அத்தியாயம் 05. திருமலை

( படம்: லதா )
வந்தியத்தேவன் குதிரை திருவையாற்றைக் கடந்து வெண்ணாற்றங்கரையை நெருங்கியிருந்தது. குதிரைகளையும் சேர்த்து எடுத்துச் செல்லப் படகு வசதிகள் கொண்ட காவேரி, குடமுருட்டி, வெட்டாறு நதிகளை ஏற்கெனவே அவன் கடந்து வந்திருந்தான். இப்போது வெண்ணாற்றையும் கடந்து, தென் கரைக்கு வந்து இறங்கினான்.
குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துச் சிறிது நேரம் நடந்து போய்க்கொண்டிருந்தான். வைணவ சம்பிரதாயத்தின் நூற்றெட்டு திவ்யதேசங்களில் ஒன்றான நீலமேகப் பெருமாள் கோவிலைக் கடந்து செல்லும் போது அங்கு கூடியிருந்த சிறு கூட்டத்தில் ஒரு வாதப் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் சைவ, வைணவ மற்றும் பௌத்த மதங்களுக்கிடையே எந்த மதம் உயர்ந்தது என்பதைப் பற்றிய சர்ச்சைகளும், வாக்குவாதங்களும், வாதப்போர்களும் நடப்பது எங்கும் உள்ள ஒரு சாதாரண நிகழ்ச்சி. அந்தக் கூட்டத்தைத் தாண்டிக்கொண்டு நமது வீரன் செல்லும்போது ஒருவன் வேண்டுமென்றே குரலை உயர்த்திக் கட்டைக் குரலில் விவாதித்துக் கொண்டிருப்பதைக் கேட்டான்.
கொஞ்சம் தூரம் சென்றபின் அந்தக் குரலை எங்கேயோ கேட்டிருந்தது போல் தோன்றியது. ஆவலால் தூண்டப்பட்டுத் திரும்பிக் கூட்டத்தை நோக்கிச் சென்றான். குதிரையைத் தட்டிக் கொடுத்து நிறுத்திவிட்டு கூட்டத்தில் நடப்பதைக் கவனித்தான்.
வாதம், காவி உடை அணிந்த ஐந்து புத்த பிட்சுக்களுக்கும், கையில் குறுந்தடி வைத்த கட்டையும் குட்டையுமான ஒரு முன்குடுமி வைத்திருந்த வைஷ்ணவதாரிக்கும் எனத் தெரிய வந்தது. தன்னுடைய ஊகம், வைஷ்ணவதாரி நமது திருமலை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு வாதப் போரைக் கவனிக்கலானான்.

புத்த பிட்சுக்கள் “புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” என்று முழங்கினார்கள்.
“நாராயணன் நாமத்தைப் பாடுவோம், நாராயணனைத் துதிப்போம், நாராயணனின் பாத கமலங்களைச் சேருவோம்” என்று திருமலை கர்ஜித்தான்.
புத்த பிட்சுக்களுக்குத் தலைவராகத் தோன்றியவர் சற்று முன்னால் வந்து “வீர வைஷ்ணவதாரியே, இந்த ‘நாராயணா’ போன்ற பெயர்களையும் பார்ப்பவைகளையும் கடந்து ‘நிர்வாணா’ என்கிற எங்கும் வியாபித்திருக்கும் அமைதி நிலைக்குச் செல்ல எங்கள் பௌத்த மதம் வழி வகுக்கிறது. உடனே உன் வைணவ வேடத்தைக் களை. எங்களுடன் சேர்ந்து..”
அவர் சொல்லப்போவதை முடிக்குமுன்னே திருமலை “நிறுத்துங்கள், புத்த பிட்சுக்களே. எல்லாம் வல்ல ஸ்ரீமன்நாராயணனையா கடந்து வரச் சொல்லுகிறீர்கள்? அபசாரம். நாராயணனே முதற் கடவுள். அவரே முடிவில்லாத நிலையிலும் வியாபித்திருக்கிறார். என்ன சொன்னீர்கள்? ‘நிர்வாணா’ அமைதியான நிலையா?வெறும் சூன்யமான ஒன்றும் அற்ற நிலை! அங்கு ஆனந்தத்திற்கே இடம் இல்லை! எங்கள் வைணவத்தைப் பின்பற்றி ஸ்ரீமன்நாராயணனின் பாதார விந்தங்களை அடைந்தால் ஆனந்தம்! முடிவில்லாத ஆனந்தம்! எங்கும் பரவசமான ஆனந்த நிலை! இப்போது சொல்லுங்கள். சூனியமா? ஆனந்தமா? எது பெரியது?” என்றான்.
அதைக் கேட்டதும் புத்த பிட்சுக் கும்பல் மெதுவாக நழுவியது. அவ்வப்போது ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த வைணவக் கும்பல் திருமலையை அப்படியே தூக்கி ‘பஜகோவிந்தம், பஜகோவிந்தம்’ என்று ஆரவாரித்துக் கோவிலுக்குள் அழைத்துச் சென்றது. நமது வீரனும் அவர்களுடன் உள்ளே சென்றான்.

கோவில் அன்று பக்கத்திலிருந்த கிராமத்திலிருந்து வந்த பக்தர்களால் நிரம்பியிருந்தது. பெருமாள் சந்நிதியை அணுகியதும் திருமலை,
‘திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை
திருவடி சேர்வது கருதி செழுங்குருகூர்ச்சடகோபன்’
என்ற நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்த பாசுரத்தின் வரிகளை பக்திப் பரவசத்தால் பாடி, கடைசியில்,
‘திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந்து ஒன்றுமினே’
என்று முடித்தான்.
வந்திருந்தோர் அனைவரும் வந்தியத்தேவன் உள்பட மனமுருகிப் பாட்டைக் கேட்டார்கள். பின்னர் பட்டர் பிரசாதங்களை வழங்கினார். பெருமாளைச் சேவித்தபின் எல்லோரும் வெளியில் வந்தனர். திருமலையை வெகுவாக வாழ்த்தியபின் வைணவக் கும்பல் மெல்லக் கலைந்தது.
“வணக்கம் திருமலை!வாதப் போரில் தடி கொண்டு தாக்கப் போகாமல் ஆன்மீக வாதத்திலும் வல்லமை உண்டு என்பதை நிரூபித்துவிட்டாய். உன்னை அதற்காக மெச்சுகிறேன்” என்று வந்தியத்தேவன் பிரசாதங்களை உண்டவாறே சொன்னான்.
திருமலையும் மென்றுகொண்டே “வணக்கம் வந்தியத்தேவரே! உங்களை எதிர்பார்த்துத்தான் இங்கு வந்தேன்.”
“அடடா..என்ன இது திருமலை! திடீரென்று மரியாதையெல்லாம் பலமாக இருக்கிறதே?”
“என் உற்ற நண்பனானாலும் வல்லத்து அரசராகிவிட்டீர்கள் அல்லவா, ஆகையினால்தான்..”
‘ஓஹோஹோ’ என்று சிரித்த வல்லவரையன், “அரசனானாலும் நண்பன் நண்பனே!என்னை நீ என்றே அழைக்கலாம்” என்றான்.

இருவரும் மனித சந்தடி இல்லாத அமைதியான இடத்தை அடைந்து ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்தார்கள்.
வந்தியத்தேவன் “திருமலை, உன்னிடம் ஒரு முக்கிய காரியத்தைப்பற்றி கலந்தாலோசிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற்போல் நீ இங்கே வந்து நிற்கிறாய்! முதலில் என்னை எதிர்பார்த்து வந்தேன் என்றாயே, ஏன்?” என்றான்.
“குடந்தைக்கு அருகில் உள்ள மகாதானபுரத்தில் பாண்டியச் சதியாளர்கள் அடிக்கடி சந்தித்துக் கூடிப் பேசுகிறார்கள் என்ற தகவல்கள் எங்களுக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறன. அவற்றைப் பற்றிய செய்திகளை அறிந்துவர கைதேர்ந்த ஒற்றன் மாகீர்த்தியை அனுப்பியிருந்தேன். அவன் அறிந்து கொண்ட செய்தியை எனக்குத் தெரிவிக்குமுன் கொல்லப்பட்டிருக்கிறான். நீ சேவகர்களிடம் சொல்லி எங்களிடம் தெரிவிக்கச் சொன்ன செய்தி இன்று அதிகாலையில் கிடைத்தது. அதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாண்டவன் மாகீர்த்திதான் என்று தெரிகிறது. நீ குடந்தையிலிருந்து தஞ்சை வரக்கூடும் என்று எண்ணி உன்னை வழியில் சந்தித்து உண்மையை அறியலாம் என்று ஓடோடி வந்து கொண்டிருந்தேன்” என்று திருமலை சொல்லி நிறுத்தினான்.
“திருமலை! நீ கூறியவை உண்மையாகத்தான் இருக்கவேண்டும்! மாகீர்த்தியை சதியாளர்கள் துரத்திக் கொன்றதை என் கண்களால் பார்க்க நேர்ந்தது..!” என்று வல்லவரையன் மாகீர்த்தி கொல்லப்பட்டது, குறிப்பேடுகளை அவன் கண்டெடுத்தது, கருத்திருமனை அடையாளம் கண்டுகொண்டது, புதிர்களை முடிந்தவரைக் கணித்ததுவரை விவரமாகக் கூறினான்.
‘பெரியகோவிலூர்’ எந்த பகுதியைச் சேர்ந்தது என்ற விவரத்தை மட்டும் கணிக்க இயலவில்லை என்றும் கூறிய அவன் தொடர்ந்து,
“மாகீர்த்தி அடுத்த பௌர்ணமித் திங்கள் கிழமையில் பெரியகோவிலூரில் நடக்கப்போகும் ஆலோசனைக் கூட்டத்தைப் பற்றி அறிந்து கொண்ட உண்மை சதியாளர்களுக்கு எப்படியோ தெரிந்து போய்விட்டது. இதை அறிந்து கொண்ட மாகீர்த்தி தனக்கு எந்நேரமும் கேடு சதியாளர்கள் மூலமாக விளையலாம் என்று, தெரிந்த உண்மைகளை வேறு யாருக்கும் தெரியாதவாறு சித்திரங்கள் மூலமாக, குறிப்பேடுகளில் விளக்கி, யாரிடமாவது சேர்ப்பிக்கலாம் என்று எண்ணியிருந்தான் போலும்! என் மூலமாக அது சாத்தியமாயிற்று!” என்று கூறி முடித்தான்.
“சோழ நாட்டில் ‘பெரியகோவிலூர்’ என்று பெயர் கொண்ட ஊர்கள் மூன்று இருக்கின்றன. எங்கே, அந்தச் சித்திரங்களைப் பார்க்கலாம்” என்றான்.
வந்தியத்தேவன் மடியிலிருந்து பையை எடுத்து ஓலைச் சித்திரங்களை கீழே கொட்டினான். திருமலை அந்த சித்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பரிசீலனை செய்தான். அந்தப் புதிர்களின் நுணுக்கங்களைக் கண்டு வியந்து “வந்தியத்தேவா! நீ வீரனுக்கு வீரன்! ஒற்றனுக்கு ஒற்றன்! இந்த கடினமான புதிர்களை மிக எளிதில் கணித்திருக்கிறாய்! அதற்காக உன்னை மெச்சுகிறேன்!” என்று அவனைத் தட்டிக்கொடுத்தான். மறுபடியும் சித்திரங்களில் கவனம் செலுத்தினான்.
வந்தியத்தேவன் ‘மலை’ சித்திரத்தைப் பொறுக்கியெடுத்து “இதில்தான் பெரியகோவிலூர் இருக்கும் பகுதியின் புதிர் அடங்கியிருக்கிறது” என்று திருமலையிடம் காட்டினான்.
திருமலை அதைப் பார்த்து சிறிது நேரம் மௌனமானான். பிறகு “இது ஒரு மலைப் பகுதியைத்தான் குறிக்கிறது. அதில் வரையப்பட்டிருக்கும் உருவம் ஒரு பெண். எட்டுக் கைகள் படைத்த பெண் மானிடராக இருக்க வாய்ப்பில்லை. ஒரு தெய்வமாக இருக்கவேண்டும். இப்போது நான் சொல்லும் ஒரு கதையைக் கேள். தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் தற்போதைய இயற்கை எல்லையாக விளங்கும் மலைப் பகுதியைப் பற்றிய கதை அது. எட்டுக்கை கொல்லிப்பாவை அம்மன் அங்குள்ள மலைகளையெல்லாம் பாதுகாத்து வருவதாக அங்கு ஒரு ஐதீகம் நிலவிவருகிறது. அங்கு வழங்கிவரும் வரலாறு கொல்லிப் பாவையைப் பற்றி என்ன சொல்கிறதென்றால், ரிஷிகளும், முனிவர்களும் அவர்களது யாகங்களுக்கும் தவங்களுக்கும் அமைதியான இடமான அந்த மலையைத் தேர்ந்தெடுத்தனர். அரக்கர்கள் முனிவர்களைக் கொன்றும்; அவர்களின் யாகங்களையும் தவங்களையும் கெடுத்தும், மற்றும் பல்வேறு துன்பங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முனிவர்கள் அந்த மலைத் தெய்வமான பாவையை வேண்டினர்.
பாவை மனமிரங்கினாள். அவர்களின் கோரிக்கையை நிவர்த்திக்க முடிவு செய்தாள்!
அரக்கர்கள் ஒரு நாள் முனிவர்களின் தவங்களைக் கெடுக்க மலையை நோக்கி வந்தனர். படை மலையை நெருங்கி, மேலே செல்ல ஆரம்பித்தது. அப்போது ஒரு இனிமையான, மோகனச் சக்தி வாய்ந்த, எல்லோரையும் ஈர்க்க வைக்கும் ஒரு பெண்மணியின் சிரிப்பு அவர்களுக்குக் கேட்டது! படைகள் அதைப் பொருட்படுத்தாது மேலும் சென்றார்கள். சிரிப்பு அவர்கள் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது!

முனிவர்களை வேட்டையாட அரக்கர்கள் வெவ்வேறு திக்குகளில், தனித்தனி சிறு கூட்டமாகப் பிரிந்து செல்லத் தொடங்கினார்கள். ஒவ்வொருவருக்கும், அந்தச் சிரிப்பு, வெகு அருகாமையில், அவர்களை பிரத்யேகமாய் ஈர்ப்பதற்கென்றே கேட்டுக் கொண்டிருந்தது! அரக்கர்களின் மனம் சிதறியது! எல்லோரும் சிரிப்பு வந்த திக்கை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். மகுடியால் கட்டுண்ட பாம்புபோல் சிரிப்பு அவர்களை மேலே மேலே இட்டுக் கொண்டே சென்றது. இறுதியில் எல்லா அரக்கர்களையும் ஒரே இடத்திற்கு அந்த சிரிப்பு கொண்டு வந்து சேர்த்தது!
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது! பாவை எட்டுக் கைகளுடன் வானத்தைத் தொடுமளவு உயர்ந்து அவர்கள் முன் தோன்றினாள். பாவையின் சிரிப்புத் தொடர்ந்தது. ஆனால் அந்தச் சிரிப்பில் இப்போது எல்லோரையும் கவரும் மோகனம் இல்லை. அது ஒரு பயங்கரமான கோரச் சிரிப்பாக மாறியிருந்தது! பாவையின் வாயிலிருந்து அனல் கக்கியது!
அரக்கர்கள் பாவையின் விஸ்வரூபத்தைக் கண்டு, பயந்து அரண்டு போனார்கள்! தலை தெறிக்கதத் தாறுமாறாக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்கள். பாவையின் வாயிலிருந்து மின்னல் போல் வந்த இடியுடன் கூடிய நெருப்பு ஜ்வாலை அரக்கர்களைச் சுற்றி பெரிய பள்ளத்தாக்கை உருவாகியது. எங்கும் ஒரே புகை மண்டலம். கண்மூடித் தனமாக ஓடிச் சிதறிச் சென்ற அரக்கர்கள் அனைவரும் அதில் விழுந்து மாண்டார்கள்.
இப்படியாக அந்த மலைத் தெய்வமான பாவை தன்னுடைய தெய்வீகமான சிரிப்பினால் அரக்கர்களை விரட்டி, வீழ்த்தி அந்த மலைப்பகுதியில் அமைதியை நிலைநாட்டினாள். அரக்கர்களைக் கொன்று வீழ்த்தியதால் ‘கொல்லிப்பாவை’ என்று அந்த தெய்வத்தை அழைத்து வணங்கினார்கள்! கொல்லிப்பாவைக்குக் கோவில்கள் எடுக்கப்பட்டன. இன்றும் கொல்லிப்பாவை பூஜிக்கப்படுகிறாள். அவளது தெய்வீகச் சிரிப்பு போற்றப்படுகின்றது. அந்த எட்டுக்கை கொல்லிப்பாவையின் உருவம்தான் அந்த மலைக்கு முன் காணப்படுகிறது! கொல்லிப்பாவையின் மலைதான் இப்போது ‘கொல்லிமலை’ என்று வழங்கப்பட்டு வருகிறது! கொல்லிமலை பகுதியைத்தான் இந்தப் புதிர் குறிக்கிறது. மேலும் நந்தினி, ரவிதாசன், அமரபுஜங்க நெடுஞ்செழியப் பாண்டியன் போன்ற பாண்டிய ஆபத்துதவிகள் ஆதித்த கரிகாலனைக் கொன்று பழியைத் தீர்த்துக் கொண்ட பின் இங்கு வந்து ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த மிகவும் அடர்த்தியான மலைக் காடுகளில் கண்டுபிடிப்பது இயலாத காரியம். மற்றும் பெரியகோவிலூர், மலையின் உச்சியில் இருக்கிறது. பழமை வாய்ந்த அரப்பள்ளீஸ்வரர் அருள்பாவிக்கும் சிவன் கோவிலும் அங்குதான் இருக்கிறது” என்று சொல்லி முடித்தான்.

வந்தியத்தேவன் உடனே “இந்தக் கதை எனக்கு உகந்த செய்தியைத் தெரிவிக்கிறதே! என் உற்ற நண்பன், கொல்லிமலை அதிபதி, கடம்பூர் கந்தமாறன் எனக்கு இதில் நிச்சயம் உதவி செய்வான்” என்றான். ‘அவனிடமிருந்து ஏன் எட்டுக்கை கொல்லிப்பாவை பற்றிய ஐதீகத்தை இதுவரை தெரிந்துகொள்ளவில்லை?’ என்று நினைத்து வெட்கிக் குறுகினான்.
அதை ஆமோதித்த திருமலை “கந்தமாறன் தற்சமயம் தஞ்சையில்தான் இருக்கிறான்” என்றான்.
“மிகவும் நல்லதாகப் போயிற்று திருமலை. நாம் அவனைச் சந்திக்க தஞ்சைக்கு உடனே செல்வோம்” என்றான் வந்தியதேவன்.
திருமலையும் குதிரையில் அங்கு வந்திருந்தான். இருவரும் புரவிகளில் அமர்ந்து தஞ்சையை நோக்கிச் சென்றார்கள்.
(தொடரும்)