புத்தகம் : டாக்டர் வள்ளுவர் (வள்ளுவம் சொல்லும் வாழ்வியல் மருத்துவம்)

எழுதியவர்: Dr. S. முருகுசுந்தரம்

Published by: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை

156 பக்கங்கள் விலை ₹200

 

      சில மாதங்களுக்கு முன்னர் நடந்த குவிகம் நிகழ்ச்சி ஒன்றில் தலைமையுரை ஆற்ற டாக்டர் எஸ் முருகுசுந்தரம் என்ற பெயர் பெற்ற தோல் மருத்துவ நிபுணர் வருகை புரிந்திருந்தார். நிகழ்ச்சியின் இறுதியில், வந்திருந்த அனைத்து குவிகம் ஆர்வலர்களுக்கும் அவருடைய “டாக்டர் வள்ளுவர்” என்ற இந்நூலை அன்புப் பரிசாக வழங்கி மகிழ்ந்தார் அவர். அந்நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டதால், இந்நூல் என் கைக்கும் பார்வைக்கும் வந்து சேர்ந்தது.

    ஏற்கனவே குவிகம் நிகழ்ச்சி ஒன்றில் “தமிழ் இலக்கியமும் மருத்துவமும்” என்ற தலைப்பில் டாக்டர் முருகுசுந்தரம் பேசியதைக் கேட்டிருந்ததால், இந்நூல் ஆழமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் என்ற என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை..

   மரு. கு. சிவராமன் அவர்கள் நூலின் முகப்பில் குறிப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை: “இதில் வள்ளுவனை வியப்பதா ? மருத்துவர் முருகுவின் குறளின் மருத்துவப் பார்வையை வியப்பதா ? “டாக்டர் வள்ளுவர்” மருத்துவர் முருகுசுந்தரத்தின் மிக முக்கியமான சமகாலப் பார்வை” – என்பதே அவர் கூற்று.

   50 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு திருக்குறளை எடுத்துக்கொண்டு அதைப் பிழிந்து அதிலிருந்து மருத்துவச்சாறு எடுக்கிறார் டாக்டர் முருகுசுந்தரம். எளிமையான நடை. கச்சிதமான விளக்கம். நமக்கு நன்மை பயக்கும் விஷயங்கள். அதனால் ஏமாற்றம் எதுவும்  அடையாமல், படிக்கப் படிக்க அறிவும் ஆனந்தமும் சேர்கிறது. எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்த விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றிரண்டு பக்கங்களில் அடங்கி விடுகிறது. அதனால் சலிப்பு ஏற்படுவதில்லை. எங்கே வேண்டுமானாலும் படிப்பதைத் தொடங்கி எங்கே வேண்டுமானாலும் முடிக்கலாம் என்பது கூடுதல் சௌகரியம். ஒரே அமர்விலோ, தொடர்ந்தோ படிக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய அவசர காலகட்டத்தில் புத்தகங்களை இப்படிக் கட்டமைத்தால்தான் வாசகர்களைத் தக்க வைக்க முடியும்.

   அத்தியாயத் தலைப்புகள் இப்படி ஓடுகின்றன:

  1. நம்பிக்கையே மாமருந்து !
  2. ஐம்புலனடக்கம் அருமருந்து !
  3. ஒப்புமையில்லா ஒரு மருந்து !
  4. “மக்கள் மெய் தீண்டல்” எனும் மன மருந்து !
  5. அன்பில்லையெனில் எது மருந்து ?
  6. அன்பே உயிர்ப்பிக்கும் மருந்து !
  7. எப்பிறவிக்கும் இது மருந்து !
  8. மரணம் வெல்லும் மருந்து !
  9. நல்லெண்ணமே நன்மருந்து !
  10. சினங்காத்தல் சிறந்த மருந்து !

 

    மொத்தம் இப்படி 50 அத்தியாயங்கள். ஒவ்வொன்றைப் படிக்கும் போதும் நமக்கு ஒரு புதிய உண்மை புரிய வருகிறது. வள்ளுவரையும் குறளையும் புதிய கண்களால் நோக்குகிறோம்.

   பயனுள்ள புத்தகம். படித்து மகிழுங்கள் நண்பர்களே !