இதுவும் K B யின் இரண்டு வார T V தொடர். 40/45 வருடம் ஆகிவிட்டது. இதன் பெயர் மறக்கவே முடியாது. ஏன் என்றால் அது கதையில் ஒரு பாத்திரமாகவே வரும்.
இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் எழுதி இயக்கிய "சேரன் எக்ஸ்பிரஸ்" குறும்படம்  | K. Balachander | JayaTv - YouTube
” சேரன் எக்ஸ்பிரஸ் “

கதை நடக்கும் இடமே புதுமையாக இருக்கும். சிறிய தனி வீடு, ரயில்வே ட்ராக்குக்கு வெகு அருகில். இரண்டு ஊர்களுக்கு நடுவில். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது.

மூன்றே பேர் வசிக்கிறார்கள். அம்மா, பையன், மருமகள். ரொம்ப ஒற்றுமையான, சந்தோஷமான குடும்பம். மூன்று பேரும் ரொம்ப ரொம்ப நல்லவர்கள்.

மாமியாரும் மருமகளும் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்ளும் அளவுக்கு அன்யோன்யம். மற்ற இரண்டு நடிகர்கள் யார் என்று நினைவு இல்லை. அம்மாவாக நடித்த(வாழ்ந்த)வர் S N லக்ஷ்மி.

அந்த வீடுப்பக்கத்தில் இருக்கும் ரயில்வே ட்ராக்கில்தான் கோவை to சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் செல்லும். அதில் தான் அந்த மகன் டிரைவராக வேலை செய்கிறான். அந்த வீட்டை க்ராஸ் செய்யும்போது விசில் அடிப்பான். அம்மாவும், நாட்டுப் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வார்கள். நடுவிலே இடையில் ஒருநாள் இரண்டு நாள் ஓய்வு கிடைக்கும் போது வந்து கூட இருப்பான்.

“நாம சென்னையிலோ, கோவையிலோ வீடு வாடகை எடுத்துத் தங்கலாமே” என்று அம்மா கேட்கும்போது. “அங்கெல்லாம் வாடகை ரொம்ப அதிகம்மா. அதைத்தவிர இந்த மாதிரி அமைதியான, சுத்தமான இடம் அங்கே கிடைக்காது” என்று சொல்லி விடுவான்.

அவர்களின் நிறைவான ஒற்றுமையான வாழ்க்கையைக் காட்ட சில சம்பவங்களை காட்டுவார்கள்.

ஒருமுறை அந்த பெண் ப்ரெக்னன்ஸி டெஸ்ட் எடுத்து ரிடல்டுக்கு காத்திருக்கிறாள். பையன் வேலைக்குப் போகும் போது சொல்லிவிட்டுப் போவான். “டெஸ்டில் பாசிடிவ் ரிசல்ட் வந்தால்- மொட்டைமாடியில் லைட் போட்டுவிட்டு பச்சைக் கலர் புடவை கட்டிக் கொண்டு நில். இல்லாவிட்டால் எப்போதும் போல இருந்தது விடு” என்று.

ரிசல்ட் பாசிடிவ் என்று வந்ததும் இருவரும் பெரும் சந்தோஷம். பச்சைப்புடவை கட்டிக் கொண்ட பெண்ணைப் பார்த்து கேலியாக “11 மணிக்கு மேல் வரப்போகும் ட்ரெயினுக்கு 4 மணி நேரம் முன்னாடியே தயாரா இருக்கியே” என்று கேலி செய்வாள்.

வண்டி க்ராஸ் செய்வதற்கு ரொம்ப முன்னாடியே மேலே போய் லைட் போட்டுவிட்டு நின்று விட்டாள். வண்டி தாண்டிப் போகும்போது, பார்த்துவிட்டு எப்போதையும் விட அதிக முறை அதிக நேரம் விசில் அடித்துக் கொண்டே சேரன் எக்ஸ்பிரஸ் சென்றது. கீழே வந்த பெண்ணிடம். ” ரொம்ப சந்தோஷம் போல, விசில் சத்தம் தாங்கல்ல” என்று சொல்லி திருஷ்டி கழிப்பது போல செய்வாள். அடுத்த நாள் ரிடர்ன் ட்ரிப் சேரன் எக்ஸ்பிரஸ் போகும் போதும் அதிக விசில் சப்தம் கேட்டது அதோடு மாடியில் தொப் என்று ஏதோ சப்தம் கேட்டது. வேகமாகப் போய்ப் பார்த்தால் ஒரு நன்கு பேக் செய்த பார்சல் இருந்தது. கீழே எடுத்துவந்து பிரித்தால் ஒரு அழகான புடவையோடு இனிப்பும் இருந்தது. “எவ்வளவு கரெக்ட்டா நம்ம வீட்டு மாடியில் விழறமாதிரி அந்த வேகத்திலயும் போட்டுருக்கார் பாத்தீங்களா” என்று கேட்கும் போது “இது என்ன ஒரு டிரைவருக்கு இது கூட முடியாதா என்ன? பல ஸ்டேஷன்களில் கீயை போட்டுட்டு அங்க தரும் கீயை வாங்கிண்டு போரவனுக்கு இது ஒரு விஷயம்” என்று சொல்வாள். (அந்த காலத்தில் அப்படி ஒரு பழக்கம் இருந்தது. பெரிய வளையத்தில் நீளமான பிடிபோல ஒன்று இருக்கும் அதை ஸ்டேஷனில் மாற்றிக் கொள்வார்கள் – நிற்காமல் போனாலும்)

அவன் வந்ததும் மூவரும் சந்தோஷமாக பேசுவது, அவர்கள் தனியாக இருக்கட்டும் என்று அம்மா வெளியே போவது என்று நடக்கும்.

ஒருநாள் இரவு வழக்கம்போல நள்ளிரவு நேரம் வரை பேசிக்கொண்டே மருமகளும் மாமியாரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். “சீக்கிரம் தூங்கு என்று சொல்லும்போது” “இன்னும் சேரன் எக்ஸ்பிரஸ் போகலியே என்று சொல்லுவாள். சற்று நேரத்தில் சேரன் எக்ஸ்பிரஸ் கடந்து போகும் ஆனால் விசில் சப்தம் இல்லாமல் போகும். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடும், ஏன் என்ற கேள்வியும் பார்த்துக் கொள்வார்கள். “ஏம்மா ஏதாவது சண்டையாயிடுச்சா சந்தோஷமாத்தானே போனான். என்ன ஆச்சு? “

“ஒண்ணும் இல்லயேம்மா. இந்த முறை 10 நாள் ஆகலாம்னு சொன்னார். “

” இந்த நிலையில உன் தூக்கத்த கெடுக்க வேணாம்னு சத்தம் போடாம போறான் போல நீ தூங்கு” என்று சொல்கிறாள். அம்மா தன் மருமகளுக்கு எண்ணை தேய்த்து விடுகிறாள். தந்தோஷமா பேசிக்கொண்டே இருக்குறார்கள் அப்போது யாரோ
பெல் அடிக்கிறார்கள். மகள் கிணற்றடியில் குளிக்க விட்டு விட்டு அம்மா வெளியிலே வருகிறாள். யாரோ ஒருவர் வந்திருக்கிறார் இவர்களுக்குத் தெரிந்த ஒரு சிநேகிதி அவரிடம் “இந்த வீடுதான், இவங்கதான் அவரோட அம்மா” என்று சொல்கிறாள்.

வந்திருப்பவர் தான் ரயில்வே ஊழியன் என்றும், சென்னையில் அவருடைய மகன் வையனை க்ராஸ் பெண்ணுமபோது ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார் என்றும். பாடியும் ஒரு மூட்டையாய் சாக்குப் பையில்தான் வரும் என்றும் சொல்கிறார். அம்மா இடிந்து போகிறார். அங்கிருந்தே கிணற்றடியில் மகள் சந்தோஷமாக பாட்டுப் பாடிக் கொண்டே குளித்துக் கொண்டு இருப்பதை பார்க்கிறாள். ரயில்வே அதிகாரியிடம். “ஐயா அந்த பாடிய இங்கே கொண்டு வரவேண்டாம். இங்கே இரண்டு உயிர்கள் இருக்கின்றன. அங்கேயே அடக்கம் செய்து விடுங்கள். நான் தான் அம்மா எதிலெல்லாம் கைநாட்டு வைக்கணுமோ , நான் வைக்கிறேன். நீங்கள் கிளம்புங்கள்” என்று அனுப்பி விடுவாள்.

அந்த சிநேகிதி இடம் “இவள் நல்லபடியாக பிள்ளை பெற்று பிழைக்க வேண்டும். நீயும் தப்பித் தவறிக்கூட அவளிடம் சொல்லி விடாதே” என்றாள். “எத்தனை நாள் சொல்லாமல் இருப்பீர்கள்” என்று கேட்கும் போது ” தெரியல்ல” என்று பதில் சொல்வாள்.

கண்ணை துடைத்துக் கொண்டு உள்ளே வந்து. “நம்ம பையனை ஏதோ காரணத்துக்காக வட இந்தியா பகிர ரயிலில் டிரைவராக அனுப்பி இருக்கிறார்களாம். அதனால் வர இன்னும் சில நாட்கள் அதிகமாகுமாம். அதைசொல்லத்தான் யாரையோ அனுப்பி இருக்கிறார்கள்” என்று சொல்லி விடுவாள்.

தனிமையில் அழுதும் மருமகளோடு இருக்கும்போது வழக்கமாக இருக்கவும் மிகக் கஷ்டப்படுவாள்.

அதைக் காட்டுகிற காட்சிகள் மனதைத் தொடும்

அழகான குழந்தை பிறக்கிறது. “இவ்வளவு நாளா வராமல் இருப்பார்கள். வரட்டும் இந்த வேலையை வேண்டாம் என்று சொல்லச் சொல்கிறேன்.” என்று ஏதேதோ பேசுவாள். அம்மா சமாதானமாக ஏதாவது சொல்வாள்.

சில காட்சிகள் இதுபோல காட்டப்படும். நமக்கே தோன்றும் எப்படி முடிக்கப் போகிறார். அந்த விஷயம் கேட்டதும் என்ன நடக்கும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும்போது, பாலச்சந்தரின் குரலில். “என்றாவது ஒருநாள் இந்த விஷயம் அவளுக்குத் தெரியத் தானே போகிறது. அந்த நாளை சந்திக்க அந்த தாய்க்கு தைரியம் இல்லை எனக்கும் தான்” என்று முடித்து விடுவார்.

அந்த வீடு, சூழ்நிலை, S N லஷ்மி யின் அபாரமான நடிப்பு, அந்த முடிவு இன்றும் நினைவில் நிற்கிறது, கண் கலங்குகிறது.

அதன் காணொளி இரண்டு பாகங்கள் இதோ: