மறு நாள் காலையில் சுந்தரம் தனியே வைத்திருந்த உணவு காலியாக இருந்தது. அவன் தான் இரவில் நைசாக சாப்பிட்டுவிட்டான் என்று மூவருமே நம்பினார்கள். ஆனால், விமலனுக்கு சந்தேகம் வந்து அந்த ஆறு கற்களையும் பார்த்தான். அவை அவர்கள் வைத்த நிலையிலேயே இருந்தன. ‘ச்சீ, கல் எங்கேயாவது நம்ம சாப்பாட்ட சாப்பிடுமா? வரவர எனக்கு ரேஷனல் திங்கிங் போயிடுத்து.’ என்று தன்னைத்தானே ஏசிக்கொண்டான்.
பகலில் எந்த மாற்றமுமில்லை. இரவில் ஒன்பது மணி போல ஒரு ஒளி மிகப் பிரகாசமாகத் தோன்றியது. தோன்றிய வேகத்தில் மறைந்தது. அந்த ஒளி வந்த நேரத்தில், ஒரு கூழாங்கல் மட்டும் அசைந்ததை ஆனந்தி பார்த்தாள். அதை மற்றவர்களுக்குச் சொல்லும் முன்பே அது தன் நிலைக்கு வந்து விட்டது. மற்ற மூவருக்கும் அதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், விமலனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
“சுந்துவோட சாப்பாடு காணாமல் போனது, இப்ப ஒரு நொடிக்கு பயங்கரமான ஒரு ஒளி வந்தது, ஒரு கூழாங்கல் அசைந்தது அப்படியெல்லாம் பாக்கறச்சே ஏதோ ஒரு தொடர்பு இருக்குன்னு தோன்றது. நாம ஒண்ணு செய்யலாம். ஒரு போர்ஷன் சாப்பாட்டை கொஞ்சம் நம்ம கட்டிடத்தோட வாசல்ல வைக்கலாம். என்ன நடக்கறதுன்னு பாக்கலாம்.”
‘டேய், ஏற்கெனவே ரேஷன்டா. இதுல வாசல்ல வைக்கறதெல்லாம் டூ மச். எறும்பு தான் மொய்க்கும்.’
“ஒரு நா தானேடா. பாத்துக்கலாம்.”
அரவம் அடங்கிய நள்ளிரவு. நெருக்கமான வரியுடன் இருந்த கூழாங்கல் சத்தமில்லாமல் உருண்டு வாசலில் வைத்திருந்த ஹாட்கேஸை தன் உடலால் திறந்து, உப்புமாவை, தன் உடலிலிருந்து இரு குழல்களை நீட்டி உண்டது. சிறிது நேரம் அங்கேயே கிடந்தது. பிறகு, சத்தமில்லாமல், தன் இடத்திற்குத் திரும்பியது. இவர்களால் நம்பவே முடியவில்லை. ஒரு கல் தானே உருண்டு, மனிதனுடைய உணவை எடுத்துக் கொள்ளுமா?
மறு நாள் அவர்கள் சமைக்காமல் சத்துருணடைகளை மட்டும் சாப்பிட்டு விட்டு இன்று என்ன நடக்கிறது எனப் பார்க்கலாம் என்றிருந்தார்கள்.
‘டேய், ரொம்பப் பசிக்கிறதுடா. ஒரு கல்லுக்குப் பயந்துண்டு என்னப் பட்டினி போடலாமா?’
“அதானே. அதிதியப் பட்டினி போடலாமா?” என்றொரு குரல் கேட்டது. யாருடைய குரல் என்று புரியவில்லை.
“எனக்கு உங்கள் உப்புமா பிடிக்கும். பாலை மணலில் சாப்பிட ஒன்றுமில்லை. ஆறில் நான் ஒருவன் தான் உயிரோடிருக்கிறேன். நீங்கள் சாப்பாடு தராவிட்டால் நானும்….” ஆனந்தி தன் கையில் அந்த நெருக்க வரி கூழாங்கல்லை எடுத்துக் கொண்டாள். அவள் கைகளில் அது இதமாகப் புரண்டு கொடுத்தது.
நால்வரும் பிரமிப்பில் வாயடைத்துப் போயினர். விமலன் தான் முதலில் சுதாரித்துக் கொண்டான், அவசர அவசரமாக அதற்கான உணவைத் தயாரித்தான். அதற்கு எப்படித் தருவதென்று தெரியவில்லை.
“அந்தத் தட்டை கீழே வை, விமலா’ என்ற அது ஆனந்தியின் கையிலிருந்து குதித்து தன் இரு வரிகளை தட்டை நோக்கி விரித்து ஆவலாதியாகச் சாப்பிட்டது. நால்வருக்கான உணவை அது ஒன்றே சாப்பிடுவதில் அவர்கள் பயந்து போனார்கள்.
‘சித்ரா, போ, உங்களுக்கும் பசிக்கறதுதானே. ஏதாவது செய்து எடுத்து வா.’ என்று கட்டளை வேறு.
விமலன் அதன் நீட்டிய வரிகளைத் தொடப் போகையில் சட்டென்று உள்ளே இழுத்துக் கொண்டுவிட்டது.
“சாரி, சாரி” என்றவன், “நீங்கள் யார்? விண்கல்லா? அதன் சிதறலா? சிலிகான் உயிரியா? எங்களைப் போல கார்பனும், புரதமுமான உயிரா? எங்கள் மொழி எப்படித் தெரியும்? தாரில் ஏன் எதுவும் பேசவில்லை? எங்களை வேவு பார்க்க வந்துள்ளீர்களா? அந்த ஐந்து கற்களிலும் உயிரில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”
‘ஈசி, ஈசி. விமலா. நான் விண்கல்லோட துகள். நா மட்டுமில்ல, இங்க கீழ விழுந்த ஆறு பேருமே எங்க விண்கல், உங்க திரிசங்குல மோதி விழுந்தவங்க’
“வாட்” கிட்டத்தட்ட விமலன் அலறினான். சுந்தரத்திற்கு அம்மா இங்கே இல்லையே என்று தோன்றியது. இருந்தால், இதை எத்தனை முறை பிரதக்ஷணம் செஞ்சிருப்பா, எவ்வளவு நமஸ்காரம் பண்ணியிருப்பா, எத்தன ஆனந்தக் கண்ணீர் வந்திருக்கும்.
அது குழந்தையின் குரலில் சிரித்தது. ‘நீங்க காலனிய அரசோட தாக்கத்தல இன்னமும் இருக்கீங்க. உங்க புராணத்தை நம்ப உங்களால முடியாதுதான். ஆனா, நான் எப்படி உங்க மொழி பேசறேன்? எங்களுக்கு தமிழ், சம்ஸ்க்ருதம், லத்தீன், ஆங்கிலம் தெரியும். நாங்க ஒரு கோள்ல மோதி சின்னக் கல்லா ஆனோம். அதாவது விண்கல். சின்னக் கல்லுன்னா இப்ப உங்க முன்னாடி கிடக்கற சைஸ் இல்ல. கிட்டத்தட்ட நிலாவோட சைஸ். வானத்த ரவுண்டடிக்கிறோம். உங்க பூமி போல பல பில்லியன் வயசு எங்களுக்கு. நாங்க எங்களுக்குள்ள சைகைல பேசுவோம். மனுஷப்பய இருக்கற பூமி மேல எங்களுக்கு ஒரு ஆச. அதனால என்ன பண்ணோம்னா…..’
“டேய் விமல், ஏதாவது விட்டலாச்சார்யா படம் ஓட்றதா?” என்றான் சுந்து.
அந்தக் கல்லுக்கு கோபம் வந்து விட்டது. “நீங்களும் உங்க ஆராய்ச்சியும். அங்க உங்க மிலிடரிதான் என்ன நம்பல; நீங்க நம்பிக்கையோடவோ, ஆசையாவோ எங்களத் தூக்கிட்டு வந்தீங்க. தூக்கி எறியல, தூக்கிப் போட்டு வெளயாடல. கள்ளத்தனமா நான் சாப்ட போது கூட நீங்க ஆத்ரப்படல. ரகசியமா கண்காணீச்சீங்க. உங்கள நம்பித்தான் உங்க மொழில பேச ஆரம்பிச்சேன். நான் மாயாஜாலப் படம் காட்றேன்னுதானே சுந்தரம் சொல்றாரு. நான் பேசவே போறதில்ல” என்று முறுக்கிக் கொண்டது.
சித்ரா மீண்டும் தன் கையில் அதை எடுத்து வைத்து தடவிக் கொடுக்க ஆனந்தி ஓட்ஸ் கஞ்சியை அதன் முன்னால் காட்டினாள்.
உப்புமாவிற்கு விரித்த குழாயை அது கஞ்சிக்கு விரிக்கவில்லை. தன் கீழிருந்து ஒரு நீள் குழாயை நீட்டி உறிஞ்சியது. இவர்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. முழுவதையும் குடித்த பிறகு அது பூமியில் குதித்தது. சிறிது நேரம் சென்ற பிறகு பந்தைப் போல எழும்பி எழும்பி குதித்தது. ‘உங்கள் உணவு நேரடியா எனக்கு சக்தி தராது. முதல்ல அத நா சிலிகான் நைட்ரேட் ஆக்கிக்கணும். அப்புறமா சிலிகானாக்கி உடம்பு பூரா எடுத்துப்பேன். என்ன, ஒரு நாலு மணி நேரம் தாங்கும்.’
“சரிதான். கல்லுப் பிள்ளையாருக்கு கொடுக்கற மாரி நம்ம மொத்த சாப்பாட்டையும் இதுக்கே கொடுக்கணும் போலருக்கு” என்று மனதில் நினைத்த சுந்துவின் காலின் மேற்பகுதியில் தொம்மென்று குதித்தது. அவன் ‘அம்மா’ என்று அலறினான்.
“கொஞ்சம் சும்மா இரேண்டா, உங்க பேர் என்ன? எந்த விண்கல்? எப்படி திரிசங்கு சொர்க்கத்துக்கு வந்தீங்க? ஏன் அதுல மோதினீங்க? அந்த அஞ்சு கல்லுக்கும் ஏதாவது சாப்டக் கொடுக்கலாமா? அப்போ உயிர் வந்துடுமா?”
‘கொஞ்சம் மூச்சு விடு ஆனந்தி. எங்க விண்கல்லப் பத்திச் சொல்ல எனக்கு அதிகாரமில்ல. வரியே இல்லாத கல் ரெண்டும் எங்களுக்கு பாட்டி தாத்தா. பூமில முகத்தல சுருக்கம், வரி இதெல்லாம் வந்தா வயசானவங்க. எங்க கல்லுல அது போச்சுன்னா வயசாயிடும்.’
“அப்போ அந்த மிச்ச கல்லுல….”
‘அதெல்லாம் கரியாயிடுச்சு. உங்க சாப்பாட்டால அதுக்கு சிலிகான் சத்து தர முடியாது. நா உயிரோட இருக்கறதால, உங்க புரதத்தை என் சிலிகானா செஞ்சுக்க முடியறது.’
“ஹை, அந்த ரகசியத்த கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றாள் சித்ரா.
‘உங்களுக்குப் பயன்படாது; நானுமே இன்னும் மூணு மணி நேரம் தான் இருப்பேன். அப்புறம் பேச முடியாது. சுருங்கி, டக்குனு விரிஞ்சு, செத்துடுவேன்.’
“இல்லல்ல, நீங்க சாகக்கூடாது. நாங்க என்ன செஞ்சா நீங்க உயிரோடிருப்பீங்க?”
‘யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. எங்கள மாரியோ, வேற மாரியோ இனி நெறய வரும் பூமிக்கு. அப்போ முடிஞ்சா உங்க ஆராய்ச்சிய செய்ங்க. நீங்க மட்டும் தான் உயிரிகள் இல்ல. உங்களவிட அறிவுல, தொழில் நுட்பத்ல, தொடர்புல, மேம்பட்ட உயிரிகள் பல கோள்ல இருக்கு. அவங்களுக்கு பூமியோட முக்கிய மொழியெல்லாம் தெரியும்.’
“அப்போ, கடவுள நீங்க பாத்திருக்கீங்களா?”
அது சிரித்தது. ‘உங்க பூமியோட சூரியன் இருக்கே, அது பாவம் ரொம்ப தனிச்சிருக்கு. எங்க கல்லுக்கும் அவர் தான் சூரியன். கண்ணுக்குத் தெரியாம எத்தனையோ வால் மீன்கள், தூசு மண்டலங்கள், கோள்கள், கற்கள். நெப்டியூன் தெரியுமில்லையா, அதுக்கு அப்பால சூன்யப் பெருவெளி இருக்கு. அதுவே மில்லியன் கணக்குல அகன்று, நீண்டு வளந்திருக்கும். கிட்டக்க இருக்கற ஸ்டாரை எட்டறதுக்குக் கூட இதக் கடக்கணும். இந்த மாரி எத்தனையோ கேலக்சிகள். எங்க விண் கல்லுல கடவுள் நம்பிக்கை பெரும்பான்மையாக உண்டு. நாங்க எப்படி வந்தோம், எப்படி இயங்கறோம், எப்படி பூவுலகை கவனிக்கிறோம் அப்படின்னு சிந்தனை பண்றவங்க கடவுள நம்பறாங்க. சிலிகான்ல உயிர வச்சவன் யாரு? அந்தச் சேர்மானத்துக்கு தக்க உடம்பு கொடுத்தது யாரு? வழி வழியா நாங்க வளந்தாலும், எங்களுக்கு சாவோ, மூப்போ பல ஆண்டுகள் வராது. சிலிகான் நைட்ரேட்டும், சிலிகான் கார்பனேட்டும், ஆக்சிடேஷனும் எப்படி சாத்தியம்? அந்த சக்திய கடவுள்னு சொல்றோம்.’
“நீங்க இளையவரா இருக்கீங்க; உங்க இனத்ல யாராவது கடவுளப் பாத்திருக்கறதா சொல்லியிருக்காங்களா?”
அது மௌனமாக இருந்தது. பதில் சொல்ல விரும்பவில்லை என்று விமலனுக்குப் புரிந்தது. அவன் பேச்சை மாற்றினான்.
“நீங்க….. உங்க பேரு என்ன?”
‘நீங்கதான் வைக்கணும். என் உலகப் பேர் கூட நான் யாருக்கும் சொல்லக்கூடாது.’
‘விஜயன், பேர் புடிச்சிருக்கா?’ என்றான் சுந்தரம்.
‘ஆஹா, நான் பூமிக்கு விஜயம் செஞ்சதால நீ இந்தப் பேர செலெக்ட் செஞ்சிருக்க. நல்ல பேராத் தானிருக்கு. ஆனா, ஆணோட பேர் மாதிரி தோன்றதே.’
அவர்கள் விக்கித்துப் போயினர். இந்தக் கல்லிலும் ஆண், பெண் பேதம் உண்டா?
அது மீண்டும் சிரித்தது. ‘உங்க சிற்பிங்க செல செய்யறத்துக்கு, ஆணா, பெண்ணான்னு பாப்பாங்க. அதப் போலத்தான் எங்களுக்கு பாலினம் உண்டு. நான் ஆண்தான். விஜயன் என்ற பேர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அப்படியே கூப்டுங்க.’
அவர்கள் உணர்ச்சியால் பீடிக்கப்பட்டு நின்றார்கள்.
‘சுந்து, என்ன பேச்சு மூச்சையே காணோம். இந்த நல்ல பேருக்காக உன்ன மன்னிச்சுட்டேன்.’
“விஜயன், நீங்க எப்படி திரிசங்குல மோதினீங்க?”
‘பூமிக்கு வந்து எட்டிப் பாத்துட்டு போகலாம்னு வேகமா வந்தோம். கொஞ்சம் கணக்குல தப்பு பண்ணிட்டோம். திரிசங்குவோட சுழற்சி வேகத்தால அதுவும் நாங்களும் ஒரு பகுதில மோதிண்டோம். அவங்களுக்கு ஒண்ணும் ஆகல. எங்க கல் தான் உடஞ்சது. நாங்க மூணு புள்ளிகளானோம். தப்பிச்சோம். பொழைத்தோம்னு எங்க பெரும்பகுதி விண்கல் பாதய மாத்திண்டு ஓடிப் போயிடுத்து. எங்களுக்கு கொஞ்சமா காயம். அதனால சக்தியில்லாம அவர்கிட்ட சரணானோம். அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? எங்களுக்கு கொஞ்சமா அமிர்தம் கொடுத்தார். காயம் ஆறித்து. அப்றம் அவரோடவே போய் அவரோட கோள சுத்திப் பாத்தோம். என்ன வேடிக்கைன்னா, அங்க, திரிசங்குவுல, அந்தப் பெரியவர் தனியா இல்ல. அங்கயும் பூமியப் போல மனுஷங்க. ஆனா, ஒரே வார்ப்புல இருந்தாங்க. முன்னொரு யுகத்ல, பூமி அழிஞ்சு போய், அதுலேந்து ஒருத்தன் மட்டும் தப்பிச்சு, கழுகு பாட்ல அங்கப் போயிருக்கான். அவன் பேரும் விமலனாம். திரிசங்குவுக்கு விஸ்வாமித்ரர் தந்த குளிகையை விமலனுக்காக அவர் உயிர்ப்பித்தாராம். அப்படி அங்க மனுஷ தேவ கணங்கள் வந்திருக்காங்க.’
‘இன்ட்ரெஸ்டிங்.’
‘நாங்க மூணு புள்ளிகளா ஆனோமில்லியா? எங்க விண்கல்லோட சேரணும்னு ஆசப்பட்டோம். அப்ப அந்தப் பெரியவர் தான் சொன்னார், ‘பூமியப் பாக்காம, அங்க நொழையாம போக வேண்டாம்.’ அப்போ அந்த விமலன் தான் எர்த்துக்கு வர வழி சொன்னார். கடசில என்ன நடந்தது? மீண்டும் ஒரு மோதல் உங்க வளி மண்டலத்துல. இப்போ என் கதையும் முடியப் போறது.’
“இல்ல விஜயன். எங்க ஹாஸ்பிடல் மலையடிவாரத்துல இருக்கு.”
‘அவங்க கல்லுக்கெல்லாம் வைத்தியம் பாக்க மாட்டாங்க. உங்கள் வேணா பைத்தியம்னு கல்லால அடிப்பாங்க,’
“வேற வழி இல்லையா?”
‘இருக்கு. அது சாகறதுலேந்து என்னத் தடுக்காது அதுக்கு முன்னாடி நான் என் நிழல அச்சு அசலா இங்க விட்டுப் போறேன். அதுக்கு நீங்க சிலிகான் , கரிம, புரதம் சேர்ந்த சாப்பாட சின்னக் குழந்தைக்குக் கொடுக்கற மாரி கொடுத்துட்டு வாங்க. அது வளந்து சில வேற்றுலக உயிரிகளைப் பத்தி உங்களுக்குச் சொல்லும். என் நிழலை நான் விடறச்சே, டக்குன்னு என்ன யாராவது தூக்கிடணும். அப்புறம் என்னக் கீழே வைக்கக் கூடாது. பக்கத்து ஒத்த ஊசி சிகரத்ல ஏறினா, அரபிக்கடல் தெரியும். என்னத் தூக்கி பலம் கொண்ட மட்டும் அந்தக் கடல்ல எறிஞ்சுடணும். மத்த ஐஞ்சு கல்லை சும்மா வச்சுங்கோங்கோ.’
“விஜயன், நீங்க போக வேண்டாமே? எங்களோடவே இருங்களேன்.”
‘முட்டாளா நீ. எப்படியும் செத்துடுவேன். நேத்திக்கி நீங்க பாத்த வெளிச்சம் என் விண்கல்லோடது. நான் உங்களோட பேசறதும், சாப்ட்றதும், சண்ட போடறதும் அவுங்களுக்குத் தெரியும். மத்த ஐஞ்சு கல்லுலயும் உயிரில்லை, அதனால ஆபத்தில்லைன்னு அந்த என் உறவுகள விட்டுடுவாங்க. ஆனா, நான் இரகசியத்தைச் சொல்வேன்னு பயம் இருக்கும். என் ஷேடோ இங்க இருக்க முடியும்னு அவங்களுக்கு முதல்ல தெரியாது. ஓலைக் கொட்டான்ல போட்டு வளத்தீங்கன்னா, ஏதாவது வழில நான் பிரயோஜனப் படுவேன். என் உடம்பை நீங்க கடல்ல வீசிட்டா அவங்க சந்தேகம் போயிடும். பூமி பக்கம் எட்டிப் பாக்க மாட்டாங்க. அதான் சொல்றேன் என் நிழலாவது உங்களுக்குப் பயன்படலாம். சுந்து, உன் கேரக்டர், ஆனந்தியோட அக்கற, சித்ராவோட அன்பு, விமலனோட நிதானமான வேகம் எல்லாத்தையும் நெனச்சுண்டே அரபிக் கடல்ல தூங்குவேன். உங்க பிள்ளைகளுக்கு விஜயன், விஜயேஸ்வரன் அப்படின்னு பேர் வைங்கோ. நேரமாறது, உடம்பத் தூக்கு, நெழலப் பிடி.’
நால்வரது கண்களிலும் நீர் திரண்டது. ‘என்னை உபசரிச்சீங்க. நான் சொல்றத கவனத்தோட கேட்டீங்க. அதிதி தேவோ பவன்னு திரிசங்கு சொன்னார். அப்படித்தான் என்ன நடத்தினீங்க. என் உயிர் போப்போறது. நிழலை பத்திரமா வச்சுக்கோங்கோ.’ விமலன் கண்ணீருடன் விஜயனைத் தூக்கிக் கொண்டு அந்த ஊசி மலைச் சிகரத்தை நோக்கி நடந்தான்.
முற்றும்
