மந்திரம் போல் வேண்டும்
பெயர் மந்திரமூர்த்தி. இந்தத் தொடரின் ஐந்தாவது பகுதியில் “திருப்புமுனை” எனும் தலைப்பில் இவரைப் பற்றி சில நெகிழ்ச்சியான செய்திகளை சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் மேலும் சில பக்கங்கள் உண்டு.
ஒன்பதாவது ( அதாவது ஃபோர்த் ஃபார்ம் ) படிக்கும் போது எங்கள் வகுப்புக்கு சயின்ஸ் ஆசிரியராக வந்தார். அதுவரை மந்திரமூர்த்தி எனும் பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. எங்கள் உறவு அல்லது நட்பு வட்டத்தில் நான் கேள்விபட்டிராத பெயர். இது என்ன சாமி பெயர் ? சிவனா? விஷ்ணுவா? இந்தப் பெயரில் நாங்கள் அறிந்த சாமியும் இல்லை கோவிலும் இல்லை.அவர் வகுப்பெடுக்க ஆரம்பித்த பிறகு “மந்திரம் சார்” என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.
புதிதாக ஒரு “சார்” வந்தால் அவரை அணு அணுவாக எடை போடுவதும், அவரைப் பற்றிய தகவல்கள் சேகரிப்பதும் மாணவர்களின் இயல்பே என்பது அனைவரும் அறிந்த்துதானே ! அடுத்த வாரமே மணியும் வாசுவும் பல செய்திகளோடு வந்தனர்.
” அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருநெல்வேலி பாளயங்கோட்டையில் படித்தவர். அதுதான் பூர்விகம். வேலை கிடைத்த பிறகு இப்போது தாயாருடன் ஒரு தனி வாடகை வீட்டில் குடித்தனம் இருக்கிறார். “ட்யூஷன்” எடுக்க மாட்டாராம். இங்கிலீஷ், வரலாறு, பூகோளம், சயின்ஸ், கணக்கு ஆகிய எல்லா வகுப்புகளும் எடுப்பாராம். நிறைய விளையாட்டுகள் தெரியுமாம். முக்கியமா “பசங்கள” அடிக்கமாட்டாராம்; கோபமே வராதாம். அவரே கிளாஸ் டீச்சரா வந்தா நன்றாக இருக்கும்;;ஆனா அவரை “ஹெச்” செக்ஷனுக்குப் போட்டாச்சாம் “
நெடிய உருவம்; மாநிறம்; அத்லெடிக் பாடி; மாலை வேளைகளில் எங்களோடு “ஸ்கூல் கிரவுண்டில்” கால்பந்து விளையாடுவார். அவரது சாந்தமான முகத்தில் மேடான நெற்றியும் தீர்கமான விழிகளும் அவருக்கு ஒரு தனி சோபையைக் கொடுத்தன. முதல் நாள் அவரைப் பார்த்த உடனேயே , “இவருக்கு சுவாமி விவேகானந்தர் வேடம் பொருத்தமாக இருக்குமே” என்று நானும் என் சகோதரனும், ராமசாமி, மணி, பிரபு ,வாசு, சேஷா ஆகிய எனது பெஞ்சு நண்பர்களும் நினைத்தோம். எங்கள் அனுமானத்தின் சிறப்பு எத்தனை என்பது போகப் போகத்தான் தெரியவந்தது.
நினைத்துப் பார்த்தால், எஸ்.எஸ்.எல்.சி. என்ற பதினோரு வகுப்பு “ஸ்ட்ரீமில்” நடத்தப்பட்ட அக்காலப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்புதான் “பெஸ்ட்”. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ”சின்னப் பையன்கள்” என்ற நிலையைத் தாண்டியவர்கள்; ஆனால் இன்னும் பெரிய கிளாஸ் மாணவர்களாக மாறாதவர்கள். பள்ளி இறுதியாண்டுத் தேர்வுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. படிப்பில் கவனம் தேவை; என்றாலும் ஆசிரியர்கள் அவ்வளவு கண்டிப்பு காட்டமாட்டார்கள்.
எனக்குத் தெரிந்து, எக்ஸ்ட்ரா கரிகுலர் எனப்படும் “பாடத்திட்டம் சாராத” பல பயிற்சிகளை மாணவ மாணவியர் மேற்கொள்ளும் பருவமிது. கலை, இலக்கியப் பாதைகளில் மனம் மொட்டவிழ்க்கும் நேரமிது., பள்ளியில் நடக்கும் இசை.பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ளப் பெயர் கொடுத்தல். பள்ளி ஆண்டுவிழா மலருக்குக் கவிதை எழுதுதல், ஆண்டு விழா நாடகத்தில் ஏதாவது வேடம் கிடைக்குமா என்று தேடுதல், ஆகிய பல விஷயங்களில் ஈடுபடும் நேரம் இது.
இந்த காலகட்டத்தில் விளயாட்டு பக்கம் போனவர்கள். நுண்கலைகள் பக்கம் திரும்புவது அரிது. அவர்கள் ஜூனியர் , சீனியர் அணிகளில் மாவட்ட மாநில அளவில் பங்குபெற முழு நேரமும் உழைப்பதில் தீவிரம் காட்டுவார்கள்.
கதைப் புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வம் முளைக்கும் காலம். , அரும் பெரும் கற்பனைகள் உதிக்கும் காலம்.; கடிதம் எழுதிப் பார்க்க ஆசைப்படும் நேரம்.; பயன் படுத்தப்படாமல் வீட்டில் கிடக்கும் பழைய டைரியை எடுத்து எழுதிப் பார்க்கத் தொடங்கும் நேரம்.
இவையாவது பரவாயில்லை. புதிய பழக்க வழக்கங்களை எற்படுத்திக் கொள்ள மனம் அலைபாயும் நேரம். செய்யக்கூடாது என்பனவற்றில் ஈடுபாடும், செய் என சொல்லப்படும் அறிவுரைகளின் மீது ஆத்திரமும் நிச்சயமாக வரும் நேரம். இப்போது இருப்பது போல அப்போதெல்லாம் “ஸ்டூடண்ட் கவுன்சிலர்கள்” கிடையாது. பையன்கள் திருந்த பிரம்பையும், கண்டிப்பையும், பெஞ்ச் மேலே நில் போன்ற தண்டனைகளையும் நம்பி இருந்த காலம் அது.
எப்போதும் என் மாணவர்களுக்கு நான் சொல்வது. ” படிப்பு தவிர இசையோ விளையாட்டோ நாடகமோ எழுத்தோ, வாசிப்போ ஏதோ ஒரு பயனுள்ள விஷயத்தில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்.. அது கலை இலக்கிய அல்லது பிற துறைகளில் உன்னுடைய திறமையை வளர்க்கும். அதை விட முக்கியமான பயன், நீ தீய வழிகளில் செல்லாமல் இருக்க அது மிகவும் உதவும்”
இந்த அறிவுரை என் பள்ளி அனுபவத்தின் பாற்பட்டது. அதற்குத் துணைநின்றவர்தான் எங்கள் ஆசான் “ மந்திரம் சார்”.
ஆண்டு 1963. சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழா. இராமகிருஷ்ணா விவேகானந்த இலக்கியத்தில் மிகத் தீவிரமான பற்றுடையவர் மந்திரம் சார் ! அவர் வழிகாட்டுதலில் அவர் எழுதிய இராமகிருஷ்ண சரிதத்தை கணேசன், பிரபு, பாலகிருஷ்ணன், நான் ஆகிய நாங்கள் எவ்வாறு ஓர் இசை சொற்பொழிவாகப் பல மேடைகளில் நிகழ்த்தினோம் என்ற விவரங்களை எல்லாம் நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
இசையிலும், கவிதை, இலக்கியம் ஆகியவற்றிலும் பற்றுடைய எங்கள் குழுவிலுள்ள பத்து மாணவர்களுக்கு அவர் மிகச் சிறப்பாக வழிகாட்டினார். சங்கீத நாட்டமுள்ளவர்களை முறையாக “ம்யூசிக் கிளாஸ்’ போகச் சொன்னார். அவர் சொல்லித்தான், அவர் கொடுத்த ஊக்கத்தில்தான் கணேசன், பிரபு , பாலகிருஷ்ணன் நான் ஆகிய நால்வரும் முறையாகப் பாட்டு கற்றுக் கொள்ளத் தொடங்கினோம்.
விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டிய மாணவர்களை ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் ஸ்டேட் லெவலில் பங்குபெறும் வகையில் ஊக்கமளித்தவர்.
“ஸ்பெஷல் கிளாஸ்” எடுக்காமலேயே எங்களை ஸ்பெஷலாக கவனித்து படிப்பிலும் முன் நிற்க வைத்தவர். எங்கள் குழுவிலிருந்து சென்றவரில் ஐ ஏ எஸ் , ஐ பி எஸ் களும் உண்டு.இதெல்லாம் பல ஆசிரியர்களின் திறமைகளினாலே வளர்க்கப்படும் பயிற்சி. எல்லாப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும். ஆனால் “மந்திரம் சார்” ஊக்கத்தால் எங்களுக்கு ஆன்மிகப் பயிற்சியும் கிட்டியது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களுக்கு இராமகிருஷ்ணர் , சுவாமிஜி வரலாற்றை மிக உருக்கமாக சொல்வார். அதில் ஆழ்ந்த பலரில் ரகு, சுந்தர் என்ற இருவர் இன்னும் ஆழமாக அந்தத் தத்துவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். ”டிகிரி” முடித்ததும் அவர்கள் இருவரும் , உடனடியாக இராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்து துறவு வாழ்க்கையில் தங்கள் சேவையைத் தொடங்கினார்கள். மூத்த துறவிகளாக விளங்கும் அவர்களை இன்றும் நான் சந்தித்து இயன்ற நேரத்தில் அளவளாவிவருகிறேன்.
தவறான பாதையில் செல்லும் ஒரு மாணவன் நல்ல ஆசிரியரால் எவ்வாறு திருந்துவான் என்பதற்கு என் பள்ளி எனக்கோர் உண்மைச் சம்பவத்தைக் காட்டியது.
சௌந்தரராஜன் என்ற “சவுண்டு”. வகுப்பு அட்டெண்டன்ஸ்ல மட்டும்தான் அவன் பெயர் சௌந்தர்ராஜன். மற்றபடி எல்லோருக்கும் “சவுண்டுதான்”. எங்களை விட இரண்டாண்டுகள் சீனியர் வயதில் மட்டும்; வகுப்பில் அல்ல. அடுத்த வருடமும் அதே வகுப்புதான் என பல ஆசிரியர்கள் அவனிடமே சொல்வார்கள்; அவன் சிரித்துக் கொண்டே போய்விடுவான். பள்ளிக்குள்ளே அவன் யாரிடமும் சண்டை போட்டதில்லை. ஆனால் வெளியில் அவன் ஒரு “ரௌடிக்குரிய” இலக்கணம் தவறாமல் நடப்பவன் என்று பரவலான செய்திகள் உண்டு. அதனாலேயே ஆசிரியர்களுக்கும் இவனிடம் ஒரு பயம் உண்டு.
காலப் போக்கில் அட்டெண்டன்ஸ் எடுக்கும் ஆசிரியர்களும் “சவுண்டு” என்றே கூப்பிடத் தொடங்கிவிட்டனர் . சுமாரான உயரம். எக்ஸர்சைஸ் பாடி இல்லையெனினும் வலுவான தேகம். நல்ல சிவந்த அழகான நிறம்; மூக்கும் முழியுமாக இருப்பான். ஆனால் யாரோ இட்ட சாபம் போல முகத்தில் அம்மைத் தழும்புகள் இருக்கும்.
தினம் அவனைப் பற்றி ஏதாவது செய்தி மாணவர்களுக்கிடையே உலவும். பள்ளிக்கு எதிரில் இருந்த டி எஸ் சி காண்டீனில் பணம் வைத்து சீட்டாட பெரும் தனவந்தர்களும், நடிகர்களும் வருவதுண்டு. அந்த இடத்தில் இவனைப் பார்த்தாகச் சிலர் சொல்வர். புகை பிடித்துக் கொண்டிருந்தான்; மது அருந்துவான் என்பர். அங்கே நடந்த சண்டையில் இவனும் இடம் பெற்றதாக தகவல்.
நாளாக ஆக பள்ளிக்குள் இவனை யாரும் ஒன்றும் கேட்பதில்லை; வகுப்புக்கு தாமதமாக வருவான். சில நேரங்களில் வாயில் , வெளியே வண்டியில் விற்கப்படும் மாங்காயைக் கடித்துக் கொண்டே வருவான்.. இவனது பெற்றோர் மத்தியதர வர்க்கம்; சாதுவானவர்கள்; பணக்காரர்களும் இல்லை.
அது ஒரு சனிக்கிழமை. நன்றாக நினைவிருக்கிறது. அரைநாள்தான் . திடீரென்று பள்ளிக்குள் ஒரு பரபரப்பு. “மந்திரம் சார்” சவுண்டை பளீரென்று கன்னத்தில் அடித்துவிட்டார் எனக் கேள்விப்பட்டோம். கோபமே வராத ஒருவர் கோபப்பட்டிருக்கிறார். அடியே வாங்காமல் இஷ்டம் போல் திரிந்த ஒரு மாணவன் முதல் முறையாக அடி வாங்கியிருக்கிறான். என்ன அதிசயம் ! இந்த “இன்சிடெண்டுக்கு” பிறகு சவுண்டு ரொம்பவும் மாறிப் போய்விட்டான். எங்களுக்கெல்லாம் ஒன்றும் புரியவில்லை. இதைத் தோண்டித் துருவி விசாரிக்க நேரமும் இல்லை.
சுவாமிஜி நூற்றாண்டு விழாவின் போது அவன் தான் கிட்டத்தட்ட “அஃபிஷியல் போட்டோகிராபர்”. பள்ளி விழாக்களில் எல்லாம் அவன் தான் போட்டோ எடுப்பான். படிப்பு வராத காரணத்தால் மேல்படிப்பில் அவன் சேரவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு கல்யாண ரிசப்ஷனில் அவனை சந்தித்தேன். மேற்கு மாம்பலத்தில் ஒரு ஸ்டுடியோ வைத்திருக்கிறான். நல்ல வருமானம். மனைவி ஒரு பள்ளியில் டீச்சர். பையன் இரண்டாவது படிக்கிறான்.
”நாம படிச்ச பள்ளிக்கூட ஞாபகமெல்லாம் இருக்கா ?” என்றேன் .
“ என்ன அப்படிக் கேட்டுட்ட ..இப்பவும் ஸ்கூல்ல ஏதாவது பங்க்ஷன்னா “மந்திரம் சார் என்னைத்தான் கூப்பிட்டு அனுப்புவார்”
”அப்படியா ! அவருக்கு ஒன்னையெல்லாம் நினைவிருக்கா?”
“எப்படி மறப்பார் ? அவர்தானே என்னை ஒரு போட்டோகிராஃபர் ஆக்கியவர் “ என்றான். கண்களில் நன்றி பளபளத்தது. ஒரு புதிருக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் விடைபெற்றேன். திரும்பும் போது நாமக்கல்லாரின் ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.
தப்பிதம் கண்ட போதும்
தண்டிக்க முனைந்தி டாமல்
நட்புடைத் தோழன் போல
நயமாக எடுத்துக் காட்டி
ஒப்புற வாகப் பேசி
உள்ளத்தை உருக்க வல்ல
அப்பெருந் தகைமை யேநல்
லாசானுக் கமைய வேண்டும்.
( தொடரும்)

இது போன்ற ஆசான்களால்தான் நாம் உருவாக்கப்பட்டிருக்கிறோம்! அருமை சார் உங்கள் பள்ளி நினைவுகள் !.
LikeLike
ஆசிரியர்களை அச்சுறுத்தும் மாணவர்கள் அந்த காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. அந்த அச்சுறுத்தலை ஆசிரியர்கள் சிலர் ஏற்றுக் கண்டதும் ஒருவகை strategy in teaching என்று கொள்ளலாமா?
LikeLike