மலைபடுகடாம் || 10th Standard Tamil 1st Term Eyal 3 Lesson 3 #tnpsc - YouTube

மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)

 ‘மலைக்கு யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்ததனால் இப்பாட்டிற்கு மலைபடுகடாமென்று பெயர் கூறினார்’, எனக் குறிப்பிட்டுள்ளார் நச்சினார்க்கினியர்.  கூத்தராற்றுப்படை என்ற ஒரு பெயரும் இப்பாட்டிற்கு உண்டு. இந்நூல் ஆற்றுப்படை வகையைச் சார்ந்தது. அகவல்பா (ஆசிரியப்பா) இலக்கணத்தில் மொத்தம் 583 அடிகளைக் கொண்டதாக இது விளங்குகிறது.

இதனைப் பாடியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் என்னும் புலவர் ஆவார். கெளசிகன் என்பது இவரது இயற்பெயர்.   இப்புலவர் பெருமானின் பெயரில் உள்ள இரணியமுட்டம் என்பது பாண்டிய நாட்டின்கண் யானைமலை முதலிய இடங்களைக் கொண்ட ஒரு சிறிய நாடாகும். இவருடைய ஊர் குன்றூர். இவர் அந்தணர் என்று இளம்பூரணர் தன் தொல்காப்பிய உரையில் கூறியுள்ளார். இவர் இசைத் தமிழ் உணர்வுடையவர்.  யாழ் முதலிய இசைக்கருவிகளை நுணுக்கமாக அறிந்தவர்.   இவர் நற்றிணை 44, 139 ஆகிய பாடல்களையும் எழுதியுள்ளார்.

இந்நூலின் பாட்டுடைத்தலைவன் நன்னன் வேண்மான் எனும் அரசனாவான்.  இம்மன்னன் வேளிர் குடியைச் சார்ந்தவன்.  இவனுடைய தந்தையின் பெயரும் நன்னன்.  நவிர  மலையின்கண்  உறையும் சிவபெருமானின் மீது பேரன்பு கொண்டவன்.  நன்னன் என்ற பெயரில் பல மன்னர்கள் சங்க காலத்தில் இருந்தனர்.  நன்னன் செங்கண்மா என்னும் நகரிலிருந்து ஆட்சி புரிந்தான்.  இது திருவண்ணாமலைக்கு மேற்குத் திசையில் உள்ளது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.  இவனுடைய நாட்டில் சிவபெருமான் உறையும் நவிரமலை உள்ளது.  சேயாறு என்ற ஆறு இம்மலையில் பிறக்கின்றது.  இம்மன்னனின் பிறந்த நாள் தமிழர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது என்பதை மதுரைக்காஞ்சியின் இந்த வரிகள் மூலம் நாம் அறிகின்றோம். “பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள் சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு” (மதுரைக்காஞ்சி 618-619).

 இந்நூலில்  ஒரு பாணர் இன்னொரு பாணரை மன்னனிடம் செல்லுமாறு அன்புடன் ஆற்றுப்படுத்துகின்றார். இப்பாடலில் பேரியாழ் பற்றிய சிறப்பான விவரிப்பு உள்ளது. நன்னன் நாட்டின் சிறப்பு, அவனுடைய நற்பண்புகள், அவனுடைய போர்த்திறன், நவிர மலையின் வளம், கானவர் குடியின் விருந்தோம்பல், வழியில் உள்ள குடியினரின் விருந்தோம்பல், வழியில் உள்ள பாம்புகளைத் தவிர்த்தல், தினைக் காவலர்களின் கவணிலிருந்து தப்புதல், வழுக்கும் இடங்களில் கவனமாக இருத்தல், மலையில் உள்ள கடவுளை வழிபடுதல், இரவில் குகையில் தங்குதல், கானவரின் உதவும் தன்மை, மலையில் எழும் வெவ்வேறு ஒலிகள் (அருவி, ஆறு, கானவர், கானவரின் மகளிர், விலங்குகள், குரவைக் கூத்து ஆடும்பொழுது கொட்டப்படும் பறை), செல்லும் வழியில் உள்ள நடுகற்கள், கோவலரின் விருந்தோம்பல், மறவர்களின் உதவும் பண்பு, மருத நில மக்களின் விருந்தோம்பல், நன்னனின் மூதூர் சிறப்பு, அவன் அரண்மனை வாயிலில் உள்ள பொருள்கள், அவனைப் புகழும் முறை, அவன் அரச அவைக்குச் செல்லுதல், நன்னனின் கொடைச் சிறப்பு ஆகியவற்றை நாம் இந்நூலில் காணலாம்.

பாணர் பல்வேறு இசைக்கருவிகளை எடுத்துக் கொண்டு நன்னனைக் காணச் செல்கின்றனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது பேரியாழ் என்பதாகும்.

“மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப,
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது,
கவடு படக் கவைஇய சென்று வாங்கு உந்தி,
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை,  
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ்”

பேரியாழை ஓர் இளம்பெண்ணுடன் ஒப்பிட்டு ஆசிரியர் விளக்குகிறார்.

“ஐந்து பகுதியாக உள்ள கூந்தலையுடைய இளம் பெண்ணின் மாட்சிமையுடைய அசையும் அழகிய மார்பிடத்தே சென்று பின்பு இல்லையாகிய மயிர் ஒழுங்குபட்டுக் கிடக்கின்ற அழகிய வயிற்றை ஒப்ப, பொல்லம் பொத்தல் பொருந்தி, அளவில் மாறுபடாமல், பிரிவுடன் அகத்திட்ட வளைந்த கொப்பூழ்ச் சுழியினையும், நுண்ணிய அரத்தினாலே அராவிய நுண்ணிய தன்மையுடைய, கரிய நிறத்தால் களங்கனி போன்ற நெருங்கிய, ஒளியுடைய வடிவில் அமைந்த வளைந்த உயர்ந்த கோட்டினையும் மிக்க ஒளியையும்உடையது பேரியாழ்” என்னும் வருணனை சிறப்பானதாகும்.

பரிசு பெற்று வரும் கூத்தன் நன்னனின் புகழைப்பேசுகிறான். “புறமுதுகிட்டு ஓடிய பகைவர்களைக் கண்டு, அவர்கள் திறையாகத் தந்த பெறுதற்கரிய அணிகலன்களைக் கொண்டு வந்து புலவர்களுக்கு மழைபோல வரையாது கொடுப்பவன் அவன். மேலும் தன்னை இகழும் பகைவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டவன்”

மலைபடுகடாம் போல எந்த நூலும் பழந்தமிழரின் விருந்தோம்பல் பற்றிப் பேசவில்லை எனலாம். கானவர், உழவர். மறவர் போன்று ஒவ்வொரு குடியினரும் வழிப்போக்கர்களை எப்படி உபசரிப்பர் என்று இந்நூல் காட்டுகிறது.

நீங்கள் “பெரிய மலையின் சரிவில், தேனை உடையவர்களாக,  கிழங்கை உடையவர்களாக, தசை நிறைந்த கிண்ணத்தை உடையவர்களாக, சிறிய கண்ணையுடைய பன்றியின் பழுதான பகுதிகளை நீக்கி, போரில் இறந்த யானைகளின் தந்தங்களை தங்கள் தோளில் காவுமரமாக (காவடியாக), தசையுடன் மிகுந்த காவிக் கொண்டு வந்த, கானவரின் வளமான சிறுகுடியை நீங்கள் அடைந்தால், உங்கள் மிகவும் பெரிய சுற்றத்துடன் உணவு வகைகளை நீங்கள் பெறுவீர்கள்.”

மலையைச் சேர்ந்த சிற்றூர்களைச் சேர்ந்து, “பகைவரைப் பொறுக்காமல் புரியும் போரில் வெற்றி உண்டாகும் வலிய முயற்சியையும் மானத்தையும் வெற்றியையுமுடைய நன்னனுடைய கூத்தர் நாங்கள்” என்று நீங்கள் அவர்களிடம் கூறினால், தொலைவிலிருந்து வந்த உங்களுடைய வருத்தம் தீர்க்கும்படி இனிய சொற்களைக் கூறி, பருத்த தசை சொரிந்த நெய்யில் வெந்த நிறம் மிகுந்த தினைச் சோற்றினை அவர்கள் உங்களுக்குத் தருவார்கள்” என்று கூத்தன் உரைக்கிறான்.

மேலும் அக்கூத்தன் செல்லும் வழியின் இடர்களையும் கூறுகிறான்.

”உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்,
குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்
அகழ் இழிந்தன்ன கான்யாற்று நடவை

வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பிப்,  

பரூஉக் கொடி வலந்த மதலை பற்றித்
துருவின் அன்ன புன்தலை மகாரோடு

ஒருவிரொருவர் ஓம்பினிர் கழிமின்”

அதாவது  ”வலிமையுடைய யானையை விழுங்கும் முதலைகள் இருக்கும்  இருள் அடர்ந்த காட்டினையும், குமிழிகள் சுழன்று ஆழமான மடுக்களையும் முடுக்குகளையுமுடைய, காட்டு ஆற்றின் வழியில், வழுக்கும் இடங்களில், வழுக்காது உங்களைப் பாதுகாத்து, மரங்களைச் சூழ்ந்த பருத்த கொடிகளைப் பற்றிச் செம்மறி ஆட்டினை ஒத்த பொலிவு இழந்த தலையையுடைய பிள்ளைகளுடன் ஒருவரை ஒருவர் பாதுகாத்து நீங்கள் போவீர்களாக” என அவன் எச்சரிக்கையுடன் உரைக்கிறான். மலையில் ஒலிக்கும் பல்வகை ஒலிகளும் காட்டப்படுகின்றன.

“தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும், குன்றகச் சிலம்பும்,

என்று இவ் அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி,  

அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த

மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப”

தினையைக் குத்துகின்ற மகளிருடைய இசை மிகுந்த வள்ளைப் பாட்டும், சேம்பையும் மஞ்சளையும் வளர்த்துக் காப்பவர்கள் பன்றியை விரட்டுவதற்குக் கொட்டும் பறை ஓசையும், மலையில் எதிரொலிக்கும் இவ்வோசைகள் யாவும், நிரம்பி ஒன்றுசேரப் பொருந்தி, பள்ளங்களிலும் மலையிலும், நெருங்கிப் பலவற்றுடன், எல்லை இல்லாத பெரும் எண்ணிக்கையாக மலைகளாகிய யானை உண்டாக்கும் ஓசைகள் திசைகள்தோறும் ஒலிக்குமாம். இந்த யானைகள் எழுப்பும் ஒலியினால்தான் இந்நூல் பெயர் பெற்றது.

 மேலும் அவன் கூறுகிறான். “பலநிறங்கள் பொருந்திய கட்டப்பட்ட மாலைகள் அணிந்த பெண்கள் ஆடுவதற்கு ஏற்ப முழவு ஒலிக்கும் கண் உறக்கம் அறியாத அகன்ற ஊரில் கொண்ட திருவிழாக்களை ஒத்தது அவனுடைய அகன்ற இடத்தையுடைய மலையாகும்,  கண்குளிரக் கண்டும் செவிகுளிரக் கேட்டும், உண்ணுதற்குரிய பல உணவுகளைக் கொண்டாடி உண்டும், ‘மேலும் இத்தகைய இன்ப நுகர்ச்சி எய்துவதாக நமக்கு’ என நீங்கள் விரும்பிப் பழைய உறவினர் போலும் முறைமை உடையவர்களாகச் சில நாள்கள் அங்கு தங்கலாம். முகில் கூட்டத்தையுடைய பெரிய மலை உங்கள் பின்னால் இருக்க, வியப்பு மிக்க யாழையுடைய விறலியர் நறுமணமான கரிய மலையில் குறிஞ்சிப்பண்ணில் பாட, கையால் தொழுது பாராட்டி, இறைவனைப் புகழ்ந்து, அதன்பின் செல்லுங்கள்.”

பின்னால் வருவோர்க்கு வழிகாட்ட ஒரு செயலைச் செய்யவேண்டும் என்பது இந்த இடத்தில் புதுமையான செய்தியாகும் “.முன்பு நன்கு வழியை அறியாததால் வழிதவறிப் பின் அவ்விடத்திற்கு மீண்டும் நீங்கள் வருவீர்கள். எனவே பல வழிகள் கூடின அச்சந்திகளைக் கையால் துடைத்து, அடுத்து அவ்வழியில் வருபவர்களுக்கு அறிகுறியாக ஊகம்புல்லை கட்டி வையுங்கள்” என்றும் அவன் கூறுகிறான்.  

“கூப்பிடு கடக்கும் கூர்நல் அம்பின்
கொடுவிற் கூளியர் கூவை காணின்,
படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மை
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே,

தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ,  

ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை;

ஆங்கு வியம் கொண்மின்; அது அதன் பண்பே” 

கூளியர் என்பது வேட்டுவரைக் குறிக்கும். “கூப்பிடும் தொலைவில் கூர்மையான நல்ல அம்பினையும்  வளைந்த வில்லினையும் செலுத்தும் ஆற்றலுடைய வேட்டுவரின் கூட்டத்தை நீங்கள் காணலாம். “தன்னை வணங்காதவர்களை அழித்த பணிவு இல்லாத ஆளும் தன்மை உடையவனும் பூங்கொடி போன்றவளின் கணவனும் ஆகிய நன்னனை எண்ணி நாங்கள் செல்கின்றோம்” எனக் கூறினால், தசையையும் கிழங்குகளையும் வற்புறுத்தி உங்களை உண்ணச் செய்வார்கள்.  அங்கு பாதுகாப்பவர்கள்தாம் உள்ளார்களே அன்றி வருத்தம் கொடுப்பவர்கள் இல்லை.  அவர்கள் போகச் சொன்ன வழியில் செல்லுங்கள்.  அக்காட்டின் தன்மை அதுதான்” என்று அவன் மேலும் கூறுகிறான்.

நன்னன் ஊர் பற்றிக் கூறும்போது, “பழைய குடிமக்கள் பொருந்தி இருக்கும் ஊர் அது. வளமையான பெரிய கடைவீதியை உடையது. ஆறு என எண்ணும்படி உள்ள தெருக்களையும், திருவிழா என்னும்படி மக்கள் திரண்ட பகைவர்கள் செல்ல அஞ்சும் கவர்த்த தெருக்களையும், கடல் போன்றும் முகில்கள் போன்றும் ஒலிக்கும் ஒலியுடன், மலை போலும் முகில் போலும் உயர்ந்த மாடங்களையும் கொண்டது. தன்னிடத்தில் உறைபவர்கள் வெறுப்பில்லாத விருப்பத்துடன் இனிது  இருக்கும், குளிர்ந்த சோலைகளில் வண்டுகள் இசைபாடும் நன்னனின் பழைய வெற்றியை உடைய மூதூர் மிகத் தொலைவில் உள்ளது அன்று.

வாளினையுடைய மறவர்கள் தங்களின் கரிய காம்பையுடைய வேலைச் சாத்தி வைத்துள்ள நுழைவாயில் அருகில் உள்ள அரிய காவல் உடைய வாயிலில், ஐயமில்லாமல் நுழையுங்கள்.  நன்னனின் மன்றத்தில் இருப்பவர்கள் பரிசில் நாடி தொலைவிலிருந்து வந்தவர்கள். வெல்லும் போரில் வெற்றிபெறும் முருகனைப் போல் உள்ள நன்னனின் கொடையை எண்ணி வந்தவர்கள். 

அங்கு உங்களைக் கண்டவர்கள் எல்லோரும் முகம் பொருந்தி உங்களை இனிமையுடன் நோக்கி, நீங்கள் அவர்களுடைய விருந்தினர் ஆகவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்பி ஏற்றுக் கொள்வார்கள். வைரம் பாய்ந்த சந்தன மரங்கள், கரிய கொடிகளையுடைய மிளகின் காயாகிய கொத்தாக உள்ள பசிய மிளகு, நல்ல மூங்கில் குழாயில் முற்றிய தேனால் செய்த கள், காட்டில் நிலைபெற்ற எருமையின் மூங்கில் குழாயில் தோய்த்த இனிய தயிர், நீல நிறத்தையுடைய ஓரி நிறம் பரவியதாக உயர்ந்த மலையில் சக்கரத்தைப் போல் தேன் பாயும் தேன் கூடுகள், இவற்றுடன் கூடுதலாக உள்ள ஆசினிப் பலாப்பழங்களும், மேற்கு மலையில் பிறந்த குளிர்ந்த பெரிய காவிரி ஆறு கடலில் மிகுந்துச் செல்கின்ற ஆழத்தையுடைய புகார் துறைமுகத்தைப் போல நன்னனின் பெரிய வாசலில் இவை யாவும் நிறைந்திருந்தன.  

அடுத்து நன்னனைப் போற்றும்படிக் கூறுகிறான்.

”விருந்தின் பாணி கழிப்பி, “நீள் மொழிக்

குன்றா நல்இசைக் சென்றோர் உம்பல்!   540

இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப,
இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தெனக்
கொடைக் கடன் இறுத்த செம்மலோய்!” என,
வென்றிப் பல்புகழ் விறலோடு ஏத்தி,

சென்றது நொடியவும் விடாஅன்”

 “வாய்மையில் குறைதல் இல்லாத நல்ல புகழுடைய வழியில் சென்றவர்களின் வழியில் வந்தவனே!  தங்கள் பெயர் இங்கு அழியாது உலகம் உள்ளளவும் நிற்கும்படி நல்லதையும் தீயதையும் ஆராய்ந்து அறியும் வள்ளல்கள் இறந்ததால் அவர்கள் மேற்கொண்ட கொடையை மேற்கொண்டு கடனை முடித்த செம்மலே!” என்று கூறி மேலும் அவனுடைய வெற்றியால் உண்டான பல புகழையும் வெற்றியுடன் புகழ்ந்து பாடுங்கள். நன்னன் உடனே கூறுவான்.

 “……         ……..      ……..   நசை தர

வந்தது சாலும் வருத்தமும் பெரிது என”

“என் மேல் விருப்பம் கொண்டு வந்தது அமையும்.  நீங்கள் வழியில் வந்த வருத்தம் பெரிது” எனக் கூறுவான். பெரிதும் உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கிக்  கொடையில் விரிந்து அதற்கு இடங்கொடுக்கும் வானத்தை ஒத்த பெரிய உள்ளத்துடன் செல்லும் உங்களைக் காட்டிலும் மிக மகிழ்ச்சியுடன் உங்களை இனிமையாகப் பார்ப்பான்,

  நூல் போன இடம் கண்களுக்குத் தெரியாதபடி நுண்ணிய நூலால் செய்த ஆடையை, உங்கள் வறிய இடையில் உடுத்தி, பெண் நாய் கடித்துக் கொண்டு வந்த பசிய கொழுப்புடைய தசைத் துண்டுகளுடன், நீண்ட வெள்ளை நெல்லின் அரிசியை எல்லையில்லாது, முதல் நாள்போல் விருப்பத்துடன் நெஞ்சில் சிறப்பு அடைந்து பல நாட்கள் அங்கு இருந்தாலும் பெறுவீர்கள். அங்கு இன்னும் பலநாட்கள் தங்காது, “நாங்கள் செல்ல எண்ணுகின்றோம் எங்கள் ஊருக்கு” என்று கூறுங்கள்.

மலைகளிலிருந்து வடியும் அருவிகள் வெற்றிக் கொடிகள் போல் தோன்றும் மலைகள் சூழ்ந்த நாட்டு மன்னனான நன்னன், உங்களில் தலைவனைப் பொற்றாமரையைச் சூடச் செய்வான். விறலியர் அழகான சிறப்புடைய ஒளியுடைய அணிகலன்களை அணியச் செய்வான். நெடிய தேர்களையும், மலை போன்ற யானைகளையும்  ஒலிக்கும் மணிகளையுடைய காளைகள் உடைய பெரிய கூட்டத்தையும், பொலிவுபெற்ற மயிர் கொய்யப்பட்ட கழுத்தையுடைய குதிரைகளையும் அளிப்பான். புலவர்கள்  கை நிறையும்படி அணிகலன்களைக் கொட்டுதலால் கீழ் நோக்கி உழலும் தொடிகள் அணிந்த பெரிய கையில் தான் கொடுத்த செல்வம் கெடாதபடி, வளமை முற்றுப்பெற்ற மூங்கில் வளர்ந்த நவிரம் என்ற மலை உச்சியில் விரைவில் கொட்டும் மழையினைப் போல், பரிசுகள் தந்து முதல் நாளிலேயே போக விடுவான். மலைகளிலிருந்து வடியும் அருவிகள் வெற்றிக் கொடிகள் போல் தோன்றும் மலைகள் சூழ்ந்த நாட்டு மன்னனான நன்னன். 

இவ்வாறு பரிசு பெற்று வந்த பாணன் மற்றொரு பாணனை நன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக மலைபடுகடாம் கூறுகிறது.