
‘சந்துரு நான் வேலையா இருக்கேன், வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்கிறது, யாருன்னு போய் பாரு’ என்று அம்மா கத்த சேவ் பண்ணிக்கிட்டு இருந்த சந்துரு வாசலில் வந்து பார்க்கிறான்.
சந்துரு வாசலுக்கு வர ஓர் ஆள் நின்று கொண்டு ‘இன்னும் பத்து நிமிடம் தான் இருக்கிறது, நீ கிளம்ப’ என்று சொல்கிறார்.
‘எனக்கு ஆபீiஸுக்கு நேரம் ஆகிறது, ஆனால் நீங்கள் யார் என்று தெரியவில்லையே’ என்ற சந்துருவிடம்
‘கிளம்பு, கிளம்பு, நான் யார் என்று போற வழியில தெரிஞ்சிடும்’ என்று அந்தாள் வீட்டுக்குள் வருகிறார்.
அவசரப்படுத்தி அவரைக் கூட்டிக்கொண்டு போகிறான் சந்துரு. பதட்டத்தில் வேகமாக ஸ்கூட்டரை ஓட்ட, எதிரே வந்த லாரி மோதி இறந்து விடுகிறான். அழைத்துக்கொண்டு வந்தவர் சந்துருவையும் கூட்டிக் கொண்டு மேலே போகிறார்.
‘நீ யார் என்று தெரியவில்லை, என்னை எங்கே கூட்டிக்கொண்டு போகிறாய்?’ என்று சந்துரு கேட்க,
‘நான் யம தூதன், உன்னுடைய காலம் முடிந்து விட்டது, நான் இப்போது உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன்’ என்று கூறினார்.
‘எனக்கு இன்னும் பூமியில் இருக்க ஆசையாக இருக்கிறது, இப்பதான் ஆபீஸில் ப்ரமோஷன் வந்திருக்கிறது, கல்யாணத்துக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த சமயம் பார்த்து என்னை நீ கூட்டிக் கொண்டு போகிறாயே, இது நியாயமா?’ என்று சந்துரு வினவ, அவர் மேலே ஒன்றும் பேசாமல் சித்தரகுப்தனிடம் ஒப்படைத்தார்.
சித்தரகுப்தன் கணக்குப் புத்தகத்தை புரட்டிப் பார்த்து தனது தூதரிடம் ‘நீ தப்பான ஆளைக் கூட்டிக்கொண்டு வந்துள்ளாய், இவரை மீண்டும் பூமியிலே விட்டுவிடு’ என்று கூறிய உடனே அந்த தூதரும் ஒரு சிறிய கடிகாரத்தை சந்துருவிடம் கொடுத்து
‘உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன், இந்த கடிகாரத்தை நீ கையில் கட்டிக் கொண்டால் உன் எதிராளியின் மனக்குரல் உனக்கு கேட்கும், நான் உனக்கு இரண்டு மணி நேரம் அவகாசம் தருகிறேன், எங்கே யாரிடம் செல்ல வேண்டுமோ அங்கே சென்று விடு, உனக்கு அங்கே யாராவது இடம் கொடுத்தால் நான் உன்னை விட்டு விடுகிறேன், இல்லாவிடில் நான் உன்னை மீண்டும் இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடுவேன்’ என்று சொல்லி சந்துருவை பூமியில் விட்டு விட்டார்.
சந்துரு லேட்டாகி விட்டது என்று முதலில் தனது ஆபீசுக்குச் சென்றான்.
அங்கே அவருடைய நண்பன் ‘சந்துரு கங்கிராஜுலேஷன், வாழ்த்துகள், உனக்கு பிரமோஷன் கிடைத்திருக்கிறது’ என்று மலர்ச்சியோடு வரவேற்றான்.
ஆனால் சந்துரு கையில் கட்டிக்கொண்டுள்ள கடிகாரத்தினால் தன் நண்பனது மனதில் இருப்பது அவனுக்குத் துல்லியமாக தெரிந்தது.
‘நீ இதுவரை வராததால் நீ இல்லை என்று நினைத்தேன், அப்படியே செத்து தொலைத்து இருக்க வேண்டியதுதானே, எனக்கு இந்த பிரமோஷன் கிடைத்து இருக்குமல்லவா! உன்னால் எனக்கு இந்த பிரமோஷன் கிடைக்காமல் போய்விட்டது’ என்று நண்பன் மனதிற்குள் நினைத்துக் கொண்டது தெரிந்து சந்திரனுக்கு வருத்தமாக இருந்தது.
பிறகு வீட்டுக்கு வந்தால் அவன் தந்தை ‘சந்துரு எனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டி இருக்கிறது, ஒரு 50 ரூபாய் தர முடியுமா?’ என்று கேட்டார்.
சந்துரு முடியாது என்று சொன்னவுடன், ‘நீ எல்லாம் எனக்கு பிள்ளையாய் பிறந்ததற்கு செத்திருக்கலாம், எனக்கு ஒரு 50 ரூபாய் கூட தர முடியாதா’ என்று மனதிற்குள் நினைத்தது இவனுக்குக் கேட்டது.
உடனே சந்துரு நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தவுடன், ‘நீ நன்றாக இருப்பாய்’ என்று கூறிக்கொண்டு அவர் கள்ளுக்கடை பக்கம் சென்றார்.
மனம் வெறுத்துப் போய் சந்துரு மேலோகத்திலேயே இருந்திருக்கலாம், கஷ்டப்பட்டு ஆசையாகக் கீழே வந்தேனே என்று கூறிக்கொண்டு, சமையல் செய்து கொண்டிருக்கும் அம்மாவிடம் சென்றான்.
‘அம்மா நான் இறந்து விட்டால் உனக்கு எப்படி இருக்கும்?’ என்று கேட்டான்.
அதற்கு அம்மா ‘ஒருத்தருடைய பங்கு மிச்சம், வேலையும் குறையும், சாமானும் மிச்சப்படும்’ என்று வேடிக்கையாகச் சொன்னாள்.
‘நிஜமாகவா அம்மா!?”
‘கண்ணா, நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன்? நான் சும்மாதான் சொன்னேன், எனக்கு நீ தான் முக்கியம், என் குழந்தையான உன்னைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது, என் காலத்தில் நீ என்னை விட்டுப் போவாய் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது, இனி இவ்வாறு பேசாதே’ என்று அவள் நெற்றியில் முத்தம் கொடுத்துக் கொண்டே கூறினாள்.
அவள் மனத்திலும் இதையே நினைக்கிறாள் என்று.அப்பொழுது சந்துருக்கும் புரிந்தது இந்த உலகத்தில் தாய்மைக்கு ஈடு இணை எதுவும் இல்லை, அந்தத் தாய்மை எங்கும் எப்பொழுதும் பரவி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இந்த தாய்மார்கள்தான் உலகத்தையே தாங்கும் பூமாதேவிகள்!

அன்பான அம்மா இருந்தால் சொர்கம் தேவையில்லை
LikeLike