
வெண்பா தான் தமிழ் பாக்களிலே மிகவும் கடினமான அமைப்பு!
புகழேந்தி என்ற புலவர் நளன் சரித்திரத்தை நள வெண்பாவாக அமைத்து வெண்பாவிர்க்கோர் புகழேந்தி என்ற பட்டத்தைப் பெற்றவர்!
திருக்குறளின் 1330 பாட்டுக்களும் வெண்பாவின் வகையில் சேர்ந்தவை !
வெண்பாவின் பொது இலக்கணம்: .
” செப்பலோசை உடையதாய் , ஈற்றடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற் சீராய்,இயற்சீரும் வெண்சீரும் கலந்து , இயற்றளையும், வெண்டளையும் மருவி, ஏனைய சீரும் தளையும் வாராது, பெரும்பாலும் நாள், மலர், காசு,பிறப்பு என்ற வாய்பாட்டில் முடிவதே வெண்பாவின் பொது இலக்கணம். “
( ஐம்பது ஆண்டுகளுக்கு முன் என் தமிழாசிரியர் திரு த.ச. பாலசுப்பிரமணியன் சொல்லிக்கொடுத்த நினைவிலிருந்து)

எப்படி வெண்பா எழுதுவது என்று பின்னால் பார்க்கலாம்.
இந்தப் பக்கத்தில் சில வித்தியாசமான வெண்பாக்களைப் பார்க்கலாம்.
கவிஞர் கண்ணதாசன் நடத்திய இலக்கிய இதழ் “தென்றல்’.
அதில் ஒருமுறை வெண்பாப் போட்டிக்குக் “கொண்டு வந்து போட்டுக் கொளுத்து’ என்ற ஈற்றடியைக் கொடுத்தது.
அப்போட்டிக்கு வந்த வெண்பாக்களில் ஒன்று கவிஞரின் நெஞ்சை மிகவும் கவர்ந்தது.
அவ்வெண்பா இது:
அந்திவரை இரந்தேன், அன்பே! பிடியரிசி
தந்தார்; உணவு சமைத்திடுவாய்! – இன்றேனும்
உண்டிடட்டும் நம்சேய்கள்; ஓடிப்போய்க் காய்சருகைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து.
ம.இலனியன் எழுதிய அந்த வெண்பா நல்ல கவிதைக்கு இலக்கணமாகிறது என்று போற்றியுள்ளார் கண்ணதாசன்.
கிரேஸி மோகன் வெகு காலமாக வெண்பாவில் நகைச்சுவையைத் தெளித்து வருகிறார். அதுக்கு ஒரு சாம்பிள்:
மசாலா தோசையென்றும் மாம்பழத்து ஜூஸ் என்றும்
குஷாலாயிருக்குமென்று குல்ஃபியும் — மஜாவா
ஸாட்டர்டே சாயங்காலம் சக்கைப்போடு போட்டதனால
வாட்டரா’கப் போச்சே பணம்!
அவர் கமலஹாசனைப் பற்றி எழுதிய வெண்பா இது:
‘பத்தாறு (அறுபது) ஆனாலும் பார்க்கப் பதினாறு
பித்தேற வைக்கும் பவுருஷமே சொத்தாய்
சினிமாவை சேர்த்துவைத்த சாகா வரமே
இனிமேலும் நூற்றாண்(டு) இரும்’
சுஜாதா பழைய கணையாழி இதழில் எழுதிய வெண்பா:
விண் நெடுகப் பரவி, பாரிஸ் வனிதையர் போல்
கண்ணடிக்கும் தாரகை யெல்லாம் எண்ணி வைத்த
முட்டாள் ஒருவர் இருக்கார்; அவர் நமக்கு
எட்டாத கடவுளப்பா!
நா.பா. தீபம் இதழில் ஒரு வெண்பாப் போட்டி
வைத்திருந்தார். ஈற்றடி வேண்டாம் வரதட்சணை. வெண்பாப் பிரியர் சுஜாதா பிரபலமானவராக
இருந்த போதும் ஒரு வெண்பா எழுதி அனுப்பினார்.
“பத்துபவுன் தங்கம் பளிச்சென்று கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி-மத்தபடி
பாண்டுவைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சணை.”
சுஜாதாவின் ஆள் டைம் அதிரடி வெண்பா:
மிசா மறைந்து எமெர்ஜென்சி விட்டுப்போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
பாத்திரம் ஒன்று எடுத்துக்கொண் டெல்லோரும்
_த்திரம் குடிக்கவா ரும்.
