” சார் ! நல்லூரில என்னதான் நடந்தது? என அந்த ஊரை விட்டு ஓடிப் போனீங்க?”
“இந்த பாரு ரைட்டர் தம்பி ! சிலது சொல்லலாம்! சிலது சொல்லப்படாது! சிலது பின்னாடி சொல்லலாம்!”
“இது பின்னால வருமா சார்! . . பிளாஷ் பேக்கா? “
“வரலாம்! இல்ல நீயே உன் இஷ்டப்படி ரொப்பிக்கோ! நீ எழுதறவன் மட்டுமில்ல; எழுத்தாளனும் தானே?”
“சரி சார்! நல்லூரில ஒரு நாட் போட்டு வைச்சுக்கறேன் ! அடுத்த சீன் என்ன? எந்த ஊர்ல?”
“கொத்தவால் சாவடி தெரியுமா?
” ‘கொத்தவால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி!’ அப்படின்னு ஒரு தேவாவோட பாட்டை எங்கேயோ கேட்டிருக்கேன்.
சினிமாவை விடப்பா! கொத்தவால் சாவடி மார்க்கெட் நீ பாத்திருக்க மாட்டே! நீ பொறக்கறதுக்கு முன்னாடியே அது கோயம்பேடுக்கு போயிடுச்சு! அது பத்தி ஏதாவது கேள்விப்பட்டிருக்கியா? “
என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க ! நான் சென்னையைப் பத்தி ரிசர்ச் பண்ணி அமெரிக்க ஸ்கூல்ல பிராஜக்ட் பண்ணியிருக்கேன். இப்ப சென்னை சரித்திர யூ டியூப் மாஸ்டர் ஸ்ரீராம் சார் கூட கொத்தவால் சாவடி பத்தி ஒரு அட்டகாசமான வீடியோ போட்டிருக்கிறார். அதில எழுத்தாளர் சாவி சார் ‘இங்கே போயிருக்கிறீர்களா? கட்டுரையில இந்த கொத்தவால் சாவடிக்கு அவர் போன அனுபவத்தை எழுதினதை இவர் விளக்கமா சொல்லியிருக்கிறார்”
சாவி சொன்னார்னா அங்கே இலக்கியம் வரும்! நம்ம சப்ஜெக்ட்டுக்கு பொருத்தமா இருக்கும் ! அவர் என்ன சொன்னார்?
இங்கே போயிருக்கிறீர்களா ? அப்படீன்னு ஒரு கட்டுரை சீரிஸ் சாவி எழுதினார். அதில் ஒரு சூப்பர் கட்டுரை இந்தக் கொத்தவால் சாவடி பத்தி !
அதைக் கொஞ்சம் படி !
கொத்தவால் சாவடி

இப்போது மலையப் பெருமாள் தெரு என்னும் குறுகலான சந்து வழியாகக் கொத்தவால் சாவடியை நோக்கி “அடி அடி”யாக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
நெரிசல் சொல்லிச் சாத்தியமில்லை. மணிபர்ஸ் ஜாக்கிரதை!
சக்திவேல், ராஜேசுவரன், மனோகரன், தயாநிதி, குமரன் இவர்கள் ஐவரும் நாம் முன்னேற முடியாமல் தெருவை அடைத்துக் கொண்டு நிற்கிறார்கள். யாரோ என்று யோசிக்காதீர்கள். லாரிகளின் பெயர்கள்!
வெங்காயச் சருகு, வாழை இலைச் சருகு, பச்சை வாழைப் பட்டை, மலை வாழைப் பழத் தோல், அழுகின தக்காளி, தேங்காய் மட்டை, வைக்கோல் இவ்வளவும் மழைத் தண்ணீரில் நனைந்து, கறுப்பு மண்ணுடன் கலந்து, அடிபட்டு, மிதிபட்டு, ‘சத சத’வென்று ……! அடாடா! அந்த கோரத்தை என்ன சொல்ல…?
“முருகேசா! பச்சை மொளகாயை முன்னாலே நகரச் சொல்லு” – ஒரு லாரி டிரைவர் முன்னால் நிற்கும் இன்னொரு லாரி டிரைவரிடம் சொல்கிறார். முன்னால் இருக்கும் டிரைவர் அதைப் பச்சை மிளகாய் லாரி டிரைவருக்கு அஞ்சல் செய்கிறார். லாரிகள் அடைத்துக்கொண்டது போக, மிஞ்சி இருக்கும் இடுக்கு வழிகளில் மக்கள் எதிரும் புதிருமாக நகர்ந்து கொண்டிருக் கிறார்கள். சிலர், ஒருவர்மீது ஒருவர் பச்சைக் குதிரை தாண்டிக் கொண்டிருக்கிறார்கள். பின் பக்கம் வரும் கூட்டம் நம்மீது சாடுகிறது. முன் பக்கம் வரும் கூட்டம் நம்மீது மோதுகிறது.
“கூலி, கூலி, கூலி!”
கூலிக்காரர்கள் தலைக்கு மேலே கூடையைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் எப்படியோ இந்த நெருக்கடியில் புகுந்து புறப்பட்டு வேகமாய்ப் போய்விடுகிறார்கள்.
“கூலி சார்! கூலி வேணுமா?” – ஒரு கூடைக்காரன் நம்மை விசாரிக்கிறான். “ஆமாம்பா! என்னைத் தூக்கிக் கூடையிலே வைத்துக்கொண்டு போய் கொத்தவால் சாவடிக்குள் விட்டு விடு!” என்கிறேன்
நான். “டடடடர்ர்ர்! டடடடர்ர்ர்ர்……!” ஒரு லாரி பின் பக்கம் நகர்கிறது. “வாத்தியாரே! மெதுவா லெப்டுலே ஒடிச்சுக்கோ!” – லாரிக்குப் பின்னால் நிற்கும் ‘க்ளீனர்’ டிரைவருக்குக் குரல் கொடுக்கிறார். அந்த லாரிக்குப் பின்னால் மிதந்துகொண்டிருக்கும் கூட்டம் மேலும் பின்னுக்குச் சாய்கிறது. “
ஏன்ய்யா இப்படி மாடு மாதிரி வந்து மோதறே!” – ஓர் ஆசாமி கத்துகிறார். “மோதறது நிஜமாகவே ஒரு மாடு தான்யா! திரும்பிப் பாரு….” – இன்னொருவர். மோதப்பட்டவர் திரும்பிப் பார்க்கிறார். கோயில் காளை ஒன்று சாவகாசமாக அசை போட்டுக்கொண்டு வாலை வீசியபடி நிற்கிறது.
மக்களின் அவசரம், இட நெருக்கடி எதையும் லட்சியம் செய்யாமல்! “இன்னாய்யா இது! மன்சன் நடக்கறதுக்கே வழியைக் காணோம். இதுலே மாட்டை வேறெ உட்டுடறாங்களே!” – இது ஒருவர். “யாரைக் கேக்கறே அந்தக் கேள்வி?” – இது வேறொருவர்.
கொத்தவால் சாவடிபற்றி
இந்த மார்க்கெட் தொடங்கி இருநூறு ஆண்டு கால மாகிறது. வியாபாரிகள், தரகர்கள், கூலிகள், வண்டிக்காரர்கள் எல்லோரு மாகச் சேர்ந்து இங்கே மூவாயிரம் பேருக்குப் பிழைப்பு நடக்கிறது. தஞ்சாவூர், கேரளா, மைசூர் இவ்விடங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு லட்சம் தேங்காய்கள் இங்கு வருகின்றன. பங்களூரிலிருந்தும் நீலகிரியிலிருந்தும் வரும் உருளைக் கிழங்கு மூட்டைகள் ஆயிரம். பெல்லாரியிலிருந்தும் கடப் பையிலிருந்தும் வரும் வெங்காய மூட்டைகள் (மூட்டை ஒன்றுக்கு எழுபது கிலோ) இரண்டாயிரம். தக்காளிக் கூடைகள் ஐந்நூறு (கூடை) ஒன்றுக்கு பதினைந்து கிலோ.) நகரியிலிருந்து கருவேப்பிலையும், நெல்லூரிலிருந்து பச்சை மிளகாயும், வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூரிலிருந்து கத்தரிக் காயும் வருகின்றன. இங்கிருந்து அந்தமானுக்குக் காய்கறிகள் போகின்றன. இங்கு வியாபாரம் தொடங்கும் நேரம் விடியற்காலம் மணி மூன்று!
அப்படியும் இப்படியுமாக, இடிபட்டு அடிபட்டு, கொத்தவால் சாவடியின் கிழக்கு வாயிலை நெருங்குகிறோம்.
“தவனம் ஆறேணா!….. தவனம்… ஆறேணா!” “சவரன் ஆறேணா! சவரன் ஆறேணா!” – வியாபாரிகளின் கூச்சல். இங்கே, தவனம் என்பது பீன்ஸைக் குறிக்கும். சவரன் என்பது சாம்பார் வெங்காயத்தைக் குறிக்கும். “ஸாமி! இந்தா கருவேப்பலை!… சகாயம் – சகாய வெலை…. புடி, புடி! இன்னாடி என் சக்களத்தி! அதான் நான் குடுத்துக்கினு கீறனே! இவ வேறே வந்துட்டா குறுக்கே … இந்தா ஸாமி! நீ புடி. அக்காம்! அவ கிடக்கறா!” – கருவேப்பிலைக்காரி பேசுகிறாள்.
“புதினா! புதினா! புதினா! – அணாவுக்கு ஆறு கட்டு.” புதினாக்காரன் கூவுகிறான்.
“ஓரம்! ஓரம்! ஓரம்!” – மூட்டை தூக்கி வருபவர்கள். “ய்பா. போ, போ!” – பின்னால் வருபவர்கள். “வா, வா, வா!” – வியாபாரிகள். நம் காதில் விழும் சில வார்த்தைகள்: “இந்தா ஓரணாவுக்கு புதினா கொடு!” “வேறே காசு குடு! அணாவுங்க போவ மாட்டேங்குது…” “தூக்குயா – தூக்குயா – கூடையை வழிலே வெச்சுகிட்டு…” “மணி இன்னா, சார்!” “ஒரு ரூபாய்க்கு இல்லேண்ட்டேன்னா நீ முக்கா ரூவாய்க்குக் கேக்கறயே…!” “ஏலகிரி தக்காளிங்க; தோல் கனம். நாள்பட நிக்கும்…” “இதோடா! பத்து ரூவா நோட்டை வச்சிக்கிணு அஞ்சு பலம் வெண்டைக்கா வோணுமாண்டா…” “ஆவ், ஆ.. பூ… ஈ…” – தலைமீது கூடை நிறையத் தக்காளிக்காய்களைச் சுமந்துகொண்டு நிற்கும் ஓர் ஊமை சத்தம் போடுகிறான். “ஏ ஊமை! இப்படி கொட்டுகினு வில்லு…. நிமஸ்துலே தீந்து போவுது பாரு…” “வாங்கற மூஞ்சியைப் பாரு! இது சாப்படறவன் வேறே கீரான்…. நீ போ! பொல்லாத வெண்டைக்காய் வாங்க வந்துட்டே!….” “சேனை என்னப்பா விலை?” “பத்தணா!”
“சரி போடு!” வியாபாரி எடை போடுகிறான். “என்னப்பா இது? கிலோவா பத்தணா?” வாங்க வந்தவர் கேட்கிறார். “பின்னே இன்னா? வீசைன்னு நினைச்சுக்கினியா? வீசை காலமெல்லாம் ‘எகிறி’ப் போச்சு, சாமி!” “
இங்கிலீஷ் வெஜிடபிள் பஜார், ஆனியன் பஜார், வாழைக்காய் பஜார், பரங்கிக்காய் பஜார் என்று ஒவ்வொரு சந்துக்கும் ஒரு பெயர் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தச் சந்துக்களைச் சுற்றி வரு வதற்குள் நம் பாடு பெரும்பாடாகி விடுகிறது.
இதைக் ‘கொத்த வால் பஜார்’ என்று சொல்வதைக் காட்டிலும் ‘கொத்தவால் பேஜார்’ என்று சொன்னால் ரொம்பப் பொருத்தமாயிருக்கும்!” – நான் சொல்கிறேன். காலை வலிப்பதால் ஒரு ராடிஷ் வியாபாரியின் கடையிலுள்ள திண்ணைமீது போய் அமர்கிறோம். “உங்க கடையிலே இங்கிலீஷ் வேஜிடபிள் மட்டுந்தான் விற்கிறீர்களா?” “ஆமாங்க, ராடிஷ், கேபேஜ், கேரட், நூல்கோல் இல்லையா இப்டி…” “இந்தக் கடைக்கு என்ன வாடகை?” “முப்பது ரூபாங்க! கதவு கிடையாது. கன்னிகா பரமேச்வரி தேவஸ்தானம் தர்மத்துக்குதான் போவுது பணமெல்லாம். ஆறே கால் ரூபாயிலேருந்து முப்பது ரூவா வரைக்கும் இடத்துக்குத் தகுந்தாப்பலே வாடகை வசூல் பண்றாங்க. இது தவிர கூலிங் களுக்கு நாள் ஒண்ணுக்கு நாலு பைசா டிக்கட்டு. லாரிக்கு ஒரு ரூபா சுங்க வரி. சைகிளுக்கு ஆறு பைசா! அதுக்குத் தகுந்த சௌகரியந் தான் இல்லே. உங்களைப் பார்த்தா பேப்பர்காருங்க மாதிரி தெரியுதே!” – சிரிக்கிறார்.
“என்ன சௌகரியம் வேணுங்கறீங்க?” – நான் கேட்கிறேன். “முக்கியமா குழாய் வசதி, குப்பையை ஒழுங்கா வார்ரதில்லே. காண்ட்ராக்ட்காரன் தன் இஷ்டத்துக்கு வாரிக்கறான். பாக்கிறீங்களே தெரியலையா? எவ்வளவு ‘கலீஜா’ இருக்குது. வாடகை வசூல் பண்ணி, தர்ம காரியங்க பண்றாங்களே ஒழிய, வாடகை கொடுக்கற கடைக்காரங்களுக்கு வசதி செய்யணுமேங்கற எண்ணம் இல்லீங்க… வியாபாரிங்களுக்குள்ளேயும் ஒத்துமை கெடையாது.” “ஏன் இல்லே! எல்லாரும் ஒற்றுமையா ஒரே மாதிரி வெலை தானே சொல்றீங்க?” “நல்லாச் சொன்னீங்க, மெய்தான்…
நீங்க சொல்ற மாதிரி அதிலே தாங்க ஒத்துமை இருக்குது…” “இந்தச் சின்ன இடத்துலே என்ன சௌகரியம் செய்து கொடுக்க முடியும்?” – நான் கேட்கிறேன்.
“அப்படிக் கேளுங்க. நான் சொல்றேன் வழி – இந்தக் கொத்த வால் சாவடி வியாபாரத்தை இங்கே எதுக்குங்க வெச்சிருக்கணும்? வேறே எடத்துக்கு மாத்தட்டுமே! கவுர்மெண்டு செய்யணும். ஒரு நாள் மந்திரி மஜீதே வந்து பாத்தாரு. ஒண்ணும் சொகம் இல்லே. இப்ப ஜூ இருக்குதுங்களே, ஜூ, அதாங்க மிருகக் காட்சிச் சாலை. அதை கிண்டி ராஜபவனுக்கு மாத்தறதா ஒரு பிளான் இருக்குது. அப்ப இந்தக் கொத்தவால் சாவடியை இப்ப ஜூ இருக்கிற இடத்துக்கு மாத்திடட்டுமே. ரொம்ப சௌகரியமான இடம். எவ்வளவோ லாரிங்க வேணும்னாலும் வந்து நிக்கலாம். மெட்ராஸ் ஓல்டுக்கும் செண்ட்ரான பிளேசு… நாலா திசைக்கும் வண்டிங்க போக வழி இருக்குது. பக்கத்திலே செண்ட்ரல் ஸ்டேஷன். பங்களூரிலிருந்து கூட்ஸ் வண்டி வர்ரத்துக்கும் வசதி. கூட்ஸிலே வர்ர வெஜிடபிள்ஸை அப்படியே இறக்கிக்கலாம். இப்ப பாருங்க. லாரி வர முடியாமல் எவ்வளவோ அவஸ்தை….?’ வண்டிக்காரங் களுக்கு எடைஞ்சல், வர்றவங்களுக்கு எடைஞ்சல், கடைக்காரங் களுக்கு எடைஞ்சல். இதெல்லாம் பேப்பர்லே எழுதிப்போடுங்க….!”
“ஆகட்டும்” என்று கூறிவிட்டுக் கடைக்காரரிடம் விடை பெற்றுக்கொண்டு மேற்கே கிடங்குத் தெருப் பக்கம் செல்லும் வாயிற்படி வழியாக வெளியேறுகிறோம். “நூறு ஒண்ணேகால் ரூவா – எலுமிச்சம்பழம் – சவரன்! சவரன்! சாமி! பழத்தைப் பாரு சாமி….!” சமையலுக்கு வேண்டிய பஞ்சரத்னங்களில் ஒன்றாகிய எலுமிச்சம் பழம் இந்த வாயிற்படியில் எந்த நாளிலும் கிடைக்கும். மற்ற நாலு ரத்னங்களான கருவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் – கிழக்கு வாயிற்படியில் எப்போதும் கிடைக்கும்.
அப்பா! ஒரு மாதிரி வெளியே வந்து சேருகிறோம். புத்தம் புதிய உருளைக்கிழங்கு போல் உள்ளே செல்பவர்கள் அடிபட்டு, நசுங்கிய தக்காளி மாதிரி வெளியே வருகிறோம்.
கொத்தவால் சாவடி இன்றைய மார்க்கெட் நிலவரம்: ரொம்ப மோசம்.
என்ன சார் ! கட்டுரையை படிக்கச் சொல்லிவிட்டு அப்படியே உக்காந்திதிட்டிங்க! தூங்கிட்டீங்களோ?
” இந்தக் கொத்தவால் சாவடிக்கு தஞ்சாவூரிலிருந்து போன தேங்காய் லாரியில உடம்பெல்லாம் காயத்தோட கிட்டத்தட்ட தோலை உரிச்ச கிடா மாதிரி அடிபட்டு உதைபட்டு ..”
“முனியா ! முனியா ! தேங்கா லாரியை சரிக்காதே ! அதுல ஒரு ஆட்டுக்குட்டி கிடக்கு! ஏறிப்பாரு !”
“ராவுத்தர் ஐயா! அது ஆட்டுக்குட்டி இல்லே! பொடிப்பய! ரணகளத்தோட கிடக்கான்!”
“உசிரு இருக்குதா பாரு!”
” இருக்குது ஐயா! “
“அப்படியே அசங்காம தூக்கிட்டு போய் நம்ம கடையில படுக்கவை! மூஞ்சிலே தண்ணியத் தெளி!யுனானி டாக்டர் ஜம்மக்காவை கூட்டியா!”
புள்ள குட்டி இல்லாத ராவுத்தரின் நல்ல மனசு அந்தப் பத்து வயசுப் பிஞ்சுக்காகத் துடித்தது !
(தொடரும்)
