சென்னையை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளன – வர இருக்கின்றன – மெட்ராஸ், மதராசபட்டணம், வட சென்னை, மாநகரம், தூங்காவனம்.
அந்த வரிசையில் சமீபத்தில் ஏப்ரல் 12ல் வெளியானது ஆர் கே நகர்.
படம் செம டக்கர் ! வசூலில் அள்ளிக் கொண்டு போகிறது.! படம் வெளியாகும் முன்னே 89 கோடி வசூலாம்.
மறைந்த
முதல்வர் அம்மாவின் இறுதி யாத்திரையோடு துவங்குகிறது. பார்ப்பவர் நெஞ்சை உருக்கச் செய்கிறது. (இதையே பின்னாடி பன்னீர் ஆளுங்க வேற மாதிரி செய்வாங்க )
அப்புறம் சின்னம்மாவின் வருகை – கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் முதல்வர் நாற்காலிக்கு வருவது. அதில் உட்காரப்போகும்போது சிறைத் தண்டனை என்று அவரை பெங்களூருக்கு அழைத்துப்போவது. போவதற்கு முன் அவர் அம்மாவின் சமாதிக்குச்சென்று மூன்று முறை அடித்து சபதம் செய்து தினகரன் கையில் கட்சியைக் கொடுக்கும் காட்சி படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறது.
அதுவரை அமைதியாக இருந்த பன்னீர், விஜய் சேதுபதிபோல அப்படியே ஒளி வட்டத்துக்கு வருகிறார். அவர் வரும் காட்சியில் எல்லாம் அமைதியான நடிப்பால் கைதட்டல் வாங்கிறார்.
அதற்கு முன் கூவத்தூர் காட்சி செம கலக்கல்!
![]()
நம்பிக்கைத் தீர்மானத்தின் போது சட்டசபையில் நடந்த கலாட்டாக்கள் பயங்கர காமெடி.
அதற்கப்புறம்தான் புது விதமாக ரி -என்ட்ரி ஆகிறார் தினகரன் அரவிந்த்சாமி ஸ்டைலில் தொப்பி போட்டுக் கொண்டு.
ஏப்ரல் 12ல் தேர்தல்
ஊரு இரண்டு படும் போது ஸ்டாலின் சீரியசாக தனது ஆ
ளை உள்ளே நுழைக்கிறார். அத்தோடு இன்னும் நிறைய பேர் நிற்பது காமெடி பீஸ் போல இருக்கு! ( ரஜினி கூட சின்ன CAMEO செய்திருக்கிறார்)
பணம் எல்லா இடத்திலும் கொட்டுகிறது. (காசு பணம் துட்டு மனி மனி என்ற சூது கவ்வும் பாடல் இதற்கு நன்றாகப் பொருந்துகிறது. )
கிளைமாக்ஸில் வருமானவரி சோதனையும் அப்போது நடக்கும் காட்சிகளும் (அதிலும் குறிப்பாக ஒரு ரகசிய டாக்குமெண்டை அதிகாரிகள் பார்க்கும் போதே கைமாறி கேட்டுக்கு வெளியே கொண்டு போகும் காட்சியில் டைரக்டர் எங்கோ போய் விட்டார்.) பரபரப்பாக இருந்தன.
அந்தக் களேபரத்தில் தேர்தல் ஒத்திப்போடப்பட்டுள்ளது என்று அறிக்கை வருகிறது.
எல்லா வேட்பாளர் முகத்திலும் முதலில் ஒரு கோபம் – பிறகு திகில் -பிறகு அப்பாடா என்பது மாதிரி இலேசான புன்னகை .
அப்போது டைட்டில் வருகிறது –
விரைவில் ஆர் கே நகர் பார்ட் -II !
