எங்கள் துறையைப் பற்றி பரிச்சயம் உள்ள வக்கீல், நாற்பத்தி ஐந்து வயதான அமர் பற்றிய குறுகிய விவரிப்பு அளித்தார். அமர் தான் விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் மனைவியாக்க restitution of conjugal rights (மீண்டும் திருமண உரிமைகள் பெறுவது) விரும்புகிறார் என்றும், அமருக்கு இரண்டாவது திருமணம் ஆகிவிட்டது என்றும் தெரிவித்தார். அமர் குழப்பத்தில் இருப்பதால் என்னை ஆலோசிக்கப் பரிந்துரைத்ததாகக் கூறினார்.
அமர் தனது நிலையை விவரித்தார். இரண்டாவது கல்யாணமாகி இரு வருடம் கடந்திருந்தது. பிடிப்பு இல்லை. இரண்டாவது மனைவி ரித்து நல்ல வசதியான குடும்பத்தினர். முதல் மனைவி அனுஜாவின் தாயார் சுமன், வற்புறுத்தி ரித்துவுடன் திருமணம் செய்துவைத்தார் என்றார்.
ஒப்புக்கொண்டதே ரித்து இலவசமாக நடத்தி வரும் சிறுவர் பள்ளிக்கூடத்தினால் தான். அவள் மீது பெறும் மதிப்பை வைத்தார் அமர்.
கல்யாணமானதும் ரித்து தன் இஷ்டம் போல அலட்சியமாக இருப்பாள். அமர் வீட்டினர் ரித்துவின் வீட்டு வசதி போல இங்கு இல்லாததால் எதையும் கூறாமல் இருந்தார்கள்.
மூன்றாவது மாதத்தில் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிட்டாள். மூடியதும் அமரின் வீட்டினர் மீது தகாத வார்த்தைகள் உபயோகிப்பது மனதை வேதனை செய்வதாகக் கூறினார்.
ரித்து மது அருந்துவதை அப்போதுதான் அறிந்தார்கள். இவர்களில் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லை. அவள் உடலைப் பாதிக்கும் என்று எடுத்துக் கூறினார்கள். முறையான மதுவிலக்குச் சிகிச்சை எடுக்கப் பரிந்துரைக்க, அவளுடைய பெற்றோர் இதை உரிமை இடையூறு, வன்முறை எனக் கூறியதால் ரித்து சிகிச்சைக்குப் போகவில்லை.
வேலையில் மனம் லயிக்கவில்லை என்றார். கடந்த நான்கு மாதமாக தன் முதல் மனைவி அனுஜாவைப் பற்றிக் குற்ற உணர்வு என்றார். அமர் வெளிநாடு போயிருக்கும் போது அனுஜா பெற்றோருடன் இருந்தாள். அமர் திரும்பி வந்ததும், அனுஜாவுக்குப் பைபோலார் (bipolar) என்றும் சிகிச்சை பெறுவதாகவும் சுமன் கூறினார்.
பைபோலாரின் தோற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கும். இதைப்பற்றி அமருக்குத் தெளிவு இல்லாததால் விவரித்தேன். இது மனநலன் நோய்களில் ஓர் வகையானது. இருமுனைக் கோளாறு (Bipolar disorder) என்று சொல்வதே, சிலநேரம் பரவசம், சுறுசுறுப்பு மற்ற நேரம் எரிச்சல், சோர்வு இரண்டுமே தேவைக்கு மேல் இருக்கும். இந்தக் கோளாறு தொடர்ந்து இருக்கலாம் அல்லது அவ்வப்போது தோற்றமளிக்கலாம். இரு நிலையிலும் சிகிச்சை தவற விடக்கூடாது. நேரம் தவறாமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
அமருக்கு அனுஜாவின் மனநிலைத் தகவல் தெரியவில்லை. மனநோய் எனக் கேட்டதும் ஏதோ கற்பனை செய்ய, அனுஜாவின் தாயார் சுமன் இந்த நிலைமையில் தாம்பத்திய வாழ்வு சரிவராது (தவறான கருத்து), அனுஜாவை விவாகரத்துச் செய்து வேறு திருமணம் செய்துகொள் என்று அமருக்குப் பரிந்துரைத்தாள். தாயாரே சொல்கிறாளே என்று அமர் ஒப்புக்கொண்டு அதன்படி செய்தார்.
சமீபகாலமாக “ஸ்ட்ரெஸ்” என்பதை உபயோகிப்பது போல எதற்கு எடுத்தாலும் “பைபோலார்” எனக் கூறி அதன் பொருளைத் தவறாகப் புரிந்துகொள்ளப் படுகிறது. இதை விலாவாரியாக விவரித்து அமரின் தவறான புரிதலைச் சரிசெய்யப் பல கட்டுரைகளைப் படிக்கத் தந்தேன். இவற்றுடன் பாதிக்கப்பட்டவர்களுக்காக உள்ள ஆதரவு, ஊக்கம் தரும் குழுக்களைப் பற்றியும் கூறினேன்.
இரண்டாவது செஷனில் தன்னுடைய அறியாமையினால் சுமன் சொன்னதைச் சிந்திக்காமல் செய்துவிட்டோம் என்று அமர் புரிந்து கொண்டார். மனக் குழப்பத்தை வெளிப்படையாகக் கூறியபோது அனுஜாவைப் பற்றிப் பகிரப் பரிந்துரைத்தேன்.
அமரின் இருபத்தி ஒன்பதாவது வயதில் அவளுடன் திருமணமானது. அனுஜாவின் வீட்டினருக்குப் பூர்வீகச் சொத்து இருந்ததால் சம்பாதிக்க நிர்ப்பந்தம் இல்லை. அனுஜாவின் தாயார் சுமன், இயல் இசை நாடகப் பள்ளி நடத்தி வந்தார். தந்தை சுதீப் பிரபலமான ஏலங்கள் நடத்துவோர் கூட்டமைப்பிலிருந்தார். இதனாலும் கண்களைக் கவர்ந்த பல பொருட்களை வாங்கிக் குவித்துக் கொள்வார். வருவோரிடம் தன்னுடைய தனித்துவமான பொருட்களைக் காண்பித்துப் பெருமைப்படுவார். அவளுடைய அண்ணன் சுதீருக்கு, சொத்து இருப்பதால் வேலைக்குப் போகவேண்டுமா என்ற தர்க்கம். பங்குச்சந்தையில் பல தவறான கணிப்பு செய்வதால் எப்போதோதான் லாபம் பெறுவார். பந்தயக் குதிரைகளை வாங்குவார் விற்பார், பந்தயத்தில் பல லட்சம் செலவானது. மனைவி அனுஜா இளையவள், ஆர்க்கிடெக்சர், இன்டீரியர் டிசைனில் வல்லமை. பல ரியல் எஸ்டேட் நபர்கள் அவளை ப்ராஜெக்டில் சேர்த்துக் கொள்வார்கள். சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இயற்கையாக வடிவமைப்பாள்.
சுதீப்-சுமன் குடும்பத்திற்குப் பரிச்சயமான பிரபலமான ரியல் எஸ்டேட் குடும்பம் அமரின் தாயார் மிஷ்டி, தந்தை ஆகாஷ். இவர்களின் பிள்ளைகள் ஆசாத், அமர். கடுமையாக உழைத்து, நேர்மையே அடையாளமாகக் கொண்டதால் துறையில் பிரபலமானவர்கள். பல தொண்டு செய்வார்கள், தானம் தர்மம் செய்து வந்தார்கள்.
அமர் சிவில் இன்ஜினியரிங் படித்ததே குடும்பத் தொழிலை மேம்படுத்துவதற்காக. இவர்கள் நிறுவனத்தின் கட்டிடம் இயற்கையைப் பாதிக்காமல் பசுமை நிரம்பியதாக இருக்கும்.
ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தினரும் அனுஜா அமர் இருவருமே தொழிலில் ஒரே கண்ணோட்டத்தில் செயல்படுவதால் அவர்களுக்கு மணமுடிக்க யோசித்தார்கள். பெண்ணும் பையனும் ஆமோதிக்க, திருமணமாகியது.
அமர் குடும்பத்தினர் அமரைப் போலவே மருமகள் அனுஜாவும் முன்னேற்றம் பெறவேண்டும் என்று முடிந்தவரை ஊக்குவித்து வந்தார்கள். பிறந்த வீட்டில் எல்லாவற்றுக்கும் பணியாளர்கள் இருந்ததால் அனூஜாவிற்கு எந்த வேலையும் செய்யத் தெரியவில்லை. அமர் வீட்டில் வசதி இருந்தாலும் சமையல், துணிகளை மடிப்பது, தோட்டத்தில் செடி கொடிகளைப் பராமரிப்பது இவற்றை வீட்டினரே செய்தார்கள்.
இவற்றைத் தினசரி வாழ்க்கையில் அனுஜா மேற்கொள்ள ஏறத்தாழ ஒருவருடம் ஆயிற்று. மிஷ்டி ஆகாஷ் கைகொடுத்து வந்தார்கள். ஓரளவிற்கு அனுஜா செய்தாள்.
விவாகரத்து என்று தான் அனுஜாவிற்கு அநீதி செய்துவிட்டோம் என்ற அமரின் வேதனையை மையமாக வைத்து செஷன்கள் சென்றது. பைபோலார் பற்றித் தெளிவு பெற்றதும் அனுஜா செயல்படும் விதத்தைப் புரிந்து கொண்டார்.
தான் கவனித்தவரையில் அனுஜா பிடித்தமான வேலையில் மூழ்கினால் பரவச நிலையில் இருப்பாள் என்றார். இல்லையேல் மிகவும் சோர்வடைந்து விடுவாள். திருமணம் ஆன புதிதில் அவளுடைய இந்த நடத்தை தனக்கு மிகவும் வியப்பைத் தந்ததென்று அமர் ஒப்புக்கொண்டார். ஆனால் இதனால் அவளுக்கு அந்த சில வேலைகளைத் தவிர வேறு எதிலும் கலந்து கொள்ளாமலிருக்கும் இக்கட்டான நிலை நேர்ந்ததையும் சொன்னார்.
எளிய மக்களைப் பார்த்துவிட்டால் அனுஜாவின் மனம் உடனே உருகிவிடும். அமர் அனுஜா இருவரும் கட்டிடச் சம்பந்த வேலையில் ஈடுபடுவதால் எளிய மக்களின் வாழ்க்கையின் சில பகுதிகளைக் காண நேரும். அனுஜா தன்னால் அந்த நிமிடம் என்ன உதவி முடிகிறதோ அதைச் செய்வாள். அவர்களின் மனதைத் தொட்டுவிடும். இவர்களில் பலரின் திறனை மேம்படுத்த முயன்றதையும் கூறினார்.
அமன் வெளிநாட்டு செல்வதென்று திடீரெனத் தீர்மானமானது. அமன் கிளம்பிய இரு மாதத்திற்குள் எதிர்பாராமல் உருவாகியிருந்த கரு கலைந்தது. இதையொட்டினார்போல் வேலை செய்துகொண்டிருந்த அந்த ப்ராஜெக்ட் முடக்கப்பட்டது. தன் வேதனையை யாரிடமும் பகிரவில்லை அனுஜா. எல்லாவற்றிற்கும் காரணம் அமரின் பயணம் எனச் சுமன் சொல்லச் சொல்ல அனுஜா நம்ப ஆரம்பித்தாள். இந்த மூன்றுமே தீவிர மன அழுத்தம் தரலாம். அமரின் அழைப்புகள், ஈமெயில் எதற்கும் அனுஜா பதில் அளிக்காதபோது எப்போதும் போல ஏதோ வேலையில் மூழ்கி இருக்கிறாள் என எண்ணி இருந்து விட்டார். பிறகுதான் சுமன் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவள் அனுஜாவிற்கு எதையுமே காட்டவில்லை என்று அறியவந்தது. அனுஜாவிற்கு மன அழுத்தம் நேர்ந்தது.
மனநல மருத்துவர் சுமனிடம் அனுஜாவிற்கு பைபோலர் எனச் சொன்றார். அதை விளக்கம் அளிக்க விடாமல் தானாகவே மகளுக்கு விவாகரத்து என முடிவெடுத்தாள் சுமன். பணப்பற்றாக்குறை இல்லாததால் அனுஜாவை தங்கள் வீட்டிலேயே இருக்க ஏற்பாடு செய்தார். தன்னை மீறி அமர் உள்பட யாரையும் அனுஜாவை நெருங்க விடவில்லை. சுமன் கூறுவதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.
செஷன்கள் போய்க்கொண்டு இருந்தபோது இரண்டாவதாக மணந்த ரித்துவோடு விவாகரத்து பற்றிக் கூறினார். அமரின் குடும்பத்தினர் பின்தங்கி இருப்பதால்தான் மது அருந்துவதை மறுக்கிறார்கள், கிளப் போகத் தடுப்பதும் தமக்குப் பிடிக்கவில்லை என்றார்கள் ரித்து, குடும்பத்தினர்.
இந்த சம்பவங்கள் நேர்ந்ததால் தான் அனுஜாவிற்குச் செய்த தவறைத் திருத்தி அவளை மீண்டும் மனைவியாக்கும் வழியைத் தேட துவங்கினார். மிஷ்டி, ஆகாஷ் முடிவிற்கு ஆதரவைக் காட்டினார்கள்.
அனுஜாவைச் சந்தித்து அவள் விருப்பத்தைத் தெரிந்து கொள்ளப் பரிந்துரைத்தேன். சுமன் வெளிநாடு சுற்றுலா போயிருந்ததால் நான்கு மாதங்கள் பிறகே முடிந்தது. வக்கீல் கூடச் சென்று சட்ட வழியில் செல்ல வேண்டிய பாதை என்பதால் அதில் இப்போதைக்கு என் பார்வையைச் செலுத்தவில்லை.
சென்ற காலத்தைப்ப் போல மீண்டும் அமர் அனுஜா இருவரின் பிரியமான குறிக்கோளை அதாவது இயற்கைச் சூழல் காக்கும் விதங்களைப் பல பள்ளிக்கூடம், கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் செய்து வந்தார்கள். இதைத் தொடர்ந்து செய்யச் சொல்லும் கருத்துகள் போய்ச்சேர நாடகங்கள் உபயோகித்தார்கள். இருவரும் மௌனமொழி நாடகமான வசனமற்ற, வாய் பேசாத வழிகளை யோசித்தார்கள், ஓரிரு இடங்களில் செய்யத் தொடங்கினார்கள். அனுஜா பார்த்துவரும் மனோதத்துவ மருத்துவரைச் சந்தித்து, அனுஜாவிற்கு என்ன நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள அமரிடம் பரிந்துரை செய்தேன். மருத்துவரிடம் அமர் சந்தித்த பின்னணியை விவரித்தேன். மேற்கொண்டு சில செஷன்கள் போய்க்கொண்டிருக்கிறது.
*******************************
