சென்ற இதழில்,

…டீ தயாராகும் சமயத்தில் டைம் ஷேர் ஓனர், தங்கள் இல்லத்தில் தயாரித்த கேக் பார்சலுடன் வந்து சேர்ந்து கொண்டார். டீ கோப்பையை அவருக்கும் நீட்டியபடி,

“இங்கு அடிக்கடி பேசப்படும் இந்த ‘வடக்கு ஒளி’ (வடவொளி) என்னும் Northern Lights ஐ எப்போது பார்க்கப் போகிறோம்?” என்று கேட்டோம்.

“முதலில் Northern Lights பற்றிச் சொல்கிறேன். பிறகு எப்போது பார்க்கலாம்? என்பது பற்றிப் பேசுவோம்”, என்றார் கேக் பார்சலைப் பிரித்தபடி..

——————————————————————————————————————————————-

Iceland Northern Lights Tour - Globus® Iceland Vacation

இனி,

… அவனுடைய தேகத்தில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. பழுக்கக் காய்ந்த ஒரு லட்சம் ஊசி முனைகள், அவன் தேகமெல்லாம் துளைத்தன – அத்தகைய பயங்கர காட்சி அவன் கண் முன்னே காணப்பட்டது!

முடிவில்லாது பரந்திருந்த இருளில் ஆங்காங்கே பத்து, இருபது, நூறு அக்கினி குண்டங்கள் தோன்றின. அவற்றிலிருந்து புகை இல்லை, வெளிச்சமும் இல்லை ; வெறும் நெருப்பு பிண்டங்கள் ; பூமியிலிருந்து எப்படியோ எழுந்து அவை நின்றன. திடீரென்று அவற்றில் சில பிண்டங்கள் மறைந்தன. வேறு சில தீப்பிண்டங்கள் புதிதாக எழுந்து நின்றன..

சித்திரக்கதை: பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - சுழற் காற்று (Ponniyin selvan pictures II)இந்த காட்சியைக் கண்ட வந்தியத்தேவனுடைய ஒவ்வொரு ரோமக் கால் வழியாகவும் அவனுடைய உடம்பில் ரத்தம் கசிவதைப் போலிருந்தது.

“ஹா.. ஹா.. ஹா” என்ற சிரிப்பு கேட்டது.. திரும்பிப்பார்த்தான் ;

பூங்குழலிதான்…!

“இந்த கொள்ளிவாய்ப் பிசாசுகள்தான் என் காதலர்கள். இவர்களைப் பார்த்து சல்லாபம் செய்வதற்குத்தான், நள்ளிரவில் இந்த இடத்திற்கு நான் வருகிறேன்..!”
**************************
டைம் ஷேர் ஓனர் ‘Northern Lights’ பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, பொன்னியின் புதல்வர் கல்கியின் இந்த வர்ணனைகள்தான் நினைவுக்கு வந்தன. சதுப்புநில வயல்களின் வெடிப்புகளில் அவ்வப்போது வெளிப்படும் மீத்தேன் வாயு, வெப்பக்காற்றுடன் உரசும்போது சில நொடிகள் தீப் பற்றிக்கொள்ளும்.

இந்த தீப்பிழம்பு ஆங்காங்கே எரிந்து அணையும். அதைப்பற்றி ‘கொள்ளிவாய் பிசாசு’ என்று தவறான புரிதல்கள் அந்த காலத்தில் இருந்திருக்கின்றன;

இதற்கும், வடவொளிக்கும் உள்ள வித்தியாசம் – அவை பூமியிலிருந்து மேல் எழும்பி ஒளிக்கீற்றாக ஜாலங்கள் புரிபவை, வடவொளி என்பது வானத்திலிருந்து கீழிறங்கிக் காட்டும் வெளிச்ச வித்தைகள்.

கீழே பனி நிலம், வானில் ஒளி அலைகளின் நடனம் :

“The Aurora Borealis என்கிற Atmospheric Phenomenon..”- என்று ஆரம்பித்தார், டைம் ஷேர் ஓனர் . நம் மொழியில் சொல்ல வேண்டுமானால் பொன் மாலையில் வர்ண ஜாலங்கள் செய்யும் வான நங்கையானவள் நள்ளிரவில் நீலமும், பச்சையும், ஊதாவும் கலந்த புடவையை உடுத்தி, தலைப்பை வீசி நடனமாடும் செயல் இது. சில சமயம் குத்தாட்டமாகக் கூட இருக்கலாம்!

விஞ்ஞானம் சொல்வது யாதெனில்;

சூரியனிடம் இருந்து வரும் ஆற்றல் மிகுந்த காந்த துகள்கள் பூமியின் மேற்புறத்தில் உள்ள வளி மண்டலத்தின் மீது சுமார் 72 மில்லியன் Km/Hour வேகத்தில் மோதுவதால் ஏற்படும் விளைவு! ஆயினும், நமது கிரகத்தின் மேல் உள்ள காந்தப் புலம், ஒரு தடுப்பணையாக இருந்து அந்த தாக்குதல்களை தடுத்தாளுகிறது. அது மட்டுமல்லாமல்,

காந்தப்புலங்கள் இந்த காந்த துகள்களை, பூமி முழுக்க பரவவிடாமல் வட மற்றும் தென் துருவ பகுதிக்குத் திருப்பி விடுகின்றன. அதைதான் நாம் வெளிச்சத்தின் வடிவில் காண்கிறோம்.

இன்னும் வேறு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால், சூரியன் தனது வெளிப்புற பரப்பிலிருந்து (Carona) சிதறிவிடும் மின்னூட்ட துகள்கள் (Charged particles) ஒரு சூரிய புயலாக மாறி, பூமியின் அயன வெளியைத் தாக்கும் பொழுது ஏற்படும் நிகழ்வு இது.

பிரபல இத்தாலிய வானியல் விஞ்ஞானி GALILEO தான், இதற்கு Aurora Borealis என்று 1619 ஆம் ஆண்டில் பெயர் வைத்தார். Aurora என்பது விடியலைக் குறிக்கும் ரோமன் தேசத்துப் பெண் தெய்வத்தின் பெயர் ; வடக்கிலிருந்து வீசும் காற்றுக்கான கிரேக்கக் கடவுளின் பெயர் Borealis. இவை இரண்டையும் இணைத்துச் சூட்டிய பெயர்தான் ‘The Aurora Borealis’.

கிட்டத்தட்ட முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிரான்ஸ் நாட்டுக் குகைச் சிற்பத்தில், இந்த வடவொளியின் சித்திரம் வரையப்பட்டுள்ளது தெரியுமா? என்றார்.

“ஆச்சரியமா இருக்கே, இதன் வெளிச்சம் வட துருவ முனையிலிருந்து எத்தனை கிலோமீட்டர் வரை தெரியும்? – தயாரித்த ரெடிமேட் நூடுல்ஸ் தட்டுக்களை அவர்கள் பக்கம் நகர்த்தியபடியே கேட்டார் என் மனைவி.

“ஐஸ்லாந்து ரொம்பவே ஸ்பெஷல்! வட துருவத்திற்கு அருகில் இருப்பதால் இதைக் காண வேண்டும் என்பதற்காகவே உலகெங்கும் மக்கள் தேடி வருகிறார்கள். அலாஸ்கா, வட கனடா, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து இப்படி சுமார் 2500 கி.மீ சுற்றுவட்டாரத்தில் இதைப் பார்க்கலாம்”

“எந்த மாதத்தில் இவை தெளிவாகத் தெரியும்?”

“இந்த வடவொளியைத் தேடிப் போவதை ‘NORTHERN LIGHTS HUNTING’ என்று கூறுவார்கள். செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை; குறிப்பாக, இரவு 9 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை. இங்கு டிசம்பர், ஜனவரி மாதங்களில் கிட்டத்தட்ட 19 மணி தியாலம் இருட்டாக இருப்பதால், வடவொளியைக் காணச் சிறப்பான மாதங்களாக அவை அமையும்.

சந்திரன் ஒளி இல்லாமல் இருக்க வேண்டும். அது போல மேகக் கூட்டங்களின் குறுக்கீடு இருக்கக் கூடாது.

“பூமியில் வீசும் புயல் போல இதற்கென்று ஏதும் பருவகாலம் உள்ளதா?”

“11 வருடங்களுக்கு ஒரு முறை (கிட்டத்தட்ட நம்முடைய மாமாங்கம் போல) ‘சோலார் மேக்சிமம்’ என்பது வழக்கமாக நிகழ்கிறது. அப்பொழுது சூரியனுடைய காந்தமுனை திரும்பும். அதன் காரணமாகச் சூரியனின் மேற்புறத்தில் நிறைய எரிமலை வெடிப்புகள் நிகழும்.

அதனால் உருவாகும் சூரிய புயல்கள் அதிக அளவு பூமியின் வடக்கு மற்றும் தென் துருவ அயன வெளியை ‘குதிரை லாட வடிவில்’ தாக்கும். இதன் மூலம் பச்சை, சிவப்பு, நீலம், ஊதா துகள்கள் நர்த்தனமாடும். 11 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்வை 2025 ஆம் ஆண்டு காணலாம். போன சோலார் மாக்ஸிமம் 2014 ஆம் ஆண்டில் ஏற்பட்டது”

வடவொளியைப் பார்ப்பதற்கு உகந்த காலம் – நீண்ட இருள் இருக்கும் மாதங்கள். உகந்த நாள், அமாவாசை வருவதற்கு ஐந்து நாட்கள் முன்னும் பின்னும்”

நான் குறுக்கே புகுந்து, “பௌர்ணமி நிலவும், பனி விழும் இரவும் – காதலுக்குத்தான் உகந்தது போல இருக்கிறது, நார்தன் லைட்ஸ்..க்கு இல்லை போல” என்றேன்

ஜோன் “என்ன சொல்கிறீர்கள் ?, புரியவில்லை..” என்றார்

“அதை விடுங்கள்.. நீங்கள் தொடரலாம்” என்று என் மனைவி, என்னை முறைக்க,

Thingvellir - An important historic site and national park“குளிர்காலத்தில் இங்கு வந்தால், நீங்கள் ஏற்கனவே சுற்றிப் பார்த்த ‘THINGVELLIR தேசிய பூங்கா’, Blue Lagoon நீச்சல் குளம் போல பல இடங்களிலிருந்து பார்க்கலாம்.

குறிப்பாக HELLA என்னும் இடத்தில் உள்ள Hotel RANGA ஒரு நல்ல ஸ்பாட் என்றார் (நம் சீரங்கத்தில் இருக்கும் ரங்கநாதருக்கும் இந்த ரங்காவிற்கும் ஸ்நான பிராப்தி கூடக் கிடையாது).

அந்த இடத்தில், Onsite Observatory உள்ளதால் SKY WATCHER..களுக்கு அற்புதமான இடம் இது. கடும் பனியில் நின்று பார்க்க ஏதுவான தெர்மல் உடைகளும் இங்கு வாடகைக்குக் கிடைக்கும். மற்றொரு சிறந்த இடம் WEST FJORDS of ICELAND. SELTJARNARNES தீபகற்பம் மற்றும் OSKJUHLID மலை – போன்ற பகுதிகளும் சிறந்தவை. இந்த இடங்களில் மேகக் கூட்டங்கள் குறைவு. செயற்கை வெளிச்சம் இல்லாத இடங்கள். அதனால் காண்பது எளிது.

என்னை பொறுத்தவரையில் நார்தன் லைட்ஸ் பார்க்க அதிர்ஷ்டம் செய்தவர்கள் யார்.. என்றால் ப்ளூ லக்கூன் நீச்சல் குளத்தில் வெந்நீரில் குளித்தபடி சுற்றிலும் பனிப்பாறைகள் சூழ்ந்து இருக்க நீண்ட இரவுகள் சமயத்தில் வடவொளியைப் பார்ப்பது!” என்று சிரித்தார்.

“நமக்கே டிரைவிங் தெரிந்தால் ‘ரெண்ட் எ கார்’ எடுத்துக்கொண்டு, ஹண்ட்டிங் செல்லலாமா?” (இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா..ல்ல – என்று இடித்தாள் மனைவி)

“இந்த NORTHERN LIGHTS வேட்டையாடுதல் நிகழ்வுக்கு நீங்கள் எப்படிப்பட்ட எக்ஸ்பர்ட் டிரைவராக இருந்தாலும், பனி பொழியும் நாட்களில் வாடகை வாகனத்தை ஓட்டிக்கொண்டு இந்த ஒளியைத் தேடுவது கடினமான விஷயம், இதற்காக ‘கைடட் டூர்’களைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அவர்கள் சூழ்நிலைக்கேற்ப வாகனம் ஓட்டுவதில் திறமைசாலிகள். ஒரு இடத்தில் மேகமூட்டமாக இருந்தால், மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். ஒருவேளை டூர் கேன்சல் ஆனால் இன்னொரு வாய்ப்பும் தருவார்கள்.

இந்த வடவொளியைப் பார்க்க தலைநகர் ரேக்கவிக்கிலிருந்து NORTHERN LIGHTS HUNTING TOUR நிறையக் கிளம்புகின்றன. மாலை 5 மணி வாக்கில் அன்றைய வானிலை மேகமூட்டம், வானத்தின் தெளிவு எப்படி இருக்கும், போன்றவற்றை டூர் ஆபரேட்டர்கள் சொல்லிவிடுவார்கள். வானிலை சரி இல்லை என்றால் உங்களது பயண அட்டவணையை வேறு ஒரு நாளுக்கு மாற்றியும் கொடுப்பார்கள்.

அதே போல, படகில் சென்று நடுக்கடலில் தெளிவான வானிலையில் இதே ஒளி விளையாட்டைப் பார்க்கும் படகு வசதியும் உண்டு. போனஸ் ஆக சில நேரங்களில் திமிங்கிலங்களையும் பார்க்கலாம்.

நம்ம ஊர் வானிலை அறிக்கை போல ஐஸ்லாந்தில், AURORA FORECAST அறிவிக்கிறார்கள். இதைக் காண வருபவர்கள் குறைந்தபட்சம் 3 முதல் 8 நாட்கள் தங்கினால் அற்புதமான வடவொளியைப் பார்க்கும் வாய்ப்புகள் அதிகம் !”

சுவாரஸ்யமான பேச்சில் தேநீர் கோப்பைகள் ஆறி விட்டன.

“அப்படி என்றால் முழு சம்மர் சீசனில் வந்துள்ள நாங்கள் ‘நார்தன் லைட்ஸ்..ஐ’ பார்க்க முடியாதா?”

“உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பார்ப்பதற்கு வாய்ப்பில்லை……..” என்ற, டைம் ஷேர் ஓனர்,

“ஏனெனில் நீங்கள் வந்திருக்கும் சீசனில் இரவு என்பது, ஒரு மணி நேரத்திற்கும் குறைவு”

எங்கள் முகம் சற்று வாட,

“நீங்கள் மீண்டும் ஒருமுறை குளிர்காலத்தில் ஐஸ்லாந்தின் மற்றொரு பரிமாணத்தைப் பார்க்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளது போல.. ஐஸ்லாந்திற்காக மட்டுமல்லாமல் எங்களுக்காகவும் நீங்கள் வர மாட்டீர்களா, என்ன? அதுவும் குறிப்பாக 2025 சூரிய புயல் கொட்டப் போகும் நாட்களில்..?! – நார்தன் லைட்ஸ் காண ஐஸ்லாந்து மீண்டும் உங்களை அழைக்கிறது!” என்றார், மெல்லிய புன்னகையுடன்.

“By God’s grace, எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறோம்”

********************
By the way, நமது தமிழ் இலக்கியங்களிலும் இந்த வடவொளியைப் பற்றிக் குறிப்புக்கள் உண்டு.

“வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம்” – என்பார் சேக்கிழார்

வடந்தை தீ, வடவைக் கனல், வடவனல் எனப் பல பெயர்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

வட முனை போல, தென்புலக் கோடியிலும் இந்த ஒளி தெரியும். ஒருவேளை நம்முடைய முந்தைய பழம் பெரும் குமரிகண்டத்திலிருந்து பார்த்திருப்பார்களோ?

பின் குறிப்பு :

பொதுவாக வட முனை நாடுகளில் மட்டுமே தெரியும் இந்த Northern Lights அதிசயமாக இந்த வருடம் (2024) மே 10ஆம் நாள், கனடா, USA, UK, வட ஐரோப்பா, உள்ளிட்ட பல பகுதிகளில் தெரிந்தன. நானும் அலாரம் வைத்துக் கொண்டு நள்ளிரவில் எழுந்து பார்த்தேன். (அமெரிக்கா – பென்சில்வேனியா பகுதி). அன்று பார்த்து கருமேகங்கள் சூழ்ந்த, நட்சத்திரங்களைக் கூட காட்டாத வானமண்டலமாக இருந்தது..

<– (Northern Lights in Seattle on 11.5.24)

‘எனக்காக (இன்னும்) காத்திரு..’ என்கிறது Northern Lights..!

(அடுத்த இதழில் முடியும்…)