Interview with Music Director ML Srikanth - YouTube

அதிகம் அறியப்படாத இசை அமைப்பாளர் – எம் எல் ஶ்ரீகாந்த்

இந்துவாக இருந்த இவரின் தாத்தா, கிறிஸ்தவராக மாறியவர். மகிமைதாஸ் என்ற பெயர் கொண்ட இவரின் தந்தையும் ஒரு இசை அமைப்பாளர். டி ஆர் பாப்பாவிற்கு உதவியாக இருந்தவர். ஜி ராமனாதன், எஸ் வி வெங்கட்ராமன் போன்ற இசை அமைப்பாளர்களுடனும் இருந்தவர். அந்த இசை மகனாகிய இவருக்கும் வந்திருக்கிறது.

பிரபல திரை இயக்குனர் பீம்சிங் அவர்கள் மகன் திருமண வரவேற்பில் எம் எல் ஶ்ரீகாந்த் மாதவிப் பெண் மயிலாள் பாடலைப் பாடியதைக் கேட்ட மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன், உத்தரவின்றி உள்ளேவா படத்தில் ஹம்மிங் பாடும் வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் பாடல் மெகா ஹிட் ஆனது. பி சுசீலா பாடி, இவர் ஹம்மிங்கில் வந்த காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ என்ற பாடல் தான்.

தொடர்ந்து, திக்குத் தெரியாத காட்டில் என்ற படத்தில் எம் எஸ் வி இசையில், குளிர் அடிக்குதே கிட்டவா என்ற பாடலை எஸ் பி பி, ஜானகி, ஈஸ்வரி என்று அனைவருடனும் பாடினார்.

சாமி என்பவர் தயாரித்த தாலாட்டு என்ற படம் தான் இவரின் முதல் படம். பாடல்கள் அன்று வானொலியில் நிறைய ஒலிபரப்பப்பட்டது. குறிப்பாக, மாயவநாதன் எழுதி டி எம் எஸ் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சும, மல்லிகைப் பூப்போட்டு என்ற பாடல் பெரிய ஹிட். (இதில் கதாநாயகனாக நடித்தவர் ராஜபண்டியன் என்ற நாடக நடிகர். கதாநாயகி விஜயஶ்ரீ. பாபு படத்தில் வரதப்பா பாடலில் கூடைக்காரியாக வந்தவர். இருவருமே அடுத்த சில வருடஙகளில் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது துயரமான தகவல்)

ஶ்ரீகாந்த் அவர்களுக்கு, அப்போது இயக்குனராக இருந்த விபின்தாஸ் என்பவர் மூலம், ஒரு சில மலையாளப் பட வாய்ப்புக்கள் கிடைத்தன. பிரதி த்வநி என்ற படத்தில் ஜானகி பாடிய பாடல் அன்று மிகப் பிரபலம். தந்தையின் நண்பர் டி ஆர் பாப்பா மூலம் அகில இந்திய வானொலி நிகழ்வுகள் கிடைத்தன.

மீண்டும் திரு சாமி அவர்கள் தயாரித்த நினைப்பது நிறைவேறும் படத்தில், இவரின் பாடல்கள் மிகவும் பேசப்பட்டன. (இதில் நடிகை மீனாவின் அம்மா ராஜ் கோகிலா தான் கதாநாயகி. விஜயகுமார் நாயகன். பின்னாட்களில ராஜ்கோகிலா, ஒளிப்பதிவாளர் கர்ணன் படங்களில் தொடர்ந்தார்)

தமிழில், கீதாவின் ரோஜா, கல்யாண வளையோசை, தன்வினை தன்னைச் சுடும், பேசு மனமே பேசு போன்ற படங்களில் இவர் இசை அமைப்பில் பாடல்கள் அப்போது இலங்கை வானொலியில் தினமும் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் படங்கள் வெளி வரவில்லை.

சூலூர் கலைப்பித்தன், தஞ்சை அனந்த பத்மநாபன் , மாயவனாதன் எனப் பல கவிஞர்கள் இவரின் இசையில் எழுதினார்கள். இவரே பாடல் எழுதுவார். பாடுவார்.

சசிரேகாவின் தொடக்கப் பாடல்களில் சிறந்த ஒன்று, கீதாவின் ரோஜா படத்தில மாலையிட்ட ராஜன் என்ற பாடல். அதேபோல, கல்யாண வளையோசை படத்தில, கட்டிய கோட்டை என்ற பாடல் – டி எம் எஸ் – சுசீலா பாடியது, பேசு மனமே பேசு படத்தில் ரேணுகா பாடிய கண்ணே உந்தன் என்ற பாடல் எல்லாமே சிறப்பு. இந்த ரேணுகா தான் அவர் எனக்கே சொந்தம் படத்தில், இளையராஜா இசையில் தேவன் திருச்சபை மலர்களே பாடல் பாடியவர்.

கல்யாண ஓசை என்ற படத்தில் வள்ளுவன் குரலில் சொல் எடுத்தேன் என்ற பாடல், பேசு மனமே பேசு படத்தில் கண்கள் தேடுது ஒளி எங்கே எனப் பல பாடல்கள் இவரின் இசையில் வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பு பெற்றவை.

நினைப்பது நிறைவேறும் படத்தில், எம் எல் ஶ்ரீகாந்த் – வாணி ஜெயராம் பாடிய நினைப்பது நினைவேறும், வாணி ஜெயராம் பாடிய என்னென்று சொல்வேனடி, டி எம் எஸ் பாடிய அசைக்க முடியாது போன்ற பாடல்கள் அப்போது அடிக்கடி ஒலிபரப்பப் பட்டவை.

பின்னாட்களில் ஆன்மிக ஈடுபாடு அதிகம் கொண்ட இவர், அருணகிரிநாதரின் திருப்புகழில் 120 பாடல்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அருணகிரிநாதரை, சந்தக் கவி அரசு என்று கூறும் இவர், அவரின் தமிழை, ஆன்மிகத்தை மிகவும் நேசிப்பதுடன், இக்கால இளைஞர்கள் தமிழுக்காக, சந்தத்திற்காக, அருணகிரிநாதர் பாடல்களை அவசியம் படிக்க வேண்டும் என்கிறார்.

இசைக் கருவிகள் தயாரிப்பு, படங்களுக்கு டைட்டில் இசை, ஆல்பங்கள், மற்றும் ஆன்மிக இசை என இவரின் வாழ்வு தொடர்கிறது.

இன்று காணும் பாடல் – 1976ல் வெளிவந்த நினைப்பது நிறைவேறும் என்ற படத்தில் இடம் பெற்ற நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு என்ற பாடல் . வாணி மற்றும் இவரின் குரல்களில், படத்தின் தயாரிப்பாளர் திரு மணி என்பவரே எழுதிய பாடல். கேட்போம் – ரசிப்போம். நன்றி

நாளை இன்னொரு இசை அமைப்பாளருடன் சந்திப்போம்.