக்கு மட்டும் ‘ஆதிமூலமே’ என்றவுடன் நாராயணன் உதவிக்கு வந்தான்..

அதுபோல் – அந்தக் குழந்தை அழுகைகேட்டு- அன்று ‘சிவன் – பார்வதி’ அங்கு வந்தனர்.

பார்வதி தன் முலைப் பாலெடுத்து பொற்கிண்ணத்தில் ஞானப்பாலாக குழந்தைக்கு ஊட்டினாள்..

நீராடிய தந்தை – மகனது கையிலும் வாயிலும் பொங்கிய பால்கண்டு – பொங்கினார்.

‘யாரோ இந்த எச்சில் பாலைக் கொடுத்தது’ – என்று வெகுண்டார்..

குழந்தை பேசியது..

” ‘யாரோ’ என்று குறைவாகப் பேசவேண்டாம்.

அது சிவனாரும் பார்வதியாரும் தான்”

‘தோடுடைய செவியன்’ – என்று தொடங்கும் பாடல் ஒன்றைப் பாடியது அந்தக் குழந்தை.

தந்தையார் அசந்து போய்விட்டார்.

Related image

தெய்வ அருளாலேதானே இது நிகழ இயலும்..

நகரம் முழுதும் இச்செய்தி பரவியது..

சம்பந்தர்… ஆளுடைப்பிள்ளை … என்று பல பெயர்கள் …

திருநீலகண்ட யாழ்ப்பாணர் – பெரிய சிவபக்தர்.அவரது மனைவி மதங்கசூளாமணி. இருவரும் யாழிசை வல்லுனர்கள். இருவரும் சம்பந்தரின் பதிகங்களுக்குச் சேர்ந்து யாழிசைத்தனர்.

தந்தையார் மகனைத் தோளில் சுமந்து ஆலயம் பல சென்றார்..

திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சந்திப்புகளை ஏற்கனவே பார்த்திருந்தோம்…

சில அற்புதங்கள்:

 • மழைவ மன்னன் மகள்- வலிப்பு நோயால் – வருந்தினாள்… திருஞானசம்பந்தர் பதிகம் பாடி அவள் நோய் குணமாயிற்று.
 • ஒரு கன்னிப்பெண் … காதலனுடன் ஓடிப்போய்.. கல்யாணம் செய்துகொள்ளத் துணிந்தாள்.. இருவரும் கோவில் மடத்தில் தங்கியிருக்கையில்… காதலன் பாம்பால் கடிபட்டு …காலமானான். ‘மணமாகுமுன்னே பிணமானான்’. காதலி .. திருஞானசம்பந்தர் காலடியில் வீழ்ந்து புலம்பினாள். திருஞானசம்பந்தர் – ‘சடையாய் எனுமால்’ –என்ற பதிகம் பாடியதும்.. காதலன் உயிர் பெற்றுவந்தான்..
 • திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருடன் இருக்கையில்.. நாட்டில் பஞ்சம்… இருவரும் இறைவனைத் துதிக்க- இறைவன் இருவருக்கும் தங்கக்காசுகள் தந்தருளினார்.

 

ஒரு நாடகம் துவங்குகிறது…

இடம்: மதுரை.

மன்னன் பாண்டியன் .. நெடுமாறன்.. இளவயதிலேயே அவனுக்கு முதுகில் விழுந்த கூன் அவனைக்

கூன் பாண்டியன் ஆக்கியது. சமண மதத்தில் ஈடுபாடுகொண்டான்..

மனைவி. சோழநாட்டு இளவரசி மங்கையர்க்கரசி..

மந்திரி: குலச்சிறையார்.

மகாராணியும், மந்திரியாரும் பெரும் சிவ பக்தர்கள்.

‘சைவத்தை எப்படிப் பரப்பலாம்’ என்று ஆலோசித்தனர்.

மாபெருஞ்சோதியாய் திகழ்ந்த திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைப்பது என்று முடிவுசெய்து தூதுவனை சீர்காழிக்கு அனுப்பினர்.

 

திருமறைக்காட்டில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் இருக்கையில்.. தூதுவர் வந்தனர்..

தூதுவன்: “பாண்டிய நாடு சமணர்களது ஆதிக்கத்தில் சிதைந்துவருகிறது. மன்னரும் அவர்களது வலையில் விழுந்துவிட்டார். தென்னாட்டில் சைவம் தழைக்கவும் – சமணர்களை வெல்லவும் – தாங்கள் மதுரை வந்தருளவேண்டும். மகாராணி, மந்திரி – இவற்றைக்கூறி எங்களை அனுப்பினார்கள்”

திருஞானசம்பந்தர் வதனத்தில் புன்முறுவல் விரிந்தது..

திருநாவுக்கரசர் திடுக்கிட்டார்.

“திருஞானசம்பந்தரரே.. “- என்று தொடங்கி சமணர்களது கொடிய செயல்களைப்பற்றி விளக்கினார் .. “மேலும்.. நாள்-கோள் – சரியில்லாததால் ..இப்பொழுது தாங்கள் போவது உசிதமல்ல” –என்றார்.

திருஞானசம்பந்தர்: “நாம் போற்றுவது பரமனது பாதங்களை.. ‘நாளும்,கோளும்’ நம்மை என்ன செய்யும்?”

‘வேயுறு தோளிபங்கன்’ எனத்தொடங்கும் ‘கோளறு திருப்பதிகம்’ பாடினார்.

விரைவில்..திருஞானசம்பந்தர் – மதுரை புறப்பட்டார்.

அழகிய மதுரை மேலும் அழகுபடுத்தப்பட்டது.

சமணர்கள் ஒன்றுகூடி நிலைமையை விவாதித்தனர்.

மங்கையர்க்கரசியும், குலச்சிறையாரும் அவரை வரவேற்று வணங்கிப் போற்றி, மடத்தில் தங்கவைத்தனர்.

சமணர்கள் புகைந்தனர்.

மன்னரிடம் சென்று அவரை மேலும் குழப்பினர்.

“ஞானசம்பந்தர் தங்கும் மடத்துக்குத் தீ வைக்கவேண்டும்”

குழம்பிய மன்னன் :“ செய்யவேண்டியதை செய்க”

இரவு – மன்னனின் குற்றமுள்ள நெஞ்சு உறங்கத் தவித்தது.. மன்னன் அருகில் வந்த மங்கையர்க்கரசியிடம் நடந்ததைக் கூறினான்.

திடுக்கிட்ட அரசி: “மன்னரே! இது என்ன விபரீதம்? சமணர்களுக்கும் சைவர்களுக்கும் வாதம் வைத்து.. யார் வெல்கிறார்களோ – அவர்களை நாம் ஆதரிக்கலாம்.”

மன்னன் சிந்திக்கத்தொடங்கினான்.

சமணர்கள் இரவில் மடத்திற்குத் தீ வைத்தனர்..

மடத்தில்- தொண்டர்கள் விரைவில் தீயை அணைத்துவிட்டு –  திருஞானசம்பந்தரிடம் முறையிட்டனர்.

திருஞானசம்பந்தர் : ‘இது சமணர்களின் குற்றமாயினும் – இதை ஆதரித்த நாட்டு மன்னனது குற்றம் கொடியது’ – என்றார்.

‘செய்யனே திரு ஆலவாய் மேவிய ..’ எனத்துவங்கும் பதிகம் பாடினார். ஒவ்வொரு பாடலின் ஈற்றடியில்:

‘சமணர் இட்ட தீ பாண்டியனைச் சாரட்டும்’ – என்று கருத்தை வைத்தார்.

உடனே… தீப்பிணி என்னும் வெப்பு நோய் – மன்னனைப் பீடித்தது.

வேந்தன் உடல் துடித்தது.. உயிர் ஊசலாடியது..

மகாராணியும், மந்திரியாரும் திகைத்தனர்..

செய்தி கேட்ட சமணர்கள் – விரைவில் வந்து – மந்திரம் கூறி –பீலி கொண்டு மன்னனைத் தடவினர்.

பீலிகள் எரிந்தன.. பிரம்புகொண்டு மன்னனைத் தடவினர். பிரம்புகள் எரிந்தன..

‘சமணர்களே ! ஓடிப்போங்கள்”- என்று மன்னன் துரத்தினான்.

அரசி : “திருஞானசம்பந்தரை அழைத்து வந்தால் அவரே நமக்கு உதவக்கூடும்”

மன்னன்:” யார் எனது நோயைத் தீர்க்கிறார்களோ அவர்கள் பக்கம் சாய்வேன். திருஞானசம்பந்தர் வரட்டும்” என்றான்.

அரசியும் மந்திரியும் மடத்திற்குச்சென்று.. திருஞானசம்பந்தரது பாதம் பணிந்து…

‘தேவரீர் எங்கள் அரண்மனை வந்து மன்னனைக் காக்கவேண்டும்’- என்று விண்ணப்பித்தனர்.

திருஞானசம்பந்தர்: ‘இன்றே வருவோம்..நன்றே செய்வோம்’

திருஞானசம்பந்தர் வரப்போவதைக்கண்டு சமணர்கள் வெகுண்டு… மன்னனைக் கண்டனர்.

 

“மன்னா! ஒரு வேளை சம்பந்தன் தந்திரத்தால் உங்கள் நோயைப் போக்கினாலும்.. எங்களால்தான் இந்த நோய் தீர்ந்தது என்று தாங்கள் சொல்லவேண்டும்..அதுவே சைவத்தை வெல்லும் வழி” – இப்படி ஒரு மன்னனிடம் கூறவேண்டுமென்றால் ..சமணர்களுக்கு எவ்வளவு தெனாவெட்டு! மன்னன் மீது எத்தனை ஆளுமை!

மன்னன் செவி சாய்க்கவில்லை.

“இருவரும் எனது நோயைக் குணமாக்க முயற்சிக்கலாம். நான் பொய் சொல்லமாட்டேன்”.

திருஞானசம்பந்தர் – வந்தார். அரசர் அருகில் அமர்ந்தார்.

சமணர்கள் பொருமினர்.

தங்கள் மந்திரத்தைக் கூவினர்..

திருஞானசம்பந்தர்: “உங்கள் சமயக் கருத்துகளைக் கூறுக”

சமணர்கள் துள்ளி எழுந்து.. ஆர்ப்பரித்தனர்..

அரசியார் குறுக்கிட்டு : “மன்னரே.. முதலில் திருஞானசம்பந்தர் தங்களது நோயைக் குணமாக்கட்டும்.. பிறகு சமண-சைவ வாது நடக்கலாம்”   

சமணர்கள்: “மன்னா! நங்கள் எங்கள் மந்திர மகிமையால் உங்களது இடப்பகுதியைக் குணப்படுத்துகிறோம்.. புதிதாக வந்த சம்பந்தர் – வலது பக்கத்தைக் குணமாக்க முயலட்டும்”.

போட்டி துவங்கியது…

‘இந்த நாடகம் இந்த மேடையில் எத்தனை நாளம்மா’?

சரித்திரம் தொடரும்…

இடையன் எறிந்த மரம் – வளவ. துரையன்

 

Image result for cutting trees by shepherds

(இது திண்ணை இதழிலும் வந்துள்ளது) 

திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்தில் ஆண்டுதோறும் குமரகுருபர சுவாமிகளுக்கு விழா எடுப்பார்கள். 1937-   ஆம்ஆண்டு நடைபெற்ற விழாவிற்கு உ.வே.சா போயிருந்தார்.

அந்தமடத்தில் மாடுகளைப் பாதுகாத்துப் பராமரிக்க ஓர் இடையனை நியமித்திருந்தனர். மாடுகளைப்பற்றித் தான் அறியாதவற்றை அறிந்து கொள்ளலாம் என்று அவனிடம் உ.வே.சா பேச்சுக்கொடுத்தார்.  

            அவன் மாடுகளின் வகைகள், மாடுகளைப் பிடிக்கும் முறைகள், சுருக்குப்போட்டுக் காளைகளை அடக்குதல்,  ஆகியனவற்றைக் கூறினான். பிறகு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுபோவதைப்பற்றிப் பேச்சு திரும்பியது.

         அவன், “ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் காட்டுப்புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். ஆடுகள் தின்ன மரக்கிளைகளை வெட்டுவோம். அப்படி வெட்டுகையில் கிளை முழுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும்படி வெட்டுவோம். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக்கொண்டு தழைகளைத் தின்னும்” என்றான்.

         ”ஏன் அடியோடு வெட்டிப் போட்டால் என்ன?” என்று கேட்டார் உ.வே.சா.

         ”அப்படி வெட்டிவிட்டால் அந்தக்கிளை பிறகு பயன்படாமல் போய்விடும்.  நாங்கள் வெட்டும் கிளை இன்னும் மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்” என்று அவன் பதில் கூறினான்.

         ’இடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக்கொண்டிருக்கும்’ எனும் எண்ணம் அவருக்குள் உருவானது. 

         பட்டென்று அவருக்குத்தாம் முதல்முதல் பதிப்பித்த சீவகசிந்தாமணியின் 1914-ஆம் பாடல் நினைவுக்கு வந்தது.

அந்தப்பாடல் இதுதான்:

        ”கெடலருங் குரைய கொற்றம் கெடப்பிறந் ததுவுமன்றி

        நடலையுளடிகள் வைக நட்புடையவர்கள் நைய

         இடைமகன் கொன்ற இன்னாமரத்தினேன் தந்த துன்பக்

         கடலகத்தழுந்த வேண்டா களைகவிக் கவலை”

            அதில் சீவகன் தன் தாயிடம்  “ என்தந்தை மரணமடைந்து யான்பிறந்தேன். நீயும் மனம் வருந்த, நண்பர்களும் மனம் வருந்த இடையன் வெட்டிய இன்னா மரம்போல இருந்தேன்” என்று கூறுகிறான்.

         இதற்கு நச்சினார்க்கினியர் “உயிருடன் இருந்தேனாய்ப் பகையை வென்றேனும் அல்லேன். உயிரையும் நீத்தேன் அல்லேன்” என்று கருதி ’மரத்தினேன்’ என்று உரை எழுதுகிறார்.

         உயிரையும் விடாமல் தொங்கிக் கொண்டிருக்கும் மரக்கிளை வேறு இலக்கியங்களில் வருவதும் அவர்க்குத் தோன்றியது. 

         பெரியதிருமொழியில் திருமங்கையாழ்வார் ‘இடையன் எறிந்த மரம்’ என்னும் தொடரைப் பயன்படுத்தி உள்ளதை அவர் நினைத்துப் பார்த்தார்.

         ”படைநின்ற பைந்தாமரை யோடணிநீலம்

         மடைநின்ற லரும்வய லாலிமணாளா

         இடையன் எறிந்தமரமே ஒத்திராமே

         அடைய அருள்வாய் எனக்குன்அருளே”

திருமங்கையாழ்வார் திருவாலித் திருநகரியில் உள்ள பெருமாளை நோக்கி

         ”ஆலிமணாளனே! நான் இன்னும் உன் அருளைப் பெறவில்லையே எனும் ஏக்கத்தால் மனம் அழிந்தும், பெறுவோம் என்ற நம்பிக்கையால் உயிர் வைத்துக்கொண்டும் இடையன் எறிந்த மரம்போல நிற்கிறேனே” என்கிறார்.

         பழமொழி நானூறு என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் உள்ள ஒரு பாடலும் அவருக்கு நினைவில் தோன்றியது.

         ”அடையப் பயின்றார்கொல் ஆற்றுவராக் கேட்டால்

         உடையதொன் றில்லாமைஒட்டிந்—–படைபெற்[று]

         அடைய அமர்த்தகட் பைந்தொடி அஃதால்

         இடையன் எறிந்த மரம்.

என்ற பாடலிலும் இடையன் எறிந்த மரம் உவமை கூறியிருப்பதை அவர் எண்ணிப் பார்த்தார்.

         உ.வே.சா அந்த இடையனிடம் “அவ்வளவுஜாக்கிரதையாக வெட்டி விழச்செய்வது கஷ்டமல்லவா?” என்று கேட்டார்.

         அவனோ “அது கைப்பழக்கம்;  இல்லாவிட்டால் பழமொழி வருமா?” என்று கேட்டான் பதிலுக்கு.

         “என்ன பழமொழி?” என்று அவர் கேட்டார்.

         “அதாங்க; இடையன் வெட்டு அறாவெட்டு என்ற பழமொழியைத்தான்  சொல்கிறேன். என்றான் அவன்.

         இந்த நிகழ்வைக் குறிப்பிடும் உ.வே.சா “அந்த உபமானத்தின் கருத்தை ஆயிரம் வார்த்தைகளால் விரித்து உணர்த்தப் புகுவதைவிட

“இடையன் வெட்டு அறாவெட்டு” என்ற சூத்திரத்தை மாத்திரம் சொல்லி நிறுத்தினால் போதும்” என்று எழுதுவது பழமொழிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது.

—————————————————————————————————————————-  

        

குவிகம் கதைப் பொக்கிஷம் – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்- அம்பை

Image result for சிறுகதை

(அம்பை அவர்கள் )

 

Image result for காக்கைக்கு சோறு

 

சன்னல் படிக்கல்லில் நெய் ஊற்றிய சோற்றைப் போட்டு, கரண்டியால் ஒரு தட்டுத் தட்டி, “கிருஷ்ணா ரா” என்று அம்மா காக்கைகளைத் தெலுங்கில் விளித்தாள். தெலுங்கில் என்ன விசேஷம் என்பது இதுவரை புலப்படாத மர்மம். தனத்தின் அப்பாவுக்கு அஸ்ஸாம், அகமதாபாத், ஒரிஸ்ஸா, பெங்களூர் என்று பல மாநிலங்களுக்கு மாற்றலில் போக வேண்டி வந்தபோதும் அம்மாவின் காக்கை மொழி மாறவில்லை. அஸ்ஸாமில்கூட அம்மா, “கிருஷ்ணா ரா” என்றதும் காக்கைகள் பறந்தோடி வந்தன. காக்கைகளுக்குள் மொழி ஒருமைப்பாடு உண்டு போலும். இந்த மொழிச் சமிக்ஞையை அம்மா அவளைச் சுற்றிய சகலருக்கும் போதித்திருந்தாள். தனத்தின் தம்பி தினகரனின் அமெரிக்க மனைவியின் முதல் கணவனின் குழந்தைகூட இந்தியா வந்தால் காக்கையை, “கிருஷ்ணா ரா” என்று கூப்பிட்டது. இப்படியாகச் சன்னல் படிக்கல்லை ஒரு ஆதாரமாக வைத்து, மாநில பேதம் இல்லாமல் காக்கைகள் உள்ள உலகில் எந்த விதமான எல்லைப் போராட்டமும் இல்லாமல் அம்மா தனக்கொரு இடம் தேடிக்கொண்டாள்.

சன்னல் படிக்கல், ஒரு சொட்டு நெய், ஒரு கரண்டிச் சோறு என்ற சின்னச் சமாச்சாரங்கள் அடங்கிய இடமானாலும் அதோடு நின்றுவிடும் இடம் மட்டும் இல்லை அது என்று தனத்துக்குப் படும் சில சமயம். சன்னல் வெளியே உள்ள அனைத்து விஷயங்களையும் அந்தப் படிக்கல் மேல் விழும் கரண்டியின் டொக்டொக் ஈர்த்துக் கொள்கிறது என்று நினைப்பாள். ஒரு குறிப்பிட்ட தூய உரு இல்லாத, பறந்து விரியும் இடம் அது என்று தோன்றும்.

தனத்தின் அக்கா பாரதியின் திருமண வாழ்க்கை அமெரிக்காவில் போய் விவாகரத்தில் முடிந்தது. அவள் நொறுங்கிப் போனாள். பீதியும், பயமும், அவமான உணர்ச்சியும் அவளைக் கவ்விக்கொண்டு, மிகவும் அலைபட்டாள். காலடி எடுத்து வைக்கும் போதெல்லாம் பாதத்தில் அடியே ஸ்திரமான தரை இல்லாதது போல் உணர்ந்தாள். அப்பாவின் வேண்டுகோளை ஏற்று அம்மா விமானமேறி பாரதியிடம் போனாள். பத்து நாட்களில் பாரதியிடமிருந்து ஒரு நீண்ட கடிதம் வந்தது.

“தனம், அம்மா வந்து சேர்ந்தாள். அம்மா வந்த இரண்டாம் நாளே அம்மா பயணித்த உள்ளூர் விமானக் கம்பெனிக்காரர்கள் அம்மாவுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் செய்ய காண்ட்ராக்ட் தருகிறேன் என்று தொலைபேசியில் பிடுங்கி எடுத்து விட்டார்கள். அம்மா பரிசோதனையின் போது காண்பித்திருக்கிறாள் போலும். அவர்கள் சோதனைக்ககாக ருசி பார்த்திருக்கிறார்கள். இது போதாது என்று நான்காவது நாளே நான் வேலையை விட்டு வீடு வரும்போது பார்த்தால் அம்மா இரண்டு கிலோ பாலில் பால்கோவா கிளறி இறக்கியிருக்கிறாள். என்னவென்று கேட்டால் பக்கத்தில் உள்ள வீடுகளில் இரண்டு மூன்று பிள்ளைத்தாய்ச்சிகளைப் பார்த்தாளாம். அவர்களுக்கு இது உடம்புக்கு நல்லதாம். என்னையும் இழுத்துக் கொண்டு போய் அவர்களுக்கு மில்க் ஸ்வீட் என்று விளக்கி, அதில் குங்குமப்பூ இருப்பதைக் கூறி (அம்மா ஒரு சின்ன டப்பியில் உயர் ரக குங்குமப்பூ எடுத்து வந்திருக்கிறாள். குங்குமப்பூ எடுத்து வர வேண்டும் என்று ஏன் தோன்றியது என்பதை இதுவரை அவள் விளக்கவில்லை. நார்த்தங்காய் ஊறுகாய் பற்றிய கேள்விகளுக்கு விடை வராதது போலவே இதுவும்) குங்குமப்பூ சேய்க்கும் தாய்க்கும் செய்யும் அற்புதங்களை என்னை விட்டு விளக்கவைத்து… அம்மாவை யாராவது பிரசவம் பார்க்கக் கூப்பிட்டு விடுவார்களோ என்று பயப்படுகிறேன்.

இங்கு நல்ல வெயில். அம்மவின் கைகள் வடகம் இடப் பரபரப்பதை என்னால் உணர முடிகிறது. உனக்கு நினைவிருக்கிறதா, பெங்களூரில் அம்மா வெயிலுக்கு ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு வடகம் பிழிவாளே? காகங்களைப் பயமுறுத்த, விரித்த குடையைக் கல்லைக் கட்டி நம் இருவரையும் காவலுக்கு வைத்துவிடுவாளே? நாம் இருவரும், சுதந்திரப் போராட்ட நாட்களில் ‘வள்ளித் திருமணம்’ நாடகத்தில் நடித்த ஆயலோட்டும் வள்ளியும், அவள் தோழிகளுமாய் நம்மைக் கற்பனை செய்துகொண்டு, “வெள்ளை வெள்ளைக் கொக்குகளா” பாடுவோமே, நினைவுக்கு வருகிறதா? நாம் போராட்டத்தைக் கண்டோமா, ஆலோலம்தான் என்னவென்று தெரியுமா? அம்மா கற்றுக்கொடுத்த பாட்டுதானே? “இந்தியாவை கொள்ளையிட எங்கிருந்தோ இங்கு வந்து குத்தித் தின்னும் குருவிகளா…” என்று பாடும்போது நமக்கு என்னமாய்க் கோபம் வரும்? இப்போதும் அம்மா வடகம் இட்டால் உலக வங்கியையும், அனைத்துலக நிதி ஸ்தாபனத்தையும் நினைத்து இதைப் பாடலாம் என்று தோன்றுகிறது.

இங்குள்ள சன்னலில் படிக்கல் இல்லை. பூந்தொட்டிகள் வைக்க ஒரு மரத்தால் ஆன இணைப்பை நான் போட்டிருக்கிறேன். அதில் சோற்றைப் போட்டு அம்மா, “கிருஷ்ணா ரா” என்று கூப்பிடுகிறாள் தினம். காகங்கள் இங்கு ஏது? இரண்டாம் நாளே அணில்கள் வர ஆரம்பித்தன. இப்போது நிதம் கரண்டி சத்தம் கேட்டதும் வருகின்றன. பெருச்சாளி அளவுள்ள அணில்கள், அம்மாவின் தோழர்கள். அவற்றிலும் இரு பிள்ளைத்தாச்சிகளை அம்மா அடையாளம் கண்டு கொண்டிருக்கிறாள். அவற்றிற்குச் சோற்றில்  ஏதாவது லேகியம் கலந்து ஊட்டுவாளோ என்னவோ யாருக்குத் தெரியும்? நினைத்துப் பார்த்தால் அம்மாவின் இந்தக் காகங்களையும் அணில்களையும் அழைக்கும் சங்கேத மொழி வானத்தையும் பூமியையும் பிணைக்கும் மொழி என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு வகையில் நாம் உதிர்ந்து போய் விடாமல் இருக்க ஒரு வஜ்ரம் போல் இது இருக்கிறது. அம்மா என்னிடம் குமாரசாமிபற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. விவாகரத்துபற்றியும் பேசவில்லை. அவள் பாட்டுக்கு நெய் மணக்கக் கடுகு தாளிக்கிறாள். நான் சன்னல் வெளியே பார்த்துக் கொண்டிருந்தால் மிக்ஸரில் துவையல் அரைக்க வா என்று நச்சிப் பிடுங்கிகிறாள். அல்லது வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி மோரில் போட்டு வெங்காயம், சீரகம், இஞ்சி, தேங்காய் அரைத்துப் போட்டு பொரியல் செய்தால் உடம்புக்கு நல்லது என்ற விவரத்தை எனக்கு விளக்குகிறாள். வாழைப்பூ கிடைக்காத இந்த ஊரில் எனக்கு எந்த வகையில் இந்த விவரம் உதவப் போகிறது? இருந்தாலும் கோயமுத்தூரில் பாட்டி வீட்டுக் கொல்லைப்புறம் மனதில் விரிகிறது தனு. எத்தனை வாழை மரங்கள், வாயில்புறம் விசிறி வாழை. அந்தத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு நாம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஞாபகம் இருக்கிறதா? அதில் நோஞ்சானாக, தலையைப் படிய வாரி, நார் ரிப்பன் முடிந்த பின்னலை முன்னே விட்டு, பல்லெல்லாம் தெரிய இளித்த என் முகம் எனக்கு நினைவுக்கு வருகிறது. தாத்தா வீட்டை விற்கும் முன்பு நாம் இருவருமாய் ஒரு யூகலிப்டஸ் நாற்று வாங்கி நட்டோமே, அதை இப்போதுள்ளவர்கள் வெட்டாமல் வைத்திருக்கிறார்களா என்ற நினைப்பு அடிக்கடி வருகிறது.

என்னைப் பார்த்துக்கொள்ள வரச் சொன்னால், இப்படிப் புயல் வேகத்தில் வேலைகளை உருவாக்கிக் கொள்வாள் என்று நான் நினைக்கவில்லை. இங்கு இந்தியப் பொருள்கள் விற்கும் தெருவில் ஒரு தமிழர் கடை இருக்கிறது. அந்தக் கடைக்காரரிடம் அம்மா தமிழக அரசியல்பற்றி இருமுறை பேசியாகி விட்டது. என் தினப்படி வேலைக்கான ஒழுங்கு முறையையே தகர்க்கப் பார்க்கிறாள். என்னைச் சிடுசிடுக்க வைக்கிறாள். “அம்மா! ஆளை விடேன்” என்று அலற வைக்கிறாள். இருந்தாலும், சொன்னால் நம்ப மாட்டாய். இந்தப் பத்து நாட்களில் எனக்கு ஒரு கிலோ எடை கூடிவிட்டது.

நேற்று முன்தினம் வேலையை விட்டு வீடு வரும்போது அம்மா, “திக்குத் தெரியாத காட்டில்” பாடிக் கொண்டிருந்தாள். “நெஞ்சிற்கனல் மணக்கும் பூக்கள்…” என்றெல்லாம் விவரித்துவிட்டு, “கால் கை சோர்ந்து விழலானேன்” என்று அவள் பாடியபோது கதவில் சாய்ந்து கொண்டு அழுது விட்டேன் தனு. இரட்டைப் பின்னல்களுடன் தலையைத் தலையை ஆட்டி நீ பள்ளியில் நடந்த பாரதி பாட்டுப் போட்டியில் பாடினாய் இதை. இங்கே பல்கலைக் கழகத்தில் வேலை பார்க்கும் சிவநேசம் தம்பதியர் வீட்டுக்குப் போனோம். அங்கே திருமதி திலகம் சிவநேசத்தின் தாயார், தன் இளம் பருவத் தோழி விளாத்திகுளம் செண்பகம்தான் என்பதை அம்மா அவளுடன் பேசித் தெரிந்து கொண்டாள். செண்பகம் குடும்பத்தினர் சுயமரியாதை இயக்கத்தில் மிகவும் ஈடுபாடு உடையவர்களாய் இருந்தார்களாம். அவர்கள் வீட்டில் அம்மா, திலத்தின் அம்மாவுடன் அந்த நாட்களில் சேர்ந்து பாடிய, “ஒரு வானில் பன்னிலவாய் உயர் தமிழ்ப் பெண்களெல்லாம் எழுக! உங்கள் திருவான செந்தமிழின் சிறுமையினைத் தீர்ப்பதென எழுக!” என்று பாரதிதாசன் பாட்டுப் பாடியதும் திலகம் உருகிப் போய்விட்டாள். அவள் தாய் அவள் சிறு வயதிலேயே இறந்து போய்விட்டாளாம். அவளைப்பற்றிய இந்த விவரமெல்லாம் தெரியாது தனக்கு என்று சொல்லிச்சொல்லி நெகிழ்ந்து போனாள்.

“ஆனால் எங்க அம்மாவுக்கு சாமி பக்தி எல்லாம் உண்டு” என்றேன் அவளிடம்.

“அம்மா பெரிசா பூசையெல்லாம் செய்வீங்களா?’ என்று கேட்டாள் அவள்.

“ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் ஏதோ நாலு சாமி கொண்டு வந்திருக்கிறதுதான்” என்றாள் அம்மா.

அம்மாவின் பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்தால் ஒரு சின்ன அம்மன், சிவலிங்கம், கணபதி, முருகன், தவழும் கிருஷ்ணன் இத்யாதி கடவுள் உள்ளே. இவள் தனி மனுஷியாக வந்திருக்கிறாளா இல்லை, உலகத்தையே சுருட்டிப் பையில் போட்டுக்கொண்டு வந்திருக்கிறாளா என்று தெரியவில்லை தனு.”

பாரதியின் உலகில் அணில்கள், அவளைச் சுற்றியுள்ள வீட்டுக்காரர்களின் வாழ்க்கை விவரங்கள், உப்பும், புளியும் காரமும் கூடிய உணவு, அவள் மறந்தே போயிருந்த தமிழ்ப் பாடல்கள் இவை புகுந்து கொண்ட பின் அம்மா திரும்பி வந்தாள். அவள் குமாரசாமியைச் சந்தித்துப் பேசியிருந்தாள் என்ற விவரம் பின்புதான் தெரிந்தது. அவர் குடும்பத்தினர் ஒருநாள் வெள்ளிப் பாத்திரங்கள், நகைகள் இவற்றைக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போயினர். அவர்களுக்கு வகையாகச் சாப்பாடு போட்டு அனுப்பினாள்.

“ஏம்மா, இதையெல்லாம் திருப்பிக் கேட்டியா?” என்று தனம் கேட்டபோது,

“இதெல்லாம் பாரதிதுதானே? அவ ஆள வேண்டி தந்ததுதானே?” என்று கேட்டாள்.

குமாரசாமிபற்றி பின்பு யாரும் பேசவில்லை. இரண்டொரு ஆண்டுகளுக்குப் பின் பாரதி ஒரு குஜராத்திக்காரனை மணந்துகொண்டு இங்கு வந்தபோது அம்மா நகைகளை அவளிடம் தந்தாள். வெள்ளிப் பாத்திரங்களை பணமாக்கி இந்தியாவில் செலவிடவென்று தந்தாள்.

தனம் காக்கைகளைக் கூப்பிடும் அம்மாவைப் பார்த்தவாறு இருந்தபோதே அம்மா வந்தாள்.

“சாப்பிட்டாச்சா தனம்?” என்றாள்.

“நான் ஓட்டல்லே தோசை சாப்பிட்டு விட்டு வந்தேம்மா. இங்க வருவேன்னு நினைக்கலை. அதனாலதான்.”

அம்மா சாப்பிட உட்கார்ந்தாள். அவள் சாப்பிடும்போது தனம் கேட்டாள்.

“நீ என்னம்மா தீர்மானம் பண்ணினே?”

அம்மா மௌனமாக இருந்தாள். அப்பா இறந்து ஒரு மாதமாகி விட்டது. வீட்டைக் காலி செய்யும்படி வீட்டுக்காரர் வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருந்தார்.

“சொல்லும்மா.”

“நான் என்னத்தைச் சொல்ல? உங்கப்பா இப்படி பண்ணிட்டுப் போயிட்டார். ஒரு வீடு கட்டலாம்னு எவ்வளவோ முட்டிகிட்டேன். எதுக்கு அந்தத் தலைவேதனை அப்படின்னு சொல்லிட்டார். என்னை இப்படி இருக்க இடமில்லாம அல்லாட விட்டுட்டு…”

“ஏம்மா அப்படிச் சொல்றே? என்கிட்டேயும் பாரதிகிட்டேயும்தான் நீ இருக்கணும். தினகரன்கிட்டே அப்பப்ப போகலாம்.”

“அது சரிதான். நீயே ஏதோ சிரமபட்டுட்டு…” என்று இழுத்தாள்.

தனத்தின் கணவன் சுதாகர் ஏதோ வியாபாரம் பண்ணப்போய் அகலக்கால் வைத்து விட்டான். அதில் பெருத்த நஷ்டமாகி, கையில் உள்ள சேமிப்பெல்லாம்கூடப் போய் விட்டது. இன்னும் தலை தூக்கிய பாடில்லை. தனத்தின் வங்கி வேலை வரும்படியில் வீடு ஓடியது. அதைத்தான் அம்மா அவ்வாறு குறிப்பிட்டாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. உன்னை நான் காப்பாத்துவேன்” என்றாள் தனம்.

“நான் இல்லேன்னு இப்ப சொல்லலியே? மாட மாளிகை, கூட கோபுரமா வேணும்? ஏதோ ஒரு வேளைச் சோறு, ஒரு வேளைக் கஞ்சி. அன்புதாண்டி முக்கியம்” என்றாள் அம்மா.

“சாமானெல்லாம் கட்ட வேண்டாமா?”என்றாள் தனம்.

“எனக்கென்ன சாமான்? ஒரு பிளாஸ்டிக் டப்பாவுலே நாலு சாமியைப் போட்டுட்டு நான் கிளம்பிடுவேன்” என்றாள் அம்மா.

அம்மாவின் சாமான்களைக் கட்ட இரண்டு நாட்கள் லீவு போட்டுவிட்டு தனம், சுதாகருடன் வந்தபோதுதான் அவளுக்குச் சில விஷயங்கள் புரிந்தன. பாரதி பிறக்கும் முன்பு ஹரித்வார் போனபோது பொறுக்கிய வழவழப்பான, வரிகள் ஓடிய, கடும் சிவப்புக் கல்லிலிருந்து, பாரதிக்கு ஒரு வயதாகும்போது எட்டணா கொடுத்து வாங்கிய வாணலி, கல்யாணமாகி முதல் முறை பிறந்தகம் சென்றபோது, “குமுதா” என்று அவள் பெயர் பொறித்துத் தந்த சரவிளக்கு என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு கதை இருந்தது. வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாளே ஒழிய, எதை வைத்துக் கொள்வது, எதைப் போடுவது என்று அவளால் தீர்மானிக்க முடியவில்லை. இழுப்பறைகள் உள்ள கண்ணாடி வைத்த பீரோ பாட்டி இறந்த பின் அம்மா எடுத்து வந்தது, பாரதியும், தனமும், தினகரனுமாகச் சேகரித்த பொம்மைகள், பச்சை ட்ரங்குப் பெட்டியில் அம்மாவுக்கு வந்த கடிதங்கள். அவள் சேகரித்த சித்த மருத்துவ மற்றும் சமையல் குறிப்புகள் என்று எதுவும் சுலபமாகக் கழித்துக் கட்டுவது போலில்லை. ஏழு கடல் தாண்டி உள்ள மரத்திலிருக்கும் பொந்திலுள்ள வண்டை நசுக்கினால் ஒரு ராட்சசன் உயிர் போய் விடும் என்பதுபோல், இவை எல்லாவற்றிலுமே அம்மாவின் உயிர் புதைந்து கிடந்தது. தனமும், சுதாகரும் மளமளவென்று சில முடிவுகளை எடுத்தனர்.

இரண்டு வீடு தள்ளி, உபயோகத்தில் இல்லாமல் இருந்த ஒரு கார் ஷெட்டை தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து, அம்மாவின் சாமான்களை பத்திரமாக அதில் வைத்தனர். ஏழெட்டு சாமான்களுடனும்… பிளாஸ்டிக் டப்பாவும் இதில் அடக்கம்… அவள் வீணையுடனும் அம்மா தனத்தின் வீட்டிற்கு வந்தாள். அப்பாவுக்கு ஒவ்வொரு முறை மாற்றலானபோதும் பத்திரமாக கட்டப்பட்ட வீணை அது. அம்மாவுக்கு ஆறுவயதில் தாத்தா ஆந்திர நாட்டில் வாங்கிய வீணை. அதற்குப் புடவையில் உறை தைத்து அழுக்குப் படாமல் வைத்திருந்தாள். அதை மல்லாக்க வைக்க தனத்தின் வீட்டில் இடம் இல்லை. அடியில் ஒரு மரத்தாங்கி வைத்து அதை சுவரில் சாய்த்து நிற்க வைத்தனர்.

தனத்தின் நாஸ்திக வீட்டில் அம்மா பிளாஸ்டிக் டப்பாவைத் திறக்க இடம் தேடினாள். கடைசியில் ஒரு கதவின் பின்னால் புத்தகங்கள் வைக்க என்று செய்திருந்த புது ஷெல்பின் ஒரு படியில் பிளாஸ்டிக் டப்பா, அம்மன் மற்றும் சாமிகளுடன் ஏறிக்கொண்டது.

ஒரு வாரம் கழித்து ஒரு மாலை சன்னலருகே உள்ள மேஜையை ஒட்டி அமர்ந்து, எதிரே உள்ள பழ மரத்தில் கிளிகள் கிளைகளில் உட்காருவதும், எழும்பி பறப்பதுமாய் இருப்பதைப் பார்த்தவாறு தனம், பாரதிக்கு ஒரு கடிதம் எழுதினாள்.

“பாரதி, அம்மா என் வீட்டிற்கு வந்திருக்கிறாள். ஆனால், அவள் நிம்மதியாக இல்லை. நிதம் இங்கு பரபரப்புச் சமையல் இல்லை. அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்கும்வரை சுதாகர் அனேகமாக வீட்டில்தான் இருக்கிறான். அவன் தன் சாப்பாட்டை ரொட்டி, முட்டை என்று முடித்துக் கொள்கிறான். அதிகம் போனால், அரிசியும், பருப்பும், காயகறிகளும் சேர்த்த கிச்சடி செய்து சாப்பிட்டு விடுவான். அம்மாவுக்கு மட்டும்தான் சமையல். அவள் இரண்டொரு முறை சுதாகரைச் சாப்பிட வற்புறுத்தியிருக்கிறாள். நான் அப்புறம் ஒரு நாள், “அம்மா, சுதாகர் தனக்கு வேண்டியதைத் தானே செய்துப்பான். அவனை அவன் போக்குலே விட்டுடு. ஒருதருக்கொருத்தர் நம்ப சுதந்திரம் தரணும்மா” என்றேன். “இதற்குப் பெயர்தானா சுதந்திரம்? எனக்குப் புரியலியே” என்று அங்கலாய்த்தாள்.

வந்த உடனேயே மழைக்காலத்துக்கு முன் ரசப்பொடி, சாம்பார் பொடி போன்றவற்றைச் செய்யத் துடித்தாள். இதோ இந்த ஒரு வாரத்தில் என் வீட்டில் எல்லாப் பொடிகளும் தயார். மழைக்காலம் வர இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. நேற்று முன்தினம் போய் எலுமிச்சை வாங்கி வந்து, அரிந்து உப்பு ஊறுகாய், கார ஊறுகாய் என்று தனித் தனியாகப் போட்டாகி விட்டது. இஞ்சி முரப்பாவும், இஞ்சி ஊறுகாயும் செய்தாகி விட்டது. நான் பேச்சுவாக்கில் ஏதோ கேட்டு விட்டேன் என்று வெயிலில் போய் கீரை வாங்கிவந்து ஆய்ந்து வைத்திருக்கிறாள். நாங்கள் இருவரும் வேலை அது இதென்று அதிகம் யோசிக்கிறோம் என்று செம்பருத்திப் பூ போட்ட எண்ணெய் காய்ச்சியாகி விட்டது. ரிஷிவேலியில் படிக்கும் சந்தியா லீவில் வருவாள் என்று எண்ணெய் பட்சணங்கள் செய்து டப்பாவில் போட்டாகி விட்டது. வீட்டில், நல்லதண்ணீர்… அம்மா பிடித்து வைத்தது. சாதாரண தண்ணீர்… நாங்கள் பிடித்தது… கறி, முட்டை செய்த பாத்திரம், செய்யாத பாத்திரம், அம்மாவின் தட்டு, எங்கள் தட்டு என்று பல பாகப் பிரிவினைகள்.

கடவுள்கள் உள்ள பிளாஸ்டிக் டப்பா சிறியதுதான். ஆனால், மூன்றே நாட்களில் கீழே ஒரு பலகை, அதில் ஒரு பித்தனைச் செம்பு, கற்பூர ஆரத்தித் தட்டு, கோலம், ஊதுபத்தி, சந்தனம், குங்குமம், பூ என்று விஸ்தரித்து விட்டது அம்மாவின் பூசை சமாச்சாரம். கடவுள்களுக்குப் புளி போட்டுத் தேய்த்து குளியல். அம்மனுக்குப் பலவித பாவாடை, தாவணி, சந்தன, குங்கும அலங்காரம், பால், திராட்சைப் பிரசாதம் என்று கடவுளைச் சேர்ந்த வேலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பால், திராட்சைப் பிரசாதம் தர பக்கத்து வீட்டுப் பெண் குழந்தை வேண்டியிருக்கிறது. அப்புறம் அவள் அம்மாவின் ஒரகத்திக்குக் குழந்தையே இல்லையென்று அம்மாவின் சித்த மருந்து தயாரிப்பு. எதிர் வீட்டில் லிங்கம்மாவின் கணவருக்கு தலைவலி என்று இரவு ஒன்பது மணிக்குச் சுக்கு மிளகு போட்ட பால் பற்று அரைப்பாள். அம்மாவின் கடவுள்கள் ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் இருப்பது வாஸ்தவம்தான். அதை எடுத்துக் கொண்டு அவள் எங்கு வேண்டுமானாலும் பறப்பாள். ஆனால் திரும்பி வர, குமுதா என்று பெயர் பொறித்த பித்தளைச் சாமான்களும், தேக்கு மரப் பீரோவும், வலை பீரோவும், சன்னல் படிக்கல்லும், மல்லிகைப் பந்தலும், புடலைக்கொடியும் உள்ள, வீணை மல்லாக்க இருக்க ஒரு இடம் அவளுக்குத் தேவை.  “மற்றுப் பற்றெனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்” என்று தேவாரத்தை அம்மா பாடினாலும், அம்மா பூமியுடன் பிணைந்து கிடப்பவள். அவள் பஞ்சாகப் பறந்தாலும், மீண்டும் தரையைத் தொட நினைப்பவள். என் வீட்டிலும், உன் வீட்டிலுமாக அவள் இருக்கலாம். ஆனால் அவள் கஷ்டப்படுவாள். இதை மறைக்க அது, அதை மறைக்க இது என்று ஆயிரம் பொய்கள் சொல்வாள். அம்மாவுக்குத் தேவை இருக்க இடம் மட்டும்  இல்லை. அந்த இடம் அவள் ஆட்சியில் இருக்க வேண்டும். ஏனென்றால் அம்மா தனி மனுஷி இல்லை. அவள் ஒரு ஸ்தாபனம். அவளுக்குத் தேவை பிளாஸ்டிக் டப்பாவை வைக்க ஒரு சிறு இடம் மட்டும் இல்லை. அவளுக்கே ஆன ஒரு ராச்சியத்தைத் தேடி அவள் பாவம் அலைகிறாள். அதை நானும் நீயும் நினைத்தால் அவளுக்குத் தரலாம். உன்னிடம் உள்ள நகைகளும், என்னிடம் உள்ள நகைகளும் அம்மா தந்தவைதான். அவற்றை விற்றுப் பணமாக்கினால் அவள் வீட்டை அவளுக்குத் தரலாம். வீட்டுக்காரர் அதை விற்க முயன்று கொண்டிருக்கிறார். தினகரன் மாதம் இத்தனை என்று அனுப்பட்டும். பள்ளிப்படிப்பு முடித்துவிட்டு இரண்டொரு மாதங்களில் சந்தியா வருகிறாள்.  அவள் பாட்டியுடன் இருக்க ஆவலாக இருக்கிறாள். உன் குழந்தைகளுடன் பேச இங்கிலீஷ் படிப்பு, சந்தியா கல்லூரி நாட்களில் போட்டுக்கொள்ள பூவேலை செய்த சல்வார் கமீஸ், பாட்டு வகுப்புகள், மருத்துவ முயற்சிகள், தன் வாழ்க்கைச் சரிதம் எழுதுவதற்கென யோசனைகளை, ரோசாப் பதியன்கள், கீரைப் பாத்திகள் என்று பல்லாண்டுத் திட்டங்களுடன் அந்த வீட்டில் அம்மா வாழ்வாள்.”

கடிதத்தை முடித்துவிட்டு நிமிர்ந்தபோது, அம்மா சாய்வு நாற்காலியில் அமர்ந்து தெருவைப் பார்த்தவாறிருந்தாள். எழும்பி எழும்பிப் பறந்து முடித்த பச்சைக் கிளிகள் இலைகளினூடே மறைந்து அமைதியாக அமர்ந்திருந்தன.

*****

 மடிந்த பின்னும் வாழ்வோம்!- தில்லைவேந்தன்

Image result for வாழ்வோம்!
 
 
 
இற்றுப்  போன அறநெறிகள்,
      இடிந்து போன மனக்கோட்டை,
அற்றுப் போன நம்பிக்கை,
       அழிந்து போன ஆர்வங்கள்,
கற்று மறந்த அருங்கலைகள்,
      கலைந்து  மறைந்த கற்பனைகள்-
முற்றப்  பெறாத  காவியமாய்
       முடிந்தே வாழ்க்கை போய்விடுமோ?
 
 
 
வெற்றுக் கூச்சல் போடுகின்றோம்
      வீணே பிறரைச் சாடுகின்றோம்
ஒற்றுப் பிழைபோல் அடுத்தவரோடு
      ஒன்று படாது இருக்கின்றோம்.
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை
      குணத்தைப் பார்க்கின் அற்றமில்லை.
உற்றுப்  பார்ப்போம் நம்முள்ளே
      உலகைத் திருத்தும் முன்னாலே.
 
 
 
விடிந்து  விளையும்  புதுநாளை
       விரும்பி, மகிழ்ந்து வரவேற்போம்.
இடிந்து வானம் வீழ்ந்தாலும்
       என்ன ஆகும் பார்த்திடுவோம்.
ஒடிந்த போன உள்ளத்தை
      ஒட்ட வைக்கப் பசையில்லை.
மடிந்த பின்னும் வாழ்ந்திடுவோர்
      வரிசை யில்நாம் சேர்ந்திடுவோம்!
Image result for வாழ்வோம்!
 
 

“கவனிக்க வில்லையா? கண்டு கொள்ள வில்லையா?” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Related image

தலைவலி என்று  முரளி, அம்மா அப்பாவுடன் டாக்டரிடம்  வந்தான். அதிகமான உபாதை, பரீட்சை இருப்பதாகக் கூறியதில் தற்போதைய நிவாரணத்துக்கு மருந்து கொடுத்து, ஒரு வாரத்திற்குப்பிறகு வரச்சொன்னார். அவர்கள் சென்றபிறகு, நான் டாக்டர் அனுப்பி இருந்த க்ளையன்ட்பற்றி அவருடன் ஆலோசிக்க நுழைந்தவுடன், மூவரையும் பார்த்தாயா எனக்கேட்டு, அவர்கள் என்னைப் பார்க்க நேரிடும் என்று முன்னுரைத்தார்.

 

ஒரு வாரத்துக்குள் முரளி, அவன் அம்மா வித்யா, அப்பா சுந்தர் மூவரும் திரும்பிவந்தார்கள். முரளிக்குத் தலைவலி அதிகரித்ததாகத் தெரிவித்தனர். தலை முழுவதும் வலி என்றான், வகுப்பில் கவனிக்க இயலவில்லை, பரீட்சையில் குறைவான மதிப்பெண்கள்தான். எப்பொழுதும் செய்வதுபோல் டாக்டர் பல கோணங்களிலிருந்து அவர்களைக் கேள்விகள் கேட்டதில் முரளியின் தலைவலிக்குக் காரணம் உடம்பு உபாதை இல்லை, வேறு ஏதோ என்று கணித்தார்.  ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரான என்னை ஆலோசிக்கப் பரிந்துரைத்தார். சூழ்நிலை சிக்கல்கள், மனச் சஞ்சலத்தினாலும் தலைவலி வரலாம் என எடுத்து விவரித்தார். சுந்தர், வித்யா ஒப்புக்கொள்ள மறுத்ததும் இதில் வெட்கப்படவோ, அதிர்ச்சி அடையவோ ஏதும் இல்லை என்று புரியவைத்தார், பிரச்சினைகளுக்கு விடைதேட இதுவும் ஒரு வழி என்றார். தயங்கியதால், யோசித்து, முடிவெடுக்கச் சொன்னார்.

 

அடுத்த நாளே சங்கோசம் இருந்தும் மூவரும் டாக்டரிடம்  வந்தார்கள். அவர்களை ஊக்குவிக்கக் கைப்பேசியில் என்னை அழைத்து முரளிக்கு நேரம் குறித்து, “ஜஸ்ட் ஒன் லுக்” எனச் சொன்னார். அவர்களின் சங்கோசத்தைக் கையாளுகிறார் எனப் புரிந்துகொண்டேன்.

 

மூவரும் வந்தார்கள். முரளிக்கு 13 வயது, உயரமான தோற்றம், பருமன், வாராத தலை. கையைப் பிசைந்துகொண்டிருந்ததை அப்பா சுந்தர் தட்டிவிட்டு நிறுத்த முயன்றார். சுந்தர் டிப்-டாப்-ட்ரிம், நெற்றியில் சந்தனப் பொட்டு. அம்மா வித்யா, இடுப்பு வரை ஜடை, அதைப் பின்னி, பூ வைத்திருந்தாள், கஞ்சி போட்ட கச்சிதமான சேலை. இதுவரையில் பார்த்த டாக்டர்களின் சீட்டுகளை என் முன் வைத்தாள்.

 

முரளி தனக்குத் தலைவலி ஆறாம் வகுப்பிலிருந்து இருப்பதாகச்சொன்னான். இந்த வருடம் வகுப்பறைக்குள் போனதுமே வலி தொடங்குவதால், கவனம் சிதறியது, கணக்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம் வகுப்புகளில் வலி அதிகரித்தது. எந்த ஆசிரியரும் ஏனென்று கேட்கவில்லை.  மதிப்பெண்கள் குறைந்ததில் கடுகளவும் வேதனை இல்லை என்றான். சலிப்பை, அளவில்லா கோபத்தைப் பல்லைக் கடித்துக்கொண்டு சமாளிப்பதாகக் கூறினான்.

 

சுந்தர், முரளி இரண்டே நிமிடத்தில் சந்தியாவந்தனம் செய்வதையும் எவ்வளவு சொல்லியும்  நெற்றிப்பொட்டு வைத்துக் கொள்ளாததையும் தனக்குச் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றார். இந்த வயதிலேயே இவ்வளவு “சோம்பேறி” என்றார். வித்யா இதை ஆமோதித்து, முரளி உடை, சாப்பிடும் விதம் எரிச்சல் மூட்டுவதாகச்சொன்னாள்.

 

மொத்தத்தில் அம்மா அப்பா இருவரும் தலைவலியைத்தவிர மற்றவற்றைப்பற்றிப் பேசினார்கள்.

 

கடந்த இரண்டு வருடமாகப் பெரிய வகுப்பு என்பதால் விளையாடுவதற்குப் பதிலாக முரளியை வீட்டுப் பாடம், டியூஷன் போக வைத்தாள் வித்யா.  மதிப்பெண்கள் அதிகரிக்கவில்லை.  முரளியால், நடத்தப்படும் பாடங்களில் கவனத்தைச் செலுத்தமுடியவில்லை. மனதில் ஒரே போராட்டம். இதுவும் மார்க் குறையக் காரணியானது. என்ன ஏது என்று பெற்றோர் இருவரும் விசாரிக்கவில்லை.

 

தலைவலி வந்ததிலிருந்து டியூஷன் கட், டிவி பார்த்தான். இதைச் சொல்லும்போதே துள்ளல், சந்தோஷம் ததும்பியது.

 

சுந்தர் கறாரான பேர்வழி. முரளி எல்லாவற்றையும் முறையாகச் செய்யவேண்டும். ஏமாற்றக் கூடாது என விரும்பினார். இல்லத்தரசியான வித்யா பிள்ளை நன்றாக மதிப்பெண் எடுத்தால் மட்டுமேதான் தன் பொறுப்பைச் சரிவரச் செய்வதாக எண்ணினாள்.

 

முரளியின் எடை ஏறியது; “குண்டு”, “தொந்தி” எனக் கேலியாக அழைப்பதைப்பற்றி சர்வசாதாரணமாகக் கூறினான். வெட்கமாக இருந்தது ஆனாலும் சகித்துக் கொள்வதாகக்கூறினான். விசித்திரமான பதில்! மேலும் ஆராய்ந்தேன்.

 

முரளி ரகசியமாக இதுவரை யாரிடமும் சொல்லாத ஒன்றை அருவருப்புடன் பகிர்ந்தான். இரண்டு வருடமாக அவன் மாமா வேலைக்காக அவர்களுடன் தங்க நேர்ந்தது. மாமாவின் அருகில்போக, பயம் கலந்த கூச்சம் இருப்பதாகச்சொன்னான். முரளியை ஆசுவாசப்படுத்தி நடந்ததைச் சொல்லச்சொன்னேன். மாமா அவனை வருடித் தருவது, தொடும் இடம், விதங்கள், கொஞ்சுவது அனைத்தும் யாரும் இல்லா நேரங்களில்தான் செய்வாராம். முரளிக்கு மாமாவிடமும், தன்மேனியின் மேலும் அருவருப்பு வந்தது. முரளியின் எடை அதிகரிப்பு மாமாவிற்குப் பிடிக்கவில்லை. முரளி தன் எடையைக் கூட விட்டதற்கு இதுவே காரணியாயிற்று. வித்யா அவன் சொன்னதை மறுத்துவிட்டாள். என்ன செய்வது என முரளிக்குப் புரியவில்லை. விழித்தான்.

 

இதை அவனே கையாளலாம் என முரளியை ஊக்குவித்தேன். மாமா, போன்றவர்களை எதிர்கொள்ள, கண்களைப் பார்த்து “நோ”,“இப்படிச் செய்வதால் என்னைக் காயப்படுத்துகிறீர்கள்”, என்பதுபோல் பல செயல்முறை வழிகளைப் பட்டியலிட்டோம். முரளி பயில்வதற்கு ரோல் ப்ளே உபயோகித்துச் செய்யச்செய்ய, அவனுக்கு மனதிடம் கூடியது. சிறிது சிறிதாகப் பயின்ற கருவிகளைப் பயன்படுத்தி தன்னைப் பாதுகாக்கக் கற்றுக்கொண்டான். மாமா கோபப்பட்டு, என்னை வந்துபார்த்துக் கேள்வி கேட்டுப் பயமுறுத்த முயன்றதும், அவருக்கு மனநல சிகிச்சை மிகத் தேவை என்பதைத் தெளிவுபடுத்தினேன். அப்படிச் செய்யவில்லை என்றால் புகார் தரவேண்டி வரும் என எச்சரிக்கை செய்தேன். பிறகு மாமா அதை முறையாகச் செய்துவருவதைக் கேள்விப்பட்டேன். முரளி தன்னுடைய இக்கட்டான, அவதி சூழ்நிலையில் இருப்பதை வீட்டினர் பொருட்படுத்தவில்லை என வேதனைப்பட்டான்.

 

முரளி என்னிடம் உரையாடும்போது திக்கிப் பேசுவதைக் கவனித்தேன். முதலில் இல்லாதது இது என்ன என்றேன். மாமா அவனிடம் தவறான முறையில் பழகியபின் இப்படி என்றான். அவன் வகுப்புத் தோழன் திக்கிப் பேசுவதால் பரிதாபப்பட்டு உதவுவார்களாம்.  திக்கினால், தன்னையும் கேட்டு உதவுவார்கள் என எண்ணி (ஏங்கி?) அதற்காகவே பழகிக்கொண்டதாகக் கூறினான். பரிதாப நிலை!

 

அடுத்தது உடற்பயிற்சிபோல் மனத்திட வளர்ப்பை ஆரம்பித்தேன். அவனுடைய பல வர்ணனைகளை எடுத்துக்கொண்டோம். ஒவ்வொன்றிலும் ஏற்பட்ட பிரச்சினைகளைக் குறித்துக்கொண்டோம். அப்பொழுதெல்லாம் விடிவு தெரியாததால் அவன் கையாண்ட விதங்களை வரிசைப்படுத்தினோம். இப்படி ஏன் நடந்துகொண்டான் என்றும், மாற்று வழிமுறைகளையும் பல வாரங்களுக்கு ஆராய்ந்தோம்.

 

இதன் எதிரொலியாக முரளியின் எடை அதிகரிப்பை அவன் துணிச்சலாகப் பார்க்க ஆரம்பித்தான். எடையினால்மட்டும் தான் மாமாவைப் போன்றவர்களைத் துரத்துவதா என்ற கேள்வியை எழுப்பினேன். மற்றவர்கள் தன்னை தாழ்வாகப் பார்ப்பதை அறிந்தான். பெற்றோர், ஆசிரியர், தோழன் எல்லோரும் மதிப்பெண்  அதிகரிக்கச்சொன்னார்கள். அப்பா இதைச்செய், அப்படிஇரு என்றார், அம்மா மார்க்கில்மட்டும் குறியாக இருந்ததால் விடியற்காலையில் படிக்க வைப்பாள். பெற்றோர் ஆதரவு காட்டவில்லை, அவன் உணர்வை மாமா புண்படுத்துவதை அறியவும் இல்லை.

 

வீட்டிற்கு வருவோர் போவோரிடம்,  “முரளி மாதிரியான சோம்பேறி பார்க்கமுடியாது” என்று எப்போதும் சொல்வதால் அவனுக்கு அப்படியே இருக்கத்தோன்றியது.

 

இந்த தருணத்தில், டாக்டரும் நானும் அவர்கள் மூன்றுபேரிடமும் இதைப்பற்றிப் பேசினோம். டாக்டர், அவர்களுக்கு தலைவலி ஏற்படும் முறைகள், அவைகளின் மூல காரணம், எப்படி உடல்-மனம் கலவையாக இருக்கிறது என்பதை விவரித்தார். அதாவது மனதின் அவஸ்தை உடல் மொழி பேசும்.  வலிகள் என்ற உடல் மொழி நம்முள் இருக்கும் சஞ்சலத்தைக் காட்டும்.

 

கூடவே விடலைப் பருவத்தில், குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து வருவோருக்கு ஏற்படும் பல்வேறு மாற்றங்களைப்பற்றி விவரித்தோம். அதில் ஒன்றானதே “நான் யார்” என்ற தேடுதல். இதிலிருந்தே ஒவ்வொருவரின் தனித்துவம் உதயமாகும்.  இந்தப் பதிமூன்றாவது வயதில், எரிச்சல், சோம்பல், வியர்வை, பருவு, ரசாயன என்று எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் பெரியவர்கள் இதைப்புரிந்து, அனுசரித்துப்போனால் இதைக் கடந்துசெல்ல உதவும்.

 

இப்படி இல்லாமல் சுந்தரைப்போல் வற்புறுத்திச் செய்யவைப்பதில், பயனில்லை. அதற்குப் பதிலாக ஏன், எதற்காக என எடுத்துக்கூறினால் முரளி செய்வான். மாறாக இவர்களைச் சிறு குழந்தைபோல் எல்லாவற்றிற்கும் கண்காணித்து, சொல்லிக்கொண்டே இருப்பது பயனற்றது. விளக்கியதும் வீட்டில் பயிலவைத்தேன். பல வாரங்களுக்குப்பின்னர் பெற்றோரிடம் மாற்றம் தெரிந்தது.

 

முரளி அவன் வயதைப்பற்றி அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தோம். டாக்டர் எழுதிய “தலைவலி” புத்தகத்தின் பக்கங்களை, அவனுடன் படித்து தலைவலியின் உடல்-மனம்-மூளை கலவையைப் புரியவைத்தார்.

 

அடுத்தபடியாக தலைவலி, வரும் சூழலைக் குறித்துவரச்சொன்னேன். அதிலிருந்து எவ்வாறு இது அவன் சுயமதிப்பீட்டை பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டினேன். சூழலைச் சமாளிக்கத் தெரியாததால் வரும் தலைவலியைச் சட்டென்று அடையாளம் கண்டான்.

 

சுயமதிப்பைச் சரிசெய்வதற்குப் பலபேருடன் படிக்க, பேச, பழக, குழுவாகச்செய்ய நேச்சர் வாக், பர்டிங் (Birding), மலையேற்றம் (ட்ரெக்கிங் Trekking) தேர்வுசெய்தோம். இவற்றில் கூட்டாகப்போவது, பகிர்வது நேரும். உடலுக்கும் பயிற்சி நேர்ந்ததால் ஒரே மாதத்தில் வித்தியாசம் தெரிந்தது.

 

குழுவாகச் செயல்படுவதால் மற்றவர்களின் பரிந்துரைப்புகளும், அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாலும் முரளியிடம் வெவ்வேறு மாற்றங்கள் தெரிந்தது. சுந்தர்-வித்யா வியந்தார்கள், தாங்கள் சொல்லிக் கேட்கவில்லை என. இந்த வயதினருக்கு இதுதானே விசேஷம்- அவர்கள் நண்பர்கள் கூறுவதே வேதவாக்கு!

 

தன் வீட்டின் அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுடன் சனி-ஞாயிறு சைக்கிளில் போவதும் தொடங்கியது. வீட்டில் உள்ளவர்களுடன் இதையெல்லாம் செய்யாததால் சுந்தருக்கு முரளி சரியாகச் செய்வான் என்ற நம்பிக்கை பிடிபடவே இல்லை.

 

முரளி பல விதங்களில் உடல்-மனம் நலம் தரும் வழிகளைப் பின்பற்றியதால் ரசாயன மாற்றங்களில் அலுப்பைச் சலிப்பை வெகுவாக சமாளித்தான். வித்யாவே மூக்குக்குமேல் விரல்வைக்கும் அளவிற்கு மதிப்பெண்கள் அதிகரிக்க ஆரம்பித்தது.

 

இந்த மாற்றங்களைப்பார்த்து முரளி தங்களைவிட்டு விலகிவிட்டானோ எனச் சுந்தர்-வித்யா அஞ்சினார்கள். தன் தனித்துவத்தை முரளி உருவாக்குவதில் ஈடுபடுவதை இவ்வாறு கணித்தார்கள்.

 

வித்யா தான் நல்ல அம்மா இல்லை என்றே முடிவு செய்தாள். இவள் தன்  அப்பாவின் முதல் மனைவியின் மகள். அம்மாவின் மறைவிற்குப் பிறகு அப்பா மறுமணம் புரிந்தார். வந்தவள் பாசக்காரி. சின்னம்மாவை வித்யாவிற்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. அவளுடைய தாத்தா பாட்டி  இதை அவள் அம்மாவிற்குச் செய்யும் துரோகம் என அவளைக் கண்டிப்பார்கள். புது அம்மா அவளுக்கு எதைச் செய்தாலும் “ம்? சரியா இருக்கா? சந்தோஷமா?” எனத் தெளிவுபடுத்திக்கொள்வாள். இவர்களைப் பிடித்ததாலும் அவர்களின் செயலைப் பிரியமாகப் பார்த்ததாலும் நாளடைவில் வித்யாவிற்கும் அதேபோல் இருக்கத்தோன்றியது. அவளுக்கு மற்றவர்கள் உறுதி கூறினால்தான் சரி என எடுத்துக்கொள்வாள். இந்த மனப்பான்மையினால், தான் அம்மாவாகச் சரியாகச் செயல்படுகிறோமா என்ற கேள்வி அவளுக்கு மனதில் எழுந்தது. இதைத் தெளிவுபடுத்திச் சரிசெய்ய அவர்களுடன் பல ஸெஷன்கள் தேவைப்பட்டது. பிள்ளைக்காக வந்தார்கள். தங்களுடைய பல  பிரச்சினைகளைக் கண்டுகொண்டு சுதாரிக்க வாய்ப்பானது. 

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (23)- புலியூர் அனந்து

 

வெள்ளத்தே போகாது! வெந்தணலில் வேகாது!

கொள்ளத்தான் போகாது! கொடுத்தாலும் குறையாது!

கள்ளருக்கும் எட்டாது! காவலுக்கும் அமையாது!

உள்ளத்தே பொருளிருக்க ஊரில் உழைத்து  உழல்வானேன்?

 

மதனியின்  வீட்டில், அரசு உயர்நிலைப்பள்ளியின் ‘ட்ரில் மாஸ்டர்’ விநாயகம் சில வருடங்கள் குடியிருந்தார். பள்ளியில் இருந்த மாணவர்களில் ஒரு சிலரையாவது குறைந்தபட்சம் மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கத் தயார் செய்யவேண்டும் என்கிற நோக்கம் அவருக்கு இருந்தது.

ஓட்டப் பந்தயத்தில் மூன்று நான்கு  மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்துவந்தார். மைதானம் வீட்டிற்குப் பின்னால்தான் இருந்தது. அந்தப் பையன்களுக்கு மதனி க்ளூகோஸ், எலுமிச்சை  ஜூஸ் என்று கொடுப்பார். 

என்ன காரணத்தினாலோ விநாயகத்திற்கு வேறு ஊருக்கு மாற்றலாகியது. குடும்பத்தோடு புது ஊருக்குப் போனாலும் அவ்வப்போது  பயிற்சி கொடுக்க வந்துவிடுவார். மற்ற நாள்களில் ‘ஸ்டாப் வாட்ச்’ வைத்து நேரம் குறித்துவைப்பதும் மதனியின் பங்களிப்பாயிற்று.

செய்யும் வேலைகளில் தனக்கென்று இல்லாவிட்டாலும் யாருக்காவது உபயோகம் இருந்தால் நல்லதுதானே என்பார் மதனி. யார் வீட்டில் விசேஷத்திற்காகப் பட்சணம் செய்தாலோ, வருடாந்திர ஊறுகாய், அப்பளம் தயாரித்தாலோ, மதனியின் பங்கேற்பு கட்டாயம் உண்டு.

நான் மாற்றல் காரணமாக  பல ஊர்களில் வேலை பார்த்துவந்தாலும் அவ்வப்போது  ஊருக்குப் போவேன். சற்று தொலைவில் வேலைபார்த்து வந்தபோது ஆறு மாதங்கள் ஊர்பக்கம் வரவில்லை. வந்தபோது மதனி காலமாகிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். கிட்டத்தட்ட அனாயாச மரணம் என்றார்கள்.

கேள்விப்படாத சில சொந்தங்கள்  அவர் இறந்தபோது வந்தன என்று சொன்னார்கள். மதனி இருந்த பழைய  வீடு எதற்கும் உதவாது என்றாலும் தரைக்கு மதிப்பு  உண்டல்லவா?

அஞ்சலகத்தில் போட்டிருந்த பணத்திற்கும் தனது வீட்டிற்கும் எழுத்து மூலம் பத்திரத்தை எழுதிப் பதிவும் செய்து எங்கள் ஊரில் பிரபலமாக இருந்த ஒரு வக்கீலிடம் கொடுத்து வைத்திருந்தார். அவர் முன்யோசனை எல்லோரையும் ஆச்சரியப்படவைத்தது. கோவிலுக்கு அல்லது தர்மத்திற்கு என்று அவர் எழுதி வைக்கவில்லை. ஒரு வாரிசு நியமித்திருந்தார். மதனி நியமித்த வாரிசு எந்தவிதத்திலும் அவருக்குச் சொந்தமில்லை.  

அந்தப் பத்திரத்தின் மூலம்தான் மதனி என்று அறியப்பட்ட அவர் பெயர் சொர்ணம்மாள் என்பதும் காணமல்போன அவர் கணவர் பெயர் சிவசாமி என்பதும் பலருக்குத் தெரியவந்தது. ஆதாயம் தேடிவந்த திடீர் சொந்தபந்தங்கள் ஏமாற்றத்தோடு திரும்பிப்போனார்களாம். நல்லவேளையாக அவர்களில் யாரும் வழக்கு வியாஜ்யம் என்று அடாவடி செய்யவில்லை.

மதனி நியமித்த  அந்த வாரிசு…. சங்கரலிங்கத்தின் மகன் பொன்னுலிங்கம். வேம்பு என்று அறியப்பட்ட பொன்னுலிங்கம்…!

மதனி தன் வீட்டை வேம்புவிற்கு,  இவனுக்கு எழுதி வைத்தபிறகு சிலகாலம் வேம்புவும் அவர் மாமனும் அங்கே குடிபோனார்கள். பணமும் சொத்தும் வந்தபிறகும் வேம்பு தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவில்லை.  பிறருக்கு உதவியாக இருப்பதில் தனக்குக் கிடைக்கும் நிறைவே தனது பேரானந்தம் என்பான். மாமனுக்காக உள்ளூரில் வேலை தேடிக்கொண்ட வேம்பு, அவர் மறைந்தபிறகும் இந்த ஊரிலேயே தங்கினான்.

சில ஆண்டுகளில் மதனியின் வீட்டை இடித்துப் புதியதாக, பெரிய கட்டிடமாகக் கட்டினான். புளியமரத்தை வெட்டவில்லை. மதனியின் காலத்திலிருந்த அதே நடைமுறையில் புளியை ஊராருக்குக் கொடுத்துவந்தான். நான்கு குடும்பங்கள் தங்கும் வகையில் வீட்டை மாற்றி அமைத்தான். சொர்ணம்மாள் இல்லம் என்று பெயரிட்டான். தனது தேவைபோக,  மூன்று குடும்பங்களுக்கு வாடகைக்கு விட்டான். திருமணமாகி குழந்தைகள், குடும்பம், இலவச ட்யூஷன், பரோபகாரம் என்று அர்த்தமுள்ள வாழ்க்கையினை அமைத்துக்கொண்டான்.

பாடம், படிப்பு, பள்ளி, மதிப்பெண் குறித்து சற்று வித்தியாசமான கருத்துகள்கொண்டவன் வேம்பு. அவனிடம் குழந்தைகளைச் சேர்க்கவரும் பெற்றோர்களிடம் சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்லிவிடுவான். ‘உங்கள் பிள்ளை கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்க வைப்பேன் என்றோ  மேற்படிப்பிற்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சியடையச் செய்வேன் என்றோ எதிர்பார்க்காதீர்கள்.’

பின் எதற்காக என் குழந்தை நேரத்தை வீண் செலவு செய்யவேண்டும் என்றோ  உங்களிடம் நாங்கள் வேறு எதை எதிர்பார்க்கலாம் என்றோ பெற்றோர்கள் கேட்கத்தான் செய்வார்கள்.

புத்தகத்தில் என்ன இருக்கிறது, எப்படி கேள்விகளுக்குச் சரியான விடை எழுதுவது என்பதை  பள்ளியில் சொல்லித்தருகிறார்கள். பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்துவது மட்டும்தான் என் வேலை என்பான் வேம்பு. புரிந்துகொள்ளும் வேட்கையையும் நல்ல மனிதனாக வளரவேண்டும்  என்ற விருப்பத்தையும் ஏற்படுத்துவதுதான் என் நோக்கம் என்பான்.  அவன் வீட்டில் குழந்தைகளுடன் உரையாடலும் வேடிக்கை விளையாட்டும்தான் அதிகம். இடையிடையே விஞ்ஞானம், கணிதம், சரித்திரம் ஆங்கிலம் எல்லாம் வரும். 

மேலே கல்வி அழியாதது என்று சொல்லும் பாடல்பற்றி வேம்பு அடிக்கடி சொல்வான்.  கற்ற கல்வி இறந்தவனோடு எரிந்துதானே போகும். அதற்குள் ஒரு சிலருக்காவது கற்றதைக் கடத்துவது மிகவும் அவசியம் என்பான். 

வகுப்பு நேரங்களில் பலசமயம் நான் கூடஇருந்திருக்கிறேன். நான் படிக்கும்போது  இப்படியெல்லாம் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது என்று தோன்றும்.

தங்கப்பன், வேம்பு என்கிற பொன்னுலிங்கம், மதனி என்கிற சொர்ணம்மாள் மூவருமே எனக்கு மனநிறைவைக் கொடுத்த  தங்கமான மனிதர்கள். அதிலும் அவர்கள் பெயரிலும் எதேச்சையாக  தங்கப்பன், சொர்ணம் பொன்னு என்று தங்கம் இருந்தது   என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன்.

ஒரே சமயத்தில் பல புதியவர்களுடன் நாட்களைக் கழித்த அந்த அனுபவங்கள்  பிறகு பயிற்சி மையத்தில்கூடக்  கிடைக்கவில்லை. எப்போதாவது நான் ட்ரைனிங் என்று அனுப்பப்பட்டாலும்,  அவை ஐந்து நாட்களுக்குமேல் இருந்ததில்லை.  சரியாகச் சொல்லப்போனால் இருமுறை போயிருக்கிறேன். ஒரு  ஒருநாள் பட்டறை (வொர்க் ஷாப் என்றால் பட்டறைதானே?) ஒரு முறை அலுவலகத்தில் செயல்படுத்தவிருந்த  புதிய நடைமுறைகள்பற்றி ஐந்துநாட்கள். அவ்வளவுதான்.

முக்கியமாக என் பெயரைக் குறிப்பிட்டு வந்தால்தான் என்னைப் போகச் சொல்வார்கள். யாரேனும்  ஒருவர் என்று கடிதம் வந்தால் என்னை அனுப்பமாட்டார்கள். அதற்குக் காரணம் இரண்டு.

1)      எனக்குச் சொல்லிக்கொடுப்பது எனக்கே உபயோகமாக இருப்பதே பெரிய விஷயம். மற்றவர்களுக்கு நான் என்ன சொல்லித்தரப் போகிறேன்  என்ற அவநம்பிக்கை.

2)      சென்னையில்  நெருங்கிய சொந்தம் உள்ளவர்   யாரேனும் ஓரிருவர் எந்த அலுவலகத்திலும் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் இந்த வாய்ப்பு பயன்படும்.

 பயிற்சி மையத்தில் பழகியவர்கள்பற்றி சொல்லிக்கொண்டு வரும்போதே, விட்டுப்போன இருவர்பற்றியும் சொல்லிவிட்ட  புத்திசாலித்தனத்திற்கு எனக்கு நானே பாராட்டிக்கொள்கிறேன்.

பிறரைச் சார்ந்தே இருந்த வாழ்க்கையில் வேலைக்குச் சேர்ந்ததும்,  தனியாக அறையில் குடியிருந்ததும், பணியில் பல்வேறு மனிதர்களைச் சந்தித்ததும், சென்னையில் பயிற்சி மையத்தில் இரு வாரங்கள் கழித்ததும் …. கொஞ்சம் கொஞ்சமாக உலகம் புரிந்திருக்க வேண்டுமல்லவா?

இல்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது. குதிரைப் பந்தயத்தில் வெற்றிபெற்ற மற்றும் முதல் மூன்று குதிரைகளாக வந்த குதிரைகளுக்குத்தான் செய்தித்தாள்களில் நேரம் முதலான விவரங்களைத் தருவார்கள். மற்றவை ‘also ran’ என்று பெயர்மட்டும் குறிப்பிடுவார்கள். வாழ்வில் இதுவரையில் ஓடிய மற்ற குதிரைகள் பட்டியலிலேயே  இருந்தாகிவிட்டது. இல்லையோ … ஓடாத குதிரையாக அந்தப் பட்டியலிலும் இடம்பெறாத வகையோ?

எதற்கும் உபயோகப்படாத பொருள் என்று ஒன்றும் இல்லை என்பார்கள். அப்படி ஒன்று கண்டுபிடித்தாலும் எதற்கும் உதவாத பொருளுக்கு உதாரணம் காட்டுவதற்காவது  பயன்படுமே! ‘இவரைப்போல அல்லது இவரைவிட சமர்த்துக் குறைவு’ என்கிற ‘பென்ச் மார்க்’ ஆகப் பயன்பட்டிருப்பேன் எனலாம்.  இந்தச் சுயபச்சாதாபம் கிடக்கட்டும்.

மேலே தொடர்வதற்குமுன் குடும்பத்தில் பல மாற்றங்கள். அண்ணனும் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தான். தங்கையின் திருமணமும் நடந்தது. எங்கள் சமூக வழக்கப்படி திருமணம் மாப்பிள்ளை வீட்டில்.   எங்கள் பங்குச் செலவுகள் செய்ய அப்பா, அண்ணன் மற்றும் என் சம்பாத்தியம் மிகவும் உபயோகப்பட்டது.  மாப்பிள்ளை தொலைவில் வெளி மாநிலத்தில் வேலையில் இருந்தார். எப்படித்தான் என் தங்கை புதிய மொழியும் கற்று, புதிய மனிதர்களையும்  புதிய உறவினர்களையும் சமாளிக்கப் போகிறாளோ அன்று அம்மாவும் அப்பாவும் கவலைப்பட்டார்கள்.

ஆச்சரியப்படும்வகையில் அவள் தன்னை புகுந்த வீட்டோடு ஐக்கியப்படுத்திக்கொண்டாள்.  அவளிடமிருந்து “உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா?”  என்று கடிதம் வராத குறை. வெளிமாநிலம் என்பதால் திருமணமான ஐந்து வருடங்களில் ஒரு முறைதான்  பிறந்த  வீட்டிற்கு வந்துபோனாள். அவள் இல்லாமல் வீட்டில் ஒன்றும் நகராது என்பார் மாப்பிள்ளை. வீட்டில் செல்லக் குழந்தையாகவே வளர்ந்துவிட்ட அவள், தன் குடும்பத்தின் ஆணிவேராக மாறியது வேடிக்கைதான். 

மாப்பிள்ளையின்  அலுவலக ஊழியர் நலத் திட்டம் காரணமாக, அங்குள்ள மருத்துவமனையில் எல்லா வசதிகளுடன் செலவின்றி பிள்ளைப்பேறு நடந்தது. அம்மாவும் அப்பாவும் போய் மூன்று மாதங்கள் தங்கிவந்தார்கள்.

தங்கையின் கதை இப்படியாயிற்று. 

அண்ணன் படிப்பு முடித்து ஒரு தொழிற்சாலையில் கணக்காளர் வேலைக்குச் சேர்ந்தான்.   தனிப்பட்ட முறையில் பல தேர்வுகள் எழுதி தன்னைத்  தயார்ப்படுத்திக்கொண்டான். படிப்படியாக முன்னேறினான். பிறகு வேலை மாறினான். மூன்றாண்டுகளில் மற்றொரு பிரபலத் தொழிற்சாலையில் முதன்மைக் கணக்காளர் நிலைக்கு உயர்ந்தான்.

அண்ணன்  திருமணம் விமரிசையாக எங்கள் வீட்டில் நடந்தது. அலுவலகத்தில் நல்ல வீடொன்று கொடுத்திருந்தார்கள். ஊருக்குக் குடும்பத்தோடு அவ்வப்போது வந்துபோவான். நானும் அச்சமயம் விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்குப் போவேன். அப்பா ஓய்வு பெறும்வரை இது நடந்தது.  

பிறகு அம்மா அப்பா அண்ணனோடு சென்னைக்குப் போய்விட்டார்கள். தம்பி கல்லூரி  ஹாஸ்டலில் கடைசி ஆண்டு தங்கினான். அடுத்த ஆண்டே அவன் சென்னைக்குப்போனான். அண்ணனின் வழிகாட்டலில் அவனும் வளர்ந்துவந்தான். (தற்சமயம் அவன் நல்ல நிலையில் மும்பையில் இருக்கிறான்.)

எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்று நான் வேலைக்குச் செல்லத்தொடங்கிய கதை இதுவரையில் ஆயிற்று.  தொடர்வது எனக்குத் திருமணம்  ஆன கதை.

(மேலும்…….)

 *—தண்ணீர் நான் –* – ஹேமாத்ரி

Related image
கடலில் அலையாய்,
கைலாய பனியாய், 
ஆகாய மேகமாய்,
*கருவின் பனிக்குடமாய்,*
உயிர்களின் ரத்தமாய்,
தென்னையில் இளநீராய்,
*மலரில் தேனாய்*
பல பரிணாமத்தில் நான் *உங்களை தொடுகிறேன்,,*
உடலை பொலிவாக்கி,
உடையை சுத்தமாக்கி,
தரையின் கறைநீக்கி,
*ஊரையே  புதிதாக்குகிறேன்….*
விதையை செடியாக்கி,
நெல்லை அரிசியாக்கி,
மரத்தை பெரிதாக்கி
*பசுமையை போர்த்துகிறேன்…*
உங்களை தேடி நான் வந்தது, *இயற்கையின் மழையானது….*
என்னை தேடி நீங்கள் வருவது, *செயற்கையின் பிழைதானது…..*
பூமியில் என்னை தொலைத்துவிட்டு, *செவ்வாயில் சென்று தேடுவதேன்…..*
ஓசோனில் ஓட்டை போட்டுவிட்டு,
*சூரியனை குறை சொல்வதேன்…*
கொதிக்கவைத்தாலும் நான்,
நானாகவே இருக்கிறேன்,
*குளிரவைத்தாலும் நீங்கள், எதிர்மறையாய் நிற்பதேன்….*
மோரில் வெள்ளையாய்,
சேரில் கருப்பாய்,
தாரில் கானலாய்,
*வானவில்லில் விதவிதமாய்,*
*தெரிவதெல்லாம் நானேதான்….*
ஏத்தனை விதமாய் தெரிந்தாலும், *எனக்கென்று தனியாய் நிறமில்லை,,,*
பிறர்க்காக சுரக்கும் *கண்ணீரும் நானும் உலகில் நிஜம்,*
எதற்காகவும் எப்போதும் *கறைபடாது எங்கள் நிறம்….*
கண்ணீரையும் என்னையும் *சிந்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,* ஆனந்தகண்ணீராய் நாங்கள்வந்து *உங்களை நனையவைப்போம்….*
மழையாய் பொழிந்து,
*மனிதரோடு விளையாடவே ஆசைப்படும்*
  *—தண்ணீர் நான் –*

ஹைக்கூ கவிதைகள் – காரை இரா மேகலா

 

Image result for ஹைக்கூ

தேய்ந்த நகம்
தெரிந்தது வீடெங்கும்
மாக்கோலம்.

அழகையும் நறுமணத்தையும்
தொலைத்தே நின்றாள்
மழையில் நனைந்த மல்லிகை.

தலைநிமிர வேண்டிய சமுதாயம்
தலைக் குனிந்தே
அலைபேசியுடன்.

சூரியனும் உதித்தது
ஆனாலும் விடியவில்லை
பெண்களின் வாழ்வு.

புதிய தீபம்
இருண்டே போனது
தீக்குச்சியின் முகம்.

கடைசியாக அவன் சென்ற
வழித்தடம் சொல்லும்
இறைந்த பூக்கள்.

உழைப்பின் வியர்வையும்
மணக்கவே செய்கிறது
பூக்கடைக்காரி.

வறண்ட கோடை
நீர்க்குழாயில் நிரம்பி வழிகிறது
காற்று.

கூடவே வந்தாலும்
என்னை தொடாமலேயே
நிழல்.

Related image

 

அம்மா கை உணவு (15) – ஊறுகாய் – சதுர்புஜன்

 

 

 

 

 

 

 

 

 

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

 1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
 2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
 3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
 4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
 5. ரசமாயம் – ஜூலை 2018
 6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
 7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
 8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
 9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
 10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
 11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
 12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
 13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
 14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019

 

 

ஊறுகாய் உற்சாகம் !

 

ஊறுகாய் என்றாலே ஏதோ ஊறுதே !

ஏதேதோ ஞாபகங்கள் வந்து சேருதே !

தொட்டுக்க ஒன்றிருந்தால் எதுவும் இறங்குமே !

தொடத் தொடத் தொடரும் ஊறுகாய் பந்தமே !

 

தயிர் சாதம் என்றாலே ஊறுகாய் வேண்டும் !

சளக் பொளக்கென்று உள்ளே செல்லுமே !

உப்புமா பொங்கல் என்று அனைத்திற்குமே

ஊறுகாய் தொட்டுக் கொண்டால் ருசியும் கூடுமே !

 

அப்பப்பா எத்தனை வகை ஊறுகாய்களே !

அன்னை கையால் நானும் உண்ட ஊறுகாய்களே !

சின்ன வயதில் தின்று தீர்த்த கவளம் எத்தனை ?

கூடவே துணைக்கு சென்ற ஊறுகாய்கள் எத்தனை !

 

எண்ணெய் மாங்காய் என்ற ஒரு எளிய ஊறுகாய் !

எந்த கல்யாண விருந்தென்றாலும் இருக்கும் ஊறுகாய் !

சின்னச் சின்ன துண்டாக சுவைத்து உண்ணுவோம் !

சிறு பிள்ளை போல் கடித்து ரசித்து தின்னுவோம் !

 

வடு மாங்காய் என்றால் நாவில் எச்சில் ஊறுமே !

வெடுக்கென்று கடித்துக் குதைத்து சாப்பிடுவோமே !

தொக்கு மாங்காய் என்றால் கண்ணில் நீரும் ஊறும் !

சுவைக்க சுவைக்க கூட இரண்டு கவளம் போகும் !

 

மாகாணி என்ற ஒரு மகா ஊறுகாய் !

மாகாளி வந்தாலும் எங்கே என்பாள் !

போகாத ஊருக்குப் போக வேண்டாம் !

மாகாணி இருந்தால் வேறு எதுவும் வேண்டாம் !

 

நெல்லி ஊறுகாய் நாவில் ஊறும் ஊறும் !

உடல் மனதில் உற்சாகம் சேரும் சேரும் !

கோங்குரா சட்னி என்று ஆந்திரம் சொல்லும் !

புளிப்பும் உரப்பும் சேர்ந்த சுவை அள்ளும் அள்ளும் !

 

கிடாரங்காய் ஊறுகாய் என்று சொன்னால் போதுமே –

அடங்காது போகும் என் ஆசைத் தீயுமே !

நார்த்தங்காய் சாதாரண காயல்லவே !

உப்பு உரப்பு என்று பற்பல சுவை காட்டுமே !

 

வேப்பிலைக் கட்டி சிறிதளவு இருந்தால் போதும் !

தட்டு நிறைய சாதம் கூட காலியாகுமே !

பச்சை மிளகு ஊறுகாய் பாட்டிலைக் கண்டால்

பக பகவென அடி வயிற்றில் பசியைக் கிளறுமே !

 

எத்தனை வித மனிதர்கள் இந்த உலகினில் உண்டோ –

அத்தனை வித ஊறுகாய்கள் நம் ஊரினில் உண்டு !

அன்னை போல ஒரு தெய்வம் உலகில் உள்ளதோ !

அவளின் கை உணவு நமக்கு அமிர்தம் அல்லவோ !

 

     

 

 

 

     

எங்க ஊர் எம்.எல்.ஏ – எஸ் கே என்

Image result for எம் எல் ஏ கார்ட்டூன்

ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் அய்யாச்சாமி எங்க ஊர்  எம்.எல்.ஏ ஆனார். அது குருட்டு அதிர்ஷ்டமா, தற்செயலா விதியா என்று நீங்களே சொல்லுங்கள்.

மாநிலம் முழுவதும் இயங்கிவந்த அதிகப் பிரபலமில்லாத  வெண்புறா மக்கள்  இயக்கம் என்னும் அமைப்பில்  அவர் நெடுநாளைய அங்கத்தினர். அவரது ஊர் ஒரு சிறு நகரம். நகரப் பஞ்சாயத்து என்று சொல்வார்கள்.  நகரசபை என்று அழைக்கப்படுவதற்கான ஜனத்தொகையோ வரிவசூலோ இல்லாத சிறிய நகரம் அல்லது சற்றுப் பெரிய கிராமங்கள் இந்த வகையில் சேரும்.

ஊரில் வீரப்பன் என்று ஒரு டீ கடைக்காரர் இருந்தார். அவர் ஒரு கட்சியில் அங்கத்தினராக இருந்தார். கட்சி நடத்தும் பொதுக் கூட்டங்களில்  முக்கியமான தலைவர்கள் வரும்வரை பேசுவதற்கென்றே சிலர் இருப்பார்கள். இந்த வட்டாரத்தில் அது வீரப்பன்தான். அரசியல் நடப்புகள் பெரிதாகத் தெரிந்திருக்கவேண்டிய  அவசியம் இல்லை. கட்சி ஆதரவு பத்திரிகைகளில் வரும்  செய்திகளைப் படித்துவிட்டுச் சற்று ஏற்றஇறக்கங்களோடு கொஞ்சம் அடுக்குச் சொற்கள் சேர்த்து அடித்து விடவேண்டியதுதான்.

ஒரு முறை சட்டசபைத் தேர்தலில் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்யச்சொன்னார்கள்.  இவரும் செய்தார். அதிகாரபூர்வ வேட்பாளரின்  மனு  ஏற்கப்பட்டபிறகு வாபஸ் வாங்கியிருக்கவேண்டும். சரியாக அந்த சமயத்தில் இவரது மாமனார் இறந்துபோனார். ஓட்டுச் சீட்டில் வீரப்பன் – சுயேச்சை – தையல் இயந்திரம் சின்னம் என்று   அச்சடிக்கப்பட்டு இருந்தது. இவரே தனக்கு ஓட்டுப்போடவில்லை. அதிகாரபூர்வ வேட்பாளருக்குத்தான் ஓட்டுப்போட்டார். அனாலும் இவருக்கு அறுபத்தி ஏழு ஒட்டு கிடைத்தது. தேர்தல் எல்லாம் முடிந்தபிறகு ஓட்டுச் சாவடியில் ஒட்டியிருந்த வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பை எப்படியோ உரித்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். இன்னும் அவரிடம் அது இருக்கிறது.

நண்பர்கள் சிலர் இவரை உசுப்பிவிட்டார்கள். கட்சியில் ஏதேனும் பொறுப்பை எடுத்துக்கொண்டு ‘முன்னேற’ ஆலோசனை சொன்னார்கள். கட்சி நடத்திய அந்த வட்டச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டார். தோற்றுப்போனார். தனது ஆதரவாளர்கள் தன்னைக் கைவிட்டுவிட்டார்கள் என்கிற வருத்தத்தில் கட்சியிலிருந்து விலகினார். சில நாட்கள் தானுண்டு தன் கடையுண்டு என்று இருந்தார். அப்போதுதான் வெண்புறா மக்கள்  இயக்கத்தின் தலைவர் இவர் ஊருக்குத் தன் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு  வந்திருந்தார்.   இவர் கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது  வீரப்பன் மேடையில் நன்றாகப் பேசுவார் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள்.

தன் இயக்கத்திற்கு  இந்த ஊருக்கு ஒரு கிளை அமைக்க வீரப்பனையும் சில நண்பர்களையும் சேர்த்தார். வீரப்பன்தான் தலைவர். மாதம் ஒரு கூட்டம் நடத்துவார்கள். பொதுவாக குடிநீர், குப்பைவண்டி, பேருந்து நிழற்குடை என்று ஒரு கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றுவார்கள். தாசில்தார், கலெக்டர் என்று பார்த்து மனுக்கொடுப்பார்கள்.

Image result for எம் எல் ஏ கார்ட்டூன்அய்யாச்சாமி வீரப்பனின் பள்ளித் தோழர். இவருக்கும் பொதுவாழ்விற்கும் காததூரம். அவருக்கு இரண்டு மகன்கள். இருவரும் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இவருக்கு இருந்த விவசாய நிலத்தை எல்லாம் விற்றுத்தான் மகன்களை படிக்கவைத்தார்.   மனைவியை இழந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தது. மகன்கள் அனுப்பும் பணத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருந்தார். பிள்ளைகள் இருவரும் பணம் அனுப்பத் தவறவே மாட்டார்கள்.

ஆனாலும், பணம் கைக்கு வர தாமதம் ஆனால் வீரப்பனிடம் அவ்வப்போது கைமாற்று வாங்க நேரிடும். வீரப்பன் மனுக்கொடுக்கப் போகும்போது வேறு ஆளில்லை என்றால்  அய்யாச்சாமியும் நண்பரோடு கூடப்போக நேரிடும். கைமாற்றுக் கொடுக்கிறாரே அந்த நன்றி உணர்ச்சியாகக்கூட இருக்கலாம்.

வெண்புறா மக்கள்  இயக்கம் கூட்டங்கள் என்பது பொதுக் கூட்டம்போல இருக்காது. அவர்கள் ஊரில் மொத்த அங்கத்தினரே இருபது நபர்தான் தேறும். அதில் செயற்குழு என்று பத்துபேர். சந்தா எல்லாம் பெயருக்குத்தான். மூன்றே செலவுகள்தான். கூட்டத்தில் அனைவருக்கும் டீ.  இது வீரப்பன் உபயம்.  போக்குவரத்து செலவு – இதுவும் மாவட்ட அல்லது தாலுக்கா நகரில் வேலையிருக்கும் யாராவது அழைத்துப் போய்விடுவார். பஸ் சார்ஜ் யார் கொடுக்கிறார்கள் என்று யாரும் கவனிப்பதுகூடக் கிடையாது. மூன்றாவது செலவு இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு மாதம் ஒருமுறை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்பும் தபால் செலவு.

அரசியல் சார்பற்று இயங்கிவந்த  அந்த  இயக்கத்தில் நாகேந்திரன் என்ற ஒரு அரசியல்வாதி தலைமை அலுவலகத்தில் ஒரு பொறுப்பு ஏற்றார். ஒவ்வொரு தேர்தல்போதும் தங்கள் ஆதரவை போட்டியிடும் இரண்டில் ஒரு கூட்டணிக்கு என்று இயக்கம் அறிவிக்கத்தொடங்கியது. (ஒரு சௌகரியத்திற்காக இரண்டு கூட்டணிகளுக்கும் ஒரு பெயர் வைத்துக்கொள்வோம். ஆளும் கூட்டணி, மக்கள் மகேசன் கட்சியின் தலைமையில் உழக்குக் கூட்டணி. எதிர்கட்சிக் கூட்டணி- ஜனநாயகக் குடிமக்கள் கட்சி தலைமையில் ஆழாக்குக் கூட்டணி)

சென்னையிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்தது. பல மாவட்டங்களில் சொல்லத் தகுந்த அளவிற்கு அங்கத்தினர்கள் சேர்க்கப்பட்டார்கள். அந்த அந்த ஊரின் முக்கியஸ்தர்கள் இயக்கத்தில் சேர்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அது ஒரு அரசியல் சார்பு இயக்கம் ஆகியது.

ஆனால் அய்யாச்சாமி ஊரில் மட்டுமின்றி அவர்கள் மாவட்டத்திலும் இயக்கம் பெரியதாக வளரவில்லை. இவர் ஊர் தவிர இன்னும் வெகுசில இடங்களிலேயே கிளைகள் இருந்தன. அவையும் பெரியதாகச் செயல்பட்டன என்று சொல்ல முடியாது.

ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பெரும்பான்மை ஒரு கேள்விக்குறியானது.  எதிர்கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமை இல்லை. அரசியல் நிலவரம் குழப்பமாக இருந்தது. இந்நிலையில் எதிர்கட்சிகளில் ஒரு கட்சி ஆளும் கட்சியோடு ஒரு மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெளிநடப்பு செய்ய ஒரு நிபந்தனையோடு  ஒப்புக்கொண்டது.  நம்பிக்கை ஓட்டெடுப்பு வெற்றியடைந்தால்   சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தவேண்டும். தேர்தலில் ஆளும்கட்சியின் உழக்குக் கூட்டணியில்   இந்தக் கட்சியும் சேர்ந்துகொள்ளும்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இதனால் என்ன லாபம் என்று கேட்கலாம். இப்போது ஏழு  சட்டசபை உறுப்பினர்கள் கொண்ட கட்சிக்கு புதிய ஏற்பாட்டில் எண்ணிக்கை  குறைந்தது இரட்டிப்பாகும்  என்கிற நம்பிக்கை. கட்சித் தலைவரின் மகனுக்குப் போட்டியிட வாய்ப்புக்கிடைக்கும் என்றுதான் இந்த ராஜதந்திரம் என்று சிலர் அபிப்பிராயப்பட்டார்கள்.

திட்டப்படி எல்லாம் நடந்து தேர்தல் வந்தது. எந்தக் கட்சி  எந்தக் கூட்டணியில் என்று நாளொரு செய்தி  வந்தவண்ணம் இருந்தது.  இந்தமுறை ஆதரவு மட்டுமே தெரிவித்துவந்த வெண்புறா மக்கள்  இயக்கம் இரண்டு கூட்டணிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. பத்து தொகுதிகள் கொடுத்தால்தான் கூட்டணியில் சேருவோம் என்று பேரம் நடந்தது. இரண்டு கூட்டணிகளும் அவ்வளவு தொகுதிகள் கொடுக்கத் தயாராக இல்லை.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளுக்கு இரண்டே நாட்கள் இருந்தன.  வெண்புறா இயக்கம் எல்லாத் தொகுதியிலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய  முடிவெடுத்தது. இரண்டு கூட்டணிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் முயற்சி இது. அய்யாச்சாமி, வீரப்பன் அவர்களின் தொகுதியில் வீரப்பன் மனுத் தாக்கல்செய்ய முடிவெடுத்தார்கள். அவர் பெயரை முன்மொழிய என்று ஊரிலிருந்து சிலரையும் அழைத்துக்கொண்டு மாவட்டத் தலைநகர் போனார்கள். அய்யாச்சாமியும் அதில் ஒருவர்.

வேட்புமனு தாக்கலின்போது ஒரு விஷயம் தெரியவந்தது. வீரப்பன் சென்ற தேர்தல் முடிந்ததும் செலவுக் கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். அந்த விவரமே அவருக்குத் தெரியாது. அவர் மனு நிராகரிக்கப்பட்டது.. வேறு வழியில்லாமல் அய்யாச்சாமியை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார்கள். எப்படியும் வாபஸ் வாங்கத்தானே போகிறோம் என்று இவரும் வேட்புமனு தாக்கல்செய்தார்.

Image result for எம் எல் ஏ கார்ட்டூன்சென்னையில் பேரம் மும்மரமாக நடந்தது. கடைசியில் உழக்குக் கூட்டணி வெண்புறா இயக்கத்திற்கு எட்டு தொகுதிகள் என்று ஒப்புக்கொண்டது. தொகுதிகளும் வெண்புறா இயக்க மற்றும் மகேசன் கட்சி வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பை வைத்து ஏழு தொகுதிகள் முடிவாயின.

வாபஸ் வாங்க சில மணி நேரமே  இருக்கும்போது  ஒரு பெரிய அதிசயம் நடந்தது. அய்யாச்சாமி வாபஸ் வாங்கப் போயிருக்கிறார். அவருக்கு தலைமை அலுவலகத்திலிருந்து வாபஸ் வாங்க வேண்டாம் என்று போன் வந்தது.

உழக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட இருந்த மகேசன் கட்சி வேட்பாளரான அய்யாக்கண்ணு வாபஸ் வாங்கிவிட்டாராம். செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு.  குடும்பத்தில்  ஏதோ பிரச்சனை. அய்யாக்கண்ணுவின் மூன்று அண்ணன்களும் இவரை போட்டியிடக்கூடாது என்று அதட்டியிருக்கிறார்கள்.  இவரும் யாருக்கும் தெரியாமல் ஓசைப்படாமல் வாபஸ் வாங்கிக்கொண்டு போய்விட்டார். உழக்குக் கூட்டணிக்கு இந்தத் தொகுதிக்கு சரியான வேட்பாளர் இல்லாமல் போனது.

வெண்புறா இயக்கத்திற்கு என்று முடிவாகாமல்  இருந்த எட்டாவது தொகுதியாக அய்யாச்சாமியின் தொகுதி முடிவானது. வெண்புறா மக்கள் இயக்க வேட்பாளர்கள் மகேசன் கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிட்டார்கள்.  மகேசன் கட்சியின் அதிகாரபூர்வ சின்னம் அய்யாச்சாமிக்கு ஒதுக்க அனுமதிக் கடிதம் மகேசன் கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து இரவு முழுதும் காரில் பயணம் வந்துசேர்ந்தது.

தேர்தலில் அய்யாச்சாமி சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். எல்லாக் குழப்பத்தாலும்- வீரப்பன் தகுதி இழந்தது, அய்யாக்கண்ணு வாபஸ் வாங்கியது, அதிகார பூர்வ சின்னம் கிடைத்தது மேலும் அய்யாச்சாமிக்கும்  அய்யாக்கண்ணுவிற்கும் வாக்காளர்    பலருக்கு வித்தியாசம் தெரியாமல் போனது- பலனடைந்தவர் அய்யாச்சாமிதான்.

தேர்தல் பிரச்சரத்தின்போது தனது  அனுபவங்கள்ற்றி அய்யாச்சாமி ஒரு புத்தகம் எழுதிவருகிறார் என்பது ஒரு கூடுதல் செய்தி.

எஸ்.கே.என்

 

 

ஆஸ்காருக்குச் செல்லும் “கமலி” குறும்படம்

 

 

இப்போது குறும்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. தமிழகத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி கமலியை பற்றிய குறும்படம் 2020ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது .தமிழகத்தில் இருக்கும் மகாபலிபுரத்தை சேர்ந்தவர் ஒன்பது வயதான கமலி மூர்த்தி. ஸ்கேட்போர்டை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் திறன் கொண்டவர் இவர் . கமலி கவுன் அணிந்து ஸ்கேட்போர்டை பயன்படுத்தியபோது எடுத்த புகைப்படம் பிரபல ஸ்கேட்போர்டரான டோனி ஹாக்கின் பார்வையில் பட்டது.

காலில் செருப்பு கூட இல்லாமல் ஒரு சிறுமி அசாத்தியமாக ஸ்கேட்போர்டை பயன்படுத்தியதை பார்த்து ஆச்சரியப்பட்ட டோனி அந்த புகைப்படத்தை பகிர கமலி உலக அளவில் பிரபலமானார். இதனையடுத்து நியூசிலாந்தை சேர்ந்த ஷஷா ரெயின்போ என்கிற இயக்குநர் தமிழகத்திற்கு வந்து கமலியை குறித்து 24 நிமிட குறும்படத்தை இயக்கினார். அந்த குறும்படம் கடந்த மாதம் நடைபெற்ற அட்லாண்டா திரை விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை தட்டிச் சென்றுள்ளது.

( நன்றி: தின செய்தி மற்றும் இந்தியா டு டே ) 

 

சுகந்தி என்ற தாய் தான் மகள் கமலி தன்னைப்போல் வீட்டுச்சிறையில் மாட்டிக்கொள்ளும் பறவையாக இருக்கக்கூடாது என்பதற்காக அவளுக்குக் கற்றுத்தரும் பாடம் ஸ்கேட் போர்ட் ( SCATE BOARD) 

தாய் மகளுக்குத் திறந்த வேலி ! திறந்தவெளி !!

அதன் டீசரைப் பாருங்கள் !

 

 

 

 

பாண்ட்ய குமாரன் ஐயப்பன் -பதினெண் பாடல்- சு.ரவி

 
Image result for பாண்டிய குமாரன் ஐயப்பன்
பாண்ட்ய குமாரன் ஐயப்பன் பற்றி 18 பாடல்கள் !
சுந்தரகோபாலம் உரவன மாலம்
நயன விடலாம் துக்கஹரம்….

பஜ நந்தகுமாரம் சர்வஸுக சாரம் நத்வவிசாரம் ப்ரம்மபரம்” என்ற

நந்தகுமார அஷ்டகம்  போல அமைத்த பாடல் வரிகள் !
இசை அமைத்துப் பாடியவர் திருமதி க்ருபா ரமணி !
பாடலைக் கீழே கொடுத்துள்ள  இணைப்பில்  ( கண்ட்ரோல் கிளிக் செய்யுங்கள் )கேளுங்கள். மெய் மறந்து போவீர்கள்!  

 சுந்தர  வடிவாகும் சின்மயரூபம் சபரிகிரீசம் சாந்திமயம்

சங்கரனரிகூடும் சங்கமநேரம் பம்பைக் கரையினில் அவதாரம்

சந்தனமணம் சூழும்கானகமாளும் தெய்வம் அருளும் கவிதைவரம்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

தண்மதிவதனம் செந்தாமரைநயனம் தவரூபம் சிவவைராக்யம்!

தண்மதிசூடும் சிவம் மோஹினி இணையும் தருணம் பாலன் அவதாரம்!

மண்டலவ்ரதம்கேட்கும் மன்னவன்காட்டில் அவனருளால் முள்மலராகும்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

சின்முத்ரைக்கரம் சிவனம்சம்என்றால் மோஹினி போலவன் நளினகரம்!

சிந்தனைகள் இணையும் அரனும்அரியும்அருளும் அற்புத தெய்வாம்சம்!

கன்மத்திரைவிலகும்    மாயைமறையும் கடைவிழிநோக்கில் ஞானம்வரும்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

அம்புவிஈதும் ஏழ்தலம்யாவும் ஒளிர்மீன்களும் கோள்களும் அரசாங்கம்!

அம்புலிசூடும் அம்பலவாணன் திருமாலுடன்அருளும் அவதாரம்!

வன்புலியேறும் அவன்வில்லேந்தும் கரம்வல்வினை மாய்க்கும் வரமருளும்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

அச்சன்கோவில் அவன்அரசாங்கம் எழில்ஆரியன்காவினில் அருளம்சம்!

அச்சன்சிவன்மோஹினி அம்மைஇருவரும் ஒன்றாய்அருளும் அவதாரம்!

மெச்சும்குளத்தூரின்பாலகன்வடிவம் அன்பர்க்கருளும்மழலைவரம்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

விண்ணவர்குலம்வாட்டும் வ்யாகுலம்போக்கிடும் வ்யாக்ராரூடம் சபரியுறும்!

வெண்பிறைபுனையும் யோகியும்மோஹினியும் ஒன்றாய்அருளும் அவதாரம்!

பண்ணொடுபனுவல்கள் வேட்கும்பந்தள ராஜகுமாரம் சுகமருளும்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

செஞ்சரணம்புகலெனும் அடியார்மனதில்   கோவில்கொள்ளும் மணிகண்டம்!

செஞ்சடைமீதோர் அரவம்சூடும்  இறைஅரியோடருளும் சிவபாலம்!

அஞ்சிடும்அமரர்தம் அச்சம்போக்கும் மஹிஷிஸ்ம்ஹாரம் அமைதிதரும்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

அந்தமும்ஆதியும் அதுவாகும் அதுவேநீயெனும் மறையந்தம்மந்த்ரம்!

அரனெனும் மின்னல்அரியெனும்மேகம் இவைதொடும்நேரம் அவதாரம்

செந்தழலெழும்நேரம் சரணம்சூழும் ஐயன்அருளும் பரமபதம்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

உய்யும்வழிகாட்டும் உன்னதமார்கம் உம்பரின்உலகினில் சேர்த்துவிடும்

உத்திரநக்ஷத்ரம் பரமபவித்ரம்  ஹரிஹர்புத்ரன் அவதாரம் 

நெய்யபிஷேகம் நம்நெஞ்சைநிறைக்கும்  இதமருளும்நற்பதமருளும்

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

சத்தியமாகும்படி பத்துமோரெட்டும் பரவசமூட்டும் முக்திதரும்!

சங்கரசாரங்கரின் சங்கமம் அருளால் சாந்தஸ்வரூபம் அவதாரம்

நித்தியமுத்தர்சிரம் இருமுடிதாங்கும் நிர்மலரூபம் சுமைஏற்கும்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

திண்டிமம், பறைவாத்யம்அழுதாதீரம் அழகன்நடனம் அரங்கேறும்!

திண்ணியமேனியில் திருவாபரணம் தரிசனம்நல்கும் நிஸ்சலனம்!

வண்டினம்முரலும் பூங்காவனம்வாழும் வனதேவதைமார் வந்துதொழும்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

தென்பொதிகைக்குறுமுனி தவமும் கலையும்வண்ணம் ஆங்கோர்ஜோதியெழும்!

தென்முகத்தெய்வம்மாலுடன்அருளும்தேசிதுவென்றேதன்மனம்தெளியும்!

பொன்சொரிமுத்தையனும்பரிவாரங்களும்அருளும்தலம்மூலாதாரம்!

பஜபாண்ட்யகுமாரம்தத்வமஸிசாரம்ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

நச்சரவின்விடமும் அச்சங்கோவிலின் எல்லையில் ஏறாதிறங்கிவிடும்

நஞ்சுண்டோனும் கருடத்வஜனும்  அருள்மன்னன் நிழலே அமுதவரம்!

அச்சம்விலகும் மலைஅவனருள்பொழியும் ஸ்வாதிஷ்டானத் தலமாகும்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

அம்புலிவதனம் வெம்புலிஇவரும் சித்பரம்ஆரியங்கா உறையும்

அச்சுதனும்அரனும் இணையும்நேரம் ஹரிஹரபுத்ரம் அவதாரம்

நம்பிடுமடியார் நலம்கூட்டும்க்ஷேத்ரம் மணிபூரகமாய் மலர்ந்திருக்கும்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

சின்னஞ்சிறுரூபம் செவ்விதழ்மலரும் குளத்துப்புழையில் கோவிலுறும்

சிற்றம்பலமாடும் சிவமரியோடருள் சிறுபாலன் இங்கவதாரம்!

மின்னற்கொடியாய்ச் சுடர் மேவு மநாஹதசக்ரக்ஷேத்ரம் இதுவாகும்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

அல்லிருள்மேனியும் வில்ஏந்தியகரமும் கிராதரூபம் காட்சிதரும்

வண்ணம்பலபூசும் பேட்டைதுள்ளல் முழவொடு பக்தர்தம் நடனம்வரும்

நல்எருமேலியிலே வாபரன்காவல் விசுத்திக்ஷேத்ரம் பொலிவுதரும்!

பஜபாண்ட்யகுமாரம்தத்வமஸிசாரம்ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

தற்பரயோகினி சபரிபீடமும், சரங்குத்திஆலும் சன்னிதியும்

தம்நிலைமறந்தே இருமுடிசுமந்தேறும் பக்தர்வாழ்வை மாற்றிவிடும்

பொற்றளிஒளிரும்  தலம்ஆக்ஞாசக்ரம் ப்ரூமத்யவாசம் நிறைவருளும்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

தங்கத்தாமரைகள் ஆயிரம்மலரும் பொன்னம்பலமே ஸஹஸ்ராகாரம்!

தைம்முதல்நாளில் வான்மீதெழும் மகரஜோதியில் ஐயன்காட்சிதரும்

கங்காதரனும் கனகாம்பரனும் மகிழ்பாலகனே பாதம்சரணம்!

பஜபாண்ட்யகுமாரம் தத்வமஸிசாரம் ஜோதிஸ்வரூபம் ப்ரம்மபரம்!

 

 

 

வாழ்க்கை !  நிழல் !!  – கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்

Image result for வாழ்க்கை

 

மனிதர்களே ….

பல வண்ணங்கள்

வேண்டுமெனில்

பட்டாம்பூச்சியிடம்

கேட்டுப் பெறுங்கள்

பச்சோந்தியிடம்

கேட்காதீர்கள்!

 

மனிதர்கள் அழுவதே

வாழ்க்கை இல்லை

மனிதன் அழாமல்

இருந்தாலும்

வாழ்க்கை இல்லை !

 

நிழலும் அரசியல்வாதிகளும் !

 

 

நிழல் ….

 

காலையில் நம் முன்னே

சென்று வணங்குகிறது !

 

தேர்தல் சமயத்தில் 

நம்மையெல்லாம்

அரசியல்வாதிகள்

வணங்குவதைப் போல.

 

நிழல்…

பிற்பகலில் பின்னே

நம்மை தொடர்கிறது !

 

தேர்தல் நாளன்று

தங்கள்  ஓட்டுக்காக.

நம் பின்னே வரும்

அரசியல்வாதி போல.

 

நிழல் …

இரவில் அது

இருக்கும் இடம்

தெரியாமல் மறைகிறது !

 

வெற்றி அடைந்து

பதவி சுகம் கண்டபின் 

தொகுதிப் பக்கமே

வராத அரசியல்வாதி போல. 

                                                 

 

                                     

சிறுகதை எழுத்தாளர்கள் சிறுகுறிப்பு – இரண்டாம் பத்து – என் செல்வராஜ்

Image may contain: 1 person

சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காகத் தகவல்களை திரட்டும்போதுதான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப்பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம். –

-என். செல்வராஜ்

 

Bs ramaiah.jpg

பி எஸ் ராமையா

வத்தலகுண்டு கிராமத்தில் பிறந்த ராமையா எழுதிய ” மலரும் மணமும் “என்ற சிறுகதைக்கு ஆனந்த விகடன் பரிசு பெற்றார். அவர் மணிக்கொடி இதழ் பற்றி எழுதிய மணிக்கொடி காலம் என்ற கட்டுரை நூலுக்காக 1982 ல் சாகிதய அக்காடமி விருது பெற்றார். அவர் மணிக்கொடி இதழை சிறுகதைகளுக்கென்றே மாதமிருமுறை இதழாக சில காலம் நடத்தினார். இவரது சிறுகதை தொகுதிகள் மலரும் மணமும், பாக்யத்தின் பாக்யம், ஞானோதயம், புதுமைக்கோயில், பூவும் பொன்னும் ஆகியவற்றை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இவரது தேரோட்டியின் மகன் என்ற நாடகம் புகழ் பெற்றது. இவரின் சிறந்த சிறுகதைகள் நட்சத்திரக் குழந்தைகள், கார்னிவல், மலரும் மணமும்.

Image result for கு அழகிரிசாமி

கு அழகிரிசாமி

இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர். எழுத்தாளர் கி ராஜநாரயணனின் இளமைக்கால நண்பர். இலக்கிய உலகில் இவரது சிறுகதைகள்

புகழ் பெற்றவை. 1970 ல் அன்பளிப்பு என்னும் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். மலேசிய தமிழ் நேசன் பத்திரிக்கையில் பணியாற்றியவர். நவசக்தி நாளிதழில் பணியாற்றியபோது அவர் கவிச்சக்கரவர்த்தி என்ற நாடகத்தை எழுதினார். அது அவருக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்தது. இவரது முழு சிறுகதைத் தொகுப்பை கு அழகிரிசாமியின் சிறுகதைகள் என்ற பெயரில் காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரது ” ராஜா வந்திருக்கிறார்” என்ற கதை இந்திய மொழிகளிலும் ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த கதை. இவரின் சிறந்த கதைகள் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், காற்று, சுயரூபம், திரிவேணி, இருவர் கண்ட ஒரே கனவு.

Related image

ஜெயகாந்தன்

மக்கள் கவனத்தை பெரிதாகக் கவராத அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களுடைய உணர்ச்சிகளை, வாழ்வின் மேன்மை, அவலம்

அனைத்தையும் தன் கதைகளின் பேசு பொருளாக்கியவர். சிறந்த நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். 2005 ஆம் ஆண்டில் ஞானபீட பரிசு பெற்றவர். ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் இவரது புகழ் பெற்ற நாவலாகும்.இவரது சிறுகதைகளின் முழுத் தொகுப்பை கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆனந்த விகடனில் தொடர்ந்து பல முத்திரைக் கதைகளை எழுதினார். அவை முத்திரைக் கதைகள் என்ற பெயரில் கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின்சிறந்த சிறுகதைகள் அக்னிப்பிரவேசம், யுகசந்தி,நான் இருக்கிறேன், குருபீடம், மௌனம் ஒரு பாஷை, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, ட்ரெடில், பிணக்கு.

Image result for ஆ மாதவன்

ஆ மாதவன்

திருவனந்தபுரத்தில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் இவர். திராவிட எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராக ஆனார். திருவனந்தபுரத்தில் உள்ள சாலைத்தெருவை பிண்ணனியாகக் கொண்டு பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இலக்கியச்சுவடுகள் என்ற நூலுக்காக 2015 ஆம் ஆண்டு சாகித்ய அக்காடமி விருது பெற்றார். இவருடைய கிருஷ்ணப் பருந்து நாவல் சிறந்த நாவல் ஆகும். இவரது கடைத்தெருக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுதி தமிழிலக்கிய உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஆ மாதவன் கதைகள் என்ற முழு தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின்சிறந்த சிறுகதைகள் நாயனம், பறிமுதல், தண்ணீர்.

Image result for ச தமிழ்ச்செல்வன்

ச தமிழ்ச்செல்வன்

அறிவொளி இயக்கத்தில் பங்கேற்று பல கிராமங்களுக்குச் சென்று கல்விப் பணியாற்றியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி.

குறைவாகவே சிறுகதைகளை எழுதி உள்ளார். இவரின் சிறுகதைகளின் முழு தொகுப்பு “ச தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் ” என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. சிறுகதைக் களத்தை தேர்ந்துகொண்டு யதார்த்த தளத்தில் இயல்பான மொழி, பிரச்சாரமற்ற தன்மை சிறுகதைக்குரிய சாதுர்யம்கொண்டு இயங்கியவர். இப்போது கதைகள் எழுதுவது இல்லை. எழுத்தாளர் கோணங்கி இவரின் சகோதரர்.வெயிலோடு போய், வாளின் தனிமை ஆகிய கதைகள் சிறப்பானவை. தீப்பெட்டி தொழிற்சாலயில் கருகும் பிஞ்சுகளும் , அத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் கரிசல் மக்களும் இவரது கதைகளில் ஆழமாக வெளிப்படுகின்றனர். இவரின் சிறந்த சிறுகதைகள் வெயிலோடு போய், வாளின் தனிமை,பாவணைகள்.

Image result for பிரபஞ்சன்

பிரபஞ்சன்

புதுச்சேரி தந்த புகழ் பெற்ற படைப்பாளர். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். பிரபஞ்சன் என்ற புனை பெயரில் எழுதி வருகிறார். சிறந்த சிறுகதை எழுத்தாளர். வானம் வசப்படும் நாவலுக்காக 1995ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். மானுடம் வெல்லும் நாவலும் சிறந்த நாவலாகும். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். இவரது முதல் சிறுகதை “என்ன உலகமடா?” பரணி என்ற பத்திரிக்கையில் 1961ல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.இவரது சிறுகதைத் தொகுப்பான “நேற்று மனிதர்கள்” பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப்பட்டுள்ளது. இவரது மகாநதி புதினம் கோவை கஸ்தூரி ரங்கம்மாள் நினைவுப் பரிசு பெற்றுள்ளது. இவரது சந்தியா புதினம் 1997- ஆம் ஆண்டு ஆதித்தனார் நினைவுப் பரிசு பெற்றுள்ளது. இவரது பிருமம் சிறுகதை இலக்கியச் சிந்தனையால் ஆண்டின் சிறந்த கதையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவரது சிறுகதைகளின் முழுத் தொகுப்பை கவிதா பதிப்பகம் பிரபஞ்சன் சிறுகதைகள் என்ற பெயரில் இரண்டு தொகுதியாக வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் அப்பாவின் வேஷ்டி, மீன், மரி என்கிற ஆட்டுக்குட்டி, மனசு.

Image result for கி ராஜநாராயணன்

கி ராஜநாராயணன்

கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர். தமிழ் எழுத்துக்கு வட்டார இலக்கியம் என்ற புது வகைமையை உருவாக்கிக் கொடுத்ததில் முன்னோடியாக இருந்தவர் கி ரா. கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக 1991ல் சாகிய அக்காடமி விருது பெற்றவர்,. இவரது கோபல்ல கிராமம் சிறந்த நாவல். கரிசல் வட்டார எழுத்தாளர்களின் கதைகளை கரிசல் கதைகள் என்ற தொகுப்பாக தொகுத்திருக்கிறார். கரிசல் வட்டார வழக்கு அகராதியை தொகுத்துள்ளார். இவரது சிறுகதைகளை கி ராஜநாராயணன் கதைகள் என்ற தொகுப்பாக அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வானம் பார்த்த பூமியான கரிசல் மக்களின் வாழ்க்கை, ஆசாபாசங்களை நயமான கிண்டலுடன் எடுத்துரைப்பவை இவரது கதைகள். இவரின் சிறந்த சிறுகதைகள் கன்னிமை, கதவு, நாற்காலி, கோமதி

Image result for கந்தர்வன்கிக்

கந்தர்வன்

தமிழ்ச்சூழலில் முற்போக்கு இடதுசாரி எழுத்தாளராக நன்கு அறிமுகமானவர் நாகலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட கந்தர்வன். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் கந்தர்வனுக்கும் முக்கிய இடம் உண்டு. முற்போக்கு கருத்து நிலை சார்ந்து வெளிப்படும் எழுத்து நடைக்கு, கதை சொல்லும் மரபுக்கு செழுமையான வளம் சேர்த்தவர் கந்தர்வன்.வறண்ட பிரதேசமான பிற படைப்பாளிகளால் ஒதுக்கப்படும் தொழிற்சங்க வாழ்வின் வாஞ்சை மிகு மனிதர்களை தமிழ்க்கதைப் பரப்புக்குக் கைபிடித்து அழைத்துவந்த படைப்பு முன்னோடி அவர். கந்தர்வன் கதைகள் முழுத் தொகுப்பை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இவரின் சிறந்த சிறுகதைகள் சாசனம், தராசு, மங்கலநாதர், காளிப்புள்ள.

Image result for சா கந்தசாமி

சா கந்தசாமி

மயிலாடுதுறையில் பிறந்த இவர் சாயாவனம் என்ற நாவல் மூலம் புகழ் பெற்றவர். இந்நாவலை தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய

இலக்கியங்களுள் ஒன்றாக அறிவித்தது. 1998 ஆம் ஆண்டு விசாரணைக் கமிஷன் என்ற நாவலுக்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றார். இவரின் சிறுகதைகளின் முழு தொகுப்பை கவிதா பதிப்பகம் சா கந்தசாமி கதைகள் என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. கந்தசாமியின் படைப்புலகம் அனுபங்களின், வாழ்க்கையின் அடிநாதமாக தொழிற்படும் மனித உணர்வுகளின் சிக்கல்களின் முரண்பாடுகளின் களமாக உள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் தக்கையின் மீது நான்கு கண்கள், உயிர்கள், ஹிரண்ய வதம்

Image result for இராஜேந்திர சோழன் எழுத்தாளர்

இராஜேந்திர சோழன்

மயிலத்தில் வசித்து வரும் இவர் அஷ்வகோஷ் என்ற பெயரில் செம்மலரில் பல கதைகளை எழுதி இருக்கிறார். படைப்பு வாசகனைச் சிந்திக்க

தூண்டுவதாய் இருப்பதுடன், அவனுடைய சமுதாயப் பார்வையில் மேலும் வெளிச்சம் பாய்ச்சுவதாகவும் இருக்கவேண்டும் என்ற சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர். இவரது சிறுகதைகளின் முழு தொகுப்பை இராஜேந்திர சோழன் கதைகள் என்ற பெயரில் தமிழினி வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் புற்றில் உறையும் பாம்புகள், எதிர்பார்ப்புகள்,கோணல் வடிவங்கள்

இன்னும் வரும்

என்வினவி அல்லது புலனம் என்றால் என்ன ?

Image result for தூய தமிழ் சொற்கள்

சமீபத்தில் whatsapp க்கு தமிழில் என் வினவி என்று தமிழில் ஒரு கட்டுரையில் கூறப்பட்டது. 

அதைப்பற்றித் தேடும்போது  மலேசியாவில் நடந்த மாநாட்டில் அன்றாடம் உபயோகிக்கும் கணிணி சம்பந்தப்பட்ட கலைச் சொற்களுக்கு  இணையான தமிழ்ச் சொற்களைக்  குறிப்பிட்டுள்ளனர்.  

அந்த மாநாட்டில்  அறிவிக்கப்பட்ட தொழில்நுட்பப் பெயர்களுக்குத் தமிழாக்கம் : 

1. WhatsApp – புலனம்

2. YouTube – வலையொளி

3. Instagram – படவரி

4. WeChat – அளாவி

5.Messenger – பற்றியம்

6.Twitter – கீச்சகம்

7.Telegram – தொலைவரி

8. Skype – காயலை

9.Bluetooth – ஊடலை

10.WiFi – அருகலை

11.Hotspot – பகிரலை

12.Broadband – ஆலலை

13.Online – இயங்கலை

14.Offline – முடக்கலை

15.Thumb Drive – விரலி

16.Hard Disk – வன்தட்டு

17.GPS – தடங்காட்டி

18.CCTV- மறைகாணி

19.OCR – எழுத்துணரி

20 LED – ஒளிர்விமுனை

21.3D – முத்திரட்சி

22.2D – இருதிரட்சி

23.Projector – ஒளிவீச்சி

24.Printer – அச்சுப்பொறி

25.Scanner – வருடி

26.Smart Phone – திறன்பேசி

27.Simcard – செறிவட்டை

28.Charger – மின்னூக்கி

29.Digital – எண்மின்

30.Cyber – மின்வெளி

31.Router – திசைவி

32.Selfie – தம் படம் – சுயஉரு

33 Thumbnail – சிறுபடம்

34.Meme – போன்மி

35.Print Screen – திரைப் பிடிப்பு

36.Inket – மைவீச்சு

37.Laser – சீரொளி

அந்த மாநாட்டைப் பற்றித் தேடியபோது கிடைத்த தகவல்கள்: 

 

1964ம் ஆண்டு புதுடில்லியில் 26வது கீழைத்தேயவியல் மாநாடு நடைபெற்றது.

1968ல் இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாடு சென்னையில் நடைபெற்றது. அறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராகக் கொண்ட தமிழ்நாடு இந்த மாநாட்டை சிறப்பாக நடாத்தியது.

மூன்றாவது மகாநாடு 1970ல் பிரெஞ்சு தலைநகரான பாரிசில் நடைபெற்றது.

நான்காவது மாநாடு இலங்கையில் 1974 ல் நடத்தப்பட்டது.

1981ம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.தலைமையில் தமிழ்நாட்டில் மதுரையில் ஐந்தாவது மகாநாடு நடத்தப்பட்டது.

ஆறாவது மகாநாடு மலேசியாவில் 1987ஆம் ஆண்டு நடைபெற்றது.

ஏழாவது மகாநாடு 1989ம் ஆண்டு மொரிசியஸ் தீவில் நடைபெற்றது.

எட்டாவது மகாநாடு 1995 இல் தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில் தஞ்சாவூரில் நடைபெற்றது.

2015ல் மலேசியாவில் ஒன்பதாவது மகாநாடு நடைபெற்றது.

தற்போது அமெரிக்காவில் சிகாகோவில் 10 வது மாநாடு 2019 ஜூலை 3-7 தேதிகளில் நடைபெற இருக்கிறது. 

 

இதுதான் உலகம்– கோவை சங்கர்

Image result for today's world

உலக மென்னடா பாழு முலகம்
உறவு என்னடா பாசமில் லுறவு
உயிர்க ளென்னடா நஞ்செனு முயிர்கள்
நட்பு என்னடா புறத்தின் நட்பு?

பணமெனும் பேயை இறைவன் படைத்தான்
பசிக்கும் மாதை கூடவே வைத்தான்
‘பணமா நெறியா’ போட்டி போட
பணமே வெல்லும் பாழும் உலகம்!

உற்றார் என்னும் எண்ணமும் இல்லை
உரியவர் என்னும் பந்தமும் இல்லை
துன்புறு முற்றார்க் குதவியும் செய்யா
தன்னலங் கொண்ட பாசமில் லுறவு!

இருப்பதை வைத்து மகிழ்வான் இல்லை
இணைந்து சென்று வாழ்வான் இல்லை
திறனைப் பார்த்து வஞ்சம் கொள்ளும்
உயிர்க ளென்னடா நஞ்செனு முயிர்கள்!

செல்வம் கண்டால் வாயைத் திறப்பான்
செல்வம் இலையேல் தூரவே நிற்பான்
நட்பின் உயிராம் உள்ளன் பில்லா
நட்பு என்னடா புறத்தின் நட்பு!

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

அசோக் நகர் கோடைப் புத்தக விழாவும்நானும்!

வருடா வருடம் அஸ்லி நகரில் உள்ள அரசு நூல்நிலைய வளாகத்தில் ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெறும். இவ்வருடமும் நடந்துகொண்டிருக்கிறது – ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், சுட்டெரிக்கும் வெயிலில் நண்பர் ஆர் கேயுடன் சென்றேன்.

காம்பவுண்ட் சுவருக்கும், மத்திய நூலகக் கட்டிடத்துக்கும் இடையே சுமாராக 15அடி அகலம், 50-60 அடி நீளத்திற்கு ஒரு பந்தல் – ஃப்ரில் வைத்த வெள்ளைத் துணியில் சீலிங், “ப” வடிவில் ஒற்றை அரங்கம், மூன்று பக்கங்களிலும் புத்தகங்கள், அரங்கின் நடுவில் நீளமான பெஞ்சில், அட்டைப் பெட்டிகளில் புத்தம்புதிய புத்தகங்கள் (50% தள்ளுபடி விலையில்)! சந்தியா பதிப்பகம் மற்றும் ஓரிரண்டு பதிப்பகங்கள் மட்டுமே பங்கு கொண்டிருந்த புத்தகக் திருவிழா – ஆனாலும், நல்ல புத்தகங்கள் இருந்தன.

சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கட்டுரை நூல்கள், சிறுவர்களுக்கான அறிவியல் மற்றும் கதைகள், கார்ட்டூன்கள், மு.வ. நூல்கள், கல்கியின் பொ.செ.. வண்ணதாசன், கலாப்பிரியா, லா ச ரா, க நா சு என நூல்கள் – வாசலில் ஒருவர் பில் மெசினுடன்; அருகில் ஒரு ஃப்ள்க்ஸ் போர்டு, சில புத்தகப் படங்களுடன்…

ஜம்பரும் வேஷ்டியும் (சிறுகதைத் தொகுப்பு – ந.பிச்சமூர்த்தி), ஹாஸ்ய வியாசங்கள் (பம்மல் சம்பந்த முதலியார்), கல் சிரிக்கிறது (நாவல் – லா ச ரா), இலக்கியச் சாதனையாளர்கள் (க நா சு) – இவை நான்கும் (சந்தியா பதிப்பகம்) நான் வாங்கிய புத்தகங்கள். வெயில், டி.வியில் கிரிக்கெட் போன்ற காரணங்களால், இரண்டு, மூன்று பேர்கள் மட்டுமே புத்தகம் ‘பார்த்துக்’ கொண்டிருந்தனர்.

20% டிஸ்கவுண்டில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு, வெளியே ஒரு செவ்விளநீர் (கிட்டத்தட்ட தள்ளுபடி செய்த ஒரு புத்தக விலை!) சீவி, காகித உறிஞ்சு குழல் உதவியுடன் நாக்கையும், தொண்டையையும் சிறிது நனைத்துக்கொண்டு, வீடு வந்துசேர்ந்தேன்!

போன வாரம் இதேபோல் டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு தள்ளுபடி விற்பனை – க்ளியரன்ஸ் சேல் என்றார்கள். போயிருந்தேன். அவ்வளவு புத்தகங்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் – வாங்குபவர்களும் இருந்தார்கள். மகிழ்ச்சி. ஆனாலும் புத்தகம் குறித்து, இன்னும் ஏதோ ஒன்று குறைகிறது……… ஒரு வேளை வாசிப்போ?

வாங்கிய புத்தகங்களை வாசித்த வரையில் …….

“1937 ல் முதற் பதிப்பு – சென்னை ‘பியர்லெஸ்’ அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது – ஹாஸ்ய வியாசங்கள் – தமிழில் ராவ் பஹதூர் ப.சம்பந்த முதலியார், பே.,பி.எ.ல்., அவர்களால் இயற்றப்பட்டது”. என்ற குறிப்புடன் தொடங்குகிறது இந்தப் புத்தகம். சென்னை விநோதங்களில், நீர் இல்லாத நீச்சல் குளம் உள்ள கட்டிட விவரணை, பழம் தவிர மற்ற எல்லாம் விற்கும் கார்ப்பொரெஷன் பழக்கடை, ‘பீஸ் – கூட்ஸ் – மார்கெட்’என்ற பெயருடைய ஜவுளிக் கடை கட்டிடத்தில் உள்ள சவுக்கு மரக் கடைகள் என நகைச்சுவயுடன் விவரிக்கிறார். “வயது” என்ற வியாசத்தில், 90 வயதுக்கும் மேலாக இருக்கும் ஒரு ஆரோக்கியமான கிழவர் ” சாஸ்திரங்களில் ஒருவனுடைய பொருள், ஒருவனுடைய வயது, ஒருவனுடைய ஆசாரியார் பெயர், இன்னும் இரண்டொரு விஷயங்களை வெளியில் கூறக்கூடாது ” என்று கூறி, வயதைச் சொல்ல மறுத்துவிட்டாராம்.
இப்படி சுவாரஸ்யமான 12 வியாசங்களைக் கொண்ட சின்ன  ஆனால் சிறப்பான நூல்!

‘ஜம்பரும் வேஷ்டியும்’ – சிறு கதையில் இரண்டு நண்பர்கள், தன் மனைவிகளின் சந்தேகம், சண்டைகளால் எப்படி வீடு மாற்ற முடிவு செய்கிறார்கள் என்பதை தன் பாணியில் சொல்கிறார் ந.பிச்சமூர்த்தி. 8 சிறுகதைகள் கொண்ட சிறிய தொகுப்பு.

க நா சு அவர்களின் இலக்கியச் சாதனையாளர்கள், நான் வாசித்த மட்டில், மிகச் சிறந்த நூலாக, சுவாரஸ்யமான வாசிப்பானுபவமாக இருக்கிறது. நான்கைந்து பக்கங்களில், தமிழின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளின் குணாதிசயங்கள், படைப்புகள், விருப்பு வெறுப்புகள் எனப் பிழிந்துகொடுக்கிறார். ராஜாஜி தொடங்கி விசுவநாத சத்திய நாராயணா வரை 41 ஆளுமைகள் பற்றி எழுதியிருக்கிறார். (நான் 11 வரை வாசித்திருக்கிறேன்!). புதிதாக வாசிக்கவும், எழுதவும் முனைவோருக்கு, அனுகூலமான, பயன்மிகு படைப்பு, ‘இலக்கிய சாதனையாளர்கள்’ என்கிறார் சந்தியா நடராஜன் – உண்மைதான்!

(‘கல் சிரிக்கிறது’ – இன்னும் வாசிக்கவில்லை!)