STROREACH என்கிற அமைப்பின் கீழ்  சில சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு பெசன்ட்நகர்  பீச்சில் ( ஆறுபடை முருகன் கோயில் அருகே) 20-30 இளைஞர்கள் ஆங்கிலத்திலோ தமிழிலோ கதைகள் படித்து கலந்துரையாடும் வழக்கம் நடைபெற்றுவருகிறது. குவிகம் ஆசிரியர் குழுவும் சென்று கேட்டு இன்புற்று வருகிறார்கள். அதில் படிக்கப்பட்ட  ஒரு கதைதான் இது: 

( கதையில்,  முக்கியமான ஒன்றைப்பற்றிச் சொல்லாமல் முடித்திருப்பது இதன் சிறப்பு) 

Image result for student and teacher in tamilnadu village schools

“எட்டு மணி ஆச்சு, எந்திரி கண்ணா…” என்ற குரலுக்கு அலுப்பு முறித்தான் அன்பு. அன்று விடுமுறை. ஆனாலும் அன்று பள்ளிக்குச் சென்றாக வேண்டும். வழக்கம்போல எழுந்ததும் தன் அறையிலுள்ள பரணைப் பார்த்தான்.

சிறு பிராயத்தில் இருந்தே அவன் தந்தையின் தோள்மீது அமர்ந்து அந்தப் பரணைப் பிடித்துத் தொங்குவது அவனுக்குப் பிடித்த விளையாட்டாக இருந்தது. நாளடைவில், தானே வளர்ந்து அதைப்பிடித்துத் தொங்குவது அவனது இலட்சியமாகவே ஆகியிருந்தது. அதற்கு எவ்வளவு வளர வேண்டும் என்று தினமும் தனக்குத்தானே கணக்குப் போட்டுக்கொள்வான். ஆனால் சில வாரங்களாக அவனால் அதைச் சரியாக ஊகிக்க முடியவில்லை. தொடமுடியாத வானம் போலத் தோன்றியது அந்தப் பரண்.

“அங்க என்ன வேடிக்க? Parent teachers meet போக வேணாமா?” என்றது சற்றே கடினமான குரல்.

குளியலறை போதிமரம் அவனுக்குப் பல சிந்தனைகள் கொடுத்தது. வழக்கமாக நல்ல மதிப்பெண் பெறும் மாணவன்தான். சென்ற மாதத் தேர்வில் கூட நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான். ஆனால் காலாண்டுத் தேர்வில் அவை நன்றாகக் குறைந்துவிட்டிருந்தன. அவனது வெண்ணிறத் துண்டு அவனுக்கு விடைத்தாள்போல் காட்சியளித்தது.

“இங்க்லீஷ் தமிழ் கூடப் பரவாயில்ல, கொஞ்சம் தான் கொறஞ்சிருக்கு. மத்ததெல்லாம் பாதிக்குப் பாதி தான் வாங்கிருக்க?” என்று அப்பா, அவன் மேல் விழுந்த வெந்நீர் போல் கொதித்தது நினைவுக்கு வந்தது.

தனக்கு உண்டான அசௌகரியங்களையும், செய்யாத வேலைக்கு சாக்குப்போக்குகளையும் அடுத்தவரிடம் சொல்லக் கற்றுக்கொள்ள அவனுக்குப் பத்து வருடம் போதவில்லை. “கொறஞ்சிடுச்சு…” என்று முணுமுணுத்தான்.

“அதான் ஏன்னு கேக்குறேன்.” என்று அவர் கோபக்கனல் கக்கியதில் அவனது உடல், தற்போது உள்ளதுபோல் வியர்வையில் நனைந்துவிட்டிருந்தது. பூட்டிய கதவின் வழியாக வெளியேறத் துடிக்கும் எறும்பு போல அவ்விடம் விட்டு அகலத் தவித்துக்கொண்டிருந்தான்.

காலத்தால் செய்த குறுக்கீட்டினால் அவனைக் காப்பாற்றிய அம்மாவின் “கெளம்பியாச்சா?” என்ற கூவல் கேட்டவனுக்கு கிடைத்த ஞானம் போதும் எனப்பட்டது.. ஆனது ஆகட்டும் என்று மனதை திடப்படுத்திக்கொண்டு கிளம்பிவிட்டான்.

“போன மாசம் முழுக்க திட்டு வாங்கி இருக்கேன். Science miss தான் class miss-ஆ வரணுமா?” என்று மனதிற்குள் குமுறிக்கொண்டு செல்ல வேண்டிய அறைக்குள் நுழைந்தான்.

Image result for parent teachers meeting in tamilnadu schools

“அன்புவோட parents-ஆ, உக்காருங்க…” என்றவர், மேசை மீது அடுக்கப்பட்டிருந்த பச்சை நிற அட்டைகளில் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்து, “தெறந்து பாரு. போன monthly test-க்கும் quarterly-க்கும் ஏன் இவ்ளோ வித்தியாசம்?” என்று முறைத்தார்.

“கேக்குறாங்கல்ல? சொல்லு.” என்ற அதட்டல் அவனுக்குப் பழக்கப்பட்ட குரல்.

“Classwork-ல இல்லாத question வந்துருச்சும்மா.” என்று தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தாயிடம் தஞ்சம் புகுந்தான்.

“அதெல்லாம் இல்ல சார், Last bench, first bench எங்க உக்கார வச்சாலும் board-ல எழுதிப் போடறத copy பண்ண மாட்டேன்கறான் சார். Remarks எழுதிருக்கேன், படிக்க சொல்லுங்க அவன” என்று பச்சை அட்டையை நோக்கிக் கைகாட்டினார்.

அன்பு அதை முகத்திற்கு நேராக வைத்துப் படிக்க முயன்றான்.

“ஏன் அதை வச்சி முகத்த மறைக்கிற?” என்ற குரல் மட்டுமே அவனுக்குக் கேட்டது. அவ்வட்டையை கீழே இறக்கிப் பிடித்த அன்பின் முதுகு கேள்விக்குறி போல் வளைந்திருந்தது. அட்டையோ அவன் மூக்கை வருடிய வண்ணம் இருந்தது. அவனது புருவங்களின் இடையில் ஏற்பட்ட சுருக்கங்களின் அழுத்தம் அவன் தந்தையின் இதயத்தைப் பிழிந்து கண்கள் வழியே சாறை வெளியே எடுத்துக்கொண்டிருந்தது.