Image result for srirangam streets in 1970s

“அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே”

ஒவ்வொரு தடவையும் அவசர அவசரமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போய் பெருமாளை சேவிச்சு ராத்திரியே ஊர் திரும்பற மாதிரி ஆயிடறது. அதனால இந்த தடவை நாலு நாள் தங்கி, தண்ணி இருக்கோ இல்லியோ, கொள்ளிடம் போய் ஒரு குளியல், காட்டழகிய சிங்கர் கோயில், காலாற அம்மா மண்டபம், போற வழில ராகவேந்திர மடம், அப்புறம் தெற்கு வாசல்ல அந்த பக்கோடா கடை இருக்கான்னு பாக்கனும், ரெங்கராஜா தியேட்டர்ல ஒரு படம், தேவில ஒரு படம், அப்புறம் கிடைத்த நேரமெல்லாம் ஸ்ரீரங்கம் கோயிலையும் வீதிகளையும் சுத்திச்சுத்தி சுவாசிக்கனும்.

பாய்ஸ் ஹைஸ்கூல் போய்ட்டு அப்டியே மறக்காம ஆர் எஸ்வி பாத்துட்டு வரனும். என்ன மனுஷம்ப்பா.. கணக்கை அப்டியே ரத்தத்துல ஏத்தினவராச்சே.

யாரையும் துணைக்கு கூட்டிக்கல. தனிமைல அப்டியே பழைய நினைவுகளோட சஞ்சரிக்கறச்ச யார் கூடஇருந்தாலும் தொல்லைதான்.

“என்ன திடீர்னு” என்று கேட்ட கீதாவிடம்

“தினசரி வாழ்க்கைல இருந்து ஒரு மாற்றம் வேண்டிருக்கும்மா. ரொம்ப நாளா நினச்சுண்டு இருந்தேன். நேத்து சடார்னு தோணித்து. போயிட்டு வந்துடலாமேன்னு கெளம்பிட்டேன்”.

தானும் கூட வரட்டுமான்னு கீதா கேக்கல. எனக்கான இடத்தை அவளும், அவளுக்கானத நானும் ஆரம்பத்துல இருந்தே கொடுத்துப் பழகிட்டோம்.

திடீர்னு புறப்பட்டதால ட்ரெயின்லாம் யோசிக்கல. பஸ்ஸப் பிடிச்சு திருவானைக்கால இறங்கி ஆட்டோ பிடிச்சு ஸ்ரீரங்கம் வந்து ரூம் போட்டாச்சு.

பல்ல தேச்சுட்டு, தோள்ள துண்டப் போட்டுண்டு கொள்ளிடம் கிளம்பினேன். கீழ வாசல்கிட்ட போறச்ச,

“டேய் கண்ணா எப்டிடா இருக்க” என்று தோளில் தட்டியவரை திரும்பி பார்த்தேன்.
நெரச்ச தலையும் ஒரு மாச தாடியோட அடையாளம் தெரியல.

“என்னடா முழிக்கற? நாந்தாண்டா ரெங்கன்… ரெங்குடு”

அஞ்சாறு வருஷம் முன்னால ஊருக்கு வந்தப்ப பாத்தது. அதுக்குள்ள இப்டி கெழவனா போய் அடையாளமே தெரியலயே.

“ரெங்குடுவா என்னடாது தாடியும் வேஷமும்”

“சோம்பேறித் தாடிதான். வி.ஆர்.எஸ் கொடுத்துட்டேன்.. ஆபிஸா கொள்ள போறது தினமும் ஷேவ் பண்ண அதான் அப்டியே விட்டாச்சு. ஆமா, நீ எங்கடா இந்தப் பக்கம்?”

“சும்மா நாலு நாள் இங்க தங்கி இருந்துட்டு போலாம்னு”

“சும்மா நாலு நாளா?” நம்பிக்கையில்லாமல் பார்த்தான்.

“ஆபிஸ் இல்லியோ”

“அது எப்பவும்தான் இருக்கு. சும்மா ஒரு மாறுதலுக்கு”

“ஏகாதசிம் போது இப்டி நாலு நாள் வந்திருக்கப்டாதோ. பெருமாள நன்னா ஆயிரக்கால் மண்டபத்துல சேவிச்சுருக்கலாம். வேடுபறி மாதிரி கம்பைன் பண்ணிண்டு வந்திருக்கலாம்”

“இல்ல சாதாரண நாள்ல வந்து இங்க தங்கிட்டு போலாம்னுதான்” என்றவனை விசித்திரமாக பார்த்து விட்டு

“சரிடா நா வரேன். மத்யானம் கும்மோணம் கிளம்பறேன். மச்சினி பொண்ணுக்கு ரெண்டு நாள்ள கல்யாணம். நாந்தான் எல்லா ஏற்பாடையும் கவனிச்சுக்கறேன்”

அவன் போன பின் கிழக்கு ரெங்கா தாண்டி, கொள்ளிடம் நோக்கி போறச்ச கண்லபட்ட கழுதைய கூட பாசமா பார்த்தேன்.

எப்பவும் போல் கணுக்கால் தண்ணியில் கொள்ளிடம். அங்கே காய்ந்திருந்த புல்வெளியில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். நந்து போட்ட பவுன்ஸர்ல வடக்கு சித்திரை வீதி மொட்ட முரளி மண்டைல அடி பட்டு அவன் பொழச்சதே பெரிய விஷயமா போச்சு. அவனோட அப்பா வந்து எங்க வீதில போட்ட சத்தத்துல நானும் நந்துவும் அப்பலேர்ந்து கிரிக்கெட் மட்டயக்கூட தொடபயந்தோம்.

ஏதோ நினைவுகளுடன் தண்ணீரிலேயே ரொம்ப நேரம் உட்கார்ந்து விட்டு பின் நிதானமாக ஒரு குளியல் போட்டு கரையேறினா ஒரே பசி. ரூமுக்கு போய் ட்ரஸ்ஸ மாத்திண்டு சாப்டுட்டு அப்டியே படுத்தவன் நல்லா தூங்கிட்டேன்.

Srirangam olden days vaganam

ரெண்டு மணி நல்ல வெயில். இப்ப போனா பெருமாள் சேவையாகுமேன்னு கிளம்பினேன். பெருமாள் சன்னதில நல்ல கூட்டம். இது வேலைக்காகாதுன்னு கம்பத்தடி ஆஞ்சனேயர் கிட்ட சித்த நாழி உட்கார்ந்திருந்திட்டு அப்டியே ப்ரதக்‌ஷனமா வந்து சொர்க்கவாசல் கிட்ட பல்லிய பார்த்துட்டு தாண்டினப்ப, சின்ன வயசுல அந்த வழியா இராப்பத்தும் போது ஆழ்வார ஏளப் பண்ணிண்டு போனது ஞாபகம் வந்தது. அரைப் பரீட்சை லீவு, நானும் நந்துவும் கோயிலே கதின்னு இருப்போம். அப்ப மட்டுமே கிடைக்கற செல்லூரப்பம்க்கும் பல்லை உடைக்கும் உருப்படி என்ற பட்சணத்துக்கும் ஏக டிமாண்ட். தாத்தாக்கு கூட அம்மா அம்மியில் பொடி பண்ணிக் கொடுப்பா.

மெல்லிய புன்னகையுடன் வெளியேவந்து வலது புறமாகவந்து மேலப்பட்டாபிராமன், தன்வந்திரி  தாண்டி தாயார் சன்னதிக்குப் போனால், ப்ராட்டி, பெருமாள் அளவு ரொம்ப பிகு பண்ணிக்காமல் அருமையான தரிசனம் தந்தாள். மஞ்சக் காப்பை தாமரை இதழில் சுத்திக் கொண்டு வெளியே வந்தபோது பங்குனி உத்திர மட்டயடி உத்ஸவ நினைவுகளில் புன்னகையுடன் படிகளில் அமர்ந்தேன். தாயார் சன்னதி கோஷ்டி, பெருமாள் மேலே பழங்ளை விட்டு எறிந்த போது, ஒரு முறை பெருமாள் பக்கத்திலிருந்த என் மேல் சொடேரென்று மேலே விழுந்த பழக்கலவையும், அந்த வேகத்தில் அதிர்ந்து பிறகு அன்று முழுவதும் நினத்து நினைத்து நானும் நந்துவும் சிரித்துக் கொண்டே இருந்ததும் ஞாபகம் வர என் புன்னகை இன்னும் விரிந்தது.

“நீ..நீங்க கண்ணனில்ல”

லேசாக காதுகளிடை நரை, வைரத்தோடு, வைர மூக்குத்தி மினுமினுக்க, அந்த பளீர் சிரிக்கும் கண்கள். அட கமலா.

“கமலாதானே “

“ஆமா நீங்க எங்க இருக்கேள் இப்ப? ஆத்துல அழச்சுண்டு வரலியா” என்றபடியே, கண்கள் என்னைச் சுற்றித் தேடின.

“இல்ல நா மட்டும்தான் வந்தேன். சென்னைலதான் இருக்கேன். நீ எங்க இருக்க? எத்தன பசங்க?”

“ நா பெங்களூருல இருக்கேன். ஒரே பொண்ணு. போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு”

அவள்  ஏதோ கேள்விகள் கேக்க இயந்திரத்தனமா பதில் சொல்லிண்டே இருக்க மனசு பழய நினைவுகளில்.

நந்து ரொம்ப ஆசைப்பட்டான் கமலா மேல. ஆனா சொல்ல பயம். அவ பார்வைல இருந்து எங்களால எதுவும் கண்டு பிடிக்க முடியல. வேலை கிடச்சவுடனவேணா அம்மாகிட்ட சொல்லி அவாத்துல கேக்க சொல்லலாமாடான்னான். நா அவனுக்கு மேல பயந்தாங்குள்ளி. ஆமாண்டா வேலைகூட இல்லாம எப்டீன்னேன். அவன் வேலையோட வரதுக்குள்ள அவளோட கல்யாண பத்திரிகை வந்துடுத்து. அவ மனசுல என்ன இருந்ததுன்னு கடைசிவரை தெரியல. நந்துவோட சொல்லாமல்போன காதல் கதை முடிவுக்கு வந்தது.

“நந்து என்ன பண்றான்” னு அவ கேள்விக்கு நா பதில் சொல்றதுக்குள்ள,

“உன்னை எங்கல்லாம் தேடறது” என்றபடியே வந்த  இளம் பெண் அவளுடைய மகளாக இருக்கலாம்.

“சரி அப்புறம் பார்க்கலாம்” என்றபடியே நகர்ந்தாள்.

பழசை அசைபோட்டுண்டே ரொம்ப நேரம் தாயார் சன்னிதியிலேயே உட்கார்ந்திருந்துவிட்டு, வெளியேவந்து சாப்டுட்டு ரூமுக்கு வந்தேன்.

“சீசந்திக்கு காசு”

ரெண்டு பசங்க என்னைக் கடந்து சென்றார்கள். அட இன்னும் இந்தப் பழக்கம் இருக்கா?

Image result for sapparam in srirangam

நானும் நந்துவும் சின்ன வயசுல ஸ்ரீஜெயந்தியப்ப வீடு வீடா ஸ்ரீஜெயந்திக்கு காசுன்னுபோய் , வசூலித்த காசுல கலர் பேப்பர், க்ருஷ்ணர் படம், கோந்துல்லாம் வாங்கி, ஆத்துல இருந்த அட்டை, அத்தோட சிராய் அதிகம் இல்லாத விறகை தரையில் தேய்த்து மொழு மொழுன்னு ஆக்கி, அழகா ஒரு சப்பரம் பண்ணி தூக்கிண்டு, நாலு வீதியும் கோலாகலமா கத்திண்டே போனது ஞாபகம் வந்தது. என்ன க்ருஷ்ணருக்கு விளக்கு இல்லை, ஆத்துல இருந்த டார்ச்லைட்ட சப்பரத்துக்குள்ள வைக்கலாம்னு நைசா எடுத்துண்டு போனப்ப அண்ணா பார்த்து பிடுங்கிவச்சுட்டான். அதெல்லாம் அவ்ளவ் நாழி எரிஞ்சா பேட்டரி தீந்துபோயிடும்னு.

கார்த்தால எழுந்து விஸ்வரூப தரிசனம். பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், உடையவர் மற்றும் உபரி சன்னதிகள் சேவிச்சுட்டு கால் ஓஞ்சு கருட மண்டபத்துல உக்காந்தேன். அப்படியே அங்க ப்ரசாதம் வாங்கி காலை உணவ முடிச்சுண்டேன்.

இப்ப போனா ஆர் எஸ் வி ய பாக்கலாம். ட்யூஷன்லாம் முடிச்சு ஃப்ரீயா இருப்பார். போனப்ப சார் எங்கயோ வெளிலபோய்ட்டு அப்பத்தான் உள்ள நுழஞ்சார்.

“சார் நான் கண்ணன், கீழச் சித்திரை வீதி, 1986 பேட்ச்”

“ஆங்.. ஞாபகம் இருக்கு !உங்க செட்ல நீங்க ஆறு பேர் செண்டம் வாங்கினீங்களே”

“ஆமா சார் எல்லாம் உங்களாலதான்”

எப்பவும்போல லேசான வெட்கத்துடன், “அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா உங்க திறமை. வாங்கினீங்க”

இப்பவும் தினம் நாலு பேட்ச்க்கு ட்யூஷன் எடுக்கறார்.

அவர்கிட்ட அரை மணி பேசிட்டு போஸ்ட் ஆபிஸ்தாண்டி திட்டி வழியா சிந்தாமணிகிட்ட வரச்ச ஸைக்கிளில் போஸ்ட்மேன் கடந்து போனபோது சுப்பையா ஞாபகம் வருவதை தடுக்க முடியல. நீளமான தாடி, நெற்றியில் பளீரென்ற குங்குமம் விபூதி, இதுதான் சுப்பையா. போஸ்ட் இருக்கான்னு கேக்கற யாருக்கும் இல்லைன்னு சொல்ல மாட்டார். “நாளைக்கு கண்ணு” ம்பார்.. அப்ப கடிதம்தான் முக்கிய தகவல் சாதனமா இருந்தது. ஊர்லேர்ந்து மாமா, சித்தி போடற கடிதங்கள், வேலைக்கு காத்திருந்த அண்ணாவுக்கான நேர்முகக் கடிதம், இப்படி எதாவது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். திட்டி பக்கத்தில் ஒரு ஆத்துல வச்சு அவர் கட்ட பிரிச்சதுமே பாதி பேர் அங்க போய் தபால வாங்கிண்டு வந்திடுவோம்.

ஸ்ரீரங்கத்துல மட்டும் எப்பவுமே ஒரு நாளைக்கி 36 மணி நேரம் இருக்கறாப்ல எனக்கு தோணும். நீண்ட பகல். எனக்கும் வசதியா இருந்தது. வெயிலப் பாக்காம என் இஷ்டப்படி சுத்தினேன்.

Related image

மூன்று நாட்கள் வேகமா போய்டுத்து. நெனச்சபடியே காலாற ஸ்ரீரங்கம் முழுக்க நடந்து அந்த மண்ண சுவாசிச்சு கடைசியா வேணாம் வேணாம்னு நெனச்ச கீழச் சித்திரை வீதி – எங்காத்துக்கு பக்கத்துல வந்தேன். நிறைய மாறிப் போயிருந்தது. எங்காகம் அடையாளமே தெரியல. அடுத்தாப்ல நந்துவாகம் மாற்றம் ஏதுமில்லா அதே திண்ணையுடன் பூட்டப்பட்டு இருந்தது. நாங்க எல்லாம் வாடகைக்கு இருந்த வீடுகள்தான்னாலும், எங்களுடைய இளமைப் பருவம் முழுதும் கழிந்த அந்த வீட்டின்மேல் எனக்கு அலாதி ப்ரேமை.

பூட்டியிருந்த நந்துவாத்து வாசல் திண்ணையில் உட்கார்ந்தேன். ரொம்ப நாளா நானும் நந்துவும்தான் இப்டி நாலு நாள் இங்க வரனும்னு யோசிச்சுண்டு இருந்தோம்.

“இப்படி எனக்கு துணைக்கு வரமுடியாதபடி போய்ட்டயேடா. மூணு நாளா மனசுக்குள்ள பொங்கி வந்த துக்கம் பீரிட்டுவர, போன மாசம் ஆக்ஸிடெண்ட்ல இறந்துபோன நந்துவ நெனச்சு உடஞ்சு போய் அழ ஆரம்பித்தேன்.

பகல் ஒரு மணிக்கு யாருமில்லாத வீதியில் நிழலுக்கு படுத்திருந்த ஆடு என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டது.