Monthly Archives: December 2017
“பாக்கியம் ராமசாமி ” அவர்களுக்கு அஞ்சலி
(படம்: நன்றி : தினமணி)
ஜ ரா சுந்தரேசன் என்னும் பாக்கியம் ராமசாமி என்கிற நகைச்சுவை எழுத்துலக மேதை டிசம்பர் 7ஆம் நாள் அன்று நம்மைவிட்டுப் பிரிந்தார். இவர் குமுதத்தில் ‘அரசு’ என்று சொல்லப்பட்ட அண்ணாமலை (எஸ் ஏ பி). ரங்கராஜன் (ரா கி ) , சுந்தரேசன் (ஜ ரா) என்ற மூவரில் ஒருவர். ‘அக்கறை’ என்ற நகைச்சுவை அமைப்பை 197 மாதங்களாக நடத்தி வந்தவர்.
இவர்கள் பிரிவால் வாடும் – அப்புசாமி, சீதாப்பாட்டி, கீதாப்பாட்டி, பீமாராவ், ரசகுண்டு, இடீலி, அரை பிளேடு அருணாசலம், பொன்னம்மா டேவிட், பாட்டிகள் முன்னேற்றக் கழகம்
– மற்றும் குவிகம்
குவிகம் பதிப்பகத்தின் புத்தக வெளியீடு – சரித்திரம் பேசுகிறது -முதல் பாகம்
நமது குவிகத்தில், பல சரித்திர வரலாறுகளை ரசிக்கத்தக்க வகையில் “யாரோ” என்பவர் எழுதிக்கொண்டு வரும் தொடர் “சரித்திரம் பேசுகிறது”.
இந்தப் புத்தகத்தின் முதல்பாகம் குவிகம் பதிப்பகத்தின் சார்பில் வெளிவருகிறது.
இதன் வெளியீட்டு விழா டிசம்பர் 30 அன்று மாலை 7 மணிக்கு ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் குவிகம் இலக்கியவாசலின் விழாவாக நடைபெறும்!
அனைவரும் வருக!
சரித்திரம் பேசுகிறது! (17) – யாரோ
விக்ரமாதித்யன்
‘புலி வருது… புலி வருது’ என்று சொல்லிக் கடைசியில் புலியே வந்ததுபோல்!
‘விக்ரமாதித்ய சந்திரகுப்தர்’ வருகிறார்.
காலச்சக்கரம் சரித்திரத்தை மெல்லமெல்லச் செதுக்கி மனித இனத்தை மேம்படுத்தி வந்துள்ளது. ஆனால் ஒரு சில நூற்றாண்டில்மட்டும் அது மனித இனத்துக்கு ஒரேயடியாக அபரிமிதமான வளர்ச்சியை வாரிக்கொடுத்துள்ளது.
பதினாறாம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி மக்களின் அறிவுக் கண்களைத் திறந்து புது உலகத்தை அறிமுகப்படுத்தியது.
அதுபோல் சந்திரகுப்தன் காலம் மக்களுக்கு ஒரு புத்துணர்வைக்கொடுத்தது.
இந்தப் பண்பாட்டு வளர்ச்சி இந்திய அறிவுசார் நடவடிக்கைகளின் உச்சகட்டம்!
நாடு முழுவதும் அமைதி நிலவியது.
அன்று…
செல்வம் கொழித்தது.
கலைகள் வளர்ந்தன.
இந்துசமயம் மறுமலர்ச்சி அடைந்தது.
இலக்கியம் தழைத்தது.
வீடுகளுக்கு வாசல் இருந்ததோ இல்லையோ ஆனால் பல ‘இலக்கிய வாசல்’கள் இருந்தன.
வெற்றிகொண்ட பல மன்னர்கள் ‘விக்ரமாதித்தன்’ என்ற பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்டாலும் அந்தப் பட்டப்பெயர் நமது சூப்பர் ஸ்டார் இரண்டாம் சந்திரகுப்தருக்கே மிகவும் பொருந்தும்.
நாம் ராமகுப்தன் கதையிலேயே பார்த்தோம்:
சந்திரகுப்தன் எப்படிப்பட்ட வீரன் – என்று.
எப்படிப்பட்ட கலாரசிகன் – என்று.
எப்படிப்பட்ட ‘மாடல்’அரசன் – என்று.
எப்படிப்பட்ட தலைவன் – என்று.
சரி.. கதைக்குச் செல்வோம்..
பாடலிபுத்திரம் தன் பொலிவை இன்னும் இழக்கவில்லை…
ஆனால் உஜ்ஜயினி தங்கப் பொலிவுபெற்று மெருகேறியது…
அது சந்திரகுப்தனின் தலைநகராகியது..
காதலி துருவதேவி சந்திரகுப்தனின் பட்டமகிஷியாகி ‘மகாதேவி’ என்ற பெயருடன் அரண்மனையை அலங்கரித்தாள்.
பின்னாள் குப்தசாம்ராஜ்யத்தை ஆண்ட குமாரகுப்தனை ஈன்றெடுத்தாள்!
‘நாகா’ குலத்து இளவரசி ‘குபேரநாகா’ – பேரழகி!
அழகு மட்டுமல்ல… நாகாநாட்டின் உரிமையும்கொண்டவள்.
தேனும் பழமும் சேர்ந்ததுபோல்!
சந்திரகுப்தன் குபேரநாகாவிடம்:
“தேவி! துருவாதேவி மட்டும்தான் அழகி என்றிருந்தேன்! அது பொய் என்பதை நீ நிரூபித்துவிட்டாய்! உன் கண்களில் இருப்பது காந்தமோ? அதனால்தானோ.. நீ என்னைப் பார்க்கும்பொழுது என் மனம் உன்னிடத்தில் சேர்கிறது!”
காதலில் வார்த்தைகளை அடுக்கினான்!
காதல் எவனையும் கவிஞனாக்கும்!
மூவுலகச் சக்கரவர்த்தி இவ்வாறு முறையிட்டதும் இளவரசியின் ஆனந்தம் எல்லை மீறியது! புன்னகைப் பூக்களை வீசி சம்மதம் என்றாள்.
‘ஒரே ஒரு வேண்டுகோள்! குமாரகுப்தன் அரியணை ஏறுவான். ஆனால் எனக்குப் பிறக்கும் குழந்தைக்கும் அரசாளும் உரிமைவேண்டும்” – மன்றாடினாள்!
சந்திரகுப்தன்:
“நிச்சயமாக உனது வழித்தோன்றல் அரசாளும்!”- வாக்களித்தான்.
சந்திரகுப்தன் குபேரநாகாவை மணந்துகொண்டான்.
இருவரின் இன்பத்தில் மகள் பிரபாவதி பிறந்தாள்.
பிரபாவதி வளர்ந்தாள்!
தாயின் அழகும் – தந்தையின் வீரமும் ஒரு சேர வளர்ந்தாள்!
வகாடக நாடு மேற்கு மாளவத்தைச் சேர்ந்தது.
அந்த நாட்டு இளவரசன் ருத்ரசேனன்-II.
வீரத்துடன் வகாடநாட்டை ஆட்சிசெய்யும் அரசன்!
அரச குடும்பங்களில் ஆதாயமில்லாமல் திருமணம் நடப்பது அரிது.
சந்திரகுப்தன் பிரபாவதியை ருத்ரசேனனுக்கு மணமுடித்தான்.
இதனால் வகாடநாடும் நட்பு நாடாக இருக்குமல்லவா?
மூன்றே வருடம்…மூன்று மகன்கள் அவளுக்குப் பிறந்தனர்..
திவாகர சேனா, தாமோதர சேனா, பிரவார சேனா.
ஒரு நாள் சேதி வந்தது..
ருத்ரசேனன் அகால மரணமடைந்தான்.
சந்திரகுப்தன் விரைந்தான் வகாட நாட்டுக்கு.
பிரபாவதிக்கு என்னவென்று தேறுதல் சொல்ல?
“மகளே! உன் மைந்தர்கள் சிறிய குழந்தைகள்… உன் நாட்டை நீயே ஆட்சிசெய்! நானிருக்கிறேன் உனக்குப் பக்கபலமாக!” –என்றான்.
பிரபாவதி வகாடநாட்டை 20 ஆண்டுகள் ஆண்டாள்..
சந்திரகுப்தன் குபேரநாகாவுக்குக் கொடுத்த வாக்கு பலித்தது!
சந்திரகுப்தன் அரசவையில் மந்திரிகள், சேனாதிபதிகள் தவிர கலாவல்லுனர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் என்று பலர் சேர்ந்து அலங்கரிக்க அது தேவலோகமோ என்று தோன்றியது..
நவரத்தினம் என்று சிறப்பிக்கப்பட்ட ஒன்பது கலைஞர்கள் …ஒளிர்ந்தனர்.
1.அமர்சிம்ஹா: சம்ஸ்கிருத இலக்கணத்தைத் தொகுத்தவர். இலக்கியவாதி.. கவிஞர்.
2.தன்வந்திரி: மருத்துவத் திலகம்!
3.ஹரிசேனா: அந்நாள் வைரமுத்து! புதுக்கவி புனையும் கவிப்பேரரசு! அலகாபாத் தூணில் காணப்படும் கல்வெட்டுகளில் இவரது ‘ஒரு வாக்கியத்தில் பெருங்கவி’ காணப்படுகிறது..
4.காளிதாசன்: என்னவென்று சொல்வது?
இலக்கியச் சூரியன்? அந்தக்காலத்துச் சாண்டில்யன்?
நாடகங்கள் மற்றும் கவிதைகளால் இலக்கியத்தில் பொற்காவியங்கள் படைத்தான்.
சாகுந்தலம், விக்ரமோர் வசியம், மாலவிகாக்னிமித்ரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம் முதலிய நூல்களை அந்த மகாகவி எழுதினார்.
அகில உலகையும் பிரமிக்கவைத்த காவியக் கர்த்தா!
5.காகபநாகா: சோதிட சக்கரவர்த்தி!
6.சங்கு: கட்டிடக்கலை நிபுணர்!
7.வராஹமிகிரர்: ‘வானவியல் அறிஞர்’!
ஜோதிடம்பற்றிக் கூறும் பஞ்சசித்தாந்திக, பிரஹத்சம்கிதா வானசாஸ்திரம் போன்ற நூல்களை எழுதினார்.
8.வரருச்சி: சம்ஸ்கிருத இலக்கண வித்தகர்!
9.வேடல்பட்டா: ஒரு மாய வித்தைக்காரர்!
இப்படிப்பட்ட ஆட்சியாளர் கிடைத்தது அந்த நாட்டுக் குடிமக்கள் செய்த பாக்கியமே! எழுதும் போதே – பாரதியார் சொன்னதுபோல்- “கருவம் ஓங்கி வளருதே”.
படிக்கும் உங்களுக்கும் ‘கருவம் ஓங்கும்’ என்ற நம்பிக்கையில் மீண்டும் சந்திப்போம்.
(இன்னும் நிறையப் பேசும்)
எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்
சூரியதேவன் தனக்கு அளிக்கப்போகும் சிகித்சையைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஸந்த்யாவின் காதலுக்காக எதையும் தியாகம்செய்யத் தயாராயிருந்தான். அதில் அவனுக்குப் பெருமையும் கலந்திருந்தது. ஸந்த்யா மூலம் தனக்குக் கிடைக்கப்போகும் புத்திரர்களை நினைத்து அவன் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தான். இவையெல்லாம் சிவபெருமானின் அருளே என்பதை நன்கு உணர்ந்த சூரியதேவன் கண்களை மூடிக்கொண்டு அவரை மனதால் பூஜிக்கத் தொடங்கினான்.
சிகித்சையின் முதல்கட்டமாக ஸந்த்யா தன் கண்களை தந்தையார் கொடுத்த மெல்லிய துணியால் கட்டிக்கொண்டிருந்தாள். அதன் வழியாக அவளால் சூரியனைப் பார்க்கமுடியும். ஆனால் சூரியனின் வெப்பம் அவளைத்தாக்காது .
அதன்பின் ஸந்த்யா சூரியனின் கண்களை அழுத்தமான கறுப்புத் துணியால் கட்டினாள். முகத்தின் அருகில்சென்று கண்களைக் கட்டியபோது இருவர் உதடுகளும் துடித்தன. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஸந்த்யா சூரியதேவனுடைய கையைப்பிடித்து அறையின் மையப்பகுதிக்கு அழைத்துச்சென்றாள். அங்குதான் காந்தப் படுக்கை தயார் நிலையில் இருந்தது.
சூரியதேவனின் கையைப்பற்றியதும் அவனுடன் தடாகத்தில் கொண்டஉறவும் அதன் சுகமும் அவளுக்கு நினைவு வந்தது. சூரியதேவனுக்கும் ஸந்த்யாவின் உடல் தன்னுடன் உராயும்போது கண்கள் கட்டப்பட்டாலும் புலன்கள் கட்டுப்படாமல் ஆசையில் ததும்பின. அதை ஸந்த்யா உணர்ந்ததுமட்டுமல்லாமல் அவளது கண்களில் உள்ள திரைமூலம் அவனது தவிப்பை நன்றாகப் பார்க்கவும்செய்தாள்.
இப்பொழுதே இப்படியென்றால் முழு சிகித்சை செய்யும்போது இருவருடைய உணர்ச்சிகளும் எப்படிக் கொந்தளிக்குமோ என்று கவலையும் ஆசையின்ஊடே தெரிந்தது. அதனால்தான் தந்தை உணர்ச்சிக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள் என்று படித்துப்படித்துக் கூறினார்போலும் என்று எண்ணிக்கொண்டாள்.
தந்தை குறிப்பிட்டுள்ள நேரத்தில் சிகித்சையைத் தொடங்கிவிடவேண்டும் என்று மனதைக் கல்லாக்கிக்கொண்டு சூரியதேவனை காந்தப் படுக்கையில் படுக்கவைத்தாள். அவன் கைகளைப் பக்கவாட்டில் இருபுறமும் கரும் பட்டுக்கயிற்றினால் கட்டினாள். அதேபோல் கால்களையும் சிவப்புப் பட்டுக்கயிற்றினால் கட்டினாள்.
பிறகு அறைக்கு வெளியேசென்று அங்கே காத்துக்கொண்டிருக்கும் நவக்கிரகங்களில் சந்திரனைமட்டும் உள்ளே அழைத்து வரச்சென்றாள். சந்திரனும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போதுதான் அந்தச் சிகித்சை நடைபெறவேண்டும். சந்திரனின் கண்களையும் இறுக்கக்கட்டி அவனுக்குத் தந்தை அளித்த மயக்க மருந்துகொடுத்து அவனைச் சிறு கல்லாக மாற்றினாள். சந்திரக்கல்லைச் சூரியதேவனுக்கு நேர் எதிரில் இருக்கும் காந்த மண்டலத்தில் வைத்தாள்.
அதன்பின் தான் கட்டியிருந்த ஆடைகளை மெல்லமெல்லக் கழற்றினாள். தன் உடலைச் சுற்றியிருந்த கருநீலப் புடவையை அவிழ்த்தாள். வெட்கம் அவளை ஆட்கொண்டது. சூரியதேவனுக்குக் கண்கள் கட்டப்பட்டாலும் அவள் ஆடை களையும் ஓசைகேட்டது. உலகத்துக்கு வெப்பத்தைத் தரும் அவன் உடல் வெப்பத்தில் தவித்தது. அந்தப் புடவையால் அவள் அவன் தலையை இறுக்கக்கட்டினாள்.
அதன்பின் மெதுவாக சூரியதேவனுடைய ஆடைகளை ஒவ்வொன்றாகக் களையத்தொடங்கினாள்.
சந்திரனை உள்ளே அழைத்துக்கொண்டு வரும்போது ஸந்த்யா மோகமயக்கத்தில் இருந்ததால் அவளுக்குத் தெரியாமல் உள்ளே நுழைந்து காந்தப்படுக்கைக்குக் கீழே ஒளிந்துகொண்ட ராகுவை ஸந்த்யாவும் பார்க்கவில்லை ; சூரியதேவனும் பார்க்கவில்லை. அதை அறிந்துகொண்ட சந்திரனோ மயங்கிக் கல்லாகக் கிடக்கிறான்.
ஸ்வர்ணபானு என்ற அசுர ராகுவோ சூரியனை விழுங்கக் காத்திருக்கிறான்.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
பூலோகத்திலிருந்து வந்திருக்கும் அந்த நால்வரைப் பார்த்ததும் சித்திரகுப்தனுக்கு ஏனோ அப்பர், சம்மந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரும் அவர்கள் படைத்த தேவாரமும் நினைவுவந்தது.
அப்பர்தானே ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று எமனைக் கண்டு பயப்படாமல் முழங்கிய பெரியவர். அவருக்கு முன்
மார்க்கண்டேயன் சிவன் அருளால் எமனை வென்றார். சாவித்திரி என்ற பெண்ணும் எமனுடன் வாதிட்டுத் தன் கணவன் உயிரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு சென்றாள்.
ஆனால் இந்த பாரதியார் ரொம்பவும் மோசம். ஆயிரம் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு ” காலா என் அருகில் வாடா ! உன்னைச் சிறு புல்லென நினைக்கிறேன்! உன்னைக் காலால் உதைக்கிறேன் ” என்று சொன்னால் எமனுக்குக் கோபம் வராமல் இருக்குமா? அதனால்தான் எமன் அவரைச் சீக்கிரமே அழைத்து வருவதற்காக சித்திரகுப்தனின் கணக்கையே மாற்றச்சொன்னான்.
இன்னும் சில மானிடர்கள் எமலோகத்தில் புகுந்து ரகளை செய்திருக்கிறார்கள். நசிகேதன் என்ற சிறுவன் எமனைக் கேள்விகள் கேட்டு திணறடித்தான். அவனுக்குத்தான் எமன் எத்தனை வரங்களைக் கொடுத்தான்.
எது எப்படியிருப்பினும், தாமாகவே நான்கு மென்பொருள் மானிடர்களை எமலோகப் பணிக்காக அழைத்து வருவது இதுதான் முதல்தடவை. அவர்களுக்கு அனுமதி வழங்க முதலில் எமனே சம்மதிக்கவில்லை. சித்திரகுப்தன் தன் பணிக்கு உதவியாக இருக்கும் என்று வலியுறுத்தியதால் கடைசியில் அரைமனதுடன் சம்மதித்தான். அதற்கான தேவையை சிவபெருமானிடம் விளக்கிக்கூறி அவருடைய சம்மததைப் பெறுவது சித்திரகுப்தனின் வேலை என்று எமன் திட்டவட்டமாகக் கூறிவிட்டான்.
சிவபெருமானிடம் விஷயத்தைக்கூறி அவரிடம் அனுமதிச்சீட்டு பெறுவது சித்திரகுப்தனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. முன்பெல்லாம் யார் எது கேட்டாலும் உடனே வழங்கிவிடுவார் சிவபெருமான். அந்த மாதிரி ஒரு சமயத்தில் சிவன் பஸ்மாசுரன் என்ற ஒரு அசுரனுக்கு வரம் கொடுக்க, அவன் சிவன் தலையிலேயே கையைவைத்து எரிக்கவர, கடைசியில் மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அவரைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று. ஆனால் அதற்குப்பின் ஒரு பெரிய ர
களையே உருவாயிற்று.
ஆமாம். சிவபெருமானுக்கு மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுமீது காதல் உண்டாயிற்று. பார்வதிக்கும் லட்சுமிதேவிக்கும் தெரியாமல் பிரும்மதேவர் தலையிட்டு ‘இது ஒரு வீதி மீறல்தான். இருந்தாலும் இது அனுமதிக்கப்படலாம். ஆனால் இதன் விளைவு பூமிக்கும் பரவலாம். அதையும் நாம் அனுமதிக்கவேண்டும் ” என்ற எச்சரிக்கையோடு அனுமதித்தார். அதன்படி அவர்கள் வானவில்லில் சிலகாலம் ஒளிந்துகொண்டிருந்தார்கள். அப்போது பிறந்தவர்தான் ஐயப்பன்.
அதற்குப்பிறகு சிவபெருமான் அதிக அளவில் வரங்களைத் தருவதில்லை. வருடத்திற்குப் பத்து அல்லது பதினைந்து என்று அவரே நிர்ணயித்துக்கொண்டார். இதில் எமனுக்கு என்ன பிரச்சினை என்றால், சிலகாலத்திற்கென்று வருபவர்கள் அந்தக் காலம் முடிந்ததும் திரும்பப் பூமிக்குச் செல்வதில்லை. எமபுரிப்பட்டணத்திலேயே தங்கி சொர்க்கபுரிக்குக் குடிபெயர்ந்துவிடுகிறார்கள். சிவபெருமானின் அனுமதி இருப்பதால் எமனாலும் ஒன்றும் செய்யமுடியாது. சமீபகாலத்தில் இம்மாதிரி அனுமதிகளைப் பெரும்பாலும் அசுரர்களே பெற்றுவிடுவார்கள். பூலோகத்து மானிடர்களுக்கு அனுமதி கிடைப்பது மிகவும் அரிதாக இருந்தது. அதனால் சித்திரகுப்தனுக்கு சிவபெருமானிடம் மென்பொருள் மானிடர்களுக்கு எமபுரிப்பட்டணத்திற்கு அனுமதி வாங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. கடைசியில் சித்திரகுப்தன் அவர்களுக்காக உத்தரவாதம் கொடுத்தபிறகுதான் சிவன் அனுமதி கொடுத்தார்.
அந்த மென்பொருள் ஆலோசகர்கள் அடித்த கூத்து சித்திரகுப்தனை மட்டுமல்ல எமபுரிப்பட்டணத்தையே ஆட்டுவித்தது.
(தொடரும்)
இப்படி ஒரு தகவல் – வைதீஸ்வரன்
அந்த விஸ்தாரமான நகர பஸ்நிலையம் பயணிகள் அதிகம்பேர் தென்படாமல் அநேகமாகக் காலியாகஇருந்தது.. பஸ்வளாகத்தில் காலியாக வரிசையாக நிறையப் பேருந்துகள் புறப்படுவதற்கு இன்னும் தயாராகாத நிலையில் வெறுமையாக நின்றுகொண்டிருந்தன.
அங்கே வளாகத்தில் நுழைந்தபோது சரியான உச்சி வெய்யில் என் மண்டையைப் பிளந்து வேர்த்து வழிந்துகொண்டிருந்தது. வளாகத்தில் நான் போகவேண்டிய எண்ணுள்ள பேருந்துகளும் இரண்டு மூன்று நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தபோது சற்று ஆறுதலாக இருந்தது. எப்படியும் ஏதாவது ஒரு பஸ்ஸில் நிம்மதியாகப் பயணம்செய்யலாம் என்ற நம்பிக்கையும்கூட.
ஆனால் அங்கே எந்த பஸ் முதலில் கிளம்பும்? சுற்றுமுற்றும் விவரமறியத் தகவலுக்காக யாரையாவது தேடினேன். அங்கே சற்றுத்தூரத்தில் தள்ளியிருந்த டீக்கடை மரநிழலில் மூன்று போக்குவரத்து நெறியாளர்கள் சீருடையில் நின்றுகொண்டு கையில் பஸ் அட்டவணைகளுடன் தோளில் விஸில் பட்டைகளுடன் வாயில் லேசாகப் புகைந்துகொண்டிருந்த சிகரட்டுடன் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைக் கேட்டால் எனக்குச் சுலபமாகத் தகவல் கிடைக்கும்.
நான் அவர்களை அணுகியபோது அவர்கள் பேச்சு மும்முரமாக வேறு எதைப்பற்றியோ இருந்தது. நான் அவர்களிடம் எதையோ கேட்க முயற்சிசெய்வதை அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை.. பொருட்படுத்தியமாதிரியே தெரியவில்லை.
“எப்படியும் இரண்டு நாளில் முடிவு தெரிந்துவிடும்..” என்றார் ஒருவர். “போன வருஷத்து வெலைவாசிவேறே…இந்த வருஷம்வேறே!.. ஒரு பெர்ஸண்ட்கூட சேத்துக் கொடுக்கலைன்னா..வேஸ்ட்!..” என்றார் இன்னொருவர். “என்னய்யா…செய்யறான் அந்த செக்ரட்ரீ? எப்பக் கேட்டாலும் இன்னும் அமைச்சர் கூப்பிடலை கூப்பிடலைன்னு சொல்றான்…” வாயிலிருந்து கோபமாக பீடியைத் தூக்கிஎறிந்தார் இன்னொருவர்.
நான் இரண்டு முறை “ ஸார்…ஸார்..” என்று கூப்பிட்டேன். அப்போது ஒரு பேருந்து வேகமாகக் கிளம்பி வெளியேறியதால் நான் கூப்பிட்டது அவர்கள் காதில் விழவில்லை. நான் இப்போது இன்னும் உரத்த குரலில் கூப்பிட்டேன். அந்த மூவரும் என்னை அப்போதுதான் திரும்பிப் பார்த்தார்கள். நான் கத்தியது அவர்களுக்கு வினோதமாகத் தோன்றி இருக்கவேண்டும்.
“ என்னய்யா? ”
“ ஸார்.. நான் மாம்பலம் போகணும் இந்த ரெண்டு மூணு பஸ்ஸுலே எந்த பஸ் முன்னால கெளம்பும்னு தெரியணும்…”
“அடடா…நீங்க அதுக்காகவா நிக்கறீங்க….இப்பத்தானே ஒரு பஸ் போவுது…” என்றான் ஒருவன் அனுதாபத்துடன்.
நான் பேசாமல் நின்றேன். தகவலைக் கேட்பதற்காக அவர்களிடம் வந்துநின்றது என் தவறு என்கிறானோ? நான் என் பதிலுக்காக அவர்களை எதிர்பார்த்துநின்றேன்.
அவர்களில் ஒருவன் பக்கத்திலிருந்த பேருந்துகளை இரண்டுமுறை பார்த்தான்.
“அதோ அந்த ரெண்டாவது பஸ்ஸுலே போய் ஏறிக்கோங்க..”
“ அதுதான் முதல்லே போகுமா? “
“ போகும் போகும்…”
“ரொம்ப நன்றி ஸார்…”
நான் அவர்களைவிட்டு விலகி நடந்து அந்தப் பேருந்திடம் போய் ஏறப்போனேன்.
“எதுக்கும் கேட்டுட்டு ஏறுங்க..” என்று தூரத்திலிருந்து இன்னொரு அதிகாரி சொன்னான்!
அவர் சொன்னது எனக்கு விளங்கவில்லை. அதில் ஏதாவது பொறுப்பான தகவல் இருக்கிறதாவென்று தெரியவில்லை. அவர் என்ன சொல்லுகிறார்!! மீண்டும் அவர்களிடம்போய் விவரங்கள் கேட்க முயலும்போது அந்தப் பேருந்துகளில் இன்னொன்றும் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிடலாம். எனக்கு இப்போது தேவை உட்காருவதற்கு ஒரு இடம். நின்று கொண்டிருக்கும் ஒரு பஸ்ஸுக்குள் ஏறிக்கொள்வதுதான் அதற்கு வசதி.
நான் ஏதோ நம்பிக்கையுடன் அந்தப் பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்துகொண்டேன். பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும்.. அநேகமாகத் தூங்கியேவிட்டேன், திடீரென்று எனக்கு அருகாமையில் நின்றுகொண்டிருந்த இன்னொரு பேருந்து க்ரீச்சென்ற சப்தத்துடன் சீறிக் கிளம்பிக்கொண்டிருந்தது. பயணியை ஏமாற்றிவிட்டு ஓடுவதில் இந்த பஸ்களுக்கு ஏனோ இவ்வளவு ஆனந்தமும் அவசரமும்!
நான் கிளம்பிய பஸ்ஸை நிறுத்த உரக்கக் கத்தியதும் அதன் காதில் விழவில்லை. இப்போது நான் என்ன செய்வது” இப்போது இத்தனை நேரம்வரை உட்கார்ந்துகொண்டிருந்த பஸ்ஸைவிட்டுக் கீழே இறங்கினால் ஒருவேளை இதுவும் என்னை விட்டுவிட்டு ஓடிவிடலாம் பிறகு எல்லாம் கைவிட்ட அனாதை நிலை!
அந்த மூன்று போக்குவரத்து நெறியாளர்களும் டீக்கடை விவாதங்களை ஒருவாறு முடித்துக்கொண்டு இப்போது மெதுவாக வந்துகொண்டிருந்தார்கள் அவர்களில் ஒருவன் நான் பஸ்ஸுக்குள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அடையாளம் தெரிந்துகொண்டான். அவனுக்கு என்மேல் ஏனோ ஒரு அக்கறை…
“அடடா.. ஏய்யா.. பெரியவரே…. இந்த பஸ்ஸுலே ஏன் ஏறினீங்க ? இப்பத்தானே… அந்த வண்டி போச்சு?
நான் பதில் பேசவில்லை. எனக்குள் வெந்துகொண்டிருந்த கோபத்தை நானே ஜீரணித்துக்கொள்ளவேண்டி இருந்தது.
அவர்கள் மேலும் நிற்காமல் என்னைக் கடந்து நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
அவர்களில் இன்னொருவன் மட்டும் என்னைப் பார்த்து “ஸார்… இந்த வண்டி கெளம்பறதுக்கு இன்னும் இருபது நிமிஷம் ஆகும்..” என்று உபகார சிந்தையுடன் என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டிருந்தான்..
“அட்டா.. மேலும் எவ்வளவு நேரம் காத்திருக்கவேண்டுமென்ற ஒரு அவசியமான தகவலை அக்கரையுடன் எனக்குத் தெரிவித்தற்காக நான் அவருக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்!!
நான் பேருந்தைவிட்டுக் கீழே இறங்கினேன். நிதானமாக நடந்தால் என் வீட்டுக்கு ஒரு அரைமணி நேரத்தில் சென்றுவிடலாம். ஆனால் இப்போது உச்சி வெய்யில். நிழல் பார்த்து நின்றுநின்று போனால்கூட எப்படியும் முக்கால் மணியில் போய்விடலாம்
என் மனதுக்குள் பொருமிக்கொண்டிருந்த இந்த பஸ்நிலைய அனுபவத்தைவிட வெய்யிலின் உக்கிரம் குறைவாகத்தான் இருக்கும். நான் நடக்கஆரம்பித்தேன். பத்து நிமிஷம் நடந்திருப்பேன். . நான் விட்டுவிட்டு இறங்கி வந்த அந்த பஸ் என்னைக் கடந்து புழுதியைக் கிளப்பிக்கொண்டு காலியாகப் போய்க்கொண்டிருந்தது!.
*************
வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் நம்மூரில் நடக்கும் இப்படிப்பட்டச் சின்னச்சின்ன விபரீதங்களைப்பற்றி மிகுந்த மனக்கசப்புடன் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவதென்று எனக்குள் எப்போதுமே சங்கடம். அவர்கள் சொல்லுகிறார்கள்……” நாம் எப்போதுமே இந்தியாவின் சுதந்திரத்தைத் தவறான வழியில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று.!!.
மார்கழிப்பாடல் – மரபன்
மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ(ப்) படிந்தேலோர் எம்பாவாய்
மார்கழி மாதம் குளிர் நிறைந்த நன்னாள்
நீராடப்போவோம் வாருங்கள் தோழியரே !
சீரான ஆய்ப்பாடியின் செல்வச் சிறுமிகளே !
கூர்வேல் கொண்டவன் நந்தகோபன் குமரன்
பார்வைக்கு இனியவன் யசோதாவின் இளையமகன் கரியநிறக் கண்ணன் சூரியன்போல் முகமுடையான்
நாராயணனே அவன் நல்லருள் தந்திடுவான்
பாரோர் புகழ வாருங்கள் பாவையரே
ஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (6) – புலியூர் அனந்து
“எண்திசை வென்றேனே … இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மானுடனும் புகலுவதோ”
பள்ளிப் படிப்பு முடிந்து வேலைக்கென்று போவதற்குமுன் இடைப்பட்ட சுமார் இரண்டு வருடம் ஒரு நிலையில்லாத காலகட்டம். தட்டச்சு இன்ஸ்டிட்யூட், கொஞ்சம் லைப்ரரி தவிர ஒரு அரட்டை கோஷ்டி ஒன்று சேர்ந்துகொண்டது. யார் வம்புக்கும் போகாத, நாலுபேர் நடுவில் வாயைத்திறக்காத நான், தற்செயலாகத்தான் அதில் பதிவுபெறாத உறுப்பினன் ஆனேன்.
என் வகுப்பில் விளையாட்டோ, பேச்சுப் போட்டியோ, எக்ஸ்கர்ஷன் போகும்போது ஏதாவது வாங்கிவரவேண்டுமோ எல்லாவற்றிற்கும் முதலில் நிற்பவன் சீனா என்றும் சீனன் என்றும் அறியப்படும் ஸ்ரீநிவாசன்தான். பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேராமல், அடுத்த வருடம்தான் சேரப்போகிறேன் என்றான். மதிப்பெண் எல்லாம் ஒரு நல்ல கல்லூரியில் பி. யூ. ஸி யில் இடம் கிடைக்கக்கூடிய அளவிற்கு இருந்தது. முயன்றிருந்தால் அவன் மற்றவர்களைப்போல சென்னை, திருச்சி அல்லது மதுரையில் கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். அவனுக்கு நெருங்கிய உறவினர்கள் அந்த ஊர்களிலெல்லாம் இருந்தார்கள்.
அவனது சகோதரி திருமணமாகிப் பிள்ளைப்பேறுக்காக பிறந்தவீடு வந்திருந்தாள். அப்பா ஒரு சிறு வியாபாரி. சற்று உடல்நலம் குன்றியவர். இவன் வீட்டிலிருந்தது எல்லோருக்கும் உதவியாய் இருந்தது என்றுதான் ஒரு வருடம் படிப்பையே விட்டானோ என்று தோன்றும்.
ஒருநாள் மாலை நூலகத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த என்னை சீனா கூப்பிட்டான். கொஞ்சம் தன்னுடன் வரமுடியுமா என்று கேட்டான். எனக்கு வேறு வெட்டிமுறிக்கிற வேலை இல்லை. ஏன் என்றுகூடக் கேட்காமல் அவனுடன் போனேன்.
எங்கள் ஊர் கோடியில் ஒரு பூட்டிய கட்டிடம் இருந்தது. அதைக் கிட்டங்கி என்று சொல்வார்கள். ஒரு வெளியூர் வியாபாரி அக்கம்பக்கம் கிராமங்களில் கொள்முதல் செய்த பொருட்களைச் சேர்த்து வைக்க அந்தக் கட்டிடத்தை வாங்கியிருந்தார். சற்று அதிக விலைக்கு வாங்கியதாகச் சொல்வார்கள்.
அவர் வந்தால் அந்தக் கட்டிடத்திலேயே ஒரு அறையில் தங்கிக் கொள்வார். கொள்முதல் சீசன் முடிந்ததும் காலிசெய்து பூட்டிவிட்டுப் போவார். திரும்பவும் சீசனுக்குத்தான் வருவார். சில வருடங்களாக அவர் வரவும் இல்லை, அந்தக் கட்டிடம் திறக்கப்பட்டதும் இல்லை. ஐந்து வருட வீட்டுவரி மணியார்டரில் வந்துவிட்டதாம். எங்களுடையது நகரசபை அல்ல. டவுன் பஞ்சாயத்து என்று சொல்லப்படும் பேரூராட்சி. ஊருக்கு ஒதுக்குப் புறத்தில், சுற்றிலும் காலியிடமும் மரங்களும் கொண்டது அந்தக் கட்டிடம். இது போன்ற இடங்களில் சமூக விரோதச் செயல்கள் தலைதூக்கும் என்கிற பயத்தில் அந்தப்பகுதி மக்கள் அதனை நன்றாகக் காபந்து செய்துவந்தார்கள்.
அங்கேதான் என்னைக் கூட்டிப்போனான் சீனா. போகும்வழியில் மகேந்திரன் என்னும் நபரும் சேர்ந்துகொண்டார். அவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். வெளியூர்க்காரர். சற்றுத் தொலைவில் இருந்த ஒரு கிராமத்தில் கால்நடை உதவியாளராக இருந்தாராம். அவரை அந்த ஊரில் மாடு டாக்டர் என்றுதான் அழைப்பார்களாம்.
கிட்டங்கி அருகில் போய்ச்சேர்ந்ததும் அங்கே மூன்று பேர் ஏற்கனவே இருந்தார்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டோம்.
சம்பந்தமில்லாமல் சீனா ஒரு புருடாவிட்டான். வரும் வழியில் நான் வந்து அவனைச் சந்தித்ததாகவும் வீட்டில் யாரோ விருந்தினர் வந்திருப்பதால் கூட்டிக்கொண்டு வரச் சொல்லியிருந்தார்கள் என்றும், இங்கே வந்து சொல்லிவிட்டுப் போகத்தான் தான் வந்ததாகவும் சொன்னான். மறுநாள் வருவதாகச் சொல்லி என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
அங்கிருந்தவர்களில் வரதராஜன் என்பவர் எல்லோரிலும் வயதானவர். அவர் மகனுக்கும் மகளுக்கும் திருமணமாகி இருந்தது. மனைவி வெளியூரில் இருந்த மகன் மற்றும் மகள் வீட்டிற்கு மாறிமாறிப் போய்விடுவாளாம். வணிகவரி வருமானவரி கணக்குகள் பார்த்துக் கொடுக்கும் வேலை அவருக்கு. கன்சல்டன்ட் என்று சொல்லிக்கொள்வார்.
அவர் சீனாவைப் பார்த்து, “சூயன்லாய், இன்று உனக்குப்பதிலாக இவரைப் பிணையாய் வைத்துவிட்டுப் போயேன்.” என்று என்னைக் காண்பித்தார். எனக்குக் குழப்பமாக இருந்தது. முதலில் சீனா எப்படி சூயன்லாய் ஆனான் என்று புரியவில்லை. பிணையாய் வைப்பதா!
அப்போதுதான் மகேந்திரன் குறுக்கிட்டார். “சார், நீங்க ரொம்ப பயமுறுத்தாதீங்க. தம்பி, அவர் விளையாடறார். பேச்சுத் துணைக்குத்தான் இருக்கச்சொல்கிறார். நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம். நேரமிருந்தால் கூட இரு. போகணும்னா சூயன்லாய் கூடப் போயிடு” என்றார்.
நான் சீனாவைப் பார்த்தேன்.
“நீ இருந்துவிட்டு வா. நான் போகிறேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான். சொல்லாமல் கொள்ளாமல் சபைக்கு மட்டம் போட்டால் அபராதம் உண்டாம். அதை தவிர்க்கத்தான் நாடகமாடியிருக்கிறான் சூயன்லாய்.
அந்தக் காலத்தில் சீனநாட்டில் இரு முக்கியத் தலைவர்கள். ஒருவர் மா சே துங். இன்னொருவர் சூயன்லாய். தமிழக மந்திரியாய் இருந்த கக்கன் என்னும் எளிய மனிதர் போய்வந்த ஒரே வெளிநாடு சீனா. அப்போது அவர் சந்தித்த தலைவர் சூயன்லாய். அது செய்தித்தாள்களில் வந்த சமயத்திலிருந்து சீனாவாக இருந்த ஸ்ரீனிவாசன் சூயன்லாய் ஆகிவிட்டான்.
பொதுவான அரட்டைக் கச்சேரிதான் நடந்தது. மற்ற இருவரில் ஒருவர் ஏகாம்பரம். இளைஞர். ஒரு காண்ட்ராக்டருக்கு உதவியாளராக இருந்தார். ஒருவருக்கு ஒருவர் கிண்டல் செய்துகொண்டதில் ஏகாம்பரம் நிறைய பொய் சொல்லுவார் என்று தோன்றியது. வெறும் சுவாரஸ்யத்திற்காகச் சொல்கின்ற பொய்கள் என்றும் புரிந்தது. கொச்சையாகச் சொன்னால் ‘பீலா’ விடுவாராம்.
மற்றவர் சந்துரு என்னும் வேலைதேடும் இளைஞர். ஏகப்பட்ட கனவுகளுடன் இருந்த அவருக்கு எந்த வேலை கிடைத்தாலும் அவர் தகுதிக்குக் குறைவு என்றுதான் தோன்றுமாம். “எனக்கு ஜாக்பாட் மாதிரி ஒரு வேலை கிடைக்கத்தான் போகிறது. நீங்களெல்லாம் பார்க்கத்தான் போகிறீர்கள்.” என்று அடிக்கடி சொல்வாராம்.
கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை புரிந்தது. பொழுதைக் கழிப்பதற்காக (கொல்வதற்காக?) அனைவரும் அங்கே கூடுகிறார்கள்.
சந்துரு நன்றாகப் பாடக்கூடியவர். அவர் மிக ஆர்வத்துடன் ‘கனவின் மாயா லோகத்திலே கலந்தே உல்லாசம் காண்போமே’ என்றோ ‘சாலையில புளியமரம் ஜமீன்தாரு வச்ச மரம்’ என்றெல்லாம் உணர்ச்சிததும்பப் பாடுவார்.
தினமும் சபை கலையும்போது மேலேசொன்ன சம்பூர்ண ராமாயணம் பாட்டு ‘இன்றுபோய் நாளை வாராய்’ கோஷ்டி கானமாய் பாடிவிட்டுக் கலைவார்கள்.
ஆரம்பத்தில் வாரத்தில் ஓரிரு நாட்கள் அந்தச் சபைக்குச் சென்றுவந்த நான், நாளடைவில் நிரந்திர உறுப்பினன் ஆகிவிட்டேன். ஒவ்வொருவர் குணாதிசயமும் புரிபடச் சில நாட்கள் ஆயிற்று. ரசிக்கும்படியாகவும் இருந்தது.
முதலில் வயதில் மூத்தவரான வரதராஜன்…
(இன்னும் வரும்)
பரன் + பரை —> பரம்பரை
- நமது பரம்பரை என்றால் என்ன தெரியுமா? தந்தை வழியில் ஏழாவது தலைமுறையில் வரும் பரனும் தாய் வழியில் ஏழாவது தலைமுறையில் வரும் பரையும் சேர்ந்ததுதான் பரம்பரை.
- இப்படிப் பரம்பரை பரம்பரையாக வருவதுதான்பாரம்பரியம்.
நன்றி : இணையதளம்
ராஜ நட்பு (5) – ஜெய் சீதாராமன்
அடுத்தநாள் காலை சக்ரவர்த்திதர்பாரில் அனைத்து ஆலயப்பணி அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. சக்ரவர்த்தி அழைத்ததின்பேரில் நாடகக்குழு உபதலைவர் பிங்வென், சீன மொழிபெயர்ப்பாளர், மற்றும் எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் சக்ரவர்த்தி பிங்வென்னைப் பார்த்து ‘நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா’ என்று கேட்டார். பிங்வென் ‘ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்கு வாங்மெங் நன்றாகவே பயிற்சி கொடுத்துத் தயார்நிலையில் வைத்திருக்கிறார். கலைகள் தொடர்ந்து நடக்கும். அதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன். நானும் இங்கேயே இருப்பேன். அரசே, வாங்மெங் அன்றாட சம்பவ நிகழ்ச்சிகளைக் குறித்து வைப்பது வழக்கம். அவரது இருக்கையிலிருந்து அதை இங்கே எடுத்துவந்துள்ளேன். இதோ’ என்றுகூறி இடுப்பிலிருந்து எடுத்த எழுத்தோலையை அரசரிடம் நீட்டினார்.
சக்ரவர்த்தி அதன் விவரங்களை மொழிபெயர்ப்பாளர் மூலமாய் கேட்டுத் தெரிந்துகொண்டு கண்களில் பெருக்கெடுத்தோடிய கண்ணீரைத் துடைத்தவாறே ‘கிருஷ்ணா, நீயும் இதைப்போலவே இதுவரை நடந்ததை எனக்கு எழுதிக்கொடு’ என்று ஓலையை என்னிடம் நீட்டினார்.
சக்ரவர்த்தி, கட்டிடக்கலைஞர் அதிகாரி குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சனைப் பார்த்து “விமானத்தின் வடக்குப்பகுதியில் கிழக்கு மேற்கில் இரு பெரிய கடவுள் சிலைகள் வைக்கப்படஇருக்கின்றன. அச்சிலைகள் தயார்நிலையில் இருக்கின்றனவா?”என்று கேட்க, அவை திட்டமிட்டபடித் தயாராக இருப்பதாக அவர் பதிலளித்தார். “அதில் ஒரு மாற்றம். வடகிழக்குச் சிலைக்குப்பதிலாக என் புதிய கடவுள், வாங்மெங்கின் சிலை உருவாக்கப்படவேண்டும். அவரின் பின்புறத்தில் கேடயங்களுடன் வாட்போர்புரியும் அவர் குழுவின் இரு வுஷு நடனக் குழுவினரின் உருவங்களைச் சேர்க்கவேண்டும். ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டபின் தொடங்கி அடுத்த ஏழு நாட்களுக்குள் இது முடிக்கப்படவேண்டும். இது சாத்தியமா?”என்று வினவினார்.
பெருந்தச்சன் மற்ற குழுவுடன் சிறிதுநேரம் கலந்தாலோசித்துவிட்டு, “கருங்கற்கள் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றன. குறித்த காலவரையறைக்குள் செய்துமுடிக்க எனக்கு முழுசம்மதம். தேவையான அனைத்தையும் இதில் ஈடுபடுத்த நான் தயார்”என்று பதிலளித்தார். “வாங்மெங்கின் உருவப்படம் அவர் குழுவில் பெற்றுக்கொள்ளலாம். மற்றும் அவர்களின் உதவியோடு இந்த முக்கியக் காரியத்தை ஆரம்பித்து முடித்துத் தாருங்கள்”என்று சக்ரவர்த்தி கூறினார். தர்பார் அத்துடன் கலைந்தது.
சம்பவப்பட்டியல் அதிகாரி இங்கு நிறுத்தினார். “அரசே கிருஷ்ணன் ராமனின் ஓலை இதோடு முடிவுக்கு வருகிறது”என்றவுடன் உணர்ச்சிகளைக் கிள்ளும் விறுவிறுப்பான கதையைக் கேட்டுக் கொண்டிருந்த சபையும் ஷேங்க்ஸானும் சுதாரித்துக்கொண்டனர். மன்னர் மூன்றாவது ஓலையைப் பிரித்துப் படிக்கக்கொடுத்தார். அதுவும் சீனமொழியிலேயே இருப்பதைக்கண்டு அதிகாரி தொண்டையை மறுபடி கனைத்துக்கொண்டு படிக்கஆரம்பித்தார்.
4. ராஜராஜ சோழன் ஓலை.
“ஷேங்க்ஸான் சமூகத்திற்கு வணக்கத்துடன் சோழநாட்டு மன்னன் ராஜராஜ சோழன் இன்றைய காலகட்டத்தில் எழுதும் ஓலை. ஏதோ காரணத்திற்காக ஐந்து வருடங்கள் வராமலிருந்த உங்கள் வணிகக் கப்பல் இவ்வருடம் 1010ல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இடைவெளிக்குப்பிறகு வந்திருக்கிறது. வணிகத் தலைவரிடம் இப்போதே நான் எழுதித்தரும் ஓலை இது.
வாங்மெங்கின் சிலை வுஷு நடனக் கலைஞர்களுடன் நன்றாக வடிவமைக்கப்பட்டு இரண்டாம் தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்பட்டது. உப தலைவர் பிங்வென் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி எல்லோரையும் உற்சாகப்படுத்தி வந்தது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.
மற்ற வேலைகளும் நன்றாக நடந்துமுடிந்து எங்கள் மிகப்பெரிய சாதனையான கும்பத்தையும் மேலே கொஞ்சம்கொஞ்சமாக ஏற்றி விமானத்தின் உச்சியில் பொருத்தப்பட்டு எவ்வளவோ பிரச்சனைகள், சிக்கல்கள், அரசியல் குழப்பங்கள், எதிர்ப்புகள், கலவரங்கள் முதலியவைகளை சந்தித்துத் தீர்வுகண்டு முக்கியமாக கைதிகளைக் கண்காணித்துக் கட்டுக்கோப்புடன்வைத்து வேலைவாங்கி ராஜராஜேஸ்வரம் என்னும் பெருவுடையார் கோவில் கட்டும்பணி நன்கு முடிந்து கும்பாபிஷேகமும் இனிதே நடந்தேறியது.
இதில் வாங்மெங்கின் பங்கிற்கு ஈடு எதுவும் இல்லை! அப்பேற்பட்ட மகனை ஈன்றெடுத்த உங்கள் நாட்டிற்கு என் மனமார்ந்த வந்தனம். இத்துடன் நான் உங்கள் பார்வைக்கு அவரது சிலைவடிவம், அது பொருத்தப்பட்டிருக்கும் இடம், கோவிலில் அவரது சிறிய கோவில் மற்றும் ஆலயத்தின் முழுப் படம் ஆகிய நான்கு வரைந்த படங்களை வைத்திருக்கிறேன். நான் இத்துடன் அனுப்பியிருக்கும் அன்புக் காணிக்கைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். உங்களை எங்கள் நாட்டிற்கு என் விருந்தினராக அழைக்கின்றேன். வருக வருக. வணக்கம்” – ராஜராஜ சோழன்
ராஜராஜன் அனுப்பிய சித்திரங்கள்
விரிவாக்கப்பட்ட வாங்மெங் சிலை
வாங்கமெங்கின் சிலைக் கோவில் பெரிய கோவிலில்
கோவிலின் வட கிழக்கு பகுதியில் வாங்மெங் சிலை பொருத்தப்பட்ட இடம்
ராஜராஜேஸ்வர பெருவுடையார் ஆலயம்
பைலட் படம் -டிசம்பர்
நல்ல ஸ்லீக்கான குறும்படம் ஸாரி பைலட் படம் ” களைவு”
அம்மா என்றால் சும்மாவா… ! — கோவை சங்கர்
அம்மா என்றால் சும்மாவா
அனுதினம் பணிய வேண்டாமா…!
கருவறையில் பத்துமாதம் சுமந்துநின்ற அம்மா
சீராட்டி சோறூட்டி வளர்த்துவிட்ட அம்மா
நம்மனம் நொந்தாலே பொங்கியெழும் அம்மா
நம்சுகமே தன்சுகமாய் வாழ்ந்துவரும் அம்மா !
அணுஅணுவாய் ரசித்துநமை வளர்த்துவரும் அம்மா
கண்ணியமும் ஒழுக்கமதும் போதிக்கும் அம்மா
குணக்குன்றாய் நன்மகனாய் வளர்த்துவரும் அம்மா
இணக்கமுற வாழ்ந்திடவே வழிகாட்டும் அம்மா !
பிஞ்சுநடைப் பருவத்தில் பொத்திபொத்தி வளர்ப்பவள்
பள்ளிசெலும் பருவத்தில் ஆசானாய் இருப்பவள்
பருவத்தில் தோள்கொடுத்து நன்னெறியைக் காட்டுவாள்
திருமண பந்தத்தின் சுளுவுகளைச் சுட்டுவாள் !
எப்போதும் நம்பக்கம் வாதிடுவாள் அம்மா
தப்பேதும் செய்யாமல் காத்திடுவாள் அம்மா
அப்போதும் இப்போதும் எப்போதும் அம்மா
தப்பாமல் ஆசிபல கூறிடுவாள் அம்மா !
அன்பின் இருப்பிடம் பாசத்தின் பிறப்பிடம்
இன்சொல்லால் வேய்ந்தநல் பல்கலைக் கழகம்
தனைச்சார்ந்த சுற்றார்க்கும் நல்லதையே நினைக்கும்
இன்னிசைபோல் சுகமாக வருடுகின்ற அம்மா !
அம்மா என்றால் சும்மாவா
அனுதினம் பணிய வேண்டாமா..!
புதுமை ! கண்டுபிடிப்பு !!
புதுமை.. கண்டுபிடிப்பு! சிலவற்றைப் பார்ப்போமா?
டிரைவர் இல்லாத கார் ஏற்கனவே வந்துவிட்டது! அதில் நிறைய முன்னேற்றங்கள் வரஇருக்கின்றன.
டிரோன்களும் நிறைய வேலைகளைச் செய்யவந்துவிட்டன ! (நம் ஊரிலேயே கல்யாண வீடியோக்களை டிரோன் எடுக்கிறது ). மேலும் – காட்டுத்தீயை அணைக்க, மருந்துகளை உடனேவழங்க, கொசுக்களைஅழிக்க, விமானங்களைச் சோதனையிட, கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க போன்ற மற்ற வேலைகளையும் செய்ய அது காத்துக்கொண்டிருக்கிறது!
2333 கி மீ வேகத்தில் பறக்கும் ஜெட்
24 மணிநேரத்தில் 3D பிரிண்ட் செய்யப்பட்ட வீடு !
சந்திரனுக்குச்செல்ல ‘சந்திரன் எக்ஸ்பிரஸ்’ ரெடி?
வணிக ரீதியான ராக்கெட் விரைவில்!
ரோபோட்ஸ் மனிதன் எல்லா வேலைகளையும் செய்யும்! போர்வீரன், விவசாயி, பார்மசிஸ்ட், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் நிபுணர், பத்திரிகை நிருபர், வீட்டுவேலை சமையல் உட்பட,வக்கீல், டாக்டர், வங்கி அதிகாரி இன்னும் எத்தனையோ!
ஓலைச்சுவடிகள்
(நன்றி: https://tamilvaralaru.wordpress.com/)
பாறைகளில் எழுதிவந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத்தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம்வரை பனையோலையில் எழுதுகின்றமுறை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்றன.
ஒவ்வொருவருக்கும் பாட்டெழுதும்போது குறிப்பிட்ட அளவு (விரற்கடை அளவு ) எழுத்தோலையைப் பயன்படுத்த வேண்டுமென்பதைக்கூட பாட்டியல் நூல்கள் வரையறை செய்துள்ளன. இதன்படி நான்மறையாளர்க்கு 24 விரற்றானமும், அரசருக்கு 20 விரற்றானமும், வணிகருக்கு 18 விரற்றானமும், வேளாளர்க்கு 12 விரற்றானமும் இருக்கவேண்டும் என்று கீழ்க்காணும் கல்லாடனார் வெண்பாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே எழுதிய ஓலையைப்பற்றிச் சீவகசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளன.
-
- மாதவி கோவலனுக்குக் கோசிகமாணி வாயிலாக அனுப்பிய ஓலை அனைவரும் அறிந்ததே. அவை பெரும்பாலும் பனையோலையே என்று ஊகிக்கப்படுகிறது.
கிராமசபைகளில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்ததற்கு அவர்கள் பெயர்களை ஓலைகளில் எழுதிக் குடத்திலிட்டுப்பின் அவற்றை எடுத்து முடிவுசெய்யும் நிகழ்ச்சியாகிய குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுத்தல் என்ற செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகிறது
- மாதவி கோவலனுக்குக் கோசிகமாணி வாயிலாக அனுப்பிய ஓலை அனைவரும் அறிந்ததே. அவை பெரும்பாலும் பனையோலையே என்று ஊகிக்கப்படுகிறது.
எழுத்தோலைகளில் அமைப்பு, செய்தி போன்றவைகளுக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட்டன.
*நீட்டோலை
திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை “நீட்டோலை” என அழைக்கப்பட்டன.
*மூல ஓலை
ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக்கொள்ளும் முறை அந்தக்காலத்திலேயே இருந்துள்ளது. இந்த ஓலைகளை “மூல ஓலை” என அழைத்தனர்.
*சுருள் ஓலை
ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணிந்துவந்த சுருள்வடிவமான காதோலைபோல் சுருட்டிவைத்துப் பாதுகாக்கப்பட்டன. இவை “சுருள் ஓலைகள்” எனப்பட்டன.
*குற்றமற்ற ஓலை
மூளியும் பிளப்பும் இல்லாத ஓலை “குற்றமற்ற ஓலை” எனப்பட்டது.
*செய்தி ஓலைகளின் வகைகள்
எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக்கொண்டும் அவை தனிப்பெயர்களில் அழைக்கப்பட்டன.
*நாளோலை
தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை “நாளோலை” எனப்பட்டது.
*திருமந்திர ஓலை
அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை “திருமந்திர ஓலை” எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார். அரசனது ஆணைதாங்கிய எனப்பொருள்படும்
*மணவினை ஓலை
திருமணச்செய்தியைத் தெரிவிக்கும் ஓலை “மணவினை ஓலை” எனப்பட்டது. இதன்மூலம் திருமணச்செய்தி உற்றார் உறவினர்க்குத் தெரியப்படுத்தியது.
*சாவோலை
இறப்புச் செய்திகளைக்கொண்டு சென்ற ஓலை “சாவோலை” எனப்பட்டன.
பின்வரும் விகிதத்தில் இந்தியாவில் ஓலைச்சுவடிகள் உள்ளன:
மருத்துவம் – 50%
சோதிடம் – 10%
சமயம் – 10%
கலை, இலக்கியம் – 10%
வரலாறு – 5%
இலக்கணம் – 5%
நாட்டுப்புற இலக்கியம் – 10%
சாதாரண பனைமரம் வருடத்திற்கு ஒருமுறை காய்காய்க்கும். ஆனால், அரியவகையான தாழிப்பனை வாழ்நாளில் ஒரே ஒருமுறைமட்டுமே காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய காலத்தில் சுவடிகள் எழுத இந்த மரத்தில் இருந்து பெறப்படும் ஓலைகளைத்தான் பயன்படுத்தினர்.
தஞ்சையில் ஓலைச்சுவடி பயிலரங்கம் நடத்தப்பட்டது.
தஞ்சை சரஸ்வதி மஹாலில் பல ஓலைச்சுவடிகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உ வே ஸ்வாமிநாத அய்யர் பழந்தமிழ் நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றை ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளை ஆராய்ந்த பின்னரே வெளியிட்டிருக்கிறார்.
நமது மக்களுக்கு நன்றாகத்தெரிந்த ஓலை -நாடி ஜோதிடம். பழைய ஓலைகளைவைத்து அவர்கள் காட்டும் சித்துவேலைகளைப் புரிந்துகொள்ள நமக்கு ஒரு ஜன்மம் போதாது!
முருகா… கவுத்துப்பிட்டியேடா…! –நித்யா சங்கர்
பதினைந்து நாட்களுக்கு முன்புவரை, அந்த ஊட்டி மார்கழி
மாதக் குளிரிலும், ஆறு மணிக்கு ‘டாண்’ என்று எழுந்து, குளித்து,
நெற்றியில் விபூதிப்பட்டையுடன் நெற்றியின் நடுவில் குங்குமமும்,
சந்தனமும் இட்டுக்கொண்டு, விளக்கேற்றி அதன்முன் அமர்ந்து
அரைமணிநேரம் பிள்ளையாரப்பனுடன், திருச்செந்தூர் முருகனையும் துதிபாடி, நமஸ்கரித்துவிட்டுப் படிக்க உட்காரும் சரவணன், காலை ஒன்பது மணியாகியும் தலைமுதல் கால்வரை போர்த்திக்கொண்டு, படுக்கையில் புரண்டுபுரண்டு படுப்பதைப் பார்த்த முகுந்தனுக்கு மனதை என்னவோ செய்தது.
‘டேய்.. சரவணா… எழுந்திருடா… காலை ஒன்பது மணியாகுது..
ஸ்வாமிக்கு பூஜை செய்யவேண்டாமா…’ என்று அவனை உலுக்கி எழுப்பினான்.
மெதுவாகத் தலையில் போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு, “போடா…. ஸ்வாமியாவது… பூதமாவது… எல்லாம் ஹம்பக்..” என்று சொல்லியபடியே மெதுவாக எழுந்தான்.
திடுக்கிட்டான் முகுந்தன்.
‘டேய் என்னடா சொல்றே.. தெய்வ நிந்தனை கூடாதுடா..’
‘பின்னே என்னடா..? நாம ரெண்டுபேரும்தானே லாஸ்ட்டைம்
சென்னை போயிருந்தப்போ அந்த ஜோசியரைப் பார்த்தோம்.
அவரிடம் என் ஜாதகத்தைக் காட்டி ‘ஒரு பெரிய கம்பனியின் இம்பார்டன்ட் போஸ்டுக்கு ஒரு என்ட்ரன்ஸ் டெஸ்ட் இருக்கு.. அதுலே
ஈஸியா பாஸ் பண்ணிடுவேனான்னு கேட்டோம். அவரும் என்
ஜாதகத்தைப் பார்த்து, ஒரு மாதம் தினமும் காலையிலே எழுந்து
குளித்து, விளக்கேத்தி, பிள்ளையாரையும், திருச்செந்தூர் முருகனையும், பக்தியோடு, துதித்து வாங்க… அப்புறம் டெஸ்ட்
எழுதுங்க.. உங்களுக்கு நல்ல மார்க் கிடைச்சு ஸெலக்டும் ஆவீங்கன்னு சொன்னார்.. அவர் சொன்னபடியே தினமும் காலையிலே எழுந்து, குளித்து, பூஜை செய்துவந்தேன். ஆனா அந்த டெஸ்ட்லே நான் எக்ஸ்பெக்ட் பண்ணின மார்க் கிடைக்கலியே.. அந்த
பிள்ளையாரும், முருகனும் என்னைக் காப்பாத்தலேன்னுதானே
அர்த்தம்…?’ என்றான் சரவணன் கொதிப்போடு.
‘கூல்..கூல்.. சரவணா.. ‘சுவர் இருந்தால்தானே சித்திரம்
வரையமுடியும்’னு பெரியவங்க சொல்வாங்க கேட்டிருக்கியா..?
நீ என்ன பண்ணினே.. இந்த ஊட்டிக் குளிரிலே காலையிலே தினம்
எழுந்து குளித்துவிட்டு, வெற்று மார்போட அரைமணி நேரம்
பூஜைபண்ணினே.. இந்தக் காற்றிலே ஒரு நிமிஷம் வெளியிலே
போனாலும் உனக்கும் எனக்கும் சரமாரியா தும்மல்வந்து ஜலதோஷம் பிடிச்சுக்கும். நீ இந்தக் குளிரிலே குளிச்சு, மார்பை கவர்பண்ணிக்காம பூஜைபண்ணிட்டிருந்தே.. என்னாச்சு..? அந்த
எக்ஸாம் டேட் நெருங்கநெருங்க உனக்கு சளியும், ஜுரமும்
வந்துடுத்து. அந்த ஜுரத்தோடபோய் எக்ஸாம் எழுதினே.. நீ
எப்படி கான்ஸன்ட்ரேட்பண்ணி நல்லா எழுதி இருக்கமுடியும்
சொல்லு..’ என்றான் முகுந்தன் மெதுவாக நிதானமாக.
‘அப்போ அந்த ஜோதிடர் சொன்னது பொய்யா.. தப்பா..?’
‘இல்லெ.. அந்த ஜோசியர் சொன்னது தப்புன்னு நான் சொல்லலெ.. அவர் பொதுவாகச் சொன்னார்.. அதுவும் சென்னையில்
இருந்துகொண்டு சொன்னார்.. அந்த க்ளைமேட்டுக்கு அவர்
சொன்னது ஓகே… பட், நம்ம ஊட்டி க்ளைமேட்டுக்கு அது ஒத்-
துக்கலே..’
‘அவர்தான் காலையில் எழுந்து, குளிச்சு, சுத்தமா பூஜை
பண்ணனும்னு சொன்னாரே…’
‘ஆமாம்.. சொன்னார்.. அதாவது உடம்பும், மனதும் சுத்தமா
இருக்கணும்னு அப்படிச் சொன்னார்.. ஆனா நாம இருந்துட்டிருக்கிற சீதோஷ்ண நிலமையையும் நாம பார்த்துக்கணும்..’
‘நான் ஆராதிக்கிற அந்தக் கடவுள் எனக்கு உடம்புக்கு
ஒண்ணும் வராம பார்த்துக்கலையே.. ‘ என்றான் சரவணன் ஒரு
குழந்தைபோல.
மெதுவாகச் சிரித்தான் முகுந்தன். ‘சரவணா,,, விஞ்ஞானப்படி பார்த்தேன்னா கடவுள் ஒண்ணுமே செய்யறதில்லே.. எல்லாம்
நீதான் செய்துக்கறே.. அலாதி நம்பிக்கையோட உன் மனதை
ஒருமுகப்படுத்திக் கடவுளை தியானிக்கறெ.. அப்போ உனக்குள்
ஒரு உத்வேகமும், பாஸிடிவ் எனர்ஜியும் உண்டாகுது. உன்னுடைய ஸெல்·ப் கான்·பிடன்ஸ் லெவல் – தன்னம்பிக்கை –
ஜாஸ்தியாகுது. மனம் சஞ்சலமில்லாம, அமைதியா இருக்கு…
எக்ஸாமுக்கு மும்முரமா எல்லா போர்ஷன்ஸையும் படிக்கறே..
சஞ்சலமில்லாத, அமைதியான, தன்னம்பிக்கை அதிகம்கொண்ட
மனசு அதையெல்லாம் அப்படியே உள்வாங்கி, எக்ஸாம் ஹாலில்
குழப்பமில்லாம, அமைதியா வினாத்தாளைப் படித்து ஆன்ஸரை
எழுதவைக்குது.. இதுதான் நடக்குது…’
‘அப்போ கடவுளை தியானிக்கவேண்டாம்னு சொல்றியா?’
‘நோ… நோ.. அப்படி நான் சொல்லலே.. கடவுளை
ஆராதனைபண்ணு.. ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்..’
என்றார் ஒரு அறிஞர்.. ‘தட்டுங்கள் திறக்கப்படும்.. கேளுங்கள்
கொடுக்கப்படும்’ என்றார் ஏசுபிரான். இந்த தியானமும், ஆராதனையும், வேண்டுதலும் உன்னுடைய தன்னம்பிக்கையை
மெருகூட்ட.. அதிகமாக்க…’
‘டேய், தப்பா நெனச்சுக்காதே.. நாம ரெண்டுபேரும்தான்
எக்ஸாம் எழுதினோம்.. நான் தினமும் பூஜையெல்லாம் பண்ணினேன்.. நீ மெதுவாக எழுந்து குளித்து ஒரு நிமிடம் ஸ்வாமி
படம்முன் நின்று கண்ணைமூடி வேண்டிக்கொண்டதோடு சரி..
உனக்கு அந்தக் கடவுள் என்னைவிட ஐந்துமார்க் அதிகம்
கொடுத்திருக்காரே.. என்னை அந்த முருகன் கவுத்துப்புட்டாரே..
என்ன அநியாயம் இது..?’
கடகடவென்று சிரித்தான் முகுந்தன். ‘டேய், இது
தியானடைம் வெச்சு செய்யறதில்லே… உண்மையைச் சொல்லணும்னா நீ ‘டூ ஆர் டை’ ங்கற மனப்பான்மையிலே ‘எப்படியும்
இந்த எக்ஸாம்லே ஸ்கோர் பண்ணித்தானாகணும்னு’ இருந்ததாலே
உன் மனசுலே எப்பவும் ஒரு பயமும், ஜெயிப்போமான்னு
சந்தேகமும் இருந்துட்டே இருந்தது. உன் மனதை அமைதிப்படுத்த அதிக நேரம் தியானமும், துதிபாடலும் தேவைப்பட்டது.
பட், ஐ வாஸ் டேகிங் இட் ஈஸி.. போய் எழுதுவோம்..’கிடைத்தால்
ஹாப்பி’ங்கற மனநிலையிலே இருந்தேன். அதனாலே என்
மனம் எப்பவும் அமைதியாவே இருந்தது. இப்போ இந்த
டெஸ்டிலே ·பெயிலாயிருந்தாலும் கவலைப்பட்டிருக்கமாட்டேன்
மனம் அமைதியாகவும், உடம்பு நலமாகவும் இருந்ததாலே நான்
படிச்சதெல்லாம் ஞாபகம் இருந்தது. நல்லா எழுத முடிந்தது.
ஆனா ஜுரவேகத்துலே இருந்த உன் உடம்பு ஒத்துழைக்கலே..
நீ படிச்சதுகூட எல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டுவர முடியலே.
ஒண்ணு கவனிச்சியா.. ஆத்திகர்களுக்குத்தான் ஜெயித்துத்தான்
ஆகணும்னு ஒரு வெறியும், ஜெயிப்போமா என்ற பயமும்
அதிகம் இருக்கு. அதனாலே அவர்கள் மனத்தை அமைதிப்படுத்திக்கொள்ள அதிக பூஜைகளும், ஆராதனைகளும்
தேவைப்படுது. நாத்திகர்களுக்கோ, ‘ஜெயித்தால் சரி.. ஜெயிக்காவிட்டால் மறுபடியும் முயற்சிப்போம்’ என்ற மனப்பான்மை
அதிகம். அதனால் அமைதியாக, தன்னம்பிக்கையோடு, கடும்
உழைப்போடு முயற்சி செய்கிறார்கள். சில நேரம் ஜெயிக்கி-
றார்கள். சில நேரம் தோற்கிறார்கள்.. தோல்வியில் சோர்ந்து
போவது இல்லை. மறுபடியும் முயற்சிக்கிறார்கள். தட் ஈஸ் இட்..
ஸோ ஸிம்பிள்…’
‘ஸோ இப்ப என்னடா பண்ணறது..?’
‘நத்திங்… சூடா ஒரு கப் காபி குடித்துவிட்டு, அந்த
ரூமுக்குள்போய் ஒரு அரைமணி நேரம் அந்த பிள்ளையாரையும், முருகனையும் உன் ஆதங்கமும், ஆத்திரமும் தீர திட்டித்
தீர்த்துவிடு. அவர்கள் நம் தந்தைமார்கள். தப்பாக நினைக்க
மாட்டார்கள். உன் மனது அமைதிப்படும். பின் குளித்துவிட்டு
வார்மாக உடை அணிந்துகொண்டு உன் பூஜையைப்பண்ணு.
வரப்போற அந்தக் கம்பனி இன்டர்வியூவிற்கு பிரிபேர் பண்ணஆரம்பி.. நீ வாங்கின மார்க் குறைஞ்ச மார்க் கிடையாது. என்ன நீ எக்ஸ்பெக்ட் பண்ணின அளவு வரலே அவ்வளவுதான்.. அதை இன்டர்வியூ மார்க்லே சரிக்கட்டிடலாம்…ஸோ எபவ் ஆல் நல்லதையே நினை.. பாஸிடிவாஇரு.. உன் உழைப்பின் மேல் – தன்னம்பிக்கை மேல் – நம்பிக்கை வை. கமான் சியர் அப்.. நானும் இன்டர்வியூவிற்குப் ப்ரிபேர்பண்ண ஆரம்பிக்கிறேன்..’ என்று டேபிள் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் முகுந்தன்.
அந்த அறையை நோக்கி நடந்தான் சரவணன் – கடவுளை
நன்றாகத் திட்டித்தீர்க்க.