அட்டைப்படம் – குவிகம் ஒலிச்சித்திரம்

குவிகம் ஒலிச்சித்திரம் என்ற புதிய பகுதியை மே ஒன்றாம் தேதி முதல் துவங்கியுள்ளோம் ! அவற்றை உங்களுக்காகக் கீழே  தந்துள்ளோம்.

கேட்டு ரசித்து உங்கள் கருத்துகளை  எழுதுங்கள்! ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மாலை 6.15 மணிக்குக் குவிகம் நிகழ்வில் வெளியிடப்படும். 

spotify இல் குவிகம் ஒலிச்சித்திரம் என்று தேடினால் எல்லா எபிசோட்களும் உங்களுக்குக் கேட்கக் கிடைக்கும் 

நீங்களும் இதில் பங்கு பெறலாம் ! உங்கள் குரலில் நல்ல ஆடியோ தரத்துடன் 4 நிமிடத்துக்குள் உங்கள் கதை/கவிதை/தகவல் போன்றவற்றை ஒலிப்பதிவு செய்து kuvikampodcast@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

வாட்ஸ் அப்பில் 9442525191 என்ற எண்ணுக்கும் அனுப்பலாம். 

 

 

வ வே சு வைக் கேளுங்கள்

 

Jalamma Kids - kelvi-pathil

 

ஜூன் மாதம் 2022

 

 

1.எம். முரளி – மாதவரம்.

நீங்கள் மிகவும் சுவைத்துப் படித்த கேள்வி-பதில் பகுதி எந்தப் பத்திரிகையில் வந்தது ? ஏன்?

”கல்கண்டு” என்ற பத்திரிகையில் அதன் ஆசிரியர் தமிழ்வாணனின் “கேள்வி-பதில்” பகுதிதான் நான் சிறு வயதிலிருந்தே சுவைத்துப் படித்தது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் , முக்கியமான காரணம் அப்பகுதியில் எதைப்பற்றிய கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். பதில் கிடைக்கும். வரலாறு, இலக்கியம், அறிவியல் , ஆன்மீகம், மருத்துவம், சுயமுன்னேற்றம், கவுன்சலிங் என்று பலவிதமான கேள்விகள் வரும் . அவற்றிற்கு அவர் பதில் சொல்லும் பாங்கே தனி அழகு.

உதாரணத்திற்கு ஒன்று –

கேள்வி : ஐயா ! எனது இடது கையில் ஆறு விரல்கள் உள்ளன. நான் ஆபரேஷன் செய்து கொள்ளலாமா?

ஆபரேஷன் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் ஒருமுறை எண்ணிப்பார்க்கவும்.

 

2.கீர்த்திவாசன் – பெருங்களத்தூர்.

இராயப்பேட்டை முனிவர் என யாரைச் சொல்கிறார்கள் ?

திரு.வி.க. அவர்களுக்கே இப்பெயர் உரியது.

இல்லறத்தார் நல்லறம் காட்டும் தன் தலைவர் என்றனர். பெண்கள் எங்கள் அரண் – காப்பு என்றனர். துறவோர் எங்கள் ராயப்பேட்டை முனிவர் என்றனர். “ இப்படி எல்லாரும் ஒரே முகமாகப்போற்றப் பெற்ற ஒரு மனிதரை இதுவரை நாம் கண்டதில்லை. இனியும் காண்போமா என்பதும் தெரியவில்லை.

இன்னும் எத்தனையோ நினைவுகள் என் முன் வருகின்றன. இராஜாஜி, சீனிவாச ஐயங்கார் போன்ற தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், திலகர், காந்தி போன்ற வடநாட்டு அரசியல் தலைவர்கள், ஞானியார், கதிர்வேற் பிள்ளை போன்ற சமயத் தலைவர்கள், அறிவறிந்த தமிழ்ப் புலவர்கள். சைவ, வைணவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பெளத்த, சமணத் தலைவர்கள், வாடியா போன்ற தொழிலாளர், அன்னிபெசன்ட், அசலாம்பிகையார் போன்ற பெண் தலைவர்கள் நாள்தோறும் அவரை நாடியும் தேடியும் வந்தும், கண்டும், கேட்டும், உணர்ந்தும், உணர்த்தியும், வாழ்ந்து காட்டியும் அவருடன் நின்ற நிகழ்ச்சிகள் பல. குள்ளச் சாமியார் என்ற (சண்முகானந்தா) துறவியார் கடைசிக்காலத்தில் அவருடன் கூடவே இருந்தனர். அவர்களுடன் பழகிய நிகழ்ச்சிகள்-பேசிய பேச்சுக்கள்-செயல்கள் பலவற்றை அவரே தம் வாழ்க்கைக் குறிப்பில் காட்டியுள்ளார், காட்டாதன பல.

இவ்வாறு எல்லாரும் எல்லா வகையிலும் போற்றப் பெற்ற வகையில் வாழ்ந்த இராயப்பேட்டை முனிவர் திரு. வி. கலியாண சுந்தரனாருக்கு நாம் நிலைத்த நினைவாலயம் எடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். ” என்று டாக்டர் மு.வ. குறிப்பிடுகின்றார்.

 

3.திவ்யா ,சென்னை

தமிழிசைக்கும் இசைத் தமிழுக்கும் வேறுபாடு உண்டா ? இல்லை இரண்டும் ஒரே பொருளைத் தருகிறதா?                                   

இரண்டும் ஒன்றல்ல. தமிழிலே பாடப்படும் எல்லாப் பாடல்களும் தமிழிசை. கர்நாடக , ஹிந்துஸ்தானி ராகங்களில் தமிழில் பாடினால் அது தமிழிசைதான். ஆனால் எப்படி இசைக்க வேண்டும் என்ற இலக்கணத்தைக் கூறும் தமிழ், இசைத்தமிழ். அது மூவகைத் தமிழான இயற்றமிழ், இசைத்தமிழ் , நாடகத்தமிழ் ஆகியவற்றுள் ஒன்று. இசைத்தமிழ் பண் அதன் விரிவு, என்று இசையின் பல கூறுகளைக் கூறுவது. சங்க இலக்கியம் முதல் இவை பற்றிய செய்திகள் பல நூல்களில் உள்ளன. ஆனால் தமிழிசை பற்றி மிகுதியாகக் கூறும் நூல் சிலப்பதிகாரம். சென்ற நூற்றாண்டில் சுவாமி விபுலானந்தரால் படைக்கப்பெற்ற “யாழ் நூல்” தமிழிசை பற்றிய பல தகவல்களைத் தருகின்றது.

  1. “செம்பருத்தி”துரைராஜ்.

 வடமொழியிலோ, மற்ற பிற இந்திய மொழிகளிலோ உள்ளதுபோல்,  க, ச, ட, த, ப எழுத்துக்களுக்கு நான்கு வகைப்பாட்டில் இல்லாமல் ஒரே எழுத்தக இருப்பது சிறப்பானதா, அல்லது சங்கடமானதா?

இதிலே சிறப்பும் ஏதும் இல்லை. தமிழ்ச் சொற்களை ஒலிக்க நான்கு வகைப்பாட்டியல் தேவையில்லை. எனினும் வடமொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொண்டு எழுதும் போது அவை நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த சிக்கல் பற்றி. மகாகவி பாரதியார் கட்டுரையே எழுதியுள்ளார்.

“தமிழில் எழுத்துக் குறை”, தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள்” என்று இரண்டு கட்டுரைகள் பாரதியார் எழுதியுள்ளார். இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து “கலைமகள்” பத்திரிகையில் வெளியிட ( பிப்ரவரி 1941) உதவியவர் பாரதி அன்பர் திரு வி.ஜி, சீநிவாசன்.

பிறமொழிச் சொற்களை உச்சரிக்க தாம் கண்டுபிடித்திருக்கும் குறிப்பு முறையைப் பற்றி இக்கட்டுரைகளில் பாரதியார் பிரஸ்தாபிக்கிறார். ஆனால் அவரது குறிப்புமுறை எங்கும் வெளியிடப் படாததால் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டது நமது துரதிர்ஷ்டமாகும் என்று பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.

5.ராஜா திருப்பூர்

கிருஷ்னணைக் கண்ணன் என்று கூறுகிறோம். கண்ணன் என்ற     இந்தப் பெயர் எந்த இலக்கியத்தில்முதன்முதலாக வந்தது? 

சங்க காலத்திலிருந்தே கண்ணன் வழிபாடு தமிழ்நாட்டில் இருந்துள்ளது.. முல்லைத் திணையின் கடவுளான தெய்வம் மாயோன் என்று அறிகிறோம்.

சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர்குரவை பகுதியில் கண்ணனின் பல லீலைகள் பற்றிப் பாடுகிறார் இளங்கோ அடிகள்.

.நப்பின்னைப் பிராட்டித் திருமணம், கண்ணன் குருந்தொசித்தது, குடக்கூத்தாடியது, ததிபாண்டனுக்கு வீடளித்தது போன்ற வரலாறுகள் வடமொழி இலக்கியங்களில் காணமுடியாது – சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பழமொழி, ஆழ்வார் அருளிச் செயல்கள், பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் அஷ்டப்ரபந்தம் அகியவற்றில் உண்டு.

எந்த இலக்கியத்தில் கண்ணன் என்ற சொல் முதலில் வந்தது என்ற ஆய்வுகள் பற்றி நானறியேன். ஆனால் என்னைப் போன்ற பலர் கண்ணன் என்ற சொல்லை முதலில் அனுபவித்தது ஆழ்வார் திருப்பாசுரங்களில்தான்.

”ஆழிமழைக் கண்ணா” என்று மார்கழிமாதக் காலையில் ஆண்டாள் பாசுரத்தை எம்.எல்.வி குரலில் கேட்டதுதான் முதலில் நானறிந்த இலக்கியக் கண்ணன்.

6.சந்திரசேகர் பாஸ்டன் 

பாரதியாரின் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாடல் ஒரு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதுஎன்ற ஒரு செய்தி உலவி வருகிறது ! இது உண்மையா? 

பாடல் எழுந்த வரலாறு பற்றிப் பலர் பலவிதமாகக் கூறுகிறார்கள்.. பாவேந்தர் பாரதிதாசன் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர் பாண்டித்துரைத் தேவரின் வேண்டுகோளின் படி நடத்தப்பட்ட போட்டியில் பாரதியாரை எழுதச் சொல்லித் தானும் நண்பர்களும் வற்புறுத்தியதாகவும், பாரதியார் முதலில் அப்போட்டியில் கலந்துகொள்ள ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பிறகு தங்களின் வற்புறுத்தலால் எழுதினார் என்றும் எழுதியிருக்கிறார்.

பாரதியின் நண்பர் மண்டயம் சீனிவாசாச்சர்யாரின் புதல்வி யதுகிரி அம்மாள் எழுதிய ‘பாரதி நினைவுகள்’ என்னும் புத்தகத்தில் சென்னத் தமிழ்ச்சங்கம் ஒன்று போட்டியை நடத்தியதாகவும் பாரதியின் பாடலுக்கு மூன்றாம் பரிசு கிடைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. 

ஆனால் பாரதியைப் போட்டியில் கலந்துகொள்ளச் சொல்லிக் கடிதம் எழுதிய டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியும், போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்ற தமிழறிஞர் அ. மாதவய்யாவும் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். இரண்டு பேரும் குறிப்பிடுவது ஒன்றே என்பதால் இதையே சரியானதாகக் கருத வாய்ப்புகள் அதிகம். சோமசுந்தபாரதியா பாரதியின் தம்பி விஸ்வநாtதய்யருக்கு 7-3-1944ல் எழுதிய கடிதத்தில் இதைப் பற்றி விளக்கமாக எழுதியிருக்கிறார்.

 ‘தமிழ் இளைஞர்களுக்கு தேசபக்தியூட்டும் சிறந்த தேசியப் பாடல்களுக்கு இரண்டு பரிசுகள் வழங்கப் போவதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திரு எஸ் வி விசுவநாத ஐயர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். நாவலர் சோமசுந்தரம் பாரதிக்கு விஸ்வநாதய்யர் ஒரு கடிதம் எழுதி அவருக்குத் தெரிந்த நண்பர்களுக்குத் தெரிவித்துப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு எழுதும் படி வேண்டினார். அதன்படி சோமசுந்ததர் பாரதி பாரதிக்கும் விவேக பாநு அசிரியர் கந்தசாமிக் கவிராயர்க்கும் கடிதம் எழுதினார். நாவலரின் வேண்டுகோளின் படி பாரதி செந்தமிழ் நாடெனும் போதினிலே என்னும் பாடலை எழுதிப் போட்டிக்கு அனுப்பி வைத்தார்.

போட்டியை விடுங்கள் . பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் பின்னும் நிற்கும் அப்பாடல் அழியா வரம் பெற்ற பாடலன்றோ!

  1. சுந்தரராஜன் சியேட்டில் சென்னைகோவில்களில் உங்களை மிகவும் ஈர்த்த கோவில் எது? 

நான் தி.நகர் எனப்படும் சென்னை மாம்பலம் பகுதியில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வீட்டின் அருகே கிரிபித் ரோடில் ( தற்போது மகாராஜபுரம் சந்தானம் சாலை) உள்ள முப்பாத்தம்மன் ஆலயம்தான் என்னை இளவயதிலிருந்தே கவர்ந்த ஆலயம்.. நான் மாம்பலத்தில் வசிக்கின்ற காலம் வரை தினம் அக்கோவிலுக்குச் செல்வேன். பள்ளிக் காலத்தில் தேர்வு நேரங்களில் அம்மனை அருளை நம்பித்தான் எங்கள் மதிப்பெண்கள் இருந்தன. கோவிலிலும் மாணவ மாணவியர் கூட்டம் அலைமோதும்.

அந்தக் கோவில் பிராகாரத்தைச் சுற்றிவரும் போது நான் எழுதிய பாடல்களை “முப்பாத்தம்மன் பதிகம்” என்ற சிறுநூலாக 1972-ல் வெளியிட்டேன். அதுதான் என் முதல் கவிதை நூல். 

 

  1. ராமமூர்த்திலாஸ்ஏஞ்சலிஸ்

தனித்தமிழ் இயக்கத்தைப் பற்றி  உங்கள் கருத்து? 

டோட்டல் வேஸ்ட்.. எந்த மொழியும் தனித்தியங்க முடியாது என்பது உலக வரலாறு. தனித்தமிழ் வேண்டும் என்று சொன்ன மறைமலையடிகள் உரைநடையைப் படிப்பது கடினம்.

தனித்தமிழ் மோகத்தில் அக்காலத்தில் ஜி.யூ. போப் போன்றவர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்பை தமிழ் வளர்த்த சான்றோருள் ஒருவரான பி.ஸ்ரீ. அவர்கள் தனது நூலில் கடுமையாகச் சாடியுள்ளார். பிரிட்டனில் உள்ள “காண்டர்பரி” என்ற இடத்தை “கந்தர்புரி” என்று போப் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டி , இது போன்ற தனித்தமிழ் பித்து தேவையில்லை. பிறமொழி உச்சரிப்பை பொருத்தமான எழுத்துக் குறியீடுகளோடு தமிழில் பயன்படுத்தவேண்டும் என்பதே அவர் கருத்து.

  1. சந்திரமோகன்சென்னை

கம்ப ராமாயணம் போல வில்லி பாரதம் அதிகம்   பிரபலமாகவில்லையே! ஏன்? 

ஒரு கவிச்சக்கரவர்த்தியோடு வேறு யாரையும் ஒப்பிட முடியாது. கம்பனுக்கு நிகர் கம்பனே

மேலும் . கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 1939 ஏப்ரல் 23 ஆகிய நாள்களில் இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் தலைமையில் காரைக்குடியில் கம்பன் விழாவை நடத்தி, கம்பன் கழகத்தைத் தொடங்கினார். அதுபோல் தமிழகம் எங்கும் கம்பன் கழகம் பல்வேறு ஊர்களில் பலரால் தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கம்பன் இரசிகர்களை அது உருவாக்கியது. கம்பன் புகழ் காட்டுத்தீயாய்ப் பரவியது.

வில்லிப்புத்தூரார்க்கோ அல்லது அவர் படைத்த பாரதத்திற்கோ இது போன்ற வாய்ப்பு அமையவில்லை. ஆனால் நாட்டுப்புறப் பாடல்களிலும் கூத்துகளிலும் பாரதம் பெரும் வரவேற்பைப் பெற்றது. எனவேதான் எளிய மக்களுக்காக எழுதிய பாரதி “பாஞ்சாலி சபதம்” படைத்தான். இன்றும் புத்தாண்டில் கோவில்களில் புது வருஷப் பஞ்சாங்கம் படிப்பதும், பிறகு பாரதம் படிப்பதுமாகிய மரபு தொடர்கிறது.

10.சூரியநாராயணன், சென்னை.

சிறுகதைக்கும் நாவலுக்கும் என்ன வித்தியாசம் ?

சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் பலர் சிறுகதை , நாவல் (புதினம்) இரண்டும் படைத்துள்ளனர். பலர் அதன் இலக்கணம் பற்றியும் எழுதியுள்ளனர். நான் அப்படி விளக்கப் போவதில்லை.

சிறுகதை என்பது ஒற்றைப்பழம் போல – வாழைப்பழம், மாம்பழம், போல..

நாவல் என்பது பலாப்பழம் போல பழம் ஒன்றுதான் உள்ளே பல சுளைகள் இருக்கும். ( ஆனால் ஒவ்வொரு சுளையிலும் சுவை மாறுபடும்)

சரி நாவல்பழம் என்றால் என்ன என்கிறீர்களா ? ஒளவையைத்தான் கேட்கவேண்டும்.

 

 

 

 

குவிகம் குறுக்கெழுத்து – சாய் நாத் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் போட்டிகுறுக்கெழுத்துப் போட்டிகுறுக்கெழுத்துப் போட்டி

 

இந்த ஜூன் மாத குறுக்கெழுத்துப் போட்டிக்கான சுட்டி 

http://beta.puthirmayam.com/crossword/A495DA361F

 

16, 17 ,18  ஆகிய மூன்று நாட்களில் மின்னஞ்சலில் வரும் சரியான விடைகளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த ஒரு வாசகருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும். 

உங்கள் நண்பர்களையும் பங்கேற்கச் சொல்லுங்கள் 

சென்ற மாத  குறுக்கெழுத்தின் சரியான விடை 

1
பா
2
நா
3
ம்
4
பூ
ரி
ரோ
ஞ்
5
6
த்
தா
க்
பா
7
ச்
ரா
சி
8
கோ
9
ல்
ட்
டா
10
கா
ம்
11
சி
12
கா
சி
13
க்
போ
ன்
14
ரா
ஞ்
15
லி
டி
ஞ்
16
கா
சி
17
பா
க்
யா
சி

பங்கேற்றவர்: 11 பேர் 

சரியான விடை அனுப்பியவர் :  6   பேர் 

இந்திரா ராமநாதன், சிவகுமார், கமலா முரளி, ,மனோகர், ராமமூர்த்தி ,நாகேந்திர பாரதி  

குலுக்கல் முறையில் பரிசு பெற்றவர் : இந்திரா ராமநாதன் 

வாழ்த்துகள் ! 

 

 

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

Legend Love story of 'Paris And Helena' ( Helen Of Troy ) | Legend Love storyஹெலன் கிரேக்கக் கடவுள் ஜீயசுக்கும் லீடா  என்ற பெண்ணுக்கும் பிறந்தவள்தான் பிரபஞ்ச அழகி ஹெலன். ஜீயஸ் கிட்டத்தட்ட நம் இந்திரன் போல. லீடா வேறொருவர் மனைவி. இருந்தபோதிலும் அவள் மீது ஜீயசுக்கு தீராத காதல் வந்துவிட்டது. ஒரு நாளாவது அவளுடன் சுகித்து இருக்கவேண்டும் என்ற தணியாத ஆசை வந்துவிட்டது. ஆசை வெட்கம் அறியாதல்லவா? ஜீயஸ் ஒரு அண்ணப்பறவையில் வடிவில் சென்று லீடாவிடம் கூடினான்.

விளைவு சாதாரணக் குழந்தை போலல்லாமல் லீடா முட்டை இட்டு குஞ்சு பொறித்தாள். அவளே நம் இதிகாசத்தின் நாயகி ஹெலன். அழகு என்றால் சொல்ல முடியாத அழகு,

இப்படிப்பட்ட அழகியை அடைய எண்ணற்றவர் போட்டியிட்டாலும் கடைசியில் கிரேக்கத்தின் முக்கியப் பகுதியான ஸபாரட்டாவின் அரசன் மேனிலயஸ் என்பவனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அது வரமல்ல சாபம் என்பது விரைவில் மேனிலசுக்குப் புரிந்தது.

ஸபாரட்டா நகருக்கு வருகிறான் டிராய் நாட்டு இளவரசன் பாரிஸ். அங்கே அவன் கண்ட காட்சி அவன் கண்களில் அப்படியே இருந்துவிட்டது. ஹெலன் என்ற தேவதை அவன் கண் முன்னாள் நின்றபோது அவன் தன்னை மறந்தான். தான் நாட்டை மறந்தான். உலகை மறந்தான்.பார்த்த மாத்திரத்திலே அவள்தான் தன் உயிர் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. அவள் மிகவும் பராக்கிரமசாலியான  ஸபாரட்டாவின் அரசன் மெனிலயசின் மனைவி என்று அறிந்தபோது அவன் அடைந்த துயரம் அளவே இல்லை. ஆனால் ஆசை அதிகமாகும் போது அவள் அடுத்தவன் மனைவி என்ற எண்ணம் மறைந்து போனது . அவளும் இப்பேர்ப்பட்ட அழகனைக் கிரேக்க சாம்ராஜ்யத்திலேயே கண்டதில்லை. அவள் மனம் ஒரு கணம் தடுமாறியது. அந்தக் கணம் பாரிஸுக்குப் போதுமானதாக இருந்தது. அவளைக் கடத்திக் கொண்டு இலியம் என்ற தன் நாட்டுக்குச் செல்கிறான். அவளை அங்கே சிறை  வைக்கிறான்.

இது நம் ராமாயணத்தின் கிரேக்க வடிவம் என்று பலர் கூறுவது காதில் விழுகிறது.

சீதை  – ஹெலன்

ராமன் – மெனிலியஸ்

ராவணன் – பாரிஸ்

இலங்கை – இலியம்

அடுத்தவன் மனைவியைக் கடத்திக் கொண்டு செல்லல்தான் இரு  இதிகாசங்களுக்கும் மையக் கருத்து.ஆனால் இராமாயணக் கற்பு நெறி வலியுறுத்தப்படாமல் ஹெலேனே விரும்பி பாரிஸ் கூட ஓடிப்போய்விட்டாள் என்றும் ஒரு கிளைக் கதையும் உண்டு,

சீதைக்காக ராமன் ஹனுமான், சுக்ரீவன் , அங்கதன் ஜாம்பவான் போன்றோருடன் படை திரட்டிப் போர் புரிந்து இராவணனை  வதம் செய்து சீதையைச்  சிறை மீட்பது நம் ராமாயணம்.

இலியட்டிலும் போர் நடக்கிறது. கிரேக்கப்படைகளுக்கும் டிராய் நகர டிரோஜன் படையினருக்கும்.   ஆனால் மெலிலியஸ் தன் அண்ணன் அகமெம்னனைப் போருக்கு அனுப்புகிறான். அவன்தான் கிரேக்கப் படைகள் அனைத்துக்கும் தளபதி.  கிரேக்கப் படை புறப்படுகிறது . அனைத்தும் கப்பற்படை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பலில் கிரேக்கப்படை புறப்படுகிறது.

கிரேக்கப்படையில் இருக்கும் இன்னொரு மாபெரும் வீரன் அக்கிலியஸ். அவன்தான்  கதையின் நாயகன். பொன்னியின் செல்வர்  இருக்க   வந்தியத்தேவனை  கதாநாயகனாக கல்கி படைத்தது போல இங்கே ஆகிகிலீஸ் வீரதீரச் செயல் புரியும் நாயகனாக படைக்கப்பட்டிருக்கிறான். இந்த ஆக்கிலீஸ் நமக்கு முனனரே அறிமுகம் ஆனவன்தான். .தீட்டிஸ் கடல் தேவதைக்கும் பீலியஸ் என்ற மானிடனுக்கும் பிறந்தவன் அக்கிலீஸ் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவன் குழந்தையாக இருக்கும்போதே இறவாவரம் பெறவேண்டிப்  புனிதமான பாதாள தண்ணீரில்  அவனைக் காலைப் பிடித்துக் குளுப்பாட்டியவள் அல்லவா அவன் தாய்!

அந்த அக்கிலீஸ் கிரேக்கப்படையின் மாபெரும்  தளபதி. அவன் வீரத்தைக்கண்டு மன்னன் மெனிலயஸ் மட்டுமல்ல கிரேக்கப்  படைத்தலைவன் அகமெம்னனும் அவன் மீது பொறாமைப் பட்டார்கள். இருந்தாலும் அவர்களுக்கு  ஹெலனை மீட்க பலம் வாய்ந்த டிராய் நாட்டுடன் போராட அக்கிலீஸின் உதவி மிகவும் அவசியம் என்பதால் அவனுடைய கோபாவேசத்தைப் பொறுத்துக் கொள்கிறார்கள்.     

ஆனால் ஒரு கட்டத்தில் தலைவன் அகமெம்னனுக்கும் அக்கிலீஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு பயங்கரமாக வெடிக்கிறது. அதனால் அக்கிலீஸ் இறுதிக் கட்டத்தில்  போரில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறி படையைவிட்டு வெளியேறுகிறான்.

ஆனால் அக்கிலீஸின் உயிர்  நண்பன் பெட்ரோக்குளஸ் போரில் கலந்துகொண்டு டிரோஜன் வீரர்களால் கொல்லப்பட்டான் என்பதை அறிந்ததும் அக்கிலீஸ் வெகுண்டு எழுகிறான்.அவன் சாவுக்குக் காரணமான டிரோஜன்  படையின் சேனைத்தலைவன் ஹெக்டர் என்பவனைக் கொள்கிறான்.  ஹெக்டரின் மரணத்தில் கிரேக்க டிரோஜன் யுத்தம் முடிவடைகிறது. 

இது கிரேக்கப் படைகளுக்கும் டிரோஜன் படைகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் மட்டுமல்ல. நமது மகாபாரதத்தைப் போல கடவுளர் சிலர் கிரேக்கர்களுக்கு ஆதரவாகவும் சிலர் டிரோஜன் வீரர்களுக்கு ஆதரவாகவும் செயல் பட்டனர். அதனால் இந்த யுத்தத்தின் பரிணாமம் பல வடிவில் பிரதிபலித்தது. 

பத்து ஆண்டுகள் நடந்த இந்த யுத்தத்தில் கடைசி ஐம்பது  நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளை விவரிக்கும் நூலே  ஹோமர் எழுதிய  இலியட் என்ற மகா காவியம் 

முக்கியப் பாத்திரங்கள்

 

(கிரேக்கர்கள்)

 

அக்கிலீஸ்  – தளபதி

அகமெம்னன் – சேனாதிபதி

அஜாக்ஸ் – சின்ன அஜாக்ஸ் , பெரிய அஜாக்ஸ் என்று இருவர் உண்டு. 

ஆட்டோமிடன்  – அக்கிலீஸின் நண்பன் தேரோட்டி

கல்காஸ் – நடக்கப்போவதை முன்னரே கூறும் சோதிடன்

டயமீடிஸ் – கப்பல் படை உப தலைவன்

யூரிபைலஸ் – கிரேக்கப் படை வீரன்

ஹெலன் – கதாநாயகி இலியட் போரின் காரண கர்த்தா

ஹெர்குலிஸ் – கிரேக்க புராணத்தின் தலை சிறந்த வீரன்

லாபித்துக்கள்  –

மெக்கேயான் – படை மருத்துவன்

மெனிலயஸ் – ஸ்பார்ட்டாவின் மன்னன் – ஹெலனின் கணவன்

மெனீட்டியஸ்  – பெட்ரோக்குளஸஸின் தந்தை

ஓடிஸியஸ் – ஹோமரின் ஓடிஸி என்ற இதிகாசத்தின் நாயகன்

பெட்ரோக்குளஸ் – அக்கிலீஸின் உயிர்  நண்பன்

பீலியஸ் – அக்கிலீஸின் தந்தை

பீனிக்ஸ் – அக்கிலீஸின் ஆசிரியன் -நண்பன்

 

டிரோஜன்களும் அவர்களது  ஆதரவாளர்கள்

 

ஈனியாஸ் – அப்ரோ டைட்டிஸ் தேவதையின் மகன் – ஹெக்டரின் வலது கை  வர்ஜில் எழுதிய ஈனியட் என்ற இதிகாசத்தின் நாயகன்

ஆண்ட்ரோமக்கி – ஹெக்டரின் மனைவி

ஆண்டினார் – டிரோஜன் தலைவன்

பிரிசிஸ் – ஆக்கிலீஸின் அடிமைப் பெண்

கஸ்ஸான்ட்ரா – ஒரு தீர்க்கதரிசி –

க்ரிசிஸ் – அப்பலோலோ கோவில் பூசாரியின் மகள்

டெய்போபஸ் – டிரோஜன் தலைவன்

டோலன் – பணக்கார டிரோஜன் இளைஞன்

ஈட்டியான் – ஆண்ட்ரோமக்கியின் தந்தை 

ஹெக்காபி – பிரியமின் மனைவி – ஹெக்டர் – பாரிஸ்   – ஹெலீனஸ்  இவர்களின் தாய்

ஹெக்டர் – டிரோஜன் படைத் தலைவன்

ஹெலீனஸ் –       பிரியமின் மகன்

இடாயூஸ் – பிரியத்தின் அறிவிப்பாளன்

அயலஸ் – பிரியத்தின் தாத்தா

லேமேடன் – ஆரம்பகால டிரோஜன் மன்னன்  -பிரியமின் தந்தை

பாஸ்டாரஸ் – டிரோஜானின் ஆதரளவாளன். நம்பிக்கை துரோகி

பாரிஸ் – ஹெலனைக் கடத்திப் போரை உருவஈக்கிய டிரோஜன் இளவரசன்

பிரியம் – டிராயின் வயதான அரசன்

சர்ப்பிடான் – ஜியூஸின் மகன் -டிரோஜன் ஆதரவாளன்

 

கடவுளர்கள்

 

அப்ரோடைட்டி – ஜியூஸின் மகள் . ரோமானியர் இவளை வீனஸ் என்று அழைத்தார்கள்

அப்போலோ  – ஜியூஸின் மகன் -டிரோஜன்  ஆதரவாளன்

ஏரிஸ் – ஜியூஸ்-ஹீரா மகன்

ஆர்டிமிஸ் –  ஜீயஸ் லீட்டோ மகள்

ஆதீனி – ஜியூஸின் முதல் மகள் மனித உருவும் மீனின் வாலும் கொண்டவள்

கரொனஸ் – டைட்டன்களின் அரசன் 

டெலுஷன் – ஜியுசின் மகள்

அய்லஸ்தியா  – ஹீராவின் மகள்

ஃப்யூரிகள் – பாதாள உலகின் கடவுள்கள்

ஹயடிஸ் – கிரெனஸ் -ரியா இவர்களின் மகன்

ஹெபைஸ்டஸ் – ஜியூஸ் -ஹீரா விண் மகன்

டெல்பி – புனிதமான நகரம்

ஒலிம்பஸ் – கைலாய மலை போல  ஒரு மலை     

ஹீபி – ஜியஸ் -ஹீராவின்  மகள்

ஹீரா – கிரெனஸ் -ரியா இவர்களின் மகள் – ஜியூஸின் சகோதரி/மனைவி

ஹேர்மீஸ்- ஜியூஸ் -மாயா மகன்

அய்ரிஸ் – வானவில் – தூதுவன்

லீடோ – அப்போலோ ஆரடிமிஸின் தாய்

மியூஸ் – நினைவற்றலின் தேவதை

ஓஷன் – ஆறு கொண்ட கடவுள்

பொசைடன் –   கிரெனஸ் -ரியா இவர்களின் மகன்

பெர்சபோனி – அழகான பெண் கடவுள்

ஸ்டிரைபி – எரிஸின் சகோதரி

தீட்டீஸ் – அக்கிலீஸின் தாய்

டைடன் கள் – முதற்கடவுள்கள்

சாந்தஸ் – ஆற்றின் கடவுள்

ஜியூஸ் – தலைக் கடவுள்    

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

ராஜராஜன்- போர்க்கோலம்

பனித்துளி...: 2015வெற்றிகளால் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் சில மன்னர்கள்.
படைப்புகளால் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் சிலர்.
இரண்டும் சேர்ந்தால் அவர்கள் சரித்திரத்தில் ஒரு சிகரம் அமைப்பார்கள்.
ஒருவர் நரசிம்ம பல்லவன் – கடற்கரையில் அழியாத கோலங்களைக் கல்லால் எழுப்பினான்.

இன்றைய நாயகன் – கலையார்வமும், பக்தியும், செல்வமும், வீரமும் நிறைந்த நமது இராஜராஜன் – தஞ்சைப்பெரிய கோவில் எனும் அழியாத ஆலயத்தை உருவாக்கினான். அதைச் சொல்வதற்கு முன் அவனது வெற்றிகளை முழுவதுமாகச் சொல்வோம். நாம் இதுவரை காட்டியதெல்லாம் ஒரு சிறு கோடு தான். இன்று ஒரு ரோடு போடுவோம்.
அந்த ராஜபாட்டை இதோ.

கி பி: 991
போர்ப்பார்வையைத் தெற்கு நோக்கித்திருப்பினான்.
இலங்கை!

இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் – தனது சேர பாண்டியப் போரில், தனது எதிரிகளுக்கு உதவியதை இராஜராஜன் மறக்கவில்லை. ஈழம் தனக்கு வலுவான எதிரியாக இருக்கும் போது, சேர பாண்டியர்கள் ஈழத்தின் துணையுடன் மீண்டும் மீண்டும் துளிர்த்து வருவர் என்பதை நன்கறிந்திருந்த இராஜராஜன், இராஜேந்திரன் தலைமையில் ஈழப்படையெடுப்பைத் தொடங்கினான். தோல்வியுற்ற மகிந்தன், ஈழத்தின் தென் பகுதியில் மலைப்பிரதேசமான ரோகணத்துக்குச் சென்று ஒளிந்தான். இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் – அது வடபகுதியின் நகரம்.

‘இராஜேந்திரா! நரசிம்ம பல்லவனுக்கு ஒரு வாதாபி என்றால், இராஜராஜனுக்கு ஒரு அனுராதபுரம். நீ செய்து விடு” – என்று ஆணையிட்டான்.
அவ்வளவு தான்.
இராஜேந்திரன் செயதுவிட்டான். 
அனுராதபுரம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
தீவின் மையப்பகுதியில் பொலன்னருவா என்ற இடத்தில் புதிய தலைநகரத்தை உருவாக்கினான். அதற்கு, சனநாதமங்கலம் என்று பெயரிட்டான்.தெற்கு ஆட்கொள்ளப்பட்டது.

மேற்கே, குடகு நாட்டில், பாணாசோகம் என்ற இடத்தில் கொங்காள்வ மரபு அரசனைப் போரில் முறியடித்துத் துரத்தினான். அந்தப் போரில் ‘மனிஜன்’ என்ற பெருவீரன் இராஜராஜனுக்குப் பேருதவியாக இருந்தான். அவனை அந்நாட்டுக்கு மன்னனாக்கி அவனை தனக்குக் கீழ் சிற்றரசானாக்கினான்.
பிறகு, இந்நாள் மைசூர், சேலம், பெல்லாரி பகுதிகளை அடக்கிய அந்நாள் கங்கவாடி, நுளம்பவாடி, தடிகைபாடி, துளுவம் பகுதிகளை இராஜேந்திரன் தலைமையில் சென்ற படைகள் வென்றது.இவ்வாறு, மேற்கும் வசப்பட்டது.

அடுத்த இலக்கு வடக்கு.
மேலைச்சாளுக்கிய நாடு.
மன்னன் இரண்டாம் தைலபன் மரணத்துக்குப் பின் அவன் மகன் சத்தியாசிரயன் அரசனானான். மேற்கே, கங்கவாடி ராஜ்யங்கள் சோழ ஆதிக்கத்தில் அடங்கியது, மற்றும் ஏதோ சில காரணங்களுக்காக சோழப்படையெடுப்பு நடந்தது.

இராஜேந்திரன் தலைமையில், ஒன்பது லட்சம் வீரர்கள் கொண்ட சோழர் படை புறப்பட்டது. பீஜப்பூர் ஜில்லாவின் தேனூர் அருகே பெரும்போர் நடந்தது.
சத்தியாசிரயன் யானை மேல் ஏறிப் போர் புரிந்தான்.
இராஜேந்திரன் அந்த யானையைக் குத்திக்கொல்ல ‘இராஜமல்லன் முத்தரையன்’ என்ற படைத்தலைவலனைப் பணித்தான். அந்த யானை அவனை மிதித்துக் கொன்றது। இராஜேந்திரன் சோகமடைந்தாலும் கடும் போர் புரிந்து சத்தியாசிரயனை போர்க்களத்தை விட்டு ஓட ஓடத் துரத்தினான். சோழர் படை பெருவெற்றிபெற்றது.

ஒரே போரைப்பற்றி இருதரப்பும் தங்களுக்கு சாதகமாக கல்வெட்டில் பதிவது அரசியலில் சகஜம்.

சாளுக்கியக் கல்வெட்டுகள்: “இராஜேந்திரன் படைகள் நாட்டைச் சூறையாடி, பாழ்படுத்தி, நகரங்களைக் கொளுத்தி, இளங்குழவிகள், மறையோர் என்று பாராமல் கொன்று குவித்து, கன்னியரைக் கைப்பற்றி மனைவியாராகக் கொண்டும், பெரும்பொருளை கவர்ந்தும் சென்றன” என்கிறது.
சோழக்கல்வெட்டுகள் தங்கள் அடைந்த வெற்றியை மட்டும்  கூறுகிறது.

உண்மை நிலவரம் யாரோ அறிவர்.

வேங்கிநாடு: கிருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கிடையே விரிந்த ராஜ்யம். கீழைச்சாளுக்கிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். இரு அரச சகோதரர்களில் மூத்தவன் அம்மராசன்- இளையவன் பாடபன். இருவருக்கும் ஆட்சியின்பால் தகராறு.
வேறு வேறு அரசியல் கூட்டணி அமைத்து – ராஜ்யத்தை பாதியாக்கி இருவரும் தனித்தனியே ஆண்டு வந்தனர். முப்பது வருடங்கள் வேங்கியில் குழப்பம் நிலவியது.

மூத்தவன் வழிமுறையில் வந்த இளவரசன் சக்திவர்மன், நாட்டைவிட்டு வந்து இராஜராஜனிடம் அடைக்கலம் புகுந்தான். வேங்கி நாட்டைக் கைப்பற்றும் நாளை எண்ணிக்கொண்டிருந்ததான். அவன் தம்பி விமலாதித்தன் அவனுடன் தஞ்சாவூர் வந்தான்.

அந்த நேரம், இராஜராஜன் சீட்புலி, பாகி நாடு இவற்றை (நெல்லூர் பகுதி) ஆண்ட தெலுங்குச் சோழன் வீமன் மீது படையெடுக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

சக்திவர்மனை அழைத்து, “சக்திவர்மா! இந்த சீட்புலி, பாகி நாடு இரண்டும் பராந்தக மகாராஜா காலத்தில் சோழவசமிருந்துப் பின்னர் இழக்கப்பட்டது. அதை மீட்பது எனது முதல் கடமை. பிறகு- வேங்கியை வென்று உனக்களிப்போம்” என்று கூறினான். சக்திவர்மன்: “மன்னர் மன்னா! இந்த யுத்ததிற்கு என்னை அனுப்புங்கள். உங்களுக்கு வெற்றி தரும் இந்த படையெடுப்பில் நான் பங்கு பெறவேண்டும்.

இராஜராஜன் மகிழ்ந்தான்.

“பரமன் மழபாடியானன் தலைமையில் செல்லும் பெரும் படையுடன் நீயும் செல்வாயாக! சென்று வா! வென்று வா!” என்றான்.

சக்திவர்மனின் பெருவீரம் காரணமாக அந்தப் படையெடுப்பில் சோழர்கள் வென்று அந்த நாடுகள் சோழ வசமாயின. சக்திவர்மன் மீது இராஜராஜன் பெருமகிழ்ச்சி கொண்டான்.

கி பி 999:

சிலவருடங்களில் பல மாற்றங்கள்.

இராஜராஜன் தன் மகளுக்கு குந்தவி என்று பெயர் வைத்திருந்தான். தன் அக்காவின் மீது அவன் கொண்ட பெருமதிப்புதான் காரணம்! சாளுக்கிய இளவரசன் விமலாதித்தன், வீரத்திலும் அழகிலும் சிறந்திருந்தான். இராஜேந்திரனும், விமலாதித்தனும் நெருங்கிய நண்பராயினர். வேங்கி இளவரசனும், சோழ இளவரசி குந்தவியும், தஞ்சாவூரில் ‘பழகினர்’.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி:

ஒரு இளவரசனையும், இளவரசியையும் அருகில் வைத்தால் என்ன நடக்கும்.
நீங்கள் நினைத்தது தான் நடக்கும்.
அது வெகு சிறப்பாக நடந்தது.
காதல்!
காதல் இன்பத்தைக் கொடுப்பதோடு, ஏங்கவும் வைக்கும்.

விமலாதித்தன் ‘நானோ சோழரிடம் அடைக்கலம் புகுந்த ஏழை. அவளோ சக்கரவர்த்தித்திருமகள்’ என்று ஏங்கினான்.
‘ரோஜா மலரே ராஜகுமாரி’- என்று பாடினான்.

அப்புறம்:
‘ஓடும் மேகங்களே! ஒரு சொல் கேளீரோ” என்று மேகத்திடம் தூது விட்டான்.
இராஜராஜன் கவனித்தான்.
பாடல்களை ரசித்தான்!
அவன் மனதுக்குள் மழை பொழிந்தது.
காதலை அங்கீகரித்தான்.
இந்த வேங்கி நாட்டு வேங்கைதான் தன் மகளுக்கு நல்ல மணவாளன் என்று முடிவு செய்தான்.
இருவருக்கும் மணமுடித்தான்.

“இத்துணூண்டு காதல் கதை! அதுக்கு இரண்டு பாட்டு வேற!” என்று வாசகர்கள் முணுமுணுப்பது தெளிவாகக் கேட்கிறது..

என்ன செய்வது? இது சரித்திரம் பேசுவதைச் சொல்லும் தொடர் – ரணகளத்தில் கிளுகிளுப்புக்காக எழுதப்படும் நவீனமல்லவே!

ஆனால், இந்தச் சிறிய காதல் கதை – தமிழகத்தின் சரித்திரத்தைப் பின்னாளில் புரட்டி, மாற்றி எழுதப்போவதை யாரும் அன்று அறியவில்லை. இராஜராஜனும் அறியவில்லை.

இராஜராஜனின் திக்விஜயங்கள் தொடரும். பெரியகோவில் வளரும்.

அக்கதைகள் விரைவில் வரும்.

சங்கீதமு லேது  – நாகேந்திர பாரதி

சங்கீதமு லேது  

கீர்த்தனைகளுக்கு இறையருள் கொடுத்த தியாக பிரம்மம் தியாகையர்!

எனக்கு சின்ன வயசிலே இருந்தே இந்த சங்கீதம்னா ரெம்ப ஆசைங்க. எங்க தாத்தா கோயில் பேஷ்காரா  இருந்தாரா, அடிக்கடி கோயிலுக்குப் போயி இந்த நாதஸ்வர ஓசை கேட்டுக் கேட்டு சங்கீத ஆசை வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். அதுவும் கோயில் திருவிழா நேரங்கள்லே, சுவாமி எங்க  தெருப்பக்கம், திரு உலா வர்றப்போ எல்லாம், நாதஸ்வர ஓசைக்கு தலையாட்டிக்கிட்டு எங்க தாத்தா முன்னாலே நடந்து வருவாரு. அவருக்குத் தெரியாம  வீட்டுத்  திண்ணை ஓரம்   போர்வையை இழுத்துப் போர்த்துக்கிட்டுத் தூங்கப் பார்த்தாலும் , அந்த நாதஸ்வர ஓசையும்  தவுலுச்  சத்தமும், நம்ம தலையையும் போர்வைக்குள்ளேயே ஆட  வச்சிடும். அப்ப பள்ளிக்கூடத்திலே பாட்டு வகுப்பு எல்லாம் இருந்தாலும், பாட்டு சொல்லிக்கொடுத்த ஜெயலட்சுமி டீச்சரோட சந்தன முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்க தோணுச்சே தவிர, சங்கீதம் உள்ளே  ஏறவே  இல்லை.

அப்புறம், கல்லூரி எல்லாம் முடிச்சு , வேலைக்குச் சேர்ந்தப்பறம் , இந்த ‘சங்கராபரணம் ‘ படம் வந்து சங்கீத ஆசையை மறுபடி கிளப்பி விட்டுடுச்சு. ‘மானஸ சஞ்சர ரே’ ன்னு மானாவாரியா பாடிக்கிட்டுத் திரிஞ்ச காலம் அது.  ‘சங்கரா ‘ ன்னு கத்திக் கூப்பிட்ட குரலுக்கு அந்த ஊரிலே இருக்கிற எல்லா சங்கரன்களும் திரும்பிப் பார்த்தாங்க. ஆனா சங்கீதம் நம்ம பக்கம் திரும்பிப் பார்க்கலைங்க.

அப்புறம் குடும்பத்தைக் காப்பாத்த உருப்படியா வேலையிலே கவனம் செலுத்தி இருந்திட்டு, இப்ப வேலை ஓய்வு  பெற்ற பிறகு, நம்ம  விருட்சம், குவிகம் குழுமங்கள்லே , நடத்துற மீட்டிங்கள்லே சில பேரு பாடுறதைப் பார்த்ததும்  நம்மளும் முயற்சி பண்ணிப் பார்க்கலாமேன்னு , சில சங்கீத குருமார்கள் கிட்டே போய் எனக்கு சங்கீதம் கத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டுப் பார்த்தேன். அதிலே பெரும்பாலான பேரு பெண் சிஷ்யை களுக்குத்தான்  சொல்லிக் கொடுக்க ஆர்வம் காட்டுறதாய்ச் தெரிஞ்சது. அவங்களுக்குத் தானே, வளைவு , நெளிவு, அதாவது குரல்லே , வளைவு நெளிவு சரியா வர்றது. அந்த காரணத்தினாலே இருக்கலாம்.

கடைசியா ஒரு அம்மா , எனக்கு சொல்லிக் கொடுக்க சரின்னு சொல்லிட்டு, அவங்க பல் செட்டை எடுத்துச் சரி செஞ்சிட்டு  ‘ச ரி ‘ ன்னு ஆரம்பிச்சாங்க. நான் ‘ சாரி ‘ ன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன். அப்புறம் யோசிச்சுப் பார்த்ததில்  ஒரு விஷயம் தெரிஞ்சது. இப்பத்தான் எல்லாமே யூடியூபில் சொல்லிக் கொடுக்கிறாங்களே , கத்தரிக்காய் சாம்பாரில் இருந்து, கராத்தே கத்துக்கிறது வரை  இருக்கே. அப்படின்னு தேடித் பார்த்தா, எக்கச் சக்கமா கிடைச்சுச்சுங்க.  இந்த ‘சாம்பார் ராகத்தை ‘ பத்தி, சாரி, சாமா ராகத்தைப் பத்தி எல்லோரும் பிரமாதமா சொல்றாங்களே, சில எழுத்தாளர்கள், அதை வச்சு கதை எல்லாம் எழுதி இருக்காங்களே, அதை முயற்சி செய்யலாமேன்னு , அந்த ராகத்தில் , ‘சாந்தமு லேக ‘ பாடலை ப்ராக்டிஸ் பண்ணலாமுன்னு  யூடியூப்பிலே தேடிப் பார்த்தேன்.

சில வித்துவான்கள், சாந்தமு லேக வை, சாந்தமே இல்லாமல் சத்தமா பாடி இருக்காங்க. சில பேரு , அந்த ஸாமா  சாஸ்திரிகளை விடாம, அதாவது , ஸாமா  ராகத்தை விடாம ஆலாபனை பண்ணிக்கிட்டு இருக்காங்களே தவிர, சாந்தமு லேக வுக்கு வரவே மாட்டேங்கிறாங்க. நம்மளாலே அந்த அளவு ஆலாபனை எல்லாம்  பண்ண முடியாதே, நேரடியா பாட்டுக்கு வந்து முயற்சி பண்ணத்தானே ஆசை. கடைசியிலே ஒரு வழியா  நமக்கு ஏத்த மாதிரி, ஒருத்தர் பாடியிருந்தார். அருமையா , சாந்தமா, சிரிச்ச முகத்தோட, இது ரெம்ப ஈஸி தம்பி ‘ங்கிற மாதிரி பாடியிருந்தார்.

அவரோட சேர்ந்து பாடி சாதகம் பண்ண ஆரம்பிச்சேன். என்ன பாதகம் பண்ணினேன்னு தெரியலே . திடீர்னு, வீட்டுக் கதவை யாரோ படபடன்னு தட்டுறாங்க. . ஓடிப் போய்த் திறந்தா, பக்கத்து வீட்டுக்காரர், ‘ சார் , நீங்க சாந்தமு லேக பாடுறதைக் கேட்டு எங்க வீட்டிலே சாந்தமே போயிடுது. கொஞ்சம் மெதுவாப் பாடுங்க. எங்களுக்கு இந்தப் பாட்டு வேணாம் ‘ ன்னு ,சொன்னவுடனே  சரின்னு சத்தத்தைத் குறைச்சு  வீட்டுக்குள்ளே மட்டும் கேட்கிற மாதிரி பாடினேன். ஆரம்பத்திலே வீட்டம்மா ஒண்ணும் சொல்லலே. ஆனா நான்  அந்த ‘ சாந்தமு லேக ‘ வைப் பத்துத் தடவை திருப்பித் திருப்பிப் பாடுனதும்  அவங்களாலேயும் பொறுக்க முடியலே.

ஏங்க , இதுக்காக , நான் ரோட்டிலே போயிப் பாட முடியுமா. தெருவிலே எல்லோரோட சாந்தமும்  போறது ஒரு பக்கம், நம்மளைப் பிச்சைக்காரன்னு நினைச்சு அவங்கவங்க வீட்டிலே இருக்கிற, பழைய சாதத்தையும் , ஊசிப் போன பதார்த்தங்களையும் , இரக்க உணர்வோடு நமக்கு போட வந்துட்டா , பெரிய பிரச்னையாயிடுமே . பார்க் பக்கம் போயி பாடலாம்னா , வாக்கிங் போறதுக்கு இடைஞ்சலா இருக்குன்னு  நியூசென்ஸ் கேசில் போலீசில் பிடிச்சுக் கொடுக்க சான்ஸ் இருக்கு.

வேற வழியில்லாம ரூமுக்குள்ளே போயி கதவைச் சாத்திக்கிட்டு பாட ஆரம்பிச்சேன்.  ‘சாந்தமு லேக .. ” ,அந்த வித்துவான் செய்யற மாதிரி தோள் உயர்த்தி சிரிப்போடு பாட வர்றது. ஆனா சுருதி தான் சேராமே, வடக்கேயும் தெற்கேயும் போயிட்டு போயிட்டு  வர்றது., இதிலே , அவரு , அந்த ‘ க’ வை மட்டும் இழுத்துப் பாடுறதை முயற்சி  பண்ணினா, அது ‘ கா, கா’ ன்னு வர்றது. சன்னல் பக்கம் பார்த்தா, ரெண்டு மூணு காக்கை வந்து  உட்கார்ந்து என்னையே ‘உர்’ ருன்னு  பார்க்குது. ரசிக்குதா, இல்லே கோபப்படுதான்னு ஒண்ணுமே புரியலே. எதுக்கு வம்புன்னு, ஜன்னலையும் சாத்திட்டு , பேனையும் அமத்திட்டு வேர்க்க விறுவிறுக்க சாதகம்.  பேன் போட்டா, அந்த சத்தம் வேற ‘துர்துர்ன்னு’ தொந்தரவு. ஒருவழியா, சுருதி சேர்ந்து, ‘சாந்தமு லேக, சௌக்யமு லேது ‘ வர்ற நேரத்திலே, ரூம் கதவு தட்டுற சத்தம்.

‘தாத்தா. ஐஸ் க்ரீம் வாங்கிட்டு வந்துருக்கேன். வேணுமா’ .  பேத்தியின் குரல். ஐஸ் க்ரீம் சாப்பிட்டா , குரல் போயிடும்னு சொல்றாங்களே, ன்னு ஒரு சந்தேகம். ‘ஐஸ் க்ரீமா, சங்கீதமா, ஐஸ் க்ரீமா, சங்கீதமா’ , மனசுக்குள் ஒரு போராட்டம். அப்புறம்  முடிவு, ‘இப்ப என்ன பெரிய குரல் இருக்கு, போறதுக்கு  ‘ என்று முடிவு செய்து கதவைத் , திறந்து  ஐஸ் க்ரீம் வாங்கி சப்பிச் சப்பிச் சாப்பிட்ட பிறகு மறுபடி கதவைச் சாத்தி படு பயங்கர சாதகம்.  என்ன ஆச்சர்யம். அந்த ஐஸ்க்ரீம், குரலை , வளுவளுப்பாக ஆக்கி சுருதி பிசகாமல் ஒரு வரி பாடியாச்சு .

தூங்கி எழுந்து, மறுநாள் காலை ஆரம்பித்தால் , அய்யய்யோ, தொண்டை கட்டிக்கிட்டு, ‘சார்ந்தமு லீக்க , சயர்க்க்கமு லோத்து ‘ என்னென்னமோ சத்தம், தொண்டையில் இருந்து. விடுவோமா நாம. யாரு. பிரிட்ஜில் இருந்த  மீதி ஐஸ் க்ரீமை எடுத்து சாப்பிட்டு , தொண்டையை மறுபடி வளுவளுப்பாக ஆக்கிக் கொண்டு தொடர்ந்து  சாதகம் செய்து ,ஒரு வழியா ,  ஒரு வலியா , ‘சாந்தமு லேக . சௌக்கியமு லேது , ஸாரஸ தள  நயனா, ஆஆஆ ‘ ன்னு பாடி ரெகார்ட் பண்ணியாச்சு. பல்லவி பாடியே, பல்வலி  வந்தாச்சு, அனுபல்லவி, சரணம் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்  ‘ ன்னு ரெகார்ட் பண்ணினதை குவிகம் சுந்தரராஜனுக்கு அனுப்பியாச்சு , குவிகம் ஒலிச்சித்திரத்திற்கு.

அவரும் கேட்டுட்டு , வழக்கம் போல் ‘ பிரமாதம் பாரதி ‘ ன்னு சொல்லிட்டு  குவிகம் ஒலிச் சித்திரத்திலே சேர்த்திட்டாரு. கேட்கிறவங்க, என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியலே. 

ஆனா, முன்னாலேயே  கேட்டுட்ட குவிகம் கிருபானந்தன் மட்டும் கையாலே, ரெண்டு முறை , ரெண்டா , மூணான்னு சரியா தெரியலே, தலையிலே  அடிச்சுக்கிட்டார்னு கேள்வி.

 

திரைக் கவிஞர்கள் – முனைவர் தென்காசி கணேசன்

இந்த மாதப் பாடலாசிரியர் சங்கீதகலாநிதி பாபநாசம் சிவன் 

 

பாபநாசம் சிவன்: தமிழ் தியாகய்யர்! | பாபநாசம் சிவன்: தமிழ் தியாகய்யர்! -  hindutamil.in

ராதே உனக்கு கோபம் ஆகாதடி,

மன்மத லீலையை வென்றார் உண்டோ,

வதனமே சந்திர பிம்பமோ,

உனைக் கண்டு மயங்காத பேர்கள் உண்டோ,

என்றெல்லாம் , 40 களில் வெளிவந்த காதல் பாடல்கள் , மற்றும்,

அம்பா மனம் கனிந்து மனம் கனிந்து,

பூமியில் மானிட ஜென்மம்,

சத்வ குண போதன்,

தீன கருணாகரனே நடராஜா,

போன்ற பக்திப் பாடல்களும் , தலைமுறை கடந்தும், இன்றும் ரசிக்கப்படுகின்றன. இப்படி, இசை மற்றும் பாடல் என இரண்டு பொறுப்புக்களிலும், மஹா மேதமை பெற்றவர்தான் திரு பாபநாசம் சிவன் அவர்கள்.

ஏறத்தாழ 70 திரைப்படங்களுக்கு மேலாக,மொத்தமாக 800 பாடல்களை எழுதியுள்ளார்.

கண்ணதாசன் கூறுவார் – ஆண்டாள், மாணிக்கவாசகர், வள்ளலார் ஆகியோரின் பக்திப் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு இடம் பெற்றதற்குக் காரணம் பக்திச் சுவையின் உருக்கமே. உருக்கமான எந்தப் பாடலும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன. அந்த வரிசையில் அழியா இடம் பெற்றவர் பாபநாசம் சிவன்” என்று . பாபநாசம் சிவனுக்கு மிக ஒல்லியான சரீரம் மற்றும் வசதி குறைந்த வாழ்க்கை இந்த விதமான வாழ்க்கைச் சூழலை அனுபவித்தவர்கள் கவிஞர்கள் ஆவார்கள். ஆனால், இவையே மிகுந்திருந்த சிவன், குரல் வளத்துடன் பாடுவது மட்டுமல்லாது, கவி வளத்துடன் பாடல்களைத் தாமே இயற்றிப் பாடியிருக்கிறார். எனவே தான், நூற்றாண்டு கண்ட கர்னாடக இசையுலக அதிசயம் , சிவன் என்று பாராட்டப் படுகிறார்.

தமிழ்நாட்டில், ஒரே திரை அரங்கில் 3 தீபாவளகளைக்கண்ட ஹரிதாஸ் என்ற எம் கே தியாகராஜ பாகவதர் நடித்துப் பாடிய அத்தனை பாடல்களையும் எழுதிய பெருமை திரு சிவன் அவர்களைச் சார்ந்தது.

தஞ்சை மாவட்டம் நன்னிலம் தாலுகாவில், போலகம் என்னும் கிராமத்தில் 1890 ஆம் வருடம், ராமாமிருதம்-யோகாம்பாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். ராமையா என்ற பெயர். (இவரின் சகோதரர் தான், எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணைவியான ஜானகியின் தந்தை), பாபநாசத்தில் சகோதரருடன் வசித்த ராமையா, கோயிலில் மனம் உருகிப் பாடுவதைப் பார்த்தவர்கள், சிவன் போல இருந்து பாடுகிறார் என்று கூற, ராமைய்யா என்ற பெயர் மறைந்து, பாபநாசம சிவன் என்று மாறிவிட்டது.

திருவனந்தபுரம் , பாலக்காடு என்று சென்றுவிட்டு, அப்புறம், சென்னையில் குடியேறினார். வீணை எஸ் பாலச்சந்தரின் தகப்பனார் சுந்தரம் அய்யர மற்றும், அவரின் மகன்கள் , மகள் ஆகியோர் நடித்த ‘சீதா கல்யாணம்’ என்கிற திரைப்படத்திற்கு தன் முதல் பாடல் இயற்றினார் பாபநாசம் சிவன். ஆனால், இவர் பாடல் எழுதி முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் ரத்நாவளி.

பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, ஒரு நடிகராகவும் தமிழ்த் திரையுலகிற்கு , தனது பங்களிப்பினைத் தந்துள்ளார் சிவன்.

1934ல் சினிமாவுக்குப் பாடல் எழுத ஆரம்பித்த பாபநாசம் சிவன் 1950 வரையிலும் தீவிரமாக இயங்கியிருக்கிறார். எம் கே தியாகராஜ பாகவதர், பி யூ சின்னப்பா, ஹொன்னப்ப பாகவதர், டி ஆர் மகாலிங்கம் போன்றோரின் பல படங்களுக்கு பாடல்கள் இயற்றி அவை, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. 1936ல் வெளிவந்த எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த ‘சத்திய சீலன்’ உள்ளிட்ட படங்களுக்கும், இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ – அசோக்குமார்

பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் – அசோக்குமார்

மன்மத லீலையை வென்றார் உண்டோ – ஹரிதாஸ்

அன்னையும் தந்தையும் தானே – ஹரிதாஸ்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி – சிந்தாமணி

மனமே கணமும் மறவாதே – சாவித்திரி

வதனமே சந்திரபிம்பமோ – சிவகவி

மறைவாய் புதைத்த ஓடு – திருநீலகண்டர்

இவற்றைப்போல் இன்னும் எண்ணற்ற பாடல்கள் – இப் பாடல்களெல்லாம் அக்காலத்தில் தமிழகத்தில் ஒலிக்காத இடமே கிடையாது.

பாயில் கீழே அமர்ந்து கண்களை மூடியபடி பாடிப்பாடி பல்லவியை அமைப்பார். அதற்கேற்ற படி வரிகளை அமைப்பாராம்.

கண் இழந்தால் என்ன

கடவுட்கும் என்ன

கண் இல்லையோ நம்மைக்

காக்கும் தயாளன் என்றும்,

மனமே ஈசன் நாமத்தை

வாழ்த்துவாய் – தினம் வாழ்த்துவாய்

கனவென்னும் வாழ்வில்

கலங்கி விடாதே ,

காதலை மாதரை புகழ்ந்து பாடாதே, என்றும்,

அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்

அறிவில்லாமலே நன்றி மறந்தேன்

அன்னையும் தந்தையும் தானே

பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்

தாயினும் கோயில் இங்கே – ஈன்ற

தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் ஏது. என்றும், எழுதி இருப்பது அழகு.

வதனமே சந்திர பிம்பமோ

மலர்ந்த சரோஜமோ

மின்னும் மோனத் துடி இடையாள

அன்னமோ மடப்பிடி நடையாள

புன்னகை தவள பூங்கொடியாள்

புவன சுந்தரியாள் என்றும்

கவலையை தீர்ப்பது நாட்டியக் கலையே

கணிகையர் கண்களே

மதன்விடும் வலையே

புஜமிரண்டும் மூங்கில் – தளர் நடை அஞ்சி

புருவம் இடையுடன் வளையுமே அஞ்சி என்றும்,

நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு

என் மதி மயங்கினேன் – மூன்று உலகிலும்

மன்மத லீலையை வென்றார் உண்டோ ! என்று எழுதுவார்.

சாரசம் வசீகரக் கண்கள் – சீர் தரும்

முகம் சந்திர பிம்பம் என்றும்

நடை அலங்காரம் கண்டேன்

அன்னப் பெடையும் பின் அடையும்

பொற்கொடியிவள மலரடி என்றும் காதலில் விளையாடி எழுதி இருக்கிறார்.

பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம் பெற்ற சில முக்கியமான படங்கள்:

அசோக்குமார் – 1941

சாவித்திரி – 1941

மதனகாமராஜன் – 1941

நந்தனார் – 1942

சிவகவி – 1943

ஜகதலப்பிரதாபன் – 1944

மீரா – 1945

வால்மீகி – 1946

குண்டலகேசி – 1947

அபிமன்யு – 1948

ஞானசௌந்தரி – 1948

சக்ரதாரி – 1948

தேவமனோகரி – 1949

ரத்னகுமார் – 1949

அம்பிகாபதி

புதுவாழ்வு

செஞ்சுலட்சுமி – 1958

சீதா கல்யாணம் படத்தில், 22 பாடல்கள், பவளக்கொடி படத்தில் 60 பாடல்கள், அசோக் குமார் படத்தில், 19 பாடல்கள், ஹரிதாஸ் படத்தில் 29 பாடல்கள் என பாடல்கள் தந்தவர் பாபநாசம்  சிவன் அவர்கள்..

தன்னுடைய தாயாரைத் தெய்வமாகப் போற்றியவர் பாபநாசம் சிவன். அட்சரம்கூட எழுதவோ படிக்கவோ தெரியாத தன் அன்னை, எப்படி ஆயிரக்கணக்கான பாடல்களைக் கற்றுக்கொண்டார் என்ற வியப்பு சிவனிடம் கடைசிவரை இருந்திருக்கிறது. சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள் முந்நூறுவரை பாடமாகியிருந்தது அம்மாவுக்கு. க்ஷேத்ரக்ஞர் பதங்களும், கோபாலகிருஷ்ண பாரதி போன்ற பக்த கவிகள் பலரின் பாடல்களும் அவருக்குத் தெரிந்திருந்தன. இவை தவிர, அந்தக் காலத்துப் பெண்களுக்கே உரித்தான கல்யாணப் பரிகாசப் பாடல்களும், நலங்கு, ஊஞ்சல், ஓடம், கும்மி, கோலாட்டம் போன்ற குதித்துப் பாடும் பாடல்களும் அவருக்கு அத்துப்படி!

தனக்கு வாய்த்த இசையறிவுக்கும், ஒருவகைக் குரல் இனிமைக்கும் காரணம், இத்தகைய தாயிடம் கர்ப்பவாசம் செய்யக் கிடைத்த பாக்கியமும் அவருடைய ஆசியும்தான் என்று பூரிப்புடன் கூறிக்கொள்வார் பாபநாசம் சிவன். சிவன் அவர்களின் இரண்டு மகள்கள் – திருமதி நீலா ராமமூர்த்தி மற்றும் திருமதி ருக்மினி ரமணி , இவர்களும் இசை மற்றும் பாடல்கள் என தொடர் பரம்பரையானது.

திருவையாறு ஸப்த ஸ்தான விழாவில் 1912 முதல் 1957 வரையில், 45 ஆண்டுகள் விடாமல் பஜனை நடத்தியிருக்கிறார் சிவன். 19 ஆண்டுகள் நாகையில் ஆடிப்பூர பஜனை நிகழ்த்தியிருக்கிறார் . சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிய பிறகு தனது இறுதிக் காலம் வரையில் மயிலையில் மார்கழி மாதத்திலும், பங்குனி உத்திரத் திருவிழாவிலும், மகாசிவராத்திரியின் போதும், அறுபத்து மூவர் உற்சவத்திலும் சிவன் நடத்திவந்த பஜனையில் கலந்துகொண்டு மகிழாத வித்வான்களும், ரசிகப் பெருமக்களும் இல்லை. ஆண்டவன் அளித்த திருவருள் அன்றி வேறில்லை’’ என்பார் . மியூசிக் அகாடமியில் ‘சங்கீத கலாநிதி’ விருது பெற்ற வருடம் நிகழ்த்திய தலைமை உரையின் போது, தற்போது சங்கீதம், சம்பாதிக்கும், சாதனமாகிவிட்டது. ஈசுவரார்ப்பணம் என்பது மறைந்துவிட்டது. அதனால் குருபக்தி குறைந்துவிட்டது. முன்காலத்தில் நடைமுறையிலிருந்த குருகுல வாசம் தற்போது அரிதாகிவிட்டது. பலருக்குப் பொறுமையில்லை! எனவே, நல்ல சங்கீதம் மற்றும் இசைப் பாரம்பரியம் வளரவேண்டும் என்றார்.

இவரின் கீர்த்தனைகள் புத்தக உருவில் வெளிவந்திருக்கிறது. சிந்து பைரவி ராகத்தில் இவர் இயற்றி, ஆலத்தூர் சகோதர்களால் பாடப்பட்டு, இசைத்தட்டாக வெளிவந்த பாடல் ‘சந்திரசேகரா ஈசா’. இப்பாடல் இன்றும் கூட பல மேடைகளில் கர்நாடக இசைக் கலைஞர்களால் பாடப்படுகிறது. அதேபோல,

என்ன தவம் செய்தனை யசோதா – காபி

நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா – நவரச கானடா

கண்ணனை பணி மனமே தினமே

காணக்கண் கோடி வேண்டும்… – காம்போதி

கா வாவா கந்தா வாவா… – வராளி

ஸ்ரீ வள்ளி தேவ சேனாதிபதே… – நடபைரவி

தாமதமேன்… – தோடி

கடைக்கண்… – தோடி

பாமாலைக்கு இணையுண்டோ – சுப்ரமணிய பாரதியே நீ பக்தியுடன் தொடுத்த

கார்த்திகேயா காங்கேயா… – தோடி,

இப்படி, பல பாடல்கள் , இசை உலகம் இருக்கும் வரை , இவர் பெயர் கூறும். திரை உலகில் பாபநாசம் சிவனின் காலம், நினைவில் அகலாத ஒரு பொன் வீடு.

 

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும் என்ற வரிகள், இவருக்கும் பொருந்தும்.

 

கீழே தந்துள்ள இரண்டு காணொளிகளையும் பாருங்கள். பாநாசம் சிவன் அவர்களின் பெருமை புலப்படும். 

 

 

அடுத்த மாதம் மற்றொரு கவிஞருடன் சந்திப்போம்.

 

 

தேடல் – எல் கார்த்திக்

  Yoga in Summer | The Art of Living India                         தற்செயலாக யோகா கற்றுக் கொள்ள வகுப்புக்குக் போனபோது, அதில் ஒரு பட்டப்படிப்பு படிக்க சாத்தியக்கூறு இருக்கிறது என்று தெரிந்ததும் ரொம்ப ஆர்வமாக ரெண்டு வருட படிப்புக்குப் பதிவு செய்து முதுகலை பட்டமாக யோகா  படிக்க ஆரம்பித்தான் முருகன்.

                            யோகா என்பது உடலுக்கு மட்டுமல்ல, அது மனத்தையும் வளப்படுத்தும் மனவளக்கலை என்பது படிக்கக் படிக்க புரியவந்ததிலிருந்தே எப்போதும் ஏதோ ஆத்ம விசாரந்தான் அவனுக்குள்.  எதுக்கு மனிதப் பிறவி? இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நம் பிறப்பின் ரகசியம் என்ன?  இந்த உலகில் உயிர்களுக்குள் எவ்வாறு தொடர்பு ஏற்படுகிறது? அடுக்கடுக்காகக் கேள்விகள். முக்கியமாக  நான் ஏன் பிறந்தேன்? என் பிறப்புக்கென்ன அர்த்தம்?

                           தியானத்தில் அமர்ந்து சுற்றிலும் இருக்கும் எல்லோரையும்,  எல்லாவற்றையும்  நம்மை அவற்றோடு சம்பந்தப் படுத்திக் கொள்ளாமல் ஒரு  மூன்றாம் மனிதப் பார்வையாகப் பார்க்கும்போது நிறைய விஷயங்கள் புலப்பட ஆரம்பித்தன. இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களுக்குமே ஏதோ தொடர்பு இருக்கிறது. காரண காரியம் இல்லாமல் இவ்வுலகில் எதுவும் நடப்பதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

                           பெண்களின் பாதுகாப்பிற்கு ஒரு தற்காப்புக் கலை கற்றுக் கொள்வது மிக்க அவசியம் என்று தோன்ற தன் எட்டு வயது மகளை ‘களரி’ வகுப்பில் சேர்த்தான் முருகன்.  அந்த வகுப்பு தினமும் கடற்கரையில் காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து ஏழு மணிக்கு முடியும்.  மகளை வகுப்பில் விட்டு விட்டு  வகுப்பு முடிவதற்காக காத்திருக்கும் நேரத்தில் தினமும் கடற்கரையிலேயே யோகா பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தான். அதிகாலை குளுமையான காற்றும் இதமான கடற்கரை சூழ்நிலையும்  மனதிற்கு உற்சாகமாக இருந்தன. அந்த அமைதியான இதமான சூழலில் அவனுக்குள் வழக்கமான ஆத்மவிசாரமும் தேடலும் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும்.

                           களரி வகுப்பு ஆரம்பிக்கும் முன் குழந்தைகளை ஒரு 500 மீட்டர் தூரம்  ஓட்டப்பந்தயம் ஓட வைப்பார்கள்.  கடற்கரை மணலில் குழந்தைகள் உற்சாகமாக ஓடுவார்கள். ஏதாவது குழந்தை  வகுப்பிற்கு தாமதமாக வர நேரிட்டால் அந்தக் குழந்தை தனியாக பந்தயம் ஓட வேண்டியிருக்கும்.  கடற்கரையில் ஆங்காங்கே நாய்கள் ஒரு குழுவாக  ஒன்றையொன்று துரத்தி விளையாடிக் கொண்டிருக்கும்.  அன்று வகுப்பிற்குத் தாமதமாக வந்த ஒரு ஐந்து வயது பெண் குழந்தை தனியாக 500 மீட்டர் தூரம் ஓட ஆரம்பிக்க, அவள் தன்னுடன் விளையாடத்தான் தன்னை நோக்கி ஓடி வருகிறாள் என்று நினைத்து ஒரு கறுப்பு நிற குட்டி நாய் நாலு கால் பாய்ச்சலில் அவளை துரத்த ஆரம்பித்தது. இதைக் கண்ட குழந்தை பயத்தில் அலறி பாய்ந்து ஓட ஆரம்பித்தாள்.   களரி வகுப்பில் இருந்த ஒரு பெரிய சிறுவன் சட்டென்று பாய்ந்து ஓடி அந்த நாயை விரட்டி அந்தப் பெண்ணை பத்திரமாக திரும்ப வகுப்பிற்குக் கூட்டி வந்தான்.

                           முருகன் அந்த நாயை உற்று கவனித்தான். இப்பொழுது தன் கும்பலோடு சேர்ந்து கொண்ட கறுப்பு நாய்க்குட்டியும் பதிலுக்கு அவனையே உற்றுப் பார்த்தது.  அதன் கண்களில் தென்பட்ட ஒரு தீனமான பாவம் அவனை என்னவோ செய்தது.  கழுத்தில் ஒரு பட்டை, யார் வீட்டிலோ வளர்க்கப்பட்ட நாயோ? அதன் சேட்டையை பொறுக்க மாட்டாமல் வெளியே விட்டு விட்டார்களோ? என்னை யாராவது கவனிக்க மாட்டீர்களா? என்பது போல ஒரு பார்வை.  ஆத்ம விசாரத்தில் ஆழ்ந்திருந்த அவனுக்கு, அதற்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ என்று தோன்ற ஆரம்பித்தது.

                           வீட்டிற்கு வந்தாயிற்று.  பெண்  குளித்து விட்டு ‘ஆன்லைன்’ வகுப்பிற்கு தயாராக, முருகன் கீழே தோட்டத்திற்கு வந்தான்.  அவன் வீடு தோட்டத்தோடு கூடிய பெரிய தனி வீடு.   தினமும் காலையில் சிறிது நேரம் தோட்ட வேலை செய்வது அவனுக்கு வழக்கம். தோட்டத்தில் அன்றாடம் விழும் இலைக் குப்பைகளை வாரி உரக்குழியில் போட்டு விடுவான்.   தென்னை, மா, பலா மரங்களை சுற்றி கொத்தி விட்டு நீர் பாய்ச்சி விட்டு தோட்ட மூலையில் இருக்கும் கிணற்றருகே வந்தபோது என்னவோ முனகல் சப்தம் கேட்பது போல் இருந்தது. அவர்கள் வீட்டில் கிணற்றின் மேல் ஒரு வலையைப் போட்டு மூடி வைத்திருப்பார்கள்.  அந்த வலையின் மேல் மூன்று பூனைக்குட்டிகள் தினமும் விளையாடிக் கொண்டிருப்பதை ஒரு வாரமாகப் பார்க்கிறான். இப்பொழுது பூனைக்குட்டிகளையும் காணும்.  பின்னே எங்கிருந்து முனகல்?

                           பதட்டத்தோடு ஓடிப் போய் வலையை விலக்கி கிணற்றுக்குள் பார்த்தபோது ஒரு கறுப்பு நிற நாய்க்குட்டி…..அடடா!  நாம அதிகாலையில் கடற்கரையில பார்த்த நாய் போல இருக்கே? ஆமா! கழுத்தில அந்தப் பட்டை  கூட இருக்கே…… தவறி விழுந்திருக்குமோ? ஒரு வேளை பூனைக்குட்டிகளை துரத்தி விளையாடும்போது விழுந்திருக்கலாம்.  நாய்க்குட்டி மேலே ஏறும் முயற்சியில் தன் கால் நகங்களால் கிணற்றின் பக்கவாட்டுக் கற்களை பிடித்துக் கொண்டு எம்பப் பார்த்தது.  ஊஹூம்! முடியவில்லை.  திரும்ப சறுக்கல்.  திரும்ப நகங்களால் பற்றிக் கொண்டு ஏற முயற்சி.  அவனைப்  பார்த்ததும் தன் முயற்சியை சற்றே நிறுத்தி விட்டு தீனமாக ஒருமுறை அவன் கண்களையே பார்த்தது. ‘என்னைக் காப்பாற்ற மாட்டியா?’ என்பது போல.

                           ஆனால் முருகன் கையை உள்ளே விட்டு அதைத் தூக்க முயற்சித்தபோது பயத்தினாலோ என்னவோ தன்னைக் குறுக்கிக் கொண்டு திரும்ப சறுக்கி விழுந்தது.  இப்படியே சற்று நேரம் செல்ல, காம்பவுண்ட் சுவர் வழியே இவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் பக்கத்து வீட்டுக்காரர்  என்ன விஷயம் என்று விசாரித்து அறிந்தார். “பேசாம தீயணைப்புக்காரங்களுக்கு சொல்லிடுங்க தம்பி.  அவங்க கயத்தைப் போட்டு சட்னு தூக்கிடுவாங்க!” என்றார்.

                           தீயணைப்பு குழு வந்தது.  பலவிதமான முடிச்சுகள் போட்டக் கயிற்றை உள்ளே வீசியதும் நாயின் இரு கால்கள் அதில் மாட்டிக் கொண்டது.  சற்றும் தாமதிக்காமல் அலேக்காக வெளியே தூக்கிப் போட பாய்ந்து வெளியே ஓடிய நாய் வாசலருகே வந்ததும் சற்றே நின்று, ‘நன்றிப்பா என்னைக் காப்பாத்தினதுக்கு!  நல்லா இரு!’ என்று சொல்வது போல அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து விட்டுப் பிடித்தது  ஓட்டம்.

                           முருகன் அப்படியே வீட்டு ஹாலில் உட்கார்ந்து காலையில் எழுந்ததிலிருந்து நடந்ததை மனதிற்குள் அசை போட்டான். 

                           அவன் பெண்ணிற்கு களரி வகுப்பு இல்லாவிட்டால் அவன் காலை நேரத்தில் கடற்கரைக்கு செல்ல வாய்ப்பில்லை.  அந்த நாயையும் பார்த்திருக்க முடியாது. ‘அந்த நாயை என்னைப் பார்க்க வைத்தது சற்று நேரத்திற்குப் பிறகு அதைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டட நிகழ்வா?’

                           ஒரு நாளின் ஆரம்பம் முதல் முடிவு வரை இவ்வுலகில் நடக்கும் செயல்கள் அனைத்தும்  ஏதோ திட்டமிடலுக்கு உட்பட்டு நடைபெறுகிறது.  நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் பிறவியில் ஏதோ வேலை இருக்கிறது. அதை நடத்த இறைசக்தி துணை நிற்கிறது என்பதெல்லாம் முருகனுக்குப் புரிய ஆரம்பித்தது.

                           இந்த மாதிரி நமக்குள்ளேயே  தேடித் தேடி அறிந்து கொள்ள முற்படுவதைத் தான் ‘அறிய அறிய கெடுவாருண்டோ’ என்று சொல்லியிருப்பார்களோ? என்று நினைத்தான்.  இது போல ஆராய்ந்து அறிய  தன்னை அறிய முனையும் முயற்சியில் அவனுடன் துணை நிற்கும் இறைசக்தியை மானசீகமாக வணங்கினான்.

கண்ணன் கதையமுது -8 – தில்லை வேந்தன்

(தேவகியிடம் இருந்த பெண் குழந்தையான மாயையின் கால்களைப் பற்றி ஓங்கி அடித்துக் கொல்ல கம்சன் முயன்றான்.
அக்குழந்தை அவனிடம் இருந்து நழுவி மேலே சென்று துர்க்கையாகக் காட்சி தந்தது…..)

Kansa Meets His Nemesis - Poster | Shakti goddess, Hindu deities, Durgaகம்சன் அஞ்சி நிற்றல்

தூண்டிற்பொன் மீனைப் போலும்,
சுடரெரிகொள் மெழுகைப் போலும்,
மூண்டபெரும் இடியைக் கேட்டு
முடங்கிடுமோர் அரவம் போலும்,
கூண்டுக்குள் மாட்டிக் கொண்ட
கொடியவரிப் புலியைப் போலும்,
மீண்டெழுந்த மாயை கண்டு
மெய்முழுதும் நடுங்க நின்றான்

(தூண்டிற்பொன்- தூண்டிலில் உள்ள இரும்பு முள்)

மாயை கம்சனிடம் கூறுவது

“மோதியே கொல்ல எண்ணி
மூடனே, நீயும் என்றன்
பாதமே பிடித்த தாலே
பரிவுடன் பிழைபொ றுத்தேன்;
ஆதியும் வேறி டத்தில்,
ஆற்றலாய் வளரு கின்றான்,
சாதலும் அவனால் என்றே
சற்றுநீ அறிந்து கொள்வாய்!”

(ஆதி- திருமால்)

மாயை மறைந்து, மண்ணில் பல இடங்களில் பல வடிவம் எடுத்தல்

மறைந்தனள் மாயை, இந்த
மண்ணிலே வேறு, வேறு,
சிறந்தநல் இடங்கள் தோறும்
திகழ்ந்தனள் பெயர்கள் மாறி;
அறந்தனைக் காக்க வேண்டி,
அவள்பல வடிவம் தாங்கிச்
செறிந்திடும் கோவில் கொண்ட
திருக்கதை சிலிர்க்கச் செய்யும்.

குறிப்பு:
விஷ்ணு துர்க்கை, பத்திரகாளி, விஜயா,வைஷ்ணவி,குமுதா,
சண்டிகை, கிருஷ்ணை, மாதவி, கன்னிகை, நாராயணி, சாரதா, அம்பிகா போன்ற பல பெயர்களில் மாயையைப் பல இடங்களில் அடியார்கள் வழிபடுவதை இன்றும் காணலாம்

தேவியைப் போற்றி வேண்டுதல்

( கவிக்கூற்று)

இம்மையும், மறுமை மற்றும்
இனிவரும் பிறவி எல்லாம்
செம்மையாய் வாழ்வ தற்குத்
திருவருள் புரிவோய் போற்றி!
வெம்மையாம் வினைகள் நீங்க
விதவித வடிவம் கொள்ளும்
அம்மையே, அன்பே, போற்றி!
ஆட்கொளும் தேவி போற்றி!

 

சேயெலாம் முகத்தைப் பார்க்கத்
தேம்பிடும் வேளை இங்குத்
தாயென இடங்கள் தோறும்
தந்தனை காட்சி அம்மா!
தீயெனத் தீமை யாவும்
தீர்த்திட வேண்டும் அம்மா!
ஈயென வரங்கள் கேட்டோம்
இரங்கிட வேண்டும் அம்மா!

தன் தவற்றை உணர்ந்து வருந்திய கம்சன் தேவகியிடம் கூறுவது

கடுஞ்சொல்லால் காயங்கள் தந்தேன் தங்காய்,
கனிவின்றிக் குழந்தைகளைக் கொன்றேன் தங்காய்,
கொடுஞ்செயல்கள்,கொலைச்செயல்கள் பலவும் செய்தேன்,
குற்றமென உணர்ந்துவிட்டேன், பொறுப்பாய் தங்காய்,
அடுஞ்செயலைப் புரிகின்ற அம்பாய் ஆனேன்,
ஆர்க்கின்ற வினைப்பயன்தான் எய்த வில்லாம்.
படுந்துன்பம் முடிந்தினிமேல் விடுத லைதான்
பதியுடனே அரண்மனைக்குச் சென்று வாழ்வாய்!

மாயை சொன்னதை எண்ணிக் கம்சன் தவித்தல்

பாங்காக வளர்கின்றான் வேறி டத்தில்,
பரந்தாமன் என்றவுண்மை அறிந்த தாலே,
பூங்காற்றும் புயல்போல வீசு கின்ற
போராண்மைப் பெருநாட்டின் மன்னன் கம்சன்,
தூங்காமல் அச்சத்தால் கலங்கி உள்ளம்
துடிதடித்தான், தன்னைக்கொன்(று) உயிரை இங்கு
வாங்காமல் விடமாட்டான், அதைத்த டுக்கும்
வழியறிய வேண்டுமென எண்ணம் கொண்டான்

பத்து நாள்களுக்குள் பிறந்த குழந்தைகளைக் கொல்ல அமைச்சர்கள் வலியுறுத்தல்

முத்தணிசெய் முடிசூடும் மன்னன் கம்சன்
மூண்டவற்றை அமைச்சரிடம் விளக்கிக் கூற,
அத்தனையும் கேட்டவரும் அதிர்ச்சி கொண்டார்,
ஆத்திரத்தால் அறிவிழந்தார், உடனே சொன்னார்,
“பத்தென்ற நாள்களுக்குள் பிறந்து வாழும்,
பால்மணமே மாறாத குழந்தை எல்லாம்
இத்தரையில் இங்குள்ள ஊர்கள் தேடி,
இகலரக்கர் சென்றுடனே கொல்ல வேண்டும்!”

(இகலரக்கர் – பகையுணர்ச்சி/ போர்க்குணம் உடைய அரக்கர்)

( தொடரும்)

 

 

 

 

“பொறுப்பு அலுத்தது” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

 

அன்னையின் மடியில் துயில் கொண்ட அனுபவத்தை கூற முடியுமா? - Quoraஉள்ளே நுழைந்ததும், “ராமாயி, என்னவொரு பெயர்! ரீமா, ரமா, எவ்வளவு பெயரை வைத்திருக்கலாம். அதான் இவர்கள் மேல் கோபம்” என்று பொருமினாள் ராமாயி. பக்கத்தில் வியந்து பார்த்துக்கொண்டிருந்த முதியவர் தன் அப்பா என்றாள்.

ராமாயி தனக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரிடம் அடிக்கடி தலைவலி எனச் சொல்வதால், அவர் டீமில் இருந்த நரம்பியல் மருத்துவரிடம் அபிப்பிராயத்திற்காக அனுப்பி வைத்திருந்தார்.

பரிசோதனைகளைச் செய்தபின் உடலிலோ மூளையிலோ பிரச்சினை இல்லை எனத் தெரிந்தது. தலைவலியின் காரணி புரிய, விடுவிக்க என்னைப் பார்க்கப் பரிந்துரைத்தார்கள்.

தனக்கு ஏற்பட்டிருந்த தலைவலியை யாரும் புரிந்து கொள்ளவில்லை எனத் தொடர்ந்தாள். அவள் போக்கிலேயே விட்டு சூழ்நிலையைப் பற்றி விவரிக்கச் சொன்னேன். மனம் விட்டுப் பேச, தந்தையை வெளியே உட்காரச் சொன்னேன். “சரியானா, அதுவே போதும்” எனச் சொல்லிக் கொண்டே வெளியேறினார்.

முப்பது வயதான இவள் தனியார் நிறுவனத்தின் செயலாளர். பொறுப்புகள் அதிகம். வேலை பிடித்திருந்ததால் விருப்பப்பட்டுச் செய்தாள். சம்பளம் கூடியது. வசதியான வாழ்க்கையானது. கணவன் ரவி, வழக்கறிஞர். நன்றாக வாதாடுவதால் பிரபலமாக இருந்தான். வேலைக்கு முக்கியத்துவம் தரும் தம்பதியர்!

பெண் பார்க்க வருகையிலேயே கல்யாணத்துக்கு பிறகும் உத்தியோகம் செய்வதைப் பற்றி ராமாயி தெளிவு படுத்தி இருந்தாள். ரவியின் அபிப்பிராயமும் ஒத்துப்போனதால் கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டாள்.

அப்போதே ரவியும் ராமாயியும் முப்பது வயதில்தான் குழந்தை என முடிவு செய்து கொண்டிருந்தார்கள். அவ்வாறே முதல் குழந்தை ராகினி பிறந்தாள்.

ஒன்பது மாதங்கள் ஆயிருந்தன. ராகினியின் உடல் நலன் சீராக இல்லாததால் கணவரின் வீட்டிற்கு இன்னும் திரும்பவில்லை. பிரசவத்திற்கு வந்ததிலிருந்து ரவியுடனும் இல்லை, வேலையில் பெற்ற சுகம் எதையும் இங்கு உணர முடியவில்லை என்றாள். இதற்கெல்லாம் இடையூறு ராகினியின் பிறப்பே என்றாள். குழந்தையின் தேவைகளைத் தான் பார்த்துக் கொண்டாலும் அதில் பற்றோ, பாசமோ உள்ளதோ எனத் தெரியவில்லை என்றாள், வருத்தப் படாமல்.

ராமாயிக்குப் பிரசவத்திற்குப் பெற்றோரிடம் வர விருப்பமே இல்லையாம். கணவரின் வீட்டு முறையில் பிரசவத்தை தாங்களே பார்த்துக் கொள்வது தான் குடும்ப வழக்கமாம். ராமாயி மனப்பூர்வமாக இதை வரவேற்றாள். அங்கேயே இருந்தால் கடைசி நாள் வரை வேலைக்குப் போகலாம், ரவி பக்கத்தில் இருப்பதும் உதவும் என்றாள்.

ராமாயின் பெற்றோர் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். தலைப் பிரசவத்தை தாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினதால் மாமனார் மாமியார் ஒப்புக்கொண்டார்கள். ராமாயிக்கு இஷ்டமில்லை. அழைத்து வர, நாள் கிழமை குறித்து, விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தும், வேலை இருப்பதாகச் சொல்லிக் கிளம்ப மறுத்தாள். இருமுறை இப்படியே! கடைசியில் மனமில்லாமலேயே கிளம்பினாள்.

வந்ததும், பெற்றோரால் பல வேலைகளை ஒரேயடியாகச் செய்ய முடிவதில்லை, நிதானமாக ஆகிவிட்டார்கள் என்பதைக் கவனித்தாள். ராமாயி சலித்துக் கொண்டாள். இதற்கு அங்கேயே இருந்திருக்கலாம் எனப் புலம்பினாள். வெளியே போகையில் துணைக்கு வரக் கேட்பதைக் கொஞ்சமும் ரசிக்கவில்லை. இதுவெல்லாம் தொல்லை என்று மனதில் குமுறிக் கொண்டிருந்தாள். பெற்றோர் என்பதால் ரவியிடமும் சொல்ல முடியவில்லை. தவிப்பும் வெறுப்பும் உலுக்கியது!

அடிக்கடி அங்குக் கிடைத்த சுதந்திரம், கவலைப் படாமல் இருந்ததை ஏங்கி ஞாபகப்படுத்திக் கொண்டு வருவதை விவரித்தாள். அவள், ரவி, மாமனார் மாமியார் எல்லோரும் வேலைக்குப் போவதால் சமைக்க ஒருவன் வருவான். விடியற்காலையில் அன்றைய சமையல் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுப் போவான். மற்ற வேலைகளுக்குத் தேவி வேறு.

இங்கு, அப்படி எதுவுமே இல்லை. நச்சரிப்பாகத் தோன்றியது. திரும்பிப் போக ஆவலாக இருந்தாள். குழந்தையின் உடல் நலத்திற்காக அது முடியாமல் போனதால், அதனிடம் பாசத்தைக் காட்ட முடியவில்லை,

ராமாயியின் தலைவலியை ஆராய்ந்தோம். அவசரப்படும் போதும், நெருக்கடியான வேளைகளிலும் தலை வலிக்குமாம். சூடான காப்பி அருந்தியதும் தலைவலி வந்த சுவடே தெரியாமல் போய்விடுமாம். ஏனோ ஒரு வருடமாகத் தலைவலியுடன் எரிச்சல் ஏற்படுகிறதாம். வலி கொஞ்ச நேரம் இருந்த பிறகே குறைகிறதாம். ராமாயி கூகிளில் எதையோ படித்து, தனக்கு மூளையில் ஏதோ கோளாறு என்ற முடிவுக்கு வந்தாள். ரவியைப் பார்க்க வேண்டும் என்று துடித்தாள். நாங்கள் ஆசுவாசப் படுத்தி, சரிசெய்ய ஸெஷன்கள் தேவையை என விளக்கினோம். அன்று சனிக்கிழமை, தாமதிக்காமல் திங்கட்கிழமையன்று வருவதாகச் சொல்லிக் கொண்டு போனாள்.

வந்ததோ கைக்குழந்தையுடன் ராமாயின் பெற்றோர். இங்கிருந்து சென்றதும் பயப்பட்டாளாம், ரவியைப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஊருக்குச் சென்று விட்டதாக அழுதுகொண்டே கூறினார்கள். ஒன்பது மாதமான ராகினியும் அழுகையில் சேர்ந்து கொண்டாள்.

குழந்தை அழ ஆரம்பித்ததுமே இருவரும் சமாதானம் செய்து கொண்டார்கள். வருத்தத்துடன் சொன்னார்கள், ராமாயி சென்றதிலிருந்து ராகினி அமைதியாக இருக்கிறாளாம் அம்மாவை தேடவே இல்லையாம்.

ஸெஷனை இவர்களுடன் தொடர்ந்தேன். அப்பா, மது, அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அறுபது வயதினர். ஐம்பது வயதான பிரேமா இல்லத்தரசி. ஒரே குழந்தையான ராமாயிக்கு எல்லா விதமான சலுகைகள் கொடுத்து வளர்த்தார்கள். இப்போது போலவே, தன் இஷ்டப்படி செய்வாளாம்.

அப்போதெல்லாம் ராமாயி போக்கிலேயே விட்டார்கள். எந்த விதத்திலும் கண்டிப்பு இல்லை. தானாகப் புரிந்து கொள்வாள் என இருந்தார்கள். ராகினியை விட்டுச் சென்ற பிறகே வருந்தினார்கள். திடீரென்று விமானநிலையத்திலிருந்து அழைத்துச் சொன்னது திடுக்கிட வைத்ததாம். அப்படியும் அவளை எதையும் சொல்லவில்லை.

ஸெஷன்களில் இதை மேலும் ஆராய்ந்ததில், வளர்ப்பில் செய்யலாம்-கூடாது என்ற எல்லைக் கோடுகள் இடுவதின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள்.

ராகினி சிணுங்கினாள். இருவரும், இதை-அதைத் தந்த போதிலும் நீடித்தது. அவர்கள் புரிந்து கொள்வதற்காக ராகினியின் கவனத்தைத் திருப்பினேன். உடனே கண்ணீர் விடாமல் அமைதியானாள். ஒரேயொரு தரம் என மது, பிரேமா விட்டார்கள்.

ஸெஷன் முடியும் தருணத்தில் திரும்ப ராகினி சத்தம் போட, மது பயந்து போகப் பிரமாவும் சேர்ந்து கொண்டாள். ராகினியைப் பெயர் சொல்லி அழைத்து, அவளிடம் “இல்லை” என நான் அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும் அமைதியானாள்.

ஸெஷன்களுக்கு வந்ததும் ராகினி தாவி என்னிடம் வந்துவிடுவாள். சில நிமிடங்களுக்கு அவளுடன் பேசிய பின்னரே மற்றவரிடம் திரும்புவாள்.

இதனால் கண்டிப்பின் வெவ்வேறு வகையை மது-பிரேமாவிடம் காண்பிக்க முடிந்தது. மேலும் இதைப் பற்றி உரையாடினோம். பயிலும் வழிமுறைகளை வகுத்தோம். ராமாயி திரும்ப வருவதற்குள் இவர்கள் ராகினியிடம் கெஞ்சுவதைத் தவிர்க்கும் வழிகளைப் பழக நேரம் கிடைத்தது.

இப்படியும் செய்யலாம், செய்ய முடிந்தது என உணர்ந்து இரண்டு நாட்களுக்குள் வந்தார்கள். இந்த முறை ராமாயியும் கூட வந்திருந்தாள்.

மது, பிரேமா புதிய அனுபவத்தை ஆர்வம் பொங்கப் பகிர்ந்தார்கள். அத்துடன் இங்கு வருவதற்கு முன்பு, ராமாயியை சாப்பிட்டு வரச் சொன்னார்கள். அவள் தட்டிக் கழித்து விட, ராகினிக்கு சொல்லிப் பழகிய வழிமுறைகளைச் செயல்படுத்தியதில் ராமாயி சாப்பிட்டாளாம். இதைத் தங்களது மிகப் பெரிய வெற்றி எனச் சந்தோஷம் பொங்கக் கூறினார்கள்.

மது, பிரேமா உடல் பயிற்சி செய்யாததால் உடல் சோர்வாகிறது, குழந்தை ராகினியுடன் விளையாட முடியவில்லை என வருத்தப் பட்டார்கள். வேலை செய்யவும் தடையாக இருந்தது என்றார்கள். தினமும் ஒரு மணி நடக்கலாமா எனக் கேட்டார்கள். இந்த வயதில் மருத்துவரைப் பார்த்து, பரிந்துரை கேட்டு அதன்படி செய்ய வேண்டும் என்றேன்.

மறுமுறை அவர்கள் வந்த போது, ராமாயியுடன் வந்தவர் நிதானமாகத் தன்னை ரவி என அறிமுகம் செய்து கொண்டார். மனைவியின் திடீர் ஊர் விஜயம் ஆச்சரியம் தந்தது என்றார். ஆனால் ராகினியை விட்டு வந்தது சஞ்சலம் ஊட்டியது.

உடனே படக்குன்னு ராமாயி, குழந்தை இருந்திருந்தால் அங்கு அல்லவா கவனம் நின்றிருக்கும், அதனாலேயே தனக்கென்று செய்தேன் என்று கூறினாள்.

ரவி தன் ஆதங்கத்தைப் பகிர்ந்தான். பெற்றோராகிய பின் அதன் பொறுப்பைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள, ராமாயி சங்கடம் அடைந்தாள். இதுவரை முழுக்க ஆதரவு கொடுத்த ரவி இவ்வாறு கூறுவதின் அதிர்ச்சி! எனினும், கவனமாகக் கேட்டுக் கொண்டாள்.

ராமாயி செயலை ஆராயப் பரிந்துரைத்தேன். வளரும் போது தனக்கு அளித்த சுதந்திரத்தில், எல்லைக்கோடு தனக்கு விதித்துக் கொள்ளவில்லை. இப்போது, தாய்மையையும் மீறி, தனது ஆசையைத் திருப்தி படுத்தச் சென்றதை உணர்ந்தாள்.

ராமாயியை பொறுப்புகளை வரிசைப்படுத்தி ஆராய முடிவேடுத்தோம். இவற்றைத் தவிர்க்க விட்டதை மையமாக வைத்தோம். பல ஸெஷன்களுக்குப் பிறகே பெற்றோர் பற்றியும் உணர்ந்தாள். கணவர் வீட்டிலும் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை. பிரசவத்திற்கு வந்தபின் பெற்றோரின் தள்ளாமை, வயதான அறிகுறிகள் தெரிய மனதிற்குள் பயம் தோன்றியது. ஒரே குழந்தை என்பதால் பொறுப்பு ஏற்க வேண்டுமே!

அவர்களை கணவர் வீட்டிற்கு அழைத்துக் கொண்டாலும் வேலை பாதிக்கப்படுமே என்ற வேதனை. நினைக்க நினைக்கப் பெற்றோரின் மீது வெறுப்பு கூடியது. நம்மை விட்டால் யார் பார்த்துக் கொள்வார் என்ற நினைப்பு ஏற்படவில்லை. குற்ற உணர்வில்லை.

தன் நிலையைப் புரிந்து கொள்ள ராமாயி வளர்ந்து வந்த நாட்களின் முக்கிய அம்சங்களைப் பகிரச் சொன்னேன். விவரிக்கும் போது எப்படி இது சாத்தியமானது என்ற கேள்வி எழுப்பினேன். பதினைந்தாவதான விவரிப்பில் உணர ஆரம்பித்தாள்: ஒவ்வொரு முறையும் எந்தவிதக் கட்டாயமோ, மறுப்போ இல்லாததாலேயே. இந்த கோணத்திலிருந்து ஆராய்ந்து வர, மெதுவாகப் புரிந்து கொண்டாள்.

மது, பிரேமா மருத்துவர் பரிந்துரைப் படி தினந்தோறும் நடைப்பயிற்சி செல்வது, தோட்ட வேலை, ராகினிக்குக் கதை சொல்வது, பாட்டுப் பாடுவது எனச் செய்ய, ஊட்டச் சத்துள்ள உணவின் பட்டியலையும் கடைப் பிடித்தார்கள். இருவரின் நிலை சுதாரித்தது.

ராகினி நலனும் தேர்ச்சி பெற்றது. இதைக் கண்ணெதிரே பார்த்து வந்தாலும், இதை ஏற்க ஏனோ ராமாயியின் மனம் மறுத்தது. மீண்டும் இதன் பொருளை ஆராய்ந்தோம். அப்போது அவளுக்குப் புலப்பட்டது, குழந்தையின் மீது உள்ள கசப்பினால்தான் இப்படி, இதுவரை தன்நலம் பற்றி மட்டுமே பார்த்து வந்தோம் என்று. இந்தப் புரிதல் விதை விதைத்தது. மெல்ல மெல்ல ராமாயியின் நடத்தையில் சிறு மாற்றங்கள் தென்பட ஆரம்பித்தது.

அடுத்த நான்கு ஸெஷன்களுக்கு ரவியின் பங்களிப்பு தேவையிருந்ததால் ஊரிலிருந்து வந்திருந்தான். தேவைப்படும் போதெல்லாம் நாசூக்காக ரவி மாமனார் கையிலிருந்து ராகினியை அழைத்துக் கொண்டான். அவளும் முகம் மலர்ந்து தாவினாள்.

செயலில் மாறுதல் வருவதற்கு, அதை நம்பி கடைப்பிடித்துச் செய்ய வேண்டும். அதனால் தான் மாற்றத்திற்கு நாளாகும். ஆனதும் இவர்களின் மாற்றம் நிலைத்து நிற்கும்.

பனங்காடை – மூலம் யசுநாரி கவபட்டா (ஜப்பான்) தமிழில் இரா மீனா

மொழிபெயர்ப்பு :ஜப்பானிய மொழி சிறுகதை:

மூலம்         : யசுநாரி கவபட்டா [ Yasunari Kawabata 1899—1972]

ஆங்கிலம்      : எட்வர்ட் ஜி.ஸ்டெயின்ஸ்டிகர்[ Edward G.Seidensticker]

தமிழில்        : தி.இரா.மீனா

 

பனங்காடை - தமிழ் விக்கிப்பீடியா

பனங்காடை புகைப்படங்கள், படங்கள்

அதிகாலையிலிருந்தே பனங்காடை சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தது. மழைத்தடுப்புக்கான ஷட்டரைத் திறந்தபோது அவர்களின் கண்முன்னால் பைன் மரத்தின் தாழ்ந்த கிளையிலிருந்து பறந்தது.அது திரும்பி வந்திருக்க வேண்டும். காலை உணவுவேளையின் போதே சிறகுகளை அடித்துக் கொண்ட சப்தம் கேட்டது.

“அது ஓர் உபத்திரமான பறவை” என்று சொல்லிக் கொண்டே தம்பி எழுந்தான்.

“சரி..சரி” என்று பாட்டி அவன் பேச்சைத் தடுத்தாள்.“அது தன் குஞ்சைத் தேடுகிறது.நேற்று குஞ்சு கூட்டிலிருந்து விழுந்து விட்டது.இருட்டும் வரை சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தது.அது எங்கே விழுந்திருக்கும் என்று தாய்க்குத் தெரியாதா? பார்! விடிந்தவுடன் தேடிக் கொண்டு வந்து விட்டதே”

“பாட்டிக்குப் புரிந்திருக்கிறது” யோஷிகோ சொன்னாள்.

அவள் பாட்டியின் கண்கள் கெட்டிருந்திருந்தன. பத்து வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட சிறுநீரக அழற்சியைத் தவிர வாழ்க்கையில் அவளுக்கு எந்த நோயும் வந்ததில்லை. ஆனால் ,சிறுவயதிலிருந்தே ஏற்பட்ட கண்புரை காரணமாக இடதுகண் பார்வை மங்கலாகத்தான் இருந்தது. சாப்பாட்டுத் தட்டையும், கரண்டியையும் கையில்தான் தரவேண்டும். வீட்டின் பழக்கமான எல்லா இடங்களிலும் அவள் தட்டுத் தடுமாறிச் சுற்றி வந்தாலும் தோட்டத்திற்குத் தனியாக அவளால் போகமுடியாது.

சில சமயங்களில் நகர்த்தும் கண்ணாடிக் கதவின் முன் உட்கார்ந்தோ அல்லது நின்றுகொண்டோ அவள் தன் விரல்களை விரித்துக் காட்டி , கண்ணாடியின் மூலமாக வரும் சூரிய ஒளியை உற்றுப் பார்ப்பாள்.இப்படி கவனமாக பல கோணங்களில் உற்றுப் பார்த்து பொழுதைக் கழித்தவள்.

அந்த மாதிரி சமயங்களில் யோஷிகோவுக்கு பாட்டியைப் பார்க்க பயமாக இருக்கும். பின்னாலிருந்து பாட்டியைக் கூப்பிட வேண்டும் என்று தோன்றி னாலும் செய்யாமல் ஓடிவிடுவாள்.

முழுவதும் கண்பார்வையற்ற நிலையிலும் பாட்டி பறவையின் குரலைக் கேட்கும்போது தான் எல்லாவற்றையும் பார்த்தது போலப் பேசினாள். யோஷிகோவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

சாப்பாட்டு மேசையைச் சுத்தம் செய்துவிட்டு யோஷிகோ சமையல்  அறைக்குள் போனபோது பக்கத்து வீட்டின் கூரையிலிருந்து பனங்காடை குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.

பின்புறத் தோட்டத்தில் ஒரு கஷ்கொட்டை மரமும், இரண்டு மூன்று ஈச்ச மரங்களுமிருந்தன. அவள் அந்த மரங்களைப் பார்த்தபோது மெல்லியதாக மழை பெய்து கொண்டிருப்பது தெரிந்தது. அடர்த்தியான இலைகளினூடே கவனமாகப் பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாத ஒருவகை மழை அது.

பனங்காடை கஷ்கொட்டை மரத்தில்  உட்கார்ந்து பின்பு தாழ்வாகத் தரையைத் தொட்டுப் பறந்து மீண்டும் கிளைக்குத் திரும்பியது.பாடுவது தொடர்ந்தபடியிருந்தது.

தாய்ப்பறவையால் அங்கிருந்து பறந்து போகமுடியவில்லை. ஒரு வேளை அதன் குஞ்சு அங்கெங்கோ இருக்கிறதென்பதாலா?

கவலையோடு அதைப்பற்றி யோசித்தபடி யோஷிகோ தன் அறைக்குப் போனாள். மதியத்திற்கு முன்னால் அவள் தயாராகவேண்டும்.

அவளது வருங்காலக் கணவரின் தாயோடு அவள் பெற்றோர் மதியம் வருகின்றனர்.

கண்ணாடி முன்னால் உட்கார்ந்திருந்த அவள், தன் விரல் நகங்களிலிருந்த வெள்ளைப் புள்ளிகளைப் பார்த்தாள் .நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் நல்லது எதுவோ கிடைக்கப் போகிறது என்று சொல்வதுண்டு. ஆனால் வைட்டமின் ” சி’ யோ அல்லது வேறு எதுவோ உடலில் குறைந்து இருந்தால் அது வரலாம் என்பதை அவள் செய்தித்தாளில் படித்திருக்கிறாள். அலங்காரம் செய்து கொள்ளும் வேலை சிறப்பாக முடிந்தது. புருவங்கள், உதடுகள் எல்லாம் கவர்ச்சியாகத் தெரிந்தன.அவள் கிமானோவும்தான்.

உடை அலங்காரத்திற்கு அம்மா வரும்வரை காத்திருக்க நினைத்து, பின்பு தானே செய்துகொள்ள முடிவு செய்தாள்.

அப்பா அவர்களுடன் இல்லை. இது மாற்றாந்தாய். அப்பா தன் முதல்மனைவியை விவாகரத்து செய்தபோது யோஷிகோவுக்கு நான்கு வயது. தம்பிக்கு இரண்டு வயது. விவாகரத்துக்குக் காரணம் அம்மா ஆடம்பரமாக உடைகளுக்கும், மற்றவற்றிற்கும் மிக அதிகமாக செலவு செய்ததுதான் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் வேறு ஏதோ காரணம் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது.

தம்பி சிறுவனாக இருந்த போது ,அம்மாவின் புகைப்படம் ஒன்றை அப்பாவிடம் காண்பித்தான். அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் முகத்தில் கோபம் கொப்பளித்தது. திடீரென்று அதைப் பறித்து சுக்குநூறாகக் கிழித்து விட்டார்.

யோஷிகோவுக்கு பதிமூன்று வயதான போது சித்தி வந்தாள்.தனக்காகத் தான்  பத்து வருடங்கள் அப்பா தனிமையின் வேதனையை அனுபவித்தார் என்று யோஷிகோ நினைத்தாள். சித்தி மிகவும்நல்லவள்.வீட்டு வாழ்க்கை அமைதியாகக் கழிந்தது.

தம்பி உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றபோது விடுதியில் சேர்ந்தான். சித்தியைப் பற்றிய அவன் அபிப்ராயம் மாறிவிட்டது.

“அக்கா, நான் நம் அம்மாவைப் பார்த்தேன்.அவள் மறுமணம் செய்து கொண்டு அழபுவில் வசிக்கிறாள். நிஜமாகவே அம்மா அழகுதான்.என்னைப் பார்த்ததில் அவளுக்கு மிகவும் சந்தோஷம்”

திடீரென்று இதைக் கேட்டவுடன் யோஷிகோவுக்கு வார்த்தைகள் வரவில்லை. முகம் வெளிற அவளுக்கு நடுக்கம் ஏற்பட்டது.

அடுத்த அறையிலிருந்த சித்தி அங்கு வந்து உட்கார்ந்தாள்.

“நல்லதுதான்,நல்லதுதான்.உன் அம்மாவைப் பார்ப்பது தப்பான விஷயமில்லை.அது இயற்கையானதுதான். இந்த மாதிரியான ஒருநாள் வரும் என்று எனக்குத் தெரியும். அதனால் எனக்கு இது புதிய விஷயமில்லை.”

ஆனால் சித்தியின் உடலிலிருந்த பலம் போய்விட்டது போலத் தெரிந்தது. சித்தி மிகவும் மெலிந்து, பலவீனமாக பரிதாபமாக இருப்பதாக யோஷிகோ. நினைத்தாள்.

தம்பி எதுவும் சொல்லாமல் விருட்டென்று எழுந்துபோய்விட்டான். யோஷிகோவுக்கு அவனை அறைய வேண்டும் போலிருந்தது..

“யோஷிகோ, அவனிடம் எதுவும் பேசாதே. பேசினால் அது அவனைத்தான் மிகவும் பாதிக்கும்” சித்தி மிக மெல்லிய குரலில் சொன்னாள்.

யோஷிகோவுக்கு அழுகை வந்தது.

அப்பா அவனை விடுதியிலிருந்து வீட்டிற்கு வரவழைத்தார். அத்தோடு விஷயம் முடிந்ததென்று யோஷிகோ நினைத்தாள்.அப்பா சித்தியோடு வேறிடத்திற்குப் போய்விட்டார்.

அது அவளை அச்சுறுத்தியது. ஆணின் கோபம், சீற்றம் என்பவற்றால் தான் நசுக்கப்படுவது போல உணர்ந்தாள். அம்மாவோடு தொடர்பு இருப்பதால் அப்பா அவர்களையும் கூட வெறுக்கத் தொடங்கி விட்டாரோ? தம்பி அன்று அப்படி நடந்துகொண்டது அப்பாவிடமிருந்து அவனுக்கு வந்த பரம்பரை பிடிவாத குணத்தினால்தான்  என்று அவளுக்குத் தோன்றியது.

எனினும் விவாகரத்துக்கும் ,மறுமணத்துக்குமான பத்தாண்டுக் காலத்தில் அப்பா அனுபவித்த வருத்தத்தையும், வலியையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவளிடமிருந்து விலகிப் போன அப்பா இப்போது திருமணப் பேச்செடுத்து ஒரு வரனோடு வருவது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“நான் உனக்குப் பெரிய அளவில் மனவருத்தம் தந்துவிட்டேன்.அந்த மாப்பிள்ளையின் தாயிடம் நான் உன் நிலைமையைச் சொன்னேன். உன்னை மகளாக நினைப்பதை விட, மகிழ்ச்சியான உன் இளமைக்கால நினைவுகளை திரும்பிக் கொண்டு வர உதவவேண்டுமென்று அவர்களிடம் வேண்டிக் கொண்டேன்”.

அப்பா அதைச் சொன்னபோது யோஷிகோ அழுதுவிட்டாள்.

யோஷிகோ திருமணம் செய்துகொண்டு போய்விட்டால் பாட்டியையும், தம்பியையும் பார்த்துக்கொள்ள எந்தப் பெண்ணும் வீட்டிலில்லை.அதனால் இரண்டு குடும்பங்களும் ஒன்றுசேர்வதென்று முடிவானது.அந்த ஏற்பாட்டிற்கு அவள் ஒப்புக் கொண்டாள். அப்பாவின் வாழ்க்கை திருமணத்தைப் பற்றிய அச்சம் தருவதாக இருந்தாலும் உண்மையில் திருமண பேச்சுகள் நடக்கத் தொடங்கிய பிறகு அவ்வளவு பயம் தெரியவில்லை..

தன்னை அலங்கரித்துக் கொண்டபிறகு அவள் பாட்டியின் அறைக்குப் போனாள்.

“பாட்டி, இந்த கிமோனோவில் உள்ள சிவப்புநிறத்தை உன்னால் பார்க்க முடிகிறதா?”

“அங்கே ஏதோ சிவப்புநிறம் போல லேசாகத்தெரிகிறது. எங்கே காட்டு” பாட்டி தன்னருகில் யோஷிகோவை இழுத்து கிமோனோவின் அருகே கண்ணை வைத்துப் பார்த்தாள்.

“ஏற்கெனவே எனக்கு உன் முகம் மறந்து போய்விட்டது யோஷிகோ. இப்போது நீ எப்படியிருக்கிறாய் என்று எனக்கு மட்டும் பார்க்க முடிந்தால்..”

யோஷிகோ கெக்கலித்தபடி தன் கையை பாட்டியின் தலைமீது மிக மெதுவாக வைத்தாள்.

அப்பாவையும்,மற்றவர்களையும் பார்க்கவேண்டும் போல இருந்தது. உட்கார முடியாமல் தவித்தாள். தோட்டத்திற்குப் போனாள்.கையை மேலே நீட்டினாள். ஆனால் மழை மிக மெலிதாக இருந்ததால் அவள் உள்ளங்கை கூட ஈரமாகவில்லை. கிமோனோவை மேலே சொருகியபடி, சிறு மரங்களினூடே அடர்ந்திருந்த புல்பகுதியில் சிரத்தையாகத் தேடினாள்.புல் உயரமாக இருந்த அடர்ந்த புதரின் அருகில் அந்தக் குஞ்சுப்பறவை இருந்தது.

அவள் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.அவள் நகர்ந்து போனாள். தன் கழுத்து சிறகுகளினூடே தலையை வைத்திருந்த குஞ்சுப்பறவையால்  சிறகுகளை அசையவில்லை.அதைச் சுலபமாக அவளால் கையில் எடுக்க முடிந்தது. அது பலமிழந்திருந்தது தெரிந்தது. யோஷிகோ சுற்று முற்றும் பார்த்தாள். ஆனால் தாய்ப்பறவை கண்ணில் தட்டுப்படவில்லை.

“பாட்டி !நான் அந்தக் குஞ்சுப் பறவையைக் கண்டுபிடித்து விட்டேன்.இதோ என் கையிலிருக்கிறது. பலவீனமாக இருக்கிறது” கத்திக் கொண்டே யோஷிகோ வீட்டிற்குள் ஓடினாள்.

“ஓ! அப்படியா? சிறிது தண்ணீர் கொடு.”

பாட்டி நிதானமாக இருந்தாள்.

அவள் தண்ணீரை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்து அதில் குஞ்சின் அலகை லேசாக அமிழ்த்தினாள் .அது குடித்தது. அதன் சிறிய தொண்டை புடைப்பது தெரிந்தது. அது சரியாகிவிட்டதா?— கி..கி…கி… கி..— இசைக்கத் தொடங்கிவிட்டது.

தெளிவாக அந்தக் குரலைக் கேட்டுவிட்ட தாய்ப்பறவை பறந்து வந்தது. டெலிபோன் கம்பியில் உட்கார்ந்து அது பாடியது. யோஷிகோவின் கையில் போராடிக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை மீண்டும் கி…கி…கி.. என்று குரல் கொடுத்தது.

“ஓ..அது வந்துவிட்டது பார் ! குஞ்சைத் தாயிடம் கொடுத்துவிடு சீக்கிரம்” பாட்டி சொன்னாள்.

யோஷிகோ தோட்டத்திற்குப் போனாள். தாய்ப்பறவை டெலிபோன் கம்பியிலிருந்து பறந்து செர்ரி மரத்தின் உச்சிக்குப் போனது.அங்கிருந்து யோஷிகோவை நிலைகுத்திப் பார்த்தது.

தாய்ப்பறவைக்கு தன் கையிலுள்ள குஞ்சைக் காட்டுவதைப்போல யோஷிகோ தன் கையை உயர்த்தி குஞ்சைத் தரையில் வைத்தாள்.

கண்ணாடிக்கதவின் பின்னாலிருந்து கொண்டு யோஷிகோ தாய்ப் பறவையை கூர்ந்து கவனித்தாள். குஞ்சுப்பறவை வழிகாட்டி போல இனிமையாகப் பாட, தாய்ப்பறவை மெதுவாக நெருங்கி வந்தது. அருகிலுள்ள பைன் மரத்தின் தாழ்ந்த கிளைக்கு அது வந்தபோது குஞ்சு தாயினருகே செல்வதற்காக தன் சிறகை அடித்துக் கொண்டது.அது தன் முயற்சியில் தடுமாறிக் கீழே விழுந்த நிலையிலும் இசைத்துக் கொண்டிருந்தது.

தாய்ப்பறவை இன்னமும் தரையில் விழுந்து விடக்கூடாத கவனத்தோடு இருந்தது.

பிறகு வேகமாக நேரடியாகப் பறந்து தன் குஞ்சின் அருகே போனது. குஞ்சுப் பறவையின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தலையைத் திருப்பித் திருப்பி சிறகுகள் நடுங்க தன் தாயின் அருகே போய்விட்டது. குஞ்சு சாப்பிடுவதற்கு தாய்ப்பறவை எதையோ கொண்டு வந்திருந்தது.

தன் அப்பாவும் ,சித்தியும் சீக்கிரம் வரவேண்டும் என்று யோஷிகோ விரும்பினாள். அவர்களுக்கு இதைக் காட்டவேண்டுமென்று அவள் நினைத்தாள்.

———————————————————————————————————–

யசுநாரி கவபட்டா  ஜப்பான் மொழியில் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசு பெற்றவர்.ஜப்பானிய இலக்கியங்களை ஆங்கிலத்திலும்,பிற மொழிகளிலும் மொழி பெயர்க்க பெருமளவில் உதவியவர். Thousand Cranes, Beauty and Sadness, Lake, Snow Country ஆகியவை இவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அபூர்வங்கள்-5 – பானுமதி

அறுபடை வீடு முருகன் விரதமும்- பலன்களும் | arupadai veedu Murugan Viratham

சூர் மறுங்கறுத்த சுடர் இலை நெடுவேல்

முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும். அழகன் என்ற அந்த ஆண்டவன், குன்று தோறும் நின்றாடும் இளைஞன். குறிஞ்சி நிலத்திற்கு உரியவன். மலைவாழ்ப் பெண்ணான வள்ளிக் குறத்தியைக் காதல் மணம் செய்தவன்.
சிவனின் வடிவானவன். சிவனிலிருந்தே வெளிப்பட்டவன். பிரணவ மந்திரத்தின் முற்றானப் பொருளை அறிந்த முதல்வன். அதைத் தந்தைக்கே உபதேசம் செய்த சுவாமி நாதன். ஆறுபடை வீடுகள் சொல்லும் முருக தத்துவம் உள்ளீடானதும், எளியவர்களுக்கு அச்சம் தவிர்க்கும் சூர் வேலாகவும் இருக்கிறது.

தமிழ் மொழி அறிந்த பலரும் போற்றும் கந்த சஷ்டி கவசம், துதிப்போர்க்கு வல்வினை போக்கும், துன்பம் போக்கும், கதித்தோங்கும் நிஷ்டையும் கை கூட்டும் அருமந்திரம். அதைப் போலவே அவனைப் பிள்ளைத் தமிழால், நாட்டுப்புறத் தமிழால், அழகிய சந்தங்களில் அமைந்த விருத்தங்களால், யாப்பின் பல்வேறு அமைப்புகள் கொண்ட இலக்கண இலக்கியப் பாடல்களால் துதித்தவர் பலர்.
பக்தி இலக்கியத்தின் சிறப்பே அது இறைமையைக் கொண்டாடிய விதம் தான். இசை நயமும், சொற் திறனும் கொண்டு இலக்கணத்தையும் கைவிடாமல், தெய்வீக உணர்வை எழுப்பும் முருகத் துதி பாடல்கள் தமிழின் செழுமை.

அந்த முருகாமிர்தத்தைப் பருகிய பரவசத்தில் அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி ஆகியவை நம்மைக் கந்த கோட்டக் கடவுளிடம் சென்று சேர்க்கின்றன. அருணகிரி நாதர் ஏறக்குறைய அறு நூறு ஆண்டுகளுக்கு முன், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அவதரித்தவர். அவரது மொழி அபூர்வமானது. அவரது பாடல்களை, நாக்கைச் சுழற்றி நாபியிலிருந்தும், தொண்டை நாண்களின் வழியாகவும், நுனி மூக்கினாலும் பாடினால் தெய்வ அருளுடன் யோக மூச்சிப் பயிற்சி கிட்டுகிறது; அதுமட்டுமல்லாது மூளையின் ந்யூரான்கள் சரியான உயிர்வாயுவினால் சக்தி பெறுவதாகவும் சொல்கிறார்கள். தமிழ் என்றாலே முருகன் அல்லவா? முருகனோ என்றும் இளமையுடன் இருப்பவன் இல்லையா?

எடுத்துக்காட்டாக இந்தப் பாடலைப் பார்ப்போம்.

‘முருகன் றனிவேல் முனினங்குருவென்று
றருள் கொண்டரறியா றறியும் தரமோ
உருவன்றறுவன் றுளதன்று இலதன்
இருளன்று ஓளியன்றென நின்றதுவே’

இந்தக் கந்தர் அனுபூதிப் பாடலை மேலே எழுதியுள்ளவாறே இரு முறை படித்துப் பாருங்கள். மெல்லினம், இடையினம், வல்லினம் இயைந்து வரும் பாடல். இதை வாய்விட்டுப் படிக்கையில் உங்கள் நெஞ்சப் பகுதி விரிந்து சுருங்குவதை உணர்வீர்கள். அந்தப்பாடலை பிரித்து எழுதினால் இப்படி வரும்.

முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே
குறிஞ்சிக் குமரனான அந்த அழகன் யார்? அவன் கை வேலே தனித்துவமானது. அது குருவாக நம்மைக் காப்பது. அதை உணர்ந்தவர்களுக்குத் தெரியும், அவன் ஒளி, அவனே இருள்; அவனே உரு கொண்டும் திகழ்வான், அவனே உருவற்றவனுமாவான். இருப்பவனாகத் திகழும் அவனே இல்லாதவனுமாக இருக்கும் விந்தையை அவனைக் குருவென்று ஏற்றுக் கொள்பவர்கள் தானறிவார்.
மேலும் சொல்கிறார் அருணகிரியார்:

ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?

யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.
எத்தனை எளிமையாக அத்வைதத்தைச் சொல்லிவிடுகிறார்?

‘யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நின்றது எது, அதுவும் எப்படி நிலையாய் நின்றது.? கந்தர் அலங்காரத்தில், தான் குமரனது திருமேனியில் சொக்கி நின்றதை அழகுத் தமிழில் பாடிப் பரவசமடைகிறார்:

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண்டேன் செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.’

இப்பாடலைக் கீழ்க்கண்டவாறு பிரித்துப் படிக்கலாம்.

‘பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்

புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம்எற்றித்

தத்திக் கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே

முருகனின் ஆறுமுகங்கள் எதைக் குறிக்கின்றன?

ஞானம், வைராக்யம், வலிமை, கீர்த்தி, செல்வம், ஐஸ்வர்யம்; அவனது ஆறுபடை வீடுகளும் இதன் குறியீடுகளே;

ஓம் என்ற பிரணவப் பொருளுரைத்த சுவாமி மலை, ஞானக் குறியீடு.

ஆண்டியின் கோலமுற்ற பழனி, அச் சிறுவனின் வைராக்யம்.

சூரன் உடல் கிழித்த திருச்செந்தூர் வலிமையல்லவா?

தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட திருப்பரங்குன்றம், அவன் கீர்த்தியை, வெற்றியை, அவன் இந்திரனின் மருமகனாதைச் சொல்லும் பேறு பெற்றது.

காதலும், களவுமாகப் பேசும் தமிழ், கொண்டாடுகிறது முருகன் வள்ளித் திருமணத்தை; தெள்ளு தமிழ்க் குறத்தியை திருமகளெனக் கொண்டு மணந்து சினந்தணிந்து திருவும், அருளுமாக நின்ற இடம் திருத்தணிகை.

தங்க மயிலாடும் பழமுதிர்ச்சோலை ஐஸ்வர்யம் பொங்கும் இடம்.

மற்றுமொரு அபூர்வ செய்தியினையும் பார்ப்போம்.

மேல்கொடுமாலூர் என்ற அழகிய ஊர் பரமக்குடியிலிருந்து 22 கி மீ தொலைவில் உள்ளது. இந்தத் தலத்தில் அன்னையிடமிருந்து மழு என்ற ஆயுதத்தையும் பெற்றார் முருகன். வேல் தந்த அன்னையவள், சிவனின் மழுவையும் மகனுக்குத் தருகிறாள். சூரனை வென்ற முருகன் இவ்விடத்திற்குச் சாயுங்காலம் வருகிறார். அவ்விடத்தில் ரிஷிகள் அவரை வரவேற்று, உபசரித்து தங்கச் சொல்கின்றனர். மாலையில் அங்கே குமரன் எழுந்தருளியதால், சிறப்பு பூசனைகள் அனைத்தும் ஆதவன் மறைந்த பிறகே செய்யப்படுகின்றன. மா, பலா, வாழைப் பழங்களால் திங்கள், வெள்ளி, கிருத்திகை தினங்களில் அபிஷேகம் நடைபெறுகிறது. தேன் கலந்த தினை மாவும், பாசிப்பருப்பும், கைக்குத்தல் அரிசியும், பழங்களும் அவனுக்குப் படைக்கப்படுகின்றன. முருகையா என்று செல்லமாக விளிக்கப்படும் குமரன், சிறு மரத்துண்டினால் பல்துலக்கினாராம்; அதுவே பெரும் மரமாக வளர்ந்து தல மரமாக வணங்கப்படுகிறது.

‘திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பு ஊடுருவப்
பொருவடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குருவடிவாய் வந்து என்உள்ளம் குளிரக் குடிகொண்டவே!

 

 

 

 

சூர் மறுங்கறுத்த சுடர் இலை நெடுவேல்

முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும். அழகன் என்ற அந்த ஆண்டவன், குன்று தோறும் நின்றாடும் இளைஞன். குறிஞ்சி நிலத்திற்கு உரியவன். மலைவாழ்ப் பெண்ணான வள்ளிக் குறத்தியைக் காதல் மணம் செய்தவன்.

சிவனின் வடிவானவன். சிவனிலிருந்தே வெளிப்பட்டவன். பிரணவ மந்திரத்தின் முற்றானப் பொருளை அறிந்த முதல்வன். அதைத் தந்தைக்கே உபதேசம் செய்த சுவாமி நாதன். ஆறுபடை வீடுகள் சொல்லும் முருக தத்துவம் உள்ளீடானதும், எளியவர்களுக்கு அச்சம் தவிர்க்கும் சூர் வேலாகவும் இருக்கிறது.

தமிழ் மொழி அறிந்த பலரும் போற்றும் கந்த சஷ்டி கவசம், துதிப்போர்க்கு வல்வினை போக்கும், துன்பம் போக்கும், கதித்தோங்கும் நிஷ்டையும் கை கூட்டும் அருமந்திரம். அதைப் போலவே அவனைப் பிள்ளைத் தமிழால், நாட்டுப்புறத் தமிழால், அழகிய சந்தங்களில் அமைந்த விருத்தங்களால், யாப்பின் பல்வேறு அமைப்புகள் கொண்ட இலக்கண இலக்கியப் பாடல்களால் துதித்தவர் பலர்.

பக்தி இலக்கியத்தின் சிறப்பே அது   இறைமையைக் கொண்டாடிய விதம் தான். இசை நயமும், சொற் திறனும் கொண்டு இலக்கணத்தையும் கைவிடாமல், தெய்வீக உணர்வை எழுப்பும் முருகத் துதி பாடல்கள் தமிழின் செழுமை.

அந்த முருகாமிர்தத்தைப் பருகிய பரவசத்தில் அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி ஆகியவை நம்மைக் கந்த கோட்டக் கடவுளிடம் சென்று சேர்க்கின்றன. அருணகிரி நாதர் ஏறக்குறைய அறு நூறு ஆண்டுகளுக்கு முன், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அவதரித்தவர். அவரது மொழி அபூர்வமானது. அவரது பாடல்களை, நாக்கைச் சுழற்றி நாபியிலிருந்தும், தொண்டை நாண்களின் வழியாகவும், நுனி மூக்கினாலும் பாடினால் தெய்வ அருளுடன் யோக மூச்சிப் பயிற்சி கிட்டுகிறது; அதுமட்டுமல்லாது மூளையின் ந்யூரான்கள் சரியான உயிர்வாயுவினால் சக்தி பெறுவதாகவும் சொல்கிறார்கள். தமிழ் என்றாலே முருகன் அல்லவா? முருகனோ என்றும் இளமையுடன் இருப்பவன் இல்லையா?

எடுத்துக்காட்டாக இந்தப் பாடலைப் பார்ப்போம்.  

‘முருகன் றனிவேல் முனினங்குருவென்று

றருள் கொண்டரறியா றறியும் தரமோ

உருவன்றறுவன் றுளதன்று இலதன்

இருளன்று ஓளியன்றென நின்றதுவே’

இந்தக் கந்தர் அனுபூதிப் பாடலை மேலே எழுதியுள்ளவாறே இரு முறை படித்துப் பாருங்கள். மெல்லினம், இடையினம், வல்லினம் இயைந்து வரும் பாடல். இதை வாய்விட்டுப் படிக்கையில் உங்கள் நெஞ்சப் பகுதி விரிந்து சுருங்குவதை உணர்வீர்கள். அந்தப்பாடலை பிரித்து எழுதினால் இப்படி வரும்.

முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே

குறிஞ்சிக் குமரனான அந்த அழகன் யார்? அவன் கை வேலே தனித்துவமானது. அது குருவாக நம்மைக் காப்பது. அதை உணர்ந்தவர்களுக்குத் தெரியும், அவன் ஒளி, அவனே இருள்; அவனே உரு கொண்டும் திகழ்வான், அவனே உருவற்றவனுமாவான். இருப்பவனாகத் திகழும் அவனே இல்லாதவனுமாக இருக்கும் விந்தையை அவனைக் குருவென்று ஏற்றுக் கொள்பவர்கள் தானறிவார்.

மேலும் சொல்கிறார் அருணகிரியார்:

ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?

யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.

எத்தனை எளிமையாக அத்வைதத்தைச் சொல்லிவிடுகிறார்?  ‘யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நின்றது எது,  அதுவும் எப்படி நிலையாய் நின்றது.?

கந்தர் அலங்காரத்தில், தான் குமரனது திருமேனியில் சொக்கி நின்றதை அழகுத் தமிழில் பாடிப் பரவசமடைகிறார்:

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்  

தித்தித் திருக்கு மமுதுகண்டேன் செயன் மாண்டடங்கப்

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்

தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.’

இப்பாடலைக் கீழ்க்கண்டவாறு பிரித்துப் படிக்கலாம்.

‘பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்  தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம்எற்றித்
தத்திக் கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே

முருகனின் ஆறுமுகங்கள் எதைக் குறிக்கின்றன?

ஞானம், வைராக்யம், வலிமை, கீர்த்தி, செல்வம், ஐஸ்வர்யம்; அவனது ஆறுபடை வீடுகளும் இதன் குறியீடுகளே;

ஓம் என்ற பிரணவப் பொருளுரைத்த சுவாமி மலை, ஞானக் குறியீடு.

ஆண்டியின் கோலமுற்ற பழனி, அச் சிறுவனின் வைராக்யம்.

சூரன் உடல் கிழித்த திருச்செந்தூர் வலிமையல்லவா?

தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட திருப்பரங்குன்றம், அவன் கீர்த்தியை, வெற்றியை, அவன் இந்திரனின் மருமகனாதைச் சொல்லும் பேறு பெற்றது.

காதலும், களவுமாகப் பேசும் தமிழ், கொண்டாடுகிறது முருகன் வள்ளித் திருமணத்தை; தெள்ளு தமிழ்க் குறத்தியை திருமகளெனக் கொண்டு மணந்து சினந்தணிந்து திருவும், அருளுமாக நின்ற இடம் திருத்தணிகை.

தங்க மயிலாடும் பழமுதிர்ச்சோலை ஐஸ்வர்யம் பொங்கும் இடம்.

மற்றுமொரு அபூர்வ செய்தியினையும் பார்ப்போம்.

மேல்கொடுமாலூர் என்ற அழகிய ஊர் பரமக்குடியிலிருந்து 22 கி மீ தொலைவில் உள்ளது. இந்தத் தலத்தில் அன்னையிடமிருந்து மழு என்ற ஆயுதத்தையும் பெற்றார் முருகன். வேல் தந்த அன்னையவள், சிவனின் மழுவையும் மகனுக்குத் தருகிறாள். சூரனை வென்ற முருகன் இவ்விடத்திற்குச் சாயுங்காலம் வருகிறார். அவ்விடத்தில் ரிஷிகள் அவரை வரவேற்று, உபசரித்து தங்கச் சொல்கின்றனர். மாலையில் அங்கே குமரன் எழுந்தருளியதால், சிறப்பு பூசனைகள் அனைத்தும் ஆதவன் மறைந்த பிறகே செய்யப்படுகின்றன. மா, பலா, வாழைப் பழங்களால் திங்கள், வெள்ளி, கிருத்திகை தினங்களில் அபிஷேகம் நடைபெறுகிறது. தேன் கலந்த தினை மாவும், பாசிப்பருப்பும், கைக்குத்தல் அரிசியும், பழங்களும் அவனுக்குப் படைக்கப்படுகின்றன. முருகையா என்று செல்லமாக விளிக்கப்படும் குமரன், சிறு மரத்துண்டினால் பல்துலக்கினாராம்; அதுவே பெரும் மரமாக வளர்ந்து தல மரமாக வணங்கப்படுகிறது.

‘திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பு ஊடுருவப்  

பொருவடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
 மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
 குருவடிவாய் வந்து என்உள்ளம் குளிரக் குடிகொண்டவே!

நடுப்பக்கம் – சந்திரமோகன்

Kshama Bindu (Sourced) (HT_PRINT)

திருமண அழைப்பிதழ்

காலை ஆறு மணிக்கு நான் பரபரப்புடன் பட்டு வேஷ்டி சட்டையில் கிளம்பியதை பார்த்து என் பையன் குளம்பிப் போயிருந்தான்.
அவன் கண்களின் ஓரத்தில் எட்டிப் பார்த்த நீர் என்னை ஏதோ செய்தது.
“என்னப்பா” என்றேன் நான்.
“ஒன்றுமில்லையப்பா. அம்மா போனதுக்கப்பரம், உங்களை பட்டு வேஷ்டியில் இப்பதான் பாக்கிறேன்,அதான்” என்றான்.

“ அது சரி. இவ்வளவு சீக்கிரம் எங்க கிளம்பிட்டீங்க” என்றான் என் பையன்.
“ கல்யாணத்துக்குப்பா” என்றேன் நான்.

“எங்கேயப்பா கல்யாணம். யாருக்கு? பத்திரிக்கை ஒன்றும் வீட்டுக்கு வந்த மாதிரி தெரியலயே” என்றான் பையன்.

நான் சற்று வளைந்து நெளிந்து “ ஒன்றுமில்லையப்பா, நம்ம முருகன் கோவில்ல, எனக்குதான் கல்யாணம்” என்றவுடன் அதுவரை நின்று கொண்டு பேசியவன் சற்று தடுமாறி அமர்ந்தான்.
சிறிது நேரம் பேச்சு மூச்சில்லை. கதவு ஓரத்தில் நின்ற என் மருமகள் அதிர்ச்சியை அடக்க முடியாமல் கைகளை ஆட்டியதில் வளையல் சப்தம் அமைதியை கலைத்தது.

“7.30-9.00 முகூர்த்தம் கிளம்பனுப்பா” என்றேன் நான் அமைதியைக் களைத்து.

தன் நிலைக்கு திரும்பிய என் பையன் ஆச்சரியம் கலந்த வெறுப்பா அல்லது கவலையா என அறிய முடியாத பாவனையுடன் “ நீங்க யாருக்கிட்டேயும் சொல்லவேயில்லை( இங்கு அப்பா என்ற வார்த்தை வர வில்லை)” என்றான்.

“ இதைப்போய் யாருக்கிட்ட சொல்றதுப்பா” என்றேன் நான்.
இப்பொழுது அவன் பாவனை கோபத்திற்கு மாறியது.
“ தெரியுதுல்ல, எழுபது வயசில சொந்த காரவுங்க எல்லாம் என்ன நினைப்பாங்க. அவங்களை விடுங்க, நீங்க அடிக்கடி Zoom ல பேசுவீங்களே, உங்க friends எல்லாரும் இதைக் கேட்டா கேமராவை mute பண்ணிட்டு சிரிக்க மாட்டாங்கலாப்பா” என்று கோபத்தை வார்த்தைகளாக மாற்றி கொட்டினான்.

கோபத்தில் சற்று இரைந்து பேசியதால் பாவம் மூச்சு வாங்கிற்று அவனுக்கு. நல்ல வேளை சத்தத்தில் பேரக் குழந்தைகள் எழுந்திருக்க வில்லை.

மேலும் அவன்” பெண் அதான் இந்த வீட்டுக்கு வரப் போற என் சித்தி யார்” என்றான் கோபம் கொஞ்சமும் குறையாமல்.

இப்பதான் நான் செஞ்ச தப்பு எனக்கு உறைத்தது. அவனிடம் ஆரம்பத்திலேயே விவரமாக சொல்லியிருந்தால் தப்பா நினைச்சிருக்க மாட்டான்.

நான் “ பைத்தியக்காரா! பெண் பார்த்து திருமணம் செய்யிர வயசா எனக்கு. இல்லை உங்க அம்மா மாதிரி யாராவது பிறந்து வந்திருக்காங்களா” என்ற நான் அவனை மேலும் குழப்பாமல் “ நான் செய்யப் போறது sologamy யப்பா என்றேன்.

மேலும் “ ஒரு மாலைக்கு சொல்லியிள்ளேன். முருகன் முன் மாலையணிந்து என்னை நானே சுய திருமணம் (sologamy or self marriage )செய்து கொள்ள போகிறேனப்பா” என்றேன் நான்.
“தேன் நிலவாக காசியில் ஒரு வாரம் சென்று தங்கப் போகிறேனப்பா” என்றும் கூறினேன்.

“ என்ன gamy, புதுசா இருக்கு. உங்களுக்குன்னு ஏம்பா இப்படி எல்லாம் தோணுது” என்றான் கோபம் இறங்கி இரக்கத்துடன்.

“இல்லப்பா. கஷ்மா பிந்துன்னு 24 வயது பெண் குஜராத், வடோதராவில இந்த மாதம் தன்னைத் தானே கல்யாணம் செஞ்சுக்க போறதா சொல்லி இருக்காங்க.
இருபது வருஷங்களா வெளி நாடுகள்ல மட்டும் அங்கும் இங்குமாய் நடந்து வந்ததை இந்தியாவிலேயே முதல் நபராய் அந்தப் பெண் செய்யப் போகுதுன்னு வடக்கே எல்லா பேப்பர்லேயும் போட்டோவோட முதல் பக்கத்தில வந்திருக்காம்பா” என்றேன்.

“ குடும்பம் குட்டிகளோட வாழ வேண்டிய அந்தப் பெண் அப்படி பண்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. ஆனால் அந்தப் பெண்ணோட சுய திருமணம் 11 ந்தேதி. இன்னைக்கு தேதி 9. இப்ப நான் சுய திருமணம் செஞ்சுக்கிட்டா என் பேர் பேப்பர்ல இரண்டாவது பக்கத்திலயாவது இந்தியாவிலேயே முதன் முறையாக சுய திருமணம் செய்து கொண்டவர்னு போட்டோவோட வருமேங்கற நப்பாசைப்பா. இதுவரைக்கும் என் பேரு பேப்பர்ல வந்ததேயில்லப்பா” என்றேன் அசட்டுச் சிரிப்புடன்.

“ பேப்பர்ல பேரு வர வேற வழிஇருக்கு.
அந்த sologamy பத்தி சொல்லுங்க”என்றான் என் பையன்

By marrying herself, Ms Bindu said, she would be dedicating her life to “self-love”.
“Self-marriage is a commitment to being there for yourself, to choosing the livelihood and lifestyle that will help you grow and blossom into the most alive, beautiful, and deeply happy person you can be.”

“ அது என்னமோ வாழ்க்கையை “self love “ க்காக அற்பணிக்கரதாம்பா. அந்த பொண்ணு என்ன என்னமோ சொல்லுது. அதோட வாழ்க்கையை அதே யாரோட தயவும் இல்லாம அமைச்சுக்க போகுதாம். அப்ப கல்யாணமே வேண்டாம்னு இருந்துட வேண்டியதுதானே. ஆனால் எல்லா பெண்களையும் போல கல்யாணமும் செஞ்சுக்கனுமாம். சிகப்பு கலர்ல புடவை எடுத்திட்டாங்க. கோவாவில 15 நாள் தேன் நிலவு, தனியாத்தான். அவங்க வழக்கப்படி மருதாணி இடும் விழா ரோடுல டான்ஸ் ஆடுவாங்களே சங்கீத் அந்த விழா கல்யாண விருந்து எல்லாம் உண்டாம். கல்யாணத்துக்கு அர்ச்சகர் எல்லாம் ஏற்பாடு செஞ்சாச்சு. அக்னியை ஏழு வலம் வந்து தானே தாலி கட்டிக்க போகுதாம். பாவம் அங்கே ஆளும் கட்சி கோவில்ல இந்த கண்றாவதியெல்லாம் கூடாதுன்னு அனுமதிக்கலயாம். நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பத்திரிக்கையெலாம் போயிடுச்சு. அதைப் படிச்சிட்டுதாம்பா நான் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டேன்” என்றேன்.

“பிரேசில்ல ஒருத்தர் சுய கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆறே மாத த்தில வாழ்க்கை வெறுத்து அவரையை அவர் விவாகரத்து பண்ணிட்டாராம்பா. அந்த பெண் கல்யாணத்தை சட்ட பூர்வமா அங்கீகாரம் செய்யனும்னு கோரிக்கை வச்சிருக்குப்பா. இப்ப நானும் சேர்ந்திட்டா ஒரு சங்கம் அமைச்சு நான் தலைவரா ஆயிடலாம்னு பார்த்தேன்” என்றேன்

என் பையன் “ கேக்க சுவையாத்தான் இருக்கு, ஆனால் உங்களுக்கு தலைவர் பதவியெல்லாம் சரிப்பட்டு வராது, பேசாம நீங்க குவிகத்தில நடுப் பக்கம் என எழுதுவீங்களே அதுக்கு எழுதி அனுப்பிடுங்கப்பா” என்றான்
எனக்கு அதுவும் சரியாகத்தான் பட்டது.

 

தி டிரினிடி புத்தகம் – சஞ்சய் ஸ்வாமினாதன்

 

Sanjay Swaminathanசஞ்சய் ஸ்வாமினாதன் 15 வயது நிரம்பிய பள்ளிமானவன் . ஆனால்  இப்போது எழுத்தாளர்.

THE TRINITY என்ற ஒரு 358 பக்கங்கள் கொண்ட  ஆங்கிலப் புத்தகத்தை எழுதி அமேசான் கிண்டிலில் வெளியீட்டிருக்கிறார். 

பெங்களூரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வித்யா மந்திரில் படிக்கும் மாணவனின் இந்த அபார முயற்சிக்கு கிரியா ஊக்கியாக இருந்தவர் அவரது பெற்றவர்கள் மட்டுமல்ல. அவரது தாத்தா சுகவனமும் கூட.

சஞ்சய்க்குப் பல திறப்பட்ட விருப்பங்கள் உள்ளன. மிருதங்க வாசிப்பு, கர்நாடக இசைப் பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்றவை அதில் அடங்கும். 

எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக எண்ணுவது புத்தகம் வாசிப்பதுதான். 

இந்த வாசிப்பு அனுபவம்தான் தன்னை  எழுதத்தூண்டியது என்கிறார் இந்தக் குழந்தை எழுத்தாளர். 

அவருடன் சில நிமிடங்கள் போனில் உரையாடி இந்த டிரினிடி  புத்தகம் எந்த வகையச் சார்ந்தது என்று கேட்டபோது மிகவும் அழகாக ” இது ஒரு பேன்டசி பற்றிய நாவல் .  அலெக்ஸாண்டர்    என்ற சிறுவன் தனது தந்தை மரணத்திற்குப் பிறகு புதியதொரு உலகத்திற்குச் செல்கிறான். அந்த உலகத்தில்  அவன் காணும் ரகசிய மனிதக் கூட்டம், இருளில் உலாவும் கொடூர மிருகங்கள்,   வித்தியாசமான மொழிகள் அவனை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களையும் புதியதொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். . 

புத்தகத்தை கிண்டிலில் வாங்கிப்   படித்துவிட்டு இதைப் பற்றிய முழு விமர்சனம் செய்யலாம். 

சஞ்சய்க்கு  இன்னும் நிறைய சாதனை புரிய குவிகத்தின் வாழ்த்துக்கள்.

THE TRINITY Kindle Edition
by Sanjay Swaminathan (Author) Format: Kindle Edition
4.6 out of 5 stars 3 ratings
Kindle Price  $1.28
Read with Kindle  Free App

Product details

  • ASIN ‏ : ‎ B0B18MJ8TY

  • Publication date ‏ : ‎ May 12, 2022
  • Language ‏ : ‎ English
  • File size ‏ : ‎ 6893 KB
  • Text-to-Speech ‏ : ‎ Enabled
  • Screen Reader ‏ : ‎ Supported
  • Enhanced typesetting ‏ : ‎ Enabled
  • X-Ray ‏ : ‎ Not Enabled
  • Word Wise ‏ : ‎ Enabled
  • Print length ‏ : ‎ 358 pages

பூப்போல மலரும் நோய்! – மீனாக்ஷி பாலகணேஷ்

 

தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்? ] /பகுதி 18‏ ~ Theebam.comஅவள் மாமரக்கிளையில் கட்டிய ஊஞ்சலில் கால்களை உதைத்தெழுந்து ஆடுகிறாள். அடடே! பின்னிருந்து யார் அதனை ஊக்கி விடுவது? மெல்லத்திரும்பிப் பார்த்தால் அவன், அவளுடைய காதல் கணவன்! எப்போது அவன் ஊர் திரும்பினான்? வேலை காரணமாக வெளியூர் அல்லவோ சென்றிருந்தான்? வந்துவிட்டானா? மகிழ்ச்சியில் உள்ளம் துள்ளுகிறது. ஊஞ்சலில் பிடி நெகிழ்கிறது; கீழே விழுந்து விடப்போனவளைத் தாங்கிப் பிடித்து அணைத்துக் கொள்கிறான் அவன். முகம் சிவக்க, அந்தப் பிடியினின்றும் தன்னை மீட்டுக்கொள்ள முயன்றாள்- முயல்வது போல நடித்தாள் – அவள்!

சே! என்ன இது? அழகான இனிமையான கனவு கலைந்து விட்டது. எங்கோ சேவல் கூவுவது கேட்கிறது. புள்ளினங்கள் சலசலக்கத் தொடங்கி விட்டன. கனவின் இனிமையை எண்ணியவாறே படுக்கையில் கிடக்கிறாள் அவள். அக்கம்பக்கத்து வீடுகளில் வாசல்பெருக்கும் சப்தமும் மாடுகளைக் கறக்க முற்படும் ஒலிகளும் கேட்கின்றன. மெல்ல, தானும் எழுந்து, தோட்டத்துப்பக்கம் செல்கிறாள். எப்போது அவர் வீடு திரும்புவார் எனும் கேள்வி உள்ளத்தின் ஒரு கோடியில் எழும்புகிறது. சுரத்தே இல்லாமல் தன் காரியங்களைக் கவனிக்க முனைகிறாள்.

பித்திகக்கொடி அரும்புகளால் நிறைந்து நிற்கிறது. ஏதோ எண்ணியவாறே அவற்றையும் பறித்துவந்து ஒரு தாலத்தில் இட்டு வைக்கிறாள்.

பிரிவில் வருந்தினாலும் உயிரைத்தக்க வைத்துக்கொள்ள உணவு வேண்டுமல்லவா? மெல்ல மெல்ல ஏதோ ஒரு கீரையையும் சிறிது வரகரிசியையும் இட்டு ஒரு எளிமையான சமையலைச் செய்கிறாள். நேரம் ஊர்ந்து செல்கிறது; அடுத்தவீட்டு முதியவள் வருகிறாள். ‘இவள் இளையவள், சிறுபெண்; இப்போதுதான் திருமணமானவள்; கணவன் வெளியூர் சென்றமையால் தனியே இருக்கிறாள்’ என்று பசுவின் பாலால் செய்ததொரு பாயசத்தை அவளுக்காக ஆசையோடு ஒரு செம்பு நிறையக் கொண்டு வந்து தருகிறாள்.

“அவர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? ‘தனது அலுவல்களில் அலைந்து கொண்டிருப்பவர் சரியாக உண்டாரோ இல்லையோ?’ என இவள் எண்ணம் எங்கோ சிறகடிக்கிறது. உணவு செல்லவில்லை. கூம்பிய தாமரை போன்ற முகத்துடன் பாயசச் செம்பைப் பார்த்துப் பரிதவிக்கிறாள் இவ்விளம்பெண்.

முதியவள் இவளைக் கனிவோடு பார்க்கிறாள். ஏதேதோ பேசி அவள் எண்ணங்களைத் திசை திருப்ப முயல்கிறாள்; ‘உம்,’ என்ற முனகல்களுடன் ஒரு சொல் விடைகள் மட்டுமே இளையவள் வாயினின்று வருகின்றன. பகல் பொழுதும் மெல்ல மெல்ல விரைந்து செல்கின்றது. கதிரவன் மேற்கே விடைபெறத் தயாராகி விட்டான்.

தாலத்திலிட்ட பித்திக அரும்புகள் விரியத் தயாரான நிலையில் உள்ளன. இவற்றை இப்போது ‘போது’ என்பார்கள். ‘மலர்ந்து மலராத பாதிமலர்’ என்பாரே நமது கண்ணதாசன், அவ்வாறு உறங்கும் சின்னக்குழந்தையின் கண்மலர்கள் போல இருக்கின்றன.

முதியவள் வாழைநாரைப் பதமாக உரித்தெடுத்து நீரில் தோய்த்துக்கொண்டு பித்திக மலர்களைச் சரமாகத் தொடுக்க அமருகிறாள். சிறிது உரையாடிய படியே, தொடுத்த சரத்தை இவள் கரங்களில் தருகிறாள். மாலைப் பொழுதாகி விட்டதல்லவா? பித்திகமலர்கள் இவள் கைகளில் ‘கொல்’லென மலர்ந்து சிரிக்கின்றன. அவற்றைப் பார்க்கும் இவள் கண்களில் பிரிவின் ஆற்றாமை பொறுக்காமல் நீர் குளமாகத் தேங்குகிறது. முதியவளின் தோளில் சாய்ந்து விம்முகிறாள். முதியவளும் இவள் நிலையில் ஒருநாள் இருந்தவள் தானே!  இளையவளின் கூந்தலைத் தடவி அவளைத் தேற்ற முயல்கிறாள்.

‘கனவேயானாலும் தலைவர் என்னைப் பிரிந்ததும் காலையில் அந்தப் பிரிவு என்னும் நோய் இந்த மலர் அரும்பைப்போல் என் சிந்தையில் தோன்றுகிறது. பகல் பொழுது வளர வளர என்னுடைய பிரிவுநோயும் வளர்ந்துகொண்டே போகிறது. முதிர்கிறது. இனிமையான மாலைப் பொழுதில் மலர்ந்து விரிந்துவிடும் மென்மையான மலர்களை போல முழுமையாக விரிந்த இந்த நோயும் எனக்குத் துயரம்தரவே மலர்கிறது. இந்தப் பிரிவின் நோய் மாலைப்பொழுதில் எனக்குப் பெருத்த துன்பத்தை அல்லவா தருகிறது? வேதனையை அன்றோ அதிகப்படுத்துகிறது? பகல் முழுக்க நெடுநேரம் வளர்ந்து முதிர்ந்த இந்த இந்நோய் மாலை போன்ற குறுகிய காலத்தில் மொத்தமாய் அதன் கோர வடிவினை எனக்குக் காண்பிக்கிறதோ?’ என ஏங்குகிறாள் தலைவி.

‘காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.’ (திருக்குறள் 1227)

[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]

இதில் பொருளைச் சொல் சொல்லாக எடுத்துப் பிரித்துக் காண வேண்டும். தலைவி துயில் நீங்கி எழுந்தபோது காலை நேரம். கனவின் இனிமையும் அதன் எண்ணங்களும் இன்னும் அவளுக்குள் நிறைந்து நிற்கின்றன. ஆகவே அந்தக் காதல்நோய் அரும்பாகத் தான் இருக்கிறது, அவள் அப்போதைக்கு அதை லட்சியம் செய்யவுமில்லை.

பகற்பொழுதில் பலவேலைகள். ஊடே காதல்தலைவனின் நினைவுகள் வராமல் இல்லை. இருப்பினும் அவற்றை ஒருபக்கம் ஒதுக்கி வைக்க முடிகிறது. ஆனால் அந்த நோய் மெல்லப் பெருகி வளர்ந்து வருகிறதே!

மாலையில் பிரிவு அதிகம் வேதனை தருவது எதனால்? தம் துணையை எண்ணி வீடு வந்துசேரும் மனிதர்கள், ஆவினங்கள், கூடடையும் பறவைகள், இவர்களைக்கண்டு, தான் கணவனுடன் இன்பமாகக் கழித்த காலத்தின் நினைவுகளின் தாக்கத்தில் இந்நோய் மாலையில் மலர்கிறது (முழுமையாகத்தன் சுயரூபத்தைக் காட்டுகிறது) என்று வருந்தினாளாம் இவள்.

பூவின் நிலைகள் பொழுது (காலத்) திற்கேற்ப மாறும். அரும்பு என்பது பூவின் தோற்ற நிலை.  போது என்பது பூ விரியத் தொடங்கும் நிலை. மலர் என்றால் பூ விரிந்து மலர்ந்துவிட்ட நிலை. பூவினைப்போல பிரிவு / காதல் நோயும் காலத்திற்கேற்ப வளர்கிறது என்பது உருவகம். இதனை ஏகதேச உருவகம் என்பர்.

00000

இதேபோன்ற தாகூரின் ஒரு அழகான கவிதை நினைவிற்கு வந்தது. அவர், கீதாஞ்சலியில் இதே போலும் காதல் தாபத்தை பரம்பொருளின் மீதேற்றிக் கூறுவார்!!

மேகங்கள் மேன்மேலும் திரண்டு இருளடையச் செய்கின்றன. என் அன்பே, என்னை ஏன் தன்னந்தனியாக கதவிற்கு வெளியில் நிற்க வைக்கிறாய்?

           மதியநேரத்தின் வேலை மும்முரத்தில், நான் கூட்டத்தோடு இருக்கிறேன் (உன் நினைவு என்னைத் துன்பத்தில் அவ்வளவாக ஆழ்த்தவில்லை). ஆனால் இந்த இருண்ட தனிமையான நாளில் உனக்காக மட்டுமே காத்திருக்கிறேன்.

           எனக்கு நீ உன் முகத்தைக் காட்டவில்லையென்றால், என்னை நீ முழுமையாகப் புறக்கணித்து விட்டால், நான் எவ்வாறு இந்த நீண்ட மழைநாட்களைக் கழிப்பேன் என அறியேன்.

           தொலைதூரத்து இருளை நான் வெறித்துக்கொண்டும் எனது இதயம் இந்த அமைதியற்று அலைந்து புலம்பும் காற்றைப்போல இருக்க, அழுதுகொண்டும் இருக்கிறேன்.                                                            (தாகூர்- கீதாஞ்சலி)     

 

           Clouds heap upon clouds and it darkens. Ah, love, why dost thou let me wait outside at the door all alone?

            In the busy moments of the noontide work I am with the crowd, but on this dark lonely day it is only for thee that I hope.

            If thou showest me not thy face, if thou leavest me wholly aside, I know not how I am to pass these long, rainy hours.

            I keep gazing on the far-away gloom of the sky, and my heart wanders wailing with the restless wind.                                                    

                                                                                                (Tagore- Gitanjali)

இந்தக் கவிதைகளையெல்லாம் படித்து அவற்றின் பொருளிலாழ்ந்து தோய்ந்து அழுததுமுண்டு. தெய்வத்தை நம் அன்பில் கட்டிப்போட்டுக் காட்டும் காதல் மொழிகளல்லவோ இவை! காதலைப்போல ஒருவரைப் பித்தாக்கும் தாபநிலை இது. காதலைக் கூறி விளக்கினால்தான் சாமானியர்களான நாம் புரிந்துகொள்ள முடியும் என்று அந்த வழியிலேயே நின்று கூறுகிறாரோ தாகூர்?

எப்படியானால் என்ன?

ஆண்டாளும் மீராவும் இறைவனிடம் கொண்ட காதலைப் பற்றி அறிந்த நமக்கு இதனை உணர்ந்து புரிந்து கொள்வது எளிதே!

00000

பாரதியாரும் தன் பங்குக்கு இந்த நோயை ஒரு அலசு அலசியிருக்கும் அழகை ‘கண்ணன் என் காதலன்’ கவிதையில் கண்டு மகிழலாம்.

காதல் வயப்பட்ட பெண்ணுக்கு தன் ‘நோய்’ எதனால் என்று தெரியவில்லை! தூண்டிற் புழுவினைப்போல் நெஞ்சு துடிக்க, கூண்டுக்கிளியினைப் போல் செல்லும் வழியறியாமல் மிக நொந்து கிடக்கிறாள். தாயைக் கண்டாலும் சலிப்பு; தோழிமார் எல்லாம் நோய்போலத் துன்பம் தருகின்றனர்.

உணவு செல்லவில்லை- சகியே
உறக்கங் கொள்ள வில்லை;

பாலுங்க சந்ததடீ சகியே
படுக்கை நொந்த தடீ

நாலு வயித்தியரும் இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்
பாலத்துச் சோசியனும்- கிரகம்
படுத்து மென்று விட்டான்;

மருத்துவனும் சோசியனும் கைவிரித்து விட்ட நிலை!!

ஆனால் கனவில் அவன் வந்து அவள் மனதைத் தொட்டு விட்டான்; புதிய மகிழ்ச்சியில் திளைக்கிறாள் அவள்.

உச்சி குளிர்ந்து, உடம்பும் நேராகிறது. உள்ளத்தில் புதியதோர் சாந்தி பிறக்கிறது. எண்ணிப் பார்த்ததும் புரிகிறதாம் – அது அந்த மாயக்கண்ணன் தான் இவள் உள்ளத்தில் வந்து குடிகொண்டு விட்டான் என்று!!

கண்ணன் திருவுருவம் அங்ஙனே

           கண்முன்னே நின்ற தடீ!

பூப்போல பல நேரங்களில் பலகட்டங்களாக வளரும் காதல்நோயைப் பற்றிப் பார்த்தோம். இது உள்ளம் பற்றிய நோய்!

அடுத்த இதழில் உடலை வருத்தும் இன்னும் சில நோய்களைப் பற்றிய செய்திகளைக் காணலாமே!

 

திரைரசனை வாழ்க்கை -16 – எஸ் வி வேணுகோபாலன்

 

சார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா? | வினவுமாடர்ன் டைம்ஸ் : காலத்தைக் கடந்தும் பேசும் மௌனப் படம் 

ஓட்டலுக்குள் நுழைகிறார் ஒருவர்.  ‘சார் என்ன வேண்டும்?’ என்ற குரல் கேட்கிறது. ‘என்ன இருக்கிறது?’ அவ்வளவு தான் கடல் மடை திறந்தது போல் கடையில் உள்ள பலகாரங்கள் பெயர்கள் செவிகளைத் தொளைக்கின்றன. ‘சரி சரி, ஒரு பிளேட் பூரி கிழங்கு’ இது அவர் சொன்ன பட்டியலில் இல்லாதது. ஆனாலும் சலனமின்றி உள்ளே போகிறார். அதைக் கொண்டு வருவதற்குள் வேறு வேறு மேசைகளில் இருந்தும் வேறு வேறு ஆர்டர் – ஐஸ் வாட்டர், ஜாங்கிரி, இதனிடையே ஒரு மேசையில் சாப்பிட்டு முடித்தவர் பில் கேட்கிறார், சட்டென்று பில் புத்தகத்தில் எழுதிக் கிழித்து மேசையில் சிந்தி இருக்கும் காபித் துளியில் ஒட்டிவிட்டு, அடுத்த ஆர்டர்…’என்ன இருக்கிறது?’, யாரோ கேட்கிறார், மீண்டும் பட்டியல் ஒப்புவிக்கிறார் அவர். 

இவர் என்ன மனிதனா, எந்திரமா…என்று ஓட்டலில் நுழைந்தவர் யோசிக்கும்போது, ‘சார் உங்க கைக்குட்டை கீழே விழுந்திருக்கு’ எடுத்துக் கொடுத்துவிட்டு நகர்கிறார், நிச்சயமாக எந்திரமில்லை, மனிதன் தான். மீண்டும் ஐஸ் வாட்டர், ஐஸ் கிரீம், எந்திரமாகி விடுகிறார் அவர்!

‘இது மிஷின் யுகம்’ என்ற புதுமைப்பித்தன் சிறுகதையில் வருவது தான் மேலே நீங்கள் வாசித்தது (மணிக்கொடி: ஜூலை 29, 1934). முதலில் மனித எந்திரன் என்று தான் தலைப்பிட்டு இருந்திருக்கிறார் புதுமைப்பித்தன், கதையை சார்லி சாப்ளின் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், மாடர்ன் டைம்ஸ் திரைப்படம் மிஷின் யுகத்தின் மனித எந்திரனின் – எந்திரத்திலிருந்து விலகி விலகிப் போய்த் தன்னை மனிதனாக நிறுவிக் கொள்ளத் துடிக்கும் ஒரு தொழிலாளியின் துயரம் மிகுந்த கதை, ஆனால் தமது கதை சொல்லலில் யாரையும் அவர் அழ அனுமதிப்பதில்லை. 

மாடர்ன் டைம்ஸ் திரைப்படம் அல்ல, மனித சமூக வாழ்க்கையில் மூலதனத்தின் கைவரிசை என்ன என்பதன் நுட்பமான காட்சிப்படுத்தல் அது. தொழிற்சாலை முழுக்க நிறைந்திருக்கும் எளிய மனிதர்கள் வேலை பார்க்கின்றனர், முதலாளியோ அவர்களை வேவு பார்க்கிறார்.  தொழில் நுட்பம் அவரை அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து தொழிலாளிகளை விரட்டிக் கொண்டே இருக்கச் செய்கிறது.  வேவு பார்ப்பவர் கங்காணியா, மேலாளரா, முதலாளியே தானா, யாராயினும் அது மூலதனத்தின் முகம்.  

எந்திரங்களின் வேகக் கட்டுப்பாட்டு அறைச் சுவரில் முதலாளி திடீர் என்று தோன்றி, வேகத்தைக் கூட்டு என்கிறார், அதற்கான ஆள் லீவர்களை இழுக்க, ஏற்கெனவே ஒருவரோடொருவர் மோதி மோதி ஸ்க்ரூ டைட் செய்து உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகள் இப்போது கூடுதல் வேகத்தில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் கன்வேயர் பெல்ட் மீது நகர்ந்து வரும் அடுத்தடுத்த பொருள்களின் ஸ்க்ரூ டைட் செய்ய தங்களுக்குள் இன்னும் மோதிக்கொள்ள ஆரம்பிக்கின்றனர்.  ஆனாலும் அவர்கள் கவனம், விசுவாசம் எல்லாம் வேலைகளை முடிப்பதில் தான்.  சண்டைகளைக் கூட அவர்கள் வேகமாகக் கைவிட்டு எந்திரங்களின் பின்னால் தான் ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. சாப்பாட்டுக்கு மணியடித்தால் போட்டது போட்டபடி ஓடவும் அவர்கள் பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றனர். 
முதலாளியிடம் ஓர் அதி நவீன எந்திர விற்பனையாளன் வந்து தொலைக்கிறான், தொழிலாளி சாப்பிடக் கூட இடத்தை விட்டு நகரவேண்டாம், அவன் இருக்குமிடத்திலேயே அவனுக்கு சாப்பாடு எடுத்து வாயில் ஊட்டி, கன்னத்தில் ஒட்டி இருந்தால் வேகமாகத் துடைத்து விட்டு, திரும்பவும் ஊட்டிவிட்டு… என்று வட்டமாகச் சுழலும் மேடையின் மீது உணவுத்தட்டுகளும், ஆள் அசையாமல் கழுத்தில் கிடுக்கிப் பிடிபோட்டு நிறுத்தும் கருவிகளுமாக அசுர சாதக எந்திரத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறான்.

ஏற்கெனவே எந்திரத்திற்கு சவால் விடுமளவு எந்திரமாக மாறியிருக்கும் சார்லி சாப்ளினை வைத்தே இந்த உணவு எந்திரத்தை பரிசோதிக்க கேட்டுக் கொள்கிறான் முதலாளி.  அரைகுறை தொழில்நுட்பமும், அவசரத் திருகலும் ஏற்படுத்தும் குழப்பத்தில் சாப்ளினுக்கு நல்ல சாத்துபடி நடக்கிறது, அடித்து நிமிர்த்துகிறது எந்திரம், முதலாளியே பெரிய மனது பண்ணி எந்திரம் தோல்வி என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறான், எந்திரக்காரர்களும் இடத்தை காலி செய்துவிட்டுப் போகின்றனர். சாப்ளின் என்ன ஆகிறார் என்று நின்று பார்க்க அவர்களுக்கு நேரமோ அக்கறையோ முன்னுரிமையோ இருப்பதில்லை, அது மூலதனத்தின் அடுத்த முகம். 

தொழிலாளி தேவையற்று ஒற்றை நொடி நேரம் கழிப்பறையிலோ, முகம் கழுவிக் கொள்ளும் நீர்த் தொட்டி முன்போ நிற்பதையும் சுவரில் தோன்றும் முதலாளி பார்த்துக் கண்டித்து உள்ளே போ என்கிறார். தொண்ணூறுகளில், தாம்பரம் மெப்ஸ் தொழிற்பேட்டையில், ஆயிரம் பெண்கள் வேலை பார்த்த ஒரு துணி நிறுவனத்தில் ஐம்பது பேருக்கு ஒரு டோக்கன் கொடுத்து, சுழற்சி முறையில் கழிப்பறை பயன்படுத்தச் சொல்வார்கள், யாரேனும் கொஞ்சம் கூடுதல் நேரமெடுத்துக் கழிப்பறை விட்டு வெளியே வரவில்லை எனில் கங்காணி பெரிய கட்டையால் கதவில் ஓங்கித் தட்டி, படு ஆபாசமான வசவுகளை இரைந்து சொல்லி வெளியே வரச் செய்த கொடுமை எல்லாம் நினைவுக்கு வந்தது. 

சாப்ளின் தொழிற்சாலையில் எந்திரத்தை விட வேகமான எந்திரமாக அடுத்தடுத்து ஈடுபடும் அபத்தச் செயல்பாடுகள் பார்வையாளரை அதிர வைக்கும் சிரிப்பில் ஆழ்த்தினாலும், அதனூடே அவர் சொல்லிக் கொண்டே போகும் தத்துவங்கள் அடர்த்தி மிக்கவை.  ஒரு பெரிய எந்திரத்தினுள் போய்ச் சிக்கிக் கொண்டிருக்கும் மேலதிகாரியை அவர் விடுவிக்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கையில், உணவு இடைவேளைக்கு மணியடித்ததும், எந்திரமாகத் தனது தட்டை எடுத்துக் கொண்டு உண்ண ஆரம்பிப்பதும், உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் மனிதரும் வெளியே எடு என்று குரலெழுப்பாமல் அப்படியே எனக்கும் சாப்பாடு கொடு என்று கேட்பதும் தொழிலகத்தின் நேரம் சார்ந்த கெடுபிடிகள் மீதான சாட்டையடி காட்சிகள். 

சாப்ளின் வெளியேற்றப்படுகிறார். வேறெங்கோ போராட்டம் நடக்கிறது. இவரோ, பார வண்டியிலிருந்து கீழே விழும் சிவப்புக் கொடியை ஏந்திப் போராட்டக்காரர்களைத் தள்ளிக்கொண்டு முன்னேறும்போது சிறையிலடைக்கப்படுகிறார். (அமெரிக்காவில் அவர் வாழ்ந்த காலத்தின் மெக்கார்த்தி என்கிற செனட் உறுப்பினர், பயங்கர கம்யூனிச விரோதி, உரிமை கேட்பவர்களை நசுக்கத் துடிக்கும் அதிகார ஒடுக்குமுறைக்கு மெக்கார்த்தியிசம் என்றே பின்னர் பெயர் வழங்கலாயிற்று.   சாப்ளினே நாடு கடத்தப்பட்டவர் தான்). 

சிறையில் மிகச் சிறப்பான கைதியாகத் தன்னை நடத்திக் கொள்கிறார் சாப்ளின். அவரை விடுவித்தால் அதிர்ச்சி அடைகிறார், வேளைக்கு ஒழுங்காகச் சோறு கிடைத்துக் கொண்டிருந்த அந்த இடத்திலிருந்து மீண்டும் வீதிக்குத் தள்ளப்படுவது அவருக்கு ஏற்பில்லை.  போதிய ஊதியமற்ற தொழிலாளியின் குடும்ப மூத்த பெண் ஒருத்தி கிடைக்கிற இடங்களில் இருந்து பழங்களும் உணவுப்பொருள்களும் திருடி எடுத்துக் கொண்டு வந்து தம்பி தங்கைக்கும் அப்பாவுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.  அப்பாவும் சுடப்பட்டு இறக்கையில், அவள் ரொட்டி திருடுமிடத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுகிறாள், தற்செயலாக அந்த வழியே வரும் சாப்ளின் குற்றத்தைத் தான் ஏற்றுக் கொண்டு சிறைக்குப் போகத் துடிக்கிறார், ஆனால் இருவரும் சிக்கிக் கொண்டுவிட அவளைத் தப்புவித்து அவளுக்காக அவரும் தப்பித்து வருகிறார். 

ஏதுமற்றவர்களின் காதலை சாப்ளின் என்னமாக சித்தரிக்கிறார். அவரை உள்ளன்போடு நேசிக்கிறாள் அவளும். டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்றின் காவலாளி அடிபட்டுக் கீழே கிடக்கிறான், இவரோ சமயோசிதமாக உள்ளே போய் அந்த வேலையை எனக்குப் போட்டுத் தந்துவிடுங்கள் என்று சேர்ந்து விடுகிறார்.  தனது இளம் காதலியை வசதியான இலவம் பஞ்சு மெத்தையில் படுக்க வைக்கும் பேராசை மட்டுமே அவருக்கு. இரவில் அங்கே களவாட வருகிறவர்களில் ஒருவன், இவரது பழைய தொழிற்சாலை சகா. ‘நாங்கள் திருட வரவில்லை, பசி தான் இங்கே கொண்டு வந்தது’ என்கிற அவர்களது மொழியில் சமூக அவலத்தை எத்தனை பளீர் என்று காட்டுகிறார் சாப்ளின்!

அங்கிருந்தும் விதி அவரை வெளியேற்றுகிறது. இப்போது அந்த இளம் காதலி ஓர் ஓட்டலில் நடன நங்கை ஆகிவிடுகிறாள். சாப்ளினை பாடகராக அங்கே நுழைக்கப் பார்க்கிறாள். பழைய குற்றத்திற்காக அவளைத் தேடி வந்து விடுகிறது காவல் துறை !  ஆனால், வாழ்க்கை இன்னும் பெரிய போராட்டங்களோடு  காத்திருக்கவே, இவர்கள் அதற்கு ஈடு கொடுக்கத் தப்பி ஓடுமிடத்தில் நிறைவு பெறுகிறது சாப்ளினின் மௌன வரிசையில் கடைசியானது என்று சொல்லப்படும் படம்.   சிறப்பான படத்தொகுப்பும், மிகப் பொருத்தமான இசையும், திரைக் கலைஞர்களது மிக இயல்பான நடிப்பும் குறிப்பிட்டாக வேண்டியது – அதுவும் அந்த இளம் காதலி, ஆஹா…
அழுக்கான உடைகளோடு அழுக்கான வீடுகளில் அல்லது அழுக்கான பிளாட்பாரங்களில் மிக அழுக்கான வாழ்க்கை வாழ்கின்றனர் தொழிலாளிகள். ஆனால், அவர்கள் இதயம் தூய்மையானது.  உள்ளபடியே பன்மடங்கு அழுக்கான இதயம் கொண்டிருக்கின்றனர் முதலாளிகள். மூலதனத்திற்கு அந்த இதயம் கூடக் கிடையாது என்பது தான் சுவாரசியமான கொடூர உண்மை. இன்றும் புதிதாகப் பார்க்கத் தக்க திரைப்படமாக, மாடர்ன் டைம்ஸ் மின்னிக் கொண்டிருப்பது மலைக்க வைக்கிறது.

பெரிய தொழில் நுட்ப வளர்ச்சியை திரைக்கலை பெறாத காலத்திலேயே அதி நவீன எந்திரங்களை அவர் எப்படி திரையில் கொணர்ந்தார் என்பது வியப்புக்குரியது. ஸ்க்ரூ போல் எது காட்சியளித்தாலும் அதை முடுக்கியே தீருவேன் என்று ஒரு பெண்மணியைத் துரத்திக் கொண்டு சாப்ளின் ஓடும் ஒரு காட்சி சிரிப்புக்கானது மட்டுமல்ல, மனப் பிறழ்வு வந்தவர்களைப் போல் ஒரு சமூகப் பெருங்கூட்டத்தை மூலதனம் தனக்கு அடிமைப்படுத்திச் சிதைக்கும் வக்கிரத்தைத் தான் சாப்ளின் காட்சிப் படுத்துகிறார். 

தொழிலாளர் சந்தையில் போட்டியை உருவாக்க வேண்டியே மூலதனம் பசியை விதைக்கிறது, களவு செய்யத் தூண்டுகிறது, குற்ற உணர்ச்சி, போட்டி, பொறாமை போன்றவற்றில் உழலும் மனிதர்கள் ஒருபோதும் தங்கள் விடுதலையை சிந்திக்க மாட்டார்கள் என்கிற முதலாளித்துவ தத்துவ நம்பிக்கை. இத்தனையையும் மீறி, எளிய மக்கள் உன்னதமான மனித நேயத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதையும், சக மனிதனுக்கான அவர்களது கண்ணீரில் தெறிக்கும் வெளிச்சத்தில் விடுதலை நோக்கியும் நகர்வார்கள் என்பதையும் படம் கவித்துவமாகப் பேசுகிறது. அதனாலேயே காலம் கடந்து நிற்கிறது.

இதோ அந்த சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் காணொளிகள்: 

 

 

 

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
10. அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
13. ஜன கண மன ! – ஜனவரி 2021
14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
20. வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
21. பஸ்ஸில் போகலாம் – மே 2021
22. சிட்டுக் குருவி – மே 2021
23. ஆகாய விமானம் – ஜூன் 2021
24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
27. தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
28. விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
29. மழையே வா ! – செப்டம்பர் 2021
30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
31. தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
32. வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
33. தமிழ் ! – நவம்பர் 2021
34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
41. என்ன மரம் ! – மார்ச் 2022
42. சைக்கிள் ! – மார்ச் 2022
43. காந்தி தாத்தா – ஏப்ரல் 2022
44. சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022
45. தோட்டத்தில் காய்கறி – மே 2022
46. இந்தியாவும் தமிழ்நாடும் ! – மே 2022

மழை வருது !

மழையும் மண்வாசமும்..

மழை வருது ! மழை வருது !
ஜாலிதான் ! ஜாலிதான் !
மரம் செடி கொடிகளெல்லாம் –
நனையுது ! நனையுது !
பறவைகளெல்லாம் இங்குமங்கும் –
பறக்குது ! பறக்குது !
பலவித ஒலிகளெல்லாம் –
கேட்குது ! கேட்குது !

சின்னச் சின்ன தூறல்கள் –
தொடங்குது ! தொடங்குது !
தபதபவென பெரியதாய் –
பொழியுது ! பொழியுது !
இடி இடியென வானத்தில் –
இடிக்குது ! இடிக்குது !
பளபளவென மேகத்தில் –
மின்னுது ! மின்னுது !

காகிதத்தை மடிக்கலாம் !
கப்பல் செய்து ஓட்டலாம் !
கல்லெடுத்து வீசலாம் !
அலைகள் எழும்பச் செய்யலாம் !

மழையில் நனைந்து ஆடலாம் !
கொட்டும் மழையில் குதிக்கலாம் !
நண்பர்களே வாருங்கள் !
நனைந்து கொண்டே பாடலாம் !

*******************************************************

சுற்றிப் பார்க்கலாமா ?

India launches a new push for domestic travel to revive the tourism industry | Euronews

இந்தியாவை சுற்றிப் பார்க்க –
போகலாமா ?
அதன் அழகெல்லாம் நேரில் பார்த்து –
ரசித்திடலாமா ?
எத்தனையோ இடங்கள் இங்கே –
பார்க்க இருக்குது !
அத்தனையும் எனக்கெனவே –
காத்திருக்குது !

இமயமலையை கிட்டப் பார்த்து –
குதித்தாடுவேன் !
குமரிக்கடலில் உதயம் பார்த்து –
குதூகலம் கொள்வேன் !
தாஜ்மகாலைப் பார்க்கப் பார்க்க –
அதிசயம்தானே !
திருப்பதியில் தரிசனமும் –
செய்யணும் நானே !

அஜந்தாவும் எல்லோராவும் –
மனிதன் செய்ததா ?
சாரநாத்தும் கொனாரக்கும் –
கைகள் செய்ததா?
கணக்கிலில்லா கோயிலெல்லாம் –
இந்நாட்டில் இருக்குது !
எனக்கு பார்க்க வேண்டும் என்ற –
ஆசை பெருகுது !

இந்த நாடு முழுதும் நானும் –
ரயிலிலே போணும் !
மாநிலங்கள் ஒவ்வொன்றாய் நான் –
பார்த்திட வேணும் !
ரவி, கோபால், கீது, ரம்யா –
போய் வரலாமா ?
இந்தியாவைச் சுற்றி வந்து –
ரசித்திடலாமா ?

 

 

 

 

 

ரமேஷ் ராவின் விவகாரமான முடிவு – ராம் ஸ்ரீதர்

வாத்தியார் சுஜாதா!- Dinamani   <—இவர் எழுதாத கதை

வேலையற்றவனின் டைரி 18 - கணேஷ்-வசந்த்..! | வேலையற்றவனின் டைரி 18 - கணேஷ்- வசந்த்..! - hindutamil.in

வாசல் உள்ள அழைப்பு மணி ஒலித்தபோது, கணேஷ் அன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை மேய்ந்து கொண்டிருந்தான்.

பஸ்ஸர் சப்தம் கேட்டவுடன், “எஸ்” என்றான். உள்ளே பரபரப்பாக நுழைந்த பத்ரிக்கு 24 – 25 வயதிருக்கலாம்.

பின்னாலேயே கதவைத் தடாலெனத் திறந்தவாறு உள்ளே நுழைந்த வஸந்த், அந்தத் தெருவே அலறும் விதமாக, “மூணு காபி, சரவணா” என்று அறிவித்துவிட்டு, பத்ரியைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, “உட்காருங்க, பத்ரி. நீங்க காபி சாப்பிடுவீங்கள்ல?” என்றான்.

கண்களில் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்த பத்ரி, “என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான் வஸந்த்திடம்.

“எனக்கு முகம் பார்த்து ஜோஸ்யம் சொல்லத் தெரியும்” என்றான் வஸந்த் சிரிக்காமல்.

பத்ரி மேற்கொண்டு எதுவும் சொல்லும் முன், “உங்கள் சட்டை மேல் பட்டன் ரெண்டு திறந்திருக்கு. உங்க கழுத்துல இருக்கிற செயின்ல, டாலருக்கு பதிலா இருக்கிற உங்க பேரு க்ளியராத் தெரியறது” என்றான் கணேஷ் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

பத்ரி மிக லேசாகப் புன்னகைத்தான்.

“கணேஷ், நான் சொல்ல வந்தது ரொம்ப சீரியஸ். எங்க அப்பா போன வாரம் காலமாயிட்டாரு” என்றான் எங்கள் வீட்டில் கரண்ட் இல்லை என்பது போல.

“ஓ…..ஸாரி. உக்காருங்க பத்ரி” என்றான் கணேஷ்.

ஓஎம்ஆரில், சிறுசேரியில் இருக்கும் ஓபஸ் க்ராண்ட் என்ற அபார்ட்மென்டின் 13-வது மாடியிலிருந்து கீழே தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் குதித்து உயிரை விட்டுள்ள ரமேஷ் ராவின் நடுநெற்றியில், பொட்டு வைத்தது போல பாய்ந்திருந்தது ஒரு தோட்டா.

“நான் எதற்கும் லாயக்கில்லை. என் மனைவி, மகன் யாரும் என்னைத் துளியும் மதிப்பதில்லை. எனக்கு உயிர் வாழ விருப்பமில்லை. சேதமடையாத என் உடல் உறுப்புகளை அருகிலுள்ள ராஷ்ட்ரிய ஜெயின் கேந்திரா மருத்துவமனைக்கு தானம் செய்வதில் எனக்கு முழு விருப்பம் – ரமேஷ்” இப்படி ஒரு குறிப்பு எழுதி வெச்சிட்டு குதிச்சு இறந்துட்டாரு என் அப்பா…..” மேற்கொண்டு பத்ரி எதுவும் செல்லும்முன் வஸந்த் குறுக்கிட்டான்.

“இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் படி, அவர் குதிச்சது 13-வது மாடில இருந்து. அப்படி இருக்கும் போது, அவர் நெற்றில எப்படி புல்லட் பாஞ்சது? அது இல்லைனாலும், ஹிஸ் டிமைஸ் வாஸ் கன்ஃபார்ம்டு. இதுல நாங்க என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்க பத்ரி?” என்றான் வஸந்த்.

கணேஷ் ஆமோதிப்பது போல தலையாட்டினான்.

——————————————————————————————————–

கோர்ட்டில் பத்ரி……

“யுவர் ஆனர், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல இல்லாத ஒரு விஷயம் என்னன்னா, கீழ 4-வது மாடில பால்கனி ரிப்பேருக்காக சில கட்டிட ஆளுங்க வேலை பார்த்திருக்காங்க. அவங்க பாதுகாப்புக்காக நாலாவது மாடிக்குக் கீழ ஒரு பலமான ஸேஃப்டி நெட் கட்டியிருக்காங்க. எங்க அப்பா ரமேஷ் ராவ் கீழ விழுந்தபோது எங்க அப்பா நெத்தில குண்டு பாயாம இருந்திருந்தா, அந்த நெட்ல விழுந்து அவர் பிழைச்சிருக்கலாம். அப்புறம் எப்படி அந்த புல்லட்னு நீங்க கேட்கலாம். எட்டாவது மாடில 8-D ஃபிளாட்டுல இருக்கிற வயதான பெரியவர் ஸ்ரீனிவாச ராவும் அவர் மனைவி பத்மஜாவும் அடிக்கடி சண்டை போடுவாங்க. இதுல, ஸ்ரீனிவாச ராவ் ஒரு எக்ஸ்-மிலிட்டரி ஆளு. அவர்கிட்ட பாதுகாப்புக்காக பிஸ்டல், லைசென்ஸோட வெச்சிருக்காரு. கணவன், மனைவிக்குள்ள எப்போ சண்டை வந்தாலும், பிஸ்டலை வெச்சு மனைவியைச் சுட்டுடுவேன்னு மிரட்டறது ஸ்ரீனிவாச ராவோட பழக்கம்….…”

“அன்னிக்கும் அதுதான் நடந்தது. எப்போ மிரட்டினாலும், புல்லட் இல்லாத காலி பிஸ்டலை வெச்சுக்கிட்டுதான் மிரட்டுவேன். பாதுகாப்புக்காக லோடு பண்ணியிருந்தா கூட புல்லட்டை எடுத்திட்டுதான் மிரட்டுவேன். அன்னிக்கு லோடு பண்ணியிருக்கிறது தெரியாம. தவறிப் போயி ட்ரிக்கரை அழுத்தியிருக்கேன். சட்ன வெளியே வந்த புல்லட், கரெக்ட்டா ரமேஷ் ராவ் நெத்தி நடுல பாஞ்சிருக்கு. இது மிகவும் தவறுதலான, கைதவறி நடந்த விபத்து. ரமேஷ் ராவ் உடல் திடீர்னு ஜன்னல் வழியா க்ராஸ் ஆகும்னு எதிர்பார்க்கலை, யுவர் ஆனர்” என்றார் குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த ஸ்ரீனிவாச ராவ்.

தொண்டையைக் கனைத்து கொண்ட எழுந்த வஸந்த், “ஸ்ரீனிவாச ராவ், ‘எப்போ சண்டை போட்டாலும், இப்படித்தான் துப்பாக்கியால சுடுவீங்களா?” என்றான் வஸந்த் குரலில் கிண்டல் தெறிக்க.

“அப்ஜக்ஷன் மை லார்டு, திஸ் அலிகேஷன் இஸ் பேஸ்லெஸ்” என்றார் பிபி.

“சஸ்டைண்டு. வஸந்த், கேள்விகளை ஒழுங்கா கேளுங்க” என்றார் நீதிபதி.

“ஓகே ஐ வில் ரீஃபிரேஸ்” என்ற வஸந்த், “எப்போ சண்டை போட்டாலும், இப்படித்தான் துப்பாக்கியால சுடுவேன்னு மிரட்டுவீங்களா?” என்றான்.

“ஆமாம் சார், ஆனா, அது சும்மா விளையாட்டுக்குத்தான், என்னுடைய துப்பாக்கில எப்போதுமே குண்டு போட்டு, லோடு பண்ணி வெச்சிருக்க மாட்டேன். அன்னிக்கு எப்படி அப்படி ஆச்சுன்னு தெரியல, இரண்டாவது, நான் சுட்ட தோட்டா ஜன்னல் வழியா வெளியே போகும்போது, திடீர்னு ரமேஷ் ராவ் பாடி க்ராஸ் ஆகும்னு எனக்கு எப்படித் தெரியும்?” என்றார் ஸ்ரீனிவாச ராவ்.

“இது திட்டமிட்ட கொலை இல்லை என்றாலும், இதை கல்பபிள் ஹோமிஸைட் (Culpable Homicide) என்று சொல்லலாம், யுவர் ஆனர்” என்றான் வஸந்த்.

நீதிபதி ஆனந்த தீர்த்தன் அருகே வந்த குமாஸ்தா, அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தார்.

நீதிபதி கண் கண்ணாடியைக் கழற்றி துடைத்து மாட்டிக்கொண்டு, “வஸந்த், ஒரு நிமிஷம். இந்த ஸ்ரீனிவாச ராவ் ஃப்ளாட்டுக்கு அடுத்த ஃப்ளாட்டில் இருக்கும் பர்வதவர்த்தினிங்கிற மேடம் இந்த கேஸ் விஷயமா சொல்லணும்னு தன்னிச்சையா வந்திருக்காங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம்” என்றார்.

“என்னவோ சொல்லணும்னு சொன்னீங்களாமே, சொல்லுங்க மேடம்” என்றார் நீதிபதி . தொண்டையைச் செருமிக்கொண்டு, “யுவர் ஆனர், நான் அன்னைக்கு பால்கனில நின்னுகிட்டு இருந்தபோது, சத்தம் போடாம ஸ்ரீனிவாச ராவ் ஃப்ளாட்டுக்குள்ள அவரோட ஸன் நுழைஞ்சு, புத்தக அலமாரில இருக்கிற மர டப்பால இருந்து ஒரு புல்லட்டை எடுத்து, பக்கத்தில இருந்த பிஸ்டல்ல லோடு செய்யும்போது நான் தெளிவா பார்த்தேன்……ஏன்னா, அவருக்குத் தன்னோட அப்பாவும், அம்மாவும் டெய்லி இப்படி சண்டை போட்டுக்கறது பிடிக்காது. அடிக்கடி வந்து கத்துவாரு..” என்று சொல்லி ஒரு சிறிய இடை வெளி கொடுக்க,

தன் மொபைலில் வாட்ஸ்அப்பில் வந்த செய்தியைப் பார்த்து விட்டு, கணேஷ் காதில் ஏதோ சொல்லிவிட்டு எழுந்த வஸந்த், “ஸாரி யுவர் ஆனர். தி கேஸ் இஸ் க்ளோஸ்ட்” என்றான் தெளிவாக.

நீதிபதி ஆனந்த தீர்த்தனுக்கு ஒரு நொடி என்ன நடக்கிறது என்று புரியவில்லை. “வஸந்த், புரியல. ரெண்டாவது, இது என் கோர்ட். ஒரு கேஸ் க்ளோஸ்டா இல்லையான்னு சொல்ல வேண்டியது என் வேலை” என்றார் கடுமையாக.

வஸந்த் புன்னகைத்து, இரு கைகளையும் தூக்கினான். “ஸாரி யுவர் ஆனர். நோ டிஸ்ரெஸ்பெக்ட் டு தி கோர்ட்…..இந்த பர்வதவர்த்தினி மேடம் சொன்னது முழுக்க ரொம்ப சரி. குற்றம் சுமத்தப்பட்டிருக்கிற ஸ்ரீனிவாச ராவ் வீட்டுக்குள்ள வந்து அவரோட பிஸ்டல்ல புல்லட் லோடு பண்ண அவரோட ஸன் வேற யாருமில்ல…..இறந்து போன ரமேஷ் ராவ் தான்” என்றான்.

இருக்கையிலிருந்து எழுந்த கணேஷ், “யுவர் ஆனர், டு சம் அப், இந்த கேஸ் ரொம்பவே காம்ப்ளக்ஸ்…..ரமேஷ் ராவ் மனசு வெறுத்துப் போயி, தன்னோட 13-வது மாடி ஃப்ளாட்ல இருந்து குதிச்சு, சரியா 8-வது மாடியை க்ராஸ் பண்ணும் போது ஸ்ரீனிவாச ராவ் பிஸ்டல்ல இருந்து வந்த குண்டு இவர் நெத்தில பாஞ்சு இறந்திட்டாரு. ஆனா, சுடப்பட்ட அந்த பிஸ்டல்ல புல்லட்டை லோடு பண்ணினதே இந்த ரமேஷ் ராவ் தான். எனவே தெரியாம, ரொம்ப யதேச்சையா, அவர் சாவுக்கு அவரே காரணமாயிட்டாரு. எங்க தரப்பு தோத்தாலும் பரவாயில்லைன்னு உண்மையைச் சொல்லிட்டேன்.” என்று புன்னகைத்தான்.

கோர்ட்டில் ஏற்பட்ட ஆரவாரம் அடங்க சிறிது நேரமாகியது.

நீதிபதி, “வெல்டன் கணேஷ், டு அப்ஹோல்ட் தி ஜஸ்டிஸ், நீங்க எடுத்துக்கிட்ட ஸ்டாண்ட் ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம். கணேஷ் சொன்ன மாதிரி, ரமேஷ் ராவைச் சுட்ட பிஸ்டல்ல இருந்த தோட்டா, ரமேஷ் ராவே லோடு பண்ணது. அதை விஷயம் தெரியாம சுட்ட ஸ்ரீனிவாச ராவ் மேல குற்றம் சொல்ல முடியாது. வெரி ஸ்ட்ரேஞ்ச், ரமேஷ் ராவ் சாவுக்கு அவரே காரணம். எனவே இதை ஸூசைடுன்னு தாராளமா சொல்லலாம்….…”

அரை மணி நேரம் கழிந்து வெளியே வந்த கணேஷ் / வஸந்த் இருவரும் பத்ரியிடம் பேசிவிட்டு, அவர்களை கைகூப்பி வணங்கிய ஸ்ரீனிவாச ராவைப் பார்த்து புன்னகைத்து விட்டு, காரில் ஏறினார்கள்.

“யார்கிட்ட இருந்து வாட்ஸ்அப்ல மெசேஜ் வந்தது வஸந்த் ? அப்படியே பல்டி அடிச்சிட்ட?” என்றான் கணேஷ் புன்னகைத்தவாறே.

‘ஆமாம் பாஸ், கேஸ் ஒரே கண்ணாமூச்சியா இருந்தது. இறந்து போன ரமேஷ் ராவ் ஃப்ளாட்டுக்கு எதிரே விலாஸினின்னு ஒரு பாப்பா இருக்கு. அதுதான் அனுப்பினது. செம மாலு பாஸ். சும்மா நின்னு விளையாடும்” என்று கண் சிமிட்டிய வஸந்தைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு சிரித்தான் கணேஷ்.

 

(அமெரிக்காவில் 1994-ம் ஆண்டில் நடந்த “மிக வினோதமான தற்கொலை கேஸ்” என்ற நிகழ்வினால் ஈர்க்கப்பட்டு சுஜாதாவின் கணேஷ் -வசந்த்தை அவர் அனுமதியில்லாமல் சேர்த்துப்  புனைந்த கதை)

எல்லாம் நன்மைக்கே – ஜி சித்ரா

எல்லாம் நன்மைக்கே…

எல்லாம் நன்மைக்கே!/Abdul Basith bukari/Islamic whatsapp status. - YouTube

எல்லாம் நன்மைக்கே என்றால் ? நாம் செய்யும் செயல்களா?இல்லை அடுத்தவர்கள் நமக்கு செய்யும் செயல்களா?அச் செயல்களுக்கான விளைவுகளா?

விளைவுகளால் நாம் உணரும் வெற்றி/ தோல்விகளா?இல்லை அந்த செயல்களால் கிடைத்த பலன்களா! பயன்களா!

இவ்வெல்லாவற்றையும் தாண்டி விளைவுகளை சரியான கோணத்தில் அணுகும் நம் மனோபாவமா?அதனால் நம் உள்ளத்தில் நாம் உணரும் பாவங்களா…!

எல்லாம் நன்மைக்கே என்றால் இவற்றில் எது?

ஒருவருக்கு நன்மை எனில், மற்றவருக்கு அதன் பலன் என்ன?

அப்படி சம நிலையில் எடுத்துக் கொண்டாலும், அந் நினைவு, அந் நிலை நம்மை இட்டுச் செல்லும் பாதை எதுவாக இருக்கும்?இருக்கவேண்டும்?

“எதுவும் செய்யாமல் கிடைப்பதை வைத்து திருப்தி ஆகவேண்டும் என்று அர்த்தமா..? “

“அடுத்தது என்ன என்று சிந்தித்து செயல் படவேண்டுமா?”

“எச்செயலையும் செய்யாமல் நமக்கு விதிக்கப் பட்டது இதுதான்என்று இருக்க வேண்டுமா!!!”

இச்சிந்தனைகள், இவ்வெண்ணங்கள்  எனக்குள் ஏற்படுத்திய விளைவுதான் இக்கட்டுரை.

செய்யும் செயல்களையும், அதற்கான பல்வேறு வழிகளையும் தீர்மானிக்கும் உரிமை நம் கையில். ஆனால் அதன் விளைவுகள், முடிவுகள், எப்படி இருக்கவேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியுமா?

நாம் செய்யும் செயல்களுக்கான விளைவுகள், பலன்கள் நம் கையில் இல்லாத பொழுது நாம் அவற்றை எவ்வாறு எடுத்துக் கொள்வது?என்று முடிவெடுக்கும் பொழுது என் மனம், என்னை அழைத்து செல்லும் இடமாகநான் பார்ப்பது,நேர்மறைச் சிந்தனைகளின் வடிவத்திற்குத்தான்

நேர்மறை சிந்தனைகளின் அனைத்து வடிவங்களையும் ஒரு புள்ளியில் குவித்தோமானால் அதற்கு வைக்கப்படும் பெயர் என்னைப் பொருத்தவரை “எல்லாம் நன்மைக்கே…”

இது நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை வெற்றி தோல்வியின்றி சம நிலையில் வைத்துப் பார்க்கும் எடுத்துக் கொள்ளும் ஒரு மனோ பாவத்தின் வெளிப்பாடு.

இவ்வாறு எடுத்துக் கொள்வது அனைவருக்கும் சாத்தியமா..?

சாத்தியமா?..  என்பதே  எதிர்மறைக் கேள்வியின் வெளிப்பாடு.

சாத்தியமே..என்பதுதான் நேர்மறைச் சிந்தனையின் பதில்.

மனிதன் தன் வாழ்க்கைப் பாதையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு செயலை செய்து அதற்குரிய பலனை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்.

அச் செயல்கள் அவர்களின் கல்வி,வேலை வாய்ப்பு, செல்வம்,ஆரோக்கியம்,புகழ் இவற்றில் எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனால் செயல்கள் தொடர்ந்து கொண்டு இருப்பதென்னவோ உண்மை.

அச் செயல்களின் விளைவுகள் கீழ்க் கண்டவாறு அமைவதற்கு அனைத்து வகையான வாய்ப்புகளும் உள்ளன.

விளைவுகள் –

இந்த நான்கு வகையான முடிவுகளையும் சமமான நிலையில், சீரான எண்ண ஓட்டத்தில் எடுத்துக் கொள்ளும் மனோபாவமே எல்லாம் நன்மைக்கே.

இந்த நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக் கொண்டால் நாம் நினைத்த காரியம் யாவும் கைகூடி வரும்.

எப்படி என்றால்?

மனிதன் எண்ணங்களால் வாழ்பவன்.தன்னைச் சுற்றி அவன் போட்டுக் கொள்ளும் நற்சிந்தனைகள் நிரம்பிய கவசம் அவனை,அவன் எண்ணும் இடத்திற்கு அவனை இட்டு செல்லும். அவன் நம்பிக்கை அவனை வழி நடத்தும்.விரும்பிய பலன்களை அடைய வைக்கும்.அதுமட்டுமல்லாமல் எல்லாம் நன்மைக்கே என்கிற மனோபாவத்தை நாம் நடைமுறை படுத்திக் கொண்டால் நமக்கு கிடைத்த எதிர்மறை விளைவுகளை சீர்படுத்த, நேற்றைய நிகழ்வுகளில் நமக்குக் கிடைத்த பாடத்தை மனதில் வைத்து,நாளைய நிகழ்விற்காக சிறப்பாகத் திட்டமிடலாம். அதுவே நம்மை முன்னேற்றப் பாதையில் இட்டு செல்லும்.

எப்பொழுதும் நிகழ் காலத்தில் நடக்கும் நிகழ்வை வைத்துத்தான் நாம் யார் என்று கணிக்கப் படுகிறோம்.அல்லாமல் அவற்றைக் குறித்த கவலைகளாலும். துவளும் மனங்களாலும் இல்லை. அந் நிலை நம் நிகழ் காலத்தையும்,வரும்காலத்தையும் வீணடித்துவிடும்என்பது கண் கூடு.

வாழ்க்கை ஒரு போர்க்களம். இங்கு போர்க்களம் மாறலாம் போர்களும், போராட்டங்களும் மாறுவதில்லை. நாம் நடக்கும் பாதையில் முட்களுடன் கூடிய ரோஜா இதழ்களுடன் தான் நமக்குப் பாதை. இவற்றில் முட்கள் நம்மை பதம் பார்க்காமல் நடப்பது நம் கையில்.

காரணம் இல்லாமல் காரியமில்லை என்பதை நாம் உணரவேண்டும்.நம்முடைய இன்றைய செயல்களின் பலன்கள் வேண்டுமானால் நம்விருப்பதிற்கு இல்லாமல் போகலாம்.ஆனால் அதற்கு வருத்தப் படுவதால் எந்த பலனும் விளையப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொண்டு இன்று ஒரு வெற்றி நம் கைவசம் ஆகாமல் போகலாம்.  ஆதலால், அது என்றுமே நம் கைவசம் ஆகாது என்று அர்த்தமில்லை. பொழிகின்ற காலங்கள் தவறிப் போகலாம், தள்ளிப் போகலாம். ஆனால் மழை என்றுமே பொய்ப்பதில்லை என்பதை உணர்ந்து எல்லா பலன்களும், வெற்றிகளும் முதல் முயற்சியிலேயே கை கூடிவிடுவதில்லை. விடா முயற்சி,தன்னம்பிக்கை,நெஞ்சுரம், வேட்கை போன்ற சில விஷயங்களை கைவிடாமல் தொடர்ந்து முயற்சித்தால் நம் நோக்கம் நிறைவேறிவிடும் என்கிற நிலைக்கு எல்லாம் நன்மைக்கே என்கிற மனோபாவம் இருந்தால் எளிதில் வெற்றி நம் கைவசமாகிவிடும்.

இந்த மனப் பக்குவம் நமக்கு எப்பொழுது கிடைக்கும் இதுதான் அடுத்த கேள்வி?

சில அடிப்படை உண்மைகளை நாம் புரிந்து கொள்ளத் துவங்கும் பொழுது, இந்நிலை நம் கைவசமாகும்.

முதலில் நம்மைப் பற்றிய ஒரு தெளிவு, நம் தேவை, திறமை, தகுதி ஆகியவற்றுடன் நம்மைச் சுற்றி உள்ள உலகத்தையும் எவ்வாறு? எந்த அளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறோமோ? அதைப் பொறுத்துத் தான் நம் மனப் பக்குவம் அமைகிறது.  சூழ்நிலைக் கேற்ப மனிதனின் எதிர்கொள்ளும் திறனும்,அணுகு முறையும் மாறுபடுகின்றது.

இந்த எல்லாம் நன்மைக்கே என்கிற மன நிலை மட்டுமே நம்மை நாம் நினைக்கும் உயரத்திற்கு நம்மை கொண்டு சேர்த்துவிடுமா?

இல்லை…!!!!!!

அதைத் தொடர்ந்து கிடைத்தவிளைவுகளுக்கு ஏற்ப நம் எண்ணங்களையும், செயல்களையும் நேர்மறை சிந்தனைகளோடு முறைபடுத்தவேண்டும்.

“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது

எது நடக்கவிருக்கிறதோ

அதுவும் நன்றாகவே நடக்கும்”

பகவத்கீதை

“வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு”

குறள்

“நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்”

” சுவாமி விவேகானந்தர்…

மேற் கூறிய மூன்று வாழ்வியல் கோட்பாடுகளும்,வெவ்வேறு கால கட்டங்களில் (சொல்லப் போனால் யுகங்களுக்கு அப்பாலும் சொல்லப்பட்டவை) மனிதர்களின் மனக் குழப்பத்தை நீக்கி, எண்ணங்களை மேம்படுத்தி, அவ்வெண்ணங்களின் எழுச்சியால்,ஊக்கத்தால் வாழ்வியலில் வெற்றி பெறுவதற்கு சொல்லப்பட்டவை.

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், உலகின் நிகழ்வுகள் அதன் பாதைபடி நடந்துகொண்டுதான் இருக்கும். அப்படித்தான் இருக்கின்றது என்பதிலும்  ஐயமில்லை. ஆனால் அந்த நிகழ்வுகளில் நாம் இருக்கிறோமா? என்பதுதான் கேள்வி.

நாம் தளர்ந்துவிடாமல் நிமிர்ந்து நடந்தால்தான் நாம் நடக்கும் பாதையின் வழி புலப்படும். அந்த நிமிர்வை நமக்கு கொடுப்பது எல்லாம் நன்மைக்கே என்கிற எண்ணம்.

ஓடுகின்ற நீரோட்டத்தில் உருண்டு செல்லும் கூலாங் கல்லாக இருந்தால்..வேண்டிய இடத்தில கரை ஒதுங்கலாம்.செயலற்று முடங்கிவிட்டாலோ, நாளடைவில் எதிர்த்து நின்று தேய்ந்து போன பாறை, மணல் துகள்களாக மாறுவதுபோல இருந்த இடம் காணாமல் கரைந்துபோய்விடுவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த சுழற்சியில் நாம் எந்த இடத்தில் தடம்மாறினாலும் நாம் வாழ்விலொரு சிறந்த அனுபவத்திற்கும் அதிலிருந்துஒரு பாடத்தை கற்றுக் கொள்வதற்கும் தயாராகிவிடுகிறோம் என்பதை மறுக்கமுடியாது.

ஆதலால், மேற் கூறிய சுழற்சியில் ஆழமான நம்பிக்கை கொண்டு அதன் படி நடந்தால்,நம் வாழ்வு வளம் பெரும்.ஏனென்றால் வாழ்வே நம்பிக்கைதான்.நம்பிக்கைதான் வாழ்வு.

 

எல்லாம் நன்மைக்கே…

 

 

அவன்….. – எஸ் எல் நாணு

சிறுகதை – Makkal Kural

செய்தித் தாளைப் பார்த்த வாசுதேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..

மறுபடியும் கையிலெடுத்து கூர்ந்துப் பார்த்தார்..

அவனே தான்.. அவனே தான்..

ஏற்கனவே அவருக்கு ரத்தக் கொதிப்பு உண்டு.. இப்போது படபடப்பும் அதிகமாகியது. லேசாக வியர்த்துக் கொட்டியது..

பிரச்சனைகள் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்..

எந்த நேரமும் போலீஸ் வரலாம்.. தன்னை விசாரிக்கலாம்.. கைது கூட செய்யலாம்..

இடிந்து போய் உட்கார்ந்தார்..

நான்கு மாதங்களுக்கு முன்னால்..

மாடிப் போர்ஷனில் குடியிருந்தவர் திடீரென்று காலி பண்ணிவிடவே வாசலில் டு-லெட் போர்ட் மாட்டியிருந்தார் வாசுதேவன்.

அவன் வந்தான்..

பெயர் நிரஞ்சன்.. வயது இருபத்தைந்துக்கு மேல் இருக்கலாம்.. கிட்டத்தட்ட ஆறடி உயரம்.. நல்ல உடற்கட்டு.. மாநிறம்.. கச்சிதமாக வெட்டப் பட்ட முடி.. அடர்த்தியான கரு கரு மீசை.. ஜீன்ஸ் பேண்ட்.. டீ ஷர்ட்.. காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ..

ஏதோ ஒரு பத்திரிகையில் நிருபர் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டான்..

இன்னும் திருமணமாகவில்லை..

பேச்சுலருக்கு வீடு வாடகைக்குக் கொடுப்பதில்லை என்று வாசுதேவன் தீர்மானமாகத் தான் இருந்தார். இருந்தாலும் நிரஞ்சனைப் பார்த்ததும் அவருக்குப் பிடித்து விட்டது.. மனதில் ஒரு வித பரிச்சய உணர்வு ஏற்பட்டு விட்டது..  அட்வான்சும் வாடகையும் ஒத்துப் போகவே உடனே சம்மதம் சொன்னார்..

தனிக்கட்டை என்பதால் அவனிடம் அதிகம் சாமான்கள் இருக்கவில்லை.. ஒரு சூட்கேஸ், கோணி போன்ற உரப் பையில் சில வஸ்துக்களுடன் ஆட்டோவில் வந்து இறங்கினான்..

சாமான்களை மாடியில் இறக்கியவன் அலைபேசியில் அழைப்பு வரவே உடனே அவசரமாக வந்த ஆட்டோவிலேயே கிளம்பி விட்டான்..

நிருபர் என்பதால் அவன் எப்போது கிளம்புகிறான்.. எப்போது வீடு திரும்புகிறான் என்று நேரம் காலம் கிடையாது.. அதனால் வாசல் கேட் பூட்டுக்கான மாற்றுச் சாவியை வாசுதேவன் அவனிடம் கொடுத்திருந்தார்.. இரவு தாமதமாக வந்தால் அவரை எழுப்பவேண்டியதில்லை.. அவனே திறந்து உள்ளே வரலாம்..

உண்மையில் அவர் அவனைப் பார்ப்பதே அபூர்வமாகத் தான் நிகழ்ந்தது.. சில சமயம் காலையில் வாசுதேவன் தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருக்கும் போது அவன் அவசரமாகக் கிளம்புவான்..

“குட் மார்னிங்”

“குட் மார்னிங்”

”எங்க இவ்வளவு காலைல?”

”முக்கியமான ரிபோர்ட்டிங்”

சொல்லிவிட்டு விநாடியில் பைக்கில் மறைந்து விடுவான்..

திரும்பி எப்போது வருவான் என்பது கணிக்கமுடியாத புதிர்..

வாசுதேவனுக்கும் ஒரு விதத்தில் இது வசதியாகத் தான் இருந்தது.. மாதம் ஒண்ணாம் தேதி பிறந்தால் வாடகையை நீட்டி விடுகிறான்.. அவன் அதிகம் வீட்டில் இல்லாததால் தண்ணீர் செலவு மிச்சமாகிறது.. மின்சார உபயோகமும் கட்டுக்குள் இருக்கிறது..

சில சமயங்களில் மாலையில் சீக்கிரம் வீடு திரும்பினாலும் மாடியிலேயே தான் அடைந்து கிடப்பான்.. கீழே வந்து அவருடன் கொஞ்சம் பேசுவோம் என்பதெல்லாம் கிடையாது.. வாசுதேவனுக்கு இது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.. அவரும் அவர் மனைவியும் மட்டும் தான் கீழ் போர்ஷனில் இருக்கிறார்கள்.. மகனும் மகளும் வெளிநாட்டில் வாசம்.. வாசுதேவனுக்கு வெளிநாடு ஒத்து வரவில்லை என்பதால் ஒருமுறை போனதோடு சரி.. எப்பவாவது மகனோ மகளோ குடும்பத்தோடு இந்தியா வந்தால் உண்டு.

இதற்கு முன் மாடி போர்ஷனில் குடியிருந்தவர் வாசுதேவனுடன் அடிக்கடி அரட்டையடிப்பார்.. அவர் மனைவியும் வாசுதேவனின் மனைவியும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர்.. அவர் மகன் லோன் போட்டு புது பிளாட் வாங்கவே இடம் பெயர்ந்து விட்டார்..

ஒரு முறை வாசுதேவனின் மைத்துனர் சேஷாத்ரி வந்திருந்தபோது நிரஞ்சன் வந்தான்..

“சார்”

என்று அவன் அழைத்ததும் வாசுதேவன் தன்னிச்சையாகக் காலண்டரைப் பார்த்தார்..

தேதி ஒண்ணு..

சலவை நோட்டாக வாடகைப் பணத்தை நீட்டினான்..

”யாரு?”

சேஷாத்ரி புருவம் உயர்த்தினார்..

“மாடி போர்ஷன்ல குடியிருக்கார்.. நிரஞ்சன்னு பேர்.. பத்திரிகைல வேலை பார்க்கறார்”

வாசுதேவன் அறிமுகப் படுத்தியதும் நிரஞ்சன் “ஹலோ” என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டு நகர்ந்து விட்டான்..

சேஷாத்ரிக்கு நிரஞ்சனைப் பிடிக்கவில்லை என்பதை அவர் முகபாவத்திலிருந்தே வாசுதேவன் புரிந்துக் கொண்டார்..

”உகும்.. எனக்கென்னவோ ஆளைப் பார்த்தாலே சரியாப் படலை”

இதைக் கேட்டு வாசுதேவன் சிரித்து விட்டார்..

“உனக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம் தான்”

“இல்லை அத்திம்பேர்.. நின்னு பேசக் கூட மாட்டேங்கறான்.. முகத்துலயும் சிரிப்பு இல்லை.. முழியும் சரியில்லை.. உகும்.. எனக்கென்னவோ நீங்க இவனை உடனே காலி பண்ணச் சொல்லிடறது நல்லதுன்னு தோணறது”

“இல்லை சேஷா.. தங்கமான பையன்.. எந்த வம்பு தும்பும் கிடையாது.. அவன் இருக்கறதுல பிரச்சனையே இல்லை”

மைத்துனரை சமாதானப் படுத்தினார்..

இது முடிந்து ஒரு வாரம் கடந்திருக்கும்..

ஒரு நாள் நள்ளிரவில் வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டு வாசுதேவனின் தூக்கம் கலைந்தது.

ஒரு வேளை நிரஞ்சன் அப்போது தான் வீடு திரும்புகிறானோ? இல்லையே.. அன்று அவன் சீக்கிரமே வந்து வந்து விட்டானே..

பிறகு….

எழுந்து போய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்..

வீட்டு வாசலில் இருந்த லேம்ப்-போஸ்ட் வெளிச்சத்தில் நிரஞ்சன் நிற்பது தெரிந்தது.. வேறு ஒரு நபருடன் ரகசியமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.. பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த நபர் தன் பையிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து நீட்டினார்..

வாசுதேவனுக்கு அது என்ன பொருள் என்று தெளிவாகத் தெரியவில்லை..

நிரஞ்சன் ஒரு முறை சுற்று முற்றும் பார்த்து அதை சட்டைக்குள் மறைத்துக் கொண்டான்..

வாசுதேவனுக்கு குழப்பமாக இருந்தது..

அது என்னவாக இருக்கும்..

ஒரு வேளை யாரைப் பற்றியாவது ரகசிய விவரங்களை ஹார்ட்-டிஸ்க் மூலம் அந்த நபர் நிரஞ்சனிடம் யாருக்கும் தெரியாமல் கொடுக்கிறாரோ? இருக்கலாம்.. பத்திரிகைகாரர்கள் உலகத்தில் இப்படி நடப்பதெல்லாம் சகஜம் என்பதை அவர் சில கதைகளில் படித்திருக்கிறார்..

ஆனால் அடுத்த இரண்டாவது நாள் தான் அது நடந்திருக்கிறது..

மறுபடியும் செய்தித் தாளில் அவர் பார்வை விழுந்தது..

வெடிகுண்டு வைத்து சென்னையைத் தகர்க்கவிருந்த ஒரு நாசவேலை கும்பல் போலீசாரின் அதிரடி நடவடிக்கயில் பிடிபட்டது..

ஐந்து சதிகாரர்கள் பிடிபட்டு கைது செய்யப் பட்டனர்..

அவர்களின் கைது போட்டோ செய்தித் தாளில் பிரசுரமாகியிருந்தது..

அதில் நிரஞ்சனும்..

அப்படியென்றால் பத்திரிகைக் காரன் என்று அவன் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது பொய்யா?

நேரம் காலம் இல்லாமல் வருவதும் போவதும்.. நாச வேலை கும்பலுடன் இருந்த சகவாசத்தினால் தானா?

ஒருவேளை அன்று நள்ளிரவில் அந்த நபர் நிரஞ்சனிடம் நீட்டியது துப்பாக்கியோ இல்லை வெடி குண்டோவா?

ஐயோ.. சேஷாத்ரி சந்தேகப் பட்டது சரிதான்.. இப்படி ஒரு நாசக் காரனை குடி வைத்து இப்போது அவனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றப் பழி அவர் தலையில்….

மனைவியிடம் இதைப் பற்றி அவர் சொல்லவில்லை.. சொன்னால் பயந்து, அழுது ஊரைக் கூட்டிவிடுவாள்..

என்ன செய்யலாம் என்று யோசித்தார்..

தன்னைக் கைது செய்தால் ஜாமீனில் எடுக்க யாராவது வக்கீல் வேண்டுமே.. அவருக்குத் தெரிந்ததெல்லாம் தன் அலுவலக வக்கீலாக இருந்த தேசிகனைத் தான்.. இப்போது அவரும் இல்லை.. ஓய்வுக்குப் பிறகு அவருக்கு வேறு வக்கீலின் சேவையும் தேவையிருக்கவில்லை..

அவருக்கு இன்னொரு சந்தேகமும் வந்தது.. இது போன்ற நாசவேலை கேஸ்களில் ஜாமீனில் விடுவார்களா? மாட்டார்கள் என்று செய்தித் தாள்களில் படித்த ஞாபகம்..

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே வெளியே சைரன் ஒலி கேட்டது.. கலவரத்துடன் எழுந்து போய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்..

போலீஸ் ஜீப் ஒன்று விரைந்துக் கொண்டிருந்தது.. அவர் வீட்டுமுன் நிற்காமல் கடந்து போனதில் கொஞ்சம் நிம்மதியுடன் திரும்பியதும் மறுபடியும் சைரன் சத்தம்.. இன்னொரு போலீஸ் ஜீப்..

ஒரு வேளை அவர் வீட்டைச் சுற்றி முற்றுகையிடுகிறார்களோ?

ஆமாம்.. கண்டிப்பாக அப்படித் தான் இருக்கும்.. இல்லாவிட்டால் இந்த ஏரியாவில் திடீரென்று எதற்காக இவ்வளவு போலீஸ் ஜீப்புகள் வர வேண்டும்..

நான்கு மாதங்களுக்கு முன்னால் ரீ-வைண்ட் ஆகி இது எதுவுமே நடக்காமல் இருந்ததாக இருக்கக் கூடாதா என்று அவர் மனம் ஏங்கியது..

“தாயே.. இந்த இக்கட்டுலேர்ந்து என்னைக் காப்பாத்து”

குலதெய்வம் மரகதவல்லித் தாயாரை வேண்டிக் கொண்டார்..

மனைவியிடம் சொல்லிவிடுவது தான் நல்லது என்று இப்போது அவருக்குப் பட்டது.. காரணம் திடீரென்று போலீஸ் வந்து கதவைத் தட்டினால் அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கும்..

மனைவியை அழைக்க அவர் திரும்பிய போது காலிங் பெல் அலறியது..

திடுக்கிட்டு நின்றார்..

போலீஸ்!!

மறுபடியும் காலிங் பெல்.. இந்த முறை அவசர அவசரமாக..

வாசுதேவனுக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது..

இனி தப்ப முடியாது.. உடனே கைது தான்..

இப்போது கதவு தட தடவென்று தட்டப் பட அவர் மனைவி உள்ளிருந்து வந்து..

“கதவை யாரோ தட்டறாளே.. திறக்காம என்ன நின்னுண்டிருக்கேள்?”

என்று கூறிய படி கதவதைத் திறக்கப் போக..

“ஐயோ வேண்டாம்.. கதவைத் திறக்காதே”

என்று வாசுதேவன் கத்த நினைத்தார்.. ஆனால் குரல் எழும்பவில்லை..

இதற்குள் அவர் மனைவி கதவைத் திறந்து விட்டாள்..

போலீசை எதிர்பார்த்த வாசுதேவனுக்கு ஆச்சர்யம்..

சேஷாத்ரி அவசரமாக உள்ளே வந்தார்..

“அத்திம்பேர்.. பேப்பரைப் பார்த்தேளா?”

வாசுதேவன் சுரத்தில்லாமல் சொன்னார்..

“எல்லாம் பார்த்தேன்.. நீ சொன்னதைக் கேட்டு உடனே நான் அவனை காலி பண்ணச் சொல்லி வெளில அனுப்பியிருக்கணும்.. தப்புப் பண்ணிட்டேன்.. பெரிய தப்புப் பண்ணிட்டேன்.. போச்சு.. எல்லாம் போச்சு.. அவனுக்கு அடைக்கலம் கொடுத்ததுக்கு நான் ஜெயிலுக்குப் போகப் போறேன்”

வாசுதேவன் புலம்புவதைக் கேட்டு சேஷாத்ரி விழித்தார்..

“நீங்க ஜெயிலுக்குப் போகணுமா? என்ன சொல்றேள்?”

“நான் என்ன சொல்ல.. அதான் இன்னிக்குப் பேப்பரே சொல்றதே.. அந்த நிரஞ்சன் நாசவேலை கும்பலைச் சேர்ந்தவன்னு.. அவன் போட்டோவும் வந்திருக்கே”

இதைக் கேட்டு சேஷாத்ரி வாய் விட்டுச் சிரித்தார்..

“அத்திம்பேர்.. நீங்க சரியான தத்திம்பேர்.. பேப்பர்ல வந்திருக்கிற நியூஸை ஒழுங்காப் பார்க்க மாட்டேளா?”

“என்னடா சொல்றே?”

“நிரஞ்சன்.. நாச வேலை கும்பலைச் சேர்ந்தவன் இல்லை.. அந்த நாச வேலை கும்பலைப் பிடிக்கற போலீஸை சேர்ந்தவன்.. சொல்லப் போனா அவங்களைப் பிடிக்க இவன் தான் முக்கிய காரணமா இருந்திருக்கான்.. என்ன ஏதுன்னு நியூஸைப் படிக்காம பேப்பர்ல போட்டோவைப் பார்த்து நீங்களா கற்பனை பண்ணிண்டிருவேளா?”

சேஷாத்ரி சொன்னதைக் கேட்டு வாசுதேவன் முகத்தில் அசடு வழிந்தாலும் பெரிய நிம்மதி தெரிந்தது..

“அவர் எப்பவுமே இப்படித் தானே.. எதையும் ஒழுங்காப் பார்க்க மாட்டாரே.. எங்க கல்யாணத்தும் போதே எங்கப்பா மடில உட்கார்ந்திருக்கிற எனக்குத் தாலி கட்டாம பராக்கு பார்த்துண்டு எங்கப்பா கழுத்துல தாலி கட்டப் போனாரே..”

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதைச் சொல்லி தன்னை காமெடி பீஸாக்கும் மனைவியை வாசுதேவன் குரோதத்துடன் பார்த்தார்..

ஆறுதல் தேடிய நெஞ்சம் – சுரேஷ் ராஜகோபால்

சிறுகதை- Dinamani

சீதாராமன், 35 வயது, ஜானகி, 29 வயது, தம்பதிக்கு ஒரு மகன், பெயர் ரகு, ஒரு  வயது  சென்னை குரோம்பேட்டையில் நியூ காலனியில் சொந்தமாக வீடு கட்டி அங்கயே குடியிருந்தார்கள்.

வீடு கீழேயும் மாடியுமாக இரண்டு வீடு கட்டினான். கீழே உள்ள வீடு  தனக்கும் மாடியை வாடகைக்கும் விட்டு விட்டான்.

தபால் தந்தி அலுவலகத்தில் வேலை பார்க்கிறான்.

“ஏன்பா இந்த புடவையில் நான் எப்படி இருக்கேன்? இளம் மஞ்சள் எனக்கு நிறையப் பிடிக்கும்.”

“எது நான் நேத்திக்கு வாங்கி வந்ததா?”

ஆமாம் என்று தலையை ஆட்டினாள்

“உனக்கென்ன நீ ராஜாத்தி மாதிரி இருக்கே புடவை இல்லாமலும்……” என்று சொல்ல ஆரம்பிக்கும் முன் அவள் அடிக்கிற மாதிரி கையை ஓங்கி வந்தாள்.

“உங்களுக்கு ரொம்ப வாய்க்கொழுப்பு”

“நைட்டி, சுடியிலும் நல்லா இருக்கே என்று சொல்ல வந்தேன், அதுக்குள்ள உன் எண்ணம் எங்கேயோ போயடுத்தே?”

“எப்பப் பாரு அதே நினைப்புதான் உனக்கு”

“அங்கு மட்டும் என்ன வாழுதாம்?”

பேச்சில் நக்கலும் நையாண்டியும் அதிகமிருக்கும்

இந்த வீட்டுக்குக் குடி வந்த பிறகுதான் ஜானகி கர்ப்பம் தரித்தாள்,

“ஏம்பா உங்க பையன் என்னை உதைக்கிறான், ஆ…” ஆனந்த கூச்சல் மெதுவாக வயிற்றைப் பிடித்துக் கொண்டு

“பையன்னு எப்படி முடிவு பண்ணின? பெண்ணாகக் கூட இருக்கலாமே?”

“ஆத்து ஜோசியர் தலைச்சான் பிள்ளை தான் அப்படினு சொன்னாரே, அதுவும் இல்லாம எனக்கு எதோ நம்பிக்கை”

அழகான ஆண் குழந்தையைப் பெற்று விட்டு, ரகுநாதன் என்ற பெயர் வைத்துச் சீராட்டி மகிழ்ச்சியாக வளர்த்தார்கள்.

சீதாராமனுக்கு ஜானகி மேலே அலாதி காதல்.

குழந்தையைக் கொஞ்சுவதைவிட மனைவியைக் கொஞ்சுவதுதான் அதிகம்.

ஜானகிக்கே அவன் குழந்தையைச் சீண்டாதது பெரிய வருத்தமா இருந்தது .

“ஏன்பா நம்ம குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சு” என்று கொண்டு வந்து கொடுத்தாள்.

“இல்லை எனக்குச் சின்னக் குழந்தையைத் தூக்கி பழக்கமில்லை, கொஞ்சம் பயமா இருக்கு”

“குழந்தை பக்கத்தில் உக்காந்து கொஞ்சம் நேரமாவது பாரப்பா”

“கொஞ்சம் வளரட்டும், அப்புறம் பாரு ஐயாவை” முகத்தில் ஒரு சிறு புன்னகை கூட இல்லாமல் சொன்னான்.

எனோ ஜானகிக்குச் சந்தேகமாக இருந்தது. அவனை விட்டுப் பிடிக்கலாம் என்று விட்டு விட்டாள்

அவள் கிடைத்தது ஒரு வரப்பிரசாதமாகவே நினைத்து மகிழ்ந்தான்.

ஒரு நாள் அவன் அம்மா மதுரையிலிருந்து வந்து இருங்கினார்கள்.

ராமுவிடம் அவன் அம்மா “கல்யாணத்துக்குப் பிறகு நீ எங்களையெல்லாம் மறந்தே போயிட்டயே”

ராமு  என்கிற சீதாராமன் கொஞ்சம் நெளிந்தான், அவ்வளவே.

“மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள், ஒரு வருஷத்துக்குப் பின்னும், இன்னும் உனக்கு இரண்டும் தீரலையே.”

ஒரு நாள் மாலை தீடிரென அவன் அலுவலகத்துக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு அவனுக்கு  வந்தது. ஹெட் கிளெர்க் லாரன்ஸ் தான் கூப்பிட்டுச் சொன்னார்.

தொலைப்பேசி மறுமுனையில் அவன் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்,  கிருஷ்ணன் பதட்டத்துடன்

“உன் மனைவிக்கு உடல் நலம் சரியிலில்லை, சீக்கிரம் வா”

“என்ன? காலையில் கிளம்பும் போது  நல்லாத்தானே இருந்தா…..” என்றான்

“இப்ப அவசரம் உடனே வா” என்று பதிலுக்குக் காத்திருக்காமல் இணைப்பைத் துண்டித்தார்.

வீட்டில் அந்த தெருவில் உள்ள பலர் நின்று கொண்டிருந்தார்கள்.

இவன் வரும் வேகத்தைப் பார்த்து வழி விட்டார்கள்

“என்ன ஜானு, என்ன செய்யறது?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.

“நெஞ்செல்லாம் ஒரே வலி, இடது தோள் பட்டையும் வலிக்குதாம்” அம்மா சொன்னாள்

“ஜானு பேசவே சிரமப்படுகிறா”

“ஏன்பா மூச்சு விட ரொம்ப …” என்று இழுத்தாள். அந்த நிமிடமே  மூச்சு விடக் கஷ்டம் அதிகமாயிற்று.

கணவர் வெந்நீர் வைத்துக் கொடுத்தார். அதன் தாக்கம் குறைய வில்லை.

ராமுவின் நண்பர், அருகிலிருந்த தெரிந்த  ஒரு மருத்துவரை அழைத்து வந்தார்.  அவரும் மருத்துவம் பார்த்தார்.

முதலுதவியாக  ஒரு ஊசி போட்டு, நாக்கு அடியில் வைத்துக் கொள்ள ஒரு மாத்திரை ஒன்றும் கொடுத்து அடக்கிக்கச் சொன்னார். உடனே மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி,  “இது ரொம்ப அவசரம்” என்று கூறிவிட்டுப் போனார். .

அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, நோயின் தன்மையை ஆராய்ந்து விட்டு ஒரு பணிப் பெண் வந்து ராமுவை கூட்டிக் கொண்டு மருத்துவரிடம் சென்றாள்.

பதைபதைக்கும் நெஞ்சோடு போய் நின்றான்.

“இருதய அடைப்பு ஏற்பட்டிருக்கு, உடனடியாக ஆஞ்சியோ எடுத்து பிறகு சிகிச்சைக்குப் போகலாம்.”

“அப்ப இது சிகிச்சை இல்லையா “

“அடைப்பின் தன்மையைத் தெரிந்து கொண்ட பிறகு தான் ஸ்டண்டு வைக்க மறுபடி ஆன்ஜியோவா இல்லை பைபாஸ் செய்யவேண்டுமா? என்று முடிவு எடுக்கணும்”

அதற்குள் ராமு கூட வந்த ரத்தினம், அதே தெருக்காரர், “ஆஞ்சியோ பண்ணும் போதே முடிந்தால் ஸ்டண்ட்  வைத்து விடலாமே?”

“சரி இரண்டு தடவைக்குப் பதில் முதல் முறையேவும் செய்யலாம், முடியலைன்னா பைபாஸ் தான் பண்ணனும்” என்கிறார் மருத்துவர்.

இந்த சிகிச்சைக்கு, மருத்துவ மனையில் தங்க எவ்வளவு பணம் என்று ஒரு தாள் எடுத்து மருத்துவர் எழுதிக் கொடுத்தார்.  “இதில் 90 சதவீதம் இப்ப கட்டிடுங்க மீதியை நான் சொல்லும் போது கட்டலாம். இல்லை காப்பீடு ஏதாவது இருந்தா அதிலயும் பண்ணலாம்” மருத்துவர் கூற ராமுவுக்கு முகத்தில் பேயரஞ்ச களை வந்தது.

சரி தன் மனைவி எழுந்து நடந்தால் போதும் என்ற நினைப்பில் சரி என்று தலையாட்டி பணத்தைக் கட்ட ஏற்பாடு செய்யத் தயாரானான்.

“நான் என் மனைவியை இப்ப போய் பாக்கலாமா?”

மருத்துவர் ஜாடை காட்டச் செவிலியர் அவனை அழைத்துச் சென்றாள்.

“அங்க போய் உங்க மனைவியிடம் நீங்க அழக்கூடாது, நீங்க அழுதா அவங்களும் அழுவார்கள், அதனால் ஆறுதலா பேசிட்டு வாங்க” மருத்துவர்.

கண் மூடி அவன் மனைவி படுத்திருந்தாள், உடலெங்கும் பல வித மருத்துவ உபகரணங்கள் செலுத்தப் பட்டியிருந்தது.

“அவங்க தூங்கறாங்களா” ராமு மெதுவாகக் கேட்டான்.

எதோ எழுதிக் கொண்டிருந்த ஒரு செவிலியர் இல்லை என்று தலை அசைத்தாள்.

அதற்குள் மனைவி விழித்துக் கொண்டு இவனைப் பார்த்தாள். லேசாக கேவினாள் .

“நம்ம பையன் எங்கே? நான் முழிச்சுட்டு இருக்கும் போதே பாக்கணும்.

“இதோ நான் அழைச்சுட்டு வர ஏற்பாடு செய்யறேன்”

“என்ன ஆச்சு கண்ணு?”

“நம்ம பையனை நல்லா பாத்துக்கங்க, எனக்கப்புறம் அவனுக்கு உங்களை விட்ட யார் இருக்கா?”

“நீ நல்லாயிடுவ, நாம் இரண்டு பேரும் அவனை பாத்துக்கலாம்” என்றான்.

#

ஜானகி குணமாகி வீட்டிற்கு வந்தாள். அவள் மாமியார், அம்மா உடன் சில சொந்தங்கள் ஆரத்தி கரைத்து தடபுடலாக வரவேற்றார்கள்.

குழந்தை ரகு தாயைக் கண்டதும் கை தட்டிச் சிரித்தான்.

படுக்கை அறையில் கொஞ்ச நாள் ஓய்வு எடுத்தாள்.

ராமுவிடம் மாற்றத்தைக் கண்டாள்  எப்போதும் ரகுவை தூக்கிக் கொண்டே, கொஞ்சியபடி வலம் வருகிறான். தூளியில் இட்டு பாட்டுப் பாடி தூங்க வைக்கிறான்.

இது அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது. தன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள் 

கொரோனா  – அழகர்சாமி ரங்கராஜன்

கொரோனா வைரஸால் யாருக்கு பாதிப்பு? பிபிசி கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தும்  முக்கிய தகவல்கள் - BBC News தமிழ்

          
 என் சட்டை பையை தடவி பார்த்துக் கொண்டேன். இந்த மாதத்தின் கடைசி நூறு ரூபாயும் TVS -50 க்கு பெட்ரோல் போடுவதில் தீர்ந்துவிட்டது. அடுத்து வரும் செலவுகளை எப்படி சாமளிப்பது என்ற கவலையோடு வீட்டிற்குள்  நுழைந்தேன்..
                              என்னை  பார்த்த அகல்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது அதை பார்த்த எனக்கு ஆத்திரமும் கோபமுமாய் வந்தது .
 
“இப்போ எதுக்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்யுர, நிலம புரியாம “
 
கோபத்தில் சடாரென்று கதவை எத்தினேன் கதவு பின் சுவத்தில் போய் மடாரென்று முட்டி நின்றது. வேகமாக உள்ளே சென்று நாற்காளியில் தொப்பென்று உட்கார்ந்தேன் ஏற்கனவே ஒரே ஒரு போல்டில்  நின்றுந்த அதுவும் புடுங்கிட்டு்  சரிந்தது. சுதாரித்து எழுந்து நின்றேன்.  நாற்காலி  நிலையை பார்த்ததும் ஓங்கி மிதித்து நசுக்கி விடலாமா என்றிந்தது.

சத்தமான  டெலிவிஷன் மெளனத்தில் நிஜங்களை மறந்து ஒன்றியிருந்த ராசுவும் சுந்தரும் சத்தம் கேட்டு மிரண்டு போய் சுவரோரம் பல்லிகளைப் போல் ஒட்டிக் கொண்டு மிரட்சியாகப் பார்த்தனர்.
 
 “எதுக்கு இப்ப  கோபப்படுறீங்க அரிசி தீர்ந்து இரண்டு நாளாச்சு ரேசன் அரிசிச் சோறு பிள்ளைக ரெண்டுக்கும் தொண்டையில ஏரங்கமாட்டேங்கிறது, பக்கத்து வீட்டில் கடன் கேக்கலாமுனா  அவுகளும் ஒரு வாரமா ரேசன் அரிசியை வைத்து தா சமாளிக்கிறோமுன்னு அலமு அக்கா சென்னாங்க, நாம அவங்கக்கிட்ட வாங்கின பழைய கடனே பாக்கியிருக்குது” என்று படபடத்தபடி தடுப்பனை உடைந்து ஆற்று வெள்ளம் பெறுக்கெடுத்து  ஓடுவது போல அகல்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் ஒழுகியது.
 
                    அயர்சியுடன் , மிரண்டு போய் சுவரோரம் நின்ற பிள்ளைகள் இருவரையும் இழுத்து அணைத்தபடி தரையில் உட்கார்ந்தேன். வந்த ஆத்திரத்தையும், அழுகையையும் அடக்கிக் கொண்டேன்.
 
         இந்த மெட்ரிக்  பள்ளியில் வேலைக்கு சேர்ந்து 20  வருடங்கள் ஆகி விட்டது. சின்னஞ் சிறு தீவு போல ஆங்காங்கே சின்னச் சின்ன ஓட்டுக்கட்டிடத்தில்   மிக சொற்ப மாணவர்களோடு இயங்கிய காலத்திலிருந்து வேலை செய்கிறேன். குறைந்த சம்பளம் தான், அதுவும் கொரோனா  காலத்தில் வாங்கிக் கொன்டிருந்தஊதியத்தில் நாற்பது சதவீதம் என்ற சொற்ப  ஊதியத்தில் கடன உடன வாங்கி காலம் தள்ளியாச்சு. இன்னும் விடிவு காலம் வரவில்லை.  
 
        கரஸ்பாண்டன்ட் ராக்கப்பன்   கிணற்றுத் தவளை போல தன்னை மிகப் பெரிய  அறிவாளியாய் நினைத்துக் கொண்டிருப்பவன். ஆனால் நல்ல வியாபாரி, பெற்றோர்களின் வீட்டுக்கே சென்று  அவர்கள் காலில், கையில் விழுந்தாவது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விடுவான். மற்றவர்களிடமும், தன்னிடம் வேலை செய்யும் ஆசிரியர்களிடமும் பேசும் போது  அல்டாப்பு தான். ஞானி போல் பேசி வேசம் போடுவதில் கில்லாடி. பச்சோந்தியைப் போல உலகத்தின் தடுமாற்றங்களை நன்கு உணர்ந்தவன். கொரோனா காலம் முடிந்து, பள்ளிகள் திறந்து மாதங்கள் ஆகிவிட்டது  இன்னும்  முழு சம்பளம் தராமல் கதை சொல்லிக் கொண்டு ஏமாற்றுகிறான். 40% திலிருந்து 60% தருவதற்கே ஏக கெடுபுடி.. இது போன்ற பள்ளிகள் நாடு முழுவதும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்.  கல்வியை கடைச்சரக்காக்கியதில் இது போன்ற பள்ளிகளின் வளர்ச்சியே காரணம் என்று நாம் எங்கும் பொது வெளியில் பேச முடியாது. எல்லா மட்டத்திலும் நல்ல ஆசியுடன் நாடு ழுழுவதும் நடந்து  கொண்டிருப்பவை.
 
“ஏங்க பிள்ளைக ரெண்டும் உங்க மடியிலே தூங்கிருச்சுங்க, எழுப்புங்க சாப்பாடு குடுக்கனும், காலையில் வாங்கின மாவு கொஞ்சம் இருக்கு தோசையை ஊத்தி அதுகளுக்கு குடுத்துருவோம் நமக்கு பழையது இருக்கு”   நினைவலைகளிலிருந்து விடுபட்டேன்.
ரெண்டு பேரையும் எழுப்பி ”   தோசை சாப்பிட்டு விட்டு படுங்கள் ” என்றேன்
” ம் சட்னி வேனா ஜாம் போட்டுக் குடு இல்லைனா சாஸ் போட்டுக் குடு ” என்றான் பெரியவன்.
 
“எனக்கும் ஜாம்தான் ” என்றது சிருசு
 
” ரெண்டுமில்ல தோசப் பொடிதான் சாப்பிட்டு  படுங்க” என்றாள் அகல்யா
 
வாங்கித்தர ஆசையிருந்தும் காசு இல்லை. இருவரும் பழையதை சாப்பிட்டு விட்டு படுத்தோம்.  தூக்கம் லேசில்  வரவில்லை புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் பாச்சையின் சத்தம் வேறு காதுகளை துன்புருந்தியது. சன்னல் கம்பிகளூடே பார்க்கையில் தெருவிளக்கொளியில் கருமையாக தெரிந்த மரத்தின் உலர்ந்தும் உலராததுமான இலைகளும் அப்போதைய இறுக்கமான உணர்வுகளை மேலும் இறுக்குவது போலிருந்தது. 
           அவனோடு வேலை செய்பவர்கள் அனேகம் நடுத்தர வர்க்கப் பெண்கள், அவர்கள் பெரும்பாலும் ஏதோ பொழுது போக்கிற்காக வேலைக்கு வருபவர்களாக இருப்பார்கள்.  இது போன்ற பள்ளிகளுக்கு இதுதான் மூல ஆதாரம்.  பிள்ளைகளை அடக்கி ஒடுக்கி மனப்பாடம் செய்ய வைத்து நிறைய மார்குகளை போட்டு பெற்றோரையும் நிர்வாகத்தினரையும் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகள்.
அவர்களுக்கு வருமானம் பெரிய பொருட்டு இல்லை. சொற்ப சம்பளத்தில் வேலை செய்ய முடியும்.  இந்த வருமானத்தை நம்பி பொழப்பு  நடத்துவோர் மிக குறைவு தான்.  அதிலும் என் போன்ற ஆண் ஆசிரியர்களிடம் கூடுதலாக சில வேலைகள் வாங்கிக் கொண்டு அதற்கு தனியாக மாதம் ஏதாவது காசு தருவார்கள். உதாரணத்திற்கு  நைட் ஸ்டடி, தேர்வு காலங்களில் இரவு முழுவதும்  மாணவர்களோடு தங்கி அவர்களை படிக்க வைப்பது போன்ற வேலைகளைத்  தருவார்கள்.  இந்தப் பெருந்தொற்று காலத்தில்  அதுவும் இல்லை வெறும் 60% சம்பளத்தில் குடும்பத்தை ஒட்டுவது என்பது கயிறு மேல் நடப்பதைக் காட்டிலும் பெரிய வித்தை. யானைப் பசிக்கு தீனி போட்டால் போலத்தான்.
ஏதோ சூடுதட்டியது, அருகே படுத்திருந்த சின்னவன் உச்சா போய் விட்டான். துணியை மாற்றி விட்டு ஈரம் இருக்கும் இடத்தில் துண்டை விரித்து மீண்டும் படுக்க வைத்தேன்.
என்னுடன் வேலை செய்யும் பஸ் டிரைவர்  முருகேசன் நினைவுக்கு வந்தார். அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை செய்து ஒய்வு பெற்றவர். இங்கு வந்து வேலை செய்கிறார் அவருக்கு ரெண்டு பெண்கள் அவர்களை படிக்க வைத்து, ஒரு மகளை அவர் சொந்த அக்கா மகனுக்கு கட்டிக் கொடுத்துவிட்டர்,  இளையவள் படித்து கொன்டிருக்கிறாள். அவளை நல்ல இடத்தில் திருமணம் செய்ய வேண்டும். அவருடைய ஓய்வுப் பணம் வரவில்லை வந்தால் அதை பயன்படுத்தலாம் என்று நினைத்து கொண்டிருப்பவர்.  இது போல அவருடன் வேலை பார்த்தவர்கள், நிறைய உண்டு.
 ” ஓய்வுப் பலன் கிடைக்காமலே பல பேர் செத்தும் போய்டாங்க ” என்று அடிக்கடி குறைபட்டுக்கொள்வார். என்னுடன் வாஞ்சையுடன் பேசுவார்.
நேற்று அவரப் பார்த்த போது “நம் பெரிய சாலை கடைசியில மேற்கால ஒரு பஞ்சாலை இருக்குதுள்ள அதில நைட் வாட்மென் வேலைக்கு ஆள் வேனுமாம் ஏஜெண்டு ஒருத்தன் சொன்னான்” எதுக்கு தான் எஜெண்டு இல்லை என்று நினைத்துக் கொண்டேன்.
“ஏஜெண்டு கமிசன் போக 6000 ரூபாய் தருவாங்க யாராவது இருந்தா சொல்லுங்க ” என்றார்.
பளிச் என்று ஒரு யோசனை தோன்றியது பேசாமல் நாமே அந்த வேலையை செய்யலாம் என்று :   நான் இப்ப வாங்கும் சம்பளத்தில் பாதி. அரையும் அரையும் ஒன்று என்று கணக்கு போட்டுக் கொண்டேன்,  எப்படியோ சாமாளிக்களாம் என்று தோன்றியது. நாளைக்கு அகல்யாவிடமும் பேசிவிட்டு முடிவு செய்யலாம். ஸ்கூல் நிற்வாகத்தினரோடு நெருக்கமான நம்பத்தகுந்த விசுவாசிகளிடம் விசாரித்த போது, இப்போதைக்கு முழு சம்பளம் தர முடியாது என்று கூறியதாக சொன்னார்கள். வழக்கம் போல் பள்ளிக் கட்டணம் முழுமையாக கிடைக்கல இப்போதும் கடன் மூலமாகத்தான் சம்பளம் போடுரோம் என்று பழைய பாட்டையே பாடுவாங்க.
       பிழைப்பிற்காக  தன்னை சார்ந்தவர்கள் மீது செலுத்தும் ஒரு சுரண்டல் தான் என்று அனைவரும் அறிந்தது தான். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை காலையில் பக்கத்து வீட்டு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்தேன். அந்த நாய் பால் போட வரும் பையனைப் பார்த்து எப்போதும் குரைக்கும். கேட்டில் பையிலிருந்த பாலை எடுத்து உள்ளே வைத்து விட்டு பெரிய சாலையில் கொஞ்ச தூரம் நடந்து விட்டு வந்தேன். அகல்யாவும் எழுந்து விட்டாள். டீ போட்டு அகல்யாவிடமும் கொடுத்து விட்டு பேச்சை ஆரம்பித்தேன்.
 
” டிரைவர் முருகேசன் பக்கத்தில் உள்ள பஞ்சாலையில் நைட் வாட்சுமென் வேலையிருக்குன்னு சொன்னர், அந்த வேலைக்கு நான் போகலாம் என்று தோன்றுகிறது ” என்றேன்
சொன்னதும் என்னை மேலும் கீழும் பார்த்தாள். உண்மையில் சொல்லுறேனா  இல்லை ஏதோ விஷமத்திற்கு சொல்கிறேனா என்று.
 
“நெசமாலுந்தான், போனா கொஞ்சம் காசு கிடைக்கும் “
 
மெளனம், சிறிது நேரத்திற்கு பின்
 
“ஏங்க, போய்த்தான் ஆகணுமா? ஏதோ குழப்பத்தில் கேட்டாள்.

அக்கேள்வி என்னமோ தேவையில்லாத கேள்வி போல் என்னை அவள் பக்கம் திரும்ப வைத்தது. பற்றாகுறையை எப்படி சாமாளிப்பது என்ற கேள்வியுடன், உணர்ச்சிக் குவியலில் ஏதோ ஒரு ஒன்று அழுத்தியது போன்ற உணர்வில் ஆளமாக அவளை பார்த்தேன்.
 
“என்ன தான் பிரச்சனையினாலும் கெளரவமா வேலை செஞ்சுட்டு இப்படி ஒரு வேலைக்கு போனா நல்லாவா இருக்கும் “
 
“கெளரவம் பாத்தா பிள்ளைகளை வளக்க முடியுமா?” வேற வழி தெரியல, டீயூசனுக்கு வந்த பயகளும் இப்ப வரல அரைச். சம்பளத்தவச்சு எப்படி…”
 
கொடிய முதலை எங்கள் மகிழ்ச்சியை அப்படியே முழுங்குவது போல் ,நிசப்தம்.
 
காலை 10 மணிக்கு மேல் டிரைவர் முருகேசனுக்கு போன் செய்தேன்,
 
“ஹலோ முருகேசன் அண்ணே நா ரவி பேசுறேன்”
 
“சொல்லுங்க தம்பி என்ன விசயம் “
“ஒண்ணுமில்ல நேத்து நீங்க சொன்ன வேலைக்கி நானே போகலாமான்னு தோனுது என்ன சொல்றிங்க “
 
“என்ன தம்பி நீங்க போய் இந்த வேலைக்கி. அதெல்லாஞ் சரியா வராது தம்பி”
 
“இல்லண்ணே எனக்கு இப்போதைக்கு வேறு வழி தெரியல, சமாளிக்க முடியல, ஏதுக்கும் நீங்க அந்த ஏஜெண்டு நம்பர் குடுங்க நா பேசிப் பார்க்கிறேன்”
 
“என்ன தம்பி நீங்க… அதெல்லாம் ரொம்ப சிரமமான வேல, சரி நம்பர் தாரேன் பேசிப் பாருங்க”
 
அவர் தந்த நம்பருக்கு போன் செய்து விசயத்தை சென்னேன், அவர் என்னைப்  பற்றி விவரங்களை கேட்டுக் கொண்டு மாலை 6 மணிக்கு முதலாளி வீட்டுக்கு வரச் சொன்னார். நான் ஆசிரியர் என்ற விபரத்தை மட்டும் மறைத்துவிட்டேன். இதை சொல்லி மறுத்துவிடக் கூடாதே என்று. மாலை சரியா 6 மணிக்கு அங்கே போனேன். கேட் வாசலில் நின்றுந்த காவலாளியிடம் விசயத்தை சொல்லி உள்ளே சென்றேன், நாய்கள் வரவேற்றது.  சாவகாசமாக உயர் ரக பிஸ்கெட்டுகளை கொறித்துக் கொண்டிருந்த அந்த டாபர்ரும், அல்சேஷனும் திடீரென முளைத்த புது விருந்தாளியைக் கண்டு ஆத்திரத்துடனும், ஆக்ரோஷத்துடனும் பாய்ந்தது, பயத்தில் சற்று நின்றேன், இதுகளுக்கே மாதம் 10 ஆயிரம் செலவு செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டேன். என்பள்ளி கரஸ்பாண்டன்ட் வீட்டிலும் இது போல இரண்டு நாய்கள் உள்ளது நினைவுக்கு வந்தது. ஒரு நெட்ட ஆசாமி வெளியே வந்தார்.
 
“தம்பி நீதா காலையில போன் பண்ணுன முருகேசன் சொன்ன ஆளா? ” என்றார்.
 
“ஆமாண்ணே “
 
“எல்லாஞ் சொல்லிருக்கேன் ஐயா வருவாக நில்லுங்க ” என்றார்
 
உள்ளேயிருந்து ஆள் நடந்து வரும் ஓசை கேட்டது. நெஞ்சு படக், படக் கென்று அடித்துக் கொண்டது.வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டியில் வந்த நபரின் பின்னால் இரண்டு மூன்று நபர்கள் மிகவும் பெளவியமாக நடந்து வந்தனர். வாசலில் எங்களைப் பார்த்த வெள்ளை வேஷ்டி நபர்  என்ன என்பது போல் பார்த்தார். புரோக்கர் தான் பேசினார்.
 
” ஐயா தம்பி தான் வாட்மென் வேலைக்கு வந்துருக்கு எல்லாஞ் சொல்லிட்டேன் நீங்க பாத்து ஒகே சொல்லிட்டா போதும் ” என்றார்
 
அப்போது வெளியிலிருந்து கிரிகெட் மட்டையுடன் ஓடி வந்த பையன் என்னைப் பார்த்து ” குட்ஈவினிங் சார் ” என்றான் என் பள்ளியில் படிக்கும் மாணவன் போல பள்ளியில் நிறைய மாணவர்கள் படிக்கிறார்கள் எந்த வகுப்பு என்று தெரியவில்லை.
 
எல்லோரும் என்னைப் பார்த்தனர். என் மனம் புழுவைப் போல் நெளிந்தது.
 
வெள்ளை சட்டைக்காரர் என்னப்பார்த்து கேட்டார்.
 
” தம்பி நீங்க வாத்தியார வேலை செய்யுரிங்களா?” என்றார்.
 
நான் மெளனமாக தலை ஆட்டினேன்
 
“அட நீங்களெல்லாம் இந்த வேலைக்கு வரலாமா? வேண்டாந் தம்பி கம்பெனி நல்லா ஒட ஆரபிச்சதும் என்ன வந்து பாருங்க வேற வேல போட்டுத்தாரேன்” என்று சொல் விட்டு ஏஜென்டைப் பார்த்து ” ஏய்யா வாட்சுமென் வேலைக்கு ஆள் கொண்டான்னு சொன்னா வாத்தியார் வேலை பாத்துக்கிட்டு இருக்கிறவர கொண்டாந்து விடுர ” என்றார். பின் என்னப்பார்த்து
 
” நீங்க போய்டு பிறகு வந்து பாருங்க” என்று சொல்லிவிட்டு போர்டிக் கோவில் தயாராய் நின்ற காரில் ஏரி சென்று விட்டார்.
 
நெட்டை ஆள் என்னை பார்த்து முறைத்தபடி…
 
“இதெல்லாம் நீங்க செல்லலையே தம்பி ” என்றபடி கிளம்பி விட்டார்.
 
நான் செய்வதறியாமல் தவித்த படி நின்றேன். அடுத்து என்ன செய்வது என்று யேசித்தபடி வெளியே வந்தேன்.. வேலை செய்வதற்கும் சமூக அங்கீகாரம் தேவை போல என்று நினைத்துக் கொண்டே வண்டியில் ஏறினேன். இரண்டு நாட்களுக்கு முன் என்னுடன் வேலை பார்க்கும் ராமு சொன்னது போல் காய்கறி வாங்கி வண்டி வாடகைக்கு பிடித்துக் கொண்டு டோர் டெலிவரி செய்யலாமா என்று தோன்றியது, அதுக்கும்  முன்பணம் வேண்டுமே. .அடுத்து மூன்றாவது அலை வேற வருதாமே..

புது(மை)ப்பெண்- ரேவதி ராமச்சந்திரன்

 

Preethigurusamy Twitter ನಲ್ಲಿ: "@drexeler @mickyblessy This #Meendum Kokila  " https://t.co/WfxbmgxR2y" / Twitter“மருமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா’, “மருமகளே மருமகளே, எங்க வீட்டு மருமகளே, இங்கு வாழ வந்த மருமகளே”

இப்படி கல்யாணம் ஆகி மாமியார் (கணவர்) வீட்டிற்கு வரும் பெண் எப்படி எந்த எந்த சூழ்நிலைகளை எதிர் கொள்கிறாள் என்று

யோசிக்க வைத்தாள் ஒரு மனைவி. ஜோத்புரில் நான் சுவாமி என்கிற ஓர் ஆபிசரின் மனைவி விஜயாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் சமையலுக்கு ஆள் தேடிக்கொண்டிருந்தாள். ‘ஏன் உங்களுக்கு சமைக்கத் தெரியாதா’ என்று  கேட்ட போது சிரித்துக் கொண்டே ‘இல்லை நான் எக்ஸாமுக்குப் படிக்கிறேன், அதனால்’ என்றாள். ‘ஓகே, அதற்கு ஏன் சிரித்தீர்கள்’ என்றதற்கு அவள் சொன்ன பதில்தான் இந்த சித்திரம். ‘ஓ இப்போது நான் நன்றாக சமைப்பேன். ஆனால் நான் முதன் முதலில் என்னவர்க்கு மண் சோறு போட்டேன். அதை நினைத்தால் இன்றும் நாங்கள் சிரிப்போம்’ என்றாள். விடுவேனா இந்தக் கூத்தை. அங்கேயே சேர் போட்டு உட்கார்ந்து விட்டேன். யாரிடமும் சொல்லக் கூடாது என்று என்னிடம் கூற ஆரம்பித்தாள். நீங்களும் யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் என்று நம்பி கூறுகிறேன்!

விஜயா சொன்னதாவது – ‘நான் கல்யாணம் ஆகி வந்த போது சுவாமி கல்யாணம் ஆகாதவர்கள் தங்கும் குடியிருப்பில் தங்கி இருந்தார். குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் வீடு இவருக்கு அப்போது உடனே கிடைக்காததால் நானும் முதலில் அங்கேயே குடித்தனம் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு அடுப்புக் கூட பற்ற வைக்கத் தெரியாது. எனவே ஓர் எலெக்ட்ரானிக் அடுப்பு வாங்கி வந்தார். அதில் குக்கரை தண்ணீர் இல்லாமல் வைத்ததினால் வெடித்து மூடி கூரை வரை தூக்கி எறியப் பட்டது. ‘நாங்கள்தான் குண்டு வெடிப்போம் என்றால், நீ குண்டு வைத்து கூரையெல்லாம் தகர்க்கிறாயே’ என்று பின்னாலிருந்து கூப்பாடு போட்டார் சுவாமி.

இரண்டாம் நாள் இது சரி படாது என்று என் மாமியாரை நலம் விசாரித்து விட்டு மெதுவே ‘தங்கள் வீட்டில் எவ்வளவு அரிசிக்கு எத்தனை தண்ணீர்’ என்று கேட்டேன், அரிசி, தண்ணீர் அளவு எல்லோர் வீட்டிலும் பொது என்பது கூடத் தெரியாமல். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என்று சொன்னதை மறந்து இரண்டு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் விட்டு வைத்தேன். அவ்வளவுதான் குக்கர் அடி பிடித்து வீடு பூரா கருகல் நாற்றம். அந்த சாப்பாட்டை பின்புறம் தூக்கி போட வேண்டி வந்தது. பிறகு கோவம் வந்து ஒரு பங்கு அரிசிக்கு நாலு பங்கு தண்ணீர் வைத்தேன். ஓ குக்கரைத் திறந்தால் ஆற்றில் ஓடும் நதி தான். அதையும் பின்னால் கொண்டு கொட்டினேன். கான மயில்கள் ஆனந்தமாக நடமாடிக்கொண்டே அதனை ருசித்து சாப்பிட ஆரம்பித்தன. மெஸ்ஸில் இத்தனை நாட்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னவர் மிகவும் ஆசையுடன் வீட்டு சாப்பாடு சாப்பிட வந்தார். அவரைப் பார்த்த மற்ற ஆபிசர்கள் முதல் மாடியிலிருந்து ‘சுவாமி எங்கே போகிறீர்கள்?’ என்று சத்தம் போட்டு கேட்க ‘சாப்பிட’ என்றதற்கு ‘அதற்கு வீட்டிற்குள் போக வேண்டாம், உங்களுக்கு சாப்பாடு பின்பக்கம், கூட சாப்பிடுகிறவர்கள் மயில்கள்’ என்று ஒரே கிண்டல்தான்.

அதன் பிறகு எனக்கு ரோஷம் வந்து ஒரு பார்ட்டிக்காக ஆலு (அதாங்க நம்ம உருளைக் கிழங்கு) பராத்தா (ரொட்டி) செய்ய ஆரம்பித்தேன். உருளை மசாலா தண்ணீர் விட்டு பிசைந்ததால் ரொட்டி உள்ளே வைத்தால் ரொட்டி செய்யவே வரவில்லை. அதை யாருக்கும் தெரியாமல் ஃப்ரிஜில் வைத்து விட்டு. சாபுதானா (ஜவ்வரசி) வடை செய்ய ஆரம்பித்தேன். சரியான பொருள் சேர்க்காததால் வடையை எண்ணையில் போட்டால் அதைத் தேட சீபீஐயை வரவழிக்க வேண்டியதாய்ப் போயிற்று. துவரம் பருப்பு, கடலைப் பருப்பு எல்லாம் ஏன் தான் ஒரே கலர், ஒரே அளவில் இருக்கின்றனவோ! நான் ஒரு மெசேஜ் பார்த்தேன். ஒரு மாமியார் பொலம்பிக் கொண்டே சுடு தண்ணீர் கேட்டால், மருமகள் ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தாள், கணவர் சுடு தண்ணீர் கொடுக்காமல் என்ன செய்கிறாய் என்று அதட்டியதற்கு ஸ்விக்கியில் ஆர்டர் செய்து கொண்டிருக்கிறேன் என்றாளாம். அப்படித்தான் என நிலைமையும் இருந்தது’ என்று கூறினாள்.

இதைக் கேட்ட எனக்கு என் தோழிகள் இரண்டு பேர்களைப் பற்றி ஞாபகம் வந்தது. அகிலா தஞ்சாவூர்க்காரி, பாலக்காட்டு மாப்பிள்ளை, அவள் நாத்தனார் சுந்தரியின் கணவர் தஞ்சாவூர்க்காரர். சுந்தரி அவள் வீட்டில் வெள்ளம் (தண்ணீர்) கேட்டால் ‘இங்கே என்ன ஆறா ஓடுகிறது’ என்று கமெண்ட். அரிசியைக் களையச் சொன்னதிற்கு அதை தூக்கிப் போட்டு விட்டாள் (களைதல்=அலம்புதல், தூக்கி எறிதல்). அங்கே அகிலாவை ‘கற்பூரத்தை ஒழிஞ்சிக்கோ (ஒத்திக்கோ)’ என்று சொன்னதிற்கு அவள் அழுத அழுகையை அடக்க அவள் கணவனாலே முடியவில்லை. சாப்பிடும்போது இஞ்சிப்புளியை புளிக்காய்ச்சல் என்று சொன்னதால் ஏமாற்றம் அடைந்த அகிலா, எதிரிலே இருந்த சர்க்கரையை பன்சாரை என்று கூறியதால் புரியாமல் தவித்த அகிலா, சவுட்டியை எடுத்து வா என்று சொன்னதிற்கு திருதிரு என்று முழித்த அகிலா என்று அவளது பன்முகங்கள் பார்க்க, கேட்க கண்கொள்ளா காட்சிதான். இப்படி எல்லா பெண்களுக்கும் சில பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். இதைத் தொடர்ந்து அவர்களும் அவைகளைப் பதிவு செய்தால் படித்து மகிழ்ச்சி அடைவோம்!

இப்படி பழக்க வழக்கங்கள் எத்தனை மாறினாலும் பெண் தன்னை புகுந்த வீட்டிற்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்வதென்னமோ உண்மைதான்! இப்படி முழித்த அகிலாதான் பிரசவத்திற்குக்கூட தன் தாய் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்றாள். பெண் தன் 7 பருவங்களான பேதை (1-8), பெதும்பை (9-11), மங்கை (12-14), மடந்தை (15-18), அரிவை (19-24), தெரிவை (25-29), பேரிளம்பெண் (30—) என்ற எல்லா நேரத்திலேயும் அன்பு வடிவமாக இருக்கிறாள். அவள் புதுப்பெண்ணோ புதுமைப்பெண்ணோ எந்த ஒரு நிலையிலும் பாசப் பெண், நேசப் பெண். ஆண்டவன் எல்லா நேரத்திலேயும் தான் வர முடியாதென்றுதான் தாயைப் படைத்துள்ளான் என்பர். பாரதியார் இந்தப் பெண்மையை எப்படி போற்றியுள்ளார்:

“பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா!

பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா! —-

உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்;—-

உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!”

 

மாமியார் வேலைக்குப் போகிறார் – கமலா முரளி

மலர்ந்த மனம் போதும்! (சிறுகதை) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements

அழுந்தி, பாதங்களை மெதுவாக வைத்து, மெல்ல மெல்ல சாந்தி தன் அறையில் இருந்து வந்தார்.

அவர் வரும் ஓசைக்காகவே காத்திருந்த சாந்தியின் மருமகள் ஸ்வப்னா, சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

கையில், மாமியாருக்கான காலை உணவு !

சாந்தியைப் பார்த்ததும், ஸ்வப்னாவுக்குச் சிரிப்பு வந்தது.ரொம்ப சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

பூசிய ( தடித்த எனப் படித்துக் கொள்ள வேண்டும் ) உடம்பு. நல்ல புடவையாகத் தான் கட்டியிருந்தார். ஆனால், உள்பாவாடை வெளியில் தெரிகிறது, ப்ளீட்ஸ்கள் எப்படியோ மடித்து உள்ளே தள்ளப்பட்டு, முந்தானை பரிதாபமாக மேலே கிடந்தது.

முழங்கால் வலி. அதனால், ஆடி ஆடி நடக்கும் பழக்கம் சாந்திக்கு.

இந்தக் கெட்டப்பில் பார்த்தால் சிரிப்பு வராமல் என்ன செய்யும் ?

ஆனால், சிரித்து விட்டால், மாமியார் கோபப்படுவார் அல்லது வருத்தப்படுவாரே ?

“ ஆண்ட்டி, கொஞ்சம் இருங்க, சாரி ப்ளீட் கொஞ்சம் சரி பண்றேன்”

“ அய்யயோ” எனச் சொல்லி நகர்ந்து கொண்டார்.

“உள்பாவாடை தெரியுது, ஆண்ட்டி, அந்த ஒரு இடம் சரி பண்ணினா…”

”வேண்டாமா, நாந்தா தூக்கிக் செருகி இருக்கேன். கொஞ்ச தூரம் நடந்தா, புடவ இறங்கி வந்துடும்”

சொன்னதைக் கேட்க மாட்டார். புடவையைச் சரி செய்து,ஊக்கு போட்டால் அப்படியே நிற்காதா ?சொன்னால் வருத்தப்படுவார் ! ஸ்வப்னா புடவையைத் தொடவில்லை.

இன்றிலிருந்து வேலைக்குப் போகிறார் மாமியார் !

கஷ்ட ஜீவனம் இல்லை ! மகன் சுரேஷும் மருமகள் ஸ்வப்னாவும் கை நிறைய சம்பாதிக்கிறார்கள். சாந்தியும் சில வருடங்களுக்கு முன் வரை வேலை பார்த்தவர் தான் !

மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி… எலும்பு இருக்குமிடமெல்லாம் வலி ! மிக மிக சிரமமாக இருந்ததால், வேலைக்கு முழுக்குப் போட்டு விட்டார்.

வீட்டில் முடங்கிக் கிடக்காமல், கோவிலுக்குச் செல்லுவது, கடைக்குச் செல்லுவது வீட்டில் எல்லா வேலையையும் செய்வது என முழுத்தீர்மானம் மனது போட்டாலும் உடல் ஒத்துழைக்கவில்லை.

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பொடிகிளி, ஆயில் மசாஜ் என போகப் வேண்டி இருந்தது. எத்தனை சிசுருஷை செய்தாலும், திரும்ப திரும்ப வலி வந்து கொண்டிருக்கும். முகம் மிகவும் இருளைடைந்து முனகிக் கொண்டே, அனத்திக் கொண்டே இருப்பார்.

உடல் சோர்ந்து இருந்தாலும், மனசும் மூளையும் மிகத் துடிப்பாக இருந்தது. சமையலறையில் கனமான சூடான பாத்திரத்தை ஏற்றி இறக்க கஷ்டப்படுவார். ஆனால், நியூஸ் முழுதும் அப்டேட் ஆக இருப்பார். எந்தப் படத்தின் பாட்டு சிங்கிள்ஸ் வெளிவந்துள்ளது எனச் சொல்வார்.

இரவு ஏழு மணி ஆனால், யூட்பில் கார்த்திக் கோபிநாத் என்ன சொல்கிறார் எனப் பார்ப்பார்.

இவ்வளவு ஏன்? ஸ்வப்னா தன் ஆபிஸ் ப்ராஜக்ட் வேலையில் தேர்ட் பார்ட்டி இல்லாமல் … பண பரிவர்த்தனை என்று சுரேஷிடம் சொல்ல ஆரம்பிக்க, “ அதாம்மா, இப்ப ‘ப்ளாக்செயின்’ வந்துருக்குல்ல” என்று சாந்தி சொன்ன போது சுரேஷும் ஸ்வப்னாவும் அதிர்ந்து போனார்கள்.

மூன்று வாரமாக சாந்திக்கு ரொம்ப முடியவில்லை. கழுத்து, கை வலி. பிஸியோதெரபி, மாத்திரை, நீராவி மசாஜ் என இருந்தார்.

முகத்தில் களையே இல்லை. பேச்சு ரொம்ப முனகல். முற்றிலுமாக முடங்கிப் போனார்.இந்த முறை மனதளவிலும் சோர்ந்து போயிருந்தார்

அப்போது தான் வந்தது இந்த வேலை வாய்ப்பு ! தனியார் பயிற்சி மையத்தில், பயிற்சியாளராக ! வேலையை விட்ட போது சில மையங்களில் விண்ணப்பித்தது. இப்போது கேட்கிறார்கள்.

சம்பளம் என்று அவர்கள் தரப்போவது…. அநாகரீகமாகத் தான் சொல்ல வேண்டும்…. அவ்வளவு குறைவு !

சாந்தியின் ஆர்வமும் உடற்சோர்வும் அவரது பலவீனம் என்றால், அவரது அறிவாற்றலும் அதே ஆர்வமும் அவரது பலம்.

“வேண்டாம். நான் போகவில்லை. என்னால் முடியவில்லை” என சாந்தி சொல்லவில்லை.

“ கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஆனா, இந்த மையம் ரொம்ப பக்கமாக இருக்கு ! வேலை மற்றும் வெளிநாடு செல்வோர் பயிற்சி நிறுவனம் ! சே , இப்ப போய் வந்திருக்கு” என அலுத்துக் கொண்டார்.

“ஒரு வேளை கொஞ்சம் கஷ்டப்பட்டு இரண்டு மாசம் போனா, மெதுவா, ஆன்லைன் க்ளாஸ் கூட எடுக்கலாம்” என்று சொன்னார்.

சூம், கூகுள் எல்லாம் நன்கு தெரியும்.

மகனோ மருமகளோ போக வேண்டாம் என்று சொன்னால் கோபப்படுவார் அல்லது வருத்தப்படுவார் என்பது புரிந்தது.

“சரிம்மா, போக வர ஆட்டோ ஏற்பாடு பண்ணிடறேன். செண்டரில கண்டிப்பா லிப்ட் இருக்கணும். இதான் என் ஸ்டேண்ட்” என்றான் சுரேஷ்.

இதோ இன்று கிளம்பிவிட்டார் சாந்தி !

முகத்தில் தெளிவு ! அதே சமயம், வீட்டு வேலைகளை இவ்வளவு நாள் செய்யாமல்,வெளியே வேலைக்குச் செல்வதை எண்ணி ஒரு தயக்கம் !

ஸ்வப்னா , டீயும் சுண்டலும் உள்ள பையைக் கொண்டு கொடுத்தாள். ஐந்து மணி நேரம் வேலை !

ஆட்டோ வாசலில் வந்து நின்றது. எல்.கே.ஜி குழந்தையை வழி அனுப்பவது போல் அனுப்பினார்கள்.

“ஏங்க ! இப்படிக் கஷ்டப்பட்டு போகணுமா ? போக வேண்டாம் என்று அடிச்சு சொல்லக்கூடாதா “ என்றாள் ஸ்வப்னா.

“சொன்னா வருத்தப்படுவாங்க” என்றான்

“சரிதான், கிடைக்கப் போற சம்பளம் ஆட்டோவுக்கும் எக்ஸ்ட்ரா மாத்திரைக்கும் தான் போகப் போவுது.வீண் அலைச்சல் தான் மிச்சம்”

“அம்மாவுக்கு எலும்பு தேய்மானம் ஆரம்ப நிலையில் தான் இருக்கு. வலியை நினைச்சு, பயந்துகிட்டு, முடங்கி இருக்காம, அவக்களுக்குப் பிடிச்ச வேலைக்குப் போகும் போது, தன்னை இன்னும் ஆரோக்கியமா வச்சுக்க முயற்சிப்பாங்க ! போன மாசம் அவங்க முகம் இருளடைந்து இருந்தது. இன்னிக்குப் பாரு ! முகத்தில ஒரு திருப்தி ! ரொம்ப நாளா ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்பு எடுக்கணும்ன்னு ஆசை அவங்களுக்கு !

“அம்மாவை விட்டுக் கொடுக்க மாட்டீங்களே “

“இல்லை ஸ்வப்னா ! இது ஒரு சின்ன மனோதத்துவம் தான் ! அவங்க வீட்டுக்குள்ளயே  இருக்கறதால, தெருவுல ‘அம்மாவுக்கு என்னாச்சு, பெரிய ஹாஸ்பிடல் போங்க…” அது இதுன்னு சொல்ற நேரம் வந்துடுச்சு !

அம்மா தன் விருப்பப்படி வேலைக்குப் போனா, கை கால்கள் கொஞ்சம் வேலை செய்யும். மருந்தும் கரெக்டா எடுப்பாங்க !”

“ஒரே கல்லுல ரெண்டு மாங்கா “

“இல்ல. மூணு மாங்கா ! நீ வீட்டுல வொர்க் ப்ரம் ஹோம் ! ஹாயா இருக்கலாம் ! மாமியார் வேலைக்குப் போறதால !”

ஸ்வ்ப்னா கையிலிருந்த கரண்டியால் அவனைச் செல்லமாக அடித்தாள்.

 

 

ஒரு ரயில் பயணத்தில் – பி.ஆர்.கிரிஜா

Overnight Trains in India: Everything You Need to Know | Intrepid Travel Blog

      ட்ரெயின் மூன்றாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றவுடன் அறிவிப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. பொதிகை எக்ஸ்பிரஸ் மூன்றாவது பிளாட்பாரத்திலிருந்து 6 மணி 15 நிமிடங்களுக்கு புறப்படும் என்ற அறிவிப்பாளர் மாறி மாறி தமிழ் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அறிவித்துக் கொண்டிருந்தார். 

         பார்வதியும் நிதானமாக தன் பெட்டியை எடுத்துக்கொண்டு அந்த எஸ் 2  கம்பார்ட்மெண்டில் ஏறி தன் பெர்த் நம்பரைத் தேடினாள். ஏழாம் நம்பர் என்று டிக்கெட்டைப் பார்த்து கன்ஃபர்ம் செய்து கொண்டு தன் சீட்டில் அமர்ந்து கொண்டாள். எதிர் சீட்டில் ஏற்கனவே ஒரு பெண் அமர்ந்திருந்தார். ஏறக்குறைய இவள் வயதுதானிருக்கும். எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. அதற்குள் சைட் ஸீட்டிற்கும் ஒரு பெண் வேகமாக வந்து அமர்ந்தாள். ஒரு 40 வயது இருக்கும். பார்வதிக்கு தனியாக டிராவல் பண்ணும்போது தன்னை விட வயதில் சிறிய பெண்ணின் துணை கிடைத்ததை நினைத்து உள்ளூர நிம்மதி அடைந்தாள். அதற்குள் எதிர் சீட்டில் இருந்த பெண்மணி இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு மெதுவாக, “நீங்க பார்வதி தானே?” என்று கேட்டார். அவளுக்கு ஒரே ஆச்சரியம். “அட, ஆமாம் நான் கூட உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு இந்த முகம் எனக்கு ரொம்ப பரிச்சயமானதா இருக்கு….. எங்க பாத்தேன் ? அதான் நான் யோசிக்கிறேன்” என்றாள் பார்வதி.

    “என்னத் தெரியல ? நான் தான் உன்னோட பிளஸ் டூவில் படிச்ச கயல்விழி” என்றாள். பார்வதிக்கு சட்டென்று ஞாபகம் வந்துவிட்டது. “அட ஆமாம்….. எல்லோரும் அவளை கிண்டல் செய்வார்கள்.

   ஏன் பேர்தான் கயல்விழி…. ஆனா ரொம்ப சின்னக் கண்ணு என்று சொல்லி சிரித்தாள் பார்வதி. “அதை மறக்காம ஞாபகம் வச்சிருக்கியா பார்வதி” என்றாள் கயல்விழி.

  நாங்க எல்லோரும் ரொம்ப கிண்டல் அடிப்போம். நீயும் கோவிச்சுக்காம  எங்களோடு சேர்ந்து சிரிச்சுக்கிட்டு ஜாலியா இருப்ப…”இப்ப எப்படி இருக்க கயல்? எத்தன வருஷம் ஆச்சு உன்னப் பாத்து ?” ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா இப்படி ஒரு ரயில் பயணத்தில் உன்ன சந்திச்சதுல….” என்றாள் பார்வதி. நான் நல்லாத்தான் இருக்கேன் பார்வதி.  நாம சந்திச்சு 33 வருடங்கள் இருக்கும் என்றாள் கயல். “ஆமா….  17 வயசுல ப்ளஸ்டூக்கப்பறம் பிரிஞ்சு  போய்விட்டோம். இப்ப நாம ரெண்டு பேருக்குமே ஐம்பது வயசாயிடுச்சி…. ஆனாலும் நீ என்ன மறக்கல…. ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா என்றாள் பார்வதி. இவர்கள் இருவரும் உற்சாகத்துடன் பேசியவாறு ஃபோன் நம்பரை பரிமாறிக் கொண்டனர். “நான் திருநெல்வேலியில் இருக்கேன். இந்தா என் அட்ரஸ்…. கண்டிப்பா வீட்டுக்கு வா” என்றாள் பார்வதி. “நான் சென்னையில் இருக்கேன் பார்வதி…. ஆனா அடிக்கடி இப்படி ட்ராவல்  பண்ணிட்டே இருப்பேன் எனக்கு அது ரொம்ப பிடிக்கும் என்றாள் கயல். கயல் கேட்காமலேயே பார்வதி தன்னை பற்றி முழு விவரங்களையும் பகிர்ந்து கொண்டாள்.

   வண்டி புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. டிடிஆர் வந்து டிக்கெட் செக்கிங் முடித்து சென்றுவிட்டார். நேரம் கடக்க ஆரம்பித்தது. கயலும் பார்வதியிடம் சொல்லி விட்டு பாத்ரூம் சென்றுவிட்டு வந்தாள். சாயந்திரம் வண்டியில் ஏறுவதற்கு முன்பே பார்வதிக்கு வயிறு சரியில்லை ஆதலால் நைட் டின்னர் அவள் எடுத்து வரவில்லை. கயல் தன் பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள். “பார்வதி டிபன் கொண்டு வரலையா? என்னோடு ஷேர் பண்ணி சாப்பிடேன்” என்று கெஞ்சினாள். “இல்ல கயல் உன் கிட்ட வாங்கி சாப்பிட எனக்கு என்ன கூச்சம்? எனக்கு வயிறு சரியில்ல அதான் ஒன்னும் சாப்பிடாம இருந்தா சரியாயிடும்…… நீ சாப்பிடு… நான் பிளாஸ்க்ல சுடு தண்ணி  வச்சிருக்கேன் அதைக் குடிச்சா காலையில சரியாயிடும் ,ஊருக்குப் போனா ரெஸ்ட்தான்” என்றாள் பார்வதி.

      கயலும் வற்புறுத்தவில்லை 9 மணிக்கு பெர்த்தைப் போட்டுவிட்டு எல்லோரும் படுக்க ஆரம்பித்தார்கள். அடுத்த நாள் நாலரை மணிக்கே வண்டி திருநெல்வேலி போய் சேர்ந்து விடும் என்பதால் மற்ற பயணிகளும் அவரவர் பெர்த்தில் படுக்க சென்றனர். அப்போது பார்வதி தன் பெட்டியைத் சங்கிலி போட்டு லாக் செய்யலாமா என யோசித்தாள். அதற்குள் தன் பக்கத்தில்தான் தோழி இருக்கிறாளே என்ன பயம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு ஹான்ட் பேக்கை மட்டும் தலையணை போல் வைத்துக் கொண்டு ஒரு போர்வையை விரித்து படுத்துக் கொண்டாள். பார்வதி.

     கயலும் கீழ் பெர்த்தில் படுத்து விட்டாள். பார்வதிக்கு தூக்கம் பிடிக்கவில்லை. சுற்று முற்றும் பார்த்தாள். அந்த சைட் பெர்த்தின் மேலே ஒரு 17வயது காலேஜ் ஸ்டூடண்ட் தன் லேப்-டாப்பில் ஏதோ படித்துக் கொண்டிருந்தான். அப்பர் பர்த்தில் ஒரு நடுத்தர வயது ஆண் சத்தமாக ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார். ஒரு மிடில் பெர்த் காலியாக இருந்தது. இன்னொரு பக்கம் யார் இருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. பார்வதிக்கு அந்த ரயிலில் வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் உட்கார்ந்த தோரணையே ரொம்ப மிடுக்காக இருந்தது. ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். தான் ஒரு பெரிய கலெக்டர்னு நினைப்பு போல என்று பார்வதி தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். “உட்கார்ந்த தோரணையிலேயே  ரொம்ப கர்வம் பிடிச்சவ போல” என்று நினைத்தாள் பார்வதி.

   திரும்பி தன் அருகில் உள்ள கீழ் பெர்த்தைப் பார்த்தாள். கயலுடன் பேசலாமா என நினைத்த போது அவள் ஏற்கனவே குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்து விட்டாள். இவளுக்கு மட்டும் படுத்த உடனே தூக்கம் எப்படித்தான் வருகிறதோ என்று நினைத்துக் கொண்டு லைட் ஆஃப் செய்து விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள் பார்வதி. தன்னையும் அறியாமல் தூங்கி விட்டாள்.

     நடுநிசி இருக்கும். திடீரென்று சத்தம். சைட் பெர்த்தில் படுத்திருந்த அந்தப் பெண் கீழ் பெர்த்தில் படுத்திருந்த கயல்விழியை எழுப்பி அவளை மற்றுமொரு பெண் போலீஸ் உதவியுடன் அந்த ஸ்டேஷனிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி அவளை தன்னுடன் கூட்டிச் சென்றனர். இந்தக் காட்சியைப் பார்த்து பார்வதி அப்படியே விக்கித்துப் போய் விட்டாள்.

    “ஐயோ ! என்ன ஆச்சு ? கயல்விழி என் ஃப்ரெண்ட்  ஆச்சே…. அவளை ஏன் இப்படி போலீஸ் கூட்டிட்டு போறாங்க?”

    “அம்மா… உங்களுக்கு விஷயமே  தெரியாதா ? அவங்க நல்ல படிச்சவங்கதானாம்….. ஆனா செய்யறது என்னவோ திருட்டுத் தொழில். இந்த மாதிரி அடிக்கடி ட்ரெயின்ல பிரயாணம் பண்ணி செயின் பறிக்கிறது, பர்ஸ் அடிக்கிறது இதே தான் வேலையாம். இன்னிக்குத்தான் கையும் களவுமாக பிடிபட்டாங்களாம்…. சக பிரயாணி ஒருவர் கூறினார். மற்றொருவர் பார்வதியைப் பார்த்து “நாங்க எல்லாரும் எங்க சாமான்  எல்லாத்தையும் செக் பண்ணிட்டோம்…. நீங்களும் பாருங்கம்மா… உங்க சாமானோ, பர்ஸோ ஏதாவது திருடு போயிருக்கான்னு…” என்று கூறினார்.

   அப்போதுதான் பார்வதி தன்னை சுதாரித்துக் கொண்டு தன் பெட்டி இருந்த இடத்தை பார்த்தாள். அது நல்ல வேளையாக வைத்த இடத்திலேயே இருந்தது.

     ஆனால்….. ஐயோ இது என்ன ! என் ஹாண்ட் பேக் கிழிந்திருக்கிறதே….. என்று பதைபதைப்புடன் அவசரம் அவசரமாக உள்ளே வைத்திருந்த சிறிய பர்ஸைத் தேடினாள். அது இல்லை. அதில் தான் அவள் அவசரத் தேவைக்கு எக்ஸ்ட்ராவாக 3000 ரூபாய் வைத்திருந்தாள். அதை லாவகமாக கயல்விழி அடித்துக் கொண்டு போய்விட்டாள். அதை  எப்போது, எப்படித்தான் எடுத்தாளோ !! பார்வதிக்கு தலை சுற்றியது. போன தூக்கம்  போனதுதான்.