கணபதிக்கு அரசமரத்தடி, 41% OFF“என்னலே.. நல்லாத் தூங்கினியா? உனக்கென்ன? சிலுசிலுன்னு மலைக் காத்து.. வவுறுமுட்ட சோறு.. உண்ட மயக்கத்துல குளிர்வாடை அசத்த தும்பிக்கையை மடக்கி வெச்சுப்புட்டு நல்லாத்தான் தூங்கியிருப்பே.. ஆனா எனக்குத்தான் நேத்து ராவு முளுக்க தூக்கமே வரலை.. ஏன்னு தெரியலை.. மனசுல ஒரே கலக்கம்.. எலே.. என்ன நா பாட்டு பொலம்புதேன்.. நீ எங்கனயோ பராக்கு பார்த்திட்டிருக்கே?”

தாமிரபரணியில் முங்கி எழுந்து ஈரத்துணியுடன் ஒரு கையில் குடத்து நீரையும் இன்னொரு கையில் அலுமினியத் தூக்கையும் சுமந்தபடி வந்து வயக்காட்டுப் பிள்ளையாருக்கு நீர் அபிஷேகம் செய்துக் கொண்டிருந்தான் ஆதிமூலம். இது அவன் தினமும் செய்வதுதான். தரிசு நிலத்தையொட்டியிருந்த பிள்ளையாரை ஊரில் யாரும் சீந்துவார் கிடையாது. ஆனால் ஆதிமூலத்துக்கு மட்டும் அவனுடைய சிறுவயதிலிருந்தே அந்த தும்பிக்கையான் மீது ஏனோ அசாத்திய ஈடுபாடு. இவ்வளவுக்கும் அரசமரத்தடியில் சிக்கனமாக கருங்கல்லினாலான இரண்டடி விக்கிரகம்தான்….

அங்கு எப்போது அந்த பிள்ளையார் முளைத்தார் என்று ஆதிமூலத்துக்குத் தெரியாது.. அவன் தாத்தா காலத்திலிருந்து இருப்பதாக அவன் அப்பா எப்போதோ சொல்லக் கேட்டிருக்கிறான். ஒரு சித்தர் பிரதிட்சை பண்ணின பிள்ளையார் என்று கூட அவர் சொன்னதாக ஞாபகம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் ஆதிமூலம் சிந்தித்ததில்லை. அவனைப் பொறுத்தவரை இந்த வயக்காட்டுப் பிள்ளையார்தான் அவன் குலச்சாமி, வானம் பார்த்திருக்கும் பிள்ளையாருக்கு ஒரு கூரை கட்ட வேண்டும் என்பது அவனுடைய நீண்ட நாள் இமாலயக் கனவு.

அபிஷேகம் முடிந்து அரச மரக்கிளையில் முந்தய நாள் காய வைத்திருந்த துணியின் முடிச்சை அவிழ்த்து எடுத்து பிள்ளையாரின் மேனியில் படிந்திருந்த ஈரத்தை மெதுவாக ஒற்றி எடுத்தான். இன்னொரு கிளையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்திருக்க வேண்டிய துணியை பிள்ளையாரின் இடுப்பைச் சுற்றி வஸ்திரமாக்கினான். பக்கத்தில் கொட்டாங்குச்சியிலிருந்த திருநீரை தானும் நெற்றியில் பூசிக்கொண்டு பிள்ளையாரின் நெற்றியிலும் அப்பினான். இன்னொரு கொட்டாங்குச்சியிலிருந்த குங்குமமும் பிள்ளையாரின் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு வட்டமிட்டது.

விளக்கு ஏற்ற வசதி கிடையாது. சூடனும் கிடையாது. தரிசு நிலத்தில் முளைத்திருந்த புல்லைத்தான் பிள்ளையாருக்கு புஷ்பமாக அர்ப்பணிப்பான்.

தூக்கில் கொண்டு வந்திருக்கும் கஞ்சியோ இல்லை பழைய சோறோ.. அதுதான் பிள்ளையாருக்கு நிவேதனம்.

“சாப்பிடுலே.. நல்லாச் சாப்பிடு.. சோலி முடிஞ்சு போய் எதையாவது ஆக்கி நா எடுத்தாரதுக்குள்ள பொழுது சாஞ்சுரும்.. பசி தாங்க மாட்டே.. இப்ப நல்ல சாப்பிட்டுக்க”

மூடியைத் திறந்து தூக்கை பிள்ளையாரின் வாய்க்கு அருகில் கொண்டு செல்வான். அப்படிச் செய்தால் பிள்ளையார் சாப்பிடுவது போல் அவனுக்கு திருப்தி..

அதன் பிறகுதான் தன் வேட்டியைக் காயப்போட்டு இடுப்பில் துண்டு சுற்றி அங்கேயே உட்கார்ந்து அவனும் சாப்பிடுவான். அதற்குள் அடிக்கிற காற்றில் வேட்டி காய்ந்துவிடும். உடுத்திகொண்டு அரிசி மண்டி வேலைக்குக் கிளம்புவான்.

ஆனால் இன்று பிள்ளையாருக்குப் படைத்த பிறகு அவனுக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. மனதில் ஏதோ ஒரு சஞ்சலம். இனம் புரியாத தவிப்பு.

அப்படியே பிள்ளையாரின் காலடியில் உட்கார்ந்தான்..

“ம்.. என்னன்னு தெரியலை.. மனசு கிடந்து இப்படிச் சலம்பிட்டிருக்குது.. இதப்பாரு.. எனக்குன்னு யாரும் கிடையாது.. அய்யன் ஆத்தா எல்லாரும் போய் சேர்ந்துட்டாவ.. நீதான்லே எல்லாம்.. எதுவும் ஏடாகூடமா நடக்காமப் பார்த்துக்க”

அவனையறியாமல் கண்களில் நீர் திரண்டது.

”ஆதி”

குரல் கேட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினான். அரிசி மண்டியில் அவனுடன் வேலை பார்க்கும் எசக்கி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்தான்..

“ஏன்வே.. எதுக்கு இம்புட்டு அவசரமா ஓடியாரே? முதலாளி கூப்பிட்டாராக்கும்”

எசக்கி தன்னைக் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு..

”இல்லை ஆதி.. விசயமே வேற.. இந்த தரிசு நிலத்த துபாய் பாய் ஒருத்தர் விலை பேசி வாங்கிப்புட்டாராம். இது விவசாயம் பண்ண லாயக்கில்லாத எடம்னு அரசாங்க நோட்டீசு வாங்கியிருக்கானுக.. இங்கிட்டு பெரிசா தொழிற்சாலையோ என்னவோ கட்டப்போறானுகளாம்..”

“நெசமாலுமா?”

“ஆமாவே.. ஊர் பெரிசும் கவுன்சிலர் தாமுவும் பேசிட்டிருந்ததை காதுபட கேட்டுப்புட்டுத்தானே வாரேன்.. தரிசு நிலம் ஆறு ஏக்கரைச் சுத்தி சுவர் எழுப்பப் போறானுகளாம்.. சுருக்கா வேலை ஆரம்பிக்கப் போவுதாம்.. அவுங்க பேசினதைப் பார்த்தா.. உன்னோட இந்த பிள்ளையார் சாமிய பேர்த்துப்புடுவானுக போல.. ஏன்னா இதுவும் தரிசு நிலத்தைச் சேர்ந்தது தானே?”

இதைக் கேட்டு ஆதிமூலத்துக்கு கதிகலங்கியது.

“என்ன.. என் பிள்ளையாரை பேர்த்துப்புடுவாவளா? என்னவே சொல்லுதே?”

“அவுங்க பேசினததானே சொல்லுதேன்.. பாய் ஆளுங்களை வெச்சு கமுக்கமா பத்திரப் பதிவெல்லாம் பண்ணிப்புட்டாராம்.. இன்னும் ஒண்ணு ரெண்டு நாளுல சோலிய ஆரம்பிக்க ஆளுங்க..”

எசக்கி முடிப்பதற்குள் ஆதிமூலம் பதட்டத்துடன் எழுந்தான்.

அவனுடைய பிள்ளையாரை பெயர்த்தெடுக்கப் போகிறார்களா? ஓ. இதனால் தான் நேற்றிலிருந்து அவனுடைய மனது சங்கடப்பட்டதோ?

உடனே பிள்ளையாரைப் பார்த்து..

”கூடாது.. என் குலச்சாமி நீ.. இங்கிட்டிருந்து உன்னை நகர்த்தக் கூடாது.. உனக்குக் கூரை கட்டணும்லே.. என்ன.. இம்புட்டு நடக்குது.. பார்த்திட்டு சும்மா இருக்கே.. ஏதாவது பண்ணுலே..”

பிள்ளையார் வழக்கம்போல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆதிமூலம் ஊர் பெரியவர் வீட்டுக்கு ஓடினான்..

“ஆமா ஆதி.. தரிசு நிலம்.. அரசாங்கத்துக்கு சொந்தம்.. ஆளைப் பிடிச்சு பாய் வாங்கிப்புட்டார்.. என்ன பண்ணச் சொல்லுதே? வேணும்னா ஒண்ணு பண்ணுதேன். உன் புள்ளையாரை சேதப்படாம எடுத்துத்தாரச் சொல்லுதேன்.. நீ வேற எங்கிட்டாவது வெச்சுக்க”

ஆதிமூலத்தின் மனம் இதற்கு ஒப்பவில்லை.

“என்ன இப்படிச் சொல்லிட்டீக? எத்தனை வருசமா அந்த மரத்தடில இருக்காரு என் குலச்சாமி. இப்பப் போய் எடத்த மாத்துன்னு சொன்னா எப்படி? வேணும்னா அரச மரத்துக்கு முன்னால வரைக்கும் அவுக தடுப்புச் சுவரு கட்டிக்கட்டும்”

“உகும்.. அது முடியாதுலே.. அதைத் தாண்டியும் தரிசு நிலம் இருக்குது.. அங்கிட்டுத்தான் மதிற்சுவரு வரும்.. அதனால நீ பிள்ளையாருக்கு வேற எடம் பார்க்கறதுதான் நல்லது”

இதற்கு மேல் இவரிடம் பேசிப் பயனில்லை என்று ஆதிமூலத்துக்குப் புரிந்தது.

அன்று அவன் வேலைக்குப் போகவில்லை. பித்து பிடித்தது போல் பிள்ளையாரையே சுற்றி சுற்றி வந்தான்.

நடுவில் எசக்கி வந்து அழைத்துப் பார்த்தான். ஆனால் ஆதிமூலம் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இரவு முழுவதும் பிள்ளையாரின் கால்களைப் பற்றியபடியே தலை சாய்ந்திருந்தான்.

மறுநாள் முதலில் இரண்டு ஜீப்புகள் வந்தன. அதிலிருந்து சிலர் கையில் காகிதங்களுடன் இறங்கினர். பின்னாலேயே நான்கைந்து லாரிகள்.. செங்கல், சிமெண்ட், மணல் லோடுகளுடன்..

ஜீப்பிலிருந்து இறங்கியவர்களில் கொஞ்சம் குள்ளமாக பருமனாக இருந்தவர்தான் எஞ்சினியர் சிவபாலன். வரைபடத்தைப் பிரித்து ஆராய்ந்தார். அந்த இடத்தை பார்வையாலேயே நோட்டம் விட்டார். பிறகு தனது உதவியாளர்களை அழைத்து வரைபடத்திலிருந்த நான்கு திக்குகளையும் காட்டி உத்தரவு பிறப்பிக்க அவர்களும் உடனே கையில் அளவு டேப்பை எடுத்துக் கொண்டு வேலையில் இறங்கினர்.

முதலில் பிள்ளையார் இருந்த அரச மரத்தடி பக்கம்தான் வந்தனர்.

ஆதிமூலம் அவர்களை மிரட்சியோடு பார்த்தான்.

“என்ன.. என்ன பண்ணப் போறீய?”

அவர்கள் பதில் எதுவும் சொல்லாமல் இடத்தை ஆராய்ந்தனர்.

ஆதிமூலம் பொறுமை இழந்தான்.

“கேக்கேன்ல.. என்ன பண்ணப் போறீய?”

உதவியாளர்களில் கொஞ்சம் அனுபவஸ்தர் போல் தெரிந்தவர்..

“சுவரு கட்டணும்ல.. அதான் அளந்து எல்லைக்கோடு போடணும்”

ஆதிமூலம் கெஞ்சும் குரலில்..

“சாமி.. தர்மதுரை.. தயவு பண்ணுங்க.. இந்த அரசமரம்.. இதுக்கு அங்கிட்டு நீங்க என்ன வேணா பண்ணிக்குங்க.. ஆனா இந்த அரச மரத்தையும் அதுல இருக்கற என் குலச்சாமி பிள்ளையாரையும் விட்டுருங்க.. வேணும்னா அதைச் சுத்தி சுவர் எழுப்பிக்குங்க..”

அந்த உதவியாளர் இவனை அலட்சியமாகப் பார்த்து..

“மொதல்ல இந்த மரம் இங்கிட்டு இருக்கப் போவுதான்னு பார்ப்போம்”

இதற்குள் அரிசி மண்டியில் வேலைபார்க்கும் மற்றவர்களிடம் எசக்கி விஷயம் சொல்ல அவர்கள் ஆதிமூலத்துக்கு ஆதரவாக வந்து சேர்ந்தார்கள். ஆதிமூலத்துக்கு அரசமரத்தடி பிள்ளையாரின் மேல் இருக்கும் பற்றைப் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

“முடியாது.. இந்த மரமும் இங்கிட்டுத்தான் இருக்கும்.. பிள்ளையாரும் இங்கிட்டுத்தான் இருப்பாரு”

“ஆமா.. ஆமா..”

எல்லோரும் குரல் கொடுக்கவே இரைச்சல் கேட்டு எஞ்சினியர் தனபாலன் அங்கு வந்தார்.

”என்ன பிரச்சனை?”

“இங்கிட்டு சுவர் எழுப்பக்கூடாதாம்.. பிரச்சனை பண்ணுதாக”

உடனே ஆதிமுலமும் மற்றவர்களும்..

“ஆமா.. இந்த மரத்தையும்.. அதுல இருக்கற பிள்ளையாரையும் தொட விடமாட்டோம்”

சிவபாலன் கொஞ்சம் பதட்டமானார்.

“இதப்பாருங்க.. இந்த எடம் பாய்க்கு சொந்தமானது. அதுல நீங்க உரிமை கொண்டாட முடியாது”

“நாங்க ஏன்வே உரிமை கொண்டாடுதோம்? என் பிள்ளையாருக்கு விட்டுக்கொடுங்கன்னுதானே சொல்லுதேன்”

“அதெல்லாம் முடியாது.. மொதல்ல எடத்தைக் காலி பண்ணுங்க”

ஆதிமூலமும் நண்பர்களும் அந்த இடத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்தார்கள்.

சிவபாலன் யோசித்தார். அந்த ஊர் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து விவரம் சொன்னார். அவர் பாய்க்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர்.

பத்தே நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் சில கான்ஸ்டபிள்களுடன் வந்து சேர்ந்தார்.

“ஒளுங்கு மரியாதையா எடத்தைக் காலி பண்ணுங்கல.. இல்ல.. ஆயுசுக்கும் ஜெயில்ல களி துண்ண வெச்சுருவேன்”

இந்த மிரட்டலுக்கு ஆதிமுலமும் நண்பர்களும் மசிவதாக இல்லை.

“எலே எழுந்திருங்கடா..”

இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள்களுக்கு சைகை காட்ட அவர்கள் ஆதிமூலத்தையும் மற்றவர்களையும் வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுக்க முயன்றார்கள்.

ஆதிமூலம் சட்டென்று எழுந்து சென்று பிள்ளையாரை கெட்டியாகக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

இந்த அமளிக்கிடையில் சிவபாலனை அலைபேசியில் பாய் அழைத்தார்.

“என்ன பிரச்சனை?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை பாய்.. நாங்க பார்த்துக்கறோம்”

“டே.. என்ன பிரச்சனைன்னு சொல்லு”

பாய் கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஆதிமூலத்தின் அலறல் கேட்டு சிவபாலன் திடுக்கிட்டுத் திரும்பினார்.

இரண்டு மூன்று கான்ஸ்டபிள்கள் ஆதிமூலத்தின் கைகளைப் பிடித்து முறுக்க அவன் வலி பொறுக்க முடியாமல் அலறியபடி எழுந்தான்.. ஒரு கான்ஸ்டபிள் அவனுடைய நீண்ட தலை முடியைப் பிடித்து வேகமாக இழுக்க. ஆதிமூலம் நிலை தடுமாறி கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் அங்கிருந்த பெரிய கல்லில் அவன் தலை மோத உடனே ரத்தம் பீறிட்டது.. ஆதிமூலம் மூர்ச்சையானான்..

சிவபாலன் பதறியபடி வந்து..

“ஐயையோ.. என்ன பண்ணிட்டீங்க.. பிரச்சனை ஆயிரும் போலருக்கே”

இன்ஸ்பெக்டர் அவரை அடக்கி..

“எதுவும் ஆவாதுவே.. நாங்க இருக்கோம்ல?”

உடனே ஆதிமூலத்தை ஜீப்பில் ஏற்றி அங்கிருந்த டிஸ்பென்சரிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே ஏனோதானோவென்று முதலுதவி அளித்து உடனே டவுன் ஆஸ்பத்திருக்கு அழைத்துச் செல்லும்படி கூற டவுன் ஆஸ்பத்திரியை அடையும்போது ஆதிமூலம் நினைவிழந்திருந்தான்.

ஆஸ்பத்திரியில் அவன் மறுபடியும் கண்விழித்த சமயம் எசக்கி அங்கு வந்தான்.

”ஆதி.. ஆதி.. கண்ண தொறந்துட்டியால?”

ஆதி புரியாமல் விழித்தான்.

“ஏன்.. நான் கண் தொறந்தா என்ன?”

“எலே.. அன்னிக்கு அந்த போலீஸ்காரர் உன்னைத் தள்ளி விட்டு உனக்கு மண்டைல அடிபட்டு.. எட்டு மாசமா கண்ணு தொறக்காம மயக்கத்துல கெடந்தே.. இன்னிக்குத்தான் முழிச்சிருக்கே”

ஆதிமூலம் கொஞ்சம் கொஞ்சமாக நடந்ததை யோசிக்க முயற்சி செய்தான்.

“எசக்கி.. அப்ப என் பிள்ளையார்.. எனக்கு அங்க போகணும்.. உடனே கூட்டிட்டுப் போ”

டாக்டரின் அனுமதியுடன் ஆதிமூலத்தை அழைத்துச் சென்றான் எசக்கி.

தரிசு நிலத்தைச் சுற்றி பெரிதாக மதிற்சுவர் எழும்பியிருந்தது. ஆதிமூலத்துக்கு மனது கனத்தது.

ஆனால் அது .. அது என்ன..

ஆதிமூலம் பரபரப்புடன் முன்னால் நடந்தான்..

அந்த அரச மரம் அப்படியே இருந்தது. ஆனால் அவனுடைய குலச்சாமி பிள்ளையார்..

அதே இடத்தில் சின்ன கோவிலுக்குள் உட்கார்ந்திருந்தார்..

பளிச்சென்று திருநீறு.. புது வஸ்திரம்.. திரி விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது..

ஆதிமுலம் புரியாமல் எசக்கியைப் பார்த்தான்.

“எல்லாம் அந்த துபாய் பாயோட உபயம்லே. எஞ்சினியர் உன்னைப் பத்தி சொன்ன உடனே பாய் இந்த எடத்தைத் தொடக்கூடாதுன்னு சொல்லிப்புட்டாராம். அதோட பிள்ளையாருக்கு சின்னதா ஒரு கோவிலும் கட்டச் சொல்லி நெதம் நெதம் பூசை பண்ண ஒரு சாமியையும் ஏற்பாடு பண்ணிப்புட்டாரு.. அதுக்குண்டான செலவையும் அவர்தான் கொடுக்கறாரு”

“நெசமாலுமா?”

“ஆதி.. ஒண்ணு நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன்.. இந்த சாதி மத வேறுபாடெல்லாம் அரசியல் பண்றவங்களுக்கும் சமூக விரோதிகளுக்கும்தான். நம்ம மாதிரி சாதாரண சனங்களுக்கு இல்லை..”

உணர்ச்சிப் பொங்க ஆதிமூலம் கோவிலை அடைந்தான். பிள்ளையாரைப் பார்த்தவுடன் அவன் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர்..

“எலே.. இருந்த எடத்த விட்டு அசராம கூரைய வாங்கத்தான் நாடகமாடினியா?. கல்லுளி மங்கா”

அவன் மனம் சந்தோஷத்தில் குதூகலித்தது.