தலையங்கம்

 

 

இரண்டு மூன்று செய்திகளைப் பற்றிச் சொல்லலாம் என்று இருக்கிறேன்.

ஒன்று,

Image result for india pakistan cricket finals 2017

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி பற்றி.

நமக்கு எப்போதும் இந்த இரு நாடுகளுக்கும் இடையே போட்டி வரும் போது ‘செய்து முடி! கொன்று விடு!’ என்ற வெறி வந்து விடுகிறது. இதை நம் அரசியல்வாதிகளும் ஊடக நண்பர்களும் ஊதி ஊதிப் பெருசு பண்ணுகிறார்கள்! ஒரு மத்திய மந்திரி மேலே ஒரு படி போய் ‘இதில் காசு வாங்கி,  வேண்டுமென்றே தோற்று விட்டார்கள். விசாரிக்க கமிஷன் போடவேண்டும்’ என்று பேசுகிறார்.  விளையாட்டை சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் தவறில்லை. ஆனால் ‘இவ்வளவு வெறி வேண்டுமா? ‘ தேவையில்லை என்று சொன்னால் ‘தேசப் பற்றில்லாத பதரே ‘என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இந்தக் கருத்தை,  ‘சக்தே இந்தியாவில்’ அழகாகச் சொல்லியிருப்பார்கள்.

இரண்டாவது ஜி எஸ் டி

Image result for gst

ஜூலை ஒன்றிலிருந்து இந்தியா முழுவதும் அமுல் செய்திருக்கிறார்கள்.  ரூபாய் –  அணா –  பைசா காலத்திலிருந்து ரூபாய் – நயாபைசா காலத்துக்கு வந்ததை விட, 500 – 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததைவிடக்  கடுமையான செயல் அல்ல. ஆனாலும் மக்கள் இதற்காக வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிப்பதும் எதிர்ப்பதும்  தேவையில்லாத ஒன்று. ஒரு புதிய முயற்சியை ஆதரிக்க வேண்டியது குடிமகனின் கடமை. இது நாட்டுக்கு நல்லது. அப்படியானால் ஒவ்வொரு வீட்டுக்கும் நல்லது.

மூன்றாவது ,இந்தியா சீனா

Image result for india china stand off

இரு நாடுகளும் வரிந்து கட்டிக் கொண்டு இருப்பதைப்போல ஒரு இறுக்கமான நிலை.  வல்லரசுகளாக  வளர்ந்து வரும் இரு  நாடுகளும் இப்படி இருப்பது சரியல்ல.  இரு தேசத் தலைவர்களும்  கலந்து பேசித் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் பேனைப்  பெருமாள் ஆக்காமல் அமைதி காக்கப் பழகிக் கொள்ளவேண்டும். அது தான் எல்லோருக்கும் நல்லது.

செய்வீங்களா? ( அம்மையார் ஞாபகம் வருதா?)

குவிகம் பதிப்பகம்

 
 

டம் டமார டம்! நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி!

என்று டமாரம் அடித்துக்கொள்ள வேண்டிய செய்தி!

குவிகம் மின்னிதழ் உங்கள் கணினியில் மற்றும் கைபேசியில் கடந்த  மூன்றரை வருடங்களாக வந்து கொண்டிருக்கிறது !

குவிகம் இலக்கியவாசல் 27 மாதங்களாக , மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

இப்போது குவிகம் பதிப்பகம் என்ற புதிய அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.

அதன் முதல் வெளியீடாக குவிகம் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான கிருபாநந்தன் அவர்களின் ” சில படைப்பாளிகள்” என்ற புத்தகம் இந்த மாதம்  வெளியிடப்பட உள்ளது.  

இது குவிகம் மின்னிதழில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல்    “எனக்குப் பிடித்த படைப்பாளிகள்” என்ற தலைப்பில் கிருபானந்தன்,  “எஸ் கே என் ” என்ற பெயரில் எழுதி வந்த தொடரின் தொகுப்பாகும்.   

 

இந்தப் புத்தக வெளியீடு விழா வருகிற ஜூலை 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆள்வார்ப்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நடைபெறும் ! 

அனைவரும் வருக! ஆதரவு தருக!

மற்ற நண்பர்கள் தங்கள் புத்தகங்களைப் பதிப்பிக்க விரும்பினால் எங்களை அணுகலாம். 

எந்தவித லாப நோக்கமுமின்றிக் குறைந்த செலவில் உங்கள் புத்தகங்களைத் தயார் செய்து தருகிறோம். 

மணிமகுடம் -ஜெய் சீதாராமன்

முன் கதைச் சுருக்கம்

 

இதுவரை…….

இடைக்கால சோழர் உத்தம சோழர் தஞ்சையில் ஆண்டு கொண்டிருந்த போது சோழர் கீழிருந்த வாணகப்பாடி நாட்டு சிற்றரசன்  வந்தியத்தேவன் ஈழத்தில் போர் புரிந்துகொண்டிருந்த சோழர் படையின் புது சேநாதிபதியாக நியமிக்கப் பட்டிருந்தான்.

புதுப் பதவியை ஏற்குமுன், பாண்டியர் வம்சாவளி மணிமகுடமும் மற்றும் புராதனமான  இரத்தின மாலையும்  ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இரகசியத்தின் தகவல்கள் அவனுக்குத் தற்செயலாகத் தெரியவருகிறது. அதனை மீட்டிய பின்னர்  பதவி ஏற்கும் எண்ணத்தோடு இலங்கைக்கு,  தோழன், முதன் மந்திரியின் ஒற்றன் திருமலை உதவியோடு பூதத் தீவுக்கு வருகிறான்.

அவன் மணிமகுடமும் இரத்தின மாலையும் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து, அவைகளை மீட்டு எடுத்து வந்து, அவர்களின் கலத்தில் ஏறியதும், கடல் கொள்ளைக்காரர்களின் கைகளில் சிக்குகிறான். அவர்களிடமிருந்து சாதுர்யமாகத் தப்பித்த வந்தியத்தேவனுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் பெரிய யுத்தம் மூள்கிறது. வந்தியத்தேவன் தலை மேல் பெரிய பாய்மரம் விழுந்து நினைவை இழக்கிறான். கடல் கொள்ளையர்களுடன் கூட்டாக இருந்த ரவிதாசன்மணிமகுடம், இரத்தின மாலையுடன் இருந்த தங்கப் பெட்டியை அபகரித்து அவர்களின் கலத்தில் ஏறி தப்பிக்கிறான். போவதற்கு முன் தீப்பந்த அம்புகளால் வந்தியத்தேவன் மயங்கியிருந்த கலத்தை தீக்கிரையாக்குகிறான். அதற்குள் மூன்று பெரிய போர்க்கலங்களில் திரும்பிய திருமலை கொள்ளையர்களை விட்டுவிட்டு எரிகின்ற கலத்திலிருந்த வந்தியத்தேவனை மீட்க விரைகிறான்.

ஐந்து நாட்களுக்குப்பிறகு ரவிதாசன் கூட்டத்தினர், ராசிபுரத்தில் நந்தினியிடம், கைப்பற்றிய மணிமகுடத் தங்கப் பெட்டியை சமர்ப்பிக்கின்றனர். நந்தினி ஆவலுடன் பெட்டியைத் திறந்து பார்க்கையில் உள்ளே மணிமகுடம், இரத்தின மாலைக்குப் பதிலாக வெறும் கற்கள் இருப்பதைக்கண்டு, வந்தியத்தேவன் அவர்களை நன்றாக ஏமாற்றியிருப்பதை அறிகிறார்கள். வந்தியத்தேவனை தீர்த்துக்கட்ட சபதமெடுக்கிறார்கள்.

இனி……………………..

அத்தியாயம் 13.சேனாதிபதி வந்தியத்தேவன்

நான்கு நாட்களுக்குப் பிறகு..

மாதோட்டத்தில் சோழர் படையின் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாரின் பாசறைக்கு வெளியே படை முழுவதும் குழுமியிருந்தது.

உள்ளே ஈழப்படையின் மாதண்ட நாயகனான, சுந்தர சோழரின் புதல்வர் அருள்மொழிவர்மர், பெரிய வேளார், மற்றும் வந்தியத்தேவன் கூடியிருந்தனர். அடிபட்ட வந்தியத்தேவன் உடம்பு பூரணமாகக் குணமடைந்திருந்தது.

அருள்மொழிவர்மர் வந்தியத்தேவனைப் பார்த்து “தோழா! உன் உடம்பு முழுவதும் குணமடையுமுன் உன்னை நான் சந்திக்க விரும்பவில்லை. ஆனால் உன் சாதனையைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தெரிந்துகொண்டேன்” என்றார்.

சேனாதிபதி, “உன் தீரத்தை திருமலை மூலமாகக் கேட்டு தெரிந்துகொள்ள விரும்பினேன்.. ஆனால் திருமலை திடீரென்று மாயமாய் மறைந்துவிட்டான். செவ்வேந்தியும் மற்ற படை வீரர்களும் உன்னைப் புகழ்ந்தார்கள். பொக்கிஷங்களை அடைய எப்படி புதிர் முடிச்சுகளை அவிழ்த்து, புத்தியை உபயோகப்படுத்தி, மதியாலும் வீரத்தாலும் அடைந்தாய் என்பது எவராலும் செய்ய இயலாத சாதனை! ஆனால் பாண்டியச் சதிகாரக் கும்பல்களும், கடல் கொள்ளைக்காரர்களும் எப்படியோ உன்னிடமிருந்து அவைகளை பறித்து எடுத்துக்கொண்டு போனது என்பது விதி!” என்று கூறி முடித்தார்.

அப்போது வீரன் ஒருவன் உள்ளே வந்து பணிவுடன் வணங்கி, “திருமலை உங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்று கூறினான். வேளார் உடனே அழைத்துவருமாறு தலையை அசைத்தார்.

திருமலை வந்து எல்லோரையும் வணங்கி கையிலிருந்த மூட்டையை கீழே வைத்தான். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அருள்மொழி, “என்ன திடீரென்று மாயமாய் எங்கே மறைந்திருந்தாய்? மூட்டையில் என்ன?” என்று கேட்டார்.

திருமலை “மறைந்தவிதத்தை விவரிக்குமுன் இந்த மூட்டையில் வந்தியத்தேவர் சோழ குலத்தினரால் மிகவும் அவசியமானதாக வேண்டப்படும் பொருட்களை வைத்திருக்கிறார். அவைகளைப் பரிசாக உங்களிடம் சேர்ப்பிக்க என்னிடம் கொடுத்துள்ளார். மேலும் உங்கள் ஆவலைத் தூண்ட விரும்பவில்லை.. இதோ!” என்று மூட்டையை அவிழ்த்தான்.

அருள்மொழி உள்ளிருந்து ஒரு கிரீடத்தை வெளியில் எடுத்தார். எடுத்து, ஆச்சர்யத்தில் மூழ்கி, “இது.. இது.. பாண்டியர் மணிமகுடமல்லவா?” என்றார்.

உடன் இருந்த வேளார் இரத்தின மாலையைக் கையில் எடுத்தார். அவர் மூச்சு ஒரு கணம் நின்றது. மறுபடி நின்ற மூச்சு வேலையைத் தொடங்கியது. ஸ்தம்பித்துப் போன அவர் “இது.. இதுவும்.. பாண்டியர் இரத்தின ஹாரம் அல்லவா!” என்றார். அவர் வியப்பின் சிகரத்தில் நின்றிருந்தார். வந்தியத்தேவனைப் பார்த்து,

“சதிகாரக் கும்பல் உன்னிடமிருந்து அவைகளை அபகரித்தது உண்மை அல்லவா?பின் எப்படி..?” என்றார்

வந்தியத்தேவன் “பொக்கிஷப் பெட்டியை அவர்கள் அபகரித்தது என்னவோ உண்மை. அதை இப்போது திறந்து பார்த்து ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பார்கள்” என்றான் அவனுக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன்.

குழுமியிருந்த சபையில் ஆச்சர்யக் கூக்குரல்கள் மிகுந்தது.

பிறகு அவர்களுக்குக் குடந்தை சாலையில் நடந்த சம்பவத்திலிருந்து திருமலையைப் போர்க் கப்பல்களைக் கொண்டுவர அனுப்பியதுவரை விளக்கிக் கூறினான். திருமலை கிளம்புமுன் அவனிடம் பொக்கிஷப் பொருட்களை மீட்டபின் அவற்றை பெட்டியிலிருந்து அகற்றி பாறையின் அருகிலிருந்த புதருக்குப் பின் மறைக்கப் போவதாகச் சொல்லியிருந்ததையும் கூறினான். தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் பொக்கிஷங்களை உங்களிடம் ஜாக்கிரதையாக சேர்க்கும்படியும் திருமலையிடம் முன்பே சொல்லியிருந்ததைச் சுட்டிக்காட்டினான்.

“என்னுடைய முன்யோசனையின் பேரில் திருமலை எங்களையெல்லாம் தீக்கு இரையாக்க ஆரம்பித்துக் கொண்டிருந்த கப்பலிலிருந்து மீட்டபின் படகில் மறுபடி பூததீவுக்குப் போய்ப் பொருட்களை எடுத்து கொண்டுவரச் சென்றிருக்கிறான். அப்போதுதான் அவன் மாயமாய் மறைந்ததாக நீங்கள் நினைத்துக் கொண்டீர்கள். பிறகு நடந்தவையெல்லாம் நீங்கள் அறிவீர்கள்” என்று கூறி முடித்தான்.

“ஆமாம்!அவர்களை ஏமாற்ற, மற்றும் அவர்களுக்குச் சந்தேகம் வராமலிருக்கப் பெட்டிக்குள் அப்படி என்னதான் வைத்திருந்தாய்?” என்று அருள்மொழி வினவினார்.

வந்தியத்தேவன் “கற்கள்..” என்றான்.

எல்லோரும் குப்பென்று சிரித்தார்கள். அனைவரது சிரிப்பும் அடங்க ஒரு நாழிகை ஆயிற்று.

அருள்மொழி மறுபடியும் “பலே வந்தியத்தேவா! உன் வீரத்தையும் விவேகத்தையும் கண்டு நான் வியக்கிறேன்! உன்னை நண்பனாக அடைய நான் என்ன புண்ணியம் செய்திருக்கிறேனோ” என்று அவனை ஆரத் தழுவி முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அருள்மொழி மேலும் “இந்த பாண்டியர் புராதான பொக்கிஷங்கள் பாண்டிய நாட்டுக்கே சொந்தமானவை. நமக்கு அடிபணிந்து நம்மால் நியமிக்கப்படும் அரசனிடம் உரிய காலத்தில் அவைகள் ஒப்படைக்கப்படும்! பாண்டிய தேசத்து மக்களால் அது ஒரு மகத்தான செய்கையாகக் கருதப்படும் என்பதில் எனக்குக் கடுகளவும் சந்தேகமில்லை!” என்று உணர்ச்சப் பரவசப்பட்டுச் சொன்னார்.

வேளார் “வந்தியத்தேவா! இது பொன்னான நேரம். வெளியில் நமது படை கூடியிருக்கிறது, எதனால் தெரியுமா? இன்றிலிருந்து சேனாதிபதி பதவியிலிருந்து நான் விடுதலையாகிறேன். நீ அதை ஏற்கப் போகிறாய். அதை இந்த நல்ல நாளில் அறிவிக்கத்தான் இந்த ஏற்பாடு” என்றார்.

எல்லோரும் பாசறையிலிருந்து வெளியே வந்தனர்.

திருமலை,  “ஈழத்தின் தளபதி மாதண்ட நாயகர் அருள்மொழிவர்மர்..! வாழ்க! வாழ்க!!” என்று இடி முழக்கக் கூறினான்.

எல்லோரும் “வாழ்க! வாழ்க!!” என்றார்கள்.

“ஈழத்தின் சேனாதிபதி கொடும்பாளூர் பூதிவிக்ரம கேசரி பெரிய வேளார் வாழ்க!’ என்றான்.

எல்லோரும் “வாழ்க! வாழ்க!!” என்றார்கள்

அருள்மொழியிடம், வேளார் தன் கத்தியை இடுப்பிலிருந்து எடுத்து நீட்டினார். அதைப் பெற்றுக் கொண்டு அருள்மொழி, வந்தியத்தேவன் அருகில் சென்று கைகளை உயர்த்தினார்.. வந்தியத்தேவன் கத்தியைத் தன் இரு கைகளாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டான். பிறகு வலக்கையில் அதை ஏந்தி உயரப் பிடித்தான்.

திருமலை “ஈழத்தின் புதுச் சேனாதிபதி..

வாணர் குல வீரர்..

வல்லத்து அரசர்..

வல்லவரையர் வந்தியத்தேவர்..

வாழ்க!”

என்று மறுபடியும் இடி முழங்கினான்.

எல்லோரும் கைகளை உயர்த்தி “வாழ்க! வாழ்க!!” என்றனர்.

“வீர வேல்..”

“வெற்றி வேல்..”

 

முடிவுரை

வந்தியத்தேவனால் மீட்கப்பட்ட மணிமகுடம் பல வருடங்களாக உத்தம சோழர் மற்றும் பிறகு பட்டம் ஏறிய ராஜராஜசோழன் பாதுகாப்பில் சோழ அரண்மனையிலேயே இருந்தது. கடைசி பல்லவ வாரிசான பார்த்திபேந்திரன் சோழப்பேரரசின் கீழ் கப்பம் கட்டும் சிற்றரசனாக சோழர்களுக்குச் சேவை செய்துகொண்டிருந்தான். அவன் மனம், சிதைந்த பல்லவ சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் தலை தூக்கி நிலை நாட்டத் துடிதுடித்துக் கொண்டிருந்தது. சோழர்களின் பரம்பரைப் பகைவர்களான பாண்டிய நாட்டுடன் ரகசியத் தொடர்பு வேறு கொண்டிருந்தான். தஞ்சையில் மகுடம் வைத்துப் பாதுகாக்கப்படும் இடம், பாதுகாக்கும் மெய்க் காவலர்கள் பற்றிய விஷயங்களை அடிக்கடி பாண்டிய நாட்டுக்குத் தெரிவித்துக் கொண்டும் இருந்தான். தஞ்சை மாளிகையிலேயே சோழர் வீரர்களுடன் பாண்டவ உளவாளிகள் சிலர் புகுந்திருந்தார்கள். பாண்டியர்கள் மறுபடியும் மணிமகுடத்தை அபகரித்தார்கள். (அடைந்தார்கள் என்று கூறுவது மிகப் பொருந்தும்!) அது கருத்திருமன் உதவியால் மறுபடியும் ஈழ நாட்டு மகிந்தனிடம் வந்தடைந்தது. வேறு ஓர் கண்காணா இடத்தில் மீண்டும் அதை மகிந்தன் மறைத்து வைத்தான்.

அடுத்த சோழப் பேரரசனான ராஜேந்திரன் காலம் வரை அது ஈழத்தில் ரகசிய கண்காணிப்பில் மறைந்திருந்தது. இது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டெடுத்த கீழ் காணும் கல்வெட்டினால் உறுதி ஆகிறது:

ராஜேந்திர சோழன் மறைந்த பாண்டியர் மணிமகுடத்தை மீட்டு வந்த உண்மையான வரலாறு சோழ சரித்திரத்தில் சிகரம் வாய்ந்த நிகழ்சியாகும்! இந்த என் குறுநாவலைத் தொடர்ந்து எழுதக் கூடிய ஒரு அரிய வாய்ப்பு! விரைவில் அதற்கான சூழ் நிலை அமையும் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

 வணக்கம்!

———————————————————————————————————————–

அனுபந்தம்

சோழநாடு/ஈழம் வரைபடம்

வரலாற்றின் முக்கிய பாத்திரங்கள்

ஆசிரியர்:

  நான் ஜெ.ராமன், ஜெய்சீதாராமன் என்னும் புனைப்பெயரில் இக்கதையை எழுதியிருக்கிறேன். பிறந்தது 1939ம் ஆண்டு பட்டுக் கோட்டையில். 1965ல் இந்தியாவைவிட்டு முதலில் இங்கிலாந்து நாட்டிற்கும் பின்னர் ஆஸ்த்ரேலியாவிற்கும் குடிபெயர்ந்து 33 வருடங்களுக்குப் பின் பிறந்தமண்ணிற்கே திரும்பி வந்தேன். இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில்  பலகாலம் வேலை பார்த்துவிட்டு முடிவில் Franchised Austrlia Postன் உரிமத்தில் தொழிலதிபராய் பணிபுரிந்தேன்.  

இந்த ‘மணிமகுடம்’ குறுநாவல் எனது முதல் படைப்பு, 2011ல் தொடங்கி 2016ல் நிறைவு பெற்றது. நான் இந்த கதையை மேலே தொடருவதும் அல்லது வேறு சரித்திர நாவல்களை உருவாக்குவதும் இந்தக் கதையில் எனக்கு உங்களால் கிடைக்கும் அங்கீகாரத்தைப் பொருத்திருக்கிறது.

 

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்

முதல் பகுதி

பொன்னாலும் , வைரத்தாலும் ரத்தினங்களாலும் இழைக்கப்பட்டாலும் எப்போதும் அமைதியாக இருக்கும் Related imageவிஷ்வகர்மாவின் அரண்மனை அன்று மிகுந்த ஆரவாரத்தில் இருந்தது. தேவர்களுக்காக சொர்க்கத்தையே நிர்மாணித்தவர் விஷ்வகர்மா. சொர்க்கத்தின் அழகைச் சொல்லி மாளாது. இந்திரன் இருக்கும் அமராவதிப்  பட்டணத்தையும் அமைத்தவர் அவரே. விஷ்வகர்மா , தேவ சிற்பி என்றும் தேவ தச்சர் என்றும் அனைத்துலக மக்களாலும் போற்றப்படுபவர். இந்திரனுக்குத் தகுந்த ஆயுதம் வேண்டும் என்றதும் முனி  ஸ்ரேஷ்டர் ஒருவரின் எலும்பிலிருந்து வஜ்ராயுதத்தை அமைத்துக் கொடுத்தவர். பிற்காலத்தில் இலங்கையையும் , துவாரகையையும், ஹஸ்தினாபுரத்தையும் மற்றும் இந்திரப்பிரஸ்தத்தையும் நிர்மாணிக்கத் தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பவர்.

விஷ்வகர்மாவின் ஆயிரம் உதவியாளர்களும் அவருக்கு அமைந்த ஆயிரம் கைகளே. தங்கள் அனைவரையும் பிரம்மாண்டமான மந்திர ஆலோசனை அறைக்கு விஷ்வகர்மா அழைத்த போது அதன் காரணம் என்னவென்று புரியாமல் அனைவரும் திகைத்தனர். தனது புதல்வி ஸந்த்யாவிற்கும் சூரியதேவனுக்கும் அன்றையப் பொழுதில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறப் போகிறது என்று அவர் அறிவித்ததும் அவர்கள் அனைவர்களும்  அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அதைவிட இன்னும் சற்று நேரத்தில் சூரியதேவன் அங்கு வரப்போகிறான் என்றதும் அவர்களின் உவகை பல மடங்கு பெருகியது.

“ எனது ஆயிரம் கரங்களே! சூரிய தேவனுக்கு நாம் மிகவும் பொருத்தமான முறையில் வரவேற்புக் கொடுக்கவேண்டும். ஸந்த்யாவின் அழகைப் பார்த்துப் பிரம்மித்த அவன் நமது  நகரைப் பார்த்து இன்னும் அதிகமாகப் பெருமைப்படவேண்டும்! செல்லுங்கள்! உங்களுக்கு என் எண்ணத்தைப் புரிந்து கொண்டு அதன்படி செயலாற்றும் திறமை இருக்கிறது . உடனே செயல் படுத்துங்கள்! “ என்று உத்தரவிட்டான்.

அவர்களில் முதல்வன், “ தலைவரே! சூரியதேவன் தற்சமயம் எங்கிருக்கிறார்?” என்று வினவினான்.

“ நமது தங்கத் தடாகத்தில் இருக்கிறார். விமானம் அவரை ஏற்றிக் கொண்டு வருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.” என்றார் விஷ்வகர்மா.

“விமானத்தில் ஏறிவிட்டார் என்றால் அவர் அரை நொடியில் வந்துவிடுவாரே?” என்று வினவினான் துணை முதல்வன்.

“ இல்லை , இன்னும் வருவதற்கு இரண்டரை நாழிகைகள் ஆகும். அதற்குத் தகுந்த வண்ணம் விமானத்திற்கு நகரைச் சுற்றி வரும்படிக்  கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார் விஷ்வகர்மா.

“மிக அருமை! தலைவரே! இதோ நாங்கள் செல்கிறோம். சூரியதேவன் மட்டுமல்ல. நம் இளவரசி ஸந்த்யா தேவியும் பிரம் மிக்கும் வண்ணம் நகரை மாற்றப் போகிறோம். விடை கொடுங்கள்” என்று கூறி அவர்கள் அனைவரும் மாயமாய் மறைந்தார்கள்.

மற்ற காவலாளிகளும் , புரோகிதர்களும், பெண்டிரும் கூட அந்த அரண்மனையில் அங்கும் இங்கும் பரபரவென்று பறந்து கொண்டிருந்தனர். அந்த அரண்மனையில் இருந்த அத்தனை மலர்களும், வாசனைத் திரவியங்களும், ஆடை அணிகலன்களும் அந்தப்புரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்தப்புரத்தில் இருக்கும் அரச மகளிர் அனைவரும் தங்கள் குல விளக்கான ஸந்த்யாவை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.

விஷ்வகர்மா  அந்த அலங்கார மண்டபத்திற்கு வந்ததும் ஸந்த்யாவையும் அவள் அன்னையையும் தவிர அனைவரும் அறைக்கு வெளியே சென்று காத்துக்கொண்டிருந்தனர்.

விஷ்வகர்மா அழகுப் பதுமை போல் இருக்கும் தன் மகளைப் பெருமிதத்துடன் பார்த்தார். ஸந்த்யாவின் முகம் வெட்கத்தில் சிவந்து அந்த அறையையே சிவப்பாக்கிக்கொண்டிருந்தது.

“ ஸந்த்யா ! உன் அழகுக்கும் நமது பெருமைக்கும் உகந்தவன் சூரியதேவன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனிடம் ஒரு குறைபாடு உள்ளது. “

ஸந்த்யா தந்தையை ஏறெடுத்துப் பார்த்தாள்.

“ஆம். ஸந்த்யா. எந்தப் பிரகாசத்தைப்பற்றி அவனுக்குப் பெருமை இருக்கிறதோ அந்தப் பிரகாசமும் வெப்பமும் அவனை சந்ததியில்லாதவனாக ஆக்கிவிடும்.”

ஸந்த்யா மட்டுமல்ல மகாராணியும் திடுக்கிட்டுப் போனாள்.

விஷ்வகர்மா புன்னகை புரிந்தார் . “ நீங்கள் இருவரும் இதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். சொர்க்கத்தையே படைத்த எனக்கு இதற்கு ஒரு வழி தெரியாதா? நீ பிறந்த நாளிலிருந்தே உனக்கு மணாளன் சூரியன்தான் என்பதை முடிவு செய்ததும் அவனுடைய குண நலன்களை ஆராய ஆரம்பித்தேன். அப்போது அவனின் குறைபாடு என் கவனத்திற்கு வந்தது. அதைச் சரிசெய்ய வெகுகாலம் யோசிக்க வேண்டியதாயிற்று. அதனால்தான் உன்னையும் அவன் கண்களில்படாமல் அந்தப்புரத்திலேயே ஒளித்து வைத்தேன். சில நாட்கள் முன்னர்தான் கைலாயத்தில் இதற்கான விடை கிடைத்தது.

சிவபெருமான் பாற்கடலில் உதித்த ஆலகால விஷத்தைக் குடிக்கும் போது பார்வதி தேவி அவர் கழுத்திலேயே திருநீலகண்டமாய் இருக்கும்படிச் செய்தார்கள் அல்லவா? விஷம் நின்று விட்டாலும் அதன் உக்கிரம் அவரது உடலில் ஒரு வெப்பத்தையும் பிரகாசத்தையும் ஏற்படுத்தியது. பார்வதி தேவி தன் தந்தை இமவானிடம் இருந்த காந்தக் கல் படுக்கையில் சிவபெருமானைப் படுக்கவைத்து காந்தக் கல்லால் சிவபெருமானின் உடம்பைச் சாணை பிடித்தார். அப்போதுதான் அவரது உக்கிரம் தணிந்தது. அந்தச் சாணை பிடிக்கும் இயந்திரத்தைப் பார்வதிதேவியிடம் வேண்டிப்பெற்று வந்தேன். அதைக் கொண்டு சூரியனின் பிரகாசத்தைக் குறைத்தால்தான் அவனுடன் நீ வாழமுடியும்.”

kunal-bakshi-as-lord-indra-in-karmphal-data-shani

“ தந்தையே அவரது பெருமையே அவரது பிரகாசத்தில்தானே இருக்கிறது. அது இல்லாமல் இருக்க அவர் சம்மதிப்பாரா”

“ நிச்சயம் மாட்டான். ஆனால் அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டிய பொறுப்பு உன்னிடம்தான் இருக்கிறது. மேலும் சூரியதேவன் தன் பிரகாசத்தை முற்றிலும் இழக்க வேண்டாம். காந்தக் கல்லால் சாணை பிடித்து அவன் பிரதிபலிப்பைக் கொஞ்சம் மட்டுப் படுத்திவிடுகிறேன். அது போதும்.”

“ அது சரியல்ல தந்தையே! வேண்டுமானால் எனக்கு அந்த உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை அளிக்க முயலுங்களேன். உங்களால் முடியாதா என்ன? “ என்று வேண்டினாள் ஸந்த்யா.

“ ஸந்த்யா ! அது இயலாத காரியம். ஏனென்றால் உன்னிடமும் ஒரு குறைபாடு உள்ளது. “

“ ஆம் மகளே! அது உன்னுடனே பிறந்தது” என்று சொல்ல ஆரம்பித்தாள் ஸந்த்யாவின் அன்னை.

(தொடரும்)

இரண்டாம் பகுதி

Related image

Related image

“இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப்  பேசவந்திருக்கும் தலைவர் தர்மராஜன் அவர்களே ! சொர்க்கத்துக்கே அழகு கூட்ட வந்துள்ள சகோதரி எமி அவர்களே ! மற்றும் இன்றைய விழா நாயகரான ஜே கே அவர்களே! மற்றும் இங்கு கூடியிருக்கும் எமபுரிப்பட்டிணத்தின் இலக்கியப் பெருமக்களே!

இன்று நாம் ஜே கே  அவர்களின் அக்னிப்பிரவேசத்தை மையமாக வைத்து அவரது கதைகளையும்  அவரது எழுத்தாள்மையைப் பற்றியும் பேச உள்ளோம். 

அக்னிப்பிரவேசம் கதை  ஜே கே அவர்களின் கதைகளில் நம்மை மிகவும் தாக்கிய குத்தீட்டி  என்று நான் கருதுகிறேன்.  அது எழுதிய அவரையும் பாதித்திருக்கிறது என்று புரிகிறது. அதனால்தான் ‘அக்னிப் பிரவேசம்’  சிறுகதை கடும் விமர்சனத்துக்குள்ளாகியதும், அதன் முடிவை மாற்றி யோசித்து, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கதையை ஜெயகாந்தன் உருவாக்கினார் என்பதும் நமக்குப் புரிகிறது. 

Related image

அக்கினிப் பிரவேசத்துக்கு வருவோம்.

அறிந்தும்  அறியாமலிருக்கும் கன்னிப் பருவத்தில் ஒரு ஏழைப்பெண் எப்படி ஒரு ஆணின் ஆசைக்குப் பலியாகிறாள் என்ற கதையைச் சொல்லும்போது அதிகம் படிக்காத அவளின் அம்மா  அதைத் திறமையாகக் கையாளும் விதம் இருக்கிறதே ! அம்மம்மா !

அந்த அன்னையின்  வரிகள் என்னால் மறக்கவே முடியாது:

 “நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு.

……

“ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்ன்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாத துளி அவ மேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா… வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு.. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கலே..”

கதைகளில் ஜெயகாந்தன் பேசிக்கொண்டே இருக்கிறார்; பாத்திரங்கள் மூலமாகப் பேசுகிறார். பாத்திரங்கள் பேசாதபோது இவரே நேரடியாகப் பேசுகிறார்.

ஜேகே அவர்களின் இந்தத் தத்துவம்தான் இவரை எழுத்துலக மேதையாக மாற்றியது.

ஜெயகாந்தன் அளவிற்குச் சொல்லாடல்களையும் விவாதங்களையும் கதைப்பின்னலின் பகுதிகளாக ஆக்கியவர்கள் இல்லை.

‘வாசகர்களுக்கு எது பிடிக்குமோ அதை எழுதுவது என் வேலையல்ல, அவர்களுக்கு எது பிடிக்க வேண்டுமோ அதை எழுதுவதே எழுத்தாளர்களின் கடமை’என்று கூறி ‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன், இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குண்டோ?’ என்று முழங்கியவர் ஜெயகாந்தன்.

தீவிர இலக்கியத்துக்கும், வணிக வெற்றி இலக்கியத்துக்கும் ஒரு பாலம் அமைத்தவராக ஜெயகாந்தனை நாம் காணலாம். இவரது படைப்புகள் மூலம் இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். 

இவர் ஒரு இலக்கியவாதி.  இவரிடம் அரசியல், கலையுலகம், பத்திரிகை , ஆன்மீக அனுபவங்களைப் பார்க்கலாம். மற்ற கதாசிரியரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கலாம்.  காந்தியைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நம்மை,  இவரது வாழ்க்கை அழைக்கிறது. இவரது பல கருத்துக்கள் பிரும்ம உபதேசமே. சில நேரங்களில் சில மனிதர்கள் யாருக்காக அழுகிறார்கள் ? என்று கேட்டவர். ஒரு வீடு ஒரு மனிதன்  ஒரு உலகம் என்று இருக்கும் மனிதனைக் கோகிலா என்ன செய்து விட்டாள்? அல்லது அவனை விட்டு கங்கை எங்கே போய் விட்டாள்.  இந்த நேரத்தில் இவள் என்று சொல்ல இவள் என்ன சினிமாவுக்குப் போன  சித்தாளா? அல்லது  நாடகம் பார்க்கும் நடிகையா ? ஒருத்தி மட்டும் காத்திருக்க  ஒருவேளை அவள் பாவப்பட்ட  ஒரு பாப்பாத்தியாக இருக்குமோ ? அது, இந்த ஒரு குடும்பத்தில் மட்டுமா நடக்கிறது?

காற்று வெளியிலே கழுத்தில் விழுந்த மாலைக்காக அந்த அக்காவைத் தேடிக் கண்டுபிடித்து  இன்னும் ஒரு பெண்ணின் கதையைக் கேட்கலாம். இவர்கள் ஒன்றும் இல்லாதவர்கள் அல்ல. பாட்டிகளும்  பேத்திகளும் சேர்ந்து படிப்பது சுந்தரகாண்டமும் அல்ல;  இது அவர்களின் அப்பாக்கள்  சொன்ன கதைகளும் அல்ல . இந்த இதய ராணிகளுக்குக் கிடைப்பது என்னவோ சீட்டுக்கட்டு ராஜாக்கள் தான்.

இப்படிப்பட்ட மனிதர்கள் எங்கெங்கு காணினும் ஊருக்கு நூறு பேர் ஒவ்வொரு கூரைக்கும் கீழே இருக்கிறார்கள். அவர்களின் கைவிலங்கை உடைத்து ஆயுத பூசை செய்யச்  சொல்வது,  நிச்சயம் கருணையினால் அல்ல.

கண்ணனும் பிரியாலயத்தில்  இருக்கும் உன்னைப் போல ஒருவன் தான்  என்று சொல்வார்கள். ஆனால் ஜெய ஜெய சங்கர,  ஹர ஹர சங்கர என்று  கூறும் மக்களின் ரிஷி மூலத்தை எந்தக் குரு பீடமும் ஆராய முடியாது. மூங்கில் காடுகளில் கரிக்கோடு போட்டுச் செல்லும் மனிதன் எருமை மாடுபோல, பொம்மைபோல கார்களிலும் வண்டிகளிலும் புகை நடுவினிலே நிற்காத சக்கரத்தில் பாரிஸ் , அமெரிக்கா என்று போகிறார்கள்.

இனிப்பும் கரிப்பும்  சேர்ந்த ஒருபிடி சோறு கொடுக்க தேவன் வருவாரா என்று காலை மாலையில் மயக்கமாக இருப்பார்கள். இவர்கள் இறந்த காலங்களில்  யுக சந்திக்களில் புதிய வார்ப்புகளைச் சுமை தாங்கிகளாகச் சுய தரிசனம் செய்வார்கள் .

இப்போது புரிகிறதல்லவா? ஜேகேயின் படைப்புக்களின் உண்மை சுடும் என்பது.  

அதற்கு மூல காரணம் அவரின் அக்கினிப் பிரவேசம்.

அதைப்பற்றி இங்கு பேசுவது மிகவும் பொருத்தம். ஏனெனில் இங்கு நம்மில் பலர் தினமும்  அக்கினிப் பிரவேசம் செய்து வருகிறார்கள். இது நரகாபுரியில் நடக்கும் ஒரு வாடிக்கையான ஆனால் வேதனையான சம்பவம். என்றோ , எங்கோ , எந்தச் சூழ்நிலையிலோ நாம் செய்த தவற்றிற்கு இங்கு கிடைக்கும் தண்டனை அக்கினிப்பிரவேசம்.

 இந்தத் தண்டனையிலிருந்து நரகபுரி மக்களைக் காப்பாற்றும்படி இலக்கியசபையின் சார்பில் காவல் தெய்வமாக அமர்ந்திருக்கும் எம தர்மராஜனைக் கேட்டுக்கொண்டு அதற்கான பதிலை இந்த மேடையிலேயே  தருமாறு வேண்டிக்கொண்டு தலைமை உரை ஆற்ற எம தர்மராஜன் அவர்களை  அன்போடு அழைக்கிறேன்.

(தொடரும்)  

சங்கராச்சார்ய போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் – கல்கிதாசன்

கும்பகோணத்துக்கு அருகே இருக்கும் கோவிந்தபுரத்தில் காஞ்சி மடத்தின் 59 வது சங்கராச்சார்ய சுவாமிகள் போதேந்திர சரஸ்வதி அவர்களின் ஜீவசமாதி அமைந்துள்ளது. ( இதே கோவிந்தபுரத்தில்தான் ஹரிதாஸ் அவர்களின் பாண்டுரங்கர் கோவிலும்  இருக்கிறது)

Govindapuram1.jpg

இவர்தான் கலியுகத்தில் முக்தி அடைய பக்தி மார்க்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதைச் சொன்னது மட்டுமல்ல, செயலிலும் காட்டியவர். ராம நாமம் ஒன்றே உலகத்தின் தாரக மந்திரம் என்பதை எடுத்துச் சொன்னவர்.

அப்பேர்ப்பட்ட மகானின் வாழ்க்கை வரலாற்றை பம்பாய் ஞானம் அவர்களின் நாடகக் குழு ஒரு பக்தி ரசம் சொட்டும் நாடகமாக நடத்தி வருகிறது.

 
 

பாம்பே ஞானம் கட்டியக்காரன் வேடமிட்டு அசத்துகிறார். மற்ற நடிகர்களும் தங்கள் திறமையான நடிப்பால் பாத்திரங்களாகவே மாறிவிடுகின்றனர்.

பார்த்தவர்கள்  பரவசமடைகிறார்கள்.

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

சமுத்திரகுப்தர்

ஒரு மாவீரன் மன்னனாகி…

வெற்றிகள் கண்டு…

ராஜ்யத்தை வளர்த்த பிறகு..

அந்த வம்சம் பொற்காலமாகிறது.

போர்க்காலத்திற்குப் பின் வருவது பொற்காலம்!

 

சந்திரகுப்த மௌரியரின் வீரத்தின் நிழலில் அசோகரின் பொற்காலம் விரிந்தது..

பின்னாளில் ராஜராஜ சோழனின் மாவீரத்திற்குப் பின் இராஜேந்திர சோழனின் ஆட்சி சிறந்தது.

அது போல் சமுத்திரகுப்தனின் வீரமே குப்தர்களது பொற்காலத்திற்கு அடித்தளமிட்டது.

ஆங்கில சரித்திர வல்லுனர்கள் சந்திரகுப்த மௌரியனை
‘இந்தியாவின் ஜூலியஸ் சீசர்’ என்றனர்.

நமது சமுத்திரகுப்தனை ‘இந்தியாவின் நெப்போலியன்’ என்றனர்.

அப்படிப்   புகழ்பெற அவன் செய்ததுதான் என்ன?

நான்கு திசைகளிலும் படையெடுத்துச் சென்று மன்னர்களை அடி பணியச் செய்தான்.

அவனது புஜபலத்தைப் பற்றிப் பல கல்வெட்டுகள் பாராட்டுகின்றன.

(சமுத்திரகுப்தரின் நாணயங்கள்)

அது சரி… அது என்ன பெயர் ‘சமுத்திர’ குப்தன்?

படையெடுப்பில் கடல் வரை சென்றவனை சமுத்திரம் காத்து நின்றதாம்.

அதனால் அந்த அடைமொழி அவனுக்கு ஆடையானது..

அலகாபாத்தில் இருக்கும் அசோகா தூண் ஒரு சரித்திரப் பொக்கிஷம்.

அசோகர் எழுதிய அதே தூணில் சமுத்திரகுப்தன் சரித்திரமும் பொறிக்கப்பட்டது.

அந்த சரித்திரத்தின் எழுத்தாளன் சமுத்திரகுப்தனின் மந்திரி ஹரிசேனா.

அதில் சமுத்திரகுப்தனின் படையெடுப்பின் விவரங்கள் அடங்கியுள்ளன.

அவைகள் இல்லாவிடின் சமுத்திரகுப்தனை   நாம் அறிந்திருக்க வாய்ப்பேயில்லை.

மேற்கு திசை: இன்றைய உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் வென்றான்.

அவை அனைத்தும் குப்தசாம்ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டது.

தென் திசை:

பன்னிரண்டு மன்னர்களை வென்றவன்…

முடிவில் காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் விஷ்ணுகோபனை வென்றான். அவனை மன்னனாக விட்டு வைத்து,  கப்பம் வசூலித்தான்.

கிழக்கு திசை:

இன்றைய மேற்கு வங்காளம், பீகார் பகுதிகள் குப்த சாம்ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டது.

வடக்கு திசை:

இன்றைய டில்லி, நேபாளம், இமய பகுதிகள், சமுத்திரகுப்தனின் ஆதிக்கத்தில் சேர்ந்தது.

(சமுத்திரகுப்தன் போர்க்களம்)
ஸ்ரீலங்கா, அஸ்ஸாம், மற்றும் தென் இந்திய தீவுகள் பலவற்றிலிருந்தும் மன்னர்கள் சமுத்திரகுப்தனின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவனுக்கு வெகுமதிகளையும், அழகிய பெண்களையும் அனுப்பி வைத்தனர்.

அவன் படையெடுத்து வென்ற நாடுகளின் பெயர்களைப் பதிவு செய்தோமானால்…

இந்த ‘குவிகம்’ இதழ் ‘விரிந்து’ விடும்.

உங்கள் இரவும் விடிந்து விடும்…

உண்மை… இது கதை இல்லை.

மேலும் சமுத்திரகுப்தன் ஆக்கிரமிப்பு ஆசையால் மற்ற அரசுகளைத் தாக்கவில்லையாம்..

அமைதிக்காகவும் மனிதநேயத்திற்காகவும் உழைத்தவனாம்..

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்…

இவ்வளவும் செய்தவன் அதையும் செய்தான்…

‘அஸ்வமேத யாகம்’!.

அதற்கு… ஒரு லக்ஷம் மாடுகளை பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

(அஸ்வமேத நாணயம்)

அவனது பட்டங்கள்:

‘தோல்வியைக் கண்டிராத மன்னர்களைத் தோற்பித்தவன்’ – இந்தப்பட்டம் எப்படி?

அது மட்டுமா..

“பூமியின் நாற்திசை நாயகன்’..

கடைசியாக..

‘பூமியில் வாழும் தெய்வம்’

இவை அனைத்தும் சென்னை நகர் சுவர்களில் எழுதப்பட்ட கட்சி ‘போஸ்டர்’ அல்ல..

கல்வெட்டுகள்…

அட இவை அனைத்தும் நான் சொல்லவில்லை ஐயா… கல்வெட்டு சொல்கிறது…

அவன் விஷ்ணுவின் பக்தனாக இருந்தான்…

ஆனால் அவனது மக்கள் அவனை ‘விஷ்ணுவின் அவதாரமாகவே’ கருதினராம்.

அவனது ஆதிக்கம் முழு பிரபஞ்சத்திலும் இருப்பது மட்டும் இல்லாது
சுவர்க்கத்திலும் பரவியதாம்…

இது ஒரு வேளை அவன் மறைவிற்குப் பின் எழுதினரோ? (அப்பொழுது தானே சுவர்க்கம் செல்ல முடியும்)

ஆட்சிக்காலம் : கி.பி. 335-380:

நாற்பத்தைந்து வருடம் ஆட்சி செய்து புகழ் பெற்றான்..

அலெக்சாண்டர் வருகையிலிருந்து இந்திய கலாச்சாரத்தில் கிரேக்கம் ஊடுருவியிருந்தது.

மேலும் சமண, புத்த சமயமும் மன்னர்களை பாதித்திருந்தது.

அந்த சமயத்தில் இந்து மதத்தை நமது சமுத்திரகுப்தன் ஆதரித்தான்.

இசையில் வல்லுனன். வீணை வாத்தியத்துடன் அவனிருக்கும் சிற்பம் இதோ.

 

வீரம் மற்றுமே சரித்திரத்தை அமைத்ததில்லை.

மதியூகம், சதி, துரோகம் ,மற்றும் அதிர்ஷ்டம் அனைத்தும் சரித்திரத்தை நடத்திச் செல்லும்.

அடுத்த இதழில் அந்தக் கதை சொல்லப்படும்…. 

 

 

ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் – புலியூர் அனந்து

 

தொடரைத் தொடங்குவதற்கு முன்பு இந்த முன்னோட்டம்.

இது நடந்து இப்ப இருபது வருஷம் இருக்கும்.

“அப்பா, எனக்குக் கொஞ்சம் இதை வரைஞ்சு தரியா?” என்று தனது சயின்ஸ் புத்தகத்தில் இருந்த ஒரு படத்தைக்  காட்டிக் கேட்டாள் ஆறாவது படித்துக் கொண்டிருந்த என்  மகள்.

சரியாக அப்போதுதான்  யாரோ  ஒரு சாவு செய்தி சொல்ல வந்தார். “யாரோ வந்திருக்காங்க. நீ போய் அம்மாகிட்ட கேளு.” என்று அவளை அனுப்பிவிட்டேன்.

சரியான சமயத்தில் அந்த ஆள் வராவிட்டால்கூடத் தட்டிக்கழிக்க வேறு சாக்கு தேடியிருப்பேன்.

உண்மையிலேயே, நான் படித்த நாட்களிலேயே படம் வரைவது எனக்கு எப்போதுமே வந்ததில்லை. சயின்ஸில் பரிசோதனைகளும், பூகோளத்தில் வரைபடங்களும், ஜ்யாமெண்டரியிலும்  வரைவதை எப்படியாவது தவிர்த்து விடுவேன். ஒரு முறை இந்தியா வரைபடம் எல்லோரும் வரைந்தே ஆகவேண்டும் என்று ஆகிவிட்டது. நான் வரைந்த படத்தைப் பார்த்துவிட்டு “என்ன ஆடு போட்டிருக்கியா” என்று கேட்டார்  ஆரவமுது சார். “நீ இனிமே படம் போட்டா கீழே  என்ன வரஞ்சேன்னு எழுதிடுப்பா” என்றார். அது தீர்வாக இருப்பதும் சந்தேகம்தான். என் கையெழுத்தும் அவ்வளவுதான். கும்பகோணத்திலிந்து திருவாரூர் போகும் என்று சொல்வார்கள். சமயத்தில திருப்பதியிலிருந்து திருமலை போற மாதிரி வளைஞ்சு வளைஞ்சு மேலே ஏறிடும்.

ஒரு தடவை ஒரு கல்யாணத்திற்கு வேற ஊருக்குப் போகவேண்டியிருந்தது. ரயிலில் வருகிறேன்னு எழுதியிருந்தேன். போனதும் நீ எப்படி வந்தேன்னு கேட்டார்கள். அதான் ‘லெட்டர் போட்டேனே’ என்றேன்.

“இல்ல.. ‘காலைல ,.,.,.,., வரேன்’ அப்படின்னு எழுதியிருந்தே. நடுவில  தமிழ் வார்த்தையா இங்க்லீஷான்னு தெரியல. தமிழுன்னா அது ரயில் இங்க்லீஷ்னா  பஸ். அதுதான் கேட்டேன்.”

வரையறதும் எழுதறதும் சிக்கல் என்பது மட்டுமில்லை. பள்ளிக் கூடத்தில ஒரு வருஷமும் பெயில் ஆகாததே ஒரு ஆச்சரியந்தான். “இந்தக் கையெழுத்தை இன்னும் ஒரு வருஷம் பாக்க பயந்துதான் சார் பாஸ் போட்டிருப்பார்” என்பான் ராதா.  எனக்கு ஸ்கூல்ல ஒரே க்ளோஸ் பிரண்டுன்னு சொல்லக்கூடிய ராதா என்கிற ராதாகிருஷ்ணன். ஸ்கூலில என்னை எல்லோரும் ‘பெரியவனே’ என்றுதான் கூப்பிடுவார்கள். நான் கொஞ்சம் உயரம். அதுக்கேத்த மாதிரியே பெருமன். புதுசா வந்த வி.கே.எஸ் சார் உட்பட வாத்தியார்களே அப்படித்தான் கூப்பிடுவார்கள். வி.கே.எஸ் சார், முப்பத்தேழு பசங்களோட பேரே பழக்கமாயிருக்க வாய்ப்பே இல்லாத  இரண்டாம் நாளே என்னை பெரியவனே என்று  கூப்பிட்டார்.

அண்ணன் தம்பி எல்லாம் ஏதேதோ நல்ல வேலை கிடைச்சு மெட்ராஸ், பம்பாய்னு  போயிட்டாங்க. அப்படி இப்படின்னு பாஸாகி, எனக்கு  எங்க ஊரிலேயே ஒரு வேலையும் கிடைத்தது. அது கவர்மெண்டும் இல்லை, ப்ரைவேட்டும் இல்லாத ஒரு ஸ்தாபனம்.

கூட சேர்ந்தவன் எல்லாம் வேற வேலைக்குப் போயிடுவான், இல்லைன்ன ஏதோ ப்ரமோஷன்னு போயிடுவான். நான் சேர்ந்த அன்னியிலிருந்து ரிடையர் ஆகிற வரைக்கும் ஒரே போஸ்ட்தான். அப்பப்ப இங்கே அங்கேன்னு பக்கத்தில வேற வேற ஆபீஸ்ல மாற்றல் இருக்கும். வேலையிலும் அவ்வளவு நல்ல பெயர் இல்லை. நான் செஞ்ச வேலையில தப்பே கண்டுபிடிக்காத ஒரே ஆபீசர் ரத்னவேலு தான். (அவருக்கே ஒண்ணும் தெரியாதுன்னு ஆபீசில பேச்சு.)

அதிலேயும் அந்த பெரிய ஆபீஸ்லதான் நான் அதிகம் வேலை பார்த்தது.  ஆபீசுல எல்லோரும்  வேடிக்கையா பேசிக்கிட்டு  இருக்கும் போதெல்லாம் காதுல வாங்கிப்பேனே தவிர அதிகம் கலந்துக்கிறதில்ல. அவங்க வேடிக்கைகளில  என்னைப்பத்தியும் இருக்கும். பள்ளிக்கூடத்தில எனக்கு பெரியவனே என்று பெயர்னா இங்க நான்  “அ”. அதாவது அசடு, அசத்து, அப்பாவி எல்லாத்துக்கும் பொதுவா. அவங்கெல்லாம் என்னைப்பற்றி கிண்டலா பேசினதெல்லாம் சேர்த்தா ஒரு புஸ்தகமே போடலாம்.

ஆனா ஒண்ணு சொல்லணும். என் மனைவி என்னை எப்பவும் எதுவும் சொல்லமாட்டாள். நான் முன்னாடி சொன்ன ராதா ஒரு கவர்ன்மென்ட் ஆபீஸ்ல நல்ல வேலையில் இருந்தான். யோக்யமானவன். அவன் மனைவிக்கு அதில் சந்தோஷமில்ல. “இதே போஸ்ட்ல இருக்கிறவங்க எல்லாம் காரும் வீடுமா இருக்காங்க. இவர் லாயக்கில்ல” ன்னு சொல்றதை நானே கேட்டிருக்கேன்.  என் ஆபீஸ்ல வேலை பார்க்கும் அகிலா, “எப்படித்தான் என் வீட்டுக்காரரை  பார்த்த உடனே எவ்வளவு சமத்துன்னு தெரிஞ்சுக்கிறாங்கன்னு ஆச்சரியமா இருக்கு. காய்கறி விக்கறவன் கூட முத்தின வெண்டைக்காயையும் சொத்தைக் கத்திரிக்காயையும் தலையில கட்டிடறான்” என்று சொல்வாள்.

தாத்தா பாட்டியோட ஒரே  குடும்பமா நாங்க ஊரில இருந்தபோது உறவினர்கள் பலர் வந்து போவார்கள். அப்ப எல்லாரையும் பழக்கம். எங்க வீட்டுக்கு வராத உறவினரே கிடையாதுன்னு சொல்லலாம். அநேகமா எல்லா உறவுகளும் அண்ணன் தம்பி உட்பட மெட்ராஸ், பம்பாய், பெங்களூர் என்று   போயிட்டு, நான் மட்டும் ஊரிலேயே தங்கிவிட்டதாலோ என்னவோ சிலபேர் எனக்கு மட்டும் கல்யாணப் பத்திரிக்கை அனுப்ப மறந்து போவார்கள்.

எல்லாம் பழைய கதை.

இப்ப ரிடையர் ஆயாச்சு. ஐம்பது வயசிலிருந்தே ஆரோக்யமும் சுமார்தான். மனைவியும் போயாச்சு. குழந்தைகள் எல்லாம் நல்ல மார்க்கெல்லாம் வாங்கி நல்ல வேலையும் கிடைச்சு கல்யாணமும் ஆகி வேற வேற ஊருக்குப் போயாச்சு. நானும் ஊர்ல இருந்த வீட்டை விற்றுவிட்டு மெட்ராஸ்ல தனியாகத்தான் இருக்கேன். அப்பப்ப பசங்களோட கொஞ்சநாள் இருந்துட்டு வருவேன்.

அந்த நாட்களிலேயே சமைக்கத் தெரிஞ்சுக்கல. பெண்ணெல்லாம் சிறிசா இருந்தபோது மனைவிக்கு சுகமில்லாதபோது, அவள் சொல்லச் சொல்ல ஏதோ செய்வேன். இன்னொருநாள் செய்யணும் என்றாலும் அதேதான். காது கேக்கும் கை செய்யும்.   மண்டையில் ஏத்திக்கிட்டது கிடையாது. அதுனால மெஸ்ல சாப்பாடு, ஏதாவது ஹோட்டல்ல சிற்றுண்டி. தூங்கற நேரம், கோவிலுக்கோ, சாப்பிடவோ போகிற நேரம் தவிர பழச எல்லாம் மனசுல ஓட்டிப் பாத்துகிட்டு உட்கார்ந்து இருப்பேன். இனி சொச்ச நாளும் இப்படித்தானோ?

(அது சரி. இப்ப மட்டும் எப்படி வக்கணையா இதெல்லாம் எழுதினேன்னு நீங்க கேக்கறது புரியுது. ஏதோ ஒரு பழைய கம்ப்யூட்டரையும் கொடுத்து தமிழ்ல அடிக்கச் சொல்லியும் கொடுத்துட்டுப் போனான், ஒரு சொந்தக்காரன். இதை அடிச்சு முடிக்க பத்து  நாள் ஆச்சு. அதுவும் நல்லதுதான். இரண்டு வாரம் வெட்டி யோஜனை இல்லையே? இதை யாராவது படிச்சுட்டு பரவாயில்லியேன்னு சொல்லிட்டாங்கன்னா,   அவ்வளவுதான். நான் எழுதறத்துக்கு – ஸாரி- டைப் அடிக்க எத்தனையோ கதைகள், உப கதைகள் என் வாழ்க்கையிலேயே இருக்கு. ஜாக்கிரதை).

மேல உள்ளது ஒரு பத்திரிக்கையில “எனக்குப் படம் வரைய வராது” என்கிற பேருல வெளியாச்சு. அப்புறம் என்ன? தொடர வேண்டியது தானே? அதுதான்  ‘ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன்’ தொடர்.

( இனி அடுத்த இதழில்)

குவிகம் இலக்கியவாசல் –

 

குவிகம் இலக்கியவாசலின் 27வது நிகழ்வு – தமிழில் அகராதிகள் என்ற தலைப்பில் சந்தியா பதிப்பகம் நடராஜன் அவர்கள்  பேசினார்.

அந்த நிகழ்வின் காணொலிக் காட்சியை நண்பர் அழகியசிங்கர் இரண்டு பாகங்களாக  முகநூலில் பரப்பிட்ட பகுதிகளை இங்கே காண்கிறீர்கள்!

 

 

 

குவிகம் இலக்கியவாசலின் 28வது நிகழ்வாக கண்ணன் அவர்கள் ” “தமிழில்  விஞ்ஞான  எழுத்துக்கள் ” என்ற தலைப்பில் ஜூலை 29ஆம் தேதி பேசுகிறார்.

அதே சமயம் இலக்கிய சிந்தனையின் சார்பில் புதுவை ராமசாமி அவர்கள் “கவிக்கோ அப்துல் ரஹ்மான்’ பற்றி பேசுகிறார்.

இரண்டு நிகழ்வும் ஆள்வார்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.

“இவர்களையும் பார்த்துவிடலாமா?” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

நமக்கு வித்தியாசமாக நடக்கும் நிகழ்வுகள், வேறுபட்ட சாயல் கொள்வதால் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். இப்பொழுது சொல்லப் போவதும் ஒரு மாறுபட்ட அனுபவமே!

என் டாக்டர் நண்பர் , எனக்கு க்ளையன்ட்டை அனுப்பும்பொழுது ஒரு புன்முறுவலுடன் “பார்” என்று சொன்னது, புதுமையாக இருந்தது. என்னைப் பார்க்கும் நேரத்தையும் அவரே குறித்துக்கொடுத்ததை அறிந்து, வியந்தேன்! சரி, என்னவென்று பார்ப்போம்.

குறித்துக் கொடுத்த நேரத்தில், இளம் ஆண்மகனுடன் அவர் கையைக் கோர்த்தபடி ஒரு பெண்மணியும் அவள் கை விரலைப் பிடித்தபடி ஒரு சிறுவனும் வந்தார்கள்.

Related image

அந்தச் சிறுவன் சுறுசுறுப்பாக என் அருகில் வந்து “மிஸ், எனக்குத்தான். நான் எங்கே உட்கார வேண்டும்?” என்றான். அவன் பெற்றோர், என் கை அசைவைப் புரிந்து, என் மேஜை முன் இருந்த இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். இவனுக்கு, என் அறையின் மூலையில் உள்ள ஊதாப்பு நிற முக்காலியைக் காட்டியபடி அதை எடுத்துவர எழுந்தேன். அவன் என் கணுக்கையைப் பிடித்து, “வெய்ட்” சொல்லி, ஓடிப்போய் எடுத்துவந்து, அதில் அமர்ந்தான். இவன் இப்படிச் செய்தவிதம் தனித்தன்மை வாய்ந்ததாகத் தோன்றியது. உட்கார்ந்தவுடன், ஒரு வினாடி கூட வீணாக்காமல் தன் தலைப் பகுதியைக் காண்பித்து “இது பெரிதாக இருக்கு, என்ன டெஸ்ட் செய்ய வேண்டும்? நான் ஸாகேத், யூ.கே.ஜீ. “ஏ” ஸெக்ஷன்” என்றான்.

Related image

இப்படித்தான் ஸாகேத் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவன் தன் 28 வயதான அப்பா ராஜாவுக்கும், 25 வயதான அம்மா ரேகாவுக்கும் ஒரே குழந்தை. அவன் பெற்றோர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலையில் இருந்தார்கள். சமீபத்தில், இவர்கள் கம்பெனி  “ஃப்ளெக்ஸீ அவர்”/ரிமோட் வர்க்கிங் வழிமுறையைத் துவங்கியிருந்தது. அதாவது, வேலையை முடிக்க வேண்டும், அதை வீட்டிலிருந்தும் செய்யலாம். ஸாகேத்தின் அம்மா, குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்ள செளகரியப்படும் என்பதால் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டாள்.

இருவருமே மகனுக்கு எல்லாமே வாங்கி்த் தருவார்கள். நன்றாக “வளர” வேண்டும் என்ற நோக்கம். பல குடும்பங்களில், குறிப்பாக ஒற்றைக் குழந்தை, தாமதமாகப் பிறந்த குழந்தை இருக்குமிடம் இதைப் பார்க்கலாம். ‘குழந்தைக்குச் செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப்போகிறோம்?’ என்று கருதிச்  செய்வார்கள்.

இதில் ஒரு சிக்கல் அடங்கியுள்ளது. குழந்தைகளுக்குப் பெற்றோர், அவர்கள் கேட்கும்முன் பொருட்களை வாங்கிக் கொடுப்பதால் ‘எப்படியும் கிடைத்து விடும்’ என்றே இருந்து விடுவார்கள். இதனாலேயே குழந்தைகளுக்கு அப்பொருட்களின் மதிப்பு தெரியாமல் போய்விடும். வாங்கிய பொருட்கள் சில மணி நேரமே உபயோகப்படுத்தப்படும். வாங்கித் தருவோர் மீதும் அலட்சியம் வந்து விடும். சலிப்பு குணம் அதிகரிக்கும். விளைவு, தேவைகளை ஆய்வு செய்யும் திறன்களுக்கு வாய்ப்பு இருக்காது. தன்னம்பிக்கையை வளர்ப்பதிற்குப்  பதிலாகப் பொருட்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.  விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மங்கியிருப்பதால், காக்கும் மனப்பான்மை இருக்காது.

சரி, ஸாகேத்துக்கு வருவோம். இவர்கள் பிரியமுள்ள குடும்பமாக வாழ்ந்தார்கள். பீச், பார்க் போவது, மாலையில் ஏதாவது விளையாடுவது – கேரம் , பிக்-அப்-ஸ்டிக், வீட்டில் கதை படிப்பது, டிவியில் போகோ, செய்திகள், சில படங்கள், ஆட்டம்-பாட்டம் இப்படி அவர்கள் பொழுது போனது.

ஸாகேத்தின் டீச்சர் விடுமுறையில் இருந்ததால், மாற்று டீச்சர், ஸாகேத்தின் அம்மாவிடம் “ஸாகேத் தலை எப்பவுமே இவ்வளவு பெரிதாகத்தான் இருந்ததா?” என்று கேட்டார்கள். ரேகா, ‘ஆமாம் ‘ என்றாள். அதற்குமேல் இதைப்பற்றி யோசிக்கவில்லை.

பிறகு அவர்கள், சம்பிரதாயப்படி சாகேத்துக்கு முடி இறக்கப் போனார்கள். அங்கே, தரிசனத்திற்கு நின்றிருந்த க்யூவில் ஒரு வயதான பெண்மணி “குழந்தையைத் தாயி சரியா குளுப்பாட்டல அதான் தலை இப்படி இருக்கு” என்றாள். ‘அப்படியா!’ என்று ரேகா நினைத்து அதை விட்டுவிட்டாள். வீட்டுக்கு வந்த சில விருந்தாளிகளும் இதையே சொன்னார்கள்.

சில நாட்களில், ஸாகேத்தின் பெற்றோர், ஒரு புத்தகாலயத்தில் குழந்தைகளைப்பற்றிய விளக்கப்படம் பார்த்தார்கள். அதில், வளர்ச்சியின் விவரங்கள் இருந்தன. அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டார்கள். தங்களையும் அறியாமல், ஸாகேத் செய்யும் செயல்களை நிழல்போல் கவனித்தார்கள். அவன் வரைந்த உருவத்தில் இரண்டு உறுப்பு விட்டு விட்டான். வடிவங்களும் சற்று சரியாக இல்லை. ஸாகேத்துக்கு மொட்டை அடித்த பின்புதான்  அவர்களுக்கு அவன் தலை சற்றுப் பெரிதாகத்  தோன்றியது. அவனுடைய எல்லாத்  தவறுகளுக்குக் காரணம்  பெரிய தலை என்று முடிவு செய்தார்கள்.

அவர்கள் மெதுவாக  “ஹெலிகாப்டர் பேரன்டிங்”க்கு மாறிக் கொண்டிருந்தார்கள். எப்பவும்போல்  நிதானமாக யோசிக்காமல் திகில் பட்டனை அழுத்திவிட்டார்கள். சமீப காலமாக அவர்கள் ஸாகேத்தை பூதக்கண்ணாடியால் நுணுக்கமாகப் பார்த்ததால், இப்படி யோசிக்கிறோம் என்ற எண்ணம் அவர்கள் சிந்தனைக்கு  எட்டவில்லை.

ஸாகேத்தை பதட்டத்துடன் குழந்தை மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். டாக்டரும், விவரம் கேட்டு, பரிசோதனை செய்து, ஸாகேத் நன்றாக இருக்கிறான் என்பதை எடுத்து விவரித்தார். குழுந்தைகள் தவறு செய்வது சகஜம் என விளக்கினார். வேறு எந்த விதமான பரிசோதனையும் தேவையில்லை என்று வலியுறுத்தினார். மனத் தெளிவுடன் வீடு திரும்பினார்கள்.

இவர்கள் இப்படி பதட்டப்படுவதைப் பார்த்து, வீட்டுப் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன, ஏது என்று விசாரித்தார்கள். விவரம் அறிந்தபின், ஸாகேத்துக்கு CT , MRI ஸ்கான்,  IQ டெஸ்ட் செய்தால் தெளிவாகிவிடும் என்று சொல்லி இரண்டு பிரபல மனோதத்துவரின் பெயரையும், விலாசத்தையும் கொடுத்தார்கள்.

பாதுகாப்புக்காக, இரண்டு பேரின் அபிப்பிராயம் எடுக்க எண்ணி, இருவரிடமும் நேரம் குறித்துக் கொண்டார்கள். முதலில் பார்த்தவர், முழுதாகப் பரிசீலித்து, ஸாகேத்தின் அறிவுத்திறன் சராசரி என்றார். அடுத்த மனோதத்துவரிடமும் இதே பதில் வருமா என்று யோசித்துச் சென்றார்கள். அங்கே, காத்திருந்த நேரத்தில், வெளிநாட்டு ட்ரைனிங் பெற்றவர் பற்றிய தகவல் கேட்டு, அவரிடம்  நேரம் குறித்ததால் இங்கு பரிசோதனையை வேகமாக முடித்துக் கொண்டார்கள்.

இரண்டு முறை டெஸ்ட் செய்துவிட்டதால் ஸாகேத்துக்கு அந்தச் சோதனைகள்  எல்லாம்  சற்றுப் பழக்கம்  ஆனது.  அதனால் டாக்டரிடம் , “நான் வடிவங்களை நன்றாகச் செய்வேன். செய்யட்டுமா?” என்று ஆரம்பித்தான். மனோதத்துவர் திகைத்து, பெற்றோரிடம் பேசி, டெஸ்ட் செய்து “ஸாகேத் நார்மல்” என்றார். ஏதாவது ‘நரம்பியல்’ தொந்தரவுக்கு அவன் சிகிச்சை எடுத்ததுண்டா என்றும் கேட்டார். இல்லை என்றார்கள். கவலைப்பட ஒன்றும் இல்லை என்று சொல்லி அனுப்பினார்.

“நரம்பியல்” பற்றிக் கேட்டதால், இவர்களை அது நச்சரித்தது. நரம்பியல் மருத்துவரைப் பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்ததார்கள்.  நரம்பியல் மருத்துவர் நன்றாக ஆராய்ந்து அவரும் ஸஹேத்தை “நார்மல்” என்றார். CT,  MRI ஸ்கான் எடுக்க வேண்டுமா என்று  கேட்டார்கள். தேவையேயில்லை என்றும் சொல்லி விட்டு, நிலைமையைப் புரிய வைக்கவும், சந்தேகங்களைத் தெளிவு செய்யவும் ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கரைப்  பார்க்கச் சொன்னார்.

வேறு ஏதாவது கோளாறு இருக்கா, இல்லையா என்று தெரிந்து கொள்ள ஸாகேத்துக்கு CT/, MRIயை ரேகாவும் ராஜாவும் எடுத்தார்கள்.

இப்போது என்னிடம் வந்திருக்கிறார்கள்.

சிறுவர்கள் முன் அவர்கள் பற்றிய தகவல்களைக் கேட்பது எங்கள் பழக்கமில்லை. ஸாகேத்துக்கு பேப்பர், பென்சில், க்ரயான்ஸ் கொடுத்து, அவனுக்கு என்ன தெரியுமோ, அதைப்  பேப்பரில் பகிர்ந்திடச் சொன்னேன் (எழுது, கலர்செய் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லவில்லை). காத்திருக்கும் அறையில் உட்கார வைத்துட்டு வந்தேன். அடுத்த 30 நிமிடத்திற்கு ஸாகேத்தைப்பற்றிய தகவல்களை அவன் பெற்றோர் பகிர்ந்து கொண்டார்கள்.

பிறகு நான் ஸாகேத்தை உள்ளே அழைத்து வந்தேன். அந்தத் தாள்களில் பல வகையான படங்கள், எழுத்து, வண்ணங்கள் நிரம்பியிருந்தது.

ஸாகேத்தின் பெற்றோரிடம் பார்த்த மனோதத்துவர்கள் இவன் “நார்மல்” என்று சொல்லியும் இவர்கள் தேடல் இருக்கத்தான் செய்தது. அதனால் வேறு ஒரு வழியைக் கையாள நினைத்தேன். அவர்களிடம் நான் ஆசிரியர் பயிற்சிக்காகச் செய்திருந்த விளக்கப்படத்தைக் கொடுத்தேன். இதில், வெவ்வேறு வயதிற்கான அறிகுறிகள், வளர்ச்சிகளை வரிசைப் படுத்தியிருந்தேன். நான் ஸாகேத்துடன் உரையாடுவதையும், அவன் செய்ததையும் அத்துடன் ஒப்பிட்டு, பேப்பரில் குறித்துக் கொள்ளச் சொன்னேன்.

இதற்காகவே, ஸாகேத்திடம் அவன் செய்திருந்ததை விவரிக்கச் சொன்னேன். மளமளவெனப் பல விஷயங்கள் சொன்னான். அவனைக் கேட்டேன் “நான் 28 என்று சொன்னால்?” உடனே,“ நான் 27, 29 என்பேன்” என்றான். இப்படி பல “பரிசோதனை”. ஸாகேத் தான் ‘நார்மல்’ என்பதை அவன் பெற்றோருக்குச் சாட்சியுடன் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருந்தான்; நேரம் ஓடியது, ஓடவிட்டேன்.

ரேகாவும், ராஜாவும் ஒப்புக்கொண்டார்கள். ஸாஹேத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை.  அவர்களுக்கு மேலும் விவரித்தேன்.குழந்தை  வளர்ச்சி என்பது திட்ட வட்டமான கால கட்டத்திற்குள் அடங்கியது அல்ல.  அது பற்றிய விளக்கப்படத்திலும் “இதிலிருந்து இதுவரை” என்று “ரேன்ஜில்” தான் குறிப்பிட்டிருக்கும். குழந்தைகள்  ஒவ்வொருவரின் கற்கும் விதம், புரிந்து கொள்ளும்  திறன்  ஒரே மாதிரி அச்சடித்தாற்போல் இருப்பதில்லை.

அடுத்த 3 ஸெஷன்களில், ஸாகேத்துக்குச் சற்றுக் கடினமான பணி கொடுத்தேன். ரசித்து, உன்னிப்பாகச் செய்தான். இந்தத் தூண்டுதலை அவனும் விரும்பினான்.

பெற்றோருக்கும் ஹோம்வர்க். வீட்டில் அவனுடன் படித்து, விளையாடும் பொழுது, ஒரு சரிபார்ப்புப்  பட்டியலில் ஸாகேத் புதிதாய்க்   கற்றிருக்கும் தகவலைக் குறித்துக் கொள்ளவேண்டும். அவன் ஏதேனும் தப்பு செய்தால், அதை “ஏன், எப்படி” என்பதை அதில் விளக்க வேண்டும். இரண்டே வாரங்களில் அது இருவருக்கும் மகனின் கற்றலின் அமைப்பைப் புரியவைத்தது.

ஸாகேத் அவர்கள் வீட்டின் வெளியே அடிபட்டிருந்த மைனா குஞ்சை கவனித்துப் பறக்க வைத்தான். வீட்டு வாசலில் தெரு நாய்க்கும், பறவைகளுக்கும் தண்ணீர் வைத்தான். அப்பாவுடன் சேர்ந்து வாசலில் இருந்த  செடி, மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றினான்.

இதை எல்லாம் பார்த்தும், ராஜா, ரேகாவிற்கு  இவன் மற்ற குழந்தைகள் போல்தானா எனச் சந்தேகம் இருந்தது. இதற்கு, எனக்குத் தோன்றிய ஒரு வழி, இருவரையும் வெவ்வேறு நேரங்களில் ஒரு  குழந்தைகள் காப்பகத்தில்  வாரத்தில் இரண்டு மணி நேரம்  தொண்டு செய்யவேண்டும் என்பதே. ஐந்து வாரத்திற்குப் பிறகு இந்த அனுபவத்தை ஆய்வு செய்தோம். ராஜாவும், ரேகாவும் “ஒருத்தருக்குச் சுருள் முடி, இன்னொருத்தருக்குப் பெரிய கண், அது போலவே எங்கள் ஸாகேத் தலையும்” என்றார்கள். இதை ஒட்டி, அவர்கள் சொன்னார்கள் “ஒவ்வொரு குழந்தையிடம் ஒரு தனித்துவம் இருப்பதால் குழந்தைகளை ஒப்பிடுவதில் அர்த்தமில்லை”. அங்கே குழந்தைகளிடம் ஒரு ஒற்றுமையைக் கவனித்தார்கள்.  அவர்கள் தங்கள் பெற்றோர் வருவதற்கு முன், தங்கள் பொருட்களைக் கவனமாக எடுத்து வைத்துக் வைத்துக்கொண்டார்கள். வாய்ப்புக் கொடுத்தால் குழந்தைகள் எல்லோரும் பொறுப்பாகவும் இருப்பார்கள் என்ற உண்மை அவர்களுக்குப் புரிந்தது.

இன்னொரு விஷயமும் இந்த அனுபவத்தினால் சரி செய்யப்பட்டது. பெற்றோர் இருவருமே தங்களது ஏதோ குறைபாட்டினால்தான் ஸாகேத்தின் தவறு அமைகிறது என்று நினைத்தார்கள். இதை, அடுத்த 2-3 ஸெஷன்களில் ஆராய்ந்தோம்.  விஷயங்களைப் பொறுத்தவரை , ராஜா,  தன்னிடம் யாராவது  ‘சொன்னாலே ’ புரியும் என்றார். ரேகா, தனக்குப் ‘பார்த்தால்தான் புரியும்’ என்றாள். தங்கள் ஸாகேத்திற்கோ ‘செய்து பார்த்தால்தான் புரியும்’ என்பதைக் கவனித்தார்கள். செய்து பார்க்கையில் தவறுகள் வெளிப்படையாகத் தெரியக்கூடும் என்பதையும் உணர்ந்தார்கள்.

கற்றல், பல விதத்தில் இருப்பதால் அதைச் சொல்லித்  தரும் பயிற்சிகளில்  ‘சொல்லுதல், காட்டுதல், செய்தல்’  என கலவை இருக்கும். கல்வித் துறையில் இதை “லர்நிங் ஸ்டைல்” என்பார்கள்.

இன்னொரு விஷயம். ஸாகேத்தின் பெற்றோர் என் ஆலோசனைப்படி அவர்களின் கடந்த கால விருப்பங்களை மீண்டும்  தொடங்கினார்கள். ராஜா, ஓட்டப்பந்தய வீரர். திரும்பவும் ஓடுவதை ஆரம்பித்ததும் அவருக்குப்  புத்துணர்ச்சியும், உற்சாகமும் மேலோங்கியது. ரேகாவோ, பேப்பரில் உருவம் செய்யும் ஓரீகாமீ வெகு நன்றாகச் செய்வாள். அதை மறுபடி தொடங்கினாள். நாளடைவில்,  இதைச்செய்வதால் ஸாகேத்தின் வளர்ப்பில் சிரமமாகவோ, இடையூறாகவோ, இருக்கவில்லை என்பதை உணர்ந்தார்கள்.  இதனால் மூன்று பேரும், இன்னும் நெருக்கத்துடன் அதிக சந்தோஷமாக இருப்பதை உணர்ந்தார்கள்.

நடைமுறையில், குழந்தைகள் வளர, பெற்றோர் தன் விருப்பங்களை ஒதுக்கி விடுவதும் உண்டு. “உனக்காகத் தான் என் பொழுதுபோக்குகளை விட்டுவிட்டேன்” என்றும் நினைப்பதுண்டு. இந்தச் சித்திரவதை தேவையேயில்லை.

தற்செயலாக, ஸாக்கேத்தின் தாத்தா-பாட்டி இவர்களுடன் தற்காலிகமாக இருக்கவந்தார்கள். அவர்களின் இன்னொரு மகனும் இங்கேயே இருந்ததால் மூன்று குடும்பமும் ஒன்றாக இருக்க முடிவெடுத்தார்கள். இதனால் சந்தோஷம் கூடியது. ஸாகேத்துக்கு இன்னொரு குஷியும் சேர்ந்தது. பெரியப்பா மகன் மீது அவனுக்கு மிகப் பிரியம்!

மெதுவாக, ஸாகேத்தின் பெற்றோர் தெளிவடைந்து, பழைய மனப்பான்மைக்கு  வந்துவிட்டதால், என்னுடைய ஸெஷனும் முடிவடைந்தது.

பிறகு ஒரு வருடத்திற்குப்பிறகு அவர்கள்  வந்தார்கள். ஸாகேத் அம்மா மூன்று மாத கர்ப்பிணி. மூவரும் வளரும் சிசுவிடம் பாடிப்  பேசுவதாகச் சொன்னார்கள். “ஆணோ, பெண்ணோ, அது எங்களுடைய பட்டு” என்றார்கள்!

சந்தேகம் நன்று தான்.                                                                                           சந்தேகமாகவே  இருந்தால் அது உதவா விலங்கே!                                                 சதா சந்தேகம், ‘ஏன்’ என்றே இருப்பது, வெறும் கானல் நீரே!

நம்பிக்கை  ஊக்கப் படுத்தும் !                                                                               நம்பிக்கை தான் நம் வளர்ச்சியின் உரம்!

=====================================================================

மாலதி சுவாமிநாதன்
மன நல மற்றும் கல்வி ஆலோசகர்
7, 6 வது லேன், இந்திரா நகர், அடையார், சென்னை-20
9962058252

 

 

 

 

 

 

 

 

அம்மா பார்த்த சினிமா – கவிஞர் வைதீஸ்வரன்

Image result for people watching tamil movie in a preview theatre

முத்துவேலன்  புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.  தூக்கம்  வரவேயில்லை.. மனதிற்குள்  காட்சிகள்  ஒவ்வொன்றாக  முன்னும் பின்னுமாக  ஒலியும் ஒளியும் மாதிரி ஓடிக் கொண்டே இருந்தது.

   “அந்த நான்காவது  “ஷாட்டில்  ஒரு வேளை  கதாநாயகனை பக்கவாட்டில் எடுத்திருக்கலாமோ! ஹீரோவுடன் நெருக்கமாக அந்தக் கதாநாயகி வசனம் பேசும்போது உதடுகள் துடிப்பதை மட்டும் காண்பித்திருக்கலாமோ! காமெடி எடுபடாமல் போய்விடுமோ! “ “ என்றெல்லாம்  பலவித  குழப்பங்கள்  அவருக்குள் பலஹீனமாக  எழுந்து மடிந்து கொண்டிருந்தன.
    அவருடைய  இயக்கத்தில் இது  மூன்றாவது   படம்.  எப்படியாவது  இந்தப் படம்  ஓரளவுக்காவது  ஓடியாக   வேண்டும். ஓடினால்தான் தன் இயக்குனர் அந்தஸ்து நீடிக்க வாய்ப்பு ஏற்படக் கூடும்.  திரைத் துறையில்  ஒருவனின் பிழைப்பு  “நித்ய கண்டம் பூர்ணாயுசு”தான்.  அவருடைய  இரண்டாவது படம் படு தோல்வி.  முதல் படம்  ஏதோ  அவரே நம்பமுடியாமல்  அப்படி ஒரு ஓட்டம்   ஓடியது. இப்போது  இந்த  மூன்றாவது  படம் மூன்றாவது வாரத்தில் வெளியாகப் போகும்   தேதியும்  அறிவிக்கப்பட்டுவிட்டது.  ஆனாலும் இந்தப் படம் பொறுத்த வரையில்  சென்ஸார்  பிரச்னை இருக்காது என்று  அவருக்கு  நம்பிக்கை  இருந்தது.
  முத்துவேலன்  மீண்டும் புரண்டு படுத்தார். கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஐந்தாகி விட்டது.  பக்கத்தில் அவர் மனைவி  கவலையற்று  நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். இவர் அப்படித்  தூங்கிப் பல நாட்கள்  ஆகி விட்டன.
 வெளிச்சம் வந்து விட்டதாவென்று  வாசலுக்குப்போய் சற்று நேரம்  பார்த்துக்கொண்டு நின்றார்.  மனம் அவ்வளவு உற்சாகமாக  இல்லை. பிறகு  கூடத்துக்குள்  நுழையும்போது  டெலிபோன் மணி அடித்தது.  இந்த  நேரத்தில் யார்?  
  “ஹலோ”  என்றார். … அவர்  தம்பிதான்….கிராமத்திலிருந்து..!
“என்னடா?  இந்த  நேரத்துலே? …”  சற்றுத்  திகைத்தவாறு,” அம்மா  நல்லா  இருக்காளா? ”  என்றார்.
“ அம்மாவைப்பத்திச்  சொல்லத்தான்  போன்  பண்ணினேன்.. அண்ணா!…”
“என்ன?..என்ன.?. என்னடா?……”  பதற்றமுடன்  கேட்டார்  முத்து.
“ அண்ணா…   அம்மாவைக்   காலையிலே  பஸ்லே  ஏத்தி  விட்டுட்டேண்ணா!”
“ என்னாது? பஸ்ஸுலயா? ‘….
“ஆமாண்ணே!  ..அங்கே  சாயங்காலம்  ஆறரை மணிக்கு  வந்துடுவாங்க….ஸ்டாண்டுக்கு  வந்து கொஞ்சம்  கூட்டிக்கிட்டுப் போயிடுங்க..”
  முத்துவேலனுக்கு  மனசு  ஜிவ்வென்று  கொதித்தது..
 “சே,,…  “ஏண்டா.!! . ..அம்மாவை இங்கே அனுப்பறதுக்கு  நேரம் காலம்  இல்லையா?  எனக்கு  படம்  ரிலீஸு…சென்ஸாரு!……ஆயிரம்  வேலை  இருக்கு…ஆயிரம் டென்ஷன்…இப்போ தொணதொணப்பா  அந்த  வயசானவளை  ஏண்டா இங்கே அனுப்பி வைச்சுருக்கே!”
  “அண்ணா…நானும்  அம்மாகிட்டெ ஆனவரைக்கும்  சொல்லிப் பாத்தேன்.  கண்கலங்கி  அழுகறா!” என் பையன் எடுத்த படத்தை அவன்கூட உக்காந்து  பாக்கணும்னு  ஆவலா  இருக்குடா!  என்னை ஏண்டா தடுக்கறே!  என்னை அனுப்பிச்சுக் கொடுக்கறதிலே ஒனக்கு என்னடா  தொந்தரவு”ன்னு   விடாமெ புலம்பிக்கிட்டே  இருக்காண்ணா!…பாவமா இருக்கு.”
  “ என்னடா  பாவம்……………முதல்லேயே  என்கிட்டெ  பேசச் சொல்லியிருந்தா…  நான்  வரவேண்டாம்னு  கண்டிப்பா  சொல்லியிருப்பேன் இல்லையா?…
 “பாவம்ண்ணா..” 
முத்து பட்டென்று  போனை வைத்து விட்டுத் திரும்பினார்…. அவர் மனைவி  பின்னால் நின்று கொண்டிருந்தாள்.
“கேட்டியா..சேதியை..”
“ பாவம்  ஆசைப்படறாங்க……வந்துட்டுப் போவட்டுமே!  நான்  பாத்துக்கறேன்..”
முத்துவேலனுக்கு  இதற்கு மேல்  அந்த  விஷயத்தைத்  தொடர விருப்பமில்லை . சாத்தியமும்  இல்லை… “எப்படியோ போங்க..!”  என்று  சொல்ல நினைத்த்தை  அவர்  மனசுக்குள்  சொல்லிக் கொண்டு வெளியே  போனார்.  .
   காலையில்  இயக்குனர் முத்து வேலனைப் பார்க்கப்  படம் சம்பந்தமானவர்களும் பத்திரிகைக்காரர்களும்  வருவதும் போவதுமாக  இருந்தார்கள். 
   தயாரிப்பாளர்  சொன்னார்..” முத்து…இன்னிக்கு  ராத்திரி  குறிப்பிட்ட சில நெருக்கமான திரைப்பிரமுகர்களுக்குப்  படத்தைப் ப்ரிவ்யூ போட்டுக் காட்டலாம்னு  இருக்கேன். படத்தைப்பத்தி  ஒரு அபிப்ராயம் வந்தா வினியோகத்துக்கு நல்லது இல்லையா?   ராத்திரி பத்து மணிக்குச்  சரியா  வந்துடுங்க..”   
  முத்துவேலனுக்கு  மகிழ்ச்சியும்  பரபரப்பும்  கூடியது.. நல்ல சந்தர்ப்பம்! அப்போது படத்தின் விசேஷ அம்சங்களைப்பற்றிப்  பதியும்படியாகப்  பத்திரிகைக்காரர்களிடம்  நிறையப்  பேச  வேண்டும்..” என்று நினைத்துக் கொண்டார்.
  “சரோஜா…..இன்னிக்கு ராத்திரி  பத்து  மணிக்குப் படம் போடறாங்க….நீயும் வா…நல்லா  இருக்கும் ?  மனைவி  படத்தைப் பார்க்க வேண்டுமென்று  அவருக்கு ஆவல்.. மனைவியின் ராசியின் மேல் அவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது.
 “சாயங்காலம்  உங்க  அம்மாவும்  வந்துடுவாங்களே!..”
முத்துவுக்கு  அந்த  அசிரத்தையான விஷயம்  மறந்தே போய் விட்டது.
“ அடக் கரு….மே! ..முணுமுணுத்துக் கொண்டபடி   “அதுக்கு என்னை
என்ன பண்ண சொல்றே!’  படத்தை  நிறுத்திடலாமா?..”
 “  நீங்க  ஒண்ணும் பண்ண வேண்டாம். நானே  சாயங்காலம்  போய் அம்மாவைக்  கூட்டிகிட்டு வரேன்.  ராத்திரி அம்மாவையும்  படம் பாக்க  அழைச்சிக்கிட்டு வரேன்  ..நீங்க  ஒங்க வேலையைப் பாருங்க..”  
முத்துவேலனுக்கு  மறுபேச்சு சொல்வதற்கு  எதுவுமில்லை.
   இரவு  படம் ஓடிக் கொண்டிருந்தது.  ஓடிக் கொண்டிருந்த படத்தை விடப்  பார்ப்பவர்களின்  முக உணர்வுகளை இருட்டில் கண்டறியப் பாடுபட்டுக் கொண்டிருந்தார் முத்துவேலன்.  அடிக்கடி  பின்வரிசையில் உட்கார்ந்திருந்த  அவர் மனைவியைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டே   அம்மாவையும் ஒரு பார்வை பார்த்தார்.  பார்த்த போதெல்லாம் அம்மா  அரைக் கண் மூடிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது.
“இங்கெ வந்து தூங்கறதுக்கு  இவ்வளவு  பிடிவாதமா  வரணுமா?’
  படம் முடிந்தது.   அவரவர்கள்  முத்துவிடம்  கைகுலுக்கிவிட்டுப் போனார்கள். படம் பிரமாதமாக  இருப்பதாகத்தான் எல்லோரும் சொல்லிக்கொண்டு போனார்கள்.  எல்லாருமே பொய் சொல்லமாட்டார்கள் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார். எல்லோரையும் சந்தித்துப் பேசிவிட்டு  வீடு திரும்புவதற்கு  நள்ளிரவுக்கு மேல் ஆகி விட்டது.
  வீட்டிற்குள்  நுழைந்தபோது  ஏற்கனவே அவர் மனைவி தூங்கிக்  கொண்டிருந்தாள்.  அவள்  அபிப்ராயத்தைக் கேட்க  முடியவில்லை. அம்மாவுக்குச் சினிமா  எதுவும் புரிந்திருக்காது!..
சமையலறைக்குப்போய் ஏதோ சாப்பிட்டுவிட்டுக்  கூடத்துக்கு வந்து மங்கலான  வெளிச்சத்தில்  சோபாவில்  உட்கார்ந்துகொண்டு யோசனையுடன் சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டிருந்தார்.. படம் வெளியாகும்வரை  எல்லா இயக்குனர்களுக்கும் மனசுக்குள்  இப்படித்தான்  ஏதோ  படபடப்பு  இருக்கத்தான் செய்யும்….   
  “முத்தூ…முத்துக் கண்ணூ…”  யாரோ ரகஸியமாகக் கூப்பிடும் குரல்…
அம்மா தான்!  மெல்லிய  குரலில்..ரொம்பத் தயக்கத்துடன்   கூப்பிடுகிற குரல்
 முத்துவேலன்  கண்ணை விழித்துத்  திரும்பிப் பார்த்தார்.   அம்மா  அவள் அறைக்கதவை  லேசாகத் திறந்துகொண்டு இருட்டில்   நின்று கொண்டிருந்தார். வெறும்  நிழலாகத்  தெரிந்தது  அவள்  முகம்.
“என்னம்மா….இந்த  நேரத்துலே  கூப்பிடறே?   … ஊர்லெ எல்லாம்  எப்படி இருக்கு?.. தூக்கம் புடிக்கலயா?  .சினிமாவுலேதான் உக்காந்து   நல்லாத் தூங்கிட்டியே?.  என்ன விஷயம்?….” 
“இல்லெடா..கண்ணு  சினிமாவை நல்லா  விவரமாப் பாத்தேண்டா!!.  அதை ..உங்கிட்டே  ஒடனே சொல்லிடணும்னுதான்  ராத்திரி பூராவும் கண்முழிச்சி  ஒக்காந்துருக்கேன்……நீ சாப்பிட்டியாடா…கண்ணு..”?
“ எல்லாம்  ஆச்சு.. அம்மா…..இப்போ என்ன சொல்லப் போறே?
  
அம்மா அவனிடம் சமிக்ஞை செய்தாள்..முத்துவின்  அறையில்  தூங்கிக் கொண்டிருக்கும் சரோஜாவின் தூக்கம் கலைந்து விடக்
கூடாதென்பது  அவள்  கவலை .
 “முத்து…. கொஞ்சம்  உள்ள வரயாடாப்பா!……ஒரு விஷயம்….. ஒங்கிட்டே மட்டும்  சொல்லணும்.”  மெதுவான குரலில் சொன்னாள்.
   அம்மாவின்  அழைப்பு  அவருக்கு  ஸ்வாரஸ்யமாக  இல்லை.  அலுத்துக் கொண்டவாறு..  “எதுக்கும்மா..இந்த நேரத்துலே கூப்பிடறே?”
 அவள் அறைக்குப் போனார்.  அம்மா  முத்துவின்   பக்கத்தில் உட்கார்ந்து கையைப் பிடித்துக்கொண்டார்.
 “என்னம்மா….விஷயம்  ? சும்மா..இழுத்துப் பேசாம  சீக்கிரம் சொல்லு”.
   முத்து வேலன்   கையை விடுவித்துக் கொண்டார்.
“ராசா…படம்..நல்லாத்தான்   எடுத்துருக்கேடா..!  ஆனா….ஒண்ணே ஒண்ணு….ஒரே  ஒரு  கொறைதாண்டா  எனக்குத் தெரிஞ்ச மட்டிலே!…. சரி பண்ணிடுவயாடா!!……..
“ கொறையா?…அதென்ன கொறை கண்டு பிடிச்சே  நீ..!  .”
“  படம் வெளிலெ வர  இன்னும் எத்தனை  நாளு  இருக்குடா? “
“ உனக்கு என்ன  அக்கறை அதிலே? இன்னும் நாலு நாளு இருக்கு.  அது  சரி குறை இருக்குன்னு சொன்னியே..அதைச் சொல்லு! “
“அப்ப… உனக்கு சங்கடம் இருக்காதுடா……. சொல்றேன்..”
“சொல்லு ..சீக்கிரமா..சுத்தி வளைக்காம..”
“ஏண்டா.  சின்ன வயசுலே உனக்கு  எத்தனை  தடவை  நரகாசுரன் கதை சொல்லியிருக்கேன்.. ஞாபமிருக்கா?
“ஆமா..அதுக்கென்ன  இப்போ?  கதை  பேசறதுக்கெல்லாம்  இப்போ நேரம் இல்லேம்மா!   ..சீக்கிரம் சொல்லு.”
 “இல்லேடா….அந்த  ஹீரோயினி  நடு ராத்திரியிலே ஜன்னல் பக்கமா நின்னுகிட்டு  ஏதோ சோகமா பேசறாளே!  அதென்ன?  “
“ நீ தான்  பாத்தியே!  நீயே சொல்லேன்! “
“ நாளை விடிஞ்சா  தீபாவளி  ஊரெங்கும்  ஜகஜ் ஜோதியா இருக்கப் போற இந்த நேரத்துலே  என் வாழ்க்கை மட்டும்  ஏன் இருண்டு போய் விட்டது? ”   அப்படீன்னு  கண்ணுலே நீரோட பேசறாளே..அந்த ஸீனைத்தான் சொல்றேன்…” 
“அடே  பரவால்லியே! அம்மா…டயலாக்கை  கரெக்டா  கவனிச்சிருக்கியே! அது  சரி ..அதுலே  என்ன  கொறையைக் கண்டு பிடிச்சே? ”
“ அட  மண்டுப் பைய்யா….அவள்  ஜன்னலோரமா  நின்னு பேசும் போது  வெளிலே  வட்டமா  வெளிச்சமா  ஒரு நிலாவைக் கட்டித் தொங்க விட்ருக்கயே……அந்தக் கண்ராவியைத்தான்  சொல்றேன்”
“என்ன  சொல்றே..நீ?  நிலாவைப் பாத்தா  கண்றாவியா  இருக்கா?…..”   சற்றுக் கோபமுடன்  கேட்டார். .
“ புரியல்லியாடா?  சின்ன வயசுலே  எத்தினை தரம் சொல்லியிருக்கேன்.  தீபாவளிக்கு மறு நாளு  அம்மாவாசைடா.!!  அதுவும் பூரண அம்மாவாசை. பித்ருக்களுக்கு  பிண்டம் போடற அம்மாவாசை!! ..” நாளை வெடிஞ்சா  தீபாவளிங்கறா!.. .தீபாவளிக்கு மறு நாள்  நிலா எப்படி வரும்?  ..இந்த அபத்தத்தை  எவனாவது  கண்டு பிடிச்சான்னா..உனக்கு  ரொம்ப  அவமானப் போயிடும்டா..”
முத்துவேலன்  அதிர்ச்சியுடன்  ஊமையாகி  அம்மாவைப் பார்த்துக் கொண்டே நின்றார்.  வார்த்தைகள்  வரவில்லை. மிக  மோசமான
தவறு நிகழ்ந்து விட்டது..  ..
 அவர் கண்கள்  ஈரமாகிக் கொண்டிருந்தது. உள்ளூர  படபடப்பாகப் பரவியது. கன்னத்தில் நீர்  வழிய ஆரம்பித்தது.  பேச்சு  வரவில்லை.  அம்மாவுக்கு  எப்படி நன்றி சொல்ல  இயலும்?  அம்மாவின்  கையை இறுகப் பிடித்துக் கொண்டு தலை வணங்கி  நெற்றியில் வைத்துக் கொள்ளும்போது  அவர் மனைவி  பின்புறம் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
   அந்தத்  தவறான அபத்தமான  காட்சியை  அவசர அவசரமாக அழித்துவிட்டு மீண்டும்  சரியாக்கிப்  படமெடுக்க  முத்து வேலனுக்கு  சரியாக இரண்டு நாட்கள்  தேவையாக இருந்தது. .
 
                              
     ** இது எனக்குத் தெரிந்த உண்மை சம்பவத்தின் கதை
 
        1950ல் ஒரு இயக்குனர் சொல்லக் கேட்டது.
 
 
 
 

சுருதி டி வி (எஸ் எஸ் )


Image result for ஸ்ருதி டி‌வி கபிலன்

ஸ்ருதி டி‌வி கபிலன் அவர்கள் இலக்கிய வட்டத்தில் மிகவும் அறிமுகமான நபர். அவர் தனது வீடியோ காமிராவுடன் அரங்கத்தில் இருந்தார் என்றால் அந்த நிகழ்ச்சி மாபெரும் ஹிட். 

சென்னையில் இலக்கியக் கூட்டம் எங்கு நடந்தாலும், அங்கு  நிச்சயம் ஆஜராகி இருப்பார் கபிலன். இலக்கியக் கூட்டத்தை வீடியோவாக ஆவணப்படுத்தும் ஆச்சரிய இளைஞர். ‘யூ டியூப்’பில், ‘ஸ்ருதி டிவி’ என டைப் செய்த மறுவிநாடியே அவர் எடுத்த வீடியோக்கள் கொட்டுகின்றன.

‘‘உலக சினிமாவும் இலக்கியமும் எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி. அதனாலயே இலக்கியக் கூட்டங்களுக்குப் போறதை ஒரு கடமையாவே வைச்சிருந்தேன். பேசற எழுத்தாளர்கள் அற்புதமான பல கருத்துக்களை உதிர்ப்பாங்க.கேட்கும்போதே நமக்குள்ள பல கதவுகள் திறக்கும். உற்சாகமும் தொத்திக்கும். இதுக்குப் பிறகு உலகத்தை நாம பார்க்கிற பார்வையே வேறயா இருக்கும். ஆனா, இதெல்லாம் ஆவணமாகலை. அதனாலயே அப்பப்ப கேட்கறது அப்பப்பவே மறைஞ்சுடுது. இப்படி இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். கூட்டங்களுக்கு வர்றவங்க மட்டுமில்ல… வர முடியாதவங்க கூட எப்ப விருப்பப்பட்டாலும் அதைக் கேட்கற மாதிரி இருக்கணும். இந்த எண்ணத்தோடதான் இந்த சேனலை ஆரம்பிச்சேன்…’’ என்கிற கபிலனின் பூர்வீகம் திருவாரூர் அருகிலிருக்கும்  திருத்துறைப்பூண்டி.

(நன்றி : குங்குமம் ஆன்லைன்) 

மேலும் , கபிலன் அவர்கள் விகடன் பேட்டியில் கூறியது:

” 1,600-க்கும் மேற்பட்ட வீடியோ ஃபுட்டேஜஸ் எங்ககிட்ட இருக்கும். இதுல 1,350 மேல் இலக்கியம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள்தான். எனக்குத் தெரிஞ்சு வேற யாரிடம் இவ்வளவு இலக்கிய வீடியோக்கள் இருக்காது. `இந்த வீடியோக்களை எல்லாம் யூடியூப்ல அப்லோடு பண்ணி நிறைய காசு பார்க்கிறோம்’னு சிலர் நினைக்கலாம். ஆனா, இதன்மூலம் மாசம் மூவாயிரம் ரூபாய் கிடைச்சாலே ஆச்சர்யம்’’ என்கிறார் ஸ்ருதி டிவி கபிலன். ஆனால், இவர் ஆவணமாக்கி வைத்திருக்கும் அத்தனை வீடியோக்களும் காலத்துக்கும் பொக்கிஷமானவை.

இவர் நமது குவிகம்  இலக்கிய வாசலின் பல நிகழ்வுகளைப் பதிவு செய்து தனது ஸ்ருதி டிவியில் வெளியிட்டிருக்கிறார். 

அவர் பணி  மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்! 

புரியாத பிரச்சினை – அழகியசிங்கர்

Chromepet railway station

பத்மநாபனிடமிருந்து போன் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. கடந்த நான்கு  ஆண்டுகளாக பத்மநாபனிடமிருந்து போன் வரவில்லை. அவர் பதவி மாற்றம் பெற்று வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றபிறகு என்னிடம் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.

சென்னையில் இருக்கும்போது நானும் அவரும் முக்கியமான நண்பர்கள். எல்லா இடங்களுக்கும் ஒன்றாகப் போய்விட்டு ஒன்றாக வருவோம். மேலும் நாங்கள் இருவரும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். அவர் மட்டும் வைதீஸ்வரன் கோயில் என்ற ஊரில் இருக்கிறார். உண்மையில் வைதீஸ்வரன் கோயில் கிட்டத்தட்ட மயிலாடுதுறையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையில் அவர் தங்கியிருக்கிறார். நான் தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராகப் பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.

2004 ஆம் ஆண்டில் பத்மநாபன் சீனியாரிடி தேர்வு எழுதும்போது, வேண்டாம் என்று தடுத்தேன். அவருக்கு நான் தடுத்தது புரியவில்லை. ” ஐம்பது  வயதாகப் போகிறது…இன்னும்கூட பதவி உயர்வு பெறவில்லையென்றால் என்ன?” என்று கேட்டார்.

“இந்த வயதில் போகிறேன் என்கிறீர்களே?ஓரு பைசாவுக்குப்  பிரயோஜனமில்லை,” என்றேன். 
நான் சொன்னதை அவர் கேட்கவில்லை. இதோ அவர் போய் 4 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் அவரை ஒருமுறை பார்த்தேன். பார்க்கப் பரிதாபமாக இருந்தார். பத்து கிலோ எடை குறைந்துவிட்டது என்றார். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை, பிபி எல்லாம் உண்டு. அதுவேற அவர் முகத்தை சோகமாகக் காட்டியது.

“நீங்கள் கெட்டிக்காரர்…உங்கள் பேச்சைக் கேட்கவில்லை..”என்றார்.

“முதலில் உங்கள் சம்பளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்..இங்கிருந்ததைவிட சம்பளம் குறைவாகத்தான் வாங்குவீர்கள்…”

“ஆமாம்..வைதீஸ்வரன் கோயில் ஒரு ரூரல்…உண்மையில் அங்கு போவதற்குச் சம்பளம் அதிகமாகத்தான் தரவேண்டும்..சம்பளம் குறைச்சல்..வசதி அதைவிடக் குறைச்சல்.  மேலும் வேலைப் புடுங்கல் அதிகம்..பிராஞ்சு கதவைத் திறக்கிறதிலிருந்து பூட்டுறவரைக்கும் நான்தான்….”

பத்மநாபனிடம் எதுவும் ஒளிவு மறைவு கிடையாது. மனம் திறந்து டக்கென்று பேசிவிடுவார்.

“முட்டாள்தனம்தான் இது,”என்றேன்.

“ஆமாம். இன்னொரு முட்டாள்தனமும் இருக்கிறது..நான் ரிட்டையர்டு ஆகிறவரைக்கும் இந்தக் கும்பகோணம் வட்டாரத்தைவிட்டுப் போக முடியாதாம்..”

பத்மநாபனைப் பிறகு நான் பார்க்கவே இல்லை. எங்கள் அலுவலக விதிப்படி தமிழ்நாட்டிற்குள் ஒருவர் மாற்றல் பெற்றுப்போனால் அவர் எந்த இடத்திற்குப் போகிறார்களோ அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் பத்மநாபன் போனபிறகு எனக்குக் கை உடைந்தமாதிரி ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் சரவணா ஓட்டலில் காப்பியும், பொங்கலும் சாப்பிடாமல் இருக்க மாட்டோம். பத்மநாபன் இல்லாமல் எனக்குத் தனியாக அங்கு போகப் பிடிக்கவில்லை.

நான்கு ஆண்டுகளில் நான் பத்மநாபனை மறந்தே விட்டேன். திடீரென்று அவர் குரலைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அதுவும் காலை நேரத்தில்.

“என்ன பத்மநாபன்?…எங்கிருந்து பேசுகிறீர்கள்? சென்னைக்கு வந்துவிட்டீர்களா?”

“வந்துவிட்டேன்..டெம்பரரி டிரான்ஸ்வர்..வந்து ஒரு மாசம்தான் ஆகிறது..”

“எங்கே?”

“ஹஸ்தினாபுரம்…”

” சொல்லவே இல்லையே?”

“என்னத்தைச் சொல்வது? டெம்பரரிதானே? ஆமாம். உங்க பெண் பெயர் என்ன?”

“ஏன்?”

“சுருதிதானே?”

“ஆமாம்.”

“என்ன பண்றா?”

“பி.டெக்..”

“நினைச்சது சரியாப் போச்சு..”

“என்ன நினைச்சிங்க?”

“சுருதி மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளாகத்தான் இருக்க முடியுமோன்னு நினைச்சேன்…அது சரியாப் போச்சு..அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை…”

“நாமதானே அடிக்கடிப் பார்த்துப்போம்..வீட்டில சந்திக்க மாட்டோம்…இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்கே அடையாளம் தெரியப்போறது…”

Related image

“நான் சொல்ல வந்தது வேற விஷயம். நீங்க சீரியஸ்ஸா  கவனிக்க வேண்டிய விஷயம். எனக்கு ஆபீஸ்  எட்டரை  மணிக்கு…நான் மாம்பலத்திலிருந்து காலையிலேயே ஏழரை  மணிக்கெல்லாம் ஓடணும்..டெய்லி ஓடறேன்..நான் போற சமயம். குரோம்பேட்டையில் இருக்கிற இன்ஜினியரிங் காலேஜ் படிக்கிற பசங்களும் போவாங்க…ஒரே கூட்டமா இருக்கும்..அங்கே படிக்கிற ஆண்களும் பெண்களும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசிண்டே போவாங்க..தினமும் உங்க பொண்ணு சுருதியைப் பாக்கறேன். நான் உங்க பிரண்ட்ங்கறதே அவளுக்குத் தெரியலை…அவளைச் சுத்தி நாலைஞ்சு ஆம்பளைப் பசங்க….எல்லாம் படிக்கிற பசங்க..அந்தக் கண்றாவியை நானே சொல்ல விரும்பலை..அந்தப் பசங்க சும்மா இருக்க மாட்டாங்க…சுருதிகிட்டவந்து ரொம்ப நெருக்கமா பேசுவாங்க..யாராவது ஒரு பையன் அவள் தோள்மேல் கூட கையைப் போடுவான்…ஒருத்தன் கன்னத்தில கிஸ் பண்றான். அந்தக் கண்றாவியை என்னவென்று சொல்வது..சுருதிகிட்டே அவன் பேசறான்..உதட்டுலதான் கிஸ் பண்ணக்கூடாதாம்..அது தப்பாம்.. கேட்கச் சகிக்கலை…”

பத்மநாபன் சொன்னதைக் கேட்டவுடன் எனக்குச் சொரேர் என்றிருந்தது.

“என்ன பத்மநாபன் சொல்றீங்கன்னு,” சத்தம் போட்டுக் கேட்டேன்.

“தப்பா எடுத்துக்காதீங்க…கடந்த ஒரு வாரமா எனக்குத் தயக்கமா இருந்தது..இத எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு..இத எப்படியாவது தடுக்கணும். நீங்க உங்க பெண்ணுகிட்ட எதுவும் பேசாமல் இத எப்படியாவது டீல் பண்ணணும்…ஜாக்கிரதையா டீல் பண்ணணும்..”

“பத்மநாபன் ரொம்ப நன்றி.. இத எப்படியாவது சரி செய்யணும்..சுருதி நல்ல பொண்ணு..கொஞ்சம் வெகுளி..இந்த விஷயத்தில நீங்களும் எனக்கு உதவி செய்யணும்..”

பத்மநாபனுடன் பேசிய விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை..மனைவியிடம் சொன்னால் தேவையில்லாமல்
கவலைப்படுவாள்..அன்று முழுவதும் சங்கடமாக இருந்தது. மாலையில் சுருதி காலேஜ் போயிட்டு வந்தவுடன், அவளை எப்போதும்விட அதிகமாகக் கவனித்தேன்..

“என்ன எப்படிப் போயிண்டிருக்கு படிப்பெல்லாம்…”என்று கேட்டேன்.
“நல்லாதானே இருக்கு..”என்றாள் சுருதி.

“உன் காலேஜ்ஜிலே ராக்கிங்லாம் கிடையாதா?”

“அதெல்லாம் கிடையாது..தெரிஞ்சா துரத்திடுவாங்க வீட்டுக்கு..காலேஜ் திறந்து நாலு  மாசம் மேலே ஆயிடுத்து..”

அன்று இரவு எனக்கு சரியாத் தூக்கம் வரலை..மறுநாள் காலையில் சுருதி காலேஜ் கிளம்பியவுடன் நானும் கிளம்பினேன். எதுவும் சுருதிக்குத் தெரியாது. அவள் ஏறுகிற ரயில் கம்பார்ட்மெண்டில் நானும் ஏறினேன். சுருதிக்குத் தெரியாமல்..நாலைந்து ஸ்டூடன்ஸ் சுருதியைப் பார்த்தவுடன் உற்சாகமாகக் கையசைத்துச் சிரித்தார்கள். சுருதி அவர்கள் இருந்த பக்கம் நகர்ந்தாள்..”உனக்காகத்தான் இடம் போட்டிருக்கிறேன்..”என்றான் ஒருவன் இளித்தபடி.

இந்த சமயத்தில், “சுருதி..”என்று நான் சத்தம் போட்டேன். சுருதி திரும்பிப் பார்த்தாள்.. என்னைப் பார்த்தவுடன் திகைப்பு அவளுக்கு..”அப்பா நீங்களா?” என்றாள். “இங்க என் பக்கத்தில் வந்து உட்காரு..” என்றேன்.
சுருதி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

“அவர்கள் எல்லோரும் யாரு?” என்று கேட்டேன்.

“ஃபிரண்ட்ஸ்”

சுருதி மேலும் பேசாமல் என் பக்கத்தில் இருந்தாள். சுருதியைக் கிண்டல் செய்யும் ஃபிரண்ட்ஸைப்  பார்த்தேன். எல்லோரும் படிக்கிறவர்கள். கையில் சின்ன நோட் மாதிரி வைத்திருந்தார்கள். எல்லோர் கையிலும் செல்போன்…வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றவுடன், அவளுடைய ஃபிரண்ட்ஸ் இறங்கி வேற கம்பார்ட்மெண்ட் போய்விட்டார்கள்.

“தினமும் இவர்களோடத்தான் காலேஜ் போயிண்டிருக்கியா?”

“ஆமாம்”

“அவர்கள் தினமும் உன்னைக் கிண்டல் செய்கிறார்களாமே?”

“இல்லையே..எல்லோரும் தமாஷாப் பேசிப்போம்..”

“பத்மநாபன் சொல்றார்…இல்லைங்கறீயே..”

“என் வகுப்பில படிக்கிறவங்க…நாங்க தினமும் இந்த டிரையினில் ஜாலியாப் பேசிக்கிட்டுப் போவோம்..”

“ஏன் உன்கூட மத்த கேர்ள்ஸ் வரமாட்டாங்களா?”

“மல்லிகாவும் என்கூடத்தான் வருவா..என் வகுப்புல கேர்ள்ஸ் கொஞ்சம் குறைச்சல்…”

“சுருதி..என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் தப்பு…கன்னத்தில கிஸ் பண்றது..தோள்ல கைப் போடறது..நீங்கள்ளாம் ஃபிரண்ட்டா இருக்கலாம். அதெற்கெல்லாம் ஒரு லிமிட் வேண்டும்…உங்க காலேஜ்ல வந்து பேசறேன்..”

கடகடவென்று சுருதி அழ ஆரம்பித்துவிட்டாள்.. “நீங்க காலேஜ்க்கு வராதிங்கப்பா,” என்றாள்.

குரோம்பேட்டை ஸ்டேஷன் வந்தவுடன், நானும் சுருதியுடன் இறங்கினேன். அவளுடைய ஃபிரண்ட்ஸ் என்னையும் அவளையும் பார்த்தபடியே முன்னால் சென்று விட்டார்கள். “எப்ப காலேஜ் முடியும்?”
“தெரியாது..சிலசமயம் நான்குக்கெல்லாம் முடியும்.. ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தால் ஐந்து மணிக்கு முடியும்..”

“சரி. க்ளாஸ் போ..” என்று கூறியபடி காலேஜ் வாசல்வரை வந்தேன். பத்மநாபனுக்கு போன் செய்தேன்..”இன்று உங்களைப் பார்க்கவில்லையே?” என்றார்.
“நான் சுருதியுடன் வந்தேன்..” என்றேன்.

“எத்தனைநாள்தான் உங்களால சுருதியுடன் வந்து கொண்டிருக்க முடியும்.”

“அதுதான் எனக்கும் புரியலை..”

“இதற்கு வேற  ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.”

அன்று மாலை சுருதி வகுப்புகளை முடித்துவிட்டு காலேஜ் வாசலுக்கு வந்தாள். அவளுடைய பிரண்ட்ஸ்களுடன்..கேட் அருகில் நான் இருப்பதைப் பார்த்தார்கள் அவளுடைய ஃபிரண்ட்ஸ். அவர்களில் ஒருவன், “சுருதி உன் அப்பா,” என்றான். சுருதி பயந்தபடியே என்கிட்டே வந்தாள். அவள் ஃபிரண்ட்ஸைச்  சைகை செய்து கூப்பிட்டேன். அவர்கள் தயக்கத்துடன் வந்தார்கள். “சுருதிக்கு திருமணம் ஆகப்போறது..நீங்கள் இப்படி ஒண்ணா வருவதைப் பார்த்தால், தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்கள்..”என்றேன்.

“சரி அங்கிள்..நாங்க இனிமே அப்படி வரமாட்டோம்..”என்றார்கள். பிரிந்து சென்றார்கள்.

நானும் சுருதியும் மின்சார வண்டிக்காகக் காத்திருந்தோம்.

“ஏன்பா…இப்படிப் பொய் சொல்றீங்க…அவங்க நல்லவங்கப்பா..சும்மா ஜாலியாப் பேசிண்டு வர்றோம்…”

“எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சுருதி.”

அடுத்தநாள் காலையில் நான் சுருதியுடன் மாம்பலத்தில் வண்டியில் ஏறினேன். அன்றும் பத்மநாபன் என் கண்ணில் படவில்லை. சுருதியின் நண்பர்களும் கண்ணில் படவில்லை. திரும்பவும் அவள் காலேஜ் விட்டு வரும்போது கேட் அருகில் நான் நின்றிருந்தேன். “அவர்கள் நல்லவர்கள்,” என்றாள் சுருதி முணுமுணுத்தபடி. நான் பதில் எதுவும் பேசவில்லை. கிட்டத்தட்ட ஒருவாரம் நான் சுருதியுடன் வந்து கொண்டிருந்தேன். பத்மநாபனிடம் போனில் பேசினேன்.

“நானும் உங்களைக் கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்…சுருதிக்கு என்னைத் தெரியாமலிருப்பது நல்லது,”என்றார்.

ஒருவாரம் கழித்து சுருதி தனியாகக் காலேஜ் சென்றாள். தொடர்ந்து அவளுடன் செல்வது என்பதும் முடியாத காரியம் என்றும் எனக்குத் தோன்றியது. மேலும் சுருதி மீது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இனிமேல் அவர்கள் அவளுடன் வர மாட்டார்கள் என்று நினைத்தேன்.
நான்கு ஐந்து நாட்கள் கழித்து பத்மநாபனை விஜாரித்தேன்.

“நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். சுருதி மட்டும் அவர்களோடு வருவதில்லை. ஆனால் நாலைந்து பெண்கள் அந்தப் பசங்களுடன் அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறார்கள்,”என்றார்.

எனக்குக்  கேட்க நிம்மதியாக இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து பத்மநாபன் அவசரமாகக் போன் செய்தார்.

“அந்த நான்கைந்து  பெண்களுடன் சுருதியும் சேர்ந்து விட்டாள்.. இப்போது எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டு வருகிறார்கள்,” என்றார்.

கதை சொல்லுவோம் – கேட்போம்

திருவண்ணாமலையில் நேரடி நிகழ்வான கதை கேட்க வாங்க – 14 நிகழ்வில் அசோகமித்ரன் கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கதையை சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் பவா செல்லதுரை சொல்ல கேட்போம் வாருங்கள்.. 

( மே 6ந் தேதி வெளியிடப்பட்டது )

நன்றி ஸ்ருதி டி‌வி