கடையில் இருந்து வாங்கி வந்த சாமான்களை கீழே பரப்பி வைத்துக் கொண்டு சரி பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு.அவனுக்கு திடுமென்று ஒரு சந்தேகம் வந்தது. நேற்று காலையில் டிபன் செய்ய எதுவும் இல்லாததால் சுதா இவனைக் கடைக்கு அனுப்பி ஒரு கிலோ ரவை வாங்கிட்டு வரச் சொன்னாள். பாக்கெட்டில் ஒரு கிலோ ரவை 60 ரூபாய் என்று இருந்தது. ஆனால் பில்லில் எழுபது ருபாய் என்று எழுதி இருக்கிறது. இவனுக்கு திக்கென்று இருந்தது. உடனே சுதாவை எல்லா சாமான்களையும் கொண்டு வரச் சொன்னான். பில்லுடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஒரு ஒரு சாமானுக்கும் பத்து ரூபாய் சேர்த்து போடப்பட்டிருந்தது தெரிந்தது. சந்துரு உடனே கடைக்குக் கிளம்பினான்.
நல்ல வேளை அப்பொழுது அண்ணாச்சி கணினி எதிரில் உட்கார்ந்து கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தார்.
‘அண்ணாச்சி அண்ணாச்சி’
‘என்ன ஆச்சு ஏன் இப்படி பதறி ஓடி வருகிறீர்கள், உட்காருங்கள், பையா சாருக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா’.
‘இருக்கட்டும் தண்ணீர் எல்லாம் வேண்டாம், இதைப் பாருங்கள்’ என்று ரவா பாக்கெட்டைக் காட்டினான்.
‘இது என்ன வறுத்த ரவை, இதனுடன் வெங்காயம், தக்காளி, மற்ற எல்லா காய்கறியும் போட்டு, கருவேப்பிலை தாளித்து, மணக்க மணக்க உப்புமா செய்து, கடைசியில் கொஞ்சம் கொத்தமல்லி இலை தூவி, வேண்டுமென்றால் முந்திரி, வேர்க்கடலை வறுத்துப் போட்டு, இல்லாவிடில் சர்க்கரைப் போட்டு கேசரி செய்யலாம்’ என்று செய்முறை விளக்கம் கொடுத்த அண்ணாச்சியை இடைமறித்து ‘அண்ணாச்சி என்னைக் கொஞ்சம் பேச விடுங்கள்’.
‘ஓ ஓ சொல்லுங்களேன், நீங்கள் வேறு மாதிரி செய்வீர்களோ, அந்த செய்முறையையும் தெரிந்து கொள்கிறேன், மற்றவர்களுக்கும் சொல்வேன், முக்கியமாக வீட்டில்’ என்று இழுத்த அண்ணாச்சியிடம்
‘அது இல்லை’.
‘அது இல்லையா, இதோ இருக்கிறதே ரவை’.
‘அண்ணாச்சி நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள், பாக்கெட்டில் என்ன போட்டு இருக்கிறது?’
‘ஏன் வறுத்த ரவை என்று போட்டிருக்கிறது, சரிதானே, ரவை தானே இருக்கிறது?’ என்று உப்புமாக் கனவில் மிதந்தார்.
‘அது இருக்கட்டும், விலை என்ன போட்டிருக்கிறது?’
‘எம்ஆர்பி அறுபத்தி இரண்டு என்று போட்டிருக்கிறது, நாங்கள் கஸ்டமருக்காக இரண்டு ரூபாய் குறைத்து உங்களுக்கு அறுபது ரூபாய்க்குக் கொடுக்கிறோம், எங்களுக்கு இலாபத்தை விட கஸ்டமர் தான் முக்கியம்’ என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டார்.
‘சரி பில்லைப் பாருங்கள்’
‘எழுவது என்று போட்டிருக்கிறது, இது போன மாச விலை, பில்லில் பழைய விலை போட்டுள்ளது, கடைப் பையன் இப்போதைய விலையை இன்னும் ஏற்றவில்லை, அதனால் தான் தவறு நடந்து விட்டது, மன்னித்து விடுங்கள், டேய் செந்தில் அண்ணாச்சிக்கு ஒரு பத்து ரூபாய் கொடுத்து விடு’.
‘இந்த தவறு சரி, இந்தப் பாக்கெட்டைப் பாருங்கள்’.
‘ஓ பிரியாணி அரிசி, கொஞ்சம் நெய், லவங்கம், பட்டை,’
‘அண்ணாச்சி எனக்கு செய்முறை விளக்கம் தர வேண்டாம், விலையைப் பாருங்கள்’.
‘190 ரூபாய், எங்களுக்கு கஷ்டமர் தான் முக்கியம், அதனால் ஐந்து ரூபாய் குறைத்து 185 ரூபாய்க்குத் தருகிறோம்’.
‘சரி பில்லைப் பாருங்கள்’
‘195, ஓ செந்தில், சாருக்கு 20 ரூபாய் கொடுத்து விடு’.
‘நான் என்ன உங்களிடம் பிச்சை கேட்கவா வந்திருக்கிறேன்?’
‘சரி இந்த பாக்கெட்டைப் பாருங்கள்’.
‘ஓ இது வெல்லம், நல்ல நாட்டு பாகு வெல்லம், அப்படி வரும் வேர்க்கடலை உருண்டை’.
‘அண்ணாச்சி எனக்கு செய்முறை விளக்கம் எல்லாம் வேண்டாம், விலையைப் பாருங்கள்’.
‘38 ரூபாய், நாங்கள் 36 ரூபாய்க்குத் தருகிறோம், கஸ்டமர் கேர், எல்லாவற்றிலும் எம்ஆர்பிலிருந்து இரண்டு மூன்று ரூபாய் குறைத்து தான் தருகிறோம்.’
‘சரி இப்போது பில்லைப் பாருங்கள், நீங்கள் கூப்பிட வேண்டாம், நானே கூப்பிடுகிறேன், செந்தில்.’
‘சரி இது போகட்டும் இந்த பில்லைப் பாருங்கள்’ என்று மற்றொரு பில்லை சந்துரு காட்டினான்.
‘அண்ணே! இது நீங்க வாங்கின பொருட்கள், புளி சாம்பாருக்கு, உளுத்தம் பருப்பு இட்லிக்கு’
‘திருப்பி திருப்பி சொல்கிறேன், எனக்கு நீங்கள் செய்முறை விளக்கம் எல்லாம் கொடுக்க வேண்டாம், என் மனைவிக்கு எது தெரியுமோ அது செய்வாள், இந்த பில்லைக் கூட்டிப் பாருங்கள்’.
‘கூட்டினால் சரியாத்தான் இருக்கிறது, இதில் என்ன உங்களுக்கு சந்தேகம், நீங்கள் வாங்கின பொருளுக்கு நாங்கள் விலை போட்டுக் கொடுக்கிறோம், அரசாங்க சட்டப்படி பில்லும் தருகிறோம்’.
‘சரி இதில் எள்ளு என்ன விலை போட்டு இருக்கிறது?’
‘பாருங்கள் 20 ரூபாய் போட்டிருக்கிறது, சரிதானே, எள்ளு விலை கம்மி’.
‘அது எங்கே போட்டிருக்கிறது என்று பாருங்கள்.’
‘அடடா 20 ரூபாயை இருநூறு ரூபாய் இடத்தில் போட்டு இருக்கிறது, இந்த செந்தில் தான் சரியாக வேலை செய்வதில்லை என்று பார்த்தால் இந்த கம்ப்யூட்டரும் சரியா வேலை செய்வதில்லை, நான் என்ன செய்யட்டும்! கம்ப்யூட்டர் ஏன் இப்படி இந்த அங்கிளுக்கு தப்பு தப்பா போடுகிறாய், ஏதோ ஒரு பில்லில் இப்படி ஆகிவிட்டது, இதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம், பிபி ஜாஸ்தியா என்று பார்க்க வேண்டி வரும்’ என்று அன்பாக சொல்வது மாதிரி அண்ணாச்சி சொன்னார்’.
‘ஒரு பில் இல்லை, இது போன மாசத்து பில், இதிலும் குளிக்கிற சோப்பு பாருங்கள்’.
‘லக்ஸ் உடலுக்கு நல்லது, நல்ல வாசனை தரும்’.
‘அண்ணாச்சி என்னை விட்டு விடுங்கள், விலையைப் பாருங்கள்’.
‘முப்பது ரூபாய் என்று போட்டிருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு இலாபம் பண்ணி தருகிறோம்’.
‘அது இருக்கட்டும், 30 ரூபாய் எங்கே போட்டு இருக்கிறது, நீங்கள் செந்திலைக் கூப்பிடுற மாதிரி கணினியைக் கூப்பிடுவிங்களா?’
‘சரி இப்ப என்ன பண்ணுவது, தவறு நடந்துவிட்டது, நான் மன்னிப்பு கோருகிறேன், டே தணிகாசலம் ஐயாக்கு ஒரு 5000 ரூபாய் கொடுத்து விடு, அடுத்த மாதம் பில்லில் கழித்துக் கொள்ளலாம்’ என்றவுடன் சந்துரு அங்கேயே மூர்ச்சையாகி விட்டார்.
பின் சுதாரித்துக் கொண்டு எழுந்து கொண்டார். என் செய்வது! அண்ணாச்சி முப்பது ரூபாய் சோடா வாங்கிக் கொடுத்து அதை 300 என்று கணக்கிட்டால் பாவம் சந்துரு எங்கே போவார்!
ரேவதி ராமச்சந்திரன், ஜான்சி
