எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

Image result for ஒளி வடிவில் சூரியன் செல்லும் பாதை

விஷ்வகர்மா திட்டமிட்டப்படி எல்லாம் நடைபெறலாயிற்று.

சூரியதேவனை அவர் தயாரித்த இயந்திரத்தில் அமரவைத்து ஆயுதங்கள் செய்துமுடித்தார். சூரியதேவனின் ஒளியை எட்டுப் பிரிவுகளாகப் பிரித்தார். அவற்றுள் ஒரு பகுதியைமட்டும் தனியே எடுத்தார். மிதமுள்ள ஏழு பகுதிகளை அவனிடமே உள்ளடக்கி அவன் வெள்ளை ஒளிக்குள்ளேயே அற்றைத் திணித்து வைத்தார். அவர் பிரித்த அந்த எட்டாவது பகுதியிலிருந்து முதலில் சிவனுக்குத் திரிசூலத்தைப் படைத்தார். அதன் நீளம் பரிமாணம் கூர்மை மூன்றையும் தன் உடலின் நாடிகளிலிருந்து அமைத்தார்.

விஷ்வகர்மா தனது நரம்பு மண்டலத்தில் மூன்று நாடிகளை உருவகப்படுத்தினார்.

உடலின் இடப்பக்கத்தில் அதாவது இடது பரிவு நரம்பு அமைப்பில் இயங்கும் நாடியை இடா நாடி அல்லது சந்திர நாடி என்று அழைத்தார். வலக்காலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல இடது மூக்கைச் சென்றடையும் படி செய்தார்.

உடலின் வலப்புறத்தில் அதாவது வலது பரிவு நரம்பு அமைப்பில் இயங்கும் நாடியைப் பிங்கலை நாடி அல்லது சூரிய நாடி என்று அழைத்தார். இடத்துக்காலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல வலது மூக்கைச் சென்றடையும் படி செய்தார்.

உடலின் மத்திய பாகத்தில் மூலாதாரத்திலிருந்து அதாவது தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியான ஆண்குறிக்குச் சற்று கீழே இருக்கும் பகுதியான சுழுமுனை நாடியென்று அழைத்தார்.

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியின் சக்தியை விழிப்புணர்வு செய்து இடகலை பிங்கலை சுவாசத்தின் மூலமாக நிறுத்தி சுழிமுனை நாடி மூலமாக வெளிக்கொண்டு வந்தார்.

அந்தக் குண்டலினி சக்தி மத்திய தடம் வழியாக நகர்ந்து சென்று தலை உச்சியை அடைந்து குளிர்ந்த காற்றாக வந்தடையச் செய்தார்.

திரிசூலத்தின் மூன்று முனைகளையும் இந்த மூன்று சக்திகளின் வடிவமாக உருவகப்படுத்தினார்.

திவ்விய ஆயுதமான திரிசூலம் சூரிய சக்தியைக் கொண்டு உருவாக்கியதில் விஷ்வகர்மா மிகவும் மன மகிழ்ந்தார். இப்படிப்பட்ட அற்புத ஆயுதத்தை அமைத்ததற்காக தன் அறிவைத் தானெ மெச்சிக் கொண்டார்.

அடுத்து விஷ்ணுவிற்கு வேண்டிய சக்க்ராயுதத்தை வடிக்க முனைந்தார்.

விஷ்ணுவின் மூல மந்திரங்களான ஓம்; ஸ; ஹ; ஸ்ரா; ர; ஹூம்; பட் என்ற ஏழு மந்திரங்களைத் தொடர்ந்து ஓதி சூரிய ஓளியின் மற்றொரு பாகத்தை சுதர்ஷனச் சக்கரமாக வடிவமைத்தார்.

அது சக்கர ஆயுதம் மட்டுமல்ல சக்கரத்தாழ்வார் என்ற பெயரில் தனிச்சிறப்பு கொள்ளப்போகிறது என்பதை முக்காலமும் உணர்ந்த விஷ்வகர்மா அப்போதே அதை உணர்ந்து தான் படைத்த அந்த ஆயுதத்தைத் தொழுது வணங்கினார்.

இந்த மாபெரும் இரண்டு ஆயுதங்களைப் படைத்தபிறகு குபேரனிற்காக ஒரு விமானம் படைப்பது விஸ்வகர்மாவிற்குக் கடினமாகவே தோன்றவில்லை. அதனை ஒரு புஷ்ப வடிவில் அமைத்தார். அதனால் அதனைப் புஷ்பக விமானம் என்றே அழைத்தார். அதன் தனித் தன்மை என்னவெனில் எத்தனை நபர்கள் பயணிக்கின்றார்களோ அந்த அளவிற்கு இருக்கைகள் விரிவடையும்.அப்படி அமைத்தார் விஸ்வகர்மா அத்தோடு , குபேரன் தனக்கு வழங்கிய செல்வத்திற்கு இந்தச் சிறிய புஷ்பக விமானம் மட்டும் போதாது. அவருக்கென்று ‘லங்கா’ என்ற பெயரில் ஒரு அழகிய பட்டணத்தையும் உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். அந்த இலங்காபுரியில் புஷ்பக விமானத்துடன் குபேரன் அரசாட்சி செய்யப்போகும் நாளை அன்றே மனக்கண்ணில் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

அந்த இலங்காபுரியையும் புஷ்பக விமானத்தையும் பின்னாளில் குபேரனின் தம்பி ராவணன் அபகரித்து அதே புஷ்பக விமானத்தில் சீதையையும் அபகரித்து அதன் விளைவாக ராவணன் ராமரால் கொல்லப்பட்டு ராமர் சீதை மற்றும் அனைவரும் அதே புஷ்பக விமானத்தில் பரதன் இருந்த நந்திக்கிராமத்திற்குப் பறந்து சென்ற கதை விஷ்வகர்மாவின் மனக்கண்ணில் அன்று தோன்றவில்லை. தோன்றியிருந்தால் அந்த விமானத்தை அன்று படைத்திருக்கவே மாட்டார்.

ஆயுதங்கள் படைப்பதில் அவருக்கு இணை அவர்தான். அதனால் இம்மூன்று சக்தி வாய்ந்த கலன்களை அமைப்பதில் அவருக்குக் கொஞ்சமும் சிரமமில்லை. ஆனால் சூரியதேவன் ஸந்த்யாவின் அறைக்குள் நுழையும் கதவைப் படைப்பதில் அவர் கொஞ்சம் தயங்கினார். அதை ஒரு நிரந்தரக் கதவாக இருக்கவேண்டும். கண்ணாடி போன்ற ஒளி புகும் சாதனமாக இருக்கவேண்டும். அதனுள் நுழையும்போது சூரியன் தன் தெய்வ வடிவை விட்டு ஒளி வடிவில் புகவேண்டும். பிறகு உரு மாறவேண்டும். திரும்ப அந்த அறையைவிட்டுச் செல்லும்போது சூரியதேவன் ஒளிவடிவில் கதவைத் தாண்டும் வரையில் செல்லவேண்டும். சூரியதேவன் இதற்கு முழு சம்மதம் தெரிவித்திருந்தான் என்றாலும் இது நடைமுறையில் வருவதற்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்தார். இதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை விஷ்வகர்மா தீவிரமாக யோசித்தார்.

முதல் வழி, தேரோட்டி அருணன் மூலம் செயல்படுத்துவது. அதாவது சூரியதேவன் தேரைவிட்டு இறங்கும்போது அருணன் அவனுக்கு ஞாபகப் படுத்துவது. அருணன் சரியாகச் செய்யக்கூடியவன் என்பதில் சந்தேகம் இல்லை. அருணனுக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில் இதைத் தவற விட்டுவிட்டான் என்றால் அதனால் விளையும் அனர்த்தங்களுக்கு அளவே இருக்காது.

சூரியதேவன் உள்ளே நுழையும்போது அவனை எச்சரிக்கும் ஒரு மணியைப் பொருத்தலாம். ஆனால் மணியும் இயந்திரம்தானே. அதுவும் பழுது படலாம்.

முடிவில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய அதி புத்திசாலிக் கதவாக மாற்ற முடிவு செய்தார். அதன்படி அந்தக்கதவைச் சூரியதேவன் ஒளிவடிவில் வரும்போது மட்டும் திறக்கும்படி ஒரு விதியை அமைத்தார்.

ஆனால் எந்த விதிக்கும் ஒரு விதிவிலக்கு உண்டு என்றும் மதியால் வெல்ல முடியாத விதி என்று ஒன்று உண்டு என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

சூரியனை விழுங்கக் காத்திருக்கும் ராகுவின் காலத்தை அவர் கணிக்க மறந்துவிட்டார். அதன் விளைவு மகாவிஷ்ணு ஆணைப்படி ராகு சூரியனை விழுங்கி மயக்கத்தில் ஆழ்த்தும் அந்தக் காலத்தில் அந்தக் கதவு எப்படி வேலை செய்யவேண்டும் என்பதனை இணைக்கத் தவறிவிட்டார்.

ராகுவினால் விழுங்கப்பட்டு சக்தியை இழந்த நிலையில் சூரியன் இருக்கும்போது அவனிடம் தோன்றும் கோபத்தின் அளவு அதீதமாக இருக்கும்.

குறிப்பிட்ட அளவு வரை தாங்கும் சக்தி பெற்ற அந்தக் கதவு இந்த அதீத சக்தியில் செயல் இழந்துவிடும்.

அப்படிப்பட்ட நாள் வந்தது. அதுவும் அந்தக் கதவு அமைக்கப்பட்ட அடுத்த மாதமே நிகழ்ந்தது.

அதன் விளைவு பயங்கரமாக இருந்தது.

தான் காதலித்துக் கைப்பிடித்த கணவன் சூரியதேவனையும் தான் பெற்ற ஆசைக் குழந்தைகள் மூவரையும் ஏன் சூரிய மண்டலத்தையே விட்டுவிட்டு வெகுதூரம் போய்விடவேண்டும் என்ற எண்ணத்தை ஸந்த்யாவின் மனதில் தோற்றுவிக்கும் அளவிற்கு விதி அதி பயங்கரமாக இருந்தது.

 

இரண்டாம் பகுதி

 

Image result for பிரம்மா நான்முகன்

நான்முகன் நான்கு முகத்தின் வழியாகப் பேசியது பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் 3-டி படம் பார்ப்பது போல் இருந்தது. முதலில் அப்படிப்பார்ப்பது சற்று சிரமமாக இருந்ததால் மக்கள் கொஞ்சம் திணறினார்கள். எந்த முகத்தைப் பார்ப்பது எதை விடுப்பது என்பது புரியாமல் தடுமாறினார்.

அந்தத் தடுமாற்றத்தைப்போக்க என்ன செய்யலாம் என்று நாரதர் யோசிக்கத் தான் பூலோகத்தில் பார்த்த 3-டி கண்ணாடி ஞாபகம் வந்தது.”நாராயணா என்று மனதில் அவர் நினைக்கப் பார்வையாளர் அனைவர் கண்களிலும் தங்கத்தில் செய்த 3 டி கண்ணாடி தானாகவே பொருந்தி அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. திரும்பப் போகும்போது வாசலில் இருக்கும் பெட்டியில் போட்டுவிட்டுப் போகவேண்டுமா அல்லது சத்தியம் திரையரங்கத்தில் சிலர் செய்வது போலச் சுட்டுவிட்டுப் போய்விடலாமா என்று ஒருவர் யோசிக்க ஆரம்பித்தார்.

அந்த டெக்னிக்கைப் பார்த்த மகாவிஷ்ணுவும் பரமசிவனும் அசந்து போய்விட்டார்கள். நாமும் ஏதாவது ஜிம்மிக் செய்யவேண்டும் அன்று தீர்மானித்துக் கொண்டார்கள். நாம் விஸ்வரூபம் எடுக்கலாமா என்று விஷ்ணு யோசிக்க அதை மனக்கண்ணில் உணர்ந்த லக்ஷ்மி தேவி , ‘அது மட்டும் வேண்டாம், ஏற்கனவே கமலஹாசன் விஸ்வரூபம்-2 எடுத்து கையைச் சுட்டுக் கொண்டார் என்று விஷ்ணுவின் காதில் கிசுகிசுத்தார்.

பரமசிவன் கையில் சூலாயுதத்துடன் ஒரு உக்கிர தாண்டவம் ஆடிவிட்டு விஷயத்தைச் சொன்னால் க்ளிக் ஆகுமா என்று யோசித்தார். அதை உணர்ந்த பார்வதி ஒரு கோபப் பார்வையாலேயே அதை அடக்கினார்.

நாரதருக்கும் சரஸ்வதிக்கும் இது அடிக்கடி வீட்டில் நடக்கும் சமாச்சாரம் என்பதால் அவ்வளவு சிரத்தை இல்லை.

நான்முகன் தொடர்ந்து பேசினார்.

சரஸ்வதிதேவி பேசியதில் எந்தவிதத் தவறும் இல்லை. அவர் புள்ளி வைத்துப் பேசினார் என்று நடுவரும் மற்றவரும் நினைக்கலாம். ஆனால் புள்ளி போட்டுக் காட்டிட இது கோலம் அல்ல. முதல் புள்ளியும் முற்றுப்புள்ளியும் சிறியது மற்றப் புள்ளிங்க ..தான் பெரிது என்ற பாணியில் அவர் பேசினார். வாதத்திற்கு அது சரியாகாது தோன்றினாலும் விவாதத்துக்கு அது பொருந்தாது. நான் புள்ளி விவரங்களுடன் சில கருத்துக்களை உங்கள் முன் படைக்கிறேன்.

இந்த படைப்பின் பெருமையைப் பற்றிக் கூறவேண்டியது மிக மிக அவசியம். நான்முகனான நான் பெரியவன் அல்ல. ஆனால் படைப்பு என்ற தொழில் அனைத்திலும் சிறந்தது என்பதை நிரூபிக்க முடியும். அதனால் இதைப் படைப்பாற்றல் என்று சொல்கிறார்கள்.

படைப்பாற்றல் என்பது காலம் காலமாக நாம் நமது எண்ணத்தில் தியானத்தில் சேர்த்து வைத்திருந்த நுண்ணறிவு, உணர்வு, தகவல், ஆகியவற்றோடு உத்வேகம் , புதுமை என்ற கோட்பாட்டோடு சேர்த்து முற்றிலும் புதிய வகையில் தருவதாகும் .

இருப்பதை நன்றாக உணர்ந்து இல்லாத ஒன்றைக் கண்டுபிடித்து அதை புதியதாக அறிமுகப்படுத்துவதே படைப்பின் தத்துவம்.

மகாவிஷ்ணு , பரமசிவன் இவர்கள் இருவரைத் தவிர ஈறேழு பதினான்கு லோகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும் மற்ற உயிரற்ற ஜடப் பொருட்களும் படைக்கப் பட்டவை என்பது மிகமிக முக்கியம். யார் படைத்தார்கள் என்ற கேள்வி தேவையற்றது. ஆனால் படைப்பு என்பது மிகவும் போற்றப்படவேண்டிய ஒன்று.

வெளிப்படுத்தப்பட்டுள்ள படைப்பு ப்ரக்ருதி என்றும், அதற்குக் காரணமான வெளிப்படாத – சூட்சுமமான நிலையின் இருப்பு பிரதானம் என்றும் அழைக்கப்படுகிறது.

மொத்த மூலப்பொருளான பிரதானம் இருபத்து நான்கு மூலப்பொருட்களைச் சூட்சும நிலையில் கொண்டுள்ளது, அவையாவன: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள். மணம், சுவை, உருவம், தொடுவுணர்ச்சி, சப்தம் என்னும் புலனுகர்ச்சிப் பொருட்கள்) மூக்கு, நாக்கு, கண், தோல், காது என்ற ஐந்து ஞான இந்திரியங்கள்). கை, கால், வாய், ஆசனவாய், பாலுறுப்பு என்ற ஐந்து கர்ம இந்திரியங்கள்). இத்துடன் மனம், புத்தி, அகங்காரம், மற்றும் மாசடைந்த உணர்வு ஆகிய இருபத்து நான்கு முளுக்குஉறுகளும் சேர்ந்ததே பிரதானம்.

காலம் என்பது இதன் இருபத்தைந்தாம் மூலக்கூறாகும்.

இயற்கை படைப்பைத் தொடங்குகிறது. எவ்வாறு தெரியுமா?

பல்லுயிர் வாழ உலகு படைக்கப்படுகிறது. .

மயக்கம் ஆசை கோபம், பயம் அகங்காரம் என்ற ஐங்குணங்கள் சேர்த்து புல், செடி, கொடி, பறவை, விலங்கு, மனிதர், தேவர் போன்றவையும் படைக்கப்படுகின்றன. .

இன்னொரு முக்கிய செய்தி என்னவென்றால் ஒரு படைப்பைப் படைக்கும் போதே அதன் ஆயுளை நான் நிர்ணயிக்கிறேன். மனிதனின் ஆயுளை அவன் தலையில் எழுதுகிறேன். அதற்குமேல் அவனால் வாழவும் முடியாது. அதற்கு முன் அவனால் சாகவும் முடியாது.அது வரை அவன் காக்கவும் படுகிறான்.
ஒரு மருந்தைத் தயாரிக்கும்போதே அதன் முடிவு நாளைக்குக் குறிப்பிடுவது போல.

காலம் என்ற ஒன்றைப் படைத்தேன். மறதி என்ற ஒன்றைப் படைத்தேன். மரணம் என்ற ஒன்றைப் படைத்தேன். இவை பல படைப்புக்களுக்கு முடிவாக இருக்கும் என்ற காரணத்தையும் படைத்தேன்.

ஏன் காத்தல் என்ற ஒன்றையும் அழித்தல் என்ற ஒன்றையும் நானே படைத்தேன்.

படைப்பதனால் என் பேர் இறைவன் என்று உங்கள் கண்ணதாசனும் கூறினார் அல்லவா?

இறுதியாக ஒரேவரியில் உங்களுக்குப் புரிந்த பாஷையில் சொல்கிறேன் . ஒரு திரைத்துறையிற்குத் தயாரிப்பாளர் இருக்கலாம் ரஜினி விஜய் அஜித் மாதிரி நடிகர்கள் இருக்கலாம். கதை பாடல் கேமரா என்ற காரணம் ஆயிரம் இருக்கலாம். ஆனால் இயக்குநர் என்ற ஒருவர் முக்கியமாக இருக்கவேண்டும். அவர்தான் படைப்பாளி. அவர்தான் முன்னவர்.

இதற்கு மேல் விளக்கம் தேவையா நடுவர் அவர்களே ? என்று கேட்டுப் பலத்த கரகோஷத்துடன் பிரும்மா தனது கருத்தைக் கூறி முடித்தார்.

“மனம் தளர்ந்து திகைத்துப் போனாள்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Image result for சிறுகதை

பல பிரச்சினைகளை துணிவோடு சந்தித்து வந்த வாணிக்கு, திடீரென்று ஒரு நாள் தாங்க முடியவில்லை. தலை கனப்பதாக உணர்ந்தாள். அதிகமான பசி எடுத்தது. அவளை உடைகளை மாற்றிக் கொள்வதற்கும் குளிக்கவும் வற்புறுத்தினாலும் கூட பல நாட்கள் செய்யாமல் இருந்தாள். பல நேரங்களில் அவள் அழுகையுடன் கணவர் மதனுடன் நடந்த விவாதத்தை நினைவு கூறி, தான் இருக்கும் இடத்தை புதிதாகப் பார்ப்பது போல் இருப்பாள் என்றார்கள். மூன்று வாரங்களுக்குப் பிறகு அவளுடைய குடும்பத்தினர் எங்களிடம் அவளை அழைத்து வந்தார்கள். பிறந்து ஐந்து நாளே ஆன கைக்குழந்தையுடன். முழுமையாக விசாரித்த பின் அவளுடைய நிலமை, “ரியாக்டிவ் ஸைக்கோஸிஸ், மனச் சோர்வுடன்” (Reactive Psychosis, Depressed Type) என்ற மனநோயின் ஒரு விதம் என்பது ஊர்ஜிதம் ஆயிற்று.

மன உளைச்சல். அதன் பல வண்ணங்கள் அவள் நிலையில் தெரிந்தது. உதாரணத்திற்கு, இதுவரை அவளுக்கு இருந்த மன உறுதி பலவீனமானது, தான் எதற்கும் உபயோகம் இல்லை என்று தோன்றியது. தனக்கு தெரிந்த எவராலும் தனக்கு உதவ இயலாது என்றும், தனக்கு எந்த ஒரு விடிவுகாலமும் இல்லை என்றும் நம்பினாள். தனக்கு வந்த மனநோயை உணராமல், தெரியாத நிலையில் இருந்தாள், இது ஸைக்கோஸிஸ் (Psychosis) என்ற மனச்சிதைவின் ஒர் அடையாளமாகும்.

எதனால் இப்படி நேர வேண்டும்? அதைப் புரிந்து கொள்ள, அவளின் பின்னணியை சற்று பார்ப்போம்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள் வாணி, மூத்த பிள்ளை, அவளுக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. அப்பாவிற்கு ஒரு நிறுவனத்தில் குமாஸ்தா வேலை. முதலில் நன்றாக இருந்தார்கள். கடந்த ஏழு வருடமாக அவருக்கு குடிப்பழக்கம் ஆனதிலிருந்து வேலைக்கு சரியாக போவதில்லை. அம்மா சம்பாதிக்கத் தொடங்கி, வீட்டு நிர்வாகத்தையும் பார்த்துக் கொண்டாள். அவள், பாசத்துடன் கண்டிப்பின் கலவையாக பிள்ளைகளை வளர்த்தாள். கணவரை அனுசரித்துப் போனாள்.

வாணியும் அவள் முதல் தங்கையும் நெருங்கி இருந்தார்கள். இளைய தங்கை வீட்டின் நிலையைப் பற்றி வெட்கப் பட்டு தன்னை தனித்து வைத்துக்கொண்டாள். தம்பி, படிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தான், வீட்டு நிலையை பிற்காலத்தில் நன்றாக்க வேண்டும் என்ற குறிக்கோளில்.

வாணி மூத்த குழந்தையாக இருந்ததால் வீட்டு வரவு-செலவு முடிவுகள் எடுக்க அம்மா அவளுடன் கலந்து பேசுவாள். இது வாணிக்கு சுமையாகத் தோன்றியது ஆனால் அம்மாவிடம் இதைச் சொல்லவில்லை. தங்கைகள், தம்பி தங்கள் தேவைகளை இவளிடம் சொல்லி, அது அம்மாவிடம் சொல்லப் படும். பெற்றோரிடம் நேரடியாக கேட்க முடியாததை, மூவரும் வெறுத்தார்கள். அந்த ஆதங்கத்தை வாணி மேல் காண்பிப்பது உண்டு. இதனால், அவர்களுக்குள் உறவு சற்று இப்படி-அப்படி என்று ஆயிற்று.

மேலும் அப்பாவிற்கு குடிப்பழக்கம் ஆனதிலிருந்து, அம்மா தன்னுடைய கோபத்தை, சலிப்பை குழந்தைகள் மேல் காட்டினாள். இதுவரை குழந்தைகளை வாய் நிறைய புகழ்வது குறைந்து வந்தது. இதுவும் அவர்களுக்குத் தாங்க கடினமாயிற்று. மேலும் தாங்கள் செய்வது சரியா தவறா என்ற குழப்பம் ஆரம்பமானது.

இப்படி ஆவதற்கு முன்பு அவர்களது நடுத்தர குடும்ப நிலையைப் பற்றி சிறிதாக நினைத்ததோ வெட்கப் பட்டதோ இல்லை. தங்களது தேவைகளை நன்றாகவே பார்த்து கொள்ள முடிந்தது. அப்பாவின் குடிப்பழக்கம் எல்லாவற்றையும் சுக்கு நூறாக்கியது. அதுவரைக்கும் உறவினர்களை சந்திப்பது எல்லாம் உண்டு. அதுவும் மாறிவிட்டது.

அதே போல், வாணி பிறந்த போது, அவள் முதல் குழந்தை என்பதாலும், பெற்றோர் அவளுக்கு கவனம், நேரம் அதிகம் தந்ததாலும் பல நல்ல குணங்களுடன் வளர்ந்தாள். தைரியமாகப் பேசுவது, தெளிவாக முடிவுகளை எடுப்பது, குழு அமைப்பது எல்லாம் மிக சுலபமாக செய்வாள். படிப்பிலும் கெட்டிக்காரி, பட்டதாரி ஆகி, ஆஃபிஸர் ஆகி, பெற்றோரை நல்ல நிலைக்கு கொண்டு வந்து நன்றாக வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் வளர்ந்தவள். தங்கை, தம்பியை ஆசையாக பார்த்துக் கொண்டாள்.

பத்தாவது முடித்த பிறகு வீட்டில் பணம் நெருக்கடி ஆரம்பமானது. அப்பா சம்பாதிப்பது போதவில்லை. வாணி பள்ளிக்கூடம் விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவள், பக்கத்தில் உள்ள துணிக் கடையில் விற்பனை சேவகர் (sales girl) வேலையில் சேர்ந்தாள். வருமானம் போதவில்லை. வீட்டில் டியூஷன் எடுக்கவும் ஆரம்பித்தாள்.

அவளுடைய பதினெட்டு வயது முடிந்ததுமே உறவினர்களுக்குத் தெரிந்த ஒருவருடன் கல்யாணம் ஆனது. அவளுடைய மாமனார் மாமியார் போட்ட சீர்வரிசை பட்டியலைப் பார்த்து வியந்தாள். அவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று தோன்றியது. தம்பி, தங்கைகளின் படிப்பு, கல்யாணம், பற்றி கவலையாக இருந்தது.

தன் கணவர் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று மிக குறிப்பாக இருந்தாள். துடிப்பாக இருந்தாள் என்று கூடக் கூறலாம். அவர்கள் இல்லற வாழ்க்கையில் எந்த சிதைவும் வரக்கூடாது என்று குறிப்பாக இருந்தாள். இல்லையேல் தன்னுடைய அப்பாவைப் போல் கணவனும் பழக்கங்களுக்கு அடிமையாகி, மறுபடி பண நெருக்கடி, பற்றாக்குறை என்று ஆகும் என்ற கவலை.

கணவர் மதன் அப்போது மதுபானக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மது அருந்தும் பழக்கம் கிடையாது. தன் தந்தையின் பழக்கத்தின் தாக்கம் ஆகாமல் இருக்க அம்மா வீட்டிற்கு செல்வதை குறைத்தாள். அவள் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் மதன் தன் மாமனார்-மாமியார் போய் பார்ப்பது வழக்கம். வாணி கவலைப் படுவதை பார்க்கத் தாளாமல் மதுபான கடை வேலையை ராஜினாமா செய்து வேறு வேலை தேட ஆரம்பித்தார்.

பல மாதங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. மாமனார்- மாமியார் வருத்தப் பட்டார்கள். மருமகள் சம்பாத்யம் மட்டுமே என்பதை ஏற்றுக்கொள்ளத் தவித்தார்கள். சில வாரங்களுக்குப் பிறகு, மதன் வேலை விட்டது பற்றிய பேச்சு, குடும்பத்தில் விவாதம், மனஸ்தாபத்தை ஏற்படுத்தியது. வாணிக்கு மீண்டும் கவலை, வேலை கிடைக்குமா? அவர்கள் திருமண வாழ்வில் விரிசல் வருமா?

பக்கத்தில் ஒரு உணவகத்தில் வேலை கிடைத்தது. மதன் வேலைக்கு சேர்ந்தார். தற்காலிகமாக ஓரிரு மாதத்திற்கு
வேலை என்றார் முதலாளி. வேதனை, கோபம் வாட்டியது.

வேலை நிலைக்குமா என்று கவலை கொண்டு இருக்கையில் வாணி கர்ப்பமானாள். பணம் குறைவாக இருந்ததால் கலைக்க யோசித்தார்கள். மாமியார் இதை தற்செயலாக கேட்டதும் தடுத்து விட்டாள். பணம் கொடுத்து உதவினாள். வாணிக்கு வெட்கமாக இருந்தது.

அவளுடைய கர்ப்பம் பற்றி தெரிந்தும் அவளுடைய பெற்றோர் வந்து பார்க்கவோ, தகவல் அனுப்பவோ இல்லை என்ற கவலை. வாணியை உதாசீனப் படுத்துவது போல தோன்றியது. எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று புரிய வில்லை. மதன் இவை எதையும் பொருட்படுத்தாமல் இருந்தது அவளை இன்னும் வாட்டியது. அவர் தன்னை மதிக்காமல் இருப்பது போல் தோன்றியது.

வாணிக்கும் அவள் கணவனுக்கும் வாணி பிரசவத்திற்கு எங்கு போவதென்றுது கடும் விவாதம் எழுந்தது. கலாசாரத்தை மனதில் வைத்து அம்மா வீடு என்றே நினைத்தாள். மதன், இதை நிராகரிக்க, முடிவில்லா விவாவதமாகப் போய் கொண்டு இருந்தது.

முதல் பிரசவம் அம்மா வீட்டில் என்று இருந்தாள் வாணி. ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் அம்மாவோ அப்பாவோ வரவில்லை, செய்ய வேண்டிய சடங்குகளான வளைகாப்பு, சீமந்தம் செய்யவும் முன் வரவில்லை. மதன் அவர்களை பார்த்து அவர்கள் பெரும் பொருளாதர கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டு, தன் பெற்றோரிடம் பகிர்ந்தான். அவர்கள் சடங்குகளைத் தாங்களாக எடுத்துச் செய்து முடித்தார்கள். மதன் பிரசவத்திற்கு செலவு, எல்லாம் தன்னுடையது என்று உறுதியாகச் சொன்னார். மகப்பேறு நிலமையில் வாணிக்கு மனச்சுமையை அதிகரிக்க வேண்டாம் என்று பெற்றோர் கஷ்டத்தை அவளிடம் சொல்லவில்லை. வாணிக்கு எதுவும் புரியவில்லை. வருத்தம், கோபம் பீறிட்டு வந்தது.

வாணிக்குத் தன் கர்ப்பம் இவ்வளவு துயரத்தை தருவதால், ஆண் குழந்தை பிறந்தால் இப்படி எல்லாம் அந்தக் குழந்தை, கஷ்டப்பட வேண்டாம் என்று தோன்றியது. கண்டிப்பாக ஆண் பிள்ளை என்று மனதிற்குள் முடிவை செய்து கொண்டாள். மதன், மாமியார்-மாமனார், மூவரும் பெண் பிள்ளை விரும்பினார்கள். அவர்களைப் பொருத்தவரை பெண்கள் பொறுப்பாக இருப்பார்கள். கவலை தர மாட்டார்கள் என்ற எண்ணத்தால்.

பிறந்ததோ பெண் குழந்தை. அணைக் கட்டு நிரம்பி உடைந்தது போல் இருந்தது வாணியின் நிலை. தான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை, தயாராக இல்லாத போது கர்ப்பமானது, பெண் பிள்ளை, தன் பெற்றோர் கர்ப்பம் சேர்ந்த எதையும் பொருட்படுத்தாமல் இருந்தது, எல்லாம் சேர்ந்து வாணிக்கு திடீரென மனச்சிதைவு ஏற்பட்டது.

வாணி இதுவரைக்கும் எவ்வளவோ தாங்கினாள். சமீப காலமாக திடீராக, வாழ்க்கையில் பெருமளவில் தவிப்பு தரக்கூடிய நிகழ்வுகள் இருந்தன. பலமுறை மனச் சிதைவு ஏற்படுவது இப்படித்தான். வெகு நாட்களாக மனச் சுமைகள் கூடிக் கொண்டிருக்கும், ஆனால் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு மன உறுதியுடன் வாழ்க்கை நடத்தி வருவார்கள், ஒரு நாள் இன்னும் ஒரு பெரிய நிகழ்வு இடி போல மனதைத் தாக்கும், திடீரென்று மனச் சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.

இப்படி, குறிப்பிட்ட காரணிகளால் அது நேர்ந்தால் அந்த மனநோயிலிருந்து வெளிவருவது ஓரளவிற்குச் சுலபம். இப்படி நேரும் மனச்சிதைவிற்கு மருந்துகள் மிக முக்கியமான ஒரு அம்சம். அதில் தெளிவு பெற்ற பின்னரே, குடும்பத்துடன் அவர்களை உளவியல் ரீதியாக அணுகினால், அது மனநலத்தை நன்றாக்க உதவும்.

அவ்வாறே வாணி சிகிச்சை ஆஸ்பத்திரியில் இரண்டு வாரம் இருந்தாள். பிறந்த குழந்தையை பார்த்துக் கொள்ள மறுத்தாள். குழந்தை நலத்திற்கும் தாய்-சேய் இணைந்து வருவதற்கும் உதவுவதில் மருந்துகளுக்கு பெரிய பங்கு உண்டு. நிலை சரிவர, மருத்துவர் அதைக் குறைத்து விடுவார். அதுவரையில் மருந்துகள் சரியாக எடுத்துக் கொள்வது மிக அவசியம்.

மதன் மருந்துகளைத் தருவதின் பொறுப்பை எடுத்து கொண்டார். அவர் வேலைக்கு போகும் நேரங்களில் மாமியார் வாணியை பார்த்து கொண்டு, மருந்துகள் தருவாள். பிறந்த குழந்தை அவள் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று எங்கள் சிகிச்சைக் குழு முடிவெடுத்தது, குழந்தைக்குத் தாய்ப் பால், ஸ்பரிசம் அவசியம் என்பதாலும்.

வாணி மருந்துகள் அருந்தி வந்த நிலையில் அவளுடைய இரு குடும்பத்தினரிடமும் அவளுக்கு நேர்ந்தது என்ன, ஏன், அதற்கு சிகிச்சை எவ்வாறு செய்யப் படும் என்பதெல்லாம் பற்றி மனநல-அறிவுரை (psycho – education) செய்யப் பட்டது. இப்போதிருக்கும் நிலை, சிகிச்சை, பிற்காலத்தில் பார்த்துக் கொள்ள வேண்டியது எப்படி என்பதற்கெல்லாம் இந்த ஸைகோ எடுகேஷன் விளக்கம் அளிக்கும்.

அதிலிருந்து இரு குடும்பத்தினரும் தெளிவு பெற்றார்கள். அது அவளுடைய நலன்களுக்கு உதவியது. வாணியின் பெற்றோரின் பொருளாதார நிலமை மிக கவலைக்கு இடமான நிலையில் இருந்ததை மதன் அறிந்து இருந்தார், அவள் கர்ப்பத்தை மனதில் வைத்து, முதல் பிரசவம் என்பதாலும் வாணியுடன் பகிரவில்லை. அவளுக்கு தெரியாமல் மறைத்து விட்டார்கள். அவள் கோபப் பட்டாலும் சொல்லவில்லை. அதனால் தான் அவளை பெற்றோரின் வீட்டுக்கு பிரசவத்திற்கு அனுப்பி வைத்தால் அதைச் சமாளிக்க அவர்களால் முடியாது என்பதைப் புரிந்து கொண்டும் மதன் தானும் தன் பெற்றோருடன் பார்த்துக் கொள்ள முடிவு எடுத்தார்கள்.

இந்த சிந்தனையார்ந்த எண்ணத்தை வாணியிடம் சொல்லாததால் மனைவிக்கு நேர்ந்ததை உணர்ந்து மதன் வியந்தார். இதை எல்லாம் பகிர்ந்த பிறகு வாணியுடன் பல வாரங்களுக்கு செஷன்கள் நடந்தன. மூன்று மாதங்களில் வாணியின் உடல்-மனம்-சமூக நலன்களில் பலவிதமான மாற்றங்கள் ஆகின. கண்டிப்பாக முழுமையாக குணமடைவாள் வாணி என்று தெரிந்தது.

ஏடா கூடாக் கவிதைகள் – செவல்குளம் செல்வராஜு

Image result for சிறுகதை

பின்னிரவு கூடலில்

அவனை நினைத்து கிடந்தேன்

வீறிட்டது குழந்தை

விடுவித்துக் கொண்டேன்

 

 கொண்ட முத்தங்களை

மொத்தமாக

கொடுத்து முடித்தடங்கியபோது

மீண்டும் துவங்கினாய்

 

அவசர அவசரமாய்

உடை திருத்தி

வெளிவருகையில்

திடுக்கிடச் செய்தது

பயந்து ஓடிய

திருட்டுப் பூனை

 

 

பாடு நெஞ்சே! – தில்லை வேந்தன்

Image result for நெஞ்சே
 ஏற்றம்வரும்,  தாழ்வுவரும்,
     இன்பதுன்பம்  வந்துசெலும்,
யாவர்க்கும்  வகுத்தநெறி ஒன்றே ஆகும்.
ஆற்றுவெள்ளம் பின்செலுமோ?
     அதைப்போல்தான்  வாழ்வுசெலும்.
அன்பிருந்தால் நடப்பதெல்லாம் நன்றே ஆகும்.
மாற்றங்கள்  நிலையாகும்,
      வாழ்வதுமோர்   கலையாகும்.
வந்துவந்து போகின்ற அலையே ஆகும்.
போற்றியொரு பாதொடுத்துப்
      பொன்றமிழின்  தேன்கொடுத்துப்
புதுச்சந்தம்  நீயெடுத்துப்  பாடு நெஞ்சே!ஊற்றெடுக்கும் அன்பொன்றே
உடல்வளர்க்கும்.  உயிர்வளர்க்கும்,
உறவென்னும் பயிர்வளர்க்கும், பயன்கொ டுக்கும்.
காற்றென்ற மூச்சதுதான்
      கழன்றுவெளி போனபின்னர்க்
காதறுந்த ஊசியதும் வருவ துண்டோ?
தோற்றவர்யார், வென்றவர்யார்
      தொல்லுலகில் சேர்த்துவைத்த
சொத்துவைத்துச் சொல்கின்ற வழக்கம் உண்டோ?
சாற்றியொரு  பாதொடுத்துத்
       தண்டமிழின் தேன்கொடுத்துச்
சந்தமொன்று நீயெடுத்துப் பாடு நெஞ்சே!
                                             —-      தில்லைவேந்தன்

சரித்திரம் பேசுகிறது – யாரோ

நரசிம்மவர்ம பல்லவன்

Image result for நரசிம்ம பல்லவன்

Image result for நரசிம்ம பல்லவன்

 

புலியைப் பற்றி எழுதினோம்.
இப்பொழுது ஒரு சிங்கத்தைப் பற்றி எழுதுவோம்.
அது லயன் கிங் !
நரசிம்மம்!
புலியை விழுங்கி ஏப்பம் விட்ட சிங்கம் அது.
நரசிம்மவர்ம பல்லவனைப் பற்றி தான் சொல்கிறோம்..
இந்தியாவின் சரித்திரத்தில் மொத்தம் பன்னிரெண்டு அரசர்கள் தான் தோல்வியை சந்திக்காத மன்னர்களாம்!
அது யார்.. அது யார்.. என்று துடிக்கக்கூடாது.
அந்த பன்னிரண்டு பெரை நான் இங்கு குறிப்பிட..பிறகு வாசகர்கள் அதைப் பற்றி என்னைக் கிழிக்க …
எனக்கேன் அந்த வம்பு!
ஆக அந்த பன்னிரண்டு மன்னர்களில் நமது நரசிம்ம பல்லவனும் ஒன்று!

புள்ளலூர்ப் போர் (Battle of Pullalur) 618-19 ஆண்டுகளில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் இரண்டாம் புலிகேசிக்கும் இடையில் காஞ்சிபுரத்தில் அருகில் நடந்தது.  இந்தப் போரில் இளவரசன் நரசிம்மவர்மனும் போர் செய்திருந்தான்..புலிகேசியின் பராக்கிரமத்தை நரசிம்மன் நேரில் பார்த்திருந்தான். பல்லவர்கள் தோல்வி அடைந்தாலும்- மகேந்திரன் சாமர்த்தியமாக நரசிம்மனை காஞ்சிக் கோட்டையைக் காக்கும் பொறுப்பில் விட்டான். நரசிம்மனது ஆற்றல் காஞ்சிக்கோட்டையை புலிகேசி நுழையாமல் காத்தது. இருப்பினும் பெருத்த அவமானம் அவர்களைப் பீடித்திருந்தது.

நரசிம்மன் இளமையிலேயே – போர்க்கலையை நன்குக் கற்றுணர்ந்தான்.  
உடல் வலியைப் பெருக்கினான்.
மல்யுத்தம் செய்வதில் பெரும் வீரனாகத் திகழ்ந்தான்.
காஞ்சியின் மல்லர்கள் அனைவரையும் வெற்றி கொண்டான்.
மக்கள் அவனை மாமல்லன் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்.
சேனாபதியின் மகன் பரஞ்சோதி!
அந்த இறையருள் பெற்ற பாலகன்-  இளவரசன் நரசிம்மனுடைய தோழன் ஆனான்.
இருவரும் பல்லவ நாடு வெகு உன்னத நிலை அடைவதை கனவு கண்டனர்.

கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நமக்கு ஒரு பரிசு.
அந்த கதாபாத்திரங்கள் நமக்கு உற்சாகம் தருகின்றது.
கல்கிக்கு நன்றி தெரிவித்து நாம் சற்று கதைப்போம்.

சிவகாமியின் சபதம் !

 

 

கதை விரிகிறது.  

வாலிபன் நரசிம்மன்.
தந்தையின் சிற்பக் கோவில்களை மேற்பார்வையிட்டு வந்தான்.
தலைமை சிற்பி ஆயனரிடம் பெரு மதிப்புக் கொண்டிருந்தான்.
‘இவரது சிற்பங்கள் மட்டும்… அதிலும் நர்த்தகம் ஆடும் பெண்களின் சிற்பங்கள்.. எப்படி இப்படி தத்ரூபமாக இருக்கிறது?’ -என்று வியந்தான்.
அவரது மகள் சிவகாமி தான் அந்த சிற்பங்களுக்கு உயிர் கொடுத்த நர்த்தகி என்று அறிந்ததும்.. அவள் மீது காதல் பெருகியது.
சிவகாமியும் நரசிம்மனைக் காதலித்தாள்.
இருவரும் இன்றைய மாமல்லபுரத்தின் கடற்கறையில் இருவரும் அமர்ந்து எதிர்காலத்தைப் பற்றி இன்பக்கனவுகளைப் பகிர்ந்தனர்.
“இந்தக் கடற்கரையில் காலத்தால் அழியாத சிற்பக்கோவில்களை அமைத்தால் .. ஆஹா.. அதன் அழகு.. கால காலமாக நமது காதலையும் உலகிற்குச் சொல்லுமே” – என்பாள் சிவகாமி.
“என் எண்ணமும் அதுவே தான் சிவகாமி…”- என்று கனவில் நரசிம்மன் மூழ்கினான்.
திடீரென  அவன் முகம் கோபத்தால் சிவந்தது…
‘காஞ்சி வரை வந்த.. அந்த.. அந்த புலிகேசியை.. கண்டம் துண்டமாக வெட்டி வாதாபியைக் கொளுத்தி அதைக் கண்டபின் தான் இந்த சிற்பக்கோவில் ” – அவனது அத்தனை அங்கங்களும் வீரத்தால் துடித்தன.
சிவகாமியின் அழகிய மேனி பயத்தால் துவண்டது.
“இளவரசே…” – அவள் குரல் பயத்தால் கெஞ்சியது.
“தாங்களும் … தங்கள் தந்தை மன்னரும் புலிகேசியால் பட்ட அவமானங்கள் நான் அறியாதது அல்ல.. ஆயினும் பழிக்குப் பழி வாங்குது என்று இருந்தால் .. அது நம் தலைமுறைகளைத் தானே பாதிக்கும்” – என்றாள்.
“அப்படியானால் கோழையாக உனது ஆடைக்குள் முகம் மறைத்து இருக்கச் சொல்கிறாயா?” – வெடித்தான் நரசிம்மன்.
“இளவரசே.. நான் சொல்வது என்னவென்றால்.. நீங்கள் படையைப் பெருக்குங்கள்.. வலிமையாக விளங்குங்கள்… படையெடுத்துச் செல்லாதீர்கள். ஆனால்.. அந்தப் புலிகேசி படையெடுத்து வந்தால்.. நீங்கள் சொன்னபடி.. வெட்டுங்கள்..கொல்லுங்கள்… ஒரு படை வீரன் தங்காமல் … அழியுங்கள்.”
நரசிம்மனுக்கும் புரிந்தது தான்.
முதலில் படைபலத்தைப் பெருக்கவேண்டிய அவசியத்தை நன்கு உணர்ந்திருந்தான்.

காலம்-விதி இரண்டும் கூட்டு சேர்ந்து விசித்திரங்கள் பல நடத்துகின்றன.
புள்ளலூர் சண்டையில் சாளுக்கிய சேனைகள் பல நஷ்டங்கள் அடைந்து…
காஞ்சிக்கோட்டை பலப்படுத்தப்பட்டதால் அதையும் அடைய முடியாமல் சாளுக்கிய சேனை – பல்லவ கிராமங்களை நெருப்பிட்டு சூரையாடி- பெண்களைக் கவர்ந்து வாதாபி செல்லத் துவங்கினர்.
சிவகாமி இந்த அவலங்களைக் கண்டு வெம்பினாள்.
வலம் வந்த புலிகேசியைப் பார்த்து ‘இந்த அபலைப் பெண்களை விட்டு விடுங்கள். பதிலாக என்னை வேண்டுமானால் அழைத்துச் செல்லுங்கள்”.
புலிகேசி : “சரி .. அப்படியே செய்வோம்.. அப்படியனால் நீயே .. வாதாபி வா”
சிவகாமி வாதாபி செல்கிறாள்..
சீதை அசோகவனத்தில் இராமனுக்குக் காத்திருந்தது போல் காத்திருந்தாள்.
மாமல்லன் சிவகாமியை வரவழைக்க பரஞ்சோதியை மாறுவேடத்தில் வாதாபி அனுப்பினான்.
அவனும் அனுமன் போல் சிவகாமியை சந்தித்தான்.
சிவகாமி வர மறுத்து:
” மாமல்லர் எப்பொழுது படையெடுத்து வருகிறார்?”
“படையைப் பலப்படுத்தி விரைவில் வருவார்” – பரஞ்சோதி
.சிவகாமிக்கு மாமல்லரிடம் அன்றொரு நாள் ‘ புலிகேசியை தாக்கக் கூடாது’ என்ரு கெஞ்சியது நினைவுக்கு வந்தது..
‘இங்கு சிறையிருக்கும் மற்ற பல்லவ பெண்களை விட்டு விட்டு நான் மட்டும் வர முடியாது. மாமல்லரிடம் சொல்லுங்கள் ‘படையெடுத்து வந்து புலிகேசியைக் கொன்று வாதாபியை எரித்தபின் என்னை அழைத்துச் செல்லட்டும்’ – என்று சபதமிட்டாள்.

காலம் கடந்தது.
கி பி 630: மகேந்திரன் காலமாகினான்.
நரசிம்ம பல்லவன் பலத்தைப் பெருக்கினான்.
நட்பு நாடுகளின் மன்னர்களது நட்பைக் கூட்டினான்.
சிவகாமி சென்றபின் பாண்டிய இளவரசியை மணக்கிறான்.
பாண்டியர்களது நட்பும் கிடைக்கிரது.
கி பி 640ல் சீனத்து யாத்திரிகன் யுவான் சுவாங் காஞ்சிபுரம் வருகிறான்.
நரசிம்மன்-யுவான் சுவாங் நட்பு துளிர்க்கிறது.
மாமல்லபுரத்தில் ஒரு கற்சிலையில் யுவான் சுவங்கைப் பொறிக்கிறான்.
இலங்கை இளவரசன் மானவர்மன் நரசிம்மனுடைய நண்பனாகிறான்.
புலிகேசியைப் பழிவாங்கும் எண்ணம் நரசிம்மனிடம் கொழுந்து விட்டெரிந்தது
சரியான நேரத்துக்குக் காத்திருந்தான்.

புலிகேசிக்குக் காஞ்சி மேல் காதல்.. அது தணியாமல் புறப்பட்டான்
கி பி 642ல் முதலில் பாணர்களைத் தாக்கி வென்றான்.
பிறகு நேராகக் காஞ்சி மீது படையெடுத்தான்.
நரசிம்மன் இம்முரையும் புலிகேசியை காஞ்சி அருகில் வரவிட்டு – பின்னர் தன் தாக்குதலைத் தொடங்கினான்.
காஞ்சியின் பாதுகாப்பை மானவன்மனிடம் விட்டான்.
மானவன்மன் படைகளும் புலிகேசியுடன் போரிட்டன.
காஞ்சியிலிருந்து  20 மைல் தொலைவில் – மணிமங்கலம் என்ற இடத்தில் சாளுக்கியப் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
பல இடங்களில் நடந்த சண்டைகள்பல்லவர்களுக்கு சாதகமாக முடிந்தது.
தோல்வியைக் கண்டிராத சாளுக்கிய படை பின்னடைந்து வாதாபி நோக்கி ஓடத் துவங்கியது.
உற்சாகமடைந்த நரசிம்மனின் பல்லவர் படை – தளபதி பரஞ்சோதி தலைமையின் வாதாபி
சென்று தாக்கியது. அப்படையை புலிகேசி வாதாபியின் புறநகரில் எதிர்கொண்டான். சாளுக்கியப்படை நிர்மூலம் அடைந்தது.
அடுத்தடுத்த போர்களில் தோல்வியடைந்த புலிகேசி முடிவில் போர்க்களத்தில் கொல்லப்பட்டான்.
நரசிம்மன் வாதாபி கொண்டான் என்ற பெயர் கொண்டான்.

சிவகாமி மீட்கப்பட்டு காஞ்சி அடைந்தாள்.
வருடம் பல கடந்திருந்தது.
மாமல்லன் மனைவியுடன் இரு குழந்தைகளுடன் இருந்தான்.
சிவகாமி மனம் உடைந்து போனாள்.

மானவன்மனுக்கு ஆட்சி அளிப்பதற்காக நரசிம்மன் ஒரு கடற்படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தான்.
தலைவன் அருகில் இல்லாதலோ – பல்லவன் படை இலங்கையில் வெற்றி பெறாமல் திரும்பினர்.
மறுமுறை …நரசிம்மன் படையை  கப்பலில் அனுப்பினான்.
இம்முறை- நரசிம்மன்- தானும் கப்பலில் வருவதாக நடித்தான்.
படைகளும் – நமது மன்னன் நம்முடன் இருக்கிறான் – என்ற உற்சாகத்தில் போரிட்டு வெற்றி பெற்றனர்.
எதிரி அரசன் கொல்லப்பட்டான்
அனுராதபுரம் கைப்பற்றப்பட்டது..மானவர்மன்  இலங்கையில் முடி சூடினான்.
மாமல்லபுரத்தில் கடற்கறைக் கோயில்கள் அமைத்தான்.
மாபெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான்.

சிவகாமி சொன்னது போல … பழி வாங்குதல் தலைமுறை பல தொடரும்.. அது சரித்திரத்தில் தொடர்ந்தது..

 

 

குவிகம் நிகழ்வுகள் – நவம்பர் 2019

 

குவிகம் நிகழ்வுகள் – நவம்பர் 2019

குவிகம் இல்லத்தில் நவம்பர் 3 ஆம் தேதியன்று நடைபெற்ற அளவளாவல் நிகழ்வில் திரு பாஸ்கர் கலந்துரையாடினார். முதலில் மத்திய பொதுப்பணித்துறை அனுபவங்கள் பற்றிப் பல அறிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். கட்டுமானப்பணியில் திட்டமிடல் முக்கியப் பங்கு அளிக்கிறது. அதில் கட்டுமானச் செலவு குறித்து பட்டியல் தயாரித்து அளிப்பது மிகுந்த பயனுள்ள சேவையாகும். எந்த ஊரில் எந்த வகையான கட்டிடம் கட்டுவதற்கு ஆகக்கூடிய செலவுகளை அனைவரின் உபயோகத்திற்கும் அளிக்கும் தகவல், எந்த கட்டுமானப் பணியின் திட்டமிடலுக்கும் ஒரு அடிப்படை. மேலும் பல சவாலான பணிகளை திறம்பட முடிப்பதில் மத்திய பொதுப்பணித்துறை நிகரில்லாதது என்றும் தெரிவித்தார்.

நாடகத் துறையில் அவரது அனுபவங்கள், திரு ஞாநி அவர்களின் ‘பரிக்‍ஷா’ குழுவின் செயகல்பாபடுகளுடன் தொடர்ந்து இருந்திருக்கின்றன. மேடை நாடகம் போடுவதற்கு காவல்துறை அனுமதி பெறவேண்டும் என்கிற விதிமுறை செல்லாது என்கிற தீர்ப்பினை வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றது ஞாநியின் சாதனை. அந்த தீர்ப்பு தமிழகம் மட்டுமல்லாது, அகில இந்தியாவிற்கும் பயனளிக்கிறது என்பது ஒரு கூடுதல் தகவல். ஆங்கில நாடகத்தை தமிழாக்கம் செய்வதில் ஞாநி கடைப்பிடித்த வழிமுறை பற்றிக் குறிப்பிட்டார். முதலில் நாடகத்தை வாய்விட்டுப் படித்து தனது குரலிலேயே பதிவு செய்து கொள்வாராம். அந்த ஒலிநாடாவைக் கேட்டுக்கொண்டே, இந்திய களத்திற்குத் தேவையான மாற்றங்களைச் செய்து நாடகமாகத் தமிழில் எழுதிவிடுவாராம்.
நிகழ்விற்கு பாஸ்கர் அவர்களுடன் பயணித்த பல நாடக நண்பர்கள் வந்து நிகழ்வினைச் சிறப்பித்தார்கள்.

10 ஆம் தேதி நிகழ்வு ஒரு நூல் விமர்சனமாக நடைபெற்றது. “விமுக்தா” என்னும் தெலுங்கு நூலின் மொழிபெயர்ப்பான “மீட்சி” என்னும் நூலில் உள்ள ஐந்து கதைகளைப்பற்றி ஐந்து வாசகர்கள் பேசினார்கள். இராமாயண பெண் பாத்திரங்களின் பார்வையில் சொல்லப்பட்ட கதைகள் நான்கும் அரசியல் காரணங்களுக்கான .மனைவியை இன்னலுக்கு உள்ளாக்க வேண்டிய கையறு நிலையயில் இராமன் வருந்துவதாக ஒரு கதையும் கொண்ட தொகுப்பு மீட்சி.

சூர்பனகையை சீதை சந்திப்பதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ள “இணைதல்” என்னும் கதையினைப் பற்றி திருமது கிரிஜா பாஸ்கரும், இந்திரனால் வஞ்சிக்கப்பட்டு, கணவனால் சபிக்கப்பட்டு கல்லான அகலிகையின் கதையான “மண்ணின் ஓசை” குறித்து திருமதி சாய் சுந்தரி நாராயணனும், ஒரு நொடி கவனக் குறைவினால் “மணல் குடம்” பிடிக்க இயலாமல் போனதால் கணவனாலும் மகனாலும் அநீதி இழைக்கப்பட்ட ரேணுகாவின் கதையினைப் பற்றி திருமதி பானுமதியும். பதினான்கு ஆண்டுகள் தனிமையில் ஆத்மபரிசீலனை செய்துகொண்டு பெண்கள் நிலை, அவர்கள் அதிகாரம், பெண்கள் பிறர்மேல் செலுத்தும் அதிகாரம் என்று பல கோணங்களில் சிந்தனை செய்து தெளிவு பெற்ற ஊர்மிளையின் கதியான “மீட்சி” குறித்து திருமதி லதா ரகுநாதனும் பேசினார்கள். இறுதியாக சந்தர்ப்ப மற்றும் அரசியல் கட்டாயங்களால் மனைவிக்கு இன்னல்களைத் தர நேர்ந்தமைக்காக வருந்தும் இராமனின் கதையான “சிறைப்பட்டவன்” கதை குறித்து திரு சங்கர் இராமசாமி அவர்கள் பேசினார்கள்.

17.11.19 அன்று இலக்கிய அமுதம் சார்பில் திருமதி தேவி நாச்சியப்பன் உரையாற்றினார். குழந்தை இலக்கியத்தில் அவரது பங்களிப்பிற்காக இந்த ஆண்டு பால சாகித்ய அகாதமி விருது பெற்ற அவர், குழந்தை இலக்கியத்த்தில் தன்னை ஈடுபடுத்தியதே அவது தந்தையான அழ.வள்ளியப்பா தான் என்று குறிப்பிட்டார். தன்னிகரற்ற குழந்தைக் கவிஞரான அழ வள்ளியப்பாவின் நினைவினைப் போற்றும் வகையில் தனது குடும்பத்தினர் செய்துவரும் பணிகளைக் குறிப்பிட்டார். குழந்தைகளின் மேம்பாடு, பொது அறிவு, இலக்கிய ஆர்வம் ஆகியவை குறித்த உரையாடலாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.

திரு திருமலை அவர்கள் பங்குகொண்ட 24.11.19 அளவளாவல் நிகழ்வு ஒரு வாசகனின் அனுபவமாகத் திகழ்ந்ததது. பள்ளிப் பருவம் முதல் கல்கி, தேவன், ஜானகிராமன் அசோகமித்திரன் மற்றும் பலரின் படைப்புகளை அனுபவித்த மகிழ்வினைப் பகிர்ந்து கொண்டார். சிறந்த நினவாற்றல் என்னும் துணை மட்டுமின்றி, படித்த புத்தகங்களையுயே கொண்டுவந்து, குறிப்பிட்ட பகுதிகளில் அடையாள அட்டைகள் வைத்துப் பேசியது மிகச் சிறப்பாக அமைந்தது. கலந்துகொண்டவர்களும் குறிப்பிடப்பட்ட கதைகளில் தாங்கள் ரசித்த இடங்களை நினைவு கூர்ந்தனர்

30.11.2019 இலக்கியச் சிந்தனை நிகழ்வாக “பாவை நோன்பு” என்ற தலைப்பில் திரு கிடம்பி நாராயணன் அவர்கள் உரையாற்றினார்கள். ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை போலவே சமண இஸ்லாமிய மதங்களிலும் பாவை நோன்பு என்கிற கருத்தாக்கம் இருக்கிறது என்பதை பல அகச் சான்றுகளுடன் விளக்கினார். மேலும் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றிலிருந்தும் பல மேற்கோள்கள் காட்டப்பட்டதால் ஒரு ஆய்வுரையாகவே அந்த உரை திகழ்ந்தது
குவிகம் இலக்கிய வாசல் சார்பில் உரையாற்றிய இளம் எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி எடுத்துக்கொண்ட தலைப்பு தஞ்சை பிரகாஷின் “மிஷன் தெரு”. ஈஸ்தராக மதம் மாறிய பெண் தஞ்சையை விட்டு மன்னர்குடி மிஷன் தெரு சென்று வாழும் கதை. அக்கதையில் மதம் மாறியும் ஜாதிமறையாத விசித்திரத்தையும், அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு , நாளடைவில் அந்த அதிகாரத்தையே விரும்பி வரவேற்கும் உளவியல் கூறு குறித்தும் பேசினார்.

திரைக்கவிதை – நா முத்துக்குமார்

பாடல்: நா முத்துக்குமார் 

படம்: தங்கமீன்கள் 

பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசை: யுவன் ஷங்கர் ராஜா

images (2)

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

இரு நெஞ்சம் இணைத்து பேசிட,
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்,
மலையின் அழகோ தாங்கவில்லை.

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி…

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

தூரத்து மரங்கள் பார்க்குதடி,
தேவதை இவளா கேக்குதடி,
தன்னிலை மறந்தே பூக்குதடி,
காற்றினில் வாசம் தூக்குதடி – அடி
கோவில் எதற்கு ? தெய்வங்கள் எதற்கு ?
உனது புன்னகை போதுமடி !

இந்த மண்ணில் இது போல் யாரு இங்கே,
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் பூசுகிறாய் !

உன் முகம் பார்த்தால் தோணுதடி,
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,

அதை கையில் பிடித்து ஆறுதல்
உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !

இந்த மண்ணில் இது போல் யாரும்
இங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !

 

தெர்மின் – இசைக்கருவி

மெல்லிசை மன்னர் – இசைஞானி – இசைப்புயல் – இவர்கள் மேடையில் கையை அசைக்க இசை விற்பன்னர்கள்  இசையை இசைப்பது வழக்கம்.!

நாம் அனைவரும் கண்கூடாய்ப் பார்க்கும் சமாசாரம்! 

ஆனால் இசை அமைப்பாளர் கையை அசைக்க அதற்குத் தகுந்தாற்போல ஒரு கருவி தானே வாசித்தால் எப்படியிருக்கும்  ? 

அந்தக் கருவிக்குப் பெயர் தெர்மின்! 

இதுதான் உலகின் முதல் முதலாக வந்த மின்னணு இசைக்கருவி. 

1930ல் வடிவமைக்கப்பட்டது! 

அதில் பிறக்கும் சங்கீதம் மேம்படுத்தப்பட்ட சுத்தமான சாக்ஸபோனின் இசையை ஒத்திருக்குமாம். 

அதைப்பற்றிய விடியோவைப் பார்த்து / கேட்டு மகிழுங்கள்! 

 

ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள் – வளவ. துரையன்

Image result for ஐங்குறுனூறு

சங்க நூல்களான எட்டுத்தொகை நூல்களில் ‘ஐங்குறு நூறு’ தனிச் சிறப்பு பெற்றதாகும். மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐவகை நிலங்களைப் பற்றி ஒவ்வொரு நிலத்திற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் கொண்ட நூல் இதுவாகும்.

இதில் நெய்தல் பற்றிய நூறு பாடல்களை எழுதியவர் அம்மூவனார் என்பவர் ஆவர். நெய்தல் பற்றிய பாடல்கள் பத்துப் பத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ’ஞாழப்பத்து’ என்பதில் அக்கால மக்களின் திருமண நிகழ்வுகள் சிலவற்றை அறிய முடிகிறது.

ஞாழல் என்பது கொன்றைமர வகைகளில் ஒன்றாகும். இது கடற்கரைப்பகுதியில் அதிகமாகக் காணப்படும். ஒவ்வொரு பாடலும் ஞாழல் தொடர்பைக் கொண்டிருப்பதால் இப்பகுதி ஞாழல் பத்து எனப்பெயர் பெற்றது.

அவனும் அவளும் சந்திக்கின்றனர். ஒருவர் மனத்தில் மற்றவர் நுழைந்து காதல் கொண்டு களவு நடைபெறுகிறது. அவள் அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள். அவனோ சிறிது காலம் கடத்துகிறான். அவள் வேதனைப் படுகிறாள். பின்னர் ஒருநாள் அவன் திருமண எண்ணத்துடன் வருகிறன். அதை அறிந்த அவள் மகிழ்ச்சியுடன் தன் தோழியிடம் சொல்லும் பாடல் இதுவாகும்.

”எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழினர்

நறிய கமழும் துறைவற்கு

இனிய மன்ற-எம் ,மாமைக்கவினே.”             [ஐங்குறு நூறு—146]

“நீரால் உண்டாக்கப்பட்ட மணல் மேட்டில் ஞாழல் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள், நறுமணம் வீசுகின்ற துறையைச் சார்ந்தவனுக்கு என் மாந்தளிரைப் போன்ற அழகு இனிமையானதே பார்த்தாயா?” என்பது பாடலின் பொருளாகும்.

ஞாழல் அரும்பு முதிர்ந்து மலராக மணம் வீசுவது போல அவன் கொண்ட அன்பு முதிர்ந்து இப்போது மணமாகவும் உறுதியாகி அனைவர்க்கும் செய்தி பரப்புகிறது  என்பது மறைபொருளாகும்.

அவன் அவளைப் பெண் கேட்கச் சான்றோர் பலரைத் துணையாகக் கொண்டு அவளின் பெற்றோரை அணுகுகிறான். அவள் தாய் தந்தையர் மகிழ்ச்சி அடைகின்றனர். வந்தவரை வரவேற்றுத் தம் மகளை மணக்க வேண்டுமாயின் இன்னின்ன எல்லாம் மணப்பொருளாகத் தரவேண்டும் என்கின்றனர். இது மணமகளை மணப்பதற்காகத் தருகின்ற வரைபொருளாகும். இதை முலைவிலை என்றும் கூறுவர். அவன் அவர்கள் கேட்டவற்றைத் தந்து மேலும் தருகிறான். இதனைக் கண்ட தோழி உள் வீட்டில் இருக்கும் அவளிடம் போய்ச் சொல்லும் பாடல் இதுவாகும்.

”எக்கர் ஞாழல் மலரின் மகளிர்

ஒண்தழை அயரும் துறைவன்

தண்தழை விலையென நல்கினன் நாடே”      [ஐங்குறுநூறு—147]

[அயர்தல்=விளையாடி மகிழ்தல்; தழைவிலை=மணப்பெண்ணுக்குத் தருகின்ற வரைபொருள்; முலைவிலை என்றும் சொல்வதுண்டு]

”மகளிர் மணல்குன்றில் விளையாடச் செல்கின்றனர் அங்கே ஞாழல் மலர்களைக் காணாததால் அதன் தழைகளை ஆடையாக அணிந்து விளையாடும் துறையைச் சேர்ந்தவனான நம் தலைவன் உனக்குரிய குளிர்ச்சியான தழையாடையின் விலையாக தனக்குரிமையான ஒரு நாட்டையே அளித்தானடி”  என்பது பாடலின் பொருளாகும்.

அவன் பெரும் செல்வக்குடியைச் சார்ந்தவன் என்பதும் அவளிடம் மிகுந்த காதல் கொண்டவன் என்பதும் இப்பாடல் மறைமுகமாக உணர்த்துகிறது.

அவனுக்கும் அவளுக்கும் திருமணம் இனிதே நடந்தேறுகிறது. தோழி தன் தலைவியைத் தலைவனுடன் இன்புற்று மகிழுமாறு பள்ளியிடத்தே கொண்டு விடுகிறாள். அப்போது அத்தோழி தலைவியை வாழ்த்திச் சொல்லும் பாடல் இதுவாகும்.

”எக்கர் ஞாழல் இகழ்ந்துபடு பெருஞ்சினை

வீயினிது கமழும் துறைவனை

நீ இனிது முயங்குமதி காத லோயே”             [ஐங்குறுநூறு—148]

[வீ=பூ; இகந்து படல்=வரம்பு கடந்து உயரமாக விளங்கல்; பெருஞ்சினை=பெரிய கிளை; முயங்கல்=தழுவி இன்புறல்]

“அன்புடையவளே! மணல் குன்றிலே எல்லை கடந்து உயர்ந்து வளர்ந்த பெரும் கிளைகளிலே பூத்துள்ள ஞாழல் பூக்கள் நாற்புறமும் மணம் வீசும் துறையைச் சார்ந்த நம் தலைவனை இனி நீ இனிதாகத் தழுவி இன்புறுவாயாக” என்பது பாடலின் பொருளாகும்.”

ஞாழல் பூக்களின் மணம் எல்லா இடங்களிலும் கமழ்தல் போல உன் மண வாழ்வும் இனிதாக யாவரும் போற்ற அமையட்டும் என்பது மறைபொருளாம்.

அடுத்துத் தோழி தலைவனையும் வாழ்த்துகிறாள். அந்தப் பாடல் இதுவாகும்.

”எக்கர் ஞாழல் பூவின் அன்ன

சுணங்கு வளர் இளமுலை மடந்தைக்கு

அணங்கு வளர்த்தகறல் வல்லா தீ மோ”           ஐங்குறுநூறு—149]

[சுணங்கு=அழகுத்தேமல்; அணங்கு வளர்த்தல்=வருத்தம் வளரச்செய்தல்; வல்லாதீயோ=வன்மையுறாதிருப்பீராக]

“ஞாழல் பூவின் இள மஞ்சள் நிறம் போல அழகுத் தேமல் படர்ந்துள்ள இளமையான முலைகளைக் கொண்டுள்ள இவளுக்கு வருத்தத்தை வளரச் செய்து, பிரியும் செயலை ஒருபோதும் மேற்கொள்ளாது இருப்பீராக” என்பது பாடலின் பொருளாகும்.

இவ்வாறு மணம் பேச வருதல், மணமகன் மணமகளுக்கு வரைபொருள் அளித்தல், தோழி மணமகளையும் மணமகனையும் வாழ்த்தல் போன்ற செய்திகளை ஐங்குறு நூற்றில் காணமுடிகிறது.

வளவ. துரையன், 20, இராசராசேசுவரி நகர், கூத்தப்பாக்கம், கடலூர். 607002

பேசி : 9367631228

 

 

 

 

 

நிம்மதியான தூக்கம் வர ஒரு கருவி

எனக்கு நன்கு தெரிந்த என் உறவினர் தூக்கம் வராமல் தவிக்கும்போது குவிகம் இதழில் ஓரிரு பக்கங்களைப் படிக்க ஆரம்பிப்பாராம். சில நிமிடங்களில் ஆழ்ந்த தூக்கம் வந்துவிடுமாம்.

எல்லோருக்கும் அப்படித்தானா என்பது பற்றி இன்னும் ஆராய்ச்சி எதுவும் செய்யவில்லை.

ஆனால் வெளிநாட்டில் இந்தப்பிரச்சினைக்கு ஒரு கருவி கண்டுபிடித்திருக்கிறார்கள்.

டோடோ என்பது அதன் பெயர்.

அதைப்பற்றித் தெரிந்துகொள்ள இந்த விடியோவைப்  பாருங்கள். !!

 

 

குவிகம் பொக்கிஷம் – கனவுக்கதை – சார்வாகன்

நாங்கள் நேஷனல் ஸ்டோருக்குப் போனபோது அங்கே வாங்குவோர் கூட்டமே இல்லை.

நடேசன் கடையில் அது ஒரு சௌகரியம். அங்கே எப்பவும் கூட்டம் தெரியாது. கறுப்பு பச்சை சிவப்புப் பெப்பர்மிட்டுகள், ரப்பர் பந்துகள், விலை சரசமான பேனாக்கள், வர்ண வர்ண இங்கி புட்டியுடன், (புட்டியில்லாமல் அளந்து) சோப்பு, சீப்பு (நேஷனல் ஸ்டோரில் கண்ணாடி கிடையாது), sarvakanக்ஷவரத்துக்கு முன்னும் பின்னும் முகத்தை அழகு பண்ணிக்கொள்ள, நரை மயிரைக் கறுப்பாக்க, ஒத்தை ஜோடி மூக்கை நந்நாலு என்று விதம்விதமாகக் கோடு போட்ட, கோடே போடாத, குறுக்கும் நெடுக்குமாய்க் கோடு போட்டுக் குவித்த நோட்டுப் புத்தகங்கள், பென்சில்கள், இன்னும் எத்தனையோ சாமான்கள், எல்லாம் வாங்குவாரை எதிர்பார்த்துக் காத்திருக்கும், சாதாரணமாய் நாங்கள்தான் போய் நிற்போம்.

நடேசன் சிரிச்சபடி ‘வாங்க வாங்க’ என்பான். வெத்திலைக் காவி படிந்த பல்லைக் காண்பிக்கமாட்டான். அவன் பல் வெளேரென்று இருக்கும். அவனுக்கு வெத்திலைப் பழக்கம் கிடையாது. சிகரெட்டுத்தான். அதுவும் கடைக்குள் இல்லை. குடி கூத்தி ரங்காட்டம் ரேஸ் வில்வாதி லேகியம் அரசியல் கலை மொழி மதம் என்று எந்தவிதமான பழக்கமும் கிடையாது. அவனுண்டு அவன் கடையுண்டு. யார் வேணுமானாலும்  அவன் கடையில் என்ன வேணுமானாலும் (மளிகை சாமான்கள் மருந்து சாமான்கள் பால் பவுடர் தவிர) வாங்கிக்கொள்ளலாம். ரொக்கந்தான். ரொம்பத் தெரிஞ்ச ஆளானால் கடனுக்குக்கூடக்கிடைக்கும். நாங்கள் போனால் ‘வாங்க வாங்க’ என்று வரவேற்பானே தவிர எங்களை ‘என்ன வேணும்’ என்று கேட்கமாட்டான். வாங்குவதற்கு எங்களிடம் சாதாரணமாய்க் காசு இருக்காது என்பது அவனுக்குத் தெரியும். ஏதாவது வேணுமானால் நாங்களே கேட்டுக்கொள்வோம் என்பதும் அவனுக்குத் தெரியும். பைபிள் படிக்காத போனாலும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வாசகம் அவனுக்குத் தெரியும்.

அன்றைக்கு நாங்கள் போனபோது நடேசன் கண்களில் குறும்பு தாண்டவமாடிக்கொண்டிருந்தது. முகத்தில் ஒரு விஷமப் புன்னகை. தண்ணீர்மேல் எண்ணெய் சிந்தினால் நிற அலைகள் பரவுகிற மாதிரி. நாங்கள் கடைக்குள்ளே  நுழைந்தோம். சிவப்பிரகாசம் மாத்திரம் எச்சிலைச் சாக்கடையில் துப்பிவிட்டு வந்தான். கடைக்குள்ளே துப்பினால் நடேசனுக்குப் பிடிக்காது. எங்களைப் பார்த்தவுடன் சிரிச்சபடி ‘வாங்க வாங்க’ என்று வழக்கப்படி வரவேற்றுவிட்டு நடேசன் குனிந்து மந்திரவாதிபோல மேசைக்கடியிலிருந்து ஒரு பொருளை எடுத்துக்காட்டி ‘இது என்ன சொல்லுங்க பார்ப்பம்’ என்றான். பெருமிதத்தோடு எங்களைப் பார்த்தான்.

அவனுடைய இந்த அசாதரணமான நடவடிக்கையினால் ஒரு கணம் சிந்தனை தடுமாறிப்போன நான் சமாளித்துக்கொண்டு ‘என்ன அது’ என்று கேட்பதற்குள் ரெங்கன் அப்பொருளைக் கை நீட்டி எடுத்தான்.

முதலில் அதில் ஒன்றும் விசேஷமாகத் தெரியவில்லை. சாதரணக் கடைத் தராசென்றுதான் நினைத்தேன். ரெங்கன் அதை எடுத்துத் தூக்கி ‘நிறுத்துப்’ பார்த்ததுந்தான் அது சாதாரணத் தராசல்ல என்பது தெரிந்தது. அதில் ஒரு பக்கம் ஒரு தட்டும் மறு பக்கம் ஒன்றன் கீழ் ஒன்றாக மூன்று தட்டுகளும் இருந்தன. எனக்கு ஒண்ணும் புரியவில்லை.

‘இது என்னன்னு சொல்லிட்டா ஆளுக்கு ரெண்டு ஸ்வீட் தர்ரேன்’ என்று சொல்லி மீண்டும் ஒரு பெருமிதப் புன்னகையை உதிர்த்தான் நடேசன். நானும் சிவப்பிரகாசமும் தெரியவில்லை என்று சொல்லித் தோல்வியை ஒத்துக்கொண்டு விட்டோம். ரெங்கன் மாத்திரம் சிறிது நேரம் அந்த மூணு தட்டுத் தராசைத் திருப்பித்திருப்பிப் பார்த்தபடி யோசனை செய்தான். வயது நாற்பதானாலும் அவனுக்கு இன்னும் ‘ஸ்வீட்’ என்றால் ஆசையோ என்னமோ, கடைசியில் அவனும் ‘என்னா இது, படா ஆச்சரியாமாயிருக்குதே’ என்று பொதுவாக உலகுக்கு அறிவித்துவிட்டுத் தோற்றதுக்கு அடையாளமாகத் தராசைத் திருப்பித் தந்துவிட்டான்.

நடேசனுக்கு ஒரே சந்தோஷம். ‘பரவாயில்லை, தெரியாவிட்டாலும் பரவாயில்லை, எடுத்துக்குங்க’ என்று சொல்லி அருகிலிருந்த பெப்பர்மிட்டு பாட்டிலுக்குள் கைவிட்டுச் சில மிட்டாய்கள் அள்ளி எங்களிடம் நீட்டினான். ரெங்கன் ரெண்டு எடுத்துக்கொள்ள, நானும் ஒண்ணு எடுத்துக்கொண்டேன், மரியாதைக்காக.

சிவப்பிரகாசம் வேண்டாமென்று மறுத்துவிட்டான். அவனுக்கு டயபிடீஸ். சர்க்கரைவியாதி. ஸ்வீட்டும் சாப்பிட மாட்டான், அரிசிச் சாதமும் சாப்பிடமாட்டான்.

‘சும்மா எடுத்துக்கப்பா, இந்த ஸ்வீட்லேயெல்லாம் சர்க்கரையே கிடையாது’ என்று நடேசன் வற்புறுத்தவே ‘என் பங்கை நீயே எடுத்துக்க’ என்று சிவப்பிரகாசம் பிடிவாதமாய் மறுத்துவிட்டான். நடேசன் தன் பங்கையும் எடுத்துக்கொள்ளவில்லை. சிவப்பிரகாசத்தின் பங்கையும் எடுத்துக்கொள்ளவில்லை. சர்க்கரை இல்லாத ஸ்வீட் பிடிக்காதோ அல்லது ரெண்டு பைசாவைத்தான் வீணடிப்பானேன் என்று சிக்கன புத்தியோ.

மிட்டாய்களை பாட்டிலுக்குள் போட்டபின் நாங்கள் வேண்டிக் கேட்டதன் பேரில் மூணுதட்டுத் தராசின் மர்மத்தை விளக்கினான் நடேசன். ஒரே சமயத்தில் மூணு பேர் கடைக்கு வந்து ஒரே சாமானைக் கேட்டு நெருக்கினால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முறையாக நிறுத்துக் கொடுப்பதற்குப் பதிலாக ஒரே முறையில் நிறுத்து நேரச் செலவையும் சக்திச்செலவையும் குறைக்கும் சாதனமாம் அது. ‘எப்படி நம்ம யோசனை’ என்று பெருமிதத்தோடு கேட்டான்.

நடேசன் கடைவைத்த நாள் முதலாகப் பார்த்திருக்கிறேன். ஒரே சமயத்தில் மூணுபேர் கூடிச் சாமான் உடனே வேணுமென்று ரகளை செய்ததை ஒரு நாள்கூடப் பார்த்ததில்லை. இருந்தாலும் அவனுடைய உற்சாகத்தைக் கெடுப்பானேன் என்று சும்மாவிருந்துவிட்டேன். ரெங்கனுக்குத்தான் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ‘நம்ம நடேசனுக்கா, இவ்வளவு முன்யோசனையா’ என்று தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினான். அந்தச் சமயத்தில்தான் அந்த ஆள் கடைக்கு வந்தது.

வந்த ஆசாமி சாமியார் போலவுமில்லை. குடும்பி போலவும் இல்லை. நாற்பது வயசிருக்கும். கரளைகரளையாகக் கட்டுமஸ்தான தேகம். தலைமயிர் கருப்பாக நீண்டு வளர்ந்து பிடரிமேல் புரண்டுகொண்டிருந்தது. அடர்த்தியான புருவம். நெற்றி மேல் கம்பளிப் பூச்சுபோல ஒட்டிக் கொண்டிருந்தது. கண்கள் கருப்பு வைரங்கள் போல ஜ்வலித்தன. முகத்தில் ரெண்டு வாரச் சேமிப்பு. வெறும் உடம்பு. இடுப்பில் ஒரு நாலுமுழத் தட்டுச் சுற்று வேட்டி முழங்கால் தெரிய அள்ளிச் சொருக்கி கட்டியிருந்தது. வேட்டி காவியாயிருந்து வர்ணம் போனதோ அல்லது வெள்ளையாயிருந்து பழுப்பாக மாறிக் கொண்டிருந்ததோ ஆண்டவனுக்கே தெரியும். புஜத்தில் தோளிலிருந்து முழங்கை வரை சுண்ணம்புக் கறை. நெற்றியில் அரை ரூபாய் அளவுக்குக் குங்குமப் பொட்டு.

மத்தாப்பு போலப் பொறி பறக்கும் கண்களுடன் வந்த அந்த ஆள் ‘ஒரு கிலோ பெப்பர்மிட்டுக் குடுங்க, சீக்கிரம்’ என்று அதட்டினான். அவன் குரல் கண்டாமணி மாதிரி ஒலித்தது.

நடேசன் நிதானமாக ‘கிலோ அஞ்சு ரூபாய்’ என்று சொல்லி இருந்தவிடம் விட்டு அசையாமல் நின்று, வந்த ஆளை ஏற இறங்கப் பார்த்தான்.

‘சரி சரி குடுங்க, சீக்கிரம்’ என்று சொன்னபடியே அந்த ஆள் இடுப்பைத் தடவி ஒரு முடிச்சை அவிழ்த்து எட்டாக மடித்து வைத்திருந்த அழுக்கேறிய அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்து மடிப்புக் கலையாமல் நீட்டினான்.

நடேசன் சாவதானமாக நோட்டை வாங்கி மேசை மேல் வைத்துவிட்டு, தராசை எடுத்து மூணுதட்டுகளில் ரெண்டைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு கிலோ படிக்கலைப் போட்டு இன்னொரு தட்டில் பெப்பர்மிட்டுகளை அள்ளிப் போட்டுத் தங்கம் நிறுப்பது மாதிரி நிறுத்துப் பின் பெப்பர்மிட்டுகளைக் காகிதப் பையில்போடப் போகும்போது, ‘பையிலே போடவாணாம், சும்மா அப்படியே காயிதத்துலே வச்சுக் குடுங்க’ என்று சீறினான் அந்த ஆள்.. அவன் கண் பாம்பின் நாக்கு மாதிரி இருந்தது. ஒரு தமிழ்த் தினசரித் துண்டில் அளிக்கப்பட்ட மிட்டாய்களை வாங்கிக்கொண்டு அந்த ஆள் மணிக்கூண்டின் பக்கமாக விடுவிடென்று நடந்தான்.

அவன் என்ன செய்யப் போகிறான் என்ற ஆவலினால் ஈர்க்கப்பட்டு நானும் ரெங்கனும் சிவப்பிரகாசமும் அவனுக்குச் சற்றுப் பின்னால் அவனைத் தொடர்ந்தோம்.

நடேசன் கடையிலிருந்து சுமார் நூற்றைம்பதடி தொலையில் நகராட்சி மணிக்கூண்டு இருக்கிறது. அது வருஷம் தேதி காட்டுவதில்லை. ஆகவே அது நின்று எவ்வளவு நாள் ஆச்சுதென்று தெரியாது. எப்போதும் பனிரெண்டு மணி காட்டிக்கொண்டிருக்கும். விளக்கு வைக்கும் அந்த நேரத்திலும் அது மணி பணிரெண்டு எனக் காட்டிக்கொண்டிருந்தது. எங்கள் ஊர் பஜாரின் நடுநாயகமான மணிக்கூண்டச் சுற்றித்தான் சிறிது வெற்றிடம் இருக்கிறது. சாதாரணமாக நாலுநாலு பேராய்க் கூடிக்கூடிப் பேச வசதியான இடம். சற்றுத் தள்ளிப் போனால் பறவைகளின் எச்ச வீச்சுகளுக்குப் பலியாக நேரும். மணிக்கூடருகே அப்படியில்லை.

மணிக்கூண்டினடியில் இருந்த சிறு மேடையருகில் நின்றுகொண்டு அந்தப் பெப்பர்மிட்டுக்கார ஆள் அருகில் இருந்தவர்கள் கையில் ஓரிரு பெப்பர்மிட்டுகளைத் திணித்தான். அவர்கள் திகைத்தார்கள். ‘சாப்பிடுங்க சாப்பிடுங்க  ஆண்டவன் பிரசாதம்’ என்று சொல்லிக்கொண்டே இன்னும் சில பேர்களுக்கும் நடேசன் கடை மிட்டாய்களை அளித்தான்.

யாரோ ஓர் ஆசாமி மணிக்கூண்டருகே சும்மா ஸ்வீட் விநியோகம் செய்கிறான் என்ற செய்தி எப்படியோ அரை நிமிஷத்துக்குள் பஜார் முழுதும் பரவிவிட்டது. ‘பள்ளத்துட் பாயும் வெள்ளம் போல’ ஜனக்கூட்டம் மணிக்கூண்ட நோக்கிப் பாய்ந்தது. மணிக்கூண்டின் அருகே வந்துவிட்ட நானும் ரெங்கனும் சிவப்பிரகாசமும் முழங்கையாலும், பிருஷ்டத்தாலும் இடித்து உந்தித் தள்ளி நகர்த்தப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டத்தின் வெளிப்புறத்துக்கு வந்துவிட்டோம். சுற்றிலும் மேலே இருந்து கூச்சலிடும் பக்ஷிகளின் சப்தத்தை அமுக்கிக்கொண்டு ‘ஸார் ஸார் மிட்டா ஸார்’ என்ற சப்தந்தான் கேட்டது.

எங்கள் ஊர்வாசிகளுக்கு பெப்பெர்மிட்டு மிட்டாய் என்றால் அவ்வளவு பிரேமை என்று எனக்கு அது நாள்வரை தெரியவே தெரியாது. கூட்டமே சேராத நடேசன் கடையில்கூடப் பெப்பர்மிட்டு வாங்க ஏதாவது குழந்தைகள்தான் எப்போதாவது வருமேயொழிய இங்கேபோல விழுந்தடித்து ஓடிவந்த பெரியவர்களைக் கண்டதில்லை. வெள்ளைச் சட்டைக்காரர்கள், கம்பிக்கைரை வேட்டிக்காரர்கள், சட்டையேயின்றிச் சாயவேட்டி கட்டினவர்கள், டெரிலின் பனியன்கள், மணிக்கட்டில் கடியாரம் கட்டினவர்கள், கயிறு கட்டினவர்கள், வெள்ளிக் காப்புப் போட்டவர்கள், நரை மீசைகள், வழுக்கைத் தலைகள், முறுக்கு விற்றுக்கொண்டிருத பல்லேயில்லாத கிழவி, அவளது ஏஜண்டான அவள் பேரன், பளபள நைலான் ஜரிகை மினுக்கும் ரவிக்கையுடன் பஜாருக்கு வந்திருந்த கைக்குழந்தைக்காரிகள், குருவிக்காரிகள், பெட்டிகடையில் பீடி சிகரெட் சோடா கலர் வெற்றிலை வாழைப்பழம் புகையிலை வாங்க வந்தவர்கள், இவர்கள் கால்களுக்கிடையே குனிந்து வளைந்து ஓடின நிர்வாணச் சிறுவர் சிறுமியர். கண்ணை மூடித் திறப்பதற்குள் பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது. தேன் கூடுபோல ‘ஞொய்’யென்ற சப்தம்.

பெப்பர்மிட்டுக்காரன் மிட்டாய்கள் தேங்கி நின்ற காகிதத்தை அநுமார்போலத் தலை மட்டத்துக்கு ஏந்திப் பிடித்து மேடைமேல் ஒரே தாவாக ஏறி நின்றான். இவ்வளவு தூரத்திலும் அவன் கண்கள் தணல்போலத் தெரிந்தன. ‘சத்தம் போடக் கூடாது, நான் சொல்றபடி கேட்டால் எல்லாருக்கும் கிடைக்கும்’ என்று உரத்த குரலில் கூவினான். ‘மொல்’லென்று ஒலியெழுப்பிக்கொண்டிருந்த கூட்டம் ஒரு கணத்தில் மௌனமானது. முனிசிபல் விளக்கின் நீல வெளிச்சத்தில் கூட்டத்தின் ஓராயிரம் முகங்களும் மூச்சுவிடுவதைக்கூட நிறுத்தி மோவாயை நிமிர்த்தி அண்ணாந்து அவனை ஆவலுடன் நோகின. அம்முகங்கள் அவ்வொளியில் பச்சையாய் இருந்தன.

‘எல்லாரும் மணிக்கூண்டுப் பெருமாளுக்கு ஒரு பெரிய நமஸ்காரம் போடுங்க’ என்று பெப்பர்மிட்டுச் சாமியாரிடமிருந்து ஆணை பிறந்தது.

ஒரு கணம் உயிரிழந்து பிணமாய் நின்றிருந்த கூட்டம் உலுக்கலுடன் உயிர்பெற்றது. சடசடவெனச் சாய்ந்தது. முன்னாலிருப்பவர்கள் கால் மேல் தலையும் பின்னாலிருப்பவன் முகத்தின் மேலே காலையும் வைத்துக் கூட்டம் சீட்டுக்கட்டு சாய்வது மாதிரி சாய்ந்தது. நான் பன்றி மாடு குதிரைச் சாணத்தின்மீது, எச்சில் மூத்திரக் கறைகளின்மீது, வாழைப்பழத்தோல் காலி சிகரெட் பெட்டி பீடித் துண்டுகள்மீது, தெருப்புழுதிமீது, மல்லாக் கொட்டைத் தோல்மீது, எண்ணற்ற காலடித் தடங்கள்மீது, கண்ணை மூடியபடி, கையைக் கூப்பியபடி, ஆண் பெண் சின்னவன் பெரியவன் காளை கிழவன் பேதமின்றிச் சமதருமமாக, சாஷ்டாங்கமாகத் தன் மீதே ஒருவர் மேல் ஒருவராக விழுந்தது.

‘ஹரிஓம்’ என்று ஒரு கோஷமெழுப்பியபடி அந்தச் சாமியாரல்லாத சாமியார் பெப்பர்மிட்டுக் காகிதத்தைக் கூட்டத்தின் முதுகின்மேல் உதறினான். ஜனக் கூட்டத்தின் மேல் மிட்டாய் மழை.

தரையில் விழுந்து கிடந்த கூட்டம் கலைக்கப்பட்ட தேனடை போலக் கலகலத்துத் தனக்குள்ளேயே பாய்ந்தது. பெருமூச்சும் ஏப்பமும் கலந்த சப்தத்துடன் தன்னை உலுக்கி உதறிக்கொண்டது. சிறுவர்களும் பெரியவர்களும் குமரிகளும் கிழவிகளும் தமிழர்களும் தெலுங்கர்களும் இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் நாஸ்திகர்களும் எல்லாரும் சில்வண்டு போலத் தரையைத் துளைத்தனர். மற்றவர்களை இடித்துத் தள்ளிச் சுரண்டினர். அம்மண்மேல் சிதறிக்கிடந்த மிட்டாய்களை ஆத்திரத்துடன் பொறுக்கினர். பிடுங்கினர் சுவைத்தனர் பிரிந்தனர். மிட்டாய் வீசியவனை நோக்கினர். ஆனால் அவனைக் காணோம். மிட்டாய்க் காகிதத்தை உதறியவுடன் மேடைமீதிருந்து குதித்து மணிக்கூண்டின் பின்னாலாக ஓடிவிட்டிருக்கவேண்டும்.

ஐந்து நிமிஷ நேரத்துக்குள் கூட்டம் சேர்ந்ததுபோலவே கரைந்துவிட்டது. நாங்கள் நேஷனல் ஸ்டோருக்குத் திரும்பினோம். வேடிக்கை பார்க்கக் கடைக்கு வெளியே வந்திருந்த நடேசன் கடைக்குள் நுழைந்து எங்களைப் பார்த்துச் சிரித்தான். ‘பார்த்தீங்களா பைத்தியம் போல இருக்குதில்லே, ஆனாலும் அதாலே ஒருத்தருக்கும் நஷ்டமில்லை’ என்று சொல்லிப் பெப்பர்மிட்டு வாங்கியவன் விட்டுப் போயிருந்த ஐந்து ரூபாய்நோட்டின் மடிப்புகளைப் பத்திரமாகப் பிரித்து அதை ஆள்காட்டி விரலாக் ஒருதரம் சுண்டித் தட்டிவிட்டு மேசைக்குள் போட்டான். நாங்கள் ‘ஆமாம் ஆமாம்’ என்றோம். சிவப்பிரகாசம் எச்சில் துப்ப எழுந்து கடைக்கு வெளியே போனான்.

இன்னும் சில படைப்பாளிகள் – பெருமாள் முருகன் – எஸ் கே என்

Image result for perumal murugan

சில வருடங்களுக்கு முன்னால் ‘மாதொருபாகன்’ என்னும் நாவல் பற்றிய சர்ச்சை அரசியல், நீதிமன்றம் என்று பலவித குழப்பங்ககளுக்குப் பிறகு ஓரளவிற்கு அடங்கியது. மனிதர்களைப் பற்றி எழுதாமல் ஒரு ஆட்டுக் குட்டியைப் பற்றி எழுதுகிறேன் என்று இவர் எழுதிய “பூனாச்சி- ஓரு வெள்ளாட்டின் கதை” மிகவும் பிரபலமானது.

இவரது பல நாவல்கள் கொங்குநாட்டு மணத்துடன் , அந்த மண்ணின் மற்றும் மக்களின் பிரச்சினைகளை எதார்த்தமாக எடுத்துரைக்கும். உதாரணம் ‘கங்கணம்’ என்னும் புதினம்.
———–

இவரது ஒரம்பரை என்னும் கதை

“வா கண்ணு”
சீராயியின் முகத்தில். மகிழ்ச்சி கொப்பளித்தது. வெற்றிலைச் சாற்றை நீட்டித் துப்பிவிட்டுச் சிரித்தாள். அவன் ‘டிவிஎஸ் 50’யை வாதனாராம் மர நிழலில் நிறுத்திவிட்டு வந்தான். என்று தொடங்குகிறது.

அவன் என்று சொல்லப்பட்ட சிங்கான் கொட்டகையை அண்ணாந்து செலவு எவ்வளவு ஆகியிருக்கும் என்று கணிக்கிறான். ‘வராதவன்’ வந்திருக்கின்றான் என்று சீராயி தன் மருமகளை அழைக்கிறாள். வீட்டில் எல்லோரும் நலமா என்று விசாரிக்கிறாள் சீராயி.
மகனுக்கு உடல் நலம் இன்றி ஆஸ்பத்திரியில் சேர்த்து அதிகமாகச் செலவானது பற்றிச் சொல்கிறான் சிங்கான். பார்க்க வரவேண்டும் என எண்ணம் இருந்தாலும் ஒழியவில்லை என்கிறாள் சீராயி. (மருமகள் வந்தும் நேரம் கிட்டுவதில்லை என்று ஒரு இடைச் செருகல்)

“எங்கீங்க அத்தெ.. ஆரோ ஒரம்பர வந்திருக்குன்னீங்க?”

என்று கேட்டபடியே மருமகள் ரோசா சாணிக்கையோடு வருகிறாள்.
சிங்கான் ரோசாவை குசலம் விசாரிக்கிறான், வளையல் புதுசு போல என்றும் கேட்கிறான். “சித்தப்பன் புள்ளைக்கு நீங்கதான் செஞ்சுபோடறீங்களா?” என்று கேலி பேசுகிறாள் ரோசா.

சிங்கானுக்கு ‘ஒப்பிட்டு’ என்கிற பதார்த்தம் கொண்டுவந்து கொடுக்கிறாள் ரோசா. இரண்டு போதும் என்று சொல்லும் சிங்கானை உரிமையோடு உபசரிக்கிறாள் சீராயி.

“எடுத்துக்க கண்ணு… எங்கூட்டுக்கு ஆடிக்கு ஒருநா அம்மாவசைக்கு ஒருநா வர.. நல்லது பொல்லாதது எதும் செஞ்சாலும் ஆவும்…”
பேச்சு சீராயியின் மகன் பற்றித் திரும்புகிறது. ஒழுங்காக லாரி வேலைக்குப் போகிறானா என்று விசாரிக்கிறான் சிங்கான். போகிறான் ஒரு கிறுக்கு வந்தா படுத்துக்குவான் என்கிறாள் சீராயி.

சிங்கான் சிகரெட் பத்தவைக்க, அந்தக் கருமாந்திரத்தை எதுக்கு குடிக்கிரே என்று உரிமையோடு கடிந்து கொள்கிறாள் . வண்டி வாங்கினப்புறம் இந்தப் பழக்கம் வந்துவிட்டது என்று சிங்கான் பதில் சொல்கிறான். (வண்டி என்று சொல்லப்படுவது உழவுக்குப் பயன்படும் பவர் டில்லரோ டிராக்ட்டரோ என்று புரிந்துகொள்கிறோம்.)

உழவிற்கு ஓட்டியதற்கு வாடகை வாங்கத்தான் சிங்கான் வந்திருக்கிறான். பதினைந்து நாட்களாக கொண்டுவந்து கொடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தாலும் பணம் சேராமல் போய்விட்டதாம். யாரிடமோ கேட்டிருப்பதாகச் சொல்லி வெளியே போகிறாள் சீராயி.
பணம் வருகிறது. எண்ணிக்கொண்டே எவ்வளவு ஆயிற்று என்று கேட்கிறாள் சீராயி. ஐந்து மணிநேரம் முன்னூற்றி எழுபத்தி ஐந்து ரூபாய் என்கிறான் சிங்கான்.

அப்போதுதான் பிரச்சினை உருவாகிறது.

ஐந்து மணிநேரம் என்றால் வேறு யாருடைய கணக்காக இருக்கும். தங்களுக்கு எப்போதும் நாலு மணி நேரம்தான் தான் ஆகும் என்கிறாள் சீராயி.
அதெப்படி ஒட்டிய டிரைவர் நோட்டுல எழதி பதிவு செய்திருக்கிறானே என்கிறான் சிங்கான். எப்பவும் மூன்றே முக்கால் அவர் தான் ஆகும் என்று சீராயி சொல்ல, எழுதியதுதான் கணக்கு என்று சிங்கான் சொல்ல, அதெப்படி ஒன்னேகால் மணி ‘எச்சா’ ஆவும் என்று சீராயி வாதம் செய்ய..

முன்னூற்று எழுபத்தி ஐந்து கொடுக்கத்தான் வேண்டும் என்று சிங்கான் கண்டிப்பாகச் சொல்கிறான். நாலு மணிநேரம்தான் டிரைவர் சொன்னான் என்கிறாள் ரோசா. அறுபது ரூபாய்க்கு ஓட்ட சிலர் தயாராக இருப்பதாகவும் எழுபத்தி ஐந்து ரூபாய் வாங்குவதோடு நேரக்கணக்கு வேறே கூடுதலாகச் சொல்கிறாயே என்று சீராயி கேட்கிறாள்.

“ஒரு மணி நேரம் எச்சா சொல்லிப் பணம் வாங்கிட்டுப் போயித்தான் கோட்ட கட்டுற நான்”

“உங்க வண்டவாளம் எங்களுக்குத் தெரியாததான் கிடக்குதா? நாலு மூட்டை கொட்டமுத்து கொண்டோயிட்டுப் போய் பக்கத்தல இருந்தவனது ஒன்னையும் இழுத்துப்போட்டு அஞ்சுன்னு சொல்லி அடி வாங்கிக்கிட்டு வந்ததப்பதான் எழூருஞ் சிரிச்சுதே..” என்றாள்.

“போதும் போதும். உம் பையன் மணக்கிறானா.. தண்ணியைப் போட்டுகிட்டு என்னென்ன கூத்தடிக்கிறான்னு என் வாயல சொல்லோணுமா கருமத்த..

அதான் ஊரே சொல்லுதே.. மொதொ பணத்தை எடு..”

“போனப்போகுது குடுத்துடு அத்த. எடுபட்ட நாயி ஏமாத்தி சம்பாரிக்கங்காட்டியும்தான் இழப்பு நோவுக்கு கொண்டோயிக் கொட்டறான்…”

“நா நாலு மணி நேரத்துக்குத் தாண்டி குடுப்பன்..”

“அஞ்சு மணி நேரத்துக்குன்னா குடு. இல்லீன்னாப் பணமே வேண்டாம். வாங்குற வழியில வாங்கிக்கிறேன்”

ஐந்து மணி நேரப் பணத்தையும் கட்டிலில் வீச சிங்கான் எடுத்து டிராயரில் திணித்துக் கொள்கிறான்.

அவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான். மண்ணள்ளித்தூற்றி நெஞ்சில் அடித்துக்கொண்டாள்.

“அவனே கேக்கட்டும்..”

“ஆரக் கேக்கறான்னு பாப்பம்.”

“அடப்போடா நாயே”

என்று முடிகிறது கதை.

ஒரு சிறுதொகைத் தகராற்றில் உறவுமுறை என்னபாடு படுகிறது என்பதுதான் கதை. கரிசனம் கோபமாகி, சாபமாக மாறுகின்ற ரசவாதம் தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இவரது படைப்புகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.

இவர் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு 2016 காலச்சுவடு வெளியிட்டிருந்தது. ஒட்டு மொத்தமாகப் படிக்கும்போது ஒரு வித்தயாசமான அனுபவம் கிடைக்கிறது.

சேத்துப்பட்டு வரலாறு

Related image Related image

 

Image may contain: 1 person

ஆச்சரிய செய்தி, அதிசய மனிதர்.

இன்று இவர் சார்ந்த சாதியினர் எண்ணிக்கை அதிகமிருக்கும் பட்சத்தில், இவர் பெயர் கட்டி பறந்திருக்கும்.

இன்றைய , ” சென்னை சேத்துப்பட்டு ” பகுதியின் வரலாறு யாருக்காவது தெரியுமா?

தனியாக காரோ, பஸ்ஸோ வைத்திருந்தவர்களைப் பார்த்திருப்பீர்கள். , அட அதுகூட பரவாயில்லை. அந்தக்காலத்து கே.ஆர் விஜயாவின் கணவர் வேலாயுதம் தனி விமானமே வைத்திருந்தார் என்பார்கள்.

ஆனால் தனியாக ரயில் வைத்திருந்தவர் ஒருவர் சென்னையில் இருந்தார்.

அவர்தான்  நம்பெருமாள் செட்டியார் !

சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற, சிவப்பு நிறத்திலுள்ள பல கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, ‘ தாட்டிகொண்ட நம்பெருமாள் ‘ செட்டியார்.

பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை.

18-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்களுக்கு கிடைத்த பில்டிங் கான்ட்ராக்டர் .

இவர் வாழ்ந்த வீடு, ‘ வெள்ளை மாளிகை ‘ என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர் மேத்தா மருத்துவமனையின் பின் உள்ளது.

இதில், மூன்று மாடிகள், 30 அறைகள் உள்ளன. இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப்பட்ட அரிய கலைப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு அவருக்குச் சொந்தமாக இருந்தது.

அதனால் அது ‘ செட்டியார் பேட்டை ‘ என அழைக்கப்பட்டது.

நாளடைவில், ” செட்டிபேட்டை ‘ என மருவி, இன்று, ” செட்பெட் ‘ என மாறிவிட்டது. ஆங்கிலேயர் பலருக்கு வீடு கட்டித் தந்தவர்.

கணித மேதை ராமானுஜம் தம் இறுதி நாட்களை செட்டியார் வீட்டில் கழித்தார்.

இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் பாதிப்பு அதிகமாகிவிட்டதால், அவரது உறவினர்கள் பயந்துபோய், திருவல்லிக்கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.

அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார்.

ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் மறைந்தார்.

அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர். ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார்.

ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றவர் நம்பெருமாள்.

முன்னாள் இம்பீரியல் வங்கி ( தற்போது SBI ) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர். முதன் முதலாக வெளிநாட்டு கார் ( பிரெஞ்ச் டிட்கன் ) வாங்கிய முதல் இந்தியர்.

தற்போது இந்த கார் விஜய் மல்லையாவிடம் உள்ளது. தன் வின்டேஜ் கலெக்‌ஷன் கார்களில் ஒன்றாக அதை வைத்திருக்கிறார்.

தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோயில்களின் திருப்பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார்.

வடசென்னையில் பல பள்ளிகளும் சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் இவருடை அறக்கட்டளை சார்பில் நடைபெறுகின்றன. சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது.

இந்த நம்பெருமாள் செட்டியார்தான் தன் சொந்த உபயோகத்துக்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயில் வண்டி வைத்திருந்தார்.

தம் குடும்பத்தினரோடு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார்.

மற்ற நேரங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான் இவருடைய ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இவரது பெயரையே இன்று, ” செட்பட் ” தாங்குகின்றது.

(முகனூல் தகவல் : திரு ராஜசேகரன்)

இம்மாத எழுத்தாளர் – இந்திரா பார்த்தசாரதி

Image result for indira parthasarathy

( நன்றி விக்கிபீடியா)

இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.

இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.

இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எனப் பல படைப்புக்கள் படைத்துள்ளார். சில நாடகங்களும் படைத்துள்ளார். சாகித்திய அகாதமி விருது தவிர தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான் போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

இந்திரா பார்த்தசாரதி கும்பகோணத்தில் தன்னுடைய பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய எழுத்தாளர் தி. ஜானகிராமனிடம் இவர் பயின்றார்.

தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1960ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள சங்கர்தாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் நிகழ்கலைத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இவர் முதலில் ஆனந்த விகடன் போன்ற கிழமை இதழ்களில் (வார இதழ்களில்) எழுதத்தொடங்கினார். பின்னர் தீபம், கல்கி, கணையாழி ஆகிய இதழ்களில் எழுதிவந்தார். ‘மழை’ நாடகம் இவர் படைத்த முதல் நாடகம் ஆகும். நிலம் என்னும் நல்லாள் எனும் தலைப்பில் நாவலாக எழுதிப் பின்னர் நண்பர் ஒருவர் நாடகமாக எழுதச்சொன்னதால் நாடகமாக எழுதினார். பிற்காலத்தில் இவர் எழுதிய “நந்தன் கதை”, ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், “ஏசுவின் தோழர்கள்” போன்ற படைப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

நாடக நூல்கள்

மழை
போர்வை போர்த்திய உடல்கள்
கால எந்திரம்
நந்தன் கதை
ஒளரங்கசீப்
ராமானுஜர்
கொங்கைத்தீ
பசி
கோயில்
இறுதியாட்டம் – சேச்சுபியர் எழுதிய கிங் லியர் நாடகத்தின் தமிழாக்கம்
புயல் – சேச்சுபியர் எழுதிய டெம்பஸ்ட் நாடகத்தின் தமிழாக்கம்
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் (இரு தொகுப்புகள்)

புதினங்கள்

ஏசுவின் தோழர்கள்
காலவெள்ளம்
சத்திய சோதனை
குருதிப்புனல்
தந்திர பூமி
சுதந்தர பூமி
வேதபுரத்து வியாபாரிகள்
கிருஷ்ணா கிருஷ்ணா
மாயமான் வேட்டை
ஆகாசத்தாமரை
கிருஷ்ணா கிருஷ்ணா
அக்னி
தீவுகள்
வெந்து தணிந்த காடுகள்
வேர்ப்பற்று
திரைகளுக்கு அப்பால்
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன

கட்டுரைத் தொகுதிகள்

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் 
கடலில் ஒரு துளி

 

தமிழகத்தின் சிறந்த ஆவணப்பட இயக்குனர்களில் ஒருவரான ரவி சுப்பிரமணியன் அவர்களால் தயாரிக்கப்பட்டது

” இந்திரா பார்த்தசாரதி என்னும் கலைஞன்

 

 

குட்டீஸ் லூட்டீஸ் – வளையல் – சிவமால்

Image result for வளையல்

என் மகள் மிதிலாவிற்கு காதுக்கு ஜிமிக்கி வாங்குவதற்காக அவளை-
யும் கூட்டிக் கொண்டு நகைக் கடைக்குப் போயிருந்தேன்.

‘ஏன்பா… ரெண்டு மாசத்திற்கு முன்னால்தான் இந்த ஜோடி வளை-
யல்களை வாங்கிக் கொண்டு போனேன். இரண்டு, மூன்று முறைதான்
யூஸ் பண்ணி இருப்பேன். அதற்குள் எப்படி கன்னா பின்னா என்று
வளைஞ்சிருக்கு பார்… ‘ என்று ஒரு அம்மாள் பக்கத்துக் கவுண்டரில்
கோணாமாணா என்று வளைந்திருந்த அந்த ஜோடி வளையல்களைக்
காட்டி விவாதித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கடைச் சிப்பந்தியும்
வெவ்வேறு காரணங்களைக் கூறி அவளைச் சமாதானப் படுத்த
முயன்று கொண்டிருந்தான்.

அவர்களையே ஐந்து நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்த மிதிலா
மெதுவாக அந்த அம்மாவிடம் போய், ‘ஆன்டி.. வளையல் யூஸ்
பண்ணினா வளையத்தானே செய்யும்… அதனால் தானே அதன் பெயர்
வளையல்.. இதுக்குப் போய் அந்த அங்கிளைக் கோவிச்சுக்கறீங்க..’
என்றாளே பார்க்கலாம்.

சில விநாடிகள் என் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த அந்த
அம்மாளும் கடைச் சிப்பந்தியும், விவாதத்தை நிறுத்தி விட்டு சிரிக்கத்
துவங்கி விட்டார்கள்.

 

புது யூ டியூப் சானல் எப்படிக் துவங்குவது? – தமிழ் டெக்

கதை  எழுதியாச்சு! கவிதையும் எழுதியாச்சு!

கட்டுரை கேட்கவே வேண்டாம், எழுதிக் குவிச்சாச்சு !

பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்றால் கையைக் கடிக்குமோ என்ற பயம்! 

வெப் பத்திரிக்கை ஆரம்பிக்கலாம் என்றால் டிசைன் கொஞ்சம் கஷ்டம்!!

பேசாம ஒரு ய டியூப் சானல் ஆரம்பிங்களேன் !

தமிழ் டெக் இதோ ஆலோசனை சொல்கிறார். கேளுங்கள் !!

 

( விரைவில் குவிகம் சானல் யூ டியூபில் வரப்போகிறது.) 

 

பெரியவர்களுக்கான பந்துக் குளியல் ..

வீடியோவைப் ப்பாருங்கள்! 

இந்தப் பந்துக்குளியல் அருமையாக இருக்கிறதல்லவா?

இந்தியாவில் நம் சென்னையில் இது எங்காகிலும் இருக்கிறதா?

அம்மா கை உணவு – சதுர்புஜன்

Image result for sambar

 

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

 

  1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
  2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
  3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
  4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
  5. ரசமாயம் – ஜூலை 2018
  6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
  7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
  8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
  9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
  10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
  11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
  12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
  13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
  14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
  15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
  16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019
  17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
  18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
  19. வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
  20. சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
  21. அவியல் அகவல் நவம்பர் 2019

 

 

சாம்பார் சக்தி !

 

வாய் மணக்கும் கை மணக்கும்

சாம்பாரடி சாம்பார் !

வாசல் மணக்கும் கொல்லை மணக்கும் !

சாம்பாரடி சாம்பார் !

எட்டூரு எட்டிப் பார்க்கும் !

சாம்பாரடி சாம்பார் !

எங்கும் பார்க்க முடியாதெங்கள்

சாம்பாரடி சாம்பார் !

 

சந்தி வந்தனம்  நடுவினிலே

காயத்ரி இருக்குது !

வேதங்களின் வித்தாய் மகா

வாக்கியம் இருக்குது !

ஓம் எனும் ஒலி மந்திரத்தின்

உயிராய் இருக்குது !

சாம்பார் பொடியில் இருக்குது

எங்கள் சாம்பார் சக்தியே !

 

ஒவ்வொரு வீட்டு சாம்பாருக்கும்

தனிச் சுவை உண்டு !

எங்கள் வீட்டு சாம்பாரில்

அன்னை கை மணம் உண்டு !

நாக்கில் ஒரு சொட்டு போதும் –

நரம்பெலாம் பரவும் !

அன்னை சக்தி அன்பாய்ப் பாய்ந்து

நாடியில் ஓடும் !

 

கத்திரிக்காய், வெங்காயம் என்று

எதனையும் போடு !

சௌ சௌ, காரட், மற்றும்

அவரையும் போடு !

வெண்டை, தக்காளி, ஏன்

கீரையும் சேரு !

கிளறிக்குழம்பு கொதிக்கும் போது 

தாளம் போடு !

 

பெருங்காயத்தில் இருக்குதடா

சாம்பார் பெருமை !

உப்பு, உரப்பு, ஏறிய கை

சப்ப வைக்குமே !

எத்தனை  சுவை இருக்குதடி

பதார்த்தங்களிலே !

சாம்பார் போல் சுவை வருமோ !

சிந்தித்திடுவாய் !

 

சோற்றினிலே சாம்பார் விட்டு

சுழற்றி அடிக்கலாம் !

தோசையோடு சேர்த்தடித்து

தேவலோகம் போகலாம் !

சாம்பாரில்லா இட்லி என்றால்

கேலி பேசுவார் !

சரியான சாம்பார் என்றிடுவார்

அறியாதவரே !

 

எத்தனைதான் எழுதினாலும்

புரியாதம்மா !

எங்கள் வீட்டு சாம்பார் புகழ்

முடியாதம்மா !

அன்னை நினைவு இருக்கும் வரை

அகிலம் உண்டம்மா !

அனைத்தினிலும் பெரிது அவள்

அன்பே அம்மா !  

 

 

         ***********************************************

                                                                 ஜி.பி. சதுர்புஜன்

                        E Mail: kvprgirija@gmail.com                                                            Ph: 98400 96329

 

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

 

 

 

 

 

 

 

 

 

 

இது வெறும் ‘பிரமை’ அல்ல!

 

வைர மூக்குத்தி பளிச்சிட, சிரித்தபடி வந்தமர்ந்த பாட்டிக்கு வயது 72.ஏற்கனவே, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, உப்பு, கொழுப்பு என எல்லாவற்றுக்கும் மாத்திரைகள் – தூக்கம் சரியாக இல்லையென என்னிடம் வந்தார். ஏதோ மன அழுத்தம், சிறிது நேரம் பேசிவிட்டு, மருந்துகளுடன் சென்று விட்டார். சென்றவர், மீண்டும் வந்து, ‘முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன், இப்போது நேரமிருக்கிறதா?’ என்றார்.

‘ம்.., இருக்கிறது, சொல்லுங்கள்’ என்றேன். மூளையின் ஓரத்தில் மினுக் என்று ஒரு பல்ப் ஒளிர்ந்தது!

“கொஞ்ச நாள் முன்னாடி, நடுராத்திரி முழிப்பு வந்தாப்பல இருந்தது. அறையில் மூலையிலிருந்த பீரோவைத் திறந்து இவர் ஏதோ அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்துல என்ன பண்றார் என்று புரியாமல் பக்கத்தில் கை வைத்தால், அங்கே அவர் தூங்கிக் கொண்டிருந்தார் – தூக்கிவாரிப் போட்டது. அப்போது அங்கே நிற்பது யாரு? மெதுவாக அவரைத் தட்டி எழுப்பினேன். அருகில் சென்று ‘பீரோகிட்ட யாரோ நிக்கறா’ என்று ரகசியமாய்ச் சொன்னேன். ‘டக்’ கென்று அவர் சுவிட்சைப் போட, அறை முழுவதும் வெளிச்சம். பீரோ மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்தது. ‘யாருமில்லையே, கனவு ஏதானா கண்டயான்ன? பிரமையா இருக்கும். தூங்கு’ . திரும்பிப் படுத்துக்கொண்டேன், பீரோ பக்கம் பார்க்கத் துணிவில்லை”

“தெளிவாகப் பார்த்தீர்களா?”

“ஆமாம், சந்தேகமே இல்லை. இவரைப் போலவே ஒரு மனிதர் நிற்பதைப் பார்த்தேன்”

“ம்… அப்புறம்?”

“திரும்பவும் இரண்டு வாரம் முன்னாலெ, எனக்குப் பக்கத்துல குழந்தை ஒண்ணு, புல்லாங்குழல் வெச்சுண்டு சிரிச்சிண்டு இருந்தது. கண்ணை மூடித் திறந்தாலும் சிரிச்சிண்டே அங்க நின்னுண்டு இருக்கு. விளக்கைப் போட்டதும் அங்கே யாருமில்லை. ‘அன்று மாலை கேட்ட கிருஷ்ண லீலா தரங்கிணி பாட்டு இப்படி பிரமையா இருக்கும்’ என்று தேற்றிக்கொண்டு தூங்கினேன்”.

பாட்டி சொல்வதைக் கேட்டுக்கொண்டே, அவரது மருந்துகள் லிஸ்டைப் பார்த்தேன் – எல்லோரும் உபயோகிக்கும் யூஷுவல் மருந்துகள்தான்.

“சமீப காலமாக உங்களுக்கு மறதி அதிகமாகிவிட்டதா?” என்றேன்.

“இல்லே சார். எனக்கு வேற ஒரு ப்ராப்ளம் கிடையாது – BP, சுகர் எல்லம் கூட கன்ட்ரோல்லதான் இருக்கு” என்றவரின் முகத்தில் கலவரம் இல்லை – வியப்பு தெரிந்தது.

“போன வாரம் என் தலைமாட்டுல லண்டன் போலீஸ் – கருப்பு,சிவப்பு டிரஸ், கூடை மாதிரி கருப்பு தொப்பி, கையில் துப்பாக்கி – ஒர்த்தன் நிக்கறான். இவன் ஏண்டா இங்க வந்தான்னு பார்த்தா, விளக்கு வெளிச்சத்துலே மறைஞ்சு போய்ட்டான்!”

“விளக்க வெளிச்சத்துலேயே தூங்கிப் பாருங்களேன்” என்றேன் நான்.

“தூக்கம் வராதுன்னு, சின்ன நைட் லாம்ப் போட்டுத் தூங்கினேன் – நேத்திக்கு, ரூம் மூலைல போட்டிருந்த ஸ்டூல் மேல உட்கார்ந்து, அழகா ஒரு பொண்ணு வீணை வாசிச்சிண்டிருக்கா! எங்கே என்னைப் பார்த்துடுவாளோன்னு, தலைய தலைகாணிக்குள்ள பொதச்சிண்டு, தூங்கிப் போனேன். எனக்குப் பைத்தியம் புடிச்சிடுமா டாக்டர்?” என்றார் பரிதாபமாக.

நான் சிறிது நேரம் பாட்டியைப் பார்த்தவாறு இருந்தேன். “இல்லைம்மா, இது ஒரு பிரமை – இல்லாத ஒன்றை இருப்பதாக மூளை நினைத்து, கண்கள் பார்க்கின்றன. சிலருக்கு வெளிச்சம் இருந்தாலும் இப்படி உருவங்கள் தெரியும். உங்களுக்குப் பரவாயில்லை, கிருஷ்ணன், சரஸ்வதி என்று வருகிறார்கள். வேறு சிலருக்கு, பாம்பு, புலி, கணவன், மனைவி, உருவமில்லாத நிழல்கள், இறந்து போன உறவினர்கள் என வந்து பயமுறுத்துவார்கள்! இது ஒரு வகை ‘ஹாலூசினேஷன்’ – (visual hallucination) என்றேன்!

இந்த வார்த்தையைக் கேட்டு, இரவில் வந்த ‘பிரமை’யே பரவாயில்லை என்ற முக பாவத்துடன் என்னைப் பார்த்தார். சில, பரிசோதனைகள், ஸ்கான் எல்லாம் எழுதிக் கொடுத்து, மருந்தினையும் சொல்லி, ‘சரியாகிவிடும், பயப்படத் தேவையில்லை’ என்று அனுப்பி வைத்தேன்.

ஹாலூசினேஷன் – இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் மூளையின் தந்திரம் -சில மருந்துகளினால் (போதை மருந்துகள், ஆல்கஹால்) வரக்கூடும். டிமென்ஷியா, பார்க்கின்ஸன் நோயின் பகுதியாகவோ அல்லது அதற்கு கொடுக்கப்படும் மருந்துகளாலோ வரலாம்! பொதுவாக இம்மாதிரியான விசுவல் ஹாலூசினேஷன் மூளையின் பின் பகுதியாகிய ‘ஆக்ஸிபிடல்’ லோப் (பார்வை, உருவங்களை அனலைஸ் செய்து, நம்மைப் பார்க்க வைக்கும் பகுதி) பாதிக்கப் படும்போதும் (ஸ்ட்ரோக், வலிப்புகள்) வரலாம். சில மனநோய்களிலும் – முக்கியமாக ஸ்கீசோஃப்ரீனியா மற்றும் பைபோலார் மன வியாதிகள் – இவ்வகை பிரமைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

இதுபோலவே சிலருக்கு குரல்கள், சப்தங்கள் கேட்கும் – ஆடிடரி ஹாலூசினேஷன் – எம் வி வெங்கட்ராமின் காதுகள், இதனை மையப் படுத்தி எழுதப் பட்ட நாவல்! காதுகளில் பிரச்சனை, செவிடு போன்றவைகளுக்குக் காதில் இரைச்சல் இருக்கும். சிலருக்கு சுசீலா, எஸ் பி பி போன்றவர்கள், பாடிய நல்ல பாடல்கள் கேட்கும்! (அன்பே வா வில். நாகேஷ் சொல்வது போல், ‘வியாதி வரக் கூட மனுஷனுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும்பா’).

மனநிலை பிறழ்வு உள்ளவர்களுக்கு ஆடிட்டரி ஹாலூசினேஷன் அதிக அளவில் வரும்.எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் காதில் எப்போதும் கேட்ட குரலின் தொந்திரவினால், மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதை மையமாகக் கொண்டு, மோஹன்லால் நடித்த மலையாளப் படம் ஒன்று – பெயர் நினைவில் இல்லை – மனைவியின் குரல் சொல்கிறது என்று கொலைகள் செய்வார், சர்ச் மணியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு விடுவார். ஸ்கீசோஃப்ரீனியா மனோ வியாதியைப் பற்றிய நல்ல படம் அது. நம் சுஜாதா கூட ஒரு சிறுகதையில் இது பற்றி எழுதியிருப்பார்!

தோல் மேல் பூச்சிகள் ஊர்வதைப் போல (தொடு உணர்ச்சி (tactile) ஹாலூசினேஷன், மூக்கில் வித்தியாசமான வாசனை அல்லது துர்நாற்றம் (olfactory) ,(முக்கியமாக டெம்பொரல் லோப் வலிப்புகளுக்கு முன், ஒரு முன்னெச்சரிக்கையாக ‘ஆரா’ இது ஏற்படலாம்!) வருவதைப் போல ஹாலூசினேஷன் எனப் பலவகை பிரமைகள் மனம் மற்றும் மூளையின் தந்திரத்தால் ஏற்படும்!

பிரமைகள் குறித்த அச்சம் தேவையில்லை – அநேகமாக எல்லா ஹாலூசினேஷன் களுக்கும் மருந்துகள், தீர்வுகள் உண்டு. தற்கொலைக்கு வாய்ப்புகள் இருப்பதால், மருத்துவ கவனிப்பு அவசியமாகிறது!

நல்ல அழகுடன் ஒரு யுவதியோ, பிடித்த பாடலோ ஹாலூசினேஷனாக வந்தால், உயிருக்கு ஆபத்தில்லாத பட்சத்தில் வரவேற்கலாம்தானே!

Image result for மன்னவனே அழலாமா