Monthly Archives: February 2017
தலையங்கம் – அரசியல் ஜல்லிக்கட்டு
அரசியலில் இன்று ஜல்லிக்கட்டு!
நீதி வாசல் திறந்தது.
வீறு கொண்டு காளை வந்தது.
எப்படியும் அதைப்பிடித்து அமுக்கிவிடலாம் , வளைத்து விடலாம், அதன் கொம்பை முறித்துவிடலாம் அதன் வாயில் ஏதாவது திணித்தாவது அதனைத் தம் பிடிக்குள் கொண்டுவந்துவிடலாம் என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தார்கள்.
ஆனால் காளை , தான் காளை என்பதை தெள்ளத் தெளிவாக நிரூபித்துவிட்டது.
தவறான நோக்கத்தோடு வந்தவர்களுக்குச் சரியான முடிவு கிடைத்தது.
ஊழல் செய்த அரசியல்வாதிகளின் இதயத்தை இந்தத் தீர்ப்பு கிழித்துக் குதறிவிட்டது.
இன்னும் எத்தனையோ அரசியல் திமிங்கிலங்கள், முதலைகள், (அ) சிங்கங்கள் தைரியமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றன.
அவர்களின் கருப்பு இதயங்களை நீதித் தேவதையின் இரும்புக் கரங்கள் குத்திக் கிழிக்கும் நாள்தான் உண்மையான ஸ்வச்ச பாரத்.
அந்த நாளை வரவேற்கிறோம்!
சரித்திரம் பேசுகிறது – யாரோ
கனிஷ்கர்
மௌரியர்கள் போயினர்.
சுங்கர்களும் போயினர்.
குறுநில மன்னர்கள் பலர் ஆண்டனர்… போயினர்.
ஒரு பெரும் சக்தி கொண்ட மன்னன் இல்லாவிடில் சரித்திரம் மௌனமாகி விடுகிறது.
அலெக்சாண்டர், சந்திரகுப்தர், அசோகர் இருந்த போது ஆர்ப்பரித்த இந்திய சரித்திரம் சில காலம் ஓய்வெடுத்து அமைதியாய் இருந்தது.
அதே நேரம்…ஐரோப்பா சரித்திரத்திலோ, மாபெரும் நிகழ்வுகள் நடந்தேறின!
ரோமாபுரிப் பேரரசு – அந்த மன்னர்களின் மாட்சியாலும், நாடக நிகழ்வுகளாலும் புகழ் பெற்றது.
இயேசுநாதர் வாழ்வும் தியாகமும் உலகத்தையே உலுக்கி எடுத்தது.
புத்த மதமும் ஓங்கி இருந்தது.
இந்து மதம் நீறு பூத்த நெருப்புப் போல் அடங்கியிருந்தது.
அந்நாளின் இந்தியாவானது … தக்ஷசீலம், சிந்து, காந்தாரம் (இந்நாள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்) என்று விரிந்து சிறப்புற்றிருந்தது.
இந்தப் பகுதிகளின் எல்லையில் பாரசீகம், கிரேக்கர்கள் என்று பல நாடுகள் இந்தியாவின் சரித்திரத்தில் பங்கு பெறத் துடித்திருந்தன.
மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட யுச்சி பழங்குடியின் ஒரு பிரிவினர் குஷானர்கள்.
அவர்கள் முதலில் சாகர்களை விரட்டிவிட்டு பாக்டிரியாவைக் (இன்றைய வடக்கு ஆப்கானிஸ்தான்) கைப்பற்றினர்.
பின்னர் காபூல் பள்ளத்தாக்கு வழியாக முன்னேறி காந்தாரப் பகுதியைக் கைப்பற்றினர்.
குஷாண மரபைத் தோற்றுவித்தவர் குஜூலா காட்பிசஸ் (முதலாம் காட்பிசஸ்).
காபூல் பள்ளத்தாக்கை கைப்பற்றினார்.
அவரது புதல்வர் வீமா காட்பிசஸ் (இரண்டாம் காட்பிசஸ்) வடமேற்கு இந்தியா முழுவதையும் கைப்பற்றி மதுராவரை சென்றார்.
முதல் முறையாக இந்தியாவில் தங்க நாணயங்களை வெளியிட்டார்.
இனி கதை சொல்வோம்.
கனிஷ்கர்:
காலம்: 144 AD
இடம்: புருஷபுரம் (இன்றைய பெஷாவர்)
கனிஷ்கர்
(By Biswarup Ganguly – Enhanced image of, CC BY-SA 3.0,
https://commons.wikimedia.org/w/index.php?curid=54661761)
கனிஷ்கர் -‘தலையற்ற சிலை’
கனிஷ்கரது அரசவையின் மந்திராலோசனைக் கூடம்.
கனிஷ்கர் பொன் வேய்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.
மந்திரிகள், தளபதிகள், ஆலோசகர்கள் அரை வட்ட வடிவமாக ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.
முதல் அமைச்சர் பேசினார்:
(கனிஷ்கர் நாணயங்கள்)
‘கனிஷ்கர் மகாராஜாவின் தந்தை ‘சக்ரவர்த்தி வீமா’ தங்க நாணயங்களை வெளியிட்டார். இனி வரும் கனிஷ்கர் மகாராஜாவின் நாணயங்களில் பதிக்கப்படும் பட்டங்கள் பின் வருமாறு :
‘மகாராஜன்’,‘மன்னாதி மன்னன்’, ‘பேரரசன்’, ‘இறைவனின் மைந்தன்’, ‘உலகநாயகன்’, ‘ராஜராஜன்’’, ‘காவலன்’, சீசர்’
(இது நமது சொந்த சரக்கு இல்லை .. ‘India –A history by John Keay’ பார்க்கவும்.
இன்றைய அரசியல் கட்சிகள் (நாணயங்களுக்குப் பதிலாக) சாலையோர போஸ்டர்களில் இப்படித் தானே எழுதுகிறார்கள்!)
‘ஆஹா’ என்று அனைவரும் சிலாஹித்தனர்.
கனிஷ்கர் சற்றே வெட்கப்பட்டாலும், தம் புகழ் பரவுவதில் சந்தோஷப்பட்டு:
‘மகிழ்ச்சி’ – என்றான்!
முதல் அமைச்சர் தொடர்ந்தார்:
‘மற்றும் இந்த நாணயங்களில் கிரேக்க கடவுளரின் படங்கள் இருக்கும்’
கனிஷ்கர் குறுக்கிட்டான்:
“அமைச்சரே! அத்துடன் சிவன் – பார்வதி படங்களும் இருக்கட்டும்”!
‘என்ன?’ – அனைவர் முகங்களிலும் திக்பிரமை!
‘புத்தரின் தொண்டனான கனிஷ்கரா பேசுவது?’ என்று அனைவரும் வியந்தனர்.
கனிஷ்கரின் வதனத்தில் முறுவல் பிறந்தது… பரந்தது…
‘இந்த நாணயங்களை நாம் வெளியிட்டாலும்… இது இந்திய மக்களுக்கானது. நான் புத்தரின் பித்தனாக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல அரசன் எல்லா மதங்களையும் அரவணைக்க வேண்டும். என் தந்தையாரே பெரும் சிவ பக்தன்’
முதல் அமைச்சர்: “அப்படியே செய்வோம் மகாராஜா!; அடுத்து நமது ஆட்சிபற்றிப் பேசுவோம்”
தொடர்ந்தார்:
‘கனிஷ்க மகாராஜா சென்ற வருடம் பதவி ஏற்ற பொழுது..
குஷானப் பேரரசில் ஆப்கானிஸ்தான், காந்தாரம், சிந்து, பஞ்சாப் ஆகிய பகுதிகள் இருந்தன. பின்னர் அவர் மகதத்தைக் கைப்பற்றி பாடலிபுத்திரம், புத்தகயா வரை முன்னேறிச் சென்றார். காஷ்மீர் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்.
சென்ற வருடம் சீனப் படைத்தலைவர் பாஞ்சோ என்பவரிடம் வெற்றியடையாமல் போனாலும் – இவ்வருடம் மீண்டும் படையெடுத்து பாஞ்சோவின் மகன் பான்யாங் –ஐ முறியடித்தார்.அதன் பயனாக காஷ்கர், யார்க்கண்ட், கோடான் ஆகிய பகுதிகளை கனிஷ்க மகாராஜா நமது பேரரசுடன் இணைத்துக் கொண்டார். மேற்கில் காந்தாரம் தொடங்கி கிழக்கே வாரணாசி வரையிலும், வடக்கில் காஷ்மீர் தொடங்கி தெற்கே மாளவம் வரையும் நமது பேரரசு பரவியிருக்கிறது. அரசே, இனி ஆட்சி விஸ்தரிப்பு குறித்துத் தங்கள் திட்டம் என்னவோ?”
கனிஷ்கர்:
‘அமைச்சர்களே, தளபதிகளே! உங்கள் திறம் கொண்டு நான் இந்த வெற்றிகள் அனைத்தையும் பெற்றேன். இனியும் வேறு பகுதி நமக்கு வேண்டுமா என்ன? இந்த பெரும் ராஜ்ஜியத்தை சிறப்பாக ஆள வழி செய்ய வேண்டும்”
கனிஷ்கர் மேலும் கூறினார்:
“நம் தலைநகர் புருஷபுரத்திற்குப் பிறகு ‘மதுரா’ ஒரு சிறந்த நகரம். அழகிய நகரம். அது நமது இரண்டாம் தலைநகர் போல. அதை நன்கு செழிக்கச் செய்வோம். நூறாண்டுகளுக்கு முன் – அசோகரின் பின்தோன்றல்கள் இது போன்ற பரந்த நாட்டை ஆள இயலாமல் அனைத்தையும் இழந்தனர்’ என்று இழுத்தார்…
முதல் அமைச்சர் குறுக்கிட்டார்:
“மன்னாதி மன்னா! அது அவர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் தானே…”
கனிஷ்கர் சிரித்தார்:
“அது உண்மை தான் மந்திரியாரே! ஆனாலும் முக்கிய காரணம் – பரந்த பகுதிகளை ஆளுவதற்குத் தகுந்த திறமையுள்ளவர்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை”
“….” மந்திரிகள் மௌனம் சாதித்தனர்.
கனிஷ்கர்:
“நமது நாட்டின் பல பிராந்தியங்களைக் காக்க சிறந்த ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவேன். எனது மகன் வஷிஷ்கா என்னுடன் சேர்ந்து இந்நாட்டை ஆள்வான். மதுராவிலிருந்து கொண்டு”.
அனைவரும் எழுந்து நின்று கரவொலி செய்து பாராட்டினர்.
கனிஷ்கர் அவர்களை அமரச் செய்தார். தொடர்ந்தார்.
“அடுத்து நாம் பேசப்போவது…நாட்டின் நிதி நிலைமை பற்றி..
இந்திய சரித்திரம் என்ன பேசுகிறது? அந்நாளில் நந்த ராஜ்யத்தில்.. கஜானா நிறைந்திருந்ததாம். காரணம் மக்களின் வரிப்பணம். மௌரியர்களின் செல்வமும் மக்கள் வரிப்பணம். பெரும் வரிப் பளுவை சுமக்க முடியாமல் மக்கள் துன்பப்பட்டனராம். நம் நாட்டில் அந்த நிலைமை வரலாகாது. புருஷபுரம் – காபூல் போன்று பல வர்த்தக வழிகள் அமைப்போம். கடல் வழிக்குத் துறைமுகங்கள் அமைப்போம். சீன, பாரசீகம், மற்றும் கிரேக்க நாடுகளுடன் ஏற்றுமதி இறக்குமதி செய்ய வணிகர்களுக்கு வழிசெய்து அதில் சுங்கம் விதித்து செல்வம் சேர்ப்போம்”.
மீண்டும் கரவொலி.. “மன்னர் வாழ்க “ என்று கோஷித்தனர்.
கனிஷ்கர்:
“அடுத்த சமாசாரம்: அனைவருக்கும் தெரியும். நான் புத்தரின் கோட்பாடுகளில் மனம் வைத்தவன் என்று. அசோகர் புத்த மதத்திற்குச் செய்ததுபோல் நானும் செய்ய வேண்டும். ஒரு படி மேலேயே போகவேண்டும். புத்தரை கடவுளாகவே பாவித்து வணங்கும் வழி முறைகள் செய்யப்பட வேண்டும். இது மகாயானம் என்று புகழ் பெறவேண்டும். மலர்கள், ஆபரணங்கள், வாசனைத் திரவியங்கள், தீபங்கள் கொண்டு புத்தருக்கு வழிபாடுகள் நடத்தப்படவேண்டும். மகாயான புத்த சமயத்தில் உருவ வழிபாடும் சடங்குமுறைகளும் வளர்ச்சிபெற வேண்டும்.”
அரச சபையில் இருந்த அனைவரும் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள்.
கனிஷ்கரின் இந்த நோக்கம் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கரவொலி பிறந்தது.
கனிஷ்கர்:
“புருஷபுரத்தில் உலகம் இதுவரை காணாத அளவு உயரத்தில் கருணைத் தெய்வம் புத்த பிரானின் திருஉருவம் எழுப்ப உள்ளேன் (638 அடி உயரம்).
மேலும், புதிய மகாயான புத்த சமயத்தைப் பரப்பும் நோக்கத்தோடு மத்திய ஆசியா, சீனா போன்ற நாடுகளுக்கு சமயப்பரப்புக் குழுக்களை அனுப்ப வேண்டும். பல்வேறு இடங்களில் புத்த விஹாரங்களும் கட்டப்பட வேண்டும்.
மேலும் இம்மதத்தை விரிவாக்க, நான்காம் புத்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யப் போகிறேன். காஷ்மீர் மாகாணம் (ஸ்ரீநகருக்கு அருகில்) குண்டலவன மடாலயத்தில் இம்மாநாடு நடைபெறும். இதில் 500 துறவிகள் பங்கு கொள்வர். அங்கு மகாயான கோட்பாடுகள் முழுவடிவம் பெறும்.”
கரகோஷத்துடன் அரசவைக் கூட்டம் இனிதே நிறைவுற்றது!
நம் கதை சரித்திரத்தை சொல்லி முடிந்தது.
ஒரு அரசன் இவ்வாறு தெளிவாக, திடமாக, வீரமுடன், அறிவுபூர்வமாக, மக்களை மதித்து, இறையருளோடு ஆட்சி செய்தால் வெற்றி பெற என்ன தடை!
பின்னாளில் பெஷாவருக்கும் காபூலுக்கும் இடையே உள்ள சமவெளியில் கட்டப்பட்ட மாபெரும் புத்த சிலை இரண்டாயிரம் ஆண்டுகளைப் பார்த்த பின் கி பி 2001 ல் தாலிபான் பீரங்கியால் உடைபட்டுப் பின் ‘டைனமைட்’ டால் வெடிக்கப்பட்டுத் தூளாகியது.
சரித்திரம் அழுகிறது!
வேறு ஒரு கதை சொல்ல ‘சரித்திரம் துடிக்கிறது’!
எமபுரிப்பட்டணம் ( எஸ் எஸ்)
எமபுரிப்பட்டணம் (தொடர் கதை)
விஷ்ணுபுரி – சிவபுரி – பிரும்மபுரி போல சாவுத்தேவன் எமனின் தனி உலகம் எமபுரி .
அதன் தலைநகர் எமபுரிப்பட்டணம் .
இறந்தபின் மனிதன் இங்குதான் செல்கிறான். இங்கு வந்தபிறகு அவன் அவள் அது என்று எதுவும் கிடையாது. ஆத்மாதான். ஆத்மாவின் தலைஎழுத்தும் உடல் எழுத்தும் படிக்கப்படுகின்றன. ஆத்மா பூமியில் செய்த நல்லது கெட்டது இரண்டையும் ஆராய்ந்து அவற்றிற்கேற்ப நீதி வழங்கப்படுகிறது. அதன்படி ஆத்மா சொர்க்கபுரிக்குச் செல்லலாம். அல்லது நரகபுரிக்குச் செல்லப் பணிக்கப்படலாம். சொர்க்கபுரி – நரகபுரி இரண்டுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத வேலி உண்டு. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் ஆத்மாக்கள் சென்று வருவதுண்டு.
எமன் தான் இரண்டுபுரிக்கும் தலைவன் – சர்வாதிகாரி. அவனுக்கு உதவிபுரிய ஒரு பெரும் படையே உண்டு. அவனுக்கு என்று நிறைய சட்ட திட்டங்கள் உண்டு. ஆனால் அவன் அழிக்கும் கடவுளான சிவன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படமாட்டான்.
மார்க்கண்டேயனை உதைத்தவன் இவன்.
சாவித்திரிக்கு வாக்குக் கொடுத்து சத்தியவானைப் பிழைக்க வைத்தவனும் இவன்.
நசிகேதனுக்கு வேண்டும் வரம் கொடுத்தவனும் இவன்.
ஆனால் அதெல்லாம் பழங்கதை. எருமை மாட்டு வாகனம் , பாசக்கயிறு, சித்திரகுப்தன், கிங்கரர் போன்றவையும் பழங்கதைதான்.
இன்றைய விஞ்ஞான உலகத்தில் எமன் எப்படித் தன் வேலையைச் செய்கிறான் ?
பூலோகத்திலிருந்து அவனிடம் வரும் அரசியல்வாதிகள், இலக்கிய கர்த்தாக்கள்,திரைப்பட நாயகர்கள் , மேதைகள், அழகிகள், மன்னர்கள், சாமானியர்கள் எல்லோரும் எமபுரிப்பட்டணத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறப்போவது இந்தத் தொடர் கதை.
ஒன்றே ஒன்று மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும் உண்மையில் அவை அப்படி இருக்கவும் கூடும் . உண்மையில் எப்படி இருக்கிறது என்பதற்கு யாரிடமும் ஆதாரம் கிடையாது. இது இப்படி இல்லை என்று ஆதாரம் காட்டினால் அது ஏற்றுக் கொள்ளப்படும் .
இன்னொரு முக்கியமான சமாசாரம். இது கொஞ்சம் வித்தியாசமாக எழுதவேண்டும் என்பதற்காக எழுதப்படுகிறது. இது யாருடைய மனத்தையாவது புண்படுத்தினால் கோடிட்டுக் காட்டுங்கள். அப்பொழுதே இந்தத் தொடர் நிறுத்தப்படும். அதற்கான முன்கூட்டிய மன்னிப்பை இப்போதே வேண்டிக்கொள்கிறேன்!
எமபுரிப்பட்டணம் – ஒரு பயங்கரமான தொடர் ! மனபீதி கொள்ளுபவர்கள், பிஞ்சு மனம் படைத்தவர்கள் கொஞ்சம் மனதைக் கல்லாக்கிக்கொண்டு படிக்கவும்.
அதற்காக மிகவும் பயப்படத் தேவையில்லை. ஜாலியான பகுதிகளும் கிளுகிளுப்பான பகுதிகளும் அவ்வப்போது வரலாம்.
சொர்க்கபுரியில் கிடைக்கும் அமுதத்தைவிட நரகத்தில் கிடைக்கும் மதுவின் சுவைக்காக அங்கு செல்லும் ஆத்மாக்களைக் கண்டு நீங்கள் சிரிக்கலாம்.
நரகபுரியிலிருந்து தப்பிவந்து சொர்க்கத்தில் மறைந்துகொள்ளும் சிலரின் கதை உங்களுக்குக் கிலியை வரவழைக்கலாம்.
எமபுரியில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களைப்பற்றிப் படிக்கும்போது உங்கள் இலக்கிய ரசனை தூண்டப்படலாம்.
உங்கள் அபிமான நடிகர்களை- குறிப்பாக நடிகைகளை மீண்டும் சந்திக்கும் போது உங்களுக்குக் குஷியாகவும் இருக்கலாம்.
அரசியல்வாதிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாகவும் இருக்கலாம்.
அங்கும் வகுப்பு வாதம், மற்றும் வகுப்புக் கலவரமும் நடைபெறும்போது பூமியே மேல் என்று தோணலாம்.
ஒரு புதிய உலகத்துக்குப் புதிய பரிமாணத்தில் நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள்! அதற்காக உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் ! எதற்கும் வீட்டிலே சொல்லிவிட்டு வந்துவிடுங்கள்!
இந்த முன்னுரையோடு எமபுரிப்பட்டணம் கதைக்குச் செல்ல இன்னும் ஒரு மாதம் வரை பொறுத்திருங்கள்!
(திகில் ஆரம்பமாகிறது)
குட்டீஸ் லூட்டீஸ்:—– சிவமால்
விசில்
‘என்னங்க… நான் குளிச்சிட்டு வறேன்… அடுப்புலே
குக்கர் வெச்சிருக்கேன்.. அஞ்சு ஆறு விசில் வந்ததும்
அணச்சிடுங்க…’ என்றவாறே பாத்ரூமிற்குச் சென்றாள்
என் மனைவி.
ஆறு விசில் போனதும், அடுப்பை அணைக்கச்
சமையலறைக்குக் கிளம்பினேன். அதைப் பார்த்துக்
கொண்டிருந்த என் பெண் மிதிலா, ‘அப்பா.. ஸ்டாப்..
அம்மா அஞ்சு ஆறு விசில் – அதாவது அஞ்சு இன்டூ
ஆறு, முப்பது விசில் – வந்ததும்தான் அணைக்கச்
சொன்னாங்க. இப்போ ஒரு ஆறு விசில்தான் வந்திருக்கு.
இன்னும் நாலு ஆறு விசில் – அதாவது இருபத்தி நாலு
விசில் – வரணும் இல்லையா…’ என்றாள்.
நான் திகைத்துப் போய் நின்றேன்.
நமக்கு வாய்த்த அடிமைகள் !!
தமிழ்நாடே சொல்கிறதோ?
ரசிகன் – அழகியசிங்கர்
அந்தத் தெருவில் அந்தப் பங்களாதான் பிரதானமாக வீற்றிருந்தது. வாசலில் ஒரு பிள்ளையார் கோயில். யார் வந்தாலும் வீட்டிற்குள் நுழைவது சிரமம். வீட்டை அந்த அளவிற்கு இழைத்துக் கட்டியிருந்தா ர்கள். வீட்டிற்குள் நுழைவதற்கு முன் வீட்டின்முன் புல்தரையும், உயர்ந்த மரங்களும், பேசுவதற்குத் தோதாக சிமெண்ட் பெஞ்சுகளும், வரிசையாக இரண்டு மூன்று கார்கள். ஒரு குறுகிய காலத்தில் இத்தனையும் சம்பாதித்து, புகழின் உச்சக்கட்டத்தில் இருப்பவள் நீலாஸ்ரீ இயற்பெயர்…….. இயற்பெயர்…… வேண்டாம். அவள் திறமையால் அவளுடைய நடுத்தர வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட்டு இந்த அளவிற்கு உயர்ந்துவிட்டாள். இன்று தமிழகத்தின் ஒரு மூலையில் கோயில்கட்டி அவளைப் பூஜிக்கிறார்கள்.
நீலாஸ்ரீயை தமிழகத்தில் உள்ள காட்டுமிராண்டித்தனமான ரசிகர்கள் பெரிதும் பாதித்துவிட்டார்கள். எந்தக் கூட்டத்திலும், ஏன் ரசிகர்கள் பங்கேற்கும் கூட்டத்திலும் அவளால் கலந்துகொள்ள முடியவில்லை. ஒருமுறை பாதுகாப்பு இல்லாமல் ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு விட்டாள். எல்லோரும் அவள் மீது. அவள் கட்டியிருந்த துணியெல்லாம் விலகிவிட்டது. எல்லோரும் அவளைப் புணரத் தயாரானதுபோல் தோன்றியது. அன்று எப்படியோ தப்பித்துவிட்டாள். அதன்பிறகு அவளுக்குக் கூட்டத்தைப் பார்க்கும்போதெல்லாம் பயம். தனியாகவே போகப் பயப்படுவாள். அந்த அனுபவம் ஒரு கசப்பான அனுபவம். தமிழ்த் திரைவானில் அவள் நடிக்காத படமே இல்லை. கலை உலகத் தாரகை. அவள் இல்லாமல் தமிழ் படமே எடுக்க முடியாது என்ற நிலை.
இன்று நீலாஸ்ரீ படப்பிடிப்புக்குச் செல்ல ஆயுத்தமாக இருந்தாள். பின் தன் உதவியாளனைக் கூப்பிட்டு, வாசலில் காவல் காத்துக்கொண்டிருக்கும் காவலாளியை அழைத்து வரச் சொன்னாள். காவலாளி வந்து நின்றான். அவளுக்கு அவன் கண்களைப் பார்க்கும்போது தன்னை விழுங்கி விடுவதுபோல் பார்ப்பதாகத் தோன்றும். இத்தனைக்கும் வயதானவன். ஆனால் உதவியாளன் அப்படி இருக்கமாட்டான். நேரிடையாக அவளைப் பார்க்கத் தயங்குவான். மிகவும் பவ்யமாகப் பழகுவான், அதிகம் படித்தவன், திறமைசாலி.
“அந்த ஆள் இருக்கிறானா?” என்று திரும்பவும் காவலாளியைப் பார்த்து எரிச்சலுடன் கேட்டாள்.
“இருக்கான்மா..” என்றான் காவலாளி.
“ஏன் அவனைத் துரத்த முடியலை?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள் நீலாஸ்ரீ.
“முடியலைம்மா… அவன் தெருவிலதான் இருக்கான்… அவனைத் துரத்த நமக்கு அதிகாரம் இல்லை.”
“அவன் அந்த இடத்தில் அப்படியே இருக்கானா?”
“ஆமா. கிட்டத்தட்ட 20 நாளா இருக்கான். ராத்திரி மட்டும் எங்கோபோய்ப் படுத்துக்கிறான். காலையில அந்த இடத்துக்கு வந்துடுவான்.”
“அவன் என்ன சொல்றான்?”
“உங்களைப் பாத்து சில நிமிஷமாவது பேசணுமாம்.”
“இது மாதிரியான ஆட்களை நம்ப முடியாது. சரி நீ போ…”
காவலாளி அந்த இடத்தைவிட்டு அகன்றான். பக்கத்தில் நின்றிருந்த உதவியாளனை அழைத்து, – “நீ என்ன நினைக்கிறே? அவன் ஏன் என்கூடப் பேசணும்னு நினைக்கிறான்.”
“அதான் தெரியலை. அவன் உங்கள் ரசிகனாம். உங்கள் படம் ஒவ்வொன்றையும் குறைந்தது இருபது தடவையாவது பார்ப்பானாம். ஒவ்வொரு தடவையும் படம் பார்க்கும்போது உங்களுடன் பேசறதாக நினைக்கிறான். ஏன் உங்களோடதான் அவன் வாழறதா சொல்றான்.”
“காட்டுமிராண்டி, காட்டுமிராண்டி”
“உங்களோட பேச ரொம்ப நேரம் கூட எடுத்துக்கமாட்டானாம். ஒரு ஐந்து நிமிஷம் ஒதுக்கினாப்போதுமாம். அப்புறம் அந்த இடத்தைவிட்டுப் போயிடுவானாம்.”
“நான் பேசாட்டி என்ன பண்ணுவானாம்”
“இந்த வாழ்க்கையில ஒரு அர்த்தமும் இல்லையாம். நீங்க பேச விரும்பாட்டித் தற்கொலை செய்துப்பானாம்”
“அவனுக்குப் பெண்டாட்டி பிள்ளைங்க கிடையாதா?”
“உண்டாம். அவர்களெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டுக் கிடையாதாம்.”
“அவன் கையில ஆயுதம் ஏதாவது வெச்சிருக்கானா?”
“இல்லை”
“போலீஸ்ல சொன்னா என்ன?”
“அதைப்பத்தியெல்லாம் அவன் கவலைப்படமாட்டான்.”
“அப்ப இதுக்கு என்னதான் வழி”
“ஒரு வழிதான் உண்டு. நீங்க ஒரு தடவை அவனைப் பாத்து பேசினாப்போதும்.”
கொஞ்சநேரம் ஒன்றும் பேசாமல், நீலாஸ்ரீ மௌனமாக இருந்தாள். படப்பிடிப்புக்கு எத்தனை மணிக்குக் கிளம்பவேண்டுமென்று கேட்டாள். பதினோருமணிக்கு என்றான் உதவியாளன். நீலாஸ்ரீ சாப்பாடுக் கூடத்திற்குச் சென்றாள். அவளுக்காக அப்பா, அம்மா, தம்பி, தங்கை என்று எல்லோரும் காத்திருந்தார்கள். எல்லோரும் கேட்டார்கள் ஒரே கேள்வியை, அவனைத் துரத்தி விடவேண்டியதுதானே என்று.
“நான் ஒருதடவை அவனைப் பாத்துப் பேசினாப் போயிடுவானாம்”
“நீ ஒரு தடவை அவனைப் பார்த்துப் பேசிடேன்” என்றார் அவள் அப்பா.
“உனக்கு அவன்கிட்டே பேசப் பயமா இருந்தா நாங்க பக்கத்தில இருக்கோம். நீ பேசு” என்றான் அவள் தம்பி.
“எனக்குப் பயமில்லை,” என்றாள் நீலாஸ்ரீ. “இன்னிக்கு நானே பேசி அவனை அனுப்பிடறேன்” என்றாள் தயக்கத்துடன்.
சிறிது நேரத்தில் அவள் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டாள். வாசலில் அவள் கார் கேட் அருகில் வந்தது. வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்குக் காரின் உள்ளே இருப்பவர் யாரென்று தெரியாது.
கேட்டைக் காவலாளி திறந்தவுடன், அவள் காரின் உள்ளே இருந்தபடி வெளியில் பார்த்தாள். தாடி மீசையுடன் அவன் அந்தக் காரை ஆவல் பொங்கப் பார்த்தபடி இருந்தான். கார் கேட்டைத் தாண்டிக் கிளம்புவதற்குமுன், காரின்முன் அவன் நமஸ்காரம் செய்வதுபோல் விழுந்தான். டிரைவர் திகைத்துப்போய் காரை நிறுத்தினான். காவலாளி உடனே ஓடிவந்து விழுந்தவனை அப்புறப்படுத்த முயன்றான். அவனைப் பார்த்துச் சத்தமும் போட்டான்.
பதட்டத்துடன் கார் கதவைத் திறந்து வெளியே வந்தாள் நீலாஸ்ரீ. அவள் வீட்டிலுள்ளவர்களும் வெளியே வந்து பார்த்தார்கள். எல்லோரும் விழுந்தவனிடம் பாயத் தயாராக இருந்தார்கள். அவளைப் பார்த்து எழுந்து நின்று அவன் பரக்கப் பரக்கக் கைகூப்பி வணங்கினான். அவன் கண்கள் சிவந்திருந்தன. ஆனாலும் அவளைப் பார்த்ததால் காரணம் புரியாத ஒளி அவன் கண்களில் பாய்ந்தது போலிருந்தது. ஏதோ சொல்ல வாயெடுத்தான். வார்த்தைகளே வெளியே வரவில்லை.
அவள் அவனைப் பார்த்து படபடப்போடு சொன்னாள்.
“நீ எப்ப இந்த இடத்தைவிட்டு ஒழியப் போறே?” பின் கார் உள்ளே அமர்ந்தாள். வேகமாகக் கார் கதவைச் சாத்தினாள். கார் அந்த இடத்தைவிட்டு உறுமலுடன் நகரத் தொடங்கியது.
இலக்கிய சிந்தனையின் 563 வது , இலக்கிய வாசலின் 23 வது நிகழ்ச்சிகள் -அறிவிப்பு
இலக்கிய சிந்தனையின் 563 வது நிகழ்வாக,
கவிதா பதிப்பகத்தின் உரிமையாளர் திரு சேது சொக்கலிங்கம் அவர்களின் ” ஒரு பதிப்பாளரின் அனுபவங்கள் ” என்ற உரை நடைபெறும்.
==========================================================
இடம் :
ஸ்ரீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation) அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018
==========================================================
நாள்:
25 -.02 -2017 சனிக்கிழமை , மாலை 6.00 மணி
==========================================================
அத்துடன் , இலக்கிய வாசலின் 23வது நிகழ்வாக மாலை 7.00 மணிக்கு அதே இடத்தில்
ஆடிட்டர் ஜெயராமன் ரகுநாதன் “சிறுகதைகள் அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் பேசுவார்.
அனைவரும் வருக!
இலக்கிய சிந்தனையும் குவிகம் இலக்கிய வாசலும் இணைந்து நடத்திய நிகழ்வு
இலக்கிய சிந்தனையின் சார்பில் (562 வது நிகழ்வு ) 28 ஜனவரி சனிக்கிழமை மாலை குவிகம் இதழின் ஆசிரியர் சுந்தரராஜன் தாம் எழுதிய “ஸ்ரீமந்நாராயணீயாம்ருதம் ” என்ற நூலின் ஆதாரத்தில் நாராயணீயத்தின் சிறப்புக்களைப் பற்றிப் பேசினார்.
முகநூலில் நண்பர்கள் எழுதிய பாராட்டுதல்களிலிருந்து அந்த நிகழ்வு பலருக்குப் பிடித்திருக்கிறது என்று தெரிகிறது.
பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
அதைத் தொடர்ந்து குவிகம் இலக்கியவாசலின் (22 வது நிகழ்வு) லா ச ரா வின் அபிதா – வாசகர் பார்வையில்” என்ற கலந்துரையாடல் நடைபெற்றது.
லா ச ராவின் புதல்வர் ஸப்தரிஷி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் , சொல்லாடல்கள் அந்த நாவலில் திளைத்தவர்களை திக்கு முக்காடச் செய்தன . கிருஷ்ணமூர்த்தி, அழகியசிங்கர், தேவகோட்டை மூர்த்தி ஆகியோர் அபிதாவின் சிறப்புக்களைச் சொல்லிக் கொண்டே போனதில் நேரம் சென்றது யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிகழ்வு அபிதாவைப் படிக்காதவர்களை எப்படியாவது படித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டச் செய்ததில் முடிந்தது.
சிற்றிதழ்கள்
|
வாட்ஸ் அப் ஜோக்
ஒரு கணவன் தன் மனைவியிடம் காலையில் எழுந்ததும் அவளைப் பார்த்து ” இன்று மிக நல்ல நாள்’ என்றான்.
மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஆயிற்று இவனுக்கு ? என்று நினைத்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் சென்று விட்டாள்.
அடுத்த நாள் காலையிலும் அவளைப் பார்த்ததும் ” இன்று மிக நல்ல நாள்’ என்றான். அவளும் , ஏதோ .லூஸ் மாதிரி பேசுகிறான் என்று கண்டு கொள்ளாமல் போய் விட்டாள்.
இப்படியே நாலைந்து நாட்கள் நடந்து கொண்டிருந்தது. அவளுக்குப் பொறுமை எல்லை மீறியது. ” ஏன் இப்படி தினமும் இன்றைக்கு நல்ல நாள், இன்றைக்கு நல்ல நாள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய்? என்று கத்தினாள்.
கணவன் மெல்லக் காரணத்தைச் சொன்னான். ” போன வாரம் நாம சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது நீ சொன்னது ஞாபகம் இருக்கா? ஒரு நல்ல நாள் பார்த்து நான் உங்களை விட்டுட்டுப் போயிடுவேன் ‘ என்று சொன்னாயே! அதனால தான் தினமும் உனக்கு ஞாபகப் படுத்தினேன். இன்னிக்கு நல்ல நாள் என்று”
இது எப்படி இருக்கு?
ராவேசு கவிதைகள்
நட்பென்ற கானல்
மன்னிக்க வேண்டும்
அதனை கற்க வேண்டும்
நான் முழுதாய் நம்பி
பலருடன் பழகினேன்
நட்பை
கத்திக் கொன்றார்கள்
குத்திக்கொன்றார்கள்
பகட்டும் பாசாங்கும்
தெளிம்பித் தெளிம்பி
கண்ணை மறைத்தது
ஏமாந்தபோதும் ஏக்கம்தான் ….
என்றேனுமொருநாள் மாறுமின்னிலை
காத்ததும் பயனில்லை
நண்பன் ரூபத்தில்
நடமிடும் நல்லவரை
மன்னிக்க வேண்டும்
அதனை கற்க வேண்டும்
தினசரி வாழ்க்கை
விடிந்தது காலை
கோபத்தில் இல்லாள்
தேக்கிவைத்த காதலை
சொல்ல யத்தனிக்கை……
மறுத்தது வார்த்தை
கவிதையை வடித்தேன்….
மாலை உடன்பாடு எட்டும்
ஆனால்
வார்த்தை தடித்தது
பேச்சும் தடித்தது
சண்டையின் போது
வார்த்தை
சிதைந்து வரும்
கோபம்
கிளர்ந்து எழும்
அந்நேரம் காலைக்காதல்
மனதில் நில்லாது
களத்தில் செல்லாது
அதை எழுதிய
பின்னாளில்
இதுக்கா அழுதோமென
சிரித்துக் கொண்டிருக்கலாம்
காதலர் தினம் – எஸ் எஸ்
கோக்கும் பெப்ஸியும் வேண்டவே வேண்டாம் – அது சரி
வேலன்டைன் தினத்தை என்ன செய்வது ? ம்..ம் யோசிப்போம்
வேலன்டைன் தினம் காதலர் தினம்
வீரமும் காதலும் தமிழரின் பாரம்பரியம்
அதனால் காதலர் தினத்துக்குப் பச்சைக் கொடி காட்டுவோம்
சில முன்னணிப் பெரிசுகள் தடுத்தாலும் சரி
நமக்குத் தேவை காதலர் தினம்
இதுவும் ஒரு ஜல்லிக்கட்டு தானே
இதிலும் உண்டே ஏறு தழுவுதல்!
காளையை அடக்குவது ஜல்லிக்கட்டு
அது தானே நடக்கிறது காதலர் தினத்திலும் !
கொஞ்சம் கற்பனைக் காரில் பறந்து செல்வோமா?
கனவு இருட்டைத் தொடர்ந்து செல்வோமா?
வாடி வாசலில் வருவது மாடல்ல நம் காதலன்
என்ன திமிர் ! என்ன கொழுப்பு ! என்ன வேகம் !
எத்தனைப் பெண்கள் அவனை அடக்க வருகிறார்கள் !
அவனைத் துரத்திக் கொண்டு ஒருத்தி வருகிறாள்!
அவன் மீது பாய்ந்து அவன் தோளைப் பிடிக்கிறாள்!
அவன் கழுத்தைக் கட்டித் தழுவிக் கொள்கிறாள்!
அவன் கரத்தைப் பற்றி இழுக்கிறாள்!
அவனுடன் ஏழடி ஓடி ஓடி வருகிறாள் !
அவனைத் தன் மார்புடன் இறுக்கிக் கொள்கிறாள்!
ஏறு தழுவி அவனை வீழ்த்துகிறாள் !
திமிருடன் வந்தவன் திண்டாடுகிறான் !
கிழிக்க வந்தவன் வெத்து வேட்டாகிறான்
திமிறிப் பார்த்தவன் திணறிப் போகிறான்! துள்ளி வந்தவன் வெட்கி நிற்கிறான்
வெற்றிப் பெருமிதம் அவள் நெஞ்சினில்
வென்றவளுக்குப் பரிசு வேண்டாமா?
தோற்றவன் தருகிறான் !
மஞ்சள் தடவிய மூக்கணாங்கயிறு! வாடி வாசல் ! வாடிய வாசல் !
கண் விழித்துப் பார்த்தால்
கனவல்ல நிஜம்!!
கதை சொல்லு கதை சொல்லு
‘உலக கதை சொல்லும் திருவிழா 2017’ சென்னையில் இந்த மாதம் நடை பெற்றது.
இந்த வருடத்தின் தலைப்புக்கள்:
வெவ்வேறு நாடுகளின் கதைகளும் , கதை சொல்லும் பாங்கும்
புத்திசாலிப் பெண்களைப் பற்றிய கதைகள்
பாடங்களை எப்படிக் கதை வடிவில் சொல்லிக் கொடுப்பது ?
இதன் அடிப்படையில் சென்ற ஆண்டு குவிகம் இலக்கிய வாசலும் “கதை கேளு கதை கேளு” என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது .
( கடைப்பக்கம் பாஸ்கரன் அவர்களும் இந்த இதழில் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்)
மேலும் இதனை விரிவு படுத்தி ஒரு பெரிய கதை சொல்லும் போட்டியாக மாபெரும் பரிசுகளுடன் நடத்த குவிகம் ஒரு திட்டம் தீட்டியுள்ளது.
இந்த ஆண்டு விழாவில் நம்மால் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் அதன் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்:
கதை சொல்லிகளும் அமைப்பாளரும் :
வேடிக்கைப் படங்கள்
நாராயணீயம் – யேசுதாஸ்
குருவாயூர் கோவிலில் மதிப்பிற்குரிய ஜேசுதாஸ் அவர்கள் நாராயணீயத்தின் நிறைவுப் பகுதியான கேசாதி பாத வர்ணனையை நெஞ்சுருகப் பாடுகிறார்.
நமது இதயத்தை ஊடுருவும் பாடல் இது !
கேட்டு மகிழ்வோம்
காந்தி ஜனவரி 30
நண்பனே எழுவோமா ? — கோவை சங்கர்
பத்துவயதில் படித்துவைத்த சரித்திரத்தை மறந்துவிட்டோம்
சித்தமது தள்ளாட ஏதேதோ செய்கின்றோம்
முன்னோர்களின் தப்புக்களை முழுதாக மறந்துவிட்டோம்
நினைவில்லை சுதந்திரத் தொண்டர்களின் தியாகங்கள்!
சிறுசிறு துண்டுகளாய் இருந்துவந்த பாரதத்தை
சிற்றரசர் பலபலபேர் ஆண்டுவந்த வேளையிலே
பரஸ்பர நம்பிக்கை ஒற்றுமையும் துளியுமிலை
பெரியவன் நான்தானென சண்டையிலே கழித்திட்டார்!
வாணிபம் செய்யவந்த வெள்ளையன் பார்த்தான்
துணிச்சலாய் பிரித்தாளும் அம்பினையே தொடுத்தான்
காழ்ப்பினால் மதிகெட்டுப் போயிருந்த சிறுவேந்தர்
சூழ்ச்சிக்கு பலியானார் தாழ்வுக்கு வழியானார்!
அடிமைத் தளையுடனே அல்லலுற்ற பாரதமும்
விடுதலைக்குப் பலகாலம் காத்திருக்க நேர்ந்ததுவே
சுதந்திரத் தீபத்தை சீராக ஏற்றிவிட
எத்துணைத் தியாகங்கள் எத்துணைத் துன்பங்கள்!
சரித்திரம் சொல்லிவைத்த பாடங்கள் போதவில்லை
ஒற்றுமையி னுயர்வுதனை மதிக்காமல் மிதிக்கின்றோம்
வேற்றுமையால் வீழ்ந்திட்ட முன்னோர்கள் தப்புகளை
அறியாமை சூழலிலே செய்யவே முனைகின்றோம்!
முன்னேறும் நமைப்பார்க்க பொறுக்காத அயல்நாட்டான்
இனிதாக நஞ்சினையே நம்மனதில் தூவுகிறான்
புல்லுருவி வஞ்சகனின் நோக்கத்தை யறியாமல்
காலிஸ்தான் எங்கள்ஸ்தான் பிரியடா என்கின்றோம்!
திராவிடம் போடோஸ்தான் காஷ்மீரம் என்கின்றோம்
பாரதத்தை நாம்மீண்டும் துண்டாட நினைக்கின்றோம்
நம்நாட்டை விழுங்கவே காத்திருக்கும் எதிரிக்கு
நாமாக நாட்டினையே பலியாகக் கொடுக்கின்றோம்!
சுதந்திரமே குறியாகப் போரிட்ட தொண்டர்கள்
செய்தபெரும் தியாகங்கள் பலனற்றுப் போகிறதே
சிதறிக் கிடந்த நாடுகளை யொன்றாக்க
பட்டபல கஷ்டங்கள் வீணாகப் போகிறதே!
நண்பனேநம் மடமையின் விளைவுகளை யுணர்வோமா
பண்போடு மயக்கத்தின் பிடிவிட்டு எழுவோமா
நயமாகப் பேசுகின்ற வஞ்சகர்சொல் கேளாமல்
சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பெறுவோமா!
மணி மகுடம் – ஜெய் சீதாராமன் (08. ஈழத்தில்..)
இலங்கையில் போர் புரிந்து கொண்டிருக்கும் சோழப் படைக்குத் தேவையான கத்திகள், ஈட்டிகள், கேடயங்கள், இரும்பு உரிகள், மற்றும் படைகளுக்குத் தேவையான உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்றவை அடிக்கடி சோழ நாட்டிலிருந்து போர் மரக்கலங்கள் மூலமாக ஆயுதம் தரித்த வீரர்களோடு காவேரிப்பூம்பட்டிணம் துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. அதேபோல் கோடிக்கரையில் அரசாங்க விஷயத்திற்காக உபயோகப்படுத்தும் முதன் மந்திரி அநிருத்தரின் மரக்கலம் ஒன்று புறப்படத் தயாராய் அங்கு நங்கூரம் பாய்ச்சி எப்போதும் இருக்கும்!! இன்றும் அவ்வாறே நின்றுகொண்டிருந்தது.
வந்தியத்தேவன் கொல்லிமலையிலிருந்து, வழியில் எங்கும் தங்காமல், ஊண் உறக்கமில்லாமல், வாயுவேகம் மனோவேகமாக அந்தத் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தான். கூடவே வழியனுப்பக் கந்தமாறனும் வந்திருந்தான். அவர்கள் இருவரும் இன்னும் மாறுவேடத்திலேயே இருந்தனர்.
கந்தமாறன் “வந்தியத்தேவா! நீ புக முற்படும் பாதை எவ்வளவோ கடினமானது! எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்! இதில் வீரம் மட்டும் இருந்தால் போதாது. விவேகமும் வேண்டும். எல்லாவற்றையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவாய் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை! வெற்றிச் செய்தியுடன் திரும்பி வா!” என்று வாழ்த்தினான்.
அப்போது கட்டையும் குட்டையாக தாடி மீசையுடன் தோன்றிய போர் மரக்கல அதிகாரி ஒருவன் அவர்களிடம் வந்து “கலம் கிளம்புவதற்கு ஆயத்தமாக உள்ளது. அதில் செல்ல விரும்புவோர் உடன் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் போர் சம்பந்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும்” என்று கூறி சுற்றுமுற்றும் பார்த்தபின் தாடி மீசையை சட்டென்று அகற்றி திரும்பவும் அணிந்து கொண்டான்.
அவனின் அச்செயலைக் கண்ட வந்தியத்தேவனுக்குஆச்சர்யம் தாங்க முடியவில்லை. “திருமலை!நீயா? எங்கே இந்தப் பக்கம்? எங்களை எப்படி அடையாளம் கண்டு கொண்டாய்? என்ன இந்த அதிகாரி வேடம்?” என்று குதூகலத்துடன் சரமாரியாய் கேள்விகளைப் பொழிந்தான்.
“வந்தியத்தேவா, மாறுவேடங்களிலிருந்த உங்களை அறிந்து கொண்டது ஒன்றும் எனக்குப் பெரிய காரியமல்ல!ஏனெனில் உங்கள் வரவை நான் இங்கு எதிர்பார்த்திருந்தேன்! இது என் எஜமானர் அநிருத்தர் மேற்பார்வையில் நமது ஈழப் படைக்கு அடிக்கடி அனுப்பப்படும் கலங்களில் ஒன்று. நான் பொருட்களைச் சரிபார்த்து அனுப்புவதற்காக இங்கு அடிக்கடி அனுப்பப்படுவேன். இங்கு நீங்கள் நிச்சயம் வரக்கூடும் என்று எதிர்பார்த்துக் கலத்தை கிளப்ப அனுமதிக்காமல் உனக்காக நிறுத்தி வைத்திருக்கிறேன். அதிக நாட்கள் இருத்தி வைத்திருக்க இயன்றிருக்காது.. ஒருவேளை இன்று நீ வராதிருந்தால் அது கிளம்ப வேண்டியிருந்திருக்கும். சரி! இலங்கைக்கு செல்லும் வரை நாம் மாறுவேடத்தில் இருப்பது நல்லது. பகைவர்களுக்காக இந்தப் பாதுகாப்பு. நானும் உன்னுடன் இலங்கைக்கு வரப்போவதாக இருக்கிறேன். இளவரசர் கந்தமாறன் நம்முடன் வரப்போகிறாரா?” என்றான் திருமலை.
“இல்லை திருமலை.எனக்கு வேறு அலுவல்கள் இருக்கின்றன. மேலும் வந்தியத்தேவன் தனியாகச் செல்லுகிறானே என்று கவலை கொண்டேன். அக்கவலை இப்போது அடியோடு தீர்ந்தது. உன் துணை அவனுக்கு யானை பலம் தந்துவிடும். நீங்கள் இருவரும் எடுத்த இக்காரியத்தில் வெற்றி பெற எங்கள் குலதெய்வமான கொல்லிப்பாவையின் அருள் உங்களுக்குக் கிட்டட்டும்” என்று கூறி வந்தியத்தேவனை அணைத்தவாறே கந்தமாறன் விடை பெற்றான்.
கந்தமாறனுக்கு விடை கூறி அனுப்பிய பிறகு இருவரும் நங்கூரம் பாய்ச்சி நின்ற கலத்திற்கு அழைத்துச் செல்ல ஓர் படகு அங்கு ஆயத்தமாக நின்று கொண்டிருந்தது பார்த்து அதை நோக்கிச் சென்றார்கள். இருவரும் படகில் ஏறினார்கள்.
கந்தமாறன், தன் பயணத்தைத் தஞ்சை நோக்கித் தொடர்ந்தான்.
&&&
வந்தியத்தேவனும் திருமலையும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தார்கள். கொண்டுவரப்பட்ட உணவைச் சாப்பிட்டபின் படுக்கையில் சாய்ந்தார்கள். வந்தியத்தேவன் திருமலைக்குக் கொல்லிமலையில் நடந்த சம்பவங்களை விளக்கினான்.
பிறகு வந்தியத்தேவனின் கடினமான பயணத்தினால் களைப்படைந்ததால் அவன் உடல் உறக்கத்தை நாடியது. அவனை அறியாமலேயே உறக்க நிலைக்குச் சென்றான். திருமலை அவனைப் பின் பற்றினான்.
கப்பல் இலங்கையில் நுழைந்து பாலாவி நதிக்கரையில் சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மாதோட்ட மாநகரின் துறைமுகத்தைக் காலை வந்தடைந்தது.
நமது நண்பர்கள் இருவரும் மாறுவேடத்தைக் களைந்தார்கள். இலங்கைப் படை சேனாதிபதி கொடும்பாளூர்பூதிவிக்ரமகேசரி – பெரிய வேளார் பாசறைக்குச் சென்றார்கள்.
பெரிய வேளார் “வல்லவரையர் வந்தியத்தேவரே! வருக வருக! ஈழத்திற்கு. என்னை விடுவித்து, சேனாதிபதி பதவியை ஏற்கப் போகிறீர்கள்! சோழர் படைக்கு புதிய சகாப்தம் ஏற்படுத்தப் போகிறீர்கள்! மாதண்ட நாயகன் அருள்மொழிக்கு உறுதுணையாய், வலது கையாக இருக்கப் போகிறீர்கள். அதற்கு உங்களுக்கு வல்லமை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று கம்பீரம் சிறிதும் குறையாத குரலில் மிடுக்காய் வரவேற்பு நல்கினார்.
“உங்கள் அன்பான வரவேற்பிற்கு மிக்க நன்றி ஐயா!ஆனால்..”
“என்ன ஆனால் என்று இழுக்கிறீர்கள் வந்தியத்தேவேரே?”
“நான் பதவியை ஏற்பதற்கு முன் இங்கு என்னால் சாதிக்க வேண்டிய மிக முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது.அதற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது” என்று தயங்கித் தயங்கிக் கூறினான் வந்தியத்தேவன்.
கூடவே வந்திருந்த திருமலை, “இதோ. என் எஜமானர் உங்களுக்கு எழுதிய ஓலை” என்று ஓலையை மடியிலிருந்து எடுத்து நீட்டினான்.
“அடடே!திருமலை.. நீயும் வந்திருக்கிறாயா.. வந்தியத்தேவரை சந்தித்த மகிழ்ச்சியில் உன்னை நான் காண மறந்துவிட்டேன்” என்று திருமலை நீட்டிய ஓலையை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார் பூதிவிக்ரமகேசரி.
ஓலைச் செய்தி நீண்ட செய்திகளைத் தாங்கி வரவில்லை. சுருக்கமாகவே இருந்தது. அதைப் படித்து முடித்த வேளார்,
“இதில் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு எனக்குப் பணித்திருக்கிறார் அநிருத்தர்.மற்ற விபரங்களை திருமலையும் வந்தியத்தேவ னும் வாய்மொழியாக அளிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்” என்று கூறி இருவரையும் பார்த்தார்.
வந்தியத்தேவன் அனைத்து விபரங்களையும் கூறி அவருக்குக் காரியத்தின் முக்கியத்தைப்பற்றி விளக்கினான்.
“நன்று வந்தியத்தேவா! நிச்சயம் உனக்கு எல்லாவித உதவியும் செய்கிறேன்” என்று உறுதியளித்தார். அத்துடன் நிற்காமல் உடனே காரியத்திலும் இறங்கினார்.
வேளார் கையைத் தட்டினார்.
சேவகன் ஒருவன் உள்வந்து கை கட்டி நின்றான்.
“செவ்வேந்தியை உடனே அழைத்து வா” என்று கட்டளை பிறப்பித்தார்.
அதைக் கேட்ட வந்தியத் தவன், “நாம் மேற்கொண்டிருக்கும் காரியத்திற்குப் பெண் எப்படி உதவுவாள்?” என்று வேளாரிடம் கேட்க..
அதைக் கேட்டுச் சிரித்த வேளார், “பொறு வந்தியத்தேவா. வருபவரைப் பார்த்துவிட்டுப்பின் கேள். இன்னும் உன் பழக்கத்தை நீ மாற்றிக்கொள்ளவில்லை போலிருக்கிறது!” என்று குறையாத சிரிப்புடனே கூறினார்.
சிறிது நேரம் கழித்து செவ்வேந்தி வந்து வணக்கம் கூறிவிட்டுக் கை கட்டி நின்றான். வேளார் செவ்வேந்திக்கு வந்தியத்தேவனையும், திருமலையையும் அறிமுகப்படுத்தினார்.
பிறகு செவ்வேந்தியைப் பார்த்து “செவ்வேந்தி, இவர்கள் ஈழத்தில் சில முக்கிய இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களை அங்கெல்லாம் அழைத்துக் கொண்டு போவது உன் பொறுப்பு. நம் ஆதிக்கத்தின் கீழ் உள்ள இடங்களின் வழியாகவே அவர்களை அழைத்துச் செல். ஆதிக்கம் இல்லாத இடங்களுக்கு மாறுவேடத்தில் போவது உசிதம். கூட நம் வீரர்களை வேண்டுமானால் அழைத்துச் செல். படகு, போர் மரக்கலங்கள் தேவையானால் அதற்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்றார்.
செவ்வேந்தி “உங்கள் ஆணைப்படி நடந்து கொள்வேன்” என்றான்.
வேளார் வந்தியத்தேவனைப் பார்த்து “இவன் எங்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சிறந்த ஒற்றன். இவனுக்கு சிங்களமும் நன்றாகத் தெரியும். ஆகையால் இவனுடைய உதவி உங்களுக்கு நிச்சயம் தேவை. இவனிடம் பயணத்தின் முக்கியத்தைப்பற்றிக் கூறிவிடுவது நல்லது. இப்போது உன்னுடைய சந்தேகம் தீர்ந்ததா?” என்றார் நமுட்டுச் சிரிப்புடன்.
வந்தியத்தேவன் தனது அவசரத்தனத்தை உணர்ந்து வெட்கி, மன்னிப்புக் கோரினான்.
செவ்வேந்தி, வந்தியத்தேவனிடம் “எப்போது பயணத்தைத் தொடங்குவதாக இருக்கிறீர்கள்?” என்றான்.
உடன் பதிலளித்த வந்தியத்தேவன் “இப்போதே” என்றான்.
(அடுத்த பகுதி அடுத்த மாதம் )
கார்ட்டூன்ஸ் – லதா
குறும்படம் – நாலு பருக்கைக்காக
திரு ஆர் வி ராஜன் புத்தக நண்பர்கள் குழுவின் முக்கிய உறுப்பினர். விளம்பர வித்தகர். அவர் தனது மனைவி திருமதி பிரபாவின் பெயரில் ஒரு அறக்கட்டளை Prabha Rajan Talent Foundation (PRTF) என்று ஆரம்பித்து பெண் எழுத்துலகத்திற்காகச் செயலாற்றிவருகிறார்.
பிரபா அவர்களின் ” நாலு பருக்கைக்காக ” என்ற சிறுகதையை பெண்களே நடித்து இயக்கிய குறும்படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்தக் குறும்படத்தை இங்கே காணலாம் :
காதலர் தின திரைக் காதலர்கள்
எம்கேடி முதல் இன்றைய சிவகார்த்திகேயன் வரை நமது திரையில் உலாவிய காதல் ஜோடிகளைக் காதலர் தினத்தில் கண்டு களியுங்கள் !
முடிந்தால் எந்தப் படத்திலிருந்து எடுத்தது என்று கண்டு பிடிக்க முயலுங்கள் – வேறு வேலை இல்லாமல் இருந்தால் !!






















புயலும் கடந்து போகும் – ரா. குருபிரகாஷ்
மலையையே இறைவனாய் போற்றுவதும் நாமே
அதை உடைத்தெறிவதும் நாமே
மாவிலையையும் வேப்பிலையையும் பவித்ரமாய்க் கருதும் நாமே
அம்மரங்களை அறுத்தெறிவதும் நாமே
ஆறுகளையும் கடல்களையும் வழிபடுவதும் நாமே
அவற்றை நச்சாக்கிக் கொல்வதும் நாமே
அன்பேசிவம் என்று துதிக்கும் நாமே
வன்முறையைக் கட்டவிழ்ப்பதும் நாமே
இறைவன் படைத்த இயற்கைக்கு எதிராக
எங்கே ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம் ?
புயல் ,
நாம் இயந்திர வாழ்க்கையில் சிக்கிப் போனதால்
உள்ளுக்குள் மரத்துப் போய்விட்ட மனிதத் தன்மையை
மீண்டும் துளிர்த்து எழக் கிடைத்த
சந்தர்ப்பமாய் எண்ணுங்கள்
இயற்கையை எதிர்த்து வாழ்வது அல்ல ஆனந்தம்
இயற்கையை அன்போடு அரவணைப்பது ஆனந்தம்
இழப்பைச் சந்தித்தவர்களுக்கு
ஆதரவாய் இருப்பது ஆனந்தம்
இயலாதவருக்கு இதயப்பூர்வமாய் சேவை செய்வது ஆனந்தம்
ஒன்றோடு ஒன்றிணைந்து
தோளோடு தோள் கொடுத்து
அமைதியாய் வாழ்வது ஆனந்தம்
ஆனந்தமாயிருந்தால் வாழ்வில்
எல்லாப் புயலும் கடந்து போகும்
சத்தமும் இல்லாமல்
சலனமும் இல்லாமல்
சுட்ட பழம்
ஒரு ஞான யோகி சிவனிடம் சென்று, உங்கள் பக்தர்கள் எப்பொழுதும் மந்திரங்களை உரக்கக் கத்திக்கொண்டு திரிகின்றனர். இதனால் என்ன நடக்கும்? நீங்கள் ஏன் அவர்களை நிறுத்தச் சொல்லக்கூடாது என்றார்.
சிவன் அவரைப் பார்த்துச் சொன்னார்:
“நீ ஒன்று செய்”என்றவர் ஒரு புழுவைச் சுட்டிக்காட்டி, ” நீ அதனிடம் சென்று ‘ஷிவ ஷம்போ’ என்று சொல், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றார்.
ஞான யோகி அங்ஙனமே செய்தார், அந்தப் புழு செத்து விழுந்தது. அவர் அதிசயித்தார்!
சிவன் புன்னகைத்தவாறே, ஒரு பட்டாம்பூச்சியைக் காட்டி “அதனிடம் போய், அதே மந்திரத்தை சொல்” என்றார்.
ஞான யோகி அப்படியே சொல்ல, அதுவும் செத்து விழுந்தது. யோகி வருத்தத்துடன் இருக்கும் போதே சிவன், ஒரு மானைக் காட்டி, “அதனிடம் போய் மீண்டும் ஒரு முறை சொல்” என்றார். யோகி முதலில் மறுத்தார். ஆனால் சிவனின் வற்புறுத்தலால், சொன்னார். அதுவும் மடிந்து விழுந்தது. “இது என்ன மந்திரம்? எல்லாவற்றையும் கொல்கிறதே!” என்றார் யோகி அதிர்ச்சியாக.
அப்போதுதான் பிறந்த குழந்தையை ஏந்தியபடி ஒரு தாய், சிவனிடம் ஆசிர்வாதம் வாங்க அங்கே வந்தார். சிவனோ யோகியிடம், “அந்த மந்திரத்தை நீ ஏன் இந்தக் குழந்தையிடம் முயற்சி செய்யக் கூடாது” என்றார்.
இந்த பிஞ்சுக் குழந்தையையும் என்னால் கொல்ல முடியாது “என்ற யோகி பதறினாலும், சிவனின் கர்ஜனைக்குப் பயந்து, அந்தக் குழந்தையிடம், ” ஷிவ ஷம்போ”என்று உச்சரித்தார்.
ஆச்சரியம்… அந்த குழந்தை எழுந்து உட்கார்ந்து பேசியது…
“நான் ஒரு புழுவாக இருந்தேன், உங்களின் மந்திர உச்சாடனையில் என்னை ஒரு பட்டாம்பூச்சியாக மாற்றினீர்கள். மற்றும் ஒரு மந்திரத்தால் என்னை ஒரு புள்ளிமானாக மாற்றிப் பரிமாண வளர்ச்சியைக் கொடுத்தீர்கள். மேலும் ஒரு உச்சாடனையில் என்னை மனித உயிராகப் பிறக்கவைத்தீர். இன்னொரு முறை கூறுங்கள்… நான் இறைமையை அடைய விரும்புகிறேன்! “
எங்கே அதிர்வு இருக்கிறதோ, அங்கே ஒலி இருந்தே ஆகவேண்டும். பிரபஞ்சமே ஒலிதான். இதுவே ‘நாதப் பிரம்மா’ பிரபஞ்சம் பல ஒலிகளின் சங்கமம். இந்த ஒலிக் கூட்டில், சில முக்கியமானவை. இவைதான் ‘ மந்த்ரா ‘ என்றழைக்கப்படுகிறது
கடைசிப்பக்கம் – கதை கேளு கதை கேளு – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.
கதைகள் ஒரு கலாச்சாரத்தின் வெளிப்பாடு! நாம் எல்லோரும் சிறு வயதில் நிறையக் கதைகள் கேட்டிருக்கிறோம் – சொல்லியிருக்கிறோம். வானில் நிலாவையோ, மரத்தில் அணிலையோ, கைப்பிடிச் சுவற்றில் காக்காவையோ காண்பித்துக் கதை சொல்லி சாதம் ஊட்டும் அம்மாவோ, பாட்டியோ எல்லோர் வீட்டிலும் உண்டு! இன்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைக்கு ஐ பேடில் கார்டூன், ரைம்ஸ், விடியோ கேம்ஸ் காட்டி, பர்கரும், பீட்சாவும் வாயில் ஈஷப்படுகின்றன! கதை சொல்வதே கனவாகிப் போய்விட்டது!
செவ்வாய்தோறும் தமிழ் ஹிந்துவில் எஸ் ராமகிருஷ்ணன் இப்படிப்பட்ட கதைகளை – பல்வேறு நாடுகள், மொழிகள் சார்ந்த, நாடோடிக் கதைகள், நீதிக் கதைகள் என பல வகைக் கதைகளைப் பற்றி எழுதுகிறார்.
நம்மிடையே புழங்கி வரும் இராமாயண, மகாபாரதக் கதைகளும், வாய்வழி, செவி வழிக் கதைகளும் (கி ரா வின் கிராமீயக் கதைகள்) இன்றைய தலைமுறையினருக்கு அந்நியமாக இருக்கின்றன. சங்கீத உபன்யாசங்களும், இலக்கியச் சொற்பொழிவுகளும் ஒரு வகையில் கதை சொல்லும் வழிமுறைகளே!
சின்ன வயதில் என் பாட்டி சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. மிகவும் பயமும், மரியாதையும் உள்ள மருமகள் – மாமியாரைக் கேட்காமல் எந்த வேலையும் செய்யமாட்டாளாம் – சமையலில் உப்பு போடுவது முதல் இரவு படுக்கும் வரை எல்லாமே மாமியாரைக் கேட்டுத்தான்! திடீரென்று ஒரு நாள், மாமியார் இறந்து விட, மருமகளுக்குக் கை ஒடிந்தாற்போல் ஆயிற்று. யாரைக் கேட்பது என்று தவித்தாள். அவள் கணவன் உடனே மாமியார் போல ஒரு பொம்மை செய்து கொடுத்து, பாவனையாகக் கேட்டுக்கொள்ளச் சொன்னான்! அவளும் எதையும் ஒருமுறை அந்த பொம்மையிடம் கேட்டுவிட்டு, தனக்குத் தோன்றியபடி வேலைகளைச் செய்யத் தொடங்கினாள்.
ஒரு நாள் கணவனுடன் ஏதோ தகராறில் கோபித்துக் கொண்டு, மாமியார் பொம்மையுடன் வீட்டைவிட்டு வெளியே போகிறாள். வழி தவறி, காட்டுக்குள் சென்று விடுகிறாள். இரவாகிவிடுகிறது – வழி தெரியாமல், பயந்தபடியே அங்கிருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொள்கிறாள். கையில் மாமியார் பொம்மையைப் பார்த்தபடியே, தூங்கி விடுகிறாள்!
அதே இரவில், ஊரில் கொள்ளையடித்த பணம், நகைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, வழக்கமாக வரும் மூன்று திருடர்கள் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து, பங்கு பிரிக்கிறார்கள். பேச்சுக் குரலில் கண்விழித்த மருமகள், திருடர்களைப் பார்த்து பயந்து போய், கையிலிருந்த பொம்மையைக் கீழே தவற விட, இரவில் மரத்தின் மேல் பேயோ, பிசாசோ என்றலறியபடி, பணம், நகைகளைப் போட்டுவிட்டு திருடர்கள் ஓடிவிடுகிறார்கள். காலையில் மாமியார் பொம்மையை எடுக்கக் கீழே வரும் மருமகள், பணம், நகைகளையும் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்கிறாள் – பின்னர் வசதிகளுடன் வாழ்வதாகக் கதை முடியும்.
கதை சொல்லும் பாவமும், ஏற்ற இறக்கங்களும், இடைச்செருகலாக வரும் இருட்டு, மிருகங்கள் எல்லாம் குழந்தைகளைக் கட்டிப் போட்டுவிடும். பாட்டியின் மூடுக்குத் தகுந்தாற்போல் கதை நீளவோ அல்லது குறையவோ செய்யும்!
பள்ளிக்கூடங்களில் கூட, ஒரு பீரியட் ‘கதை சொல்லும்’ நேரமாக ஒதுக்கி, கதை சொல்லக் குழந்தைகளை ஊக்குவிக்கலாம்! குவிகம் இலக்கிய வாசல் மாதாந்திர நிகழ்வொன்றில், ‘கதை கேளு, கதை கேளு’ என்ற தலைப்பில் அழகாகக் கதை சொன்னார் ஒரு பெண்மணி! வரவேற்கப்பட வேண்டிய விஷயம் – வாருங்கள் கதை சொல்வோம், கதை கேட்போம் !