![]()
என் சுகவீனம் என்னோடு
சில நாட்கள்
மருத்துவமனை வாசம்
ஆம்.. இன்னும் உடலில் அவ்வாசம்
உலகில் என்ன நடந்தது
எனக்குத் தெரியாது
என் சுகவீனம் என்னோடு
வீடுதிரும்பினேன்
பலநாள் தினசரி
இறைந்து கிடந்தது
நாட்காட்டி கிழிபடாமலிருந்தது.
என் சுகவீனம் என்னோடு
வீடெங்கும் குப்பை கூளம்
ஏன் என்றேன்
கண்தெரிகிறது என்றாள் மகள்
சுத்தப்படுத்தாத வீட்டினிலே
ஒருவித வாடை
ஏன் என்றேன்
வாசனை தெரிகிறதென்றாள் மனையாள்,
அவளும் இளைத்திருந்தாள்
இப்போதுதான் பார்த்தேன்
என் சுகவீனம் என்னோடு
என்னறை என்னை
அந்நியனாய்ப் பார்த்தது
நான்விட்டுச்சென்றது
அப்படி அப்படியே…
படித்த புத்தகபக்கங்கள்
காற்றில் பறந்தது
என் சுகவீனம் என்னோடு
என்னைக் கிள்ளிப்பார்த்தேன்
வலித்தது இன்னமும்
கண்மூடவில்லை
என்ன நடந்தது
எனக்கு யாரும்
பதில் சொல்லத் தயாரில்லை
என் சுகவீனம் என்னோடு
