“அம்மா, இந்த பாத்திரத்தோட கைப்பிடி லூஸ் ஆயிட்டே இருக்கு, கொஞ்சம் டைட் பண்ணி கொடுங்களேன்,” என்ற மருமகளுக்கு ஒரு ஸ்க்ரூ டிரைவரை எடுத்து உதவினாள் சுமதி.
“இந்த டீவி ரிமோட் பேட்டரி மாத்த வேண்டியது தானே சுமதி! எத்தனை நாளா இப்படி தட்டி தட்டி உபயோகிக்கிறது?” என்று பொரிந்துகொண்டே குளியலறை நோக்கி சென்ற கணவரிடம், “ பாத்ரூம் லைட் போயிடுச்சு, அது எல்.ஈ.டி, எலக்ட்ரிஷியன் தான் மாத்தணும், சொல்லி இருக்கேன், எமர்ஜென்ஸி லாம்ப் எடுத்துட்டு போங்க,” என்று எச்சரித்த சுமதி, “எலக்ட்ரிஷியன ஹோல்டர் போட்டு போடும் எல்.ஈ.டி லைட் போட சொல்லணும்,” என்று மனதில் நினைத்தபடியே ரிமோட் பேட்டரியை மாற்றினாள்.
“பாட்டி, எங்களோட சேர்ந்து மோனோபொலி பிட் விளையாடறீங்களா?அண்ணா மேக்ஸ் போட்டுட்டு இருக்கான்,” என்றாள் கெஞ்சலாக சுமதியின் பேத்தி அவள் அபார்ட்மெண்ட தோழியோடு சேர்ந்து. “ஓ விளையாடரேனே, ஆனா தோத்து போனா கலாட்டா பண்ணக்கூடாது ,” என்ற சுமதி அவர்களோடு உற்சாகமாக விளையாட ஆரம்பித்தாள்.
“பாட்டி, நீங்க சூப்பர்! எங்க பாட்டி தாயக்கட்டை கூட என்னோட சேர்ந்து விளையாட மாட்டாங்க, நீங்க மோனோபொலி எல்லாம் விளையாடறீங்க?” என்று அதிசயித்தாள் பேத்தியின் தோழி.
“நீ வேற, ஊனோ, செஸ், கேரம், ஸ்கிராபில், ரம்மி, லூடோன்னு எந்த கேமுன்னாலும் பாட்டி கத்துட்டு விளையாடுவாங்க . எங்க அம்மா அப்பா கூட அவ்வளவு சீக்கிரம் புது விஷயங்கள் ட்ரை பண்ண மாட்டாங்க…”
“உன் அம்மா அப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு, அவங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் கிடையாது … பாட்டிக்கு புதுசா ஒரு விஷயம் கத்துக்கணும்னா கொள்ளை ஆசை, ஐ ஜஸ்ட் கீப் டிரையிங்… இங்கிலீஷ் கூட பாட்டி புக்ஸ் நிறைய படிச்சுதான் கத்துக்கிட்டேன்… கத்துக்க வயசு ஒரு தடையே கிடையாது! உங்களுக்கும் தான் சொல்றேன், இதுதான் நமக்கு முடியும்னு உக்காரக்கூடாது, நமக்கு தெரியாதத, செய்ய பயமா இருக்குற காரியங்களை செய்யணும், அப்போதான் நம்மால என்ன முடியும்னே நமக்கு தெரியும்,” என்றாள் சுமதி.
“ஆமாம் ஆமாம், உங்க பாட்டி ரொம்ப புத்திசாலி, அந்த காலத்து SSLC , டிகிரி மட்டும் படிச்சு இருந்தா… பெரிய ஆபீசர் ஆயிருப்பா, அப்புறம் இந்த தாத்தா பாடு திண்டாட்டம் ஆயிருக்கும் ,” என்று சுமதியை புகழ்ந்தார் அவள் கணவர். அவரது புகழ்ச்சி ஏனோ சுமதிக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அது அவளை புரட்டிப்போட்டது. அலையலையாய் அவள் டிகிரி படிக்க முடியாமல் போன நினைவுகள் அவளை தாக்கியது.
SSLC யில் கணிதத்தில் முழு மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கியிருந்தாள் சுமதி. அப்போதைய முதலமைச்சர் கையால் விருது கூட பெற்றிருந்ததாள். அவ்வாண்டு SSLC யில் தேர்வான அனைவரும் இலவசமாக PUC (பிரீ யூனிவர்சிடி கோர்ஸ்) சேரலாம் என்று அறிவித்திருந்தது அரசு. அதனால், பலரது மேற்படிப்பு நனவான வருடம் அது. ஆனால், சுமதியின் துரதிர்ஷ்டம் அவளால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை.
வீட்டில் ஐந்தாவது குழந்தையை பெற்றெடுத்திருந்த சுமதியின் தாய் நோய் வாய்ப்பட்டிருந்தாள். சுமதி தான் வீட்டிற்கு மூத்தவள், கைக்குழந்தையை காப்பாற்றுவது , தம்பி தங்கைகளை படிக்க வைப்பது, அம்மாவை பேணிக்காப்பது போன்ற பொறுப்புகள் பதினாறு வயது சுமதியின் மீது விழுந்தது. இன்று இதனை படிப்பவர்களுக்கு இந்நிகழ்வு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால், சுமதியின் பிள்ளைப் பருவ காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வெகு சாதாரணம். அதுவும் பெண் குழந்தைகளை SSLC விற்கு மேல் படிக்க வைத்த வீடுகளே அப்போது வெகு குறைவு.
பதினாறு வயது சுமதி அன்று அதீத முதிர்ச்சியோடும், பொறுமையோடும் தன் கடமைகளை செய்தாள். ஆனால், மேற்படிப்பு படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவளது ஆழ்மனதில் புதைந்திருந்தது. அவள் ஒரு டாப்பர் என்ற விஷயத்தைக் கூட இன்று வரையில் அவள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இன்று அவள் கணவரின் பேச்சு அவள் மனதில் சொல்ல முடியாத கிளர்ச்சியை ஏற்படுத்தியது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல இப்போது அவள் மனதில் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்தது.
அவளைக் காட்டிலும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த தோழிகள் கல்லூரிக்கு செல்வதை அவள் அடுப்படியில் நின்று ஏக்கத்துடன் பார்த்தது நேற்று நடந்ததைப் போல மிகத் தெளிவாக அவள் மனக்கண்ணில் தோன்றியது… “ அட சே, இது என்ன பைத்தியக்காரத்தனம், அம்மாவுக்காக தானே பண்ணினோம், அதுக்கப்புறம் அம்மா எவ்வளவு வருஷங்கள் நம்மோடு இருந்தாள்,” என்று அவளையே சமாதானம் செய்துகொண்டு ஆயாசமாக படுக்கையில் படுத்திருந்தாள் சுமதி.
“பாட்டி, ஃப்ரெஞ்ச் ரெவல்யூஷன் பத்தி சொல்லத்தரீங்களா? “ என்று கேட்டுக்கொண்டே சுமதியின் அருகில் அமர்ந்தான் அவளது பேரன்.
“ஏன் என் கிட்ட கேக்குற? போயி உன் அப்பா கிட்ட கேளு, அவன்தானே யூனிவர்சிடி டாப்பர் , கோல்ட் மெடலிஸ்ட்… நான் சாதாரண SSLC,” என்று பல நாள் தேக்கி வைத்த ஆதங்கத்தின் விளைவால் எரிந்து விழுந்தாள்.

“என்ன பாட்டி அப்படி சொல்லிட்ட? அப்பா கணக்குல வேணும்னா கோல்டு மெடலிஸ்டா இருக்கலாம் … ஆனா, உனக்கு தெரியாதது ஏதாவது இருக்கா? என்ன கேட்டா நீதான் இந்த வீட்டு டாப்பர்,” என்று ஐஸ் வைத்தான் பேரன். அவன் சொற்களின் வலிமை அறிந்து அவன் சொன்னானா என்பது சந்தேகம் தான், ஆனால், அவனது வரிகளை கேட்ட சுமதி விருட்டென்று களைப்பெல்லாம் மறைந்து, “ எஸ்டேட்ஸ் ஜெனரல் சந்திப்பு, டென்னிஸ் கோர்ட் பிரமாணம், போர்ஜோசி(Bourgeoisie) புரட்சி,” என்று ஃப்ரெஞ்ச் ரெவல்யூஷன் பற்றி பாடம் நடத்த தயாரானாள்.
