முன்னுரை!

எமபுரிப்   பட்டணம் என்ற இந்தத் தொடரை இரண்டு பிரிவாக எழுதப் போகிறேன்.

Image result for எமன்

 

முதல் பகுதி , புராணங்களை  மையமாக வைத்து அவற்றில்  குறிப்பிட்டுள்ள கதைகள் , கிளைக் கதைகள் போன்றவற்றை விளக்கும் கதைத்தொகுப்பு.  முக்கியமாக கருட புராணம், விஷ்ணு புராணம் ¸மார்க்கண்டேய புராணம், சிவபுராணம், கந்த  புராணம் , சாம்ப புராணம்  போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும். அதில் வரும் கதைச் சம்பவங்கள் பெரும்பாலும் உங்களுக்குத் தெரிந்தவையாக இருக்கக்கூடும்.  அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அந்த சிக்கலில் ஒரு சௌகரியமும் உள்ளது.

முதலில் சிக்கலைப் பற்றிச் சொல்லுவோம்.  ஒவ்வொரு புராணத்திலும் கதை கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது . அவற்றில் வரும் பாத்திரங்கள் ஒன்றாக இருந்தாலும் அவைகளின் தன்மை மாறுபட்டு இருக்கின்றது. எது சரி , எது தவறு  என்பது யாருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

உதாரணங்கள் சொல்லி உங்களை ஆரம்பத்திலேயே பயமுறுத்தி ஓடச் செய்யப்போவதில்லை.

இதில்  என்ன சௌகரியம் என்றால்,  இந்தப் புராணப் பகுதியிலும்  கொஞ்சம் நமது கற்பனையைக் கலந்து கொள்ளலாம்.இந்தப் புராணத்தில் கொஞ்சம், அந்தப் புராணத்தில் கொஞ்சம் என்று எடுத்துக் கொள்ளும்போது  நம் கதை  ஒரு புதுப்  புராணம்போல் ஆகலாம். அதைத்தான் புராணக் கதைகளைத் தொலைக்காட்சித் தொடராக எடுக்கும் நண்பர்களும் செய்கிறார்கள். ராமாயணம் , மகாபாரதம் என்று நாம் அதிகமாகப் படித்துப் பழக்கப்பட்ட கதைகளைச் சொல்லும் போதும்,  ‘ இது மக்களை மகிழ்விப்பதற்காக மூலத்தை ஒட்டி சற்று மாறுபட்டுச் சித்தரித்துள்ளோம் ‘ என்று சுற்றி வளைத்து,    “பொறுப்புத் துறப்பு” என்ற பகுதியில் கோடிட்டுக் காட்டி விடுவார்கள்.

அந்தப் “பொறுப்புத் துறப்பின்” சௌகரியம் எனக்கும் கிட்டும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

ஆனால் நாம் காணப் போகும் எமபுரிப்பட்டணத்தின்  இரண்டாம் பகுதி முற்றிலும் புதியது. முழுக்க முழுக்க நம் கற்பனையே. இதற்கும் முதல் பகுதிக்கும் சில நிகழ்வுகள் இணையாக வந்தால் அவை தற்செயலாக நேர்ந்தது என்றே கொள்ளவேண்டும். இன்றைய  விஞ்ஞான உலகத்தில்  எமன்  எப்படித்  தன் வேலையைச் செய்கிறான் ? பூலோகத்திலிருந்து அவனிடம் செல்லும்  மனிதர்கள்  –  அரசியல்வாதிகள், இலக்கிய கர்த்தாக்கள்,திரைப்பட நாயகர்கள் , மேதைகள், அழகிகள், விஞ்ஞானிகள் ,  மன்னர்கள், சாமானியர்கள் எல்லோரும் எமபுரிப்பட்டணத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறப்போவது இந்தப் பகுதி .

இது ஜாலியாக இருக்கும்.

இந்த இரண்டு பிரிவான கதை, புராணமும், நவமும் கலந்ததாக இருக்கும்.  புராணம் என்பது பழையது. நவம் என்பது புதியது. இரண்டும் கலந்து வருவது இந்தத் தொடரின் சிறப்பு.

இன்னொரு  முக்கியமான கருத்து. மனிதன்  இறந்த பின் எங்கு செல்கிறான், அவன் இந்த உலகில் செய்த நல்லது,கெட்டது அவற்றிக்குத் தண்டனைகளும், பரிசுகளும் கிடைக்கின்றனவா, அவன் மறு பிறவி எடுக்கிறானா, போன்றவை  மிகவும் ஆழமான தத்துவார்த்த எண்ணங்கள். எல்லா மதங்களும் இவற்றை வெவ்வேறு பாணியில் சொல்லுகின்றன. அவற்றை எண்ணிப் பார்க்கும் போது  அவை ஒரு திகில் கலந்த பயமாகவே இருக்கின்றன.

Related image

பயம் தான் மனிதனை ஆட்டிப்படைக்கும் முதல் சக்தி. அந்தப் பயத்தில் மனிதன் நல்லதும் செய்கிறான். கெட்டதும் செய்கிறான். பயம் ஒருவனை நல்லவனாக வைத்திருக்கின்றது என்றால் அந்தப் பயமே அவனுக்குத் தீங்காகவும் மாறிவிடுகிறது. பயப்படாத ஜீவ ராசியே உலகில் இல்லை. உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இந்தப் பய உணர்ச்சியே மூலாதாரம்.மனிதனின் ஒவ்வொரு வெளிப்பாடும் பயத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. பயத்தை மனிதன் ஒருகாலும் வெல்ல  முடியாது. வென்றது மாதிரி நடிக்கலாம். அது உள்ளூர அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கும். எல்லா பயங்களிலும் மனிதன் அதிகமாகப் பயப்படுவது எம பயம் – அதாவது மரண பயம் ஒன்றிற்குத்தான். சாவைப் போல மனிதனைப் பயமுறுத்துவது வேறொன்றும் இல்லை. அது அவனை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். பிறந்த உடனேயே ஏன் அதற்கு முன்னாலேயே மரிக்கும் சிசுக்கள் உண்டு. நூறு ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் துடிதுடித்து இறந்த மனிதர்களும் உண்டு. இந்த சாவு எப்போது யாரை எங்கு எவ்வாறு பிடிக்கும் என்பது தான் புரியாத புதிர். மனித வாழ்வில் அவிழ்க்க முடியாத மிகப் பெரும் புதிர் – சாவு .

Related image

இந்தப் புதிர்தான் – அத்துடன் இணைந்த பயம்தான் மனிதனுக்கு அவன் வாழ்வில் சுவாரஸ்யம் கூட்டுகிறது என்று சொன்னால்  ஏற்றுக்கொள்வீர்களா?

உண்மை அது தான்.

இந்த சுவாரஸ்யமான பய உணர்ச்சியுடன் எமபுரிப்  பட்டணத்துக்குச் செல்வோம் !

 

 

எமபுரிப் பட்டணம்

Related image

Related image

( படங்கள்  நன்றி :  ” சனி” தொடர் – கலர்ஸ் டி வி )

ஆதித்யன் என்ற பெயர்கொண்ட சூரிய தேவன்*  தன்  ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் தகதக என்ற பொன் கிரணங்களைப் பாய்ச்சிக்கொண்டு  பவனி வந்துகொண்டிருந்தான்.  கீழ்த் திசையில் அவன் உதிக்கும்போதே உலகைச் சூழ்ந்துள்ள இருள் விலகிச் சென்றன. அவன் தான் பிறந்த விதத்தை எண்ணிக் கொண்டே பவனி வந்து கொண்டிருந்தான்.

பிரளயத்திற்குப் பிறகு பகவான் விஷ்ணு உலகத்தைப் படைக்க எண்ணம் கொண்டு பிரும்மனைப் படைத்தார். பிறகு பிரஜாபதிகளைப் படைத்தார். மரீசி முனிவர் அதிதி  தேவியின் மூலம் மண்ணிலும் விண்ணிலும் பரவி இருக்கும்மாதிரி ஒரு அண்டத்தை ஏற்படுத்தினார். அந்த அண்டத்திலிருந்து சூரியன் தோன்றினான்.   அவனுக்குள் இருந்த இருபது பிரபைகளும், ஆயிரம் கிரணங்களும்  மழை , பனி , வேனில் என்று பல பருவங்களை ஏற்படுத்தி பூவுலகையும், வான் உலகையும் உய்வித்துக் கொண்டிருந்தன.

சூரிய தேவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. உதயகிரியிலிருந்து புறப்படும் சூரியன் ஜம்பூத்வீபத்தில் பிரகாசித்து ஈசான்யத்தில்  இருக்கும் பரமேஸ்வரனைத்  துதித்து,  அக்னியைப் போற்றி, மற்ற பிதுர்க்களுக்கு ஆசி  வழங்கி , நடுவில் இருக்கும் நாராயணன், பிரும்மா அவர்களை வணங்கி, இந்திரனுடைய அமராவதிப் பட்டணம் மற்றும் தேவர்களின் பட்டணங்களில் சஞ்சாரம் செய்து ஒவ்வொரு திக்குப் பாலகர்களும் வணங்கி வாழ்த்தத் தன் பயணத்தைத் தினமும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.   அதனால்,  அவன் தன்னைப்பற்றியும் தன் பொன்னிறக் கிரணங்கள் பற்றியும் அளவுகடந்த பெருமை கொண்டிருந்தான்.

அவன் கவனம் எப்போதும் எங்கும் சிதறவே சிதறாது. அவனது குதிரைகளும் நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து அடி பிறழாமல் அமைதியாகவே சென்றுகொண்டிருக்கும். அவன் தேர்க்கால் படும் இடங்களைச் சுற்றி தேவர்களும் கந்தர்வர்களும், அசுரர்களும், மனிதர்களும் , நாகர்களும், அப்சரஸ்களும் , மற்ற விலங்கு, பறவை , புழு பூச்சி இனங்களும் அண்ணார்ந்து பார்த்து சூரியனுக்கு வணக்கம் சொல்லிவிட்டே செல்வார்கள்! தான் கர்வப்பட்டால் அது தப்பில்லை என்ற எண்ணம் அடிக்கடி சூரிய தேவனுக்குத் தோன்றும். அந்தப் பெருமை அவன் தேஜசை அதிகப்படுத்தியது.  தனக்கு நிகர் என்று சொல்ல யார் இருக்கக் கூடும் என்று யோசித்துக் கொண்டே வந்த சூரியனின் கண்கள் திடீரென்று கூசுவதுபோல் ஒரு கணம் தோன்றியது. ‘சே ! சே ! என் கண்களாவது, கூசுவதாவது? நான்தான் மற்றவர்களைக் கூசும்படிச் செய்ய வல்லவன். இது ஏதாவது பிரமையாக இருக்கும்.’  என்று எண்ணினான்.

ஒரு வேளை என் கர்வத்துக்குப் பங்கம் நேரிட, யாராவது தேவ அசுரர்கள் ஏதாவது ஏற்பாடு செய்திருப்பார்களோ என்று எண்ணிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். யாருமில்லை. மீண்டும் கொஞ்ச தூரம்தான் சென்றிருப்பான்.   அப்போது  மறுபடியும் அதேபோன்று   அவன் கண்களை வேறு ஒரு கிரணம்  தாக்குவதை உணர்ந்தான். அது அவன் கண்களை அப்படியே கட்டிப்போட்டது. அதுவும் சில நொடிகள்தான். உடனே அது மறைந்து விட்டது. தன் ஒளிப் பாதைக்கு எதிராக மற்றொரு ஒளி வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். அன்றைய தினம் அவன் பயணம் தொடர்ந்தது. அந்தக்  கிரணம் மீண்டும் வரவில்லை. அவன் மனமோ ஒரு நிலையில் இல்லை.

மறுநாள் அந்த  இடத்துக்கு வந்தபோது அதே போன்று கண் கூசும் நிலையை உணர்ந்தான். நிச்சயமாக அங்கு ஏதோ ஒரு தங்கமோ, வைரமோ, ரத்தினமோ மலை வடிவில் புதியதாக தோன்றியிருக்கக் கூடும் என்று எண்ணித் தேரை, ஒரு கணம் நிறுத்தி, கண்களை இடுக்கிக்கொண்டு  உற்றுப் பார்த்தான்.

இது தேவதச்சன் விஸ்வகர்மாவின் மாளிகையல்லவா ?  அது என்ன பொன்னால் ஆன தாமரைக் குளமா? அதில் இங்கும் அங்கும்  ஒரு பெண்  நீந்துகிறாளே ?  யார் அவள்? அடேடே ! அவள் தேக காந்தியிலிருந்தல்லவா அந்த ஒளி வருகிறது? என் பொன் கிரணங்களை மங்கச்செய்யும் அளவிற்கு அவள் தேக ஒளி மின்னுகிறதே ? யார் அவள்? 

juhi-parmar-in-shani-serial

சூரியனின் ரதத்தில் பூட்டியிருந்த ஏழு குதிரைகளும் சிலிர்த்துக் கொண்டன – தங்களுக்குள் சிரித்துக் கொண்டன. ரதம் மட்டும் தன் பாதையில் தொடர்ந்து சென்றது. சூரியனின் மனம் மட்டும் அந்தக் குளத்தில் குளிக்கும் குமரியின் முதுகுப்புறத்திலேயே தங்கிவிட்டது.

(தொடரும்)

 

நவம்:

எமபுரிப்பட்டணத்தில் அன்றைக்குத் தீபாவளிப் பண்டிகை. தீபாவளிக்கு முந்திய இரவு.

வாட்டசாட்ட கம்பீரத்துடன்  எமன் அட்டகாசமாகத் தன் அரியணையில் அமர்ந்திருந்தான். சித்திரகுப்தனுக்கும் கிங்கரர்களுக்கும்   நன்றாகத் தெரியும். எப்போதும் ஒருவித கோப முகத்துடனேயே இருக்கும் எமன் இன்று சிரித்து மகிழும் திருநாள். நரகபுரி,சொர்க்கபுரி இரண்டின் கதவுகளும் திறக்கப்பட்டிருக்கும். அங்கு இருக்கும் அனைத்து மக்களுக்கும் அன்று பூலோகத்தைப் பார்க்கும் சந்ததர்ப்பம் கிடைக்கும். அவர்கள் வான வீதிக்கு வந்து அதன் விளிம்பில் நின்று கொண்டு பூலோகத்தில் நடக்கும் தீபத் திருநாளை மனம் திருப்தி அடையும்வரை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

“அதோ விளக்குகளை ஏற்றத்  தொடங்கிவிட்டனர்.பூமி ஜகஜ்ஜோதியாக மின்னுகிறது  பாருங்கள்! “ என்று கிங்கரன் ஒருவன் உரத்த குரலில் கூறினான். அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி திதி அன்று பூமியில் மக்கள் ஏற்றும் தீபம்  எமபுரிப் பட்டணத்தை நோக்கி  என்பதில் எமன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

“ தலைவரே! எம தீபம் ! எம தீபம் ஏற்றிவிட்டார்கள் ! ” என்று அவன் கணக்கன் சித்திரகுப்தன் கூறியதும் துணைத் தலைவன்  தர்மத்வஜன் அருகிலிருந்த கோட்டை மணியை அடித்தான். உடனே  நரகாபுரியிலிருந்து எண்ணை நிறைந்த கொப்பரையை  ஆயிரக் கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் தூக்கிக் கொண்டு  வந்தார்கள். சொர்க்கபுரியிலிருந்து  ஆயிரம் அடி  நீளமுள்ள திரியும்  கொண்டுவரப்பட்டது. வழக்கமாக எமன் தன் கையாலேயே அந்த எமபுரித் தீபத்தை ஏற்றுவான்.

‘ இன்று ஏன் இன்னும் நம் தலைவர் தீபத்தை ஏற்ற முன்வரவில்லை? நாம் ஏதாவது தவறு செய்து விட்டோமா? ‘ என்று அனைத்துக் கிங்கரர்களும் தவிக்க, தர்மத்வஜன் முன்வந்து கணீரென்ற குரலில் பேசினான்.

“ எனதருமை எமபுரிப் பட்டணவாசிகளே! நாளை சதுர்த்தசி ! தீபாவளிப்  பண்டிகை ! அதனால் இன்று பூலோகம் முழுதும் எம தீபம் ஏற்றி நம் தலைவரை வாழ்த்தி,  அவர் அருளை வேண்டி  பூஜை செய்கின்றனர். அதனை அங்கீகரிக்கும் வகையில் நாமும் இந்த எமபுரித் தீபத்தை ஏற்றுவோம்.  வழக்கமாக நம் தலைவரே  இந்த தீபத்தை ஏற்றி நமக்கெல்லாம் விருந்துகொடுப்பார். ஆனால் இன்று அவர் ஏற்றப்போவதில்லை. இந்த தீபத்தை ஏற்றுவதற்காக முதன் முறையாக நமது மதிப்பிற்குரிய விருந்தாளி ஒருவர் வருகிறார். அதோ அவரே வந்து விட்டார்! அவரை வாழ்த்தி வரவேற்போம்” என்றான் தர்மத்வஜன்.

வாசலில் அழகுத் தேவதையாக நின்று கொண்டிருந்தாள் யமுனா !!

(தொடரும்)

 


  • சூரியனின் பெருமையை உபபுராணமான சாம்ப புராணம் விவரிக்கிறது