
பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காய் போன கதையாய்
அல்லவா போய்விட்டது..?
நான், ‘உதவாக்கரை.. சாமர்த்தியமில்லாதவன்..’ என்றெல்லாம்
அர்ச்சனை செய்து கொண்டிருந்த என் மகன் திலீபன் திடீரென ஒரு
வாரம் முன்பு ஒரு நல்ல செய்தியோடு வந்தான்.
‘அப்பா.. ‘பக்கத்து வீதியிலே உள்ள ராம விலாஸ் ஓட்டல்லே
டிபனும், சாப்பாடும் எவ்வளவு ருசியாக இருக்கு. எல்லா
ஜனங்களும் அந்த ஹோட்டலைப்போய் மொச்சுக்கறாங்க..
நம்ம ஓட்டலுக்கு யாருமே அதிகமா வறதில்லே.. சரியானபடி
வியாபாரம் ஆறதில்லே… இப்படியே போனா ஓட்டலை இழுத்து
மூடவேண்டியதுதான்…’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டே
இருப்பீங்களே… இன்னிக்கு அங்கே போய் மெதுவாக விசாரித்து
அங்கிருந்து ஒரு குக்கை நம்ம பக்கம் கொண்டு வந்துட்டேன்.
என்ன.. அவங்க குடுக்கற சம்பளத்தை விட ரெண்டாயிரம்
ரூபாய் அதிகம் கொடுக்கணும்.. அவ்வளவுதான்.. இனிமே
பாருங்க.. நம்ம ஓட்டலுக்கு வரப் போகும் கூட்டத்தை..’ என்றான்.
‘ரெண்டாயிரம் அதிகம்’.. என்பது சிறிது அதிகம்தான். ஆனா
வியாபாரம் அதிகமானா அதை ஏறு கட்டிடலாம்… ‘ என்று
கணக்குப் போட்டு, ‘அப்படியா.. வெரிகுட்.. அவன் எப்ப ஜாயின்
பண்ணறான்’ என்றேன்.
‘நாளைக்கே…’ என்றான் திலீபன்.
அடுத்த நாளே அந்த புதிய குக் எங்கள் ஓட்டலில் வந்து
சேர்ந்தான். அன்று அதிசயமாக எங்களுடைய லோகல்
கவுன்ஸிலரிடமிருந்து வேறு ·போன். ‘மிஸ்டர் ஆதிமூலம்..
நான் சிபாரிசு பண்ணின பையன் உங்க ஓட்டல்லே இன்னிக்கு
சேர்ந்திருக்கான் போல் இருக்கு… அவனுடைய திறமையைப்
பார்த்து நீங்க சம்பளமும் டபுளா கொடுக்க ஒத்துக்கிட்டீங்க
போல இருக்கு. தாங்க் யூ… பையனை நல்லா கவனிச்சுக்குங்க..’
என்றார். பெருமையாக இருந்தது எனக்கு.
இதோ ஒரு வாரம் ஓடி விட்டது.. அந்தப் பையன்
உருப்படியாக சமையல் ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை.
டிபன், சாப்பாடு குவாலிடியில் ஒரு முன்னேற்றமும் இல்லாமல்
அப்படியே இருந்தது. ஜனங்கள் இன்னும் அந்த ராமவிலாஸையே
மொய்த்துக் கொண்டிருந்தார்கள்.
நான் சிறிது கோபத்துடன் அந்தப் பையனைக் கூப்பிட்டு
விசாரித்தேன்..’என்னப்பா அந்த ஹோட்டல்லே எல்லாம் ருசியாகச்
சமைச்சுட்டிருந்தே.. இங்கே வந்து உன் திறமையைக் காட்டவே
யில்லையே… இத்தனைக்கும் அங்கே கொடுத்த சம்பளத்தை விட
அதிகமா கொடுக்கிறோமே…’ என்றேன்.
‘ஐயா.. என்ன சொல்றீங்க.. சமையலா..? எனக்கு ஒன்றுமே
சமைக்கத் தெரியாது. அந்த ஓட்டலிலும் வரும் கஸ்டமர்ஸ¤க்கு
தண்ணி கொண்டு கொடுப்பேன். அதையேதான் இங்கேயும்
செய்து கொண்டிருக்கிறேன்…’ என்றான்.
எனக்கு அப்படியே தலை சுற்றி மயக்கம் வரும்போல்
இருந்தது.
‘அந்த ஹோட்டல் மானேஜரை உங்களுக்குத் தெரியுமே..
அவரிடம் விசாரியுங்களேன்…’ என்றார் இதையெல்லாம்
கவனித்துக் கொண்டிருந்த என் நண்பர்.
·போன் போட்டேன்.. ‘என்னப்பா.. இப்படி பண்ணீட்டே..
உங்க ஹோட்டல்லே வேலை செய்துட்டிருந்த ஒரு பையனை
நாங்க சேர்த்துண்டோம்.. அவனுக்கு சமையலைப் பத்தி
ஒன்றுமே தெரிய மாட்டேங்குதே..’
‘….’- மறுமுனையிலிருந்து வந்த பதில் கேட்டு என் முகம்
அஷ்ட கோணலாக மாறியது.
‘ஓகே.. தாங்க்ஸ்..’ என்று வைத்தேன் பெருமூச்சுடன்.
‘என்னாச்சுப்பா..?’ என்றார் என் நண்பர்.
‘அதையேன் கேட்கறே..? என் பையனுக்கு சில
வார்த்தைகள் சரியாக உச்சரிக்க வராது.. ‘சீ·ப்’ குக்குன்னு
கேட்கறதுக்கு பதிலா ‘சீப்’ குக்குன்னு கேட்டிருக்கான்.
அவர்களும் ஒன்றுக்கும் உதவாத இந்தப் பையனைக்
காட்டியிருக்காங்க.. குக்கிங் டிபார்ட்மென்டில் இருந்தானே
ஒழிய இந்தப் பையனுக்கு ஒண்ணுமே தெரியாதாம்.
கவுன்ஸிலர் சிபாரிசு வேறே.. வெளியிலே அனுப்ப முடியாது.
இவனுக்குத்தான் அங்கேயுள்ள சமையல்காரங்கள்ளே ரொம்ப
கம்மியான சம்பளமாம். அதனாலே இவனை கைகாட்டி-
யிருக்காங்க. என் பையன் சரியா விசாரிக்காம அவனைக்
கூட்டிட்டு வந்துட்டான். ஒரு சொற்பிழையினாலே வந்த
அவஸ்தையைப் பார்த்தீங்களா.. நமக்கு வந்துட்டிருக்கிற
நஷ்டம் போதாதுன்னு இது ஒரு தண்டம்..’ என்றேன் ஈன
சுரத்தில்.
‘இப்போ என்ன செய்யப் போறீங்க…’
‘வேதாளம் கதைதான்… கவுன்ஸிலர் ஆளு.. வெளியிலே
அனுப்ப முடியாது. அந்த ஹோட்டல்காரங்க மெதுவாக
வேதாளத்தை நம்ம தோள்ளே இறக்கிட்டாங்க… நாம அதை
எப்படி இன்னொருத்தர் தோள்ளே இறக்கறதுன்னு இப்போ
யோசிக்கணும்…’என்று இருக்கையில் சோர்ந்து உட்கார்ந்தேன்.
