எழுபது எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர்களில் பெருமளவிற்கு ‘சுஜாதா’வினால் ஈர்க்கப்பட்டு முயற்சி செய்தவர்கள். முன்னமே எழுதி வந்தாலும் சுஜாதாவின் படைப்புகளைத் தீவிரமாகப் படித்து வந்தவர்கள். சுஜாதாவின் தாக்கம் பல எழுத்தாளர்களை ஆக்கிரமித்தது. அவரை மானசீக குருவாகக் கருதுபவர்களும் ஏராளம்.
இந்நிலையில் அவர்கள் எழுத்துக்கள் சுஜாதாவை நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது சர்வ சாதாரணம். ஒரு சிலரே தங்களுக்கென்று ஒரு கதையாடல் பாணி கைவரப் பெற்றார்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபட்டார்கள். அவர்களில் சட்டென்று நினைவிற்கு வருபவர் இரா முருகன்.
புதுக் கவிதையில் (கணையாழி -1977) தொடங்கிக் கவிஞராக, பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். வானொலியில் தனது கதைகளை வாசித்துள்ளார். திரைக்கதை வசனங்களும் எழுதியுள்ளார். ஆனந்தவிகடனில் தொடர்கட்டுரை, மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு, ஆங்கிலத்திலிருந்து கவிதை மொழிபெயர்ப்பு என்று பல பங்களிப்புகள். இவரது ‘அரசூர் வம்சம்’ ஆங்கில மொழிபெயர்ப்பு கண்ட நாவல். மாந்திரீக யதார்த்த (magical realism) வகையில் குறிப்பிடும்படியாக எழுதுபவர்.
இவரது செரங்கூன் மனிதர்கள் சிறுகதை ..
* * * *
ஈஸ்வரி, இந்தப் பெயர் உணர்த்தக்கூடிய, புலர் காலையில் துயிலெழுந்து, குளித்து, கூந்தலில் நுனி முடிச்சும், கையில் அர்ச்சனைத் தட்டுமாக, ஒலிபெருக்கியில் அம்பாள் பாடல் காதில் அறையும் கோயிலை நோக்கி நடக்கிற, அல்லது ‘மாமா, அத்தை சேர்ந்து நில்லுங்கள், நமஸ்காரம் பண்ணிக் கொள்கிறோம்’ என்று காலில் மெட்டி ஒலிக்க, மாக்கோலம் உலராத தரையில், வயிறு பெருத்த கணவனின் மனம் பொருந்தாத, தாமதமான இயக்கத்தோடு கடைக்கண்ணால் பார்த்து இணை சேர்ந்து வணங்கி எழுகிற, பிம்பங்களிலிருந்து விலகியவளாக செரங்கூன் வீதியைத் துயில் உணர்த்தப் போகிற பெண்.
என்று தொடங்குகிறது.
டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலைபார்க்கும் 28 வயதுப்பெண்ணான ஈஸ்வரி, குழந்தை இல்லாதவள். கணவனும் அது போன்றே ஒரு கடையில் வேலை செய்பவன். இரவு வெகுநேரம் வரை ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ சினிமா வீடியோவில் பார்க்கின்ற ஈஸ்வரி – ‘அதை நீயே பார்த்து அழுதுக்கிட்டு இரு, என்று சொல்லி மாரடோனாவின் சர்ச்சைக்குரிய உலகக்கோப்பை கோல் எத்தனாவது முறையாகவோ பார்க்கும் பழனியப்பன்.
காலையில் அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்பும்போது, தான் வேலைக்குப் போகவில்லை. வீவு சொல்லிவிடு என்கிறான். காரணம் மறுநாள் பங்குகொள்ளப்போகும் தீமிதி.
முதன் முதலாக தீமிதிக்கப்போவதாக சொன்ன தினம் நினைவிற்கு வருகிறது. தனக்குப் பயமாக இருக்கிறது. வேண்டாமே என்கிறாள். விரதமெல்லாம் இருக்குமே என்று கேட்கிறாள்.
“ஆமா, ஒரு மாசத்திற்கு விரதம். நாளையிலிருந்து சவரம் கிடையாது. கவிச்சி கிடையாது. நீயும் கிடையாது..”
இதை மென்மையாகச் சொல்லியிருக்கலாம். வழித்து எரிகிற ரோமமும், கடித்துத் துப்புகிற எலும்பும், நீயும் எல்லாம் எனக்கு ஒன்றுதான். தேவையானால் வேண்டும். இப்போது தேவையில்லை.
கடைவேலையில் வித்தியாசமான வாடிக்கையாளர்கள்… காணாதது கண்டதுபோல் வாங்கிக் குவிக்கும் இந்திய யாத்திரிகள். அடிக்கடி வெளிநாட்டுப் பொருள் விற்கும் வியாபாரிகளுக்காக பொருள் வாங்கவரும் ‘கூரியர்’ சிங்காரம் அண்ணாச்சி. இங்கேயே பிறந்து இதுவரை இந்தியாவே போகாத ஈஸ்வரிக்கு முன்பெல்லாம் தமிழர்களைக் கண்டால் நம்ம ஊர்க்காரங்க என்ற உணர்வு இருந்ததுண்டு.
எல்லா ஊரும் ஒன்று தான் என நினைக்கும் பழனியப்பனுக்கு ஆட்டோ மெக்கானிசம் படித்துவிட்டு ஆஸ்திரேலியா போய்விட எண்ணமும் உண்டு,
வேலையில் மும்மரமாக இருந்துவிட்ட ஈஸ்வரிக்கு கணவனுக்கு லீவு சொல்லத் தாமதமாக நினைப்பு வருகிறது. பொது டெலிபோன் சென்று அவன் வேலைபார்க்கும் கடைக்குப் போன் செய்கிறாள். யாரிடம் சொல்வது? நினைவிற்கு வருவது உஷா நாயர் என்னும் பெயர்.உஷா நாயருக்கு முன்னமே தெரியுமாம். சொல்லிவிட்டளாம்.
பழனியப்பனுக்கும் அந்த உஷா நாயருக்கும் தொடர்பு இவளுக்கும் தெரிந்திருக்கிறது. இருவரும் சேர்ந்து சுற்றுவதைப் பலரும் பார்த்திருக்கிறார்கள்.
“யாரோட சுத்தினா உனக்கென்ன? இங்கு என்ன பிள்ளையா குட்டியா, வாசல்லேயே காத்திருக்கிட்டுருந்துட்டு, அப்பா, அப்பான்னு ஓடி வந்து காலைக் கட்டிக்க?”
.. “இந்த வீட்ல பிள்ளை அழுகைதான் கேட்கலை. உன் புலம்பலாவது நிக்கக்கூடாதா? குடிக்காதே.. குடிக்காதே.. சே .. வேற பேச்சு கிடையாதா?”
உடன் வேலைபார்க்கும் சுபாவிற்காக அவளுடன் ஷாப்பிங் போகிறாள். ஒரு சீனக்குழந்தையும் அதனைக் கூட்டிக்கொண்டுபோகும் கிழவரும், சலனமில்லாமல் ரிக்ஷாவில் போகும் ஜப்பானிய வயோதிக டூரிஸ்டுகள்.. எல்லா இயக்கமும் ஏதோ ஒரு விதிக்குக் கட்டுப்பட்டு அமைதியா இழைந்தோடுவது மனதுக்கு இதமாக இருக்கிறது.
பஸ்ஸில் திரும்புகையில் சில மலேசிய இளைஞர்களும், இவளைத் தீர்க்கமாகப் பார்க்கிற ஒரு பெண்ணும்.
ஏதேதோ எண்ண ஓட்டங்கள்.
பெண்ணே, உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? இந்தக் கண்கள் மட்டும் போதுமா கணவனைக் கட்டிப்போட? ஆறு மீட்டர் அளந்து துணி வெட்டுவாயா? டீகோ மாரடோனா தீமிதித்தால் பார்க்கப் போவாயா?
ஒரு பெரிய கூட்டம் ஒருத்தொருத்தராகப் போய் வி.சி.ஆர். விலை விசாரிக்கிறார்கள். சுருள்சுருளாகப்பட்டுத்துணிக்கு நடுவிலிருந்து ஈஸ்வரி எட்டிப்பார்கிறாள்.’ஏமாந்துவிடாதே பெண்ணே’ – மோ கிழவி சொல்கிறாள். ‘உனக்கு குழந்தை பிறக்க நேர்ந்துகிட்டேம்மா, இந்தா குங்குமம்’ சிங்காரம் அண்ணாச்சி பிரசாத்தை நீட்டுகிறார். ‘சீக்கிரம், சீக்கிரம்’ பழனியப்பன் தட்டுதடுமாறித தீக்குழியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறான். மேளக்காரர்கள் ஆவேசமாகக் கொட்டி முழக்குகிறார்கள். ‘ சீக்கிரம், சீக்கிரம்’. பழனியப்பன் ஒரு காலை எடுத்து தீயில் இறங்க முற்பட .. கால் தடுமாறி ..
“வேணாங்க, ஐயய்யோ வேணாங்க” ஈஸ்வரி என்ற அந்த இருபத்தெட்டு வயது சிங்கைத் தமிழ்ப்பெண், சுற்றி இருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்க்க அழ ஆரம்பித்தபோது, வெளியே மழை வலுத்துக் கொண்டிருந்தது .
என்று முடிகிறது.
* * * *
நிகழ்வுகளுக்கிடையே, அலைபாயும் மனப்போராட்டத்தை இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதும், தகவலும் எண்ண ஓட்டங்களும் மாறிமாறி சொல்லும் ‘ஜம்ப் கட்’ உத்தியும் இக்கதைக்கு வளமூட்டுகின்றன.
சமீபத்தில் வெளியான வைக்கோல் கிராமம் , மாய யதார்த்த சிறுகதை இணையத்தில் கிடைக்கிறது.

