இன்னிக்கி காலைல சாத்விய ஸ்கூல்ல விடப் போன போது, “அம்மா இவங்கதாம்மா என்னோட மிஸ்” என்று அவள் காட்டியவளை எங்கியோ பார்த்த மாதிரி இருந்தது…
வீட்டுக்கு வந்து மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்த பின்னும், மனசு அந்த டீச்சரையே சுத்தி வந்து கொண்டிருந்தது… ஃபெமிலியரான முகமா இருக்கே… மூளையில் உள்ள அனைத்து ந்யூரான்களும் ஓவர் டைம் வேலை செய்ததில், அவளா இருக்குமோ என்ற முடிவுக்கு வந்தேன்… அடுத்த நாள் பள்ளி முடிந்து அவள் வெளியே வரும் வரை , அம்மா பசிக்கறது என்று கையை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த சாத்வியை சமாதானப் படுத்திய படியே காத்திருந்தேன்…
வெளியே வந்தவுடன், ” நீ,..நீங்க ஹரிணி தானே”
“ஆமாம் நீங்க”
“ஹோலி க்ராஸ்ல தானே படிச்சீங்க”
“யெஸ்”
“2000 ல 10த் பாஸ் அவுட்தானே”
“ஆமா நீங்க யாரு தெரியலயே”
“நீங்க ஏ செக்ஷன், நான் சி செக்ஷன்… நான் ஆவ்ரேஜ் ஸ்டூடெண்ட் அதுனால உங்களுக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பு இல்ல… ஆனா எப்பவும் முதல்ல வர உங்கள ஸ்கூல்ல எல்லாருக்குமே தெரியுமே”..
” ஓ சாரி… ஒரே செட்ல தான் படிச்சுருக்கோம்… வா போன்னே பேசலாமே… சாத்வி உன் பொண்ணா… செம்ம ஸ்வீட் சைல்ட்..”
“படு வாலாச்சே … க்ளாஸ்ல மேனேஜ் பண்ண முடியறதா.. ஆமா நீ எங்க குடியிருக்க..”
“முதல்ல அண்ணா நகர்ல இருந்தேன்.. இப்ப இங்க பக்கத்துலயே அக்ஷயா அபார்ட்மெண்ட்ஸ்ல ஒரு ஃப்ளாட்டுக்கு வந்துட்டேன்… நாலு நாள் ஆச்சு”
“அட அக்ஷயாவா… நானும் அங்கதான் இருக்கேன்..”
அம்ம்மா, வீட்டுக்கு போலாம் என்று கிட்டத்தட்ட அழ ஆரம்பித்த சாத்வியை தூக்கிக் கொண்டு, “இதுக்கு மேல இவள என்னால சமாளிக்க முடியாது.. நீ எந்த ப்ளாக்ல இருக்க.”
” டி ப்ளாக்…டி-5 ஞாயித்துக் கிழமை ஃப்ரீயாதான் இருப்பேன் வாயேன்.. சாரி உன் பேர் கூட எனக்கு தெரியல”
“மதுமிதா… கண்டிப்பா வரேன்”
இரவு வேலையிலிருந்து வந்த அருணிடம் எல்லாத்தையும் சொல்லிட்டு, “ஏங்க எப்பவுமே அவ டாப்பர் 10த் ல யும் அவதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்… அதுக்கப்புறம்தான் அப்பாக்கு ட்ரான்ஸ்வர் ஆகி நாங்க பங்களூருக்கு மூவ் ஆகிட்டோம்… இவ பெரிய டாக்டராவோ இஞ்சினியராவோ ஆயிருப்பான்னு பார்த்தா நர்ஸரி ஸ்கூல் டீச்சரா இருக்கா… எனக்கு ஒண்ணுமே புரியலயே…”
“இப்பல்லாம் லேடிஸ்க்கு ரொம்ப ஆபிஸ் ப்ரெஷர் தாங்க முடியறதில்லை… ஸ்கூல், பேங்க்குன்னு செட்டில் ஆகிடறாங்க,.”
“இல்லீங்க அவ…” என்றவளை இடை மறித்து,
“காலைல சீக்கிரம் எழுந்திருக்கனும் பேசாம தூங்கும்மா”
எனக்கென்னவோ அருணின் பதில் சமாதானமாக இல்லை…
ஞாயித்துக் கிழமை வேகமாக வேலயெல்லாம் முடிச்சுட்டு, “ஏங்க சாத்விய பார்த்துக்கங்க.. நான் ஹரிணி வீட்டுக்கு போய்ட்டு வந்துடறேன்”
“ஏண்டி சும்மா ஒரு பேச்சுக்கு கூப்டா.. உடனே இப்டி ஓடணுமா… சரி குழந்தையும் கூட்டிண்டு போயேன்.. நான் கிரிக்கெட் மேட்ச் பாக்கணும் “
“அவள கூட்டிகிட்டு போனா என்னால ஃப்ரீயா பேச முடியாது… சண்டே ஒரு நாளாவது குழந்தை கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க”
“இன்னிக்கி இந்தியா பாகிஸ்தான் மேச்டி.. நிம்மதியா பாக்கனும்” என்ற அருணின் கதறலை காதில் வாங்காமல் செருப்பை மாட்டியபடி கிளம்பினேன்..
டி- 5 பெல்லை அடித்து விட்டு காத்திருந்தேன்… வெளிர் நீல சுடிதாரில் கதவை திறந்த ஹரிணி, நேற்று பார்த்ததை விட இன்னும் இளமையாக இருந்தாள்.. எனக்கு நீளமான ரெட்டை பின்னலுடன் ஸ்கூல் கேட்டில் காத்திருக்கும் அம்மாவை நோக்கி சிரிப்புடன் துரித நடையுடன் செல்லும் ஹரிணி நினைவுக்கு வந்தாள்.
அரை மணி நேரம் பொதுவான விஷயங்கள் பேசிய பிறகு, பொறுக்க முடியாமல் என் சந்தேகத்தை கேட்டே விட்டேன்..
சிறிது நேரம் பேசாமல் இருந்தாள்..
“எதாவது தப்பா கேட்டனா..”
“சே சே…அப்டில்லாம் இல்ல… எப்டி தொடங்கறதுன்னு யோசிக்கறேன்.. நீ குழந்தையா இருக்கறச்ச ஃப்ரெண்ட்ஸ் கூட விளயாடியிருக்கியா”
“ம்..நிறைய..”
“ஸ்கூலுக்கு எதுல போவ”
“வேன்..செம்ம கலாட்டாவா இருக்கும்… ஆமா இதெல்லாம் எதுக்கு கேக்கற..”

” சின்ன வயசுல இருந்தே எனக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடையாது.. வெளியே போக அனுமதி கிடையாது… தேவையானது எல்லாம் கிடைக்கும்.. ஆனா எது தேவைன்னு முடிவு பண்றது அப்பா அம்மா… ரெண்டு பேரும் என் கிட்ட உயிராத்தான் இருப்பாங்க.. ஆனா அவங்க ரெண்டு பேர தவிர யார் கிட்டயும் பழக விட மாட்டாங்க.. சின்ன வயசுல இந்த கட்டுப்பாடு பெருசா தெரில.. எப்பவும் செல்லமா கொஞ்சற அப்பா, அம்மா… சாப்ட வித விதமா கிடைக்கும்., அது தாண்டிய சந்தோஷங்கள் அதிகம் எனக்கு தெரியாமலே வளர்த்தார்கள்… ஸ்கூல்ல யார் கிட்டவும் எதுவும் பேச மாட்டேன்… டீச்சர் சொல்றத கவனமா கேட்டு நல்லா படிக்கனும்… நிறைய மார்க் வாங்கனும்… பக்கத்துல யார் கூடயும் பேசக் கூடாது என்ற நிபந்தனைகள் ஒரு கட்டம் வரை பெருசா தெரியல… எப்பவும் க்ளாஸ் ஃபர்ஸ்ட்..
ஸ்கூல் வாசலிலேயே அப்பா அம்மா ரெண்டு பேரும் வெயிட் பண்ணுவாங்க… நிறைய மார்க் வாங்கினா நல்ல பெரிய ஹோட்டல் கூட்டிண்டு போய் விதவிதமா சாப்ட வாங்கி தருவாங்க… எனக்கும் அது ரொம்ப ஜாலியாத்தான் இருந்தது.. பத்தாவதிலும் நல்ல மார்க்.. நாந்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்,. நிறைய பரிசுகள்… பாராட்டுகள்..
நான் அதிகமாக யாரிடமும் பேசும் பழக்கம் இல்லாததால் எனக்கு ஃப்ரெண்ட்டுன்னு யாரும் கிடையாது,. நான் அதை ஒரு பொருட்டாவும் நினைத்ததில்லை,.
“ரொம்ப போரடிக்கரேனோ.. இரு கொஞ்சம் ஜூஸ் கொண்டு வரேன்” என்றபடி கிச்சனுள் நுழைந்தவளை பின் தொடர்ந்தேன்..
“இங்க தண்ணி வசதி எல்லாம் நல்லா இருக்கே… மார்க்கெட் கூட பக்கத்துல… நீ ரொம்ப வருஷமா இருக்கியா..”
“ம்..நாலு வருஷம் ஆச்சு… நாங்க வந்தப்ப இருந்ததவிட இப்ப நல்லா டெவலப் ஆய்டுச்சு”
ஆளுக்கொரு க்ளாஸில் ஜூஸை ஊற்றி எடுத்தபடி ஹாலுக்கு வந்தோம்..
புன்னகையுடன்… “எங்க விட்டேன்… ஆங்..
ப்ளஸ் ஒன்ல வேற ஸ்கூல்லேர்ந்து வந்த ஆர்த்தி என் பக்கத்துல உட்கார்ந்ததோடல்லாமல் என் கிட்ட ரொம்ப பேச்சு கொடுக்க ஆரம்பிச்சா. அவ பேசறத கேக்க எனக்கு ரொம்ப பிடிச்சது… சிரிக்க சிரிக்க பேசுவா.. நிறய ஜோக் சொல்லுவா..நான் இது வரை சினிமாவே பார்த்ததில்லை, என் வீட்டில் டி.வி கிடையாது, இது வரை எனக்கு ஃப்ரெண்டுன்னே யாரும் கிடையாது என்று நான் சொன்னதை முதலில் நம்பவே இல்லை.. அவளோட கம்பெனி எனக்கு ஒரு புது அனுபவத்த தந்தது,. அவளுடைய வாக்கு எனக்கு தேவ வாக்கானது.. கொஞ்சம் கொஞ்சமாக படிப்பில் கவனம் குறைய தொடங்கியது… வீட்டில் எப்பவும் போல கெடுபிடிதான் படிக்க.. ஆனால் வகுப்பில் எதையும் சரியாக கவனிக்காததால், வீட்டில் என்ன படித்தாலும் மண்டையில் ஏறவில்லை… கால் பரிட்சையில் ரெண்டு சப்ஜெக்ட்டில் ஃபெயில் என்றவுடன் அதிர்ந்து போனேன்… வாழ்வில் முதல் முறையாக தோல்வி… அப்பா அம்மா கேக்கவே வேணாம்.. கட்டுப்பாடு இன்னும் இறுகியது.. ஆர்த்தியின் நட்பையும் நல்ல மதிப்பெண்ணையும் பேலன்ஸ் செய்ய தெரியாமல், வீட்டிலும் நல்ல பெயர் எடுக்க முடியாமல்… புத்தகத்தை பார்த்தாலே ஒரு பயம் வர ஆரம்பித்தது.. படிக்க சொன்னால் ஓவென்று அழ ஆரம்பித்தேன்… வீடு நரகமானது… ப்ளஸ் ஒன் ஃபைனல் எக்ஸாம் எழுத போய்ட்டு பயந்து வெளில ஓடி வந்துட்டேன். அப்புறம் ஒரு வருஷம் ஒரே டென்ஷன் தான் வீட்ல… “
காலிங் பெல் அடிக்கவே பாதியில் எழுந்து போனாள்..
வீட்டை மிகவும் அழகாக வைத்திருந்தாள்… சுவரில் ஒரு பெரிய பெயிண்டிங்… கூட்டுப்புழு தன் கூட்டிலிருந்து வெளியே வண்ணத்துப் பூச்சியாய் பறப்பது போல்…
வந்த வேலைக்காரிக்கு தேவையான இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட்டு, மதியம் சமையலுக்கு தேவையான காய், மற்றும் கத்தியுடன் வந்தாள்.. கேரட்டின் தோலை சீவியபடியே,
“விஷயம் கேள்விப்பட்டு கோயம்புத்தூரிலிருந்து வந்த என் சித்தி அம்மாகிட்ட சண்டை போட்டு தன் கூட கூட்டிகிட்டு போனாங்க… அவங்களோட அன்பும், அவங்க கொடுத்த சுதந்திரமும் கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்தித்து., ப்ரைவேட்டா ப்ளஸ் டூ எழுதி பாஸ் பண்ணினேன்… எனக்கு பிடித்த இங்லீஷ் லிட்ரெச்சர் படிச்சேன்… அப்புறம் விருப்பப்பட்டு மாண்டிசரி ட்ரயினிங்… ஆசைப்பட்ட இந்த வேலை… எப்பவும் குழந்தைகளோட குழந்தைகளா இருக்கும் போது, நான் இழந்த குழந்தை பருவத்தை மீட்டெடுக்க முயற்ச்சிக்கறேன்..” என்று புன் சிரிப்பு மாறாமல் முடித்தாள்..
“உங்க வீட்டுக்காரர்” என்று நான் கண்ணை வீட்டின் உள்ளே விட்ட போது

“இல்ல… கல்யாணம் பண்ணிக்கல… நாளைக்கு எனக்குன்னு ஒரு குழந்தை வந்தவுடன, என்னயறியாம என்னுடைய நிறைவேறாத கனவுகளை குழந்தை நிறைவேத்தனும்னு அத படுத்துவேனோன்ற பயத்துல பண்ணிக்கல..
இப்ப எல்லா குழந்தைகளயும் என் குழந்தையா நெனச்சு அதே சமயத்துல எந்த குழந்தை மேலயும் என் விருப்பத்த திணிக்காம… சந்தோஷமா போறது வாழ்க்கை”..
என்னுடைய கண் என்னயும் அறியாமல் சுவரில் இருந்த வண்ணத்துப் பூச்சியை நோக்கி சென்றது… கூட்டிலிருந்து தானாக வெளியே வர விடாமல் கூட்டை குத்தி கிழித்து அவசரமாக பட்டாம்பூச்சியை அடைய விரும்பினால் என்ன ஆகும்…..
அப்புறம், என் மண வாழ்க்கை, கணவரின் வேலை, சாத்வி குட்டி, என பல டாபிக் பேசிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்..
மறுநாள், சாத்வியை ஸ்கூல்ல விடப் போன போது, குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தாள் ஹரிணி. .. இந்த அளவு இல்லாவிட்டாலும், போட்டிகள் நிறைந்த இன்றய சமூகத்துல, குழந்தைகளுக்கு, அவர்கள் வயதுக்கான மகிழ்ச்சியும் கும்மாளமும் சரியான அளவு கிடைக்காமல் போய் விட்டதென்னவோ நிதர்சனம்…
விழியோரத்தில் துளிர்த்த நீரை சுண்டி விட்டபடி வண்டியை கிளப்பினேன்.

