இரண்டாம் ராஜாதிராஜன்

(1163 முதல் 1178 வரை).

கதை சொல்லும் மூடு வந்து விட்டது.

ராஜராஜேஸ்வரம் (இன்றைய தாராசுரம்), இரண்டாம் ராஜராஜனின் இரண்டாம் தலைநகர் போல விளங்கியது. அருகில் இருந்த பழையாறையும் பொலிவுடனே இருந்தது. ராஜராஜேஸ்வரத்து அரண்மனையில், இரண்டாம் ராஜராஜசோழன் சயன அறையில் படுத்திருந்தான். வயது முதிர்ந்திருந்ததாலும், பலப்பல போர்களில் பெற்ற காயங்களின் பலனாக, தளர்ந்திருந்தான். அது ஒரு பொன்மாலைப்பொழுது. நகரின் தெரு விளக்குகளிலும், அரண்மனை விளக்குகளிலும், நகர் பொன்னாலானதோ என்பது போல மின்னியது. அந்நேரம், தளபதியும், முதல் அமைச்சருமான  ‘திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பி பல்லவராயன்’ அரண்மனைக்குள் நுழைந்தான். மகாராணி ‘புவன முழுதுடையாள்’ அவனை வரவேற்றாள்.

“மகாராணி! மன்னர் அழைத்ததின் பேரில் வந்துள்ளேன்” என்றார். மகாராணி, புன்முறுவல் பூத்து, “அப்படியானால் எங்களைக் காண தாங்கள் வரமாட்டீர்களோ?” என்று சிரித்தாள். “மகாராணி! உங்களுக்கும், அரச குடும்ப இளவல்களுக்கும் சேவை செய்வது மட்டுமே எனது இரத்தத்தில் ஊறியதொன்று.” என்று கூறினார்.
“மந்திரியாரே! நான் அறியாததா அது. சக்கரவர்த்தி பெருங்கவலையில் இருக்கிறார். உங்கள் உதவிக்காகக் காத்திருக்கிறார். சயன அறையில்” என்றாள்.

சோழச்சக்கரவர்த்தி மெலிந்து, நலிந்திருந்தார். “பல்லவராயரே! உங்கள் வீரத்தினாலும், மதியூகத்தினாலும் சோழ நாடு இன்னும் தமிழகத்தில் உயர்ந்திருக்கிறது. ஆனால், சோழநாட்டுக்குத்தான் எத்தனை எதிரிகள்? சுற்றிலும் பகை, புகைமண்டலாக இருக்கிறது. இதில் சோழ நாட்டு அரசன், சற்றுத் தாழ்ந்தாலும், நாட்டை அழிக்க பல சக்திகள் தீவிரமாக துடித்துள்ளது” என்று நிறுத்தினார்.

அவர் சொல்வதிலிருந்த உண்மையை நன்றாக உணர்ந்த பல்லவராயன் சொன்னான்: “வீரத்திருமகனாகத் தாங்களும், தானைத்தலைவனாக நானும் இருக்கும் போது, சோழநாட்டுக்கு என்ன குறை அரசே? ஆனாலும், ஏதோ ஒரு பிரச்சினை உங்கள் திருவுளத்தை அரிக்கிறது என்று தோன்றுகிறது. அதைச் சொல்லுங்கள். அதைத் தீர்த்துவைக்க என்ன வழி என்று ஆலோசிப்போம்” என்றான்.

மன்னன் சொன்னான். “உண்மை தான் பல்லவா. தில்லை ஆண்டவன் எனக்கு ஆண்வாரிசைத் தராமல், பெண்களை மட்டுமே தந்துள்ளான். சோழநாட்டு எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இதுவரை ஆண்ட சோழமன்னர்கள் தங்கள் மகனைப் பட்டத்து இளவரசனாக்கி, அவனுக்கு அரசாட்சியில் பயிற்சி, மற்றும் போர்க்கலையில் பயிற்சி பெறச்செய்து, எதிர்காலச் சோழநாட்டை வலுப்படுத்தினர். நான் அப்படி ஏதும் செய்ய இயலாமல் இருக்கிறேனே. நேரடியாக ஆடவர் வரிசையில் அரசுரிமைக்கு உரியோர் இல்லாத நிலையில், வருகின்ற சோழ நாட்டுக்கு நான் துரோகம் இழைப்பது போலத் தோன்றுகிறது” என்றவன் கண்களும் சற்றுக் கலங்கின.
இரும்பு இதயம் கொண்ட பல்லவராயனின் கண்களும் பனித்தது.

“மன்னவா. இதற்குத் தாங்கள்தான் ஒரு வழியைக் சொல்லவேண்டும்” என்றான். மன்னவன் பேசினான். “பல்லவராயரே! இது சோழமன்னர்களுக்கு முன்பு ஏற்பட்டதுதான். வீரராஜேந்திர சக்கரவர்த்தி- அதிராஜேந்திர சக்கரவர்த்திக்குப் பிறகும், இப்படி நேர்வாரிசு இல்லாமல், இராஜேந்திர சோழதேவரின் மகள் வயிற்று சந்ததியாக, நமது முதலாம் குலோத்துங்கன் ஆளவில்லையா? அது போல, நாமும் அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் தகுதியான ஒருவனை, பட்டத்து இளவரசனாக்கவேண்டும். இதைச் செய்யாவிட்டால்,எனக்குப் பிறகு, பல இளவரசர்கள் இந்தச் சோழநாட்டு அரியணைக்காக, சூழ்ச்சி செய்து சோழநாடுக்குக் கேடு நேரிடும்.” என்று நிறுத்தினான்.

மன்னர் ஏதோ திட்டத்துடன் தான் இருக்கிறார் என்று உணர்ந்த தளபதி “மேலே சொல்லுங்கள் மன்னர் மன்னா” என்றான்.

“நானும் கங்கை கொண்ட சோழபுரத்தில் வளர்ந்து வரும் இளவரசர்களை சில வருடங்களாகக் கூர்ந்து கவனித்து வருகிறேன். அதில், விக்கிரம சோழச்சக்கரவர்த்தியின் மகள் வழிப் பேரன் ஒருவன். பெரும் வீரன். அரசனுக்குத் தேவையான பல குணங்கள் கொண்டவன். விக்கிரம சோழச்சக்கரவர்த்தியின் மகளை மணந்த நெறியுடைப் பெருமாளின் மகன் ‘எதிரிலிப் பெருமாள்’. அவனைப்பற்றித்தான் நான் கூறுவது. அவனைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா? உனது கருத்து என்ன?” என்றான்.

பல்லவராயன், “மன்னா! அவனைப்பற்றி நான் கேள்விப்பற்றிருக்கிறேன். சிறந்த வீரன், குணவான். அந்நாளில், இராஜாதிராஜ மாமன்னர், கொப்பம் போர்க்களத்தில் யானைமீது வீரமரணம் அடைந்தாரே, அவர் போன்ற வீரனல்லவா அவன்” என்றான்.
மன்னன் தொடர்ந்தான். “சரியாகச் சொன்னாய்! அவனை வரச்சொல். அவனிடம் பேசி, அவனை யுவராஜாவாக்கி, அரசாட்சியில் அவனைப் பழக்கி, காலம் வரும்போது, அவனை அடுத்தச் சோழமன்னனாக்கி, சோழநாட்டைக் காக்கவேண்டும். உன்னை நம்பித்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும், நீயே சொல்லிவிட்டாய். இராஜாதிராஜன் போன்ற வீரன் என்று. அவன் மன்னனாகும் போது அவன் ‘இரண்டாம் இராசாதிராசன்’என்ற பட்டப்பெயருடன் அவன் அரசாளட்டும்” என்றான்.

பிறகு காரியங்கள் விரைவாக நடந்தேறியது. எதிரிலிப்பெருமாளை கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வரவழைத்தனர். மன்னவனின் ஆணையைக் கேட்டு எதிரிலிப்பெருமாள் நெகிழ்ந்து போனான். “மன்னர்மன்னரே! உங்கள் கருணையே கருணை! உங்கள் நம்பிக்கைக்கு என்றும் உறுதியாக இருப்பேன். மேலும் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். தங்களது வாரிசு வரும் போது, அவனையே நான் எனக்கு அடுத்தபடி மன்னனாக்குவேன்” என்று உறுதி அளித்தான். இராஜராஜன் மகிழ்ந்தான்.

மறுநாளே எதிரிலிப்பெருமாள் பட்டத்து இளவரசனாக மகுடாபிஷேகம் செய்யப்பட்டான். இருந்தும், தாயாதிகள், சோழநாட்டு அரியணைக்கு சதி செய்து ரகசியமாகக் கூட்டங்கள் நடத்தினர். வருடங்கள் ஆறு உருண்டோடியது. இடையில், மன்னனுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தது. இளவரசன் எதிரிலிப்பெருமாள், மன்னரிடம் தனது வாக்குறுதியை நினைவுபடுத்தி, ‘எனக்குப் பிறகு, உங்கள் மகனை, பெரும் வீரனாக வளர்த்து, மூன்றாம் குலோத்துங்கனாக்கி, மன்னனாக்குவேன்’ என்று உறுதிமொழி கூறினான். ராஜராஜசோழன், ஆனந்தக்கண்ணீர் வழிய, எதிரிலிப்பெருமாளைக் கட்டிக்கொண்டான்.

மாதங்கள் சில சென்றது. ராஜராஜபுரத்தில் இரண்டாம் இராஜராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாகியது. பல்லவராயனையும், எதிரிலிப்பெருமாளையும் மந்திராலோசனை அறைக்கு அழைத்தான். “பல்லவா! இனி நான் வாழும் நாள் குறைவு. விரைவில் எதிரிலிப்பெருமாளுக்கு முடிசூட்டுவிழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடக்கட்டும் என்றான். பல்லவராயன், “மன்னரே அவ்வாறே செய்வோம். ஆயினும், தாயாதிகள் பலர், ரகசியமாக பல இளவரசர்களை சோழநாட்டு அரியணையில் அமர்த்துவதற்கு சூழ்ச்சி செய்கின்றனர் என்று செய்திகள் வருகின்றன. அவர்கள் பாண்டியர்களுடைய கூட்டையும் கோரி வருகின்றனர்’ என்றான்.

மன்னன், ”பல்லவா! இராஜாதிராஜா.. இனி இது உங்கள் பொறுப்பு.. என் இளைய மகன்களையும் இந்த சூழ்ச்சி வலையிலிலிருந்து நீங்கள்தான் காக்க வேண்டும்” என்றான்.

அடுத்த முகூர்த்தநாளில், கங்கைகொண்டசோழபுரத்தில், எதிரிலிப்பெருமாள், “ராஜகேசரி” எனும் பட்டத்துடன், ‘இரண்டாம் இராஜாதிராஜனாக’ முடிசூட்டப்பட்டான். அந்நாளிரவு சோழநாடு பல திருப்பங்களை எதிர்நோக்கியது. மாலையில் ஆதவன் மறைந்தான். இரண்டாம் ராஜராஜசோழனும் மறைந்தான். செய்தி ‘தீ’ போலப்பரவ, சோழநாட்டில் குழப்பம் நிலவியது. முதல்அமைச்சர் பல்லவராயன், இரண்டாம் இராஜராஜனின் பச்சிளம் பிள்ளைகளை இராஜராஜபுரத்திற்கு கொண்டு வந்து பாதுகாப்பில் வைத்திருந்தார்.

தமிழகத்தை இரத்தமயமாக்கிய பலப்போர்கள் நடக்கவுள்ளது. பாண்டியர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ள, சோழநாடும், சேரநாடும், இலங்கையும் பலவிதமான கூட்டணிகள் அமைந்தது. இந்நாளில் மாறி மாறி கூட்டணிகள் வைக்கும் அரசியல் போல, அந்நாளில் அதைவிட இன்னும் மோசமான கூட்டணிகளால், நாடு நாசமாகியது. தமிழர் வாழ்வு நிலை குலைந்தது. சாண்டில்யன் இந்தக்காட்சிகளைக் கன்னிமாடமாக்கினார். அந்தக்காட்சிகளை நாமும் காண்போம்.. விரைவில்.