தாகூர் கதைகளும், சீரியலும்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ரவீந்திரநாத் தாகூர் (நோபல் பரிசு 1913) அவர்களின் சிறந்த சிறுகதைகள் சிலவற்றை EPIC சானல், இந்தி சீரியலாக தயாரித்து வெளியிட்டது – 2015 ல்! அவருடைய 14 கதைகளை, 26 எபிசோடுகளில் மிகச் சிறப்பாகத் தயாரித்திருந்தது. சமீபத்தில்தான் அந்த சீரியலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தாகூர் வாழ்ந்த காலத்து மேற்கு வங்காளத்தை உயிர்ப்புடன் உலவ விட்டிருந்தார்கள்.

ஒவ்வொரு எபிசோடும் அன்றைய கலாச்சாரம், மக்களின் நடை, உடை, பாவனைகள், வீடுகள், திரைச் சீலைகள், ஃபர்னிசர்கள் என மிக நுணுக்கமாகக் கவனித்துத் தயாரிக்கப்பட்டிருந்தன. அன்றைய கிராமங்கள், வாழ்க்கை முறைகள், மக்கள், குடும்பம், காதல், திருமணம், நட்பு, துரோகம், பொறாமை, சாதி பாகுபாடுகள், பழி வாங்குதல் என எல்லாம் நம்மை தாகூர் வாழ்ந்த 19, 20 ஆம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்று விடுகின்றன! வங்காளக் கிராம மக்களுக்கு, கல்கத்தா ஒரு மாய உலகமாக, ட்ரீம் சிடியாக இருப்பதை உணர முடிகிறது. வக்கீல் படிப்பு மிக உயர்வாக மதிக்கப்படுவதையும் காணமுடிகிறது.

காட்சிகளின் உணர்வுகளுக்கேற்ப, உட்புற, வெளிப்புறப் படப்பிடிப்புகளில் லைட்டிங் மிகக் கவனமாக, சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. தாகூரின் வங்காளப் பாடல்களுக்கு இனிமையான இசையுடன், அந்தக் கால இசைக் கருவிகளுடன் சேர்த்து பின்னணி இசையும் வெகு சிறப்பு. அஜித் சிங், ஷான், ஷல்மாலி கோல்கடே போன்றவர்களின் குரலில், தாகூரின் கவிதைகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. தேவையான இடத்தில், பின்னணியாகப் பாடல்கள் வருவது, காட்சியின் கனத்தை இன்னும் கூட்டுகிறது.

அனுராக் பாசு, டிபாத்மா மாண்டல், டானி பாசு ஆகியோரின் டைரக்‌ஷனில், பாத்திரங்கள் மிக இயல்பாக சித்தரிக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செட்கள், கிராமங்கள், ஆறுகள், புல்வெளிகள் தாகூரின் கதைகளின் நம்பகத்தன்மையை கூட்டுகின்றன. கண்களை உறுத்தாத படப்பிடிப்பு. ‘சட்’டென்று கதைகளுக்குள் அழைத்துச்செல்லும் காட்சியமைப்புகள். ஒரு கதையின் பாத்திரம், அடுத்த கதையினுள் வரும்படி காட்சியமைத்திருப்பது சுவாரஸ்யம் – ஒரே தொடர் போன்ற தோற்றம் தருவது டைரக்டரின் திறமை!

நடிகர்கள் தங்கள் உடை, முக பாவம், நடை என எல்லாவற்றிலும் அன்றைய வங்காள மக்களாகவே மாறிவிடுகிறார்கள். ராதிகா ஆப்தே, ஷ்ரேயா நாராயண், சுமீத் வியாஸ், அமிர்தா பூரி, பானு உதேய், ரோஹன் ஷா, தாரா அனீஷா பெனி என முப்பதுக்கும் மேற்பட்ட நடிக நடிகையர்கள் – தெருவில் நடந்து போகின்றவர்கள், கடைக்காரர்கள், போலீஸ் என உலவும் துணை நடிகர்கள் உட்பட – மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்த சீரியலைப் பார்த்தபோது, அதில் வரும் மனிதர்களின் உணர்வுகளோடு நாமும் ஒன்றிப்போகிறோம். மிகவும் இதமான தென்றல் காற்று நம்மை வருடிச் செல்வது போல ஒவ்வொரு எபிசோடும் – சொல்லப்போனால் ஒவ்வொரு ஃப்ரேமும் – அவ்வளவு இதம்.

நான் கொஞ்சம் மிகைப் படுத்திச் சொல்வதாக நினைத்தால், சீரியலைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் – நீண்ட நேரம் மனதில் சுற்றி வந்த காட்சிகள் – தாகூரின் கதைகளா, அதன் நிறம் மாறாமல் காட்சிப் படுத்தியுள்ள திறமையா என்று சொல்லமுடியவில்லை!

நம்ம ஊர் சீரியல்களை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு பாரதியின், புதுமைப் பித்தனின், தி.ஜா. வின் கதைகளை அவற்றின் நிறம் மாறாமல், விருப்பு வெறுப்பின்றி சீரியல்களாக எடுக்க முடியாதா? திறமை இருக்கிறது, மனம்தான் இல்லை எனத் தோன்றுகின்றது.

தாகூர் கதைகளை வாசிக்க வேண்டும் எனத் தூண்டிய சீரியல் இது. சென்னை புத்தகக் கண்காட்சியில் Selected stories of Rabindranath Tagore ஆங்கிலப் புத்தகமும், தாகூரின் கதைகள் தமிழ்ப் புத்தகம் ஒன்றும் வாங்கினேன். ஆங்கிலப் புத்தகத்தில் இந்த சீரியலின் பல எபிசோடுகள் இருந்தன. வாசிக்கும்போது, சீரியலின் தாக்கத்தில், கதைகள்
மனதில் குறும்படங்களாய் விரிந்தன. அது இந்த சீரியலின் வெற்றி எனத் தோன்றுகின்றது.

Chokher Bali – (1901) ‘கண்ணில் உறுத்தல்’. தாகூரின் இந்த நாவல் 3 எபிசோடுகளில் சொல்லப்படுகிறது. இளம் விதவை பினோதினியைச் சுற்றிச் சுழல்கிறது கதை. அவள் தோழி ஆஷவின் கணவன் மகேந்திராவுடன் ஆன உறவு, மகேந்திராவின் பள்ளித் தோழன் பிஹாரிக்கும் ஆஷாவுக்கும் இடையிலான ஈர்ப்பு, பினோதினிக்கும் ஆஷாவுக்கும் ஆன நட்பு எனச் செல்கிறது கதை. கத்தி முனையில் நடப்பது போன்ற கதையைக் கவிதை போல சொல்லியிருக்கிறார்கள். பெண்கள் கல்வி, குழந்தைத் திருமணம், அன்றைய ஆணாதிக்கம், குடும்ப உறவுச்சிக்கல்கள், விதவைகளின் வாழ்க்கை எனப் பல விபரங்களைத் தொட்டுச் செல்கிறது. ராதிகா ஆப்தே இளம் விதவையாக கண்களாலேயே நடித்திருப்பது சிறப்பு.

அதிதி – The Guest (1895)- அனாதையாக வீட்டிற்கு வரும் சிறுவன், வீட்டுப் பெண் குழந்தையின் கோபம், விளையாட்டு, காதல் என மிக அருமையாகச் சொல்லப்பட்டுள்ள கதை – தலைப்பிற்கேற்ற முடிவு!

காபுலிவாலா – (1892). காபூலிலிருந்து வந்து பழங்கள், டிரை ஃப்ரூட்ஸ் விற்கும் வியாபாரிக்கும், ஒரு எழுத்தாளரின் சிறிய பெண்ணுக்கும் இடையே உண்டாகும் நட்பு, பாசம் பற்றிப் பேசுகிறது. குழந்தை பெரியவளாகித் திருமணம் ஆகும்போதும் காபுலிவாலா வந்து மகிழ்கிறார். ஆனால் அவர் வாழ்க்கையில்தான் சோகம் – கொலைக் குற்றத்திற்காக ஜெயில் சென்று வருகிறார். காபூலில் தன் மகளுடன் திரும்பச் சென்று வாழ்கிறாரா? என்பது கதையின் முடிவு. மனதை இறுக்கும் கதை – தாகூரின் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.

The Trust Property – (Sampatti Samarpan – 1891-92) – ஒரு கஞ்சத் தாத்தா, மருமகளின் நோய்க்கு மருந்து வாங்கக் கூட செலவு செய்ய விரும்பாதவர் – தன் பேரன் என்று தெரியாமலே, தன் சொத்துக்களை மறைத்து வைத்திருக்கும் கோயிலின் அடித்தளத்தில் ஒரு சிறுவனை வைத்து மூடி விடும் கதை – மனம் பத பதைக்கச் சொல்லப்படுகின்றது. இப்படிச் செய்தால், அடுத்த ஜென்மத்திலும் தன்னுடைய சொத்து தனக்கே வரும் என்ற மூட நம்பிக்கை.

KankaL – (The skeleton 1892) – ஒரு மாய யதார்த்த சிறுகதை. அறையிலிருக்கும் ஒரு மனித எலும்புக்கூடு, தன் காதல் கதையச் சொல்வது – தேவையான அளவு திகிலுடனும், வித்தியாசமான காட்சியமைப்புகளுடனும் சுவாரஸ்யமாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

சீரியலில் இல்லாத கதைகளை வாசிக்கும்போதும், மனதில் அந்த நாளைய மேற்கு வங்காளமும், மனிதர்களும், இடங்களும் மனதில் கதையுடன் வருவது, இந்த சீரியலின் வெற்றி!

சீரியலைப் பாருங்கள். தாகூர் கதைகளை வாசியுங்கள் – 19 ஆம் நூற்றாண்டு இந்திய கலாச்சாரமும், மனித நேயமும் உங்களை ஏமாற்றாது!

 

இந்தக் கதைகளுக்கான அறிமுகப்படம் இங்கே: