
மௌனம்..
மவுனம் என்பது கடலென்றால்-அதில் முத்து பிறக்காதா
மவுனம் என்பது தவமென்றால்-அதில்
ஞானம் உதிக்காதா
மவுனம் என்பது கனவென்றால்-அதில்
கவிதை பிறக்காதா
மவுனத் திரையில் ஒலியின் விரல்கள்
ஓவியம் வரையாதா!
சப்தக் கடலலை ஓய்கையிலே மனச்
சாந்தி பிறக்காதா
சலனம் அடங்கிய நீருக்குள்ளே
சந்திரன் உதிக்காதா
சித்தம் ஒடுங்கிய கணநேரத்தில்
சிந்து பிறக்காதா
சித்திரம் கலைந்து போனாலும்-அதன்
சிரிப்பொலி கேட்காதா!
வார்த்தைகளில்லா நேரத்தில்-ஒரு
வாழ்த்தொலி கேட்கிறது
வடிவம் கலையும் நெஞ்சுக்குள்ளே
வண்ணம் பொழிகிறது
ஆர்த்தெழுமலைகள் ஓய்ந்தமனக்கடல்
அமைதியில் உறைகிறது
அதுவே தருணம் அடடா உடனே
கவிதை உதிக்கிறது!
மவுனம் என்பது ஆண்டவன் படைத்த
அற்புத நிர்வாணம்- அந்த
அழகுக்கேனோ வார்த்தைகளாலே
ஆடை அலங்காரம்?
கவனம் உள்ளே திரும்பும்போது
கணமும் யுகமாகும்-அந்த
கனத்த மவுனக் கணதிலுதிக்கும்
கவிதை வரமாகும்!
மவுனத்திற்கோர் எடையுண்டென்னுள்
கனமாய்க் கனக்கிறது.
நீர்சுமந்திருக்கும் சூல்மேகம்போல்
கவிதை சுமக்கிறது!
எவரோ வந்து தொட்ட கணத்தில்
சரமழை பொழிகிறது
மழையாய்க் கவிதை பொழிந்தபின்னாலும்
மனமேன் கனக்கிறது?
இதயத்துடிப்பிற் கிடையில் இருக்கும்
மவுனம் இசையாகும்
இரண்டு விழிகள் உரசலிலேயே
கதைகள் பலபேசும்
உதயம் இசைக்கும் உன்னத கீதம்
உட்செவி கேட்கிறது -அந்த
ஓங்காரத்தின் அணுவுக்குள்ளே
மவுனம் ஒலிக்கிறது!
மனமோர் அண்டப் பெருவெளி ஆங்கே
மவுனம் கருந்துளையாம்!
மகிழ்வோ, சோர்வோ, துயரோ எதையும்
மவுனம் விழுங்கிடுமாம்!
மனமொரு சதுப்பு நிலமென்றாலதில்
மவுனம் புதைமணலாம்!
மவுனத்திற்குள் புதைந்துகிடக்கும்
மருமம் யாரறிவார்!
மற்றவர் அறிவாரோ?
மவுனம் போர்த்திய மாயத்திரைக்குள்
மறைவாய் யார்யாரோ!
புவனம் ஜனித்த நாள்முதல் மவுனம்
புதிராய் இருக்கிறது!
புரிந்துவிட்டது என்றால் மெலிதாய்ப்
புன்னகை புரிகிறது!
மவுனம் என்பது வன்முறை ஆயுதம்
எதையும் சாதிக்கும்!
மரத்தடி அமர்ந்து வார்த்தைகள் இன்றி
ஞானமும் போதிக்கும்!
மவுனம் உணர்ந்து, மவுனம் உறைந்து
மலராய் இருந்துவிடு!
ஆறறிவால் அதை ஆரறிவார் அதில்
ஆழ அமிழ்ந்துவிடு!

