அன்னியனில், அம்பி சபாவில் நந்தினிக்கு சான்ஸ் கேட்கப் போகும்போது முதலில் மாட்டேன் என்று மறுத்துப் பின்னர் அன்னியனாக மாறி அவரை துவம்சம் செய்தபிறகு ஒப்புக் கொள்வாரே அந்த நீலுவை மறக்க முடியுமா ?
பார்த்தாலே சிரிக்கவைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் சிலர். அதில் நீலுவும் ஒருவர். ததாரின்னா என்று என்ட்ரி ஆகும்போது பாடிக்கொண்டு வரும் போதே தியேட்டராகட்டும் – நாடக அரங்கமாகட்டும் அது களை கட்டிவிடும்.
அவரது சதாபிஷேகம் இந்தவாரம் நடைபெற்றது. வாழ்த்த வயதில்லை என்று சொல்லாமல் சொல்லி அவரை வணங்கிடுவோம்.
அவரைப் பற்றி நாம் என்ன சொல்வது? அவரே சொல்லி சங்கர் வெங்கடராமன் எழுதி அதை அல்லயன்ஸ் பதிப்பகம் “நாடகமே உலகம்” என்று பிரசுரித்த புத்தகம், நீலு அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் பல சுவையான தகவல்களைக் கொண்டுள்ளது.
அவற்றில் சிலவற்றைப் படித்து ரசிப்போம்:
- தேவனின் துப்பறியும் சாம்புவை நாடகமாகப் போட்ட நடராஜன் அவர்களின் நாடகத்தில் தான் நீலு முதன் முதலில் நடித்திருக்கிறார்.
- கூத்தபிரானின், தேன்மொழியாள் என்ற நாடகத்தில் தனக்கு ஒரு பிரத்யேகமான கேரக்டர் வேண்டுமென்று அடம் பிடித்து அற்புத ரோலை வாங்கியவர் ராமசாமி. அந்த கேரக்டர் பெயர் ‘சோ’. அதிலிருந்து தான் அவர் சோ ராமசாமி ஆனார்.
- விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் என்ற நாடகக் குழு ஆரம்பிப்பதற்கு நீலு ஒரு முன்னோடி.
- சோவின் எல்லா நாடகங்களிலும் இவருக்கென்று ஸ்பெஷல் பாத்திரம் உண்டு.
- டி கே எஸ், ஆர் எஸ் மனோகர், நவாப் ராஜமாணிக்கம், ஒய் ஜி பி , கே. பாலசந்தர், மேஜர் சுந்தரராஜன், வி எஸ் ராகவன் இவர்களுக்கு நடுவில் சோவின் நாடகக் குழு வெற்றிக்கொடி நாட்டியதென்றால் அது சாதாரண விஷயம் இல்லை.
- நீலு நடித்த முதல் திரைப்படம் ஆயிரம் பொய். கிட்டத்தட்ட 150 படம் பண்ணியிருக்கிறார்.
- நீலுவின் மனைவி சாந்தா எம் எஸ் சுப்பலக்ஷ்மியின் உறவினர்
- வி டி சுவாமி என்ற கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு எல் வி கிரியேட்டர்ஸ் என்ற டி வி சீரியல் தயாரிக்கும் கம்பெனியில் புரடக்சன் மேனேஜராக இருந்தார்.
- வாஷிங்டனில் திருமணம் சீரியலில் நடித்திருக்கிறார்.
- பெஹரின் தமிழ்ச் சங்கம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் பரிசு கொடுத்துள்ளது.
- திருப்பூரில், ரயில் நிர்வாகம் சோவின் நாடகக் குழுவிற்கான கோச்சை இணைக்க மறக்க ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து சோவும் மற்றவர்களும் மறியல் செய்து வேறு கம்பார்ட்மெண்டில் இடம் பிடித்து வந்தார்களாம்.
- கே பாலசந்தர், சோவோட நாடகங்களை டைரக்ட் செய்திருக்கிறார்.
- விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் போட்ட நாடகங்கள் :
- கோரக்கொலை, இன்டர்வியூ, டாக்டர் வேஷதாரி, திரிசங்கு, If it were to happen, , கல்யாணி, தேன்மொழியாள், If I get it, Why not, Don’t tell anybody, Wait and See, What for, Quo vadis, Call for Kingdom, சம்பவாமி யுகே யுகே, மனம் ஒரு குரங்கு, Saturday night, Is God Dead, சரஸ்வதியின் சபதம், முகமத் பின் துக்ளக், Tea house and the August Moon, என்று தணியும் இந்த சுதந்திர தாகம், இன்பக் கனா ஒன்று கண்டேன், உறவுகள் இல்லையடி பாப்பா, யாருக்கும் வெட்கமில்லை,உண்மையே உன் விலை என்ன, வைதேகி காத்திருந்தாள், வந்தே மாதரம், சட்டம் தலை குனியட்டும், ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட், நேர்மை உறங்கும் நேரம்

- நீலு, கிரேஸி மோகன் நாடகங்கள் பலவற்றிலும் (சமீபத்திய கூகிள் கடோத்கஜன் வரை) நடித்திருக்கிறார்.
- விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் வெளிநாட்டில் நாடகம் போட்டதில்லை
- நீலுவுக்கு அன்றும் இன்றும் என்றும் நண்பர்கள் நிறைய உண்டு.
