திருவரங்கன் உலா – மதுரா விஜயம் –            ஸ்ரீ வேணுகோபாலன்    

திருவரங்கன் உலா, பாகம் 1 [Thiruvarangan Ulaa 1] by ஸ்ரீவேணுகோபாலன் [Sri  Venugopalan] | Goodreads

இதுவரை இந்தத் தலைப்பின்கீழ் வேற்றுமொழிப் புத்தகங்களைப் பற்றியே எழுதி வருகிறாளே, தமிழில் ஒன்று கூடவா கிடையாது என நீங்கள் அங்கலாய்ப்பது கேட்கிறது வாசகர்களே! இப்போது உங்கள் குறை தீர்ந்ததா?

உண்மையில் எனக்குச் சரித்திரத்தின் மீதான ஆர்வம் மிகப் பெரிது; பாரதத்தின் பல நாடுகளின் தோற்றம், வளர்ச்சி, பண்பாடு, கலாச்சாரம், அரசர்களின் வீரதீரம் ஆகியவை பற்றிய செய்திகள் ஆகியவற்றை சரித்திர நவீனங்களைப் படித்தேதான் அறிந்து கொண்டிருக்கிறேன். இந்த ஆர்வத்திற்குத் துணை நின்றவை கல்கி, ஜெகசிற்பியன், அகிலன், நா.பா., விக்கிரமன் ஆகியோரின் கல்கி, ஆனந்தவிகடன், அமுதசுரபி ஆகியவற்றில் வெளிவந்த அவர்களது எழுத்துக்களே. படித்து அந்தப் பதின்பருவத்தில் பெருமிதமும் புளகிதமும் அடைந்துள்ளேன். பின்பு இவர்களுடன் பிரபஞ்சன் (மானுடம் வெல்லும், வானம் வசப்படும்) இந்தப் பட்டியலில் இணைந்து கொண்டார்.

           ஸ்ரீவேணுகோபாலனின்  மேற்கண்ட புதினங்கள் தொடராக வெளிவந்த காலகட்டத்தில் நான் தாய்நாட்டில் இருக்கவில்லை. அவற்றின் தலைப்பே என்னை ஈர்த்ததனால், பின் அவற்றை,  புத்தக வடிவில் வாங்கிப் படித்தேன் – புளகித்தேன்; திரும்பவும் படித்தேன் – சிலிர்ப்பில் கண்ணீர் சிந்தினேன்; மறுபடியும் படித்தேன் – இத்தகையதொரு பண்பாட்டில் நம் நாட்டவர்கள் ஊறியவர்களா எனப் பெருமிதம் கொண்டேன். இவ்வாறு பலமுறை வாசித்தேன். பிரமித்தேன். இப்போது இந்தக் கட்டுரை எழுதுவதற்காக இன்னும் ஒருமுறை வாசிக்கிறேன் – விவரிக்க முடியாத உணர்வுகள் என்னை ஆட்டுவிக்கின்றன. அதனால் இன்னும் பிரமிக்கிறேன். இது வித்தியாசமான ஒரு (உண்மைச்) சரித்திரம் பற்றிய புதினம் – இதனை இப்படியும் ஆழ்ந்து அனுபவித்து, தம் ஊனும் உள்ளமும் உருக ஒருவரால் எழுதவும் முடியுமா? அவர் எழுதியதனை வாசகர்கள் படிக்கும்போது தாமும் அப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆளாக இயலுமா – இயலும் – என்பதே என்னை பிரமிப்பில் ஆழ்த்தி வைத்துள்ளது.

           வாருங்கள் இப்புதினம் பற்றிப் பார்க்கலாம்.

           ஆசிரியரின் சொற்களிலேயே இப்புதினம் பற்றிய விளக்கத்தைக் காணலாம்: ‘ஒரு சமுதாயத்தின் நம்பிக்கையாகத் திகழ்ந்து, அந்தச் சமுதாயத்தின் ஏற்றத்திலும் தாழ்ச்சியிலும் பங்குகொண்டு, ஆச்சரியமான பல போர்களுக்கு இலக்காகி, ஒரு கதாநாயகனின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்குமோ அத்தனையையும் தன் வாழ்க்கையில் கொண்டவராக இருந்து விட்டார் திருவரங்கத்துப் பெருமாள்.’

           பதினெட்டு ஆண்டுகள் கதைக்கான குறிப்புகளை நூலகங்களில் தேடிச் சேகரித்தும், கதை விளைந்த பூமிகளைச் சென்று தரிசித்தும், பல மகான்களிடம் விளக்கங்கள் கேட்டும் ஆராய்ச்சியைத் தொடர்ந்து பின் ஓராண்டுக்காலமாக வாரப் பத்திரிகை தினமணி கதிரில் இவர் எழுதிய நெடுநாவல் இது.

           மற்ற புதினங்களினின்றும் முற்றும் வேறுபட்டது. ஏனென்றால் ஒரு சரித்திரத்தை, அழகாகத் தெளிவாக விளக்கி, புனைபாத்திரங்களையும் இணைத்து உலவவிட்டு, பக்திரசம் சொட்டச்சொட்ட, விறுவிறுப்பாக எழுதப்பட்ட புதினம் இதுதான்.      

           கதையின் காலம் 14ம் நூற்றாண்டு. இக்காலத் தொடக்கத்தில்தான் முகலாயர்கள் தெற்கத்திய நாடுகளுக்குப் படையெடுத்தார்கள். இப்படையெடுப்பினால் தமிழ் அரசுகளும், சுற்றியுள்ள பிரதேசங்களும் சாமானிய மக்களும் பெரும் துயரங்களை அனுபவிக்கும் அவல நிலைக்கு ஆளாயினர். மதுரையில் நாற்பது ஆண்டுகள் சுல்தானிய ஆட்சி நடந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்து சநாதன தர்மங்களைக் காப்பதற்குப் பெரும் பங்கு வகித்தவர்கள் ஹொய்சளர்கள். ‘மதுரா விஜயம்’ எனும் சமஸ்கிருத நூலைப் படித்தவர்களுக்கு இது தெரிந்திருக்கலாம். சமீபத்தில்தான் நான் இந்த நூலை மொழிபெயர்ப்புடன் மின்பிரதியாக வாங்கிப் படித்தேன். கங்காதேவி எனும் ஒரு அரசியால் எழுதப்பட்ட காவியம் இது!

           நம் அனைவருக்கும் தெரிந்தது எல்லாம் விஜயநகரம் உருவாகி வளர்ந்து  செங்கோலோச்சிய வரலாறே. ஆனால் நாயக்க மன்னர்கள் தமிழகத்தின் வாழ்க்கை முறைக்கும் அதன் பாதுகாப்புக்கும் உதவியதையும் கருத்தில் கொண்டு புக்கராயரின் மகனான குமாரகம்பண நாயக்கர் எனும் மன்னரைப் பற்றி வெகு சிறப்பாக இப்புதினத்தில் விளக்கப்பட்டுள்ளது. எதைச் சொல்வது? எதனை விடுவது? பிரமிப்புதான் எல்லை மீறுகிறது. பல சரித்திர உண்மைகளையும், வாழ்ந்த மன்னர்களையும் பற்றியும் பொருத்தமான சில புனைபாத்திரங்களுடன் ஒரு புதினமாகப் படைத்துள்ள ஆசிரியரின் எழுத்து வன்மையை வியக்காமலிருக்க இயலவில்லை.     

           குலசேகரன் எனும் வீரன் விரைந்தோடிவந்து ஸ்ரீரங்கம் நகரில் முகம்மதியர்களின் படையெடுப்பைப்பற்றி அறிவிப்பதுடன் தான் கதை தொடங்குவது. அதனை நம்பியும் நம்பாமலும் வீரர்களும், ஊர்வாழ் மனிதர்களும், கோயில் பக்தர்களின் படையும் அந்த எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர். அரங்கனின் மூலவர் சிலையை இரவோடிரவாகக் கருங்கல் சுவரையெழுப்பிப் பூசி மூடிவிடுகின்றனர். பொன்னாலானது, நவரத்தினங்களால் நிரப்பப்பட்டது என சுல்தானியர்கள் கருதும் உற்சவரையும் அவருடைய ஆபரணங்களையும் எடுத்துக்கொண்டு இருநூறுபேர்கொண்ட பக்தர் படையொன்று அரங்கனைக் காப்பாற்றி ஒளித்து வைக்க விரைகின்றது. குடிஜனங்கள் பெண்டுபிள்ளைகளுடன் புலம் பெயர்கின்றனர். எம்பெருமானடியார்கள் எனப்படும் தேவரடியார்கள் கோவிலினுள் அடைக்கலம் கொண்டு அரங்கனைக் காக்கத் துணைநின்று பல சாதனைகளைப் புரிகின்றனர்.

           பஞ்சுகொண்டான் எனும் வைணவப் பெரியாருடன் குலசேகரன் இணைந்து பல சாகசங்களைப் புரிகிறான். ஆயினும் கோவில் சுல்தானியர் வசப்பட்டு விடுகின்றது. அழகிய மணவாளனை அவனுடைய அடியார் படை அழகர்கோயில், நத்தம், திண்டுக்கல், வழியாக கோழிக்கோட்டிற்கு எழுந்தருளப்பண்ணினார்கள். அங்கிருந்து மேல்கோட்டை எனும் திருநாராயணபுரத்தை அடைகின்றனர்.

           ஊர்வலத்திற்கு ஏற்படும் இன்னல்களைக் களைவதிலும், அதற்கான உதவிகள் செய்வதிலும் உறுதுணையாக இருப்பவன் குலசேகரன். அவன் அரங்கனைத் திருவரங்கம் கொண்டு சேர்த்துவிடுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவன்.

           மேல்கோட்டை எனும் திருநாராயணபுரத்தில் பல ஆண்டுகள் வாசம் செய்த அரங்கனைத் திரும்ப ஸ்ரீரங்கத்திற்குக் கொண்டுசேர்க்க குலசேகரனின் பிரயத்தனத்தால் ஹொய்சள அரசரான வீரவல்லாளர் உதவ முன்வருகிறார். போரில் வெற்றிவாகை சூடியவரை சுல்தானியர் வஞ்சகத்தால் படுகொலை செய்கின்றனர். படை சிதறியோடுகிறது. பின் விஜயநகரை ஸ்தாபித்த ஹரிஹரர் புக்கர் ஆட்சியின் கீழ் உள்ள திருமலைக்காடுகளில் மறைத்துப் பாதுகாக்கப்பட்டார் அழகிய மணவாளன். இக்காலகட்டத்தில் அவருடைய பக்தர்களின் படையின் எண்ணிக்கை குறைந்து கொண்டேவந்து ஒரு கட்டத்தில் மூவர், இருவர், ஒருவராகி விடுகின்றனர்.

           இந்த சம்பவங்களின் இடையே குலசேகரன், ஹேமலேகா எனும் பெண்ணிடம் காதல் வயப்படுகிறான். அவனை வாசந்திகா எனும் எம்பெருமானடியாளும் காதலிக்கிறாள். நுட்பமான காதல் உணர்வுகளை விரசமேயில்லாமல் ஆசிரியர் விவரிக்கும்போது அந்தப் பிரேமையின் வலிமையையும் மென்மையான இனிமையையும் உணர்ந்து நம் கண்கள் ஊற்றெடுக்கின்றன. உதாரணமாக, ஆசிரியரின் சில வர்ணனை வரிகளையே கீழே கொடுத்துள்ளேன்.

           ‘சுவாமி! சூரியனைக் கண்டு தாமரை மலர்கிறது; இதே ரீதியில் உங்களது விழையும் கண்கள், மோனமான தவிப்புகள், சுழன்று மருகும் பார்வைகள் யாவும் போததா எனக்கு?அவை அந்நாளில் எனக்கு என்ன சுகத்தைத் தந்தன? அதை நான் மறக்க முடியுமா?” என்று கண்களை மூடிப் பரவசத்தில் இருந்தாள் ஹேமலேகா. அவளது கண்களில் அப்போது திடீரென்று ஒரு குளிர்ச்சி புகுந்து விழிகளை நீராட வைத்தது.

காவியங்களில் திளைத்த எனக்கு அவன் மனதில் வெகு காலமாய் இருக்கும் ஒரே ஒரு கனவைப் (அரங்கனை அவன் இருப்பிடம் கொண்டு சேர்ப்பதெனும் கனவை) புரிந்துகொள்ள முடியாதா என்கிறாள் அவள்.

           “பிரேமை கேவலம் நமது ஐம்புலன்களில் வாழவில்லை; நம் மனங்களில் தான் வாழ்கிறது.”

           இப்படி எத்தனையோ அருமையான உணர்ச்சிமயமான அன்பு மொழிகள்.

           இந்தப் பிரேமையினூடே அரங்கன் மீதான பக்திப் பிரேமையும் பொங்கிப் பிரவகிக்க, என் கண்களும் ஓய்வின்றிப் பொங்கிப் பொழிகின்றன. ஹேமலேகா ஒரு நம்மாழ்வார் பாசுரத்தைப் பாடுகிறாள்; பக்திரசம் ததும்பும் பிரபந்தமும் கள்ளைப்போல் மயக்கம் தருவதுதான்.

           ‘புவியுமிரு விசும்பும் நின்னகத்த நீயென்

           செவியின்வழி புகுந்தென் உள்ளாய் – அவிவின்றி

           நான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்?

           ஊன்பருகு நேமியாய் உள்ளு!’

           ஆழ்வார் பகவானிடம் பெருமிதத்தோடு பாடுகிறார்: “இப்பூவுலகும் இரு விசும்புகளும் உன்னுள் இருப்பன; அப்பேர்ப்பட்ட நீயோ என் செவிவழியே என் உள்ளத்துள் புகுந்து இருக்கிறாய். அதனால் இப்போது நானே உன்னைவிடப் பெரியவன். நீ பெரியவன் என்பதை யார் அறிவார்?’  என்கிறார்.

           இத்தகைய சம்பவங்கள் புதினம் முழுவதும் விரவிக் கிடந்து சிலிர்க்க வைக்கின்றன.

           பல தியாகங்களையும் சாகசங்களையும் செய்தும் குலசேகரன் தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் இருபது ஆண்டுகளின்பின்  இறந்தும் விடுகிறான். குலசேகரனின் இறப்புடனும் அவனுடைய நிறைவேறாத கனவுகளுடனும், அதனைத் தான் முடிப்பதாக வாசந்திகா எடுத்துக் கொள்ளும் சபதத்துடனும் இப்பாகம் நிறைவுறுகின்றது.

           ‘வீரவல்லாளரின் வஞ்சகக் கொலைக்குப் பின்பு அரங்கனைத் திரும்பத் திருவரங்கத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்று கங்கணம் பூண்டிருந்த ஒரு பரம்பரை முழுதுமே யுத்தத்தில் கிட்டத்தட்ட அழிந்து விட்டது’ என்று கூறி முதல் பாகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.  நம் மனது கனத்துக் கிடக்கிறது.

                                          ———————–

           மதுராவிஜயம் என்பது குமாரகம்பணர் எனும் அரசனின் பட்டத்துராணியான கங்காதேவி எழுதிய ஒரு காவியம். இது மதுரையை விஜயநகர அரசு வென்று நிலைமையை சீர்திருத்திய போரையும் குமாரகம்பணரின் பிரதாபங்களையும் வர்ணிக்கும் காவியமாகும். அதன் தலைப்பையே வைத்து இப்பாகத்தை எழுதியுள்ளார் ஸ்ரீவேணுகோபாலன். இது அரங்கனின் மீதிப் பயணத்தையும் விறுவிறுப்பாக வர்ணிக்கிறது.

           ஆசிரியர் முன்னுரையில் கூறுவது உள்ளத்தைத் தொடுகிறது: ‘கோவிலில் உள்ள அரங்கர் வெறும் உலோகத்தாலோ, காரைச் சுதையாலோ ஆன உயிரில்லாப் பிம்பமல்ல; நகரவாசிகளைப் பொறுத்தவரை அவர் ஒரு வாழும் தெய்வம். அவர்களிடையே வாழ்ந்து அவர்களது சுக துக்கங்களைப் பகிர்ந்து வரும் தெய்வம். அவருக்குச் செய்யும் வழிபாடுகளை அவர்கள் ஒரு மனித தெய்வத்திற்குச் செய்யும் கைங்கரியங்களாக நினைத்துக் கொண்டார்கள். பெருமாளின் ஆரோக்கியத்தை முன்னிட்டு மருந்துக் கஷாயத்தைக் கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஒரு பக்தி பூர்வமான நம்பிக்கை இருக்குமானால் அது அவர்கள் அப்பெருமாளை உதட்டளவில் நேசிக்கவில்லை, மனத்தளவிலும், ஆன்ம அளவிலும் நேசித்தார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.’

           எத்தகைய பேருண்மை!

           கதை தொடங்குவது வாசந்திகா தன் மகனான வல்லபனையும், அவன் நண்பன் தத்தனையும் அரங்கனைத் தேடுவதற்காக வழியனுப்பி வைப்பதுடன் துவங்குகிறது. ஆம். குலசேகரன் இறக்கும் முன் அவனை காந்தர்வ மணம் புரிந்து கொண்டு அவனுடைய  இறப்பின்பின் அவன் மகனைப் பெற்றெடுத்து வளர்க்கிறாள். பயணத்தைத் தொடங்கும் இளைஞர்கள் ஆரம்பத்திலேயே, கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படும் பாண்டிய இளவரசியான மதுராங்கினியை (அவள் யாரென்று அறிந்து கொள்ளாமலே) காண நேரிடுகின்றது.

           பிரதாப ருத்திரர் எனும் வாரங்கல் அரசரிடம் பொக்கிஷ அதிகாரிகளாகப் பணிபுரிந்த ஹரிஹரரும் புக்கரும், முகலாயர்கள் அவ்வரசரைக் கொலைசெய்து நாட்டைக் கைப்பற்றியபின்பு மதமாற்றம் செய்யப்பட்டனர். பின் தப்பித்து வந்து இந்து மதத்திற்கே மாறி, வித்தியாரண்யர் எனும் பெரியார், கிரியாசக்தி பண்டிதர் எனும் துறவி ஆகியோரின் துணையுடன் விஜயநகரப் பேரரசை நிறுவுகின்றனர். பக்கத்து ராஜ்யமான முள்வாய் ராஜ்யத்தின் ஆட்சி புக்கராயரின் மகனான குமார கம்பணரின் வசம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கோபண்ணா என்பவர் அந்த ராஜ்யத்தின் சர்வ சைன்யாதிபதி. மகாவீரர்.

           இவர்கள் அனைவரின் எண்ணங்களும் திரும்பத் திரும்ப நாற்பதாண்டுகளாகக் காணாமற்போன திருவரங்கனின் விக்கிரகத்தைக் கண்டுபிடித்து திருவரங்கத்தில் அவனைத் திரும்ப ஸ்தாபிக்க வேண்டுமென்பதே. வல்லபனும் தத்தனும் எங்கெல்லாமோ சுற்றி யாரிடமெல்லாமோ வழியில் அரங்கனின் பயணம் பற்றிய செய்திகளைக் கேட்டபடி, அவனைத் தேடியலைந்து திருமலைக் காட்டிற்கு வருகிறார்கள். இளைஞர்களின் சாகசம் திகிலூட்டுகிறது. அவ்விக்கிரகத்தைத் தேடிக் கண்டுபிடித்து அரசர்களின் துணையுடன் திருப்பதி மலைமீது பாதுகாப்பாக அப்போதைக்கு ஸ்தாபிதம் செய்கிறார்கள்.

           பின் குமார கம்பண அரசர், அவருடைய வீர தளபதி கோபண்ணா ஆகியோர் மதுரையில் சுல்தானியர்கள்மீது போர்தொடுத்து அவர்களை வீழ்த்தி, திருவரங்கத்திற்கே அரங்கனை எழுந்தருளப் பண்ணுகின்றார்கள். இவையெல்லாம் உணர்ச்சிமயமான பதிவுகள்; தொண்டை அடைக்காமல், கண்களில் காவேரி பெருகாமல் அரங்கன் பற்றிய செய்திகளைப் படிப்பது இயலாத காரியம்.

           ஒரு கட்டத்தில் அரங்கனை மீட்டுக் கொண்டு சேர்ப்பது பற்றி கோபண்ணாவிற்கு வேதாந்த தேசிகர் கூறுகிறார்: “கீதையில் பகவான் கூறியதன் பொருள் என்ன? அவர் நம்மை ஒரு கருவியாக வைத்து ஒரு காரியத்தைச் செய்ய வைக்கிறார். ஆனால் உண்மையில் காரியத்தை அவரே செய்து முடிக்கிறார்.” எத்தனை சத்தியமான சொற்கள்!

           அரங்கன் திருவரங்கத்தில் நிலைகொள்ளும் கட்டம் மிகவும் அழகானது; உணர்ச்சிபூர்வமானது; தெய்வ அருளின் உச்சகட்டமானது.

           வேதாந்த தேசிகர் தம் கையாலேயே காரைச்சுவரை உடைத்து, பாதுகாக்கப்பட்ட திருவரங்கனின் மூலவர் திருவுருவை வெளிப்படுத்துகிறார்.

           48 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் காணாமல் போய்விட்ட அரங்கனின் விக்கிரகத்திற்குப் பதிலாக வேறொன்றினைச் செய்வித்து, பூஜித்து வருகின்றது ஒரு புதிய தலைமுறை. இப்போது உண்மையான விக்கிரகம் வந்து சேர்ந்ததும் ஒப்புக்கொள்ளத் தயங்குகின்றனர். ஊரில் சிலகாலமாக ரகசியமாக வழிபடப்பட்டு வந்த விக்கிரகந்தான் திருவரங்கர் விக்கிரகமா அல்லது இப்போது அவர்கள் சிங்கவரத்திலிருந்து மீட்டுவந்த விக்கிரகந்தான் திருவரங்கனின் உண்மையான பழைய விக்கிரகமா என விவாதம் நடந்தது. 48 ஆண்டுகள் அரங்கனுடன் இருந்தவர் கூறினால் ஏற்றுக்கொள்கிறோம் என்றனர்.

           ஊர்முழுவதும் சென்று யாராவது வயதான முதியோர்கள் இருந்தால் அவர்கள் பழைய அரங்கனை அடையாளம் காணக்கூடும் என விசாரித்தார்கள். ஒருவர் கிடைத்தார். அனால் அவருக்குக் கண்பார்வை இல்லை. ஆயினும் அவர் தாம் இளம்பிராயத்தில் அரங்கனின் திருமஞ்சன வஸ்திரங்களைத் துவைத்துக் கொடுக்கும் ஈரங்கொல்லியாக இருந்ததாகவும், அக்காலத்தில் தம்மிடம் துவைக்கத் தரப்படும் அரங்கனின் ஈர வஸ்திரத்தைப் பிழிந்து அந்த நீரைப் புனிதப்பிரசாதமாக அருந்தி வந்ததாகவும், ஆகவே தற்போதும் அவ்வண்ணமே செய்து அரங்கனை அடையாளம் காண முடியுமா எனப் பார்க்கிறேன் எனவும் கூறினார்.

           அப்படியே இரு விக்கிரகங்களையும் திருமஞ்சனமாட்டி, வஸ்திரங்கள் தனித்தனியே அவரிடம் கொடுக்கப்பட்டன. வஸ்திரங்களைப் பிழிந்து நீரைத் தனித்தனியே ருசித்தார் அவர். சந்தேகத்திற்கிடமின்றி, சிங்கவரத்திலிருந்து வந்த அரங்கனே நீண்ட நாட்களாக இருந்து திரும்ப வந்தவர் எனக்கூற, அனைவரும் ஆனந்தத்தில் குதூகலித்தனர்.

           இவ்வாறாக குலசேகரனும் வாசந்திகாவும் கண்ட கனவு அவர்களது மகன் ராஜவல்லபனால் 48 ஆண்டுகளின்பின் நிறைவேற்றப்பட்டது.

           இப்புதினத்தின் இடையே சரித்திர அரசியல் வரலாறுகளும், கோவில் வரலாறுகளும், அரச வம்சக் கதைகளும், பூசல்களும், தெய்வ பக்தியின் பால் பட்டு பக்தர்கள் செய்யும் அசாதாரணமான செயல்களும், கவித்துவமான காதல் உணர்வுகளும், இன்னபிறவும் ஒரு வேறுபட்ட உலகிற்கே நம்மை இட்டுச் சென்று விடுகின்றன. மீண்டு வந்தாலும் அதன் தாக்கம் நம்மை விடுவதில்லை. புதினத்தின் பல்வேறு நயங்களில் ஈடுபட்டு அதனை அசைபோட்டபடியே இன்னும் நான் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளேன்.

           இவ்வாறு எழுத வேறு ஒருவர் பிறந்துதான் வரவேண்டும். சந்தேகமேயில்லை!!

           இப்போது விடைபெறுகிறேன். மீண்டுமொரு புத்தகத்தைப் பற்றி அடுத்துக் கூறுகிறேன்.

                                                                                     (மீண்டும் சந்திப்போம்)