Image result for an old man in chennai pulling cart

ராமய்யாவுக்கு வண்டியை அதற்கு மேலும் இழுக்க முடியவில்லை.  நல்ல வேளையாக,  நகரத்தின் மிகுந்த போக்குவரத்து நெரிசல், உயிர்த்துடிப்புடன் இயங்கிக் கொண்டிருந்த அந்த நெடுஞ்சாலையிலும், ஒரு பெரிய ஆலமரம், தெய்வம்போல் நின்று, நிழலைத் தந்து கொண்டிருந்தது.

சுட்டெரிக்கும் வெய்யில்.  சூரியன் சென்னையை மட்டும் ஏன் இப்படிச் சுட்டெரிக்கிறான்? இந்த நகரத்தின்மீது அவனுக்கு ஏன் இத்தனை கோபம்?  வண்டியை நிறுத்தி விட்டு ராமய்யா, வேட்டியை மடித்து, இறுக்கிக் கட்டியிருந்த இடுப்புத் துணியை அவிழ்த்து உதறி, முகத்தையும், உடலையும் துடைத்துக் கொள்கின்றான்.

 

ராமய்யா இந்த அறுபத்திரண்டு வயதில், வாழ்க்கையில் எங்கெங்கோ சுற்றிவிட்டுக் கடைசியாகச் சென்னையில் வந்து விழுந்தவன்.  அவனுக்கு என்று சொல்லிக்கொள்ள யாருமே கிடையாது.  தாகம் தொண்டையை வறட்டுகிறது. தண்ணீர் கிடைக்குமா என்று தெரியவில்லை.

எதிரே, அந்த சிறு சாலை,  இந்த நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் இடத்தில் ஒரு வட்டமான போலீஸ் நிழற்குடை.  முதலில் ராமய்யா அதைக் கவனிக்கவில்லை.  பார்த்திருந்தால், அங்கு நிழலுக்குக்கூட நிற்காமல், கஷ்டப்பட்டாவது வண்டியை இழுத்துக்கொண்டு, இன்னும் ஒரு கிலோ மீட்டர் போய் தள்ளி நிறுத்தியிருந்திருப்பான்.

போலீசுக்கும், அவனுக்கும் இருந்த உறவுதான் எவ்வளவு விசித்திரமானது.  போன ஜென்மத் தொடர்போ?

தாமிரவருணித் தண்ணீர் ஜில்லென்று இறங்கிப் பழகிய தொண்டை ராமய்யாவுக்கு.  பதினைந்து வயது ராமய்யாவுக்குத் தாமிரவருணி ஈரம் பழகிப்போன ஒன்று.  அவன் போதாத நேரம் அந்த வயதில்தான் தொடங்கப்படவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்ததோ?

கிராமத்தில் ஆடு ஒன்று களவு போக, அதற்கு அவன்தான் உடந்தை என்று யாரோ காணாமலே சாட்சியும் சொல்ல, ஊர் பஞ்சாயத்தால் அவன் குற்றத்திற்கு உடந்தையாகக் கருதப்பட்டு, பஞ்சாயத்திற்கு இரண்டு ரூபாய் அபராதம் கட்டவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டான்.  கோபமே உருவான இளைஞனாக இருந்த ராமய்யா, இந்தப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குத் தலைவணங்க மறுக்க, விஷயம் பெரிதாகி, தேவையே இல்லாமல் போலீஸ்வரை போயிற்று. – உபயம் ஊர்ப் பெரிய மனிதர்கள்.

ஊருக்குப் பெரிய மனிதர்கள் என்று வந்து நின்றவர்கள் ஊதிவிட, அந்தப் பக்கத்துச் சின்ன காவல் நிலையம், காரணமேயில்லாமல் ராமய்யாவைப் புரட்டி எடுத்தது.  இனி இறந்தாலும் அந்த ஊருக்கு வரமாட்டேன் என்று கோபத்தில் சூளுரைத்து விட்டு, மதுரைக்குத் திருட்டு ரயில் ஏறி வந்த தன் தலை எழுத்தை, ராமய்யா இன்றளவும் நொந்து கொண்டுதான் இருக்கிறான்.

ஆஹா! அந்தத் தாமிரவருணித் தண்ணீர்தான் என்ன சுகம்! இப்பொழுது நினைத்தாலும் தொண்டையில் ஜில்லென்று ஒரு சிலிர்ப்பு!

மதுரையில் ராமய்யா ஒரு நான்கைந்து வருடங்கள் இன்ன வேலைதான் என்றில்லாமல், என்னென்னவோ வேலைகள் பார்த்து வந்தான். பூ கட்டுவது, இலை விற்பது, எப்பொழுதும் நடக்கும் கூட்டத்திற்கு மைக் கட்டுவது… நிரந்தரமாக அவனுக்கு வேலை என்று ஒன்று கிடைத்து அமரும் சமயம், வேலைக்குப் போகும்பொழுது வழியில் ஒரு கொலை விழ, அதைப் பார்க்க நேரிட்ட சாட்சிகளில் அவனும் ஒன்று.  தொடர்ந்த போலீஸ் தொல்லையால் அவன் நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்லவேண்டிய கட்டாயம் நேரிட்டது.  தண்டனை பெற இருந்தவனுக்குப் பின்னால் ஒரு பெரிய ரவுடி சாம்ராஜ்யமே இருந்ததால், அந்த மீனாட்சிக் கோட்டையும் அவனுக்குப் பாதுகாப்பு அற்றுப் போக இரவோடு இரவாக, அவன் டிக்கெட் எடுத்து, அடுத்த கட்டப் பயணமாகக் கோவை நோக்கிப் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அப்பொழுதெல்லாம் கோவையில் தண்ணீர் பிரச்சனை.  தாமிரவருணித் தண்ணீரில் நனைந்த சுகத்தை மறக்காத தொண்டைக்கு, வைகையும், சிறுவாணியும் அடுத்ததாகத்தான் பட்டது.  நெஞ்சில் அந்த ஈரம் நிற்கவில்லை.  சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து, உறவு என்ற ஒன்று, யார் என்று கூட அறியாமல் நாடோடியாக வாழ்க்கையை ஆரம்பித்த ராமய்யா என்ற மனிதனுக்கும், வள்ளி அம்மை என்ற பெண்ணுக்கும் கோவையில்தான் பரிச்சயம் ஏற்பட்டது.  அவனுக்கு அச்சு அலுவலகத்தில் வேலை. பக்கத்தில் இருந்த ஒரு மில்லின் அலுவலகத்தைப்  பெருக்கும் வேலை வள்ளியம்மைக்கு.  இந்தத் தொடர்பு பிறகு அவன் பக்க உறவு என்ற யாரும் இன்றியும், திருமண உறவாக உருப்பெற்றது.

திடீரென்று ஒருநாள் அவன் வேலை பார்த்துக்கொண்டிருந்த பிரஸ்ஸில் அதிரடி போலீஸ் சோதனை.  தடை செய்யப்பட்டிருந்த ஏதோ ஒரு தீவிரவாத இயக்கத்திற்கான சுவரொட்டிகள் அச்சடித்த அச்சகம் என்ற முறையில்,  அங்கு பணி புரிந்தவர்களும் கைதாக, இவனும் அவர்களில் ஒருவனானான். மீண்டும் போலீஸ் கெடுபிடிகள், தொந்தரவுகள். சிறைவாசம் வேறு.  இது பல வாரங்கள் தொடர்ந்தது.  கூலிக்காக சுவரொட்டிகள் ஒட்டிய காரணம் ஒன்றைத்தவிர அவன் மீது பெரிய குற்றத்தைச் சுமத்தக் காவல்துறையாலும் முடியவில்லை.  பெரிய பின்னணி என்பது இல்லாதிருந்த காரணத்தால், அவனுக்கு ஜாமீன் கொடுத்து, அவனை வெளியே கொண்டுவர யாரும் முயற்சிக்கவும் இல்லை. இது அந்த நீதிபதிக்கே புதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும்.  தீவிரவாத இயக்கங்கள் சம்பந்தப்பட்டவர்கள்  போலீசாரால் கைது செய்யப்படும்போது, அவர்களுக்கு எப்படியேனும் ஏதாவது ஒரு முறையில், திடீரென்று முளைக்கும் சமூக நல விரும்பி அமைப்புக்களோ, அல்லது ஏதாவது ஒரு கட்சியின் முகத்திரையாகச்  செயல்படும் சில மனித உரிமைக் கழக அமைப்புக்களோ, நிச்சயமாகப் பின்னணியில்  இருந்து  உதவிகள்  அனைத்தும் செய்யும். இவனுக்கு அத்தகைய ஆதரவு ஏதும் கிடைக்காத காரணமே, அந்த நீதிபதியை யோசிக்க வைத்திருக்கவேண்டும்.  ஒரு சாதாரணக் கூலியை தீவிரவாதி அந்தஸ்துக்கு உயர்த்தாமல், அவர் அவனை எச்சரித்து, விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

குறுகிய அந்த சிறை வாழ்க்கையை அவன் அனுபவித்துக்கொண்டிருந்த அந்தப் போதாத நேரத்தில், விதி இன்னமும் அவனுடன் விளையாடியது.  பிரசவ வலியில், சரியான நேரத்தில் கவனிக்க மனித உறவுகள் இன்றி, வள்ளியம்மை பிரசவ நேர துர்மரணம் எய்த, சிசுவும் இறந்தே பிறந்தது.  ஈமச்சடங்குகள் செய்ய அவனுக்குத் தற்காலிக அனுமதி கிடைத்தது.  சிதை மூட்டி, அவர்களைச் சாம்பலாக்கி, சிறை திரும்பு முன்னரே, ராமய்யாவுக்கு வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்களே மாறிப்போயின.  சமூக அமைப்பின் பாதுகாவல் அரணான காவல் துறை என்பதே ராமய்யாவுக்கு ஒரு  கசப்பான, வேண்டாத உறவாக மாறிவிட்டது.  உறவு என்பதே  இல்லாமற்போன அந்த மனித மனத்தில், வேண்டாத உறவு என்பதாக ஒன்று புதிதாக முளைத்தது.  போலீசைத் தொலைவில் பார்க்க நேரிட்டால் கூட, ராமய்யா முகத்தைத் திருப்பிக்கொண்டு, செறுமித் துப்பி, நகர்ந்து போவது, ஒரு இயற்கையான நிகழ்ச்சியானது.

வள்ளியம்மைக்குப் பிறகு சிறுவாணியும் அவனுக்குக் கசந்துவிட, ஒரு லாரியில் ஏறி அவன் தொடர்ந்த பயணத்தில், திருச்சி இடறியது.

கொஞ்ச காலம் காவிரி அவனுக்கு சுகமான அனுபவமாகத்தான் இருந்தது.  வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல், வயிற்றைக் கழுவமாத்திரம் என்றே அவனுக்கும் ஒரு ஜோலி தேவைப்பட, அதுவும் அவனுக்குச் சில நாட்களில் கிடைத்தது –  ஒரு தனியார் பேருந்துக் கம்பெனியில். அவன் வயிறு கழுவ, போதுமான வேலையாக அது இருந்தது.  பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்து நிறுவனமாக அது இருந்தாலும், சில குறிப்பிட்ட சரக்குகள் அங்கு வந்த பேருந்துகளில் ஏறுவதும், இறங்குவதும்கூட  அங்கு வாடிக்கையாக இருந்தது.  ஏற்றி இறக்குவது அவன் தொழிலாயிற்று.  அதற்கு அதிக நேரம் தேவைப்படாது என்பதால், அந்த பஸ் கம்பெனி வாசலில் நின்றுகொண்டு, வருகின்ற, போகின்ற பஸ்களின் கால அட்டவணை, போய்ச் சேரும் இடம் இவற்றை உச்சஸ்தாயிக் குரலில் கூவிக்கூவி வாடிக்கை சேர்ப்பதும் அவன் தொழில் தர்மங்களில் ஒன்றாயிற்று.  ஆனால் நிரந்தரம் என்பது அவன் தலையில் எழுதப்படாத ஒரு விதியோ!

தேர்தல் கூட்டங்களுக்கும் எல்லாக் கட்சிகளின் மாநில மகாநாட்டுக் கூட்டங்களுக்கும் பிரசித்தி பெற்ற அந்தக் காவிரிக் கரையில் அவன் அனுபவம் வேறானது. திருச்சியில்தான் அவனுக்கு முதலில் நட்பு என்ற ஒன்றே பரிச்சயமானது -மாரிமுத்துவின் மூலம்.  மாரிமுத்து கம்பெனி வாசலில் வண்டியில் கடலை-சுண்டல்-பலகாரம் என்று விற்பவன்.  ராமய்யாவுக்கு மாத்திரம் அவன் கடையில் மாதாந்திரக் கணக்கு என்ற அளவில் வளர்ந்த நட்பு.  மாரிமுத்து ஒரு கட்சியின் மாநில மகாநாட்டுக் கூட்டத்துக்கு, சுண்டல்-கடலை வண்டியுடன் வியாபாரத்திற்குப் புறப்பட்டபோது, ஒரு மாறுதலுக்காகத் துணைக்கு வருமாறு இவனை அழைக்க, ஒரு நாள் ஓய்வுபெற்று இவனும் துணைக்கு மாரியுடன் போக நேரிட்டது.

திடீரென்று மாநாட்டுக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம், பெரிய அடிதடி ரகளை, சில கைகள், சில கால்கள் வெட்டப்பட, அங்கு ஒரு போர்க்களம்.  அது ஆளும் கட்சி மாநாடு.  எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே செய்த குழப்பம் என்று இது உருமாறி, குழப்பத்தை ஏற்படுத்திய எதிர்க்கட்சி ஆட்களில் ஒருவனாக ராமய்யாவும் கைதானான்.  நிஜமாகவே இவன் வேலை பார்த்த பேருந்து நிறுவனர் எதிர்க்கட்சி பிரமுகராகவும் இருந்ததால், இவன் மீதான குற்றச்சாட்டு அரசியல் சாயம் பெற்று வலுவானது.  அவர் ஏவித்தான் இவனைப் போன்ற ஆட்கள், கூட்டத்தில் கலாட்டா செய்ததாக நம்ப இடம் ஏற்பட்டது.  எவ்வளவு எடுத்துரைத்தும் கேட்காமல் போலீஸ் அவர்கள் பாணியில் அவனை நன்றாகவே கவனித்துக்கொண்டது.  இவனை வெளியே கொண்டுவர,  கம்பெனி படாதபாடுபட வேண்டியதாயிற்று.  “ ஏண்டா சோம்பேறி! லீவு எடுத்துக்கிட்டு, அந்தக் கூட்டத்துக்குப்போய், எனக்குத் தண்டச் செலவு வச்சிட்டயேடா!” என்று நியாயமான கோணத்தில் முதலாளி   கத்த காவிரியையும் இரண்டு நாட்களில் ஒதுக்க வேண்டியதாயிற்று.

ராமய்யா பிறகு ராஜமுந்திரி, அலகாபாத் என்றெல்லாம் கூடப் போயிருக்கிறான்.  கோதாவரி, யமுனா என்று எல்லா தண்ணீரும் அவனுக்குப் பழகியது.  ஆனால் விசித்திரமாக அங்கும் ஏதாவது ஒரு  முறையில் அவனுக்கும், போலீசுக்கும் பழைய உறவு தொடர்ந்தது. தாமிரவருணி இனிப்பு அவன் தொண்டையிலும், போலீஸ் என்ற கசப்பு  அவன் நெஞ்சிலும்  இருந்து இன்றளவும் இறங்கவில்லை. கடைசியாக ராமய்யா வந்து விழுந்த இடம் சென்னை. இந்த ஊரில் ராமய்யாவுக்குப் பிடிக்காமல் போனது போலீஸ் மாத்திரம் அல்ல.  தண்ணீரும்கூட. எவ்வளவு குடித்தாலும் நெஞ்சில் சுவையில்லை.  தாகமும் அடங்குவதில்லை.

வெய்யிலோ மகா கொடுமை! தொழில் கிடைக்கும் நேரமாகப் பார்த்து சுட்டெரிக்கிறது.  இன்னும் இரண்டு கிலோ மீட்டராவது வண்டியை இழுக்கவேண்டும்.  ஒரு மாடு சுமையில் பாதியாவது இருக்கும். கூலி இருபது ரூபாய் கிடைக்கும்.

ராமய்யாவுக்கு அந்த ஆலமரம்  நிஜமாகவே ஆண்டவன் –  அவனுக்காகவே படைத்த வரமாகவே பட்டது. அவன் துண்டால்  முகத்தைத் துடைத்து எடுக்க, எதிரே ஒரு டிராபிக் போலீஸ்

போலீஸ் எந்த உடுப்பில் இருந்தால் என்ன? உருவம் மாறவா போகிறது?  ராமய்யாவுக்கு உடனே அந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்று இருந்தது.

வந்த போலீஸ்  ராமய்யா அருகே வந்து நின்றான். இளம் வயதுதான்.  தொப்பியைக் கழற்றி விட்டுக் கைக்குட்டையால் , முகத்தையும், தலையையும் ஓட்டத் துடைத்துக் கொண்டான்.

“ நல்ல வெய்யிலில்ல?”

“……….” ராமய்யாவிடமிருந்து பதிலில்லை.

“ நான் இங்ஙன வந்து மூணு மாசமாச்சு… அதோ, அந்தக் கொடைதான் நம்ம கோட்டை.” சாலைக்கு நடுவே இருக்கும் டிராபிக் போஸ்டைக் காட்டுகிறான்.

“ அப்பப்போ இந்த வண்டியை இளுத்துக்கிட்டுப் போற, பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.  ஏன்யா! இந்த மதிய வெய்யில்ல,  தார் ரோட்டுல, செருப்புக்கூட இல்லாம, இவ்வளவு சுமையையும் வச்சிக்கிட்டு வண்டி இளுத்துக்கிட்டுப் போறியே, சூடு கொறஞ்சப்புறந்தான் வண்டி கட்டுவேன்னு யாருக்கா இருந்தாலும் சொல்ல வேண்டியதுதானேய்யா!”

“ பொழப்பு அப்பிடி….”  ராமய்யா வேண்டாவெறுப்பாகப் பதில் சொல்கிறான்.

“ கொஞ்சம் இரு! ..” சொல்லியவாறே அந்தப் போலீஸ் இளைஞன், மரத்திற்கு மேற்காக சாலையைத் தொட்டவாறு சுவருடன் ஒட்டி இருக்கின்றாற்போல் தோற்றம் அளிக்கும் மின்சாரப் பெட்டி இணைப்புப் பக்கம் போகிறான்.  அந்த மின்சாரப் பெட்டிக்குப் பின்னால் சுவற்றுப்  பக்கமாகத் தொங்கும் ஒரு பையையும், கூடவே ஒரு ஜோடி செருப்பையும் எடுத்து, ராமய்யா அருகே வருகிறான்.  அந்த ஜோடி செருப்பை ராமய்யா காலடியில் போடுகிறான்.

“ வெய்யில்ல வண்டி கட்டமாட்டேன்னா வெட்டியா போடப் போறானுவ?  இல்லே சாயரட்சைக்கு சரக்குப் போனா, துட்டு தரமாட்டேன்னு சொல்லிருவாங்களா? எங்களுக்குத்தான் தலை எளுத்து. வேகாத வெய்யில்ல நிக்கணும். வேண்டாதவங்களைப் புடிக்கணும். கைநீட்டி கவர்ன்மெண்ட் சம்பளம் வாங்குறோமில்ல… அது இளுக்குறபடி  ஆடணும்.. உனக்கு என்னய்யா தலை எளுத்து.. இந்தா! இந்த செருப்பை மொதல்ல மட்டிக்க..”

ராமய்யா தயங்குகிறான்.

“என்ன ரோசனை? இங்கிட்டு செருப்புத் தைக்கிறவன் ஒருத்தன் அந்த எம்.இ.எஸ். பாக்ஸ் பக்கம், சின்ன கோணி கட்டிக்கிட்டு கடை வச்சிருந்தானே? அவன் போன வாரம் பூட்டான்யா! மிஞ்சினது  இந்த சோடிதான்.  உரிமை கொண்டாட யாரும் இல்ல… போன வாரம் இதப் பார்த்தப்பவே எனக்கு உன் நெனப்பு வந்தது.  நான்தான் அதை அங்கிட்டு பத்திரமா எடுத்து வச்சேன். உன் காலுக்குன்னு அளவெடுத்தாப்போல சரியா இருக்கு பாரு! மாட்டிக்க..!”

ராமய்யாவைக் கட்டாயப்படுத்தி, கால்களில் அணிய வைக்கிறான்.  கால் குறுகுறுக்கிறது. புது அனுபவம்.

கொண்டுவந்த பையிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எடுக்கிறான்.  ஒரு விழுங்கு குடிக்கிறான்.  ராமய்யாவிடம் நீட்டுகிறான்.

“ குடி” ராமய்யா வாங்கத் தயங்குகிறான்.

“ பயப்படாதே! நல்ல தண்ணிதான்.  படிச்ச பொண்ணைத்தான் கட்டியிருக்கேன்.  இந்த மெட்ராஸ் தண்ணியக் காச்சாம குடிக்க வுடமாட்டா அவ. வெளிலயும் நான் குடிக்கக் கூடாதுன்னு கண்டிசன்… மீற முடியுமா?  நீயும் கொஞ்சம் தொண்டைய நனைச்சிக்க.”

ராமய்யாவுக்கு நிஜமாகவே அந்த சமயம் அந்தத் தண்ணீர் தேவைப்படுகிறது.  இருந்தாலும் காக்கிச் சட்டையிடம் வாங்கியாவது குடிக்க வேண்டுமா?

“ அட குடிங்கறேன்ல… இந்தத் தாளாத வெய்யில்ல, வண்டி இளுக்கறியேன்னுதான்  பாட்டில நீட்டுறேன்.  ஊத்திக்க… இந்த ஏரியால தண்ணி கெடக்கறதே  ரொம்பப் பாடுய்யா..”

ராமய்யா கையில் அவன் பாட்டிலைத் திணிக்கிறான்.

ஒரு மிடறு உள்ளே போகிறது. இன்னும் கொஞ்சம். ராமய்யா பாட்டிலை அந்த கான்ஸ்டபிள் இளைஞனிடம் கொடுக்க, அவன் பாட்டிலை மூடிப் பையில் வைத்துக் கொள்கிறான்.

“ எங்க ஆத்தா அடிக்கடி சொல்லும். வெய்யில்ல காயற தொண்டைக்குத் தண்ணி குடுக்கணம்டா…. இல்லைன்னா, நாம  பொறவி எடுத்து ஒரு பிரயோசனமும் இல்லேன்னு… ம்…. ஆயிரிச்சு…. அது போய் சேர்ந்து மூணு வருசம்…… ஆனா சொன்னது மனசுல நிக்குது.  உன்னையப் பார்த்தப்போ அதுதான் நெனவுக்கு வந்தது…… சரி வரட்டா! அடுத்த டூட்டி நாலு மணிக்கு.  வூட்டுக்குப் போவணும்.  ஆமா தண்ணி நல்லா இருந்திச்சா? கார்ப்பரேசன் தண்ணிதான்.  இருந்தாலும் காச்சின தண்ணி, அதான் கேட்டேன்.

அவன் போய் மறைகிறான்.

வெகு காலத்திற்குப் பிறகு, ராமய்யாவுக்குத் தொண்டை ஈரமாகிறது. ஈரம், நெஞ்சில் இறங்குகிறது.