
(ஓர் அடியார் – ஒருவெண்பா)
27) திருஞான சம்பந்தர்
‘புகலியர் கோன்’ என்று போற்றப்படுகின்ற திருஞானசம்பந்தர், சீர்காழிப் பதியில், அந்தண மரபில் தோன்றியவர். இவருக்கு மூன்று வயது இருக்கும் போது, தோணியப்பர் கோவில் குளக்கரையில் அமர வைத்து விட்டு நீராடச் சென்ற தந்தை நெடுநேரம் ஆகியும் வாராத காரணத்தால் அழுதார். அப்போது திருத்தோணியப்பர் உமையுடன் காளை வாகனத்தில் எழுந்தருளினார். உமையம்மையார் ஒரு பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தக் குழந்தைக்கு ஞானப் பாலை ஊட்டினார்.
குளித்துவிட்டு வந்த தந்தை வாயில் வழிகின்ற பாலைப் பார்த்துவிட்டு, ‘யார் கொடுத்தது?’ என்று கேட்க, ஞானசம்பந்தர், ,”தோடுடைய செவியன்” என்ற தமது முதல் பதிகத்தைப் பாடியருளினார்.
இவர் திருநீலகண்ட யாழ்ப்பாணரோடு சேர்ந்து பல தலங்களுக்குச் சென்றார்.
திருநெல்வாயில் என்ற தலத்தில், இறைவனுடைய ஆணையால் அங்கிருந்த அந்தணர்கள் முத்துச்சிவிகை, குடை ஆகியவற்றை இவருக்கு வழங்கினர்
திருமருகல் என்ற ஊரில் பதிகம் பாடி, இறந்து போன ஒரு வணிகனின் உயிரை மீட்டுக் கொடுத்தார்
திருநாவுக்கரசர் இவருடன் சேர்ந்து பல தலங்களுக்குச் சென்று பதிகம் பாடி வழிபட்டு மகிழ்ந்தார்
மதுரையை ஆண்ட, கூன் பாண்டியன் மாற்றுச் சமயத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் கொடிய வெப்பு நோயால் அவதிப்பட்டான். சம்பந்தர், “மந்திரமாவது நீறு” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி அவனது நோயைத் தீர்த்தார். வாதுக்கு வந்த சமணர்களோடு அனல் வாதம், புனல் வாதம் செய்து வெற்றி பெற்றார்
திருவோத்தூர் என்ற திருத்தலத்தில் சம்பந்தர் பதிகம் பாடி இறைவன் அருளால் ஆண் பனையைப் பெண் பனையாகச் செய்து குலை தர வைத்தார்.
திருமயிலைத் திருத்தலத்தில், சாம்பலாக இருந்த பூம்பாவை என்ற பெண்ணை, “மட்டிட்ட புன்னையங் கானல் மட மயிலை” என்று தொடங்கும் பதிகம் பாடி உயிர் தந்து எழுப்பினார்.
திருநல்லூர்ப் பெருமணம் ( ஆச்சாளபுரம் ) என்ற திருத்தலத்தில் வைகாசி மாதம் மூல நாளில் இவரது திருமணம் நடைபெற்றது அப்போது, பெரியதொரு சோதி தோன்றத் திருமணம் காண வந்தவர் அனைவருடன் அச்சோதியின் உட்கலந்தார்.
ஞானசம்பந்தரின் “யாழ்முரி”என்ற பதிகம்,, , “வாசி தீரவே காசு நல்குவீர்” என்ற திருப்பதிகம், திருமறைக்காட்டுத் திருப்பதிகம், “கோளறு திருப்பதிகம்”, “திருமயிலைத் திருப்பதிகம்’ ஆகியவை அடியார்களால் இன்றும் பெரிதும் விரும்பி ஓதப்படும் பெருமையுடையன.
நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தரின் வாழ்வில் நடந்த அருஞ்செயல்களைப் பற்றி அறிந்து கொள்வது நமக்கு மிகுந்த
நலம் பயப்பதாகும்.
திருஞான சம்பந்தர் வெண்பா
ஞானப்பால் உண்டார், நனிசிறந்த பண்ணமைத்துத்
தேனொப்பத் தந்தார் திருப்பாடல், – வானப்பேர்
ஆற்றானைப் பாடி அருஞ்செயல்கள் செய்தகதை
போற்றி அறிதல் பொலிவு
(வானப்பேர் ஆற்றான்- வான் நதியாகிய கங்கையைச் சடையில் கொண்ட சிவன்,)
28 ஏயர்கோன் கலிக்காம நாயனார்
சோழ நாட்டில், காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது திருப்பெருமங்கலம். இவ்வூரில், ஏயர்கோக்குடியில் தோன்றியவர் கலிக்காம நாயனார். சிவபக்தியில் சிறந்த இவர், திருப்புன்கூர் பெருமானுக்குப் பல திருப்பணிகள் புரிந்து வந்தார்..
சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமானைப் பரவையார் வீட்டுக்குத் தூதாக அனுப்பியதைக் கேள்விப்பட்ட கலிக்காமர், சுந்தரர் மேல் மிகுந்த சினம் கொண்டிருந்தார். வேத முதல்வனை ஓர் அடியார் தூது அனுப்பிய செயலை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “இக்குற்றத்தைச் செய்தவரை நான் நேரில் கண்டால் என்ன நிகழுமோ?” என்று எண்ணி மனம் வருந்தினார். கலிக்காமரின் பகைமை உணர்ச்சியை அறிந்த சுந்தரர் அதனைத் தீர்க்குமாறு இறைவனிடம் வேண்டினார். இறைவன்,கலிக்காமருக்குச் சூலை நோயை அளித்தான். அவர் அந்நோயால் மிகவும் துன்புற்றார். தம் நோயைத் தீர்த்தருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். அவரிடம் “உன் நோயைச் சுந்தரன் தீர்த்தால் அன்றி அது தீராது” என்று கனவில் இறைவன் உரைத்தான். “வழிவழியாய் வழிபடும் எனது நோயை உன்னால் வலிய ஆட்கொள்ளப்பட்டவனா தீர்ப்பது? இந்நோய் தீராமல் இருப்பதே சிறந்தது” என்றார் கலிக்காமர்.
சிவபெருமான் வன்றொண்டர் கனவில் தோன்றினார்., “ கலிக்காமர் வீட்டிற்குச் சென்று அவருடைய சூலை நோயைத் தீர்ப்பாயாக” எனப் பணித்து அருளினார்.
சுந்தரர் வரும் செய்தியை அறிந்த கலிக்காமலர், தம் வயிற்றை உடை வாளால் கிழித்துக்கொண்டு உயிரை விட்டார். சுந்தரர் வந்து விட்டார் என்பதை அறிந்த கலிக்காமரின் மனைவியார், கணவரின் உடலை உள்ளே மறைத்து வைத்துவிட்டுச் சுந்தரரை வரவேற்றார்.
“கலிக்காமரின் சூலை நோயைத் தீர்க்க யான் வந்துள்ளேன்” என்று சுந்தரர் கூறவும், வீட்டில் உள்ள பணியாளர்கள், “அவர் உள்ளே பள்ளி கொள்கின்றார்” என்று கூறினர். உள்ளே சென்ற சுந்தரர்,குடல் சரிந்து கலிக்காமர் இறந்து கிடப்பதைப் பார்த்தார். இதற்குத் தாமே காரணம் என நினைத்துத் தமது வாளால் தம்முடைய வயிற்றைக் கீற முற்பட்டார்.
அப்போது, இறைவன் அருளால் கலிக்காமர் உயிர் பெற்று எழந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி உற்ற நண்பர்கள் ஆயினர்.
ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் புராணத்தைச் சொல்லுகையில், சேக்கிழார் இடையே சுந்தரரின் திருக்கதையை மிக அழகாக அமைத்து உள்ளார். இது படிக்கப் படிக்க மிகுந்த இன்பம் தருவதாகும்.
கலிக்காமர் வெண்பா
தேரோடும் ஆரூரில் செல்லுக தூதென்று
நீரார் சடையானை நேர்ந்ததனால் – சீராரும்
வன்றொண்டர் மேலிவர் வைத்தசினம் அன்பாக
நன்றிறைவன் செய்தான் நயம்.
***********””*****
29) திருமூல நாயனார்
திருக்கைலாயத்தில் சிவபெருமானின் தொண்டராகிய நந்தியம் பெருமானின் அருளைப் பெற்ற சிவயோகியார் ஒருவர், கயிலையில் இருந்து புறப்பட்டு, வழியில் உள்ள பல தலங்களைக் கண்டு வணங்கித் தில்லையை அடைந்து ஆடற் பெருமானின் திருக்கூத்தினைக கண்டு களித்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியின் கரையோடு சென்று திருவாவடுதுறை அடைந்தார். ஆவடுதுறை இறைவனை வழிபட்டு அகம் குளிர்ந்த அவர் அத்தலத்தை விட்டு அகன்று செல்லும்போது, காவிரிக் கரையில் உள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுது கொண்டிருப்பதைக் கண்டார்.. சாத்தனூர் என்ற அந்த ஊரில் ஆநிரை மேய்க்கும் ‘மூலன்’ என்பவன் இறந்தமையால் அதனைத் தாங்க மாட்டாமல் பசுக்கள் கதறுவதை அறிந்தார். பசுக்களின் துயரத்தினை நீக்க எண்ணிய யோகியார், தம்முடைய திருமேனியை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுக் கூடுவிட்டு கூடு பாயும் தமது ஆற்றலைப் பயன்படுத்தி மூலனின் உடலில் புகுந்தார்.
ஆயனாகிய மூலனின் உடலில் புகுந்த யோகியார் “ திருமூலர்” ஆனார்.
பசுக்கள் எல்லாம் துயரம் நீங்கி மகிழ்ந்தன.
மாலை வந்ததும் பசுக்கள் எல்லாம் தமக்குரிய வீடுகளுக்குச் சென்றன. அப்போது இறந்து போன மூலனின் மனைவி, தன் கணவன் என்று நினைத்து அவரை நெருங்க, அவளிடமிருந்து விலகிய திருமூலர், அவ்வூரில் உள்ள மடத்தில் சென்று தங்கலானார்.
மூலனின் மனைவி, தன் கணவனின் நிலையை ஊராரிடம் உரைக்க, அவர்கள் திருமூலரிடம் சென்றனர். அவர் யோகத்தில் இருந்த நிலையைக் கண்டு அவரை மாற்ற இயலாது என்று கூறி, மூலனின் மனைவியைத் தேற்றி அழைத்துச் சென்றனர்.
திருமூலர், தாம் வைத்திருந்த உடலைத் தேடிப் பார்த்தார்.
அது கிடைக்காமல் போகவே, அதுவே இறைவனின் திருவுள்ளம் என்பதை உணர்ந்தார்.
யோக நெறிகளைத் திருமூலர் வாக்கால் கூற வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம். ஆகவே தமது உடல் இறைவனால் மறைக்கப்பட்டது என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.
சாத்தனூரில் இருந்து புறப்பட்ட திருமூலர் திருவாவடுதுறை அடைந்து, இறைவனை வணங்கிக் கோவிலுக்கு மேற்கில் உள்ள அரச மரத்தின் கீழ் யோகத்தில் அமர்ந்து மூவாயிரம் ஆண்டுகளில், ஆண்டுக்கு ஒன்றாக மூவாயிரம் திருமந்திரச் செய்யுள்களை இயற்றியருளினார். பிறகு தவத்தில் ஈடுபட்டு இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.
‘சரியை’ , ‘கிரியை,’ ‘யோகம்’ , ‘ஞானம்’ என்னும் நால்வகை நெறிகளும் விளங்கும் திருமந்திரம் என்னும் ஒப்பற்ற யோக நூலை அருளிய திருமூலரின் வரலாறு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
‘ஒன்றிய குலம் ஒருவனே தேவன்’
‘அன்பே சிவம்’
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ போன்ற
புகழ்பெற்ற சொற்றொடர்கள் திருமந்திரத்தில் உள்ளனவே ஆகும்.
திருமூலர் வெண்பா
ஒருமூலம் இல்லான் உவந்தருளும் யோகி
திருமூலர் என்று திகழ்ந்து – அருமாலை
மூவா யிரமான மொய்தமிழ்ப் பாக்களை
நாவாரச் சொன்னார் நனி!
( ஒருமூலம் இல்லான்– சிவன்)
(தொடரும்)
