குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி மற்றும் மூளைப் பயிற்சி – சாய் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் போட்டி

சாட் ஜிபிடி வந்த பிறகு நமது மூளையை உபயோகத்தில் வைத்துக்கொள்ள சில மூளைப் பயிற்சி தேவைப்படுகிறது.

பிரைன் ஜிம் (BRAIN GYM) என்று சொல்வார்களே அதுதான் இது !

சுடோகு, விடுகதை,  கிராஸ்வேர்ட் ,  அப்ஜெக்டிவ் டைப் டெஸ்ட் போன்றவை இதற்கு உதவும்.

டெமென்ஷியா, அல்சிமர் போன்ற வியாதி வராமல் தடுக்க 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் கண்டிப்பாக பத்து நிமிடம் பிரைன் ஜிம் செய்ய வேண்டும்

இனி குவிகத்தில் குறுக்கெழுத்துப் போட்டியுடன் மூளைப்  பயிற்சியும் வரும்.

 இந்தப் போட்டிக்கு சாட் ஜிபிடி , கூகிள் என்று எதற்கும்  போக வேண்டாம். இந்த மாதக்  குவிகம் இதழைச்  சற்றுப் புரட்டிப் பார்த்தாலே போதும். கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

இந்த மூளைப் பயிற்சிக்கு பரிசு இருந்தால் சிறப்பு அல்லவா ?

பிடியுங்கள் பரிசு ரூபாய் 100 ( குலுக்கல் முறையில் ஒருவருக்கு) 

நீங்கள் செய்ய வேண்டியது ஒவ்வொரு கேள்விக்கும் சரி என்றால் 1 என்றும் தவறு என்றால் 0  என்றும் குறித்துக்கொள்ளவேண்டும். 9  கேள்விக்கான விடையை ஜாக் பாட் எண் போல BINARY வடிவில் எழுதி குவிகத்திற்கு அனுப்பவேண்டும்.  ( உதாரணமாக – 001001110 ).

குறுக்கெழுத்து விடை எழுதி அனுப்பும் மின்னஞ்சலில்  உள்ள கமெண்ட்ஸில்தான் இந்த  ஒன்பது இலக்க  எண்ணை  எழுதி அனுப்பவேண்டும்!!

தயாரா?

 மூளைப்பயிற்சி -1 

எல்லாக் கேள்விகளும் இம்மாத (ஏப்ரல் 23)  குவிகம் பற்றியதே !

சரி என்றால் 1 தவறு என்றால் 0

 

 1. குறுக்கெழுத்தில் சரியான விடை எழுதியவர்களில் பத்து பேர் பெண்கள் மூன்று பேர் ஆண்கள்
 2. சங்கப் பாடல் வரிசையில் வளவதுரையன் அறிமுகப்படுத்தும் இலக்கியம் சீவகசிந்தாமணி
 3. சின்மய சுந்தரனின் கடவுளின் மரபணுக் கூடம்  புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கியவர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்
 4. சிறகு ரவிச்சந்திரன் எழுதும் திரைக்கதம்பத்தில் விடுதலை படத்தின் கதாநாயகன் சூரி என்று சொல்கிறார்
 5. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாகேஷ் வேடத்திற்கு நடிக்க ஆசைப்பட்டவர் சோ
 6. ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகை ஆசிரியர் குழுவில் “அண்ணா” இருந்தார்
 7. மாலதி சுவாமிநாதனின் மனநலக் கட்டுரையில் இந்த மாதம் பேசப்படும் வியாதி டெமென்ஷியா
 8. வ வே சு வின் இடம் பொருள் இலக்கியம் கட்டுரையில் இந்த மாதம் விளக்கமாகக் கூறி இருப்பது கல்கியின் சிவகாமியின் சபதம் பற்றி
 9. குவிகம் ஏப்ரல் அட்டைப்படத்தில் உள்ள தின வழிபாடு புத்தகத்தை தொகுத்தவர்கள் இருவர்

 

  நீங்கள் அனுப்பவேண்டியது 0 , 1 மட்டும் இருக்கும் 9 இலக்க எண் மட்டுமே!

 

இனி,   குறுக்கெழுத்துப் போட்டிக்குச் செல்லலாம் !

குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி ( ஏப்ரல் 2023 )

லிங்க் இதோ: 

https://beta.puthirmayam.com/crossword/525B6C1F77

 

உங்கள் விடையை 19  ஆம் தேதிக்குள் அனுப்பிவிடுங்கள். சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல்  முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட   ஒருவருக்கு ரூபாய் 100 பரிசு வழங்கப்படும். 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

மார்ச் 23 குறுக்கெழுத்துப் போட்டியில் கலந்து கொண்டவர் : 20 பேர் 

சரியான விடை எழுதியவர்கள்: 13  பேர் 

1. ஜனா 2. ஜானகி ஸ்ரீநிவாசன் 3. ரேவதி பாலு 4. சாந்தி ராசவாதி 5. உஷா ராமசுந்தர் 6. ரேவதி ராமச்சந்திரன் 7. ஜெயா ஸ்ரீராம் 8. ஜானகி சாய் 9. நாகேந்திர பாரதி 10. துரை தனபாலன் 11. மனோகர் 12. கமலா முரளி 13. இந்திரா ராமநாதன் 

<——–  சரியான விடை 

 

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி ! 

சரியான  விடை எழுதியவர்களுக்குப் பாராட்டுதல்கள் !!

குலுக்கலில் வெற்றி பெற்று 100 ரூபாய் பரிசு பெறுபவர் :  ரேவதி பாலு 

வாழ்த்துகள்!!!

பாரதி – வ வே சு – குவிகம் 100 வது நிகழ்வு

பாரதி அன்பர்களுக்கு நல்லதொரு பொன்னாள் !

பெருமதிப்பிற்குறிய வ வே சு அவர்கள் ‘ மகா  கவியின் மந்திரச் சொற்கள்’ என்ற தலைப்பில் குவிகம் இணையவழி ஜூம் மூலம் நடத்தும்  தொடர் சொற்பொழிவின் 100 வது நிகழ்வு ஏப்ரல் 9 ஆம் தேதி  நடைபெற்றது !

ஒவ்வொரு புதன் மாலையையும் பொன் மாலைப் பொழுதாக மாற்றி பாரதி அமுதத்தில் நம்மைத் திளைக்க வைக்கும் வ வே சு அவர்களுக்கு   நன்றி ! குவிகம் என்ற அமைப்பிற்கு இப்படி ஒரு பாக்கியத்தை அளித்த வ வே சு அவர்களைப் போற்றி வணங்குகிறோம்.

100 வாரங்கள்! 100 மணிநேரம் – இன்னும் தொடர்கிறது. இலக்கிய உலகில் பாரதிக்கு இவர் ஆற்றிய சேவையைப்  பாராட்ட வார்த்தைகள் போதாதுதான் !

நிச்சயம் இது ஓர் ஒரு உலக சாதனையாகத்தான் இருக்கும்.

இவரது 100 மணி நேர உரையும் காணொளியாக்கப்பட்டு யூ டியூப் சானலில்  குவிகம் இலக்கியவாசல் என்ற தலைப்பின் கீழ் தனியே PLAYLIST இல்  பதிவிடப்பட்டிருக்கின்றன. அதன் லிங்க் இதோ:

https://www.youtube.com/playlist?list=PLOYdayF9QzXmpI6pzD3B6vZVf7q2wCSIB

இதுவரை நூறு நிகழ்வில் நாம் கடந்து வந்த பாதையும் பயின்ற பாரதியின் பாடல்களும் :

12 மே 2021 – மகாகவியின் மந்திரச் சொற்கள் துவக்கம். நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களால் இசையோடு துவங்கப்பட்டது

19 மே 2021 முதல் 11 வாரங்கள்               – பாஞ்சாலி  சபதம்

28 ஜூலை 2021 முதல் 18 வாரங்கள்   – கண்ணன் பாடல்கள்

1 டிசம்பர் 2021 முதல் 22 வாரங்கள்     – புதிய ஆத்திசூடி

27 ஏப்ரல் 2022 முதல் 12 வாரங்கள்      – விநாயகர் நான்மணி மாலை

27 ஜூலை 2022 முதல் 21 வாரங்கள்   – குயில் பாட்டு

21 டிசம்பர் 2022 முதல் 13 வாரங்கள்   – பாரதி சுயசரிதை

13 மார்ச் 2023 முதல் தொடர்வது           – பாரதி 66

 

இன்னும் நாம் பயணிக்கவேண்டிய பகுதிகள் ஏராளமாக இருக்கின்றன. பாரதிக் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்துத் தர வ வே சு அவர்கள் இருக்கும்போது ஏது குறை நமக்கு?

சதம் அடித்த வ வே சு அவர்களின் உரையைப் பற்றி நண்பர்களின்  கருத்துப் பெட்டகத்தில் சில வரிகள்!!  :

மல்லிகா :

பாரதியார் நமக்கு கிடைத்த வரம் என்றால் அவரின் ஒவ்வொரு சொல்லையும் விளக்கும் வ வே சு நமக்குக்  கிடைத்த வரப்பிரசாதம். பாரதியார் படைப்புகள் பற்றி அறிந்ததுடன் அனைத்து தமிழ் அறிஞர்களின் படைப்புகள் பற்றி விளக்கியதற்கு நன்றி நன்றி.

வி வி கணேசன்:

பாரதி ஒரு தேசிய கவிஞன் , எழுச்சி நிறைந்த தேசபக்திப் பாடல்களை எழுதியிருக்கிறான் என்று மேலோட்டமாக அவனப் பற்றி அறிந்த எனக்கு இந்த சொற்பொழிவு பாரதியின் பன்முகத் தன்மையையும் அவனுடைய ஆழ்ந்த புலமையையும் அவன் படைப்புகளின் நீள அகலத்தையும் , புரிய வைத்தது. இது பாரதியை முழுமையாகப் புரிந்து கொள்ள வைக்கும் ஒரு முயற்சி.

கம்ப இராமாயணம் , ஆத்திச்சூடி , திருக்குறள், சங்ககால இலக்கியங்கள் , பல அறிஞர்களின் படைப்புகள் என்று நிறைய மேற்கோள் காட்டிப் பேசியதால் , அந்தந்த நூல்களைப் பற்றியும் அறிய முடிந்தது.

குஞ்ஞாரமணி ராஜகோபால ஐயர்

சிறந்த துவக்கம். மாதா பராசக்தி!எனக்கு வேண்டும் வரம் ஒன்று இசைப்பேன். குறைந்தது பன்னிரு புதன்களுக்கு எனது ஆயுளை நீட்டித்தந்து செவிப்புலனையும் வளமாக்கி அருள்வாயாக! பாரதத்தின் சாரதியின் பாதாரவிந்தம் பணிவோம்! கம்பனுக்கு அன்று ஒரு வ.வே.சு ! பாரதிக்கு இன்றும் ஒரு வ.வே.சு.! என்னே தமிழர்தம் பேறு!

விஜயலட்சுமி :

வ வே சு அவர்களின் உரை தேன் போலக்  காதில் ஒலிக்கிறது

நாணு:

புதன்கிழமை  வாராவாரம் பாரதி வாரம்தான். வ வே சு அவர்கள் உரையைக் கேடிக்கையில் எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை பாரதி அரூபாமாக இவருள் புகுந்துவிட்டானா?

அகரமுதல:

வெண்பாவில்  அக விடுதலை, கலித்துறையில் சமுதாய நீதி, விருத்ததில் தன்னிலைப் பேச்சு, அகவலில் பக்தி யோகம் ஞானம் எனப் பல படிகளில் நம்மை ஏற்றுகிறார் பாரதி!

கு மா பா திருநாவுக்கரசு:

தமிழ் ஆர்வலர்களர்களுக்கு பயன்தரும் பதிவு

முரளிதரன்:

பாரதியின் புதிய ஆத்தி சூடியை அலசி ஆராய்ந்து நுணுக்கமான பார்வையைப் பகிர்ந்துகொள்கிறார் வ வே சு

ஹரிகிருஷ்ணன் :

அருமையான பேச்சு! தலை வணங்குகிறேன் வ வே சு!

எம் சாமிநாதன்:

வ வே சு அவர்களின் குரல் அருமை! விளக்கம் அருமை! சுண்டி இழுக்கும் முயற்சி !

முருகன்  ரங்கநாதன்:

மிக அற்புதமான கருத்தாழமிக்க ஆராய்ச்சிச்  சொற்பொழிவு. விள்ளாத நுணுக்கமான கருத்துக்களே இல்லை என்று கூறலாம்

வேதா கோபாலன்:

வ வே சு ஐயாக்குள் பாரதி புகுந்துகொண்டு பேசுவதாகவே தோன்றுகிறது

இந்திர நீலன் சுரேஷ்:

தமிழ் பத்திரிக்கை உலகில் முதல் கார்ட்டூன், வசன கவிதை கொடுத்த பாரதி, ‘தாலாட்டு’ பாடவில்லை என்ற தகவலையும் இந்த நிகழ்ச்சி மூலம் சொன்னார்.

திரு மா.பொ.சி அவர்கள், திருமதி பிரேமா நந்தகுமார், பாரதியின் மொழிபெயர்ப்புகளை ‘Dynamic Equivalence’ என்று வர்ணித்த பெ.ந.அப்புசாமி  போன்ற பலரின் கட்டுரைகளை இந்த உரை மூலம் அறியச் செய்தார் வ.வே.சு அவர்கள்.

பாடு பொருளை அதிகம் பாடியவன் பாரதி என்றால், அவன் பாடிய பொருளை அதிகம் விவரித்து சொன்னவர் வ.வே.சு. 100 நிகழ்ச்சிகள், 100 புத்தகங்களுக்கு சமம்

தென்காசி கணேசன்:

எத்தனை முறை கேட்டால் தான் என்ன ? எத்தனை முறை படித்தால் தான் என்ன ? அலுப்புத் தட்டும் விஷயமா இது ?  மதுரைக் கோவிலை பார்க்கப் பாரக்க பரவசம் தானே ? குற்றாலக் குளியல் புதுப் புது சுகம் தானே ? அப்படித் தான் பாரதி  படைப்புக்கள் ! அப்படித்தான் வ வே சு அவர்கள் உரை ! அடடா 100 நிகழ்வுகள் ! சுவை புதிது – சொல் புதிது என்றது போல, ஒவ்வொரு நிகழ்வும் புதிது புதிது ! எவ்வளவு தரவுகள் ? எத்தனை தகவல்கள் ! பாரதி ஒரு கடல் என்றால் , பேராசிரியர் ஒரு நதி ! உரை நதி, பாரதி எனும் கடலில் கலந்து, அப்புறம் அருவியாயக் கொட்டிய அழகை எப்படிச் சொல்வது?

துரை தனபாலன் 

அ கி வரதராஜன்  சிங்கப்பூர் 

பட்டையைக் கிளப்பிச் சொன்னார், பாடலின் விளக்கம் எல்லாம்

எட்டைய புரத்தான் பாவின் இனிப்பெலாம் ஊற்றித் தந்தார்.

வெட்டியாய் யாதோர் சொல்லும் விளம்பிடா நேர்த்தி நின்றார்.

அட்டியென் றேதும் இன்றி அரனருள் பெற்று வாழ்வார்.

 

வள்ளியூர் தந்த ஆசான், வழங்கினார் தமிழாம் அமுது,

தெள்ளிய உரைகள் யாவும், தேன்மிகச் சொரிந்து தந்தார்.

அள்ளியே குடித்தோம் ஒன்றி, அற்புத நூறு வாரம்.

வள்ளியின் கணவன் ஈய வளமெலாம் கண்டு வாழ்வார்.

 

படித்த துறையோ வேறொன்று, பாடம் யாவும் அதில்சொன்னார்,

குடித்த தேனாம் அமுதத்தால், கொண்டார் காதல் தமிழ்மீது.

இடித்த புளியாய் இருந்தாரும் எழும்பி நிற்கும் உரைதந்தார்,

அடுத்த புதனும் எப்போதோ? ஆர்வம் பொங்கி நாம்நின்றோம்.

 

ஆர்க்கே…!

அப்படித்தான் அக்கவிக்கு
அக்கறையாய் ஒரு
விழா என்ற இரண்டெழுத்திற்கு
முனைப்பெடுத்த
குவிகம் என்ற நான்கெழுத்து
தேர்ந்தெடுத்து
முன்னிறுத்திய
முனைவர் வ வே சு மூன்றெழுத்து.

பொன் கிடைத்தாலும் கிடைக்காத
புதன் மூன்றெழுத்து.
வாரம் மூன்றெழுத்து.
நேரம் மூன்றெழுத்து
ஆறரை மூன்றெழுத்து
அட!
பாரதியை கவிதையை
ரசனையுற திளைத்து சுவைத்த
வவேசு
அவருக்கும்
மூன்றெழுத்து.

கவிஒளி, பொருள் உன்னதம், மொழியழகு
மூன்றும் கூட்டி அற்புதமாய்
ஒரு முத்துமாலை கட்டிவைத்தார்

கவிதை சொன்ன விதம்
கனன்று பொழிந்த நடை
நமக்குள் கடத்திய கவியுணர்வு
வவேசு நிகழ்த்திக்காட்டியது
பாரதிக்கு,
ஒரு சரியான ஜதிபல்லக்கு.

 

இராய செல்லப்பா

நூறு முறை படித்தது தான்; மீண்டும் மீண்டும்
நூறுமுறை கேட்டதுதான், அதனால் என்ன?

காதலியின் கன்னத்தில் அலைந்தே பாயும்
கருங்கூந்தல் சுருள்போலக் கவர்கிறதே

பாரதியே உன் பாடல்!
வேறென் சொல்வேன்?

மீசையிலும் தமிழ் வளர்த்த நாயகனே! உன்னை
மீண்டுமொரு நூறுதரம் சொல்லவந்தார் -எங்கள்

வ-வே-சு என்னுமொரு பாட்டுக்காரர்!
வாய்மூடப் பூட்டில்லா பாசக்காரர்!

‘தெளிவுறவே அறிந்திடுதல்’ என்றே சொல்லித்
தெம்மாங்காய்த் தொடங்கிடுவார், அவையின் மூச்சைத்

திருடி யெடுத்திடுவார், தித்திக்கும் உரை தன்னை
முடிக்கும்போதுதான் அது நம் வசமாகும்!

நான்மணியாம் மாலையுடன், நாரணனாம் கண்ணனவன்
பாடலெல்லாம் எம்நெஞ்சில் படிந்திடவே சொல்லிவைத்தார் !

பாண்டியிலே பிறந்த குயில், பாட்டெடுத்தே இவர் குரலில்
ஜூம் அதனில் ஒலிக்கையிலே சொக்கிநின்றோம் யாவருமே!

பாரறிந்த சபதம்தான் பாஞ்சாலி செய்ததுவும் ! எங்கள்
வள்ளியூரார் வாக்கில் கேட்டதுவும் எம் பேறே!

இன்னும் பல சொல்லக் காத்திருக்கும் ஆசானே!
என்னையொரு
இராமனாய் ஆக்கிவிட இங்கே வழியுளதோ?

இருந்தால்,
சொல்ல விரும்பும் சொற்றொடரும் இதுவேதான்!

“யார்கொலோ இச் சொல்லின் செல்வன்?”

மதுவந்தி 

மகா கவி பாரதி எனும் மாபெரும் பொக்கிஷக் கதவு திறந்து, மந்திரச் சொற்கள் எனும் பொக்கிஷங்களை நாம் , கண்டு கேட்டு , உணர தந்து கொண்டு வருகிறார் திரு வ வே சு.
நம் கை பிடித்து அழைத்துச் சென்று, நிறுத்தி அந்த பொக்கிஷங்களை அடையாளம் காட்டி, அனுபவிக்கச் செய்து உடன் பயணம் வருகிறார். வேறெங்கு கிடைக்கும் இந்த பேரனுபவம்?
பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, ஆத்தி சூடி, விநாயகர் நான்மணி மாலை, பாரதி சுய சரிதை, பாரதி 66 என மகா கவியின் பொக்கிஷங்களை நமக்கு வாரி வழங்கும் இந்த இனிய நிகழ்வு ஒரு மேடைப் பேச்சு போல அல்லாமல் , ஒரு கலந்துரையாடல் போல நிகழ்கிற ஒரு அருமையான தொடர் நிகழ்வு.. நம்மில் நிறைய பேருக்கு பாரதியைத் தெரியும் , ஆனால், பாரதியை முழுமையாக அறிந்து கொள்ள இந்தத் தொடர் உரை நிச்சயம் கை கொடுக்கும். நம்மில் நிறைய பேர் பாரதியை வாசித்திருப்போம், ஆனால் , இந்தத் தொடர் உரை பாரதியை எப்படி படிக்க வேண்டும் , எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொடுத்து , பாரதியை மீண்டும் மீண்டும் வாசிக்க, நேசிக்க கற்றுக் கொடுக்கிறது.

சுரேஜமீ

முனைவர் வ வே சு அண்ணா அவர்களை வாழ்த்திப் பணிகிறேன்!

ஆழ்ந்தபொருள் ஆய்ந்தவைக்குத் தானுரைத்த அண்ணலைத்

தாழ்ந்து பணிந்தேன் தகவுடைத்தீர்! – சூழ்ந்திங்கு

பாரதியைத் தான்கற்றோம் பாவலரால் பைந்தமிழைத்

தேரதனில் ஏற்றித் தெளிந்து!

 

ஆர். வத்ஸலா

மகாகவியாம்
அவனின் மந்திரச் சொற்களை
உள் நுழைந்து
சுவைக்க ஆசைப் பட்டேன்

அவர் சொல் மந்திரத்தில்
தெள்ளத் தெளிந்த விளக்கமெனும் அமுதினைக் குழைத்து
ஆசான் வ வே சு ஐயா ஊட்ட
கள்ளால் மயங்குவது போலே
அதைக்
கண்மூடி வாய் திறந்தே கேட்டிருந்தோம்
நாங்கள்
தொண்ணூற்றி ஒன்பது புதன்கள்

’பாரதி எனும்
பாயும் காட்டாற்றை
முக்கண்ணனைப் போல
தன் சிரசில் தாங்கி
அதில் ஒரு பங்கை
ஆசான் வ வே சு ஐயா
பிரசாதமாக தர
புத்துயிர் பெற்றேன் ஐயா
புதன்களில்

இவை தவிர இன்னும் பல நண்பர்கள் காணொளியில் இந்த நிகழவிகவகி பற்றியும் வ வே சு அவர்களின் ஆறவாற்றளைப் பற்றியும் விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள் !

அதையும் செவி மாடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

வ வே சு  அவர்களின் ஏற்புரை :
குவிகம் வழங்கும் வவேசு வின் மகாகவியின் மந்திரச்சொற்கள் – 100 வது நிகழ்வு – 05/04/2023.
எனது மனத்துக்குகந்த மகாகவியின் மந்திரச்சொற்கள் தொடர் நேற்று 100 வது நிகழ்வைத் தொட்டது. அதனை எனக்கு ஒரு பாராட்டு நிகழ்வாக “ கேட்டதும் பெற்றதும்” எனும் தலைப்பில் அமைத்துக் கொடுத்தார்கள் சுந்தர்ராஜன் கிருபானந்தன் ஆகிய குவிகம் இரட்டையர்.
நாற்பது நண்பர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். ஒவ்வொருவருக்கும் இரண்டு நிமிடங்களே அளிக்கப்பட்டது. தாங்கள் பேசியதை, குரல் பதிவாகவும், உரை வடிவமாகவும் குவிகம் இலக்கியத் தகவல் வாட்ஸப் குழுவில் பலர் பதிவுசெய்துள்ளனர்.
நேரிலும், தொலைபேசியிலும் சில நண்பர்கள் தொடர்புகொண்டு வாழ்த்தியுள்ளனர்.
உங்கள் அனைவருக்கும் தனித்தனியே எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். உங்கள் பாராட்டில் நெஞ்சம் நெகிழ்ந்துபோனேன்.
உரைநடையில் சிலர், கவிதைநடையில் சிலர், வழக்குச்சொல் வாழ்த்துடன் சிலர், மேற்கோள் காட்டிப் பேசியவர் சிலர், என் உரை எப்படிப் பயன்பட்டது என விளக்கிய சிலர் பாரதியை அறிந்துகொள்ள வகை செய்யும் வகுப்பாக இது மலர்ந்துள்ளது எனப் புகழ்ந்த சிலர், பழைய சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட சிலர், இன்னும் சொல்ல விஷயம் இருந்தாலும் நேரம் இல்லையென்று நிறைவு செய்த சிலர் …….என்று பலவிதமான பாராட்டுகள் வாழ்த்துரைகள். ஆனாலும் அவற்றுள் ஓர் ஒற்றுமை இருந்தது.
” ஆம்! யாரும் உதட்டிலிருந்து பேசவில்லை; உள்ளத்திலிருந்தே பேசினார்கள்”
என்ன தவம் செய்தேன் இப்படியோர் பாரதி அன்பர் கூட்டத்தைப் பெற !
அனைவருக்கும் நன்றி.
என்னை இப்பணியில் மேலும் ஊக்கமுடன் தொடரவைக்கும் இந்தப் பாராட்டுவிழாவிற்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள்.
அன்புடன்
வவேசு

சிவசங்கரி குவிகம் சிறுகதைத் தேர்வு – மார்ச் 2023

எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora


இந்த மாதத்தின் சிறந்த கதையாக கிரிஜா பாஸ்கர் அவர்கள் தேர்ந்தெடுத்த சிறுகதை :

தாவரங்களுடன் உரையாடுபவள் 

எழுதியவர்: சோ.சுப்புராஜ்     உயிர் எழுத்து மார்ச் 2023

 

மார்ச் 2023 மாதத்திற்கான ‘எழுத்தாளர் சிவசங்கரி – குவிகம் சிறுகதை தேர்வு’ பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு பத்திரிகைகில் வந்த கதைகளை கூர்ந்து படித்தது ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது. இதில் நான் கற்றவை ஏராளம்.

இனி என்னைக் கவர்ந்த கதைகள் குறித்து

 1. மன்னிப்பு :                 சரவணன் சந்திரன்    உயிர்மை       மார்ச் 2023

கதை நகரத்தின் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் டெய்ஸி என்ற இளம்பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியது. வறுமை எப்படி தாய் – மகளுக்குள் ஓர் எதிரும் புதிருமான நிலையை உருவாக்கும் என்பதை படம் பிடிக்கிறது. கதையின் நிறைவாக வரும் வரி கதையின் முடிச்சை அழகாக அவிழ்க்கிறது.

    2. சின்னக்கிளி குட்டியப்பன் :  ராஜேஷ் வைரபண்டியன்                                         விகடன் 08.03.2023

கதை, அண்ணன் மகன் குட்டியப்பனை எடுத்து வளர்க்கும் ஆச்சியிலிருந்தும் அவளுடைய பசுமாடு, கோழி, கோழிக்க்குஞ்சுகள், கயிற்றுக்கட்டில் என்ற சிறிய உலகத்தில் நடக்கிறது. குட்டியப்பன்  குடியின் போதைக்கு அடிமையாகிறான். அழிவிலிருந்து அவனை மீட்கவே முடியவில்லை. இந்த எளிய உலகத்திற்குள் இச் சிறுகதை நம்மைக்  கட்டி இழுக்கிறது.

    3. நட்பூ :                                 ஜனநேசன்           திண்ணை 26.03.23

மரணப்படுக்கையில் கிடக்கும் சந்திரவதனாவின் தாயாரிடமிருந்து கதை தொடங்குகிறது. அந்த நேரத்திலும் அவள் “சந்திரசேகர்” என்ற பெயரை உச்சரிக்கிறாள். ஆனால் அவள் கணவர் பெயரோ சந்திரசேகர் இல்லை. சந்திரசேகர் என்பவர் அம்மாவின் இளம் பருவ நண்பர் என்று சந்திரவதனாவுக்குத் தெரிய வருகிறது. பழைய சினிமா கதை போல் இருந்தாலும், கதையில் உண்மைத் தன்மையும் அன்பின் பெருக்கெடுப்பும் மிளிர்கிறது.

    4.  மீதிக்கதை :                       இந்திரா பார்த்தசாரதி              உயிர்மை  மார்ச்  2023

இந்த ஆழமான சிறுகதை ராமாயண காவியத்தில் ராமன் இறுதியில் அரியணையில் ஏறி அமர்ந்த பிறகு, மீதிக்கதையை சொல்ல முற்படுகிறது . குழந்தைகள் லவனும், குசனும் ராமன் முன் அமர்ந்து பாடுவதுதான் மீதிக் கதை. வாசகனை சிந்திக்கவும் வைக்கிறது.

    5.  நரகத்தில் சொர்க்கத்தின் பிரதிநிதி :      நாராயணி கண்ணகி                     விகடன் 22.03.23

கதை வெட்டியான் வரதனைப் பற்றியது. இல்லை, வங்கி செக்யூரிட்டியாய் பணியாற்றும் வரதனைப் பற்றியது. அவனுக்கு ஒரு வண்டி வாங்க பேங்க் லோன் வேண்டும். என்ன வண்டி ? லோன் கிடைத்ததா? வேதனையான, வித்தியாசமான திருப்பத்தோடு முடிகிற கதை.

     6. மகனின் மூன்று கடிதங்கள் :         ஐய்யப்ப மகராஜன்                                       விகடன் 15.03.2023

தமிழ்நாட்டின் தென் மூலையில் தொலைந்து போய் விடக்கூடிய ஒரு கிராமத்தில் வாழ்வின் இறுதியை தொட்டுவிடக்கூடிய பருவத்தில் உள்ள “ஆத்தா” என்ற ஏழைக்கிழவிதான் இந்தச் சிறுகதையின் மையப் புள்ளி. இம்மாதிரி வறுமையின் பிடியில் உள்ள படிப்பறிவில்லாத குடும்பத்திலும் வீட்டை விட்டும் ஓடத் தயங்காத  கலை வெறி பிடித்த கலைஞர்கள் இருக்கிறார்கள் – ஆத்தாவின் கணவர் மற்றும் ஆத்தாவின் மகன். மனதை உருக்கும் சிறுகதை.

     7. தாவரங்களுடன் உரையாடுபவள் : சோ.சுப்புராஜ்        உயிர் எழுத்து மார்ச் 2023

கதை கவிதா என்ற பெண்ணைப் பற்றியது. அவளுடைய உணர்வுகளைப் பற்றியது. அவளுக்கும் அவள் வீட்டில் உள்ள மரத்துக்கும் உள்ள உறவைப் பற்றியது. அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் பற்றியது. இது ஒரு கவித்துவமான, மெல்லிய உணர்வுகளை பிரதிபலிக்கும் கதை. கட்டாயம் வாசிக்க வேண்டிய கதை 

இந்தச் சிறுகதையை  2023 மார்ச் மாதத்திற்கான சிறந்த சிறுகதையாகத்  தேர்வு செய்கிறேன்

                                                           கிரிஜா பாஸ்கர்

                                                                   சென்னை

இடம் பொருள் இலக்கியம் – 4. வவேசு

பொன்னியின் செல்வனும் நானும். –

 

பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan (Tamil Edition) eBook : Krishnamurthi, Kalki: Amazon.ca: Kindle Store

நான் முழுக்க முழுக்க ஒரு சென்னைவாசி. திருவல்லிக்கேணி கோஷாஸ்பத்திரியில் பிறந்து தி.நகர் எனப்படும் மாம்பலத்தில் வளர்ந்தவன். நான் பிறப்பதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே என் தந்தையார் எங்கள் பூர்வீகமான நெல்லை மாவட்டத்தை விட்டுத் தொழில் நிமித்தம் சென்னை வந்து வசிக்கத் தொடங்கினார். மாம்பலம் ரயில் நிலையம் அருகே ரயில்வே லயனை ஒட்டியபடி செல்லும் மாம்பலம் சாலையில் எங்கள் இல்லம் அமைந்திருந்தது. இரண்டு கிரவுண்டில் கட்டப்பட்ட பெரிய வீடு. முதல் மாடியில் இருக்கும் அறையின் மேல் இருக்கும் மொட்டைமாடிக்குச் செல்ல ஏணி உண்டு. அங்கிருக்கும் “வாட்டர்டேங்” கை “கிளீன்” செய்யத்தான் யாரேனும் மேலே வருவார்கள், மற்றபடி யாரும் வரமாட்டார்கள். அக்காலத்தில் இப்போது இருப்பதுபோல, உயரமான கட்டடங்கள் கிடையாதாகையால், அந்த மொட்டைமாடித் தண்ணிர்த் தொட்டியின் அருகில் அமர்ந்திருந்தால் யாராலும் பார்க்க முடியாது. ஒரு பெரிய , இனிய தனிமை வழங்கும் இடமாக எனக்கும் என் சகோதரனுக்கும் எங்கள் இளமையில் அந்த இடம் அமைந்தது.

இதை இத்தனை விரிவாக நான் சொல்வதன் காரணம், இங்கு அமர்ந்துகொண்டுதான் நான் கல்கியில் வரும் பொன்னியின் செல்வன் தொடரை முதலில் படிக்க ஆரம்பித்தேன்… கல்கியில் வாரா வாரம் வரும் தொடரின் அடுத்த பகுதி என்னவாக இருக்கும் என்பதை அறிய அத்தனை ஆவலோடு படிப்பேன். ஒவ்வொரு வாரமும் ஒரு “சஸ்பென்ஸோடு” தொடர் முடியும். அந்த ஆண்டு பள்ளி விடுமுறையில் என் அத்தையின் பெண், கோவையிலிருந்து வந்திருந்தாள். என்னிலும் நான்கு வயது பெரியவள்.

“என்னடா ! பொன்னியின் செல்வன்” படிச்சிண்டு இருக்கியா ?”

“ ஆமாம் ! பூரணி ! ரொம்ப நல்லா இருக்கு .இந்த வாரம் படிக்கும் போது ஒரு சந்தேகம் வந்தது கொள்ளிட கரையில் இருந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தான்?

எனக்குத் தெரியும் என்று அவள் சொல்லத் தொடங்கினாள். எனக்கோ ஆச்சரியம் “ எப்படித் தெரியும் ”என்று கேட்டேன். கொஞ்சம் என்னை அலைக்கழித்துவிட்டுப் பிறகு சொன்னாள்

“ டேய் ! ஏற்கனவே இது கல்கியில் தொடர்கதையா வந்துடுத்து. எங்கம்மா அதான் ஒங்க அத்தை அத எற்கனவே “பைண்ட்” பண்ணி வச்சிருக்கா. வீட்டிலே அதை எடுத்துப் பூராவும் போன வருஷ லீவிலேயே படிச்சிட்டேன் ” என்றாள்.

”ஆஹா அப்படியா சமாச்சாரம்” என்று அக்கம்பக்கத்தில் தேடி எனது நண்பன் ஒருவன் வீட்டிலிருந்த “பைண்ட்” பண்ணின புத்தகத்தை வாங்கி அடுத்த லீவுக்குள் படித்துமுடித்தேன். ( (தொடர்ந்து வாரா வாரமும் படித்து மகிழ்ந்தேன். காரணம் அவற்றில் தொடர்கதைக்கான படங்களும் வருமல்லவா !. அதன் பிறகு எத்தனை முறைகள் பொன்னியின் செல்வனைப் படித்தேன் என்று எண்ணிக்கை வைத்துக் கொள்ளவில்லை. )

வீட்டுக்குள் அமர்ந்து கதை புஸ்தகம் படித்தால் திட்டு விழும் என்பதால் நான் இதை மொட்டைமாடித் தனிமையில்தான் படிப்பேன். நல்ல வெய்யில் இருக்கும் பகலிலும், மொட்டைமாடியில் எலெக்ட்ரிக் லைட் இல்லாத்தால் இரவிலும் படிக்கமுடியாது. இளங்காலைப் போதிலும் மாலையிலும்தான் படிக்கமுடியும். எனவே பொன்னியின் செல்வனை நான் படிக்கும் நேரமெல்லாம் சூழல் மிக ரம்மியமாக இருக்கும்.

முதல் அத்தியாயத்தின் தொடக்கத்தில், ” ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.” என்ற வரிகளைப் படித்த உடனேயே மனத்தில் நானே ஒரு குதிரையில் ஏறி அமர்ந்துள்ளது போல ஒரு கற்பனை வளர்ந்தது. அந்த இள வயதில் அதைப் படிக்கப் படிக்க மனத்தில் ஆயிரம் கற்பனைகள் சுழல ஆரம்பித்தன. நான் காணாத ஒரு “ராஜாராணி” காலத்துக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். இக்கதையின் பின்னணியில் சரித்திரச் சான்றுகள் உள்ளன. அது பேசும் கதாபாத்திரங்கள் பல வரலாற்று நாயக நாயகிகள் என்பதெல்லாம் பின்னாளில் நான் அறிந்து கொண்டவை. ஆனால் அந்த இளைய பருவத்தில் பொன்னியின் செல்வன் கொடுத்த ஓர் ஆர்வம் கதை படிக்கும் ஆர்வமாக மாறியது; அது தமிழ் மொழி மீது ஆர்வத்தை ஊட்டியது. நீண்ட ஆழ்ந்த வாசிப்புகள் ஒருநாள் என்னை எழுதவும் தூண்டின.

பொன்னியின் செல்வன் என்பது ஒரு சாதாரண வரலாற்றுப் புதினமல்ல; அது ஓர் அற்புதமான கலைப்படைப்பு. தமிழ் இலக்கியப் பரப்பிலே சோழர்களின் வீர மரபையும் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் கலைத் தொண்டுகளையும் பற்றிச் சுவைபட விரிக்கும் காவியம்; அந்த கதாபாத்திரங்கள் அனைவரும் என் மனத்திலே ஆழ்ந்துவிட்டனர். இது எனக்கு மட்டுமல்ல, பொதுவாகத் தமிழ் வாசகர்கள் அனைவரது மனங்களையும் ஒருசேரக் கட்டிப்போட்ட கதை என்பதற்கு திரு. சுந்தா எழுதிய “பொன்னியின் புதல்வர்” என்ற நூலிலிருந்து ஒரு சான்று தருகிறேன்.

பொன்னியின் செல்வனும் பூங்குழலி அம்மையும்

வந்தியத் தேவனும்  வானதியும் குந்தவையும்

பழுவூர் நந்தினியும் பழுவேட் டரையர்களும்

பாடாய்ப் படுத்துகிறார் படிக்கின்ற போதெல்லாம்

 

“பொன்னியின் செல்வன் தொடராய் வந்துகொண்டிருக்கையில் , விழுப்புரத்தில் உள்ள மகாத்மா காந்தி பாடசாலையில் கல்கிக்கு அளித்த வரவேற்பு மடலில் உள்ளது இந்தப் பாடல்.

நான் படித்த தி நகர் இராமகிருஷ்ணா பள்ளியில் (மெயின்), எங்கள் தமிழாசிரியர் திரு என். எஸ். வைத்தியநாதன் ஒருநாள் தஞ்சாவூரைத் தஞ்சை என்கிறோம் கோயமுத்தூரைக் கோவை என்கிறோம் ;அதுபோல கும்பகோணத்தை எப்படிச் சொல்வோம் என்று கேட்டார். “குடந்தை” என்று எழுந்து நான் சொன்னேன். சரி என சொன்ன ஆசிரியர் ”அதற்கு இன்னொரு பழைய பெயரும் உண்டு ..அதுவும் சொல்வாயா ?” என்று என்னை மடக்கினார்.

“சொல்வேன் சார் ! கும்பகோணத்துக்கு இன்னொரு பழைய பெயர் “குடமூக்கு” “ என்றேன்

அதிசயித்த ஆசிரியர். “எப்படித் தெரியும் ?” என்று கேட்டார்

“ பொன்னியின் செல்வன் நாவலில் இருக்கிறது” என்றேன். வகுப்பே கரவொலி செய்தது. ஆமாம் அன்றிலிருந்தே நான் கல்கிக்குக் கடன்பட்டிருக்கிறேன்.

சென்னை தி.நகரில் பிஞ்சாலசுப்பிரமணியின் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சிலகாலம் ”பொன்னியின் புதல்வர்” ஆசிரியர் எழுத்தாளர் திரு சுந்தா குடியிருந்தார். நானும் அதே பகுதி என்பதால் பலமுறை அவரை சந்தித்திருக்கிறேன். அவர் தனது டெல்லி வாழ்க்கை பற்றியும் சென்னை பற்றியும் ஒப்பிட்டு நகைச்சுவையாகப் பேசுவது வழக்கம். வயது வித்தியாசம் பாராமல் மிக எளிமையாக நட்போடு பழகுபவர்.

ஒருமுறை அவரிடம் “ சார் நீங்கள் எழுதிய கல்கியின் வாழ்க்கை வரலாற்றில் பொன்னியின் செல்வன் என்று ஏன் ஒரு தனி அத்தியாயம் எழுதவில்லை ? கல்கியின் பெருமைக்கு அது ஒரு அழியா சான்று அல்லவா ?” என்றேன்.

புன்னகைத்துக் கொண்டே சுந்தா  “ அத்தியாயம் எதற்கு தலைப்பிலேயே பொன்னியின் செல்வர் வந்துவிட்டாரே !” என்றார். உண்மைதான் ! கல்கியின் வாழ்க்கைச் சரிதத்திற்கு இதைவிடப் பொருத்தமாக வேறு எந்த பெயர் இருக்கமுடியும்? வாளெடுத்து அருண்மொழிவர்மனும், வந்தியத்தேவனும் செய்த சாதனைகள் போன்று தாளெடுத்து பல சாதனைகளை நமது ஆசிரியரும் செய்தவரன்றோ !

2013-ம் ஆண்டு, ஜூன் மாதம் 14-ஆம் நாள்; எனது கல்லூரித் தோழர் பாம்பே கண்ணன் தயாரித்த “பொன்னியின் செல்வன்” ஆடியோ நூல் வெளியீட்டு விழா, சென்னை நாரத கான சபாவில் நிகழ்ந்தது. விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கல்கி ஆசிரியர் சீதா ரவி, பிரபல நடிகை சுஹாஸினி மணிரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் ஓர் அங்கமாக “ பொன்னியின் செல்வன்” வெற்றிக்கு மிகுதியும் காரணமாக இருப்பது கல்கியின் கருத்துச் செறிவா? கற்பனைப் பொலிவா ? என்ற பட்டிமன்றம் நிகழ்ந்தது. நடுவர் நானேதான்.

நான் நடுவராக இருந்த பல பட்டிமன்றங்களில் இன்னும் என் நினைவில் மிகப் பசுமையாக விளங்கும் பட்டிமன்றம் அது. கல்கியின் புதல்வரும், மேனாள் ஆசிரியரும் ஆகிய கல்கி ராஜேந்திரன் பட்டிமன்றம் முழுமையும் கேட்டு இரசித்தார்கள் என்பதை இன்றும் பெருமையுடன் நினைவுகூருகிறேன்.

பட்டிமன்றத் தீர்ப்பு என்னவா ? மறந்துவிட்டேன்; உங்கள் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்.

 

 

திரைக் கவிஞர்கள் – முனைவர் தென்காசி கணேசன்

இம்மாதப் பாடலாசிரியர் பத்மஶ்ரீ கொத்தமங்கலம் சுப்பு

கொத்தமங்கலம் சுப்பு | இது தமிழ்

 

இலக்கியவாதிகள், சினிமாவிலும் சாதிப்பது அதிசயம் என்ற குற்றச்சாட்டைத் தகர்த்த முன்னோடிகளில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. தமிழ்த்திரையுலகின் மிகப் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களின் ஆதாரமாக இயங்கியவர் சுப்பு என்பது அக்மார்க் உண்மை.

ஜெமினி பட இலாகாவிலும், வாசன் நடத்திய ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுத்தாளராகவும், கவிஞராகவும், ஜெமினி படங்களில் நடிகராகவும் , பல துறைகளிலும் பிரகாசித்தவர் சுப்பு.

கண்ணும் கண்ணும் கலந்து
சொந்த்ம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம்
பந்தாடுதே

சாதுர்யம் பேசாதடி
என் சலங்கைக்குப் பதில் சொல்லடி

ராஜா மகள் புது ரோஜா மலர்
எனதாசை நிறைவேறுமா

கட்டடத்துக்கு மனப் பொருத்தம் அவசியம்
காதலுக்கு மனப் பொருத்தம் அவசியம்

பெண்கள் இல்லாத உலகத்திலே
கண்களினாலே என்ன பயன்

குபு குபு குபு குபு நான் என்ஜின்
டகு டகு டகு டகு நான் வண்டி

இப்படிப் பல பாடல்கள் தந்த ஒரு பன்முகக் கலைஞர் திரு சுப்பு அவர்கள்.
எழுத்தாளர், கவிஞர், நடிகர், பாடலாசிரியர், இயக்குனர, கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டுக் கலைஞர் , நாடக நடிகர், பத்திரிகை ஆசிரியர் என பல பரிமாணங்கள் கொண்ட மாமேதை திரு சுப்ரமணியன் என்ற சுப்பு.

பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல் எனும் கிராமத்தில் பிறந்தாலும், அன்றைய இயக்குனர கொத்தமங்கலம் சீனு என்பவர் அறிமுகப் படுத்தியபின், இவர் பெயர் கொத்தமங்கலம் சுப்பு என்றே ஆனது.

தொடர்ந்து கே.சுப்ரமணியத்தின் “பக்த சேதா , “கச்ச தேவயானி” உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 1941-ல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கே.சுப்பிரமணியத்தின் (நாட்டியத் தாரகை பத்மா சுப்ரமணியத்தின் தந்தை தான் ) சினிமா ஸ்டுடியோ முழுவதுமாக எரிந்துவிட, நஷ்டத்தை சமாளிக்க தனது மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு கொடுக்கும்போது, சுப்ரமணியத்தால் ‘சிறந்த கலைஞர், பன்முக திறன் மிக்கவர்’ என்ற அறிமுகத்துடன் எஸ்.எஸ்.வாசனிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார் சுப்பு.

சுப்புவின் திறமையை பல விஷயங்களில் நேரில் கண்ட வாசன் அவரை தன்னுடனேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார்..

ஜெமினியில் ,கொஞ்சநாளில் வாசனின் பிரியமான நண்பராகவும் ஆகிப்போன சுப்பு, ஜெமினி கதை இலாகாவில் முக்கிய பங்காற்றினார். ஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது.

ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார், கொத்தமங்கலம் சுப்புவுக்கு, நல்ல பெயரும் புகழும் தந்தது. பெரும்புகழ் அளித்தது. சிறப்பான முறையில் படத்தின் திரைக்கதை, பாடல், இயக்கம் என சுப்பு அவர்களின் பங்களிப்பு, அவர்க்கு,அன்றைய மாகாண பிரதமராக இருந்த , மூதறிஞர் ராஜாஜி உட்பட பல ஆளுமைகளின் பாராட்டுக்கள் கிடைத்தது. முன்னாள் முதல்வர் திரு பக்தவத்சலம் “தமிழ் உலகுக்கு கொத்தமங்கலம் சுப்புவும் வாசனும் செய்த சேவையை யாராலும் மறக்கமுடியாது” எனப் பாராட்டினார்.
ஜெமினியின் ‘கண்ணம்மா என் காதலி’ திரைப்படம் கொத்தமங்கலம் சுப்புவுக்கு நற்பெயருடன் , கதாநாயகி நடிகை எம்.எஸ்.சுந்தரிபாய் அவர்களை , அவரின் துணைவியும் ஆக்கியது.

கொத்தமங்கலம் சுப்புவுக்கு புகழை தந்த படங்களில் முக்கியமானது,‘மிஸ். மாலினி’ . பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் மிஸ்டர் சம்பத் என்கிற நாவலை ஜெமினி நிறுவனத்தார் திரைப்படமாகத் தயாரித்து 1947-ல் வெளியிட்டனர். இப்படத்தில் ‘சம்பத்’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார் கொத்தமங்கலம் சுப்பு. இப்படத்தில் இன்னுமொரு சிறப்பு ஜெமினி ஸ்டுடியோ அலுவலகத்தில் பணியாற்றிய இளைஞர் ஒரு காட்சியில் நடித்திருந்தது. அவர்தான் பின்னாளில் காதல் மன்னன் என திரையுலகில் புகழ்பெற்ற ஜெமினி கணேசன்.

இரண்டாவது உலகப் போர் முடிந்து நாட்டில் பஞ்சம் நிலவிய இப்படம் வெளியான காலகட்டத்தில் ரேஷன் கடை அமலில் இருந்தது. உணவுத் தேவையில் கட்டுப்பாட்டை கொண்டுவந்த இந்த அவலத்தை கிண்டல் செய்து பாடல் எழுதியிருந்தார் கொத்தமங்கலம் சுப்பு.

‘காலையில எழுந்திரிச்சு
கட்டையோட அழுவணும்’
‘சக்கரைக்குக் கியூவில போய்
சாஞ்சுகிட்டு நிக்கணும்
சண்ட போட்டு பத்து பலம்
சாக்கட மண் வாங்கணும்’-
என்ற அந்தப்பாடல் அன்றைக்கு மக்கள் மத்தியில் வெகு பிரபலமாயிற்று.

1947லேயே, மிஸ் மாலினி படத்தில்,
பலே ஜோர் பலே ஜோர் பட்டண வாசம்
பாத்துப்புட்டென் பாத்துப்புட்டென் பணத்துக்கு நாசம்,
என்று , பின்னால் வந்த, கண்ணதாசனின் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பாடல் போலே எழுதி உள்ளார்.

ஜெமினியின் ‘சந்திரலேகா’ வெளியாகி அதன் வெற்றி, இந்திய திரையுலகையும் அசைத்துப்பார்த்தது. இப்படத்தில் மூன்று வசனகர்த்தாக்களில் கொத்தமங்கலம் சுப்புவும் ஒருவர்.
எம்.கே.ராதா இரட்டை வேடத்தில் நடித்த ஜெமினியின் சிறந்த படங்களில் ஒன்றான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் சுப்பு , பாடல்களை இயற்றியிருந்தார். வி.நாகையா நடித்த ‘சக்ரதாரி’ என்கிற படத்தில் பாடல்களை எழுதியிருந்தார்.

1951 இல் வெளிவந்த ‘சம்சாரம்’ படத்திலும் சுப்பு உருக்கமான பாடல்களை எழுதியிருந்தார்.
‘அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே’
ஆண்டவன் எங்களை மறந்தது போலே
அன்னை நீர் மறவாதீர்

பாலும் பழமும் வேண்டாம் தாயே
பசிக்குச் சோறு கிடைத்தால் போதும்
என்கிற இப்படப்பாடல் தமிழ்நாட்டின் பிச்சைக்காரர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு அழைத்து வந்தது எனலாம். அவர்களுக்கு , இந்தப் பாடல் “ பசி கோவிந்தம் “ பாடலாகவே ஆனது எனலாம், என்பார்கள்.

துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு

வண்ண வண்ண கோலம் வாசலில் மேளம்
தாலிகட்டும் மேடை தங்கமணி மேடை

என்ற மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படப் பாடலில் காதல் ரசம் பொங்கி வழியும்.

அதேபோல,

மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம் என்று அதே படத்திலும்,

மயிலேறும் வடிவேலநே
வயதான கிழவி முன் வாதாட வந்தாயோ என்று அவ்வையார் படத்திலும்

இன்னும் பல படங்களில் ஆன்மிக பாடல்கள் எழுதி உள்ளார்.

இரும்புத் திரை படம், நடிகர் திலகம் – வைஜயந்திமாலா நடித்து, வெற்றி கண்ட படம். தொழிலாளர் பிரச்னை பற்றிய படம் என்பதால், பொதுவுடமைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை ஜெமினி நிறுவனம் பாடல்கள் எழுதச் சொன்னது.

கொத்தமங்கலம் இருக்கும்போது, நான் எதற்கு என்று மறுத்த கவிஞரை, சுப்பு அவர்களே நேரில் பார்த்து, நீ பாடல்கள் எழுது – நான் தான் உன்னைப் பற்றிச் சொன்னேன் – நான் எழுதினாலும் எழுதாவிட்டாலும் எனக்கு சம்பளம் உண்டு – நான் ஜெமினியின் மாதச் சம்பளக்களாரன் என்று கூறி எழுத வைத்தாராம். கவிஞர் 4 பாடல்கள் மற்றும் சுப்புவும், பாடல்கள் எழுதினார். அதில் ஒன்று –

நன்றி கெட்டமனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம்
நாவினிக்க பொய்யுரைக்கும் பேரை நம்ப மாட்டோம்

பஞ்சம் நோய்க்கும் அஞ்சிடோம்
பட்டினிக்கு அஞ்சிடோம்
நெஞ்சினை பிளந்த போதும்
நீதி கேட்க அஞ்சிடோம்

காலி என்றும் கூலி என்றும்
கேலி செய்யும் கூட்டமே
காத்து மாறி அடிக்குது
நீர் எடுக்க வேண்டும் ஓட்டமே, என்றும்,

சம்சாரம் படத்தில்,

மாநிலத்தில் விதியை வென்ற மனிதர் யாருமில்லையே
ஞானியென்ன அரசன் என்ன – யாருமே விலக்கில்லையே என்றும்,

சந்திரலேகாவில், நாட்டுப்புறப் பாட்டாக –

ஆத்தோரம் கொடிக்காலாம்
அரும்பரும்பா வெற்றிலையாம்
போட்டா சிவக்குதில்ல பொண்மயிலே உன் மயக்கம்

வெட்டிவெரு வாசம் – வெடலபுள்ள வாசம் , என்றும்

இப்படிப் பல்வேறு வகையான பாடல்கள் எழுதிய கவிஞர் திரு சுப்பு அவர்கள்.

நாட்டுப்புற மற்றும் கிராமத்து மண் வாசனை உள்ள பாடல்கள் அதிகம் எழுதியதால், தமிழ்த் தென்றல் திரு வி.க..அவர்கள், சுப்பு அவர்களை, மண்ணாங்கட்டிக் கவிஞர், என்று செல்லமாக அழைப்பாராம்.

மங்கம்மா சபதம் படத்தில், இவரின் ஒரு பாடலை கதாநாயகன் ரஞ்சன் அவர்களே பாடி இருக்கிறார். அதேபோல, கதாநாயகி வசுந்தரா தேவி (வைஜயந்திமாலாவின் தாய்) சுப்பு அவர்களின் பாடலை பாடி இருக்கிறார்.

Nalamdhana Full HD | Thilana Mohanambal Movie Song | Sivaji Ganesan Padmini | Tamil Old Hit Songs - YouTube

கலைமணி என்ற பெயரில் அவர் எழுதிய கதைகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. விகடனில், அவரது மாஸ்டர் பீஸ் ‘தில்லானா மோகனாம்பாள்’. அது வெளிவந்த காலத்தில் ஆனந்தவிகடன் பரபரப்பான விற்பனையானது. திரையுலகில் அவரது அத்தனை புகழையும் இந்த ஒற்றை நாவல் அவருக்கு அளித்தது.
அற்புதமான இந்தத் திரைக்கதைக்காக திரு வாசன் அவர்களைத் தவிர, திரு ஏ பி நாகராஜனும், சுப்பு அவர்களை சந்தித்து, பணம் தந்து மரியாதை செய்தார். இன்னொரு முக்கியமான விஷயம் – எங்களது குடும்ப நண்பரும, மிக நல்ல மனுஷியுமான, சுப்பு அவர்களின் புதல்வி திருமதி லலிதா சபாபதி அவர்கள் என்னிடம் சொன்னது.
திடீரென்று ஜெமினி ஸ்டூடியோவில் இருந்து சுப்பு அவர்கள் வெளியேறியபோது , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திரு சுப்பு அவர்களை சந்தித்து , தனது பங்காக ஒரு தொகையை அன்புடன் வழங்கினாராம். . அது அப்பாவை மிகவும் மகிழ்ச்சியிலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது என்றார்கள்.

தில்லானா மோகனாம்பாள் 3 தொகுதி : Dial for Booksகல்கி அவர்களுக்கு பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் பெருமை சேர்த்ததுபோல, கொத்தமங்கலம் அவர்களுக்கு, தில்லானா மோகனாம்பாள் கதை அமைந்தது. அவரின் புதல்வி லலிதா சொன்ன சில விஷயங்கள் பிரமிப்பைத் தருகின்றன.

தில்லானா நாவல் ஆனந்த விகடனில் வெளிவந்தபோது, மன்னார்குடியில் ஒருவர் வீட்டில் வியாழன் தோறும், இங்கு இந்த வாரக் கதை படிக்கப்படும் என்று அறிவித்து, அதற்கென்றே ஒரு கூட்டம் கூடுமாம்.

ஆனந்த விகடனில் நாவல் முடியும் வேளை, சண்முகசுந்தரம் – மோகனா திருமணத்திற்காக, நிஜமான பத்திரிகை அடிக்கப்பட்டு, விகடனில் இணைக்கப்பட்டது. மோகனா வளையல், குஞ்சலம், புடவை என அப்போது கடைகளில் வியாபாரம் களை கட்டியதாம்.

அதைவிட முக்கியமான தகவல் – திருமணத்தை ஒட்டி, அந்த வாரத்தில், சுப்பு அவர்களுக்கும், வாசன் அவர்களுக்கும், திருமண அன்பளிப்புகள் குவிந்தனவாம்.

இருந்தாலும், தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில், வைத்தி வேடம் தான் செய்ய விரும்பி அது நடக்காமல் போனது அவர்க்கு வருத்தம் என்பார்கள்.

விகடனில், தொடர்ந்து அவர் எழுதிய‘ராவ் பகதூர் சிங்காரம்’ என்னும் ஒரு தொடரும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னாளில் இந்தக் கதைதான், நடிகர் திலகம் நடித்து விளையாட்டுப்பிள்ளை என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.

கொத்தமங்கலம் சுப்பு - Tamil Wikiகொத்தமங்கலம் சுப்பு அவர்கள் சுமார் 30 படங்களில் நடித்தவர். 300 பாடல்களுக்கு மேல் எழுதியவர். வில்லுப்பாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் காந்திமகான் கதையை, வில்லுப்பாட்டு மூலமாக தமிழகம் முழுவதும் நடத்தினார். மஞ்சு விரட்டு, நாடக உலகம் போன்ற நூல்களை, கவிதை நடையில் எழுதிஉள்ள இவர், 50 நாடகங்களும் படைத்துள்ளார்.

அதனால் தான் சாதனையாளர ஜெமினி ஸ்டூடியோ அதிபர் வாசன் அவர்கள், “ சுப்புவின் நரம்புகளில் ஓடுவது எல்லாம் தமிழ் உணர்வு – அவர் ஒரு தனி மனிதரல்ல – ஒரு ஸ்தாபனம் “ என்று கூறினார்.

ஆம். கொத்தமங்கலம் சுப்பு, தமிழ்த் திரையுலகின் ஆரம்பக் காலங்களில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர் என்பதே பேருண்மை.

அடுத்த மாதம் இன்னோரு கவிஞருடன் சந்திப்போம் – நன்றி

 

 

 

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

ராஜாதிராஜன்

முதலாம் ராஜாதிராஜன் | இரண்டாம் ராஜேந்திர சோழன் Promo - YouTube

 

நேரடியாகக் கதைக்குள் செல்வோம்.

வருடம்: 1044

ராஜேந்திர சோழன் பிரம்மதேசத்தில் (இன்றைய அம்பாசமுத்திரத்தில்) ஒரு அரண்மனையின் மஞ்சத்தில் படுத்திருந்தான். தனது கடைசிநாட்கள் நெருங்கியதை அவன் அறிந்திருந்தான். தனது மகன்கள், மகள் அனைவரையும் தன் படுக்கையறையில் அழைத்திருந்தான். தலைமை சேனாதிபதியும், தலைமை அமைச்சரும் இருந்தார்.

ராஜேந்திரன் சொன்னான்:

“ராஜாதிராஜா, உன்னைப்பார்க்கும்போது என் தந்தை ராஜராஜர் முன் நான் என்னையே பார்ப்பது போலவே இருக்கிறது. அவர் ஆட்சியில் நான் பட்டத்து இளவரசனாக இருந்து படைகளை நடத்தி, அரசாங்கத்தையும் கவனித்துக்கொண்டேன். அவருக்குப் பிறகு, நான் சோழ அரசானான நான்காம் ஆண்டில் உன்னையும் பட்டத்து இளவரசனாக ஆக்கி, நீயும் இந்த இருபத்து ஆறு ஆண்டுகள் என்னுடன் சேர்ந்து படைகளை நடத்தியும், நாட்டை ஆண்டும் வருகிறாய். உன் தம்பியர்கள் ராஜேந்திரன், வீரராஜேந்திரன் உன்னைக் கண்மணிபோலக் காத்து வருகிறார்கள். பார்க்கவே மனது மகிழ்கிறது. நெகிழ்கிறது. எனது ஆயுள் முடியும் காலம் நெருங்கிவிட்டது. இந்தபிரம்மதேசத்தில், இந்த கைலாயநாதர் ஆலயத்தில் சிவனாரைத் தரிசனம் செய்து அவர் திருவடியில் கலக்க விழைகிறேன். இந்த ஊர் மண்ணில் நான் கலக்க விரும்புகிறேன்” என்றான்.

அனைவர் கண்களிலும் கண்ணீர் தளும்பியது.

ராஜேந்திரன் புன்னகைத்தான்.

“இதில் துன்பத்துக்கு இடமில்லை. வாழ்வாங்கு வாழ்ந்து இறைவனடி செல்கிறேன். அதற்கு முன் சிலவற்றை நான் சொல்ல வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளில் சோழநாடு எண்திசையிலும் பரந்து கிடக்கிறது.

கடாரம் கொண்ட பின்னும், இந்த பாண்டிய, ஈழ, சாளுக்கிய ராஜ்யங்கள் துளிர்விட்டுக் கொண்டும், போராடிக்கொண்டும் வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் சோழ இளவரசர்கள் அனைவரும் ராஜாதிராஜன் தலைமையில், சுற்றி நிற்கும் பகையைத் தொடர்ந்து அழித்து வருகிறீர்கள். நெருப்பணைந்தது போல இருந்தாலும், அதன் கங்குகள் மீண்டும், மீண்டும் ஒளிவிட்டு, சுடர்விட்டு, நம்மை எரிப்பதற்கு வந்து கொண்டே இருக்கின்றன. சாளுக்கிய எதிரிகள் -அவர்கள் மாவீரர்கள். தோல்விக்குப் பின்னரும் துள்ளி வந்துகொண்டே இருக்கின்றனர். வாழ்நாள்தோறும் இந்தப் போர்கள் நம்மைத் துரத்தும். நீங்கள் அனைவரும் இதில் ஒன்று சேர்ந்து இருந்து நாட்டைக் காக்க வேண்டும். ஒருவரை ஒருவர் காக்கவேண்டும். உத்தம சோழர் காலத்தில் நடந்தது போல் உள்நாட்டுக்குழப்பம் நேரலாகாது.

மேலும், ராஜாதிராஜா! நீ மன்னனாகப்போகிறாய். படைகளின் முன்நின்று போர்புரிந்து படைகளை ஊக்குவித்து வெற்றியை ஈட்டுகிறாய். ஒரு மன்னன் என்றும் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். நீயே எப்பொழுதும் முன்னிலை செல்லாமல், படைத்தலைவர்களை முன்னிறுத்தி போர் செய்யவேண்டும்.” என்றான்.

ராஜாதிராஜன் பேசினான்: ”தந்தையே! அது மட்டும் என்னால் முடியாது. நமது படை சண்டையிடும்போது, நான் முன்னே நின்றே போரிடுவேன். இது என்னுடன் பிறந்த குணம்.. மாறாது தந்தையே!” என்றான் திட்டமாக. அதைச் சொல்லும்போது அவன் முகம் இரும்பைப்போல இருந்தது.

ராஜேந்திரன் தொடர்ந்தான்.

“ராஜாதிராஜா! வீர சோழனாகப் பேசினாய். எண்ணுள்ளிலிருக்கும் வீரன் இதைக் கேட்டுப் பூரிக்கிறான். ஆனால், ஒன்று மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். சரித்திரம் நமக்குப் பலப் பாடங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும். நமது முன்னோர் ராஜாதித்தரின் தக்கோலப் போர் நினைவில் இருக்கிறதா? அதில் சிறு பிசகு நடந்தது.

ராஜாதித்தர் யானைமேல் இறந்தார். உடனே சோழப்படை நிலைகுலைந்து மாபெரும் தோல்வியைத் தழுவியது. அந்த நிலை நமக்கு என்றும் வாராமல், இளவரசர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து சோழநாட்டைக் காக்க வேண்டும். இது நீங்கள் அனைவரும் எனக்குத் தரும் சத்தியம். செய்வீர்களா?” என்று நிறுத்தினான் மன்னன்.

அனைவர் கண்களும் கலங்கியிருந்தது. இளவரசர்கள் வாளை உயர்த்தி ‘உயிரால் ஒன்றுபடுவோம். சோழநாட்டைக் காப்போம்’ என்று சூளுரைத்தனர்.

நிம்மதியுடன் ராஜேந்திரன் ‘சபை கலைந்தது’ என்று சைகை காட்டினான்.

அவனது நெஞ்சின் பாரம் குறைந்தது.

அன்று, தமிழ்நாட்டின் தன்னிகரற்ற நாயகனின் உயிர் பிரிந்தது.

பிரம்மதேசத்திலே அடக்கம் செய்யப்பட்டான்.

சென்ற அடிகள் எல்லாம் தனக்கு உரிமையாக்கிய அந்த வேந்தன் ஆறடி மண்ணுக்குள் அடக்கமானான்.   

சோழநாடு கண்ணீர் வடித்தது.

சோழநாட்டைச்சுற்றியிருந்த தோற்ற மன்னர்கள் மகிழ்ந்தனர். இருப்பினும் ராஜாதிராஜன் மன்னனாவது அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தது.

ராஜாதிராஜன் சோழநாட்டு முடி சூடினான்.

இளவரசர்களை அழைத்தான்.

“2 வருடமுன்பு, சாளுக்கிய நாட்டில் சோமேஸ்வரன் ஆகவமல்லன் அரசனானான். அவன் வீரமும், புத்தியும் உள்ளவனாக இருந்தான். நம் தந்தை உடல்நலம் குன்றியிருந்ததால், சோழநாட்டின் எல்லையைக் கடந்தான். நாமும் படையெடுத்துச் சென்றோம். அவர்களது படைத்தலைவர்கள் ‘கண்டப்பையன்’, ‘கங்காதரன்’ அனைவரும் நமது வாளுக்கு இரையாகினார். சோமேஸ்வரனது மகன்கள் விஜயாதித்தனும், விக்கிரமாதித்தனும் படைக்களத்தை விட்டு ஓடினர். வெற்றி பெற்றோம். கொள்ளிப்பாக்கை நகரை (இன்றைய குல்பர்கா) எரியூட்டி அதன் செல்வங்களைக் கொணர்ந்தோம். இப்பொழுது, சோமேஸ்வரன் மீண்டும் படைகளைத் திரட்டி வருவதாக செய்திகள் கிடைத்திருக்கிறது. சாளுக்கியர் மீது நாம் படையெடுக்கச் செல்லுமுன், தெற்கே, ஈழத்து நரிகள் சலசலக்கின்றன. அவைகளுக்குப் புலியின் ஆட்டத்தைக் காண்பிப்போம்“ என்றான்.

அடுத்த இரண்டு வருடத்தின் ஈழம் அடக்கப்பட்டது.

1046:

அந்த இரண்டு வருடத்தில், சாளுக்கிய ராஜ்யம் சற்றுப் பலமடைந்திருந்தது.

ராஜாதிராஜன் மீண்டும் படையெடுத்து கம்பிலி நகரிலிருந்த சாளுக்கியப் பேரரசர் அரண்மனையைத் தகர்த்து, அங்கு சோழரின் வெற்றித்தூண் ஒன்றை நிறுவித் திரும்பினான்.

1048: இரண்டு ஆண்டுகள் கடந்தது.

சாளுக்கியர்கள் மீண்டும் பலமடைந்து சோழ எல்லையை ஆக்கிரமிக்கத்தொடங்கினர். ராஜாதிராஜன் சாளுக்கியக் குந்தள நாட்டின் மீது படையெடுத்தான். இம்முறை போர் கிருஷ்ணா நதிக்கரையிலிருந்த பூண்டூரில் நடந்தது. பெரும் யுத்தத்தின் முடிவில், சாளுக்கியப்படைத்தலைவர்கள் கொல்லப்பட்டனர். அரசமகளிர் சிறையெடுக்கப்பட்டனர். பூண்டூர் மதில்கள் தகர்க்கப்பட்டன. மண்ணதி நகரிலுள்ள சாளுக்கிய அரண்மனை அழிக்கப்பட்டது. அங்கும் ராஜாதிராஜன் வெற்றித்தூண் கட்டினான். கிருஷ்ணா, துங்கபத்ரா ஆற்றின் துறைகளில் தன் பட்டத்து யானையை நீராட்டினான்.

ஒருநாள், சோழர் பாசறையில் ராஜாதிராஜன் உறங்கும் போது, அவனது கூடாரத்தில் இரு உருவங்கள் நுழைந்தன. அரவம் கேட்ட மன்னன் அவர்கள் இருவரையும் பிடித்தான். அவர்கள் குறுவாளேந்தி மன்னனைக் கொல்ல வந்த சாளுக்கிய ஒற்றர்கள். கூடாரத்தில் படைத்தலைவர் குழுமினர்.

ராஜாதிராஜன் சொன்னான்: “இவர்கள் உயிர்பிழைத்து சோமேஸ்வரனிடம் செல்லட்டும். அவனுக்கு ஒரு செய்தி அனுப்புவோம்” என்றான்.

தம்பி ராஜேந்திரன், “சரி அண்ணா! ஓலையில் என்னவென்று எழுதுவது?” என்றான்.

“இவர்களே ஓலைகள்” என்றான் மன்னன்.

அனைவரும் விழித்தனர்.

மன்னன் சிரித்து விட்டு, “இவர்கள் மார்பில் பச்சை குத்தி அனுப்பவும்.

‘ஆ க வ ம ல் ல ன்   எ ங் கு ம்   பு ற ங் கா ட் டி  ஓ டி ய வ ன் “

என்று எழுதப்படட்டும்.” என்றான்.

தோல்வியை விட அவமானங்கள் வீரர்களை பெரிதும் உறுத்தும்.

சோமேஸ்வரன் துடித்து, மீண்டும் போருக்கு வந்தான்.

எஞ்சின படைத்தலைவர்களையும் போரில் இழந்தான். தோற்ற சோமேஸ்வரன், ராஜாதிராஜனுக்கு இரு தூதுவர்களை அனுப்பினான்.

ராஜாதிராஜன் அந்த தூதர்களை கேலி செய்தான். ஒருவனுக்கு ஆகவமல்லன் என்ற பெயரை ஒட்டுவித்து , மற்றொருவனுக்கு பெண்ணுடை உடுத்தச்செய்து, பெண்கள் போல ஐம்பால் கொண்டையிட்டு, ‘ஆகவமல்லி’ என்ற பெயரை ஒட்டுவித்து அனுப்பினான்.

தோல்வியை விட அவமானங்கள் வீரர்களை பெரிதும் உறுத்தும்.

பிறகும் போர் தொடர்ந்தது.

இம்முறை ராஜாதிராஜன், சாளுக்கியத்தலைநகரான கல்யாணபுரத்தை (கல்யாணி) முற்றிலும் அழித்தான். கல்யாணியில் இருந்து துவாரபாலகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு சோழநாட்டில் தாராசுரம் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கல்யாணீயில் வீராபிஷேகம் செய்து விஜயராஜேந்திரன் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டான்.

1௦54:ஆறு ஆண்டுகள் கழிந்தன.

பகை எனும் தீ.

அதற்கு நினைவு மறதி என்பது கிடையாது.

தோற்றவர்களை அது சுட்டு, மீண்டும் சண்டையிடத் தூண்டும்.

வென்றவர்களையும் அது மீண்டும் சண்டையிடத் தூண்டும்.

சோமேஸ்வரன் படை திரட்டுவது மட்டுமல்லாது, சரித்திரத்தையும் புரட்டிப் பார்த்தான்.

அதில், ராஜாதித்தன் கதை அவனுக்கு இனித்தது.

‘அதுபோல ஒரு சம்பவம் செய்தால் சோழர்கள் நிலைகுலைந்து போய் நமக்கு வெற்றி கிடைக்குமே’!

சோமேஸ்வரன் சோழனுக்கு அறைகூவல் விடுத்தான்.

சும்மாவே சண்டைக்குப் போகக்கூடிய ராஜாதிராஜன் வந்த சண்டையை விடுவானா?

‘கரும்பு தின்னக் கூலியா” என்று புறப்பட்டான்.

தம்பி ராஜேந்திரனுடன் பெரும் படையுடன் புறப்பட்டான்.

இன்றைய பெல்காம் மாவட்டத்தில், கிருஷ்ணையாற்றுக்கரையில் உள்ள ஒரு குடுவை வளைவு ‘கொப்பம்’. இங்கு இருபடைகளும் அணிவகுத்து எதிர்த்து நின்றனர். சாளுக்கியர் பக்கம் சோமேஸ்வரன் போர்க்களத்துக்கு வரவில்லை. அவன் மகன்கள் தலைமை வகித்து இருந்தனர். சோழப்படைகளுக்கு, முன்னணியில்,பட்டத்து இளவரசன் ராஜேந்திரன் தலைமை வகித்து இருந்தான். பின்னணியில் மன்னன் ராஜாதிராஜன் யானை மீது தலைமை தாங்கி இருந்தான்.

சாளுக்கியரின் முதல் யானைப்படைத் தாக்குதலில் ராஜேந்திரனின் முன்னணிப் படை சீர்குலைந்தது. வெற்றி எளிதாகும் இன்று என்று சாளுக்கியர் மகிழ்ந்த சமயம், ராஜாதிராஜனின் பின்னணிப்படை முன்னணியில் வந்து, சாளுக்கியப்படைகளை அழிக்கத் தொடங்கியது.

தோல்வி மீண்டும் சாளுக்கியரை நெருங்கியது.

சோமேஸ்வரனின் திட்டப்படி, நூறு சிறந்த வில்லாளர்கள் ராஜாதிராஜனின் யானையைச் சூழ்ந்தனர். நூற்றுக்கணக்கான அம்புகள் ராஜேந்திரன் யானைமேல் பாய, யானை சுருண்டு விழுந்து இறந்தது. யானை மீதிருந்த வீரர்கள் ஒவ்வொருவாராகக் கொல்லப்பட்டனர். இறுதியில் ராஜாதிராஜன் உடல் சல்லடையாகத் துளைக்கப்பட்டு அவன் யானை மீதிருந்து சாய்ந்தான். மீகாமனில்லாத மரக்கலம் போல சோழப்படை தள்ளாடி, நிலை குலைந்தது.

Chola king rajathirajan who died on an elephant in battlefield

ராஜாதித்தன் கதை ராஜாதிராஜன் கதையாயிற்று.

‘ஹிஸ்டரி ரிப்பீட்ஸ்’ என்று சொல்வார்களே, அது போல சரித்திரம் திரும்பியதா?

போர் என்னவாயிற்று?

அந்த நிகழ்வுகளை சரித்திரம் விவரமாகப் பேசும்.

அது விரைவில்….

 

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

 

 

கிரேக்க டிரோஜன் போரில் மிகப் பெரிய பயங்கரம் அக்கிலிஸின் உயிர் நண்பனான பெட்ரோகுலஸின் கொடூர மரணம்.

அக்கிலீஸின் கவச உடையை அணிந்து வந்த பெட்ரோகுலஸ் அதி தீவிரமாகப் போரிட்டு டிரோஜன் படையினருக்குச்  சிம்ம சொப்பனமாக விளங்கினான். ஆனால் அவனுக்குப் பின்னால் மறைந்துவந்து அவன் கவசத்தைக் கழட்டிய அப்போலோவின் செய்கை மன்னிக்க முடியாதது. கவசப் பாதுகாப்பு இல்லாத பெட்ரோகுலஸை ஹெக்டர் ஈட்டியால் குத்தி கீழே சாய்த்தான். டிரோஜன்  தலைவர்கள் ஒவ்வொருவரும்  பெட்ரோகுலஸைக் குத்தி அவனைச் சின்னாபின்னமாக்கினர். அவனை நிர்வாணமாக்கி அவன் அணிந்திருந்த அக்கிலிஸின் கவச உடையை ஹெக்டர் அணிந்து கொள்ளத் துடித்தான் இரக்கமற்ற ஹெக்டர். அதைத் தடுத்த  பெட்ரோகுலஸ் ஹெக்டரிடம்” என உயிர் நண்பன் அக்கிலிஸின்  கரங்களில் என்னை விடப்  பல மடங்கு சித்திரவதையை அனுபவிக்கப் போகிறாய் “என்று வீரமொழி கூறி உயிர் துறந்தான் பெட்ரோகுலஸ்!

அதற்குப் பின் தொடர்ந்தது டிரோஜன் வீரர்களின் வெறித்தனம். ஹெக்டரின் ஆணைப்படி பெட்ரோகுலஸ் உடலைத் தங்கள் டிராய் கோட்டைக்குள் எடுத்துச்செல்ல டிரோஜன் தளபதிகள் பாய்ந்தார்கள்.

இன்னும் சற்று நேரம் டிரோஜன்களே வெற்றிக்கொடியை ஏந்த வேண்டும் என்ற திட்டமிட்ட ஜீயஸ் கடவுளுக்கும் ஹெக்டரின் . வெறித்தனமான செய்கை ஆத்திரத்தை மூட்டியது. ஹெக்டர் அக்கிலிஸின் கவசங்களை அணிந்துகொண்டதும் ஜீயஸுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. புயற்காற்றை  அக்கிலிஸின் வடிவில் ஹெக்டருக்கு எதிராகத் திருப்பிவிடுவதற்குத் தயார் நிலையில் இருந்தார் ஜீயஸ். அணையப்போகும் விளக்கு சுடர்விட்டு எரிவதைப் போல ஹெக்டர் இருக்கட்டும் என்று அவனுக்கு ஆதரவாக ஒரு பனிப் படலத்தையும் ஏற்படுத்தினார் ஜீயஸ்.

ஆனால் பெட்ரோகுலஸ் உடலை எக்காரணம் கொண்டும் டிரோஜன் வீரர்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்பதில் கிரேக்க வீரர்கள் உறுதியாக நின்றார்கள். கிரேக்கர்களின் தன்னிகரற்ற தளபதி அஜாக்ஸ் மடிந்த மாவீரன் பெட்ரோகுலஸ் உடலை எடுத்துத் தங்கள் கப்பலுக்குச் செல்லவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தான். அவனுக்குத் துணையாக மற்ற தளபதிகளும் வந்து சேர்ந்தார்கள். மடித்த மாவீரன் பெட்ரோகுலஸ் உடல் இங்கும் அங்கும் இழுக்கப்பட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற கடவுளர்களுக்கும் கண்ணீர் வரவழைத்தது.

அதேசமயம் ஹெக்டரின் படையில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அவனது முக்கிய உப தளபதி ஹெக்டரின் அநாகரிகச் செயலைக் கண்டு படுகோபம் அடைந்தான். ‘பெட்ரோகுலசைக் கேவலப்படுத்தியற்குப் பழிக்குப்பழி வாங்க அக்கிலிஸ் வருவான். அவன் வரும்போது நம்மில் ஒரு வீரர் கூட திரும்பச் செல்லமுடியாது’ என்பதை உணர்ந்த அவன் தன் படை இனி டிராயைக் காப்பாற்ற  வராது என்று போர்க்களத்தின் வாசலிலேயே அறிவித்தான்.

ஆனால் மூர்க்கனான ஹெக்டருக்கு ஜீயஸ் தன் பக்கம் இருக்கிறார் என்ற எண்ணம்  ஆயிரம் குதிரைகளின் பலத்தை அளித்தது. பெட்ரோகுலஸ் உடலை எடுத்துவர அவனே போர்க்களத்தின் முன்னணிக்கு வந்தான். அங்கே அஜாக்ஸ் பெட்டோகுலஸ் உடலைச் சுற்றி கேடயக் கவசம் அமைத்திருப்பதைக் கண்டு கடுங்கோபம் அடைந்தான். அஜாக்ஸின் உப தளபதி தான் எப்படியும் ஹெக்டரின் முன்னேற்றத்தைத் தடை செய்கிறேன் என்றும் அந்த இடைவெளியில் எப்படியாவது பெட்ரோகுலஸ் உடலை எடுத்துக் கொண்டு அகழியைத் தாண்டி கப்பலுக்குள் செல்லுமாறும்  அஜாக்ஸிடம் கூறினான்.

அஜாக்ஸ் தன் வீரர்களின் துணையோடு எதிர்த்துவரும் டிரோஜன்களைத் தாக்கிப் பின்னடையச் செய்தான். ஆனாலும் தாங்கள் முன்னேறித் தாக்க இயலாத பனிப்படத்தின் காரணகர்த்தா ஜீயஸ் கடவுளாகத்தான் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தான். இந்தப் பனிப்படலத்தை மட்டும் அவர் போக்கட்டும் அதன் பின் சுத்த வீரனாகப் போரிட்டு முடிந்த வரை டிரோஜன்களை அழித்து பின் மரணம் என்னைத் தழுவட்டும் எனக்கு மரணத்தைக் கண்டு பயமில்லை என்று வேண்டி நின்றான். அவன் குரல் ஜீயஸ் காதில் விழுந்தது. பனிப்படலத்தை அகற்றினார்.

தன் குரலுக்குச்  செவிசாய்த்த ஜீயசுக்கு நன்றி கூறிவிட்டு அஜாக்ஸ் தன் திறமை முழுவதையும் காட்டினான். தடுத்த எதிரிகளைப் பந்தாடினான். ஹெக்டரும் தடுக்கப்பட்டதால் முன்னேறி அஜாக்சிடம் வர இயலவில்லை. அஜாக்ஸ் பெட்ரோகுலஸ் உடலை எடுத்துக் கொண்டு உட்குழிந்த கப்பல் அரணுக்குள் சென்றான். அதற்கு முன்னே ஒரு தூதுவனிடம் பெட்ரோகுலஸ் மரணம் பற்றி அக்கிலிஸிடம் கூறுமாறு ஆணையிட்டான்.

தன் உயிர் நண்பன் பெட்ரோகுலஸ் மரணச் செய்தி கிடைத்ததும் அக்கிலிஸ்  தீயில் விழுந்த பாம்பு போல துடித்தான். போருக்கு அவனை அழைத்துவரும்போது அவன் பெற்றோர்களிடம் அவனைத் தன் உயிர் போல பாதுகாப்பேன் என்று உறுதி கூறியதை எண்ணி அளவில்லாத் துயரம் அடைந்தான். அதுவும் அவனைப் பின்புறம் தாக்கி கவச உடையைக் கழற்றி கொடூரமாகத் தாக்கி  நிர்வாணப்படுத்திக் ஹெக்டர் கொன்றான் என்பதைக் கேள்விப்பட்டதும் அவன் உள்ளத்தில் புயல்போலக் கோபம் பொங்கியது. இனி அகெம்னன் என்ன சொன்னாலும் சரி கிரேக்கருக்கு ஆதரவாகப்  போரில் இறங்கி அந்த ஹெக்டரையும் அவனுக்குத் துணையாய் வரும் அத்தனை வீரர்களையும் கொன்றால்தான் என் நெஞ்சில் சாந்தி கிட்டும் என்று போர்க்களத்தின் முன்னணிக்கு வந்தான்.  

ஆனால் அந்தக் கணம் பெட்ரோகுலஸின் மரித்த உடலை அவன் முன் அஜாக்ஸ் மரியாதையுடன் வைத்தபோது அக்கிலிஸின் கோபம் மறைந்து துயரம் பெருக்கெடுத்தது. ‘என் உயிர் நண்பனே இறந்த பிறகு நான் வெற்றி பெற்று என்ன பயன்? இதோ இந்தக் கணமே என் உயிரை விடுகிறேன் என்று தன்  கத்தியைத் தூக்கினான்.

கிரேக்கர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ஹீரா தேவதை சட்டென்று வந்து அவன் கரத்தை பிடித்து  அவனைத் தற்கொலையிலிருந்து நிறுத்தினாள். “ “அக்கிலிஸ் ! நீ உன் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொள்வது இப்போது மிக மிக முக்கியம். உன் மீது மிகப் பிரியம் வைத்திருக்கும் ஜீயஸ் உன் வெற்றிக்காகக் கண்டிப்பாக உதவுவார்! நீ உன் கடமையைச் செய்ய போருக்குப் போ! உன் நண்பனுக்காக நீ இறப்பதைக் காட்டிலும் அவனைக் கொன்றவரைப் பழிவாங்குவதுதான் உன் முதற்காரியமாக இருக்கவேண்டும்” என்று அவனைத் தூண்டினாள்.

அப்போதும் தயங்கித்  தலைகுனிந்து பெட்ரோகுலஸ் உடல்முன் அமர்ந்திருந்த அக்கிலிஸின் தலையை அழகான கரம் ஒன்று ஆதரவுடன் தடவியது. தலையைத் தூக்காமலேயே அதுதன் தாயின் ஆதரவுக் கரம் என்பதை உணர்ந்துகொண்டான்.

“ அக்கிலீஸ் ! நீ உன் கடமையை ஆற்ற வேண்டியத் தருணம் வந்துவிட்டது. உன் வீரம் உன் புகழ் கடவுளரைவிட அதிகம் போற்றப்படும். அதை நிலை நாட்ட இப்போது நீ புறப்படவேண்டும். உன் நண்பனைக் கொன்றவர்களைப் பழி வாங்குவது அல்ல உன் நோக்கம். உலகில் யாரும் சாதிக்க இயலாத காரியத்தைச் சாதித்தவன் என் மகன் அக்கிலிஸ் என்பதை அந்தக் கடவுளரும் ஒப்புக்கொள்ள வைக்கும்படி சாதனை புரியவேண்டும். அதற்காக வாழ்த்தவே உன் தாய் நான் வந்துள்ளேன்! இப்போது கிரேக்கர்களுக்கு மாபெரும் வெற்றி கிட்டப்போகிறது. அந்த மூச்சுக் காற்றுதான் வெற்றிக் காற்றாக மாறப்போகிறது.  உன் கவசங்களை அணிந்துகொண்டு  ஆணவத்தில் திரிகிறான் அந்தக் கிராதகன் ஹெக்டர். இதன் மூலம் அவன் தனக்கும் தன் நாட்டுக்கும் பெரிய சமாதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான். கவசம் இன்றி எப்படி யுத்தத்தில் கலந்து கொள்வது என்று நீ கவலைப்பட வேண்டாம். தேவ உலகில் கவச உடை செய்யும் சிற்பியிடமிருந்து உனக்காகப் புதிய சக்தி வாய்ந்த தலைக் கவசம், கேடயம், உடல் கவசம் மற்றும் முழங்காலுக்குக் கீழே   அணியும்  பாதுகாப்புப் பட்டயம் அனைத்தும் கொண்டுவந்திருக்கிறேன். புறப்பட்டு மகனே ! புறப்பட்டு! உன் புகழாவது அழியாமலிருக்கட்டும்” என்று அவன் தலையில் முத்தமிட்டாள் அவன் அன்னை! அவள் கண்களிலிருந்து பொல பொல என்று கண்ணீர் வழிந்தது.

“ என் தாயே! வீரமாகப் பேசிய உங்கள் கண்களில் ஏனிந்தக் கண்ணீர்? போரில் நான் வெற்றி பெற மாட்டேன் என்று கருதுகிறீர்களா? உங்கள் கண்ணீரின் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா? “ என்று பாசத்துடன் வினவினான் அக்கிலிஸ்.

“ அதை மட்டும் கேட்காதே அக்கிலிஸ்! உன் வெற்றி நிச்சயம். கிரேக்கர்களின் புகழை நீ உயர்த்தப் போகிறாய். உன்னைவிடச் சிறந்த வீரன் இந்த உலகில் இல்லை ! இனித் தோன்றப்போவதும் இல்லை என்பதை  நிரூபிக்கப் போகிறாய்!  உன் முன்னால்  அந்த டிராய் நாடு சிங்கத்திடம் அகப்பட்ட ஆட்டுக்குட்டியைப் போல  அழியும் என்பதில் எனக்கு ஐயமில்லை! உனக்கு என்இதய  பூர்வமான வாழ்த்துகள் ! உனக்கு வெற்றி நிச்சயம் “ என்று தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கும் சக்தியில்லாதவளாகச் சென்றாள்  அவன்தாய்!

எப்படிச் சொல்வாள்! வெற்றியுடன் மரணமும் அவன் மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்று ! அதுதான் அவனை உயிருடன் சந்திக்கப்போகும் கடைசித் தருணம் என்று !

புத்திசாலியான  அக்கிலிஸ் அவள் கண்ணீரின் வழியே தன் வாழ்வின் கதை முடியும் தருணத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். இந்தப் போரின் முடிவில்தான் தன் வாழ்க்கையின் முடிவும் காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான்.

What did Achilles look like? - Quora

தாய் தந்த கவச உடைகளை அணிந்துகொண்டான் அக்கிலிஸ். கணுக்காலை மறைக்கத் தாய் தந்த பட்டயத்தை அணிந்தபோது அதில் தன் தாயின் கண்ணீர் இருப்பதைக் கண்டு மனதிற்குள் சிரித்துக்கொண்டான். அந்த சிரிப்பு வெறிச்சிரிப்பாக மாறி சிம்மக் குரலில் உரத்த கர்ஜனையில் வீர முழக்கமிட்டான்.

அந்த வீர முழக்கம் கிரேக்கப் படையின் அனைத்துத் தளபதிகளையும் அந்த இடத்திற்கு வரவழைத்தது. அகெம்னன் , மெனிலியஸ் ,ஓடிசியஸ், அஜாக்ஸ் ஆகிய தலைவர்களும் வந்தார்கள். கிரேக்கர் பெருமையை உயர்த்த தானைத்தலைவன் வந்துவிட்டான் என்பதை உணர்ந்தார்கள். இனி வெற்றிக்கனி நமதே என்ற மகிழ்ச்சி அனைவர் கண்களிலும் தெரிந்தது.

அந்த வீரமுழக்கம் டிரோஜன் வீரர்களின் முதுகுத் தண்டில் சில்லென்ற பய உணர்ச்சியை அளித்தது.  

அதைக் கேட்டு,  கொஞ்சமும் அசராமல் மாபெரும் துணிவோடு கையில் ஈட்டியோடு குரோதம் கொழுந்து விட்டு எரியும் கொடூர முகத்தோடு போருக்குத் தயாரானான் டிராய் நாட்டுக் காவலன் ஹெக்டர்!!!    

  

 

 

     

      

கண்ணன் கதையமுது-18 – தில்லை வேந்தன்

Om Namo Narayanaya: January 2015(மாடுகளையும், சிறுவர்களையும் ஒரு குகையில் அடைத்து வைத்துத் தன்னைச் சோதித்த பிரமனின் கர்வத்தை அடக்கிய பிறகு, கண்ணன் வழக்கம் போல மற்ற சிறுவ்ர்களோடு சேர்ந்து யமுனை நதிக்கரையில் மாடுகளை மேய்த்து வந்தான்….)

நண்பர் குழாத்தின் செயல்கள்

குயில்களைப் போலக் கூவிக்,
கூட்டமாய் நண்பர், வண்ண
மயில்களைப் போல ஆடி,
மலர்களைப் பறித்துச் சூடி,
வெயிலினில் சுற்றிப் பின்னர்
விருப்புடன் நீரில் நீந்தித்
துயில்வரும் உச்சி வேளை
சோலையில் ஓய்வெ டுத்தார்.

கோவிந்தன் பெயரைக் கூறும் வண்டு

(பூவில் தேனுண்டு மயங்கிய வண்டு,கண்ணனையே நினைத்துக் கண்ணை மூடிக் கொண்டு அவன் பெயரைச் சொல்லி ஒலியெழுப்பும்)

நறைகெழு மலர்கள் தேடி
நாடியே ஊறும் தேனை
நிறையவே களிப்பில் உண்டு
நீண்டதோர் மயலில் ஆழ்ந்து,
சிறைவிரி சின்ன வண்டு
சிந்தையில் அவனைக் கொண்டு
முறையுடன் கோவிந் தன்பேர்
முரலுமே கண்ணை மூடி!

(நறை- தேன்) (மயல்- மயக்கம்) (சிறை- சிறகு) ( முரலும்- ஒலிக்கும்)

 இயற்கை பெற்ற பேறு

(கண்ணனின் தொடர்பால் இயற்கையே மகிழ்தல்)

தாமரைக் கால்கள் பட்டுத்
தரையுமே சிலிர்த்துப் போகும்.
பூமரம் தளிர்க்கை தொட்டுப்
புண்ணியப் பேற ளிக்கும்.
காமரக் கூட்டம் புட்கள்
கான்மலை பாயும் ஆறு
கோமகன் பார்வை தம்மேல்
குலவிட மகிழ்ந்த அம்மா!

சிறுவனா? தெய்வமா?

கோகுலச் சிறுவன் போன்று
கொண்ட, தன் தோற்றம் செய்கை
ஆகிய வற்றால் கண்ணன்
அவர்க்கெலாம் எளியன் ஆனான்.
மேகமார் நிறத்து மன்னன்
வேண்டிய போது மட்டும்
சாகசம் நிகழ்த்தித் தெய்வத்
தன்மையைக் காட்டல் உண்டு!

பனைமரக் காடும் கழுதை அரக்கனும்

(அருகில் இருந்த பனைமரக் காட்டில் கழுதை உருவம் கொண்ட தேனுகாசுரன் என்ற அரக்கன் தன் கூட்டத்தோடு வாழ்ந்து வந்தான். அங்கு யாரும் வந்தால் அவன் கொன்று விடுவான். அங்குச் சென்று, சுவையான பனம்பழங்கள் கிடைக்கச் செய்யுமாறு சிறுவர்கள் கண்ணனை வேண்டுகின்றனர்)

பனைமரக் காடொன் றிங்குப்
பக்கமாய் உண்டு கண்ணா!
அனைவரும் அங்குச் சென்றால்
அரியநல் பழங்கி டைக்கும்
கனைகுரல் கழுதை யான
காய்சின அரக்கன் உள்ளான்
இனமென அரக்கர் உள்ளார்
இவர்நமைத் தாக்கிக் கொல்வார்

பனம்பழம் கேட்ட சிறுவர்கள்

சுவைமிகு பழங்கள் வேண்டும்
தொல்லையே இன்றி வேண்டும்
அவைமிக வீணாய்க் கீழே
அழுகவே வீழ லாமா?
குவைகுவை யாக மண்ணில்
குலைந்துபோய்க் கிடக்க லாமா?
செவியறும் சொற்கள் கேட்டுத்
தேன்பழம் கிடைக்கச் செய்வாய்!

 இருவரும் சென்று தேனுகாசுரனைக் கொல்லுதல்

அண்ணனும் இளையோன் தானும்
ஆவலாய்ப் பனைக்கா டுற்றார்..
விண்ணுயர் மரங்கள் ஓங்கி
விளங்கிடும் தன்மை கண்டார்
திண்ணிய மூத்தோன் அங்குத்
திறல்மிகு களிறு போன்று
மண்ணகம் அதிரச் சென்று
மரங்களை அசைக்க லானான்.

கீழே பழங்கள் விழுந்தனவே
கிளர்தெ ழுந்த சிறுவர்கள்
சூழச் சென்று தேர்நதெடுத்துச்
சுவைத்தார் மகிழ்ந்தார் ஆர்ப்பரித்தார்.
பூழி பறக்கக் குதித்துவந்த
பொல்லா அரக்கன் தேனுகனும்
ஆழி அலையாய் வால்சுழற்றி
அண்ணன் மீது பாய்ந்தனனே

( பூழி- புழுதி)

பின்னங் காலால் பலராமன்
பெரிய மார்பில் உதைத்தனனே
முன்னோன் விரைவாய்க் காலிரண்டை
முதலில் பற்றித் தூக்கினனே
சின்னப் பொம்மைக் கழுதையெனத்
திகிரி போலச் சுழற்றியபின்
கொன்னே அலறப் பனைமோதிக்
கொன்றான் தலையும் சிதறியதே.

( திகிரி- சக்கரம்) ( கொன்னே- வீணே)

இனத்துக் கழுதை அரக்கர்கள்
எகிறிக் குதித்துக் காலுயர்த்திச்
சினத்தால் மோத வந்தவுடன்
சேர்ந்தான் கண்ணன் அண்ணனுடன்.
வனத்துக் கழுதை ஒவ்வொன்றாய்
மாய்த்தார் மரத்தில் தலையுடைத்தார்.
அனைத்தும் ஒழிய அவரிருவர்
அமைதி தவழும் நிலையமைத்தார்!

(தொடரும்)

 

 

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்

நூறு பூக்கள் மலரட்டும்: புத்தகம் படிக்கலாமா?

67. புத்தகம் படிக்கலாமா ?

அம்மா, அம்மா, நீயும் நானும் –
புத்தகம் படிக்கலாமா ?
படித்துப் புதிய விஷயங்களை –
தெரிந்து கொள்ளலாமா ?

பாட்டு, கவிதை என்று எல்லாம் –
படித்து ரசிக்கலாமா ?
குட்டி கதைகள் பெரிய கதைகள் –
அனைத்தும் படிக்கலாமா ?

பெரியோர்கள் வாழ்ந்த விதம் –
தெரிந்து கொள்ளலாமா ?
வேற்றுநாட்டு மனிதர் பற்றி –
அறிந்து கொள்ளலாமா ?

புத்தகங்கள் பொக்கிஷங்கள் – நாம்
புரிந்து கொள்ளலாமா ?
அள்ள அள்ள அறிவு வளரும் –இதை
அறிந்து கொள்ளலாமா ?

படித்துப் படித்து அறிவை நாமும் –
வளர்த்துக் கொள்ளலாமா ?
படித்து ரசித்து பிறருடன் நாம் –
பகிர்ந்து கொள்ளலாமா ?

வாழை இலை மகத்துவம் – chinnuadhithya

68. சாப்பிட நான் ரெடி !

அம்மா, சாப்பிட நான் ரெடி !
தட்டில் எல்லாம் வை ! வை ! வை !
ஒவ்வொன்றாய் நான் ருசித்திடுவேன் –
சப்புக்கொட்டி சாப்பிடுவேன் !

முதலில் பாயசம் சாப்பிடுவேன் !
முந்திரி திராட்சை பிடித்திடுமே !
பச்சடி என்றால் இரு வகையும் –
ரசித்து ருசித்து சாப்பிடுவேன் !

அவியல் கூட்டு கறி எல்லாம் –
அள்ளி அள்ளி சாப்பிடுவேன் !
அப்பளம் வடகம் சிப்ஸ் எல்லாம் –
கரக் முரக்கென்று சாப்பிடுவேன் !

பருப்பு, சாம்பார், ரசம் சாதம் –
கடைசியில் வருவது தயிர் சாதம் !
ஒவ்வொரு சுவையும் தனிச்சுவையே !
அனைத்திலும் அன்பு பளிச்சிடுமே !

எதைச் செய்தாலும் நீ செய்தால் –
ருசியாய் எனக்கு இருந்திடுமே !
அம்மா அன்பாய் கொடுப்பதனால் –
கைமணம் என்பது அதுதானே !

 

 

 

 

திரைக் கதம்பம் – சிறகு ரவி

 

 1. மைக்கேல்

Michael movie first single song releaseலேசான நாயகன் தழுவலுடன், நிறைய ரத்த வாடையுடன் வந்திருக்கும் படம்! சந்தீப் கிஷனுக்கு இது புதிய களறிகளை காட்டக்கூடும்! இதனால் அவர் காட்டேரி ஆகலாம். எண்ணற்ற நட்சத்திர முகங்கள். மணல் தாள் குரலில் பேசும் கவுதம் மேனன் பிரதம தாதா! கடைசி இருபது நிமிடங்களில் வந்து கலக்கி விடும் விஜய் சேதுபதி தாதாவுக்கு தாதா! இன்னும் வரலட்சுமி சரத்குமார், திவ்யான்ஷா என்று பாயச முந்திரிகள்! சாம் சிஎஸ் இசையில் வயலின் மெலடிகள், வயலன்ஸை தாண்டி ஈர்க்கின்றன! இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடிக்கு இது மூன்றாவது படம். அடுத்த படத்தில் இவரது கொடி மேலும் உயரும். அனாவசிய வசனங்களைத் தவிர்த்து மணிரத்தினம் பாதையில் பயணித்து அளவான மசாலா சேர்த்து திரைக்கதை அமைத்து, முருகதாஸ் பாணியில் செல்லும் இவருக்கு உச்ச நட்சத்திரங்கள் அழைப்பு விடலாம்.  கதை அரத பழசு! தாயையும் தன்னையும் தவிக்க விட்ட அப்பனை அவன் எத்தனை அப்பாடக்கராக இருந்தாலும் ஒற்றை ஆளாக போட்டுத் தள்ளும் மகனின் வன்முறை பாதை!

இறுக்கமான காட்சிகளும் அழுத்தி உட்கார வைக்கும் திரைக்கதையும் இந்த ஜஸ்ட் பாஸ் படத்தை ரசிக்க வைக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா!

சந்தீப் கிஷனின் திரை பட்டியலில் முக்கியமான படம்! பொருத்தமான நடிகர்களை ( கவுதம் மேனன், விஜய் சேதுபதி ) இணைத்திருப்பது வெற்றிக்கான சூத்திரம். – ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

காதல் பின்னணியில் ஒரு தாதா சண்டை! குரல் தான் உரத்து ஒலிக்காமல் கம்மி விட்டது! – தி ஹிந்து!

 1. வி ஹாவ் எ கோஸ்ட் ( ஆங்கிலம் / தமிழ் )

We Have a Ghost 2023 บ้านนี้ผีป่วน ดูหนังออนไลน์நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்த காமெடி கோஸ்ட் வலம் வருகிறது. யார் சொன்னார்கள், பேய் பயமுறுத்தும் என்று.. இது விலா நோக சிரிக்க வைக்கும் பாதி பட்டணத்தில் பூதம்.  ஜாவார் மாதிரியே தேவ் ஹார்பரையும் வழுக்கை பூதம் எர்னஸ்டாக காட்டுகிறார்கள். முதல் பாதி சிரிப்பு மேளா! பின்னால் கொஞ்சம் துப்பறிதல்; எர்னஸ்டை கொன்றவனைக் கொன்று பழி வாங்குதல் என்று ஜிகர் தண்டாவாக முடிகிறது படம். பழி வாங்கியபின் மகளைப் பார்த்து அமைதி அடையும் எர்னஸ்ட் பேய் முழுவதும் கனலாகி முடிந்து போகும் முடிச்சு! வீட்டை காலி செய்தாலும் அணைந்து அணைந்து எரியும் விளக்குகள் அடுத்த பாகத்திற்கு கட்டியம் கூறுகின்றன.

 

 

 

 1. அயோத்தி

அயோத்தி - விமர்சனம் {3.5/5} - Ayothi Cinema Movie Review : அயோத்தி - மதம் கடந்த மனிதம்… | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.வர வர தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் போல் ஆகி விடுவார் போலிருக்கிறது சுப்பிரமணியபுரம் சசிகுமார்! மாதத்தில் இரண்டு மூன்று படங்களாவது வெளிவந்து விடுகிறது.

அயோத்தியில் வசிக்கும் இந்திக் குடும்பம் ராமேஸ்வரம் நோக்கி பயணப்படுவதும், மதுரையிலிருந்து அவர்கள் போகும் டாக்ஸி விபத்துக்குள்ளாவதும் தொடரும் சம்பவங்களும் தான் கதை! இது தமிழ் படமா மலையாளப் படமா என்று வியக்கும் அளவிற்கு எந்த இடத்திலும் மிகைபடுத்தாமல் சினிமாவுக்காக சமரசம் செய்து கொள்லாமல் இயக்கியிருக்கிறார் மந்திரமூர்த்தி! பாராட்டுக்கள்!

யஷ்பால் ஷர்மா, அஞ்சு அஸ்ரானி,பிரீத்தி அஸ்ரானி, மற்றும் குட்டி அஸ்வத்- இந்த நால்வரும் கொட்டிய நடிப்பை அள்ள நம்மிடம் கொள்கலன் இல்லை! அஞ்சு அஸ்ரானியின் பாத்திரம் சிக்கலானது. அதை எல்லை மீறாமல் நடித்த வகையில் வாரே வாவ் சொல்ல வைக்கிறார்! நாடோடிகள் படத்திற்கு அப்புறம் அதே வண்ணத்தில் இன்னொரு கதாபாத்திரமாக சசிகுமார். அவரும் சோடையில்லை! இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம், என்.ஆர்.ரகுநந்தனின் இசை! படம் நெடுக உணர்வுகளைத் தூண்டி எழுப்பப்படும் காட்சிகளுக்கு அருமையான பின்னணி இசையைத் தந்து பாடல்களையும் நெருடா வண்ணம் அமைத்திருக்கிறார் நந்தன்! எல்லாம் நன்றாக இருந்தால் படம் பார்க்க யார் வருவாங்க? அதனாலயே தேவையில்லாமல் ஒரு குத்துப் பாட்டை காவல் நிலையத்தில் வைத்திருக்கிறார்கள். அழகான குழந்தைக்கு திருஷ்டிப் பொட்டு அவசியம் தான்!

நெஞ்சைத் தைக்கும் கதை! வீரியமான எழுத்து!முக்கியமாக மதத்தைத் தாண்டி மனிதநேயம் முக்கியம் என்பதை நிறுவும் படம்-டைம்ஸ் ஆஃப் இந்தியா.

மனிதத்தைச் சொல்வதில் கவனம் ஈர்க்கும் படைப்பு உன்னையும் என்னையும் ஒன்றிணைக்கும் வாழ்வில் அன்புதான் பாலமாகுமே” என படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிதான் ஒட்டுமொத்த படத்தின் ஒன்லைன் –தமிழ் இந்து!

தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் இப்படி ஒரு கதை இதுவரை வந்ததில்லை – தினமலர்!

 1. அரியவன்

அரியவன் | Dinamalarபுதுமுகங்கள் இஷானும் பிரானிலியும் நடித்திருக்கும் படம். இவர்கள் புதுமுகங்கள் தானா என்று சற்று யோசிக்க வைக்கும் நடிப்பு. பிரனாலி காதலிலும் கண்ணீர் விட்டுக் கசிவதிலும் அழுத்தமாக மனதில் பதிகிறார்! இஷானைப் பொறுத்தவரை சண்டைக் காட்சிகளாகட்டும் முன்பகுதியில் வரும் கபடி போட்டிக் காட்சிகளாகட்டும் ஒரு அனுபவமுள்ள நடிகராக சுமையை அசால்டாக தோளில் சுமக்கிறார்.டேனியல் பாலாஜி நம்பத்தகுந்த வில்லன். சும்மா மிரட்டி இருக்கிறார். அவருக்கும் சில உணர்வு காட்டக்கூடிய காட்சிகள். அதிலும் முதன்மை பெறுகிறார். பாடல்களைப் பொருத்தவரை வரிகள் புரிகிறது என்பதே இதன் பெருமை. தொண்ணூறுகளுக்கு இட்டுச் செல்லும் பாடல்கள். அனார்க்கலி எனும் பாடல் ஜேம்ஸ் வசந்தனுக்கு இன்னொரு ‘கண்களிருந்தால்’. எல்லாம் இருந்தாலும் அடுத்து என்ன வரப் போகிறது எனும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசிகனே காட்சிகளைப் பட்டிட்யலிடும் வகையில் தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் க்ளைமேக்ஸில் ஒலிக்கும் பாடல் நமக்கு கொஞ்சம் புல்லரிப்பை தருகிறது. ஆனால் காட்சிப்படுத்திய விதம் அதை கோட்டை விட்டு விடுகிறது.இவைதான் மட்டுமே படத்தின் குறை! இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ?

இன்றைய இளம் பெண்கள் காதல் என்று நினைத்து பெரும் அபாயத்தில் சிக்கிக் கொள்ளும் தேவையான செய்தியை  சுமந்து வரும் படம் இன்றைய நவீன உலக மகளிருக்கு சொல்ல வேண்டிய பாடம்!

பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர். அரியவன் மிகச் சிறியவன் என்பது தினமலரின் விமர்சனம். சமூக நலனுக்காக செய்யப்படும் பிரச்சாரம் என்பது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கணிப்பு! தேவையான தாக்கத்தை ஏற்படுத்த தவறிட்டது அரியவன் – இந்தியன் ஹெரால்ட்!

இப்படி ஏறு மாறாக விமர்சனங்கள் வருவதற்கு இயக்குனர் மித்ரன் பாதி படத்தில் விலகி விட்டது காரணமாக இருக்குமோ?

 1. டாக்டர் 56 ( கன்னடம் / தமிழ் )

DR 56 TAMIL TRAILER | Priyamani | PR | Rajesh AnanadaLeela | Nobin Paul|Rakesh C Thilak | Vishwa NM - YouTubeரொம்ப நாளாச்சு பருத்தி வீரன் காதலியைப் பார்த்து! பிரியா மணி நடித்த கன்னடப்படம் தமிழ் பேசுகிறது. பிரியா இன்னமும் அப்படியே இருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது. கதை லேசா திரில்லர்; கூடவே கொஞ்சம் மருத்துவம்! பாதை ஷங்கரின் ஐ படம் போல ஆரம்பிக்கிறது. பின் புலனாய்வு பாதையில் செல்வதால் வித்தியாசப்படுகிறது.

கூத்து கட்டும் அர்ஜுனை, காசு ஆசை காட்டி புதிய மருந்தை அவன் மேல் பரிசோதிக்கும் ஜார்ஜ் செபாஸ்டியனும் அவனது கூட்டாளி மருத்துவர்களும். பிரியா கிருஷ்ணன் சிபிஐ செல்வாக்கில் அவனை சுட்டு பிடித்தாலும் அர்ஜுனை காப்பாற்ற முடியவில்லை! அர்ஜுன் செய்யாத கொலைகளைச் செய்தது யாரு?

கொலைகாரன் விட்டுச் சென்ற தடயங்கள்; அதைக் கொண்டு அவனை நெருங்கும் மத்திய புலனாய்வுத் துறை;  இயக்குனர் ராஜேஷ் ஆனந்தலீலா திரைக்கதையில் சரியான திருப்பங்களைக் கொடுத்து சுவாரஸ்யத்தை தக்க வைத்திருக்கிறார். அமேசான்  பிரைமில் காணக் கிடைக்கிறது இந்தப் படம்!

புரட்டிப் போடும் மெடிக்கல் திரில்லர் – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

மனிதர்கள் முயல்களாக சோதனை செய்யப்படும் மருத்துவ கருப்புப் பக்கங்களை பயங்கர பக்க விளைவுகளோடு சொல்கிறது படம் –பேங்களூர் மிரர்.

குறுகுறுக்க வைக்கும் மருத்துவ திரில்லர் – சினிமா எக்ஸ்பிரஸ்.

பெரும்பகுதி கதை விசாரணையிலேயே கடந்து விடுவதை தவிர்த்து இருக்கலாம். மருத்துவ ஆராய்ச்சிக்கு மனிதர்களை பயன்படுத்துவதையும், அதனால் ஏற்படும் விபரீதங்களையும் விறுவிறுப்பான திரைக்கதையில் சமூக அக்கறையோடு காட்சிப்படுத்தி உள்ள இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலாவை பாராட்டலாம். ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன என்ற திகிலோடு நகர்வது சிறப்பு. நோபின் பால் பின்னணி இசை கதைக்கு உயிர் ஊட்டி உள்ளது. ஒளிப்பதிவாளர் ராகேஷ் திலக் காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்துள்ளார்.- தினத்தந்தி

 1. பஹீரா

பிற்போக்குத்தனமானது " பஹீரா"முரட்டுக் குத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தன் களங்கத்தைத் துடைத்துக் கொள்ள எடுத்த முயற்சி பார்வையாளர்களுக்கு பகீரைத் தந்தால்? உடலை எட்டுக் கோணலாக வளைக்கும் பிரபுதேவாவை எட்டும் கோணலான சைக்கோ கொலைகாரனாக காட்டினால் ரசிகர் பட்டாளம் ஏற்றுக் கொள்ளுமா? மிக மோசமாக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் என்பது டைம்ஸின் தீர்ப்பு! ஒரு சைக்கோ திரில்லர் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு இந்தப் படம் சரியான சாட்சி என்பது சவப்பெட்டியின் கடைசி ஆணி!

படம் நெடுக அலுப்பை விதைக்கிறது! பிரபு தேவாவால் கூட இதை தூக்கி நிறுத்த முடியவில்லை – தி ஹிந்து!

மாற்று யோசனை இல்லாமல் தவிர்த்து விடுங்கள்!- இந்தியா ஹெரால்ட்!

சரியாக எழுதப்படாத திரைக்கதையில் பிரபுதேவா மட்டும் மன நோயாளியாக பளிச்சிடுகிறார் – சினிமா எக்ஸ்பிரஸ்!

 1. இன் கார் ( இந்தி /கன்னடம் / தமிழ் )

இன் கார் பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை: ரித்திகா சிங் பேட்டி - Rithika Singh says she can't over come from the character of In Car movieஇறுதிச் சுற்றுக்குப் பிறகு ரித்திகா சிங் நடித்துள்ள புதுப் படம். புடம் போட்ட திரில்லர்! பேருந்துக்கு காத்திருந்த சாக்ஸியை காரில் கடத்தும் நபர்களும், அவர்களிடமிருந்து தப்பிக்க அவள் போராடுவதும் தான் கதை. பாலியல் சார்ந்த படங்களில் சதை முன்னுரிமை பெறும். இதில் கதைக்கு உரிமை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹர்ஷ் வர்தன். முன் பாதி அதிக நேரம் எடுத்து மித வேகம் காட்டினாலும், அதை ஈடுகட்ட ஃபார்முலா ஒன் போல வேகம் எடுக்கிறது பின் பாதி! ஞான் பிரகாஷ், சந்தீப் கோயல், சுனில் சோனி இவர்களோடு ரித்திகாவும் பவர்ஃபுல் நடிப்பைக் கொட்டியிருக்கிறாகள்! நிமிடத்திற்கு நிமிடம் பதைப்பை ஜீரணிக்க முடிந்தவர்களுக்கு இது சரியான திரில்லர் விருந்து – டைம்ஸ் ஆஃப் இந்தியா!

படம் பார்க்கும்போதே இருக்கையில் உங்களை நெளிய வைக்கும் திரைப்படம். சொல்ல வந்ததில் இருந்து விலகாமல் அதே சமயம் உங்கள் மனதை அசைத்துப் போடும் கலையை செய்து வெற்றி பெற்றிருக்கிறது படம் – இந்தியா டுடே!

 1. மெமரீஸ்

Memories (2023) - Movie | Reviews, Cast & Release Date - BookMyShowநான்கு கொலைகளைச் செய்ததாக அறியப்படும் கதை நாயகனுக்கு ஜஸ்ட் பதினேழு மணி நேரம் தான் உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடிக்க.. அவரால் முடிந்ததா என்பது தான் ஒன்லைன்!

வித்தியாசமான கதைக்களம் என்றாலும் பார்வையாளனை சீட்டு நுனியில் இருத்தி வைக்க இயக்குனர் சியாம் பர்வீன் அமைத்த திருப்பத் திரைக்கதை கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி சலிப்பை விதைப்பது உண்மை! மாற்றி மாற்றி நடிகர்களை ஒரே பாத்திரத்தில் காட்டி கொஞ்சம் புரிந்ததையும் காலி பண்ணி விடுகிறார் இயக்குனர்!

வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பாத நினைவுகளை கடத்துகிறது இந்தப் படம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா!

 

 

 1. கொன்றால் பாவம்

கோடையில் வெளியாகும் 'கொன்றால் பாவம்' | Virakesari.lkவிளிம்பு நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு இரவு தங்க வரும் இளைஞனின் பெட்டியில் இருக்கும் நகையும் பணமும் அவனைக் கொன்றால் தான் கிடைக்கும் எனும் இக்கட்டில் மாட்டி, அவனை போட்டுத் தள்ளும் முடிவுக்கு வரும்போது எதிர்பார்க்காத திருப்பமாக படம் முடிகிறது, நடிப்பைப் பொருத்தவரை சார்லியாகட்டும், வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ் உட்பட எல்லோரும் சோடையில்லாத பங்களிப்பு! ஆனாலும் இயக்குனர் தயாள் பத்மநாபன் துணைப் பாத்திரங்களை இன்னும் கவனமாக எழுதி இருக்கலாமோ என்று தோன்ற வைக்கும் படம்!

கட்டிப் போடும் கதை! அழுத்தமான நடிப்பு! தயாள் பத்மநாபனுக்கு பாராட்டுக்கள் – சினிமா எக்ஸ்பிரஸ்!

தொண்ணுறு விழுக்காடு மதிப்பெண் கொடுத்திருக்கிறது டைம்ஸ்!

 1. அகிலன்

Agilan Twitter Review Tamil Jayam Ravi Priya Bhavani Shankar Tanya Ravichandran How Is Agilan Movie Twitter Reactions | Agilan Twitter Review: பாசிட்டிவ் ரிவ்யூஸ் அள்ளும் ஜெயம் ரவியின் 'அகிலன் ...ஜெயம் ரவிக்கு இது ஒரு பேர் சொல்லும் படம்! கதை நாயகன் ஒரு கருப்பு ஆடு என்பதை இமேஜ் பார்க்காமல் ஒத்துக் கொண்டு அதில் தீவிர அக்கறை காட்டி நடித்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள். துறைமுகத்தில் நடக்கும் சட்டத்திற்கு விரோதமான செயல்கள் என்பதை மிக அழகாக வரிசைப் படுத்தி காட்டிய வகையில் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் பாராட்டுக்குரியவர். ஆனாலும், கதை ஒரே இடத்தில் மாற்றி மாற்றி நடப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது! பிரியா பவானி சங்கர் சராசரி தமிழ் பட கதை நாயகி! ஒரு மாற்றத்திற்கு அவருடைய கனவில் ஒரு அயல்நாடு போய் வந்திருக்கலாம்! லேசாக விழிகள் குளிர்ந்திருக்கும்! எல்லாத்தையும் செஞ்சுட்டு மக்களுக்காக செய்தேன் என்பது  இமேஜை தூக்கி நிறுத்துமா ரவி?

ஜெயம் ரவிக்கு இருக்கும் பிரச்சினை ஒன்று தான்! நல்ல கதையில் பிரச்சார தொனியை விதைப்பது. வழுக்கிக் கொண்டு போக வேண்டிய திரைக்கதை, மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து ரசிகனை இடுப்பொடிய வைக்கிறது! என்ன சொல்ல வேண்டும் என்பதில் தெளிவில்லாததும் பெரிய குறை! – ஹிந்துஸ்தான் டைம்ஸ்!

முதல் பாதியில் எதிர்பார்ப்பை விதைத்து விட்டு அதை சரியாக வளர்க்கத் தெரியாம்ல் கோட்டை விட்டு விட்டது அகிலன்!  ரசிக்கக் கூடிய வசனங்கள் இந்தப் படத்தின் ப்ளஸ்! அதற்காக மட்டும் கேட்கலாம்! பார்க்க தேவையில்லை!– டைம்ஸ் ஆஃப் இந்தியா!

ஜெயம் ரவியால் கூட காப்பாற்ற முடியவில்லை இந்த குழப்படியான தெளிவில்லாத படத்தை –தி ஹிந்து!

மக்கள் தீர்ப்பு என்ன? மொத்தமாக ஒதுக்கி விட்டார்கள்! சில அரங்குகளில் ஒரு பார்வையாளன் கூட இல்லை என்பதால் காட்சியை ரத்து செய்து விட்டார்கள்!  நல்ல படமான அயோத்தியை பார்க்க வந்து, அந்தப் படம் நீக்கப்பட்டதால் இந்தப் படத்தில் மாட்டிக் கொண்டேன் என்கிறது ஒரு ரசிகக் குடும்பம்! ஜெயம் ரவிக்கு திருஷ்டி கழிக்க வேண்டிய காலம் வந்தாச்சு!

11.இரும்பன்
Irumban Director Keera Salary Issue May Postpone Movie Release | இயக்குநரின் சம்பள பாக்கியை தீர்க்கமால் இரும்பன் வெளியாகாது | Movies News in Tamilவித்தியாச கதைக்கு வித்தியாச பாத்திரப் பெயர்கள் வேண்டும் என்று  இயக்குனர் கீராவுக்கு யாரோ சொல்லி விட்டார்கள் போலிருக்கிறது! கதை நாயகன் பெயர் ஆபீஸ்! அவனது நண்பனின் பெயர் ஆஸ்பத்திரி! நல்ல வேளை கதை நாயகியின் பெயர் மஹிமா! அதனால பொழச்சோம்! நரிக்குறவர் இனத்து இளைஞன் துறவியாகும் பெண்ணைக் காதலிப்பதும் கடைசியில் இணைவதுமாக மிகச் சுமார் கதை! கதை நாயகனாக நடிக்கும் ஜூனியர் எம் ஜி ஆருக்கு நல்ல பாவங்கள்! நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் ஒரு ரவுண்டு வரலாம்! வர்த்தகத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கும் யோகிபாபு இனி கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டிய கட்டாயம்! ஊடகங்களில் இந்தப் படத்தைப் பற்றி யாரும் மூச்சு கூட விடவில்லை என்பது இதன் தரத்திற்கான உரைகல்!

12.டி 3

டி 3 | Dinamalarபாதி கிணறு தாண்டிய படம்! டீசன்ட் புலனாய்வு திரில்லர் என்பது பத்திரிக்கையின் தீர்ப்பு! கதை வழக்கமானது தான்! விக்ரம் எனும் குற்றால காவல் அதிகாரியின் கவனத்திற்கு வரும் கோர விபத்துகள்! அவைகளில் தொடர் ஒற்றுமைகள் இருப்பது அவரை அசைக்க உள் இறங்கிப் பார்க்கும்போது புலப்படும் மருத்துவ குற்றங்கள்!

தொலைக்காட்சி தொடர்களில் அந்தக் காலத்தில் விரும்பப்படும் நாயகனாக வலம் வந்த பிரஜின் சற்று மலையாளக் கரையோரம் ஒதுங்கிய பின் நடித்த தமிழ் படம். சில காலம் கிடப்பில் போடப்பட்டு இப்போது வெளிவந்து கவனத்தை ஈர்க்கிறது!

திசை திருப்பப்படும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும், அதிலிருக்கும் காயப்பட்ட பயணிகள் காணாமல் போவதும் முதல் பாதி! மருத்துவ குற்றத்திற்காக கடத்தப்படும் பயணிகள் எனும் சுவாரஸ்யமான முடிச்சை வைத்துக் கொண்டு அதை பின் பாதியில் பரபரப்புடன் சொல்லத் தவறி விட்டார் இயக்குனர் பாலாஜி! – டைம்ஸ் ஆஃப் இந்தியா

எதையும் எதிர்பார்க்காமல் போனால் ஏமாறாமல் வரலாம் – இன்டியா போஸ்ட்ஸ்!

       13.ஷூட் தி குருவி

Shoot the Kuruvi Tamil Movie Review | ஷூட் தி குருவி தமிழ் திரைப்பட விமர்சனம் | Shiva Sha Ra | Arjai | Shoot the Kuruvi Movie Review | Shoot the Kuruvi Review | Shootசூது கவ்வும் பாணியில் ஒரு படம் என்று பரிந்துரை செய்திருக்கிறார் ஃபில்மி கிராஃப்ட் அருண்! குருவி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தாதா, நான் கில்லர் என்று பிரகடனம் செய்யும் காட்சியில் நமக்கும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது! அதோடு ஆங்காங்கு  டார்க் காமெடி காட்சிகளும் வசனங்களும் இது திரில்லர் தானா என்றொரு ஐயத்தை விதைத்து விடுகிறது. போகிற போக்கில் சொல்லப்படும் வசனங்கள் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. சாம்பிளுக்கு ஒன்று: நடுத்தர வர்க்கத்துல இருக்கறவன் இருப்பத்தி ஏழு வயசுலயே செத்துடறான்! ஆனா எழுபத்தி இரண்டு வயசில தான் அடக்கம் பண்றாங்க! இது போக சுஷாந்தின் ஒளிப்பதிவும், கமலக்கண்ணனின் எடிட்டிங், மூன்ராக்ஸின் இசையும் கூட இந்த படத்திற்கு பலம்! நடிப்பைப் பொருத்தவரை அதிகம் அறிமுகமில்லாத ஷாரா பின்னி பெடலெடுக்கிறார். இன்னும் உயரங்கள் தொட வாய்ப்புண்டு! காது கொடுத்து கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளை நீக்கியிருந்தால் இதுவும் ஒரு சூது கவ்வும் ஆகியிருக்கும்!

      14..கண்ணை நம்பாதே

உதயநிதியின் "கண்ணை நம்பாதே" படத்தை பார்க்க செங்கலுடன் சென்ற கூல் சுரேஷ்.., வைரலாகும் வீடியோ!!!முக்கிய பாராட்டு இயக்குனர் மு.மாறனுக்கு போய்ச் சேர வேண்டியது அவசியம். நாலு வருடம் தயாரிப்பில் இருந்த படம் இது! ஆனாலும் இன்று  எடுக்கப்பட்டும் கிரைம் திரில்லர் படங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை இந்தப் படம்! சித்து குமாரின் பின்னணி இசை வெகு நேர்த்தி! படத்தின் கதாநாயகன் எடிட்டரான சாம் லேகேஷ் தான்! ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவும் கச்சிதம். உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா,பூமிகா ஸ்ரீகாந்த் போன்ற கலைஞர்கள் தங்கள் பங்கை அருமையாக தந்திருக்கிறார்கள்! முதல் பதினைந்து நிமிடங்களைப் பொறுத்துக் கொண்டால் இது நல்ல படம்!

15..குடிமகான்

சாந்தினி தமிழரசன்தலைப்பைப் பார்த்தால் டாஸ்மாக் போலத் தெரிகிறது அல்லவா! ஆனால் இது ஒரு வித்தியாசக் கதைக்களம்! தானியங்கி பணப் பட்டுவாடா செய்யும் வங்கிகளின் எந்திரங்களுக்கு பணம் நிரப்பும் வேலையச் செய்யும் மதி ( விஜய் சிவன் ) செரிமானம் ஆகாத குப்பை உணவுகளைச் சாப்பிட்டால் போதை ஏறும் நிலைக்குத் தள்ளப்படும் விசித்திரமான நோய்க்கு ஆளாகிறான்! ஒரு கட்டத்தில் நூறு ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டிய பெட்டியில் ஐநூறு நோட்டுகளை வைத்து விடும் மதிக்கு நேரும் சிக்கல்களே இந்தப் படம்! குளிர் தென்றல் போன்ற நகைச்சுவை காட்சிகள்; இதுவரை தமிழ் படங்களில் பார்க்காத அரிதான நிகழ்வுகள் எனக் கலந்து கட்டி அடிக்கிறது இந்த புதுமுக பட்டாளம்! அதிகம் காணாத சாந்தினி தமிழரசன், மதியின் மனைவியாக சரியான தேர்வு! தொழில் நுட்பத்திலும் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சோடை போகவில்லை! இரண்டாம் பாதியில் தேவையில்லாத ஒரு பாட்டை நீக்கியிருக்கலாம். தமிழ் சினிமாவில் குறிஞ்சியாக வந்திருக்கும் இது போன்ற படங்களை நல்ல திரை ஆர்வலர்கள் கொண்டாடுவார்கள்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா!

எழுத்து, நடிப்பு, இசை கைக்கோர்த்து நல்ல திரைப்படத்தைத் தந்திருக்கிறது – சவுத் ஃபர்ஸ்ட் டாட் காம்!

முதல் பாதி குடும்ப பின்னணி! மறுபாதி நகைச்சுவை சரவெடி. இயக்குனர் பிரகாஷ் கையிலிருக்கும் கதைக்கேற்ப சரியான விகிதத்தில் படத்தை தந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மையேந்திரனின் பங்கு பாராட்டுக்குரியது! – சென்னை விஷன்

 1. என் 4

என் 4 | Dinamalarஏழ்மையை சாதகமாக்கிக் கொண்டு செல்வ சீமான்கள், காசிமேட்டில் வாழும் இளைஞர்களை தப்பான வழிக்கு கொண்டு செல்வதும், அந்த இனிய வாழ்வுக்கு பங்கம் வரும்போது ஒட்டு மொத்த மீனவ சமுதாயமே அவர்கள் பக்கம் நிற்பதும் நெகிழ்வான தருணம்! இயக்குனர் லோகேஷ் குமாரின் வித்தியாசக் கதையும் மாந்தர்களும் களமும் தமிழ் சினிமாவுக்கு புதிய பாதையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கின்றன. போதை விடயங்களை பிரச்சாரமாக அல்லாமல் போகிற போக்கில் மனதில் தைப்பது போல சொல்லி இருப்பதும் பாராட்டத்தக்கது! முக்கிய பாத்திரங்களான சூர்யா, கார்த்தி வேடங்களில் நடித்திருக்கும் மைக்கேல் தங்கதுரை, அஃப்சல் ஹமீத், பாத்திரத்தில் பொருந்திப் போவது படத்திற்கான வெற்றி! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

சரியாக எழுதப்பட்ட அருமையான படம் – இந்தியா ஹெரால்ட்.

 1. புட்டா பொம்மா ( தெலுங்கு தமிழ் )

AlaVaikunthapurramuloo Movie Song | #ButtaBomma Lyrical || Allu Arjun, Trivikram | Thaman S |#AA19 - YouTubeமலையாளத்தில் பெரிதும் பேசப்பட்ட படம் கப்பேலா! அதை தமிழ் தெலுங்குக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சௌரி சந்திரசேகர். மூலத்தை சிதைக்காமல் கிட்டத்தட்ட அதே காட்சியமைப்பை ஒற்றி எடுத்ததால் இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமாகி விடுகிறது. பிரதான பாத்திரம் ஒரு கிராமத்துப் பெண்! வசீகரப் பேச்சால் அவளை மயக்கிவிடும் ஆட்டோ ஓட்டுனர் முரளி, நேரில் சந்திக்க இடமும் நேரமும் குறிக்க அதில் இருக்கும் ஆபத்தை உணராமல் வீட்டிலிருந்து கிளம்பி வரும் சத்யா சந்திக்கும் சோதனைகள் தான் முடிச்சு! இதன் வெற்றிக்கு காரணமே வித்தியாச திரைக்கதையும் உரையாடல்களும் தான்! தமிழ் தெலுங்கில் வில்லனைப் போன்ற வடிவமைப்பில் வரும் கதையின் நாயகன் ஆர் கே ஆக அர்ஜுன் தாஸ் அதகளப்படுத்துகிறார். சத்யாவாக அனிகா ராஜேந்திரன் வெகு இயல்பு! நிச்சயம் பார்க்க வேண்டிய படம்!

 1. பத்து தல

Pathu Thala in cinema preview | பத்து தலசில குறைகளை மீறி சிம்புவும் கவுதம் கார்த்திக்கும் இந்தப் படத்தை பார்க்கும்படி செய்து விட்டார்கள். இசைப்புயலின் பின்னணி இசை கடைசி கட்ட சண்டைக் காட்சியை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. மாவட்ட ஆட்சியராக பிரியா பவானி சங்கர் தன் பங்கை அப்பழுக்கில்லாமல் செய்திருக்கிறார். இதன் மூலமான மஃப்டி படத்தைப் பார்க்காதவர்களுக்கு இது பிடிக்கக் கூடும்! – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.

காவலர் கேங்ஸ்டர் பார்முலாவை விட்டு விலகாது பயணிக்கும் படம்! – இந்தியா டுடே!

ஊகிக்க முடியும் திருப்பங்கள் என்றாலும் சுவாரஸ்யத்தை தக்க வைக்கிறது ஒபேலி கிருஷ்ணாவின் திரைக்கதை – ஹிந்துஸ்தான் டைம்ஸ்!

பலரும் துவைத்து காயப்போட்ட கதையை சிலம்பரசன் மட்டுமே காப்பாற்றுகிறார்! – இந்தியன் எக்ஸ்பிரஸ்!

 1. விடுதலை

Viduthalai Movie Reviewநெல்லை பழரசமாக விமர்சனங்கள் வருகின்றன. ஆனாலும் ஒட்டு மொத்த ரசிகரும் பாராட்டுவது சூரியின் நடிப்பை! இதுவரை நகைச்சுவையை மட்டும் தந்தவரால் ஒரு கதை நாயகனின் பளுவை சுமக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்து கடைசி காட்சியில் அதகளமான நடிப்பைத் தந்திருக்கும் விஜய் சேதுபதி இப்போதே இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்க வைக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவு ஜாலங்கள் காட்டாத யதார்த்தம். ராமரின் எடிட்டிங் சாணை பிடித்த கூர் கத்திரி! இதையெல்லாம் தாண்டி இரண்டே வாத்தியங்களை வைத்து பரவசத்தை விதைக்கும் இசை ஞானி இன்னொரு நாயகன். வழக்கமான மசாலா பட ரசிகர்களுக்கு இல்லை இந்தப் படம். அப்படிப்பட்ட ரசிகனுக்கு இது ஒரு ஆவணப் படம் போலத் தோன்றலாம். ஆனால் வெற்றிமாறன் படங்களை கொண்டாடுபவர்களுக்கு இது ஒரு மாப்பிள்ளை விருந்து!

மென் இதயக்காரர்களுக்கு ஏற்றதல்ல இந்தப் படம்! நெஞ்சில் அறையும் காட்சிகளும், காவல் துறையின் வன்முறையும் அடி வயிற்றில் பதைப்பை விதைக்கிறது! – ஹிந்துஸ்த்தான் டைம்ஸ்!

வெற்றிமாறன் எனும் பெயரே பல எதிர்பார்ப்புகளை எழ வைக்கிறது. அதை பூரணமாக நிறைவேற்றி வெகு லகுவாக கடக்கிறது படம்! தொய்வில்லாத திரைக்கதை ரசிகனை நகர விடாமல் இருக்கையில் கட்டிப் போடுகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

மலைவாழ் பெண்ணாகவும் சூரியை காதலிப்பவளாகவும் வரும் பவானிஸ்ரீ இன்னொரு நல்ல கலைஞர் என்று இந்த படம் உறுதி கூறுகிறது. கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் என சில பாத்திரங்கள் படம் முடிந்தபின்னும் மனதை அகலாமல் நிற்பது வெற்றியின் மேஜிக். –ஃபில்மி கிராஃப்ட் அருண்!

தனித்து நிற்கிறார்  சூரி என்கிறது இண்டியா டுடே! பொன்னாக தகதககிறார் சூரி – தி ஹிந்து! வெற்றிமாறன், இளையராஜா, சூரி, விஜய் சேதுபதி இவர்களைப் பற்றி சொல்லாமல் இந்தப் படத்தின் விமர்சனத்தை எழுதவே முடியாது. படத்தின் ஆரம்பத்தில் வரும் ரயில் குண்டு வெடிப்பு காட்சியின் நீளம், மற்றும் இடைவேளைக்கு பின் வேகம் குறைவதும் இப்படத்தின் குறைகள்!- தினமலர்.

சங்க இலக்கியம் – ஓர் எளிய அறிமுகம் – பாச்சுடர் வளவ. துரையன்

ஐங்குறுநூறு - மூலமும் உரையும்: 2020

எட்டுத்தொகை நூல்களுள் ஐங்குறுநூறு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலை, என்னும் பெயர்களில் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை  ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

அவை, ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகின்றன. இந்நூல் குறைந்த அடியெல்லை கொண்ட பாக்களால் அமைந்தமையால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.

இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.அந்தப் பாடல் சிவபெருமானின் விரிவாக்கத் தன்மையை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த 100 பாடல்களையும் ஒவ்வொரு புலவர் இயற்றியுள்ளார். அவ்வகையில் இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் வெண்பாவைக் கீழே காண்போம்.

மருதம்ஓ ரம்போகி நெய்தல்அம் மூவன்

கருதும் குறிஞ்சிக் கபிலர்–கருதிய
பாலைஓத லாந்தை பனிமுல்லைப் பேயனே

நூலைஓது ஐங்குறு நூறு.

மருதத் திணைப் பாடல்களை  ஓரம்போகியார்,

நெய்தல் திணைப் பாடல்களை  அம்மூவனார்,

குறிஞ்சித் திணைப் பாடல்களக் கபிலர்,

பாலைத் திணைப் பாடல்களை  ஓதலாந்தையார்

முல்லைத் திணைப் பாடல்களைப்  பேயனார்   ஆகியோர் பாடி உள்ளனர்.

இந்நூலைத் தொகுத்தவர் “புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்” என்னும் புலவர்.

தொகுப்பித்தவன் “யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை” என்ற வேந்தன் ஆவார். ஐங்குறுநூற்றில்  உள்ள ஐந்நூறு பாடல்களில், 129, 130 ஆஅகிய இரண்டு பாடல்கள் மறைந்து போனதால் 498 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். இதில் திணைப்பாடல்கள் அமைவுமுறையை, “மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே” என்ற அடிகள் தெளிவுபடுத்துகின்றன. இந்நூலில் நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ ஒவ்வொரு பத்துப் பாடல்களும் சிறப்பான தலைப்புப் பெயர்கள் பெற்றுள்ளன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருள் அமைப்பாலும் பெயர் பெற்றன.

மேலும் தொண்டிப்பத்து (பாடல் 171-180) என்ற தலைப்பின் கீழ் அமைந்த பத்துப் பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. இதனைப் பாடியவர் நெய்தல் திணையைப் பாடிய அம்மூவனார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாய்ப்பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. ஐந்திணைக் கருப்பொருட்களான விலங்குகளையும் பறவைகளையும் அடிப்படையாகக் கொண்டு எருமைப்பத்து, கேழற்பத்து (கேழல்-பன்றி), குரக்குப்பத்து, கிள்ளைப்பத்து (கிள்ளை-கிளி), மஞ்ஞைப்பத்து (மஞ்ஞை-மயில்), போன்ற பெயர்களும் பாடல்களின் தொகுப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.

ஐங்குறுநூற்றின் பாடல்கள் கடைச்சங்க காலம் முதலாகச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நூலை டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர்த் தமிழறிஞர் பலரும் இந்நூலுக்கு உரைகள் எழுதி வெளியிட்டுள்ளனர்.

தலைவன் தலைவியைப் பிரிந்து புறத்தொழுக்கத்தில் நெடுநாள் ஈடுபட்டான். பின்னர் “இது தகாது” என உணர்கிறான். தலைவியோடு கூடி வாழ வருகிறான். அப்பொழுது அவன், “நான் உங்களைப் பிரிந்திருந்த காலத்தில் நீங்கள் என்ன கருதினீர்கள்” என்று கேட்கிறான். அதற்கு விடையாகத் தோழி கூறுவதாகப் பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன, எல்லாப் பாடல்களுமே அப்பொழுது ஆண்டு கொண்டிருந்த அவினி என்னும் பெயருடைய சேர மன்னனையும் அவன் குடியாகிய ஆதன் என்பதையும் வாழ்த்தி, “வாழி ஆதன் வாழி அவினி” என்றே தொடங்குகின்றன. எந்த ஒரு செயலும் மன்னனை முதன்மைப்படுத்தி அவனை வாழ்த்திய பிறகே மக்கள் தொடங்கினர் என்று இதன்வழி உணரலாம்.

      தோழி, ”வாழி ஆதன் வாழி அவினி

               பசிஇல் ஆகுக! பிணிசேண் நீங்குக”

               என்வேட் டோளே யாயே யாமே” என விடை கூறுகிறாள்.

 

“நாங்கள் மன்னன் வாழ்க என்றும், நாட்டில் பசி இல்லாமல் போகட்டும், நோய் அகன்று போகட்டும் என நினைத்திருந்தோம்” என்பது இதன் பொருளாகும். மன்னன் சிறப்புடன் வாழ்ந்து சிறப்பாக ஆட்சி செய்யும் நாட்டில் பசியும், நோயும் இருக்காது. அப்படிப்பட்ட நாட்டை விரும்பினோம் என்கிறாள். உறு பசியும் ஓவாப்பிணியும் இல்லாததுதான் நாடு என்பார் வள்ளுவர்.

மற்றொரு பாடலில், தோழி,

      “வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக” என்கிறாள்.

அதாவது நம்அரசனுக்குப் பகை இல்லாமல் போகட்டும், அரசன் பல்லாண்டு வாழட்டும் என்று நினைத்திருந்தோம். ஒரு நாட்டுக்குப் பகைவர் இருந்தால் எப்பொழுதும் போர் நடந்துகொண்டே இருக்கும். மக்கள் அமைதியாய் வாழமுடியாது என்று இது கூறுகிறது. மேலும் தங்கள் மன்னன் பல்லாண்டு சிறப்புடன் வாழவேண்டும் என்றும் விரும்புவதாக அவள் கூறுகிறாள்.

இப்படி ”நாட்டில் தீமை இல்லாமல் போகட்டும்; பால் வளம் பெருகட்டும்; நெல் மிகுதியாக விளையட்டும்; பொன் மிகுதியாகக் கிடைக்கட்டும் என்றெல்லாம் நாங்கள் நினைத்திருந்தோம் என்று தோழி இப்பாடல்களில் கூறுகிறாள். தலைவனைப் பிரிந்து வருத்தத்தில் இருந்த போதும் மன்னனைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் நினைத்த மக்களின் வாழ்வை எண்ணி நாம் பெருமைப்படத் தோன்றுகிறது.  

நெய்தல் பற்றிய பாடல்கள் பத்துப் பத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ’ஞாழப்பத்து’ என்பதில் அக்கால மக்களின் திருமண நிகழ்வுகள் சிலவற்றை அறிய முடிகிறது.   ஞாழல் என்பது கொன்றைமர வகைகளில் ஒன்றாகும். இது கடற்கரைப்பகுதியில் அதிகமாகக் காணப்படும். ஒவ்வொரு பாடலும் ஞாழல் தொடர்பைக் கொண்டிருப்பதால் இப்பகுதி ஞாழல் பத்து எனப்பெயர் பெற்றது.

      அவனும் அவளும் சந்திக்கின்றனர். ஒருவர் மனத்தில் மற்றவர் நுழைந்து காதல் கொண்டு களவு நடைபெறுகிறது. அவள் அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள். அவனோ சிறிது காலம் கடத்துகிறான். அவள் வேதனைப் படுகிறாள். பின்னர் ஒருநாள் அவன் திருமண எண்ணத்துடன் வருகிறன். அதை அறிந்த அவள் மகிழ்ச்சியுடன் தன் தோழியிடம் சொல்லும் பாடல் இதுவாகும்.

             ”எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழினர்            

             நறிய கமழும் துறைவற்கு

             இனிய மன்ற-எம் ,மாமைக்கவினே.”             [ஐங்குறு நூறு—146]

[எக்கர்=மணல்மேடு; மாமை=மாந்தளிர்நிறம்]

“நீரால் உண்டாக்கப்பட்ட மணல் மேட்டில் ஞாழல் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள், நறுமணம் வீசுகின்ற துறையைச் சார்ந்தவனுக்கு என் மாந்தளிரைப் போன்ற அழகு இனிமையானதே பார்த்தாயா?” என்பது பாடலின் பொருளாகும்.

      ஞாழல் அரும்பு முதிர்ந்து மலராக மணம் வீசுவது போல அவன் கொண்ட அன்பு முதிர்ந்து இப்போது மணமாகவும் உறுதியாகி அனைவர்க்கும் செய்தி பரப்புகிறது  என்பது மறைபொருளாகும்.            

      அவன் அவளைப் பெண் கேட்கச் சான்றோர் பலரைத் துணையாகக் கொண்டு அவளின் பெற்றோரை அணுகுகிறான். அவள் தாய் தந்தையர் மகிழ்ச்சி அடைகின்றனர். வந்தவரை வரவேற்றுத் தம் மகளை மணக்க வேண்டுமாயின் சிலவற்றை  மணப்பொருளாகத் தரவேண்டும் என்கின்றனர். இது மணமகளை மணப்பதற்காகத் தருகின்ற வரைபொருளாகும். இதை முலைவிலை என்றும் கூறுவர். அவன் அவர்கள் கேட்டவற்றைத் தந்து மேலும் தருகிறான். இதனைக் கண்ட தோழி உள் வீட்டில் இருக்கும் அவளிடம் போய்ச் சொல்லும் பாடல் இதுவாகும்.

             ”எக்கர் ஞாழல் மலரின் மகளிர்

             ஒண்தழை அயரும் துறைவன்

             தண்தழை விலையென நல்கினன் நாடே”      [ஐங்குறுநூறு—147]

[அயர்தல்=விளையாடி மகிழ்தல்; தழைவிலை=மணப்பெண்ணுக்குத் தருகின்ற வரைபொருள்; முலைவிலை என்றும் சொல்வதுண்டு]

”மகளிர் மணல்குன்றில் விளையாடச் செல்கின்றனர் அங்கே ஞாழல் மலர்களைக் காணாததால் அதன் தழைகளை ஆடையாக அணிந்து விளையாடும் துறையைச் சேர்ந்தவனான நம் தலைவன் உனக்குரிய குளிர்ச்சியான தழையாடையின் விலையாக தனக்குரிமையான ஒரு நாட்டையே அளித்தானடி”  என்பது பாடலின் பொருளாகும்.

      அவன் பெரும் செல்வக்குடியைச் சார்ந்தவன் என்பதும் அவளிடம் மிகுந்த காதல் கொண்டவன் என்பதும் இப்பாடல் மறைமுகமாக உணர்த்துகிறது.

      அவனுக்கும் அவளுக்கும் திருமணம் இனிதே நடந்தேறுகிறது. தோழி தன் தலைவியைத் தலைவனுடன் இன்புற்று மகிழுமாறு பள்ளியிடத்தே கொண்டு விடுகிறாள். அப்போது அத்தோழி தலைவியை வாழ்த்திச் சொல்லும் பாடல் இதுவாகும்.

             ”எக்கர் ஞாழல் இகழ்ந்துபடு பெருஞ்சினை

             வீயினிது கமழும் துறைவனை

நீ இனிது முயங்குமதி காத லோயே”             [ஐங்குறுநூறு—148]

[வீ=பூ; இகந்து படல்=வரம்பு கடந்து உயரமாக விளங்கல்; பெருஞ்சினை=பெரிய கிளை; முயங்கல்=தழுவி இன்புறல்]

“அன்புடையவளே! மணல் குன்றிலே எல்லை கடந்து உயர்ந்து வளர்ந்த பெரும் கிளைகளிலே பூத்துள்ள ஞாழல் பூக்கள் நாற்புறமும் மணம் வீசும் துறையைச் சார்ந்த நம் தலைவனை இனி நீ இனிதாகத் தழுவி இன்புறுவாயாக” என்பது பாடலின் பொருளாகும்.”

      ஞாழல் பூக்களின் மணம் எல்லா இடங்களிலும் கமழ்தல் போல உன் மண வாழ்வும் இனிதாக யாவரும் போற்ற அமையட்டும் என்பது மறைபொருளாம்.

 அடுத்துத் தோழி தலைவனையும் வாழ்த்துகிறாள். அந்தப் பாடல் இதுவாகும்.

”எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்கு வளர் இளமுலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்தகறல் வல்லா தீ மோ” [ஐங்குறுநூறு—149]

[சுணங்கு=அழகுத்தேமல்; அணங்கு வளர்த்தல்=வருத்தம் வளரச்செய்தல்; வல்லாதீயோ=வன்மையுறாதிருப்பீராக]

“ஞாழல் பூவின் இள மஞ்சள் நிறம் போல அழகுத் தேமல் படர்ந்துள்ள இளமையான முலைகளைக் கொண்டுள்ள இவளுக்கு வருத்தத்தை வளரச் செய்து, பிரியும் செயலை ஒருபோதும் மேற்கொள்ளாது இருப்பீராக” என்பது பாடலின் பொருளாகும்.

இவ்வாறு மணம் பேச வருதல், மணமகன் மணமகளுக்கு வரைபொருள் அளித்தல், தோழி மணமகளையும் மணமகனையும் வாழ்த்தல் போன்ற செய்திகளை ஐங்குறு நூற்றில் காணமுடிகிறது.

சங்ககாலத்தில் பண்டம் மாற்று முறையில்தான் வணிகம் நடைபெற்று வந்தது. தங்களிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக வேறொரு பொருளை அக்கால மக்கள் வாங்கி வந்தனர். இதுவே பண்டமாற்று முறையாகும்.  பாண்மகன் ஒருவன் வலைவீசி வரால் மீன்களைப் பிடிக்கிறான். அம்மீன்களை விற்று வரத் தன் இளையமகளிடம் கொடுத்து அனுப்புகிறான். அப்பெண் அம்மீன்களை ஓலைப்பெட்டியில் எடுத்துக் கொண்டு விற்கச் செல்கிறாள்.

தலைவி ஒருத்தி அந்த வரால் மீன்களை வாங்கிக்கொண்டு அதற்கு ஈடாக ஓலைப்பெட்டி நிறைய வெண்ணெல்லைக் கொடுத்து அனுப்புகிறாள். நெல்லானது “யாண்டுகழி வெண்ணெல்” என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. அதாவது அந்நெல் ஓராண்டுக்கு முன் அறுவடையானதாகும் பழைய நெல்லைக் குத்தி அரிசியாக்கி உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் மீன்களுக்குப் பதிலாக நெல்லைக் கொடுக்கும் அளவுக்கு அந்த ஊர் வளமாக இருந்ததாக அறியப்படுகிறது. தவிர வலைவீசி மீன்பிடிப்போர்க்கு மீன்கள் அதிகம் உணவாகக் கிடைக்கும் ஆனால் நெல்லரிசி கிடைக்காது. அது போலவே உள்ளுரில் வசிப்போர்க்கு மீன்கள் கிடைப்பது அரிது. எனவேதான் அவர்கள் இருவரும் தங்களிடம் இருப்பதைக் கொடுத்து வேண்டியதைப் பெறுகிறார்கள்.

இஃது ஐங்குறுநூறு காட்டும் காட்சியாகும். தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையர்பால் தங்கினான். அவர்கள் செய்த பற்குறி, நகக்குறி அவன் உடலில் தங்கி உள்ளன. இப்பொழுது அவன் மீண்டும் அவன் தலைவியிடம் வருகிறான். அப்பொழுது அக்குறிகளுடன் நீ இங்கு வரவேண்டாம் எனத் தலைவி உரைக்கிறாள். அவனை மறுத்தாலும் அவன் ஊரானது வெண்ணெல்லுக்கு மாற்றாக வரால் மீன்களைப் பெறும் வளமானது என்று அவன் ஊரைப் புகழ்ந்துதான் மொழிகிறாள். அவள் அடிமன ஆழம் தலைவனிடம் இருப்பது புரிகிறது. புலவிப்பத்து பகுதியின் எட்டாம் பாடல் இதுவாகும்.

“வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!
வேண்டேம் பெருமநின் பரத்தை
ஆண்டுச்செய் குறியோடு ஈண்டுநீ வரலே.

இவ்வாறு தொட்ட இடமெல்லாம் ஐங்குறுநூறு இலக்கிய இன்பத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் விளக்கும் கருவூலமாகத் திகழ்கிறது எனலாம்.

நடுப்பக்கம் – சந்திரமோகன்

                        எல்லாம் முருகன் செயல்

பழநி கோயில் திருப்பணிக்கு ஆன்லைனில் நன்கொடை செலுத்தும் வசதி: பக்தர்கள் கோரிக்கை | Dinakaran

ராகவன், சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸை பிடிக்க திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டார். வண்டி வந்து தன் சீட்டில் அமரும் வரை சற்று பதட்டத்துடன் காணப்பட்டார்.

நல்ல வேலை அவரது இருக்கை ஜன்னல் ஓரம் இருந்தது. A C யும் மிதமான சுகத்தை கொடுத்தது. அவரது உடல் சற்று சோர்ந்து இருந்தாலும் முகத்தில் நிம்மதியும் சந்தோசமும் தெரிந்தது. ரயில் வண்டி வேகமாக முன்னே செல்ல மனமோ அதை விட வேகமாக பின்னே செல்லத்துவங்கியது.

எவ்வளவு சந்தோசமான நாட்கள். அப்பா, அம்மா மூன்று சகோதரர்கள். சற்று வசதியான குடும்பம். சிறு வயதில் அம்மா அப்பாவின் அன்பையும் குறைவற்ற வசதியையும் தவிர வேறு எதையும் நால்வரும் பார்க்க வில்லை.  தோல் பதனிடும் தொழிற் சாலை. தாத்தா ஆரம்பித்தது. அப்பா கடுமையாக உழைத்து பெரிதாக்கினார். அப்பா தோல் வியாபாரத்தில் கொடி கட்டி பறந்தார்.

மூன்று சகோதரர்களும் அப்பாவுக்கு உதவியாக ஆளுக்கு ஒரு வேலையாக பிரித்துக் கொண்டார்கள். ராகவனுக்கோ அண்ணா பல்கலையில் ME முடித்திருந்தாலும் வியாபாரத்தில் அதிக நாட்டம். படிப்பை முடித்து நான்கு ஆண்டுகள் நல்ல வேலை செய்து கை நிறைய சம்பாதித்தது மட்டுமல்லாது பை நிறைய சேர்க்கவும் செய்தார்

தொழில்வாய்ப்புகள் சென்னையில் அதிகம். ஒரு நல்ல நாளில் அப்பாவே வந்து ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துக் கொடுத்தார். அப்பா எவ்வளவு வற்புறுத்தியும் முதலீடு அவரிடம் வாங்க மறுத்து விட்டார். அனைவரின் திருமணத்தை மட்டுமல்ல பேரக்குழந்தைகளையும் பார்த்த மகிழ்ச்சியில் அப்பா கண் மூடினார்.

ராகவன் மனைவியோ மனதாலும் மிக அழகானவர். இரண்டு பெண் குழந்தைகள் படிப்பில் ராகவனை விட திறமை அதிகம். மனதழகில் அம்மாவிற்கு சமமாக வளர்ந்தார்கள்.

வியாபாரத்தில் மூழ்கிய ராகவனுக்கு பல வருடங்கள் ஓடியதும் தெரியவில்லை, திண்டுக்கல்லில் என்ன நடக்கிறது என்றும் தெறியவில்லை. அப்பாவின் மரணத்திற்கு பின் ஊர் போய்வருவது கூட குறைந்தது. பெரிய முருகன் பக்தர். மாதம் ஒருமுறை பழனி செல்லும் பொழுது வீட்டில் தலையை காட்டி வருவார்.

சக்கரம் மேலேயே சென்று கொண்டிருந்தால் இறங்குவது எப்பொழுது. கடவுளை மறந்து விடுவோமே. சனி பகவானுக்கும் வேலை வேண்டுமே.

அப்படி ஒரு சூழ்நிலை நம் ராகவனுக்கும் வந்தது. இத்தாலிக்கு அனுப்பிய நான்கு கோடி மதிப்புள்ள பொருளுக்கு பணம்வரவில்லை. இத்தாலியன் பொருளை எடுத்து விற்று விட்டு தரத்தின் மேல் பழி போட்டு பணம் அனுப்ப மறுத்தான். தூதரக உதவியுடன் இத்தாலியில் வழக்கு நடக்கிறது. என்னவாகும் என தெரியாது. பேரிடி. வழக்கு எப்பொழுது முடியும் எனவும் தெரியாது. இடையே கடன் கொடுத்தவர்க்கும், வங்கிக்கும் பதில் சொல்ல முடியாமல் துவண்டார். அப்பொழுது தான் திண்டுக்கல் ஞாபகம் வந்தது. தன் பங்காக குறைந்தது ஐந்தாறு கோடியாவது வரும் என மனகணக்கிட்டிருந்தார்.

அங்கு சென்றவுடன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். சகோதரர்கள் தங்களுக்குள் சொத்தை பங்கிட்டு கொண்டு ரூபாய் ஒரு கோடியளவே இவருக்கு ஒதுக்கியிருந்தார்கள்.

சென்னை திரும்பியவர் மனதளவில் துடித்துக்கொண்டிருந்தார். கணவன், மனைவி இருவரும் சகோதரர்களுடன் சண்டை போடவோ கோர்ட்டுக்கு செல்லவோ கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

பின் அவர்கள் எடுத்த முடிவு யாரையும் வியக்க வைக்கும்.

அதன்படி இரு தினங்களுக்கு முன் திண்டுக்கல் வந்தார். சகோதரர்களுக்கு விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்தார். யாரும் எதிர்பாராவண்ணம் தனக்கு ஒதுக்கியிருந்த சொத்தை பழனி முருகனுக்கு தானமாக எழுதி பதிந்து விட்டு தான் அடைந்த சஞ்சலம் நீங்கி நிம்மதியுடன் சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார் பை நிறைய முருகன் பிரசாதங்களுடன்.

வீட்டில் நுழைந்தவுடன் மனைவி, மகள்களை பார்த்தவுடன் இருந்த சிறிதளவு களைப்பும் நீங்கி முருகன் முன்னே பத்து நிமிடம் அமர்ந்து கண்ட தரிசனத்தை விவரித்ததை கேட்டால் நமக்கே புல்லரிக்கும்.

அச்சமயம் அலை பேசி மணி ஒலிக்கிறது. ரோமிலிருந்து வழக்கறிஞர் ‘ sir, we have won. Court awarded our claim in total and also an additional penalty of INR two crore. INR 6 crore will be transferred in to your account tomorrow “

இப்பொழுது சொல்லுங்கள் இப்பரிசு அவர்கள் நல்ல மனதிற்கு கிடைத்ததா அல்லது எல்லாம் வல்ல முருகனின் செயலா?

 

ஆழ் கடலின் அதிசயங்கள் – ந பானுமதி

பாரதியாரின் வசன கவிதைகள் (Tamil Edition) eBook : பாரதியார், மாகவி சுப்பிரமணிய, அன்பு, கி.: Amazon.in: Kindle Store“கடலே காற்றை புரப்புகின்றது. விரைந்து சுழலும் பூமிப் பந்தில் பள்ளங்களில் தேங்கியிருக்கும் கடல் நீர், அந்தச் சுழற்சியிலே தலை கீழாகக் கவிழ்ந்து திசை வெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?
பராசக்தியின் ஆணை

அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்து விடாதபடி ஆதரிக்கின்றாள்.
அவள் திரு நாமம் வாழ்க.
கடல் பெரிய ஏரி, விசாலமான குளம், பெருங்கிணறு
அது பற்றியே கடலும் கவிழவில்லை.
பராசக்தியின் ஆணை.

அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள்.
அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது.
மலை நமது தலை மேலே புரளவில்லை.
கடல் நமது தலை மேலே கவிழவில்லை.
ஊர்கள் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது.
இஃதெல்லாம் அவளுடைய திருவருள்.
அவள் திருவருளை வாழ்த்துகின்றோம்.

நடுக்கடல் தனிக்கப்பல்

வானமே சினந்து வருவது போன்ற புயற்காற்று
அலைகள் சாடி வீசுகின்றன; நிர்த்துளிப்படுகின்றன.
அவை மோதி வெடிக்கின்றன; சூறையாடுகின்றன.
கப்பல் நர்த்தனம் செய்கிறது.”

பள்ளியிலிருந்து திரும்பிய சரவணனுக்கு அம்மா பாரதியாரின் வசன கவிதைகளை வாய்விட்டு உணர்ச்சிகரமாகப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவும், கேட்கவும் ஆசையாக இருந்தது.
‘வா, சரூ, நம்ம குவிகம் ஒலிச் சித்திரத்திற்காக பாரதியின் கடலைப் பற்றிய வசன கவிதையை பதிவு செஞ்சுண்டிருக்கேன்’ என்றார் அம்மா.

‘அம்மா, நான் கூட இன்னிக்கி கடலையும், கடல் ஆய்வுகள்ல முக்கியமான ஒன்னப் பத்தியும் தான் ஸ்கூல் லைப்ரரில படிச்சேன். அதப் பத்தி ஃப்ரெண்ட்ஸோட டிஸ்கஷனும் நடந்தது.’
“அப்படி என்ன செய்திடா அது?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் அப்பா

‘முதல்ல, அப்பாவும் புள்ளையும் கை கால் அலம்பிண்டு வாழப்பூ வடையும், டீயும் சாப்பிடுங்கோ, மீதியெல்லாம் அப்புறம்தான்.’ என்றார் அம்மா.

‘என் செல்ல அம்மா’ என்று அம்மாவைக் கட்டிக் கொண்டுவிட்டு தன் அறைக்கு ஓடினான் சரூ.
அவன் ட்ரஸ் மாற்றிக் கொண்டு வருவதற்குள், அப்பா அழகாக வேஷ்டி கட்டிக் கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு இவனுக்காகக் காத்திருந்தார்.

‘சரியான செங்கோட்ட பேசஞ்சர்டா நீ’ என்றார்.

அப்போது சஞ்சயும், பவானியும், அவர்களின் அம்மாவும் வந்தார்கள். பவானியின் அம்மா ஏலம், சுக்கு போட்ட பானகம் கொண்டு வந்திருந்தார்.

தேனீர் வேண்டாம் என்று அதை விட்டுவிட்டு அனைவரும் பானகத்தையும், வாழைப்பூ வடையையும் ஒரு கை பார்த்தனர் என்றால், நம் சரவணன் இரு கை பார்த்தான்.

“இந்த மாதமே, அதாவது, பங்குனியே தனிச் சிறப்புள்ள மாதம். ஸ்ரீ ராம நவமி, பங்குனி உத்திரம், முருகன் தெய்வானை கல்யாணம், வள்ளி, ஐயப்பன் பிறப்பு, நாராயணன்-லக்ஷ்மி கல்யாணக் கோலம், பார்வதி- பரமேஸ்வரன் தம்பதிகளான திரு நாள், எல்லாம் பங்குனி உத்திரத்தில் தான்.” என்றார் பவானியின் அம்மா.

‘அம்மா, நம்ம தமிழ் மாச வரிசப்படி இது 12வது மாதம். சூரியன் முழுச் சுற்றை முடிக்கிற மாசம்’ என்றாள் பவானி.

தன் பங்கிற்காக, அப்பா தன் கட்டைக் குரலில் ‘பங்குனி மாதத்தில் ஓரிரவு, பால் போல் காய்ந்தது வெண்ணிலவு’ என்று பாட சரூவிற்கு பானகம் புரைக்கேறி விட்டது.

‘கொழந்தைய இப்படியா பயமுறுத்தறது?’ அப்படின்னு சரூவின் அம்மா குரலில் சஞ்சய் சொல்ல மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

“ஆமாண்டா, வெள்ளி நிலவை நெனைக்கறச்சே, நீலக் கடலான ராமனையும் சேத்து நெனச்சுக்கணும்.” என்றார் அப்பா.

எல்லோரும் விழிக்க, அது வெளுப்பு, இது கறுப்பு என்றவர், ‘சரூ, என்னவோ படிச்சேன்னியே’ன்னு எடுத்துக் கொடுத்தார்.

‘ரொம்ப இன்ட்ரஸ்டான செய்திப்பா. தானாகவே கடலுக்குள்ள போய், அந்த விவரங்கள சேகரிக்க ஒரு ட்ரோன் வந்திருக்கு.’

‘என்னது?” என்றாள் பவானியின் அம்மா வியப்புடன்.

‘ஆமாம்மா, கடலுக்குள்ள போறது சாகசம் மட்டுமில்ல, பல எதிர்பார்க்காத ஆபத்துக்களும் உண்டு. அதன் பேரலைகள், அதன் ஆழம், அதன் மர்மம் எல்லாமே மனிதன பயமுறுத்தியும் இருக்கு, வசீகரிச்சும் இருக்கு.’

Closing Ocean Exploration Gaps in Remote Waters

‘சைல் ட்ரோன்னு (Sail Drone) ஒரு கம்பெனி. அது அலாஸ்கா கடல் பகுதியில 3200 அடி உயரமான மலையை முதல்ல கண்டுபிடிச்சது.’

‘கடலுக்குள் மலை’ என்றாள் பவானி.

ஆமாம், குடைக்குள் மழை மாதிரி.

ஓ அந்த சினிமாவா? பார்த்திபன் எப்போதுமே மாறுதலா திங் பண்றவர்.

அந்தக் கம்பெனி ‘சர்வேயர்’ ன்னு பேர் வச்ச ட்ரோனைத்தான் அனுப்பி முன்னாடி மலையக் கண்டுபிடிச்சது.

இப்ப, வாயேஜர் என்ற ட்ரோன அனுப்பறது. அது, கடலுக்குள்ள மட்டுமில்ல, கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதிகளையும், மணல் வெளிகளையும் காட்டப் போறது. காத்துல சருக்கற உறை மிதவை (wind surf rig) மாதிரி அமைப்பு. 33 அடி உயரம். 900 அடி ஆழம் வரைக்கும் கடலுக்குள்ள பாத்து படம்பிடிக்க காமெராக்கள், சோனார் கருவிகள் எல்லாம் இந்த ட்ரோன்ல் இருக்கு.

சோனார் கருவின்னா?

கடல்ல தண்ணி இருக்கா, அதுக்குள்ள இருக்கற பொருட்கள், உயிர்கள் போன்ற பல விஷயங்கள் எழுப்பற ஒலியப் பதிவு செய்யற முற இது. வௌவால் எப்படி தலைகீழாகப் பறந்து ஒலி அலைகளால தன் பாதைல போறதோ, அந்த மாதிரி ஒலி அளவுகளைக் கணக்கிட்றது கடல் வளத்தத் தெரிஞ்சுக்க உதவும்.

ப்ரமாதம்டா. காணாத ஆழத்துக்குப் போறதும், அதுல ஆளே இல்லாம தானா இயங்கறதும்..
அது மட்டுமில்ல. சட்டத்துக்குப் பொறம்பா என்ன நடந்தாலும் இதோட கண்ணேல்ந்து தப்ப முடியாது.

பல நாடுகள் ராத்திரியோட ராத்திரியா இரசாயனக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் எல்லாத்தையும் அவாளோட கடல் எல்லையத் தாண்டி, வளர்ந்து வரும் நாடுகளின் கடல் எல்லையில கொட்றா, அதை இது கண்டுபிடிச்சுடும். கடல் மாசுபட்றதும், கடத்தல்களும், வரம்பு மீறி மீன்களைப் பிடிக்கறதையும் இது கண்காணிச்சு புகைப்படச் செய்தியாகத் தரும்.
இது தரக்கூடிய அத்தனையும், வானியல் நிபுணருக்கு, கடல் ஆய்வாளர்களுக்கு பெரிய தகவல் திரட்டாக இருக்கும். அது மட்டுமல்ல எத்தனையோ கடற்பாசி தொழில் நிறுவனம் இருக்கு அவைகளெல்லாம் இந்தத் தகவல் திரட்டால நல்ல முன்னேற்றம் காணும்.
முக்கியமா ஒண்ணு சொல்லணும்; மனுஷனே இல்லாம இது வேல செய்யுது. துருவக் கடல் பகுதி போல, இன்னமும் பயங்கர வசீகரமாக இருக்கற கடல் பகுதியிலெல்லாம் இதை அனுப்பி

சைன்டிஸ்ட்கள் தங்கள் ஆய்வை நல்ல பாதுகாப்போட செய்யலாம்.

உண்மதான்டா, விஞ்ஞானத்த நல்ல வழில பயன் படுத்தினா அத்தன உயிர் இனத்துக்கும் நல்லதும் நடக்கும், உலகமும் செழிக்கும்.

அம்மா, இன்னொரு வட கொடேன் எல்லோருக்கும்.

ஏன்டா, கடோத்கஜா, எதைப் படிச்சாலும், சாப்பாட்டுக்குத் திரும்பிட்ற பாத்தியா?

பவானி நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

விரிகுடா – சிரீஷ் ஸ்ரீநிவாசன்

Inside the Myths and Mysteries of Bermuda Triangle Disappearances

அந்தக் கடற்கரையில் அனைவரும் உள்ளே நீந்தப் போனால் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த சிக்கலை கண்டுபிடிக்க கடற்கரை காவல் துறை அதிகாரியாக அவனை நியிமித்திருக்கிறார்கள்.

அன்று அவன் பணியில் முதல் நாள். அவன் உந்து வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான். கடற்கரையை நோக்கி வந்தான். அவனுக்குப் பணி நியமித்திருந்த இடத்தை அடைந்தான்.

கடலில் மூழ்கி தொலைந்து போகிறவர்களை கண்டுபிடிக்க நியமிக்கப்பட்டுள்ளதால் ஸ்கூபா டைவிங் சூட்டினை அதிகாரிகள் அவனுக்கு அளித்திருந்தனர். அவன் பார்க்கப் போவது கடற்கரை காவலர் பணி. அவன், தன் பணியிடத்தில், கடற்கரை பாதுகாப்பு அலுவலகத்தில் சென்று அமர்ந்தான். அங்கேயிருந்து கடற்கரையை நோட்டமிட்டான். பறவைகள் பறந்து கொண்டிருக்க, காற்று மிதமாக வீசிக்கொண்டிருக்க கடற்கரை அமைதியாக இருந்தது.

கடல் நீர் என்னவோ மிக சுத்தமாக சிறிய அலைகள் நிரம்பிக் காணப்பட்டது. உள்ளே பவளப்பாறைகள் தெளிவாகக் கண்ணுக்குப் புலப்பட்டது. இந்தக் காட்சி விரிகுடாவை அலங்காரப்படுத்திக் காட்டியது. மணலோ வெள்ளை நிறம்! இந்த அற்புதமான காட்சியைக் கண்டு அவன் இன்பத்தால் பரவசமுற்றான். கடல் நீர் சுத்தமாக இருக்கக் காரணம் உள்ளே ஆழத்தில் இருக்கும் பவளப் பாறைகள் தான்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு மனிதன் அங்கு டைவிங் ஆடை அணிந்து கொண்டு கடலுக்குள்ளே ஸ்கூபா டைவிங் செய்யக் கடலுக்குள் சென்றான். இந்தக் கடலில் இருக்கும் அபாயத்தை அவனுக்கு அறிவித்து எச்சரிக்கை செய்ய அவன் தன் பணியிடத்தை விட்டு வெளியே வந்தான்.

ஆனால், அந்த மனிதன் அதற்குள் கடலுக்குள் சென்று விட்டான். அவன் அந்த மனிதனையே கண்காணித்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன் தண்ணீரில் துள்ளிப் பாய்ந்து சிறிது தூரம் நீந்திச் சென்றான். பிறகு தண்ணீருக்கு அடியில் டைவ் செய்து சென்றான். அப்போது அந்தக் கடற்கரை காவல்துறை பணியாளனுக்கு மனது ‘திக்’ என்றானது. சில நொடிகள் பொறுத்துப் பார்த்தான். ஆனால் அந்த மனிதன் மேலே வரவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அவ்விடம் மட்டும், கொந்தளித்து கொப்பளித்தது.

அச்சம் மேலிட அவன் கடலுக்குள் சென்ற அந்த மனிதனைக் காப்பாற்ற நினைத்து தானும் ஸ்கூபா டைவிங் சூட்டை அணிந்து கடலுக்குள் சென்றான். சிறிது தூரம் நீந்தி கடலுக்குள் ஆழமாக மூழ்கி சென்றான். அங்கே எவ்வளவு அழகிய காட்சிகள்! அழகழகான மீன்கள் மற்றும் பவளப்பாறைகள் காணப்பட்டன. சில நொடிகள் கழித்து சீல மீன்கள் காணப்பட்டன. இவை ஒரு வகையில் ஆபத்தானவை. ஏனென்றால், சீல மீன்கள் ஒரு பெரிய உருவங்கொண்ட ஒன்றைக் கண்டால் அதனை வேட்டையாடும் பிராணி என்று கருதி அவனை கும்பலாகத் தாக்கும். அவ்வாறே அவனைத் தாக்கின. அதனை கட்டுப்படுத்த முடியாமல் தண்ணிரின் மேற்பரப்பிற்கு வந்தான்.

அங்கு விசித்திரமான காட்சிகளைக் கண்டான். தொலைவில் ஒரு தீவு அதில் ஒரு கலங்கரை விளக்கம் இருந்தன. பார்ப்பதற்கு ஒரு திகிலூட்டும் காட்சியாக இருந்தது. ஏனென்றால் அங்கு மனித நடமாட்டம் இல்லை. அத்தீவில் அவன் தேடிய மனிதன் இருந்தான். கரைக்கு நீந்தி வந்ததும் அவன் ஓட ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து கடற்கரை பாதுகாப்பு காவல் பணியாளனும் ஓட ஆரம்பித்தான். கரைக்கு வந்ததும் ஒரே மர்மமாக இருந்தது. தன்னைப் பின் தொடர்ந்து யாரோ வருவது போல இருந்தது. ஆனாலும் முன்னே சென்ற அந்த மனிதனை நோக்கிச் சென்றான். அவன் கொஞ்சநேரம் நின்று பிறகு கலங்கரை விளக்கத்தை நோக்கி சென்றான். கதவைத் திறந்து உள்ளே சென்றான். அவனைத் தொடர்ந்து செல்லும் நோக்கத்தோடு இவனும் சென்றான். அப்போதும் அவனுக்கு தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவதைப் போல் இருந்தது. அச்சம் உண்டாயிற்று. பிறகு கலங்கரை விளக்கம் நோக்கி ஓடினான், உள்ளே சென்றான்.

முன்னால் ஓடும் மனிதனைக் கண்டு அச்சப்படுவேனா அல்லது பின்னால் தொடர்ந்து வரும் நபரைக் கண்டு அச்சப்படுவேனோ என்று மனதில் குழப்பம் மிகுந்தது. முன்னே அந்த மனிதன் செல்லும் நடமாட்டமும், பின்னே கலங்கரை விளக்கம் வாசற்கதவு திறக்கும் ஓசையும் கேட்டது. அச்சம் அதிகமாக உண்டாயிற்று.

முன்னே செல்பவர் எப்படி என்று தெரியாமல், பின்னே வருபவர் யார் என்று புரியாமல் ஒரு கேள்விக்குறியுடன் முன்னே சென்றான். நெற்றியில் வியர்வைத்துளிகள்! ஆனால் அவன் கையில் இருந்த துப்பாக்கி அவனுக்குத் துணிவைக் கொடுக்க அதனை பிடித்துக் கொண்டு முன்னேறினான்.

கலங்கரை விளக்கத்தின் உச்சிக்குச் சென்றான். அந்த மனிதன் அங்கே நின்று கொண்டிருந்தான். திரும்பிப் பார்க்கவில்லை. இவன் திகைத்துப் போனான். அவனைப் பின் தொடர்ந்து வந்தவன் அவன் அருகில் நெருங்கி விட்டான். அவன் வேறு வழியின்றி துப்பாக்கியை எடுத்துப் பின்னால் திரும்பி அவனை சுட்டான். தோட்டா அவன் மண்டையை பிளந்து சென்றது. அதே நொடி அவன் முன்னால் இருந்த மனிதன் அந்த காவல்துறை பணியாளர் மேல் துப்பாக்கியால் சுட்டான். எல்லாம் ஒரே நேரத்தில் நடந்தது. காவல்துறை பணியாளர் மாய்ந்தார்.

அடுத்த காட்சி காவல்துறை அலுவலகத்தில் அந்த விரிகுடாவில் நிகழும் மர்மம் குறித்து விசாரணை. அங்கு பணிக்குச் செல்கிறவர்கள் மாயமாக மறைவது ஒரு தீர்வில்லாத வழக்காகிறது. அவர்களால் தீர்வு கண்டு பிடிக்க முடியாமல் போனதால் உயர் அதிகார்கள் பெருங்குழப்பத்திற்கு ஆளாகியிருந்தனர். அப்போது அந்த சூழலை அறிந்த ஒரு விஞ்jஞானி அங்கே வரவழைக்கப்பட்டிருந்தார். அந்த இடம், கால அளவு, அஃதாவது ஒரு டைம் டைமென்ஷன், அமைந்த இடம், பர்முடா முக்கோணம் போன்று மர்மம் நிலவும் இடமாகக் கருதப்படுவதாக அவர் தெரிவித்தார். அங்குள்ள அதிகாரிகள் அதை விளக்குமாறு கேட்டனர். அவ் விஞ்jஞானி சொன்னார்.” நம் பூமியில் எங்கு விலைமதிப்பற்ற செல்வம் இருக்குமோ, அதனை எளிதில் யாரும் அடைய முடியாத நிலையில் சில மர்மங்களை இயற்கையே உருவாக்கி அதைப் பாதுகாக்கும் வேலையை செய்கிறது. இந்த விலை உயர்ந்த பவளப்பாறையை மனிதனிடமிருந்து காப்பாற்ற இயற்கை செய்யும் சூழ்ச்சி என்றும் சொல்லலாம். அந்த மனிதன் கடலுக்குள் செல்வதும் , பிறகு மீன்களால் தாக்கப்படுவதும், கலங்கரை விளக்கம் உச்சிக்குச் சென்று மாய்வதும் எல்லாமே காலம் செய்யும் சூழ்ச்சி. இதனை ‘கண்ணாடி வளைய முரண்பாடு’ என்பர். நாம் முடிவெட்டும் கடையில் இருபுறமும் முன்னேயும் பின்னேயும் கண்ணாடி இருக்கும் அல்லவா? நம் பிம்பம் பலவகையாகத் தெரியும். அது போன்று தான் காலத்தில் நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் இறந்தகாலம் எல்லாமே ஒரே நேர்கோட்டில் தோற்றமளிக்கிறது. அந்த மனிதன் தன் எதிர்காலத்தை நோக்கி தான் செல்கிறான். ஒருத்தன் கடலில் மூழ்கிப் போகிறான் அல்லவா? அதைக் கண்டு இவன் செல்கிறான் இது நிகழ்காலம். அவனைப் பின் தொடர்ந்து வருபவன் இவனுடைய இறந்தகாலம். இது ஒரே மனிதனின் ஒரே சமயத்தில் ஏற்படும் முக்காலத் தோற்றம். அனைத்து நபர்களும் இவனே. இது எல்லாமே ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும்போது இவன் மாய்ந்து போகிறான். இது எல்லாமே ‘கண்ணாடி வளைய முரண்பாடு’ சித்தாந்தந்தான். இதைக் கேட்டு அனைவரும் திகைத்துப் போய் நிற்கும்போது, “நான் பணிக்குச் செல்கிறேன்” என்று என்று கூறி இவர்கள் முன் வந்து நின்று சல்யூட் அடித்துச் சென்றான் அந்த கடற்கரை பாதுகாப்பு பணிக்குச் சேர்ந்த அதே மனிதன். இவ்வாறு முடிவில்லாமல் இந்த முரண்பாடு தொடர்கிறது.

எழுதியவர்:

அதிசய உலகம்-8 காட்டுக்குள் ஒரு சுயம்வரம் -அறிவுஜீவி

When the time comes to entice a mate, the male bee releases this alluring perfume to boost its chances of success

“புராணங்களில், சுயம்வரம் என்பது எவ்வளவு சுவாரசியமான சமாச்சாரம்? இல்லையா மாமி?” என்று தொடங்கினாள் அல்லிராணி.

அங்கயர்க்கண்ணி மாமி, ”ஆமாம்.. தமயந்தி, சீதா, திரௌபதி என்று பலப்பல சுயம்வரங்கள்.. ஆமா..எதுக்கு கேக்குறே.. நீ பையன் பார்க்கத் தொடங்கிவிட்டாயா” என்றாள்.

அல்லி “சீ! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை! நான் இன்று சொல்வது என்னவென்றால்.. தேனீக்கள், இன்னாளிலும் அப்படிதான் சேர்கிறதாம்.. சயன்ஸ் ஆராய்ச்சி சொல்கிறது”

“மேலே சொல்” என்றாள் மாமி.

அல்லி சொன்னாள்:

“ஆண் தேனீக்கள் பலவிதமான மலர்களின் மார்பில் படுத்து, பெண் தேனியின் வரவுக்காகக் காத்திருக்குமாம். பறந்து வரும் பெண் தேனி, இந்த மணமகன்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து காதல் உறவு கொள்ளுமாம்”

“வாவ்! ஹவ் ரொமாண்டிக்” – என்றாள் மாமி.

“மாமி.. கதையை முழுதும் கேளுங்கள். பெண் தேனீக்கள் எதை வைத்து தன் நாயகனைத் தேர்ந்தெடுக்கிறதாம் தெரியுமா?”என்றாள் அல்லி.

“நீயே சொல்” என்றாள் மாமி.

“யார் சிறந்த ‘மண’ மகன் என்று பார்க்குமாம். அதாவது சிறந்த ‘மணம் கமழும்’ மாப்பிள்ளை யார் என்று பார்க்குமாம். அதனால், இந்த உறவுக்காக அந்த ஆம்பிளை தேனீக்கள் ரொம்ப ‘ஹோம் வொர்க்’ பண்ணும். பல இடம் அலைந்து, பூக்கள், பழங்கள் ,ரெஸின் என்று பலவற்றில் கிடைக்கும் வாசனைப்பொருட்களை சேகரித்து எடுத்து, அவற்றைக் கலந்து ஒரு சிறப்பான வாசனைத் திரவத்தை (பெர்பியூம்) தயாரிக்கும். அதைத் தன் பின்னங்காலிலுள்ள சிறு பையில் சேமித்து வைத்திருக்கும். மலர்மார்பில் படுத்துக்கொண்டு, பெண் தேனீ வரும் அரவம் கேட்டு, தனது சிறகால் அந்த வாசனைத் திரவியத்தை ஸ்பிரே பண்ணுமாம். பெண்தேனி அந்த வாசனையின் மயங்கினால், அது அவனைத் தன் காதலனாகத் தேர்ந்தெடுக்குமாம்” என்ற அல்லி.,” இது தான் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ என்பதோ?” என்று முடித்தாள்.

மாமி சொன்னாள், “எனக்கு இந்த பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.
‘நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன். என் மகாராணி உனக்காக ஓடோடி வந்தேன்’” என்றாள்.

‘எல்லாத்துக்கும் ஒரு கவுண்டர் சினிமாப் பாட்டில் வச்சிரிக்கிங்க”-என்று வியந்தாள் அல்லி.

இது ஒரு அதிசய உலகம்!
https://www.earth.com/news/male-bees-create-perfume-from-flowers-to-attract-females/

 

“யார் செய்த புண்ணியமோ” – மாரியப்பன் G

ஆம்புலன்ஸ் கதவை உடைத்து.. ரத்தத்துடன் வெளியே பாய்ந்த அமெரிக்க இளைஞர்.. சென்னையில் 'பரபர' சம்பவம் | US man jumps out of ambulance in chennai in fear of organ theft - Tamil ...

கதவு தட்டப்படும் சத்தம்! தொடர்ந்து தட்டப்பட, நான் அதிர்ச்சியில் கண்ணாடியைத்

தேடி அணிந்து கொண்டு கதவைத் திறந்தேன்.

வாசலில் போலீஸ் வேன்!

போலீஸ்காரர்கள் தான் தட்டியுள்ளார்கள்!

தள்ளாடியபடி நிலையை பிடித்து நின்றேன்.
“நீங்கதான் நமச்சிவாயமா?”
“ஆமா சார்.
” சங்கரன் உங்கள் பையனா? “
ஆமா சார்!”
“சரி ரெடியாகி வண்டியிலேயே ஏறுங்க, போகும் போது சொல்றேன்!”
“சார் என்ன ஆச்சு சார்? தயவு செஞ்சு சொல்லுங்க. நீங்க சொல்ற வரைக்கும் என்னால தாங்க முடியாது.” 

“உங்க பையனுக்கு ஆக்சிடென்ட், கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில அட்மிட் செய்திருக்கோம்.

பைக்ல போகும்போது நிதானம் தப்பி மரத்தில் மோதி இருக்கான்.

“வாங்க, பேச நேரம் இல்லை, நேர்ல பாருங்க.”

” மனசு பதறுது சார்.”

“ஐயா, அவன் பர்ஸ்ல இருந்த அட்ரஸ் வெச்சுத்தான் உங்களைப் பார்க்க வந்தோம்.”

கதவை பூட்டிவிட்டு அவர்களை தொடர்ந்தேன்.

“சார் நான் ஒரு ரிட்டையர்டு வாத்தியார். அவனுக்கு தாயார் காலமானதுக்குப் பிறகு நான் தான் தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்த்தேன். “

” சரி ஆஸ்பத்திரி வந்தாச்சு, இறங்கி வாங்க, பிடிச்சு இறங்குங்க”.

தடுமாறி போலீஸ்காரர் உதவியுடன் இறங்கினேன்.

அவிழ்ந்தவேட்டியைக் கட்டிக்கொண்டு அவர்களுக்கு பின்னால் நடந்தேன்.

நேரம் நடு இரவு தாண்டி இருக்கும்.

எமர்ஜென்சி வார்டு வாசலில் உட்காரச் சொன்னார்கள் .

உள்ளே போனவர்கள் நேரம் கழித்து வந்து ” ரத்தம் நிறையப் போயிருக்கு, நினைவில்லாமல் இருக்கான்”

“ரத்தம் கொடுத்துகிட்டு இருக்காங்க, ரிசல்ட் வர நேரம் ஆகும்” என்றார்கள் .

உடலில் அசதி, மனதில் குழப்பம்! படுத்தவன் மறுபடியும் எழுந்து விட்டேன் .
தூக்கமா வரும்? உக்காந்தேன். உட்காரவும் முடியவில்லை.

அழைத்து வந்து போலீஸ்காரர்கள் கூப்பிட்டார்கள்.
” உட்காருங்கள், பையன் என்ன பண்றான் “
சங்கரன் ஸ்கூல்ல நல்லாத்தான் படித்தான், முதல் மார்க் தான். அப்புறம் இன்ஜினியரிங் காலேஜ்

ஒரு குறிப்பிட்ட காலேஜ்ல தான் படிப்பேன், அதான் நல்ல காலேஜ் என்றான்.
கவுன்சிலிங் அவனுக்கு இருக்கிற மார்க்குக்கு அந்த காலேஜிலேயே இடம் கிடைத்தது.
எல்லாம் அவன் விரும்பியபடி நடந்ததாலே நிம்மதியா படிப்பான் என்று நினைத்தேன்.
ஆனால் நடந்தது வேறயாப் போச்சு.”

சரி உங்க பையனுக்கு வேற பழக்க வழக்கம் உண்டா? தண்ணி, போதை பொருள், கஞ்சா? போலீஸ்காரர் கேட்டது ஈர கொலை நடுங்கி போச்சு!

ஓ வென்று கதறி விட்டேன் .

அவர்கள் வெளியில் அழைத்துச் சென்று டீ வாங்கி குடிக்க வைத்தார்கள்.

முகத்தை கழுவி விட்டு டீயை குடித்தேன்.

சார் அவன் காலேஜில் சேர்ந்த முதல் வருடம் எந்த சங்கடமும் இல்லாமல் காலேஜ் பஸ்ஸில் போய் வந்தான். என் சம்சாரம் காலமா னதிலிருந்து அவங்க அம்மாதான் பேரனை வளர்த்தார்கள்நானும் அவனை ஒன்னும் சொல்வது கிடையாது .என்நேரமும் ஆண்ட்ராய்டு செல்போன் தான். இரண்டாவது வருடம் இரண்டாவது செமஸ்டர் படிக்கும்போது “எனக்கு பைக் வாங்கி தாங்கன்னு” கேட்டான்.
தம்பி, இருக்கிற டிராபிக் பார்த்தா பயமா இருக்கு . பைக் தேவையா? பஸ்லே போய் பஸ்லயே வந்தா எனக்கும் நிம்மதியாய் இருக்கும் என்றேன்.

என் வகுப்பு பையன்கள் பைக் வச்சிருக்காங்க. எனக்கு பைக் வேணும்னு அடம் பிடிச்சான்.
ஒரு லட்சம் வேணும் அந்த பைக் வாங்கணும் என்றான். வேற வழி தெரியல. பி எஃப் லோன் போட்டு பணம் கொடுத்தேன்

ஒரு நாள் வீட்டில் கொண்டு வந்து வண்டியை நிறுத்தினான். அசந்து போனேன்

ஏதோ பறப்பது போல இருந்தது.

பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் பார்த்து விட்டு போனார்கள்.

தினமும் அவன் வண்டியில் போற வேகத்தை பார்த்து பலரும் சொன்னார்கள்.

அதில் கேலியும் கிண்டலும் சேர்ந்து இருந்தது. மனதில் பயத்தையும் உண்டாக்கியது

இதற்கிடையில் ரிட்டையர்டு ஆகிவிட்டேன்.

பையன் போக்கு சரியாய் இல்லை என்பது, அவன் இரவு லேட்டா வரும்போது புரிந்தது.

வண்டியில் போகும் போது செல்போனை பார்த்து கொண்டே செல்வதாக கேள்விப்பட்டேன்.

சாப்பிடாமல் பாட்டியும் நானும் பல நாள் அவனுக்காக காத்திருப்போம்.

“எனக்கு சாப்பாடு வேண்டாம் வெளியில் சாப்பிட்டேன்”என்று ரூமைப்பூட்டுக் கொள்வான்.

இரவு முழுவதும் லைட் எரியும்.

இப்படி பல நாட்கள்.
அப்புறம் சேர்க்கையால் போதை வஸ்துக்கள் நடமாட ஆரம்பித்தது தெரிந்தது, கையைப் பிடித்துக் கொண்டு அழுவேன்.

கையை உதறிவிட்டுப் போய் விடுவான்.

தண்ணீரும் சாப்பிட்டு இருக்கிறான் என்பது தெரிய வந்தது.

வளர்த்து ஆளாக்கிய பாட்டி நடப்பதை பார்த்து, மனம் நொந்து ஒருநாள் கண்ணை மூடி விட்டார்கள்.

சமையலுக்கு ஒரு பாட்டியம்மாவை போட்டு, சாப்பிட்டோம் என்று பெயர் பண்ணிக் கொண்டு வாழ்ந்தேன்.

பையன் மூன்று நேரமும் வெளியில் தான் ஆகாரம்.

இரவில் தள்ளாடி வரும் பொழுது விழுந்து விடாதபடி பிடித்துப் படுக்க வைப்பேன்.
மாதாமாதம் பென்ஷன் வந்து போதவில்லை.

ரிட்டயர்மென்ட் பணத்தை பேங்கில் போட்டதால் வந்த வட்டியும் தண்ணியாய் போனது.

தினமும் பணம் கேட்டு அவன் போட்ட சத்தம் தாங்க முடியவில்லை.

பக்கத்தில் உள்ளவர்கள் எட்டிப் பார்த்துவிட்டு வசை பாடினார்கள்.

தலையெழுத்து என்று நடமாடும் நேரத்தில் இந்த பேரிடி.

அவசரமாக ஓடிவந்த ஆஸ்பத்திரி ஆள் போலீஸ் காரர்கள் கிட்டே ஏதோ சொன்னார்.

போலீஸ்காரர் முகம் மாறி விட்டது, என்னவென்று தெரியவில்லை.

“வாத்தியார் சார் மனசை தளர விடாதீங்க அவன் பொழைச்சுக்குவான்” கோமாவுக்குப் போய்விடுவான்னு பயந்து இருக்காங்க .

ஆனா அவனுடைய கிட்னியில் அடிபட்டு இருக்காம்.

பைக்ல நிதானம் இல்லாம ஓட்டி, தூக்கி எறிந்து மரத்தில் விழுந்தது அடிபட்டு கிட்னி வேலை செய்யலையாம்!

டாக்டர்கள் ஆலோசனை பண்ணிக்கிட்டு இருக்காங்க

சார் என்னை டாக்டர் கிட்டக் கூட்டிட்டுப் போங்க .

கிட்னி வேலை செய்யலைன்னா பிறகு அவன் எப்படி சார் பிழைப்பான்?.

டாக்டர் ஐயா, உடனே தெய்வம் மாதிரி தயவு செய்து என் கிட்னி அவனுக்கு பொருந்துமா ன்னு டெஸ்ட் பண்ணி, சரின்னா, என் கிட்னியை அவனுக்குத் தர ரெடி. தயவு செஞ்சு உடனே ஏற்பாடு பண்ணுங்க சாமி!

கையெடுத்து கும்பிட்டேன்.

அடுத்து நொடியில் இருந்து ஒவ்வொரு டெஸ்ட்டும் செய்யப்பட்டது. எனது கிட்னிஅவனுக்கு பொருந்தும் என்றார்கள்.

என் கிட்னி ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஒரு கிட்னியில் எடுத்தாலும் அடுத்த கிட்னியுடன் நான் வாழலாம் என்றார்கள்.

அவன் உயிர் பிழைத்து நல்லா இருந்தா போதும் டாக்டர்.

எனக்கு வேற என்ன வேணும்?

ஆறுதல் கூறினார்கள்.

மற்ற எல்லாரும் நடைமுறை சட்ட திட்டங்களை அனுசரித்து கையெழுத்து வாங்கினார்கள்.

அவசரகதியில் நடத்த வேண்டிய ஆபரேஷன் என்பதால் ஒருவர் கூட அசரவில்லை

மனதில் அவர்களுடைய கடமை உணர்விற்காக ஆண்டவனை வேண்டிக் கொண்டேன்.

டாக்டர்கள் தான் கடவுள் என்று எல்லோரும் ஆபத்து காலத்தில் சொல்வது வழக்கம்.

ஆனால் நானே நேரில் அனுபவித்து அவர்கள் கருணை உள்ளத்தையும் உணர்ந்தேன்.

எல்லாம் போர்க்கால அடிப்படையில் நடந்தது.

பையனுடைய நிலைமை என்னவென்று யாரிடமும் கேட்க முடியவில்லை .
அவர்கள் அவசரம் அவசரமாக அவனை காப்பாற்றுவதில் இருந்ததால் கடமையில் கவனமாக இருந்தார்கள் .

எனக்கு எல்லா டெஸ்டுகளும் செய்தார்கள். இருதயம் தாங்கும் சக்தி உள்ளதா என்று பார்த்தார்கள்.

அதான் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு வாழ்கிறதே!

என்னை ஆபரேஷன் தியேட்டருக்கு செல்வதற்கு முன் உடல் அளவிலும் மனதளவிலும் தயார் படுத்தினார்கள்.

நான் முழுமையாக அவர்களுக்கு ஒத்துழைத்தேன்.

அவர்கள் ஆக வேண்டியதை மிகத் துரிதமாகவும் துல்லியமாகவும் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

ஆப்பரேஷன் நடந்தது.

முடிந்தவுடன் ஸ்டெச்சரில் தள்ளிக் கொண்டு வந்தார்கள்.

“பெரியவர் நல்ல மனுஷன்,” “பையனும் அதிர்ஷ்டக்காரன்”

இனிமேல் கவலை இல்லை! உடல் நலம் தேறி வேண்டும் என்றார்கள்.

அரைமயக்கத்தில் கேட்டது.

ஹாஸ்பிடல் இருக்க வேண்டிய நாட்களில் நல்ல சத்தான ஆகாரமும் மருத்துவமும் கொடுத்து எங்களைத் தேற்றினார்கள்.

இருவருக்கும் கட்டுப்பாடுகளைச் சொன்னார்கள். பையனை பார்த்தேன்.

கண்ணீர் தான் அவன் பதிலாக இருந்தது .

கோர்ட்டிலும் யாருக்கும் உயிர் சேதம் வைக்காத காரணத்தால் அவன் நிலை கருதி அவனுக்கு

மன்னிப்பு வழங்கிய தகவல் வந்தது.

கடவுள் அதற்கெல்லாம் சேர்த்து தண்டனை கொடுத்துப் பின் காப்பாற்றி விட்டார்
என்று நினைத்துக் கொண்டேன்.

வீட்டில் பையனைத் தனியாக கொஞ்ச நாள் ரூமில் இருக்கச் சொல்லிவிட்டு நான் நடு வீட்டில் கட்டில் போட்டு படுத்து இருந்தேன்.

ஆஸ்பத்திரியிலிருந்து வந்த நாள் முதல் பார்ப்பதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

யாரையும் தடுக்க முடியவில்லை.

பையனிடம் மட்டும் யாரும் நெருங்காமல் பார்த்துக் கொண்டேன்.

எல்லோருக்கும் நானே பதில் சொல்லி சமாளித்தேன்.

எனக்கும் களைப்பாகத்தான் இருந்தது.

வேறு வழியில்லை.

யாரும் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

நாளை யாரும் விசாரிக்கவில்லை என்று சொல்லிவிடக்கூடாது என்று நினைத்து அவர்கள் வந்தார்கள்.

நாளடைவில் ஏதோ ஒரு தொற்று நோய் என்னை தீண்டி விட்டது

காய்ச்சல் என்று நினைத்து மாத்திரைகள் சாப்பிட உடல் நலமாக இல்லை.

நண்பரிடம் சொல்லி பையனை வீட்டிலேயே பாத்துக்க, அவரை துணைக்கு இருக்கச்  சொன்னேன்.

நண்பர் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்தார்.

ஆஸ்பத்திரியில் டெஸ்ட் எடுத்து தொற்றும் நோய்க்கு மருந்துகள் கொடுத்தார்கள்.

நோய் குறைவதும் அதிகமாவதுமாக இருந்தது.

சிறுநீரக பிரச்சனை இல்லாததால் டாக்டர்கள் தைரியம் கொடுத்தார்கள்.

திடீரென்று மயங்கி விட்டேன்.

அதற்கு பிறகு நடந்தது, ஆஸ்பத்திரி உள்ளவர்கள் சொன்னது :

உங்களை டாக்டர்கள் பரிசோதித்தார்கள் . நாடி குறைந்துவிட்டது என்றும் இருதயம் வேலை செய்வது நின்று விட்டது என்பதையும் அவர்கள் அறிந்து முதல் உதவிகள் செய்தும் ஒன்றும் ஆகாததால் இறந்ததாக முடிவு செய்து விட்டார்கள்! “எல்லா சடங்குகளும் முடிந்து ஆம்புலன்ஸ்ல வீட்டுக்குக் கொண்டு சென்ற போது இரவு வெகு நேரம் ஆனதால் ரோட்டில் இருந்த பெரிய குழியில் வண்டி இறங்கி ஏறியதில் ஸ்ட்ரக்சரில் கிடந்த நீங்கள் ஒரு பக்கம் சாய்ந்து கீழே விழுந்து விட்டீர்கள்! உடனே ஆம்புலன்ஸ் நிறுத்தி மறுபடியும் ஸ்ட்ரக்சரில்
உங்களைத் தூக்கிப் போடும் போது ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது! உங்கள் உடல் அசைவையும் இருதயம் வேலை செய்வதையும் பல்ஸ் இருப்பதையும் கண்டு உடனே ஆம்புலன்ஸை ஆஸ்பத்திரிக்கு திருப்பி விட்டார்கள். மருத்துவ உலகில் எப்போதோ நடக்கும், நம் அறிவுக்கு எட்டாத ஒன்று நடந்ததாக எண்ணி மீண்டும் சிகிச்சைகள் தரப்பட நீங்கள் சகஜ நிலைக்கே திரும்பி சாதாரணமாக ஆகிவிட்டீர்கள்! எதையும் உங்கள் வீட்டுக்கு தெரிவிக்காததால் நீங்களும் சுகம் ஆகிவிட்டீர்கள் . ஆஸ்பத்திரியில் எல்லோருக்கும் மகிழ்ச்சி!

மனதில் ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன்!

“யார் செய்த புண்ணியமோ” என்று இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்குப் பிறகு சொல்வார்கள்.
எனக்கும் தெரியவில்லை

“யார் செய்த புண்ணியமோ”

—————-(((((((()))))))))) – – – – – – – – – – – – – –

 

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்…1 – மீனாக்ஷி பாலகணேஷ்

 

முகம் நக நட்பும் நட்பு!

 

                                          

 

           ஒருநாள்…..

           வலைத்தளத்தைக் குடைந்து குடைந்து தேடிக்கொண்டிருந்தேன். ஏன், எதற்காக, என்கிறீர்களா? எனது பள்ளிப்பருவத்தில் உயிருக்குயிராய்ப் பழகிய அருமைத்தோழி  ஜானா எங்கிருக்கிறாள் என அறிந்து மீண்டும் தொடர்பு கொள்ளத்தான்! அவளுடைய பெரிய அத்திம்பேர் (மூத்த அக்காவின் கணவர்) ஒரு பெரிய இண்டஸ்டிரியலிஸ்ட்- என அன்றைக்கே அவள் கூறியிருந்தாள். ஆகவே அவரைக் கண்டுபிடித்தால் ஜானாவைப்பற்றி அறிந்து கொள்ளலாமே! தொடர்பும் கொள்ளலாமே என்ற ஆவல்தான் இத்தேடலுக்குக் காரணம். ஒரு காலகட்டத்தில் எல்லாருடைய வாழ்விலும் பழைய நண்பர்களின் தொடர்பு என்பது மிகவும் இனிமையான ஒன்று. இன்றியமையாததும் எனலாமா? பணமும் காசுமல்ல! இந்த நட்புகளே வாழ்க்கையின் அத்தியாவசியமான தேவைகளாகி விடுகின்றனவோ என்னவோ! இது என்னுடைய தத்துவ விளக்கம்.

           ஆகா! இதோ அவருடைய மின்னஞ்சல் முகவரி கிடைத்து விட்டது- உடனே செய்தி அனுப்பியாயிற்று! அப்பாடா! கூடிய விரைவில் ஜானாவிடமிருந்து வரப்போகும் செய்தியை எதிர்பார்த்து உள்ளம் துள்ளிற்று.

           பள்ளி நாட்களில் நானும் ஜானாவும் அடித்த கொட்டம் எங்கள் நட்பைப்போலவே உலகப்பிரசித்தி – இல்லை – பள்ளிப்பிரசித்தி! பள்ளிக்கூட கோலப்போட்டியில் எங்கள் வகுப்புதான் முதல்பரிசு பெறும். ஏனெனில் நானும் ஜானாவும் எங்கள் பாட்டிமார்களைக் கேட்டுக்கொண்டு வந்து போடும் கோலங்கள் அத்தனை அழகானவை!

           ஆண்டுவிழாவில் டிராமாவா? நானும் அவளும் தான் முதலில் நிற்போம். எங்கள் நடிப்புத் திறன் அவ்வளவு பிரமாதம்!

           ஏதாவது ஒரு வகுப்பு ஆசிரியர் வரவில்லையானால், மற்றொருவர் வந்து – பாடம் எடுக்க மாட்டார்- எங்களைப் படிக்கச் சொல்வார். ஆனால் சுந்தரம் வாத்தியார் தான் ஜாலிப் பேர்வழி! அவரே நல்ல கதைகள் சொல்வார். தமிழ் மீடியம் மாணவர்களான எங்களுக்கு ராபின்ஸன் க்ரூஸோவையும் டிக்கன்ஸையும் விரிவாக நாடக பாணியில் சொல்லி மகிழ்விப்பார். எனக்கும் ஜானாவுக்கும் இக்கதைகள் மிகவும் பிடித்தமானவை. பிற்காலத்தில் ஒரிஜினல் ஆங்கில நூல்களைத் தேடிப்படிக்க எங்களை இவைதான் ஊக்குவித்தன எனலாம். சித்திர ஆசிரியர் செந்தில்குமார் வந்தால் என்னையும் ஜானாவையும் பாடல்கள் பாட வைப்பார். நான் நன்றாகப் பாடுவேன். ஜானா கொஞ்சம் தயங்குவாள்.  உற்சாகப்படுத்தி என்னுடன் பாடவைப்பேன். அவரை ‘இம்ப்ரஸ்’ செய்வதற்காகவே புதுப்புது திருப்புகழ், தேவாரப்பாடல்களை நானே இசையமைத்துக் கொண்டுவந்து அவளுக்கும் சொல்லிக்கொடுத்து இருவரும் சேர்ந்து பாடுவோம்.

           மதிய உணவு நேரம்தான் எங்கள் சொர்க்கம். அங்காயப்பொடி பற்றி நான் தெரிந்து கொண்டது ஜானாவிடமிருந்துதான். என் பெற்றோர் பாலக்காடு பக்கத்தவர் ஆனதால் தயிர்சாதமும் மாவடுவும்தான் எனது மதிய உணவு. சென்னை வெயிலில் அந்தத் தயிர்சாதம் புளித்து, ஒவ்வொரு கவளமும் உட்கொள்ளும்போது உடலைக் கூச வைக்கும். சிறிது தயிர் ஊற்றி, நிறையப் பாலைச் சேர்த்துப் பிசையலாம் எனும் நவீன ‘டெக்னிக்’குகள் தெரியாத காலம் அது! ஜானாவின் டப்பாவில் கொண்டுவரும் புளியோதரையும், தேங்காய், எலுமிச்சை சாத வகையறாக்களும்தான் கைகொடுக்கும். அவற்றை அவள் என்னுடன் பங்கிட்டுக்கொள்ளும்போது நட்பின் உச்ச எல்லையில் உலவுவோம்! என் மாவடுவும் மாகாளிக்கிழங்கு ஊறுகாயும் அவளுக்கும் மிகவும் பிடித்த அயிட்டங்கள்! இவை மதிய உணவு நேரத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும்.

           விளையாட்டு நேரம், நாங்கள் இருவரும்தான் எங்கள் வகுப்பில் ‘எறிபந்து’ விற்பன்னர்கள். மிகுந்த உற்சாகத்துடன் போட்டி போட்டுக்கொண்டு நாங்கள் விளையாடும் ஆட்டம் சீரியஸ் முகத்துடன் இருக்கும் உடற்பயிற்சி ஆசிரியையைக்கூட புன்னகைக்க வைக்கும்!

           என் தகப்பனாருக்கு வேலை மாற்றம் ஆகி நாங்கள் வேறு ஊருக்குச் சென்று சில மாதங்கள் வரை ஜானாவுடன் கடிதத் தொடர்பு இருந்தது. பின் என்ன காரணத்தினாலோ நின்று விட்டது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எனது பிறந்தநாளுக்கு அவள், ‘ஆலிவர் ட்விஸ்ட்,’ஐப் பரிசாகத்தர, அவளுடைய பிறந்ததினத்திற்கு நான், ‘கலிவரின் யாத்திரைகள்,’ புத்தகத்தைப் பரிசளித்தேன். அவ்வளவுதான் தொடர்பு. சிறுமிகளான எங்களுக்குப் படிப்பிலும் பாட்டிலும் தான் நேரத்தைச் செலவிட முடிந்ததே தவிர வேறு எதனையும் பற்றிச் சிந்திக்கவும் முடியவில்லை. புது இடங்கள், புதுத் தோழிகள்!

           இப்போது, நான் ரிடையரான பின்பு, பழைய நினைவுகள் மனதில் பொங்கியெழ, கிட்டத்தட்ட ஐம்பது சொச்சம் ஆண்டுகளின்பின் எனது பழைய பள்ளித்தோழியைத் தேடும் முயற்சியில் இறங்கினேன்.

           அதிர்ஷ்டம் என்பக்கம் இருந்தது போலும்! அடுத்தநாளே எனது மின்னஞ்சலுக்கு அந்தப் பெரிய மனிதரிடமிருந்து (ஜானாவின் அத்திம்பேர்) மறுமொழி வந்துவிட்டது. தனது மனைவியின் இளையசகோதரியும் நானும் கொண்டிருந்த ஆழ்ந்த நட்பைச் சிலாகித்து எழுதியிருந்தார். ‘பாரியும் கபிலரும் போல,’ என எல்லாம் அவர் எழுதியிருந்தது உள்ளத்தைத் தொட்டது. அவள் தற்சமயம் என்ன செய்கிறாள் என்றும் ஓரிரு வரிகளை எழுதி எங்கள் நட்புக்குத் தனது வாழ்த்துக்களுடன், அத்தனை பணிகளுக்கு நடுவிலும், இதனை ஒரு முக்கியமான செய்கையாகக் கருதி அவர் பதில் எழுதியிருந்தது மனதைத் தொட்டது.

           ஆகா! ஜானாவின் மின்னஞ்சல் முகவரி கிடைத்துவிட்டது. என்னுள் ஒரே உற்சாகம் கொப்பளித்தது. உள்ளம் களியாட்டம் போட்டது!!

           என் பள்ளிப்பருவ அருமைத்தோழிக்கு நீட்டி முழக்கி, வரிந்து வரிந்து ‘இதுவே தோழமையின் உதாரணம்,’ எனுமளவிற்கு ஒரு நீ……ண்ட மின்னஞ்சலை அனுப்பிவைத்தேன். நான் மாறவேயில்லை என அவள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

           அவளிடமிருந்து சில நாட்கள் கழித்து நிதானமாகவே ஆனால் அவசரப்படாமல் ஒரு சுருக்கமான மறுமொழி வந்தது.

           ‘நான் ‘இன்ன’ வேலையில் ‘இந்த’ ஊரில் இருக்கிறேன். விவரமாகப் பிறகு தொடர்பு கொள்கிறேன்,’ என்றெல்லாம் எழுதியிருந்தவளுக்கு, என்னுடன் தொடர்புகொள்ள முடிந்ததற்கு மகிழ்ச்சியா என்ன எனவெல்லாம் தெரிவிக்க இயலவில்லை. ரொம்ப ரொம்ப ‘பிஸி,’ போலும்; பாவம், என்ன வேலைப்பளுவோ என எண்ணிக்கொண்டேன்!

           ஒருவாரம், பத்து நாட்கள்; காத்திருந்து கண் பூத்துப்போனதுதான் மிச்சம்! ஈ-மெயிலாவது ஒன்றாவது, எதையும் காணோம். அவளுடைய கைபேசி எண்ணையும் அத்திம்பேர் அனுப்பியிருந்தார். சரி, இதில் என்ன இருக்கிறது? நம் தோழமையை நாம்தான் கூப்பிடலாமே எனக் கூப்பிட்டேன்.

           என் கணவரிடம், “என் பள்ளித்தோழியிடம் அரட்டை அடிக்கப் போகிறேன். நீண்ட நாட்களின் பின் பேசுவதனால் நிறைய நேரம் ஆகும். பசித்தால் நீங்கள் சாப்பிட்டு விடுங்கள்,” எனவெல்லாம் சொல்லிவிட்டு கைபேசியும் தானுமாய் மாடியறையுள் புகுந்தேன்.

           பத்துப் பன்னிரு ‘ரிங்’ ஆனபின் இணைப்பு கிடைத்தது. ஆவல் கொப்பளிக்கப் ‘படபட’வெனப் பேசினேன். அவள் பேசியதோ அறிமுகமேயில்லாத ஒரு மூன்றாம் மனிதரிடம் பேசுவதுபோல இருந்தது. எனக்குத் துணுக்கென்றது.

           “ஓ! நான் இப்போது ஒரு திருமண வரவேற்பில் இருக்கிறேன். அப்புறமாகக் கூப்பிட்டு விவரமாகப் பேசுகிறேன்,” என்றவளிடம், “எனது கைபேசி எண்ணைச் சேமித்து வைத்துக்கொள்,” எனப் பழைய நட்பின் உரிமையுடன் நினைவுறுத்தினேன். என்னால் எவ்வாறு இவ்வளவு இயல்பாகப் பேச முடிகிறது என எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

           “ஓகே!” இணைப்பு துண்டிக்கப்பட்டது.

           “என்ன? பழைய தோழிகள் இத்தனை சீக்கிரம் பேசி முடித்து விட்டீர்களா?” என்று கேட்ட கணவர், விழுந்துவிட்ட என் முகத்தைக் கண்டதும் பலவிதமாக எனக்கு ஆறுதல் கூறித் தேற்றினார்.

           இது நடந்து இரு வருடங்களாகி விட்டன; இன்னும் ஆவலுடன் ஜானாவின் ‘அந்த’ நீண்ட தொலைபேசி அழைப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

           ஒருவேளை அவள் என் கைபேசி எண்ணைச் சேமித்து வைத்துக் கொள்ள மறந்துவிட்டாளோ? திரும்பக் கூப்பிடலாமா? வேண்டாம். என் நட்பு அவளுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தால் அவளே நான் அவளைத் தேடிக் கண்டுபிடித்தது போல, என்னத் தேடிக் கண்டுபிடிப்பாளல்லவா?

           நான் எப்படியெல்லாம் மாய்ந்து மாய்ந்து தேடி அவளைக் கண்டுபிடித்துத் தொடர்பும் கொண்டேன். அவளுக்குப் பழைய நட்பைப் புதுப்பித்துக் கொள்ள விருப்பம் இல்லை போலும். பள்ளிப்பருவத்தில் பிரிந்தபோது எப்படிக் கண்ணீரும் கம்பலையுமாகப் பிரிந்தோம். காலம் அனைத்தையும் மாற்றிவிட்டதே!

           வாழ்வின் இணைபிரியாத உறவுகளான வாழ்க்கைத்துணை, குடும்பம் ஆகியன மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகின்றன! ஆனால் நட்பைப் பெருமைப்படுத்தி வளர்ப்பதில் நான் மாறவில்லையே! அவள் ஏன் மாறிவிட்டாள்? எனக்கு மனிதர்களையும் நட்பையும் எடைபோடத்தெரியும் என்றிருந்த கர்வம் ஒருவாறு ஒடுங்கி அடங்கியது!

           Old wine and old friends are the best!

           ம்…  இது ஒரு அப்பட்டமான பொய் எனத் தோன்றுகிறது!

           வாழ்க்கை வழங்கிய பல பாடங்களில் இதுவும் இன்னொன்று!

                                                               *****

 

 

 

பெண் பார்க்கும் படலம் – ஹிந்தி மூலம் தமிழில் ரேவதி ராமச்சந்திரன்                

 இந்தக் கதை ஹிந்தியில் அனு சிங் சௌதரி அவர்களால் எழுதப்பட்ட ‘நீலா (ஃப்ளூ) ஸ்கார்ப்’ என்ற கதைத் தொகுப்பிலிருந்து எடுத்து சுருக்கி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. 

இன்னார்க்கு இன்னார் என்று! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements

சுஷீலா சித்தியின் மனம் தழுதழுத்தது. ஆசை பூர்த்தியாகும் போது மனம் எப்பிடியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா! இந்தக் காலத்தில் பெண்ணிற்கு ஒரு நல்ல வரன் அமைவது ஒன்றும் சாதாரண விஷயமல்லவே! அதுவும் டில்லியில் வசிக்கும் பையன். இந்த சம்பந்தம் கிடைத்தது மிகவும் பாக்கியமே! இல்லாவிடில் தன்னைப் போலவே தன் பெண்ணும் வாழ்நாள் பூரா முற்றத்தை அலம்பிக் கொண்டு மண் அடுப்பில் கரியை ஊதி அதில் ரொட்டி வாட்டிக் கொண்டு, வருடா வருடம் நகரத்திலிருந்து கிராமத்திற்கு விடுமுறை கழிக்க வரும் தனது உறவினர்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டு கிராமத்திலேயே இருந்து விடுவாளோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த நிலைமை ஏற்படவில்லை. வினோத் சித்தப்பாவுடன் பல முறை சண்டை போட்டு அவரை சம்மதிக்க வைத்து விட்டாள்.

 சுஷீலா போனில் என்னிடம் ‘நாங்கள் டில்லி வருகிறோம், பெண் பார்க்கும் (காண்பிக்கும்) படலத்திற்காக, உங்களுக்கு ஒன்றும் கஷ்டமாக இருக்காதே?’ என்றாள். திரையை விலக்கி உள்ளே விழும் சூரியனைப் பார்த்துக் கொண்டே ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த பாவனையில் இங்கே வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்குவீர்கள் அல்லவா! எப்போது வருவீர்கள்?’ என்று கேட்டேன். உண்மையில் இந்த இரண்டு அறையில் பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்வது கடினம். அது ஒரு பெரிய விசேஷம் போல் நீண்ட நேரம் நடக்கும். பெண் பிடித்து விட்டால் நல்லது, இல்லையெனில் அதற்காக இரண்டு மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டி வரும். இது என்னை விட வேறு யாருக்கு நன்றாகத் தெரியும்!

மாலையில் ஆபீசிலிருந்து வீடு திரும்பிய கணவரிடம் பயந்து கொண்டே இதைப் பிரஸ்தாபித்தபோது நல்ல மூடில் இருந்த அவர் ‘எல்லோரையும் வரச் சொல், ஒருவருடைய பெண்ணின் கல்யாணத்திற்கு உதவுவது புண்யச் செயலாகும். நாம் அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ முடிந்தால் அது நமது நல்ல நேரமேயாகும். கிராமத்திலிருக்கும் நமது மனிதர்களுக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவப் போகிறோம்?’ என்று என் மனம் குளிரப் பேசினார்.

உண்மையில் சுஷீலா சித்தி எனது சொந்த சித்தி அல்ல. என் மாமனாரின் தூரத்து சொந்தம். பாகப்பிரிவினை ஆகி விட்டாலும், நகரத்திற்கு புலம் பெயர்ந்து விட்டாலும் எல்லோருக்கும் நில புலன்கள் கிராமத்தில் இருக்கின்றன. அவைகளையும், ஆடு மாடுகளையும் பார்த்துக் கொண்டு வினோத் சித்தப்பா கிராமத்திலேயே தங்கி விட்டார். இதனால் நாங்களும் கிராமத்திற்கு போய் வந்து கொண்டிருந்தோம். பாகப் பிரிவினை ஆகி விட்டாலும் வாசலை ஒன்றாக வைத்துக் கொண்டு ஒரே அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தோம்.

நானும் சுஷீலா சித்தியும் மிகவும் நெருக்கம். வெயிலில் எல்லாக் குழந்தைகளும் பூக்களையும், கொட்டைகளையும் சேகரிக்கும் நேரத்தில் நான் அறையில் சித்தியின் பாட்டை ரசித்துக் கொண்டிருப்பேன். என்ன குரல் அது! புடவையில் பூ வேலைப்பாடு செய்து கொண்டே தன் மகளது கல்யாணத்தைப் பற்றி இனிமையான குரலால் பாடும்போது நான் அந்த மயக்கும் குரலில் லயித்திருப்பேன்.

சித்தியின் பிள்ளை ரோகித்துக்கு நான் வருடந்தோறும் ராக்கி அனுப்புவேன். ஷ்வேதாவையும், ரோகித்தையும் நான் மடியில் வைத்து கொஞ்சியிருக்கிறேன். ஷ்வேதாவின் தலையில் ரிப்பன் கட்டி விடுவேன், வெயில் காலம் பூராவும் அவளது பெரிய பெரிய கண்களில் மை எழுதுவது என் வேலையாகும். அவர்கள் வளர்ந்த பிறகு ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். இதற்கு பிரதியுபகாரமாக எனக்கு சித்தியிடமிருந்து பல பரிசுகள் கிடைக்கும். புளி போட்ட சிவப்பு மிளகாய் ஊறுகாய் சித்தி எனக்காக விசேஷமாகப் போட்டுத் தருவாள். நாங்கள் பாட்னா திரும்புகிறோம் என்று தெரிந்தவுடன் ஊறுகாய், இனிப்புபுளிப்பு மாங்காய், பொட்டுக்கடலை உருண்டை, சுத்த கோவாவில் செய்த இனிப்பு எல்லாவற்றையும் ஒரு பையில் போட்டு மெதுவாக என் அறையில் வைத்து விடுவாள். இதை மற்ற சித்தி, பாட்டி, தமக்கை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. அவர்களுடைய பொறாமை குணத்தை எங்கள் இருவராலும் சமாளிக்க முடியாது.

இப்போதும் அப்படியே. டில்லியில் ஒவ்வொரு மூலையிலும் எனது மூன்று சித்தப்பாக்கள், அநேக அண்ணன் தமக்கையர்கள். எங்களது இந்தத் தலைமுறையில் எல்லோரும் காலேஜில் படித்து விட்டு ஐஏஎஸ் எழுதுவதற்காக டில்லி வந்துள்ளனர். இருந்தாலும் சித்தி என் வீட்டில்தான் தன் பெண்ணின் பெண் பார்க்கும் வைபவத்தைக் கொண்டாடத் தீர்மானித்துள்ளாள்.

கல்யாணத்திற்கு முன் நானும் காலேஜ் முடித்து விட்டு ஒரு கால்சென்டரில் சிறிது காலம் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எனது தந்தை மூன்று வருடங்கள் விடாமல் தேடி எனக்கு இந்த வரனை ஏற்பாடு செய்வதில் வெற்றி பெற்றார். பையன் வீடு எங்களது கிராமத்துக்கு அருகிலேயே. குடும்பச் சூழ்நிலையும் எங்களது மாதிரியே. எனது வருங்கால மாமனாரும் எனது தந்தை மாதிரியே அரசு வேலை. இதனால் அவருக்கு கான்பூரில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு இருந்தது. வருடத்தில் ஒரு ஹோலி அல்லது தீபாவளிக்குக் கிராமத்திற்குச் செல்வார்கள். எனது தந்தைக்கும் மாமனாருக்கும் வேலையிலிருந்து நிவர்த்தி பெற்ற பின், நிறைவேறாது என்று தெரிந்தாலும், கிராமத்தில் சென்று வசிக்கும் ஆசை இருந்தது, இதனால் இருவரும் சிறிது நிலம் வாங்கிப் போட்டு அதற்கு வேலியும் போட்டு வைத்துள்ளனர்.

என்னை மாதிரியே என் கணவரும் கிராமமும் இல்லை, நகரமும் இல்லை. வேர் இல்லாதலால் எந்த இடமும் சொந்தமில்லை. என் கணவர் டில்லியில் ஒரு தனியார் கம்பனியில் துணை மேலாளர். நான்கு லக்ஷம் வரதக்ஷணையில் இதை விட சிறந்த மாப்பிள்ளை எங்கே கிடைக்கும்! எனக்குப் பின் இரண்டு தங்கைகள் வேறு. மூன்று பேர் என்னைப் பார்த்து வேண்டாம் என்று சொன்ன பிறகு இந்த வரன் அமைந்தது. என் கல்யாணம் கிராமத்தில் நடந்தது. சுஷீலா சித்தி பாடிக் கொண்டே கல்யாண வேலைகளில் அம்மாவிற்கு மிகவும் உதவியாக இருந்தார். எனக்காக போர்வைகள், புடைவைகள் எல்லாவற்றிலும் வேலைப்பாடு செய்து இருந்தார். அப்போதே ஷ்வேதா ‘நீ இவ்வளவு அழகாக இருக்கிறாய், நன்றாகப் படித்திருக்கிறாய், நகரத்தில் வசித்துள்ளாய், உனக்கே கல்யாணத்தில் இவ்வளவு கஷ்டம் என்றால் எனக்கு எப்படி? என் அப்பாவால் உன் அப்பா மாதிரி நான்கு லக்ஷம் வரதக்ஷணையும் கொடுக்க முடியாது. ஸ்ரீராமருக்கே சீதாவைக் கல்யாணம் செய்ய வில்லை வளைக்க வேண்டி வந்ததாக்கும்’ என்று பெருமூச்சு விடுவாள்’ ‘உன் கல்யாணம் எல்லாம் நன்றாக நடக்கும்’ என்று நான் அவளை அப்போது  சமாதானப்படுத்தினேன். ‘இப்போது யார் ஷ்வேதாவைக் கல்யாணம் செய்ய வில்லைத் தொடுக்கத் தயாராக உள்ளார்கள், டில்லியில் இருக்கும் மாப்பிள்ளைக்குக் கொடுக்க வினோத் சித்தப்பா எப்படி பணம் தயார் செய்தார்’ என்று யோசித்தேன். சித்தி வந்தால்தான் இதற்கெல்லாம் விடை தெரியும். சித்திக்கு இரண்டு ஆசைகள் ஷ்வேதாவின் திருமண வாழ்க்கையும் ரோஹித்தின் வேலையும் நகரத்திலே, அதுவும் டில்லியாக இருந்தால் மிகவும் சந்தோஷம்.

நகரம் என்றால் சித்திக்கு மிகவும் பிடிக்கும். இங்கிருந்து தான் பிள்ளைகளுக்கு துணி வாங்கி வரச் சொல்லுவாள். நான் கிராமத்திற்குப் போகும் போதெல்லாம் நகரத்தைப் பற்றி துருவித் துருவி விசாரிப்பாள். “வீடு எப்படி இருக்கிறது. முற்றம் இல்லை அல்லவா, நல்லது மெழுக வேண்டிய அவசியமில்லை, கேஸ் கிடைக்கும் அல்லவா, பெரிய கடைகள் உள்ளனவா, குழாயைத் திறந்து விட்டால் தண்ணீர் கொட்டும் அல்லவா?’ என்று. நகரத்தின் மீது அவர்களுக்கு இருந்த மோகம் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. எங்களது நாகரீகப் பேச்சு, சுத்த ஹிந்தியில் பேசுவது, அம்மாவின் ஷிபான் புடவை, அப்பாவின் ஜிலு ஜிலு சட்டைகள் இவற்றைப் பார்த்து ஷ்வேதாவிற்கும் நகரத்தின் மீது மோகம் வந்து விட்டது. ‘அண்ணாவின் சட்டையைப் பார் பெரிய மனிதனின் தோரணை, சித்தப்பா ஏதோ ஒரு வேஷ்டியுடன் மாடுகளுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருப்பார் அல்லது வயலில் டிராக்டர் ஒட்டிக் கொண்டிருப்பார்’ என்று சித்தி புலம்புவதை ஷ்வேதாவும் கேட்டுக் கொண்டிருப்பாள்.

சித்தியும் ஷ்வேதாவும் ஒரு கும்பலுடன் ஸ்டேஷனில் வந்து இறங்கியதைப் பார்த்தவுடன் இவர்களை ஒரு கழிவறையுடன் கூடிய இரண்டு படிக்கையறை வீட்டில் எப்படி தங்க வைப்பது என்று மலைத்து விட்டேன். ‘இத்தனை பேர் எதற்கு?’ என்று ஷ்வேதாவிடம் கேட்டதற்கு சித்தி ‘இவர் என அண்ணா இவர் தான் சம்பந்தம் பேசினார், இது என் மருமகள்’ என்று ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினார் வெகுளியாக. ‘அது சரி இவர்கள் எல்லோரும் எங்கே தங்குவார்கள்?’ ‘ஏன் உன் வீட்டில்தான்?’ அதற்குள் ஷ்வேதாவின் மாமா ‘நாங்கள் டில்லிக்கு அநேக தடவை வந்துள்ளோம் எங்களது உறவுக்காரர்கள் இருக்கிறார்கள் அங்கே தங்குவோம்” என்று சமாளித்தார். ஆம் இங்கே எல்லோருக்கும் உறவினர்கள் இருப்பார்கள்.

நான் சித்தி, ஷ்வேதாவைக் கூட்டிக் கொண்டு பஸ்ஸில் எறினேன். சித்தி ஜன்னல் அருகில் உட்கார்ந்து குழந்தை மாதிரி தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஷ்வேதா ஏறும் ஜனங்களைக் கண்டு பயந்து இருந்தாள். வீட்டிற்கு வந்தவுடன் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டு ஷ்வேதா சோபாவில் உட்கார்ந்து விட்டாள். சித்தி வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டு ‘நின்று கொண்டே சமைக்கிறாயா, நல்லது என்னை மாதிரி உட்கார்ந்து சமைப்பதால் வரும் மூட்டு வலி இராதே’ என்று நகரத்துப் புராணம் பாட ஆரம்பித்து விட்டாள். இன்று சனிக்கிழமையாதலால் எனக்கு லீவ். மிஷினில் போட்ட துணிகளை எடுத்துக் கொண்டு மாடியில் காய வைக்கும்போது கூட்டத்தையும், அடுக்கடுக்கான வீடுகளையும் பார்த்து ஷ்வேதா கலவரப்பட்டாள். ‘இது ஒன்றுமேயில்லை. கோரேகானில் வானளாவிய கட்டிடங்கள் இருக்கும். ஆமாம் எப்படி இந்த வரன் வந்தது?’ ‘பையனுடைய அப்பா பெரிய மாமாவின் பால்யகால ஸ்நேகிதர். என் போட்டோவைக் காட்டினார். போட்டோ எடுப்பதிலும் ஒரே வேடிக்கைதான். அம்மாவிற்கு டில்லியில் பிரேம் ஸ்டூடியோவிலேதான் எடுக்கணும் என்று ஆசை. உங்கள் போட்டோவும் அங்கேதான் எடுத்தார்களா?’ நான் சிரித்துக் கொண்டேன். என் போட்டோவை அம்மா எல்லோரிடமும் காண்பித்து ‘எவ்ளோ அழகு. கொஞ்சம் கூட பணம் வாங்கிக் கொண்டாலும் அவர்களுக்குப் பெண்ணைப் பிடித்து விட்டது. அது போதும்’ என்று வரதக்ஷணையைப் பற்றியும் சொல்லி விட்டதை இப்போது நினைத்து சிரித்தேன். திரும்பவும் ஷ்வேதா ‘போட்டோ எடுக்கவில்லையா?’ என்று வினவவும் பழைய நினைவுகளிருந்து மீண்டு ‘வரதக்ஷணையைப் பற்றி பேசியாகி விட்டதா?’ என்று வினவினேன். ‘இது வரை இல்லை. பிள்ளை வீட்டார் எங்களிடம் இருப்பதில் கொஞ்சம் ஆசீர்வாதமாகக் கொடுக்கச் சொல்கிறார்கள். அம்மாவின் நகரத்து ஆசை என் கல்யாணத்தில் அதிக விலையாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது. ’உனக்கு என்ன வேண்டும்?’ ‘உண்மையைச் சொல்லப் போனால் நகரத்திற்கும் கிராமத்திற்கும் எனக்கு ஒரு வித்யாயசமும் தெரியவில்லை. என் கல்யாணம் அம்மா அப்பாவிற்கு பிரச்னையாகி விடக் கூடாது.’ எல்லாப் பெண்களும் இப்படித்தான் நினைக்கிறார்கள்.

பையனுக்குப் போட்டோவில் பெண்ணைப் பிடித்து விட்டது. புதன் கிழமை பெண் பார்க்கும் படலம் ஒரு பெரிய இடத்தில் என்று முடிவாயிற்று. திங்கட்கிழமை சித்தி பார்லர் சென்று வந்தாள். ரோஜாப்பூ மாதிரி இருந்த அவரைப் பார்த்து ‘ஷ்வேதாவிற்குப் பதில் உங்களை அனுப்பலாம் போலிருக்கிறதே!’ என்று நாங்கள் சொன்னோம்.

புதன் அன்று காலையிலிருந்து சித்தி பக்கத்து கடைக்குச் சென்று சாமான் வாங்கிக் கொண்டே இருந்தாள். வேண்டுதலும் வைத்துக் கொண்டே இருந்தாள். ஷ்வேதா பரீட்சையில் பாஸ் ஆகி விடுவோமா என்று பயந்து கொண்டே இருந்தாள். ஷ்வேதாவிற்கு என் புடவையை அணிவித்து ‘இவளை யார் மறுக்கப் போகிறார்கள்’ என்றேன். நாங்கள் மொத்தம் பன்னிரண்டு பேர் சென்றோம். நாங்கள் ஒரு நீளமான இருக்கையில் அமர்ந்தோம். பிள்ளை வீட்டார்களும் வந்தார்கள். பையன் அப்பாவின் பிசினஸைப் பார்த்துக் கொள்கிறார் மேலும் சில கடைகள் திறக்க உத்தேசம் என்று தெரிந்தது. ‘பெண் பிடித்திருந்தால் மேலே பேசுவோமே!’ என்று மாமா ஆரம்பிக்க பையனின் அப்பா ‘எங்களுக்குப் பெண் பிடித்திருக்கிறது. கிராமத்திலிருக்கும் எங்களது பூர்வீகச் சொத்தை வாங்கிக் கொண்டு அதற்குப் பணம் கொடுத்து விடுங்கள். அது போதும்’ என்றார். நில புலன்கள் இருக்கிறது என்று வந்தால் அவற்றை விற்கும் நிலமையிலா இருக்கிறார்கள் இவர்கள்! எப்படி மேலே குடித்தனம் நடக்கும்!’

வீட்டிற்கு வந்தவுடன் சித்தி கிராமத்திலிருக்கும் சித்தப்பாவிற்குப் ஃபோன் போட்டு ‘பண்டிதர் சொன்ன நில புலன்கள் உள்ள அந்த டீச்சர் வரனையே  முடித்து விடுங்கள். சின்ன வீடாக இருந்தாலும் நமது பெண் சந்தோஷமாக இருப்பாள். நகரத்தில் வசிக்க நில புலங்களை விற்க வேண்டி வரும் நிலமை அவளுக்கு வராது. ஆனால் ஒன்று நேரே கல்யாணம்தான், இந்தப் பெண் பார்க்கும் படலம் ஒன்றும் கிடையாது!’ என்று நச்சென்று ஃபோனை வைத்தாள்.                                    

                                                             

                                     

                     

 

“அவர்கள் பார்த்துக் கொள்வார்களா?”   மனநல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

பல வருடங்களுக்கு முன்பு சூசன் என்னைத் தன் குடும்பப் பிரச்சினை ஒன்றின் சம்பந்தமாக நாடியிருந்தாள். இப்போது மீண்டும் என்னிடம் வந்திருந்தாள். தனக்கு மிகக் குழப்பமாக இருக்கிறது என ஆரம்பித்த சூசன், அவள் பிரியசகியான மேரியைப் பற்றிப் பேசத் தொடங்கினாள்.  கூடவே மேரியின் மூன்றாவது மகனான ஜான் வந்திருந்தான். இதுவரை குடும்பத்தினர் யாரையும் முதியோர் விடுதியில் சேர்த்ததில்லை என்றாலும், அம்மா மேரிக்கு அதுவே புகலிடம் எனத் தோன்றுவதாகவும், தெளிவு பெற வந்திருப்பதாகவும் கூறினார்கள். 

சூசன்-மேரி உயிர்த்தோழிகள். இருவரும் வாழ்வின் எந்தவொரு வித்தியாசமான சூழ்நிலை நேர்ந்தாலும் பகிர்ந்து கூடிப் பேசிக் கொள்வதுண்டு. 

சில ஆண்டுகளுக்கு முன்னால் பக்கவாதம் வந்ததால் மேரியின் இடது கை மற்றும் காலில் வலு குறைந்திருந்தது. மருத்துவர் எச்சரித்திருந்தார். அதையும் மீறி வாகனம் ஓட்டிக்கொண்டு போனதில் விபத்து ஏற்பட்டு, மண்டையில் பலத்த காயத்தினால் மாற்றங்கள் அதிகரித்தது.

நினைவைப் பாதித்தது. வீட்டிற்கு வருவோர் சிலரை மேரியால் அடையாளம் காண முடியவில்லை, பெயரும் ஞாபகம் வரவில்லை. உணவுச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சாப்பிடவில்லை என்பாள். சாப்பிடத் தரவில்லை என்றால் தகாத வார்த்தைகளால் திட்டுவாள். வயதானவர்களுக்குச் சகஜமாக வருவதாகக் குடும்பத்தினர் நினைத்து விட்டுவிட்டார்கள்.‌

பல மாதங்களாக மருத்துவரிடம் போய்க் காட்டவில்லை. இரு வருடத்திற்குப் பிறகு, ஒன்று சம்பவித்ததால் அழைத்துக்கொண்டு போனார்கள். ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் சர்ச் சர்வீஸ் போயிருந்தார்கள். மேரியைக் கூட்டிச் செல்ல அவமானப் பட்டு வீட்டில் விட்டார்கள். திரும்பிய போது வீட்டிற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாள். கேட்டதற்கு “டேவிட் வரச் சொன்னான்” என்றாள். ஆச்சரியமாகப் பார்த்தார்கள். டேவிட், மேரியின் தம்பி, மறைந்து பத்து வருடங்கள் ஆயின. 

மருத்துவர் சிறிய மனநிலைப் பரிசோதனை (mental status examination) செய்ததில் மேரியின் நிலை டிமென்ஷியா எனக் குறிப்பிட்டார். அதற்கான பரிசோதனைகள் செய்ததில், அதையொட்டிய மாற்றங்கள் தெரிந்தது. டிமென்ஷியா நிரூபணமானது. எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என விளக்கி, மூன்று மாதங்களுக்குப் பிறகு அழைத்து வரச் சொன்னார். வரவில்லை.

சூசன்   வெளிநாட்டிற்குச் சென்றிருந்ததால் இவை தெரியவில்லை. தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் பேச்சு இருந்தது.

ஒருமுறை தொலைபேசியில் இளைய மருமகள் பேசினாள். மேரியை பூட்டி வைப்பதாகக் கூறினாள். சூசன் இது மனிதாபிமானத்திற்கு எதிரானது என விளக்கப் பார்த்தாள். மருமகள் மறுத்து காரணம் கூறினாள். மேரி வெளியே செல்லும்போது வழி தவறி எங்கேயோ சென்றுவிட்டாள். அங்கிருந்து தரதரவென இழுத்து வருகையில் மேரி முரண்டு பிடித்து அடித்தாள், இவர்களும் கை ஓங்க, அக்கம்பக்கத்தினர் தடுத்தார்கள். மாமியாரால் தலைவலி என்றாள்.‌

சூசன் இருவாரங்களில் தாய்நாடு திரும்பியதும் மேரியைப் பார்க்க வந்தாள். மேரியின் கோர்வையாகப் பேசாதது, சொன்ன செய்தியை மறுபடி சொல்வது, சந்தேகங்கள், இவற்றைக் கண்டாள்.  ஜானுடன் என்னிடம் ஆலோசிக்க வந்தாள்.

மேரி விதவை. ஆடை வடிவமைப்பாளர் வேலையில் நல்ல சம்பாத்தியம். மூன்று குழந்தைகள், மூத்தவர் இருவரும் கல்யாணமாகிக் கூட்டுக் குடும்பமாக ஒன்றாக வசித்தார்கள். இளையவனான ஜான் அண்ணன்மார்கள் சொத்திற்காக இருப்பதாகவும், அம்மாவைப் பார்த்துக் கொள்வதில்லை எனக் கவலைப் பட்டான்.  அவர்களின் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காக அம்மா வேலையை நிறுத்தியதைத் துயரத்துடன் தெரிவித்தான்.

 கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்காதது, தாமதமாகக் குறைந்த உணவைத் தருவது, இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டிருந்தால் அறையில் மூடிவிடுவது என்று பாசம் குறைந்த அளவின் உதாரணம் தந்தான்.

இந்த உடல் மன நிலையில் இவ்வாறு நேரிடும். அதனால் தான் மருத்துவரின் சிகிச்சை பிரதானம்! எங்களைப் போன்ற ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் மற்ற நலனை, சூழல், குடும்பப் பங்களிப்புகளை முழுமையாக (holistic) கண்டுகொண்டு  பரிந்துரைப்பதுண்டு.  

அதனால்தான் ஜானிடம் மற்றவர்களை அழைத்து வரச் சொன்னேன். மேரியின் செயல்பாட்டு அவளுடைய டிமென்ஷியாவால் என்றதை விளக்கினேன். அதாவது மீண்டும் மீண்டும் கேட்பது, இந்த நிமிடம் செய்ததை அடுத்த நிமிடம் மறந்துவிடுவது, அவர்கள் வேண்டுமென்று செய்வதில்லை, இவை இந்த நிலையினால்.  

சட்டென்று மேரி மறந்து போவது; நாள், தேதி,‌ கிழமை கேட்டுக் கொண்டே இருப்பாளாம். இதை எடுத்துக்கொண்டு விடையைத் தேட வைத்தேன். மேரி முன்னே செய்து வந்ததை எடுத்துக்கொண்டு, தினசரி தேதித் தாளைக் கிழிப்பது‌ மற்றும் தினசரிச் செய்தித்தாளைப் படிப்பதென அமைத்தோம். 

வேறு பணிகளைச் சேர்த்துக் கொள்வதற்குமுன் மேரியின் உடல்நலனைப் பற்றிக் கேட்டதற்கு, கடந்த நான்கு ஆண்டுகளாகப் பலமுறை குளியல் அறையில் விழுந்து அடிபட்டதைத் தெரிவித்தார்கள். ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள விவரித்தேன். ஏற்கனவே நிகழ்ந்த விபத்தினாலும் பக்கவாதத்தாலும் மூளையின் பாதிக்கப்பட்ட பாகங்கள் சுருங்கி டிமென்ஷியா இருப்பதைக் காட்டியது. இந்தக் கட்டத்தில் உபயோகமான ஏதாவது ஒன்றைச் செய்வது மூளையின் மற்ற பாகங்களைப் பாதுகாக்கும். மூளையைச் சுறுசுறுப்பாக இயங்க வைத்தால் நிபுணர்கள் சொல்வது போல மலர்ந்து இருக்கும். 

மேரி செய்யக்கூடிய பாதுகாப்பான வேலைகளைக் கணக்கிட, துணிகளை மடித்து வைப்பது போன்ற நாற்பது வேலைகளைப் பட்டியலிட முடிந்தது. தொடர்ந்து செய்து,‌ ஒரு மாதத்திற்குப் பிறகு வரச்சொன்னேன். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு வந்தார்கள். மேரியின் கைகள் கட்டிப்போட்டு இருந்தது. பார்த்ததுமே அவிழ்க்கக் கட்டளையிட்டேன். பலர் இவ்வாறு செய்வதுண்டு. உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காதோரின் செயல்பாடு. இது மேரி போன்றவர்களின் நலனைக் குறைக்கும் என்றதை வலியுறுத்தினேன். உடை, நகம், தலை எதுவும் சுத்தமாக இல்லை. மங்கின வாடை.

குடும்பத்தினர் எல்லோரும் வந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் மேரியைப் பார்த்துக் கொள்வது மன அழுத்தத்தைத் தருகிறது என வலியுறுத்தினார்கள். அவளுக்கு ஒன்றும் புரியாது என்ற எண்ணத்தில்  வீட்டில் பேசுவது போலச் செய்ததைத் தடுத்து நிறுத்தினேன். 

மேரியை வெளியே அமர்ந்திருக்கக் கேட்டுக் கொண்டேன். அவளால் உயில் எழுதி, கையெழுத்துப் போட முடியுமா என்பது மட்டுமே தன் கவலை, எதிர்பார்ப்பு என்றார்கள் குடும்பத்தினர். மேரியின் பராமரிப்பை மீண்டும் நினைவூட்டி, அதை விவரிக்கச் செய்தேன். அவர்களின் அச்சம், ஆதங்கத்தைப் புரிந்து கொண்டாலும் மேரியின் பாதுகாப்பு கவலை தந்ததால் அதற்கு முக்கியத்துவம் அளித்தேன். நடைமுறையில் வரவழைக்க, ஒவ்வொரு வாரம் ஒருவர் என்னைப் பார்க்க வரவேண்டும் என்றேன். 

ஸெஷனுக்கு மூத்தவனும் மருமகளும் வந்தார்கள். மேரியைக் கட்டிப் போடாததால் வாழ்வை அனுபவிக்க முடியவில்லை என வருத்தத்துடன் சொன்னார்கள். அக்கம்பக்கத்தினர் மேரியின் நிலையைப் பற்றிக் கேட்கும்போது டிமென்ஷியா என்று சொல்லுவதற்கு வெட்கப் படுவதால் ஏதேதோ மழுப்பிச் சொல்வதாகக் கூறினார்கள்.

மீண்டும் அடுத்த சில ஸெஷன்களில் இந்த நிலை ஏற்படும் விதம், அதனால் உண்டாகும் மாற்றங்களை விவரித்தேன். எவ்வாறு வயதினருக்கு உடல் உறுப்புகளில் உபாதைகள் நேர்கிறதோ, அதேபோல் மூளைப் பாகங்களுக்கு நேரும்போது இது போல இருக்கும். வெட்கத்திற்கு இடமில்லை. அண்ணன் என்றதால் அவர்கள் ஏற்றுக்கொள்வதை, நடந்து கொள்வதைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள். 

இளைய மகன் மருமகள் விவரிப்பிலிருந்து எதுவும் மாறவில்லை எனப் புரிந்தது. இவரைப் பார்த்துக் கொள்வதால் என்ன ஆதாயம் எனப் பலமுறை கேட்க,‌ அம்மாவின் நலன் என்றதும், தங்கள் எதிர்காலத்தில் அதனால் பிரயோஜனம் இல்லை என மகன் கூறினான். மேரியைப் பார்த்துக்கொள்வது தொல்லை எனச் சொல்லி வெளியேறினார்கள். 

ஜான் தன்னால் முடிந்தவரைச் செய்வதைப் பகிர்ந்து கொண்டான். மேரியை வற்புறுத்திக் குளிக்க வைத்தாலும் குளியலறை போவாள், பல நிமிடங்களுக்குப் பிறகு அப்படியே வெளியே வந்து, கேட்டால் குளித்து விட்டதாகக் கூறி விடுவாளாம், அவள் தன்னை அறியாமல் சிறுநீர் கழித்து விடுவதால் அண்ணிமார்கள் நைட்டி போட வைத்தார்கள். மேரி அழுதுகொண்டே வேண்டாம் என்றாலும் “பைத்தியம்” எனக் கேலியாகப் பேசினார்கள். இப்போதும் கைகளைக் கட்டிக் கொண்டு இருப்பதைக் கூறினான். வேலையாக வெளியூர் சென்று விட்டால் அம்மாவின் நிலை படுமோசம் என்றான். 

மேரியின் உயிர்த்தோழியான சூசனிடம் பேசி இல்லத்தில் சேர்ப்பது நல்லது எனத் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். மனச் சஞ்சலத்தை போக்குவதற்கு இருவரையும் நன்றாக நடத்திவரும் சில நிறுவனங்களைப் பார்த்துப் பேசிவரப் பரிந்துரை செய்தேன். செய்ய ஆரம்பித்தார்கள். 

அந்தக் கட்டத்தில், மேரி வெளியே சென்று திரும்பி வர வழி மறந்துவிட்டதால் காவல் நிலையத்தின் உதவியை நாடினாள். உதவிக்கு எங்கே போக வேண்டும் எனத் தெரிந்தது என்பது நன்கு. குடும்பத்தினர் அழைத்து வரப் போகையில் மேரியால் சலித்து ஓய்ந்து விட்டதாகக் கூறினார்கள். 

வீட்டிற்கு வந்ததும் வாக்குவாதம் ஏற்பட்டது.‌ அப்போது ஜான், சூசன் திரும்பி வந்தார்கள். மேரியைச் சேர்க்கப் போகும் இடத்தின் விவரத்தைச் சொல்லி அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்கள். மேரி, சூசனின் கையைப் பற்றிக்கொண்டு, “ஜானை மட்டுமே மனிதனாக வளர்த்தேன். எல்லாம் அவன் பெயரில் செய்ய வேண்டும். சீக்கிரம். புரிஞ்சுக்க.” என்றாள். 

குடும்பத்தினர் திகைத்து நின்றனர். இதுவரை எடுத்துச் சொன்னது இப்போது புரிந்து விட்டதோ? சூசன் தாமதிக்காமல் மும்முரமாக ஈடுபட்டாள்.

                                     *********************************************

 

என் பல்வலியும் அரசு பல் மருத்துவமனையும் – இரஜகை நிலவன்

 

40 ப்ளஸ் வயதுக்காரர்கள் பற்களைப் பராமரிப்பது எப்படி? - பல் மருத்துவர் சொல்லும் ஆலோசனை #LifeStartsAt40 #நலம்நாற்பது | How to maintain your teeth - Vikatan

 

டிசம்பர் குளிரில் ஆரம்பித்த  என் பல்வலி அலுவலக நிமித்தம் ஒவ்வொரு நாளும் பல் டாக்டரைப் பார்ப்பதில் தள்ளிப்போய் கொண்டிருந்தது. குளிர் காலம் முடிந்து கோடை காலம் வந்து மே மாதம் ஒரு கடும் வெயிலில் எப்படியாவது பல் டாக்டரைப் பார்த்து விட வேண்டுமென்று தீர்மானித்து மதியம் 12 மணிக்கு அலுவலகத்தில் ஒரு மணி நேரம் அனுமதி பெற்று புனித ஜார்ஜ் அரசு பல் மருத்துவ மனைக்கு கிளம்பினேன்.

அரசு மருத்துவமனை அதே மருந்து நெடியுடன் ஆங்காங்கே கொஞ்சம் அழுக்குகளுடன் பெருங்கூட்டமாக என்னை எதிர் கொண்டது. ஒரு மருத்துவரை அணுகி “நான் புதியதாக வந்துள்ளேன். இங்கே உள்ளே வர என்ன வழிமுறைகள்” எனக் கேட்டேன். நீங்கள் தவறான வேளையில் மருத்துவ மனைக்குள் நுழைந்துள்ளீர்கள். வெளியே பாதுகையில் நேரம் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது என சுத்த மராத்தியில் குறிப்பிட்டார்.

ஆம், காலை 8.30 முதல் மதியம் 12 மணி வரை மற்றும் 01.30 முதல் 4.00 மணி வரை. பசி வயிற்றைக் கிள்ள வெளியே வந்து கொஞ்சம் நடைப்பாதை கடையில் வடாபாவ், பஜ்ஜி சாப்பிட்டு விட்டு ஒரு இளநீரும் (50 ரூபாய்) அருந்தி விட்டி திரும்பவும் 1.30 மணி அளவில் மருத்துவ மனைக்குள் நுழைந்தேன்.

400 – க்கும் மேற்பட்ட மனித வரிசையைப் பார்த்து கொஞ்சம் திகைத்து அவரிடம் கேட்டபோது புதிதாக அனுமதி சீட்டு வாங்க வரிசையில் நின்று ரூபாய் 10 கொடுத்து பெயர், படிப்பு, முகவரி எல்லாம் சொல்லி அனுமதிச் சீட்டுப் பெற்றுக்கொண்டு இனி என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.

எல்லாமே இந்தி மராத்தி தொடர்பு வார்த்தைகள் தான். “நீங்கள் 28 -ம் அரைக்குச் சென்று அங்கிருக்கும் ஓ.பி.டி. டாக்டரிடம் மருத்துவ அனுமதி சீட்டைக் கொடுங்கள்” என்றார். அனுமதிச் சீட்டு வழங்கிய மங்கை.

அறை எண் 28ஐ வந்தபோது அங்கும் ஒரு கூட்டம் அலை மோதியது. உள்ளே நூற்றுக் கணக்கான பல் மருத்துவ இருக்கைகள், உபகரணங்கள் வெண்ணாடை ஆண், பெண் பல் மருத்துவர்கள் நோயாளிகள் ஆனால்  ஆச்சரியமான கொஞ்சம் கிசுகிசுக்கும் அமைதி. மருத்துவர் நான்சி என்றப் பெயர் பலகையை நெருங்கி அனுமதிச் சீட்டைக் காண்பித்தேன்.

மிக அலட்சியமாக வாங்கி எல்லாச் சீட்டுகளுக்கும் அடியில் வைத்து விட்டு “போ பெயர் சொல்லி அழைப்போம்….. அடுத்து …. “ என்றாள்.

பொங்கி வந்த எரிச்சலுடம் வெளியே வந்து நின்றேன். அலுவலகத்தில் இருந்து கைபேசியில் அழைப்பு வர இன்னும் ஒரு மணி நேரம் அனுமதிப் பெற்றுக் காத்திருந்தேன். 42 நிமிடங்கள் கழித்து என் பெயரை தொண்டை கிழிய ஒரு உதவியாளன் அழைக்க, உள்ளே சென்றேன்.

நான்சி “63-ம் உபகரணத்தின் அருகில் அமர்ந்திருக்கும் மருத்துவர் ஜெய தீபாவைப் பார்க்கச் சொன்னார்” நானும் வந்த போது “அமருங்கள் எந்தப் பல்லில் பிரச்சினை” அமைதியாக ஆனால் பத்தோடு பதினொன்று என்னும் அலட்சியத்தோடு தலை முடியை முன்னால் இழுத்துப் போட்டு கை பேசியில் பார்த்து சரி செய்து கொண்டு மூக்குக் கண்ணாடியை துடைத்துக் கொண்டே கேட்டாள்.

“மேல் நாடியில் இரண்டு பற்கள் நான்கைந்து மாதமாக தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது” என்றேன்.

எரிச்சலாக “ஏய்யா, நீயெல்லாம் படிச்சவன் மாதிரி தெரியற. அரசாங்க ஆஸ்பத்திரிக்காவது உடனடியாக வந்திருக்கலாமில்லே” என்ற தமிழ் எனக்குள் மகிழ்ச்சியை வரவழைத்தது.

“அது வந்து நேரமில்லை டாக்டர்” இப்படியே வச்சிகிட்டு இருந்துகிட்டு கடைசியிலே பல்லு அழுகி விழும்போது தான் டாக்டர் என்னைக் காப்பாற்றுங்கள் என்று வருவிய..ம்.. வாயைத் தொற” அந்த டாக்டரின் எரிச்சல் கண்டிப்பாக வலியைத் தரவில்லை.

வாயைத் திறந்தவுடன் முழுவதுமாக நல்ல முறையில் பரிசோதித்து பார்த்து விட்டு, அருகிலிருந்த மராத்தி ஆன் மருத்துவரிடம் ஆலோசனைகள் கேட்டு விட்டு இன்னும் சில சந்தேகங்களை தள்ளியிருந்த மருத்துவர் ஹேமாவை அழைத்து திரும்பவும் வாயைத் திறந்து காட்டிச் சொல்லி விட்டு, “ம்… போய் முதல் மாடி 101 -ம் அறையில் எக்ஸ்ரே  எடுக்க 25 ரூபாய் கட்டி ரசீது வாங்கிக் கொண்டு..” என்று அவள் சொல்லி முடிக்குமுன் “அதன் பின் என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்டேன்.

“அறை எண் 28-ல் போய் எக்ஸ்ரே எடுங்கள்” என்றாள். முதல் மாடிக்குச் சென்றால் அங்கேயும் மனித வரிசை. சரியாக 27 நிமிடங்களுக்குப் பின் பணம் கொடுத்து இரசீது பெற்றுக்கொண்டேன்.

100 ரூபாய் கொடுத்தும் 70 ரூபாய் திரும்ப வாங்கிக் கொள்ளச் சொன்னார், அங்கே இருந்த காசாளர்.

“சரி” என்று திரும்ப அறை எண் 28க்குத் திரும்பிய போது அங்கும் மனித வரிசை. ஒரு மேலாளர் போல இருந்தவரிடம் “சார் நான் அலுவலகம் செல்ல வேண்டும். கொஞ்சம் சீக்கிரம் எக்ஸ்ரே எடுக்க அனுமதிக்க முடியுமா?” என்று கேட்ட போது அவர் முகத்தில் ருத்ர தாண்டவம் பார்க்க வேண்டுமே…

கொஞ்சம் பயந்து ஒதுங்கி நின்றேன். பெயர் எழுதப் பட்ட உறையோடு ஒரு எக்ஸ்ரே பிலிம் என் கையில் திணிக்கப் பட்டு “போய் வரிசையில் நில்லு…என்ற மராத்தி வார்த்தைகள் கன கடூரமாக ஒலிக்க வாங்கிக் கொண்டு வரிசையில் நின்றேன்.

ஏறக்குறைய 45 நிமிடங்களுக்குப் பிறகு என்னை அழைத்து அந்த எக்ஸ்ரே உபகரணத்திற்கு முன் என்னை அமர வைத்து ஒரு மருத்துவப் பெண் பிலிமை பல்லின் உள் புறம் வைத்துப் பிடித்துக் கொள்ளச் சொல்லி விட்டுப் போனவளை 10 நிமிடங்களா காணவில்லை.

எனக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்கள் சப்தமிட ஓடி வந்தவள் “”போட்டோ எடுங்கள்” எனக் கத்த உள்ளேய இருந்து “ஓகே” என்ற சப்தம் எழுந்து நான் வாயில்  உமிழ்நீர் நிறைந்த வாயுடன் நெகடிவ் எக்ஸ்ரேயை வாயிலிருந்து வெளியே எடுக்க அந்த மருத்துவ பெண் டாக்டர் “அந்த டப்பாவில் உங்கள் எக்ஸ்ரே பிலிமை போட்டு விட்டு வெளியே அமருங்கள். அழைகிறோம்.” என்றாள்.

நானும் பிலிமை உறையிலிட்டு அந்த டப்பாவில் போட்டு விட்டு அமர்ந்தேன்.

28 நிமிடங்கள் கழித்து நீதி மன்றத்தில்  அழைப்பது போல என் பெயர் அழைக்கப்பட்டு எழுந்து சென்றேன்.

“எக்ஸ்ரே டெவலப் பண்ணியாகி விட்டது. உங்கள் வாயைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்த எக்ஸ்ரேயை எடுத்துக் கொண்டு 104-ல் முதல் மாடியிலிருக்கும் நீலச் சீருடை பெண்ணைப்போய் பாருங்கள்” என்றார்.

எக்ஸ்ரேயை வாங்கிக் கொண்டு 104-ம் அறைக்குப் போன போது உண்மை யிலேயே எரிச்சல் அதிகரித்து விட்டது. அடக்கிக் கொண்டு அந்தச் சீருடை பெண் சொன்ன இருக்கையில் அமர்ந்து வயைத் திறந்தேன்.

இருவரும் ஏதேதோ மராத்தியில் (எனக்குப் புரிந்தது) பேசி முடித்து “நீங்கள் போய் 104-ம் அறையில் ரூ. 200/- கட்டி விட்டு உங்களுக்கான தனிப்பட்ட முறையில் சொல்லப்படும் பல் மருத்துவ மனையின் முனைவரைப் பாருங்கள்” என்றாள்.

கோபம் கொப்பளித்து விட “ இன்னும் எத்தனை இடங்களுக்குப் போக வேண்டும்?” என பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டேன்.

“இது அரசு மருத்துவமனை இங்கே எந்த மாதிரி சொல்கிறார்களோ அதை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும்” என வேண்டுமென கண்டிப்பாக உண்மையன சிரிப்பல்ல – அவள் பழித்துக் கொட்டிச் சிரித்தார்.

அமைதியாக 104-ம் அறையில் வந்து ரூ. 200/ கட்டி விட்டு (என் கையில் ஒரு பையில் வைக்கும் அளவிற்கு பேப்பர்கள் சேர்ந்து விட்டன) அவர்கள் சொன்ன அரை எண் 103க்குச் ச்ன்றேன்.

அங்கே அமர்ந்திருந்த பெண் மருத்துவர் “ என்ன விஷயம்”? என்றார். கையிலிருந்த பேப்பர் அத்தனையையும் காட்டி “மருத்துவரைப் பார்க்க வேண்டும்” என்றேன். “ஒரு நிமிடம் நில்லுங்கள்” என்று சொல்லி விட்டு “டீயும், வடாப் பாவும் வந்து விட்டதா?” எனக் கேட்டார் உதவியாளரிடம்.

உதவியாளன் வந்து விட்டதெனச் சொல்ல, அங்கே வடா பாவும் சாயாவும் பரிமாறப் பட்டன. எல்லா சிற்றுண்டியும் முடிந்த பிறகு வந்து கையிலிருந்த பேப்பரை வாங்கி “நீங்கள் ஜூன் மாதம் 14ம் தேதி மாலை 3.30 மணிக்கு மருத்துவர் ஸ்நேகலதாவைப் பாருங்கள்” என தன் முன்னால் இருந்த பெரிய புத்தகத்தில் குறிப்பிட்டு எனக்குத் தந்த அனுமதிச் சீட்டில் எழுதித்தந்தார்.

“என்ன விளையாடுகிறீர்களா?” என வாழ்நாளிலே அந்த அளவிற்கு கத்தியிருப்பேனா என்று தோன்ற வில்லை. அப்போதும் எதுவும் நடக்காத மாதிரி “நீங்கள் போய் டீனைப் பாருங்கள்” என்றார்கள்.

அந்த மேலதிகாரியைப் பார்க்கப் போனப்போது “மருத்துவ மனை 4 மணிக்கே முடிந்து விட்டது. நாளை வாருங்கள்” என்றாள். நீலச் சீருடை உதவியாளன் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு உள்ளே போன போது மேலதிகாரி சதானந்தன் எழுந்து “அமைதி என்ன விஷயம்” என்றான்.

நான் சொல்லி (கத்தி விட்டு) முடிக்குமுன் பெண் மருத்துவர் ஸ்நேகலதா வர “இவரைப் பார்த்து கொஞ்சம் பல் சிகிச்சை செய்து அனுப்புங்கள்” என்றார்.

“அப்படியானால் கத்தினால் தான் இங்கு காரியம் நடக்குமா?” என நான் கேட்க “எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது. நீங்கள் மருத்துவருடன் சென்று உங்களைச் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்” என்றார் மேலதிகாரி.

ஸ்நேகலதா “சார் நேரம் முடிந்து விட்டது. உதவியாளர்கள் யாருமில்லை” என முனங்க, “வாசு” என்று கத்தினார் மேலதிகாரி.

உள்ளே ஓடி வந்த ஒரு உதவியாளனிடம் “இந்த மருத்துவருக்கு உதவி செய்” என்று சொல்ல எனக்குப் பல சிகிச்சை வேகமாக அளிக்கப் பட்டு (என்னை அந்தப் பல் மருத்துவர் படுத்திய பாடு – செய்த அவசரச் சிகிச்சைக்கு இன்னொரு சிறுகதை  அமையும்) வெளியே கொண்டு வந்து (தள்ளப்பட்டேன்) நிறுத்தப்பட்டேன்.

அப்போது என்னோடு வெளியே வந்த மருத்துவர் ஸ்நேகலதா கையிலிருந்த பேப்பரை பிடுங்கி ஜூன் 14-ம் தேதி 3.30 மணிக்கு வரவும்” என எழுதி என்னிடம் திணித்து விட்டுக் கிளம்பினாள்.

 

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கடவுளின் மரபணுக் கூடம் – சின்மய சுந்தரன்

வணக்கம். “தவம் செய்த தவம்”, “அழகின் நண்பன்”, “மௌனத்தின் அழகிய கோணங்கள்” ஆகிய என் மூன்று கவிதைத் தொகுதிகளுக்குப் பின், என் காவியம் “கடவுளின் மரபணுக் கூடம்” உயிர்த்தெழுந்திருக்கிறது. என் கவிதைகள் எத்தனை பேரை சென்றடைகிறது, எத்தனை இரசிகர்களால் வாசிக்கப் படுகிறது என்பது எனக்குத் தெரியாது. சில வாசகர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுவதும் வழக்கமாக இருக்கிறது. எண்ணிக்கையில் எத்தனை பேர் என் கவிதைகளை வாசிக்கிறார்கள் என்பது தெரியா விட்டாலும், என் கவிதைகள் காலத்தை வென்று நிலவும் என்னும் நம்பிக்கை மட்டும் எனக்குள் எப்போதும் உண்டு. என் உள்ளத்தில் ஆழ வேர் விட்டிருக்கும் நம்பிக்கை அது. ஒரு கவிஞனாக சிந்தனைக்குள் செல்லும் போது, ஆழ்நிலை தியானத்திற்கு உள்ளாகிறேன்; அந்நிலையில் என் ஆழ் மனத்திலிருந்து சுரந்து வெளிவரும் சொற்கள் எல்லாம், இறையருளே உணர்த்தி வெளிப்படுத்தும் சொற்களாகும். மரபு இலக்கணத்திற்குள் இயல்பாக சொற்கள் அமைந்து நிற்பது இறையருளே அன்றி வேறில்லை என்பேன்!

தான் பிறந்த மண்ணை நேசிக்காதவன் நல்ல குடிமகன் ஆக மாட்டான். தாய்மொழியை காதலிக்காதவன் மனிதனே ஆக மாட்டான். மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் கவிஞனுக்குள் இயற்கையாக வேரிட்டிருக்கும் இயல்புகள் ஆகும். நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளமோ பிற மொழியாளரையும் ஈர்த்து அணைத்துக் கொள்ளும் தன்மையது. மண்ணை நேசிப்பது என்பதும், மொழியை நேசிப்பது என்பதும் நுட்பமான ஆழ்ந்த பொருளுடையது. என் மண்ணை நேசிக்கும் போது, இந்த மண்ணின் மக்களிடையே தொன்மையிலிருந்தே வளர்ந்து வந்த பண்பாட்டை விரும்பிப் பின் பற்றுகிறேன். அந்த பண்பாட்டின் கூறுகளை  அடித்தளமாகக் கொண்டு தோன்றி வளர்ந்த சமய நம்பிக்கைகளை, இறையன்பை, கோயில் வழிபாட்டு முறைகளை ஏற்றுப் பின் பற்றுகிறேன். இந்த மண்ணிற்கு உகந்தவைகளையே மண்ணின் மக்கள் உணர்வில் இறைவன் தோன்றச் செய்கிறான்; அருளாளர்கள் வாய்மொழியாக சமய நம்பிக்கைகளை, கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறான். எப்படி ஒரு சிசுவின் உடல் வளர்ச்சிக்கு, அதன் தாய்ப்பால் அவசியமோ, அப்படியே முழுமையான மன வளர்ச்சிக்கு தாய்மொழிப் பயிற்சியும், மண்ணின் பண்பாட்டு மாண்புகளின் சிந்தனையும் மிக மிகத் தேவையாகிறது. “மன நலன் மன்னுயிர்க்கு ஆக்கம்” என்றார் வள்ளுவப் பெருந்தகை. ஆக்கமான மன நலனைத் தருவது தாய்மொழியின் மரபு சார்ந்த இலக்கியங்களும், தாய் மண்ணின் பண்பாடும், சமய நம்பிக்கைகளும் ஆகும்.   

இன்றைய தமிழகத்தில், தமிழகத்தை உள்ளடக்கிய பாரதப் புண்ணிய  பூமியில் நிகழும் பலவும் கவிஞனாக மட்டுமன்றி, ஒரு பாமரக் குடிமகனாகவும் என் உள்ளத்தைத் தாக்குகிறது; சில சமூக, அரசியல் போக்குகள் சோகத்தைத் தருகின்றன. இந்த நாட்டிற்கு ஒரு நல்ல தலைவன் இல்லையே என்ற ஏக்கம் மனத்துள் எழுகின்றது. சேக்கிழார் பெருமான் ஓர் அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று தன் பெரிய புராணத்தில் இலக்கணப் படுத்துகிறார்:

“மாநிலங் காவல னாவான் மன்னுயிர் காக்குங் காலைத்

 தான் (அ)தனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்

 ஊனமிகு படைத்திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்

ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ?”    

இங்ஙனம் ஒரு தலைவன் – மண்ணை நேசிப்பவன், மக்களை நேசிப்பவன், தன் நலம் மறந்து நாட்டின் நலனை முன்னிலைப் படுத்திச் செயல் படுபவன் இத்தனை கோடி இந்திய மக்களிடமிருந்து ஒருவன் தோன்றி வர மாட்டானா என்கிற ஏக்கம் என் மனத்தைத்  துளைப்பது போல, பாமர பாரத மக்கள் பலர் உள்ளத்தையும் துளைத்துக் கொண்டிருக்கக் கூடும். இந்த ஏக்கத்தின் விளைவே இந்த காவியம்.

மரபணு ஆராய்ச்சியால் பல சமூக மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று நம்புகின்றனர் இன்றைய மரபணு விஞ்ஞானிகள். அணுக்களால் நிரம்பிய இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ஒரே பரம்பொருள் அணுவுக்குள் அணுவாகவும், பெருமைக்கு மேல் பெருமையாகவும் நிறைந்திருந்து இயக்கிக் கொண்டிருக்கிறான்! அவன் மனம் வைத்தால் மட்டுமே ஒரு மாற்றுத் தலைவனை இந்தப் புண்ணிய பூமிக்கு தர முடியும். எத்தனையோ அருளாளர்களை இந்த நிலத்தில் பிறப்பெடுக்க வைத்த அவனால், அருள் மனம் கொண்ட ஒரு தலைவனை பிறப்பெடுக்க வைக்க முடியாமலா போகும்? காலம் இன்னும் கனிய வில்லை போலும்! அங்ஙனம் ஒரு தலைவன் கருவாகி உருவாகும் போது, அவன் இந்த உலகத்தையே ஆள்வான் அல்லவா? கவிஞனின் இந்தக் கனவே காவியமாக மலர்ந்திருக்கிறது.

இந்தக் காவியத்தில் தனி மனித உணர்வு வெளிப்படுகிறது; காதல் உணர்வு வெளிப்படுகிறது; சமூக உணர்வு வெளிப்படுகிறது; ஆன்மீக உணர்வு வெளிப்படுகிறது; இவற்றோடு அறிவியல் உணர்வும் வெளிப்படுகிறது. மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் பின்னிப் பிணைந்த காவியத்தில், கதையின் போக்கில் அரசியல் சூழல்கள் சுட்டிக் காட்டப்பட்டு தேவையான அலசலும் இடம் பெறுகிறது.

எளியேனின் இக்காவியம் உங்கள் உள்ளங்களில் இடம் பிடிக்கும் என்னும் நம்பிக்கை எனக்குண்டு.

மனம் மலர்த்தும் நன்றிப் பூக்கள்………

எளியேனின் “கடவுளின் மரபணுக் கூடம்” காவியத்தை சிறந்த செம்மையானப் பதிப்பாக வெளிக்கொணரும் வானதி பதிப்பக அதிபர் முனைவர்  திரு.இராமநாதன் ஐயா அவர்களுக்கும்,

அணிந்துரை வழங்கியிருக்கும் என் வணக்கத்திற்குரிய பெரியவர் மேனாள் அரசவைக் கவிஞர் திரு.முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கும், ஐயாவுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த நண்பர் உரத்த சிந்தனை திரு.உதயம்ராம் அவர்களுக்கும்,

நட்புரிமையுடன் வாழ்த்துரை தந்திருக்கும், இலக்கிய உலகில் அன்புடன் ‘ஏர்வாடியார்’ என்றழைக்கப் படும், ‘கவிதை உறவு’ ஆசிரியர்  கலைமாமணி எஸ்.இராதா கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும்,

பதிப்பக, அச்சக உதவியாளர்கள், ஊழியர்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் நூலகங்களுக்கும்,

காவியத்தை வாசித்து இரசிக்கப் போகும் என் வாசக, வாசகியர்கள் அனைவருக்கும்,

மற்றும்

ஒவ்வொரு சொல்லையும் என் உள்ளிருந்து எடுத்துத் தரும் இறையருளுக்கும்

 

 

கடவுளின் மரபணுக் கூடம் (காவியம்) வாழ்த்துரை

கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன், எம்.ஏ.

ஆசிரியர், ‘கவிதை உறவு’ , இலக்கிய மாத இதழ்

 

காவியம் எழுதுவதொன்றும் அத்தனை எளிய காரியமன்று. அது கதைக்கலையும், கவிதைத் திறனும் கைகோத்துக் கொள்ள வேண்டிய இலக்கிய வகை. இந்த எழுத்தின் இலக்காக சமூகப் பயனும் இருக்க வேண்டும். தமிழின் சிறந்த காவியங்கள் அவ்வாறே அமைந்துள்ளன. இவ்வகை இலக்கியங்கள் இலக்கணம் வழுவாது, இலக்கிலும் விலகாது காணப்பட வேண்டும். இந்த எதிர்பார்ப்பை “கடவுளின் மரபணுக் கூடம்” எனும் இக்காவியம் நிறைவேற்றியுள்ளது பாராட்டத் தக்கது.

உலகின் ஒவ்வொரு உயிர்ப்பொருளும் அணுவினால் ஆக்கப் பட்டவை. அந்த அணுவுக்குள்ளும் அணுவாய் மரபு இருத்தலைப் போலக் கடவுளும் இருக்கிறான் என்று நம்பப் படுகிறது. அந்த அணுவுக்குள் அந்தந்த உயிரினங்களுக்கான தன்மைகள் அமைந்துள்ளதைப் போல நாம் விரும்பும் தன்மைகளையும் புகுத்தலாம் என்பது அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையிலும் நிகழ்த்த முடியும் என்ற ஒரு சிந்தனையும் உண்டு. அந்த சிந்தனையை ‘கடவுளின் மரபணுக் கூடம்’ என்ற இக்காவியத்தின் வாயிலாய் கவிஞர் சின்மய சுந்தரன் விதைத்திருக்கிறார். காவியம் இனியதாகவும் கோட்பாடு கொஞ்சம் ஏற்கத் தக்கதாகவும் இருக்கிறது.

விபத்தொன்றில் சிக்கிக் கொள்கிற ஆரூரன் என்கிற முதியவரை செவ்விதன்-செண்பகம் தம்பதியர் மருத்துவ மனையில் சேர்க்கின்றனர். மருத்துவ மனையில் அவர் உணர்வு மயக்க நிலைக்குப் (கோமா) போய்விடுகிறார். அவரது உயிர் சொர்க்கத்திற்கு செல்கிறது. ஆரூரன் இறப்புக்கு முன்னம் வந்ததால் திருப்பியனுப்பப் படுகிறார். திரும்பிய ஆரூரனுக்கு முந்தைய நினைவுகள் மனத்தில் விரிகின்றன. செண்பகம் என்ற அந்தப் பெண் முற்பிறவியில் சேந்தனாகப்  பிறந்திருந்த ஆரூரனின் மகள். அப்பிறவியில் சேந்தன் அமைச்சராகப் பணியாற்றிய சோழ மன்னனின் திருக்குமரன் இளவரசனைக் காதலித்துக் கரம் பற்ற முடியாமல் போனவள். இப்பிறப்பில் அந்த இளவரசன் செவ்விதனாகவும், அவள் செண்பகமாகவும் இணைந்திருக்கிறார்கள். நல்ல வண்ணம் முடிவது தானே நமது கதைகளின் பொதுவான இயல்பு. அவ்வாறே முடிகிறது கதை.

கதையின் போக்கில் பல்வேறு செய்திகள், கவிஞரின் ஆசைகள், ஆதங்கங்கள் என்று வளர்வது போற்றுதற்குரியது. சென்னை மக்கள் தொகை மிகுந்த நகரம். ஞான பாரதி வலம்புரி ஜான் சொல்வது போல மக்கள் தொகையில் இங்கே மனிதர்களின் எண்ணிக்கை குறைவு. சாலை விபத்தொன்றில் சிக்கிக் கொள்கிற ஆரூரனை காப்பாற்ற நிகழிடத்தில் கூட்டமிருந்தும் பரிவு காட்டவோ உதவவோ யாருமில்லை. செவ்விதனும், செண்பகமும் உதவுகிறார்கள். மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இந்தச் சாலை நிகழ்ச்சியை கவிஞர் சின்மய சுந்தரன் இப்படிச் சித்தரிக்கிறார்:

என்பது உண்மை தானே! உடலொன்றிலிருந்து பிரியும் ஆன்மாவானது வேறு ஒரு உடலுக்குள் செல்லலாம். சொர்க்கமோ நரகமோ சென்று மீளும் ஆன்மா  குறிப்பிட்ட உடலுக்குள் சென்று மீண்டும் மறுபிறவி எடுக்கலாம். அப்படியேதும் நிகழாத போது அந்த ஆன்மா அலைக்கழிவதும் உண்டு என்று சொல்லும் கவிஞர் சின்மய சுந்தரன் மொழிப்பற்றும் மக்கட்பண்பும் உள்ளவர்க்கே மறுபிறவி செம்மையாய் அமையும் என்கிறார். தமிழ் மக்களுக்குப் பிற நாட்டார் போலத் தாய்மொழிப் பற்றில்லை என்றும் வருந்துகிறார்.

“பாதிக்கப் பட்டோர் பக்கம்
போய்விடார் எளிதில் யாரும்;
ஏதிலார் போல நிற்பார்;
ஏதேதோ உரைப்பார்; முன்எத்
தேதியில் எங்கோ ஆனத்
தெருவிபத் தொன்றை ஆய்வார்;
வீதியில் வளர்காப் பின்மை
விமர்சிப்பார்; வீணே நிற்பார்”

இது நாம் வெட்கப் பட வேண்டிய உண்மை. இக்காவியத்தின் மாடம் 9-ல் ‘தமிழாங்கிலர்’ என்றொரு சொற்றொடரை கவிஞர் சின்மய சுந்தரன் பயன் படுத்துகிறார்.

“தாய்மொழிப் பற்றை மற்றைத்
தரணிவாழ் மக்கள் வெற்று
வாய்மொழி யாக வல்ல;
உணர்வினில் ஏற்றுள் ளாரே!
ஆய்மொழி அமிழ்தை, ஞால
அறிவியல் அறிஞர் போற்றும்
தூய்மொழித் தமிழை ஏனோ
தமிழரே தரம்தாழ்க் கின்றார்!”

“கண்ணாடிக் குடுவை போன்ற
கட்டட அறைக்குள், சென்னை
மண்ணாடும் ஆங்கிலஞ் சேர்
மயங்கொலித் தமிழில் பல்லோர்
திண்டாடித் திணறிப் பேசி
தமக்குளே பலவா தித்துப்
புண்ணாடும் நாவால் சோர்ந்து
புலம்பியே இருத்தல் கண்டார்”

என்கிறார் கவிஞர். தமிழர்களுக்கு தமிழுணர்வு  வேண்டும், தமிழ் பேச வேண்டும், அத்தகையோர்க்கே சொர்க்கம் அருளப் படும் என்கிறார் கவிஞர் சின்மய சுந்தரன். காவிய நகர்விலும், கவிதை ஓட்டத்திலும் அங்கங்கே அவர் தூவும் உவமைகள், காதல் உணர்வூட்டும் வரிகள் யாவும் நமக்கு உவமைக் கவிஞர் சுரதா, கவியரசர் கண்ணதாசன், கம்பர் ஆகியோரை நினைவூட்டுவது சிறப்பு.

“சேந்தனார் மகளும் வாழ்வில்
செய்வளோ தவறு? எந்தக்
காந்தமும் இழுக்கா வைரக்
கல்லென ஒழுக்கச் செம்மை
ஏந்திய நெஞ்சை என்னுள்
எழிலுற வளர்த்தீர் அன்றோ!”

என்று அமைச்சர் சேந்தனாரின் மகள் கூறும் வரிகள் அவர் வளர்த்த சிறப்புக்குச் சான்று. சமூகம் சார்ந்த சிந்தனைகளிலும் இக்காவியம் சிறந்தோங்கியுள்ளது. எண்ணற்ற எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக ஒரு கவிதை. ஆட்சி என்பது கயவர் கை சென்று விடலாகாது என்கிற கவனம் நம் கவிஞருக்கு இருப்பது குறிப்பிடத் தக்கது.

“அரசியல் தலைவர், தேச
அதிகார நிர்வா கத்தார்,
உரியஅத் துறையைச் சார்ந்த
வித்தகர் இவர்கள் கூடி
நிரல்முறை ஆய்ந்து நியாயம்
நிலைபெறுத் துவதை விட்டு,
திரிகிற கயவர் கையில்
தருவரோ சட்டந் தன்னை?”

 

என்பதோடு மட்டுமல்ல, “வாள் உடை வீரம் எல்லாம் வரலாறாய் ஓய்ந்தாயிற்றே” என்றும் வருந்துகிறார். முழுக் காவியத்தைப் படித்து முடித்ததும் நம் மனத்தில் நிறுத்த வேண்டிய செய்தியை பின் வரும் கவிதையால் புலப்படுத்துகிறார்.

“மரபணு மாற்றம் என்னும்
மகத்தான வித்தை கூடின்
தரமுயர் அறிவில் மக்கள்
தனித்துவம் எய்தக் கூடும்;
உரம்பெறும் உடம்பில் வாழ்நாள்
உயரவும் கூடும்; நோய்தீர்
வரம்பெறக் கூடும்; வான்போல்
வையகம் மாறக் கூடும்”

நல்ல நாவலைப் படித்த நிறைவும், நற்சுவைத் தமிழை நுகர்ந்த உணர்வுமாய் ஒரு கவிதானுபவத்தை கவிஞர் சின்மய சுந்தரன் இக்காப்பியத்தின் வழியே நமக்குக் கொடுத்திருக்கிறார். அறுசீர் விருத்தம் நறுந்தேன் சுவையென வாசிப்போர்க்கு வழங்கி மகிழ்ந்திருக்கும் அவரைப் பெரிதும் பாராட்டி, இன்னும் எழுதுக, இமாலயப் புகழ் பெறுக என்று வாழ்த்துகிறேன்.

 

சீதாபதி, லட்சுமிபதி, நியூரோபதி!- ரேவதி பாலு

some-moments-and-some-events

 

சீதாபதி, லட்சுமிபதி, நியூரோபதி!

“சொன்னா புரிஞ்சிக்கோம்மா! டாக்டர்னா அப்படி தான் பேசுவாங்க! வியாதிக்காரங்களைப் பார்த்துப் பார்த்து அவுங்களுக்கு மரத்துப் போயிருக்கும். நீ நெனைக்கற மாதிரி பொறுமையா, இரக்கமா, சமாதானமா பேசுவாங்கன்னு எதிர்பார்க்க முடியாது.” குமார் பொறுமையாக எடுத்துச் சொன்னபோதிலும் ரமாவிற்கு கோபமும் ஆத்திரமும் தாங்கவில்லை.

“சும்மாவா சொல்றார்? 500 ரூபா ஃபீஸ் சுளையா வாங்கிண்டு தானே சொல்றார்? அப்போ ஒரு நல்ல வார்த்தை சொன்னாதான் என்ன?” என்றாள்.

ஒண்ணுமில்லை. தாங்க முடியாத கால் வலின்னு டாக்டர் கிட்ட போனபோது அவர் கொஞ்சங்கூட தயவு தாட்சண்யமின்றி, “இருவது வருஷமா சுகர் இருந்தா அப்படி தான் இருக்கும்! கால்ல இருக்கிற நரம்பெல்லாம் பலவீனப்பட்டுப் போயிருக்கும்! ” என்றார்.

அது மட்டுமா சொன்னார்? “உங்க உடம்பில ரத்தம் ஓடல. அதை தெரிஞ்சிக்கிங்க மொதல்ல. வெறும் சர்க்கரை தண்ணி தான் ஓடுது. அதுக்கு தான் கண்டிப்பா வாக்கிங் போங்கன்னு சொல்றேன். நீங்க என்னடான்னா கால் வலி, வாக்கிங் போகலன்னு வந்து நிக்கிறீங்க!”

“நான் ஒண்ணும் நிக்கல டாக்டர்! ஒக்காந்து கிட்டு தான் பேசறேன். என்னால நிக்க முடியலன்னு தானே ஒங்க கிட்ட வந்திருக்கேன்!” என்றாள் ரமா ரோஷமாக.

அவள் கூட கணவர் ரவி தான் வந்திருந்தார். டாக்டர் அவரிடம் சொன்னார், “இதோ பாருங்க சார்! இவுங்களுக்கு வந்திருக்கிறது ‘டயபடிக் நியூரோபதி’. இந்த வலியெல்லாம் அப்படி தான் இருக்கும். ஆனாலும் பொறுத்துக்கிட்டு வாக்கிங் போயி தான் ஆகணும். ரொம்ப முடியலேன்னா ஏதாவது வலி நிவாரணி மாத்திரை தரேன்!” என்று எழுதிக் கொடுத்தார்.

வலியிலும் கோபத்திலும் வாயடைத்துப் போய் அங்கிருந்து வெளியே வந்த ரமா கணவரிடம் வேகமாகக் கேட்டாள், “சீதாபதி, லட்சுமிபதின்னு ராமரையும் கிருஷ்ணரையும் சொல்வாங்க. கேட்டிருக்கேன். இதென்ன புதுசா நியூரோபதி? எனக்குப் புரியலையே?” என்றாள்.

ரவிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ரமா பரம வெகுளி. அவளுக்கு நிறைய விஷயங்கள் எடுத்துச் சொன்னாலும் புரியாது. முக்கியமாக மெடிகல் சம்பந்தபட்ட விஷயங்கள் சுத்தமாக அவள் மண்டையில் ஏறாது. முணுக்கென்றால் கோபம் வேறு வந்து விடும். இருந்தாலும் நியூரோபதியை சீதாபதி லட்சுமிபதியோடு ஒப்பிட்டது அவருக்கு சிரிப்பு தாங்கவில்லை. ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்து மகன் குமாரிடம் சொல்லிச் சொல்லி சிரித்தார்.

ரமாவின் புகார் என்னவென்றால் டாக்டர், “பயப்படாதீங்கம்மா! எல்லாம் சரியாயிடும். இந்த மாத்திரையை போட்டுக்குங்க!” என்று ஒரு நல்ல வார்த்தை கூட சொல்லாதது, அதுவும் சொளையா 500 ரூபாய் கன்ஸல்டிங் ஃபீஸ் வாங்கிக்கொண்டு. “எப்போ பார்த்தாலும் உடம்பில சர்க்கரை தண்ணி தான் ஓடறதுன்னா நான் பேசாம நாளையிலிருந்து வெறும் சர்க்கரை தண்ணியே குடிக்கறேன். அந்தத் தண்ணியாவது உடம்பில ஒழுங்கா ஓடறதான்னு பார்க்கலாம்!” என்றாள் ஆத்திரத்தில் மூச்சிறைக்க.

“நான் எவ்வளவு நாளா சொல்லிண்டிருக்கேன்? கால்ல தசைகள் இறுகிப் போய் தான் கால் வலியே வரும். அதுக்கு ஸ்டெரெட்சிங்க் எக்ஸர்ஸைஸ் பண்ணினா சரியாயிடும்னு” என்றான் குமார்

ரமா வீறாப்பாக எழுந்தாள்.,”சரிடா! வா! இப்பவே சொல்லிக் கொடு. இன்னியிலிருந்தே செய்றேன்!” என்றாள்.

அப்பாவும் பிள்ளையும் ஒருவரையொருவர் பார்த்து நமட்டு சிரிப்பாக சிரித்துக் கொண்டார்கள்.

குமார் அவளை முதுகில் இதமாகத் தட்டிக் கொடுத்தான். “இப்போ வேண்டாம். நீ சாப்டுட்டு தூங்கு! நாளையிலிருந்து நிச்சயமா!” என்றான் ஆறுதலாக.

மறுநாள் காலை பொழுது விடிந்ததுமே குமார் எழுந்திருக்கக் காத்திருந்தாள் ரமா.

“வா! எக்ஸர்ஸைஸ் சொல்லிக் கொடு!”

குமார் கால் தசைகளைத் தளர்த்தும் சில எளிய பயிற்சி முறைகளை அவளுக்குக் கற்றுக் கொடுத்தான்.

அவள் தப்பும் தவறுமாக செய்ய, “மக்கு! மக்கு!” என்று செல்லமாகத் திட்டியபடியே சரியாக செய்ய வைத்தான்.
ரமா அடுத்தபடியாக கணவரிடம் போனாள், “எங்கே அந்த பிண்ட தைலம்? நீங்க தேய்ச்சுக்க சொல்வீங்களே?” என்றாள்.

“எத்தனை மாதங்களாக உனக்கு இந்த எண்ணையை தடவிக்கோ! கொஞ்ச நேரம் ஊறி வென்னீர் விட்டுக்கோ, கால்வலி சரியாய்ப் போயிடும்னு சொல்றேனே? நீ கேட்டா தானே? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்!” என்று கிண்டல் செய்தபடி ரவி பிண்ட தைலத்தை எடுத்துக் கொடுத்தார்.”

“கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்னு ஏன் சொல்லணும்?” என்றாள் ரமா கோபமாக கணவரோடு ஒரு யுத்தத்திற்கு தயாராகும் முஸ்தீபுகளுடன்.

“ஏம்ப்பா அப்படி சொல்ற?” குமாரும் அம்மாவோடு சேர்ந்து கொண்டான்.

“பின்னே எப்படி சொல்லணும்?” என்றார் ரவி.

“கண் கெட ஆரம்பிச்சதுமே சூரிய நமஸ்காரம்னு சொல்லலாம் இல்லையா? என்றான் குமார் சிரித்துக் கொண்டே.

ரமாவும் பிள்ளை சொல்வதை ஆமோதிப்பதைப் போல பெருமிதமாகக் கணவனை ஏறிட்டு சொன்னாள், “ஆமாம்! இப்போ நான் மாறிட்டேன் இல்ல?”

“அதாம்மா இந்த டயபடிக் நியூரோபதி வந்து உன்னை மாத்திடுத்து. … …” ரமாவிற்கு அந்தப் பெயர் மறந்து போய் விட்டது. ஒன்றும் புரியாமல் முழித்துவிட்டு பிறகு கேட்டாள்.

“டாக்டர் சொன்னாரே அதுவா?” என்று.

“ஆங்! அதே தான்! சீதாபதி, லட்சுமிபதி, நியூரோபதி…..” என்று ஜாக்கிரதையாக சிரிக்காமல் சொன்னார் ரவி. ஆனால் குமாரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

புத்தாண்டே வந்திடுவாய் .. புதுகீதை புகட்டிடுவாய் – கோவை சங்கர்

புத்தாண்டு   வருகையிலே   விடியொளி   வீசட்டும்

  வாட்டுகின்ற  துன்பங்கள்  பனிபோல  விலகட்டும்

சித்தமதைக்  குழப்புகின்ற   சங்கடங்கள்  தீரட்டும்

  அன்போடு  அமைதியுமே  யலையலையாய்  வீசட்டும்

தித்திக்கும்  செய்திகளே  காதுகளில்  கேட்கட்டும்

  தென்றலாய்  நம்முடலை  மெதுவாக  வருடட்டும்

சாதிமத   பேதமின்றி   ஒருமித்து   வாழ்ந்திடவே

  மகிழ்ச்சியே  கரைபுரள  நல்லாசி  கூறிடுவாய்!

 

சாதிமத   பெயராலே   நாடெல்லாம்   கட்சிகள்

  வலியவன்  யாரென  சண்டைகள்  பூசல்கள்

சாதிமத  பேதமில்லை  முழங்குகிறார்  மேடையிலே

  சாதிவாரி  ஓட்டுகளை  எண்ணுகிறார்  வீதியிலே

சாதிபேத  மிலையென்றார்  முண்டாசுக்  கவிஞரவர்

  சொன்னநல்  வார்த்தைகளை  காற்றிலே  விட்டுவிட்டோம்

பேதங்கள்  வாழ்வினையே  புரட்டிப்  போட்டுவிடும்

  ஓரினமாய்  செயல்பட்டால்  நன்மைகள்  தேடிவரும்..!

 

புத்தம்புது   திட்டங்களை   முழுதாக   விவாதித்து

  ஒருமனதாய்  செயலாக்க  இருப்பதுதான்  மக்களவை

எதிர்க்கட்சி  யாள்பவரின்  தவறுகளைச்   சுட்டிடவே

  எதிரிபோல்  களத்தினிலே  கோதாவில்  இறங்காதீர்

ஊர்மெச்சும்  திட்டங்களை  யோர்முகமாய்  செயலாக்கி

  நீர்வளமும்  நிலவளமும்  பொருள்வளமும்  பெருகிடவே

பாரினிலே  பாரதமும்  முதன்மையாய்  நின்றிடவே

  பெருமையொடு  புத்தாண்டே  ஆசிகூற  வந்திடுவாய் !

 

அறியாமை   இல்லாமை   பொறாமை   தள்ளாமை

  ஆமையிவை   நான்கினையு   மோடோட  விரட்டிடுவாய்

சொற்களில்  இனிமையும்  எண்ணத்தில்  நேர்மையும்

   செயலிலே  பணிவதுவும்  வெற்றிக்கு  வழியென்றும்

வேற்றுமையில்  ஒற்றுமையை  காண்பதன்  மாண்புதனை

  ஓரினமாய்  ஓர்குலமாய்  வாழ்வதன்  நன்மைதனை

நெறிதேடித்  தவிக்கின்ற  நம்முடை  மாந்தர்க்கு

  போதிமர  புத்தராய்  புதுகீதை  புகட்டிடுவாய்  !

 

 

 

   

 

 

 

 

குவிகம் கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

 

நூறாண்டுகளைத் தாண்டி, “இராமகிருஷ்ண விஜயம்” ! 

 

தமிழகத்தில், அரசியல், சினிமா, பொழுதுபோக்கு அம்சங்கள் என எதுவும் இல்லாமல் ஒரு பத்திரிகை நூறாண்டுகளுக்கும் மேலாக மாதம் தவறாமல் வெளி வந்துகொண்டிருக்கிறது – 2007 ஜூலையில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆயின. இன்று அதையும் தாண்டி விற்பனை! கொரோனா காலத்திலும் இடைவிடாது வெளிவந்து சாதனை படைத்த பத்திரிகை; சமயம், பண்பாடு, கல்வி, அறிவியல் எனப் பல உபயோகமான தகவல்களைத் தாங்கி வரும் மாத இதழ்தான், ‘ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்’. அரசியல், ஜாதி, மதம், இனம் இவற்றையெல்லாம் ஒதுக்கி, மக்களுக்கான ஆரோக்கியமான இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது!

“சென்னையிலிருந்து ஆன்மீக அலையெழுந்து இந்தியாவையே மூழ்கடிக்கப் போகிறது என்பதில் எனக்கு திடமான நம்பிக்கை உள்ளது” என்றார் சுவாமி விவேகானந்தர். இதன் தொடக்கமாக ‘பிரம்மவாதின்’ என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று முதலில் சென்னையில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு ஶ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஶ்ரீசாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகிய தெய்வத் திருமூவரின் வாழ்க்கையையும், உபதேசங்களையும் எடுத்துச் சொல்ல, சுவாமி பிரம்மானந்தரின் சீடர் சுவாமி சர்வானந்தர் 1921 ஆம் ஆண்டு, ‘ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்’ என்ற மாத இதழைத் தொடங்கினார். திரு அண்ணா என்.சுப்ரமணியம், திரு மயில்வாகன பண்டிதர் (சுவாமி விபுலானந்தர்), திரு கே.சி. ராமசாமி ஐயர் மூவரும் பத்திரிகை ஆசிரியப் பொறுப்பேற்க,

“இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு”.

என்ற திருக்குறளைக் (352) கொள்கை விளக்க வரிகளாகக் கொண்டு ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் தன் பயணத்தைத் தொடங்கியது.

‘’விஜயம்’ என்பதற்கு, ‘வெற்றி’ அல்லது ‘வருகை’ என்ற பொருள் கொள்ளலாம். ‘ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்’ தமிழ்நாட்டில் ஆன்மீக ‘விஜயத்தை’ – வருகையை – ‘வெற்றி’கரமாகப் பரப்பி வருகிறது! ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர், சுவாமி கெளதமானந்தர் சொல்வதைப் போல, ”ஶ்ரீராமகிருஷ்ணர் இந்தப் பத்திரிகையின் வடிவில், ஒவ்வோர் இல்லத்திற்கும் வருகை தருகிறார். அவரது வருகை என்பது மங்களகரமான ஒன்று; மக்களுக்கு நன்மை பயக்கும் ஒன்று.”

“வேதாந்தச் சிந்தனைகளை, சாமான்ய மக்களிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டதுதான் நம் நாட்டினைச் சீரழிவுக்கு ஆளாக்கியது. மனிதகுலத்திற்கு அவர்கள் தெய்வீகத் தன்மையைப் போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் அதை அவர்கள் எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதைத் தெளிவுபடுத்துவதும்தான் எனது லட்சியம்” என்றார் சுவாமி விவேகானந்தர். அந்த உயர்ந்த இலட்சியத்தின் வெளிப்பாடுதான் ‘ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்’.

ஆன்மீகம், தத்துவம், பண்பாடு, கலாசாரம், கல்வி, ஒழுக்கம், பக்தி, சேவை எனப் பல துறைகளிலும் சமூகத்தை வழிநடத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ‘ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்’ போற்றுதலுக்குரியது.

‘ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில், சென்னை ஶ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125 ஆவது ஆண்டு வைபவ வேளையில் 24.03.2023 அன்று விஜயத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழாவும், இளைஞர்களுக்கான ‘ஆகுக; ஆக்குக’ என்னும் கருத்தரங்கமும், யுவதிகள் மற்றும் பெண்களுக்கான ‘நவயுகத்தில் பெண்மணிகள்’ கருத்தரங்கமும், சிறுகதை மற்றும் கட்டுரை குறித்த கருத்தரங்கமும், ‘கலைகள் மூலம் கடவுள் ஆராதனை’ என்கிற கலைகள் சார்ந்த கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஶ்ரீராமகிருஷ்ணா மடத்தில் ‘விவேகானந்தரும் இளைஞர்களும்’ என்ற தலைப்பில், இளைஞருக்கான கருத்தரங்கில் உரையாற்றவோர் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, மனதில் அவ்வளவு மகிழ்ச்சி!

“வீரனாக எழுந்து நிற்க வேண்டுமா? வலிமையும் மன உறுதியும் வேண்டுமா? தன்னம்பிக்கை வேண்டுமா? ஒழுக்கமாக வாழ வேண்டுமா? ‘கர்ம யோகம்’ தெரிய வேண்டுமா? ஆன்மீகம் அறிய வேண்டுமா? கல்வி பற்றிய தெளிவு வேண்டுமா? சாதி, மதப் பிரச்சனைக்குத் தீர்வு வேண்டுமா? புதிய இந்தியாவைப் படைக்க வேண்டுமா? விவேகானந்தரை வாசியுங்கள், அவரது சிந்தனைகளை சுவாசியுங்கள் – எழுச்சி மிகுந்த பாரதத்தை உருவாக்குவீர்கள்” – என்பதே அன்று நான் பேசிய பேச்சின் சுருக்கம்!

நூற்றாண்டு விழாவினை ஒட்டி, ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழ்களிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளின் தொகுப்பாக, ”நூறாண்டு ஶ்ரீராமகிருஷ்ண விஜய பாரம்பரியம்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது; தொகுத்தவர் மூத்த பத்திரிகையாளர் திரு மாலன் அவர்கள். அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு.

“ஆன்மீகத்தைப் பற்றியும், அறிவியலைப் பற்றியும் ஒரு சேரப் பேசிய இதழ்கள் தமிழில் இல்லை. கலாசாராத்தைப் பற்றியும், கல்வியைப் பற்றியும் ஒரு சேரப் பேசிய இதழ் ஏதுமில்லை. இலக்கியத்தைப் பற்றியும், சமூக சேவையைப் பற்றியும் பேசிய இதழோ, இளைஞர்களைப் பற்றியும், சான்றோர்களைப் பற்றியும் பேசிய இதழோ இங்கு இல்லை. ஆனால், இவை எல்லாவற்றைப் பற்றியும் அக்கறையோடும் ஆழ்ந்த சிந்தனையோடும் எளிமையான மொழியில் அழகான வடிவமைப்பில் பேசிய ஒரே தமிழ் மாத இதழ் ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்” – கட்டுரையில் மாலன்.

புத்தகத்திலிருந்து …..

“ஸ்வாமி, ஒருவன் உலகத்தைத் துறந்தாலொழிய கடவுளை அடைய முடியாதென்பது உண்மையா?” என்ற கேள்விக்கு பதிலில் பகவான் இராமகிருஷ்ணர்:

”நீ இவ்வுலகில் கிருஹஸ்தனாக இருந்தாலும் சரி, லெளகீகனாகயிருந்தாலும் சரி; அதனால் ஒன்றும் பாதகமில்லை. நீ உன் மனதை மட்டும் பகவான்பால் நிலை நிறுத்த வேண்டும். ஒரு கையினால் உன் வேலையைச் செய்; மறு கையினால் பகவானுடைய பாதங்களைப் பிடித்துக் கொள். இவ்வுலகில் உனக்குச் செய்ய வேண்டிய வேலையில்லாமல் இருக்கும்போது நீ உன் இரு கைகளாலும் பகவான் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்து, உன் ஹிருதயத்தோடு அணைத்துக்கொள்”. – இராமகிருஷ்ண விஜயம் முதல் இதழிலிருந்து (ஜனவரி 1921).

“ஒரே வஸ்துவான தண்ணீரைச் சிலர் ஜலம் என்றும், சிலர் வாரி என்றும், சிலர் அக்வா என்றும், சிலர் பானி என்றும் வேறு வேறு வார்த்தைகளால் கூறுகின்றனர். அதே போல ஸச்சிதானந்த பிரம்மத்தைச் சிலர் கடவுள் என்றும், சிலர் அல்லாவென்றும், சிலர் ஹரி என்றும், சிலர் சிவனென்றும், சிலர் பிரம்மம் என்றும் கூறுகின்றனர்.

ஒவ்வொருவனும் தன்னுடைய மார்க்கத்தை அனுசரிக்கட்டும். கிறிஸ்துவன் கிறிஸ்து மார்க்கத்தையும், முகமதியன் முகமதிய மார்க்கத்தையும் பின்பற்ற வேண்டும். ஹிந்துக்களுக்கோ ஆரியரிஷிகள் ஏற்படுத்திய பிராசீன மார்க்கந்தான் உத்தமமானது”. தர்ம ஸ்மன்வயம் அல்லது மதங்களின் ஒற்றுமை பற்றி.. (மார்ச் 1921 இதழிலிருந்து).

இந்து மதம் பற்றி மட்டும் பேசும் இதழாக இல்லாமல், பெளத்த மதம் (‘புத்தர் புகட்டிய நல்வழிகள்’ – சுவாமி சித்பவானந்தர் – 1928), இயேசுநாதர் (‘பெரியோர் சரிதை’ டிச் 1924, ஜன 1929), ‘கிறிஸ்துவர்களும், தேசீய இயக்கமும்’ (சுவாமி விபுலானந்தர் 1927), ‘முகம்மது நபி’ பற்றிய கட்டுரை (டி.எஸ். அவினாசிலிங்கம் ஜூன் 1928) என அனைத்து மதங்களைப் பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டு, மத நல்லிணக்கத்தைப் பேசியது ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்.

கி.வா.ஜ., ரா.பி.சேதுப்பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி, கி.சந்திரசேகர், தத்துவ அறிஞர் டி.எம்.பி.மகாதேவன் போன்ற இலக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. 1952 டிசம்பரில் வெளியாகியுள்ள சகோதரி நிவேதிதா அம்மையாரின் சுய சரிதை, 1957 ஜனவரியில் வெளியான ராஜாஜியின் ‘ஒரு தெய்வக் கொள்கை’ கட்டுரை ஆகியவை முக்கியமானவை.

“என் கருத்துப்படி, இந்திய விடுதலைக்கான தேசியப் போராட்டத்தைத் துவக்கிய மகோன்னதமான மனிதர்களில் சுவாமி விவேகானந்தரும் ஒருவர்” – ஜவஹர்லால் நேரு.

1977 ஜூலை – கவிஞர் கண்ணதாசனின் கவிதை:

மனைவியோ டிருந்தார்; ஆனால்
மஞ்சத்தை நினைத்தாரில்லை
வினைபல புரிந்தார், ஆயின்
விளைபலன் கேட்டாரில்லை
தனையவர் வென்றா ரங்கே
தரணியின் மனத்தை வென்றார்
இனையவர் புவியில் இல்லை;
இவர் பெயர் பரமஹம்சர்!

2010 ஆகஸ்ட்  இதழில் வெளியான ஒரு துணுக்கு:

ஒரு துறவியிடம் இன்னொரு துறவி கேட்கிறார்: ‘குருவே, துறவி இ-மெயில் வைத்திருப்பது சரியா?’

அதற்கு குருவின் பதில்: பார்க்கலாம், அதில் பற்று (Attachment) இல்லாதவரை!

அனைவரும் வாசிக்க வேண்டிய மாத இதழ் “ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்”. இன்னும் பல நூறாண்டுகள் மனித மனவள மேம்பாட்டுக்காக ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் வெளி வர பகவான் ஶ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஶ்ரீசாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் அருள் செய்ய வேண்டிக்கொள்வோம்!