டி ஆர் மகாலிங்கம் 100
T R M -^- டி ஆர் எம்T.R.Mahalingam | Antru Kanda MugamT.R. Mahalingam – Movies, Bio and Lists on MUBI

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் … என்ற அடியை எப்போது நினைத்துக் கொண்டாலும் மனத்திரையில் தோன்றும் பிம்பம், டி ஆர் மகாலிங்கம் அவர்களுடையது தான். அவரது குழந்தைமை ததும்பும் மலர்ச்சியான புன்னகையை எத்தனையெத்தனை பாடல் காட்சிகளில், வெகுளியாக அவர் தோன்றும் திரைக்காட்சிகளில் பார்த்திருக்கிறோம். அந்த அமைதியான உருவத்தினுள் எப்படி ஆர்ப்பரிக்கும் ஆழமான இசையூற்று குடியிருந்தது என்பது மலைக்க வைப்பது.  சோழவந்தான் வழங்கிய இந்த மேதை, திரையிசையை ஆளவந்தான் தான்!

உதகமண்டலத்திலிருந்து மசினகுடி செல்லும் பாதையில் 35க்கு மேலிருக்கும் கொண்டை ஊசி வளைவுகள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சென்ற நாள் இன்னும் நினைவில் உண்டு. கர்நாடக இசை விற்பன்னர்கள் சிலரது அசாத்திய ஆரோகண அவரோகண ஆலாபனைகள் கேட்கையில் அதேபோலவே மயிர்க்கூச்செறியும் அனுபவம் உணர்வதுண்டு. மகாலிங்கத்தின் பாடல்கள் சிலவற்றைக் கேட்கையில், இந்தக் கொண்டை ஊசி வளைவில் வாகனம் நேர்த்தியாக ஒரு தளத்திலிருந்து அடுத்த தளத்திற்குத் திரும்புவது மட்டுமின்றிக் கொஞ்சம் காற்றில் மிதந்த வண்ணம் போவது போலவும் தோன்றும் இடங்கள் அறியமுடியும்.

நொடி நேரத்தில் காகிதத்தில் உருமாற்றங்கள் நிகழ்த்திக் கொண்டே போகும் ஒரிகாமி கலைஞரைப் போலவும், சடாலென்று எடுத்து ஊதிக் காட்டும் பலூன்காரர் போலவும், இந்த முனையிலிருந்து அடுத்த முனைக்கு சிறிதும் ஆடாமல் அசையாமல் நீண்ட கழியைக் கையில் பிடித்தபடி கயிற்றின் மீது நடந்துபோகும் வித்தைக்காரர் போலவும் வண்டியை விட்டு நாள் கணக்கில் கீழிறங்காது வாகனத்தை முன்னும் பின்னும் இடமும் வலமும் திருப்பியும் சக்கரங்களில் ஒன்றை நிமிர்த்தியும் வளைத்தும் ஓட்டுவது போதாதென்று, தண்ணீர் நிரம்பிய குடத்தை உதட்டுப் பிடிமானத்தில் ஏந்தியபடி சுற்றிச் சுழன்று வரும் சைக்கிள் போட்டிக்காரர் போலவும் கூட என்னென்ன மாயங்களை  நிகழ்த்த வல்ல குரலரசனாகத் திகழ்ந்தவர் டி ஆர் மகாலிங்கம்!

தன்னை மிகவும் நேசித்து ஆட்கொண்ட சீர்காழி கோவிந்தராஜனோடு போட்டி போட்டுக் கொண்டு டி ஆர் எம் பாடியிருக்கும் அகத்தியர் படத்தின் ‘நமச்சிவாயமென்று சொல்வோமே…நாராயண எனச் சொல்வோமே.’ .பாடலை அறிய வந்த நாள் முதல் ஓயாமல் பாடிப்பாடி ரசித்தது இருவரது கம்பீரக் குரல்களுக்காகத் தான் என்றாலும், அதில் நுட்பமான அழகியலோடு மகாலிங்கம் இசைத்திருக்கும் இடங்களின் மீது அத்தனை காதல் கொண்டிருந்த நேரமது. ‘பள்ளி கொண்டார் திருமால், பாற்கடலில்’ என்ற அடியைப் பாடுகையில் அந்தப் பாற்கடல் அத்தனை சுவையாக ஒலிக்கும் அவரது குரலில்!  வரிக்கு வரி சிவன் – திருமால் ஆதரவு எதிரெதிர் வாதங்கள் போலப் புனையப்பட்டிருந்த பாடலின் போக்கில் இருவரது ஆலாபனைகள் கனஜோராகக் கேட்கும். அதிலும் மகாலிங்கம் வழங்கும் விதம் நெஞ்சை ஈர்க்கும்.  ‘ஆண்டவன் தரிசனமே’ பாடலில் அவர் பின்னிக்கொண்டே செல்லும் இசையழகு சொக்கவைப்பது.

அவரது பக்தி, ரசிகர்களின் பரவசம். திருவிளையாடல் படத்தில் அவரது இசை பங்களிப்பு ஒப்பற்றது. விவரிப்புக்கு அப்பாற்பட்டது. ‘இல்லாததொன்றில்லை…’ பாடலில் இல்லாதது ஒன்றுமில்லை. சொற்சுவை மிகுந்த அந்தப் பாடலின் ஒவ்வொரு சரணத்திலும் அவர் ராக அமுதத்தை, முகந்தெடுத்துக் கொடுப்பது, கிணற்றில் செப்புக் குடத்தைத் தாம்புக் கயிற்றில் இறக்கி அது மெல்ல மிதந்துகொண்டேஇருக்க, அதை மெல்ல ஏமாற்றி அதில் நீர்புக வைத்து அந்தப் பளுவில் கீழிறங்கும்போது  மேலும் நீர் நிரப்பிக் கடைசியில் ஆழத்தில் அமிழ்த்தி நிமிர்த்திக் கயிற்றைப் பற்றி இழுத்த இளமைக்கால நினைவுகளுக்குள் கொண்டு சென்றுவிடும் என்னை.  அதிலும் ‘கல்லான உருவமும்….’  என்பதன் அழகான மிதமான நீட்சியில் ‘கனிவான உள்ளமும்’ என்ற சொற்களில் அந்தக் கனிவைத் தரமாகப் பிரித்துப் பிழியும் அவரது ரசமான வெளிப்பாடு நெஞ்சை அள்ளும். ஒவ்வொரு சரணத்திலும் அவர் நெய்யும் ஆலாபனை நெசவு அபாரமானது. அமைதியான ஊஞ்சல் அனுபவம் இந்தப் பாடலெனில், அதே படத்தின்  ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’  ஓர் அதிவேகக் குடை ராட்டினம். அரசனிடமும், மனைவியிடமும், சிவனிடமும் அந்தப் பாத்திரமாக அவர் பேசுவதில் கூட இசை தெறிக்கும்.

ராஜராஜ சோழனில் சிவாஜி கணேசன் குரலையடுத்து, ‘தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்’ பாடலில் அவர் உருவாக்கும் சுவாரசியமான சங்கதிகள் மறக்க முடியாதவை. ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ பாடலின் தாளகதியும், அவரது குரலோட்டமும் கால்களைத் தாளமிட வைக்கும். ‘திருவருள் தரும் தெய்வம்’ பாடலில் பெருகும் அவரது இசைஞானம் ஈர்ப்பது. 

காதல் பொங்கும் அவரது இசைஞானத்திற்கு ஏற்ப அவருக்கு அபாரமான பாடல்கள் பலவும் வாய்த்தது ரசிகர்களுக்குக் கிடைத்த வரம். ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ இடம் பெறாத இசைக்கச்சேரிகள் ஆகக் குறைவாகவே இருக்கும். திருமண வரவேற்புகளில் நேயர் விருப்பம் எழுதும் விரல்களில் ஒன்றில் சில்லென்று பூத்துவிடும் இந்தப் பாடலுக்கான கோரிக்கை. முதல் சரணத்தின் நிறைவில், செவ்வந்திப் பூச்சரத்தை அவர் தொடுக்கும் விதமே அலாதி. இரண்டாம் சரணத்தில்  ‘கண்களில் நீலம் விளைத்தவளோ, அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ’ கேட்கும்போதெல்லாம்  குற்றியலுகர விதிகளுக்கு அப்பாற்பட்ட அந்த ஒலியை ரசிப்பதுண்டு. மறுக்க முடியாத காதல் ததும்பும் அவரது விழிகளில் – அது இசைத்தமிழின் மீதான காதலாக இருந்திருக்கக் கூடும்.

வெவ்வேறு இணைக் குரல்கள் அவருக்கு வாகாக அமைந்து கொண்டே இருந்தது அந்தப் பாடல்களுக்கு சாகாவரம் அளித்துவிட்டது. பி சுசீலாவின் தேனினிமைக்  குரலோடு இணைந்து அவர் இசைத்த ‘ஆடை கட்டி வந்த நிலவோ…’ நம்மைச் சந்திர மண்டலத்தில் கொண்டு இறக்கும் கீதம்.  ‘அந்தி வெயில் பெற்ற மகளோ….’ என்ற உச்சரிப்பு ஒன்று போதும் பக்கம் பக்கமாக எழுதுவதற்கு. அப்புறம்,  ‘நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோவிற்கு’ வேறு புதிய நோட்டுப்புத்தகம் வாங்க வேண்டும்.  ‘சொட்டுச் சொட்டுனு சொட்டுது பாரு …’ பாடல் மழையில் நனைய வைக்கும் காதல் காவியம். 

ஆனால் எல்லோரையும் அவர் அசர வைத்தது, மிகவும் மென்மையாக அமைந்த காதல் கீதமான, ‘நானன்றி யார் வருவார்…’  ஏ பி கோமளாவுக்கும் புகழ் பெற்றுத் தந்த இந்தப் பாடல், காதலியின் குறும்பில் தோற்பதுபோல் தோற்று இன்னும் நெருக்கமான காதலில் காதலன் ஆழும் இன்பத் தோரணம். இத்தனை மென்மையான பாடலா என்று எம்ஜிஆர் மறுத்துவிடவே, அவருக்காக எழுதி மெட்டமைத்த தனது இந்தப் பாடலைப் பிறகு கண்ணதாசன் தனது சொந்தப் படமான மாலையிட்ட மங்கையில் டி ஆர் மகாலிங்கம் அவர்களை நாயகனாக்கி அவரே பாடுவதாக அமைக்க, அந்தப் படம் மகாலிங்கத்திற்குத் திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லப்படுவது.

தென்கரையிலிருந்து புறப்பட்டு வந்த இசைக்குரல், கரைகடந்த காட்டாற்று வெள்ளமாக இசை ரசிகர்களைத் திணறவும் திக்குமுக்காடவும் திளைத்து மூழ்கிக் கிடக்கவும் வைத்தது.  சரசரவென ஊர்ந்து செல்லும் நாகத்தின் வேகமும், அதன் மூச்சுக் காற்றின் வீச்சுமாக நிலைத்துவிட்ட குரலில் தனது நடிப்பில் தானே பாடுவது அவருக்குப் பிடித்தமான இருந்து வந்திருக்கிறது. பின்னணிக் குரலாக ஒலிக்க அவர் மனம் இசையவில்லை. 

தமிழ்த்திரையில் கம்பீரமாக ஒலித்த கிட்டப்பா இளவயதில் மறைந்த வெற்றிடத்தில் ஒலிக்கக் கேட்ட இவரது குரல், ரசிகர்களின் பேராதரவால் தொடர்ந்த இசைப்பயணம் அவரது 53ம் வயதில் காற்றில் கலந்தது. ஆனால், கரைந்துவிடாமல் அவரது நூற்றாண்டு வேளையிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறை பாடகர்களின் விருப்பத் தேர்வுகளில் பொதிந்திருக்கிறது, அவரது பாடல்களின் இசை நுணுக்கத்தின் மீதான பிரமிப்பும் மதிப்பும்.   

 

டி ஆர் மகாலிங்கம் அவர்களின் கணீர் குரலில் பாடல்களைக் கேட்க விருப்பமா? இதோ இங்கே !!

https://youtu.be/KtHPslKOxR8?si=a_gVxHi0StK0XdC8